ரமேஷ் வைத்யா
ஆண் பிள்ளைகள் வயசுக்கு வருவதில் வித்தியாசமான பிரதிகூலம் ஒன்று உண்டு. சினிமாவுக்கு அழைத்துச் செல்லப்படுவதில் இருந்து பெரியவர்களால் கைவிடப்படுவது.
நான் சீக்கிரமே பெரியாளாகிவிட்டேன். ஐந்தாம் வகுப்பு அளவிலேயே என் மனம் வீடு என்னும் சௌகரியத்திலிருந்து வெளியேறிவிட்டது.
உண்ணவும் உறங்கவும்தான் வீடு என்று ஆனது. எல்லாவற்றையும் தானே செய்துகொள்ளும் நிலையில் சினிமா பார்ப்பதும் அப்படித்தானே ஆகும்? தியேட்டருக்குப் போய் ஒரு சினிமா பார்ப்பதற்கே சூரத்தனம் வேண்டும்.
காசு, சேர்க்கை, இன்னபிற சவால்கள் முன்னிற்கும். இதில், சம்பிரதாயமான சினிமா பார்த்தல் தவிர வெவ்வேறு விதங்களில் பார்த்த படங்கள் இன்றைக்கும் நினைவில் சுவையாகத் தட்டுப்படுகின்றன.
முதலில் வீட்டுக்கு அடங்கிய பையனாக இருக்கும்போது வீட்டார் இல்லாமல் படம் பார்த்த அனுபவத்திலிருந்தே தொடங்கலாம். பிறகு தனித்த சாகசங்கள்…
ஒரு நல்ல திங்கட்கிழமையில் வாத்தியார் சந்தோஷமாகச் சொன்னார். “ஏலேய், எல்லாப் பயலும் வீட்ல கா ரூவா வாய்ண்ட்டு வந்துருங்க. பள்யூடத்ல சினிமாப் படம் கூட்டிப்போறாகண்டு சொல்லிருங்க.” அந்த விநாடியிலிருந்தே பசங்கள் எங்களுக்குத் திருவிழா ஆரம்பித்துவிட்டது. இனி படம் பார்க்கும் சனிக்கிழமைவரை நாலு நாள் படிப்பும் பாழாப் போய்ரும் என்பதில் சந்தேகமே இல்லை.
அவனவன் சேக்காளிகளோடு பெரும்பெரும் திட்டங்கள் போட்டுக்கொண்டிருந்தோம். படம் தயாரித்தவர்கள் அவ்வளவு திட்டம் போட்டிருப்பார்களா தெரியாது. இடைப்பட்ட நாட்களில் கொக்குப் போல் காத்திருந்து ஒரு ஐம்பது ரூபாயைத் திருடி வைத்துவிட்டேன். ‘போக வர நல்லாச் செலவளிக்கலாம். இண்டர்வல்லுல கள்ளமிட்டாய், சேமியா ஐஸ் வாங்கலாம்.’
சம்பவ நாள் வந்தது. முந்தைய இரவு தூங்கவே பன்னண்டு மணி ஆகியிருக்கும். கனவிலும் சினிமா யாத்திரை. காலையில் நாலு மணிக்கெல்லாம் பரபரத்த விழிப்பு வந்துவிட்டது. கும்முட்டி அடுப்பிலிருந்து கரித்துண்டுக் கங்குகளை ஒரு பெரிய டபராவில் போட்டு சட்டைக் கசங்கலில் தேய்த்தாயிற்று. அம்மா கட்டுச்சோறு தயாரிக்கும் மணம் தொடங்கிவிட்டது. பிள்ளையை வாகா எல்லைக்கு அனுப்பும் பெருமிதம் அவள் முகத்தில் இருந்திருக்கலாம்; அதைக் கவனிக்கும் வயதில்லை எனக்கு.
அப்பா அசந்த நேரத்தில் முந்தியிலிருந்து ஐந்து ரூவாய் நோட்டு எடுத்து ரகசியமாய் என் கையில் திணித்தாள் அம்மா. தண்ணீரும் எண்ணெயும் கலந்து தலையில் தேய்த்து சீவி அப்பா முன்னால் நின்றால், மூக்குக் கண்ணாடிக்கு மேல் வழியாகப் பார்த்தார். என் முகம் நல்ல கேவலமாக இருந்ததில் திருப்தியடைந்தவராக ‘ஹும்’ என்று உறுமி, இருபத்தைந்து காசு நாணயம் ஒன்றைக் கொடுத்தார். திருவிளையாடலில் சாவித்திரியை சிவாஜி சொல்வது போல் ஒற்றை வழியனுப்புச் சொல். “போ.”
தூக்குச் சட்டியோடு பள்ளிக்குப் போய்ச் சேர்ந்தாயிற்று. ஒரே கூட்டம். “ஏண்டா, ஒன்னயெல்லாம் நா என்னைக்குமே பள்யூடத்துல பாத்ததில்லயே?” என்று வாத்தியார் யாரையோ சிரித்தபடியே திட்டிக்கொண்டிருந்தார்.
பள்ளிக்கூடத்திலிருந்து தியேட்டர் மூன்று கிலோ மீட்டர் தூரம் இருக்கும். “ஏய், ரெவ்வண்டு பேரா கைகோத்து நில்லுங்கடா.”
அவனவன் சேக்காளிகளைத் தேடி சேர்த்துக்கொள்ள நிராகரிக்கப்பட்டவர்கள் கொதிக்க, நீண்ட வரிசை உருவாயிற்று. நடைப்பயணம் தொடக்கம்.
போகிற வழியிலேயே ஐம்பது ரூபாய் நோட்டை மாற்றியாயிற்று. பக்கத்தில் இருந்த பத்துப் பதினைந்து பேருக்கு கோக்கோ மிட்டாய் சப்ளை. கொஞ்சம் கழிந்து, கிழவி கடையில் கல்கோனா உருண்டை. இடைவேளையில் எல்லோருக்கும் முறுக்கு வாங்கிக்கொடுக்க அம்பத்தஞ்சே கால் ரூவா கரெக்டாக முடிந்திருக்கும். இப்படியாக தியேட்டர் சேர்ந்தால், அந்தப் படம் ‘ராமு’.
எங்களுக்கு ஜெமினி கணேசன், கேஆர் விஜயா பற்றியெல்லாம் தெரியாது. ‘மனோகரம்மா இருந்தா நல்லாயிருக்கும்டா’ என்றான் ஒருவன். போஸ்டரில் இருந்த சின்னப் பையனைப் பார்த்தால், கமலதாசன் போலிருந்தது. அந்தக் கால அச்சகங்களின் தரம்!
பள்ளி மாணவர்களை எதற்காக இந்தப் படத்துக்குக் கூட்டி வந்தார்கள் என்றெல்லாம் யோசிக்கும் நிலைமையிலா நாங்கள் இருந்தோம்… வைப் பண்ணுகிறோம் என்றே தெரியாமல் வைப் பண்ண அல்லவா வந்தோம். ஆனால், எங்களுக்குச் சவால் விட்டது படம். ஒராள் எல்லையில் கஷ்டப்பட்டு நாட்டைப் பாதுகாக்கும் வேலையில் இருக்க, ஊரில் அவன் வீடு கொள்ளை அடிக்கப்படுகிறது. அவன் மனைவி தீவைக்கப்படுகிறாள். ஒரே மகன் – ராமு – அதிர்ச்சியினால் வாய்பேச முடியாதவனாக ஆகிறான். அந்த ராணுவ வீரனை வேறொரு பெண் நெருங்க, அவன் பாடிய
‘கோடையில் ஒரு நாள் மழை வரலாம் என்
கோலத்தில் இனிமேல் எழில் வருமோ
பாலையில் ஒரு நாள் கொடி வரலாம் என்
பார்வையில் இனிமேல் சுகம் வருமோ….
நிலவே என்னிடம் நெருங்காதே நீ
நினைக்கும் இடத்தில் நானில்லை
மலரே என்னிடம் மயங்காதே நீ
மயங்கும் வகையில் நானில்லை…’
என்று வேதனை கலந்து பாட, எங்கள் சின்ன மூளைகளில், பால் டம்ளரில் எப்படி flag வரும்? என்ற குழப்பம் ஏற்பட்டதென்னவோ உண்மை.
அப்படியே படம் ஓட, பிள்ளையின் குறைபாட்டாலும், வேறு பல பிரச்னைகளாலும் அந்த ராணுவ வீரன் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுக்கும் சூழல். அப்போது வந்தது பாருங்கள் ஒரு பாட்டு…
‘கண்ணன் வந்தான் அங்கே
கண்ணன் வந்தான்
ஏழை கண்ணீரைக் கண்டதும் கண்ணன் வந்தான்’ இன்னதென்று தெரியாத ஓர் உணர்வு. பக்கத்தில் இருந்தவனை இருட்டுக்குள் பார்த்தேன். நான் இடைவேளையில் வாங்கித் தந்திருந்த முறுக்கை இன்னும் தின்றுகொண்டிருந்தான். பாட்டு ஓட எனக்குக் கண்ணைக் கட்டி வருவது போல் இருந்தது.
‘கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும்…
காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும்
கனி மழலை குரல் கொடுத்துப் பாட வேண்டும்…
கண் மறைந்த தாயும் அதைக் கேட்க வேண்டும்
கவலைகளை உன்னிடத்தில் தந்தேன் கண்ணா…
கருணையே அருள் செய்ய வருவாய் கண்ணா’
வருவாய் கண்ணா என்னும்போதே உச்சத்துக்குப் போய்விட்டது அந்தக் குரல். திக்பிரமை பிடித்து உட்கார்ந்திருந்த நான், ‘கண்ணா… கண்ணா… கண்ணா… கண்ணா…’ என்னும்போது கதறி அழுதுவிட்டேன். என்னமோ எங்கள் வீட்டில் எழவு விழுந்த மாதிரி. எம்எஸ்வி, டிஎம்எஸ், சீர்காழி, நாகையா, ஜெமினி எல்லோரும் எனக்கு அன்றுதான் பரிச்சயமாகியிருக்க வேண்டும்.
சிவந்த கண்ணோடும் கசிந்த நாசியோடும் வீட்டுக்கு வந்தால், அப்பா நின்றிருக்கிறார். “படம் நல்லாருந்துச்சாடா?”
“ம்.”
“அதுக்கு ஏன் அழுறே?”
பதில் சொல்லவில்லை. அடுத்துக் கேட்டார் பாருங்கள் ஒரு கேள்வி. என்னை நினைத்தே அழுகை வந்துவிட்டது. “நாலணா குடுத்தேனே… முழுசும் வேட்டு விட்டுட்டியா?”
கொஞ்சம் வளர்ந்து தன்னிறைவு அடைந்தவுடன் தனித்துப் படம் பார்க்கப் போகும் படலங்கள்.
நாங்கள் இருந்த பெரியகுளத்தில் படங்கள் ரிலீஸ் ஆகா. கம்பம், தேனியில்தான் ரிலீஸ் ஆகும். தேனி அருணாவில் அன்னை ஓர் ஆலயம் பார்க்கத் திட்டம் தீட்டிவிட்டேன். காசு தேற்ற வேண்டும். பள்ளிக்கு கட் அடிக்கும் வழிவகை பார்க்க வேண்டும். மாட்டிக்கொண்டால் கூடச் சேர்ந்து சீரழிய சேக்காளி ஒருவன் இருந்தால் சிறப்பு. டவுன் பஸ்ஸில் எங்களை யாரும் பார்த்துவிடக் கூடாது. தியேட்டரில் பார்த்துவிட்டால் பேராபத்து. பென்ட்லி காரில் முக்காடு போட்டுப் போகுமளவு வசதியும் இல்லை. சாகசப் பயணம் ஒருவழியாக அருணா தியேட்டர் குறைந்த விலை டிக்கெட்டான 70 காசு கவுன்டரை அடைந்தது. அப்போதெல்லாம் டிக்கெட் வாங்க க்யூவில் நிற்க வேண்டும். இரும்பு ராடுகளால் அமைந்த க்யூ இடம் ஓர் ஆள் அகலத்துக்குத் தான் இருக்கும். ஒல்லியான ஓர் ஆள். ஆனால், ரஜினி, ஸ்ரீப்ரியா, யானை என்பதால் கூட்டம் கணிசமாக இருந்தது. குடிமைப் பண்பு இல்லா ஜனங்கள் அந்தக் கீக்கிடத்துக்குள் அடைந்து விட்டார்கள். உயரக் குறைவான ஒல்லிச் சிறுவனான நான் சதை எலும்புகளுக்கு இடையே சமாதி போல் ஆகிவிட்டேன். மூச்சுத் திணறும்போது வந்தது மரண பயம். இனி மீட்சி இல்லை. வெளியே போகவே முடியாது. அப்போது டிக்கெட் கொடுக்கத் தொடங்கினார்கள். அசம்பாவிதத்தின் அளவு அதிகரித்தது. வரிசையின் பின் பகுதியில் நின்று கொண்டிருந்தவர்கள், ஆவேசம் அடைந்து, முன்னால் நின்றிருந்தவர்களின் தலை மேல் ஏறி நடந்தார்கள். ஐயையோ… இங்கேயே நான் செத்தது தெரிந்தால் அப்பா விறகுக் கட்டையாலேயே அடிப்பாரே என்று நான் பெரும் பீதி அடைந்தேன். இல்லை, சாகவில்லை. அன்னை ஓர் ஆலயம் பார்க்கத்தான் செய்தேன்.
‘அப்பனே அப்பனே பிள்ளையாரப்பனே
போடவா தோப்புக்கரணம் போடவா…’
‘நதியோரம் நாணல் ஒன்று நாணம் கொண்டு
நாட்டியம் ஆடுது மெல்ல
நானந்த ஆனந்தம் என் சொல்ல’
என்று மகிழ்ச்சி நிரம்பியது.
அப்புறம் தேனிக்கே குடி போய்விட்டோம். ஆனால், இயற்கை என ஒன்று இருக்கிறதே… நல்ல நல்ல படங்களாக இல்லாவிட்டாலும் நன்றாக ஓடக்கூடிய படங்கள் பெரியகுளத்திற்கே வந்தன. இப்போது எனக்குக் கொஞ்சம் பெரிய பசங்களின் சகவாசம் கூடியிருந்தது. அதில் ஒருவன் அத்லெட். சைக்கிளும் வைத்திருந்தான். சினிமா பார்க்க வேண்டுமென்றாலே தேனியிலிருந்து பெரியகுளத்துக்கோ, போடிக்கோ போவது என்று ஆனது. தலா பதினைந்து கிலோ மீட்டர் தூரம். மூவர் தயாராவோம். முன்னால் பாரில் உட்கார்பவனுக்கு, புட்டபாக வலியைத் தவிர வேறு பிரச்னை இல்லை. சீட்டிலும் கேரியரிலும் உட்கார்பவர்கள் பெடல் செய்ய வண்டி விரையும்.
அப்படிப் பார்த்த படங்கள் டி.ராஜேந்தருடைவையாக அமைந்தன. ஒன்று, ஒரு தாயின் சபதம். அதில் ஒரு விபரீதம்.
‘சொல்லாமத் தானே இந்த மனசு தவிக்குது’ வரி.
மனசு என்கிற வார்த்தைக்கு இதய மாமிசத்தை செட் போட்டிருந்தார். பல இதயங்கள். பல மாமிசங்கள். ஆரிக்கிள், வென்ட்ரிக்கிள் எல்லாம் தெரிய, அறிவியல் டூயட்டாக அது அமைந்திருந்தது.
பிற்பாடு படம் பார்ப்பதற்காகவே வெளியூர்ப் பயணம் என்பதெல்லாம் வழக்கமாகவே ஆனது. விஸ்வரூபம் சர்ச்சையில், ஒடுக்கப்படுபவர்கள் பக்கம் நிற்க வேண்டும் என்ற எண்ணத்தை வலுப்படுத்திக்கொள்ள, ஆந்திராவுக்குப் போகலாமா, கர்நாடகாவுக்குப் போகலாமா என்றெல்லாம் விவாதங்கள்.
படங்கள் மட்டுமல்ல, படங்களுக்கான யாத்திரைகளும் சுகமான நினைவுகள்தான்.
தொடரும்..











