ரமேஷ் வைத்யா
“சினிமா என்பது நீங்கள் திரையரங்கில் அமர்ந்திருக்கிறீர்கள் என்பதையே மறக்கடிப்பதாக இருக்க வேண்டும்”
‘Quotes on cinema’ என்று கூகுளில் போட்டுத் தேடியவுடன் வந்தது இது. ஒரு கம்பீரமான தொடக்கமாக இருக்கட்டும். மற்றபடி தமிழ் சினிமா பார்த்த என் அனுபவங்கள் வேறு. அவை பல்சுவை.
நல்வாய்ப்பாக, நான் பார்த்த முதல் படங்கள் தொடர்பான சமாச்சாரங்களே நினைவில் இருக்கின்றன. ரெண்டு லட்ச ரூபாய் பெறுமான ஒரு கச்சாத்தைப் போன வாரம் எங்கோ வைத்தேன். தேடுகிறேன். தவிர, சிசு வயது ஞாபகங்களுக்குக் குந்தகம் இல்லை.
முதல் படங்கள் என்றேன் இல்லையா, அதில் பன்மை உண்மை. சினிமா பார்க்க என்று கிளம்பி முதன் முதலாக நான் பார்த்தது இரண்டு படங்கள். ஒரே நாளில். முதலாம் ஆட்டம், இரண்டாம் ஆட்டம்.
அப்போது எனக்கு நான்கு வயது. எங்கள் அப்பாவின் ஊர் குன்னுவாரங்கோட்டை. அதாவது ஊரைச் சுற்றி மாலை போட்டது மாதிரி குன்றுகள் என்பதால் குன்று +ஆரம் + கோட்டை. ‘அது ஒரு அழகிய கிராமம்’ என்று அடிக்குரலில் சொல்லத் தக்க ஊரல்ல. ஊருக்கு இன்னொரு பெயர் உண்டு. யார் மீது ஆதங்கமோ, கன்னாபட்டி என்று அந்த மற்றொரு பெயரால்தான் அம்மா குறிப்பிடுவது.
பக்கத்து குக்நகரம் வத்தலக்குண்டு. அஞ்சு மைல். அங்கேதான் சினிமா தியேட்டர் எல்லாம் இருக்கும். குக்கிராமப் பெண்கள் ஒரு திட்டம் போட்டார்கள். சுயஉதவியாகக் கிளம்பி வத்தலக்குண்டுக்குப் போய்ப் படம் பார்ப்பது. பிள்ளைகளை விட்டுப் போக முடியாது. வண்டி கிடையாது. நடைப் பயணம்தான். அதை, ‘நடராஜா பஸ் சர்வீஸ்’ என்று வேறு பேசிக்கொண்டார்கள். ஆயுசுக்கு ஒரு முறை அபூர்வமாகப் போவது, ரெண்டு படமாய்ப் பார்த்துவிட்டு வருவோம் என்று பேசியிருப்பார்கள் போலும்.
அப்போது டூரிங் கொட்டகைககள்தான். நாளுக்கு ரெண்டே ஷோ. முதல் ஆட்டத்துக்கு இருட்ட வேண்டும். படம் போட ஆறரைக்கு மேல் ஆகும். இரண்டாம் ஆட்டம் முடிய நிசியாகிவிடும். அந்தப் பெண் மக்கள் எப்படி இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தினார்கள், கணவன்மார் எங்கே போனார்கள் என்பதெல்லாம் இப்போது எனக்கு மர்மமாக இருந்தாலும் அன்று கிளம்பிவிட்டோம். எனக்குக் கால் வலிக்கும்போது தூக்கிக்கொள்வதாக அம்மா உறுதியளித்திருப்பார். நானோ பெரும் நடைச் சுற்றுலா உற்சாகத்தில் கிளம்பிவிட்டேன்.
மதிய வேளையில் தொடங்கி பொட்டல் காடுகளையும் வயல் வெளிகளையும் மண் சாலைகளையும் கடந்தது; நடந்தபடியே கடலை, காராச்சேவு, பொரி உருண்டை தின்றது; கலர் குடித்தது; ரோட்டோரத் தோப்புகளில் இளைப்பாறியது போன்றவை அசம்பந்தமானவை.
தியேட்டரின் ஒரு மைல் தொலைவிலேயே காற்றில் பாட்டுக் கேட்கத் தொடங்கிவிட்டது. பிற்பாடு தெரிந்துகொண்ட தகவல் ஒன்று. ‘விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான், விநாயகனே வேட்கை தணிவிப்பான்’ என்று சீர்காழி கோவிந்தராஜன் ஓஸோன் படலத்தைக் கீற ஆரம்பித்தால் அந்தத் தேதிக்குப் படம் உண்டு என்பது கீத்துக் கொட்டாயின் விதி. எந்தப் பாட்டைப் போட்டால் அடுத்து சினிமா தொடங்கும் என்பது அந்தந்தத் தியேட்டர்களின் தேர்வு.
நடையை எட்டிப் போட்டு நாங்கள் அன்று நுழைந்த தியேட்டரில் ஓடிய படம் கௌரவம். ஒண்ணுக்கு ரெண்டு சிவாஜி கணேசன் என்பதெல்லாம் டபுள் தமாக்கா என்பது தெரியாத அப்பாவிச் சிறு பருவம் எனது. நாங்கள் போய் உட்கார்ந்து அண்ணாந்ததுமே அதிரடி. “தன் மனைவி காதம்பரியை இவர் கொன்றது சாட்சியங்களின்படி உறுதியாகியுள்ளது. இந்தியக் குற்றவியல் சட்டம் 302ன்படி இவர் குற்றவாளி” என்று நீதிபதி தீர்ப்புச் சொன்னார். “இந்த ஆளை ஆனானப்பட்ட வக்கீல் ரஜினிகாந்த் வந்தாலும் காப்பாத்த முடியாது” என்று ஒரு வக்கீல் சொல்ல, ரஜினிகாந்த் Bar at Law என்ற போர்டு ஒட்டப்பட்டிருந்த கதவுக்குப் பின்னால் இருந்து வெள்ளை பேன்ட் அணிந்த இரண்டு கால்கள் நடந்து வந்தன. கார் ட்ரைவர் கதவைத் திறக்க, வெண் பேன்ட் கால்கள் காரில் நுழைந்து, கார்க் கதவை அந்தக் கால்களின் சொந்தக்காரரின் கை மிடுக்காக மூடிக்கொண்டது.
பெண்கள் குழு படம் பார்க்கும் இந்தத் திட்டத்தைப் பல நாட்கள் தீட்டியிருப்பார்களல்லவா… “அது என்ன சினிமாம்மா?” என்று நான் கேட்டிருப்பேன். அங்கிருந்த ஆனந்த விகடனில் ஒரு போட்டோவைக் காட்டி “இந்த சிவாஜி கணேசன் நடிச்சது” என்று என் அம்மா சொல்லியிருந்தார்.
‘ஆனானப்பட்ட ரஜினிகாந்தே’ என்று ஓராள் சொன்னதும் அந்தக் கால்கள் காட்டப்பட்டதால், அதுதான் ரஜினிகாந்த் என்னும் சிவாஜி கணேசன் என்ற அனுமானம் ஏற்பட்டது. அப்போது எனக்கு நான்கு வயது என்பதால், நம்பினோர்க்குக் கல்கண்டு; நம்பாதோர்க்குக் கல்குண்டு என்பதை மாத்திரம் சொல்லிக்கொள்கிறேன்.
காருக்குள்ளே ரஜினிகாந்த சிவாஜியைக் காட்டுவார்கள் என்று ஆவலோடு காத்திருந்தால்… ம்ஹூம்… திரைக்கதையில் ட்விஸ்ட் இருந்தது. காரில் இருந்து இறங்கிய அந்தக் கால்கள் ஒரு பங்களாவில் நுழைந்தன. ஒரு பாட்டி வர, “ஹாய் குட் ஈவினிங் சலானியா. பட்டுப் புடவை கட்டிக்கிட்டா நீயும் பத்து வருஷம் யங்காதாண்டி ஆயிடுறே. லவ்லி” என்று குரல் கேட்க அந்தப் பாட்டி உமட்டி வாந்தி எடுப்பது போல் செய்து சிரிக்க – “க்கும்… பண்டரிபாய்க்கு வெக்கம்” என்றார் அம்மா – பேன்ட் கால்கள் படியேறிப் போயின. இதுதான் சிவாஜி என்பது எனக்குள் உறுதியாயிற்று. அந்தப் பக்கம் பாட்டி, “ஐயாவுக்கு காபி…” என்றதும், வேலையாள் ஒருத்தர், “கண்ணன் சார் கொண்டுபோயிட்டாரும்மா” என்றார். “அப்படிப்பட்ட ஆள் இல்ல இந்த பாரிஸ்டர் ரஜினிகாந்த்…” என்று ஒரு குரல் கத்திக்கொண்டிருக்க, காபிக் கோப்பையை ஏந்தியபடி வந்தது, விகடனில் பார்த்த சிவாஜி கணேசன்!
என் தலையில் இடி விழுந்தது போல் ஆயிற்று. மிகுந்த துரோகம் இழைக்கப்பட்டவனாக உணர்ந்தேன். அம்மாவோ, “முகத்துல எவ்ளோ பாந்தம். பிள்ளைன்னா இப்பிடி இருக்கணும்” என்று சொல்லிக்கொண்டிருந்தார்.
“பெரியப்பா காபி” என்று கண்ணன் மாமா சொன்னதும் பாரிஸ்டர் ரஜினிகாந்த் திரையில் வந்தார். அது மீசையில்லாத யாரோ ஒரு தாத்தா. அவரே கையில் ஒரு கப் வைத்துக் குடித்துக்கொண்டிருந்தார். “ந்நோ ” என்றார். பைப் எடுத்து வாயில் வைத்து பாக்கெட்டுகளைத் தடவினார். “நானே நெருப்பு வைக்கிறேன்” என்றார் கண்ணன் மாமா. “பைப்புக்கா, எனக்கா?” என்று கண்ணடித்துக் கேட்டார் தாத்தா. “ரெண்டுக்குமே நான்தானே பெரியப்பா” என்றார் கண்ணன் மாமா.
ஒரு மனிதக் குழந்தை தன் வாழ்வில் முதன் முதலாகப் பார்க்கும் படத்திலேயே இன்ச்சுக்கு இன்ச் பன்ச் அமைவது மகிழத்தக்கது. இன்னும் முதல் சீனே முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இன்னும் நாகேஷ், உஷா நந்தினி, நீலுவா டைப்பிஸ்ட் கோபுவா என்று தெரியாத ஒருவர் என்று எவ்வளவோ பார்க்க வேண்டியிருக்கிறது. எல்லாவற்றையும்விட, ஒரு ட்ரைவர் காரைத் திறந்தார் என்றேனே அவர்தான் பின்னாளில் தமிழ்த்திரை நகைச்சுவை சாம்ராஜ்யத்தை ஆளவிருக்கும் ஒய்.ஜி.மகேந்திரா என்பது அப்போதைய அப்பாவியான எனக்குத் தெரியாது.
இதையெல்லாம் விவரிக்கப் போந்தால், குழப்பத்தில் தங்கப் பதக்கத்துக்குள் நான் போய்விடும் ஆபத்து இருப்பதால், நேரடியாக செகண்ட் ஷோவுக்குப் போய்விட உத்தேசிக்கிறேன்.
முதல் படம் பார்த்து முடித்ததும், எந்தக் கூட்டத்தில் கட்டுச் சோற்றை அவிழ்த்தோம் என்று தெளிவில்லை. கூத்தும் கும்பமேளாவுமாய்ச் சாப்பிட்டதும், அடுத்த கொட்டாய் நோக்கி ரெண்டாம் ஆட்டத்துக்கு உற்சாக நடை போட்டதும் இருளில் நடந்தேறின. கௌரவத்தில் உட்கார்ந்திருந்ததில் களைப்பு ஆறியிருந்தது.
சிவாஜி படம் பார்த்ததும் எம்ஜியார் படம் பார்ப்பதுதானே சமநிலையைப் பராமரிக்கும்! அதற்காக இருக்கும் இன்னொரே தியேட்டரில் எம்ஜியார் படம் போடுவார்களா? ஓடிக்கொண்டிருந்த படம், ‘பூக்காரி’. ஆனால், ஆதங்கப்பட ஒன்றும் இல்லை. இதன் கதாநாயகன், எம்ஜியாருக்கு ஆப்படிக்க இறக்கப்பட்டிருந்த மு.க.முத்து. “இவருக்கு ஏம்மா முக முத்துன்னு பட்டப் பேர் வச்சிருக்காங்க?” “கொஞ்சம் சும்மாத்தான் இரேன். இவன் கருணாநிதி மகன்.” “கருணாநிதி மகன்னா பட்டப் பேர் வப்பாங்களா?” பேசிக்கொண்டே போகவும் திரையில் வெளிச்சம் விழவும் சரியாக இருந்தது. ‘ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தன் மகனைச் சான்றோன் எனக் கேட்ட தாய்’ என்ற பாடல் ஒலித்தது. முடிந்ததும், எம்ஜியார் போலிருந்த முக முத்து, எம்ஜியார் போலவே தங்கச்சியின் காதைப் பிடித்து இழுத்துப் போய் அம்மாவிடம் விட்டு, “பாத்தீங்களாம்மா, வயசுப் பொண்ணா லட்சணமா வீட்டுல இருக்காம சினிமாப் பைத்தியம் பிடிச்சு நோட்டீஸ் பொறக்கிட்டிருக்கா?” என்று பெண்கள் நல்லபடி வாழ வழி காட்டும் சீனோடு படம் சூடு பிடித்தது.
பெரியவர்களுக்கான கதை போலும். போக்கொன்றும் எனக்குப் பிடிபடவில்லை. ஒரு பெண்,
முப்பது பைசா மூணு மொழம்
முல்லை மல்லிகை கனகாம்பரம்
வாடிக்கையா நான் பூ விக்கும்போது
வேடிக்கையா நீ பாக்காதே – உன்
பார்வை என்ன புரிஞ்சிக்கிட்டேண்டா
மூக்கு மொகரை ஜாக்கிரதை
என்று பாடி பூ விற்றது நினைவிருக்கிறது.
முத்துப்பல் சிரிப்பென்னவோ
முல்லைப்பூ விரிப்பல்லவோ
தங்கப்பாளம் போல் உந்தன் அங்கமோ
தத்தைக்குத் தவிப்பென்னவோ
மெத்தைக்கு வரச்சொல்லவோ
தொட்டுப் பேசும் நாள் அல்லவோ
என்று மாமாவும் அத்தையும் ஆடியது நன்றாக இருந்தது.
எல்லாவற்றையும் தூக்கிச் சாப்பிட்டது இன்னொரு பாட்டு.
திருப்பாற்கடலில் பொன் மேடையிட்டு – நான்
காத்திருப்பேன் உனக்காக – இனி
தனிமையில்லை பகல் இரவுமில்லை – நாம்
வாழ்ந்திருப்போம் இனிதாக
காதலின் பொன் வீதியில்
காதலன் பண் பாடினான்
பண்ணோடு அருகில் வந்தேன் – நான்
கண்ணோடு உறவுகொண்டேன்…
இந்தப் பாட்டுத்தான் என் கட்புலனையும் தாண்டி, செவிப் புலனைத் தீண்டி மனதுள் புகுந்தது. இதற்கான காட்சி மிரட்டியது. என் வாழ்வில் நான் ஸ்லோ மோஷன் பார்த்ததில்லை. இந்தப் பாடல் முழுதும் ஸ்லோ மோஷன். எடுத்த எடுப்பில் வெண்ணிறாடை நிர்மலா ஒரு கரட்டிலிருந்து புடவை பறக்க ‘ஆஆஆஆ’ என்று ஸ்லோ மோஷன் குதியல். முக முத்துவும் ‘ஆஆஆஆ’ என்று ஆரம்பிக்கும்போது பேள்வதற்கு ஓடுவது போல் இருந்தாலும், அந்த வயதில் பிரமிப்பு ஏற்பட்டது நிஜம். இடைவேளையில் கடலை மிட்டாயும் குச்சி ஐஸும் வாங்கப் போகும்போது நானும் ஸ்லோ மோஷனில் ஓட முயற்சி செய்தேன். ஓரளவு வந்ததாகத்தான் கருதுகிறேன். ஐஸ்கூட கொஞ்சம் கூடுதல் நேரம் வந்ததாக ஞாபகம்.
நள்ளிரவில் பயமுறுத்தும் பாதையில் நடந்து போகும்போது அம்மா சொன்னது ஞாபகம் இருக்கிறது. “ச்சே… முதல்ல பூக்காரி பாத்துட்டு ரெண்டாவது ஆட்டம் கௌரவம் பாத்துருக்கலாம்.” ஆமோதிப்பும் கிடைத்தது.
கௌரவத்தின் பாடல்களும் சளைத்தவை அல்ல.
பாலூட்டி வளர்த்த கிளி
அ)
பழங்கொடுத்துப் பார்த்த கிளி
நான் வளர்த்த பச்சைக்கிளி
நாளை வரும் கச்சேரிக்கு
ஆ)
கண்ணா நீயும் நானுமா
காலம் மாறினால் கௌரவம் மாறுமா நெவேர்ர்ர்ர்ர்
என்ற நாடகப் பாடல்கள் மண்டைக்குள் போய்விட்டன.
இ)
யமுனா நதி இங்கே ராதை முகம் இங்கே
கண்ணன் போவதெங்கே
கொஞ்சும் மணி இங்கே
கோவைக் கிளி இங்கே
மன்னன் போவதெங்கே…
கோவைக் கிளி என்பது என்ன என்று புரியாவிட்டாலும், இசையின் இனிமை மனதில் தைத்துவிட்டது.
எனது சினிமாப் பயணத்தில், பார்க்கும் பயணம்தான், பாடல்களின் பங்கு பெரிதாக இருக்கப்போகிறது என்பதற்கான கட்டியம் நான் முதலில் பார்த்த படங்களிலேயே முழங்கிவிட்டது.
தொடரும்..











