தியேட்டருக்கு இழுத்த பெண்கள்
ரமேஷ் வைத்யா
சின்ன வயதில் என்னைப் படங்களுக்கு ஈர்த்த விஷயங்களைப் பற்றியே சொல்லிவருகிறேன். பிரதியின் இன்பத்தைச் சற்றே கூட்ட வாலிபத்துக்குள் போகலாம்; மீண்டும் கால வரிசைக்குள் வந்துவிடலாம் என்று ஒரு தோணல்.
தமிழ்ச் சமூகத்தில் வாலிபம் எத்தனையாவது வயதில் தொடங்குகிறது? எனக்கு Anthropology தெரியாது. நேரில் பார்த்துத் தெரிந்துகொள்வதுதான். ஏழாம் வகுப்பில் மேலுதட்டுப் பூனை ரோமத்தோடு வாலிபம் அரும்புகிறது. ஒன்பதாம் வகுப்பில் எல்லாம் உச்ச வளர்ச்சி நோக்கி வேகம் கொள்கிறது.
அப்போதுதான் அலைகள் ஓய்வதில்லை வந்தது. ஒரு ஞாயிறு முகூர்த்தத்தில் படம் பார்த்து, திக்பிரமையோடு உறங்கி எழுந்து பள்ளிக்கு வந்தால் மந்திர கோஷம் காதை நிறைத்தது.
பிற்காலத்தில் நான் புத்தகயாவுக்குச் சென்றிருந்தேன். அதாவது கதை சொல்லிக்கொண்டிருக்கிறேனே அதற்கு எதிர்காலம்; வாசிக்கிறீர்களே இதற்கு இறந்த காலம். புத்தகயா மாலைப்பொழுது மறக்காதது. மெல்லிய குளிர்ப்படலம். அந்தி மயங்கிய வானவிதானம். ‘புத்தம் சரணம் கச்சாமி’ என்று அடங்கிய குரல்களிலான மந்திர கோஷம் காற்றணுக்களில் ஏறி என் காது மடலைத் தொட்டது. பயமாகவும் பரவசமாகவும் இருந்தது. ஒலி வந்த திசையில் ஒரு மைல் நடந்து அதை உச்சாடனம் செய்துகொண்டிருந்தவர்களைப் பார்த்தேன். யாருமே குரல் உயர்த்தவில்லை. ஆனாலும், ஆயிரக்கணக்கான பேர் தாழ்ந்த குரலில் சொன்னதே ஒரு மைல் தாண்டி வந்து தீண்டியிருக்கிறது.
எதற்குச் சொல்கிறேனென்றால், அலைகள் ஓய்வதில்லை என்று தொடங்கினேனே, அதற்குச் சொல்கிறேன். திங்களில் வகுப்பை நெருங்குகையிலேயே பொருள் புரியாத மந்திர உச்சரிப்புக் கேட்டது. குழப்பத்தோடு நுழைந்தேன். பசங்கள் பெஞ்சில் உட்கார்ந்து டெஸ்கில் சாய்ந்திருந்தார்கள். நானென்ன, ஹெட்மாஸ்டர் வந்தாலே அவர்களுக்குத் தெரியாது. இரண்டெழுத்து மந்திரம் முனகியபடி கிடந்தார்கள். ‘மேரி மேரீ மேரீய்ய்ய்’. நடுவில் சுபஸ்வரமாக ஒருவன் பாடபேதம் செய்தான். ‘ராதா ராதா ராதாஆஆஆ’. ‘ஏந்தி விடப்பா’வுக்கு கவுன்டராக ‘தாங்கிவிடப்பா’ என்பது போல, ‘மேரீ மேரீ’ என்று ஒரு குழு குழற ‘ராதா ராதா’ என்று ஒருவன் பதிலடிக்க… வகுப்பறையே மோகனாஸ்திரம் போட்டது போல் மயங்கித் துலங்கியது. ‘செவ்வரியோடிய உன் பாத நகங்களுக்கு உதிரமே சிவப்பானதால்’ என்று நவரசநாயகனாக மலரப்போகும் கார்த்திக் பிதற்ற, மோவாயை மேலே தூக்கி கீழ்ப்பார்வை பார்க்கும் ராதா… யௌவன கர்வம் என்ற சொல்லாடலின் பொருளாய்த் திகழ்ந்த காட்சி மனதில் விரிந்தது.
பிறவி சௌந்தர்ய உபாசகனான நான் அந்த பஜனை கோஷ்டிக்கு தலைமை தாங்கும் வழிவகை தேடினேன். ‘டேய், இங்க உக்காந்து முக்கிப் பிரயோசனம் இல்லடா’ என்றேன். ‘என்ன செய்யச் சொல்ற?’ ‘இன்னைக்கும் படத்துக்குப் போவோமுடா.’ ‘போயி?’ நான் ஆக்கபூர்வமான ஆலோசனை சொல்லத் தொடங்கினேன். ‘மேரிய விச்சு கிண்டல் பண்ணும்போது தகறால் பண்ணுவோம்.’
முதல் பீரியடில் தமிழ் வாத்தியார் தங்கவேல் என்ன சொன்னாரோ ஏது நடத்தினாரோ யார் கேட்டது? மணி அடித்ததும் ரெண்டாவது பீரியட் வாத்தியார் வருவதற்குள் பள்ளிச் சுவரேறிக் குதித்தோம். கோஷ்டியாக சுந்தரம் தியேட்டரில் லேண்ட் ஆனோம்.
தங்கவேல் வாத்தியார் நடத்திய பாடம் மாதிரி, முந்தைய காட்சிகள் எதுவும் என் கண்களிலேயே படவில்லை. நேரடியாக ‘தாங்குமோ என் தேஹ்ஹமே மன்மதனின் மலர்க்கணைகள் தோள்களிலே மோகம் தீரவே வா என் அருகிலே’ என்று ரோஜா இதழ்களை மாத்திரம் அணிந்து ராதா படுத்திருந்ததாகக் காட்டப்பட்ட காட்சி கருவிழிப் படலத்தில் பதியனிடப்பட்டது. எங்களுக்கும் பதினாலு வயசு. மன்மதனின் மலர்க்கணைக்கும் ஒண்ணு ரெண்டுதான் கூடுதல் இருக்கும். பொல்லாத மதன பாணம் பாஞ்சுருச்சே. என்ன அழகு! எத்தனை அழகு! கோடி ரோஜா இதழ்கள் கொட்டிய ராதா அழகு. கை உடையாத வீனஸ் சிலை. அசட்டுச் சிரிப்பில்லாத மோனாலிஸா. சுந்தரத்தின் அந்தர வடிவம். நின்றால் சிலா சிற்ப சாஸ்திரம். ஹா… ஒசிந்தால் காம தேவ தாண்டவம். “என்னடா படத்துல கரச்சல் பண்ணணும்னே… சத்தமே காணாம்?” என்றான் ஒருத்தன். “மறந்தே போனோம் இல்லடா” என்றான் இன்னொருத்தன். அழகிய மெய்ம்மறதி. ஒரு பேரழகைப் பார்வையிடுவது இந்தப் பிள்ளக்காப் பசங்களுக்கு இதுதான் முதல் முறை என்று தெரிந்ததில் எனக்கு ஒரு சிரிப்பு.
நானெல்லாம் டிஆர் ராஜகுமாரியில் இருந்து தரிசனத்தை அடைந்தவன். கிழடுகளின் தொல்லை தாளாமல் கூடச் சேர்ந்து போய்ப் பார்த்த படமொன்று. கிருஷ்ணபக்தி. ஆனால், பெயரைப் பார்த்து ஓடி ஒளிந்து கொள்ளாதது எவ்வளவு அதிர்ஷ்டமாய்ப் போயிற்று. கதாநாயகியின் ஃப்ரேம் போட்ட போட்டோவைத் தூணில் பொருத்தி ஹீரோ பீயூ சின்னப்பா அவளைப் பற்றிய பில்ட் அப் பாட்டுப் பாடுகிறார்.
‘சாரசம் வசீகரக் கண்கள் சீர்தரும்
முகம் சந்த்ர பிம்பம்
மனோகர ஓவிய பெண்ணாள்
வாய்த்தால் பேரின்பம்
ஆடும் விழியாள் அபிநய மொழியாள்
ஈடில்லா தேவகுமாரி சிங்காரி…’
வர்ணனையின் ஒவ்வொரு சொல்லுக்கும் பொருத்தமாக போட்டோவில் சிரித்துக்கொண்டிருந்த அந்த தேவலோக நாரீ, டிஆர் ராஜகுமாரி. கறுப்பு வெள்ளை போஸ்டரில் ராஜகுமாரியின் முறுவலைப் பார்த்தவுடனேயே படத்துக்குப் போகும் ஆசை கிளம்பிவிடும். எத்தனை படங்கள்! ஹரிதாஸ், சிவகவி என்று, பற்பல மாதங்கள் ஓடிய படங்களுக்கு எல்லோரும் எம்கேடீக்கு க்ரெடிட் கொடுத்தார்கள். நான் மட்டும் ரகசியமாக அதை ராஜகுமாரிக்குக் கொடுத்தேன். ஏழெட்டு நீலாம்பரிகளை ஏப்பம் விட்டுச் செரித்த வசந்தசேனாவை மனோகராவில் பார்த்தேன். பெயரைப் பாருங்கள், எழிலை விளக்கும் சொற்கட்டு. வசந்த காலம் படையெடுத்து வந்து தாக்குதல் தொடுக்கிறது என்று இளமனங்களுக்குள் பொருள்படும். இந்தப் படங்களில் எல்லாம் ஆள்மயக்கி கேரக்டர்கள். உச்சக்கட்டமாக தங்கப்பதுமை படம். எதிரில் சிவாஜி கணேசன். ராஜகுமாரியைப் பார்த்த மாத்திரத்தில் மோகினிப் பேயறைந்தது போல் நிற்கிறார். அழகி கேட்கிறாள்: “என் அழகு உன் கண்களைக் கூசச் செய்கிறதா?” பதிலில் ஆப்ஷன்களே இல்லை. ‘ஆம்’ என்பது மாத்திரமே சொல்லக்கூடிய சொல். தொடர்கிறாள் மாயாமோகினி. அது ராஜகுமாரியின் கேரக்டர் பெயர்: “உன் தகப்பனார் உன்னை வைத்தியனாக வளர்க்காமல் கவிஞனாக வளர்த்திருந்தால் இந்த அதிசயமான அழகைப் பார்த்ததும் அமரகாவியமே பாடியிருப்பாய்.” தான் அழகியென்று அறிந்த அழகியின் சொற்கள். பதிலளிக்கத் தெரியாமல் நிற்கும் நம்மைப் போன்ற சிவாஜியை மயக்க, தன் சேஷ்டைகளைத் தொடங்கினாள். சற்றே குனிந்துகொண்டு வல மேல்புறத்தில் விழிகளைக் கொண்டு சென்றாள். இதழ் பிரியாதொருமுறையும் முல்லைப் பூத் தெரிய ஒரு முறையும் முறுவலித்தாள். இமைச்சிறகடித்தாள். பார்த்துக்கொண்டிருந்த எனக்கு அந்தக் காட்சி நம்பகத்தன்மை இன்றித் தோன்றியது. ‘அது டிஆர் ராஜகுமாரிடா. இவ்வளவு கொனஷ்டை பண்ணணுமா? சும்மா பேசாம ஒக்காந்திருந்தாலே அவனவன் மயங்கிச் சரிஞ்சுறுவானே…’
வண்ணமற்ற அந்தக் காலத்திலேயே கறுப்பு வெள்ளைத் தேவதைகள் ராம்ப் வாக்கிங் நடத்தியதில் குறைவே இல்லை. தேவிகாவை விட முடியுமா? நைன்டீஸ் குழந்தைகளுக்குத் தெரியாதில்லையா… கனகாவின் அம்மா. நெஞ்சம் மறப்பதில்லை என்பது படக்கருவின் காரணப்பெயர் என எடுத்துக்கொள்ளலாகாது. நாயகியை ஒருமுறை பார்த்தால் அவள் வடிவை ‘___________’ என்று நிரப்பிக்கொள்ள வேண்டும். அவர் ஈஸ்ட்மேன் கலர்க் காலத்துக்கும் வந்து ‘பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்ற’லை என் மனதில் தவழவிட்டார்.
மென் தென்றலாக இன்றி சீறும் காற்றாக ஆட்டிப்படைத்த எழில்நாயகி உண்டு. வைஜெயந்தி மாலா. ‘சாதுர்யம் பேசாதேடீ என் சலங்கைக்கு பதில் சொல்லடி’ என்கையில், என் மனம் என் கையில் இல்லை. ‘சபாஷ், சரியான போட்டி’ என்பது வீரப்பாவினுடையதல்ல, பார்வையாளர்களின் soliloquy.
இதே பாடலில் எதிர்நிலையில் இருக்கும் பப்பியைப் பற்றிச் சொல்லித் தீராது. பத்மினி என்பது தென்னிந்திய அழகின் பிரதிநிதி என்றிருந்தது. அவர் அழகுக்குக் கிடைத்த வரவேற்பைப் பற்றிக் கதைகள் உண்டு. கேரளாவில் நடந்த பத்மினி கல்யாணத்துக்கு சென்னையில் இருந்து தனி ரயில் செர்வீஸ் விடப்பட்டதாம். மேலே சொன்ன வஞ்சிக்கோட்டை வாலிபன் படத்திலெல்லாம் அவர் நடுப்பிராய நாயகியாக எனக்குத் தோன்றத் தொடங்கிவிட்டார். பால்யத்திலிருந்து யௌவனத்தில் எட்டுஎடுத்து வைத்து சில நிமிஷங்களே ஆன தோற்றத்தில் பத்மினி நமக்குள் புகுந்த படம், ‘மணமகள்’. அயோக்கிய பாலையா மாஸ்டர் பாட்டுச் சொல்லிக்கொடுப்பார். ‘கன்னத்தில் முத்தமிட்டால் உள்ளந்தான் கள்வெறி கொள்ளுதடி உன்னைத் தழுவிடிலோ கண்ணம்மா உன்மத்தமாகுதடி உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி என் கண்ணில் பாவையன்றோ கண்ணம்மா என்னுயிர் நின்னதன்றோ…’ என்று மேலே தொடரமுடியாமல் பாலையா கபட நாடகமாக விசும்ப, செய்வதறியாது, ‘மாஸ்டர் மாஸ்டர்’ என்று பார்க்கும் பத்மினிப் பார்வையின் மருட்சியை காலத்தால் மறக்கடிக்க முடியாது.
இரண்டு தலைமுறைகளுக்குப் பாலம் போட்ட பாவையருள் சிற்பப் பேரழகோடு இருந்த நாயகியாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா. சௌந்தர்ய தேவதையின் பரிபூர்ண ஆசிகளோடு இந்த மண்ணுக்கு வந்தவர். ரவிச்சந்திரன், முத்துராமன், ஜெய்சங்கர், எஸ்ஸெஸ்ஸார், ஜெமினி கணேசன் என எந்த நாயகனாக இருந்தாலும் தயங்காமல் ஜோடி கட்ட ஜெயலலிதாவுக்குத் தன் அழகின் மீது இருந்த நம்பிக்கை காரணமாக இருக்கலாம். ஜெயலலிதா திரையிலிருந்து விலகிய படமான ‘நதியைத் தேடி வந்த கடல்’ வரைக்கும் தன் வனப்பின் இம்மியும் குறையாமல் இருந்து வியக்கவும் விரும்பவும் வைத்த நடிகை.
‘முத்தாரம் சிரிக்கின்ற சிரிப்பல்லவோ
முழுநெஞ்சைத் தொடுகின்ற நெருப்பல்லவோ
சங்கீதம் பொழிகின்ற மொழியல்லவோ
சந்தோஷம் வருகின்ற வழியல்லவோ
என்கோவில் குடிகொண்ட சிலையல்லவோ
சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ
செந்தாமரை இரு கண்ணானதோ’
– என்கிற வரிகள் தங்கப் பதக்கத்தின் மேலே முத்துப் பதித்ததைப் போன்ற ஜெயலலிதாவின் சித்திரத்தை வரையப் பொருத்தமான கோடுகள்.
காலங்கள் மாற வயது ஏற, அழகில் அணிவகுக்கும் திரைநாயகியரின் எண்ணிக்கை அதிகமாகத்தான் ஆனது.
நவீனப் பெண்ணை தமிழ்த் திரைக்கு அறிமுகப்படுத்திய லட்சுமி. இரு மாறுபட்ட நாசிகளால் அழகை நிறுவிய ஸ்ரீதேவி. பணம் செழித்த தோற்றத்தின் ஜெயப்ரதா. முரடர்களோடு சண்டை போட்டே நம் மனம் கவர்ந்த விஜயசாந்தி. பெருங்கண்ணால் ராஜபார்வை பார்த்த மாதவி. கண்ணாடி போட்டும் கவர்ந்த ஷோபனா. மெல்லியலாள் என்ற சொல்லின் இணையாக நினைவுக்கு வரும் அமலா. அந்த இடத்தை மறுநிரப்பிய, தற்செயலாக ஒத்த பெயர்கொண்ட அமலா பால். இப்படியெல்லாம் பயணம் போய்க்கொண்டிருந்தபோது திரைவானின் விடிவெள்ளி என்றாற்போல் உற்சாக ரகளையாக வந்து ‘இப்படியொருத்தியைத் தெருவில் பார்க்க மாட்டோமா’ என்று எண்ணவைத்த நதியா.
மேலே சொன்ன எந்த நடிகையரின் இலக்கணங்களோடும் பொருந்திப்போகாத அழகு ஒன்று வந்தது. அதன் பெயர் நந்தினி. ஆவாரம்பூ நாயகி என்றால் அடையாளம் காண்பீர்கள்.
தமிழ்த் திரைப்பட நாயகி ஆவதற்கு முதல் அடிப்படையே அழகு என்பதுதான் பெரும்பான்மை. அப்படி எத்தனையோ அழகான நடிகைகள் இருக்கிறார்கள். இருந்திருக்கிறார்கள். அவர்களில் சிலர் என் மனதில் இடம் பிடித்ததற்கு என்ன காரணம் என்று ஒரு யோசனை வந்தது. தோற்றப்பொலிவு தாண்டி தாங்கள் ஈடுபட்டிருக்கும் வேலையில் தங்கள் முழுத் திறமையையும் காட்டும் வண்மை இருப்பது புலப்பட்டது. இந்தத் திறமையைப் பற்றி மேலும் கொஞ்சம் பேச வேண்டியிருக்கிறது.
தொடரும்..











