ரேவதி சந்திரசேகரன்
எனக்கு எப்போதுமே பிடிக்காத விஷயம் தனிமை. சுற்றி யாராவது இருந்து கொண்டே இருப்பது எனக்குத் தேவையான ஒன்று. விடுமுறை தினங்களில் பிள்ளைகள் படித்துக் கொண்டு இருந்தால், எல்லோரும் ஒரே அறையில் இருக்க வேண்டும் என்று விரும்புவேன். அவரவர் வேலையை செய்யலாம்.என்னோடு பேசிக்கொண்டே இருக்க வேண்டும் என்பதில்லை. பேசவும் தேவையில்லை. ஆனால் ஒரே இடத்தில் இருக்க வேண்டும். பிள்ளைகள் வளர வளர அவர்களுக்கு ஒரு தனிமை தேவைப்படுகிறது.
அவர்களுக்குப் பிடித்த இசை, புத்தகம், திரைப்படங்கள் என்று பார்க்க அவரவர்க்கான தனிமை தேவைப்படுகிறது. எனக்கும் என் பதின்ம வயதுகளில் தேவைப்பட்டு இருக்கும். ஆனால் ஒரு சக்கரம் போல நாம் விரும்பும் தனிமையும், நாம் விரும்பாத் தனிமையும் நம்மை சுற்றிக்கொண்டே இருக்கிறது. மனித வள மேம்பாட்டு அறிக்கைகளில் வயதானோர் தனிமையில் இருப்பதன் பிரச்சினைகள் குறித்து நிறைய குறியீடுகள் சொல்லப்படுகின்றன.
வயது முதிர்ந்தோருக்கான மருத்துவ உதவிகள் தனித்து விடப்படும்போது அவர்களின் அவசர கால உதவிகளுக்கான வாய்ப்புகள், பிள்ளைகள் புலம் பெயர்ந்து போகும் நிலையில் முதியோரின் மன நிலை முதலிய விஷயங்கள் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவை.
வாஸந்தியின் “சந்தியா” நாவலில் கவனிக்க ஆள் இன்றி மரித்துப்போகும் ஒரு முதியவர் பற்றிய விவரணை வரும். எனக்குப் படிக்கும்போதே சுருக்கென்றது. வளர்ந்த மாவட்டங்களில் பிள்ளைகள் வெளிநாட்டு வேலைகளுக்கு சென்ற பிறகு தனிமையில் கழிக்கும் பெற்றோரின் ஒரு பரிதவிப்பை என்னால் உணர முடிந்தது. உலக சினிமாக்களை தேர்ந்தெடுத்து பார்க்க வேண்டும் என்று நினைத்த போது ஜப்பானிய மொழியில் என் பட்டியலில் இருந்த படம் ரோஷோமான். ஆனால் எனக்கு ஆங்கில சப் டைட்டிலுடன் கூடிய வடிவம் பார்க்கக் கிடைக்கவில்லை.
எனவே அடுத்ததாக என்ன பார்க்கலாம் என்று தேடிய போது கிடைத்த படம் தான் Tokyo Story. நாம் இப்போது முக்கியமாகப் பேசத் தொடங்கி இருக்கும் முதியோர் பராமரிப்பு பற்றி 1950களில் வந்த ஜப்பானியத் திரைப்படம் “டோக்கியோ ஸ்டோரி”. யசுஜிரோ ஓசு(Yasujirō Ozu) என்னும் இயக்குநரால் எடுக்கப்பட்ட திரைப்படம் இது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகான மிக வேகமான தொழில் புரட்சியில் ஜப்பானியக் குடும்ப அமைப்பு எப்படி மாறிப்போனது என்பதை விவரிக்கும் படம். எஸ்.ராமகிருஷ்ணனின் மிக முக்கியமான நூறு உலக சினிமாக்கள் என்னும் வரிசையில் இருந்து இந்தப் படத்தை நான் கண்டெடுத்தேன்.
பிள்ளைகளால் அவமதிக்கப்படும் பெற்றோரின் அவதி பற்றி இந்திய மொழிகளில் பல படங்கள் வெளிவந்துள்ளன. இயக்குநர்கள் விசு, வி.சேகர் போன்றவர்களின் பல திரைப்படங்களில் வந்த வழக்கமான கதைதான். ஆனால் Tokyo Story திரைப்படத்தில் யாருக்கும் யாரும் எந்த நீதியையும் போதிப்பது இல்லை. எதையும் நியாயப்படுத்தும் நிலையும் இல்லை. இயல்பு போலவே ஒரு புறக்கணிப்பு எப்படி நிகழ்கிறது, குடும்ப அமைப்பு மிக உன்னதமானதாகக் கருதப்படும் ஆசிய நாடான ஜப்பானில், எப்படி நவீனத்துவம் மாற்றங்களை உருவாக்குகிறது, அவர்களது கலாச்சாரம் என்ன என்பது குறித்து நிதானமாகச் சொல்லும் படம் இது.
நான் சைனாவுக்கு ஒரு பயிற்சிக்காகப் போய் இருந்த போது அங்கே படிக்க வந்திருந்த ஒரு ஜப்பானிய ஆராய்ச்சி மாணவரை சந்தித்தேன். ஜப்பானில் உணவருந்தும்போது நம்மை விட பெரியவர்கள் உடன் இருந்தால் பேச மாட்டார்களாம். மிகுந்த மரியாதையுடன் தான் நடப்பார்கள் என்று அவர் சொன்னார். இப்போதும் கலாச்சாரத்துக்கு மிகுந்த மரியாதை கொடுப்பவர்கள் அவர்கள். இந்தப் பின்னணியில் டோக்கியோ ஸ்டோரி திரைப்படம் மிக மிக முக்கியமானது. இனி காலம் இப்படித்தான் இருக்கும் என்பதை மனதில் அறையும் வண்ணம் வெளிப்படுத்தும் திரைப்படம். உலக சினிமா வரிசையில் என்னை மிகவும் பாதித்த படங்களில் ஒன்று Tokyo Story.
மேற்கு ஜப்பானில் இருக்கும் அமைதியான கிராமமான ஓனோமிச்சியில், முதியவர்கள், அப்பா சுகிச்சி மற்றும் அம்மா டோமி ஹிராயமா (Shūkichi , Tomi Hirayama) இருவரும், ஆசிரியையான தங்கள் கடைசி மகள் கியோக்கோ உடன்( Kyoko) வாழ்ந்து வருகின்றனர். அவர்களுக்கு ஐந்து பிள்ளைகள். மூத்த மகன் கோய்ச்சி ( Koichi) மருத்துவராகவும் இரண்டாம் மகள் ஷிஜி (Shige) அழகு நிலையம் நடத்துக்கொண்டும் டோக்கியோவில் வசிக்கின்றனர். மூன்றாவது மகனான ஷோஜி ( Shoji), இரண்டாம் உலகப் போரில் காணாமல் போய் விடுகிறான்.
அவன் இறந்து விட்டதாக வீட்டினர் நினைக்கின்றனர். அவன் மனைவியான நோரிக்கோவும் (Noriko) டோக்கியோவில் ஒரு அலுவலகத்தில் பணி புரிந்து வருகிறாள். அவர்களுடைய நான்காவது மகன் கெய்சோ( Keizo) ஒசாகா நகரில் வசிக்கிறான். டோக்கியோவில் உள்ள மகன், மகள் மற்றும் மருமகள் ஆகியோரைக் காண்பதற்கு கிராமத்தில் இருந்து பெற்றோர் இருவரும் கிளம்புவதில் கதை தொடங்கும். வயதான, எளிமையான, நிதானமான பெற்றோர். அவர்களின் பிள்ளைகள் நல்ல நிலையில் இருப்பதை அக்கம்பக்கத்தினர் பாரட்டும்போது பெருமிதம் அடையும் அழகான பெற்றோர் அவர்கள் இருவரும்.
டோக்கியோவை அடையும் சுகிச்சியும் டோமி ஹிராயமாயும் மூத்த மகன் வீட்டுக்கு முதலில் செல்வார்கள். அங்கும் பெரியவர்கள் வருகைக்காக படுக்கைகள், வசதிகள் தயார் செய்யப்படும். பாட்டி படுப்பதற்காக தான் படுக்கும் இடத்தை விட்டுக்கொடுக்க பேரன் அடம் பிடிப்பான். பாட்டியின் கதைகளும், அருகாமையும் அவனுக்கு விருப்பமானதாக இருக்காது. உறவுகளின் கண்ணிகளில் ஏற்படும் இடைவெளி இந்தக் காட்சிகளில் தெளிவாகத் தெரியும். மகன் வீட்டுக்கு வரும் மகளையும் மருமகளையும் ஆவலோடு பார்ப்பார்கள் மூத்தவர்கள். இயல்பான பேச்சு வார்த்தைகளுக்கு இடையே சில சுருதி பேதங்களும் நமக்குப் புலப்படும். அங்கே சில நாட்கள் தங்கும் முடிவோடு வரும் பெற்றோருடன் செலவு செய்ய மூத்த பிள்ளைகள் இருவருக்கும் நேரம் இருக்காது.
எனவே பெற்றோர் இருவரையும் அடானியில் இருக்கும் ஒரு ரிசார்ட்டுக்கு அனுப்பி வைப்பார்கள். பிள்ளைகளோடு இருக்க விரும்பும் பெற்றோருக்கு இந்தப் பயணம் அவ்வளவாக ரசிக்காது. ஆனால் நிறைய பணம் செலவழித்து பிள்ளைகள் அனுப்பிகிறார்களே என்ற எண்ணத்தில் அந்த விடுதிக்கு செல்வார்கள். ஆனால் ஒரே கூத்தும் ஆடல் பாடலுமாக இருக்கும் அந்த விடுதியில் உறக்கமின்றி இருவரும் ரொம்பவே கஷ்டப்படுவார்கள். கடற்கரை ஓரமாக அமர்ந்து இருவரும் பிள்ளைகள் எப்படி மாறி விட்டார்கள் என்று ஏக்கத்தோடு பேசிக்கொண்டு இருப்பார்கள். அப்போது டோமிக்கு லேசான உடல் நலக்குறைவு ஏற்படும். அதற்கு மேல் அந்த விடுதியில் இருக்க விரும்பாமல், உடனேயே கிளம்பி விடுவார்கள்.
மகள் வீட்டில் தங்கலாம் என்று சுகிச்சியும் டோமியும் செல்லும்போதுதான், மகள் ஷிகோ தன் வீட்டில் சில விருந்தினர்களை தங்க வைத்திருப்பது தெரிய வரும்.அவள் வீட்டில் அன்று தங்க இயலாததால், அன்று பகலை இருவரும் ஒரு பூங்காவில் கழிப்பார்கள். மதியத்துக்கு மேல் சுகிச்சி தன் நண்பர்களைப் பார்க்கவும் டோமி நோரிக்கோவுடன் தங்கவும் செல்வார்கள். நோரிக்கோ மனதளவில் இவர்கள் இருவர் மீதும் மிகுந்த அன்பையும் கனிவையும் கொண்டிருப்பாள். அவளும் டோமியும் அந்த இரவில் நல்ல மன நெருக்கத்தை உணர்வார்கள்.
அதே நேரம், தன் நண்பர்களுடன் மது அருந்தச் செல்லும் சுகிச்சி விடுதியில் நள்ளிரவு வரை செலவழிப்பார். அவர்களும் தங்கள் பிள்ளைகள் நல்ல நிலையில் இருப்பதில் பெருமை கொள்வதோடு,தங்கள் தனிமை குறித்தும் வருத்தம் கொள்வார்கள். குடித்துவிட்டு போதையில் மகள் வீட்டுக்கு வரும் சுகிச்சியை ஷிகோ கடிந்து கொள்வாள். மறுநாள் நோரிக்கோவின் வீட்டில் இருந்து வரும் டோமியும், மனம் வருந்த இருவரும் ஊருக்கே செல்ல முடிவு செய்வார்கள். ரயிலில் திரும்பப் பயணிக்கும் போது இடையில் ஒசாகாவில் இருக்கும் மகனையும் பார்த்து செல்வார்கள். மிகுந்த உடல் நலக்குறைவுக்கு ஆளாகும் அம்மா டோமி, கிராமத்தை அடைந்த உடனேயே மரணப் படுக்கையில் விழுவார்.
டோக்கியோவில் இருந்து மகன், மகள், நோரிக்கோ மூவரும் வந்து கொஞ்ச நேரத்தில் டோமி இறந்து போவார். அப்போதே, டோமியின் உடைகளை தனக்கு வேண்டும் என்று ஷிகோ கேட்பார். மிகுந்த அவசரத்தோடு பிள்ளைகள் மூவரும் கிளம்பி விடுவார்கள். நோரிக்கோ கொஞ்ச நாட்கள் சுகிச்சியோடும் கியோகோயுடனும் தங்குவாள். தன் அக்கா அண்ணன்களின் சுயநலம் குறித்து மனம் வெறுத்து இருக்கும் கியோகோவுக்கு ஆறுதல் சொல்வாள். தன் பிள்ளைகளை விடவும் தங்களிடம் அன்போடு இருந்ததற்கு நோரிக்கோவுக்கு சுகிச்சி நன்றி செலுத்தி, அவளை மறுமணம் செய்து கொள்ள சொல்வார். உள்ளுக்குள் மிகுந்த தனிமையை உணரும் நோரிக்கோ புன்னகைப்பாள். அவளுக்கு டோமியின் கடிகாரத்தை சுகிச்சி பரிசாகக் கொடுப்பார். நோரிக்கோவும் கிளம்பி சென்றவுடன், தான் வழக்கமாக டோமியுடன் அமரும் மெத்தை இருக்கையில் அமர்ந்து, ஜன்னல் வழியே வெளியே பார்த்தபடி இருப்பார் சுகிச்சி. இதோடு படம் நிறைவடையும்.
ஜப்பானின் வீடுகள், இருக்கை முறைகள், ஒருவருக்கொருவர் மரியாதை செலுத்தும் விதம், ஊர்களின் அமைப்பு என திரைப்படத்தின் காட்சி அமைப்பு மிக அழகாக இருக்கும். ஆனால் படம் முழுவதும் இழையோடும் மெல்லிய சோகமும் தனிமையும் நம்மால் தாங்க இயலாததாக இருக்கும். இதை எழுதும் ஒவ்வொரு நொடியும் என் மனதுக்குள் திரைப்படத்தின் பல காட்சிகள் தெளிவாக வருகின்றன. எழுவது வருடங்களுக்கு முன்னால் எடுக்கப்பட்ட படம் ஆனாலும் இப்போதும் பொருந்துவதாக இருக்கிறது கதையின் களம். தன் இளமைக் காலம் முழுவதையும் பிள்ளைகளின் வாழ்வுக்காகவே செலவழிக்க வேண்டிய கட்டாயம் எல்லா பெற்றோருக்கும் இருக்கிறது. ஆனால் அதற்கான பதில் கிடைக்கிறதா என்றால், பெரும்பான்மை இல்லை என்றே தோன்றுகிறது.
இப்போதைய பேரண்டிங் முறையில், சுதந்திரமாக வளரும் பிள்ளைகளிடம் நாம் எதுவும் எதிர்பார்க்கக் கூடாது. அவர்களுக்கு பறக்கக் கற்றுக் கொடுப்பது மட்டும்தான் நம் கடமை என்று நாம் உணர்ந்தே இருக்கிறோம்
கலீல் கிப்ரான் சொல்லும் “உங்கள் குழந்தைகள் உங்கள் குழந்தைகள் அல்ல ;அவர்கள் உங்கள் வழியாக வருகிறார்கள், ஆனால் உங்களிடமிருந்து அல்ல, அவர்கள் உங்களுடன் இருந்தாலும் அவர்கள் உங்களுக்குச் சொந்தமானவர்கள் அல்ல. நீங்கள் அவர்களுக்கு உங்கள் அன்பைக் கொடுக்கலாம், ஆனால் உங்கள் எண்ணங்களை அல்ல” என்ற வாசகங்கள் என் அம்மா சொல்லி எனக்குத் தெரிந்தவை. அது சரியான ஒன்று என்பதுதான் என் எண்ணமும். ஆனால் இந்தப் படம் என் மனதை ஏதோ ஒரு வகையில் உலுக்கிவிட்டது என்பது எனக்கே ஆச்சர்யம் தான். சுகிச்சி கடைசி காட்சியில் ஜன்னல் வழி பார்த்தபடி அமர்ந்திருக்கும் அந்தல் காட்சியில் அவரோடு அமர்ந்திருப்பது, நீண்ட பெருந்தனிமை. காலத்தில் உறைந்து போகும் சுகிச்சி, வருங்காலத்தைத்தான் கடிகாரமாக நோரிக்கோவுக்கு கொடுத்தார் என்று எனக்குத் தோன்றியது.
பிள்ளைகளைப் பெற்றவர்கள் என்று இல்லை, திருமணம் செய்துகொள்ளாமல் தனிமையில் இருப்பவர்கள், சிங்கிள் பேரண்ட் என்று பாலினம் கடந்து வயதானவர்களுக்கு ஒரு நெருக்கடி இருக்கவே செய்கிறது. தங்கள் இருப்பின் முக்கியத்துவம் என்ன என்பதை அறிந்தோ அறியாமலோ முதியவர்கள், மற்றவர்களிடம் முரண்படுவதும், அதன் விளைவாக அழுத்தங்களை சந்திப்பதும் நாம் எப்போதும் பார்க்கும் விஷயம். மாறாக நடைமுறை வாழ்வின் வேலைப்பளு, பொருளாதாரப் பிரச்சினைகள், பிள்ளை வளர்ப்பு என்று இளையவர்களும் அவர்களுக்கான அழுத்தங்களை எதிர்நோக்கவே செய்கின்றனர். யாரையும் குற்றம் சொல்ல முடியாதபடி காலம் எல்லாரை வைத்தும் பகடை ஆடிக்கொண்டு இருக்கிறது. சமீபத்தில் ஒரு புத்தகத்தில் படித்தேன்.
பெற்றவர்கள் பிள்ளைகளை கவனித்துக் கொள்வதற்கு பதில் நன்றியாகத்தான் பிள்ளைகள் தங்கள் குழந்தைகளை பார்த்துக் கொள்கின்றனர். முன்னோக்கி செல்லும் வாழ்வின் நியதி இதுவே என்று. படிப்பதற்கு மிக வித்தியாசமான வியாக்கியானமாக இருந்தாலும் இது உண்மை என்றுதான் தோன்றுகிறது. சுகிச்சியும் டோமியும் அடானி கடற்கரையில் அமர்ந்து பேசிக்கொண்டு இருக்கும்போது தங்கள் வருத்தங்களை பகிரும் அதே நேரம் தங்கள் பிள்ளைகளின் நியாயத்தைப் பற்றியும் பேசுவார்கள். நாணயத்தின் இரு பக்கங்களைப் போல.
கடுமையான சுகவீனத்தில் இருக்கும் பெற்றோரை கடைசி மூச்சு வரை பாதுகாத்து கவனிக்கும் பிள்ளைகள் எப்போதும் இருக்கிறார்கள். யாருடைய இடையீடும் இன்றி மிக இனிமையாக தங்கள் முதுமையைக் கொண்டாடும் பெற்றோரும் இருக்கிறார்கள். அறுபதுக்குப் பிறகான வாழ்வைத்தான் விரும்பியபடி பயணங்களில், நட்புகளுடன் கழிக்கும் பெரியவர்கள் இருக்கிறார்கள். பெற்றோருடன் இருக்கிறோம் என்ற பெயரில் அவர்களின் உடல் உழைப்பை பயன்படுத்திக்கொள்ளும் பிள்ளைகளையும் பார்க்கவே செய்கிறோம்.
எப்படி இருந்தாலும் வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் அர்த்தமுள்ளதாக ஆக்கிக்கொள்ள பயின்றுகொண்டால் தனிமையின் வெறுமையை எதிர்கொள்ள முடியும் என்று தோன்றுகிறது. பிள்ளைகளின் எதிர்காலத்திலேயே நம் நிகழ்காலத்தை தொலைத்துவிடாமல், பெரிய அளவில் எதிர்பார்ப்புகள் இல்லாமல் வாழ வேண்டியது அவசியம். அதே நேரம் உறவுகளுக்கிடையே இறுக்கம் அதிகரிக்கும் நிலையில், உறவினர்கள் நண்பர்களாகவும், நண்பர்களை சொந்தங்களாகவும் கொண்டு ஒரு பரந்த உலகத்தை நமக்கானதாக வரித்துக் கொண்டால், ஒரு கட்டத்துக்குப் பின்னர் தனிமை தாக்காமல் பார்த்துக் கொள்ள முடியுமோ என்னவோ!!
இந்தப் படத்தை பார்த்து முடித்த நாளில் இருந்து, நானே அறியாத வகையில் ஒரு குற்ற உணர்ச்சியும், மிரட்சியும், எதிர்காலம் குறித்த ஒரு ஆழமான சிந்தனையும் இருந்து கொண்டே இருக்கிறது. மிகவும் பழைய படமாக இருந்தாலும், பார்க்கக்கூடிய அளவில் சுவாரஸ்யமாக இருக்கும் திரைப்படம் இது. You Tubeல் ஆங்கில சப்டைட்டிலுடன் பார்க்கக் கிடைக்கிறது Tokyo Story. நிச்சயமாக ஒரு புதிய தரிசனம் கிடைக்கும்.
கையில் அடங்காத நீரென ஒழுகிக்கொண்டு இருக்கிறது காலம். யாராலும் பிடித்து வைக்க முடியாத காலத்தின் பெருவெளியை நேசத்தின் கரம் கொண்டு மட்டுமே கடக்க முடியும். சுகிச்சி கடைசியாக ஜன்னல் வழியே கண்டடைந்த உண்மை இதுதானோ என்னவோ!!!











