ஜா.தீபா
Thug Life படத்தின் டீசரில் கமல்ஹாசன் இப்படிச் சொல்வார் “என் பேரு ரங்கராய சக்திவேல் நாயக்கன். காயல்பட்டணத்துக்காரன். பொறக்கும்போதே என் தலைல எழுத்தி வச்சிட்டாவ..கிரிமினல், தக், யாகுஸா..யாகுஸான்னா ஜப்பான் மொழில கேங்க்ஸ்டர்னு சொன்னாவ..சாவு என்னைத் தேடி வந்தது இது முதல் முறை இல்ல..கடைசி முறையும் இல்ல” இந்த வரிகள் தான் படத்தின் மொத்தக் கதையும்.
புதுடில்லியில் ரெங்கராய சக்திவேலின் கேங்ஸ்டர் குழுவுக்குள் நடக்கும் அண்ணன் தம்பி சண்டைகள்..துரோகங்கள். அதிகாரத்தின் மீதான பேராசைகள் கொண்ட கதை. உடன் இருப்பவர்களின் மரணத்தைப் பார்த்துக்கொண்டே இருக்கும் ஒருவர் சாகாவரம் பெற்றது போல எல்லாவற்றையும் கடந்து கொண்டே இருக்கிறார் என்றும் கதையை புரிந்து கொள்ளலாம். ஒரு சந்தேகம் என்னவெல்லாம் செய்யக்கூடியது என்பதைக் காட்டக்கூடிய படமாகவும் எடுத்துக் கொள்ளலாம். தனக்கு எதிரான துரோகம் நடந்தபோதும், முதுகில் குத்தியவனுக்காகக் கூட, அவனது தங்கையை அவனுடன் சேர வைக்கிற ஒருவனுடைய கதை என்றும் புரிந்து கொள்ளலாம். அதிகாரம், துரோகம், பணம், செல்வாக்கு எல்லாவற்றையும் துறந்து மனைவிக்காக தன்னை ஒப்புக்கொடுத்து வந்து நிற்கும் ஒரு கணவனின் கதையாகவும் சொல்லியிருக்கலாம்.
இத்தனை சாத்தியங்களைக் கொண்ட படம் இது. மணிரத்னத்தின் முந்தைய படமான ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் நிகழ்ந்த அதே குழப்பம் இதிலும் நிகழ்ந்துள்ளது. நாவலின் மொத்த கதையையும் ஒரு கோட்டுக்குள் கொண்டு வராமல் அங்கங்கு இழுத்த இழுப்புக்கெல்லாம் போன அதே குளறுபடி Thug Lifeலும் நடந்திருக்கிறது.
மணிரத்னம், கமல்ஹாசன் இருவருக்குமே இத்தனை வருட அனுபவத்தில் பார்த்த, கேட்ட, சிலாகித்த எல்லாவற்றையும் ஒரே படத்தில் சொல்ல வேண்டும் என்கிற பரபரப்பு இருந்திருக்கும் போலிருக்கிறது. இந்தப் படத்தில் நிறைய ஜப்பானியப் படங்களின் குறிப்பாக அகிரா குரோசவாவின் படங்களை நினைவுபடுத்தும் காட்சிகள் உண்டு. இறுதியில் தலையில் முடிச்சிட்டு விவசாயம் செய்கிற சாமுராய் போன்று கமல்ஹாசனைப் பார்க்கும் வரையிலும் அந்த சாயல் தெரிகிறது. இவருக்கு ஒப்பனையும் கூட ஜப்பானிய ஒப்பனைக் கலைஞர் என்று டைட்டிலில் பார்க்க முடிகிறது.
படத்தின் டீசரைத் திரும்ப நினைவுபடுத்த வேண்டியிருக்கிறது. ஜப்பானியப் பின்னணியில் காயல்பட்டணத்துக்காரரின் ஒரு கதை என்பதாக புரிந்து கொள்ள சாத்தியம் கொண்ட ஒரு டீசர். காயல்பட்டணத்துக்கும் ஜப்பானுக்கும் எந்தத் தொடர்பும் இருந்ததில்லை, அந்த நிலத்துக்கும் எகிப்துக்கும் நேரடி தொடர்பு உண்டு. இதில் ஜப்பான் எங்கிருந்து வந்தது என்பது தனிபப்ட்ட கேள்வியாகவும் ஆர்வமாகவும் இருந்தது. படம் பார்த்ததில், எதற்கும் யாருக்கும் எதிலும் தொடர்பு இல்லை என்பது உறுதியானது. ஜப்பானியப் படங்களின் மீது கமல்ஹாசனுக்கும், மணிரத்னத்துக்கும் இருக்கும் ஒரு ஆர்வம் அவர்களை இப்படியெல்லாம் சேர்க்க சொல்லியிருக்கிறது என்ற வகையில் புரிந்து கொள்ளலாம்.
கமல்ஹாசன் ஒரு நேர்காணலில் சொன்னார், ‘இப்போது ஷேக்ஸ்பியர் திரைக்கதை எழுத வந்தால் கூட அவருக்கு பயிற்சி அவசியம்” என்று. மிக உண்மையான வார்தைகள். கமல்ஹாசனும் கூட சிறந்த திரைக்கதைகளை நமக்குத் தந்திருக்கிறார். அவரது திரைக்கதையில் இந்தியாவின் முன்னணி இயக்குநரான மணிரத்னம் இணைந்து இயக்கியிருக்கிறார்..இது தான் இந்தப் படத்தினைப் பார்க்கும் ஆர்வத்தை அதிகப்படுத்தியிருந்தது. ஆனால், அந்த மாயாஜாலம் திரையில் நடக்கவேயில்லை. எது ஒன்றையும் முழுமையாக சொல்லாமல் வசனத்தில் கதை சொல்லி நகர்ந்து கொண்டிருக்கிறது படம்.
‘என்னைக் கைநீட்டி அறைஞ்ச ஒரே பொம்பளை நீதான்டி..” என்று சக்திவேல், மனைவி ஜீவாவிடம் சொல்லும் காட்சி ஒரு உதாரணம். அவர் அதற்கு சொல்கிற ஒரு காரணம், கட்சியாக மாறியிருக்க வேண்டியது. எதற்கு இதைக் குறிப்பிட்டு சொல்ல வேண்டியிருக்கிறது என்றால், படத்தின் இறுதி சக்திவேல் ஜீவாவிடம் தான் முடிகிறது. இது இவர்களது கதை என்று தான் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. இந்திராணியாக நடித்த த்ரிஷாவை சக்திவேல் எங்கு பார்த்தார், எப்படிப் பழகினார் என்பதற்குக் கூட காட்சிகள் உண்டு, ஆனால் சொல்லப்பட வேண்டிய ஜீவாவின் கதைக்கு வசனம் மட்டுமே போதும் என்று நினைத்திருக்கிறார்கள்.
இதே போல, அமராக நடித்த சிம்புவின் மனநிலையைச் சொல்லும் காட்சிகள். தன்னை சக்திவேல் சந்தேகப்படுகிறார் அதற்கு மன்னிப்பும் கேட்கிறார் என்றபோது வருகிற கோபம் வன்மமாக மாறுகிற இடமும் மிக அவசரகதியில் வசனத்தில் அளிக்கப்பட்டிருகிறது.
ஒரு வயதான மனிதனின் உடலில் குண்டுகள் துளைக்கப்பட்டு, பல்லாயிரம் அடி பனியில் விழுந்து உயிர் பிழைத்ததோடு மிகச் சாதரணமாக நடந்து போக முடியுமென்றால், அது எப்படி மணிரத்னமும், கமல்ஹாசனும் இணைந்து எழுதிய திரைக்கதையாக இருக்க முடியும்? மணிரத்தினம் யதார்த்தமான காட்சியில் ஃபேண்டசியைக் கையாள்வார், கற்பனையில் யதார்த்தத்தை வைப்பார். இது அவரது யுத்தி. கமல்ஹாசன் எதையும் ஒரு லாஜிக்கோடு கூடிய ட்ராமாவாக திரைக்கதையை சொல்லத் தெரிந்தவர். இவர்கள் இருவரும் சேர்ந்து இப்படி ஒரு காட்சியைப் போகிற போக்கில் வைக்க வேண்டிய தேவை என்ன? படத்தின் நமபகத்தன்மை சிதறிய இடம் இது.
‘நாயகன்’ படத்தையும் இதையும் ஒப்பிட்டு பேசுவதற்கு சில காட்சிகள் உண்டு. நாயகனில் சரண்யாவை ஒரு பாலியல் விடுதியில் கமல்ஹாசன் பார்ப்பார்..திருமணம் செய்து கொள்வார். இங்கும் த்ரிஷா கதாபாத்திரம் இதே போன்றதான ஓரு இடத்தில் பார்த்து அழைத்து வருகிறார். சிறுவயதில் அநாதையாக்கப்பட்ட சிறுவனின் கதையை நாயகனும், இந்தப் படமும் பேசுகிறது. நாயகன் படத்தில் வேலுநாயக்கரை கைது செய்யும் பொறுப்பில் இருக்கும் காவல்துறை அதிகாரியின் மனைவி நாயக்கரின் மகளாக இருப்பார். இங்கு சிம்பு தேடிக்கொண்டிருக்கும் அவரது தங்கை, சிம்புவையும், கமல்ஹாசனையும் கைது செய்ய நினைக்கும் காவல்துறை அதிகாரியின் மனைவியாக இருக்கிறார். இப்படி சிற்சில சாயல்கள் உண்டு. ஆனால், அந்தப் படத்தின் கதையில் ஒரு நேர்கோட்டுத் தன்மை உண்டு. குடிசைப்பகுதியில் வாழ்கிற ஒரு தமிழன், மும்பைத் தமிழர்களின் தலைவனாக மாறுகிறார் என்கிற ஒன்லைன் இருக்கிறது. Thug Life படத்தின் ஒன்லைன் எது என்கிற குழப்பம் படம் முடிந்தும் கூட நம்மால் கண்டுபிடிக்க இயலாமல் போகிறது.
The Godfather படம் மணிரத்னத்திற்கு பிடித்தமான ஒன்று. நாயகன் , செக்கச் சிவந்த வானம் என அவர் கேங்ஸ்டர் படங்கள் என நினைத்து எடுக்கும் எல்லாப் படங்களிலும் The Godfather படத்தின் சாயல் தெரியும். ஆனால், அது அமெரிக்காவில் உள்ள இத்தாலியர்களின் பின்னணி கொண்ட கதை. அதற்கென்று ஒரு இயல்பும், பின்னணியும், சமூக வரலாறும் உண்டு. அது தெரிந்தே எழுதப்பட்ட நாவல் என்பதால் நம்பகத்தன்மை உள்ள ஒரு படம் அது. நாயகனில் கூட மும்பையில் வாழ்கிற தமிழர்களுக்கான ஒருவர் வேலு நாயக்கர் என்கிற பிம்பம் இருந்தது. இந்தப் படத்தில் யாருக்காக ரெங்கராய சக்திவேல் போராடுகிறார் என்கிற பேச்சே இல்லை.
படத்தில் முக்கிய கதாபத்திரங்கள் எல்லாவற்றுக்கும் ஒரு நோக்கம் வேண்டும் என்பது திரைக்கதையின் அடிப்படை விதி. இதில் எந்தக் கதாபாத்திரத்துக்கும் ஒரு நோக்கம் இல்லை. தனது வளர்ப்புத் தம்பியின் தங்கையை அவனுடன் சேர்த்து வைக்க சக்திவேல் முயற்சிக்கிறார் என்றே வைத்துக் கொண்டாலும், கதையில் அவர் முயற்சி இல்லாமலேயே அது இயல்பாக நடக்கிறது. இந்தக் கதையில் நோக்கம் கொண்ட ஒரே கதாபாத்திரம் நாசர் ஏற்று நடித்த மாணிக்கம் மட்டுமே. அவருக்குத் தான் தூக்கி வளர்த்த சக்திவேலின் அபரிதமான வளர்ச்சியைக் கண்டு பொறாமையும் எரிச்சலூம் கொண்டு வயிறெரியும் கதாபாத்திரம். அந்த அதிகாரம் தனக்கு வேண்டும் என்று நினைக்கிற ஏதோ ஒரு நோக்கம் அவருக்கு இருக்கிறது.
படத்தில் வெவ்வேறு நிலப்பரப்புகள் காட்சிபடுத்தப்படுகின்றன. புதுடில்லியின் இடிந்த கோட்டைகள், கோவாவின் கடற்பரப்பு, காயல்பட்டணத்தின் விவசாய நிலம் (கடற்புறமான காயல்பட்டணத்தில் விவசாயம் பார்ப்பார்களா என்கிற கேள்வியை ஒதுக்குவோம்) , பனிபடர்ந்த நேபாளம் என நிலங்கள் வந்து போகின்றன. பார்ப்பதற்கு அவை யாவும் அலுக்கவேயில்லை. ஓரளவு ஆசுவாசத்தைப் படத்தில் ஏற்படுத்துவது இந்த வெவ்வேறு நிலக்காட்சிகள் தான்.
கமல்ஹாசன் சிறப்பாக நடித்திருக்கிறார் என்று சொல்வது அறுபது ஆண்டுகால தமிழ்சினிமாவின் தேய்வழக்குச் சொல். அவரது சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய படங்கள் எல்லாவற்றிலும் தேர்ந்த தன்னுடைய அற்புத நடிப்பால் ஈர்த்திருப்பார் இந்தப் படத்தில் கமல்ஹாசன் நடிப்பதற்கு என்று காட்சிகள் சேர்க்கப்பட்டிருக்கின்றன. ஒரு திரைக்கதையில் கமல்ஹாசன் தன்னைப் பொருத்திக் கொள்வதற்கும், நடிப்பதற்காக காட்சிகளை ஏறப்டுத்திக் கொள்வதற்குமான வித்தியாசத்தினை இந்தப் படத்தின் மூலமாகப் பார்க்க முடியும். நடிக்கிறார் என்பதை உறுத்தலாக வெளிப்படுத்திய படமாக இது மாறியிருக்கிறது. அவரது கண்கள் கூடுதலாக நடித்திருக்கின்றன இந்தப் படத்தில்.
பொதுவாக சண்டைக்காட்சிகளை இயக்குபவர்கள் ஸ்டன்ட் மாஸ்டர்கள் தான். இங்கும் அப்படித் தான் நடந்திருக்க வேண்டும். இந்தப்படத்தில் அன்பறிவ் சகோதரர்கள் சண்டைக்காட்சியை வடிவமைத்திருக்கிறார்கள். முதல்பாதியில் துப்பாக்கியோடு வருகிற காட்சிகள். இரண்டாம் பாதியில் தற்காப்பு கலை கற்று வருகிற சக்திவேல் கதாபாத்திரத்துக்காக சில சண்டைக் காட்சிகளை வைத்திருக்கிறார்கள். ஏற்கனவே இவர்கள் வடிவமைத்தப் படங்களின் சாயல் கொண்ட சண்டைக்காட்சிகள். படத்தில் சண்டைக்காட்சிகளுக்கு இடையில் மற்ற காட்சிகளும் வருகின்றன என்பதால், இந்தப் படத்தினை மணிரதனம் அவர்களோடு அன்பறிவ் சேர்ந்து இயக்கியிருக்கிறார்கள் என்றும் எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.
ஒவ்வொரு நாட்டிலும் கேங்க்ஸ்டர் கலாசாரம் உண்டு. அதனை அந்தந்த நாடுகளின் இயக்குநர்கள் கையாண்டிருக்கிறார்கள். அமெரிக்க கேங்ஸ்டர் உலகின் வெவ்வேறு முகங்களைத் தொடர்ந்து அங்குள்ள இயக்குநர்கள் எடுத்து வருகிறார்கள். இதே துப்பாக்கி, ரத்தம், துரோகம், வன்மம், போட்டி, பொறாமை எல்லாம் கொண்ட படங்கள். புலிட்சர் விருது வாங்கிய கேங்ஸ்டர் பற்றிய கட்டுரைகளை அடிப்படையாகக் கொண்டவை. ஆய்வேடுகளின் அடிப்படையில் எடுக்கப்பட்டவை. அவர்களின் வாழ்க்கையோடு இணைந்து பயணித்து அதன் பின் எடுக்கப்பட்ட படங்கள் என அங்கு ஏராளமானவற்றைச் சொல்ல முடியும். அதே போல இந்தியாவிலும் கேங்க்ஸ்டர் படங்கள் உண்டு. Sacred Games மாதிரியான நெட் சீரீஸ் உண்டு. இந்திய மாஃபியாக்கள் குறித்து ஆய்வு நூல்களும், நாவல்களும் எழுதப்பட்டிருக்கின்றன. ஒருவர் அதைப் படித்து விட்டு இந்தப் படத்தையும் பார்த்தால் எந்தளவுக்கு நாம் ஒரு உலகத்தை புரிந்து கொள்வதில் பலவீனமாக இருக்கிறோம் என்பது தெரியவரும்.
காயல்பட்டிணக்காரர் புதுடில்லியில் கேங்க்ஸ்டர் தலைவராக மாறுகிறார் என்பது சொல்லப்படக்கூடாத கதையல்ல, ஆனால், வந்தபின் என்ன செய்கிறார் என்பதைத் தெளிவாக சொல்ல வேண்டும். அதில் திரைக்கதையாசிரியர்களும், இயக்குநரும் கவனம் இழந்திருக்கிறார்கள்.
மணிரத்னம், கமல்ஹாசன் என இரு ஆளுமைகள் இணைகிற ஒரு படத்தின் மீதான எதிர்பார்ப்பும், வியாபாரமும் எப்படியாக இருக்கும் என்பதை இருவருமே அறிவார்கள். இதில் அவர்கள் நம்மை ஏமாற்றமடையச் செய்திருக்கிறார்கள். வருத்தம் என்னவென்றால், இந்திய சினிமாவின் இரு ஆளுமைகள் இணைகிற ஒரு படம் இந்தத் துறையில் ஈடுபாடு கொண்டவர்களுக்கு நம்பிக்கை அளிப்பதாக இருக்க வேண்டும், மாறாக மனஉளைச்சலையும், கேள்விகளையும் ஏற்படுத்தியிருக்கிறது.










