The Talkie
Thursday, April 9, 2026
  • Login
  • Register
  • thetalkie
  • ஆளுமைகள்
  • திரைக்கதைகள்
  • உரையாடல்
  • கட்டுரைகள்
    • இந்தியத் திரைப்படங்கள்
    • உலகத் திரைப்படங்கள்
    • தமிழ்த் திரைப்படங்கள்
    • ஓடிடி திரை
  • தொடர்கள்
    • ட்ரெண்டு கொட்டாய்
    • திரை புத்தகம்
    • ஸ்டார்ட் கேமரா
    • I CALL THE SHOTS
    • குரு தத் 100
    • டேபிள் டாப்
  • தொடர்பு
No Result
View All Result
The Talkie
  • thetalkie
  • ஆளுமைகள்
  • திரைக்கதைகள்
  • உரையாடல்
  • கட்டுரைகள்
    • இந்தியத் திரைப்படங்கள்
    • உலகத் திரைப்படங்கள்
    • தமிழ்த் திரைப்படங்கள்
    • ஓடிடி திரை
  • தொடர்கள்
    • ட்ரெண்டு கொட்டாய்
    • திரை புத்தகம்
    • ஸ்டார்ட் கேமரா
    • I CALL THE SHOTS
    • குரு தத் 100
    • டேபிள் டாப்
  • தொடர்பு
No Result
View All Result
The Talkie
Subscribe
Home தொடர்கள் திரை புத்தகம்

திரை புத்தகம் 07

The Talkie by The Talkie
September 26, 2025
in திரை புத்தகம், தொடர்கள்
A A
2
Thirumbi Parkiren
Share on WhatsappShare on FacebookShare on Twitter

Author Icon கருந்தேள் ராஜேஷ்

ஐம்பதுகளிலும் அறுபதுகளிலும் இந்தியா முழுக்கக் கொடிகட்டிப் பறந்த ஒரு அட்டகாசமான தமிழ் இயக்குநர் பற்றியும், அவர் தனது திரைவாழ்க்கை பற்றி மிக விரிவாகத் தொடராக எழுதிய ஒரு புத்தகத்தைப் பற்றியும்தான் இந்த மாதம் நமது திரை புத்தகம் தொடரில் பார்க்கப்போகிறோம்.

ஐம்பதுகளின் இறுதியில் வெற்றிகரமான வசனகர்த்தாவாக விளங்கிய இளைஞர் ஒருவர், இயக்குநராகத் தனது முதல் படமாகக் கல்யாணப் பரிசை அவரது இருபத்தி ஆறாவது வயதில் இயக்கினார்.

அப்படம் பிரமாண்ட வெற்றியடைந்ததும், சொந்தமாக ஒரு தயாரிப்பு நிறுவனத்தைத் துவங்கி, அதில் வரிசையாகப் படமெடுக்க ஆரம்பித்தார். அவரது தயாரிப்பு நிறுவனமான சித்ராலயாவுக்காக அவர் இயக்கிய முதல் படமான தேன் நிலவு வெளியானது 1961-ல்.

அந்த இயக்குநர் ஸ்ரீதர். சித்ராலயா மூலம் ஸ்ரீதர் எடுத்த பல வெற்றிப்படங்கள் அப்போதிலிருந்து துவங்கி எழுபதுகள் வரை வெளியாகின. ஸ்ரீதரின் ஒவ்வொரு படமும் அவர் இயக்கிய முந்தைய படத்திலிருந்து நிச்சயம் வித்தியாசப்பட்டிருக்கும்.

தேன் நிலவு, காஷ்மீரில் படமாக்கப்பட்ட முதல் தமிழ்ப்படம். மட்டுமல்லாமல் முற்றிலுமாக அவுட்டோரிலேயே எடுக்கப்பட்ட படமும் கூட. இதற்கு அடுத்த சித்ராலயாவின் தயாரிப்பு முற்றிலும் ஒரு மருத்துவமனையின் செட்டுக்குள்ளேயே எடுக்கப்பட்டது. அதுதான் ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ (1962).  இதற்குப்பின் ஸ்ரீதர் இயக்கியது, தமிழின் முதல் மறுஜென்மக்கதை.

அதுதான் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ (1963). பின்னர் ஒரு இசைக்கலைஞனை மையமாக வைத்து ஸ்ரீதர் இயக்கிய ‘கலைக்கோயில்’ (1964) வெளியானது. அதற்கு அடுத்த படம் தமிழில் முதல் வண்ண சமூகப்படம்.- ‘காதலிக்க நேரமில்லை’ (1964). பின்னர் தமிழில் கதாபாத்திரங்களுக்கு ஒப்பனையே செய்யப்படாத படம் ஒன்றை எடுத்தார் (‘நெஞ்சிருக்கும் வரை’ – 1967). இதன்பின்  ஐரோப்பாவில் எடுக்கப்பட்ட முதல் தமிழ்ப்படமாக ‘சிவந்தமண்’ (1969) வெளியாகியது.

இவற்றுக்கு இடையே ‘சுமைதாங்கி’, ‘போலீஸ்காரன் மகள்’, ‘வெண்ணிற ஆடை’, ‘கொடிமலர்’, ‘ஊட்டி வரை உறவு’ போன்ற தமிழ்ப்படங்களும், ‘நஸ்ரானா’ (கல்யாணப் பரிசின் ஹிந்தி வடிவம்), ‘தில் ஏக் மந்திர்’ (நெஞ்சில் ஓர் ஆலயம்), ‘ப்யார் கியே ஜா’ (காதலிக்க நேரமில்லை), ‘நை ரோஷ்ணி’, ‘சாத்தி’ (பாலும் பழமும்) ஆகிய ஹிந்திப் படங்களையும் இயக்கியிருக்கிறார் ஸ்ரீதர். தனது படங்களில் ஏராளமான நடிகர்களையும் டெக்னீஷியன்களையும் அறிமுகப்படுத்திய பெருமையும் ஸ்ரீதரையே சேரும். இப்படியாக, அறுபதுகளில் கொடிகட்டிப்பறந்த இயக்குநர்களில் தனக்கென்று ஒரே பாணி எதையும் வகுத்துக்கொள்ளாது, ஒவ்வொரு படத்தையும் வித்தியாசமாக எடுத்த ஸ்ரீதரே முதன்மையானவர்.

director srithar

அவருடைய படங்களில் அவர் சந்தித்த அனுபவங்கள் என்ன? இதைப்பற்றி ஸ்ரீதர் கல்கி பத்திரிகையில் தொடராக எழுதி, பின்னர் புத்தகமாக வெளியான ‘திரும்பிப் பார்க்கிறேன்’ என்ற அற்புதமான நூலில் மிக விரிவாகப் பேசியிருக்கிறார்.

ஸ்ரீதரும் ஏ.எம். ராஜாவும் சென்னை செல்லும் ரயிலில் இளைஞர்களாக சந்தித்துக்கொண்டு, ஒருவருக்கு சினிமா வாய்ப்பு கிடைத்தால் இன்னொருவரை உள்ளே இழுத்துக்கொள்ளவேண்டும் என்ற பேச்சு நடந்து, அப்படியே ஸ்ரீதர் முதலில் படம் இயக்கும் வாய்ப்பைத் தற்செயலாகப் பெற்று, அதன் மூலம் பின்னணிப் பாடகராக இருந்த ஏ.எம். ராஜாவை இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தியது கல்யாணப் பரிசு படத்தில். ஏ.எம். ராஜாவும் அற்புதமான இசையை அந்தப் படத்தில் அமைத்தார். அதன்பின் தேன் நிலவு படத்திலும் காலத்தால் அழிக்கமுடியாத பாடல்களைக் கொடுத்தார்.

ஸ்ரீதர் கதை வசனம் எழுதிய காலகட்டத்திலேயே சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தின் நூலகத்தில் நிறையப் புத்தகங்கள் படித்திருக்கிறார். அப்போதே செங்கல்பட்டில் இருந்து சென்னைக்கு வந்து பல படங்கள் பார்த்திருக்கிறார். அந்தக் காலகட்டத்தில் கட்டாயம் தேவ் ஆனந்த் நடித்து சுபோத் முகர்ஜி இயக்கிய ‘Paying Guest’ (1957) படத்தை அவர் பார்த்திருக்க வேண்டும். கட்டாயம் பார்த்திருப்பார். ஸ்ரீதருக்குப் பல இன்ஸ்பிரேஷன்கள் இருந்திருக்கின்றன. கல்யாணப்பரிசு இயக்கும்போது அவருக்கு வயது 26 என்பதை நாம் நினைவில் வைக்கவேண்டும்.

கிட்டத்தட்ட இதே மானா ஜனாப் பாடலின் இன்ஸ்பிரேஷனில்தான் ‘வாடிக்கை மறந்ததும் ஏனோ’ பாடலை ஸ்ரீதர் கல்யாணப் பரிசில் வைத்திருப்பார். அப்படியே அல்ல. ஓரளவு. இரண்டு பாடல்களையும் பார்த்தால் தெரியும். இரண்டுமே அருமையான பாடல்கள். இரண்டும் சூப்பர்ஹிட்கள். இரண்டு பாடல்களுமே ஐம்பதுகளின் இறுதியில் அக்கால இளைஞர்களின் இயல்பான பாடல்களாக இருந்தன.

காதலிக்க நேரமில்லை படத்தில் அனுபவம் புதுமை.. அவனிடம் கண்டேன் பாடல். ஸ்ரீதர், எம்.எஸ்.வி. மற்றும் கண்ணதாசனை ஆழியார் கூட்டிச்சென்று கம்போசிங் வைக்கிறார். ஸ்ரீதர் இளைஞர். எனவே ஜாலியாக சீன் சொல்கிறார். இரண்டே மணி நேரத்தில் நான்கு பாடல்கள் ரெடி.

கண்ணதாசன் ஃபார்முலாப்படி, அந்த நேரத்தில் அவருக்கு என்ன தோன்றுகிறதோ அதை எழுதுவார். சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி, போனால் போகட்டும் போடா போல. ஸ்ரீதரிடம் கண்ட அனுபவம் கண்ணதாசனுக்குப் புதிது. அதையே ’அனுபவம் புதுமை’ என்ற பாடலாக்கிக் கொடுத்தார் கண்ணதாசன்.

அதேபோல, உடனே எழுதியதுதான் விஸ்வநாதன்… வேலை வேண்டும் பாடல். கொஞ்சம் அசந்த எம்.எஸ்.வியை அதட்டி, இப்போ வேலை வேணும் விசு… சீக்கிரம் ட்யூன் போடு என்று கண்ணதாசன் சொல்ல, போட்ட ட்யூனுக்கு இந்தப் பாடலைக் கண்ணதாசன் விஸ்வநாதனையே வைத்து எழுதியபின்னர்தான், பாலையா கதாபாத்திரத்துக்கு இன்னும் பெயரே வைக்கவில்லை என்று ஸ்ரீதருக்குப் புரிகிறது. உடனடியாக, கண்ணதாசன் வைத்த விஸ்வநாதன் என்ற பெயரையே பாலையாவுக்கு வைக்கிறார்.

நெஞ்சில் ஓர் ஆலயம் படத்தை எடுத்துக்கொண்டால், அதில் கேமரா கோணங்கள் மிக அற்புதமாக இருக்கும். ‘சொன்னது நீதானா’ பாடலில், மருத்துவமனைக் கட்டிலின் கீழ் இருந்து கேமரா அட்டகாசமாக மேலே வரும். எதிரில் தேவிகா சிதாரை வைத்துக்கொண்டு பாடிக்கொண்டு இருப்பார். சுசீலா, எம்.எஸ்.வியின் இசையில், கண்ணதாசனின் வரிகளில் பிரமாதப்படுத்திக்கொண்டு இருப்பார். அக்காலத்தில் இப்படி ஒரு கோணம் வைப்பது அரிது. வின்சென்ட் மாஸ்டர் ஒளிப்பதிவு. ஸ்ரீதர் இயக்கம்.

ஶ்ரீதரின் தேன் நிலவு, காஷ்மீரில் எடுக்கப்பட்ட முதல் தென்னிந்தியத் திரைப்படம். வந்த ஆண்டு – செப்டம்பர் 30, 1961. இந்தப் படத்தின் சிறப்பு, படத்தின் எண்பது சதவிகிதக் காட்சிகள் முழுதுமே அவுட்டோர் காஷ்மீர். அது ஒரு சினிமா சாதனை. அக்காலத்தில் (இதற்கு அடுத்து ஶ்ரீதர் எடுத்த நெஞ்சில் ஓர் ஆலயம், முழுக்கவே ஸ்டுடியோவில் செட் போட்டு எடுத்தது என்பதை ஏற்கெனவே பார்த்தோம்).

படத்தில் பிரச்சினை வரக்கூடாது என்று ஸ்ரீதர் நினைத்ததால், படத்தில் இருந்த அனைவரையும் குடும்பத்தோடு காஷ்மீர் அழைத்துச் சென்றார். கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் படப்பிடிப்பு. வைஜெயந்திமாலா water skiing தெரியாமல், படப்பிடிப்பு நடக்கும்போதே கற்றுக்கொண்டு நடித்த படம். ஸ்ரீதரின் சித்ராலயா தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படம். அவரது படப்பிடிப்பில், அதுவும் 1961ல் எப்படிப்பட்ட குளிர் காஷ்மீரில் நிலவியது என்பதை அவர் சொல்லியிருக்கிறார். ஆனாலும் அங்கிருந்து யாரும் குளிரால் நடிக்க மாட்டேன் என்று சொல்லவில்லை. இதுபற்றி ஸ்ரீதர் விரிவாகவே எழுதியிருக்கிறார்.

தேன் நிலவு வெளியான அதே 1961ல், ஆகஸ்ட் 9இல், Come september என்ற படம் ஹாலிவுட்டில் வருகிறது. இன்றுவரை பேசப்படும் படம் அது.

அடுத்து, 1964இல், காஷ்மீர் கி கலி என்ற படம், இந்தியில் ஷம்மி கபூர் நடித்து வருகிறது. அது, Come Septemberஇல் இருந்து சுட்டது. அதே கதை.

இப்போது 1966 ஜனவரி 14, பொங்கல் நாளன்று எம்.ஜி.ஆர் நடித்து அன்பே வா திரைப்படம் வருகிறது. இதுவும் Come september படத்தில் இருந்து சுட்டதே.

ஶ்ரீதரின் தேன் நிலவுக்கும் Come september படத்துக்கும் சில விஷயங்கள் பொருந்தும். ஒரு அழகான இடம், அங்கே வரும் நபர்கள், ஆள் மாறாட்டம் நடப்பது, அவர்களுக்குள் நிகழும் பிரச்னைகள் என்று. ஆனால் இரண்டும் ஒரே காலகட்டத்தில் எடுக்கப்பட்டவை. இரண்டு இயக்குநர்களுக்கும் இரண்டு படங்களும் தெரியாது.

சொல்ல வந்தது, தேன் நிலவு படமும் Come september படமும் ஒரே காலகட்டத்தில்தான் எழுதப்பட்டு ஷூட்டிங் போய் வெளிவந்திருக்கின்றன. தேன் நிலவில் கொஞ்சம் மாற்றினால் அன்பே வா. இரண்டிலுமே ஆள் மாறாட்டம் உண்டு. இதில் இன்னொன்று என்னவென்றால், தேன் நிலவில் ஹீரோயினின் அப்பாவாக நடித்தது தங்கவேலு. அதேபோன்ற கேரக்டரில் நடித்த TR ராமச்சந்திரன் தான் அன்பே வா படத்திலும் ஹீரோயினின் அப்பா. இரண்டுக்கும் வேறுபாடே இருக்காது. அதேபோல், தேன் நிலவைக் கொஞ்சம் மாற்றினால் Come September.

ஶ்ரீதரின் ஜீனியஸ் இது. தமிழ்நாட்டு இயக்குநர் ஒருவர் எடுக்கும் படம் ஒன்றும், ஹாலிவுட் படம் ஒன்றும் கிட்டத்தட்ட ஒரே சமயத்தில் எடுக்கப்பட்டு வெளியான கதை இது. தேன் நிலவு படத்தை இப்போது பாத்தாலும் அட்டகாசமாக இருக்கும்.

தேன் நிலவில், டைட்டிலில், ஒரு கிரிக்கெட் பந்தயம் வரும். அது சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நடந்த இந்தியா பாகிஸ்தான் நிஜமான கிரிக்கெட் மேட்ச். அங்கே போய் எடுத்துப் படத்தில் வைத்திருப்பார் ஶ்ரீதர். அதில் அப்போதைய சேப்பாக்கத்தையும், இந்திய பாகிஸ்தான் கிரிக்கெட் ஆசாமிகளையும் பார்க்கலாம்.

அதேபோல், தேன் நிலவில் நம்பியார், காஷ்மீர் முழுக்க, ஆள்மாறாட்டத்தால் பாதிக்கப்பட்டு, தங்கவேலுவைத் தேடி அலைவார். அதைப் பார்த்தால், நடிகன் படத்தில் ஊட்டியில் இஸ்லேண்ட் எஸ்டேட்டைத் தேடி அலையும் வெண்ணிற ஆடை மூர்த்தி தெரிவார். வெண்ணிற ஆடையே ஶ்ரீதர் படம்தான். அதில் அறிமுகம் ஆனவர்தான் வெண்ணிற ஆடை மூர்த்தி என்பது தெரிந்திருக்கும். நடிகன் எடுத்த பி. வாசுவும் ஶ்ரீதரின் அசிஸ்டெண்ட்தான். இந்தப் படங்களுக்குள் இப்படியெல்லாம் தொடர்புகள் உண்டு.

thirumbiparkiren

’காதலிக்க நேரமில்லை’ படத்தைப் பற்றித் தனது சுயசரிதையான ‘திரும்பிப் பார்க்கிறேன்’ புத்தகத்தில் ஸ்ரீதர் நிறையச் சொல்லியிருக்கிறார். ’காதலிக்க நேரமில்லை’ என்ற தலைப்பை முதலில் முடிவு செய்துவிட்டு, அதன்பின்னர் தமிழில் ஒரு வண்ணச் சமூகப்படம் எடுக்க விரும்பி ஒரு திரைக்கதையை எழுதி, அதைக் கொஞ்சகாலம் படமாக எடுத்ததாகவும், ஒரு ஷெட்யூல் திரைப்படப் படப்பிடிப்பு முடிந்தபின்னர் ரஷ் போட்டுப் பார்த்தபோது ஒளிப்பதிவு, நடனம் போன்ற எல்லாத் துறைகளிலும் படம் நன்றாக வந்திருந்தபோதிலும், கதை ஸ்ரீதருக்குத் திருப்தி அளிக்காததால் அந்தப் படப்பிடிப்பை அப்படியே நிறுத்திவிட்டதாகவும் சொல்லியிருப்பார். இதன்பின்னர் மறுபடியும் முதலிலிருந்து ஒரு கதையைத் தயார் செய்து, அதில் புதுமுகங்களான ரவிச்சந்தர்  (இப்படித்தான் படத்தின் டைட்டில் சொல்கிறது) மற்றும் விமானப் பணிப்பெண்ணாக இருந்த காஞ்சனா ஆகியவர்களைப் போட்டு எடுத்ததுதான் நாம் இப்போது பார்த்து மகிழும் ‘காதலிக்க நேரமில்லை’.

படத்தின் ஏழெட்டு வார ஹவுஸ்ஃபுல் ஓட்டத்துக்குப் பிறகு படம் மெதுவாக அந்த நிலையில் இருந்து குறைய ஆரம்பிக்கும் நேரத்தில், சட்டசபையில் ஒரு சர்ச்சை வெடித்திருக்கிறது. ‘படத்தின் பெயரில் ஆபாசம் தொனிக்கிறது; காட்சிகளும் ஆபாசமாக இருக்கின்றன. சமுதாயத்தைக் கெடுக்கக்கூடிய இத்தகைய படங்களை அரசு அனுமதிக்கலாமா’ என்று ஒரு எம்.எல்.ஏ சட்டசபையில் பிரச்னை செய்ய, இந்த விவகாரம் செய்தித்தாள்களில் வந்திருக்கிறது. இது படத்துக்கான பரபரப்பைக் கூட்டியது. உடனேயே ஏற்கெனவே பார்த்தவர்களும் மறுபடி படத்தைப் பார்க்கத்துவங்க, இதனால் படத்துக்கு நல்ல விளம்பரமும் வருமானமும் கிட்டியிருக்கிறது.

’காதலிக்க நேரமில்லை’ படத்தின் நடன இயக்குநர் – தங்கப்பன். இந்தப் படத்துக்காக வேறு ஒரு புதிய நடன இயக்குநரை ஸ்ரீதர் வரச்சொல்ல, அங்கே தற்செயலாக ஒரு வாய்ப்பு கேட்டு தங்கப்பன் வர, அவர்தான் ஸ்ரீதர் சொல்லியிருந்த நடன இயக்குநர் என்று தப்பாக நினைத்துக்கொண்டு அவரை ஒன்றிரண்டு பாடல்களைப் போட்டுவிட்டு நடனமாடச்சொல்ல, அவர் அமைத்த நடன அசைவுகள் ஸ்ரீதருக்குப் பிடித்துப்போய் ஒப்பந்தம் செய்யப்பட்டார் தங்கப்பன். பின்னர்தான் இவர் வேறு ஒரு நபர் என்று ஸ்ரீதருக்குத் தெரியவந்திருக்கிறது. இருந்தாலும் புதுமையான நடனத்தால் ஸ்ரீதரின் மனதைக் கவர்ந்த தங்கப்பன் அந்தப் படத்துக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார். தங்கப்பனுக்கு சுந்தரம் உதவி நடன இயக்குநராக இருந்தார்.

ஸ்ரீதரிடம் இருந்த யூனிட் மிகத்தரமானது. கலை கங்காவால் கவனிக்கப்பட, ஒளிப்பதிவு செய்தவர் வின்சென்ட். வசனம், ஸ்ரீதராலும் கோபுவாலும் எழுதப்பட, இசை எம்.எஸ்.விஸ்வநாதனால்தான் எப்போதும் அமைக்கப்பட்டது. பாடல்களைக் கண்ணதாசன் எழுதுவார். புகைப்படங்களை திருச்சி அருணாசலம் எடுப்பது வழக்கம். எடிட்டிங்  சங்கரால் செய்யப்படும். இந்த யூனிட் பல படங்களில் ஸ்ரீதரிடம் இருந்தது. அவர் நடத்திய சித்ராலயா தயாரிப்பு நிறுவனமும் மிகவும் கட்டுக்கோப்பானது. தெளிவாகத் திட்டமிட்டு தினசரி அலுவல்கள் அங்கே நடக்கும். அந்த அலுவலகத்துக்கு வந்த எந்தக் கடிதமும் பதிலனுப்பப்படாமல் போனதில்லை. இப்படிப்பட்ட தயாரிப்பு நிறுவனத்தை அமைத்ததால்தான் அறுபதுகள் முழுதும் ஸ்ரீதரால் கொடிகட்டிப் பறக்க முடிந்திருக்கிறது. எழுபதுகளிலும் ’உரிமைக்குரல்’, ‘மீனவ நண்பன்’, ‘இளமை ஊஞ்சலாடுகிறது’ போன்ற பெருவெற்றிப் படங்களையும், எண்பதுகளில் ‘நினைவெல்லாம் நித்யா’, ‘துடிக்கும் கரங்கள்’, ’தென்றலே என்னைத் தொடு’ போன்ற வெற்றிப்படங்களையும் ஸ்ரீதரால் தர முடிந்திருக்கிறது.

’திரும்பிப் பார்க்கிறேன்’ புத்தகத்தை யார் படித்தாலும் ஒரு உத்வேகம் கிளம்பி, உடனடியாகத் திரைப்படத்துக்கான கதையை எழுதத் துவங்கிவிடுவார்கள் என்பதில் எனக்குச் சந்தேகம் இல்லை. ஸ்ரீதரின் வாழ்க்கை அப்படியானது. அவரது காலகட்டத்தில் இந்தியா முழுக்கவே கொண்டாடப்பட்ட இயக்குநர் அவர். தமிழில் மிகப்பெரிய முன்னோடி. தமிழ் சினிமா ரசிகர்கள் அனைவரும் ஸ்ரீதரை அவசியம் நினைவுகூரவேண்டும். அவரது புத்தகத்தையும் கண்டிப்பாகப் படிக்கவேண்டும்.

திரும்பிப் பார்க்கிறேன், கலைஞன் பதிப்பக வெளியீடு.

Author Image

கருந்தேள் ராஜேஷ்

திரைக்கதை ஆலோசகர். திரைக்கதை ஆசிரியர். மொழிபெயர்ப்பாளர். சினிமா குறித்து தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறார். Karunthel.com இவரது இணையதளம்.

About The Author

The Talkie

The Talkie

See author's posts

Next Post
i call the shots 02

 I call the shots 02

Please login to join discussion

Archives

  • Trending
  • Comments
  • Latest
Thug_Life_

Thug Life – ஒரு பார்வை

June 6, 2025
AMADEUS திரைக்கதை

AMADEUS திரைக்கதை

March 15, 2025
start camera

ஸ்டார்ட் கேமரா! வின்சென்ட் மாஸ்டர் – 01

March 19, 2025
Irunda-Pakkam

தொழில்நுட்பத்தின் இருண்ட பக்கங்கள்: திரைப்படங்கள் சொல்லும் உண்மை.

March 16, 2025
Thug_Life_

Thug Life – ஒரு பார்வை

11
rasigamagajanangale

ரசிக மகா ஜனங்களே

7
gurudutt-02

குருதத்தின் ப்யாஸா- உயிர்த்தெழுந்த தேவதை        

5
start camera

ஸ்டார்ட் கேமரா! வின்சென்ட் மாஸ்டர் – 01

4
table top-4-5

டேபிள் டாப் 04 & 05

January 24, 2026
bella darr

பேலா டார் – காட்சியை அனுமதித்தவர்

January 24, 2026
trend-kottaiye-11

ட்ரெண்டு கொட்டாய் 11 -நான் (திரை) காவிய நாயகன்

January 24, 2026
table top-3

டேபிள் டாப் 03

January 24, 2026
The Talkie

சினிமா அற்புதமான ஊடகம். இதனை அறிந்து கொள்ளவும், ரசிக்கவும் உருவாக்கப்பட்டிருக்கிற இணைய இதழ் இது. மேதைகளின் நேர்காணல்கள், திரைக்கதைகள், வெவ்வேறு மொழித் திரைப்படங்கள், ஆளுமைகள், திரைப்படப் புத்தகங்கள் , சினிமா ரசனை என சினிமா உலகத்தோடு இணைந்திட எங்களுடன் இணைந்திடுங்கள்.

Categories

  • I CALL THE SHOTS
  • ஆளுமைகள்
  • இந்தியத் திரைப்படங்கள்
  • உரையாடல்
  • உலகத் திரைப்படங்கள்
  • ஓடிடி திரை
  • கட்டுரைகள்
  • குரு தத் 100
  • டேபிள் டாப்
  • ட்ரெண்டு கொட்டாய்
  • தமிழ்த் திரைப்படங்கள்
  • திரை புத்தகம்
  • திரைக்கதைகள்
  • தொடர்கள்
  • ஸ்டார்ட் கேமரா

Site Navigation

  • About Us
  • Terms and Conditions
  • Privacy Policy
  • Returns and Cancellation
  • Shipping Policy
  • FAQ
table top-4-5

டேபிள் டாப் 04 & 05

January 24, 2026
bella darr

பேலா டார் – காட்சியை அனுமதித்தவர்

January 24, 2026
trend-kottaiye-11

ட்ரெண்டு கொட்டாய் 11 -நான் (திரை) காவிய நாயகன்

January 24, 2026

© 2026 Thetalkie - All rights reserved

Welcome Back!

Sign In with Google
OR

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Sign Up with Google
OR

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • thetalkie
  • ஆளுமைகள்
  • திரைக்கதைகள்
  • உரையாடல்
  • கட்டுரைகள்
    • இந்தியத் திரைப்படங்கள்
    • உலகத் திரைப்படங்கள்
    • தமிழ்த் திரைப்படங்கள்
    • ஓடிடி திரை
  • தொடர்கள்
    • ட்ரெண்டு கொட்டாய்
    • திரை புத்தகம்
    • ஸ்டார்ட் கேமரா
    • I CALL THE SHOTS
    • குரு தத் 100
    • டேபிள் டாப்
  • தொடர்பு
  • Login
  • Sign Up
  • Cart

© 2026 Thetalkie - All rights reserved

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?