லலிதா ராம்
இஞ்சிக்குடி பிச்சைகண்ணு
தமிழ்த் திரையுலகின் மைல்கல் படங்களுள் ஜெமினி நிறுவனம் தயாரித்த ஔவையாரும் அடங்கும். கொடுமுடி கோகிலம் கே.பி.சுந்தராம்பாள் ஔவையாராக நடித்த படம் அதன் பிரமாண்டத்துக்கு இன்றளவும் பேசப்பட்டு வருகிறது. படத்தின் பெயர்பட்டியலில் நாகஸ்வரம் வாசித்திருப்பது வித்வான் இஞ்சிக்குடி பிச்சைக்கண்ணு என்கிற தகவல் காணக் கிடைக்கிறது.
படத்தில் ஒரு காட்சி. ஔவையார் சோழ நாட்டுக்கு வருகிறார் என்பது கேட்டு ஊரே ஜனப்பிரவாகமாகி அவரை வரவேற்கக் கூடுகிறது. இந்த ஒரு காட்சியில் மட்டும் 10000 துணை நடிகர்கள் இடம்பெற்றனர் என்று விக்கிபீடியா குறிப்பு சொல்கிறது. கிட்டத்தட்ட மூன்று நிமிடங்களுக்கு விரியும் காட்சி, ‘வருக வருக தமிழ்த்தாயே’ என்று பல குரல்கள் ஒலிக்கும் சேர்ந்திசையில் தொடங்குகிறது.
தொடர்ந்து, இடிமுழக்கமாய் தவிலில் குறுந் தீர்மானம் ஒன்று பறபறக்க ஆதி தாள மல்லாரி விறுவிறுப்பாகத் தொடங்குகிறது. மின்னல் வேக இரண்டாம் காலப் பிரயோகங்களும் இடம்பெறுகின்றன. தவிலில் பல கலைஞர்களுக்கு கோடையிடி என்ற பட்டப் பெயர் உண்டு. அந்தப் பட்டத்தின் பொருத்தத்தை உணர இந்தக் காட்சியைக் காணலாம்.
இரண்டாம் கால மல்லாரிக்குப் பின் குச்சியைக் கொண்டு இயக்கும் தொப்பியில் இடி முழக்கம்தான். ஆனால் அதன் ஒலியில் அழுத்தம் உள்ளதேயன்றி ‘அடி’ இல்லை. ஸ்தம்பிக்க வைக்கும் வேகத்தில் சொற்கள் உதிர்க்கும் அந்த வலந்தலையைக் கையாண்டவர் மகா கலைஞர்தான் என்பதில் சந்தேகமேயில்லை. துரதிர்ஷ்டவசமாய் அவர் பெயரை அறியக்கூடவில்லை.

தீர்மானம் முடிந்ததும் இசைக் கோவை கிராமியமாய் மாறினாலும் தவிலில் அதற்கேற்ற நடையும் சேர்ந்தே ஒலிக்கிறது. வேகம், கடினமான சொற்கள், விழிபிதுங்கும் கணக்குகள் எதுவுமின்றி ஒலிக்கும் அந்த நடை …
என் கைகள் அவற்றை ‘சாதாரணமாக நடைகள்’ என்று எழுதப் போன போது நெருப்பைத் தொட்டது போல விரல்களை விலக்கிக் கொள்ள நேரிட்டது. அத்தனை குளுமையை அள்ளித் தெளிக்கும் அந்த நடையை சாதாரணம் என்று எப்படிச் சொல்வது?
காட்சியில் ஒரு பெரிய நாகஸ்வர தவில் பட்டாளமே இடம்பெற்றுள்ளது. காட்சியில் தோன்றுபவர்கள் எல்லோரும் நாகஸ்வரக் கலைஞர்களா? அவர்களுள் பிச்சைக்கண்ணு நாயனக்காரரும் இருக்கிறாரா என்றும் அறியக்கூடவில்லை.
இஞ்சிக்குடி இசைப் பாரம்பரியத்தில் திரையில் தோன்றியும் வாசித்தும் உள்ள வேறொரு கலைஞர் இருக்கிறார். அவர் நம் காலத்தின் மாமேதை என்று நாமெல்லாம் பெருமைபட்டுக் கொண்டாட வேண்டிய வித்வான் இஞ்சிக்குடி சுப்ரமணியம். முக்கியமான கர்நாடக சங்கீத மேடைகள் அனைத்திலும் முதன்மையாய் ஒலித்ததோடு உலகப் புகழ் பெற்ற வியன்னா சால்ஸ்பர்க் இசை விழாவிலும் இடம்பெற்ற நாகஸ்வரம் என்கிற பெருமை சுப்ரமண்யத்தையே சேரும். மேதை லால்குடி ஜெயராமன் இசையமைத்த ஸ்ருங்காரம் படத்தில் ஒரு மல்லாரி காட்சி இடம்பெற்றுள்ளது. அந்தக் காட்சியில் நாகஸ்வரத்தில் இசைத்ததோடன்றி படத்திலும் இஞ்சிக்குடி சுப்ரமண்யம் தோன்றியுள்ளார்.
நாமகிரிப்பேட்டை கிருஷ்ணன்
திரையிசையில் பங்குபெறும் வாத்தியக் கலைஞர்களான Session artiste ஆக இல்லாமல், ஏதோ ஒரு உந்துதலில் ’இவர்தான் வேண்டும்’ என்று ‘சிறப்பு நாகஸ்வரமாக’ அதிகமான படங்களில் வாசித்தவர் வித்வான் நாமகிரிப்பேட்டை கிருஷ்ணனாகத்தான் இருக்கும். அதற்கு நாம் தயாரிப்பாளர் எம்.ஏ.வேணுவுக்குத்தான் நன்றி தெரிவிக்க வேண்டும்.
சேலம் மார்டர்ன் தியேட்டரில் சாதாரணப் பணியாளராய் தொடங்கி பின்னாளில் பல சூப்பர் ஹிட் படங்களைத் தயாரித்தவர் வேணு. அனேகமாய் அவருடைய படங்களில் எல்லாம் டைட்டில் காட்சிகளில் நாமகிரிப்பேட்டையாரின் நாகஸ்வரம் இடம்பெற்றுள்ளது. ஒரே பகுதியைச் சேர்ந்ததினால் ஏற்பட்ட பந்தமோ என்று எண்ணத் தோன்றுகிறது.
எம்.ஏ.வேணு தயாரித்த முதல் படம் ‘நால்வர்’. இந்தப் படம் என் தேடலில் அகப்படவில்லை. இந்தப் படம் ஏ.பி.நாகராஜனுக்கு கதை வசனகர்த்தாவாகவும், நடிகராகவும் அறிமுகமாக அமைந்தது. எம்.ஏ.வேணு தயாரித்த அடுத்த படம் ‘மாங்கல்யம்’. இதில் பெயர்பட்டியலில் ஏ.பி.நாகராஜனின் பெயர் ‘நால்வர்’ நாகராஜன் என்று பட்டியலிடப்பட்டுள்ளது. இந்தத் தலைப்புக் காட்சிகளில் பின்னணி இசையாய் மீசு கிருஷ்ணைய்யரின் ஜகன்மோகினி கிருதி ‘தயாபயோ நிதே’ நாமகிரிப்பேட்டையார் வாசிப்பில் இடம்பெற்றுள்ளது. கர்நாடக இசைக் கச்சேரிகளிலே அரிதாகத்தான் கேட்கக் கிடைக்கும் பாடலை திரையிசையில் வைத்திருப்பது ஆச்சர்யம்.

நிறைய புகழைச் சம்பாதிக்கும் கலைஞர்கள் பலசமயம் அநியாயமான விமர்சனங்களை எதிர்கொள்ள நேரிடும். எதையேனும் ஒன்றைச் சொல்லி அவர்களுடைய வெற்றியைக் கொஞ்சம் மங்க வைத்துவிட வேண்டும் என்பதே இந்த விமர்சனங்களின் நோக்கம். அந்த வகையில், நாமகிரிப்பேட்டையாரை – அவர் கச்சேரிகளில் பரவலான வகையில் கீர்த்தனைகளையோ, ராகங்களையோ கையாளவில்லை, பெரும்பாலும் அவர் வாசித்துப் புகழ்பெற்றவற்றையே மீண்டும் மீண்டும் வாசித்தார் என்று சத்தமாக இல்லாவிடினும் சன்னமாக விமர்சித்தவர்கள் உண்டு. அவர் பதிவுகளையும் களஞ்சியங்களையும் வைத்துப் பார்க்கும் போது இந்த விமர்சனத்தில் நியாயமில்லை என்று விளங்கும். திரையிசை என்றாலும் கூட அதிகம் கேட்காத பாடலை அவர் வாசித்திருப்பதிலிருந்தும் இந்த விமர்சனத்தை பல்லிளிக்க வைக்க முடியும்.
பெயர்ப் பட்டியல் முடிந்து முதல் காட்சியில் ஒரு திருமணம் காட்டப்படுகிறது. அந்தக் காட்சியிலும் ரஞ்சனி ராகத்தில் நாமகிரிப்பேட்டை கிருஷ்ணனின் வாசிப்பு இடம்பெறுவதோடு அவரும் தன் குழுவினரோடு காட்சியிலும் இடம்பெறுகிறார். இளவயது நாமகிரிப்பேட்டையாரைக் காண நமக்கெல்லாம் ஒரு வாய்ப்பு!
எம்.ஏ.வேணு தயாரிப்பில் அடுத்து வெளியான படம் ‘பெண்ணரசி’. இதில் தொடக்கக் காட்சியில் தியாகராஜரின் மார்கஹிந்தோள கிருதியான ‘சலமேலரா’ பாடலை கிருஷ்ணன் வாசித்துள்ளார். துள்ளலான நடையில் பிரமிக்க வைக்கும் பல துரித சங்கதிகளைப் புகுத்தி பாடலின் அனுபல்லவியையும் சரணத்தையும் அலங்கரித்திருக்கிறார்.
இந்த வரிசையில் எம்.ஏ.வி பிக்சர்ஸ் தயாரித்த அடுத்த மூன்று படங்கள் – டவுன் பஸ், முதலாளி, சம்பூர்ண ராமாயணம் – அனைத்துமே வெற்றிப்படங்கள்தான். மூன்றுமே நாமகிரிப்பேட்டையாரின் நாதத்துடன்தான் தொடங்கியுள்ளன.
டவுன் பஸ் படத்தில் பாரதியாரின் ’வெற்றி எட்டுத் திக்கும்’ பாடலை மோகன ராகத்தில் வாசித்துள்ளார். எத்தனை முறை கேட்டாலும் குன்றாத வியப்பை எனக்குள் ஏற்படுத்தும் வாசிப்பு. தேர்ந்த கலைஞர்களுக்கு அதிசயிக்கத்தக்க கற்பனைகள் எழுவது இயற்கைதான். ஆனால் ஒருசிலருக்குத்தான் அந்தக் கற்பனைகளை வெளியில் காட்டும் தைரியம் கைகூடும். புத்தம் புதியவை எனும் போது இவை ஏற்கத்தக்கவையா என்கிற ஐயமும் கூடவே எழுந்து பல கற்பனை அலைகளை கரை சேர்வதற்கு முன் அழுத்திவிடும். இந்தப் பாடலின் அனுபல்லவியில் சரணத்திலும் எழும்பி ஒலிக்கும் மோகன அலைகள் (அதிலும் பழைய வானொலி டியூனை சங்கதிக்குள் புகுத்திய சாமர்த்தியம்!) நாமகிரிப்பேட்டையாரின் உற்சாகத்துக்கும் துணிச்சலுக்கும் அத்தாட்சியாய் அமைந்துள்ளன.
‘முதலாளி’ படத்தின் தொடக்கம் நாமகிரிப்பேட்டையார் திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளைக்குச் செய்திருக்கும் காணிக்கை என்றே சொல்லலாம். ராஜரத்தினம் பிள்ளை வாசிப்பில் முத்திரை பதித்த 78 ஆர்.பி.எம் ரிக்கார்டு இந்தப் பாடல். ஒரு பாடலில் அனுபல்லவிக்கும் சரணத்துக்கும் இடையில் ஒரு சிட்டைஸ்வரம் வாசிப்பதே வழக்கம். இந்த ரிக்கார்டில் சரணத்துக்குப் பின் இலுப்பூர் பஞ்சாமி அமைத்த மூன்று சிட்டை ஸ்வரங்களை அடுத்தடுத்து வாசித்துள்ளார் ராஜரத்தினம். நாமகிரிப்பேட்டையாரும் மூன்றையும் வாசித்துள்ளார். நேரம் கருதியோ என்னமோ, அனுபல்லவிக்குப் பின் இரண்டு சிட்டை ஸ்வரங்களையும், சரணத்துக்குப் பின் மூன்றாவதையும் இந்தப் படத் தொடக்கத்துக்குப் பின்னணியாய் வாசித்துள்ளார்.
நாமகிரிப்பேட்டையாரின் வாழ்க்கையில் திருப்புமுனையாய் அமைந்த கச்சேரி அவர் இளம் வயதில் சென்னையில் நடைபெற்றது. நாகஸ்வர தவில் கலைஞர்களுக்காக ஒரு சங்கம் உருவான போது அதன் தலைமைப் பொறுப்பை இயக்குநர் கே.சுப்ரமண்யம் ஏற்றுக் கொண்டார். முதல் நடவடிக்கையாய் அன்றைய இளம் கலைஞர்களுக்கு மேடை அளிக்கும்படியாய் ஓர் இசை விழாவை ஏற்பாடு செய்தார். அதில் அன்றைய இளம் வித்வான்கள் பலர் பங்குபெற்றனர். நாமகிரிப்பேட்டையார் அந்த விழாவில் பிரதான ராகமாய் கல்யாணி ராகத்தை எடுத்துக் கொண்டு ‘வாஸுதேவயனி’ என்ற கீர்த்தனையை வாசித்தார். அந்தக் கச்சேரியைப் பற்றிய ஒரு குறிப்பு, அவர் வாசித்த ராகம், கீர்த்தனை, ஸ்வரங்கள் ஒவ்வொன்றுக்கும் பெரிய அப்ளாஸை வென்றது என்று கூறுகிறது. அந்தக் கச்சேரி அவர் பெயர் பரவப் பெரிதும் உதவியாக இருந்தது. ‘சம்பூர்ண ராமாயணம் படத்தின் டைட்டிலில் பின்னணியில் இதே வாசுதேவயனி கீர்த்தனையை நாமகிரிப்பேட்டையார் வாசித்திருப்பார்.
இவை தவிர இன்னும் சில படங்களையும் எம்.ஏ.வேணு தயாரித்துள்ளார். அவற்றின் சரியான பிரதி எனக்குக் கிடைக்காததால் அவற்றில் நாம்கிரிப்பேட்டையாரின் வாசிப்பு இடம்பெற்றுள்ளதா என்று கூற இயலவில்லை.
மேற்சொன்ன படங்கள் வெளியான பல ஆண்டுகளுக்குப் பின் நாமகிரிப்பேட்டையாரின் வாசிப்பு ஒரு மலையாளப் படத்தில் இடம்பெற்றது.
அதைப் பற்றி அடுத்த இதழில்.











