பால கணேசன்
உள்ளத்தை அள்ளித்தா’ படம் வெளியானபோது எங்கள் பள்ளியெங்கும் அந்தப்படத்தில் வந்த நகைச்சுவையைப் பற்றித்தான் பேச்சாக இருந்தது . குறிப்பாக , “யோவ் மிலிட்டரி . . அந்த துப்பாக்கியை எடுத்து சுடுய்யா . .” என கவுண்டமணி , ஜெய்கணேஷிடம் சொல்லும்போது , அவர் அப்பாவியாய் முகத்தை வைத்துக்கொண்டு , “துப்பாக்கியா ? அதெல்லாம் சுடத்தெரியாதே . . நான் மிலிட்டரியில சப்பாத்திதானே சுட்டுட்டு இருந்தேன் . .” என்றதும் திரையரங்கே அதிர்ந்ததை நண்பர்கள் விவரிக்கும்போது மனமார சிரித்தது இந்தக்கட்டுரையை எழுதத்தொடங்கிய நொடியில் நினைவுக்கு வந்து செல்கிறது .
கவுண்டமணி நடிப்புத் தொழிலில் உச்சத்தில் இருந்த நேரம் அது . வெறும் காமெடியன் என்கிற இடத்தில் எல்லாம் அவரை அப்போது வைத்துவிட முடியாத அளவு , இரண்டாவது கதாநாயகன் என்கிற விதத்தில்தான் அவர் படம் முழுக்க வந்துபோவார் . கவுண்டமணி புகழ்பெறத் தொடங்கிய காலகட்டத்தில் , அவருக்கென படத்தில் தனி காமெடி டிராக் இருக்கும் . அவரும் செந்திலும் அவ்வப்போது படத்தினிடையே வந்து சில நகைச்சுவைகளை தந்துவிட்டு பின் காணாமல் போய்விடுவார்கள் .
அப்படியான காட்சிகள் கொண்ட படங்கள் நிறைய இருந்தாலும் கூட , அதில் பல பிரபலம் அடைந்திருந்தாலும் கூட , ஏன் கரகாட்டக்காரனோ அல்லது உள்ளத்தை அள்ளித்தாவோ இன்னும் சிறப்பான அனுபவத்தை தந்தது என்று யோசித்தால் அதற்கான முக்கிய காரணம் , இந்தப்படங்களில் எல்லாம் கவுண்டமணி தனியாக காமெடி செய்யவில்லை . கரகாட்டம் ஆடும் நாயகனுக்கு உதவியாக அவரது குழுவிலேயே தவில் வாசிப்பவராக இருப்பார் .
நாயகனை உற்சாகமூட்டுவார் . அவரோடு இணைந்து பாடல்கள் பாடுவார் . சில செண்டிமெண்ட் காட்சிகளில் பங்குபெற்று சோகமான வசனங்கள் கூட பேசுவார் . ஆனால் ‘உதயகீதம்’ மாதிரியான படங்களில் இது நிகழவில்லை. மோகன் இருக்கும் அதே சிறையில் கவுண்டமணி இருப்பார் என்பதைத்தவிர வேறு எந்த தொடர்பும் அங்கே இல்லை.
இதில் இருந்து காமெடி ட்ராக் வித்தியாசப்பட்ட படங்களான, ‘உள்ளத்தை அள்ளித்தா’ , ‘மேட்டுக்குடி’ , ‘முறைமாமன்’ , ‘உனக்காக எல்லாம் உனக்காக’ ஆகிய படங்களை நாம் அணுகவேண்டும் . என்ன எல்லாமே சுந்தர் . சி படமாக இருக்கிறதா ? கட்டுரையே அதுதான் .
கார்த்திக் ஊட்டி ரயில்வே நிலையத்தில் வந்து இறங்கும்பொழுது அங்கே டிக்கெட் பரிசோதகராக கவுண்டமணி நிற்பார் . அங்கிருந்து தொடங்கும் கார்த்திக் – கவுண்டமணி ஜோடியின் நகைச்சுவை இறுதி வரை எங்கும் விலகாது . குறிப்பாக, மணிவண்ணனை கடத்திவிட்டதாக செந்தில் தொலைபேசி செய்து சொல்லும் காட்சி இப்போதும் பிரசித்தி பெற்றது . அடுத்து மேட்டுக்குடியில் கார்த்திக் கொள்’ளையடிக்க செல்லும் வீட்டில் கவுண்டமணி முக்கியமான உறுப்பினர் . நக்மாவின் முறைமாமன் . இதை சற்று விரிவாக பார்க்கலாம் .
கார்த்திக்தான் ஜமீன் வாரிசு என மணிவண்ணன் ஊர்வலமாக அழைத்து வரும்போது அங்கே கவுண்டமணி இருப்பார் . அடுத்து கார்த்திக் அரண்மனை வீட்டில் நுழைய முயற்சிக்கையில் அங்கே கவுண்டமணி கார்த்திக்கை வம்பிழுப்பார் . அடுத்து வீட்டிற்குள் நுழைந்ததும் ஜெமினியை கார்த்திக் கவர முயற்சிக்கையில் கவுண்டமணி அதைத் தடுக்க இயலாது வேடிக்கை பார்ப்பார் . அடுத்த சில காட்சிகளில் நாயகி நக்மாவை காதலிக்க கார்த்தியிடம் யோசனை கேட்பார் . அப்போது கார்த்தி எழுதும் கடிதம் நக்மா கையில் செல்ல , நக்மா கார்த்தியை காதலிக்க ஆரம்பிப்பார் . இரண்டாம் பகுதியில் கார்த்திக்கும் நக்மாவும் தொடர்ந்து ஒருவரை ஒருவர் வம்பிழுக்க , அந்தக் காட்சிகளில் எல்லாம் கவுண்டமணி சம்மந்தமே இல்லாமல் அடிவாங்கி கஷ்டப்படுவார் . உதாரணமாக தீச்சட்டியை ஏந்துவது , மஞ்சள் காமாலை காட்சியில் கவுண்டமணியின் கால்களில் சூடு போடுவது என சொல்லிக்கொண்டே போகலாம் .
ஆக அவர் இரண்டாவது நாயகன் என்று சொல்வதன் காரணம் , படத்தின் கதையோட்டத்தில் எல்லா காட்சிகளிலும் அவரது இருப்பை உணரலாம் . கவுண்டமணி அந்தக்காட்சிகளில் இல்லாமல் இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்றொரு கேள்வியை உங்களுக்குளேயே கேட்டுப்பாருங்கள் . ஒரு மிக சாதாரணமான கதைக்கு எழுதப்பட்ட மிக சாதாரண தட்டையான திரைக்கதையாகத்தான் அது இருந்திருக்கும் . எங்கே எந்தவித சுவாரஸ்யமா அல்லது ஹாஸ்யமோ இருந்திருக்காது . என்னதான் கே . ஆர் . விஜயாவின் புகைப்படத்தை பழைய பூட்டிய அறையொன்றில் இருந்து கார்த்திக் எடுத்துவந்து நடுவீட்டில் வைத்து மாலையிட்டு, அதைநோக்கி போலிக்கண்ணீர் சிந்துவதும் , அதைக்கண்டு ஜெமினி கண்ணீர் விடுவதும் ஒரு நகைச்சுவைத்தன்மையைத் தருமென்றாலும் கூட , அந்த இடத்தில் நடக்கும் இந்த நாடங்களை கவனித்துவிட்டு , கவுண்டமணியும் சேர்ந்து அழுவது போல நடிக்கையில் அந்த நகைச்சுவையின் வீரியம் பலமடங்கு அதிகரிப்பதை கண்கூடாக உணரலாம் . இதை நாகேஷ், அந்நாளைய பல முன்னணி நாயகர்களிடம் வெற்றிகரமாக செய்திருப்பதை உணர்ந்துகொள்ளலாம் . மிக நல்ல உதாரணமாக, ‘அன்பே வா’ படத்தைச் சொல்லலாம் . ஏற்கனவே நகைச்சுவை கொண்ட ஒரு திரைக்கதையில் , நாகேஷ் போன்ற ஒருவர் படம் முழுக்க வருகையில் , இந்த மேஜிக் நிகழும்.
சுந்தர்.சியின் ஃபார்முலா மிக எளிதானது. ரசிகர்கள் புரிந்துகொள்ள சிரமப்படும் கதையோ அல்லது திரைக்கதையோ எல்லாம் அவர் பாணி இல்லை . அதேபோல் இதுவரை சொல்லாத ஒரு கதையை சொல்கிறேன் என்கிற கங்கணம் எல்லாம் கட்டிக்கொண்டும் அவர் இருப்பதில்லை . நீ ஆயிரம் முறை பார்த்த கதையைத்தான் காட்டப்போகிறேன் . . ஆனால் அதில் நான் தரப்போகும் சுவாரஸ்யம் நீ இதற்கு முன்னர் உணராததாய் இருக்கும் என்பதுதான் அவரது பலம்.
அவரது படங்களை சற்றே ஆராய்ந்தால் , ஒன்று இது ஒரு முழுநீள நகைச்சுவைப்படம் என்பதும் , இரண்டு இது ஒரு அதிரடி ஆக்ஷன் படம் ஆனால் இதில் நகைச்சுவை நிரம்பி இருக்கும் என்பதுமான இரண்டே வகைகள்தான் . உள்ளத்தை அள்ளித்தா முதல்வகை . அனால் மேட்டுக்குடி இரண்டாம் வகை . இரண்டிலும் ஒரே நாயகன் இருந்தாலும் கூட, அதே கவுண்டமணி இருந்தாலும் கூட இந்த மெல்லிய வித்தியாசத்தை நாம் உணர்ந்தால் அவரது படங்களை மிக எளிதாக நாம் கண்டுகொள்ளலாம் . இதை இன்னும் வரிசைப்படுத்தினால் , ‘அருணாச்சலம்’ , ‘ஜானகிராமன்’ , ‘கண்ணன் வருவான்’ . ‘உள்ளம் கொள்ளை போகுதே’ போன்றவை கதைகளுக்கிடையே நகைச்சுவை காட்டிய படங்கள். இதற்கிடையில் அவர் இயக்கிய ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ , ‘உனக்காக எல்லாம் உனக்காக’ எல்லாம் முழுநீள நகைச்சுவைப்படங்கள் . இவை எல்லாவற்றிலும் கற்றுக்கொண்ட பாடங்களை வைத்துக்கொண்டு சுந்தர் . சி தனது இரண்டாவது இன்னிங்க்ஸை தொடங்கிய முக்கியமான படம்தான் ‘வின்னர்’.
ஏன் என்று விரிவாக பார்க்கலாம் .
‘வின்னர்’ ஒரு முழுநீள ஆக்ஷன் படம் என்று சொன்னால் யாராவது நம்புவார்களா ? ஆனால் அதுதான் உண்மை . அந்தப்படத்தை முழுதாக கே . டிவியில் பார்த்தவர்களை விட , ஆதித்யா சேனலில் பார்த்தவர்களே அதிகம் .வடிவேலு அறிமுகமாகும் முதல் காட்சியில் இருந்து நாம் இதை உணரலாம் . அந்தப்படத்தின் காட்சிகள் வடிவேலுவிடம் இருந்து தொடங்கும் இடையில் சில சீரியசான விஷயங்கள் நடக்கும் . காட்சி முடியும்போது வடிவேலுவிடம் முடியும் . இடையில் நிகழ்ந்த அத்தனை சீரியசான விஷயமும் அந்த கடைசி ஷாட்டில் வேறு தளத்திற்கு சென்றுவிடும் . செண்டிமெண்ட் காட்சிகளிலும் சரி , காதல் காட்சியிலும் சரி இதுவே நிகழும் ,.நீங்கள் மொத்தப்படத்திலும் இருந்து வடிவேலுவை நீக்கிவிட்டால் , தனது சொந்த ஊருக்கு நீண்டநாட்கள் கழித்து வரும் ஒரு இளைஞன், அந்த ஊரின் பெரிய மனிதரின் பெண்ணை காதலிக்க ஆரம்பிக்கிறான் . ஆனால் அந்தப்பெண்ணின் குடும்பமோ மிக கொடூரமான கொலைகள் செய்யும் குடும்பம் . இதை மீறி எப்படி அந்த இளைஞன் அப்பெண்ணை கரம்பிடிக்கிறான் என்பதே கதை . வின்னரின் கதை இதுதான் என்று கண்டுபிடிக்க நீங்க வடிவேலுவை இல்லாமல் ஆக்கவேண்டும் . இல்லையெனில் , அந்த ஊரில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் வைத்துக்கொண்டு நிம்மதியாக தனது நாட்களை கழிக்கிறான் கைப்புள்ள . அப்போது ஒருநாள் எதிர்பாராமல் கட்டதொரை என்கிற அந்த ஊரின் பெரிய மனிதரிடம் அவன் வம்பு வளர்க்க , அதனால் அவனது கால்களை உடைத்துவிடுகிறார்கள் . ஏற்கனவே இந்த துக்கத்தில் இருக்கும் கைப்புள்ளைக்கு அடுத்த துயரமாக நகரத்திலிருந்து அவனது தம்பி முறைகொண்ட ஒரு இளைஞன் வருகிறான் . அவனோ வந்து சும்மா இருக்காமல் , அதே கட்டதொரையின் முறைப்பெண்ணை காதலிக்கிறான் . கைப்புள்ளையை எல்லா இடத்திலும் மாட்டிவிட்டு அடி வாங்கவும் வைக்கிறான் . இது போதாது என்று , அந்தப்பெண்ணின் சொந்த ஊருக்கே கைப்புள்ளையையும் அழைத்துக்கொண்டு சென்று அங்கும் அடிவாங்கித்தருகிறான் . ஊர்க்கோவில் பூசாரி முதற்கொண்டு கைப்புள்ளையை கொல்வதற்கு அலைகிறார்கள் . கைப்புள்ள தண்ணீரில் குதித்தாலும் அவன் மீது வெடிகுண்டு வீசுகிறார்கள். கட்டதொரையின் வீட்டு மாட்டு தொழுவத்தில் சாணியின் மீது விழுந்தது போதாதென்று , சொற்களாலும் அவமானப்படுத்தப்படுகிறான் . ஆனாலும் எடுத்த காரியத்தை நிறைவேற்ற உதவவேண்டும் என்கிற தீவிர கொள்கையால் , அந்த இளைஞன், அந்தப்பெண்ணின் வீட்டிற்குள் நுழைய தன்மீது தானே கயிறு கட்டிக்கொண்டு அதில் உயிரையும் விடக்கூட துணிகிறான் . கதையாக சொன்னால் இப்படிப்பட்ட பெரும்சோகக்கதை சொல்கிற ஒரு படமாக இருக்கும். ஆனால், அந்த சோகத்தை உங்களால் உணரவே இயலாத அளவு வடிவேலு சிரிக்க வைத்திருப்பார் .
மேற்கண்ட பத்தி நகைச்சுவைக்காக எழுதப்பட்டதில்லை . வின்னரை தொடர்ந்து கிரி வந்தது . இப்போது அர்ஜுனை வைத்து வந்த கதையை நீங்கள் யோசியுங்கள் . அதே நேரத்தில் வீரபாகுவின் பக்கமிருந்தும் யோசியுங்கள் . இடையில் வரும் ஒரே ஒரு ஃபிளாஷ்பேக் தவிர்த்தால் அதே வின்னர் கதைதான் இங்கும் . இதன் பின்னர் வந்த சில படங்கள் கிட்டத்தட்ட இதே ஃபார்முலா உபயோகிப்பட்ட படங்கள்தான் என்றாலும் அவை சரியான வரவேற்பை பெறவில்லை .
யோசித்துப்பார்த்தால் , கிட்டத்தட்ட சுந்தர் . சியின் பட வரிசைகளில் இந்த விஷயமும் மீண்டும் மீண்டும் நிகழ்கிறது . உள்ளத்தை அள்ளித்தா, மேட்டுக்குடி வெற்றிக்குப்பின் அருணாச்சலம் தவிர்த்து (ஏனென்றால் அது ரஜினி படம் ) ரிஷி படம் வரை எல்லாமே சுமாரான வெற்றியடைந்த படங்கள்தான் . பின் மீண்டும் வின்னர் , கிரி கொடுத்துவிட்டு அடுத்து கலகலப்பு வெளிவரும் வரை சுமாரான படங்கள்தான் தந்தார். இதில் கலகலப்பு நாம் முக்கியமாக கவனிக்க வேண்டிய படம் . விமல் , சிவா இருவருமே பெரிய நடிகர்கள் இல்லை . அதேபோல் இந்தப்படத்தில் கவுண்டமணியோ , வடிவேலுவோ அல்லது சந்தானமோ நகைச்சுவைக்காக தனியாக யாருமில்லை . ஆனாலும் படம் மிகப்பெரிய வெற்றியைப்பெற்றது . அது கிட்டத்தட்ட நாம் இருவர் நமக்கு இருவரு படத்துக்குப் பிறகு அவர் அதே பாணியில் செய்த படம் . இன்னொரு குறிப்பிடத்தகுந்த விஷயம் , இந்த இரண்டு படங்களில் வழக்கத்தைவிட அவரது நாயகிகள் மிக அதிகளவு கவர்ச்சி காட்டுவார்கள்.
இதுவரை நாம் பார்த்தது எல்லாம் நகைச்சுவை கலந்த ஆக்ஷன் படங்கள்தான் . முதன்முறையாக சுந்தர்.சி காமெடிப்பேய்ப்படம் என்று அரண்மனை எடுத்தார் . நன்றாக கவனித்தால் அதே வழக்கமான வில்லனின் இடத்தில் இங்கே பேய் இருக்கும் . அவ்வளவேதான் . அதிலும் இந்தப்படம் சந்திரமுகி பட திரைக்கதை பாணியிலேதான் இருக்கும் . ஒரு டம்மி ஹீரோ , அவர் மனைவி . ஒரு பெரிய வீடு அதில் பேய் . காப்பாற்ற சுந்தர்.சி. அரண்மனை நான்கு பாகமும் தயார். அதைத்தாண்டி இப்போது மீண்டும் வடிவேலுவுடன் இணைந்து கேங்கர்ஸ் மூலம் வந்து அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார் . மேலே சொன்ன கிரி , வின்னரின் தொடர்ச்சியாகத்தான் அவர் இந்தப்படத்தையும் அணுகி இருக்கிறார் . அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார் .

நூறு படங்களுக்கு மேல் செய்த ராம.நாராயணன் , கே . பாலச்சந்தர் போன்றவர்கள் எடுத்த படங்களை ஒரு வகைமைக்குள் அடக்க இயலாது . பல்வேறு ஜானர்களில் அவர்கள் முயன்றிருக்கிறார்கள் . ஆனால் சுந்தர் . சி அப்படியான எந்தவொரு முயற்சியிலயும் இறங்கவில்லை . ‘அன்பே சிவம்’ விதிவிலக்கு. அந்தப்படத்தில் சுந்தர்.சி – க்கு அவருக்கான அங்கீகாரம் இதுவரையிலுமே கிடைக்கவில்லை என அவரே வருத்தப்பட்டதை நாம் அறிவோம். அதன் காரணமாகவே அவர் தனக்கு அடையாளம் ஏற்படுத்திக் கொடுத்த அதே பாணியை தொடர்ந்து முன்னெடுக்கிறார் என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
நகைச்சுவைப் படம் என ஜானரில் வைக்கபப்ட்ட முதல் படம் ஏவிஎம் தயாரித்த சபாபதி. அதன் பிறகு மிக அபூர்வமாகவே நகைச்சுவைக்கென மட்டும் படங்கள் வந்து கொண்டிருந்தன. ஒருகாலகட்டத்தில் அவை முற்றிலும் நின்று போயிருந்தன. இப்போது சமூக வலைதள காலகட்டத்தில் முன்னேபோதையும் இவட நகிச்சுவயுயை நம்பி படங்களை எடுப்பது கடினமும், ரிஸ்க்கும் கொண்டது. இதைத் தெரிந்து கொண்டு மக்கள் எதற்கு சிரிப்பார்கள், ரசிப்பார்கள் என்று சுந்தர். சி புரிந்து கொண்டுள்ளார். அவருடைய முப்பது ஆண்டு கால சினிமா அனுபவத்தில் ஒவ்வொரு பத்துவருடங்களிலும் மக்களின் ரசனையைக் கூர்ந்து கவனித்தவராக இருக்கிறார்.
பக்திப் படங்கள், ஆக்ஷன் காமெடிப் படங்கள் , பேய்ப்படங்கள் எல்லாம் வழக்கொழிந்து போனதை அவர் நம்பவில்லை. எதையும் எப்படி சொன்னால் மீண்டும் மீண்டும் செல்லுபடியாகும் என்கிற வித்தைத் தெரிந்தவராக இருக்கிறார். ‘கவுண்டமணி அடி கொடுத்தா சிரிப்பாங்க…வடிவேலு அடி வாங்கினா சிரிப்பாங்க..இவ்வளவு தான்’ என்று அவர் நேர்காணல்களில் சொன்னாலும், எதற்காக மக்கள் சிரிப்பார்கள் என்பதை அவர் புரிந்து வைத்திருப்பதால் தான் முப்பது வருட காலம் வெற்றி இயக்குநராக இருக்க முடிகிறது. சாதாரண ஒருவர் எதிர்கொள்ளும் அசாதாரண சூழல் என்பது தான் இவர் நகைச்சுவை நடிகர்களைக் கையாளும் இடம். அதனை நாம் தான் காமெடி ட்ராக் என்கிறம். அவர் அதனை சீரியசான கதையாக கதைக்குள் வைத்திருக்கிறார்.
சினிமா ஒரு பொழுதுபோக்கு ஊடகம் என்பதும், மக்களை தியேட்டருக்கு வரவேற்பதும் சினிமாத் துறைக்கு நல்லது. இதனை இத்தனை வருடங்களாக சிரிப்பாக செய்து வந்திருக்கிறார் சுந்தர்.சி.
அவருடைய தன்னம்பிக்கை என்பது அவருக்கு மட்டுமல்ல, சினிமா ரசிகர்களுக்கும் நல்லது செய்யக்கூடியது..











