இயக்குநர் குருதத் தொடர்ச்சியாக வெற்றிப்படங்களைக் கொடுத்துக் கொண்டிருந்தபோது தன்னுடைய விருப்பத்துக்காக ஒரு திரைப்படத்தை தயாரிக்க விரும்பினார். அக்காலத்திலேயே திரைத்துறை மீதிருந்த கவர்ச்சியையும், துரோகம், ஏமாற்றங்கள் நிறைந்த திரைத்துறையின் மறு பக்கத்தையும் அப்பட்டமாக காண்பித்த அத்திரைப்படத்தின் ஒரு பாடல் காட்சியை ,மிகவும் தனித்துவமாக எடுக்க விரும்பினார்.
இன்று நாம் மைண்ட் வாய்ஸ் என்று சொல்கிறோமே, அப்படி ஒன்றை வெறும் மனக்குரலாக மட்டுமல்லாமல், மனதிலிருக்கும் விருப்பத்தைச் சொல்ல முடியாமல் தவிக்கும் இருவரின் உடல்கள் அந்த அறையின் ஓரு மூலையில் தனித்திருக்க, அவர்களின் ஆன்மாக்கள் மட்டும் அவர்களிடையே இருக்கும் ஆத்மார்த்தமான பிணைப்பைச் சொல்லாமல் சொல்வது போல் நெருங்கி வரவேண்டும், அந்த அவர்களின் தூய்மையான மனதை வானத்திலிருந்து தெய்வீக ஒளி ஆசி வழங்குவது போல் ஒரு ஒளியமைப்பு வேண்டுமென்று குருதத் தன் ஒளிப்பதிவு இயக்குநரிடம் கூறுகிறார். அவரும் அதை இயற்கையான சூரியஒளியைக் கொண்டே மிக அற்புதமாக செய்ய, அந்த ஷாட் ஓகே ஆகிறது.
அதன் பின்பு, எவர் சூரியக்கதிர் முன்பு நடிகர்களை வைத்து படம் பிடித்தாலும், ‘Murthy’s beam” என்றே அவர் பெயரில் தனித்துவமாக அழைக்கப்பட்டது. அத்தகைய பெருமைக்கு சொந்தக்காரர் ஒளிப்பதிவு இயக்குநர் வி.கே. மூர்த்தி.
1959ல் வெளியான காகஸ் கே பூல் என்கிற ஹிந்தி திரைப்படத்தில் எடுக்கப்பட்ட வக்த் நே கியா என்கிற அந்தப் பாடல் காட்சி பெரிய மைல்கல்லாக இன்றும் உலகளவில் போற்றப்படுகிறது. மதர் இந்தியா போன்ற வெற்றிப்படங்களின் மூலம் புகழ் பெற்ற ஒளிப்பதிவாளர் பரீதூன் இரானி மற்றொரு படப்பிடிப்புக்காக அங்கிருந்தவர் மூர்த்தியின் இந்த ஷாட்டைப் பார்த்து வியப்படைந்தார். மறுநாளே ரஷ் வந்ததும் பார்த்தவர், மூர்த்தியைக் கட்டித் தழுவி, “You have done a great job Murthy, வெளிநாடுகளில் கூட இப்படி யாரும் செய்ததில்லை” என்று பாராட்டினார்.
https://www.youtube.com/watch?v=3TxjJCEKYvE
“குருதத் சொல்லி விட்ட அந்தக் காட்சியை எடுக்க ஃபோகஸ் ஸ்பாட் லென்ஸ் ஒன்றை ஒளி மேல் போட வேண்டும், ஆனால் அது ஒற்றைக் கதிராக இல்லாமல் பரவி வந்தது. எனவே அதைக் கைவிட்டோம். உணவருந்த்தி விட்டு வெளியே பெஞ்சில் அமர்ந்திருந்தபோது எங்கள் மேக்கப்மேன் கையில் கண்ணாடியைக் கொண்டு சென்றார். அதிலிருந்து பிரதிபலித்த சூரியஒளி சுவர் மேல் விழுந்தது. அதைப் பார்த்தவுடன் தான் கண்ணாடிகளைப் பயன்படுத்தலாமென எனக்கு யோசனை வந்தது. ஒரு கண்ணாடியை சூரிய வெளிச்சம் படும் இடத்தில் வைத்து மற்றொன்றை ஸ்டூடியோவிற்குள் கேட்வாக் மீது வைத்தேன். முதல் கண்ணாடியிலிருந்து விழந்து இரண்டாவதில் பிரதிபலிக்கும் வெளிச்சத்தை எப்படித் தேவையோ அப்படித் திருப்பிக் கொள்ளும் வகையில் செய்தேன். ஒளிக்கற்றை நன்கு தெரிய வேண்டுமென்பதற்காக தூசிகளையும், சாம்பிராணி புகையையும் போட்டேன். நாங்கள் விரும்பிய எஃபெக்ட் கிடைத்தது” என்று அந்த ஷாட்டை எடுத்த விதம் பற்றி மூர்த்தி குறிப்பிடுகிறார்.
இத்திரைப்படம் வெளியான காலத்தில் தோல்வியடைந்தாலும், கல்ட் கிளாசிக் என்று இன்றளவும் சிறந்த உலகத் திரைப்பட பட்டியல்களில் இடம் பெற்றிருக்கிறது. மூர்த்தியின் ஒளிப்பதிவு சிறப்பாக இருந்ததால் படம் பார்த்தவர்கள் கதையை மறந்து விட்டார்கள் என்பது தான் தோல்விக்கு காரணம் என்று குருதத் விளையாட்டாக குறிப்பிட்டார். இந்தப்படம் தான் குருதத் இயக்கிய கடைசித் திரைப்படம். அதன்பின்பு இயக்குவதை நிறுத்தி விட்டார்.
இத்திரைப்படத்தின் தோல்வி மூர்த்தியையும் பாதித்தது. ‘நாங்கள் படம் எடுப்பது மக்களுக்காக. படம் வெற்றி பெற்றால் மக்கள் எங்களைப் பாராட்டியதாகப் பொருள். எங்களுக்கு படம் எவ்வளவு நன்றாக இருந்தாலும் மக்கள் ஏற்றுக் கொள்ளாவிட்டால் பயனில்லை” என்று மூர்த்தி எண்ணினார்.
தன் சினிமா ஆர்வத்தால் எஸ் எஸ் எல் சி படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டு மூன் ஸ்டோன் என்கிற சினிமா கம்பெனியின் விளம்பரத்தைப் பார்த்து மும்பை சென்றவருக்கு, அது பணத்தை சுருட்டிக்கொண்டு ஒடும் போலி கம்பெனி என்று தெரிய வர மனம் உடைந்து திரும்பி வந்தார், ஒராண்டு வீணாகி விட, இவருடைய சினிமா ஆசையைப் பார்த்து, அவருடய உறவினர் புனேவில் அவருக்குத் தெரிந்த ஸ்டூடியோவில் அப்பிரெண்டிசாக சேர்த்து விடுகிறேன் என்று வரச்சொல்ல, மூர்த்தி புனே கிளம்பினார். , ஃபிரெஞ்ச் நாட்டு டெப்ரி கேமராவான அது முழுவதும் மூடி ஒரு பெட்டி போலிருக்கும். லென்ஸ் மட்டும் தான் வெளியில் தெரியும், 15 நாட்களாகியும் கேமரா அருகில் கூட விடாததால் மூர்த்தி அவ்ருடைய உறவினரிடம் கூறிவிட்டு கிளம்பி விட்டார்.
அங்கிருந்து வந்தவர் தகுதி தேர்வு எழுதினார். அப்போது வெள்ளையனே வெளியேறு போராட்டம் நடந்து கொண்டிருந்தது. அதில் சைக்கிள் பேரணியில் பங்கேற்ற மூர்த்தி மூன்று மாதகாலம் சிறையிலிருந்தார். மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்தால் விடுதலையாகி விடலாமென்கிற நிலையிலும், மன்னிப்பு கேட்காமல் அவர்களாகவே அனுப்பும்வரை சிறையிலிருந்தார்,
ஶ்ரீகிருஷ்ண உடையார் மைசூர் மன்னராக இருந்த காலத்தில் அவருடைய தந்தையை கௌரவ ஆயுர்வேத வைத்தியராக அடையாளப்படுத்தியும், அரண்மனையின் நாடக கம்பெனியில் நடிகராக இருந்த தற்குமெனெ இரண்டு பென்ஷன்கள் வந்து கொண்டிருந்தன. அங்கு தர்பாரில் நடைபெறும் கலை நிகழ்ச்சிகளுக்கு இவருக்கு பாஸ் கிடைத்ததால் அனைத்தையும் சென்று பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. கலைகள் மீது அதிக நாட்டமிருந்த காரணத்தால் பின்னாட்களின் மைசூர் அசோசியேஷனில் நிறைய நாடகங்களைப் போட்டார். இசைத்துறையையும் விட்டுவைக்காத மூர்த்தி கச்சேரிகளில் மிகச் சிறப்பாக வயலின் வாசிப்பார்,
சிறிய வயதிலிருந்தே சினிமாவில் சேர்ந்து நடிகனாகி புகழடைய வேண்டுமென்று மூர்த்தி விரும்பினார். ஆனால் 12 வயதில் நடிகனாக முடியாது என்கிற ஞானோதயம் வந்ததால் ஃபோட்டோகிராபி செய்யலாம் என்று முடிவு செய்தார். ஃபோட்டோகிராபி கற்பதற்காக கோடக் பாக்ஸ் கேமரா ஒன்று வாங்கினார். அப்போது டே லைட் பிரின்டிங் என்றிருக்கும். நெகடிவை ஃபிரேமில் வைத்து சில நொடிகள் வெயிலில் வைக்க வேண்டும். டே லைட்டிலேயே டெவலிப்பிங் நடக்கும். டார்க் ரூம் அவசியமில்லை.
இவருடைய சினிமா மோகத்தை அறிந்திருந்த அவரது தாய்மாமா மகன் “பெங்களூரில் சர் எம். விஸ்வேஸ்வரய்யா அவர்களால் தொடங்கப்பட்ட ஶ்ரீ ஜெயசாமராஜேந்திரா ஆக்யூபேஷனக் இன்ஸ்டிட்யூட்டில் சினிமாட்டோகிராஃபி கோர்சில் நீ சேர்ந்து கொள்ளலாம் ஸ்காலர்ஷிப் தருவார்கள்” என்று கடிதமெழுதினார்
ஆனால் மூர்த்திக்கு இடம் கிடைக்கவில்லை. இருப்பினும் மனம் தளராமல் மும்பை, புனே என்று சினிமா ஆர்வத்தில் தான் சுற்றியலைந்த கதைகளை அந்தப் பிரிவின் தலைவர் லஷ்மிநாத்திடம் விவரித்து மைசூருக்குச் சென்று அப்பாவின் மாணவரான டி.சி. ரணஜோத் சிங்கிடைமிருந்து சிபாரிசு கடிதம் வாங்கிவந்து கொடுத்து சேர்ந்து கொண்டார்.
அப்போது வேலையிலிருந்த அவருடைய நண்பன் ஶ்ரீனிவாசன் படிப்பு முடியும் வரை அவருக்கான கட்டணத்தைக் கட்டினார். தன் நண்பன் வாசுவின் அறையில் தங்கிக் கொண்டு உணவை சாப்பிட்டு என்று அவரது வாழ்க்கையிருந்தாலும் சினிமா என்கிற மந்திரச் சொல்லுக்காக அனைத்தையும் ஏற்றுக்கொண்டார்,
பெங்களூரில் படித்து முடித்து மும்பை வந்த மூர்த்தி பல படங்களில் உதவி கேமராமேனாக வேலை பார்த்தார். புனே பிரபாத் ஸ்டூடியோவில் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது தேவானந்த் அவரது சகோதரர் சேதன் ஆனந்த் குருதத் மூவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்தனர். இருவரில் யாருக்கு முதலில் வாய்ப்பு கிடைக்கிறதோ அவர் மற்றவருக்கு வாய்ப்பு அலிக்கவேண்டுமென்பது அவர்களுக்குள் வாய்மொழியாக வாக்களிக்கப்பட்டது. “அபசர்” என்கிற திரைப்படத்தில் உதவி கேமராமேனாக இருந்த மூர்த்தி முதன்முதலில் குருதத்தைப் பார்த்தார். அப்படி தேவானந்த் ஹீரோவாக நடிக்க பாஜி’ திரைப்படத்தில் குருதத்தை இயக்குநராக அறிமுகப்படுத்தினார்கள். அதில் ஸ்டூடியோ சார்பாக மூர்த்தி துணை கேமரானமேனாக இருந்தார். அந்த திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் ராத்ரா.
இயக்குநர் குரு தத் “சுனோ கஜர் க்யா காயே”என்கிற பாடலில் ஒரு குறிப்பிட்ட ஷாட்டை எடுக்க விரும்பினார், ஆனால் தலைமை ஒளிப்பதிவாளர் வி. ராத்ராவுக்கு அது சவாலாக இருந்தது. அப்போது உதவியாளராக இருந்த வி.கே. மூர்த்தி, இந்த ஷாட்டை எடுக்க அனுமதி கோரினார்.
இந்த பாடலில் நாயகி கீதாபாலி கேபரே நடனம் ஆடிக்கொண்டே உள்ளே வருவார். கண்ணாடியில் கீதாபாலியை ஃபிரேம் செய்தார். அந்த இடம் பார் என்பதால் அரையிருட்டாக ஒளியமைப்பு செய்யப்பட்டிருக்கும். டிராலி டிராக்கிங் பயன்படுத்தி பாரின் மேலிருந்த கண்ணாடி வழியாக குளோசப் தொடங்கி தேவ் ஆனந்தை பின்னாலிருந்து காட்டி பேன் டவுன் செய்து தேவ் ஆனந்துடனேயே நடக்கும் கேமரா முன்னாலிருந்த நடனப் பெண்களைக் காட்டி பிறகு தேவ் ஆனந்தின் முகத்தை காட்டும். ஏதோ ஆபத்து இருக்கிறது என்பதை உணர்த்தும் விதமாக அந்த பிரதிபலிப்பிலிருந்து ஆபத்தான உலகுக்குள் நுழையும் தேவ ஆனந்தைக் காட்டியிருப்பார்கள். அப்போது மேமராக்கள் மிகப் பெரியதாக இருக்குமென்பதால் அதைத் தூக்கிக் கொண்டு இப்படியான காட்சிகள உருவாக்குவது எளிதானசெயலன்று.
இந்தக் காட்சியின் தொழில்நுட்பத் துல்லியத்தாலும், கவித்துவமான கேமரா அசைவாலும் குருதத் மிகவும் ஈர்க்கப்பட்டார். அன்றைய படப்பிடிப்பு முடிந்ததும், குருதத் மூர்த்தியைப் பார்த்து, “இனிமேல் நாம் இருவரும் ஒன்றாக வேலை செய்வோம்” என்று கூறினார். “சுனோ கஜர் க்யா காயே” பாடலில் மூர்த்தி காட்டிய இந்த திறமைதான், பியாசா, காகஸ் கே பூல் போன்ற காவியங்களைப் படைக்க உதவி அவர்களின் புகழ்பெற்ற கூட்டுப் பணிக்கு வித்திட்டது.
இந்தப் படத்தில் துணை நடிகராக நடிக்க வந்த பஹ்ருதீன் பின்னர் ஜானிவாக்கர் என்கிற பெயரில் திறமை வாய்ந்த நகைச்சுவை நடிகராக குருதத்தின் படங்களில் வலம் வந்தார்.
மூர்த்தி அதிகாரப்பூர்வமாக கேமராமேன் ஆனது குருதத்தின் ஜால் திரைப்படத்தில் தான். பாக்ஸ் ஆபிஸ் வெற்றியைக் கொடுத்த படம். இந்தப் படத்தில் அதிகளவு குளோசப் ஷாட்கள் எடுக்கப்பட்டிருக்கும். மிகத் தைரியமாக 75 எம்.எம். லென்ஸ்களை மூர்த்தி பயன்படுத்த தொடங்கினார். இசை, ஒளிப்பதிவு, பாடல்கள், நடிப்பு என எல்லாமே கச்சிதமாக அமைந்த படமென்பதால் மக்கள் மிகவும் ரசித்தனர்.
‘காகஜ் கே பூல்’ இந்தியாவின் முதல் சினிமாஸ்கோப் படம். அத்துடன் குருதத் கடைசியாக இயக்கியப் படமும் இதுதான். வஹிதா ரஹ்மான் மீது கொண்ட காதலால் தன் சொந்த வாழ்க்கையில் துயரத்தை சந்தித்த குருதத்தின் நிஜ வாழ்க்கையைப் பிரதிபலித்தது.
ஆர் பார் திரைப்படத்தின் டபடப்பிடிப்பின் போது லைட்டிங் அமைக்க தாமதமானதால் மூர்த்தியிடம் மிகவும் கோபித்துக் கொண்ட் குருதத், உன்னுடைய ஃபோட்டோகிராபிக்காகவே நான் ஒரு படம் எடுக்கிறேன், இப்போது வேகமாக செய் என்று வாக்குறுதி அளித்தபடியே காகஸ் கே பூல் படம் துவங்கியபோது, இந்தப் படம் உனக்கானது, நீ விரும்பியதெல்லாம் செய் என்று சொல்ல, மூர்த்தியின் கேமரா கவிதையாக வெளிப்பட்டு, அவருக்கு சிறந்த ஒளிப்பதிவாளருக்கான ஃபிலிம்ஃபேர் விருதையும் வாங்கிக் கொடுத்தது.
தன் தந்தையின் நண்பரான வி.கே.மூர்த்தி குறித்து ஏழாவது மனிதன் படத்தின் இயக்குநர் ஹரிஹரன் நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.
“அந்த காலத்தில் பம்பாயில் கமர்ஷியல் சினிமாவுக்கென்று ஒரு விதி உணடு, பளிச்சென்று லைட்டிங் செய்ய வேண்டுமென்று. திரை வெளிச்சமாக இருக்க வேண்டும். ஏனென்றால் இருட்டாக லைட்டிங் செய்தால் கிராமத்திலிருக்கும் தியேட்டர்களில் இருட்டாகத் தெரியும். ஒண்ணுமே தெரியாது. குருதத்துக்கும், விகே மூர்த்திக்கும் நாம் அப்படி செய்ய வேண்டாம். நமக்கு என்ன தேவையோ அதைச் செய்வோம் என்கிற மனநிலை இருந்தது. ஹாலிவுட்டில் Film Noir என்கிற சீரிஸ் உண்டு. சில கேரக்டர்கலைக் காண்பிக்கும்போது அவர்களை ஹீரோவாக காண்பிக்க கூடாது. அப்போது அவ்ர்கள் மீதான லைட்டிங் சற்றே இருட்டாக இருக்க வேன்டும். நம்ம கேரக்டர்ஸ் எல்லாமே அதுபோல தான். காகஸ் கே பூலில் அவர் பணக்காரராக இருந்தாலும் அவர் வலியுடன் இருப்பவர் தான். அத்துடன் அவர் சினிமாத் துறையை எதிர்த்து பேசுகிறார். அதற்கேற்ப லைட்டிங் செய்ய வேண்டுமென்கிறார்.
அந்தக் கதாபாத்திரத்துக்கு, கதைக்குத் தகுந்த லைட்டிங் தான் அது. பியாசா, காகஸ் கே பூல், இந்த ஐந்து படங்களிலும் இப்படியான லைட்டிங்கையே வைத்துக் கொள்வோமென்று முடிவு செய்கின்றனர்.
அப்ரார் அலி, விகே.மூரத்தி, குருதத், உதவி இயக்குநர் எம். சாதிக், பாடலாசிரியர் காஹித் வித்யாபீ, எஸ்.டி. பர்மன், இவர்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து உரையாடுவார்கள். எல்லோர்க்கும் என்ன படமென்பது சரியாகப் புரிந்து விடும். குருதத் புரொடக்சனில் இருக்கும்போது ஒருவர். அதை விட்டு வெளியில் வந்துவிட்டால் அவர் வேறொருவர். அவர் வஹிதா ரஹ்மானை விரும்பினார். அவரைத் தனது படத்தின் கதாபாத்திரமாகவே பார்த்தார். அவருக்கும் ஒரு தனிப்பட்ட வாழ்க்கை இருக்குமென்று அவர் யோசிக்க மாட்டார். ஐ லவ் திஸ் கேரக்டர். கடவே இருக்கனும். எப்போதும் தீராத துயரத்திலேயே இருப்பார்.
என்னுடைய முதல் திரைப்படம் ஏழாவது மனிதன். பாரதியாரைப் பற்றி படமெடுக்க வேன்டுமென்று வந்தவன். அவரைப் பற்றி ஆராய்ச்சி செய்தபோது, பாரதியார் சற்றே ஆட்டிஸ்டிக் பர்சன் எனறு என் தயாரிப்பாளரிடம் சொன்னேன். அவர்கள் ஒரே பார்வையோடுதான் இருப்பார்கள். சமூகத்தில் எவருடனும் கலந்து இயல்பாக பழக முடியாது. பாரதி கவிதையில் மாஸ்டர். ஆழவார்கள், நாயன்மார்கள் எல்லாவற்றையும் அப்படியே உறிஞ்சு எடுத்துக் கொண்டார். பக்தி பாடல்கள்,. நாட்டுப்பற்று பாடல்கள், ரஷ்யப்புரட்சி என்று எல்லாமும் எழுதினார். அப்படியிருந்ததால் தான் அவரால் எழுத முடிந்தது. குருதத் வட நாட்டின் பாரதின்னு நான் சொல்வேன்.
பியாசாவின் ஒரு பாடல். இந்த உலகம் எனக்கு கிடைச்சா தான் என்னடா? திருடர்களும், போலியானவர்களும் இருக்கும் இந்த உலகம் எனக்கு கிடைச்சா தான் என்ன? அந்த உலகத்தை எரிச்சிடுங்கன்னு சொல்வார், அதையே இங்க பாரதி, தனியொருவனுக்கு உணவில்லையெனில் ஜெகத்தினை அழித்திடுவோம் என்றார். குருதத் பாரதியை படித்ததில்லை. அந்த மாதிரி ஒரு ஆளோட வி,கே, மூர்த்தி சேர்கிறார். He is the great admirer of Guru Dutt.
வி.கே.மூர்த்தியும், என் அப்பாவும் கிளாஸ்மேட்ஸ். பெங்களூர் திரைக்கல்லூரியில் ஒன்றாகப் படித்தவர்கள். இவர்கள் தான் முதல் பேட்ச் என்பதால் பாடத்திட்டங்களை இவர்களே உருவாக்கிக் கொண்டனர். முடித்ததும் என் அப்பா, மூர்த்தி, ஶ்ரீநிவாஸ் மூவரும் பம்பாய்க்குச் சென்று வெவ்வேறு ஸ்டூடியோக்களில் வேலைக்குச் சேர்ந்தனர். என் அப்பா வேலை செய்த ஸ்டூடியோ ஒருகட்டத்தில் மூடப்பட, அவர் கோடக் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். ஈஸ்ட்மென் கலர் நெகடிவ் ஃபிலிம் அப்போதுதான் வந்தது லன்டனிலிருந்து கொண்டு வந்து. அதைப் பற்றி எல்லோர்க்கும் என் அப்பா தன் பயிற்சியளித்தார். வி.கே, மூர்த்தி என் அப்பாவிடம் வந்து நிறைய டிஸ்கஸ் செய்வார். ஆனால் குருதத் தன் படங்களுக்கு கலர் தேவையில்லை. எனக்கு பிளாக் அன்ட் வொய்ட் தான் சரியாக இருக்குமென்று சொல்லி விடுவார். குருதத் ஒரு வன்ணத் திரைப்படம் எடுக்க ஆரம்பித்து உடனேயே நிறுத்தி விட்டார்.
குருதத் எப்போதும் ஒரு குழுவாகவே இயங்கி வந்தார், அவருடைய குழுவில் படத்தைப் பற்றி அங்கிருக்கும் அனைவருக்கும் தெரியும். திடீரென்று நான் போய் விட்டால் கூட படம் தொடர்ந்து முடிக்கப்பட வேன்டுமென்பதில் குருதத் உறுதியாக இருந்தார். அப்புறம் பியாசா. தொடர்ந்து காகஸ் கே பூல். அந்தக்காலத்திலேயே அதன் பட்ஜெட் 18 கோடி முதல் சினிமாஸ்கோப் படம். அதோடு நிறுத்தி விட்டார்,
பிரசாத் அகாடமியில் நான் இயக்குநராக இருந்தபோது ஒருமுறை அவரை இங்கு 2005ல் வரவழைத்தேன். இங்குள்ள மாணவர்களுக்கு ஒரு டெமோ கொடுங்க. முழு ஸ்டூடியோவும் தரேன் எனக்கு ஒரு சீன் லைட்டிங் செய்து காண்பியுங்கள் என்று சொல்லி வரவழைத்தேன், அவரும் வந்தார், அப்போது பாலுமகேந்திராவும் உடனிருந்தார். அவருடைய லைட்டிங்கைப் பார்த்து விட்டு பாலுமகேந்திரா சொன்னார், அப்பா.. என்ன பொறுமை வேணும்யா என்றார்.. அந்த லைட்டிங்கிற்கு zone lighting என்று பெயர். ஒரு கேமராமேன் ஒரு அறையைப் பல்வேறு பகுதிகளாகப் பார்க்கிறார். ஒரு கதையில் பல வாக்கியங்கள் அமைவது போல. ஒவ்வொரு பகுதியும் ஒரு கதை சொல்கிறது. என்னுடைய ஸ்டூடியோவை எட்டு பகுதிகளாகப் பிரித்தார். ஒரு கேரக்டர் ஒவ்வொரு பகுதியாக நடந்து கடந்து செல்லும். ஒரு பெண்ணை நடக்கச் சொன்னார். அது வழியாகவே கதை சொல்வது. பாலுமகேந்திரா பார்த்து அசந்து போய் அப்பா… என்ன ஒரு சினிமா.! என்று சிலாகித்தார். zone lighting வைத்து கதை சொல்வதை பயிற்றுவித்தார். மூன்று மணி நேரம், தன்னுடைய மீட்டரை வைத்து செக் செய்து கொண்டேயிருந்தார். இன்றைய கேமராமேன்களிடம் ஜோன் லைட்டிங் என்றால் என்னவென்று கேட்டால் தெரியாது.
குருதத் அவரிடம் எனக்கு இந்த லைட்டிங் வேண்டுமென்று கூறி விட்டு போய் உட்கார்ந்து விடுவார். லைட்டிங் செய்ததும் இவர் அவரை அழைப்பார். வந்து பார்த்து ஓகே சொல்லி ஷூட்டிங்கைத் தொடங்கி விடுவார்.
காகஸ் கே பூலின் தோல்விக்குப் பிறகு குருதத் இயக்க விரும்பவில்லை. தன் எழுத்தாளர் அப்ரார் அலியை அழைத்து மீனாகுமாரிக்குப் போய் கதை சொல்ல சொல்கிறார். ஏனென்றால் மீனாகுமாரியின் கணவர் மிகவும் கண்டிப்பானவர். இவர் போய் சொன்ன கதை மீனாகுமாரிக்குப் பிடித்து விட சம்மதிக்கிறார். வந்து குருதத்திடம் சொன்னபோது, ஓ உன்னை அவ்வளவு நம்புகிறார்களா, அப்படியென்றால் நீயே டைரக்ட் செய்துவிடு என்று அலியிடம் சொல்கிறார், எனக்கு எதுவுமே தெரியாது என்றவரிடம் குருதத், “நான் கூட இருக்கேன், நீயே பன்ணு, ஆனால் ஒரு கோரிக்கை, அந்த பாடல் காட்சிகள் மட்டும் நான் எடுக்கிறேன்” என்றார். சாஹி அவுர் குலாப் படத்தைப் பார்த்தால் குருதத்தின் ஸ்டைல் தான் இருக்கும். தன்னுடன் இருந்தவர்கள் மீது குருதத் வைத்திருந்த நம்பிக்கையை இது காட்டுகிறது.
நான் என் மாணவர்களிடம் ஒன்றே ஒன்று சொல்வேன். தமிழ் சினிமா ஹிந்தி சினிமா என்றெல்லாம் கிடையாது. சினிமாவுக்கென்று தனி மொழி உண்டு, அந்தக் காட்சி மொழியில் தமிழோ ஹிந்தியோ ஏதோ ஒன்று பேசுகிறார்கள். வெறுமனே சினிமா என்று தான் பார்க்க வேண்டும். ஆனால் சினிமான்னா கதைன்னு நினைச்சுட்டிருக்காங்க. அது எழுத்தாளரோட வேலை.
சினிமா ஒரு தனிப்பட்ட ராகம், அதற்கென்று தனி சாகித்யம் இருக்கும். இதை வி,கே, மூர்த்தி நன்றாகப் புரிந்து கொண்டார். சினிமா ஒரு ராகம்,. நான் அந்த ராகத்தைப் பாடப் போறேன். அதை film Noir என்று சொல்லலாம். இல்லைன்னா எக்ஸ்பிரெஷனிஸ்ட் ராகம்னும் சொல்லலாம். ஆனால் இம்ப்ரெஷனிஸ்ட் சினிமான்னா. சத்யஜித்ரே தான். அப்போது இம்ப்ரெஷனிஸ்ட் சினிமா ரியலிஸ்ட்டாக செய்து கொண்டிருந்தார். மூர்த்தி கதையோட எக்ஸ்பிரெஷனை அப்படியே எடுத்துக் கொடுப்பார். அப்போது தான் அந்தக் கதையோட உணர்வுகள் தெரிய வரும். அந்த ராகம் அப்போது தான் சரியா பாட வரும்.
அதன் பிறகு பிரமோத் சக்கரவர்த்தியிடம் மூர்த்தி வேலை செய்யப் போனார். ஜுக்னு, லவ் இன் டோக்கியோ, இது எக்ஸ்பிரெஷனிஸ்ட் சினிமா இல்லப்பா. இது பக்கா கமர்சியல் சினிமா, எல்லாம் பளிச்சின்னு தெரியனும், அவ்ளோதான். இங்க நான் அப்படித்தான் செய்வேன்னு சொல்ல முடியாது. இந்தக் கதை அப்படியானது அல்ல. இந்த ராகம் அந்த ராகம் இல்ல. இதெல்லாம் எல்லாரும் பாடற மாதிரியான ராகம். இதுல புதுசா ஒன்ணும் கிடையாது. இதெல்லாம் சங்கராபரணம். அதற்குப் பிறகு அவர் மிகவும் சாதாரண கேமராமேன் ஆகிவிட்டார்.
ஆனால் அதற்குப் பின் அவர் செய்தது பாரத் ஏக் கோச். 36 எபிசோட்ஸ் கொண்ட ஒரு டிவி தொடர் ஷியாம் பெனகலுடன் செய்தார். அதில் தன்னுடைய பழைய லைட்டிங் திறமையைக் கொண்டு வந்தார்.
சாஹித் பீபி அவுர் குலாம் படத்தின் இரண்டு பாடல்கள் மிகப் பிடித்தவை. அதில் இரவுக்கான லைட்டிங் மிகப் பிரமாதமாகச் செய்யப்பட்டிருக்கும். அதில் நடுவில் ஒரு பெண் ஆட பின்னால் எட்டு பேர் ஆடுவார்கள். அதற்குப் பின்னால் தபேலா, சாரங்கி என இசைக்கருவிகள் வாசித்துக் கொண்டிருப்பார்கள். ஜமீந்தார் நடுவிலிருக்கும் பென்ணை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்க, அவள் மீது மட்டும் வெளிச்சம் விழும்படி லைட்டிங் செய்திருப்பார். பின்னாலிருக்கும் டேன்சர்ஸ் மீது வெளிச்சமிருக்காது. அவ்வளவு அருமையாக இருக்கும்.
என்ன லாஜிக், ஏன் அவர்களுக்கு நீங்கள் லைட் கொடுக்கவில்லை என்று அவரிடம் கேட்டேன். நீயே சொல்லு என்றார், அந்தக் காலத்தில் ஃபேன் கிடையாது. பங்கா என்கிற ஒன்றை வெளியிலிருந்து ஒருவர் ஆட்டுவார். திரைச்சீலைகள் மேலிருக்கும். அவை அசைந்து காற்று வரும். அந்த லைட்டை அந்த பங்கா மறைக்குது, அப்ப இதோட நிழல் அந்த பெண்கள் மீது விழுகிறது’ என்று சொன்னேன். அவர் சிரித்து விட்டு, இது நல்ல விஷயம் தான், ஆனா நான் இப்படியெல்லாம் நினைச்சு லைட்டிங் செய்யலியே, இனிமேல் யாராவது கேட்டா, இதையே சொல்லிடறேன். என்றார். அப்ப நீங்க எப்படி செஞ்சீங்க என்று கேட்க, அந்தப் பெண்களின் முகம் பார்க்கும்படியாக இல்லை, அதனால் அப்படி செய்தேன். என்றார்.
ந ஜாவு செய்யா பாடல் முழுக்க குளோசப்பில் ஷூட் செய்திருப்பார். கேமரா அந்த படுக்கையை சுற்றி சுற்றி வரும். ஒரு பெண்ணின் ஏக்கத்தை மிக துல்லியமாக படம் பிடித்திருப்பார்.
பாரத் ஏக் கோஜ் நேருவின் டிஸ்கவரி ஆஃப் இந்தியா என்கிற புத்தகத்தின் தொலைக்காட்சி வடிவம். வரலாற்றுத் தொடர் என்பதால் செட் போட்டு மிகச் சிறப்பாக செய்திருப்பார்கள்.
அவரோட சிக்னேச்சர் ஷாட்னா, அது காகஸ் கே பூல் படத்தில் வரும் வக்த் ந க்யா பாடல் தான். குருதத் அவரிடம் எனக்கு பீம் லைட் வேணும் தெய்வீக ஒளி போன்று. அப்பதான் இரண்டு பேரும் தள்ளியிருந்தாலும் அவர்களின் ஆத்மாக்களும் பக்கத்துல வரணும் என்றார். கீதாதத் பாடிய பாடல். அப்போது நிஜ வாழ்விலும் நடக்கிறது. சீட்சன் கேய் 1942ல் எடுத்த படத்தில் பார்த்திருக்கிரார். அப்போது கஷ்டப்பட்டு அப்படியெல்லாம் படம் பார்த்திருக்கிறார்கள்.
வெளியில் அதிகம் பேச மாட்டார். நான் அவரை மூர்த்தி மாமா என்று தான் குறிப்பிடுவேன்.”என்றார் இயக்குநர் ஹரிஹரன்.
மூர்த்தியின் உதவியாளர்கள்:
“அவர் என்னுடைய மிகச் சிறந்த உதவியாளர், மிகவும் நகைச்சுவை உணர்வு கொண்டவர்” என்று மூர்த்தி குறிப்பிட்ட கே.ஜி பிரபாகர்:
கேமராவைப் பற்றி எதுவுமே தெரியாத பிரபாகர் குருதத்தின் தம்பி ஆத்மாராமின் நண்பராக இருந்தவர் எந்த வேலையும் கிடைக்காததால் மூர்த்தியிடம் உதவியாளராக பாஜ் படத்தில் வந்து சேர்ந்தார். மெல்ல மூர்த்தியின் வேலைகளைப் பார்த்துக் கற்றுக் கொண்டார். குருதத்தின் எல்லா படங்களிலும், பாரத் ஏக் கோஜ் தொலைக்காட்சி தொடரிலும் மூர்த்தியின் உதவியாளராகப் பணி புரிந்தவர்.
“பாஜ் முடிந்ததும் ஆர்பார் தொடங்கியது. நான் சுதந்திரமாக கேமரா ஆபரேட் செய்தது மிஸ்டர் & மிசஸ் 55ல். என்னை நம்பி மூர்த்தி சாப் பெரிய பொறுப்பைக் கொடுத்தார்.
மூர்த்தி சாபின் ஸ்பெஷல் அவருடைய Spontenity. ஐடியாக்களுக்காக அவர் தவித்ததேயில்லை. அடிப்படையில் கலைலயுணர்வு கொண்டவர் என்பதால் சட்டென்று அவருக்குத் தோன்றிவிடும்.. குருதத்துக்கும் அவருக்கும் அடிக்கடி உரச்ல்கள் வரும். ஆனால் உடனேயே இருவரும் சாரி சொல்லி பேசி விடுவார்கள்.
மூர்த்தி சாப் ஒரு பெர்ஃபெக்ஷனிஸ்ட். ஒரு ஷாட் எடுப்பதிலிருந்து ஆடைகள் கூட சுருக்கமில்லாமல் இருக்க வேண்டும்.
அவரை நான் மிகச் சரியாகப் புரிந்து கொண்டிருந்ததால் அவருடன் வேலை பார்த்ததில் எந்த சிரமும் இல்லை.
பியாஸா: மூர்த்தி-குருத த் தின் மாஸ்டர்பீஸ்களில் ஒன்றான பியாஸாவில் ஒளியைப் போலவே நிழலுக்கும் இருந்த முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் ஒளி-நிழலைப் பயன்படுத்திய விதம் பிரமிக்க வைக்கிறது. அதுவரை ஒளியில் இருந்த பல கட்டுப்பாடுகளைக் தகர்த்தார் மூர்த்தி. ரியலிஸ்ட்டாகாவும் அழகாகவும் சேர்ந்து காட்டமுடியுமென்பதை நிரூபித்தார் குருதத்தால் மட்டும் தான் இது சாத்தியப்பட்டது, என்ன சோதனைகள் செய்தாலும் அவர் வேண்டாமென்று சொல்லமாட்டார்.
இந்தப் படத்தின் முக்கிய காட்சி குருதத் அரங்கில் கதவருகே இருட்டில் கையறு நிலையில் நின்றிருக்கும் உருவம். அங்கே இரங்கல் கூட்டம் நடந்து கொண்டிருக்கிறது. குருதத் மறுபக்கத்திலிருந்து வருகிறார். வாசலில் நிற்கிறார். பின்னாலிருந்து ஒளி. முழு அரங்கும் மங்கலாக இருக்கிறது. அவரது முகத்தில் ஒளி படாதது, பார்வையாளர்களை அவரது தனிமையையும் விரக்தியையும் உணரச் செய்ததுடன், அந்தக் கதாபாத்திரத்தை ஒரு துயரமிக்க கலைஞனின் அடையாளமாக மாற்றியது.
பியாஸா பட த்தின் இறுதிக் காட்சியில் ஆயிரக்கணக்கான மக்கள் அமர்ந்திருப்பார்கள். ஆனால் உண்மையில் அவ்வளவு மக்கள் இல்லை. “கட்அவுட் செய்து பின்புறத்திலிருந்து ஒளியைக் கொடுக்கலாம் என்று குருதத்திடம் சொன்னேன். செலவைக் குறைத்ததற்கு மகிழ்ச்சியடைந்தான்”” என்கிற மூர்த்தி.கிராபிக்ஸ் இல்லாத அந்தக் காலத்திலேயே இப்படியான பல தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தியிருக்கிறார்.
ஆர்பரில் வரும் கார் சேசிங் காட்சி மிகப் பிரபலமாகப் பேசப்பட்டது. ஹீரோவுடையது, வில்லனுடையது என இரு கார்கள் ஒன்றையொன்று துரத்திக் கொண்டு போகும். காலியான தெருக்கள் வேண்டுமென்பதற்காக கோட்பந்தரில் படப்பிடிப்பு நடத்த முடிவெடுக்கப்பட்டது.
“கார் சேஸ் காட்சிகளில் கேமரா தொடர்ந்து செல்ல வேண்டுமென்றால் அது சிரமமாக இருக்கும். ஆடும். அதற்கு மரப்பலகையைத் தருவித்து அதன் மேல் மூன்று மோட்டார் சைக்கிள்கள் ஸ்பிரிங்குகளை வைத்து அதன் மீது கேமராவை வைத்தேன். பிறகு குலுங்கவில்லை.
கார் போவதையும் ஹாலிவுட் படங்களில் பார்ப்பதைப் போல காட்ட நினைத்தேன். நிலத்தில் கேமராவை வைத்து மூடி லென்ஸ் மட்டும் தெரிவதைப் போல வைத்தேன். பள்ளம் தோண்டி லென்ஸ் 2 அல்லது மூன்று அங்குலம் மேலே இருப்பதைப் போல காருக்கு கீழ் 6-8 அங்குலம் இடைவெளி இருக்கும். டிரைவரை அதன் மீது சரியாக ஓட்ட சொன்னேன்.
நீ கேமராவை பாழடித்து விடுவாய். அநியாயமாக நான் பணம் கொடுக்க வேண்டி வரும் என்று குருதத் மூக்கால் அழுதான். நான் இருக்கேன், கவலைப்படாதே என்றேன். ஃபஸ்ட் கிளாஸ் ஷாட் ஆனது.
நார்மல் ஷாட்டை விட எப்போதும் கிரியேட்டிவ்வாக சவாலாக செய்வதென்றால் எனக்குப் பிடிக்கும்’ என்று மூர்த்தி எப்போதும் சொல்வார்.
ஸ்கிரீன் பத்திரிகையில் ‘மூர்த்தியின் ஒளிப்பதிவு படத்தின் சிறப்பை மேலும் உயர்த்துகிறது. அந்த கார் சேஸ் காட்சியில் பார்வையாளர்கள் மூச்சைப் பிடித்துக் கொண்டு அந்த வேகத்தை உண்மையாக அனுபவிப்பதைப் போல கேமரா வேலை செய்திருக்கிறது” என்று சிறப்பாக பாராட்டி எழுதியது.
சாஹிப் பீபி அவுர் குலாம் என்கிற திரைப்படத்தில் அந்த பிரம்மாண்டமான மாளிகையையும் ஆனால் அதற்குள் தனிமையாக இருக்கும் மீனாகுமாரியின் வேதனையையும் காண்பிக்கும் விதமாக ஃபிரேம்கள் அமைத்திருப்பார். ந ஜா பாடலில் ஒரு பெண் தன்னை அலட்சியப்படுத்துகிற கணவனிடம் தன் ஏக்கத்தையும், தவிப்பையும், கோபத்தையும் வெளிப்படுத்தும் காட்சிகளில் கேமரா படுக்கையறை முழுவதும் அந்தப் பெண் போலவே அலைவுறும். கட்டிலின் டிசைன்களின் இடைவெளிகளின் வழியே மீனாகுமாரியைக் காண்பிக்கும் ஷாட் அபாரம். பாடல் முடிந்து கோப்மாக அழுது கொண்டே பேசும் மீனாகுமாரியின் குளோசப் ஷாட்கள் , கதாபாத்திரமாகவே மாறி விடுகிற அவரின் திறமையை பிரதிபலிக்கின்றன.
கோவிந்த் நிஹலானி: “என்னிடமுள்ள திறமை அனைத்தும் வி.கே. மூர்த்தியிடமிருந்து வந்ததுதான். அவரது ஆசீர்வாதமும் அவரிடமிருந்து நான் கற்றுக்கொண்டதும் என்னை இன்று நான் இருக்கும் நிலைக்குக் கொண்டு வந்துள்ளது. மூர்த்தி உலகின் சிறந்த காமிரா மேன்களில் ஒருவர்” என்றும் புகழ்ந்துள்ளார். அவரோட பியாஸா, காகஸ் கே பூல் இரண்டுமே ஒளிப்பதிவாளர்களுக்கு வகுக்கப்பட்ட சம்பிரதாய சங்கிலியிலிருந்து விடுதலை அளித்த படம் என்றும் குறிப்பிடுகிறார்.
குருதத் மறைந்த பிறகு மூர்த்தியுடன் சூரஜ் திரைப்படத்தில் வேலை செய்து கொண்டிருந்த கோவிந்த் நிஹலானி அவரிடம் குருதத் போன பிறகு உங்களுக்கு எப்படியிருக்கிறது என்று கேட்டார். அதற்கு மூர்த்தி “நான் அவனுக்காக அழலை. எனக்காக அழுதேன்” என்றார். இந்த ஒற்றை வாக்கியம் அவர்களிடையே இருந்த ஆழமான பிணைப்பைக் காட்டுகிறது.
இனிமேலும் அப்படியான கலைப்படங்கள் செய்யும் வாய்ப்பு இருக்காது எனபதை அவர் அறிந்திருந்தார். இருவருக்கும் ஒரே பார்வையிருந்தது. அவர்கள் இலக்கியம், சினிமா, இசை என எல்லாவற்றையும் பற்றி உரையாடினர். எவர் பேச்சையும் கேட்காத குருதத் மூர்த்தி சொல்லும்போது மட்டும் கேட்டார். ஒருமுறை அதிக தூக்க மாத்திரைகள் உட்கொண்டு குருதத் தற்கொலைக்கு முயன்றபோது அவரை மடியில் கிடத்தி கொண்டு காரில் சென்று காப்பாற்றினார். ஆனால் மூன்றாவதுமுறை மரணம் ஜெயித்து விட்டது,
குருதத் இறந்த பின், கலையை வெளிப்படுத்தாத, எந்த புதுமைக்கும் சவாலுக்கும் இடம் தராத வழக்கமான கமர்ஷியல் சினிமாக்களில் பணிபுரிந்தார் மூர்த்தி. 2001க்குப் பின் பணி செய்வதை நிறுத்தி விட்டார்.
மூர்த்தியின் முதல் மனைவி சீக்கிரமே இறந்து விட, அவரது பெண்ணைக் கவனித்துக் கொள்ள அவரது நட்பில் இருந்த சந்தியா இரண்டாவது மனைவியாகிறார். சந்தியா அவரையும், அவரது வேலையையும் நன்கு புரிந்து கொண்டு அன்பான வாழ்க்கை வாழ்ந்தனர், நடிகைகளிடம் அதிகமாக பேசமாட்டார். ஆனாலும் மதுபாலா, வஹிதா ரஹ்மான் எல்லோரும் நல்ல நட்புடன் இருந்தனர், தன் மனைவியை எதற்கும் தன்னைச் சார்ந்து இல்லாமல் மிக சுதந்திரமாக இருக்க வைத்தார்.
குருதத்தின் கண்ணாக இருந்தவர் மூர்த்தி. சத்யஜித் ரே – சுப்ரதா மித்ரா அல்லது இங்மார் பெர்க்மேன் – ஸ்வென் நைக்விஸ்ட் போன்ற புகழ்பெற்ற இயக்குநர்-ஒளிப்பதிவாளர் இணைகளுடன் இந்தக் கூட்டணி ஒப்பிடப்படுகிறது. குருதத்தின் உணர்ச்சிபூர்வமான கதைகளை காட்சி கவிதையாக மொழிபெயர்க்கும் திறன் மூர்த்தியிடம் இருந்தது. தொழில்நுட்பங்களிலும் பல புதுமைகளைப் பரீட்சித்துப் பார்த்து சினிமா என்னும் கலைப்படைப்பை அடுத்த தளங்களுக்கு முன்னேற்றி கொண்டு போன மூர்த்திக்கு இந்திய அரசு சினிமாவின் மதிப்பு வாய்ந்த விருதான “தாதா சாகேப் பால்கே” விருதை அளித்து கௌரவப்படுத்தியது, அந்த விருதைப் பெற்ற முதல் ஒளிப்பதிவாளர் மூர்த்தி.
வி.கே மூர்த்தி குறித்து அடுத்த இதழிலும் தொடரும்











