The Talkie
Thursday, April 9, 2026
  • Login
  • Register
  • thetalkie
  • ஆளுமைகள்
  • திரைக்கதைகள்
  • உரையாடல்
  • கட்டுரைகள்
    • இந்தியத் திரைப்படங்கள்
    • உலகத் திரைப்படங்கள்
    • தமிழ்த் திரைப்படங்கள்
    • ஓடிடி திரை
  • தொடர்கள்
    • ட்ரெண்டு கொட்டாய்
    • திரை புத்தகம்
    • ஸ்டார்ட் கேமரா
    • I CALL THE SHOTS
    • குரு தத் 100
    • டேபிள் டாப்
  • தொடர்பு
No Result
View All Result
The Talkie
  • thetalkie
  • ஆளுமைகள்
  • திரைக்கதைகள்
  • உரையாடல்
  • கட்டுரைகள்
    • இந்தியத் திரைப்படங்கள்
    • உலகத் திரைப்படங்கள்
    • தமிழ்த் திரைப்படங்கள்
    • ஓடிடி திரை
  • தொடர்கள்
    • ட்ரெண்டு கொட்டாய்
    • திரை புத்தகம்
    • ஸ்டார்ட் கேமரா
    • I CALL THE SHOTS
    • குரு தத் 100
    • டேபிள் டாப்
  • தொடர்பு
No Result
View All Result
The Talkie
Subscribe
Home தொடர்கள்

ஸ்டார்ட் கேமரா! வின்சென்ட் மாஸ்டர் – 01

The Talkie by The Talkie
March 19, 2025
in தொடர்கள், ஸ்டார்ட் கேமரா
A A
4
start camera
Share on WhatsappShare on FacebookShare on Twitter
Author Icon ஜா.தீபா
Author Icon அகிலா ஸ்ரீதர்

‘உத்தமபுத்திரன்’ தமிழ் சினிமாவின் போக்கினை மாற்றிய ஒரு படம். ‘யாரடி நீ மோகினி’ என்று ஜி. இராமநாதன் இசையில் உற்சாகமான குரல்கள் பாட வெளிவந்த இந்தப் பாடல் அந்தக் காலத்து புதுமையான ஃப்யூஷன். ஸ்ரீதர் என்கிற பின்னாட்களில் தமிழ் சினிமாவை அசத்தப்போகிற ஒருவர் எழுதிய திரைக்கதை. தெலுங்கில் வெற்றிப்படங்களைக் கொடுத்து கவனம் பெற்ற T. பிரகாஷ் ராவ் தமிழில் இயக்குகிற படம். இப்படி ஒரு வித்தியாசமான ‘டீம்’ உருவாகியிருந்தது. இவர்கள் எல்லாரும் திட்டமிட்டு கொடுத்த வெற்றி தான் உத்தமபுத்திரன். மற்ற ராஜா காலத்து கதைகள் போல இல்லாமல் புதுமைகள் சிலவற்றைக் கொண்டிருந்தது இந்தத் திரைப்படம். அதற்கு முன்பு கதாநாயகர்கள் இரண்டு வேடமிட்டு நடித்திருக்கிறார்கள் என்றாலும் அவர்கள் தனித்தனியே வருவார்கள் போவார்கள். படத்தில் இரண்டு சிவாஜி கணேசன்கள். ஒரு சிவாஜியையும், இன்னொரு சிவாஜியையும் தனித் தனியாகக் காட்டுவதில் என்ன இருக்கப்போகிறது? இருவரையும் ஒரே ஃப்ரேமில் கொண்டு வந்தால் தானே பார்வையாளர்கள் ‘அட!’ என்று பார்ப்பார்கள். அங்கு தான் ஒளிப்பதிவாளர் வின்சென்ட் மாஸ்டர் தன்னை நிரூபித்தார்.

ஒரு நாற்காலியில் சிவாஜி அமர்ந்திருக்க, மற்றொரு சிவாஜி அதே ஃப்ரேமில் அவர் அருகில் வந்து நிற்பதும் பேசுவதும் என அந்தக் காட்சி இந்திய சினிமாவின் பிரபலமான, சாதனை என்று சொல்லத்தக்க, அதற்கு முன்பு பார்த்திராத காட்சி. இதனால் தான் வின்சென்ட், ‘மாஸ்டர்’ என்று அழைக்கப்பட்டிருக்க வேண்டும். இப்போது வரை மாஸ்டர் என்கிற அடைமொழி ஒளிப்பதிவாளர்களில் வின்சென்ட் அவர்களையே குறிக்கிறது.

கருப்பு வெள்ளைப் படங்கள் வந்த காலகட்டத்தில் திரையில் எல்லாவற்றையும் பளிச்சென காட்டிக்கொண்டிருந்தார்கள். ஒரே மாதிரியான ஒளியமைப்பு, கோணங்கள் என வசனங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட படங்களாக இருந்தன. இந்தச் சூழலில் மாஸ்டரின் வருகை, ‘ஒளிப்பதிவென்பது கதையைச் சொல்ல அல்ல, கதையைக் காட்டுவதற்கும் தான்..ஏனெனில் இது காட்சி ஊடகம்’ என்று சொல்ல வைத்தது.

திரைப்படத்தில் ஒளிப்பதிவாளராக சேர முடியும் என்கிற நம்பிக்கை வின்சென்ட் மாஸ்டருக்கு அவருடைய அப்பாவிடமிருந்து வந்திருக்க வேண்டும். மாஸ்டரின் அப்பா கேரள மாநிலம் கோழிகோட்டில் சித்ரா போட்டோ ஸ்டுடியோ வைத்திருந்தார். புகைப்படங்கள் எடுக்கவும், அதனை பிரிண்ட் போடவும் அங்கு கற்றுக் கொண்டார் மாஸ்டர்.  புகைப்படத்தில் இருந்து கற்றுக்கொண்ட ஒளியமைப்பு தான் அவருக்குள் சினிமா ஒளிப்பதிவின் போது காட்சிகளாக வெளிவந்திருக்க வேண்டும். நீர்வண்ண ஓவியங்களை பள்ளிக் காலத்தில் இருந்தே நன்றாக வரையக்கூடியவர் வின்சென்ட் மாஸ்டர்.

கேமராவை ஸ்டுடியோவை விட்டு வெளியே எடுத்துக் கொண்டு போக முடியாத காலகட்டம் இருந்தது. அருவியும், மழையும், குகையும், காடும் எல்லாமே ஸ்டுடியோவுக்குள் தான். கதையும் கூட ஒரே இடத்துக்குள் எடுக்கும்படியாகவே எழுதப்பட்டது. எத்தனை காலம் தான் இப்படியே காட்டிக் கொண்டிருக்க முடியும்? முடிவில் எல்லாத் திரைப்படங்களும் ஒரே மாதிரியான சாயலைக் கொண்டு தானே வெளிவரும்? அதனால் சில ஒளிப்பதிவாளர்கள் துணிச்சலாக கேமராவை வெளியில் கொண்டு வந்தார்கள். அவர்களில் ஒருவராக வின்சென்ட் மாஸ்டர் இருந்தார்.

‘உத்தமபுத்திரன்’ படத்தில் பத்மினி குதிரை வண்டியில் வருகிறபோது, குதிரை தறிகெட்டு ஓடும். அதனை அடக்க வேறொரு குதிரையில் சிவாஜி கணேசன் வருவார். அந்தக் குதிரையின் வேகத்துக்கு கேமரா கூடவே சென்றது. இப்போது அந்தக் காட்சியைப் பார்த்தாலும் அதன் மெனக்கெடல் நமக்குப் புரியும். வின்சென்ட் மாஸ்டர் உதவியாளராக ‘அபூர்வ சகோதரர்கள்’, ‘சந்திரலேகா’ படங்களில் பணியாற்றியவர். இரு படங்களுமே தமிழ் சினிமாவின் குறிப்பிடத்தகுந்தவை. இந்தப் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர் கமல் கோஷ் என்கிற புகழ்பெற்ற ஒளிப்பதிவாளர். இவரிடம் பணிசெய்த அனுபவம் அவருக்கு தொடர்ந்து பலவிதமான பரிட்சார்த்த முயற்சிகளை மேற்கொள்ளத் தூண்டியிருக்கும். பத்தொன்பது வயதில் ஜெமினி ஸ்டுடியோவில் உதவி ஒளிப்பதிவாளராய் நடராஜன் என்பவரிடம் சேர்ந்தபோது அந்த வயதுக்குரிய ஆர்வமும், உழைப்பும் அவரை அடுத்தடுத்தக் கட்டத்திற்கு நகர வைத்தது.

ஒரு படத்தினை அந்தக் கதையின் தன்மையைக் கொண்டு ஒளிப்பதிவு செய்யும் முறையின் முன்னோடி என்றும் வின்சென்ட்டை சொல்லலாம். ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ ‘கிளாசிக்’ தரத்தில் வைக்கக்கூடிய படம். மூன்று முக்கிய கதாபாத்திரங்கள். ஒரு மருத்துவமனை. இருபது நாட்களுக்குள் எடுக்கப்பட்டத் திரைப்படம். பொதுவாக மருத்துவமனை என்பது உளச்சோர்வு அளிக்கக்கூடிய இடம். அங்கு மொத்தப் படமும் எடுக்க வேண்டும் என்றால், அதற்கு வலுவான திரைக்கதை, சரியான நடிகர்கள் இவையெல்லாம் அவசியம். இதோடு முக்கியமாய் ஒளிப்பதிவு. இயக்குநர் ஸ்ரீதர் திரைக்கதைக்கு முக்கியத்துவம் கொடுப்பவர். புதுமையான கதை என்பதை அடிப்படையாகக் கொண்டு திரைக்கதையை சலிப்பில்லாமல், புத்துணர்வுடன் கூடிய திரைக்கதையுடன் சொல்லக்கூடியவர். உத்தமபுத்திரன் படத்திற்கு ஸ்ரீதர் திரைக்கதை வசனம் எழுதியிருந்தார். வின்சென்ட் மாஸ்டர் அதற்கு ஒளிப்பதிவு செய்திருந்தார். இரண்டு பேர் தமிழ் சினிமாவுக்கு புதிய அடையாளத்தைத் தர வேண்டும் என்கிற முடிவோடு  கிளம்பி வந்திருப்பார்களா என்று தெரியவில்லை. ஆனால், இருவருமே அவரவருக்கான படைப்பூக்க அடையாளத்தோடு இருந்தார்கள். இந்த இருவரும் சந்தித்துக் கொண்டதும், தொடர்ந்து படங்களுக்கு பணி செய்ததும் பல படங்களை காலத்தால் நிலைநிறுத்தக்கூடிய படைப்புகளாக மாற்றின. அப்படித் தான் ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ படமும். மருத்துவமனை தான் கதைக்களம் என்றலும், ஒரு இடத்தில் கூட நாம் சோர்வு கொள்ள மாட்டோம். ஒரே மாதிரியான சலிப்பூட்டும் காட்சிகள் கதையிலும், ஒளியமைப்பிலும் இருந்ததில்லை.

uthama puthiran

வின்சென்ட் மாஸ்டரின் ஒளிப்பதிவில் ஈர்க்கப்பட்டவர் ஒளிப்பதிவாளர் ‘வைட் ஆங்கிள்’ ரவிசங்கரன். அவர் மாஸ்டரைப் பற்றி பகிர்ந்து கொண்டார்.

“எனக்கு அப்போது பத்தொன்பது வயது. என் கல்லூரி நண்பன் மூலம் ‘கல்யாணப் பரிசு’ என்கிற திரைப்படம் பற்றியும் அதன் இயக்குநர் ஶ்ரீதர் பற்றியும் கேள்விப்பட்டேன். போய்ப் பார்த்தால் என்னால் அந்த நேர்த்தியை வியக்காமல் இருக்க முடியவில்லை. வழக்கமான திரைப்படங்களை விட அதில் ஏதோ ஒன்று புதிதாக இருக்கிறது என்று எண்ண வைத்த படம். எல்லோரும் ஸ்ரீதரைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்க, நான் படத்தின் ஒளிப்பதிவாளர் யார் என்றுதான் பார்த்தேன். அப்போது தான் வின்சென்ட் பற்றி முதலில் கேள்விப்பட்டேன் என்கிறார்.

ஆனந்த விகடனில் அறந்தை மணியன் என்பவர் 20 ஒளிப்பதிவாளர்களைப் பற்றி “ஒளி ஓவியர்கள்” என்னும் தலைப்பில் எழுதினார். அவர்களைப் பற்றியெல்லாம் தெரிந்து கொண்டபோது, மற்றவர்களை அவர்களின் பெயரை குறிப்பிட்டு சொல்லும்போது, இவரை மட்டும் வின்சென்ட் மாஸ்டர் என்று குறிப்பிட்டார்கள்.

சிவாஜி கணேசன் இரட்டை வேடத்தில் நடித்த உத்தமபுத்திரனில் பத்மினியின் குதிரை வண்டி வேகமாக தறிகெட்டு ஓடும் சமயத்தில் சிவாஜி வந்து காப்பாற்றும் காட்சி, வைட் ஆங்கிளில் முழுவதுமாக வெளிப்புறத்தில் படமாக்கப்பட்டது. சவாலான காட்சியும் கூட. இப்போது அதைப் பார்க்கும்போதெல்லாம் ஆச்சரியப்படுகிறேன்.

தமிழ்த் திரையுலகம் துவக்க காலத்தில் ஊமைப்படங்களாக இருந்தது. பிறகு பாடல்களைக் கொண்ட திரைப்படங்கள் வந்தன. அதன்பின், வசனங்களுக்கு முக்கியத்துவம் அளித்து திரைப்படங்கள் வந்தன. ஆனால் திரைப்படம் என்பது காட்சிகளின் வழியாக கதை சொல்வது என்பதை தன் திரைப்படங்களின் வழியாக உணர்த்தியவர் ஶ்ரீதர். உத்தமபுத்திரன் படத்திலேயே வசனங்களைக் குறைத்து காட்சிகளாக காட்டினார். இவரோடு வின்சென்ட்டும் ஒளிப்பதிவு இயக்குநராக இணைந்து கொள்ள, அத்திரைப்படங்கள் மிக சிறப்பாக மக்களால் கொண்டாடப்பட்டன.

நெஞ்சில் ஓர் ஆலயம் 19 நாட்களில் எடுத்து முடிக்கப்பட்ட படம். சொன்னது நீ தானா பாடல் ஒரே அறையில் எடுக்கப்பட்ட பாடல். அந்தப் பாடல் காட்சியில் மட்டும் 58 கட்கள் இருக்கும். அப்படியென்றால் அவர் எவ்வளவு யோசித்திருக்க வேண்டும்.

ஜிம்மிஜிப் இல்லாத அந்த காலத்தில் மீண்ட சொர்க்கம் திரைப்படத்தில் பத்மினியின் நடனத்தை மேலிருந்து டாப் ஆங்கிளில் எடுப்பதற்காக கயிற்றில் கேமரா கட்டி clockwise anticlockwise சுற்றி படமெடுத்தார்கள்.

ஜெமினி கணேசன் மாடிப்படியில் ஏற, கேமராவை இயக்கியவர் மாடிப்படி வளைவில் சறுக்கி இறங்கி படமாக்கப்பட்டிருக்கும்.

‘தேன்நிலவு’ திரைப்படத்திற்காக, நடிக்கும் அனைவரையும் அவர்கள் குடும்பத்தினரோடு அழைத்து சென்று படப்பிடிப்பு நடத்தப்பட்டது. மொத்தமே நான்கு லென்ஸ்கள் தான் இருக்கும். வின்சென்ட் பெரும்பாலும் வைட் ஆங்கிள் பயன்படுத்தினார். அந்த காட்சியின் இடத்தை பார்வையாளர்களுக்கு நன்கு பதிய வைத்து விட்டு பிறகு குளோஸப் செல்வார்.

பாடலைப் படமெடுப்பதில் மாஸ்டருக்கு அப்படியொரு ஆர்வம். ஒரு பாடலைப் போல மற்றொன்றை அவர் எடுப்பதில்லை. இதை நான் சவாலாகவே சொல்ல முடியும். ‘நாளாம் நாளாம் திருநாளாம்’ பாடல் எல்லாம் பார்ப்பதற்கு எத்தனை அற்புதமானது!    அவர் தன்னைப் புதுப்பித்துக் கொண்டேயிருந்தார். எத்தனை படங்கள் பார்த்தாலும் வின்சென்ட் மாஸ்டரின் படங்கள் மட்டும் தனியாகத் தெரியும். அது தான அவரது சிறப்பே” என்கிறார் ‘வைட் ஆங்கிள்’ ரவிசங்கரன்.

sivaji ganeshan

கதாபாத்திரத்தின் மனநிலையை வெளிச்சமும் நிழலுமாக காட்டிவிடக்கூடிய யுத்தியினையும், நேர்த்தியையும் வின்சென்ட் மாஸ்டர் ஒளிப்பதிவு செய்த அநேகப் படங்களில் பார்க்கலாம். ‘எங்கிருந்தாலும் வாழ்க’,(நெஞ்சில் ஓர் ஆலயம்), ‘மயக்கமா கலக்கமா (சுமைதாங்கி) ‘ஓடும் நதியினிலே’ (காத்திருந்த கண்கள்), ‘கண்ணிலே நீர் எதற்கு’ (போலீஸ்காரன் மகள்), பூஞ்சிட்டு கன்னங்கள் (துலாபாரம்) பாட்டினைப் பார்க்குந்தோறும், வியக்காமல் இருக்கவே முடியாது.

மலையாள எழுத்தாளர் வைக்கம் முகம்மது பஷீர் ‘நீல வெளிச்சம்’ சிறுகதையைத் தழுவி ‘பார்கவி நிலையம்’ என்கிற பெயரில் 1964ல் படம் இயக்கினார் வின்சென்ட் மாஸ்டர். இது இவரது இயக்கத்தில் வெளிவந்த முதல் படம். இந்தப் படத்தின் கதையை அவர் தேர்ந்தெடுத்தக் காரணமே இதில் ஸ்பெஷல் எஃபக்ட்ஸ்கள் பயன்படுத்தலாம் என்கிற ஆர்வம் தான். எழுத்தாளர் ஒருவர் தங்கியிருக்கும் வீட்டில் ஒரு பெண்ணின் ஆவியும் குடிகொண்டிருக்கிறது என்பது தான் கதையின் ஒன்லைன். இதை வைத்துக் கொண்டு இருளும் வெளிச்சமுமாக ஒளியமைப்பில் ஒரு திரைக்கதை எழுதியிருப்பார் மாஸ்டர்.

ஸ்பெஷல் எஃபக்ட்ஸ் மீது இவர் கொண்ட ஆர்வத்தினால் இவரது பல படங்களில் கனவுக்காட்சிகள் இடம்பெறும். காட்சிகள் மூலம் அரூபமான பலவற்றைக் காட்டுவதில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார்.  இதற்கு சிறந்த உதாரணமாக 1969ல் வெளிவந்த நதி என்கிற மலையாளப்படத்தினை சொல்லமுடியும்.

கருப்பு வெள்ளை காலகட்டத்தில் இருந்து வண்ணப் படங்களுக்கு மாறுகிறபோது வெளிச்சத்தைக் கட்டுப்படுத்துவதற்கு பல ஒளிப்பதிவாளர்களும் பல தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தினார்கள்.  வின்சென்ட் மாஸ்டர் ஒரு  நேர்காணலில் சொல்கிறார், “நான் பகலில் படம்பிடிக்க மாட்டேன். சூரியன் மறைந்ததும் லைட்டுகளைப் பயன்படுத்தி எனக்குத் தேவையானதை எடுத்துக் கொள்வேன்” என்கிறார். இதற்கு உதாரணமாக ‘நதி’ மலையாளப் படத்தில் ‘ஆயிரம் பாதசரங்களில் ஆலுவா’ பாடலைப் பார்க்கலாம். சூரிய உதயத்தை ஒரு நதிக்கரையில் எடுத்திருப்பார். ஆனால் முழுவதும் இரவில் எடுக்கப்பட்ட காட்சி அது.

தமிழின் முதல் ஈஸ்ட்மேன் திரைப்படம் ‘காதலிக்க நேரமில்லை’. இதற்கு ஒளிப்பதிவு வின்சென்ட் மாஸ்டர் தான். வெளிப்புறக் காட்சிகளுக்கு முக்கியத்துவம் தந்து எடுக்கப்பட்ட படம். இந்தப் படத்தின் கதையைப் போலவே ஒளிப்பதிவிலும் வியக்க வைக்கிற ஒரு திரைப்படம்.

‘நிழலாட்டம்’ படம் 1970 ஆம் வெளிவந்தது. மலையாளப்படம். பிரேம் நசீர் நடித்தது. இதற்கு கதை திரைக்கதை எழுதியவர் எம்.டி வாசுதேவன் நாயர். இயக்கமும் ஒளிப்பதிவும் வின்சென்ட் மாஸ்டர். இன்றளவும் இந்தப் படத்தின் ஒரு காட்சி பேசப்படுகிறது. பிரேம் நசீர் இந்தப் படத்தில் தன் சொத்துக்களை எல்லாம் இழப்பார். வீடும் பறிபோகும். மாளிகை போன்ற வீட்டில் இருந்து பொருட்களை எல்லாம் வண்டியில் எடுத்துப் போவார்கள். இந்தக் காட்சி வின்சென்ட் மாஸ்டர் எனும் திறமையான இயக்குநரின் மேன்மையையும், அவருக்குள் இருந்த ஒளிப்பதிவாளரையும் ஒரு சேரக் காட்டியது. வண்டியில் உள்ள பொருட்களுக்கு மேல் ஒரு கண்ணாடியை வைத்திருப்பார்கள். வண்டி நகர்ந்து போகும். பிரேம்நசீர் மாளிகையின் முன்பு தனியாக நின்றிருப்பார். நீளமான ஷாட் அது. வண்டி நகர்ந்து கொண்டிருக்க, பின்னணியில் பிரேம் நசீர் நிற்க, கண்ணாடியில் மாளிகை தலைகீழ்த் தோற்றமாய்த் தெரியும். பிரேம் நசீரை விட்டு சொத்துக்கள் யாவும் தூரம் தூரமாய் செல்கின்றன என்பதை உணர்த்தும் காட்சி இது.

‘நீலக்குயில்’ (1954) படத்திற்கு ஒளிப்பதிவு செய்தவர் வின்சென்ட் மாஸ்டர். அதற்கு முன்பு வரை மலையாள சினிமா ஸ்டுடியோவுக்குள் இயங்கியது. முதன்முதலாக கேமராவை வெளிப்புறத்துக்கு எடுத்து வந்த படம் ‘நீலக்குயில்’. இந்தப் படம் வெளிவந்தபோது மாத்ருபூமி இதழ் இப்படி எழுதியிருந்தது “இந்தப் படம் கேரளாவில் எடுக்கப்பட்டது தான் என்பது ஊர்ஜிதம் செய்ய அநேகமான காட்சிகள் உண்டு. துளசிச் செடியும், அதன் பின்னே எரியும் விளக்கும், மீனவர்களும், அவர்களின் வலைகளும், ஒடங்களும் என அசல் கேரளாத்தனத்தைக் கொண்டு வந்த படம் இது..அற்புதமான காட்சியமைப்புகள்” என்று பாராட்டியிருந்தது. 

uthamaputhiiran

வின்சென்ட் மாஸ்டரிடம் பணி செய்த ஒளிப்பதிவாளர் சந்திரபோஸ் அவருடன் பணியாற்றிய அனுபவத்தையும் அவரது ஒளிப்பதிவு குறித்தும் பகிர்ந்து கொள்கிறார்.

மாஸ்டர் ஒளிப்பதிவு இயக்குநர் (Director of Photography). அப்போது இந்தியாவில் இருவர் மட்டுமே அப்படியிருந்தனர். ஒருவர் வின்சென்ட் மாஸ்டர், மற்றொருவர் மும்பையைச் சேர்ந்த பாபுபாய் மிஸ்திரி. ஒளிப்பதிவு இயக்குநர் என்பவரிடம் ஒட்டுமொத்த லைட்டிங், ஃப்ரேம்ஸ் என்று அத்தனையும் அவர் பொறுப்பில் இருக்கும். ஆனால் ஆபரேட்டிவ் கேமராமேன் என்பவர் கேமராவை இயக்குபவர். அப்போதைய திரைப்படங்களில் ஒளிப்பதிவு இயக்குநர், ஒளிப்பதிவு என தனித்தனியாக டைட்டில் கார்டில் வரும், அப்படி வின்சென்ட் ஒளிப்பதிவு இயக்குநராக இருந்த காலத்தில் ஆபரேடிவ் கேமராமேனாக இருந்தவர்  P.N. சுந்தரம், பிறகு பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தார்.

‘மயக்கமா கலக்கமா’, ‘மனிதன் என்பவன் தெய்வமாகலாம்’ பாடல்களைப் பார்த்தால் அவரை வியக்காமல் இருக்க முடியாது. இதற்கெல்லாம் துல்லியமாகத் திட்டமிடத் தெரியவேண்டும். Back lighting கற்றுக்கொள்ள விரும்புபவர்கள், இந்தப் பாடல்களைப் பார்க்க வேண்டும்.

எங்கள் மாஸ்டருக்கு உலகத்தில் உள்ள அத்தனை கேமரா தொழில்நுட்பமும் தெரிந்தாக வேண்டும். தேடித் தேடி உலகத் திரைப்படங்களைப் பார்க்கக்கூடியவர். அதில் அவரை ஈர்க்கக்கூடிய ஒளியமைப்பையும், கம்போசிஷனையும் முயற்சித்துப் பார்க்க வேண்டும் என்று நினைப்பார். அதற்காக மெனக்கெடுவார். அவருக்கு அமெரிக்க ஒளிப்பதிவாளர்களில் ராபர்ட் சர்டீஸையும், மிகப்பிடிக்கும். இவர் The Graduate, Ben HUR படத்தின் ஒளிப்பதிவாளர். அவருக்குப் பிடித்த மற்றொரு கேமராமேன் டென் கமான்ட்மென்ட்ஸ் ஒளிப்பதிவு செய்த லாயல் கிரிக்ஸ், தமிழில் மார்கஸ் பர்ட்லியைப் பிடிக்கும்.

‘வசந்த மாளிகை’ படத்தில் பிரபலமான காட்சி ஒன்று உண்டு. வாணிஸ்ரீ ஒரு அறைக்குள் போவார். அங்கு திரும்பிய பக்கமெல்லாம் கண்ணாடிகள் இருக்கும். ஒரு சின்ன தவறு செய்தாலும் கேமரா கண்ணாடியில் தெரிந்துவிடும். இன்னும் பல சிக்கல்கள் உண்டு. ஆனால், எங்கள் மாஸ்டர் எப்போதுமே எதையும் திட்டமிட்டத் துல்லியத்துடன் செய்வார். ஒரு இயக்குநர் எந்த மாதிரியான காட்சி எடுக்கச் சொன்னாலும், கஷ்டம்…முடியாது என்று சொல்லவே மாட்டார். முடியாது என்று சொல்வதற்கு அவர்கள் நம்மை அழைக்கவில்லை. இயக்குநர் சொல்வதை சாத்தியப்படுத்திக் காட்ட வேண்டும் என்பார். அவரும் ஒரு இயக்குநர் என்பதால், அவருக்கு ஒரு இயக்குநரின் பார்வை புரியும்.

 ‘துலாபாரம்’ திரைப்படத்தில் வரும் ‘பூஞ்சிட்டு கன்னங்கள்’ பாடல் ஒரு வீட்டிற்குள் எடுக்கப்பட்டது. அது கதைப்படி மிக ஏழ்மையான வீடு. சிறியதும் கூட. இந்தப் படத்திற்கு இயக்குநரும் வின்சென்ட் மாஸ்டர் தான், சாரதா குழந்தையைத் தூக்கிக் கொண்டு நடந்து வருவார். இருட்டில் அந்தக் குழந்தையை வைத்திருப்பதே தெரியாது. சாரதா மீது மட்டுமே வெளிச்சம் இருக்கும். இருட்டிலிருந்து வெளிச்சத்துக்கு வருகையில், குழந்தை தெரியும். அது பார்ப்பதற்கு மிக அருமையான காட்சி. இதற்காக ஒரு உறியை கூரையில் தொங்கவிட்டு அதற்குள் லைட் வைத்திருந்தார்கள்.  ஐம்பதுகளில் ஃபாக் ஃபில்டர் (Fog Filter) வரவில்லை. அதனால் கண்ணாடியில் வேசலின் (vaseline) டச் செய்து எடுத்திருப்பார்கள்.. வேசலின் ஒரு ரிஃப்ளெக்டிவ் மெட்டீரியல், அதில் லைட் பட்டதும் ரிஃப்ளெக்ட் ஆகும். இதை இன்ஸ்பைரேஷனாக கொண்டு பல படங்களில் வெவ்வேறு ஒளிப்பதிவாளர்கள் ஒளிப்பதிவு செய்தார்கள். எடுத்துக்காட்டாக சொல்ல வேண்டுமென்றால், கமல்ஹாசன் நடித்த, பி.சி ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்த,  ‘நாயகன்’ படத்தின் சில காட்சிகளைச் சொல்லலாம். கமல்ஹாசன் தனது குடும்பத்தோடு கொசுவலைக்குள் படுத்திருக்கும் காட்சி ஒரு சிறு உதாரணம்.

மாஸ்டருக்கு மூவ்மெண்ட்ஸ் மிகப்பிடிக்கும். கேமராவை ஒரே இடத்தில் வைத்து படம்பிடிப்பது பிடிக்காது. “நெஞ்சில் ஓர் ஆலயம்’ படம் முழுவதும் ஒரு மருத்துவமனை எடுக்கப்பட்டது. எத்தனை மூவ்மென்ட்டுகள் அந்தப் படத்தில் இருக்கிறது என்று பாருங்கள்..அசந்து போவீர்கள்.  ‘தேன் நிலவு’ படம் காஷ்மீரில் எடுக்கப்பட்டது. வண்ணமயமான காஷ்மீரை கருப்பு வெள்ளையில் பார்த்தபோதும் அழகாகத் தெரிந்தது.  ஜெமினி கணேசனும், வைஜெயந்தி மாலாவும் ‘ஓஹோ எந்தன் பேபி’ பாடலில் surfing போவதைக் காட்டியது எல்லாம் எத்தனை அரிதான காட்சிகள்!

மாஸ்டரைப் பொறுத்தவரை அவர் தயாரிப்பாளருக்கு சாதகமாகவே யோசிப்பார். பட்ஜெட்டுக்குள் அவரால் நிறைவான காட்சியமைப்புகளைத் தரமுடியும். அதே நேரம் கதையின் போக்கினை ஒட்டியே யோசிப்பார். நான் அவரிடம் பணியாற்றும்போது பல ‘மினியேச்சர்’ காட்சிகளை எடுத்திருக்கிறோம். ஒரு விமானம் பறக்கையில் அதில் இருந்து தெரியும் நகரம் எப்படியானதாக இருக்கும் என்பதற்கு நாங்கள் ஒரு மேஜையில் ஒரு நகரத்தை மினியேச்சர் செய்து காட்டியிருக்கிறார். உங்களால் அது ‘செட்’ என கண்டுபிடிக்கவே முடியாது. 

விமானம் பறப்பது போன்ற காட்சி, சுவர் உடைந்து தண்ணீர் பாய்ந்து வருவது போன்ற காட்சிகளுக்கு ஆர்ட் டைரக்டரை எதிர்பார்க்காமல் மினியேச்சர் நாங்களே தயார் செய்வோம். மினியேச்சரில் நார்மல் ஸ்பீடில் ஷூட் செய்ய முடியாது. அதனால் எந்த லென்ஸ், எத்தனை லென்ஸ் பயன்படுத்தப் போகிறோமென்பதை முடிவு செய்து அந்தக் காட்சியை ஷுட் செய்து 2டியில் மிக்ஸ் செய்வோம், உதாரணமாக 24 லென்ஸ் என்றால் 48 ஃபிரேமில் ஷூட் செய்வோம். அது திரையில் பிரம்மாண்டமாகத் தெரியும். எல்லாமே கணக்கிடுதல்தான்.

Thulabaaram

வின்சென்ட் மாஸ்டர்

ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியின் இன்ட்டீரியர் முழுவதும் ஹாலிவுட் ஸ்டைலில் வின்சென்ட் மாஸ்டர்தான் டிசைன் செய்தார். தண்ணீருக்குள் எடுக்கிற under water photographyக்கான தொழில்நுட்பத்தை ராமோஜி ராவ் ஸ்டுடியோவில் செய்து கொடுத்தவரும் மாஸ்டரே.

அவருடைய படத்தில் எந்த உச்ச நடிகர் நடித்தாலும் அதைப் பற்றி அலட்டிக் கொள்ளாதவர். அந்தக் கதைக்கு அவர்கள் இப்படித்தான் ஒப்பனை செய்தாக வேண்டும் என்று எதிர்பார்த்தால், அப்படித்தான் அவர்கள் வரவேண்டும். ஒரு உச்ச நடிகருடன் மாஸ்டருக்கு சண்டையெல்லாம் வந்திருக்கிறது. ‘என்னோட வேலையில யாரும் தலையிடக்கூடாது’ என்று கறாராகச் சொல்லிவிடுவார். எங்க வீட்டு பிள்ளை படத்தில் பயப்படும் எம்ஜிஆர் கதாபாத்திரத்துக்கு ஒரு கேமரா ஆங்கிளும், தைரியமான எம்ஜிஆருக்கு வேறொன்றையும் வைத்திருப்பார். இதைக் கவனிப்பவர்கள் புரிந்து கொள்வார்கள்.

எனக்கு அவருடன் பணி செய்ததில் மிகப்பிடித்த படம் ‘ஆகாச வீதியில்’. நாகார்ஜுனா நடித்த தெலுங்கு படம். குலு மணாலியில் விமானம் விபத்துக்குள்ளாவது போன்ற காட்சி. அதை ஸ்டூடியோவில் ஷூட் செய்தனர். ஸ்நோமவுண்ட்டன் செட் போடுவது எப்படி, அதில் லைட்டிங் செய்வது எப்படியென்று அதில் தான் கற்றுக் கொண்டார்.

மாஸ்டர் ஹாலிவுட் படங்களின் வீடியோக்களை வாங்கிப் போட்டுக் காண்பித்து கிளாஸ் எடுப்பார்.

ஒரு கேமராமேன் ஹீரோயினை ரசிக்க பண்ண வேண்டும், அப்போதுதான் ரசிகர்களுக்குப் பிடித்தமாதிரி அவர்களை திரையில் மிக அழகோடு காண்பிக்க முடியும் என்பதெல்லாம் அவரிடம் கற்றுக் கொண்டது.

ஒரு சினிமாட்டோகிராஃபருக்கு மேக்கப் சென்ஸ் தெரியவேண்டும். யாராக இருந்தாலும் அவர்களின் தோல் நிறத்துக்கு ஏற்றவாறு தான் ஒப்பனை செய்து கொள்ள வேண்டும் என்று சொல்லிக் கொண்டே இருப்பார். அப்போதெல்லாம் முதல் பட்டன், மூன்றாவது பட்டன் என்பார்கள். அப்படியென்றால், நாயகியின் உடையில் முதல் பட்டன் வரை ஷாட் அமைய வேண்டும். அது க்ளோஸ் அப் காட்சி.

அவரிடமிருந்து கற்றுக்கொள்ள எங்களுக்கு ஏராளம் இருந்தது. முக்கியமாக ஒழுக்கம். தொழில் என்று வந்துவிட்டால, அங்கு அவர் வேறு எதிலும் மனதை செலுத்த மாட்டார். “செருப்பைத் திருடிட்டு செருப்பாலேயே அடி வாங்கக் கூடாது. இங்க உனக்கு தேவையானதும் கிடைக்கும். தேவையில்லாததும் கிடைக்கும். உனக்குத் தேவையானதை மட்டும் எடுத்துக் கொள்” என்று மாஸ்டர் கூறுவார்.

எங்களையும் ஒழுக்கத்துடன் இருக்கவே பயிற்றுவித்தார். சினிமாவுக்கு கற்பனையறிவு எத்தனை தேவையோ, தொழில்நுட்ப வல்லுனர்களுக்கு கணக்கு அறிவு அவ்வளவு முக்கியம். எல்லாமே கணக்குகள் தான். இதனைத் துல்லியமாகத் தெரிந்து கொள்பவர்கள் சிறந்த ஒளிப்பதிவாளர் ஆவார்கள். விதிமுறைகளை உடைக்க, முதலில் அதைக் கற்றுக் கொள்ள வேண்டும் வேண்டும் இல்லையா.அது போல, ஒளிப்பதிவின் எல்லைகளை விரிவாக்கம் செய்ய முதலில் கணக்குகளைக் கற்றுக் கொள்ள வேண்டும்.அதை  எங்கள் மாஸ்டர் திறம்பட செய்தவர்” என்கிறார் சந்திரபோஸ்.

Wide Angle Ravi Shankar

வைட் ஆங்கிள் ரவிசங்கரன்

chandrabose

சந்திரபோஸ்

தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி என தொடர்ந்து படங்ளை இயக்கவும், ஒளிப்பதிவும் செய்தவர், தேசிய விருதுகள் , ஃபில்ம் பேர் விருதுகள், வாழ்நாள் சாதனையாளர் விருது என கௌரவமிக்க பலவற்றைப் பெற்றிருக்கிறார்.

வாழ்நாளின் இறுதிவரை எதையேனும் தெரிந்து கொள்ளும் ஆர்வத்தோடு இருந்திருக்கிறார்.

காட்சிகளைத் துண்டுகளாக்கி அதனை நமக்கு ஒரு பெரும் உலகமாகப் படித்துத் தருபவர்கள் ஒளிப்பதிவாளர்கள். எதை நாம் பார்க்க வேண்டும், எப்படிப் பார்க்க வேண்டுமென்று கதைக்கு பின் இருந்து தீர்மானிப்பவர்கள் அவர்கள். இன்று தொழில்நுட்பம் விஸ்வரூப வளர்ச்சி கண்டிருக்கிறது. ஆனாலும் இதில் பரிட்சார்த்த முயற்சியும் அர்ப்பணிப்பும் கொண்டும் உழைத்தவர்களே முன்னோடிகளாக இருக்கின்றனர். நாம் வின்சென்ட் அவர்களை அந்தத் தர வரிசையில் முதன்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். அப்படி அடையாளம் கண்டதின் அறிவிப்பாகத் தான் ‘மாஸ்டர்’ என்கிற மரியாதை  அலோசியஸ் வின்சென்ட் என்னும் ஒளிப்பதிவாளருடன் நிரந்தரமாகத் தங்கிவிட்டது. 

Author Image

ஜா.தீபா

எழுத்தாளர். ‘மேதைகளின் குரல்கள்’ ‘கறுப்புத் திரை’ போன்ற திரைப்படம் சார்ந்த புத்தகங்களையும், “நீலம் பூக்கும் திருமடம்’, ‘மறைமுகம்’ சிறுகதைத் தொகுப்பும் கவனம் பெற்றவை. தொலைகாட்சித் தொடர்களுக்கு திரைக்கதைகள் எழுதி வருகிறார்

Author Image

அகிலா ஸ்ரீதர்

மொழிபெயர்ப்பாளர். உதவி இயக்குநர். எழுத்தாளர். ஆங்கிலப் படங்களுக்கான வசனங்களை சப்டைட்டில் செய்யும் பணியிலும் இருக்கிறார்.

About The Author

The Talkie

The Talkie

See author's posts

Next Post
Trend_Kottai

ட்ரெண்டு கொட்டாய் 02

Please login to join discussion

Archives

  • Trending
  • Comments
  • Latest
Thug_Life_

Thug Life – ஒரு பார்வை

June 6, 2025
AMADEUS திரைக்கதை

AMADEUS திரைக்கதை

March 15, 2025
start camera

ஸ்டார்ட் கேமரா! வின்சென்ட் மாஸ்டர் – 01

March 19, 2025
Irunda-Pakkam

தொழில்நுட்பத்தின் இருண்ட பக்கங்கள்: திரைப்படங்கள் சொல்லும் உண்மை.

March 16, 2025
Thug_Life_

Thug Life – ஒரு பார்வை

11
rasigamagajanangale

ரசிக மகா ஜனங்களே

7
gurudutt-02

குருதத்தின் ப்யாஸா- உயிர்த்தெழுந்த தேவதை        

5
start camera

ஸ்டார்ட் கேமரா! வின்சென்ட் மாஸ்டர் – 01

4
table top-4-5

டேபிள் டாப் 04 & 05

January 24, 2026
bella darr

பேலா டார் – காட்சியை அனுமதித்தவர்

January 24, 2026
trend-kottaiye-11

ட்ரெண்டு கொட்டாய் 11 -நான் (திரை) காவிய நாயகன்

January 24, 2026
table top-3

டேபிள் டாப் 03

January 24, 2026
The Talkie

சினிமா அற்புதமான ஊடகம். இதனை அறிந்து கொள்ளவும், ரசிக்கவும் உருவாக்கப்பட்டிருக்கிற இணைய இதழ் இது. மேதைகளின் நேர்காணல்கள், திரைக்கதைகள், வெவ்வேறு மொழித் திரைப்படங்கள், ஆளுமைகள், திரைப்படப் புத்தகங்கள் , சினிமா ரசனை என சினிமா உலகத்தோடு இணைந்திட எங்களுடன் இணைந்திடுங்கள்.

Categories

  • I CALL THE SHOTS
  • ஆளுமைகள்
  • இந்தியத் திரைப்படங்கள்
  • உரையாடல்
  • உலகத் திரைப்படங்கள்
  • ஓடிடி திரை
  • கட்டுரைகள்
  • குரு தத் 100
  • டேபிள் டாப்
  • ட்ரெண்டு கொட்டாய்
  • தமிழ்த் திரைப்படங்கள்
  • திரை புத்தகம்
  • திரைக்கதைகள்
  • தொடர்கள்
  • ஸ்டார்ட் கேமரா

Site Navigation

  • About Us
  • Terms and Conditions
  • Privacy Policy
  • Returns and Cancellation
  • Shipping Policy
  • FAQ
table top-4-5

டேபிள் டாப் 04 & 05

January 24, 2026
bella darr

பேலா டார் – காட்சியை அனுமதித்தவர்

January 24, 2026
trend-kottaiye-11

ட்ரெண்டு கொட்டாய் 11 -நான் (திரை) காவிய நாயகன்

January 24, 2026

© 2026 Thetalkie - All rights reserved

Welcome Back!

Sign In with Google
OR

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Sign Up with Google
OR

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • thetalkie
  • ஆளுமைகள்
  • திரைக்கதைகள்
  • உரையாடல்
  • கட்டுரைகள்
    • இந்தியத் திரைப்படங்கள்
    • உலகத் திரைப்படங்கள்
    • தமிழ்த் திரைப்படங்கள்
    • ஓடிடி திரை
  • தொடர்கள்
    • ட்ரெண்டு கொட்டாய்
    • திரை புத்தகம்
    • ஸ்டார்ட் கேமரா
    • I CALL THE SHOTS
    • குரு தத் 100
    • டேபிள் டாப்
  • தொடர்பு
  • Login
  • Sign Up
  • Cart

© 2026 Thetalkie - All rights reserved

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?