குண்டக்கல் ஸ்டேஷனில் மெட்ராஸ் மெயில் வந்து நிற்கிறது. அதில் பயணம் செய்துகொண்டிருந்த அப்போதைய யூனியன் உள்துறை அமைச்சரான ராஜாஜியை சந்தித்து வாழ்த்து தெரிவிக்க பெருந்திரளாக மக்கள் கூடியிருந்தனர். அவரும் முகமலர்ச்சியோடு அவர்களிடம் பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது மற்றொரு பிளாட்ஃபாரத்தில் ரயில் வந்து நிற்க, ஒட்டுமொத்த மக்கள் கூட்டமும் ராஜாஜியிடமிருந்து அதை நோக்கி சென்று விட, அதிர்ச்சியடைகிறார் ராஜாஜி. அவருக்கு ஒன்றுமே புரியவில்லை. ரயில்நிலைய கார்டை அழைத்து விசாரிக்க, ‘பாதாள பைரவி’ படத்தின் நூறாவது நாள் கொண்டாட்டவிழா பெல்லாரியில் நடக்க இருப்பதாகவும், அதற்காக அதில் நடித்த நடிகர், நடிகை உள்ளிட்ட படக்குழு அதில் பயணிப்பதாகவும், அவர்களைப் பார்க்க எல்லாரும் செல்கிறார்கள் என்றும் சொல்கிறார். அந்த ரயில் கிளம்ப இருப்பதால், தன்னையும் அவர்களைப் பார்க்க அனுமதிக்குமாறும் வேண்டி விரைந்து செல்கிறார் அந்த ரயில் கார்டு. ஒரு திரைப்படத்தின் தாக்கம் மக்களிடம் எப்படியிருக்கிறது என்று வியந்து நின்றார் ராஜாஜி.
அப்படி உள்துறை அமைச்சரையே யோசிக்க வைத்து மக்களை ஈர்த்த “பாதாள பைரவி” திரைப்படத்தை இயக்கியவர் கே.வி. ரெட்டி, தமிழ்நாட்டிலும், ஆந்திராவிலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குடும்பமாக, கூட்டம் கூட்டமாக, வெளியூர்களிலிருந்தெல்லாம் ரயிலில் வந்து ‘பாதாள பைரவி’ படத்தைப் பார்த்தார்கள். 200 நாட்கள் திரையரங்கில் ஓடி அந்தக்கால மதிப்பில் பல கோடிகளை வசூல் செய்து சாதனை படைத்த இத்திரைப்படம் தெலுங்கு சினிமாவில் ஸ்பெஷல் எஃபெக்ட் காட்சிகளுக்கு ஓர் ஆரம்பமாக அமைந்தது.
இந்தத் திரைப்படத்தின் ஒளிப்பதிவு இயக்குநர் மார்கஸ் பார்ட்லே. அதுவரை புத்தகங்களில் மட்டுமே படித்திருந்த மந்திரவாதியின் மாயாஜாலங்களை காட்சிகளாக பெரிய திரையில் பார்த்ததும் மக்கள் வியந்தனர். அரண்மனை பறந்து போவது, மந்திரவாதி மறைந்து போவது, நாயகன் நெருப்பில் குதிப்பது என பல தந்திர காட்சிகளை மிக நுட்பமாக மார்கஸ் பார்ட்லே படமாக்கியிருந்தார். ஸ்டுடியோவுக்குள் படப்பிடிப்புத் தளத்தில் நிலாவை ஒரு திரைச்சீலையில் வட்டமாக வரைந்து, அதற்கேற்ப ஒளியமைத்து, திரைச்சீலையின் நிழல் நடிகர்களின் மேல் விழாமல் நிலவொளி காட்சிகளை பகலிலேயே அவர் எடுத்திருந்தார். பார்லேவுக்கு நிலாவை மிகப்பிடிக்கும் போலிருக்கிறது. அவர் ஒளிப்பதிவு செய்த அத்தனைப் படங்களிலும் நிலாவின் பின்னணியில் ஒரு பாடலாவது அமையாமல் இருக்காது. எல்லா நிலாக்களுமே மார்க்ஸ் பார்ட்லே படைத்த நிலாக்கள்.

மார்க்ஸ் பார்ட்லேயையும் விஜயா வாஹினி தயாரிப்பு நிறுவனத்தையும் பிரிக்க முடியாது என்கிற ரீதியில் அந்த நிறுவனத்தின் படங்களுக்கு மார்க்ஸ் பார்ட்லே தொடர்ந்து ஒளிப்பதிவு செய்தார். விஜயா வாஹினி புதுமையான கதைகளையும், ஆங்கிலப் படங்களின் தாக்கத்தையும் தமிழுக்குக் கொண்டு வந்தவர்கள். இந்த விதவிதமான படங்கள் மார்க்ஸ் பார்ட்லேவுக்கும் உற்சாகத்தைத் தந்திருந்தது.
இதற்கு ஒரு உதாரணமாக ‘மாயாபஜார்’ படத்தை சொல்லலாம். மாயாபஜார் கதை சாதாரணமானது. மகாபாரதத்தில் உள்ள கிளைக்கதைகளில் ஒன்று, அதிலும் திரைப்படத்துக்காக கற்பனை சேர்க்கப்பட்டது. மாயா பஜாருக்கு முன்பும் இப்படியான புராணக் கதைகள் வந்திருக்கின்றன. ஆனால், இன்றளவும் இந்தப் படம் கிளாசிக் வரிசையிலும்’ பொழுதுபோக்குப் படமாகவும் இருப்பதற்கு காரணம், படம் எடுக்கப்பட்ட விதம்தான். ஒவ்வொரு காட்சியையும் நம்மால் ரசித்து சொல்ல முடியும். ஒரு பேழையைத் திறந்தால் யார் அதை திறக்கிறார்களோ அவர்களுக்கு பிரியமானவர்கள் அதில் தெரிவார்கள் என்கிற கற்பனையை நமக்குக் காட்டியது அத்தனை ரசனை மிக்கதாய் இருக்கும். கிருஷ்ணன் அந்தப் பேழையின் முன் நிற்கையில் அவருக்குப் பிரியமானவர் யாராக இருப்பார் என்று எல்லோருக்கும் எதிர்பார்ப்பிருக்கும். கிருஷ்ணர் நிற்க, அந்தப் பேழையில் சகுனி தெரிவார். இது கதையில் இடம்பெற்ற பகுதி. அந்த சகுனி எப்படித் தெரிய வேண்டும் என்று முடிவெடுத்தது பார்ட்லே. சகுனிக்கென ஒரு ஒளியமைப்பு செய்திருப்பார். ஒரு ஒளியமைப்பின் வழி அந்தக் கதாபாத்திரத்தின் தன்மையை சொல்லிவிட முடியும் என்று யோசித்த முன்னோடி மார்கஸ் பார்ட்லே.

மகாபாரதக் கதையின் அபிமன்யு – வத்சலா திருமணப்பகுதியை மட்டுமே மையக்கதையாக கொண்ட இத்திரைப்படத்தில் ஒரு தடாகத்தின் கரையில் அமர்ந்திருக்கும் சிறுவயது வத்சலாவின் முகம் தண்ணீரில் காட்டப்பட, நீர் கலங்கி பின் வளர்ந்த வத்சலாவாக காண்பிக்கப்படும் சாவித்திரி அறிமுக காட்சியின் ஒளியமைப்பு அபாரமாக இருக்கும்.
இன்றைய டிஜிட்டல் யுகத்திலும் உணவு புகைப்படங்களை ரீல்களாக போடும்போது, பின்னணியில் ஒலிப்பது, ‘கல்யாண சமையல் சாதம், காய்கறிகளும் பிரமாதம்” என்கிற பாடல்தான். கடோத்கஜனாக பெரிய உருவத்துடன் இருந்தாலும் குழந்தை போன்ற முக அமைப்பில், குறும்புத்தனமான உடல்மொழியில் எஸ்.வி.ரங்காராவ் கல்யாணத்திற்கென்று சமைத்து வைக்கப்பட்ட அத்தனை உணவுகளையும் பார்த்து ரசித்து பாடியபின் தன் உருவத்தை பெரிதாக்குவார். அவர் வாயைத் திறந்தால் லட்டுகள் வாய்க்குள் போய் விழும். இதை மக்கள் ஆர்ப்பரித்து பார்த்தனர்.
இரவில் ஜெமினியும் சாவித்திரியும் பௌர்ணமி வெளிச்சத்தில் படகு செலுத்தி “ஆஹா இன்ப நிலாவினிலே” பாடலைப் பாடியபடியே காதல் செய்வார்கள். பகலில் எடுக்கப்பட்டது என்று சிறிதளவும் தெரியாத வகையில் செட்டில் நிலவொளி மாதிரியான ஒளியமைப்பை சித்தரித்து அந்த இரவுக்காட்சியை எடுத்ததுதான் மார்கஸ் பார்ட்லேவின் சிறப்பு. இந்தப் பாடல், ஒளியை எப்படிக் கையாள்வது என்பதற்கான பாடமாக அமைந்துள்ளது என்றும் இந்திய அளவில் முதலில் பயன்படுத்தப்பட்ட தொழில்நுட்பமென்றும் அவரது உதவியாளர் அம்புராவ் ஒரு பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.
கலையம்சத்துடன் விளங்கிய துவாரகா அரண்மனையை 300க்கும் மேற்பட்ட மினியேச்சர்களைக் கொண்டு கலை இயக்குநர் மாதவப்பெட்டி கோகலேவின் உதவியோடு பார்ட்லே படமாக்கினார். கடோத்கஜனின் பிரமாண்டமான சமையலறைக் காட்சிகளை நான்கு நாட்களில் ஸ்டாப் மோஷன் தொழில்நுட்பத்தில் படமாக்கினர். பிற்காலத்தில் பல வெற்றிப்படங்களை இயக்கிய சிங்கீதம் சீனிவாசராவ் இத்திரைப்படத்தில் உதவி இயக்குநராக பணிபுரிந்திருக்கிறார்.
ஆங்கிலோ இந்தியன் குடும்பத்தைச் சேர்ந்த பார்ட்லேவின் பெற்றோர் ஏற்காட்டில் மருத்துவர்களாக இருந்தனர். தன் தந்தைக்கு எக்ஸ்ரே எடுப்பதில் உதவியவருக்கு புகைப்பட தொழில்நுட்பம் பிடித்து விட, பள்ளி மாணவராக இருந்தபோதே புகைப்படமெடுக்க துவங்கினார். சுயமாகவே புகைப்படக் கலையைக் கற்றுக்கொண்டவரை 1940ல் ஃபோட்டோ ஜர்னலிஸ்ட்டாக நியமித்து டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிகை மும்பைக்கு அழைத்துக் கொண்டது. புகைப்பட நிருபர்கள் வெவ்வேறு களத்தில் பணி செய்தாகவேண்டும். மிக சொகுசான பணி கிடையாது. சில நேரங்களில் ஓடியபடி புகைப்படமெடுக்க வேண்டியிருக்கும். ஃப்லிம் கேமரா காலத்தில் ஒரு ரோலுக்கு 36 புகைப்படங்களை எடுக்கலாம். ஓடிக்கொண்டே எடுக்கையில் 36 படங்களில் நான்கு ஐந்து தேறினாலே பெரிய விஷயம். மார்க்ஸ் பார்ட்லேவுக்கு 36 படங்களுமே ஏமாற்றாதாம். அத்தனைத் துல்லியம், கணக்கீடு, கூருணர்வு கொண்டவர்.
புகைப்படம் எடுப்பதில் கொண்டிருந்த ஆர்வம் அவரை மூவி கேமராவை நோக்கி ஈர்த்தது. செய்திப் படங்களுக்கான ஒளிப்பதிவு செய்தார். உலகின் முன்னணி ஒளிப்பதிவாளர்கள் பலரும் செய்திப் படங்களில் பணியாற்றிய பிறகே திரைப்பட ஒளிப்பதிவுக்கு வந்திருக்கின்றனர். ஏனெனில் ஆவணப்படம் இயக்குபவர்களுக்கு கிடைக்கிற அனுபவம் அளப்பரியது. எந்தச் சூழலையும் கேமராவைக் கொண்டு சமாளிக்க அவர்கள் பழகியிருப்பார்கள்.
மும்பையில் இருந்து சென்னை வருகிறார் பார்ட்லே. பிரகதி ஸ்டூடியோஸில் ஒளிப்பதிவாளராக சேர்ந்தவர் பணியாற்றிய முதல் திரைப்படம் திருவள்ளுவர்.
நடிகை பானுமதி திருமணத்திற்குப் பிறகு நடிப்பில் இருந்து விலகி சில ஆண்டுகள் கழித்து மீண்டும் திரையில் தோன்றிய ‘சொர்க்க சீமா” தெலுங்கு திரைப்படம் 200 நாட்களைக் கடந்து ஓடி மாபெரும் வெற்றியடைந்து அவருக்கான கம்பேக் படமாக அமைந்தது. நாகையாவை மயக்க பானுமதி கையில் புறாவுடன் பாடும் “ஓஹோ பாவுரமா” பாடல் நடிகர் சிவாஜி கணேசனைக் கவர்ந்திழுக்க பானுமதியின் நளினமான அசைவுகளுக்காகவும், அதைப் படமாகிய விதத்திற்காகவும் பலமுறை அந்த பாடலை ரிபீட்மோடில் பார்த்த சுவாரஸ்யமான கதையும் உண்டு. அந்தப் பாடலுக்குப் பிறகு வரும் காட்சியில் நாகையாவிடம் மனைவி பேசும்போது, நாகையாவுக்கு மனைவியின் முகம் மறைந்து அங்கு பானுமதியின் முகம் தெரியும் காட்சி சிறப்பாக எடுக்கப்பட்டிருக்கும்.
கருப்பு வெள்ளை திரைப்படங்களில் ஒளியையும், நிழலையும் கதாபாத்திரங்களின் மன உணர்வுகளுக்கேற்ப பயன்படுத்துவதில் பார்ட்லே தேர்ந்தவர். வண்ணப் படங்களிலும் அற்புதங்களை நிகழ்த்தியிருக்கிறார்.
“கடலினக்கர போனோரே” என்கிற மலையாளப் பாடலை தமிழ்நாட்டில் உள்ளவர்களையும் பாட வைத்து, கேரளாவின் கடற்கரையையும், கடலோர கிராமத்தின் அழகையும் முழுமையாக காண்பித்த முதல் மலையாள வண்ணத் திரைப்படம் “செம்மீன்.”

கேரளாவில் மிகப் பெரிய விமர்சனங்களையும், விவாதங்களையும் எழுப்பி மலையாள சினிமாவின் போக்கை மாற்றிய படம். தகழி சிவசங்கரன் பிள்ளையின் நாவலை ராமு கரியாத் திரைக்கதை அமைத்து இயக்கினார்.
பறவைகள் படபடத்து சுற்றி வர, கட்டுமரத்தை தள்ளிக் கொண்டு கரைக்கு வரும் மீனவர்களைக் காண்பிக்கும் முதல் காட்சியிலேயே இது மீனவ மக்களின் வாழ்வியலை சொல்லும் படம் என்று பார்ட்லே தன் கேமராவால் சொல்லி விடுகிறார். கடலும், அலைகளும், கட்டுமரங்களும், கடலோர நிலப்பரப்பும் கதாபாத்திரங்களின் ஊசலாடுகிற மனநிலையை பிரதிபலித்து கதாபாத்திரங்களாகவே மாறியிருந்தன. இக்கதையில் கருத்தம்மா, பரீக்குட்டியின் காதலுக்காக நெகிழ வைத்து, அவர்களின் பிரிவில் மனம் கனக்க செய்து இறுதியில் அவர்களின் இறப்பையும் காண்பித்து அழ வைத்து என பார்வையாளர்களை திரைப்படத்தோடு ஒன்ற வைத்ததில் பார்ட்லேவின் கேமராவும், சலீல் சௌத்ரியின் இசையும் முக்கிய பங்காற்றின. கருத்தம்மா பழனியை திருமணம் செய்து போவதை வலையின் வழியாகப் பார்க்கும் பரீக்குட்டியின் சோகமான முகம் பதைக்க வைக்கும்.
செம்மீன் திரைப்படம் வெளியாகி ஐம்பது ஆண்டுகள் ஆனதை நினைவு கூர்ந்து நடிகை ஷீலா அளித்த ஒரு பேட்டியில், ‘செம்மீன்’ படத்தில் எனக்கு முதல் சீன் ‘பெண்ணாளே’ பாடல் காட்சிதான். நான் திருச்சூரிலிருந்து ஷூட்டிங் நடைபெற்ற நாடிகா கடற்கரைக்கு வந்தேன். நான் அதுவரை நடித்த கருப்பு-வெள்ளை திரைப்படங்களுக்கேற்ப, மஞ்சள் நிறத்தை அடிப்படையாகக் கொண்ட மேக்கப் போட்டு தலையலங்காரமும் செய்திருந்தேன். இல்லையென்றால் திரையில் பேய் மாதிரி தெரியும். நான் அதற்குப் பழகியிருந்ததால் அந்த மேக்கப்பில் இருந்தேன். அதைப் பார்த்த பார்ட்லே அருகில் வந்து அதை முழுவதுமாக துடைத்து விட்டு வெறும் வாசலீனைக் கொடுத்து போட சொன்னார். நான் மிகவும் வருத்தமாக இருந்தேன். அப்போது அந்த காட்சியின் தன்மைக்கேற்ப என் முகம் பொருத்தமாக இருந்தது” என்று கூறியிருக்கிறார்.
செம்மீன் படத்திற்கு தேசிய விருது கிடைத்தது. கான் திரைப்பட விழாவில் சிறந்த ஒளிப்பதிவிற்கான விருதினை பெற்றுத் தந்தது. சில காரணங்களால் படத்தின் ‘பேட்ச் வொர்க்’ பணிகளை மார்க்ஸ் பார்ட்லேவால் செய்ய இயலாத காரணத்தால் ஒரு சில உட்புறக் காட்சிகளை U. ராஜகோபாலன் ஒளிப்பதிவு செய்திருந்தார். அதனாலேயே ஒளிப்பதிவிற்கான தேசிய விருது கிடைக்காமல் போனது.
அதன் பிறகு சாந்தி நிலையம் படத்தின் ஒளிப்பதிவிற்காக தேசிய விருதினை பெற்றார் மார்கஸ் பார்ட்லே.
ஜி.எஸ். மணி இயக்குநராக அறிமுகமான “சாந்தி நிலையம்” திரைப்படத்தில் தன் கேமராவின் வழியே ஊட்டியின் அழகியலை ஒரு கான்வாஸ் சித்திரமாக பார்ட்லே காண்பித்திருப்பார். ஜெமினி கணேசன் குதிரையில் வரும் அறிமுக காட்சி. பலூன்களில் குழந்தைகள் பறக்கும் காட்சி மற்றும் பாடல் காட்சிகளில் என வெளிப்புற அழகை இயற்கை வெளிச்சத்தில் காட்டியவர், பகலில் குழந்தைகளுடன் குதூகலமாக இருக்கும் அந்த மாளிகையில், இரவில் ஏதோ மர்மம் இருக்கிறது என்பதைக் காண்பிக்கும் விதமாக ஒளியமைத்திருப்பார்.
ஜெமினிகணேசன் குதிரை சவாரி செய்து வர அவரோடு பயணிக்கும் கேமரா ஊட்டியின் அழகைக் காண்பித்து சாந்தி நிலையத்திற்குள் நுழையும்போது நம்மையும் அதற்குள் அழைத்து செல்லும். அந்த மாளிகை முக்கிய கதாபாத்திரமென்பதால் தன் கேமராவை பல கோணங்களில் நகர்த்தி அதன் ஒவ்வொரு அங்குலத்தையும், திரைச்சீலைகளுடனான அறைகளையும், உட்புற இன்டீரியரையும் நமக்குப் பதிய வைத்திருப்பார். இரவுக் காட்சியில் அந்த மாளிகையின் பணிப்பெண் கையில் விளக்குடன் நடந்து செல்வதை கேமராவில் காண்பித்தே பார்வையாளர்களிடம் அச்சத்தை விதைத்திருப்பார். உயர்ந்த ஜன்னல்களையும், நீண்ட காரிடார்களையும் காண்பித்த விதத்தில் அவ்வளவு பெரிய மாளிகையிலிருந்தாலும் ஜெமினி கணேசனின் தனிமையை பார்ட்லே பார்வையாளர்களுக்கு உணர்த்தியிருப்பார். “பூமியில் இருப்பதும், வானத்தில் பறப்பதும்” பாடலில் குழந்தைகள் ஹீலியம் பலூன்களில் பறப்பது போன்ற காட்சியில் தன் தந்திரத்தைப் பயன்படுத்தி, அது மேலே பறக்காமலேயே, பறப்பது போல் பார்ட்லே அந்தக் காட்சியைப் படம் பிடித்தார். ஜெமினி கணேசன் காஞ்சனா காதல் தருணங்களிலும், திகில் நிறைந்த இரவுக் காட்சிகளிலும் கதைக்கேற்ப கதாபாத்திரங்களின் மனநிலையைப் பிரதிபலித்த ஒளியமைப்பும், ஊட்டியின் வெளிப்புற அழகை ஒரு பெயிண்டிங் போல காண்பித்த விதமும் மார்கஸ் பார்ட்லேவுக்கு சிறந்த ஒளிப்பதிவாளர்க்கான தேசிய விருதைப் பெற்றுத் தந்தது.
தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர்கள் அமைப்பின் தமிழ் இணையதள திறப்பு விழாவில் பேசிய நடிகர் கமல்ஹாசன். “செம்மீன் திரைப்படத்தின் இரவுக் காட்சிகளை பார்ட்லே பகல் 12 மணிக்கு கேமராவை நெளித்து நெளித்து கொண்டு போய் எடுத்தது இன்றும் எனக்குப் பாடமாக இருக்கிறது. கொஞ்சம் கேமராவை இந்தப் பக்கம் திருப்பினால் பகல்னு தெரிந்துவிடும். இப்பவும் நான் சில யோசனைகள் சொன்னால், உங்களுக்கு எப்படித் தெரியும் என்று கேட்பார்கள். மார்கஸ் பார்ட்லே பெயரைச் சொல்லாமல் விட்டால் நான் திருடன். அதனால் ஒவ்வொரு முறையும் சொல்வேன்” என்று மார்கஸ் பார்ட்லே பற்றி தன் உரையில் குறிப்பிட்டிருக்கிறார்.
ஒளிப்பதிவாளர் பி. கண்ணனிடம் உதவி ஒளிப்பதிவாளராக பல திரைப்படங்களில் பணியாற்றி முன்னணி ஒளிப்பதிவாளராக பணியாற்றி தற்போது சிறந்த நடிகராக தன்னை முன்னிறுத்தியிருக்கும் இளவரசு அவர்கள் மார்கஸ் பார்ட்லே குறித்து பகிர்ந்து கொள்கிறார்.
“அந்தக் காலத்தில் ரூல் ஆஃப் சினிமாட்டோகிராஃபி என்று ஒன்று இருந்தது. ஆனால் நாங்கள் வந்தபோதே அவையெல்லாம் இல்லை. மார்கஸ் பார்ட்லே ஒரு பெர்ஃபெக்ஷனிஸ்ட். ரூல்ஸை உடைப்பதென்பது முக்கியமில்லை, ஆனால் என்னவென்று தெரிந்து கொண்டு பிரேக் செய்ய வேண்டும் என்று பி.சி. ஶ்ரீராம் ஒருமுறை கூறினார். தனக்கென விதிகளை வகுத்துக்கொண்டு அதை சிறிதளவும் மீறாமல் ஒழுங்குடன் இருந்த ஒளிப்பதிவாளர் மார்கஸ் பார்ட்லே. அவர்கள் தியரியைப் படித்து வளர்ந்தவர்கள் என்பதால் அந்த ஒழுங்கு மாறாமல் இருந்தார்கள்.”
“அவர் ஆங்கிலோ இந்தியன் என்பதால் நேர்த்தியாக ஃபார்மல்ஸ் உடை அணிந்துதான் ஷூட்டிங்கிற்கு வருவார் என கேள்விப்பட்டிருக்கிறேன். அலுவலகத்துக்கு செல்வதுபோல சில நேரங்களில் டை கட்டிக் கொண்டிருப்பார் என்றெல்லாம் சொல்வார்கள். அப்போதெல்லாம் ஒளிப்பதிவாளர்கள் எல்லாரையுமே ‘மேஜிசியன்’ ஆகப் பார்த்தார்கள். அவர்களுக்கு மட்டும்தான் ஒரு படம் எப்படி வரப்போகிறது என்பது தெரியும். ஃபிலிம் ரோல் எப்படி சினிமாவாக மாறுகிறதென்கிற தொழில்நுட்பம் செட்டில் யார்க்கும் பெரியதாக தெரியாது. ஃபிலிம் ரோல் பிராஸிங் என்பது பெரிய மர்மமாகவே இருக்கும். அப்போதெல்லாம் இயக்குநர், கேமராமேன் இருவருமே மிகவும் மதிக்கப்பட்டார்கள். நடிகர் நடிகைகள், இயக்குநர் மற்றும் கேமராமேன் காலைத் தொட்டு வணங்கிவிட்டு, கேமராவைத் தொட்டுக் கும்பிட்ட பிறகு ஒவ்வொரு நாளும் முதல் ஷாட்டில் போய் நிற்பார்கள். தங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பவர்கள் என்கிற கவனமும் மரியாதையும்தான் அதற்குக் காரணம்.”
“பார்ட்லே செட்டில் பேசவே மாட்டார். அமைதியாக தான் இருக்க வேண்டும். யாரையும் தொந்திரவு செய்யாமல் உடல்மொழியிலேயே அமைதியாக உதவியாளர்களுக்கு குறிப்புகளை உணர்த்துவது என தனக்கென்று ஒரு செயல்முறையை உருவாக்கினார் பார்ட்லே. லைட்டிங் செட் செய்துவிட்டு ஒவ்வொரு விளக்குக்கும் நம்பர் கொடுத்து விடுவார். லென்ஸை யாரும் தொட விடமாட்டார். எதையும் முறையாகச் செய்வார். அவர்கள் பயன்படுத்துகிற டிராலி ஸ்மூத்தாக நகர வேண்டும், கரகரவென்று சத்தம் வரக்கூடாது என்பதற்காக ஷுட்டிங் முடிந்தபின் அவர்கள் பயன்படுத்துகிற டிராலியை ஜாக்கி வைத்து தூக்கி மேலே வைத்து விடுவார்கள். தனி கேமரா, தனி லென்ஸ், தனி உதவியாளர் என செட்டப் வைத்திருந்தார். தயாரிப்பாளர் அவருக்கென தனியாக அனைத்தையும் கொடுத்து விடுவார். பெரிய ஸ்டூடியோக்கள் ஒளிப்பதிவாளர், எடிட்டர், இசையமைப்பாளர் என மொத்த படகுழுவையுமே மாத சம்பளத்திற்கென வைத்து வேலை செய்த அந்தக் காலத்தில் இவர் தனித்து இயங்கியவர். அந்தக் காலத்து கேரவன் கேமராமேன். மிச்செல் கேமரா, லென்ஸ் என கேமராவின் முழுமையான மெக்கானிசம் தெரிந்து வைத்திருந்தார். வேலை செய்யுமிடம் சத்தமில்லாமல் இருக்க வேண்டும். லென்ஸுக்கும், அது எக்ஸ்போஸ் ஆகும் இடத்திற்குமான பிணைப்பு ஒரு ஒளிப்பதிவாளராக எனக்குத் தெரியும். ஒளிப்பதிவாளருக்கும் லென்ஸுக்குமான ஆத்மார்த்தமான பிணைப்பு வெளிப்புற சத்தங்களால் பாதிக்கப்படக் கூடாது என்பதில் அவர் கவனமாக இருந்தார். அப்போதுதான் அந்த கதையின் உணர்வு முழுமையாக திரையில் வெளிப்படும் என்று நம்பினார்.”
“நான் ஒளிப்பதிவாளாராக சினிமாவிற்குள் வரவில்லை. ஆனால் புகைப்படம் எடுக்கத் தெரிந்தால் கல்யாண வீட்டில் புகைப்படமெடுத்து கூட பிழைத்துக் கொள்ளலாமென்று சொன்னதால் புகைப்படமெடுக்க தொடங்கினேன். ஆனால் அதற்குள் நுழைந்த பிறகு, அதை பிரிண்ட் போடுவது டெவலப்பிங் செய்வது என அதன் மேஜிக் தெரிந்த பிறகு அதை முழுமையாக ரசிக்க தொடங்கி விட்டேன். மூவி கேமரா என்னவென்றே தெரியாத எனக்கு, அதன் தொழில்நுட்பங்கள் தெரிந்தபின் முழுமையாக அது என்னை இழுத்துக் கொண்டது, பார்ட்லேயும் அப்படித்தான் வந்திருக்கிறார் என்பதால் அவர் எனக்கு கூடுதலாக பிடித்தமானவராகி விட்டார்…”
மேற்கத்திய கலாசார பின்னணியிலிருந்து வந்து தென்னிந்திய சினிமாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய மார்கஸ் பார்ட்லேயை தன் வழிகாட்டியாக நினைத்திருந்த பாலுமகேந்திரா புனே திரைப்படக் கல்லூரியில் தங்கப்பதக்கத்துடன் படிப்பை முடித்து சென்னை வருகிறார். சில நாட்களிலேயே அவருக்கு இயக்குநர் ராமு கரியாத்திடமிருந்து அழைப்பு வருகிறது. அதற்கு முன்பு ராமுகரியாத் பார்ட்லேயின் ஒளிப்பதிவில் செம்மீன் இயக்கியிருந்தார், மார்கஸ் பார்ட்லேக்கு உதவியாளராக பணிபுரிய தன்னை அழைக்கிறாரென்று நினைத்த பாலுமகேந்திரா தன் ஆதர்சமாக விளங்குகிற ஒளிப்பதிவு இயக்குநரின் கீழ் வேலை செய்யப்போகும் மகிழ்ச்சியோடு வருகிறார். வந்தவருக்கு ஒரு ஃபிலிம் ரோலும், அதைப் புகைப்படங்களால் நிரப்ப ஒரு நாள் அவகாசமும் தரப்படுகிறது. சோதனையாக மழையும் உடனேயே வர, மழைக்கால சென்னையை படம் பிடித்து நம்பிக்கையற்று அந்த ஃபிலிம் ரோலைக் கொண்டுவந்து கொடுக்கிறார் பாலுமகேந்திரா. அதன்பின் நடந்ததெல்லாம் வரலாறு. தன் ஆதர்ச வழிகாட்டியிடம் கற்றுக் கொள்ளலாமென்று வந்த பாலுமகேந்திராவை ராமுகரியாத் தன்னுடைய அடுத்த திரைப்படத்திற்கு ஒளிப்பதிவாளராக நியமித்தார் என்று மார்கஸ் பார்ட்லே பற்றி பாலுமகேந்திராவின் உதவியாளராக இருந்த முரளி திருஞானம் குறிப்பிடுகிறார். எல்லாமே ஒரேமாதிரி தெரிகிற கருப்பு-வெள்ளை புராண திரைப்படமான மாயாபஜாரில் அவர்கள் அணிந்திருக்கும் ஆபரணங்களை ஒளி வீச செய்ய மார்கஸ் பார்ட்லே எடுத்திருக்கும் சிரத்தையை வியந்து குறிப்பிட்டார். அந்தக் காலத்தில் கே.வி.ரெட்டி, மார்கஸ் பார்ட்லே கூட்டணியில் அமைந்த படங்கள் கடைக்கோடி ரசிகரின் ரசனையையும் மதித்து எடுக்கப்பட்டதையும் இன்று அத்தகைய நிலை இல்லாததையும் குறிப்பிட்டார். தொழில்நுட்பம் இல்லாத அந்தக் காலத்தில் மார்கஸ் பார்ட்லே தன் சுயமுயற்சியால் பாதாளபைரவி, மாயாபஜார் திடைப்படங்களின் தந்திர காட்சிகளை உருவாக்கியதை சிலாகித்தார்.
ஜெமினிகணேசன், சாவித்திரி, காஞ்சனா, பானுமதி என அனைவரையும் ரசித்து பெரிய திரையில் அவர்களை மிக அழகாக காண்பித்து மக்கள் மனதில் கொண்டு சேர்த்தவர் பார்ட்லே.
இயக்குநரோடு திரைக்கதையை விவாதித்து அந்தக் கதையை, அதன் உணர்வுகளை முழுமையாக தனக்குள் நிரப்பிக் கொள்ளும் பார்ட்லே, படப்பிடிப்பு துவங்குவதற்கு முன் சில நாட்கள் அந்த செட்டிலேயே தங்கி இரவில் அதன் ஒளியமைப்பை ஆராய்ந்து அதற்கேற்ப ஒளியமைப்பு செய்திருக்கிறார்.
“அவரை வெறுமனே “குரு” என்று சொல்வது அவரை குறைத்து மதிப்பிடுவதாகும். அவர் அதற்கெல்லாம் அப்பாற்பட்டவர். இன்று இருக்கும் என்னை செதுக்கியவர்” என்று அவர் உதவியாளர் அம்புராவ் மார்கஸ் பார்ட்லே பற்றி குறிப்பிட்டிருக்கிறார்.
படங்கள் ஒளிப்பதிவு செய்வதில் இருந்து விலகிய பார்ட்லேவுக்கு கேமராவின் மீதான அன்பும், ஈடுபாடும் குறையவேயில்லை. லென்ஸ்கள் குறித்து அவரளவுக்கு ஆழ்ந்த அனுபவம் கொண்டவர் இல்லை. அவருக்கு ஓய்வு காலம் என்று ஒன்று இருந்ததேயில்லை. கேமராக்களை பழுது நீக்குவதும், லென்ஸுகளை சரி செய்வதுமென தன் வாழ்க்கையைக் கழித்திருக்கிறார்.
ஸ்டெடிகேம் இந்தியாவுக்கு வந்த புதிதில், சென்னையில் ஒருபடப்பிடிப்பில் அது பழுதாகி செயல்படாமல் போனதை ஒளிப்பதிவாளர் ராஜீவ் மேனன் அந்திமழை இணையதளத்துக்கு அளித்த பேட்டியில் குறிப்பிடுகிறார். அந்தக் கேமராவை எடுத்துக்கொண்டு போய் மார்க்ஸ் பார்ட்லேயை சந்தித்ததாகவும் புதிய தொழில் நுட்பத்தை அவர் ஆர்வமாகத் தெரிந்து கொண்டு உதவியதாகவும் சொல்லியிருக்கிறார்.
இவரை முன்மாதிரியாக எல்லா ஒளிப்பதிவாளர்களுமே நினைக்கிறார்கள். இன்றைய காலகட்டத்திலும் முன்னோடிகளின் சாதனைகளை நினைத்துப் பார்க்கையில் மார்க்ஸ் பார்ட்லேயை வியக்காதவர் இல்லை.
ஒருவர் எந்தப் பாராட்டையும் புகழையும் பிரபலத்தையும் எதிர்பாராமல் தன் கடமையை மட்டுமே செய்துகொண்டு வாழ்வதை கர்ம வீரர் என்பார்கள். அவர்கள் சாதாரணமானவர்கள் அல்ல, வீரர்கள். ஒளிப்பதிவையும், கேமராவையும் மட்டுமே தன் வாழ்நாள் துணையாகக் கொண்டு வாழ்ந்தவர். அதனாலேயே மார்கஸ் பார்ட்லே ஒரு வீரர்.
முழு ராணுவத்தையும் தளவாடங்களையும் தனக்குள் கொண்டிருந்த வீரர்.











