கருந்தேள் ராஜேஷ்
திரைப்படத்துறை குறித்த புத்தகங்களின் அறிமுகத் தொடர்
முதல் புத்தகமாக, உலகம் முழுதும் ஒரு மாபெரும் ‘கல்ட்’ இயக்குநர் என்று பெயர் எடுத்திருப்பவரும், எண்ணற்ற விருதுகள் வாங்கியிருப்பவரும், உலகம் முழுதும் ஏராளமான இளம் திரைப்பட இயக்குநர்களுக்கு இன்றுவரை மிகப்பெரிய தூண்டுதலாக இருப்பவரும், எத்தனையோ பேட்டிகளில் மிக வெளிப்படையாக மனம்திறந்து பேசி, தனக்குத் தெரிந்த எல்லாவற்றையும் அனைவருக்கும் எப்போதும் தொடர்ந்து சொல்லிக்கொண்டும் இருப்பவரான இயக்குநர் க்வெண்டின் டாரண்டினோ (Quentin Torantino) எழுதியிருக்கும் ஒரு புத்தகத்தைப் பற்றியே பார்க்கப்போகிறோம்.
இயக்குநர் க்வெண்டின் டாரண்டினோ மிகச்சிறுவயதிலிருந்தே பல படங்கள் பார்த்து வளர்ந்தவர். அவரது காலகட்டத்தில் வெளியான படங்கள் மட்டும் அல்லாமல், அவருக்கு முந்தைய காலகட்டப் படங்கள், உலகப் படங்கள், ஆனிமேக்கள் முதலிய எத்தனையோ படங்கள் பார்த்து, இயக்குநர் மார்ட்டின் ஸ்கார்ஸேஸியைப் போலவே ஒரு சினிமா பெட்டகமாக, ஒரு Historianஆக இருப்பவர். ஆனால் மார்ட்டின் ஸ்கார்ஸேஸியிடம் இல்லாத ஒரு விசேடமான அம்சம் க்வெண்டின் டாரண்டினோவிடம் உண்டு. ஸ்கார்ஸேஸி, அற்புதமான உலகப் படங்களைக் கொண்டாடுவார். அவரால் வணிகப்படமாகவே உலகெங்கும் வெற்றியடைந்த தரமான படங்களைக் கொண்டாட முடியுமா என்பது கொஞ்சம் கேள்விகளுக்கு உள்ளாக்கப்படவேண்டியதே அப்படிக் கொண்டாடப்பட்டே தீரவேண்டும் என்பதும் அவசியம் இல்லை.
ஆனால் எப்போதுபார்த்தாலும் நம்மால் உயர்தர உலகப்படங்களையே பார்த்துக்கொண்டிருக்க இயலாது. எல்லாவகையான படங்களிலும் தரம் என்று ஒன்று இருக்கிறதல்லவா? அப்படிப்பட்ட படங்களையே சொல்கிறேன். அதுவே க்வெண்டின் டாரண்டினோவை எடுத்துக்கொண்டால், இங்மார் பெர்க்மனின் Wild Strawberries திரைப்படத்தை எப்படிக் கொண்டாடுகிறாரோ, அப்படியே அவரால் ராபர்ட் ரோட்ரிகஸின் ‘El Mariachi’ படத்தையும் கொண்டாட முடிகிறது. இப்படிப் பல ஜப்பானியப் படங்கள் டாரண்டினோவாலேயே உலகுக்குத் தெரியவந்தன. யாருக்குமே தெரியாத, ஆனால் அற்புதமான ஆக்ஷன் படங்கள் பலவற்றை டாரண்டினோ பேசி, எழுதி, அவரது பெவர்லி ஹில்ஸ் திரையரங்கத்தில் திரையிட்டபின்னரே பல சினிமா ரசிகர்களும் கண்டுகொண்டார்கள்.
இப்படி, உலகத் திரைப்படங்களுக்கு மட்டுமல்லாமல், தரமான திரைப்படங்களுக்கும் ஏராளமான சேவை செய்திருப்பதே க்வெண்டின் டாரண்டினோவின் சிறப்பியல்பு.
எப்போதைய காலத்தில் இருந்தோ டாரண்டினோ திரைப்பட விமர்சனங்கள் தொடர்ந்து எழுதிக்கொண்டே இருந்தார் என்பது சில திரைரசிகர்களுக்குத் தெரிந்திருக்கக்கூடும். பெவர்லி ஹில்ஸ் திரையரங்குக்கான இணையதளத்தில் அவர் பல விமர்சனங்கள் எழுதியிருக்கிறார். அவற்றைத் தொடர்ந்து படித்திருக்கிறேன். அவருக்குப் பிடித்த, அதே சமயம் கல்ட் க்ளாஸிக் என்று வர்ணிக்கப்படக்கூடிய மிக முக்கியமான திரைப்படங்கள் பற்றிக் க்வெண்டின் டாரண்டினோ எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே Cinema Speculation. இது நவம்பர் 2022வில், ஹார்ப்பர் காலின்ஸ் (Harper Collins) பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
க்வெண்டின் டாரண்டினோவுக்குள் ஒரு அட்டகாசமான திரைப்பட வெறியன் இருப்பதை அவரது படங்களைப் பார்த்த யாராலும் எளிதில் கண்டுபிடித்துவிடமுடியும். உதாரணமாக, அவர் படங்களை இயக்கத் துவங்குவதற்கு முன்னரே எழுதிய திரைக்கதையான True Romanceஇல் (இது டோனி ஸ்காட்டால் இயக்கப்பட்டது) நாயகன் ஒரு திரைப்பட வெறியன். அவன் பார்க்காத திரைப்படங்களே இல்லை. அதேபோன்ற இன்னொரு திரைவெறி பிடித்த நாயகியை அவன் சந்திக்க நேர்கிறது. அப்போது இருவரும் மிகுந்த ஆர்வத்துடன் பேசிக்கொள்ளும் பல படங்கள், பின்நாட்களில் டாரண்டினோவின் பேட்டிகளைப் பார்க்கும்போது, அவருக்கே மிகப்பிடித்தவை என்பது தெரியவரும். தன்னையே ஒரு கதாபாத்திரமாக மாற்றி அந்தப் படத்தில் உலவவிட்டிருப்பார் டாரண்டினோ. இதுபோன்ற தன்மைகள் அவரது பல படங்களில் உண்டு.
எத்தனையோ படங்களைப் பார்த்து ஒரு மாபெரும் ஹிஸ்டோரியனாக டாரண்டினோ இருப்பதால் -கூடவே அவருக்கு வணிகப் படங்களுமே மிகவும் பிடிக்கும் என்பதால், இந்தப் புத்தகத்தில் அற்புதமான பல படங்களைப் பற்றி எழுதியிருக்கிறார். அவை எல்லாவற்றையும் நன்றாக அலசி, அவற்றின் முக்கியத்துவம், அந்தப் படங்கள் வெளிவந்த காலகட்டங்களின் சிறப்பியல்பு, நடித்தவர்கள், இயக்குநர்கள் என்று எவ்வளவோ தகவல்களைக் கொட்டுகிறார் டாரண்டினோ. இந்த எல்லாப் படங்களுமே எனக்கும் பிடித்தவையே. சிறுவயதில் இருந்தே ஏராளமான திரைப்படங்கள் பார்த்திருப்பதால் இவைகளில் பலவற்றையும் அப்போது பார்த்திருக்கிறேன் என்பதால் என்னாலும் இந்தப் படங்களைப் பற்றி அவர் எழுதியிருப்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.
இவை அத்தனையும் நிஜமாகவே திரைப்படங்களின் போக்கை மாற்றியமைத்தவையே. அக்காலத்திய சினிமாக்களில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவையும் இவையே ஆகும். ஆனால், இவற்றைப் புரிந்துகொள்ள, எழுபதுகளின் ஹாலிவுட் பற்றி ஓரளவு தெரிந்திருக்கவேண்டும். இல்லையென்றால் சில கேள்விகள் எழலாம். இருந்தாலும், டாரண்டினோ ஆங்காங்கே அவற்றையும் விளக்குகிறார். அந்தந்தக் காலகட்டங்கள் பற்றியும் பேசுகிறார்.
புத்தகத்தின் முதல் அத்தியாயம், Little Q Watching Big Movies என்பது. 1963இல் பிறந்த டாரண்டினோ, எப்படி 1967இல் இருந்து திரைப்படங்கள் அவரது வாழ்க்கையில் இன்றியமையாதவையாக விளங்கின என்று விரிவாகப் பட்டியல் போட்டுச் சொல்கிறார். அவர் பார்த்த முதல் திரைப்படமே ஹாலிவுட்டில் டபிள் ஃபீச்சர் என வழங்கப்படும் முறையில் இரண்டு திரைப்படங்களை ஒன்றாகத் திரையிடும் ஒரு விஷயமாகும். அங்கே இது மிகச்சாதாரணம். பல படங்கள் இப்படி இரண்டிரண்டாகத் திரையிடப்படும். அப்படி அவர் பார்த்தது, 1970இல் வெளியாகி திரையிடப்பட்ட Joe மற்றும் Where’s Poppa? ஆகிய இரண்டு ஹாலிவுட் படங்கள்..
ஜோ படத்தில் எழுபதுகளில் முக்கியமாகப் பேசப்பட்ட போதை மருந்துகளின் தாக்கம், ஹிப்பிகள் ஆகியவை முக்கியமான பங்கு வகித்தன. Where’s Poppa? படத்திலோ, 87 வயது நிரம்பிய, சுயநினைவு பல நேரங்களில் இல்லாத, வன்முறை எண்ணம் நிரம்பிய ஒரு அம்மாவைத் தன்னுடன் வைத்துக்கொண்டு படாதபாடு படும் நாயகனின் கதை. ஒரு கறுப்பு நகைச்சுவைப் படமாக சொல்லப்பட்டது. அவன் காதல் வயப்படும் பெண்ணை எப்படியெல்லாம் அந்தத் தாய் பயமுறுத்தித் துரத்துகிறார் என்பதும், தந்தை இறக்கையில், அம்மாவை எக்காலத்திலும் முதியோர் இல்லத்தில் சேர்ப்பதில்லை என்று சத்தியம் செய்து கொடுத்திருந்ததினால் இப்படிப்பட்ட ஒரு தாயை வைத்துக்கொண்டு ஒருவன் எப்படியெல்லாம் துன்புறுகிறான் என்பது மிகுந்த நகைச்சுவையுடன் சொல்லப்பட்ட படம் இது. ஏழு வயதுச் சிறுவன் ஒருவனின் மனதில் இந்த இரண்டு படங்களுமே மிகுந்த தாக்கம் ஏற்படுத்தின என்று டாரண்டினோ சொல்கிறார்.
இப்படித் துவங்கும் டாரண்டினோ, எப்படி ஹாலிவுட்டின் திரைப்படங்கள் அறுபதுகளின் இறுதியிலும், எழுபதுகளின் துவக்கத்திலும் தரம் பிரிக்கப்பட்டன என்றும் விளக்கி, புதிய ஹாலிவுட் என்பது எழுபதுகளில் உருவான காலத்தில் அதிகமாகப் படங்கள் பார்க்கத் துவங்கிவிட்டதாகவும், எனவே எப்படியோ அவரது வாழ்க்கையில் அந்தக் காலகட்டம் மிகச்சரியாக வந்து ஒட்டிக்கொண்டுவிட்டதாகவும் கூறுகிறார். 1967இல் ஹாலிவுட் திரைப்படங்களில் ஒரு புரட்சி துவங்கியது. புதிய, சர்ச்சைக்குரிய கருத்துகள் அடங்கிய படங்கள் உருவாகத் துவங்கின. 1968 முதல் 1969 வரை அதுவரை இருந்துகொண்டிருந்த கதை சொல்லல் முறையும் இந்தப் புதிய திரைப்படங்களும் மோதிக்கொள்ளத் துவங்கின.
1970ல் புதிய முறைத் திரைப்படங்கள் இந்தப் போரை முற்றிலுமாக வென்றன என்று டாரண்டினோ குறிப்பிடுகிறார் (விமர்சகர் மார்க் ஹாரிஸ் இதைப் பற்றி விரிவாக எழுதியிருக்கிறார் என்றும் டாரண்டினோ குறிப்பிடுகிறார்). 1967 காலகட்டத்தில்தான் பின்நாட்களில் மிகப்பெரிய இயக்குநர்களாக மாறிய மார்ட்டின் ஸ்கார்ஸேஸி, ப்ரையன் டி பா(ல்)மா, வூடி ஆலன் முதலியவர்களின் படங்கள் வெளியாகத் துவங்கின. அவர்கள் அனைவருமே இளைஞர்கள் என்பதால் இவை அவசியம் சர்ச்சைக்குரிய கருத்துகளையே வைத்து எடுக்கப்பட்டன. இதுதான் ஹாலிவுட்டின் புரட்சியின் துவக்கம். அப்போதுதான் Graduate மற்றும் Bonny and Clyde ஆகிய படங்கள் வெளியாகின.
இவை ஹாலிவுட் புரட்சியில் மிக முக்கியமான பங்கு வகித்தன. உலகெங்குமே மிகப்பெரிய தாக்கத்தை உருவாக்கிய வணிகப்படங்கள் இவை என்று சொல்லமுடியும். இன்னுமே இவை இரண்டின் கதைகளை வைத்துக்கொண்டு பல படங்கள் உலகெங்கும் எடுக்கப்படுகின்றன Bonny and Clyde படத்தை வைத்துக்கொண்டு எடுக்கப்பட்ட ‘சாணிக்காகிதம்’, மிக மிக லேசாக அந்தப் படத்தைத் தொட்டுச்செல்லும் ‘சூது கவ்வும்’ ஆகியவை தமிழ் உதாரணங்கள். The Graduate படத்தின் க்ளைமேக்ஸ் அப்படியே ராஜபார்வையில் வரும்.
1970இல் இந்தப் புரட்சி முழுமையடைந்து, இயக்குநர்களின் கைகளில் ஹாலிவுட் வந்து அமர்ந்தது. ஸ்கார்ஸேஸி, டி பா(ல்)மா, வூடி ஆலன், ஸ்டான்லி குப்ரிக், ரிட்லி ஸ்காட், சிட்னி போலாக், ஃப்ரான்ஸிஸ் ஃபோர்ட் காப்பலா, ஜார்ஜ் லூகாஸ், ஜேம்ஸ் கேமரூன், ஸ்டீவன் ஸ்பீல்பெர்க், ஜான் கார்ப்பெண்டர், ராபர்ட் ஆல்ட்மேன், ரிச்சர்ட் டான்னர், ரால்ஃப் பக்ஷி (லார்ட் ஆஃப் த ரிங்ஸ் படத்தை முதன்முதலில் ஆனிமேஷனாக எடுத்தவர் இவர்தான்), மெல் ப்ரூக்ஸ் போன்ற ஏராளமான இளைஞர்கள் எழுபதுகளின் துவக்கத்தில் ஒரு பெரும்படையாக ஹாலிவுட்டில் நுழைந்து இன்றுவரை கல்ட் படங்களாகக் கொண்டாடப்பட்டுக்கொண்டிருக்கும் பல படங்களை எடுத்துத் தள்ளினார்கள். சிறுவன் டாரண்டினோவுக்கு இந்தக் காலம் பொற்காலமாக விளங்கியது ஆச்சரியமே இல்லையல்லவா?
அக்காலகட்டத்தில், டாரண்டினோவின் அம்மாவும் அவரது வளர்ப்புத் தந்தையும் இரவுகளில் அடிக்கடி வெளியே செல்வது வழக்கம் என்று குறிப்பிடும் டாரண்டினோ, அவர்களுடன் தானும் செல்ல விரும்பியதாகவும், ஆனால் அப்படிச் செல்கையில் வாயை மூடிக்கொண்டு, காதையும் கண்ணையும் மட்டும் திறந்துவைத்துக்கொண்டால் ஏராளமான அருமையான அனுபவங்கள் கிடைக்கும் என்று புரிந்துகொண்டதாகவும், அதனால் அப்படியே நடந்துகொள்ளத் துவங்கியதாகவும், இதனால் பல திரைப்படங்கள்,
உணவு விடுதிகள் முதலிய, மக்கள் ஏராளமாகப் புழங்கிய இடங்களுக்கு அவர்களுடன் அடிக்கடிச் செல்ல முடிந்ததாகவும் விரிவாக எழுதுகிறார். அக்காலகட்டத்தில்தான் MASH, Dollar Trilogy (செர்ஜியோ லியோனி க்ளிண்ட் ஈஸ்ட்வுட்டை வைத்து எடுத்த மூன்று அற்புதமான வெஸ்டர்ன் படங்கள்), Godfather, Dirty Harry, The French Connection, The Owl and the Pussycat, Bullitt போன்ற அட்டகாசமான கல்ட் படங்களைத் திரையரங்கில் பார்த்ததாகக் குறிப்பிடுகிறார். இவையனைத்துமே இன்றுமே மிகச்சிறந்த படங்களாக விளங்குபவையே. அக்காலகட்டத்தில் இவற்றைத் திரையரங்கில் பார்த்த ஒரு சிறுவனின் மனநிலை எப்படி இருந்திருக்கும் என்று என்னால் நன்றாகவே புரிந்துகொள்ளமுடிகிறது.
அப்போது திரையரங்கில் நடந்த சில சுவையான சம்பவங்களையும் விவரிக்கிறார். அதேசமயம், அப்போது பார்த்தவைகளில் சில படங்கள் பிடிக்கவில்லை என்றும் சொல்லி, அவைகளையும் பட்டியலிடுகிறார்.
இந்த எழுபதுகளின் காலகட்டத்தில் படம் பார்த்த பெரிய நபர்கள் எல்லாமே ஐம்பதுகளில் படம் பார்த்துப் பழகியவர்கள் என்பதால் அவர்களால் இப்படங்களில் கையாளப்பட்ட வெளிப்படையான, கறுப்பு நகைச்சுவை ததும்பும் பகடிகளையெல்லாம் சரியாகப் புரிந்துகொள்ள முடியவில்லை என்கிறார் டாரண்டினோ. இந்தப் படங்களில் செக்ஸ் சார்ந்த நகைச்சுவைக் காட்சிகள் வரும்போதெல்லாம் ஒரு மாதிரி நெளிந்துகொண்டு குறும்பாகவே அவர்கள் சிரித்தார்கள் – காரணம் இதெல்லாம் அவர்களின் பல வருடத் திரையனுபவத்தில் இப்போதுதான் முதல்முறை என்பது தன்னுடன் படம் பார்த்த பெரியவர்கள் பற்றிய டாரண்டினோவின் அவதானிப்பு.
அதேசமயம் ஓரினச் சேர்க்கையாளர்களைத் திரைப்படங்களில் காட்டும்போது பெரும்பாலான மக்கள் சிரித்தனர் என்றும் டாரண்டினோ சொல்கிறார். எப்போதோ ஓரினச்சேர்க்கை சார்ந்த காட்சிகள் ஹாலிவுட் படங்களில் இடம்பெறத் துவங்கிவிட்டன. அப்படி 1971இல் வெளியான Diamonds are Forever என்ற ஜேம்ஸ் பாண்ட் படத்தில் (இதுதான் ஷான் கான்னரி நடித்த இறுதியான ஜேம்ஸ் பாண்ட் படம் – இதன்பின்னர் வெகு வருடங்கள் கழித்து Never say Never Again என்று ஒரு unofficial பி கிரேட் ஜேம்ஸ் பாண்ட் படத்தில் அவர் நடித்தார்) காட்டப்பட்ட ஓரினச்சேர்க்கைக் கதாபாத்திரங்கள், பார்வையாளர்கள் சிரிப்பதற்காகவே வடிவமைக்கப்பட்டன என்பது டாரண்டினோவின் கூற்று.
ஆனால் எப்போதும் அப்படி இல்லாமல், சில மிக இயல்பான காட்சிகளும் ஓரினச்சேர்க்கையாளர்களைப் பற்றி எழுதி எடுக்கப்பட்டன என்று சொல்லி, அப்படி ஒரு காட்சியாக, க்ளிண்ட் ஈஸ்ட்வுட் நடித்த கல்ட் படமான Dirty Harry படத்தில் இருந்து ஒரு காட்சியைச் சொல்கிறார். அதையும் 1971இலேயே பார்த்ததாகவும் எழுதுகிறார். அதில் ஒரு காட்சியில், வில்லன் ஒரு Sniper Rifle வைத்துக்கொண்டு, ஒரு உயர்ந்த கட்டிடத்தின் மாடியில் நிற்பான். ஸ்னைப்பரில் இருக்கும் லென்ஸ் மூலமாகக் கீழே ஒரு பூங்காவில் இருக்கும் மக்களைக் கவனித்துக்கொண்டிருப்பான்.
அதில், ஒரு கறுப்பின ஓரினச் சேர்க்கையாளர் காட்டப்படுவார். அவருடன் கௌபாய் போன்ற தோற்றத்தில் மீசையுடன் இன்னொரு ஆண். அவர்கள் இருவரையும் பார்த்தாலே அவர்கள் ஜோடிகள் என்பது நன்றாகவே தெரியும்படியே அந்தக் காட்சி எடுக்கப்பட்டிருக்கும். அக்காலகட்டம் வரையிலும் இந்த ஒரு காட்சிதான் ஓரினச்சேர்க்கையாளர்களை மிகவும் இயல்பாக, எந்தவிதத் தீர்ப்புகளும் அளிக்காதபடி எடுக்கப்பட்டிருந்தது என்று டாரண்டினோ சொல்கிறார். Dirty Harry ஒரு மிகச்சிறந்த ஆக்ஷன் படம். அதில் இயல்பாக இப்படி ஒரு காட்சி வைத்திருந்தது ஆச்சரியமே.
ஆனால், டாரண்டினோவுக்கு அப்போது எட்டு வயது. அந்த வயதில் ஒரு ஓரினச் சேர்க்கையாளரை எப்படி அவரால் கண்டுபிடிக்க முடிந்தது? அந்தக் காட்சி அத்தனை இயல்பாக இருந்தபோதிலும் படம் பார்க்கும் மக்களில் இருந்து நான்கைந்து பேர் சிரித்தனர் – அதில் இவரது வளர்ப்புத் தந்தையும் அடக்கம் – அவர்கள் அனைவருமே Faggot என்று வழங்கப்படும் ஓரினச் சேர்க்கையாளர்களைக் குறிக்கும் கெட்டவார்த்தையைச் சொல்லியே சிரித்தனர் – அதனால்தான் அந்தக் காட்சியைப் புரிந்துகொள்ளமுடிந்தது என்று டாரண்டினோ சொல்கிறார்.
படங்கள் பார்த்துவிட்டு வீடு திரும்புகையில் எப்போதுமே அவரது பெற்றோர்கள் அந்தந்தப் படங்கள் பற்றி விவாதிப்பார்கள் என்றும், அந்த நினைவுகளே இன்றும் நினைவில் கொள்ளக்கூடிய இனிமையான நினைவுகள் என்றும் டாரண்டினோ குறிப்பிடுகிறார். அவர்களது கருத்துகளைத் தனது கருத்தோடு ஒப்பிட்டு, புரியாத பல அம்சங்களைப் புரிந்துகொண்டதாக அவர் சொல்கிறார். அதற்குச் சில உதாரணங்களும் தருகிறார்.
அந்தக் காலகட்டத்தில், பிற சிறுவர்கள் பார்க்கக்கூடாத பல படங்களுக்கும் பெற்றோரோடு போனதைப் பற்றிக் குறிப்பிடும் டாரண்டினோ, இதைப்பற்றித் தனது அம்மாவிடம் கேட்டதாகவும், ‘க்வெண்டின். இவையெல்லாம் வெறும் திரைப்படங்கள்தான். இவற்றை நீ பார்ப்பதைப் பற்றி எனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. நீ செய்திகளைத் தொலைக்காட்சியில் பார்த்தால் மட்டுமே நான் கவலைப்படுவேன். திரைப்படங்கள் உன்னை எந்தவகையிலும் காயப்படுத்தாது’ என்று அவரது அம்மா சொன்னதாக எழுதுகிறார்.
சரி – க்வெண்டின் டாரண்டினோவை அந்த வயதில் எந்தெந்தக் காட்சிகள் எப்படியெல்லாம் பாதித்தன? அவரது மனதில் எப்படிப்பட்ட தாக்கங்களை அவை ஏற்படுத்தின? அடுத்த கட்டுரையில் இவை மட்டும் அல்லாமல், இன்னும் ஏராளமான சுவையான தகவல்களைப் பார்ப்போம்…











