The Talkie
Saturday, April 11, 2026
  • Login
  • Register
  • thetalkie
  • ஆளுமைகள்
  • திரைக்கதைகள்
  • உரையாடல்
  • கட்டுரைகள்
    • இந்தியத் திரைப்படங்கள்
    • உலகத் திரைப்படங்கள்
    • தமிழ்த் திரைப்படங்கள்
    • ஓடிடி திரை
  • தொடர்கள்
    • ட்ரெண்டு கொட்டாய்
    • திரை புத்தகம்
    • ஸ்டார்ட் கேமரா
    • I CALL THE SHOTS
    • குரு தத் 100
    • டேபிள் டாப்
  • தொடர்பு
No Result
View All Result
The Talkie
  • thetalkie
  • ஆளுமைகள்
  • திரைக்கதைகள்
  • உரையாடல்
  • கட்டுரைகள்
    • இந்தியத் திரைப்படங்கள்
    • உலகத் திரைப்படங்கள்
    • தமிழ்த் திரைப்படங்கள்
    • ஓடிடி திரை
  • தொடர்கள்
    • ட்ரெண்டு கொட்டாய்
    • திரை புத்தகம்
    • ஸ்டார்ட் கேமரா
    • I CALL THE SHOTS
    • குரு தத் 100
    • டேபிள் டாப்
  • தொடர்பு
No Result
View All Result
The Talkie
Subscribe
Home கட்டுரைகள்

ரசிக மகா ஜனங்களே

The Talkie by The Talkie
October 17, 2025
in கட்டுரைகள், தமிழ்த் திரைப்படங்கள்
A A
7
rasigamagajanangale
Share on WhatsappShare on FacebookShare on Twitter

Author Icon பி.கே. பழனிகுமார்

தினமும் காலையில் நடைபயிற்சி மேற்கொள்ளும் எங்கள் நடையாளர் கழகத்தில் பல வயதைச் சார்ந்தவர்கள் வருவதுண்டு. அப்படி 73 வயதைக் கடந்த மூத்த உறுப்பினர் எனக்குப் பழக்கம். தினமும் இரண்டு கிலோமீட்டர் நடப்பார்.

பிறகு நாற்பது நிமிடங்கள் உடற்பயிற்சி மேற்கொள்வார். அப்படியான அவரது பயிற்சியின்போது அவருடன் நானும் என் நண்பர் ஒருவரும் அவருடன் பேச்சுக் கொடுப்போம். பேச்சு அரசியல் கலை இலக்கியம் என்று போகும்.

இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் அவர் ஓர் அதிமுக விசுவாசி, மன்னிக்கவும், எம் ஜி ஆர் விசுவாசி. காலை நடைப்பயிற்சிக்கு வரும்பொழுது கூட அதிமுக கரைவேட்டி கட்டித்தான் வருவார். எனக்கு ஞாபகம் இருக்கிறது.

அது கொரொனா காலகட்டத்திற்கும் முன், குறிப்பாய் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்து கட்சிக்குள் சசிகலா, ஈபிஎஸ், ஓபிஎஸ் என்று பிரிவுகளாய் கிடந்த காலகட்டம்.

மதுரைக்காரர்களுக்குப் பொழுதுபோக்கே சக மனிதனிடம் வம்பிழுத்து உரையாடி நட்பை வலுவாக்குவது தானே. நண்பர் பேச்சுகொடுத்தார், “சார், கட்சி இப்ப மூணாகிக்கிடக்கு, நீங்க யார் பக்கம்?”

அந்த மூத்த உறுப்பினருக்கு எதுவும் சங்கடம் ஆகிவிடுமா என்று நான் யோசிக்கும் கால இடைவெளி கூட அவர் எடுத்துக்கொள்ளவில்லை. “இது என்ன கேள்வி? இரட்டை இலை எங்கே இருக்கோ, அது தான் எங்கள் கட்சி” என்றார். “ஏன்?” என்றேன்.

“உங்களுக்குலாம் தெரியாதுல, நாங்கள்லாம் தலைவரு(எம் ஜி ஆர்)க்காக அரசியல் வந்தவங்க. அவர் அரசியலுக்குப் போகணும்னு முடிவெடுத்தப்ப நாங்களும் அவர் கூட நிண்டோம், தலைவர் ஜக ஜகனு சிவப்பா மஞ்சளா இருப்பார், ஷூட்டிங்க்ல அந்த லைட்டு சூட்டுக்குப்பட்டு அவருடம்புல வியர்வை அப்படியே கொப்புளிக்கும், அப்படி இரத்தத்தை வியர்வையாக்கி ‘எங்களுக்காக’ நடிச்சவர் தலைவர், அவருக்காக அன்பே வா, நாடோடி மன்னன் படத்துக்காகலாம் இதே மதுரைக்குள்ள சிவாஜி ஆட்கள் கூடவும், கருணாநிதி க்ரூப்புக்கூடவும் சண்டை போட்டுருக்கோம். ஒரு கட்டத்துல தனிக்கட்சி ஆரம்பிங்கனு நாங்க சொல்லித்தான் தலைவர் வந்தார், நாங்களும் அவர்கூட நிண்டோம்” என்று கூறிவிட்டு மற்றவற்றையெல்லாம் பகிர்ந்தார், அது எல்லாம் அரசியல். இதில் குறிப்பிடவேண்டியது எம் ஜி ஆர் இறந்த பிறகும், அவரது அடையாளமான இரட்டை இலை சின்னம் எங்கே இருக்கிறதோ அங்கே நாங்கள் இருக்க வேண்டும் என்ற அவரது பிடிவாதம் எம் ஜி ஆர் என்ற நடிகரின் மீதான பிரியங்களின் வழி வந்து சேர்ந்ததுதான்.

இந்த நினைவுகளை இங்குப் பகிரக் காரணம், எம் ஜி ஆர் என்ற பெயருக்குப் பின்னால் வரும் சொற்றொடர்கள் பற்றி எழுதத்தான்,

“ எம் ஜி ஆர்க்குக் கூடிய கூட்டம் மாதிரி வராது,”

“ எம் ஜி ஆர் மாதிரி நடிக்க வந்துட்டு அப்படியே டைரக்டா முதலமைச்சர் ஆகுறதுலாம் எம் ஜி ஆருக்குத் தான் சரி”

“இவர், இன்னொரு எம் ஜி ஆர் ஆவாரா?”

இது போன்ற சொற்றொடர்கள் எல்லாம் என்னைக் கொண்டு போய் நிறுத்திய இடம் “ எம் ஜி ஆருக்கு எப்படி கூட்டம் கூடியது?”

எம் ஜி ஆருக்குப் பிறகு உச்ச நடிகர் அந்தஸ்தைப் பெறும் ரஜினி அரசியலுக்கு நகரவில்லை. எம் ஜி ஆரைப் பின்பற்றி வந்த விஜயகாந்த் அவரளவிற்கு ஜொலிக்கவில்லை, இப்போது விஜய்?

விஜய்க்கு வரும் கூட்டமும், எம் ஜி ஆருக்குக் கூடிய கூட்டமும் ஒற்றுமை என்ன வேற்றுமை என்ன?

இந்த ஒப்பீடே தேவையற்றது என்பதுதான் என் நிலைப்பாடு. இருவரும் காலத்தால் வேறுபட்டவர்கள் ஆனால் மக்களின் ரசிப்புத்தன்மையோடு பார்த்தால் சில ஒருமித்த கண்ணோட்டங்களை அலசலாம். ஏனென்றால் மக்கள் மாறினாலும், மனிதனுக்குரிய ரசிப்புத்தன்மை மாறுவதில்லை, அதிலும் திரைப்படங்கள் மீதான ரசிப்புத்தன்மை மாறுவதில்லை.

எம் ஜி ஆருக்குப் பிறகு எந்த நடிகரின் வளர்ச்சியைப் பற்றிப் பேசினாலும் உலகமயமாக்கல் என்ற நிகழ்விற்குப் பின் என்ற வார்த்தையையும் சேர்த்துத்தான் பேச வேண்டும். இதற்கும் அதற்கும் என்ன சம்பந்தம்? உலகமயமாக்கல் என்ன செய்துவிட்டது என்றால், சந்தைகளின் தன்மையை மாற்றிவிட்டது. குறிப்பாக இரண்டாம் உலகப்போருக்குப் பின்பான மாற்றம் அதிவேகத்தில் நடந்தது. 1950 -60, 1960-70, 1970 களுக்குப் பின் என்று உலகத்தின் வளர்ச்சியைப் பார்த்தால் அதில் ஊடுருவி வரும் ஒரு நூலிழை கார்ப்பரேட்களின் ஊடுருவல்.

1950களில் சந்தை, அது என்னவாக வேண்டுமானாலும் இருக்கட்டும், இதை விற்க வேண்டும் என்று திட்டம் போட்டு அதை மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்த்தார்கள். பொருட்களை மட்டுமல்ல, கொள்கைகளையும்.  மக்கள் கையில் பல வாய்ப்புகள் இருந்தன. தேர்ந்தெடுக்கும் உரிமை அவர்களிடத்தில் சுதந்திரமாக இருந்தது. அவர்களாகவே நம் பக்கம் திரும்பும்படியான தத்துவார்த்தமான பிரச்சாரங்கள் மக்களை நோக்கி நகர்ந்துகொண்டிருந்தன. ஈர்ப்பாய் இருந்த பிரச்சாரம், சமூக நீதியுடன் கூடிய பிரச்சாரம் போன்றவற்றில் மக்களின் கவனம் குவிந்தது. மக்கள் முன் இருந்த தத்துவங்களில் சமூக நீதி, பொருளாதார சமத்துவம், ஆதிக்க மனோபாவம் போன்றவற்றில் தமக்கு இயைந்த ஒன்றைக் கடைபிடித்தனர். அப்படியான தத்துவங்களைப் பரப்பியபடி தூதுவர்களாக அரசியல், கலை (எழுத்து, பாட்டு இவற்றுடன் கூடிய நாடகங்கள், சினிமாக்கள்) தொழில் துறைகளைச் சார்ந்தவர்கள் திகழ்ந்தார்கள், அவர்களை நோக்கி மக்கள் ஈர்க்கப்பட்டதற்கான காரணமாக திகழ்ந்தது கருத்தியலும், அழகியலும் அது சார்ந்திருந்த கலையும்.

இந்த நிலைமை 1990களுக்குப் பிறகு மெதுவாக மாறியது. உலகமயமாக்கலின் வீரியம் சந்தையை மாற்றிப்போட்டதோடு மட்டுமல்லாமல் மக்களின் நுகரும் தன்மையையும், அவர்களது கருத்தியல் சார்பான பார்வையையும் அசைத்தது. இதை விற்கலாம் என்பது போய், மக்களை இதைத்தான் வாங்க வைக்க வேண்டும் என்ற கார்ப்பரேட் உத்தி உள்ளுக்குள் வந்தது (இப்போது வரை அது தான் நிகழ்கிறது) 90களில் கடைகளில் குளிர்பானம் என்று கேட்டால் பெப்சியோ, கோக் மட்டுமே கிடைத்துக்கொண்டிருந்தன, மக்கள் மனதில் குளிர்பானம் என்றால் இந்த இருவகைதான் என்ற எண்ணத்தை விதைத்தது போல் தான் எல்லா விதங்களிலும் சந்தை மாறியது. நாம் என்ன வாங்க வேண்டும் என்பதையும் (சமூக வலைத்தளங்களில் நாம் தேடுவதை உச்சரிப்பதை அடிக்கடி கண்ணில் காட்டும் வித்தை) நாம் என்ன விரும்ப வேண்டும் என்பதையும் நம் முன் கட்டமைக்கும்பொழுது நம் சுயசார்பும், நமக்கான சுய கருத்தியலும் தேய்ந்துவிடுவதை உணர ஆரம்பித்திருக்கிறோம்.

இந்த இரண்டு காலங்களில் இருந்து தான் எம் ஜி ஆருக்கும் விஜய்க்கும் வரும் கூட்டங்களைப் பற்றி அலச வேண்டியுள்ளது.

எம் ஜி ஆருக்குத் திரைக்கு வந்த ரசிகர்கள் மனதில் எம் ஜி ஆர் ஒரு உச்ச நட்சத்திரமாக அமர்வதற்கு முன் சமூகத்தில் அப்போதைக்கு இருந்த பேசுபொருளின் நடுநாயகமாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சமூகத்தில் எப்போதும் அவலங்கள் இருந்துகொண்டுதான் இருக்கும், அதில் இரண்டு வகை. ஒன்று அந்த அவலங்களை ஏற்படுத்துவோர் அல்லது கண்டு பொறுமையாகப் போவோர். இன்னொன்று அவலங்களைக் கண்டு பொங்கும் கூட்டம். அரசியலில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி. நான் சொன்னது போல 1950களில் தத்துவார்த்த பார்வைகளின் மீது ஈர்ப்பிருந்தது. காங்கிரஸை எதிர்த்த அண்ணாவின் கொள்கைகள் சமூகம் முழுதும் பரவின. கொள்கை ரீதியான, தத்துவார்த்த சமூகத்தில் எம் ஜி ஆர் என்ற சாதாரண நடிகர், அண்ணாவைத் தலைவராக ஏற்றுக்கொண்டு கட்சியில் சேர்கிறார். அண்ணாவிற்குக் கூடிய இளைஞர்களின் மத்தியில் எம் ஜி ஆரும் இருக்கிறார். திரையில் தோன்றுகிறார். சமூகத்திற்கு எது தேவை என்று அண்ணா கூறிக்கொண்டிருந்தாரோ அதைத் தான் சார்ந்திருக்கும் கலையில் சேர்த்துக்கொள்கிறார், காட்சி ஊடகம் எளிதில் பற்றிக்கொள்ளும் என்பதால் எம் ஜி ஆரால் ஏற்கனவே இருக்கும் இளைஞர்களிலிருந்து மற்றும் பல பொது மக்களைக் கவர முடிகிறது.

எம் ஜி ஆர் பொதுமக்களைக் கவர்ந்த காலகட்டத்தில் சிவாஜியும் கவர்கிறார், ஆனால் எனக்கிருக்கும் துன்பத்தை எப்படி இந்த மனுஷனும் அனுபவிக்கிறான் பாரு என்று சிவாஜியைப் பார்த்து ரசித்தவர்கள் மத்தியில் இவ்வளவு துன்பத்தை மறக்க வைத்து வேறொரு நல்ல மகிழ்ச்சியான வாழ்வுண்டு என்று நடித்த எம் ஜி ஆருக்கு ஈர்ப்பு அதிகம் கிடைத்தது. (இதே கதை தான் ரஜினிக்கும், கமலுக்கும்).

மூன்று வயதிலிருந்தே நாடகத்தில் இருக்கும் எம் ஜி ஆருக்கு தான் சினிமா சென்றபோதிலும் ஊர்முழுக்க நாடகங்களை (இடிந்த கோயில், இன்பக்கனவு) நடத்தி அனுபவங்களைக் கண்டுகொண்டார். அதன் மூலம் சாமான்யன் தன் மீது என்ன வகையான எதிர்பார்ப்புகளை வைத்திருந்தான் என்பதை நாடி பிடித்தவர் எம் ஜி ஆர். சமூக வலைத்தளங்கள் இல்லாத காலகட்டங்களில் “வைரல்” என்ற வார்த்தைக்கே அர்த்தம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனாலும் எம் ஜி ஆர் தன்னைப் பற்றிய (வைரல்) செய்திகளை மக்களிடையே அனுமதித்தார்.

ஒரு முறை எம் ஜி ஆர் காரில் சென்ற போது… என்று ஆரம்பிக்கும் பல கதைகள் உண்டு. அவற்றில் முப்பது சதவிகிதம் கட்டமைக்கப்பட்டவை என்றாலும் கூட மீதி எழுபது சதவீதம் அது உண்மையாயிருக்குமோ என்று சந்தேகப்படும்படியாய் நடந்துகொண்டவர் எம் ஜி ஆர். அந்த இயல்பு அவருக்கு இருந்தது. இது மக்கள் எம் ஜி ஆர் மீது நம்பிக்கை வைக்கவும் பாசம் வைக்கவும் காரணமாக இருந்தது.

தொழிலாளி படத்தில் ஆளாளுக்குப் பணம் போட்டு கூட்டுறவு பஸ் சர்வீஸ் நடத்துவது போன்ற காட்சிகளை வைத்தது வெறும் புனைவல்ல என்பதற்கேற்றபடி சத்யா ஸ்டூடியோவை வாங்கி அதன் பங்குகளை மற்றவர்களுக்கும் கொடுத்தது தான் என்று எம் ஜி ஆர் ரசிகர் ஒருவர் நினைவுகூர்கிறார். எம் ஜி ஆரின் நடிப்பில் எது புனைவு, எது அபுனைவு என்ற வித்தியாசம் தெரியாதபடி எம் ஜி ஆர் பார்த்துக்கொண்டது மக்களை வெகுவாக ஈர்த்தது. இதை விட இன்னொரு முக்கியமான ஒன்று, எம் ஜி ஆர் மக்களுடன் மக்களாக இருக்க யோசித்ததே இல்லை. அவர் கன்னத்தைக் கிள்ளலாம், கட்டியணைக்கலாம், பாட்டிகளிடம் போய் நின்றால் கதை சொல்வார்கள், அதை அவர் கேட்பார், முத்தம் கொடுப்பார், வாங்குவார், குறவர் ஒருவர் வெற்றிலைச்சாறுடன் முத்தம் கொடுக்க, ஷீட்டிங்க் மேக்கப்பில் கரை பட்டுவிட்டாலும் கர்சிப்பால் தொடைத்துவிட்டு கட்டிப்பிடித்து ஃபோட்டோக்கு போஸ் கொடுத்தது எல்லாம் எம் ஜி ஆர்க்கு வந்த கூட்டத்திற்கான முதலீடு. அவர் மதுவிற்கு எதிரானவர் என்று நடித்தது பேசியது எல்லாம் தாய்க்குலங்களை ஈர்த்த முதலீட்டு உளவியல்.

இது எல்லாம் 1950களில் நிகழ ஏதுவான சமூக சூழல் இருந்ததும் காரணம்.

இப்போது விஜய்க்கு எப்படியான கூட்டம் என்பதைப் பார்த்தால், நான் சொன்ன உலகமயமாக்கல் நுழைத்த கார்ப்பரேட்யுத்திகளைக் கணக்கில் கொள்ள வேண்டும்.

எம் ஜி ஆர் போன்று விஜய் தத்துவார்த்த இயலின் அடிப்படையில் மக்களிடம் வரவில்லை. 1950களில் இருந்த கருத்தியல், அழகியல், கலை கொஞ்சம் மாறுதலாகி 1990களில் அழகியல்,கலை மற்றும் கருத்தியல் என்று ஆகிக்கொண்டது. ஒரு படத்தை வெற்றி பெறவைப்பது வசூல் பிறகு நடிகர்கள் அதன் பிறகே கதை, அதற்கடுத்து கதை சொல்லும் நீதி. சமூக வலைத்தளங்கள் பெரிதும் ஊடகங்களாக பணியாற்றிக்கொண்டிருக்கின்றன.

ஒரு சாதாரண புரோட்டா கடைக்கு இன்ஸ்டாகிராமில் இருக்கும் வீடியோ பார்த்து கூட்டம் வருகிறது. வாய்மொழி அல்லது அனுபவ வழி என்பது தாண்டி சமூகவலைதள தாக்கத்தினால் விளைவுகள் ஏற்படுகின்றன.

வைரல் எது ஆகிறதோ, அதுவே வலுக்கிறது என்ற சித்தாந்தத்துடன் தான் சந்தை இயங்கிக்கொண்டிருக்கிறது. காட்சி ஊடகத்தில் எது நிலைநிறுத்தப்படுகிறதோ அதுவே பிரபலம் என்றும், எது அதிகமாக கிடைக்கிறதோ அதுவே நல்ல பொருள் என்றும் சந்தை மனிதர்களைச் சிந்திக்க வைக்கிறது.

லூலு மால் திறக்கிறார்கள். வைரல் ஆகிறது. எல்லாரும் போகிறார்கள், நாமளும் போவோம் என்ற கொண்டாட்ட மன நிலை மக்களிடையே பரவுகிறது. எதற்காக அங்குப்போகிறோம் என்பது எல்லாம் தத்துவார்த்த கேள்விகள். அவை மக்கள் மனதில் பின்னடவைச் சந்திக்கின்றன.

மதுரைக்கு கிட்டத்தட்ட 17 வருடங்களுக்கு முன் ஒரு பிரபல துணிக்கடை வந்தது. மக்கள் கூட்டம் அலைமோதியது. அதில் பாதி பேர் அங்கு போடப்பட்ட எஸ்கலேட்டரைப் பார்க்க வந்தார்கள், மீதி சிலர் எல்லாரும் வருகிறார்கள் நம்மளும் போவோம் என்று போனார்கள். ( இதை ரஜினியின் சிவாஜி படம் வந்த போது எங்களூர் கமல் ரசிகர் சொன்னார், மதுரையில் இரண்டு வகை, ஒன்று சிவாஜி ரிலீஸ் பார்த்தவர்கள், இன்னொன்று சிவாஜி படம் பார்க்காதவர்கள்).

அறிவியல் ரீதியாக இது எல்லாம் சமூக வலைத்தள தாக்கத்தில் ஏற்படும் நிகழ்வுகளை “மாஸ் ஹிஸ்டீரியா” என்று வகைப்படுத்துகிறார்கள். துணிக்கடை, புரோட்டாக்கடை வரிசையில் திரைப்படங்களும், நடிகர்களும் வந்து சேர்ந்துவிடுகிறார்கள்.

அதன் விளைவுதான் ஒரு திரைப்படம் வந்ததும், அது குறித்த விமர்சனங்களும் சமூக வலைத்தளத்தில் பரவுவதும். ஒரு விசயத்தைப் பற்றிப் பேச வேண்டும் என்பது ஒரு கலாச்சாரமாக, தனி மனித அடையாளமாக சிலர் உருவகித்துக்கொள்கிறார்கள்.

விஜயின் ரசிகர்களில் சிலரை இப்படி வகைப்படுத்திக்கொள்ளலாம். கரூரில் அவரது ரசிகர்களின் தள்ளுமுள்ளுவைப் பார்க்கும்பொழுது இது தான் புரிகிறது.

நரம்பியல் துறையில் பல ஆராய்ச்சிகள் நடந்துகொண்டிருக்கின்றன, அவற்றில் ஒன்று Functional magnetic resonance imaging( fMRI).

 அந்த ஆய்வின்படி காட்சி ஊடகத்தில் ரசிகர்களாக இருப்பவர்களது மூளை மற்றும் உளவியல் ஆய்வுகள் நடத்தப்படுகின்றன, அதன்படி ரசிகராக இருப்பதால் மூளையின் சில (அக்கும்பன்ஸ், ஸ்ட் ரேட்டியம்) குறிப்பாக வெகுமதி அளிக்கும் பகுதிகள் தூண்டப்படுகின்றன. நாம் பெருமையாக உணர்கிறோம் என்பது ஒரு வெகுமதி உணர்வு தானே. இந்த மாதிரியான தூண்டல்கள் அதிகபபடும்பொழுது stalking ஆகிறது என்று நரம்பியல் துறை நிபுணர்கள் கூறுகிறார்கள்.

எம் ஜி ஆர் திமுகவில் இருக்கிறார், நடிக்கிறார், உச்ச நட்சத்திரம் ஆகிறார், திமுகவிலிருந்து விலக்கப்படுகிறார். அன்று எம் ஜி ஆர் ஷீட்டிங்கில் இருக்கிறார். எம் ஜி ஆரைப் பார்க்க சத்யா ஸ்டூடியோவிற்கு ரசிகர்கள் குவிகிறார்கள். கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட துரோக நிகழ்வை தலைவன் எப்படி கையாளப்போகிறானோ என்று குவிகிறார்கள். எம் ஜி ஆர் வருகிறார். ரசிகர்களுடன் கலக்கிறார். நடு ரோட்டில் நடக்கிறார். தோள்களிலும், கைகளிலும் எம் ஜி ஆரைத் தூக்குகிறார்கள். கொண்டாடுகிறார்கள். கூட்டம் கைகளுக்குள் இருக்கிறது. கட்டுக்குள் இருக்கிறது. நரம்பியல் துறை அப்போது வளர்ச்சியடைந்து ஆய்வுகள் நடத்தாவிட்டாலும் அதே தூண்டல் விளைவுகள் நடந்திருக்கும். ஆனால் கட்டுக்கு அடங்காத கூட்டமாக இருக்கவில்லை, காரணம் எம் ஜி ஆர் கருத்தியல் ரீதியாக ரசிகர்களைத் தன் பக்கம் வரவழைத்தார். அதனால் தான் அண்ணாவின் பேச்சுக்கும் கலைஞரின் பேச்சுக்கும் மயங்கிருந்த திமுக தொண்டர்களையும் தன் பக்கம் ஈர்க்க முடிந்தது.

ஒரு நடிகனுடன் உணர்வு ரீதியாகவும்( emotional connect) , பொழுதுபோக்கு (entertaining connect) ரீதியாகவும் ரசிகத்தன்மையில் ரசிகன் ஒன்றிப்போகலாம். உணர்வு ரீதியாக வந்தவர்கள் நிலைத்து நின்றுவிடுகிறார்கள். காரணம் அவர்களது பார்வையில் அவர்களது நாயகன் பின்பற்றும் கொள்கை, தத்துவம் அடித்தளமாக அமைந்துவிடுகிறது. சக ரசிகன் தாண்டி, சமூகமே அவரைக் கொண்டாடவேண்டும் என்ற ஆர்வம் மேலோங்கி சமூகமாக இயங்குகிறார்கள். கொள்கையை முன்வைத்து தலைவனை முன் நிறுத்தி மற்ற போட்டிகளை நிராகரிக்கிறார்கள்.

பொழுதுபோக்கு ரீதியாக ஒன்றிணைபவர்கள் தலைவனின் அழகைக் காணவும், காரைக் காணவும், கூட்டத்திற்குள் இருப்பதைப் பெருமையாக உணர்பவர்களாகவும் இருக்கிறார்கள், சக ரசிகன் பற்றிய ஆர்வம் இல்லாமல் ஆகிவிடுகிறார்கள். நெரிசல்களும், போட்டிகளும், சக நடிகர்களுடன் வாக்குவாதங்களும், போட்டிகளையும் ஏற்படுத்திக்கொள்கிறார்கள், தன்னை முன்னிலைப்படுத்தி தான் பிரபலம் என்பதை நிரூபிக்க பாடுபடுகிறார்கள். fMRI படி தூண்டல் விளைவுகளுக்கு உள்ளாகிறார்கள். காரணம், தத்துவார்த்த பார்வைகளில் அவர்களைக் கொண்டு செலுத்த வில்லை அல்லது அதற்கான காலம் இன்னும் வரவில்லை. 

கட்டுரையின் நான்காவது பாராவில் முதியவர் சொல்லியிருப்பார், தலைவர் எங்களுக்காக நடித்தார் என்று. அந்த “எங்களுக்காக” என்று possess அதாவது தனக்கானவர் என்ற எண்ணத்தை விதைத்தது தான் எம்ஜியாருக்குக் கூட்டம் கூட சாத்தியங்கள் ஆனதே தவிர சமூக வலைத்தளங்களோ, மிகைப்படுத்தப்பட்ட மீம்களோ இல்லை.

எம் ஜி ஆரின் பெரிய பிளாக்பஸ்டரான நாடோடி மன்னனில் “என்னை நம்பாமல் கெட்டவர்கள் நிறைய உண்டு, நம்பி கெட்டவர் இன்றுவரை இல்லை” என்பதற்கும்

விஜயின் பிளாக்பஸ்டரான போக்கிரியில் “ஒரு தடவ முடிவு பண்ணிட்டா என் பேச்ச நானே கேட்கமாட்டேன்“ என்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு.

இப்போது கட்டுரையின் முதல் பத்தியை மறுபடியும் படியுங்கள், ஒரு முதியவர் உடற்பயிற்சி செய்துகொண்டிருப்பதை வாசித்திருப்பீர்கள், தலைவர் சொன்னார்ப்பா என்றதற்காக தன் 80 வயதிலும் செய்கிறார்.

இப்படியான ரசிகர்கள்தான் கரூரில் வந்திருந்தார்களா என்று காலம் சொல்லட்டும்.

Author Image

பி.கே பழனிக்குமார்

மருந்தக நிறுவனம் நடத்தி வருகிறார். கட்டுரையாளர்.

About The Author

The Talkie

The Talkie

See author's posts

Next Post
Kaayal Movie

காயல் கானகத்தின் கானல்

Please login to join discussion

Archives

  • Trending
  • Comments
  • Latest
Thug_Life_

Thug Life – ஒரு பார்வை

June 6, 2025
AMADEUS திரைக்கதை

AMADEUS திரைக்கதை

March 15, 2025
start camera

ஸ்டார்ட் கேமரா! வின்சென்ட் மாஸ்டர் – 01

March 19, 2025
Irunda-Pakkam

தொழில்நுட்பத்தின் இருண்ட பக்கங்கள்: திரைப்படங்கள் சொல்லும் உண்மை.

March 16, 2025
Thug_Life_

Thug Life – ஒரு பார்வை

11
rasigamagajanangale

ரசிக மகா ஜனங்களே

7
gurudutt-02

குருதத்தின் ப்யாஸா- உயிர்த்தெழுந்த தேவதை        

5
start camera

ஸ்டார்ட் கேமரா! வின்சென்ட் மாஸ்டர் – 01

4
table top-4-5

டேபிள் டாப் 04 & 05

January 24, 2026
bella darr

பேலா டார் – காட்சியை அனுமதித்தவர்

January 24, 2026
trend-kottaiye-11

ட்ரெண்டு கொட்டாய் 11 -நான் (திரை) காவிய நாயகன்

January 24, 2026
table top-3

டேபிள் டாப் 03

January 24, 2026
The Talkie

சினிமா அற்புதமான ஊடகம். இதனை அறிந்து கொள்ளவும், ரசிக்கவும் உருவாக்கப்பட்டிருக்கிற இணைய இதழ் இது. மேதைகளின் நேர்காணல்கள், திரைக்கதைகள், வெவ்வேறு மொழித் திரைப்படங்கள், ஆளுமைகள், திரைப்படப் புத்தகங்கள் , சினிமா ரசனை என சினிமா உலகத்தோடு இணைந்திட எங்களுடன் இணைந்திடுங்கள்.

Categories

  • I CALL THE SHOTS
  • ஆளுமைகள்
  • இந்தியத் திரைப்படங்கள்
  • உரையாடல்
  • உலகத் திரைப்படங்கள்
  • ஓடிடி திரை
  • கட்டுரைகள்
  • குரு தத் 100
  • டேபிள் டாப்
  • ட்ரெண்டு கொட்டாய்
  • தமிழ்த் திரைப்படங்கள்
  • திரை புத்தகம்
  • திரைக்கதைகள்
  • தொடர்கள்
  • ஸ்டார்ட் கேமரா

Site Navigation

  • About Us
  • Terms and Conditions
  • Privacy Policy
  • Returns and Cancellation
  • Shipping Policy
  • FAQ
table top-4-5

டேபிள் டாப் 04 & 05

January 24, 2026
bella darr

பேலா டார் – காட்சியை அனுமதித்தவர்

January 24, 2026
trend-kottaiye-11

ட்ரெண்டு கொட்டாய் 11 -நான் (திரை) காவிய நாயகன்

January 24, 2026

© 2026 Thetalkie - All rights reserved

Welcome Back!

Sign In with Google
OR

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Sign Up with Google
OR

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • thetalkie
  • ஆளுமைகள்
  • திரைக்கதைகள்
  • உரையாடல்
  • கட்டுரைகள்
    • இந்தியத் திரைப்படங்கள்
    • உலகத் திரைப்படங்கள்
    • தமிழ்த் திரைப்படங்கள்
    • ஓடிடி திரை
  • தொடர்கள்
    • ட்ரெண்டு கொட்டாய்
    • திரை புத்தகம்
    • ஸ்டார்ட் கேமரா
    • I CALL THE SHOTS
    • குரு தத் 100
    • டேபிள் டாப்
  • தொடர்பு
  • Login
  • Sign Up
  • Cart

© 2026 Thetalkie - All rights reserved

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?