The Talkie
Thursday, April 9, 2026
  • Login
  • Register
  • thetalkie
  • ஆளுமைகள்
  • திரைக்கதைகள்
  • உரையாடல்
  • கட்டுரைகள்
    • இந்தியத் திரைப்படங்கள்
    • உலகத் திரைப்படங்கள்
    • தமிழ்த் திரைப்படங்கள்
    • ஓடிடி திரை
  • தொடர்கள்
    • ட்ரெண்டு கொட்டாய்
    • திரை புத்தகம்
    • ஸ்டார்ட் கேமரா
    • I CALL THE SHOTS
    • குரு தத் 100
    • டேபிள் டாப்
  • தொடர்பு
No Result
View All Result
The Talkie
  • thetalkie
  • ஆளுமைகள்
  • திரைக்கதைகள்
  • உரையாடல்
  • கட்டுரைகள்
    • இந்தியத் திரைப்படங்கள்
    • உலகத் திரைப்படங்கள்
    • தமிழ்த் திரைப்படங்கள்
    • ஓடிடி திரை
  • தொடர்கள்
    • ட்ரெண்டு கொட்டாய்
    • திரை புத்தகம்
    • ஸ்டார்ட் கேமரா
    • I CALL THE SHOTS
    • குரு தத் 100
    • டேபிள் டாப்
  • தொடர்பு
No Result
View All Result
The Talkie
Subscribe
Home ஆளுமைகள்

ரஜினி 75

The Talkie by The Talkie
December 18, 2025
in ஆளுமைகள்
A A
0
rajini
Share on WhatsappShare on FacebookShare on Twitter
Author Icon ஏழுமலை வெங்கடேசன்

கலைஞன் என்ற வகையில் எடுத்துக் கொண்டால் ரஜினியின் வாழ்வு இந்தியத்  திரை உலக வரலாற்றில் ஒரு அதிசயம் என்றே அடித்து சொல்லலாம். ரஜினிக்கு வயது 75. இந்த முக்கால் நூற்றாண்டில் அரை நூற்றாண்டு என்பது திரையில் தோன்றி தடம் பதித்து வரும் ஆண்டுகளின் ஆயுட்காலம் . 

எம்கே தியாகராஜ பாகவதர்-பி யு சின்னப்பா காலத்தில் இருந்த தலைமுறையை தங்கள் வசம் பார்க்க வைக்க எம்ஜிஆர்-சிவாஜி  காலம் பல வித்தியாசங்களைக் காட்டியது.

அவர்கள் கால ஆதிக்கத்தை அடுத்தத் தலைமுறைக்கு கடத்திச் செல்ல கமலுடன் பெரும் பங்கு கிடைத்தது ரஜினிக்குத் தான். அதனை நிறைவேற்றி வெகு சாமர்த்தியமாக 45 ஆண்டுகளுக்கு சகாப்தத்தை தக்க வைத்துள்ளார் ரஜினி.

சில நிகழ்ச்சிகளில் நாம் அவரை நேரில் பார்த்து இருந்தாலும் அவரது போயஸ் தோட்ட , வீட்டில் சந்தித்து பேசியது ஒரு முறை தான்.

‘பாட்ஷா’ படம் வெளியான பின் அரசியல் சூட்டில் மாட்டிக்கொண்ட 1995 ஆம் ஆண்டு … அதுவும் அவருடைய பிறந்த நாளான  டிசம்பர் 12-ல், பத்திரிகை குருநாதர்கள் அழைத்துச் செல்ல  வீட்டில் பார்த்தோம். வாழ்த்து சொன்னோம்.

அரசியல் சூடு காரணமாக, அப்போது எல்லா மாவட்டங்களில் இருந்தும்  ரஜினி மன்ற செயலாளர்கள் தலைமையில் ரஜினி ரசிகர்கள் கட்டுக்கடங்காத கூட்டமாய் திரண்டு இருந்தனர் 

அங்கே வாழ்த்துவதற்காக யாருமே எதிர்பார்க்காத வகையில் அந்த வயதிலும் வீல்சேரில் வந்தார் பழம்பெரும் இயக்குநர் ஸ்ரீதர். அவரை அழைத்துச் செல்லும் பாக்கியமும் நமக்கு கிடைத்தது.

வீட்டுக்குள் தகவல் அறிந்து வெளியே பதறியடித்துக் கொண்டு ஓடி வந்த ரஜினி,”சொல்லியிருந்தால் நானே வீட்டுக்கு வந்து இருப்பேனே?” என்று ஸ்ரீதரிடம் கோபித்துக் கொள்ள, “பர்த்டே பாயை நான் தான் போய் சந்திக்க வேண்டும்” என்று ஸ்ரீதர் சொல்ல, அது ஒரு நெகிழ்ச்சியான தருணம்.

சுய புராணத்தை நிறுத்திக் கொண்டு ரஜினி விஷயத்திற்கு வருவோம்.

வாழ்க்கையை அதன் போக்கில் ஓடவிட்டு காட்டுத்தனமாய் உழைக்கின்ற வெறி  இருந்தால் மட்டும் போதும், எட்ட நினைத்ததை காட்டிலும் பல மடங்கு உச்சத்திற்கு கொண்டு போய் விட்டு விடும். இன்றைக்கு சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுகிற ரஜினிகாந்த் வாழ்க்கையும் அப்படித்தான், அவரே நினைத்துப் பார்க்காத உச்சத்தைத் தொட்டிருக்கிறது.

ரஜினியின் சினிமா பயணத்தை பொறுத்தவரை பாட்ஷாவுக்கு முன் பாட்ஷாவுக்கு பின் எனப் பிரித்துப் பார்த்தே ஆக வேண்டும். காரணம், நம்மைப் பொருத்தவரை பாடட்ஷாவுக்கு முந்திய பகுதிதான் உண்மையிலேயே அதகளம் ஆனது. நாம் ரசித்து ரசித்து கொண்டாடி தீர்த்த பகுதி அது.

20 ஆண்டுகளில் 150 படங்களில் நடித்து முடித்த ரஜினிக்கும் அடுத்த 30 ஆண்டுகளில் 19 பிரம்மாண்டமாய் கொடுப்பதற்கு பெரும்பாடுபட்ட ரஜினிக்கும் இடையே மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம்.

நமக்குத் தெரிந்து ரஜினி என்றால் அதிகமாக சினிமா மூலம் திரும்பத் திரும்ப வந்து போனது 1978ல்தான். தாய் மீது சத்தியம், இளமை ஊஞ்சலாடுகிறது, பிரியா போன்ற படங்கள்.. எம்ஜிஆர் படங்களை அதிகமாக தயாரித்து வெளியிட்ட தேவர் பிலிம்ஸ் தயாரித்தது என்பதாலேயே தாய் மீது சத்தியம் மீது அப்படி ஒரு ஒரு மோகம்.. ‘இளமை ஊஞ்சலாடுகிறது’ படம்தான் ரஜினி என்ற வித்தியாசத்தை, ஸ்டைல் மன்னனை மீண்டும் மீண்டும் அலசிப் பார்க்க வைத்தது.

எம்ஜிஆர் திரைப்பயணம் முடிந்து அவர் முதலமைச்சர் ஆகிவிட்ட நிலையில்  ஏற்கனவே ரஜினி நடித்து இருந்த பல படங்களை மறு வெளியீட்டில் பார்க்கும் ஆர்வம் அதிகமானது. 1975ல் அறிமுகமாகி 1978 வரை, அதாவது மூன்றே ஆண்டுகளில்  ரஜினி நடித்த படங்கள் அத்தனையும் துவம்சம்..

நான் பிறந்த  காஞ்சிபுரத்தில் லட்சுமி, ராஜா, கண்ணன், கிருஷ்ணா ஆகிய நான்கு தியேட்டர்களிலும் ஏகப்பட்ட ரஜினி படங்களை ரிலீஸ்ல் பார்த்த அனுபவம்.

இதேபோல வந்தவாசியில் சீனிவாசா பாலன் தியேட்டர்களும் பல ரஜினி படங்களை நமக்கு விருந்து படைத்து இருக்கின்றன.

இங்கே இன்னொரு விஷயத்தையும் சொல்ல வேண்டும். காஞ்சிபுரத்தில் 1940-களில் துவங்கப்பட்ட முருகன் என்ற பழைய தியேட்டர் உண்டு.. ரஜினி கன்னடம் மற்றும் தெலுங்கில் நடித்த படங்களை டப்பிங் படம் என்பதை சொல்லாமல் ஏதோ புது படங்கள் போல் இந்த பழைய தியேட்டர் வெளியிடும்.

அப்படி டப்பிங் படங்களை பார்க்கும் போதுதான் எம்ஜிஆருடன் உலகம் சுற்றும் வாலிபன், இதயக்கனி போன்ற படங்களில் கதாநாயகிகளாக நடித்த  நடித்த சந்திரகலா  ராதா சலூஜா போன்றோரும் ரஜினியுடன் நடித்திருக்கிறார்கள் என்பது புரியவந்தது..

சரி போகட்டும் மெயின் மேட்டருக்கு வருவோம்..

பின்னாளில் ரஜினிகாந்தின் ஆரம்பகால படங்களை அடுத்தடுத்து பார்த்து வியந்துபோனதின் அடிப்படையில் ரஜினி என்கிற  அற்புதமான நடிகரைப் பற்றி நமக்குத் தெரிந்ததை இங்கே சொல்கிறோம்..

1960 களின் இறுதியில் பெங்களூரில் பள்ளிப்படிப்பு முடிந்து மேற்கொண்டு படிக்க விரும்பாமல், சுயமாய் சம்பாதிக்கவேண்டும் என்ற வெறியான மனநிலை… மூட்டைக்கு 10 பைசா கூலி என அரிசி மூட்டை தூக்கியும், ஆபிஸ் பாயாகவும் வேலைபார்த்த ஒரு சாதாரண இளைஞன்தான் இன்றைக்கு பலநூறு  கோடி பட்ஜெட் பின்னணிக்கு கதாநாயகன் என்றால் நம்புவது சிரமம்தான்..

பாகவதர், சின்னப்பா, எம்ஜிஆர் சிவாஜி காலங்களில் தமிழ் சினிமா என்பது தமிழ்நாட்டை தாண்டி மாநில எல்லையோரம் தமிழர்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகளில் மட்டுமே திரைமொழி பேசும். வர்த்தக எல்லை என்பது  அவ்வளவுதான். அவர்களும் மற்ற மொழி படங்களில் நடிப்பதில் ஆர்வமே காட்டவில்லை. மற்றும் மொழிகளில் அவர்களின் படம் டப்பிங் ஆக தான் வெளியாகும்

இந்திய சினிமாக்களில் பிரம்மாண்டத்தின் பிதாமகன் படம் என வர்ணிக்கப்படும் ஜெமினி எஸ்எஸ்வாசனின் சந்திரலேகா (1948) போன்ற படங்கள் மட்டுமே விதிவிலக்காக திகழ்ந்தன.

ஆனால் கமலும் ரஜினியும் தமிழ் சினிமாவுக்கு வந்தபிறகு மாநில எல்லைகள் உடைக்கப்பட்டன. தெலுங்கில் மரோசரித்தா, கன்னடத்தில் கோகிலா இந்தியில் ஏக்துஜே கேலியே என கமல் பாய்ந்து பாய்ந்து அடிக்க ஆரம்பித்தார். ரஜினியும் பின்னாளில் இந்தியில் கால் பதித்து தேசிய அளவில் பிரபலம் ஆனார். இன்று உலக லெவலில் இருவருமே பிரகாசிக்கின்றனர். தமிழ் சினிமாவும் ஜொலிக்கிறது. ஆனால் பட்ஜெட், வசூல் என வரும்போது ரஜினியின் உயரம்  ஹாலிவுட் படங்களின் பிரம்மாண்டத்தை தொட்டுக்கொண்டிருக்கின்றன.

இன்றைக்கு சூப்பர் ஸ்டார் என கோடான கோடி ரசிகர்களால் உயிர்போல நேசிக்கப்படும் ரஜினியின் ஆரம்ப வாழ்க்கை, ராஜ வாழ்க்கையாக இருக்கவில்லை. பெங்களூருவில் சாமான்ய குடும்பம்தான்..

கலாசிபாளையம் அருகே வாணிவிலாஸ் மருத்துவமனையில் ரானோஜிராவ்-ரமாபாய் தம்பதிக்கு பிறந்து, சிவாஜி ராவ் கெய்க்வாட் என்று நாமகரணம் சூட்டப்பட்டவருக்கு, முதன் முதலில் கிடைத்த உருப்படியான வேலை, அரசு பேருந்தில் கண்டக்டர்.. உறவினரான போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கோப ராவ் கொடுத்த அறிவுரையை ஏற்று நுழைவுத்தேர்வை எழுதி, போராடி கண்டக்டர் லைசன்சை பெற்றபின் கிடைத்த வேலை இது..

குடும்பத்தினர் புரிந்துகொள்ள முடியாத ஒரு விஷயத்தை பஸ்ஸில் சிவாஜிராவுடன் வேலைபார்த்த டிரைவர் பகதூர் என்பவர் புரிந்துகொண்டார்..

அதுவேறொன்றுமில்லை… கண்டக்டரின் ஸ்டைல்.. டிக்கெட்டுகளை வேகமாக கொடுத்த விதம்…. நெற்றியில் விழுகிற தலைமுடியை கோதி கோதி பின்னுக்கு தள்ளிவிடுகிற அலட்சியமான மேனரிஸம்.. இப்படி பல விஷயங்கள் பகதூரை வித்தியாசமாய் பார்க்க வைத்தபடியே இருந்தன.

காலை ஆறுமணி முதல் மதியம் இரண்டு மணிவரை தினமும் மெஜஸ்ட்டி-ஸ்ரீநகரா இடையே பஸ்ஸை பறக்கவைத்த டிரைவர் பகதூருக்கு, கொஞ்ச நாளிலேயே ஆத்ம நண்பராக மாறிவிட்டார் கண்டக்டர் சிவாஜிராவ் கெய்க்வாட்…

இந்த உரிமையில் ஒரு நாள் கேட்டபோதுதான், சிவாஜிராவ், தனக்கிருந்த ஆசையை பகதூரிடம் சொன்னார்..கொஞ்சம் குண்டான உடல்வாகு, கருத்த நிறம், தெளிவான பேச்சு கிடையாது..இப்படி ஏராளமான குறைகளோடு இருந்த சிவாஜிராவின் ஆசை கொஞ்சம் அதிகப்படிதான் என தோன்றியது பகதூருக்கு..

இருந்தபோதிலும் கண்டக்டர் வேலையின்போது சிவாஜிராவ் செய்கிற வித்தியாசமான சேட்டைகள், ஸ்டைல்கள் ஆசைப்படுவதற்கு அர்த்தம் இருக்கிறது என்று தீர்மானிக்க வைத்தது பகதூரை..

ஆர்வத்தின் காரணமாக அவ்வப்போது நாடகங்களில் சிவாஜிராவ் நடிப்பதுண்டு.. அப்படியொருமுறை துரியோதனன் வேடத்தில் பாண்டவர்களை பார்த்து நண்பன் சிவாஜிராஜ் சிரித்த எகத்தாள சிரிப்பை பகதூர் நினைவு படுத்தி பார்த்தபோது சம்திங் அமேசிங் என்று புரிந்தது..

மனம்விட்டு பேசியபோது சிவாஜிராவிடம் பெரிய அளவில் சினிமா கனவு இருப்பது வெளிய வந்து விழுந்தது..( இதே நக்கலான சிரிப்பைத்தான் எந்திரனில் சிட்டி கேரக்டரில் மீண்டும் ரிபீட் செய்ததாக பகதூர் சொல்கிறார்)

இது நடக்கும் 1970-களின் கால கட்டம் எப்படி இருக்கும் தெரியுமா? தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய நான்கு மொழிகளில் தயாராகும் படங்களுக்கு அப்போது சென்னைதான் தலைநகரம்.. தெலுங்கு என்டிஆர், நாகேஸ்வரராவ், கன்னடத்து ராஜ்குமார், மலையாள பிரேம் நசீர் போன்ற ஸ்டார்களுக்கு பெரும்பாலும் சென்னை ஸ்டுடியோக்களில்தான் வாசம் என்பதால் சென்னையில் தங்க எல்லோருக்குமே சொந்த வீடு உண்டு. நடிகைகளுக்கும் இதே கதைதான்.

சென்னையில் கோடம்பாக்கம், வடபழனி, வளசரவாக்கம் போன்றவற்றின் முக்கிய பகுதிகளில் உள்ள சொத்துக்களில் நிறைய, மற்ற மாநில சினிமாகாரர்களுடையதாகத்தான் இருக்கும். இல்லையென்றால் அவர்களிடமிருந்து கைமாறியிருக்கும்.

அந்த அளவுக்கு தென்னிந்தியாவின் முன்னணி ஸ்டார்கள் உட்பட அனைத்து சினிமா உலக புள்ளிகள் வசிப்பதும் சென்னையில்தான் என்பதால் பெங்களூருவிலிருந்து ஜாகையை மாற்றினால் மட்டுமே சினிமா கனவு சாத்தியம் என்பது பகதூருக்கும் புரிந்தது.. சிவாஜிராவுக்கோ, சினிமாவில் ஒரு கை பார்க்காமல் போகவேகூடாது என கொலைவெறி.. மன்னிக்கவும் கலைவெறி…

இதன்பிறகு சென்னை திரைப்படக்கல்லூரியில் சேர்க்கை.  படிக்கும்போது ஏதோ ஒரு தருணத்தில் கன்னட நாடகம் நடிக்க, அதைத் தற்செயலாக பார்த்தார் இயக்குர் சிகரம் கே.பாலசந்தர். அவ்வளவுதான்.. சிகரம் என்கிற இரும்பு உற்றுப்பார்க்க அதில் சிவாஜிராவ் என்ற காந்தம்போய் ஒட்டிக்கொண்டது..நாடகத்தில் சிவாஜிராவ் என்ற கருப்பு மனிதனின் நடிப்பு மற்றும் ஸ்டைல் முற்றிலும் வித்தியாசமாய் இருந்ததை கவனித்து, பாலச்சந்தர் சொன்ன ஒரே வாக்கிய அறிவுரை,’’தமிழ் கற்றுக்கொள்’’.

அதாவது தமிழை நன்றாக பேசக்கற்று கொண்டுவிட்டால் உனக்கு தமிழ் சினிமாவில் நல்ல எதிர்காலம் இருக்கிறது என்று அர்த்தம்..சிவாஜிராவ் மனதில் அன்று இப்படித்தான் பட்டது..

அது முதலே ஆத்ம நண்பன் பகதூரிடத்திலும் சரி..தமிழ் தெரிந்த மற்றவர்களிடமும் சரி..சிவாஜிராஜ் பேச்சு, முட்டிமுட்டி மோதி உடைந்தாலும் தமிழில்தான் போக ஆரம்பித்தது..எதைநோக்கி சிவாஜி ராவ் ஓடினாரோ, அது அருகிலேயே வந்துவிட்டது.

ஆம், தமிழை கற்றுக்கொள் என்று சொன்ன கே.பாலச்சந்தரே, அபூர்வ ராகங்கள் என்ற படத்தில் சின்ன ரோலைக்கொடுத்தார்..அத்தோடு சிவாஜிராவ் என்ற அடையாளத்தை தள்ளிவைத்துவிட்டு ரஜினிகாந்த் என்றும் சினிமாவுக்காக புது நாமகரணத்தை சூட்டினார்..

1973-ல் பெரும் வெற்றிபெற்ற காவியம், நடிகர் திலகம் இரட்டை வேடத்தில் நடித்த கௌரவம் படம். அதில் கோர்ட்டையே கலக்கி சிங்கமாய் கர்ஜிக்கும் தந்தை பாத்திரத்தின் பெயர் பாரீஸ்டர் ரஜினிகாந்த்..

தமிழகம் முழுவதும்  பாப்புலாராகிவிட்ட அந்த  ரஜினிகாந்த் என்ற பெயர், ஒரு அறிமுக நடிகருக்கு நிஜ வாழ்க்கையில் உண்மையான முகவரியாகவே மாற்றப்பட்டுவிட்டது.

பொதுவாக முதல் படம், அதிலும் தாம் முதன் முதலாய் திரையில் காட்டப்படும் காட்சி அசத்தலாக இருக்கவேண்டும் என்றே எவருமே நினைப்பார்கள்.. பிரமாண்டமாக இல்லாவிட்டாலும் மோசமாக  அமைந்துவிடாக்கூடாது என்றே விரும்புவார்கள்..

ஆனால் ரஜினிகாந்த் விஷயத்திலோ, சினிமா உலகில் யாருமே சந்திக்காத ஒரு கொடுமையிலும் கொடுமை நடந்தது.. 1975 ஆம் ஆண்டு, அபூர்வ ராகங்கள் படத்தில், அறிமுகமாகமாகும் முதல் பிரேமிலேயே, அவர் மேல், ‘சுருதி பேதம்’ என்று போடப்பட்டது. அதாவது, ஏடாகூடம், சனியன் பிடிச்சது, வௌங்காதது என பல அர்த்தங்களை கொள்ளலாம் இதற்கு.

கமலஹாசனோடு ரஜினிகாந்த் பேசுவது, கடைசியில் மனைவி மகள் முன் உயிரைவிடுவது என சொற்பக்காட்சிகள் என்றாலும், படத்தின் அச்சாணியான பைரவி என்ற இசைக்கலைஞரின் கணவன் என்பதால், நல்ல வெயிட்டேஜ் கிடைத்தது இந்த ரோலுக்கு.

இந்தியாவையே ஷோலே என்ற இந்திப்பட புயல் துவம்சம் செய்துகொண்டிருந்த நேரம். ஷோலே படம் வெளியான  சில தினங்கள் ஆன நிலையில்தான் அபூர்வராகங்கள் வந்து வெற்றிகரமாகவே ஓடியது. பெங்களுர் கபாலி தியேட்டரில் ரிலீசான படத்தை நண்பர்களோடு பார்க்கப் போனபோது சிவாஜிராவை ரசிகர்கள் யாருமே அடையாளம் கண்டுகொள்ளவில்லை..

முதல் படத்திற்கு பிறகு ரஜினிக்கு உண்மையிலேயே சரியாக தீனிபோட்டவர் இயக்குநர் புட்டண்ணாதான்.

வீரபாண்டிய கட்டபொம்மன், கர்ணன், ஆயிரத்தில் ஒருவன் போன்ற படங்களை இயக்கிய ஜாம்பவான் பி.ஆர்.பந்துலுவின் சிஷ்யர்தான் புட்டண்ணா. கே.பாலச்சந்தரின் மானசீக குருமார்களில் முக்கியமானவர் இவர். டைரக்டர் பாரதிராஜாகூட புட்டண்ணாவிடம் உதவி இயக்குநராக இருந்தவர்தான்.

ரஜினி திரைப்பட கல்லூரியில் சேரும்போது அவரை இன்டர்வியூ செய்தவர்களில் முக்கியமானவர் இந்த புட்டண்ணா..அப்போதே ரஜினியின் திறமை அவருக்கு உள்ளுக்குள் உறுத்தியது என்னமோ..

கன்னடத்தில் சரோஜாதேவி, கல்யாணகுமார், ஆர்த்தி என பல பிரபலங்களை வைத்து கதா சங்கமா என்றொரு கன்னட படத்தை எடுத்தபோது ரஜினியை புட்டண்ணா விடவில்லை. ஒரே படத்தில் மூன்று பாகங்களாக தனித் தனி கதைகள் கொண்ட படம்.

கடைசி பாகமான முனித்தாய் கதையில் கொண்டாஜி என்ற ஒரு வில்லன் பாத்திரம்.. கணவன் இல்லாத நேரத்தில் அவனைப்போலவே நடித்து குருட்டு மனைவியை திட்டம்போட்டு பாலியல் பலாத்காரம் செய்துவிடும் கொடூரத்தை செய்யும் பாத்திரம் ரஜினிகாந்துக்கு..குளியலறையில் குருட்டுப்பெண், ஒவ்வொரு ஆடைகளையும் கழட்ட கழட்ட.. அருகே சுவற்றோரம் அமர்ந்து அவளின் முழு நிர்வாணத்தை முழுவதுமாக வெறிக்கப்பார்ப்பார் ரஜினி. காமிரா டைட் குளோஷப்பில் ரஜினியின் முகத்தை மட்டுமே படம்பிடிக்கும்.

கிட்டத்தட்ட 40 விநாடிகள் தொடர்ச்சியாக கண்கள், உதடு, கன்னம் என ஒவ்வொரு அங்கத்திலும் விதவிதமாய் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவார் ரஜினி. அதாவது பெண் ஒவ்வொரு ஆடைகளாக கழட்டி பிறந்து மேனிக்கு போகிறாள் என்பதை ரஜினியின் கண்கள் அப்படியொரு வெறித்தனமாய் சொல்லும்.

சூதாட்டம், குடிபோதை, பொறுக்கித்தனம் என ஊர் மேயும் வம்பனாக, எதைப்பற்றியும் யோசிக்காத ஒரு மட்டமான ஜென்மம் போன்ற ஒரு வெயிட்டான ரோலை, தனது இரண்டாவது படத்திலேயே  வெகு சுலபமாக ஸ்கோர் செய்திருப்பார்.

குருட்டுபெண்ணாக நடித்த ஆர்த்திக்கு சிறந்த நடிகைக்கான கர்நாடக அரசின் விருது கிடைத்தது என்பது இன்னொரு சமாச்சாரம். இந்த கதா சங்கமா படத்தின் முனித்தாய் பாகம்தான் பின்னாளில் ரஜினி, ரேவதி நடித்து மகேந்திரன் இயக்கத்தில் கை கொடுக்கும் கை என தமிழில் வெளியானது,

ரஜினியின் நடிப்புத் திறமையை அழகாக இப்படி புட்டண்ணா காட்டியதும் அவரை பின்தொடரும் கே.பாலசந்தரும் பாரதிராஜாவும் விடுவார்களா?

தமிழில் பெரும் வெற்றிபெற்ற அவள் ஒரு தொடர்கதையை தெலுங்கில் எடுத்தபோது அதில் ஜெய்கணேஷ் பாத்திரத்தை ரஜினிக்கு கொடுத்தார் கே.பாலச்சந்தர்.

ஜெயசுதாவின் அண்ணனாக வரும் ரஜினி, தெய்வம் தந்த வீடு வீதியிருக்கு பாடலுக்கு ரஜினி நடித்தவிதம் அவரை தெலுங்கு உலகிலும் பேசவைத்துவிட்டது. முதல் மூன்று படங்களுமே தமிழ் கன்னடம் தெலுங்கு என  வெவ்வெறு மொழிகளில்.. எவ்வளவு ஆச்சர்யமான விஷயம்.

அபூர்வ ராகங்களில் கமலையும் ரஜினியையும் முதன் முதலில் ஒன்றாக பயன்படுத்திய பாலச்சந்தர், இம்முறை இருவரையும் மாற்றிப்போட்டு ஆடினார்.

கமல் கௌரவ வேடத்தில் நடிக்க, ரஜினிக்கு முதன் முறையாக வில்லன் கம் ஹீரோவா புரமோஷன்.. சிறுமியாக நடித்துக்கொண்டிருந்த ஸ்ரீதேவிக்கும் ஹீரோயினாக முதல்படம்., அதுதான், மூன்று முடிச்சு..

எந்த பாலசந்தர், ரஜினியின் முதல் படத்தில் அறிமுக காட்சியின்போது சுருதிபேதம் என்று போட்டாரோ அதே பாலசந்தர், தமிழில் இரண்டாவது படமான மூன்று முடிச்சு படத்தில், படத்தின் தலைப்பையே ரஜினி ஸ்டைலாக சிகரெட்டை வாயில் போடும் பிரேம் மீதுதான் போடவேண்டிவந்தது..

வில்லன் கம் ஹீரோவாக மூன்று முடிச்சு படத்தில் ரஜினி அசத்த, அதன் பிறகு அவர் திரையுலக வாழ்க்கையில் ஜெட் வேகம்தான்..

எஸ்.பி.முத்துராமன் புவனா ஒரு கேள்விக்குறி படத்தில் ரஜினி நடிப்பின் சகலவிதமான பரிமாணங்களையும் காட்டி ரசிகர்களை உருக வைத்துவிட்டார். அடுத்து புட்டண்ணாவின் சீடரான பாரதிராஜா, கதா சங்கம ரேப்பிஸ்ட் கொண்டாஜி பாத்திரத்தை 16 வயதினிலே படத்தில் ரஜினிக்கு பரட்டை பாத்திரமாக செதுக்கிவிட்டார்.

அத்தோடு, ஒவ்வொன்றையும் ஏடாகூடாமாக செய்துவிட்டு உடனே ‘இது எப்டி இருக்கு’ என எகத்தாளமாக கேட்க வைத்தார். ரஜினியின் வசனங்களில் முதன் முதலில் பன்ச் டயலாக்காக மாறியது இந்த “இது எப்டி இருக்கு?” என்ற டயலாக்தான்.

நடிக்க வந்த இரண்டாமாண்டு முதலே ரஜினிக்கு வருடத்திற்கு பல படங்கள் கிடைத்தன. சர்வ சாதாரணமாய்  15 படங்களையாவது தாண்டும். அப்படிப்பட்ட படங்களில் மிகவும் முக்கியமானது, புவனா ஒரு கேள்விக்குறிக்கு பிறகு எஸ்பி முத்துராமன் ரஜினியை வைத்து இரண்டாவது முறையாக இயக்கிய, ஆடு புலி ஆட்டம்.

எம்.ஜிஅர்,- சிவாஜி சகாப்த காலகட்டத்தில், புது விதமாய் ஸ்டைல், இங்லீஷ் டயலாக் டெலிவரி என கமலையும் ரஜினியையும் அடுத்த தளத்திற்கு கொண்ட சென்ற படம் அது.

ரஜினி எனும் கருப்பு மனிதனுக்குள் இருந்து ‘’எதிலும் படு ஸ்பீடு’’ என்ற வித்தியாசமான அம்சத்தை வெளிக்கொண்டுவந்தது ஆடுபுலி ஆட்டம். ஈவு இரக்கமே இல்லாத கொள்ளையனாக, ரஜினி என்ற பெயரிலே நடித்தார். எதிராளியை திக்குமுக்காட வைக்கும் ஒவ்வொரு சீனிலும் கடைசியாக ;;தி இஸ் ரஜினி ஸ்டைல், இதான் ரஜினி ஸ்டைல்’’ என்று தமிழிலும் இங்லீஷிலும் மாறி மாறி பேசுவார். அதேபோல, ‘’மேரா தோஸ்த்’’ என்றும் ஸ்டைலான மாடுலேஷனில் பல காட்சிகளில் பேசுவார். இந்த வசனங்களெல்லாம் அன்றைய காலகட்டத்தில் இளைய தலைமுறையிடம் பாப்புலர் பன்ச் டயலாக்காக ஆகிப்போய்விட்டன. .

கருப்பு வெள்ளையில் வந்த ஆடு புலி ஆட்டம் போலவே ரஜினியின் சினிமா வரலாற்றில் அவர் ஸ்டைலின் புயல் வேகத்திற்கு வித்திட்ட படம் மாங்குடி மைனர். அவ்வளவு வேகமாக படத்தில் இங்லீஷ் டயலாக்குகள் ரஜினி வாயிலிருந்து பறக்கும். வில்லன் ரோலிலேயே ஒரு படு நக்கலான அலட்சியத்தையும் காட்டியிருப்பார் ரஜினி. இந்த ஒரு அம்சத்தை கெட்டியாக பிடித்துகொண்டு தனக்கென ஒரு ரூட்டை போட்டு வெற்றிகரமாக முன்னேறியவர்தான் சத்யராஜ்..

கமலுடன் சேர்ந்தும் சேராமலும் பல படங்கள் செய்து வந்த ரஜினி தனியாகவே மின்னும் அளவுக்கு தயாராக்கிவிட்டது 1978 ஆண்டு.

பைரவியில் 100 பர்சென்ட் கதாநாயகனாக உயர்ந்த ரஜினிக்கு அது முதலே சினிமா பயணம் உச்சகட்ட வேகத்தை நோக்கி பறந்தது.. ஒரு பக்கம் கதாநாயகனாக… கெட்ட பய சார் இந்த காளி என்று பேசும் காளி என்ற பாத்திரத்தை வைத்து முள்ளும் மலரும் படத்தின் மூலம் ரஜினியை வேறொரு கோணத்தில் காட்டி அசத்தினார் இயக்குநர் மகேந்திரன்.

எஸ்பி முத்துராமன், ஆர்சி சக்தி போன்றவர்களோ, பிரியா, தர்மயுத்தம், அன்னை ஓர் ஆலயம் போன்ற படங்களால் ரஜினி படம் என்றாலே நிச்சய வெற்றி என பாக்ஸ் ஆபிஸ் மசாலாக்கள் மேட்டரில் அடித்தளம் போட்டார்கள்.

இன்னொரு பக்கம் ஏற்கனவே ஒப்புகொண்டபடி கமல் விஜயகுமார் மற்றும் சிவாஜி போன்ற ஹீரோக்களுடன் இரண்டாவது ஹீரோ அல்லது வில்லன் வேடங்களில்..

இளமை ஊஞ்சலாடுகிறது. அவள் அப்படித்தான், நினைத்தாலே இனிக்கும், குப்பத்து ராஜா, நான் வாழவைப்பேன், ஜஸ்டிஸ்கோபிநாத் போன்றவையெல்லாம் அந்த லிஸ்ட்டுதான்.

1980-ல் வந்த பில்லா படம் முதன்முறையாக, இப்போது பிளாக் பஸ்டர் தெறி வசூல் என்றெல்லாம் பேசுகிறார்களே அந்த வகையிலான மெகா கலெக்சனை அள்ளியது. சூப்பர் ஸ்டார் என்ற பட்டமும் கச்சிதமாக பொருந்தியது. ஆக்சன், ஸ்டைல் இவற்றில் ரஜினியை அடிக்க ஆளே இல்லை என ராஜபாட்டையை போட்டுத்தந்தது பில்லா படம்தான். முரட்டுக்காளை, போக்கிரி ராஜா, மூன்று முகம் போன்ற படங்கள் பாக்ஸ் ஆபிசில் மேலும் மேலும் ரஜினியை எங்கே கொண்டுபோயின.

மாபெரும் ஆக்சன் ஹீரோவாக திகழ்ந்த ரஜினி சினிமா பயணத்தில் மிகப்பெரிய திருப்புமுனையை தந்தது எதுவென்றால் அது தம்பிக்கு எந்த ஊரு படம்தான். அதற்கு முன்பெல்லாம் தில்லுமுள்ளு படத்தை தவிர ரஜினி படங்களில் தனியாக காமெடி டிராக் வைத்து காமெடியன்கள்  படத்தில் ஊடுறுவியிருப்பார்கள். ஆனால் ஆக்சன் ஹீரோவான ரஜினியே, காமெடியையும் சேர்த்து கனக்கச்சிதமாக செய்தார். பெரியவர்கள், இளைய தலைமுறை, குழந்தைகள் என அனைத்து தரப்பினரையும் திரையரங்குகளுக்கு ரிபீட் ஆடியன்சாக கொண்டு வந்தது அந்த படம்தான்.

அதன்பின்னர் ஆக்சன் பிளஸ் காமெடி என்பதே ரஜினி படங்களின் தாரக மந்திரமானது. படத்தில் காமெடியன்கள் இருந்தாலும் தான் மட்டுமே சார்ந்த சீன்களிலும் காமெடியில் கலக்க ஆரம்பித்தார் ரஜினி. குழந்தைகளை கவர்ந்ததுதான் ரஜினிக்கு பாப்புலாரிட்டியிலும் சரி, வசூலிலும் சரி பெரிய ஏற்றத்தை தந்தது.

குழந்தைகள் தனியாக தியேட்டருக்கு போகமுடியுமா? பெற்றோர்தானே அழைத்துச்செல்லவேண்டும்..அப்போது பெற்றோரும் ரஜினியை ரசித்துதானே ஆகவேண்டும்.. தமிழ்நாட்டில் அப்படித்தான் ஆகி எல்லோருக்கும் மிகவும் பிடித்த சூப்பர் ஸ்டாரானார் ரஜினி.

கமல் எப்படி ஏக் துஜே கேலியே படத்தின் மூலம் இந்தியிலும் ஹீரோவாக வெற்றிக்கொடி நாட்டினாரோ அதேபோல ரஜினியும் இந்தியில் அடிக்கடி பிரவேசித்துவிட்டுத்தான் வந்தார்.

விஜயகாந்துக்கு பெரும் திருப்புமுனையை கொடுத்த சட்டம் ஒரு இருட்டறை படம்தான், இந்தியில் அந்தா கானூன் என ரீமேக் செய்யப்பட்டது.

அதுதான் ரஜினிக்கு முதல் இந்திப்படம். நாடே கொண்டாடும் அமிதாப்பச்சன் கெஸ்ட் ரோல், அப்புறம் ஹேமமாலினி.. பிறகு கேட்கவேண்டுமா.. தேசமெங்கும் வெற்றிகரமாகவே பேசியது அந்தா கானூன்.. அதன்பிறகும் பல இந்திப் படங்களில் நடித்தார் ரஜினி.

ஆனால் இப்போது ஆச்சர்யம் என்னவென்றால் இந்திப் படங்ள் வாயிலாக அல்ல, தமிழ் படங்கள் வாயிலாகவே இந்தியா முழுவதும் அறிந்த சூப்பர் ஸ்டாராக இருக்கிறார். வட நாட்டு முன்னணி ஸ்டார்கள்கூட, தலைவா என்றழைத்து ரஜினிக்கே ரசிகர்களாக மாறிப்போயிருக்கின்றனர்.

ரஜினியால் தமிழ் திரையுலகிற்கு கிடைத்த மிகப்பெரிய பெருமை. ஷாருக்கான் தனது ரா ஒன் படத்தில் ரஜினி கொஞ்சம் தலைகாட்டினால் போதும் என்கிறார். அந்த அளவுக்கு வியப்பான திரையுலக ஆளுமையாக மாறிப்போனார் ரஜினி..

அவர் நடிக்க ஆரம்பித்தபோது பிறந்தவர்கள்கூட கதாநாயகியாகி பின்னர் அம்மா ரோல்களுக்கு போய்விட்டார்கள்.. ஆனால் ரஜினி இன்னமும் பேத்தி வயதுடையவர்களுக்கு இணையாக தன்னைத் திரையில் பாத்திரத்திற்கு ஏற்ப தயார் படுத்திக்கொள்கிறார்.

இந்த தயார் படுத்திக்கொள்ளுதல் என்பது ரஜினிக்கு இன்று நேற்று வந்த கலையல்ல..முரண்பாடான பாத்திரங்களை வெவ்வேறு படங்களில் பார்க்கும்போது பிரமிப்பாக இருக்கும்.

ஒரு படத்தில் சிறுவனின் கண்களை குருடாக்கிவிட்டு அக்காவை பலாத்காரம் செய்து அவளின் அப்பனை ஜெயிலுக்கு அனுப்பிவிடுவார்.

இன்னொரு படத்தில் உயிருக்கு உயிரான ஒரே தங்கையின் சாவுக்கு நாமே காரணமாகிவிட்டோமே என உருக வைப்பார். இரண்டு ரோல்களும் சில மாத இடைவெளிகளில் அடுத்தடுத்து செய்தவைதான். ஆனால் வித்தியாசம் பிரமிப்பாக இருக்கும்

1970களின் ஸ்டைல் மட்டுமே ரஜினிக்கு பிரதானம் என்று நினைப்பவர்களுக்கு அவர் நடிப்பால் அசத்திய படங்களை தெரிந்திருக்குமா என்பது சந்தேகம்.

முத்துராமன், தேவிகா, கல்யாணகுமார் நடித்த ஸ்ரீதரின் நெஞ்சில் ஓர் ஆலயம் படம் பதினைந்து ஆண்டுகளுக்கு பிறகு கன்னடத்தில் ரீ மேக் செய்தபோது அதில் கல்யாணகுமாரின் டாக்டர் வேடத்தில் ரஜினிதான் நடித்தார்.

தமிழில் படம் முழுக்க அளவுக்கு மீறிய சோகமாய் வருடம் டாக்டர் பாத்திரத்தை, அப்படியே முழுமையாய் சோகமாக செய்யாமல் ஒரு டாக்டருக்கே உரித்தான தோரணையுடன் வெகு இயல்பாக கச்சிதமாக செய்திருந்தார்.

ஏமாற்றிய காதலியை விளக்கம் கேட்கும் போது, தமிழில் கல்யாணகுமார் கெஞ்சுவார். ஆனால் ரஜினியோ கெஞ்சாமல் கொஞ்சம் நக்கல், சலிப்பு, ‘ஆவேசம் பின்னர் அமைதி என நாயகி கன்னட மஞ்சுளாவிடம் கலந்து கட்டியடிப்பார்.

தெலுங்கில் அவர் செய்த சிக்கலமா செப்பண்டி என்ற படத்தைதான் பின்னர் தமிழில் நிழல் நிஜமாகிறது என கமல் செய்தார். இரங்கி சர்மா என்பவர் டைரக்டர் செய்த தெலுங்கு படத்திற்கு பாலச்சந்தரின் ஆஸ்தான காமிராமேன்கள்தான் ஒளிப்பதிவு.

அந்த வகையில் சிக்கலமா செப்பண்டி பாலச்சந்தர் மூலம் தமிழில் ரீமேக் ஆனது. தெலுங்கில் நண்பனின் சகோதரியான நாயகி சங்கீதா, ஆண்வாடையே பிடிக்காத ஒரு திமிர் பிடித்த பாத்திரம். (ஆறிலிருந்து அறுபது வரை படத்தில் ரஜினியின் காதலியாக வந்து போவார்)

ஆணாதிக்கவாதியான ரஜினி, திமிர் பிடித்த பெண்மையை சீண்டும் இடங்களிலெல்லாம் எல்லைக்கோடு கச்சிதமாக இருக்கும். ஆனால் தமிழில் சுமித்ராவை கமல்ஹாசன் சீண்டும் காட்சிகளில் வார்த்தை மற்றும் உடல் மொழி தாக்குதல் கொஞ்சம் வன்மமாக இருக்கும். தெலுங்கு ரஜினியை பார்த்துவிட்டு தமிழில் கமல் பாத்திரத்தை பார்த்தால் வித்தியாசம் நன்றாக புரியும்.

இப்படி 70-களில் ரஜினிக்குள் இருந்த வெகு இயல்பான நடிப்பைத்தான், சூப்பர்ஸ்டார் என்ற இமேஜ் காவு வாங்கிக்கொண்டது.

தம்பிக்கு எந்த ஊரு படத்திற்கு பிறகு, வசூல் மன்னன் வட்டத்தை விட்டு அவரை வெளியேவிட தமிழ் சினிமா தயாராக இல்லை. அதையும் மீறி அடக்கி வைத்திருந்த ஆதங்கத்தையெல்லாம் வெளியே கொட்டுவதற்கு ஒரு வாய்ப்பாக கிடைத்ததுதான் தளபதி படம்..

கலெக்டர் இருக்கும்போதே எஸ்பியிடம் “தொட்றா பாக்கலாம்” என்று சீறும் போதும் சரி, “ஏன்னா நீ என் நண்பன்” என தேவாவாக வரும் மம்முட்டியுடன் உருகும் போதும் சரி..ரஜினி என்கிற பவர்ஃபுல் நடிகனை காணமுடியும்..

ஆனாலும் மறுபடி மன்னன், அண்ணாமலை என மசாலா மெகா ஹிட்டுக்கள் ரஜினியை  மேலேமேலே தூக்கிக்கொண்டு கொண்டுபோய் உட்கார வைத்துவிட்டு பவர்ஃபுல் நடிகனை திரும்பப் பார்க்க முடியாமல் செய்துவிட்டன .

இந்தியில் அமிதாப் நடித்த ஹம் படத்தில் போலீஸ் ஆபிசர் வேடத்தில் வந்தார் ரஜினி, அதையே தமிழில் ரீமேக் செய்தபோது ஹம் டைகர் அமிதாப்பைவிட பாட்சாவின் ஆட்டோ மாணிக்கம் பல மடங்கு ஆவேசத்தை அள்ளித்தெளித்திருப்பார்.

ஆனந்தராஜை அடித்துவிட்டு உள்ளே போ என்று சொல்லிக்கொண்டே ரஜினி பார்க்கும் பார்வை… உண்மையிலேயே நடிப்பு என வரும்போது அவரின் கண்கள் பேசும் பவரான பாஷைக்கு நிகர் கிடையவே கிடையாது.

1995 பாட்சா வரை கதைக்கான படங்களில் ரஜினி நடித்தார். சூப்பர் ஸ்டாருக்கு அவசியமாயிற்றே என தேவைப்படும் இடங்களில் மட்டும் லாஜிக் பார்க்காமல் பில்டப் சீன்கள் சொருகப்பட்டன. ஆனால் பாட்சாவின் உச்சபட்ச வெற்றிக்கு பிறகு நிலைமையே தலைகீழாகப்போனது.

சென்சார் சர்ட்டிபிகேட்டுக்கும் சுபம் கார்டுக்கும் இடையில் ஒவ்வொரு பிரேமிலும் ரஜினி ரஜினி ரஜினி என அவருக்காக மட்டுமே மெனக்கெடும் வேலைகள்தான் படங்களில் அதிகமானது. முத்து, அருணாச்சலம், போன்றவையெல்லாம் அந்த ரகமே.

படையப்பாவை நீலாம்பரி தூக்கி நிறுத்தாவிட்டால் அறுபடையப்பன் கதி சற்று சிக்கலாகவே போயிருக்கும். ஆனால் விதி வலியது என்பது போல, அரசியல் படமும் இல்லாமல் ஆன்மிக படமுமாகவும் இல்லாமல் ரெண்டுங்கெட்டானாக வந்த பாபாவில் கதம் கதம் ஆகிப்போனார் ரஜினி.

இனி சிந்தித்து செயல்படாவிட்டால் உண்மையிலேயே சினிமா வாழ்வும் கதம் கதம் என்று எச்சரிக்கை மணி அடிக்கப்பட்டது ரஜினி.

நின்று நிதானித்து யோசித்து பார்த்து பழையபடி எல்லோருக்குமான ரஜினியாக இருப்பதுதான் நல்லது என்று அவருக்கு மனதில் பட்டது.

கங்கா, முருகேசன் படையோடு வந்த சந்திரமுகி, டாக்டர் சரவணனை நன்றாகவே பழைய உயரத்திற்கு கொண்டுபோனது. சந்திரமுகி படம் தமிழில் 800 நாட்களுக்கு ஒடி புதிய சாதனையையே படைத்தது.

ஆனால் அதன்பிறகு சிவாஜியில் தொடங்கி இன்றுவரை படத்துக்கு படம் பல நூறு கோடிகள் முதலீடு என பிரமாண்டம் கூடுகிறது. மாநில, தேச எல்லைகளை கடந்து வசூலும் உலக அளவில் பேசப்படுகிறது. அதே நேரத்தில் படங்களை நம்பி போட்ட பணத்தை அத்தனை தரப்பினரும் எடுத்தார்களா, எடுக்கிறார்களா என்ற சர்ச்சையும் சுழட்டி எடுக்கிறது.

காலா, கபாலி, 2.0, பேட்டை, தர்பார், அண்ணாத்தே, ஜெய்லர், வேட்டையன்,கூலி  என 70வயதை கடந்தும சூப்பர் ஸ்டர்.

கருப்பு வெள்ளையில் நடிக்க ஆரம்பித்து வண்ணப்படம், அனிமேஷன் 3டி என நான்கு வகைப் படங்களிலும் நடித்து சாதனை படைத்திருக்கும்  ஒரே முன்னணி நடிகர் அனேகமாக ரஜினியாகத்தான் இருக்கும்.

இந்திய சினிமாவை பொறுத்த வரை எந்த டாப் ஸ்டாரை எடுத்துக் கொண்டாலும் அதிகப்படி 30 ஆண்டுகள்தான் கொடிகட்டி பறந்து இருப்பார்கள்..

ஆனால் 45 ஆண்டுகளுக்கும் மேலாக ரஜினி இன்றும்  முன்னணி கதாநாயகன், அதைவிட, வசூல் சக்ரவர்த்தி .

காலத்திற்கேற்ப தன்னை புதுப்பித்துக் கொள்பவருக்கு  மட்டுமே இது சாத்தியம்

Author Image

ஏழுமலை வெங்கடேசன்

ஊடகவியலாளர்

About The Author

The Talkie

The Talkie

See author's posts

Next Post
yesim usraoglu

அக்கறையும் பெருங்கோபமும் கொண்ட  கதைகள்

Please login to join discussion

Archives

  • Trending
  • Comments
  • Latest
Thug_Life_

Thug Life – ஒரு பார்வை

June 6, 2025
AMADEUS திரைக்கதை

AMADEUS திரைக்கதை

March 15, 2025
start camera

ஸ்டார்ட் கேமரா! வின்சென்ட் மாஸ்டர் – 01

March 19, 2025
Irunda-Pakkam

தொழில்நுட்பத்தின் இருண்ட பக்கங்கள்: திரைப்படங்கள் சொல்லும் உண்மை.

March 16, 2025
Thug_Life_

Thug Life – ஒரு பார்வை

11
rasigamagajanangale

ரசிக மகா ஜனங்களே

7
gurudutt-02

குருதத்தின் ப்யாஸா- உயிர்த்தெழுந்த தேவதை        

5
start camera

ஸ்டார்ட் கேமரா! வின்சென்ட் மாஸ்டர் – 01

4
table top-4-5

டேபிள் டாப் 04 & 05

January 24, 2026
bella darr

பேலா டார் – காட்சியை அனுமதித்தவர்

January 24, 2026
trend-kottaiye-11

ட்ரெண்டு கொட்டாய் 11 -நான் (திரை) காவிய நாயகன்

January 24, 2026
table top-3

டேபிள் டாப் 03

January 24, 2026
The Talkie

சினிமா அற்புதமான ஊடகம். இதனை அறிந்து கொள்ளவும், ரசிக்கவும் உருவாக்கப்பட்டிருக்கிற இணைய இதழ் இது. மேதைகளின் நேர்காணல்கள், திரைக்கதைகள், வெவ்வேறு மொழித் திரைப்படங்கள், ஆளுமைகள், திரைப்படப் புத்தகங்கள் , சினிமா ரசனை என சினிமா உலகத்தோடு இணைந்திட எங்களுடன் இணைந்திடுங்கள்.

Categories

  • I CALL THE SHOTS
  • ஆளுமைகள்
  • இந்தியத் திரைப்படங்கள்
  • உரையாடல்
  • உலகத் திரைப்படங்கள்
  • ஓடிடி திரை
  • கட்டுரைகள்
  • குரு தத் 100
  • டேபிள் டாப்
  • ட்ரெண்டு கொட்டாய்
  • தமிழ்த் திரைப்படங்கள்
  • திரை புத்தகம்
  • திரைக்கதைகள்
  • தொடர்கள்
  • ஸ்டார்ட் கேமரா

Site Navigation

  • About Us
  • Terms and Conditions
  • Privacy Policy
  • Returns and Cancellation
  • Shipping Policy
  • FAQ
table top-4-5

டேபிள் டாப் 04 & 05

January 24, 2026
bella darr

பேலா டார் – காட்சியை அனுமதித்தவர்

January 24, 2026
trend-kottaiye-11

ட்ரெண்டு கொட்டாய் 11 -நான் (திரை) காவிய நாயகன்

January 24, 2026

© 2026 Thetalkie - All rights reserved

Welcome Back!

Sign In with Google
OR

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Sign Up with Google
OR

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • thetalkie
  • ஆளுமைகள்
  • திரைக்கதைகள்
  • உரையாடல்
  • கட்டுரைகள்
    • இந்தியத் திரைப்படங்கள்
    • உலகத் திரைப்படங்கள்
    • தமிழ்த் திரைப்படங்கள்
    • ஓடிடி திரை
  • தொடர்கள்
    • ட்ரெண்டு கொட்டாய்
    • திரை புத்தகம்
    • ஸ்டார்ட் கேமரா
    • I CALL THE SHOTS
    • குரு தத் 100
    • டேபிள் டாப்
  • தொடர்பு
  • Login
  • Sign Up
  • Cart

© 2026 Thetalkie - All rights reserved

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?