ப்ரதீப் பாலு
2025 அக்டோபர் மாதம் வெளியான ‘One Battle After Another’ (OBAA) தான் இயக்குநர் பால் ஆண்டர்சனின் (PTA) திரைப்பட வாழ்கையில் அதிக வசூல் ஈட்டிய திரைப்படமாகக் கருதப்படுகிறது.
திரைப்படம் வெளியாகி முதல் பத்து நாட்களிலேயே உலகளவில் நூறு மில்லியன் டாலர் பாக்ஸ் ஆப்பீஸ் வசூல் பெற்றிருப்பதாக தயாரிப்பு நிறுவனம் கூறுகிறது.
தன் திரைப்படங்களுக்கு விருதுகள் பல கிடைக்காமல் போனாலும், உலகின் பல சமகால இயக்குநர்களுக்கும் திரைக்கதை எழுத்தாளர்களுக்கும் PTA தவிர்க்கவியலாத ஒரு குரல்.
அமெரிக்க நிலப்பரப்பு குறித்து இவர் பதிவு செய்த பார்வை வேறெந்த இயக்குநரது பார்வையிலிருந்தும் தனித்து நிற்கக்கூடியது. பேராசை, வஞ்சகம், மனித உணர்வுகளின் சிதைவு, சுயநலம், போலி மனிதம், நுகர்வுக் கலாச்சாரத்தின் வீரியம் என பிந்தைய 2010கள் வரையில் அமெரிக்கா தனதென மெச்சிப் பாராட்டிக்கொள்ளும் விழுமியங்கள் எதையும் PTA தனது பார்வையாளர்களுக்குத் துளியும் வழங்கியதில்லை.
ஒருசமூகத்தின் இருள் குணத்தைப் பதிவு செய்வதே அச்சமூகத்தின் ஆக்கப்பூர்வமான வளர்ச்சிக்கு வித்திடும் என்பதாலோ என்னவோ இவரது திரைப்படங்களுக்கு அமெரிக்க அங்கீகாரங்கள் கிடைப்பதில்லை.
இருப்பினும் இதர நாடுகள் அனைத்திலும் இன்றுவரை இவரது திரைப்படங்கள் தொடர்ச்சியான ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டும், திரைப்படக் கல்லூரிகளில் பயிற்றுவிக்கப்பட்டும் வருகின்றன.
என்னதான் PTAவின் திரைப்படங்கள் சக இயக்குநர்களுக்கும், நடிகர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும் பெரும் பரவசத்தை வழங்கக் கூடியதாக இருந்தாலும், அவரது இதரத் திரைப்படங்கள் பெரிய வசூல் வெற்றியை அடையாமல் போனாலும், தற்பொழுது OBAAவுக்குக் கிடைக்கும் வரவேற்பும் நூறு மில்லியன் டாலர் வசூலும், விமர்சகர்களைத் தாண்டி, தன்னையே பெரும் ஆச்சரியத்துக்கு உள்ளாக்குவதாக PTA கூறுகிறார். இந்தத் தலைகீழ் மாற்றம் எவ்வாறு நிகழ்ந்தது? இந்த மாற்றம் எதைக் குறிக்கிறது?
PTA திரைப்படங்களை உருவாக்க வந்த காலம் 1990கள். ஸ்பீல்பெர்க், ஸ்கோர்ஸெசி, ப்ரையன் டிபால்மா போன்ற இயக்குநர்கள் தோற்றுவித்திருந்த அமெரிக்க புதிய அலை திரைப்படங்களுக்கும், தற்பொழுது அமெரிக்க சினிமா என்று அறியப்படும் CGI ஆக்கிரமிப்பு திரைப்படங்களுக்கும் இடைப்பட்டவொரு தளத்தில் PTA பங்காற்றிவருகிறார். இணையதள வருகைக்கு பிறகே இந்தியப் பார்வையாளர்களுக்கு இவரது அறிமுகம் ஏற்பட்டது.
அந்த அறிமுகமும் கூட இந்தியாவிலிருக்கும் திரைப்பட ஆர்வலர்களுக்கும், திரைப்பட உருவாக்கத்தில் ஆர்வம் கொண்டிருந்தவர்களுக்கும், குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால், இணைய இணைப்பு பெற்ற வீடுகளைச் சேர்ந்தோருக்கே நிகழ்ந்தது என்றாலும், 1970/80கள் முதலே பெருவாரியான இந்தியப் பார்வையாளர்கள் அமெரிக்க மெயின்ஸ்ட்ரீம் திரைப்படங்களுக்கு நன்கு பழகியிருந்தனர். ஹாலிவுட் ஆக்ஷன் படங்கள் இந்தியத் திரையரங்கங்களில் வெற்றி பெற்றதுடன், அவை பாலிவுட்டிலும் இதர இந்திய பிற மொழித் திரைத்துறைகளிலும் மறுவுருவாக்கம் செய்யப்பட்டன.
PTA பதிவு செய்திருந்த அமெரிக்கச் சமூகம், இந்தியப் பார்வையாளர்கள் கண்டு பழகியிருந்த அமெரிக்கச் சமூகத்திற்கு முற்றிலும் எதிர்மறையானது. பிரம்மாண்டம், நாயக வழிபாடு, பெரும் பொருட்செலவிலான சண்டைக் காட்சிகள், இவையனைத்துக்கும் மேலாக ஒரு புறம் சுவாரஸியம் (entertainment) மறுபுறம் அறம் (righteousness) என அமெரிக்க சினிமா இந்தியப் பார்வையாளர்கள் மத்தியில் இருவேறு துருவங்களிலிருந்து உள்வாங்கப்பட்டு வந்தன. எது உலக முழுமைக்குமான ‘சரியான’ அறம் என்று தொடர்ச்சியாக முன்மொழியும் அமெரிக்க சினிமா தான் மனிதர்களின் கேடுணர்ச்சிகளுக்கும் (vices) வடிகால் அமைத்துத் தரும் பணியையும் செய்தது. இந்த இரண்டு எதிர்நிலைகளும் ஓர் ஆணின் விருப்பத் தேர்வுகளுக்கு உகந்தது என்ற புள்ளியில் இந்தியப் பார்வையாளர்கள் இத்திரைப்படங்களுடன் இணக்கம் கண்டனர்.
PTAவின் திரைப்படங்கள் இந்த இரட்டை நிலைக்குள் கல்லை எறிந்தது என்று தான் கூற வேண்டும்.
இவரது திரைப்படங்களின் நாயகர்கள் அமெரிக்க நாயகத் தன்மை என்று கருதப்பட்டு வந்த குணங்களிலிருந்து கணிசமாக வேறுபட்டிருந்தனர். PTAவின் திரைமொழி அடிப்படையில் வசனங்களை மட்டும் நம்பிருக்கவில்லை. அவை சினிமாவின் உட்துறைகள் அனைத்தையும் தனது கதையாக்கலுக்குப் பயன்படுத்திக் கொண்டது. அவரது படங்கள் அதீத பரவசத்தையும் அசௌகரியத்தையும் ஒருசேர வழங்கக் கூடியவை.
அமெரிக்க நுகர்வுக் கலாச்சாரத்தின் பிரதிநிகளாகவே அவரது கதாபாத்திரங்கள் விளங்குகின்றனர். நுகர்வுச் சமூகம் கோரும் இருளும், சிற்றின்பங்களும் இவரது திரைப்படங்களில் நிரம்பிவழிவதை காணலாம். இக்கதாப்பாத்திரங்களின் நுகர்வு வேட்கையை இப்படங்கள் தனித்து பதிவு செய்வதில்லை. நுகர்வின் பக்கம் மனிதனைத் தள்ளும் உணர்வுசார் வெற்றிடம் இவற்றின் மையங்களாக விளங்குகின்றன. இவ்வாறு ஒரு சமூகத்தின் சிறப்புகளாகக் கருதப்படுபவற்றுக்கு நேரெதிரானதாக விளங்கும் கதாப்பாத்திரங்களை, தமது சுயநலத்தையும் சுயதேவையையும் மட்டுமே முக்கியமெனக் கருதும் மனிதர்களை பதிவு செய்யும் திரைப்படங்கள் சிறப்பு பெற்றவையாக மாறியது எவ்வாறு?
பொதுவாக இத்தகைய விளிம்பு நிலை மக்களின் பிரதிநிதித்துவத்தை அரசியல் பிரதியாக மாற்றிவிடுவது சுலபம். PTA தன் திரைப்பட வாழ்கையில் (OBAAக்கு முன்பு வரையில்) வெளிப்படையான அரசியல் திரைப்படமென எதையும் உருவாக்கியதில்லை. ஆக, விளிம்புநிலை மக்களால் நிறைந்த இத்திரைப்பங்கள், எந்த அரசியல் கருத்தியல்களின் பின்னும் செல்லாமல், கலையாகச் சிறந்து விளங்க, PTA தனதாக்கிக்கொண்ட யுக்தி, ‘கலை’ தனக்கு நேரெதிரானது என்றுகருதிக் கொள்ளும் அறிவுஜீவித்தன்மை (intelligence). PTAவின் திரைவாழ்கையை எடுத்துக் கொண்டால், ‘There Will Be Blood’ மற்றும் ‘Phantom Thread’ ஆகிய இரண்டு திரைப்படங்களின் நாயகர்கள் மட்டுமே குறிப்பிட்டுச் சொல்லும் அளவிலான அறிவுஜீவிகள். இதர திரைப்படங்களின் நாயகர்கள் அத்தகையவர்கள் அல்ல.
ஆனால், ‘Phantom Thread’ வரை அவரது திரைப்படங்கள் அனைத்தும் தமது நாயகர்களை அறிவாளிகளாக காண்பிக்க முயன்றனவோ இல்லையோ, அவர் படங்களைக் காணும் பார்வையாளர்களை அறிவுஜீவிகளாக உணரச் செய்தன.
திரைப்படமொன்று திரையில் விரிகையில் இயக்குநர் வடிக்கும் காட்சிகளுக்கும், தமது இரசனை மனதிற்கும் இடையிலொரு இணக்கத்தைக் கண்டறிய பார்வையாளர்கள் தம்மையறியாமல் முயல்வர். அந்த ஒன்றலே சினிமாவின் சாரமும் கூட. PTAவின் சாதனை யாதெனில், அவரது காட்சி வடிவமைப்பு தமது சிந்தனைச் செய்கையை கணக்கச்சிதமாகத் திரைபடுத்துபவை. கதைச் சொல்லல் இத்திரைப்படங்களுக்கு இரண்டாம் பட்சமானது. கதாப்பாத்திரங்கள் சிந்திப்பதை இவை முன்னிலைப்படுத்தின. ‘Phantom Thread’ வரையிலும் PTAவின் திரைமொழி கதாப்பாத்திரங்களின் உதவியோடு இயக்குநர் சிந்திக்க முயல்வதையே திரைப்பட ஆவணமாகக் கொண்டிருந்தன.
PTAவின் திரைப்படங்கள் அமெரிக்க வெகுமக்களின் பாராட்டுகல்களுக்கும் ஏற்புக்கும் உரித்தானதாக இல்லாமல் போனதற்கு இதுவொரு காரணம். கதாப்பாத்திரங்களின் சித்தாந்த எண்ணப் போக்கிற்குள் கதைகள் நுழையும் பொழுது, பொதுப்புத்தி நிர்ணயிக்கும் யதார்த்தம் அக்கதைகளில் இடம்பெறாமல் போவதற்கே அநேக வாய்ப்புகள் உள்ளன.
சமூக ஒழுங்கு என்று கருதப்படும் கட்டுப்பாடுகளுக்கு மாற்றாகவும், சில சமயங்களில் எதிராகவும் ஒரு கட்டுப்பாட்டை இக்கதாப்பாத்திரங்கள் அதே சமூகத்தின் மீது விதிக்கின்றன. இந்த மாற்று/எதிர் கட்டுமானத்தை நிறுவும் கதாப்பாத்திரங்களின் அழிவு ஒரு பொதுப் பார்வையாளரை ஆசுவாசம் கொள்ளச் செய்யலாம். மாறாக, PTAவின் கதாப்பாத்திரங்கள் எவையும் என்னதான் ஒருவித உளவியல்/அறிவு சார் சீரழிவை நோக்கிச் சென்றாலும், அவை படங்களில், ஓர் உடலாக, இறந்துவிடுவதில்லை.
PTAவின் நாயகர்கள் மீது பார்வையாளர்கள் உணரும் பயத்துக்கும் பதட்டத்துக்கும் இதுவே காரணம். அவரது திரைப்படங்கள் மனித குழுக்களுக்கும் அரசியல் கருத்தியல்களுக்கும் பொருந்தும் படங்களல்ல. அவை அக்குழுக்களின் தனிநபர்கள் தம்மைத் தாமே திரும்பிப் பார்த்து சுய ஆய்வுக்கு உட்படுத்திக் கொள்ளத் தூண்டும் திரைப்படங்கள். மையநீரோட்ட அமெரிக்க சினிமாவுடன் PTAவின் திரைப்படங்கள் கொண்டிருக்கும் முரண்பாட்டின் துவங்குபுள்ளி இதுதான்.
ஒரு கலைஞனாக மனித அறிவின் சிந்தனைப் போக்கை கலையாக மாற்றுதல் அத்தனை எளிதான காரியமல்ல. ‘சிந்தனை’ கதையின் கருப்பொருளாக மாறும் புள்ளியில் திரைப்படங்கள் உள்ளூர் அடையாளங்களைக் களைந்து உலக மக்கள் அனைவருக்குமான திரைப்படங்களாக உரு கொள்கின்றன. கதை நிகழும் நிலப்பரப்பு அமெரிக்காவாக இருந்தாலும், உணர்வு/உளவியல் சார் அறிவு மனித முழுமைக்கும் உரித்தானது.
இந்தியாவைச் சேர்ந்த ஒருவராக PTAவின் திரைப்படங்களின் மீது உதிக்கும் முதன்மையான ஈர்ப்பு அவற்றோடு அந்நபர் கொள்ளும் அறிவு ரீதியிலான இணக்கமே. மீண்டும் சொல்கிறேன், இந்த இணக்கம் உணர்வுப் பூர்வமானது அல்ல, அறிவுப் பூர்வமானது. இவரது ஆண் கதாப்பாத்திரங்கள் எவையும் ‘Phantom Thread’ வரையில் தனது உணர்வுகளை ஒளிவு மறைவின்றி வெளிப்படுத்திவிடும் கதாப்பாத்திரங்கள் அல்ல.

அந்த உணர்வுகளை அறிவின் உதவியோடு கட்டியாள முயல்பவை அவை. சொல்லி வைத்தாற் போல இக்கதாப்பாத்திரங்கள் அனைத்தும், இறுதியில், தேக்கம் கொண்ட உணர்வுகளிடம் தோல்வியடைபவை தான். இந்த இறுதியிடம் வரை தமது உணர்வுகளுக்கு எதிராக கதாப்பாத்திரங்கள் தொடுக்கும் சுயநல/சுயதேவை தாக்குதல்கள் PTAவின் புனைவைக் கட்டமைப்பதில் பெரும்பங்கு வகிக்கின்றன.
ஒரு கலைஞனுக்கும் தன் கலைப்படைப்புக்கும் இடையிலான ஊடாட்டத்தில் இது இரண்டு படிநிலைகளை வெளிச்சமிட்டுக் காண்பிக்கிறது:
- தனித்த கதாப்பாத்திரங்களின் இருள் தன்மை குறித்து எழுத முற்படும் பொழுது, கதாப்பாத்திரங்களின் இருள் குணாதிசியங்களுக்குள் எழுத்தாளரின் அந்தரங்கப் பார்வைகள் உட்புகுவதை தவிர்க்கவியலாமல் போவது.
- மையநீரோட்டச் சினிமாவுக்குரிய மனித அறங்களுக்கு அப்பால் ஒரு விழுமியத்தைக் கட்டமைக்க முற்படுகையில், யதார்த்தத்துக்கு அப்பாற்பட்ட கதை மாந்தர்களையும் உலகத்தையும் எழுத்தாளர் உருவாக்கிவிடுவது. இந்த மனிதர்கள் எவரும் முழுமுற்றாக அந்த எழுத்தாளர் அல்ல. அதே சமயம், அந்த எழுத்தாளர் இந்த மனிதர்கள் அனைவருக்குள்ளும் இருக்க நேரிடுகிறது.
‘There Will Be Blood’ உளரீதியில் தன்னைச் சிதைத்துவிட்டதாக PTA பல்வேறு நேர்காணல்களில் கூறியிருக்கிறார். இந்த வகையான எழுத்து மனிதம் குறித்த அடிப்படைக் கேள்விகளை நோக்கி ஓர் எழுத்தாளரை செலுத்தக் கூடியது. PTA இதுவரை இயக்கிய பத்து திரைப்படங்களில் எட்டு திரைப்படங்கள் இந்த இறுக்கமான மனித இயல்புகளின் இருளை பேச்சுப் பொருளாகக் கொண்டவையே (‘Inherent Vice’ஐ தவிர்த்து).
‘Licorice Pizza’ PTAவின் திரைமொழி என்று அறியப்பட்டு வந்த சட்டகத்திலிருந்து ஒரு மாற்றுப் பாதையில் சென்றது. மனிதம் குறித்து PTA உணர்ந்து வந்த இருள் தன்மைகளும், தத்துவார்த்தக் குழப்பங்களும், சுயநல பீடிப்புகளும் இதில் அறவே தென்படாது. அவரது திரைப்படங்களிலேயே எளிமையான ‘ஃபீல் குட்’ திரைப்படம் இதுவே என்று கருதப்பட்டது.
PTA முன்னெடுக்கும் ஒரு வித்தியாசமான முயற்சி என்று அவரது ரசிகர்கள் இதை ஏற்றுக் கொண்டனர். ஆனால், OBAAவின் வருகை சினிமா குறித்த PTAவின் பார்வை குறிப்பிடத்தகுந்த மாற்றத்திற்கு உட்பட்டுவிட்டது என்று உறுதிப்படுத்துகிறது.
பெரும்பாலும் ஆண்களின் உள்ளப் போக்குகளை மட்டுமே காட்சிப்படுத்தி வந்த PTA கடந்த பத்து ஆண்டுகளாகத் தான் தனித்துவமிக்க பெண் கதாப்பாத்திரங்களை பிரதிநிதித்துவம் செய்வதில் ஆர்வம் காட்டுகிறார். அதுவரை ஆண்கள் தமது உணர்ச்சிகளை இரும்புக் கரம் கொண்டு அடக்கி ஆளுவது, ‘The Master’லிருந்து தான் தளரத் துவங்குகிறது.
தனது வாழ்வில் தனக்கு மிக முக்கியமாக விளங்கும் பெண் கதாப்பாத்திரங்களிடம் ‘Phantom Thread’ல் மறைமுகமாகவும், ‘One Battle After Another’ல் முழுமையாகவும் சரணாகதியாகும் கதாப்பாத்திரங்களாக அதன் நாயகர்கள் விளங்குகின்றனர். இந்தப் பிந்தைய படங்களில் தான், பின்னணி இசையின் பயன்பாடும் டெல்யூஸ் (Deleuze) சினிமா இசை குறித்து முன்வைக்கும் முரணியக்கப் போக்கிலிருந்து மடைமாறி, காதல் பாடல்களாலும் ரெட்ரோ இசையாலும் அலங்கரிக்கப்படுகின்றன.
மனித வாழ்வியலின் இருள் பக்கங்களை பதிவு செய்ய முற்பட்ட கலைஞன் இவ்வாறு வாழ்கையின் அழகுகளையும் உணர்வுகளையும் பதிவு செய்ய முயலும் பொழுது, சினிமா சட்டக நுணுக்கங்கள் இயல்பாகவே மாற்றத்திற்கு உள்ளாகின்றன. திரைக்கதைகளே கூட ஆழமான முடிச்சுகள் எதையும் கொண்டிருக்காமல் யதார்த்த மனித இயல்புகளுக்கு நெருக்கமாக விளங்குகின்றன.
ஒரு தனித்துவமான திரைமொழி என்று PTAவுக்கு வழங்கப்பட்ட அந்தஸ்தை, பணம் கொடுத்துப் பெறும் பொருளின் துய்ப்பனுபவத்தில் சமரசம் செய்ய விரும்பாமல் இருக்கும் நுகர்வோர் போலிருக்கும் பார்வையாளர்களுக்கு நிச்சயம் ஏமாற்றமே மிஞ்சும்.
ஏனோ முந்தைய திரைப்படங்களில் தென்படாத இலகுத்தன்மை இந்த இறுதி இரண்டு திரைப்படங்களில் நிரம்பி வழிவதை எவரும் கண்டுவிட முடியும். ஒரு குறிப்பிட்ட அளவிலான வீரியமிக்க சிந்திக்குந்திறன் கொண்டோரால் தான் PTAவின் திரைப்படங்களை புரிந்து கொள்ள இயலும் என்ற இரசிக மனதின் பிரத்யேகத்தன்மை (exclusivity) உடைபடுவதில் உண்டாகும் தாழ்வு மனப்பான்மையாகக் கூட இருக்கலாம்.
ஒருபுறம், தனிப்பட்ட ரசிகர் வட்டம் என்றல்லாமல் இன்றைய இளம் தலைமுறையினராலும் அணுகப்படும் புள்ளிக்கு PTA வந்து சேரும் அதே சமயம், சினிமாவின் மீதான காதல் இலகுத்தன்மையுடனும், பூரிப்புடனும் வெளிவருவதைக் கண்டு, மனதிற்கு விருப்பமான இயக்குனரை வசைபாடி என்ன ஆகப் போகிறது? இந்தச் சினிமா சட்டக மாற்றங்கள் சமகால இளைஞர்களுக்கு PTAவை அணுக ஒரு புதிய பாதையை ஏற்படுத்தித் தந்திருக்கின்றன. OBAA இன்று அடைந்திருக்கும் மாபெரும் வெற்றிக்குப் பின் இயக்குனருக்கும் புதிய பார்வையாளர்களுக்கும் இடையில் நிகழ்ந்திருக்கும் எவரும் எதிர்ப்பார்த்திரா இணக்கம் ஒரு முக்கியக் காரணம்.
OBAAவின் வசூல் வெற்றியை உறுதி செய்த மற்றொரு அம்சம் அதன் உள்ளடக்கம். திரைப்படம் அடிப்படையில் ஒரு தகப்பன் மகள் உறவை மையப்படுத்தியிருந்தாலும், கதைக்களம் இரண்டு எதிர் அரசியல் நிலைப்பாடுகளுக்கு மத்தியில் விரிகின்றது. PTAவின் படங்களுக்குப் பழகியிருக்கும் எந்தப் பார்வையாளருக்கும் அவர் வலதுசாரி பிரதிநிதிகளையும் இடதுசாரி பிரதிநிதிகளையும் சரிசமமான அளவில் விமர்சனம் செய்வது புலப்படும்.
அமெரிக்க சமூகம் முந்தைய தலைமுறையிடமிருந்து இளைய தலைமுறையின் கைகளுக்கு இடம்பெயர்வதைக் குறிப்பது. போதாமைகள் நிறைந்த இளம் பருவத்தைக் குழந்தைகள் மீது திணித்தல் என்ற இடமே PTAவுக்கு வலதுசாரி/இடதுசாரி அரசியல்களை ஒருசேர விமர்சனம் செய்யும் தார்மீக உரிமையை வழங்கும் புள்ளி. தத்தமது குழந்தைகளை கைவிட்டுவிடாமல் பேணிக் காப்பது தான் சமூக வளர்ச்சியின் அடையாளமே தவிர, அரசியல் கோட்பாடுகளுக்கென குழந்தைகளை தியாகம் செய்வதில் எந்தவித வளர்ச்சியும் இருக்கப் போவதில்லை.
இத்திரைப்படம் அரசியல் கோட்பாடுகளின்பால் கொண்டிருக்கும் விமர்சனம், காட்சிகள் கொண்டிருக்கும் டார்க் ஹியூமர் ஆகியவை PTA மனித குலத்தின் மீது கொண்டிருக்கும் அவநம்பிக்கையிலிருந்து துவங்குவது தான்.
இந்த அவநம்பிக்கையும் வெறுமையும் PTAவின் படங்கள் அனைத்திற்கும் பொது. Cynicism உண்டு செய்யும் நம்பிக்கையற்ற தன்மைக்கு மனித உணர்வுகளின் மூலம் அர்த்தம் தேடுவதும் PTA படங்களில் நாம் பரவலாகக் காண்பது. ஆனால், இப்பார்வை இதர திரைப்படங்களின் உட்கரு ரீதியிலான முடிச்சுகளிலிருந்து விடுபட்டு படத்தின் முதன்மைக் கூறாக அமைந்தது OBAAவில் தான்.
சமகால இளைஞர்களின் நீர்த்துப் போன, எளிய புரிதல்களுக்குகந்த திரைமொழியில் உருவாக்கப்பட்டும், சமகால அரசியல் விவாதங்களுக்குத் தோதாக அமைவதும் OBAAவின் வெற்றிக்கு உதவி செய்துள்ளது என்று கூறலாம். இந்த வெற்றிக்குப் பின்னால், PTA ஆணித்தரமாகப் பதிவு செய்யும் தகப்பன் மகள் உறவு, ஒரு absent parent சூழல் குழந்தை வளர்ப்பில் எத்தகைய தடையை உருவாக்கக் கூடியுது (நாயகியின் தாயும் – டிகேப்ரியோவின் காதலி – ஒரு absent parent சூழலில் வளர்க்கப்பட்டிருக்க அநேக காரணங்கள் இருக்கின்றன), வளர்ப்பில் இருக்கும் தடைக்கும் புற அரசியலின் மீதான ரேடிகலிச அணுகுமுறைக்கும் இடையிலிருக்கும் தொடர்பு ஆகியவை சில ஆண்டுகளுக்குப் பிறகு இத்திரைப்படம் மறுபார்வைக்கு உட்படுத்தப்படும் பொழுது பேச்சுப் பொருளாகலாம்.
தனது வளர்ப்பு மகனை சுயநலத்திற்காக தன்னிடமிருந்து துறத்திவிடும் ‘There Will Be Blood’ஐ இயக்கியதும் இவர் தான். சுமார் இருபது வருடங்களுக்குப் பிறகு, தனது இரத்த பந்தமாக இல்லாத மகளுக்காக தன் வாழ்கை என்று கருதிய அரசியல் நிலைப்பாட்டையும் காதலையும் இழந்து புத்தி பேதளித்துப் போகும் OBAAவை உருவாக்கியதும் இவர் தான். இந்த இடப்பெயர்வு தன் cynicismக்கு ஓர் ஆரோக்கியமான மருந்தை PTA கண்டறிந்திருப்பதை உணர்த்துகிறது.
அது காதலையும், மனித உறவுகளையும் வேறெப்பொழுதும் இருந்திடாத அளவிற்கு முன்னிலைப்படுத்துகிறது.ஒரு பார்வையாளரை அறிவுஜீவியாக உணரச் செய்வதே PTAவின் பணி என்ற எதிர்ப்பார்ப்பு இப்படத்தின் மீது உருவாகும் ஒவ்வாமைக்கு முக்கியக் காரணம். இதுவும் நுகர்வு மனநிலையின் வேறொரு பரிமானம் தான்.
இதர ஜாம்பவான் இயக்குனர்களைப் போலவே PTAவும் தனது கலை வாழ்கையில் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு இடம்பெயர்ந்து வருகிறார். அந்த இடப்பெயர்வு இயக்குனரை தனிமைப்படுத்தாது, மக்களின் மீதும் மனிதம் மீதும் அதீத அன்பு கொள்ளும் இடத்திற்குக் கொண்டு செல்கிறது என்றால், படைப்பின் வீழ்ச்சியாக அதை சிலர் கணக்கிட்டுக் கொண்டாலும், கலைஞன் என்ற மனிதனுக்கு அது வெற்றியே!











