கருந்தேள் ராஜேஷ்
இதற்கென்று பல புத்தகங்கள் இருந்தாலும், புத்தகத்தை அப்படியே அடியொற்றி யாருமே ஒரு திரைப்படத்தை இயக்கிவிட முடியாது அல்லவா? திரைப்படம் இயக்க, அனுபவ அறிவு அவசியம் தேவை. எனவே, திரைப்படத் துறையோடு நேரடி தொடர்பு இல்லாதவர்கள் திரைப்படங்கள் எப்படி எடுப்பது, எப்படி திரைக்கதை எழுதுவது எனப்தெல்லாம் பற்றிப் புத்தகம் எழுதினால் அவற்றின் நம்பகத்தன்மை குறித்து சந்தேகம் எழும். அதனை பின்பற்றுவதைக் காட்டிலும் போதனையாக மாறிவிடக்கூடிய சாத்தியக்கூறே அதிகம்.
அப்படியல்லாமல் திரைக்கதை எழுதி, இயக்கவும் செய்து வெற்றியையும் கொடுத்த ஒருவர் எழுதுகிற புத்தகத்துக்கு மதிப்பும், நம்பகத்தன்மையும் அதிகம். டேவிட் மேமெட் அப்படியானவர். உலகெங்கும் பிரபலமான பல திரைப்படங்களுக்குத் திரைக்கதை எழுதியவர், வெற்றியடைந்த திரைப்படங்களை இயக்கியவர் என்று டேவிட் மேமெட்டுக்குப் பல முகங்கள் உண்டு. தனது Glengarry Glen Ross நாடகத்துக்காக இவர் புலிட்ஸர் பரிசு வென்றிருக்கிறார் (ஆம். புலிட்ஸர் என்பது கலைக்காகவும் வழங்கப்படுகிறது). இது மேமெட்டின் திரைக்கதையில் திரைப்படமாகவும் எடுக்கப்பட்டது. மேமெட் திரைக்கதை எழுதி ப்ரையன் டி பா(ல்)மா இயக்கிய ‘The Untouchables’ திரைப்படம், உலக அளவில் பேர் பெற்ற அட்டகாசமான படம். இது தவிர Wag the Dog, Ronin, Hannibal, The Postman Always Rings Twice, The Verdict, Glengarry Glen Ross ஆகிய படங்களுக்கும் திரைக்கதை எழுதியிருக்கிறார். . பல படங்களை இயக்கியும் இருக்கிறார். நாடகங்களையும் எழுதி இயக்கி இருக்கிறார்.
இப்படி நாடகம், திரைக்கதை, திரைப்படம் ஆகிய துறைகளில் ஏராளமான அனுபவம் இருக்கும் டேவிட் மேமெட், திரைப்பட இயக்கம் பற்றி ஒரு புத்தகம் எழுதினால் எப்படி இருக்கும்? அதுதான் On Directing Film. இத்தனை அனுபவம் இருக்கும் ஒரு ஆள் எழுதும் புத்தகம், தலையணை சைஸில் இல்லாமல், கைக்கு அடக்கமாக, சிறிய அளவிலேயே இருப்பது ஒரு ஆச்சரியம் என்றால், அனைவருக்கும் புரிவது போல எளிமையாக அவர் எழுதியிருப்பது இன்னொரு ஆச்சரியம். அந்தப் புத்தகத்தை இந்த மாதம் திரை புத்தகம் தொடரில் விரிவாகப் பார்க்கலாம்.
சினிமா என்பது கதை சொல்லும் கலை. டேவிட் மேமெட்டின் On Directing Film இந்தக் கலையின் சுருக்கமான அதே நேரம் ஆழமான ஆராய்ச்சி என்றே சொல்லிவிடமுடியும். இது கொலம்பியா பல்கலைகழகத் திரைப்படக் கல்லூரியில் அவர் நிகழ்த்திய விரிவுரைகளில் இருந்து மேம்படுத்தப்பட்டு எழுதப்பட்ட புத்தகம்.. இந்தப் புத்தகம் காட்சி மூலமாகக் கதை சொல்வதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது. நடைமுறை உதாரணங்கள் மூலம், மேமெட் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து, ஜனரஞ்சக சினிமாவை உருவாக்குவதற்கான ஒரு முறையியலை இந்தப் புத்தகத்தில் முன்வைக்கிறார்.
இனி ஒவ்வொரு அத்தியாயமாகப் பார்க்கலாம்.
Chapter 1: Storytelling
மேமெட் திரைப்பட இயக்குநர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு இடையேயான அடிப்படை உறவை நிறுவுவதன் மூலம் இந்த அத்தியாயத்தைத் தொடங்குகிறார், இயக்குநரின் முதன்மையான பொறுப்பு கதையைத் தெளிவாகவும் திறம்படவும் சொல்வதே என்று அழுத்தமான வாதம் ஒன்றை முன்வைக்கிறார். திரைப்படம் என்பது சுய வெளிப்பாட்டைப் பற்றியது அல்ல, மாறாகப் பார்வையாளர்களுடன் தொடர்புகொள்வதைப் பற்றியது என்பதை அவர் வலியுறுத்துகிறார். இந்த அத்தியாயம் ஒவ்வொரு காட்சியும் கதையின் முன்னேற்றத்திற்கு துணை செய்ய வேண்டும் என்ற கருத்தை அறிவுறுத்துகிறது. கூடவே, அடுத்து என்ன நடக்கிறது என்பதை அறிய ஆர்வத்தோடு காத்திருக்கும் பார்வையாளர்களின் தேவையே ஒவ்வொரு காட்சியிலும் நடக்கப்போகும் விஷயங்களை முடிவுசெய்யவேண்டும் என்று மேமெட் சொல்கிறார்.
எழுத்தாளர்களின் பாரம்பரியமான கதை சொல்லும் முறைகள் திரைப்படங்களுக்கு எவ்வாறு பொருந்துகின்றன என்பதை மேமெட் இந்த அத்தியாயத்தில் விரிவாக விவாதிக்கிறார், பண்டைய வாய்மொழிக் கதை சொல்லும் மரபுகளுக்கும் நவீன திரைப்பட தயாரிப்புக்கும் இடையே இருக்கும் ஒற்றுமைகளை மேமெட் விளக்குகிறார். சிறந்த திரைப்படங்கள் மனித வரலாற்றில் நிலைத்திருக்கும் கதைகளில் இருக்கும் அதே கட்டமைப்பு முறைகளைப் பின்பற்றுகின்றன என்று அவர் வாதிடுகிறார். இயக்குநர் என்பவர், இரவில் கதகதப்புக்காக நெருப்பைச் சுற்றி அமர்ந்துகொண்டு பல கதைகளைப் பேசிக்கொண்டு காலம் கழிக்கும் பயணிகள் போலவே சிந்திக்க வேண்டும். அப்படிச் சொல்லப்படும் கதை ஒன்றில், பார்வையாளர்கள் எதை அறிய வேண்டும் – எப்போது அவர்கள் அதை அறிய வேண்டும் என்பதை ஒரு இயக்குநர் அவசியம் கருத்தில் கொள்ள வேண்டும் என்பது அவர் கூற்று. எனவே இந்த அத்தியாயம் திரைப்படத்தை சுய ஈடுபாடு சார்ந்த கலை வெளிப்பாடு என்பதை விடவும், தகவல்களை எப்படி எளிதாக பிறருடன் தொடர்பு கொள்ளச்செய்வது என்று புரிந்துகொள்வதற்கான அடித்தளத்தை நிறுவுகிறது.
கூடவே, இங்கே, மேமெட் மாண்டாஜ் (மாண்டேஜ் என்று பொதுவில் தமிழில் இது அழைக்கப்படுகிறது) கோட்பாட்டில் மேமெட் மூழ்குகிறார். திரைப்பட எடிட்டிங்கில் பலருக்கும் முன்னோடியான செர்கெய் ஐசென்ஸ்டீனின் படத்தொகுப்புகளில் இருந்து அதிகத் தகவல்கள் எடுத்துக்கொள்கிறார் மேமெட். பலவிதமான ஒளிப்படங்களைத் தொகுத்து வரிசையாகத் திரையில் காட்டுவது எப்படி அந்தத் தொகுப்பில் உள்ள தனித்தனியான பிம்பங்கள் வெளிப்படுத்தும் உணர்வில் இருந்து மேம்படுகிறது என்பதை அவர் விளக்குகிறார் (இப்படி வரிசையாகப் பல ஷாட்களைத் தொகுத்து வழங்குவதே மாண்டாஜ் அல்லது மாண்டேஜ்). இந்த அத்தியாயம் படத்தொகுப்பு என்பதன் உளவியல் தாக்கம் என்ன என்பதையும், பார்வையாளர்கள் ஒன்றுக்கொண்டு வேறுபட்ட ஒளிப்படங்கள் ஒன்றாகச் சேர்க்கப்பட்டுத் திரையில் காட்டப்படும்போது அவர்களின் மனதுக்குள் எப்படிக் கதை சார்ந்த ஒத்திசைவை உருவாக்குகிறார்கள் என்பதையும் ஆராய்கிறது.
மேமெட் ஐசென்ஸ்டீனின் பிரபலமான பரிசோதனைகளை விவாதிக்கிறார், குறிப்பாக குலேஷோவ் விளைவு (Kuleshov Effect). ஒரு நடிகரின் முகத்தை ஒரு ஷாட்டில் ஒரு குறிப்பிட்ட உணர்வோடு நாம் காண்பிக்கையில், அதற்கு முன்னர் வந்த ஷாட்டில் காட்டப்பட்டதை வைத்து, அவரது முகம் முற்றிலும் வேறுபட்ட உணர்வுகளைப் பார்வையாளர்களின் மனதில் வெளிப்படுத்த முடியும் என்பதை குலேஷோவ் விளைவு நிரூபித்தது. கவனமாகச் செய்யப்படும் படத்தொகுப்பின் மூலம் இயக்குநர்கள் எவ்வாறு பார்வையாளர்களின் உணர்வுகளைக் கையாள முடியும் என்பதை விளக்க இந்த கருத்தை மேமெட் பயன்படுத்துகிறார். சினிமாவின் உண்மையான தாக்கம் என்பது தனிப்பட்ட ஷாட்கள் அல்ல – மாறாக அவற்றின் சேர்க்கை மற்றும் அவை எந்த வரிசையில் சேர்க்கப்பட்டுள்ளன என்பதிலேயே உள்ளது என்பதை இந்த அத்தியாயம் வலியுறுத்துகிறது. உணர்வு ரீதியாக அதிர்வு ஏற்படுத்தும் திரைப்படங்களை உருவாக்க விரும்பும் எந்தவொரு இயக்குநரும் மாண்டாஜ் என்பதைப் புரிந்துகொள்வது அவசியம் என்று மேமெட் இறுதியாகச் சொல்கிறார்.
Chapter 2: Where Do You Put the Camera?
இந்த அத்தியாயம் திரைப்படம் எடுப்பதன் மிகவும் அடிப்படைக் கேள்வியான, ‘கேமராவை எங்கு வைக்கவேண்டும்’ என்பது பற்றிப் பேசுகிறது அழகான- பார்வையாளர்களை ஈர்க்கும் காட்சிகளை உருவாக்குவது கேமராவின் வேலை அல்ல. மாறாக, கதையை மிகவும் பயனுள்ள வகையில் சொல்வதற்காகவே கேமரா நிலைநிறுத்தப்பட வேண்டும் என்று மேமெட் சொல்கிறார் கதையில் நிகழும் முன்னேற்றங்கள் அல்லது கதாபாத்திரங்கள் பற்றிய தகவல்களை வெளிப்படுத்துவதில் ஒவ்வொரு காட்சியும் ஒரு குறிப்பிட்ட நோக்கம் கொண்டிருக்க வேண்டும் என்பதை விளக்கும் ’objective correlative’ என்ற கருத்தை அவர் அறிமுகப்படுத்துகிறார்.
அழகியல் கருத்துக்களை விட, கதையின் தேவைகளால் மட்டுமே கேமராவின் இடம் தீர்மானிக்கப்பட வேண்டும் என்பதையும் சிறந்த இயக்குநர்கள் எவ்வாறு கதைக்கு சேவை செய்யும் முடிவுகளைக் காட்சிகள் வாயிலாக எடுக்கிறார்கள் என்பதை அவர் விவாதிக்கிறார், அந்தக் காட்சிகள் சாதாரணமாக, குறிப்பிடத்தக்கதாக இல்லாமல் தோன்றினாலும் கூட, அவை அந்தத் திரைப்படத்தின் கதையைப் பார்வையாளர்களுக்கு விளக்குவதற்காகவே ஒரு திரைப்படத்தில் கேமராவால் ஒளிப்பதிவு செய்யப்படுகின்றன என்பது அவரது கருத்து.
இந்த அத்தியாயம் கதையை முன்னெடுத்துச் செல்லும் காட்சிகளுக்கும் வெறுமனே இயக்குநரின் தொழில்நுட்பத் திறன் அல்லது கலைப்பார்வையைக் காண்பிக்கும் காட்சிகளுக்கும் இடையேயான வேறுபாட்டை ஆராய்கிறது. பிந்தைய அணுகுமுறை இறுதியில் கதைக்கு பதிலாக இயக்குநரின் ஈகோவையே வெளிப்படுத்துகிறது. இதனாலேயே இந்த வழிமுறை, மிகச்சாதாரணமான திரைப்படம் ஒன்றையே பார்வையாளர்களுக்குக் கொடுக்கிறது என்று மேமெட் உறுதியாகச் சொல்கிறார்.
Chapter 3: Countercultural architecture and Dramatic Structure
இந்த அத்தியாயம் திரைக்கதை எழுதுதல் மற்றும் திரைப்படம் இயக்குதல் ஆகியவற்றுக்கிடையே இருக்கும் உறவை ஆராய்கிறது. திரைப்படம் ஒன்றை உருவாக்க, உணர்வுகள் சார்ந்த கட்டமைப்பை (dramatic structure) அனைவரும் புரிந்துகொள்வது அவசியம் என்று வாதிடுகிறது. அவரே ஒரு தலைசிறந்த நாடக மேதையாக இருப்பதால், நாடகம் சார்ந்த கருத்துகள் எப்படித் திரைப்படம் ஒன்றை உருவாக்கத் துணைபுரிகின்றன என்பதை மேமெட் விரிவாக விளக்குகிறார். மாறாக, நான் வித்தியாசமாக உருவாக்குகிறேன் பார் என்று கவுண்ட்டர் கல்ச்சர் என்ற பாணியில், ஏற்கெனவே இருப்பதை மாற்றுகிறேன் என்று வேண்டுமென்றே முயல்வது திரைப்படத்தைக் கெடுத்துவிடும் என்பது மேமெட்டின் கருத்து (அதற்காக மேமெட் ஒரு பழைமைவாதி என்று உடனடியாகத் துப்பாக்கியைத் தூக்கிவிடவேண்டாம். புத்தகத்தை முழுமையாகப் படித்தால் இதில் தெளிவு கிடைக்கும்).
பிறரை ஈர்க்கும் கதைகளை உருவாக்குவதில் உணர்வுகள் சார்ந்து எப்படி சொல்லப்பட வேண்டும் என்பது பற்றி மேமெட் நிறையச் சொல்கிறார். கூடவே, கதை என்பதில் தங்களுக்கு உள்ள புரிதலை மேம்படுத்தி, எப்படிச் சிறப்பான கதைகளைத் திரைப்படங்களில் இயக்குநர்கள் சொல்ல முடியும் என்பதையெல்லாம் மேமெட் ஏராளமாகப் பேசுகிறார். இப்படியான உணர்வு சார்ந்த எழுத்தைப் புரிந்துகொள்ளும் இயக்குநர்கள், படங்களை இயக்கும்போது கதை சொல்லலில் ஏற்படும் சிக்கல்களை அடையாளம் காணவும் தீர்க்கவும் எப்படிச் சிறப்பான தகுதியுடையவர்களாக மாறுகிறார்கள் என்பதை இந்த அத்தியாயம் வலியுறுத்துகிறது. சிறந்த திரைப்படங்கள், சிறந்த நாடகங்களைப் போலவே, உணர்வுகள் சார்ந்து கட்டமைக்கப்பட்டு, பன்னெடுங்காலங்களாக அனைவர் மீதும் தாக்கம் செலுத்தக்கூடிய படைப்புகளாக மாறுகின்றன என்பது மேமெட்டின் கருத்து.
கூடவே, ஒரு சீனில் தாமதமாக நுழைந்து விரைவாக வெளியேறவேண்டும் என்பது போன்ற கருத்துகளும் இதில் உண்டு. நேர்மையாக ஒரு திரைப்படத்தை எழுதினால், அந்தக் கதை தன்னை எப்படி எழுதவேண்டும் என்று நமக்கு எப்படியாவது உணர்த்திவிடும் என்று சொல்லி இந்த அத்தியாயத்தை மேமெட் முடிக்கிறார்.
Chapter 4: The Tasks of the Director
இந்த அத்தியாயம் ஒரு திரைப்பட இயக்குநரின் நடைமுறைப் பொறுப்புகளைக் கோடிட்டுக் காட்டுகிறது, திரைப்படக் கோட்பாடுகளைத் தாண்டி, திரைப்பட இயக்குநரின் அன்றாட சவால்களை ஆராய்கிறது. பட்ஜெட் வரம்புகள், எடுக்கப்பட வேண்டிய காலம் சார்ந்த அழுத்தங்கள், நடிகர்கள் மற்றும் படக்குழுவினர்களுடன் திறம்படப் பணிபுரிய வேண்டிய தேவை உட்படப் பல விஷயங்கள் விவாதிக்கப்படுகின்றன. ஒரு திரைப்படத்தின் நடைமுறை சார்ந்த கட்டுப்பாடுகள் மற்றும் இயக்குநரின் கலைப்பார்வை ஆகிய இரண்டும் எப்படி சரியாக ஒன்றோடொன்று சார்ந்து, எங்கும் எந்தப் பக்கமும் சாய்ந்துவிடாமல் ஒரே நிலையாகச் செல்லவேண்டும் என்பதை மேமெட் விவாதிக்கிறார்.
திரைப்படம் எடுக்கையில் அன்றாடம் நிகழும் சிக்கலான பிரச்னைகளைச் சந்திக்கும்போதுகூட, ஒரு இயக்குநரின் முதன்மையான நோக்கம் என்பது கதையில் கவனம் செலுத்துவதாக மட்டுமே இருக்கவேண்டும் என்பதை மேமெட் வலியுறுத்துகிறார். வெற்றிகரமான இயக்குநர்கள் எவ்வாறு ஏராளமான அழுத்தங்களின் இடையேகூட, சொல்லவேண்டிய கதைக்கு உதவிசெய்யும் விரைவான, உறுதியான தேர்வுகளைச் செய்யக் கற்றுக்கொள்கிறார்கள் என்று மேமெட் சொல்கிறார். அனைவரும் சேர்ந்து ஒன்றிணைந்து ஒரு திரைப்படத்தை உருவாக்கும் சூழல் என்பது, இயக்குநர்களின் தலைமைப் பண்பு தெளிவாக வெளிப்படும் நேரத்திலேயே உருவாகிறது என்று இந்த ஆத்தியாயம் சொல்கிறது. அதே போல, முழுமையான திட்டமிடலின் முக்கியத்துவத்தை மேமெட் விவாதிக்கிறார் முழுமையான திட்டமிடல் என்பது இயக்குநர்கள் ஆங்காங்கே திடீரென்று எடுக்கும் முடிவுகளை மிகச்சிறந்தவையாக மாற்றும் என்பது மேமெட்டின் கருத்து.
Chapter 5: Pig – The Movie
மேமெட், அவரது திரை இயக்கம் சார்ந்த கொள்கைகளை நமக்கு நிரூபிக்க, Pig என்ற கற்பனையான திரைப்படத்தை முன்வைத்து விளக்குகிறார். இந்த அத்தியாயம், ஒரு எளிமையான கதையை ஒரு முழுமையான திரைப்படமாக எப்படி மாற்றவேண்டும் என்பதைப் புரியவைக்கிறது. வழிவழியாக இருந்துவரும் திரைப்பட இயக்கம் சார்ந்த கருத்துகளை வைத்துப் படம் எடுப்பதை விட, கதையை எளிமையாக அனைவருக்கும் புரியும்படி எப்படிச் சொல்லவேண்டும் – இதனால் கதை எப்படி அனைவருக்கும் சென்று சேரும் என்பதை இந்த அத்தியாயம் புரியவைக்கிறது.
Pig உதாரணத்தின் மூலம், மேமெட் ஒரு கதையை அதில் எவையெல்லாம் அத்தியாவசியாகச் சொல்லப்படவேண்டுமோ அப்படி எவ்வாறு பிரிப்பது என்றும், அப்படிப் பிரிக்கப்பட்ட கதை அம்சங்களைக் காட்சிகளாக எப்படி மாற்றுவது என்றும் விளக்குகிறார். கதையை விரிவாக எழுதும்போது, பார்வையாளர்களின் கவனத்தை திசைதிருப்பக்கூடிய தேவையற்ற காட்சிகளை எவ்வாறு அகற்றுவது என்பதையும், கதையை முன்னெடுத்துச் செல்லும் முக்கியமான தருணங்களை எவ்வாறு அடையாளம் காண்பது என்பதையும் அவர் இந்த அத்தியாயத்தில் நிரூபிக்கிறார். இந்த அத்தியாயம் காட்சிகளின் தேர்வு முதல் படத்தொகுப்பின் தேர்வுகள் வரை முந்தைய அத்தியாயங்களில் விவாதிக்கப்பட்ட கருத்துகளை உண்மையிலேயே திரைப்படம் ஒன்றை இயக்கும்போது எப்படிப் பயன்படுத்துவது என்பதைச் சொல்கிறது. கதை சொல்லல் என்பதன் அடிப்படையான விஷயங்களை ஒழுங்காகப் பின்பற்றுவதிலிருந்தே சிறந்த திரைப்படங்கள் உருவாகின்றன என்ற தனது வாதத்தை வலுப்படுத்த மேமெட் இந்த ’ ‘Pig’ என்ற நடைமுறை உதாரணத்தை பயன்படுத்துகிறார்.
Chapter 6: Conclusion
மிக எளிதான காட்சிகள் மூலம் முதலில் இருந்து இறுதிவரை ஒரு திரைப்படத்தை நம்மால் எடுக்க முடிந்து, அதில் இயல்பான ஒரு கதையைச் சொன்னால் போதுமானது என்று இந்த அத்தியாயத்தை மேமெட் துவக்குகிறார். கதையின் முக்கியமான கதாபாத்திரத்துக்கு என்ன நோக்கம்? அதைச் சுற்றி நம்மால் கதை பின்ன முடிந்திருக்கிறதா? ஒவ்வொரு காட்சியிலும் ஏதேனும் நோக்கம், கதையை முன்னோக்கிச் செலுத்துவதில் இருக்கிறதா? ஒவ்வொரு ஷாட்டின் நோக்கம் என்ன?
இதெல்லாம் தெரிந்தாலே ஒரு படத்தை எளிமையாக இயக்கப் போதுமானது என்பது மேமெட்டின் கருத்து. நமது கதையின் பிரதான கதாபாத்திரம் போலவே நமக்கும் ஒரு நோக்கம் உண்டு – அது என்ன? முடிந்தவரை எந்தக் குழப்பமும் இல்லாமல், நூல் பிடித்து போல நமது கதையைத் திரையில் சொல்கிறோமா இல்லையா என்பதே.
ஒரு திரைப்படம் நல்ல படமா கெட்ட படமா என்பதை நாம் முடிவுசெய்ய இயலாது. அது நம் கையில் இல்லை. மாறாக, முடிந்தவரை நம் முயற்சிகளை நேர்மையாகப் போட்டு அந்தப் படத்தை எடுக்கிறோமா இல்லையா என்பதுமட்டுமே நம் கையில் உண்டு என்பது மேமெட்டின் கருத்து.
விரிவான, பெரிய கேமரா காட்சிகள் அல்லது மிகச்சிக்கலான காட்சிகளை விடவும், தெளிவான – நேர்க்கோட்டில் கதை சொல்லல் மீது பார்வையாளர்கள் அதிக ஈடுபாட்டுடன் இருக்கிறார்கள் என்பதை மேமெட் விளக்குகிறார். பல்லாண்டுகளாக மக்களின் மனதில் நினைவில் நிற்கும் திரைப்படங்கள் பெரும்பாலும் மேற்பரப்பில் எளிமையாகவே தோன்றும் – ஆனால் உண்மையில் அவை மிகவும் கவனமான, கட்டுப்பாடான வேலைப்பாட்டின் விளைவாகவே அனைவரின் மனதிலும் நிலைத்து நிற்கின்றன என்று மேமெட் பேசுகிறார். தங்கள் தொழில்நுட்பத் திறன்களைக் காண்பிக்கும் ஆசையைப் புரிந்துகொண்டு, அதற்குப் பதிலாகக் கதை சார்ந்து வேலை செய்வதில் கவனம் செலுத்தும்படி இந்த அத்தியாயம் இயக்குநர்களுக்குச் சவால் விடுகிறது. இயக்குநரின் வேலை கதையை வெளிப்படுத்தி, அதன்பின்னால் மறைந்துவிடுவதுதான் என்றும், மாறாக, ஒவ்வொரு காட்சியிலும் ஒரு இயக்குநர், ‘நான் இதோ தெரிகிறேன் பாருங்கள் – இதோ எனது ஜீனியஸ் தெரிகிறது பாருங்கள்’ என்றும் பார்வையாளர்களின் கவனத்தை ஒரு இயக்குநர் சிதறடித்துக்கொண்டே இருந்தால், படம் பார்க்கும் பார்வையாளர்களை அந்தக் கதையில் முழுமையாக மூழ்க அந்தத் திரைப்படம் அனுமதிக்காது என்பதை வலியுறுத்தி மேமெட் புத்தகத்தை முடிக்கிறார்.
On Directing Film என்ற இந்தப் புத்தகம் முழுவதும், இயக்குநர் டேவிட் மேமெட் தொடர்ச்சியாகவே, நல்ல திரைப்படம் ஒன்றை இயக்குவதற்கு, ஒரு இயக்குநர், முழுக் கட்டுப்பாட்டுடன் கதை சொல்லும் இயல்பான முறைகளை நோக்கி அர்ப்பணிப்புடன் செயல்படுவதே அவசியம் என்று வலியுறுத்திக் கொண்டே இருக்கிறார். அவரது அணுகுமுறை ஒவ்வொரு படைப்புத்தேர்வும் ஏன் செய்யப்படுகிறது என்பது பற்றியும், அது கதை நோக்கத்துக்கு எவ்வாறு சேவை செய்கிறது என்பதைப் புரிந்துகொள்வதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்துகிறது. இந்தப் புத்தகம் வருங்கால இயக்குநர்களுக்கு ஒரு நடைமுறை வழிகாட்டியாகவும் திரைப்படக் கலையின் இயல்பு பற்றிய எளிமையான கையேடாகவும் செயல்படுகிறது.











