The Talkie
Thursday, April 9, 2026
  • Login
  • Register
  • thetalkie
  • ஆளுமைகள்
  • திரைக்கதைகள்
  • உரையாடல்
  • கட்டுரைகள்
    • இந்தியத் திரைப்படங்கள்
    • உலகத் திரைப்படங்கள்
    • தமிழ்த் திரைப்படங்கள்
    • ஓடிடி திரை
  • தொடர்கள்
    • ட்ரெண்டு கொட்டாய்
    • திரை புத்தகம்
    • ஸ்டார்ட் கேமரா
    • I CALL THE SHOTS
    • குரு தத் 100
    • டேபிள் டாப்
  • தொடர்பு
No Result
View All Result
The Talkie
  • thetalkie
  • ஆளுமைகள்
  • திரைக்கதைகள்
  • உரையாடல்
  • கட்டுரைகள்
    • இந்தியத் திரைப்படங்கள்
    • உலகத் திரைப்படங்கள்
    • தமிழ்த் திரைப்படங்கள்
    • ஓடிடி திரை
  • தொடர்கள்
    • ட்ரெண்டு கொட்டாய்
    • திரை புத்தகம்
    • ஸ்டார்ட் கேமரா
    • I CALL THE SHOTS
    • குரு தத் 100
    • டேபிள் டாப்
  • தொடர்பு
No Result
View All Result
The Talkie
Subscribe
Home கட்டுரைகள்

தமிழ் சினிமாவின் நாயகன்

The Talkie by The Talkie
November 15, 2025
in கட்டுரைகள், தமிழ்த் திரைப்படங்கள்
A A
1
Naayagan Re-release
Share on WhatsappShare on FacebookShare on Twitter

Author Icon சி.சரவணகார்த்திகேயன்

பதினேழு பிராயத்தில் நான் கிண்டி பொறியியல் கல்லூரியில் படிக்கச் சேர்ந்த போது அங்கே நான் முதலில் பார்க்க விரும்பிய இடம் அந்த எண்பதாண்டு பழைய (இப்போது நூறாண்டு) சிவப்பு – வெள்ளைக் கட்டிடத்தின் வாயிலைத்தான்.

அங்கேதான் நாயகன் திரைப்படத்தின் உச்சக்காட்சி எடுக்கப்பட்டிருக்கும். புறத்தோற்ற‌ ஒற்றுமை காரணமாக கல்லூரியை நீதிமன்றமாகக் காட்டியிருப்பார்கள்.

வேலு நாயக்கரைப் பார்த்து அவரது பெயரன், “நீங்க நல்லவரா கெட்டவரா?” என்ற புகழ் பெற்ற தத்துவார்த்த கேள்வியைக் கேட்கும் இடம். அங்கு போய் கமல் ஹாசன் என்ற மாபெரும் கலைஞன் நின்று அந்த அழியாக் காவியக் காட்சியில் நடித்த ஸ்தல‌ம் அது என்பதை உணர்ந்து சிலிர்த்தேன்.

அதற்கு ஓரிரு ஆண்டு முன்தான் நாயகன் படத்தைப் பார்த்திருந்தேன். ஆதி காலத்தில் நான் ரஜினி ரசிகன். குருதிப்புனல் திரைப்படம் என்னைக் கமல் ரசிகனாக மாற்றியது. அதன் பின் வந்த கமல் படங்கள் அனைத்தையும் திரையரங்கில் கண்டேன். ஆனால் அப்போது பள்ளிப் படிப்பின் நிமித்தம் எம் வீட்டில் கேபிள் தொலைக்காட்சி கிடையாது என்பதால் பொதிகைத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது போக பிற‌ பழைய‌ கமல் திரைப்படங்களைப் பார்த்தது இல்லை. ராஜ பார்வை, மூன்றாம் பிறை, பேசும் படம், நாயகன், குணா,  சத்யா, இந்திரன் சந்திரன்,  நம்மவர் எனப் பல படங்கள் அதிலடக்கம்.

இதை அறிந்த போது என் பள்ளி நண்பன் என். முத்துக்குமார் சன் தொலைக்காட்சியில் வார இறுதிகளில் அந்தப் படங்கள் ஒளிபரப்பானால் தன் வீட்டுக்கு வந்து படம் பார்க்க அழைப்பான். கூச்ச சுபாவியான நான் அப்படிப் போய் பார்த்தது ஒரே படம் – நாயகன்.

பதின்ம வயதில் பார்க்கும் போதே படம் வழமையில் சேராத‌ வேறு ஜாதி என உறைத்து விட்டது. அதிலிருந்து குறைந்தபட்சம் கால் நூற்றாண்டு கடந்து விட்டது. இன்னும் அதைக் கடந்த மேலான‌ ஒரு திரை அனுபவம் தந்த தமிழ் திரைப்படத்தை நான் பார்க்கவில்லை. என் ‘96: தனிப்பெருங்காதல்’ நூல் முன்னுரையின் முதல் வரி: “மணி ரத்னத்தின் நாயகன் தமிழில் எனக்கு மிகப் பிடித்த படம். தமிழில் ஏதேனும் ஒரு படம் பற்றி நான் ஒரு நூல் எழுதுவதாய் இருந்தால் அது நாயகன் குறித்தே இருக்குமென‌ நினைத்திருக்கிறேன்.”

உண்மையைச் சொன்னால் எந்தப் பழைய தமிழ்ப் படத்தையும் மறுவெளியீட்டில் திரை அரங்கில் காண்பது பற்றிய‌ அபிலாஷைகள் ஏதும் இத்தனை காலமாக இருந்ததில்லை. அப்படங்களில் தொழில்நுட்ப ரீதியாகச் சிறப்பாக ஏதும் இருந்திருக்க வாய்ப்பில்லை என்பதால் Theaterical Experience எதையும் புதிதாக வழங்கா என எண்ணியதே காரணம் (பாட்ஷா படத்தை மட்டும் அதன் Nostalgic உணர்வுக்காக மறுவெளியீட்டில் கண்டேன்).

ஆனால் அந்த இயல்பான ஆர்வமின்மை தாண்டி நாயகன் படம் திரையரங்கில் மீண்டும் வெளியாவது பற்றிய செய்தி வந்ததும் காணத் தீர்மானித்தேன். ஆனால் நாயகன் படம் முதல் முறை பார்த்தது போலவே இப்போது திரையரங்கில் காண்பதும் தனிக் கதையாக நினைவில் நிற்கும் என அறியேன். நாட்டு நடப்பு அந்நிலைமையை உண்டாக்கி விட்டது.

எங்களூர் பெங்களூர் என்பது முக்கியத் தகவல். கன்னட மகளுக்குத் தமிழ்த் தாய் என்று கமல் திருவாய் மலர்ந்தருளி, அதன் தரவின்மைக்கு மன்னிப்பும் கேட்க மறுத்ததால் அவருக்கு கருநாடக நாட்டுடன் வரலாற்றுப்பூர்வமாக ஒரு வாய்க்கால் தகராறு உண்டு. எனவே சில மாதங்கள் முன் Thug Life பெங்களூரில் வெளியாகாமல் போனது.

அப்போது ஓசூர் வரை சென்று பார்த்துத் திரும்பினேன். அலைச்சலுடன் படமும் எரிச்சலூட்டிய அனுபவம். இன்னும் கமல் மன்னிப்பு கேட்ட பாடில்லை என்பதால் இப்போது நாயகன் படத்துக்கும் மீண்டும் அதே சிக்கல் – படம் பெங்களூரில் மட்டும் வெளியாகவில்லை.

எல்லை மீறிப் போக வேண்டிய நிர்ப்பந்தம். அலுவலக ப்ராஜெக்ட் அழுத்தம், ஆண்டான் நாவல் அவசரம் என‌ இரண்டையும் ஒத்தி வைத்து விட்டு ஓர் இரவுக் காட்சிக்குக் கிளம்பி விட்டேன். Thug Life பார்த்த‌ அதே லக்ஷ்மி சினிமாஸ் திரையங்கு, இதுவும் மணி ரத்னம் இயக்கிய திரைப்படம் என ஏக ஒற்றுமைகள். இந்த‌ முறை படம் பரம திருப்தி என்பது மட்டும் வித்தியாசம். படம் முடிந்து பின்னிரவில் தேசிய நெடுஞ்சாலையில் வீட்டிற்குக் காரோட்டிய ஏகாந்தத்தில் நாயகன் படக் காட்சிகளை அசை போட்டது சுகானுபவம்!

படம் மறுவெளியீட்டிற்குத் தடை கோரிய வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி செந்தில் குமார் தடை நீக்கும் தீர்ப்பை அறிவிக்கையில் தான் படத்தை 16 முறை பார்த்திருப்பதாகவும் காட்சி வாரியாகச் சொல்ல முடியும் என்றும் சொன்னார். நாயகன் மாதிரி படங்களுக்கு அப்படியான ரசிகர்கள் இருப்பது இயல்புதான். நானும் இடைப்பட்ட 25 ஆண்டு காலத்தில் படத்தைத் தொலைக்காட்சியில் 25 முறையாவது பார்த்திருப்பேன்.

இப்போது திரையங்கில் மறுபடியும் பார்க்கும் போது அந்த‌ப் படம் சம்மந்தமான எனது இத்தனை கால‌ அபிப்பிராயம் கெட்டிப்படவே செய்தது. அந்த மதிப்பீட்டுக்குக் குழப்பம் உண்டாக்கும் அருகாமையில் கூட வேறெந்தப் படமும் வரவில்லை. A true genius work!

மிக நிதானமாக மிக யோசித்தே சொல்கிறேன் – காளிதாஸ் தொடங்கி 94 ஆண்டு தமிழ் பேசும் பட வரலாற்றில் ஆகச் சிறந்த திரைப்படம் நாயகன்தான். (Of course, நான் பார்த்த வரைதான். ஆனால் ஒரு திரை ஆர்வலனான நான் ஏறத்தாழ அத்தனை முக்கியத் தமிழ் திரைப்படங்களையும் பார்த்துவிட்டேன் என்றுதான் நினைக்கிறேன்.) தமிழ் சினிமாவின் நிகரற்ற, தனிப்பெரும் நாயகன் இப்படம்தான்! நான் இதை சிந்தித்ததற்கு ஐந்தாண்டு கழித்து Time சஞ்சிகை அது வரையிலான (2005) ஒட்டுமொத்த உலக சினிமாவின் சிறந்த 100 படங்களைப் பட்டியலிட்டது. அதில் தமிழிலிருந்து இடம் பெற்ற ஒரே படம் நாயகன்!

இப்போது திரையரங்கில் வெளியாகி இருப்பது நாயகனின் Digitally Restored 4K Version.

முதலில் நம்மை ஈர்ப்பது படத்தின் ஒளித் தரம். படம் முதன்முதலில் 1987ல் வெளியானது என்பதை நினைவு கொள்ள வேண்டும். கிட்டத்தட்ட நாற்பதாண்டுகள் கடந்து விட்டன. சன் HD-யில் பார்த்தாலுமே படத்தில் ஆங்காங்கே தேய்வுகளும் கீறல்களும் தட்டுப்படும். ஆனால் இப்போது வெளியாகி இருப்பது ஒரு புதிய படத்தின் ஒளிப்பதிவுக்கு ஒப்பாக பளிங்கு மாதிரி துலக்கமான‌ காட்சிகளைக் கொண்டிருக்கிறது. பிசி ஸ்ரீராம் என்பவர் எப்பேர்ப்பட்ட ஒளிப்பதிவாளர் என்பதையே முதலில் இந்த வடிவில் உணர்கிறோம்.

அடுத்து ஆச்சரியகரமான‌ அளவில் மேம்பட்டிருப்பது படத்தின் ஒலித்தரம் (Audiography). 5.1 Surround Sound-ற்கு மாற்றி இருக்கிறார்கள் என நினைக்கிறேன். பல காட்சிகளில் இடம் பெறும் பின்னணிச் சப்தங்களை இத்தனை காலமும் தொலைக்காட்சியில் படம் பார்க்கும் போது கவனித்ததே இல்லை அல்லது உணர முடிந்ததில்லை. உதாரணமாக புறாக்களின் பக்பக் சப்தம், கடிகாரம் துடிக்கும் சப்தம் முதலானவை. அந்த வகையில் இந்தப் புதிய‌ திரையரங்க வடிவில் ஒலியமைப்பு என்பது ஒளிப்பதிவுக்கு நிகரான கலை அனுபவமாக அமைந்தது. இயல்பான, பொருத்தமான, சில சமயம் புத்திசாலித்தனமான ஒலிகள்! மணி ரத்னம் எவ்வளவு நேர்த்தியான கலைஞன் என்பதையும் சொல்கிறது.

இப்படம்  ஒரு மனிதனின் சுமார் அரை நூற்றாண்டு கால வாழ்வு. எனவே காட்சிகளின் பின்னணியில் காலம் மாறிக் கொண்டே இருப்பது வர‌ வேண்டும். அதைத் திறம்படச் செய்திருக்கிறார் தோட்டா தரணி. உதாரணமாக‌, கமலோ பிறரோ பயன்படுத்துகின்ற‌ கார்களை காலத்திற்கேற்பக் காட்டுவதன் மூலம் உறுத்தலில்லாமல் செய்திருக்கிறார்.

பிசி ஸ்ரீராமின் தரமான ஒளிப்பதிவு போலவே தோட்டா தரணியின் அலாதியான கலை இயக்கமும் பெரிய திரை மறுவெளியீட்டில் அடிகோடிட்டுத் தெரிகிறது. இருவருக்கும் தேசிய விருது தந்து அழகு பார்த்தது ந‌ம் நாடு என்பதில் வியப்பதற்கு ஒன்றுமில்லை.

அடுத்து திரையரங்க அனுபவம் படத்தை மேலும் உயிர்ப்புள்ளதாக்கி பார்ப்பவருக்கு நேரில் காண்பது போல் தோன்றச் செய்கிறது. ஓர் உதாரணம் சொல்கிறேன். படம் மறுவெளியீடு பற்றிய அறிவிப்பு வந்த போது என் பதின்ம வயது மகன்களையும் அழைத்துச் செல்ல விரும்பி இருந்தேன். ஆனால் புக்-மை-ஷோவில் போய்ப் பார்த்த போதுதான் அது ‘ஏ’ சான்றிதழ் பெற்ற படம் எனத் தெரிந்தது. எனக்கு உண்மையிலேயே அது அதிர்ச்சியாக இருந்தது. படத்தில் அப்படி மோசமான‌ உறுத்தலாக, சிறுவர்கள் காணத் தகாததாக எதுவும் இருந்த நினைவில்லை, அப்புறம் ஏன் ‘ஏ’ சான்றிதழ் என விளங்கவில்லை.

ஆனால் படத்தைத் திரையங்கில் கண்ட பின்பு அதற்குக் காரணம் புரிந்தது. சிறுவன் போலீஸ் அதிகாரியைக் கத்தியால் குத்துவது, ராட்சசச் சுத்தியலால் தலையில் அடித்துக் கொல்வது, பாலியல் தொழிலில் பள்ளிச் சிறுமி ஈடுபட்டிருப்பது, ட்யூபில் உப்பு கட்டிக் கடலில் இறக்கிச் சரக்கு கடத்துவது, Door Eye வழியே கண்ணில் சுடுவது, மூதாட்டி தீக்குளிப்பது உள்ளிட்ட பல வன்முறைக் காட்சிகள் பெரிய திரையில் அதன் அசல் தீவிரத்தோடு வெளிப்படுகிறது.

இம்மாதிரியான‌ காட்சிகள் பதினெட்டு வயதுக்குக் குறைந்த சிறுவர்களுக்கு அதிர்ச்சியாகவோ தவறான வழிகாட்டலாகவோ அமையலாம். இன்று இவற்றில் ப‌ல சாதாரணக் காட்சிகளாக மாறி இருக்கலாம். ஆனால் அன்றைய தேதிக்கு அந்த அளவுகோல் இருந்திருப்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.

பாடல்கள் உட்பட படத்துக்கு நல்முறையில் சப்டைட்டில்களும் வழங்கப்பட்டிருக்கிறது. எனவே பிற மொழிக்காரர்களும் பார்த்து இதன் உயரத்தை உணர்ந்து கொள்ள வாய்ப்பு.

புதிய திரைவடிவம் இத்தகைய‌ ப‌ற்பல மேம்பாடுகளைப் படத்துக்கு அளித்திருக்கிறது.

ஆனால் திரையரங்க அனுபவத்தைக் கீழிறக்கும் சமாச்சாரமும் இவ்வடிவில் உள்ளது. நாயகன் படம் அசலாக 35 mm படம் கிட்டத்தட்ட சதுர அளவில்தான் தெரியும். ஆனால் இந்தப் புதிய திரையரங்க வடிவில் அதை சினிமாஸ்கோப் என்ற செவ்வக வடிவில் மாற்றி இருக்கிறார்கள். அசல் வடிவிலுள்ள‌ காட்சியியின் ஃப்ரேமில் மேலும் கீழும் கொஞ்சம் வெட்டினால்தான் அப்படி மாற்ற முடியும். அதையே செய்திருக்கிறார்கள்.

அதன் விளைவாக சில காட்சிகள் பார்க்கத் தொந்தரவாக இருக்கிறது. அதுவும் படம் ஆரம்பிக்கும் போது டைட்டில் கார்ட் போடுகையிலேயே திரையில் எழுத்துக்கள் மிக ஓரமாகவோ காணாமல் ஆகியோ வெட்டப்பட்டோ தெரிகையில் பார்வையாளனுக்கு இது புரிந்து போகிறது. தவிர ஏற்கெனவே பல முறை பார்த்திருந்தால் காட்சிகள் மனதில் பதிந்து போய் இந்தச் சிறு வித்தியாசம் ஆங்காங்கே எளிதில் உறுத்த ஆரம்பித்து விடும்.

இது அவசியமா எனப் புரியவில்லை. மணி ரத்னமோ பிசி ஸ்ரீராமோ இம்மாற்றம் பற்றி என்ன நினைக்கிறார்கள் என அறிந்து கொள்ள விழைகிறேன். (சமீபத்தில் The Godfather படத்தைத் திரையரங்கில் கண்டேன். அதில் இத்தகு மாற்றங்கள் செய்யப்படவில்லை.)

படத்தின் திரைக்கதை மிகச் சிறப்பாக எழுதப்பட்ட ஒன்று. ஆரம்பக் காட்சியிலேயே ஓர் உதாரணம் சொல்லலாம். வயதுக்கு மீறிய அளவுள்ள சட்டை போட்ட சிறுவன் வயதுக்கு மீறிய கேள்விகளைக் கேட்கிறான், வயதுக்கு மீறிய செயலான கொலை செய்கிறான். இப்ப‌டி புத்திசாலித்தனமான, உணர்வுப்பூர்வமான திரைக்கதை எழுத்துக்கான நூறு உதாரணங்களைப் படத்தில் காட்ட முடியும்.

நான் சிரித்தால் தீபாவளி, நீ ஒரு காதல் சங்கீதம், நிலா அது வானத்து மேலே, அந்தி மழை மேகம் எனப் பாடல்கள் திரைக்கதை ஓட்டத்துக்குத் தடை உண்டாக்குவதாக அல்லாமல், ஒத்துழைப்பதாகவே அமைந்தன.

குருதிப்புனல், இந்தியன், ரமணா, ஹவுஸ்ஃபுல் உச்சக் காட்சிகள் எனக்கு அப்படங்கள் அத்தனை நேரமும் பேசிய விஷயத்துக்கு மிகப் பொருத்தமாகவும் உணர்வெழுச்சி ஊட்டக்கூடியதாகவும் தோன்றும். அவற்றுக்கெல்லாம் சிகரம் வைத்தது போன்ற உச்சக் காட்சி நாயகன் படத்தில் இருப்பது. இவை எல்லாவற்றுக்குமான ஒற்றுமை முதன்மை பாத்திரத்தின் மரணம் என மேலோட்டமாகத் தோன்றினாலும் அந்த எளிய தகவல் பார்வையைத் தாண்டிய கலாப்பூர்வ உச்சத்தைத் திரைக்கதை அங்கே எய்துகிறது!

படம் பற்றிய எள்ளலான கருத்து ‘இது The Godfather காப்பிதானே!’ என்பது. உண்மையில் இவர்கள் அந்த ஆங்கிலப் படத்தைப் பார்த்திருக்கவே மாட்டார்கள் என நினைக்கிறேன். அடிப்படைக் கதை, கமலின் சில உடல் மொழி தவிர இரண்டுக்கும் பெரிய ஒற்றுமையை நான் உணரவில்லை. அதன் மைய நரம்பை மட்டும் உருவி எடுத்துக் கொண்டு புதிதாக உருவமும் உயிரும் கொடுத்திருந்தார் மணிரத்னம்.

உதாரணமாக மகளைப் பாலியல் வல்லுறவு செய்த இளைஞர்களைப் பற்றி போலீஸ் கமிஷனர் வேலு நாயக்கரிடம் வந்து சொல்லும் காட்சி. ஆங்கலத்தில் சாதாரண வசனமாகக் கடந்து போகுமிடம் தமிழில் வேலு நாயக்கரின் ஆகிருதியைக் காட்டுவதாக அமைந்திருக்கும். “The remake which is original” என்று குருதிப்புனல் படம் குறித்து அதன் மூலப் படமான Droh Kaal-ஐ இயக்கிய கோவிந்த் நிகலானி சொன்னார். சில இடங்களிலேனும் நாயனுக்கும் அது பொருந்தும்!

யாரோ ஒருவர் படத்திலுள்ள தர்க்கப் பிழைகளைப் பட்டியலிட்டு இருந்தார். எவ்வளவு பெரிய சிறுபிள்ளைத்தனம்! படத்தின் இடத்தைப் பிரஸ்தாபித்து விட்டு அதைத் தாண்டி இம்மாதிரி தவறுகள் உண்டு என்று சொன்னால் அதை விவாதமாக முன்னெடுக்கலாம். ஆனால் படத்தை இழிவு செய்யும் தொனியில் நோக்கில் பேசுவதைப் பொருட்படுத்த ஒன்றுமில்லை. அதனாலேயே அந்த அசட்டுத்தனத்தை வசவால் எதிர்கொண்டிருந்தேன்.

படத்தில் தர்க்கப் பிழைகள் சில கண்டறிய முடியலாம்தான். ஆனால் அதனால் என்ன? கலைப் படைப்பு என்ன Clark’s Tables-ஆ? மிகத் துல்லியமாக இருக்க! கலை என்பதே உணர்ச்சிரம்தான். அதில் பிசிறுகள் இருக்கவே செய்யும். அது ஒட்டுமொத்த சினிமா அனுபவத்தை எந்த அளவில் பாதிக்கிறது என்பதுதான் அதன் தீவிரத்தை உணர்த்தும். தவிர நாற்பதாண்டு முந்தைய படத்துக்கு இன்றைய பூதக் கண்ணாடியைப் போட்டுக் கொண்டு பார்ப்பதும் அபத்தம்தான்.

அன்றைய காலகட்டத்துக்கு அது மிக முற்பட்ட (Advanced) படம். அன்றைய‌ எல்லா இயக்குநர்களும் மணி ரத்ன‌த்தைப் பார்த்து வாயைப் பிளந்த படம். கமலைப் பார்த்து ரஜினியைப் பொறாமை கொள்ளச் செய்த படமும் கூட‌! (ரஜினி மணி ரத்னத்திடம் நாயகன் போல் ஒரு படம் செய்யச் சொல்லிக் கேட்டதாக ஒரு தகவல் உண்டு. பிற்பாடு பாட்ஷா, கபாலி என நாயகன் சாயலில் முயன்று பார்த்தார்.)

கமலுக்கு நடிகராக இரண்டாம் தேசிய விருதைப் பெற்றுத் தந்தது நாயகன் படம்தான். சிறுவன் முதல் கிழவன் வரை ஒரு மனிதனின் வளர்ச்சியைக் காட்டும் படம் இது. எனவே உடை, சிகை, ஒப்பனை எனத் தோற்றம் மட்டுமின்றி குரல், முகபாவம், உடல் மொழி மூன்றிலும் வேறுபாடு காட்ட வேண்டி இருக்கும்.

அதை மிகப் பெரும்பாலும் சிறப்பாகச் செய்திருந்தார் கமல் ஹாசன். பெரிய திரையில் பார்க்கையில் மிகச் சில இடங்களில் அவரது பிற்காலச் சிறந்த நடிப்புடன் ஒப்பிட்டுக் குறை சொல்லும் சாத்தியங்கள் உண்டு.

சரண்யா, ஜனகராஜ், டெல்லி கணேஷ், நாசர், நிழல்கள் ரவி, கார்த்திகா, கிட்டி, விஜயன், ப்ரதீப் சக்தி (இன்ஸ்பெக்டர்), டின்னு ஆனந்த் (இன்ஸ்பெக்டர் மகன்), வாப்பாவாக நடித்தவர், தாரா (வாப்பாவின் மகள்), ஏஆர்எஸ் (கமிஷனர்) என எல்லா நடிகர்களுமே தத்தம் பங்களிப்பை நிறைவாகச் செய்திருக்கிறார்கள்.

இது வரை நான் ரசித்திடாத குயிலி கூட பெருந்திரையில் அழகாகத் தோன்றினார். அவர் பாத்திரமே பொன்னியின் செல்வனில் பூங்குயிலி (ஐஸ்வர்ய லெக்ஷ்மி) பாத்திரத்துக்கு உந்துதலாக இருந்திருக்கும்!

பாலகுமாரனின் வசனங்களை நினைவூட்டிக் கொள்ள வாய்ப்பாக அமைந்தது படம். எப்போதும் எனக்குத் தோன்றுவது நாயகன் என்றே பெயரிட்ட ஒரு படத்தின் நாயகன் பேசும் முதல் வசனத்தை ஓர் ஆபாச வசையாக வைக்க எவ்வளவு Conviction வேண்டும்!

தென்பாண்டிச் சீமையிலே பாடல்தான் படத்தின் ஆன்மா. ஆரம்பத்தில் இளையராஜா குரலில் ஒரு முறையும், பின் கமல் குரலில் முதன்மைப் பாத்திரத்துக்கு இழப்பு நேரும் போதெல்லாமும் வருகிறது.

கிட்டத்தட்ட பின்னணி இசையின் பகுதிதான் அப்பாடல். “நாலு பேருக்கு நல்லதுனா எதுவுமே தப்பில்லை” என்ற அற்புத‌ வசனம் திரையில் வந்து, தொடர்ந்து அந்தப் புகழ் மிக்க பின்னணி ஒலிக்கும் போதெல்லாம் Goosebumps guaranteed!

ஆனந்த விகடன் அப்போது நாயகன் படத்துக்கு எழுதிய விமர்சனத்தில் 60 என அவர்கள் அளவுகோலில் அதிக மதிப்பெண் தந்திருந்தாலும் இளையராஜா இசையைக் குறைத்து மதிப்பிட்டிருந்தார்கள். விகடன் திரை விமர்சனக் குழு படத்தை மறுபடி திரையரங்கில் பார்த்து அதில் திரைக்கதைக்கு இணையாக உயிர்நாடியாகப் பயணிக்கும் பின்னணி இசையைப் பற்றி மறுமதிப்பீடு செய்து எழுதி த‌ம் வரலாற்றுப் பிழையைத் திருத்தலாம்.

தமிழர்களின் சாஸ்வதமான கலைப் பெருமை மணி ரத்னத்தின் நாயகன் திரைப்படம். எனவே நாமனைவருமே நாயகன் படத்தைத் திரையரங்கில் சென்று காண வேண்டும் என்றுதான் சொல்வேன். (அது முடியாதவர்கள் அமேஸான் ப்ரைமிலாவது பார்க்கலாம்.)

நாயகன் படம் உருவான விதம் அது எதிர்கொண்ட சிக்கல்கள், தடைகள் பற்றி பரத்வாஜ் ரங்கனுடனான உரையாடலில் சொல்லியிருப்பார் மணி ரத்னம். அவற்றை எல்லாம் மீறி வந்திருக்கும் output நம்ப முடியாத ஆச்சரியம்.

நாயகன் அடிப்படையில் ஒரு Magic. மணி ரத்னம் – கமல் ஹாசன் மறுபடி இணைந்தாலும் அதை மறுபடி தர முடியாது என Thug Life  சொல்லி விட்டது. உடன் இளையராஜா, தோட்டா தரணி, பாலகுமாரன், பி லெனின், விடி விஜயன் என எல்லோருமே இணைந்தாலுமே கூட‌ மீண்டும் இப்படி ஒரு மகாகாவியத்தை உருவாக்க முடியாது. அற்புதங்கள் அடிக்கடி நிகழாதல்லவா – Miracles Only Happen Once!

2017ல் காற்று வெளியிடை வெளியான போது கிழப்பு பதிப்பக அதிபர் பத்ரி சேஷாத்ரி நாயகனை விடச் சிறந்த படம் அது என்று சொல்லி இருந்தார். எந்தப் புதிய மணிரத்னம் படம் வருகையிலும் இத்தகு சலசலப்புகள் எழும். குரு வெளியான போது என் நண்பன் பரத்ராஜ் அது நாயகனை விட உயர்ந்த படம் என உணர்ச்சி வசப்பட்டான். சில ஆண்டு கழித்து சமநிலைக்கு வந்து நாயகனே சிறந்தது எனப் பழையபடி ஒப்புக் கொண்டான்.

எந்தத் திரைப்படமேனும் நாயகனை வீழ்ததி மேலேறுவதை என் ஆயுளில் பார்ப்பேன் என்று எனக்கு நம்பிக்கையில்லை. அது இந்தியத் திரைக்கலையின் அசாத்திய உச்சம்!

Author Image

சி. சரவணகார்த்திகேயன்

சிறுகதையாசிரியர். நாவலாசிரியர், கட்டுரையாளர், திரைப்பட ஆய்வாளர்.

About The Author

The Talkie

The Talkie

See author's posts

Next Post
rajini

ரஜினி 75

Please login to join discussion

Archives

  • Trending
  • Comments
  • Latest
Thug_Life_

Thug Life – ஒரு பார்வை

June 6, 2025
AMADEUS திரைக்கதை

AMADEUS திரைக்கதை

March 15, 2025
start camera

ஸ்டார்ட் கேமரா! வின்சென்ட் மாஸ்டர் – 01

March 19, 2025
Irunda-Pakkam

தொழில்நுட்பத்தின் இருண்ட பக்கங்கள்: திரைப்படங்கள் சொல்லும் உண்மை.

March 16, 2025
Thug_Life_

Thug Life – ஒரு பார்வை

11
rasigamagajanangale

ரசிக மகா ஜனங்களே

7
gurudutt-02

குருதத்தின் ப்யாஸா- உயிர்த்தெழுந்த தேவதை        

5
start camera

ஸ்டார்ட் கேமரா! வின்சென்ட் மாஸ்டர் – 01

4
table top-4-5

டேபிள் டாப் 04 & 05

January 24, 2026
bella darr

பேலா டார் – காட்சியை அனுமதித்தவர்

January 24, 2026
trend-kottaiye-11

ட்ரெண்டு கொட்டாய் 11 -நான் (திரை) காவிய நாயகன்

January 24, 2026
table top-3

டேபிள் டாப் 03

January 24, 2026
The Talkie

சினிமா அற்புதமான ஊடகம். இதனை அறிந்து கொள்ளவும், ரசிக்கவும் உருவாக்கப்பட்டிருக்கிற இணைய இதழ் இது. மேதைகளின் நேர்காணல்கள், திரைக்கதைகள், வெவ்வேறு மொழித் திரைப்படங்கள், ஆளுமைகள், திரைப்படப் புத்தகங்கள் , சினிமா ரசனை என சினிமா உலகத்தோடு இணைந்திட எங்களுடன் இணைந்திடுங்கள்.

Categories

  • I CALL THE SHOTS
  • ஆளுமைகள்
  • இந்தியத் திரைப்படங்கள்
  • உரையாடல்
  • உலகத் திரைப்படங்கள்
  • ஓடிடி திரை
  • கட்டுரைகள்
  • குரு தத் 100
  • டேபிள் டாப்
  • ட்ரெண்டு கொட்டாய்
  • தமிழ்த் திரைப்படங்கள்
  • திரை புத்தகம்
  • திரைக்கதைகள்
  • தொடர்கள்
  • ஸ்டார்ட் கேமரா

Site Navigation

  • About Us
  • Terms and Conditions
  • Privacy Policy
  • Returns and Cancellation
  • Shipping Policy
  • FAQ
table top-4-5

டேபிள் டாப் 04 & 05

January 24, 2026
bella darr

பேலா டார் – காட்சியை அனுமதித்தவர்

January 24, 2026
trend-kottaiye-11

ட்ரெண்டு கொட்டாய் 11 -நான் (திரை) காவிய நாயகன்

January 24, 2026

© 2026 Thetalkie - All rights reserved

Welcome Back!

Sign In with Google
OR

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Sign Up with Google
OR

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • thetalkie
  • ஆளுமைகள்
  • திரைக்கதைகள்
  • உரையாடல்
  • கட்டுரைகள்
    • இந்தியத் திரைப்படங்கள்
    • உலகத் திரைப்படங்கள்
    • தமிழ்த் திரைப்படங்கள்
    • ஓடிடி திரை
  • தொடர்கள்
    • ட்ரெண்டு கொட்டாய்
    • திரை புத்தகம்
    • ஸ்டார்ட் கேமரா
    • I CALL THE SHOTS
    • குரு தத் 100
    • டேபிள் டாப்
  • தொடர்பு
  • Login
  • Sign Up
  • Cart

© 2026 Thetalkie - All rights reserved

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?