The Talkie
Thursday, April 9, 2026
  • Login
  • Register
  • thetalkie
  • ஆளுமைகள்
  • திரைக்கதைகள்
  • உரையாடல்
  • கட்டுரைகள்
    • இந்தியத் திரைப்படங்கள்
    • உலகத் திரைப்படங்கள்
    • தமிழ்த் திரைப்படங்கள்
    • ஓடிடி திரை
  • தொடர்கள்
    • ட்ரெண்டு கொட்டாய்
    • திரை புத்தகம்
    • ஸ்டார்ட் கேமரா
    • I CALL THE SHOTS
    • குரு தத் 100
    • டேபிள் டாப்
  • தொடர்பு
No Result
View All Result
The Talkie
  • thetalkie
  • ஆளுமைகள்
  • திரைக்கதைகள்
  • உரையாடல்
  • கட்டுரைகள்
    • இந்தியத் திரைப்படங்கள்
    • உலகத் திரைப்படங்கள்
    • தமிழ்த் திரைப்படங்கள்
    • ஓடிடி திரை
  • தொடர்கள்
    • ட்ரெண்டு கொட்டாய்
    • திரை புத்தகம்
    • ஸ்டார்ட் கேமரா
    • I CALL THE SHOTS
    • குரு தத் 100
    • டேபிள் டாப்
  • தொடர்பு
No Result
View All Result
The Talkie
Subscribe
Home தொடர்கள்

ஸ்டார்ட் கேமரா 04 கே. எஸ் பிரசாத் 

The Talkie by The Talkie
June 20, 2025
in தொடர்கள், ஸ்டார்ட் கேமரா
A A
0
start camera-04
Share on WhatsappShare on FacebookShare on Twitter

Author Icon ஜா.தீபா
Author Icon அகிலா ஸ்ரீதர்

புதிய பறவை படத்தின் டைட்டில் காட்சிகள் நினைவிருக்கிறதா? ஒரு பெண் இரவு நேரத்தில் ஓடிக்கொண்டே இருப்பார். அவரை ஒரு கார் துரத்தும். அந்தப் பெண் சாலையில், தண்ணீரில், தோப்பில், கடைசியில் தண்டவாளத்தில் ஓடுவார். காரின் ஹெட்லைட் மிரட்டுகிற இரு கண்களைப் போல அவரை ஓடவைக்கும். இந்தக் காட்சியில் பார்வையாளர்கள் முடிவு செய்திருப்பார்கள், நாம் அசாதாரணமான படத்தைப் பார்க்க வந்திருக்கிறோம் என்று. அதுவரை  இருந்த தமிழ்த் திரைப்படங்களில் இருந்து முற்றிலும் வேறுபட்ட படம் இது.

ஒரு திரைப்படம் எதைக் களமாகக் கொண்டுள்ளதோ அதில் நம்பகத்தன்மையைக் கொண்டு வரவேண்டும். அழுக்கான இடமென்றால் அதைக் காட்சிப்படுத்துகிற விதத்தில் நம்மையறியாமல் நாம் அழுக்கின் வாடையை திரையரங்கில் உணர்வோம். காட்சிக்கு அந்த சக்தி உண்டு. ‘புதிய பறவை’ படத்தின் நினைவை மீட்டும்போதெல்லாம் ஒரு ‘ஸ்டைல்’ நமது மனதில் படிந்திருப்பதை உணரலாம்.

மேல்தட்டு மனிதர் ஒருவரின் கதை. வண்ணமயமான வாழ்க்கைக்குள் ஒளிந்து வாழ்கிற ஒரு மனிதனின் கதை. வண்ணமும், இருட்டுமாக நம்மை அலைக்கழிக்கக்கூடிய திரைப்படம். இப்படி நம்மை சொல்ல வைத்தது அந்தப் படத்தின் காட்சியமைப்புதான். இந்தப் படத்தின் இயக்குநர் தாதா மிராஸிக்கு ‘புதிய பறவை’ முதல் படம் அல்ல, கடைசி படமும் அல்ல. ஆனால், இந்தப் படம்தான் தனித்துவத்தைப் பெற்றுத் தந்தது. அதற்குக் காரணம் இதன் ஒளிப்பதிவாளர் கே.எஸ் பிரசாத்.

நாகரிகமானவர், அதிநவீனமானவர் என்பதோடு சிகரெட் பிடிக்கும், பியானோ வாசிக்கும் தொழிலதிபராகக் காண்பிக்கப்பட்ட கோபாலின் கதாபாத்திரம்  சிவாஜியை ஒரு புதிய பரிமாணத்தில் காண்பித்ததோடு தமிழ்த் திரையுலகில் கதாநாயகனுக்கு ஒரு புதிய பிம்பத்தை உருவாக்கியது.   சிவாஜியின்  சிகரெட் பிடிக்கும் ஸ்டைலும் பியானோ வாசிக்கும் அழகும் அவரை முழுமையாக ரசிக்க வைத்தது.

ஊட்டியின் அழகைக் காண்பித்து, ‘சிட்டுக்குருவி’ பாடல் முடிந்த உடன் மூடப்பட்டிருக்கும் ரயில்வே கேட்டில் காரில் காத்திருக்கும் போது கடந்து செல்கிற ரயிலால் பாதிக்கப்படுகிற கோபால் தன் வாழ்க்கையைப் பற்றிய உண்மையை லதாவிடம் கூறும் காட்சியில் மழை பெய்து கொண்டிருக்க, கார் வைப்பர்கள் மழை நீரைத் துடைத்துக் கொண்டிருக்க காரின் முன்புற கண்ணாடி வழியாக அவர்களைக் காண்பிக்கும் ஃபிரேம், மழைநீர் வழிந்து கொண்டிருக்க, அந்தக் காட்சிக்கான பதட்டத்தையும்,  கடந்த காலத்தின் நினைவுகளால் அலைக்கழிக்கப்படுகிற கோபாலின் மனநிலையையும் உணர்த்துவதாக அமைக்கப்பட்டிருக்கும்.  “சொல்கிறேன்” என்று சொல்லும் தருணத்தில் கோபாலின் முகத்தில் சிவப்பு நிற ஒளி அமைக்கப்பட்டிருக்கும்.

கே.எஸ். பிரசாத் கலை இயக்குநர் கங்காவோடு இணைந்து செட் வடிவமைப்புகள் மற்றும் ஆடைகள் காட்சிக்கேற்ப அமைவதை உறுதி செய்து கொண்டார்.  ரிச் லுக் வேண்டுமென்பதற்காக இத்திரைப்படத்திற்கான ஆடைகள் சிங்கப்பூரிலிருந்தும், சிவாஜி அணிந்த கோட் லண்டனிலிருந்தும் வரவைக்கப்பட்டது.  நடிகை சௌகார் ஜானகிக்கு அவர்கள் கொடுத்த உடை பிடிக்காததால் அவரே வாங்கிய கருப்பு நிற புடவையைத்தான் ‘பார்த்த ஞாபகம் இல்லையோ’ பாடலில் அணிந்திருப்பார்.  அதில் எம்பிராய்டரி மட்டும் செய்திருப்பார்கள்.  குடும்பப்பாங்கான பெண்ணாக அதிகமான படங்களில் நடித்துக் கொண்டிருந்த சௌகார் ஜானகியை கிளப் பாடகியாக மயக்கும் பெண்ணாக மிக அழகாக தோற்றமளிக்க வைத்ததில் கே.எஸ். பிரசாத்தின் கேமரா கோணங்களுக்கும் முக்கியப் பங்கு உண்டு

‘பார்த்த ஞாபகம் இல்லையோ’ பாடலுக்கு முன்பு நைட் கிளப்பிற்கு வரும் சிவாஜி அமர்ந்து சிகரெட் பற்றவைத்து புகைவிடும் காட்சி சிறப்பான ஒளியமைப்பில் எடுக்கப்பட்டிருக்கும். அந்த ஃபிரேமில் சிவாஜி ஒருபக்கமாகத் திரும்பும் போது சிவப்பு நிறத்தில் அவர் முகமும், வெள்ளை நிறத்தில் சிகரெட் புகையுமாக தெரியும். மென்மையான, பரவலாக்கப்பட்ட ஒளியமைப்பு மற்றும் கதாபாத்திரங்களை சரியான ஃபிரேம்களுக்குள் கவனமாக வைப்பது  எனக் கதாபாத்திரங்களின் உணர்ச்சிகளைக் காட்சி ரீதியாக வெளிப்படுத்தும் வகையில் காட்சிகளை வடிவமைப்பதில் பிரசாத் தேர்ந்தவர்.

sivaji ganesan

இந்தப் படத்தின் பாடல்கள் ஒவ்வொன்றுமே காட்சிபடுத்தப்பட்ட விதங்களில் தனித்துவம் வாய்ந்தவை. சிவப்பு நிற ஒளியமைப்பை படங்களில் பயன்படுத்தும் போது மிகக்கவனம் தேவை. அந்த நிறம் அழகியலுக்கானது அல்ல,  மர்மம், பயம், ஆபத்தினைக் குறிக்கக்கூடியது. சிவப்பு நிறத்தை தங்களது படங்களில் தொடர்ந்து அதிகமாகப் பயன்படுத்திய இயக்குநர்கள் உலகம் முழுவதும் உண்டு. Suspiria திரைப்படத்தில் சிவப்பு நிறத்தைப் பயன்படுத்திய விதத்தை இன்றளவும் திரைப்பட மாணவர்கள் கற்று வருகிறார்கள். இந்தப் படம் வெளிவருவதற்குப்  பத்தாண்டுகளுக்கு முன்பே ‘புதிய பறவை’ இங்கு வெளியாகிவிட்டது. ‘எங்கே நிம்மதி’ பாடலைப் பார்த்தால், அதில் நிறங்களைப் பயன்படுத்திய விதத்தினை நம்மால் வியக்காமல் இருக்கவே முடியாது. நிறத்தின் தன்மையை அறிந்தவர்கள் மட்டுமே தோற்றுவிக்கக்கூடிய ஒரு உளவியலை பிரசாத் நமக்குத் தந்திருக்கிறார்.

ஆந்திர மாநிலம் ஏலூரில் பிறந்த கே.எஸ். பிரசாத் புகைப்படத் துறையில் பட்டப்படிப்பை முடித்தவர். ஒளிப்பதிவு இயக்குநர் எம்.ஏ.ரஹ்மானிடம் உதவியாளராகப் பல படங்களில் பணியாற்றிய பின்பு தெலுங்கு படமான ‘இலாவெல்பு’ மூலம் திரைத்துறையில் அறிமுகமானார். 

‘புதிய பறவை’ திரைப்படத்தில் தமிழுக்கு வந்தவர், இயக்குநர் ஏ.பி. நாகராஜனுடன் இணைந்து பல புராணப் படங்களுக்கு ஒளிப்பதிவாளராகப் பணியாற்றினார். நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் ஒளிப்பதிவு இயக்குநராக திரையுலகில் அழியாத முத்திரையைப் பதித்துள்ளார்.

‘இலாவெல்பு’ கருப்பு வெள்ளை படம். ஸ்டுடியோ செட்டுக்குள் எடுக்கப்பட்ட அந்தக் காலத்துப் படங்களின் ஓர் உதாரணம். இந்தப் படத்துக்கு நான்காண்டுகளுக்குப் பிறகு ‘புதிய பறவை’ படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார். இந்த நான்கு வருடங்களில் அவர் எந்தெந்தப்  படங்களில் பணி செய்தார் என்கிற குறிப்பு நம்மிடம் இல்லை. ஆனால், தன்னைப் பல விதங்களில் மேம்படுத்திக் கொண்டிருந்திருக்கிறார் என்பது மட்டும் தெளிவு.  இல்லையெனில் ‘புதிய பறவை’க்கு இப்படியான உயர்தரமான ஓர் ஒளிப்பதிவைச் செய்திருக்க முடியாது.

இயக்குநர் ஏ.பி நாகராஜன் தமிழ் சினிமாவின் முகத்தை மாற்றியவர். பக்தி இலக்கியங்களைத் தொடர்ந்து திரைப்படமாக மாற்றிக்  கொண்டிருந்தார். இவருடைய படங்கள் எல்லாமே பிரமாண்டமானவை. அதன் வண்ணங்களுக்காக விரும்பப்பட்ட படங்கள். ‘திருவிளையாடல்’, ‘சரஸ்வதி சபதம்’, ‘திருவருட்செல்வர்’, ‘கந்தன் கருணை’ என இந்தப் பக்திப் படங்களுக்கு எல்லாம் கே. எஸ் பிரசாத் ஒளிப்பதிவு செய்தார்.

Thiruvulaiyadal

பூதகணங்களின் இசை, தேவர்களின் வேதம், நந்தியின் மத்தளம், சப்தகன்னியரின் நடனம் என்று பனி படர்ந்த கைலாயத்தை பிரம்மாண்டமாக காண்பிக்கும் முதல் காட்சியிலேயே நாம் திரைப்படத்திற்குள் பக்தியோடு ஒன்றி விடுவோம். மனிதரிலிருந்து தெய்வங்களை வேறுபடுத்தி ஒளிவட்டம், ஒளிக்கதிர்கள் என தெய்வீகத் தன்மையுடன் காண்பிக்க ஹைகான்ட்ராஸ்ட் லைட்டிங்கைப் பயன்படுத்தியிருப்பார். இந்தப் படங்களில் காண்பிக்கப்படும் நகைகள் பளபளவென்று மின்னுவதை திரையில் காண்பிக்க மெனக்கெட வேண்டியிருக்கும்.

ஏ.பி நாகராஜன் நாடகத்துறையில் பணி செய்தவர். மேடையின் திரைச்சீலைகள் வரையும்போது உடனிருந்து பார்த்துக் கொண்டே இருப்பார். திரைச்சீலை வரைபவர்கள் ஒவ்வொரு கடவுளுக்குமான வண்ணத்தை தங்களது ஓவியங்களில் கொண்டு வந்தார்கள். முருகனின் நிறம் செம்பழுப்பு என்றும் விஷ்ணுவின் நிறம் சாம்பல் என்றும், பிரம்மாவின் நிறம் மஞ்சள் என்றும் சொல்லப்பட்டதை திரைச்சீலை வழியாகக் காண்பித்தார்கள். தெய்வங்களுக்கான வண்ணம் என்பது காலம் காலமாக உள்ளதுதான். தோற்பாவை கூத்தில் இராவணனுக்கும். துரியோதனுக்கும் எப்போதும் சிவப்பு வர்ணம்தான். இதனால் கதாபத்திரத்தை மக்களால் புரிந்து கொள்ள முடியும். இதையேதான் திரைச்சீலை வரைபவர்களும் பின்பற்றினார்கள். இப்படி வரைந்தவர்கள்தான் பின்னாட்களில் காலண்டர் ஓவியர்களாகவும் மாறுகிறார்கள். இதனால் கடவுள் என்பவர்கள் நிறங்களோடு தொடர்புடையவர்கள் என்பதை ஏ.பி நாகராஜன் அறிந்து வைத்திருந்தார். அதனாலேயே அவரது படங்களில் பார்வதி பச்சை நிறமாகவும், சிவன் சாம்பல் பூசிய மேனியுடன் வருவார்கள். கடவுள்கள்  இருக்கும் லோகங்கள் பிரமாண்டமானதாய் இருக்கும்.

‘சரஸ்வதி சபதம்’ படத்தில் சத்தியலோகம், வைகுண்டம், கைலாயம் என்று மூன்று லோகங்களை அறிமுகப்படுத்தும் காட்சிகள் இதற்கு உதாரணம். இந்தக் காட்சிகளைத் திரும்பத் திரும்பப் பார்க்கவே மக்கள் திரையரங்குக்கு வந்தார்கள்.

பிரசாத் ஒளிப்பதிவு செய்த படங்கள் பெரும்பாலும் இசைக்கு முக்கியத்துவம் தருகிறவையாக அமைந்திருந்தன. பாடல்களும் நடனங்களும் மிகுதியான திரைப்படங்கள்.  அவை ஒவ்வொன்றுக்குமே தனித்தனியாக இயக்குநர் ஏ.பி நாகராஜனும், கே.எஸ் பிரசாத்தும் முக்கியத்துவம் தந்திருக்கிறார்கள் என்பதை உணர முடிகிறது. ‘திருவிளையாடல்’ படத்தின் தொடக்கத்தில் காட்டப்படும் கைலாயத்தின் பாடலுக்கும் ‘சரஸ்வதி சபத’த்தில் காட்டப்படும் கைலாயத்துக்கும் வேறுபாடுகள் உண்டு .

Saraswathi sabatham

‘தில்லானா மோகனாம்பாள்’ படத்தின் தொடக்கம் மதுரை திருவிழாவைக் காட்டுகிறது. பாடலை உள்வாங்கி அதற்கேற்ற ஒளிப்பதிவு அமைப்பதில் பிரசாத் நியாயமானவர் என்பது ‘மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன’ பாடலில் அறிந்து கொள்ளமுடியும்.

கலைகளைப் பற்றி நன்கு அறிந்திருந்தால் மட்டுமே அதைத் திரையில் சிறப்பாகக் காட்சிப்படுத்த முடியும். பரதநாட்டிய உடைகள், கோயில் அமைப்புகள் மற்றும் பாரம்பரிய கலை வடிவங்களின் வண்ணங்களை துல்லியத்துடனும் கலை நேர்த்தியுடனும் படம்பிடித்தது பிரசாத்தின் திறமையைக் குறிக்கிறது.  அவர் வெறும் வண்ணங்களைப் பதிவு செய்யவில்லை; கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் விதமாக அவற்றை மேம்படுத்தினார்.

பத்மினி நடன அலங்காரத்தைச் சரிபார்த்து ஒத்திகை பார்ப்பது பல கண்ணாடிகளில் காண்பிக்கப்படும் முதல் காட்சியிலேயே நடனத்தில் அவருக்கு இருக்கும் பற்றும், ஆளுமையும் வெளிப்படுமாறு காட்சிபடுத்தப்பட்டிருக்கும்..  அதே போல் சிவாஜிகணேசன் அறிமுகக் காட்சியில், தவில் வாசிக்கும் இருவரையும் காண்பித்து, அடுத்து நாதஸ்வரத்தை, வாசிக்கும் கைகளைக் காண்பித்து அதன்பின் அதை வாசிக்கும் சிவாஜியை முழுமையாகக் காண்பிக்கும் கேமரா.  பிறகு அவர் தம்பி, தவில் வித்வான்கள் என்று காண்பித்து கலையலங்காரத்துடன் இருக்கும் மேடையைக் காண்பிக்கும் விதமாக அந்தக் காட்சியை அழகாக அமைத்திருப்பார்கள். இசைக் கச்சேரியை பல இடங்களில் டாப் ஆங்கிளில் ஒரு ஷாட்டிலாவது காண்பித்திருப்பார்.

சிவாஜிக்கும், பத்மினிக்கும் போட்டி நடக்கும் காட்சியும், ‘நலம்தானா’ பாடலில் நடனம், நாதஸ்வரத்தோடு இருவரின் கண்களும் பேசிக் கொள்வதை மிக நுட்பமாகப் படம் பிடித்திருப்பார். பாரம்பரியக் கலைகளின் நுணுக்கங்களைக் காட்சிப்படுத்த, சிவாஜி மற்றும் பத்மினியின் முக பாவங்களை, அவர்களின் உடல்மொழியை முன்னிலைப்படுத்தும் நுணுக்கமான ஒளியமைப்பை அவர் பயன்படுத்தியிருப்பார்.

தஞ்சாவூரின் கலாச்சாரத்தோடு பாரம்பர்யக் கலைகளான நாதஸ்வரத்தையும், நடனத்தையும் மிகச் சிறப்பாக காட்சிப்படுத்தியதற்காக இத்திரைப்படத்திற்கு, “சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருது” கிடைத்தது.  அத்துடன் “சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தேசிய விருது” கே.எஸ்.பிரசாத்திற்கு  கிடைத்தது. மேலும் தமிழ்நாட்டு அரசின் ஐந்து விருதுகளும் கிடைத்தன.

வாழ்க்கையில் தப்பு செய்வது சகஜம், திருந்தி வாழ்வதே முக்கியம் என்பதையும், சந்தர்ப்பமும், சூழ்நிலையும் இணைந்து கொண்டால் நல்லவனைக் கூட கெட்டவன் எனறு இந்த உலகம் நம்பத்தான் செய்யும் என்பதையும் அப்போதே அழுத்தம்திருத்தமாக சொன்ன திரைப்படம்  “இருவர் உள்ளம்.”

மறைந்த எழுத்தாளர் லஷ்மியின் “பெண் மனம்” நாவலைத்தான் இருவர் உள்ளம் திரைப்படமாக எடுத்திருக்கிறார்கள்.  ஆனால் அதற்கான கிரெடிட் அவருக்குத் தரப்படவில்லை. அந்த படத்தைப் பார்த்த லஷ்மி,  அதன் இறுதிக் காட்சி தன் கதையிலிருந்து முற்றிலும் வேறு விதமாக இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்ததாக செய்தியும் உண்டு.

கண்ணெதிரே தோன்றினாள் பாடலில் சிவாஜியைப் பிடிக்காமல் திருமணம் செய்து கொண்ட சரோஜாதேவி முதலிரவில்  ஒரு ஓரமாகப் போய் பின்புறமாகத் திரும்பி நிற்க, அவள் முகம் திரும்பி தன்னைப் பார்த்து புன்னகைப்பது போல்  தோன்றி மறைவதாக சிவாஜி நினைத்துப் பார்க்கும் காட்சி சிறப்பாக காட்சிபடுத்தப்பட்டிருக்கும். அதே காட்சியில்  பாடலின் முடிவில் சரோஜா தேவியிடம் சிவாஜி பேசும் போது தொங்க விடப்பட்டிருக்கும் அவர்களின் கல்யாண மாலைகளின் வழியே இருவரும் தனித்தனியாக இருப்பதைக் காண்பித்திருப்பார் சிவாஜியும், சரோஜாதேவியும் முதன்முதலில் வெளியூர் சென்றபோது சரோஜாதேவிக்கு ஏற்படும் மனமாற்றத்தை கன்னியாகுமரியில் சூரிய உதயக் காட்சியில் நிழலுருவங்களாக காண்பித்து மீண்டும் பிரகாசமாக காண்பித்திருப்பார்,  . துவக்கத்தில் பிளேபாயாகவும், பின்பு திருந்தி பொறுப்போடு சரோஜாதேவிக்காக மட்டுமே வாழும் சிவாஜியையும் தனது கேமரா கோணங்களால் வித்தியாசப்படுத்திக் காண்பித்திருப்பார்.

கே.எஸ். பிரசாத்திடம் உதவியாளராக இருந்து பின்னாட்களில் இயக்குநர் எஸ்.பி. முத்துராமனின் ஆஸ்தான ஒளிப்பதிவாளராக, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கமல்ஹாசன் என தமிழ்த்திரையுலகின் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு இயக்குநராக பணியாற்றிய திரு.பாபு அவர்கள் பிரசாத் பற்றி நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.

“நான் கந்தன் கருணை படத்தின் பாதியில்தான் அவரிடம் சேர்ந்தேன். அதற்கு முன்பு எம்.ஏ. ரஹ்மானிடம் தான் நான் வேலை செய்து கொண்டிருந்தேன். பிரசாத் சாரும் எம்.ஏ. ரஹ்மானிடம் தான் உதவியாளராக இருந்தார். சிவாஜி தான் கே.எஸ்.பிரசாத்திடம் பேசி என்னை சேர்த்து விட்டார். கந்தன் கருணை, தில்லானா மோகனாம்பாள், திருவருட்செல்வர், சரஸ்வதி சபதம் என்று அப்படியே ஏ.பி. நாகராஜனின் பெரும்பாலான படங்களுக்கும் அவரோடு பணியாற்றினேன். குறத்தி மகன் படத்திற்கு முதலில் பத்மினி அம்மாவாக, சிவக்குமார் மகனாக என்று முடிவு செய்யப்பட்டது. பத்மினி அமெரிக்காவுக்கு செல்ல வேண்டியிருந்ததால், கே.ஆர். விஜயாவை அந்தக் கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தனர். 

அவர் மிகவும் மென்மையானவர். படப்பிடிப்பு தளத்தில் மிகவும் அமைதியாக அனைத்தையும் கையாள்வார். யாரிடமும் அவர் கோபித்து நான் பார்த்ததில்லை. உதவியாளர்களை மகன்களைப் போல் நடத்தினார். காலையிலேயே நான் அவர் வீட்டுக்கு சென்று விடுவேன். அவர் தன் காரிலேயே என்னையும் அழைத்து வருவார்.

அவர் மிகவும் பிசியாக இருந்ததால் உயிர் என்கிற படத்தில் நான் தனியாக பெருமளவு பங்களித்திருந்தேன். அதைப் பார்த்து  ராணி யார் குழந்தை என்கிற படத்தில் எனக்கு தனியாக செய்கிற வாய்ப்பு வந்த போது என்னை வாழ்த்தி அனுப்பி வைத்தார்.

ஏபிஎன் அவரை மாமா என்று தான் அழைப்பார். டயலாக் டெலிவரி ஏபிஎன் மாதிரி யாரும் சொல்லிக் கொடுக்க முடியாது. சினிமாவில் டயலாக் சொல்லும் போது மாடுலேஷன் என்பது மிக முக்கியம். அவர் அதை அருமையாக சொல்லித் தருவார். அவர் ஒருமுறை படித்தால் போதும், நடிகர்கள் அப்படியே சொல்லி விடலாம்.  எம்.ஏ. ரஹ்மான் ஒளிப்பதிவு இயக்குநராக இருந்த ‘மணாளனே மங்கையின் பாக்கியம்” படம் முழுவதும் தந்திரக் காட்சிகள்தான். அவரிடமிருந்து பிரசாத் கற்றுக் கொண்டார்.  பிரசாத் சாரிடமிருந்து நான் கற்றுக் கொண்டேன். பின்னாளில்  நான் வேலை செய்த ‘தூங்காதே தம்பி தூங்காதே” திரைப்படத்தில் “வானம் கீழே வந்தாலென்ன” பாடலின் காட்சிகளை கிராஃபிக்ஸ் இல்லாமலேயே நான் எடுக்க அவர் தான் காரணம். அக்காலத்தில் செட்டை விட்டு வெளியில் செல்லாமலேயே மிஷேல் கேமராவை வைத்து தந்திரக் காட்சிகளை எடுத்தோம். ஆனாலும் அதற்கான அங்கீகாரம் அப்போது கிடைக்கவில்லை. இப்போது அதுபோல் யாராலும் செய்ய முடியாது. இதற்கு அதிகமான கற்பனைத் திறன் வேண்டும், அவ்வளவு எளிதில்லை. நாங்கள் ஃபிலிம்ரோலில் செய்யும்போது . அது டெவலப் ஆகி வரும்வரை அந்தக் காட்சி எப்படி வருமென்றே தெரியாது., அதில் பெரும்பயிற்சி பெற்றபின்பே எங்களுக்கும் அது பழகியது.  அவர் கூடயே இருந்து பாத்துதான் கத்துக்கிட்டோம்..

ஆங்கிலப் படங்களுக்கு செய்வது போல் அங்கே கொஞ்சம் இங்கே கொஞ்சம் என்று patch patch ஆக லைட்டிங் செய்வது தான் அவரது தனித்துவமான ஸ்டைல். அதில் அவர் எக்ஸ்பர்ட். உதாரணம் ‘புதிய பறவை” திரைப்படம்.  தில்லானா மோகனாம்பாள் படத்தில் வரும் டைட்டிலில் காண்பிக்கப்படும் புகைப்படங்கள் நான் எடுத்தது தான். அழகர் கோயிலில் எடுத்தது. உதவியாளர்களை ஊக்குவிப்பதில் அவர் சிறந்தவர். அவர் சொல்லித்தான் நான் எடுத்தேன். அந்தப் படத்தில் மனோரமா சிவாஜியிடம், உங்க நாயனத்துல தான் இந்த சத்தம் வருதா” என்று கேட்கும் காட்சியை நான்தான் எடுத்தேன்.

அப்போது ஸ்டூடியோவில் தான் படங்கள் எடுப்பார்கள். அவுட்டோர் மிகவும் குறைவாக தான் இருக்கும், நான் தனியாக வந்து படங்கள் செய்ததே அவரோட ஆசிர்வாதத்துலதான்.” என்று நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்தார்.

1971ல் சாண்டோ சின்னப்பதேவரின் கதைக்கு சலீம்கான் மற்றும் ஜாவேத் அக்தர் இணைந்து திரைக்கதை எழுத தேவரின் சகோதரர் எம்.ஏ.திருமுகம் இயக்கினார். தென்னிந்தியரான தேவரின் தயாரிப்பில் வெளிவந்த  ஹாத்தி மேரி ஸாத்தி திரைப்படம் அக்காலத்தில் ஹிந்தி திரையுலகில் மாபெரும் வெற்றி பெற்று மிகப் பெரிய வசூலை அள்ளிக் கொடுத்தது. அந்தப் படத்தின் மூலம் ஹிந்தி திரையுலகிலும் கால்பதித்தார் பிரசாத்

ராஜேஷ்கன்னாவும், தனுஜாவும் நடித்த இத்திரைப்படத்தில் நான்கு யானைகளோடு, சிங்கம், புலி என பல விலங்குகளும் நடித்திருக்கும். இப்போதுபோல் அந்தக் காலத்தில் கிராபிக்ஸ் கிடையாதென்பதால் உயிருள்ள விலங்குகளை பயிற்சி கொடுத்து நடிக்க வைப்பார்கள். பயிற்றுவிக்கப்பட்ட விலங்குகள் என்றாலும், அவை நடிகரோடு இணைந்து நடிப்பது போன்ற உணர்வினை ஒளிப்பதிவு இயக்குநரால் தான் திரையில் காண்பிக்க முடியும்.  ராஜேஷ்கன்னாவும் தனுஜாவும் திருமணம் செய்தபின் அனைத்து விலங்குகளையும் தன் வீட்டுக்கு அழைத்து விருந்து கொடுப்பார். அந்தக் காட்சியில் அவையனைத்தும் வட்டமாக டைனிங் டேபிளில் அமர்ந்து சாப்பிடும் காட்சி அருமையாக எடுக்கப்பட்டிருக்கும்.  பாடல் காட்சிகளில் அந்த லொகேஷனின் அழகை காண்பிக்க அதிகமாக வைட் ஷாட்களாக எடுத்திருப்பார். இப்படத்தில் பல இடங்களில் லோ ஆங்கிள் ஷாட்களாக எடுத்திருக்கிறார். படத்தின் இறுதிக்காட்சியில் ராமு யானை இறந்தபோது பார்வையாளர்கள் அனைவரும் கண்ணீர் விட்டு அழுக கே.எஸ். பிரசாத்தின் ஒளிப்பதிவும் முக்கிய காரணம்.  கால்பந்து விளையாடுவதாக ஆரம்பக் காட்சியில் காண்பித்த யானையை படம் பார்க்கும் மக்களோடு ஒன்ற வைத்தது அவருடைய நுட்பமான ஒளிப்பதிவுதான்,

தனுஜா ஆரம்பத்தில் யானைகளுடன் நடிக்க பயந்தாலும் போகப்போக அவர்களுடன் நன்கு பழகி விட்டார்.  “இப்படத்தின் இறுதிக்காட்சியில் ராமு என்கிற யானை கதவின் வழியாக உள்ளே வந்து என்னைத் தள்ளிவிட்டு குழந்தையைக் கடிக்க இருந்த பாம்புடன் சண்டை போட வேண்டும். ஆனால் என் மீதிருந்த அன்பால், அந்த யானை என்னைத் தள்ளிவிட மறுத்துவிட்டது. அதனால் என் பின்புறத்தை தனியாக குளோசப்பில் எடுத்து, யானைக்கும் தனியாக குளோசப் எடுத்து, பின் நான் கீழே விழுந்து கிடப்பதை தனியாக எடுத்து என்று அந்தக் காட்சியை எடுத்திருந்தார்கள்” என்று தனுஜா ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார்.

விலங்குகள் நல அமைப்பிலிருந்து இந்தப் படத்திற்கான சிறப்பு விருது கிடைத்தது. இத்திரைப்படம் 1972ல் ‘நல்ல நேரம்’ என்கிற தலைப்பில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் நடித்து தமிழில் ரீமேக் செய்யப்பட்டது.

ஒளிப்பதிவாளர் பி.சி ஸ்ரீராம் தன்னுடைய ஆதர்சங்களில் ஒருவராக எப்போதுமே கே.எஸ் பிரசாத்தை குறிப்பிடுகிறார். “கே.எஸ் பிரசாத்தின் மகனும் நானும் நண்பர்கள்.  எனக்கு புகைப்படம் எடுபப்தில் ஆர்வம் இருந்த்தது. என் நண்பனிடம் கேட்டு அவனுடைய அப்பா கே.எஸ் பிரசாத்தை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்து, நான் பள்ளியில் படிக்கும்போதே அவரிடம் உதவியாளராக சேர ஆசைப்பட்டேன். சிறுவன் என்பதால், என்னை வேலைக்கு வைத்துக் கொள்ளாமல் படப்பிடிப்புக்கு மட்டும் வர அனுமதி கொடுத்தார். நான் அங்கு எல்லாவற்றையும் கவனித்திருக்கிறேன். சில நேரங்களில் வெளிப்புறப் படப்பிடிப்புக்கு சென்றிருக்கிறோம். லாரியில் எல்லோருடனும் டாப்பில் அமர்ந்து பயணம் செய்த  அழகான நினைவுகள் எனக்கு இருக்கின்றன. அப்போது சிறுவன் என்பதால் அவருடைய ஒளிப்பதிவின் தன்மையை அறிந்து கொள்ள முடியவில்லை. பின்னாட்களில் அவர் படங்களைப் பார்க்கையில் தான் அவரது மேதமை தெரிந்தது. மிக ஒழுக்கமான, எல்லாம் சரியாக நடக்க வேண்டும் என்று விருப்பமுடைய கண்டிப்பான மனிதர் அவர். சொல்லப்போனால். அப்போதைய எல்லா ஒளிப்பதிவாளர்கலுமே அப்படித் தான இருந்தார்கள். நமக்கு கிடைத்த சிறந்த மாஸ்டர அவர்’ என்றார்.

கே.எஸ். பிரசாத் ஒளி, நிழல் மற்றும் வண்ணங்களால் உணர்வுபூர்வமான கதைகளை திரையில் காட்சிகளாக செதுக்கிய ஒரு சிற்பி.  தொழில்நுட்ப முன்னேற்றங்களுக்கு ஏற்ப தன்னை தகவமைத்துக் கொண்ட கலைஞன். வண்ணங்களின் பயன்பாடு, பக்திப் படங்களுக்கான நுட்பமான ஒளிப்பதிவு, கதாபாத்திரங்களின் தன்மைக்கேற்ப கேமரா கோணங்களை வடிவமைத்தது என லென்ஸின் மாஸ்டராக திரையுலகில் காலத்தால் நிலைபெற்ற காட்சியமைப்புகளோடு தன்னை நிலைநிறுத்திக் கொண்டவர்,

Author Image

ஜா.தீபா

எழுத்தாளர். ‘மேதைகளின் குரல்கள்’ ‘கறுப்புத் திரை’ போன்ற திரைப்படம் சார்ந்த புத்தகங்களையும், “நீலம் பூக்கும் திருமடம்’, ‘மறைமுகம்’ சிறுகதைத் தொகுப்பும் கவனம் பெற்றவை. தொலைகாட்சித் தொடர்களுக்கு திரைக்கதைகள் எழுதி வருகிறார்

Author Image

அகிலா ஸ்ரீதர்

மொழிபெயர்ப்பாளர். உதவி இயக்குநர். எழுத்தாளர். ஆங்கிலப் படங்களுக்கான வசனங்களை சப்டைட்டில் செய்யும் பணியிலும் இருக்கிறார்.

About The Author

The Talkie

The Talkie

See author's posts

Next Post
hitchcocks-music

திரை புத்தகம் 04

Please login to join discussion

Archives

  • Trending
  • Comments
  • Latest
Thug_Life_

Thug Life – ஒரு பார்வை

June 6, 2025
AMADEUS திரைக்கதை

AMADEUS திரைக்கதை

March 15, 2025
start camera

ஸ்டார்ட் கேமரா! வின்சென்ட் மாஸ்டர் – 01

March 19, 2025
Irunda-Pakkam

தொழில்நுட்பத்தின் இருண்ட பக்கங்கள்: திரைப்படங்கள் சொல்லும் உண்மை.

March 16, 2025
Thug_Life_

Thug Life – ஒரு பார்வை

11
rasigamagajanangale

ரசிக மகா ஜனங்களே

7
gurudutt-02

குருதத்தின் ப்யாஸா- உயிர்த்தெழுந்த தேவதை        

5
start camera

ஸ்டார்ட் கேமரா! வின்சென்ட் மாஸ்டர் – 01

4
table top-4-5

டேபிள் டாப் 04 & 05

January 24, 2026
bella darr

பேலா டார் – காட்சியை அனுமதித்தவர்

January 24, 2026
trend-kottaiye-11

ட்ரெண்டு கொட்டாய் 11 -நான் (திரை) காவிய நாயகன்

January 24, 2026
table top-3

டேபிள் டாப் 03

January 24, 2026
The Talkie

சினிமா அற்புதமான ஊடகம். இதனை அறிந்து கொள்ளவும், ரசிக்கவும் உருவாக்கப்பட்டிருக்கிற இணைய இதழ் இது. மேதைகளின் நேர்காணல்கள், திரைக்கதைகள், வெவ்வேறு மொழித் திரைப்படங்கள், ஆளுமைகள், திரைப்படப் புத்தகங்கள் , சினிமா ரசனை என சினிமா உலகத்தோடு இணைந்திட எங்களுடன் இணைந்திடுங்கள்.

Categories

  • I CALL THE SHOTS
  • ஆளுமைகள்
  • இந்தியத் திரைப்படங்கள்
  • உரையாடல்
  • உலகத் திரைப்படங்கள்
  • ஓடிடி திரை
  • கட்டுரைகள்
  • குரு தத் 100
  • டேபிள் டாப்
  • ட்ரெண்டு கொட்டாய்
  • தமிழ்த் திரைப்படங்கள்
  • திரை புத்தகம்
  • திரைக்கதைகள்
  • தொடர்கள்
  • ஸ்டார்ட் கேமரா

Site Navigation

  • About Us
  • Terms and Conditions
  • Privacy Policy
  • Returns and Cancellation
  • Shipping Policy
  • FAQ
table top-4-5

டேபிள் டாப் 04 & 05

January 24, 2026
bella darr

பேலா டார் – காட்சியை அனுமதித்தவர்

January 24, 2026
trend-kottaiye-11

ட்ரெண்டு கொட்டாய் 11 -நான் (திரை) காவிய நாயகன்

January 24, 2026

© 2026 Thetalkie - All rights reserved

Welcome Back!

Sign In with Google
OR

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Sign Up with Google
OR

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • thetalkie
  • ஆளுமைகள்
  • திரைக்கதைகள்
  • உரையாடல்
  • கட்டுரைகள்
    • இந்தியத் திரைப்படங்கள்
    • உலகத் திரைப்படங்கள்
    • தமிழ்த் திரைப்படங்கள்
    • ஓடிடி திரை
  • தொடர்கள்
    • ட்ரெண்டு கொட்டாய்
    • திரை புத்தகம்
    • ஸ்டார்ட் கேமரா
    • I CALL THE SHOTS
    • குரு தத் 100
    • டேபிள் டாப்
  • தொடர்பு
  • Login
  • Sign Up
  • Cart

© 2026 Thetalkie - All rights reserved

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?