தமயந்தி
‘காயல்’ திரைப்படம் நான் இயக்க ஆரம்பித்ததே மிகவும் எதிர்பார்க்காத ஒன்று. இந்தக் கதையை நான் வேறொரு இயக்குநர் இயக்குவதற்காக எழுதினேன். ஒரு மிகப் பிரம்மாண்டமான ஒரு கதையை நாங்கள் எழுதியபோது, அதற்கான பட்ஜெட் எந்தத் தயாரிப்பாளரும் தர முன்வராத ஒரு சமயத்தில், என்னுடைய வாழ்வை மையப்படுத்தி எழுதலாம் என்று நினைத்து நாங்கள் முடிவு செய்ததுதான் காயலின் திரைக்கதை.
முதன் முதலில் நாங்கள் வைத்த பெயர் ‘வேறென்ன மொழி வேண்டும்’ என்பதே. ஒரே வாரத்தில் திருவண்ணாமலைக்குச் சென்று, அங்கு இருந்த எஸ்.கே.கருணா அவர்களின் கெஸ்ட் ஹவுஸில் தங்கி, ஒரு வாரத்தில் எழுதி முடித்த முதல் படிவம் இன்னும் என் ஞாபகத்தில் இருக்கிறது.
தினமும் காலையில் 5 மணிக்கு எழுந்து ஒரு சிறு நடைப்பயிற்சி, அப்போதே அன்று எழுதக்கூடிய காட்சிகளைப் பற்றிய விவாதம் மற்றும் உரையாடல், அது முடிந்து அறைக்கு வந்து சூடான ஒரு தேநீரை குடித்துவிட்டு எழுத ஆரம்பித்தால், பத்து மணிக்குக் காலை உணவு உண்ணும் வரை அந்த எழுத்து தொடரும்.
பின் ஒரு மணி நேரம் சற்று ஓய்வெடுத்து விட்டு மறுபடியும் 11 மணிக்கு ஆரம்பித்தால், மதியம் 2 மணி வரை எழுத்து. மதியம் 2 மணிக்கு நன்றாக சாப்பிட்டுவிட்டு ஒரு சிறு ஓய்வு இரு மணி நேரத்திற்கு எடுத்தால் நான்கு மணி ஆகி இருக்கும். மீண்டும் ஒரு சின்ன நடை. மறுபடி அன்று மாலை எழுதக்கூடிய காட்சிகளை விவாதித்து விட்டு, பின் மறுபடியும் இரவு 10 மணி வரைக்கும் எழுதுவேன்.
என்னைப் பொருத்தவரைக்கும் எழுத்து எப்படி ஒரு பயிற்சியாக என்னை முன்னெடுத்துச் சென்றதோ, அப்படியேதான் எல்லாக் கலைகளும் என்னை வந்தடைந்தன அல்லது நான் அவற்றை நோக்கி சென்றடைந்து கொண்டிருந்தேன்.
இந்தக் கதையை நான் இயக்கும் எண்ணம் அப்போது துளியும் இல்லை. என்னை நன்றாகப் புரிந்து கொண்டிருந்த அந்த இயக்குநர் அதை இயக்குவது சாலச் சிறந்தது என்று நினைத்தேன். ஆனால் காலப்போக்கில் அவர் வேறு ஒரு திரைப்படத்தை எடுக்க வேண்டியதாயிற்று. எனவே இந்தக் கதையை நானே இயக்கினால் என்ன என்று யோசித்து, முதன்முதலாக அதைப் பற்றி நீண்ட நேரம் சிந்தித்தேன். 2018-இல் நான் ஏற்கெனவே கிரௌட் ஃபண்டிங் மூலமாக ‘தடயம்’ என்ற ஒரு மணி நேர படத்தை இயக்கியிருந்தேன். இரண்டே இரண்டு நபர்கள் அதில் நடித்திருந்தனர்.
கனி குஸ்ருதியின் நடிப்பு மீது எனக்குப் பெரும் மையல் உண்டு. அவர் எனக்கு நன்றாக அறிமுகமாய் இருந்ததால் நான் அவரைத் தொலைபேசி மூலமாக அழைத்து, “என்னுடைய சிறுகதையை நான் ஒரு படமாக எடுக்க விரும்புகிறேன், அதில் நீங்கள் நடித்தால் நன்றாக இருக்கும் என்று நம்புகிறேன்” என்று சொன்னேன். அவர் தொலைபேசி மூலமாகவே அந்தக் கதையை முதலில் நான் வாய்வழியாகச் சொல்லக் கேட்டார். பின்பு விகடனில் வந்த அந்தக் கதையை வாசிக்கச் சொன்னார். ஒருநாள் கழித்து, “நான் அதைச் செய்கிறேன்” என்று ஒப்புக் கொண்டார்.
கதாநாயகனின் ரோலுக்கு நான் நாடகக் கலைஞர் கணபதியை அழைத்தேன். அவர் மனமுவந்து இதை நடித்துக் கொடுத்தார். ‘கிரவுட் ஃபண்டிங்’ என்று அழைக்கப்படுகிற ‘கூட்டு நிதி நல்கை’ அல்லது ‘திரள் நிதி நல்கை’ மூலமாகப் படம் பண்ணும் அந்த வழிமுறை மிகவும் ஆயாசம் நிரம்பியதாக இருந்தது. ஒவ்வொரு நாளும் படப்பிடிப்புக்குத் தேவையான உபகரணங்களை எடுப்பதற்குக்கூட நிதி நிலைமை ஒத்துழைக்கவில்லை.
இத்தனைக்கும் சௌபாண்ணா அந்தத் தோட்டத்து வீட்டை எங்களுக்கு வாடகை எதுவும் இல்லாமல்தான் கொடுத்தார். இந்தப் படம் எடுக்க ஏழு நாட்கள் ஆயின. இந்த ஏழு நாட்களும் ஏழு வருடங்கள் என்று தாராளமாகக் கணக்கிட்டுக் கொள்ளலாம். படப்பிடிப்பு முடிந்த பிறகு உடன் இருந்த அத்தனை பேரும் அவரவருக்கான அடுத்தடுத்த வேலைகளுக்குச் சென்று விட்டதால், அடுத்த கட்ட படத்தொகுப்பை படத்தொகுப்பாளரும் நானும் மட்டுமே எடுத்துச் சென்றோம். டப்பிங் பேசுவதற்குக்கூட காசு இல்லை.
எனவே கதாநாயகிக்கு நானே குரல் கொடுத்தேன். ஏதேதோ பணப் பிரச்சனைகளில் இம்முயற்சியைக் கைவிடப் போகிறோம் என்று ஒருகணம் வந்தபோது, நான் ஸ்டூடியோவின் டாய்லெட்டில் உடைந்து அழுத நிமிடம் எனக்கு இதை எழுதும்போது வந்து போகிறது.
‘தடயம்’ வந்த பிறகு திரைப்படம் இயக்க வேண்டும் என்ற எண்ணம் என்னிடம் இல்லவே இல்லை. எப்படி முதல் குழந்தையைப் பெற்றவள், இனிமேல் தான் பிள்ளை பெறப்போவதே இல்லை என வலியின் நிமித்தம் சூளுரைப்பதுபோல நானும் முடிவு எடுத்துக் கொண்டிருந்தேன். என்றாலும், எப்போது ‘காயல்’ திரைக்கதை படமாக உருவாகாமல் போகக்கூட வாய்ப்பிருக்கிறது எனும் நிலை வந்ததோ, அப்போது என்னை அறியாமல் அதை எப்படியாவது இயக்கி வெளிக்கொண்டு வரவேண்டும் என்ற எண்ணம் வந்துவிட்டது.
ஆனால் இந்தப் படத்தின் கதையைத் தமிழில் இருக்கக்கூடிய தயாரிப்பாளர்களிடம் சொன்னால் அவர்கள் இதை ஏற்றுக் கொள்வார்களா என்ற அச்சம் எனக்கு வந்துவிட்டது. அதன் முக்கியமான பின்னணி காரணம் என்னவெனில், இதில் பெரும்பாலும் வர்த்தக ரீதியான எந்த விஷயமும் இல்லை என்பதைக் காட்டிலும், முற்றிலுமாக இல்லை என்பதே உண்மையாக இருந்தது.
ஒரு சிறுபான்மைச் சமூகத்தில் இருந்து வந்த ஒரு பெண் எப்படி திரைத்துறையில் பங்காற்ற முடியும் என்று குடும்ப நபர்கள் கொண்டு வந்த பிரச்சனை ஒரு பக்கம். அதை அத்தனை ஆமோதிப்போடு ஏற்றுக்கொண்ட அம்மா இன்னொரு பக்கம். அம்மாவுக்கு நான் எழுதுவது பிடிக்கும். நான் திரை இயக்கம் செய்வதும் பிடிக்கும். ஆனால் என்ன எழுத வேண்டும் என்பது அவள் தீர்மானித்தபடி இருக்க வேண்டும். நான் முதல் முறையாக திரைத்துறையில் இயங்கிய பெண்களைப் பற்றிய வாசிப்பை அதிகரித்தேன். ஆலிஸ்- கை- ப்ளாச், டோரதி அர்ஸ்னர் முதலியோரின் ஈடுபாட்டையும் செயல்பாட்டையும் விரிவாக வாசிக்க வாசிக்கத்தான் இந்தத் தளம் எப்போதுமே அழகானதாக இருந்ததில்லை என்பது எனக்குப் புரிய ஆரம்பித்தது.
கிரவுட் ஃபண்டிங் என்னும் யுக்தி தமிழ்நாட்டில் மிக வேதனைக்குரியதாக அப்போது இருந்தது. நான் சென்று பணத்திற்காக அணுகிய அத்தனைப் பேரும், “இதற்கு முன்னால ஒருத்தங்க வந்து வாங்கிட்டு போனாங்க. அவங்க ஏதும் பண்ணலையே!” என்று குற்றம் சாட்டிக்கொண்டே இருந்தார்கள். அதுபோல ஒருவருடைய பணத்தை நாம் வீணாக்கி விடக்கூடாது என்ற எண்ணத்தில், தடயத்தை நான் எனக்கு இருந்த பணபலத்தால் எவ்வளவு உருவாக்க இயலுமோ அவ்வளவு உருவாக்கினேன்.
அடுத்த திரைப்படத்தை எடுக்க வேண்டுமானால் அது நிச்சயமாக ஒரு தயாரிப்பாளரின் மூலமாகத்தான் எடுக்க முடியும் என்று நினைத்தேன். ஆனால் எப்போதும் பெண்களுக்கு இருக்கக்கூடிய மிகப்பெரிய தடையே தொடர்புகள் அதிகமாக இல்லாமல் போவதுதான். ஒருமுறை ஒரு நண்பர் என்னிடம் விளையாட்டாகச் சொல்வதுபோல, “நீங்க நல்லாதானே பாட்டு எல்லாம் எழுதினீங்க?
ஆனா உங்களுக்கு ஏன் வாய்ப்பு கிடைக்கலன்னு நினைக்கிறீங்க?” என்று கேட்டார். நான் “தெரியலையே!” என்று சொன்னபோது, “உங்களுக்குத்தான் பார்ட்டிகள் போகும் பழக்கம் இல்லையே” என்று சொன்னார். திறமையைத் தாண்டி ஒரு சில விஷயங்கள் தேவைப்படுவதை அவர் பூடகமாகச் சொல்வதைப்போல் இருந்தது.
வாழ்க்கை நம்மை எதிர்பாராமல் ஒரு சில நபர்களோடு கைகோர்க்க வைக்கும். அப்படிதான் என்னுடைய தயாரிப்பாளர் ஜேசு சுந்தரமாறன் அவர்களை நான் சந்தித்தது. அவர் அந்தச் சமயம் ஒரு குறும்படம் எடுத்திருந்தார். அதை எட்டு பெண்கள் சேர்ந்து வெளியிட வேண்டும் என்பது அவருடைய திட்டமாக இருந்ததனால், எட்டில் ஒன்றாக என்னை அணுகினார்கள். நான் அதை வெளியிட்ட பிறகு அவருடன் பேசக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. அப்போது பிஜூ என்னும் அமைப்பாளரோடு சேர்ந்து நான் புதிதாக ஒரு தாலாட்டுப் பாடல் எழுதியிருந்தேன். அது மிகவும் அற்புதமான ஒரு பாடல். “அந்தப் பாடலை நாம் ஒரு வீடியோ பாடலாக ஆக்கலாமா?” என்று நான் தோழர் மாறனிடம் கேட்டபோது, அவர் உடனே “சரி” என்றார். மிகக் குறைவான ஒரு தொகையில் நாங்கள் அந்தப் பாடலை உருவாக்கினோம். அந்தப் பாடல் உருவாக்கத்தின் மொத்தச் செலவு ஒரு லட்சம் ரூபாய். அது அவருக்கு மிகவும் பிடித்துப்போனது.
அடுத்த படத்தின் ஸ்கிரிப்டுகளை கேட்டுக் கொண்டிருப்பதாகச் சொன்னார். நான், “என்னிடம் ஒரு கதை இருக்கிறது” என்று காயல்படத்தின் கதையை அவரிடம் அரை மணி நேரம் ஒரு வீடியோ காலின் மூலமாகச் சொன்னேன். அவருக்கு அது மிகவும் பிடித்திருந்தது. “ஸ்கிரிப்ட் வாசிக்க வேண்டும்” என்று சொன்னதால் நான் உடனடியாக அதை மெயிலில் அனுப்பி வைத்தேன். ஒரு தயாரிப்பாளர் இயக்குநரைச் சந்திக்காமல், நேரடியாக இணைய வழியாகக் காணொளியின் மூலம் கதையைக் கேட்டு ஒப்புதல் கொடுத்தது, அநேகமாக தமிழ் திரையுலகத்தில் இதுவே முதல் முறையாக இருக்கும் என நம்புகிறேன். ‘உலக வரலாற்றிலேயே முதல்வராக’ என்று சொல்லலாமா என்று தெரியவில்லை. ஆனால் தமிழ் திரையுலகில் நிச்சயமாக முதல்முறையாக இதுதான் இருக்கச் சாத்தியம் இருக்கிறது. அவர் என்மேல் வைத்த அசாத்திய நம்பிக்கை என்னை மேலும் பொறுப்புள்ளவளாக இந்தத் திரைப்படத்தில் என்னை இணைத்துக் கொள்ள வேண்டும் என்ற உந்துதலைத் தந்தது.
ஏற்கெனவே திரைக்கதை கையில் இருந்தபடியினால் அதைச் செப்பனிடும் வேலையில் மூழ்கினோம். அந்த மியூசிக் ஆல்பத்தில் பணியாற்றிய பல டெக்னீசியர்களை நான் அப்படியே இந்தத் திரைப்படத்தில் பணியாற்றவும் அழைத்துக் கொண்டேன். அதில் எனக்கு ஒரு மிகப்பெரிய சௌகரியம் இருப்பதாக நான் அப்போது நினைத்தேன். காயல் திரைப்படத்திற்கு என்று தனிப்பட்ட அலுவலகம் எதையும் நாங்கள் எடுக்கவில்லை. அதன் முக்கியமான காரணம் என்னவெனில், அந்தச் செலவை நாங்கள் ஏதாவது ஒரு வகையில் பட உருவாக்கத்தில் முதலீடு செய்யலாம் என்பதுதான். தொகை சிறியதாகக்கூட இருக்கலாம், ஆனால் அது படப்பிடிப்பின்போது மிகவும் அவசியமான ஒரு தேவையைப் பூர்த்தி செய்வதாக இருக்கக்கூடும் என்று நான் பரிபூரணமாக நம்பினேன். எனவேதான் அத்தகைய ஒரு முடிவை நாங்கள் எடுத்தோம்.
எப்போதெல்லாம் தேவையோ அப்போதெல்லாம் நாங்கள் ஒரு பொது இடத்தில் கூடி, நாங்கள் எங்களுடைய விவாதத்தையோ, அடுத்தகட்ட நடவடிக்கை பற்றிய ஆலோசனையையோ மேற்கொண்டோம். அது ஒன்றும் பெரிய இடர்ப்பாட்டை பட உருவாக்கத்தின் முதற்கட்ட நடவடிக்கையில் உருவாக்கவே இல்லை. அதற்குப் பிறகு காயல் என்பது பொதுவாகவே கடல் மற்றும் கடல் சார்ந்த இடமாக இருப்பதால், துல்லியமாக எங்கிருந்து எதுவரை இந்தப் பயணம் நிலப்பரப்பளவில் நிகழப்போகிறது என்பதைத் தீர்மானித்தோம். ஆம் -பாண்டிச்சேரியில் இருந்து தனுஷ்கோடி வரையிலான ஒரு பயணமாக நாங்கள் அதைத் திட்டமிட்டோம்.
நடிகர்களின் தேர்வைப் பொருத்தவரையில், நான் ஏற்கெனவே அனுமோலிடம் இந்தக் கதையைச் சொல்லி இருந்ததால், அவர் அதன் பிரதான பாத்திரமான அம்மா கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு ஏற்கெனவே ஒத்திருந்தார். இந்தப் படம் நிகழப்போகிறது என்று தெரிந்தவுடன், அவர் அப்போது இருந்த மலையாளப் படங்கள் அத்தனையையும் ஏதோ ஒரு வகையில் சீக்கிரமே முடித்துவிட்டு, ஒரு மாத கால்ஷீட் கொடுத்தார். தேன்மொழி கதாபாத்திரத்தை நான் எழுதும்பொழுதே காயத்ரி என் மனப்பிம்பத்தில் இருந்தே வந்தார். இறுக்கமான அந்த முகமும் அதில் இருக்கக்கூடிய மென்மையும் எனக்கு அந்தக் கதாபாத்திரத்திற்குத் தேவைப்பட்டது. ஒரு மாலை நேரம் பெசன்ட் நகரில் இருக்கக்கூடிய ஒரு ரெஸ்டாரண்டில் அவரைச் சந்தித்து கதையைச் சொன்னதும் அவர், “நிச்சயமாகச் செய்யலாம்” என்று உடனடியாக ஒத்துக்கொண்டார்.

ரமேஷ் திலக் எனக்கு மிகவும் பிடித்த நடிகர். அவரைச் சந்திப்பதற்குச் சென்று நாங்கள் கதையைச் சொன்னதும் அவரும் உடனே ஒப்புக்கொண்டார். ஒப்புக்கொண்டார் என்று நான் வெகு எளிமையாகச் சொல்லிவிடலாம். ஆனால் அப்போது நான் அவர்களுக்குச் சொன்ன சம்பளம் எல்லாமே அவர்கள் ஏற்கெனவே வாங்கிக் கொண்டிருந்ததைவிட மிகவும் குறைவானதே என்றாலும், அவர்கள் உடனடியாக அதை ஏற்றுக்கொண்டார்கள். அது எனக்கு மிகப்பெரிய பலமாய் இருந்ததை நான் சொல்லியே ஆக வேண்டும். இந்தப் படத்தின் கதாநாயகனான லிங்கேஷை நான் கபாலி திரைப்படத்தில் வில்லனாகப் பார்த்திருக்கிறேன். அப்போது அவர் மிகவும் கட்டுமஸ்தான ஓர் உடல் அமைப்பைக் கொண்டவராக இருந்தார். அதற்குப் பின் இந்த ‘ஆதித்தமிழ்’ என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதற்காகப் பல நடிகர்களை நான் தொடர்பு கொண்டிருந்தேன். அந்த நேரங்களில் எல்லாம் ஏதோ ஒன்று ஒரு முழு நிறைவு இல்லாததாகவே எனக்கு தோன்றிக்கொண்டே இருந்தது. அவர்களின் திறனில் எனக்கு எந்தவிதமான நம்பிக்கையின்மையும் இல்லை என்றாலும், அவர்கள் ‘ஆதித்தமிழ்’ என்ற கதாபாத்திரத்தின் கண்களைச் சுமந்தவர்களாக இல்லை என்று எனக்குத் தோன்றிற்று. அப்போதுதான் என்னோடு பணியாற்றிய லெனின் தங்கராஜ், லிங்கேஷன் சமீபத்திய புகைப்படத்தை என்னிடம் காட்டினார்.
அதில் அவர் மிகவும் மெலிந்து கிட்டத்தட்ட ஒரு திராவிட முகத்தைப் பிரதிபலிக்கும் சாயலுடன் இருந்தார். நான் அவரைச் சந்திக்க விரும்பி கேட்டபோது, அவர் உடனடியாக வந்து என் வீட்டில் சந்தித்தார். அந்தச் சந்திப்பை நான் மறக்க இயலாது. ஏனெனில் நான் கதையைச் சொல்லச்சொல்ல அவர் தன் கண்களில் காட்டிய பாவனைகள் ஆதித்தமிழை என் கண்முன் கொண்டு வந்ததுபோல இருந்தது. உடனடியாக அவரை அந்தக் கதாபாத்திரத்தில் நடிக்கக் கேட்கலாம் என்று தீர்மானித்தேன். அவரும் உடனே ஒப்புக்கொண்டார்.
ஆனால் அவர் அப்போது சற்று வெளுத்த நிறத்தில் இருப்பதுபோல எனக்குத் தோன்றியது. எனக்கு முழுக்க முழுக்க தீவிரமான ஒரு திராவிட முகம் தேவைப்பட்டது. அதனால் அவரிடம் அப்போது எதுவுமே நான் சொல்லவில்லை. படப்பிடிப்பு பூஜை பாண்டிச்சேரியில் முதல் நாள் படப்பிடிப்பிலேயே நடைபெற்றது. கடலோரமாக கடலில் பூக்கள் தூவி நிகழ்ந்த அந்தப் பூஜையை ஒரு திருநங்கை செய்தார். தமிழ் பாசுரங்கள் பாடப்பட்டன. தயாரிப்பாளர் அனுப்பிய ஒரு பிரார்த்தனையும் அங்கு வாசிக்கப்பட்டது. அது மட்டுமல்ல அன்று தேன்மொழி பாடலின் சில காட்சிகள் எடுக்கப்பட்டன.
நாயகனுக்கே ஆன தன்மையுடன் கொஞ்சம் மேக்கப்புடன் லிங்கேஷ் படத்தளத்திற்கு வந்தார். கூடவே உதவியாளர் ஒருவர் வெயிலுக்குக் குடை பிடித்தபடி இருந்தார். நான் அவரையே உற்றுநோக்கி, “கொஞ்ச நேரம் நீங்கள் கடற்கரையோரமாக நடந்து செல்ல இயலுமா?” என்று கேட்டேன். அவர் ஏன் என்னவென்று கேட்காமல் நடக்க ஆரம்பித்தார். நான் மறுபடி அவரை அழைத்து, “உங்கள் உதவியாளர் வேண்டாம், குடையும் வேண்டாம்” என்றேன். அப்போது “லேசாகக் கருக்க வேண்டுமா?” என்று கேட்டார். நான் லேசாகச் சிரித்துக்கொண்டு, “லேசாக அல்ல, நன்றாகவே” என்று பதில் சொன்னேன். அவர் நீண்ட நேரத்திற்குப் பிறகு நான் விரும்பிய நிறத்தில் வந்து அமர்ந்தார். எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது, நான் படப்பிடிப்பில் ஈடுபட்டபொழுதும் அதற்கு முன்பாக முன்தயாரிப்பு வேலைகளில் இருந்தபொழுதும் ஒரு வர்த்தக ரீதியான சினிமாவாக காயல் இல்லாமல் போகப் போகிற பயம் எனக்குச் சற்றும் இல்லாமல் இருந்தது. இப்போது அதை நினைத்தால் எனக்கே மிகப்பெரிய பிரமிப்பாக இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில் இந்த வெளியீட்டு அனுபவம் தந்த வர்த்தக ரீதியான புரிதல்கள் எனக்கு வேறு வகையில் அமைந்துள்ளன.
26 நாட்களுக்குள் படப்பிடிப்பை முடித்துக் கொள்வது என்பது அத்தனை எளிதான விஷயமாக இல்லை. எல்லாவிதங்களிலும் பிரச்சனைகள் முதல் மூன்று நாட்களில் இருந்தே வேர் விட ஆரம்பித்தன. நாங்கள் சென்றிருந்தபொழுது, திட்டவட்டமாக ஒரு நாளைக்கு என்று வைத்திருந்த பட்ஜெட் 2 லட்சம்தான். ஆனால் முதல் மூன்று நான்கு நாட்கள் அது அதிகரித்ததனால், 7 நாட்களில் முதல் ஷெட்யூல் முடித்துவிட்டு, பின்பு அடுத்த ஷெட்யூலுக்காகத் தயார்படுத்தலாம் என்று ஆலோசனை எல்லாம் சொன்னார்கள். ஆனால் சிறு படத்திற்கு அது வேலைக்கு ஆகாது என்று எனக்குத் தெரியும். அப்படி ஒருவேளை நாங்கள் திரும்பினால், அதுவே இந்தப் படத்தின் இறுதி மூச்சு என்று நான் முடிவெடுத்தேன். எனவே நான் பட்ஜெட்டுக்குள் மறுபடி உட்புகுந்தேன். காரணம், முன்தயாரிப்புப் பணிகளில் என் கைகளில் இருந்த ப்ரொடக்ஷன் வேலை அப்போது இடம் மாறி இருந்தது. நான் பார்த்தமட்டில் 6, 7 கார்கள் மற்றும் வேன் வாகனங்கள் படப்பிடிப்புக்காகப் பயன்படுத்தப்பட்டிருந்தன. வெறும் 65 நபர்கள் இருக்கக்கூடிய ஒரு படப்பிடிப்பு குழுவிற்கு ஆறு, ஏழு வாகனங்கள் தேவையே இல்லை என்று எனக்குத் தெரியும்.
எனவே நான் முதலில் மூன்று நான்கு வாகனங்களை மட்டும் வாடகைக்கு எடுத்துக் கொள்ளச் செய்தேன். ஒரு மாருதி வேன் சாப்பாடு எடுக்கவென்று தனியாக உபயோகப்படுத்தப்பட்டிருந்தது. அது ஏன் என்று நான் கேட்டபோது, அவர்கள் சொன்ன பதில் மிகவும் ஆயாசமாய் இருந்தது. “எதற்காக கேமராவைக் கொண்டுவரும் வேனை காலையிலிருந்து மாலைவரை வெறுமனே இருக்க வைத்துவிட்டு, புதிதாக சாப்பாடு எடுக்க என்று ஒரு வாகனத்தை நாம் எடுக்க வேண்டும்?” என்று கேட்டதற்கு மிகவும் அசால்டாக ஒரு பதில் வந்தது, “கொட்டிடும் மேடம்” என்று. அப்போதுதான் எனக்கு ஒன்று புலப்பட்டது. இந்தத் துறையில் சமத்துவம், பொதுவுடமை எல்லாமே சில இடங்களில் மூட்டை கட்டி வைக்க வேண்டும் என்று. “அப்படி கொட்டிவிட்டால் அந்த வாகனத்தை நீங்கள் கழுவி காய வைக்கலாம்” என்று சொல்லிவிட்டு, வெறும் மூன்று அல்லது நான்கு வாகனங்கள் மட்டுமே வைத்துக்கொண்டு நாங்கள் படப்பிடிப்பைத் தொடர்ந்தோம். அப்படித்தான் காலை உணவிற்கான பில்லும் மூன்று நான்கு பிரதிகள் இருந்தன.
அதில் கையெழுத்தும் இட்டிருந்தார்கள். இதெல்லாம் பார்த்து மனம் வெந்து போனது. “10% தாராளமாக எடுத்துக் கொள்ளுங்கள். அதற்குமேல் நீங்கள் எடுத்துக் கொள்ள நான் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன்” என்று சொன்னதனால் நிறைய பேர் எனக்கு எதிராகவே படப்பிடிப்புக் குழுவில் முணுமுணுத்துக் கொண்டார்கள். அவை எல்லாமே என் காதுகளில் கேட்கத்தான் செய்தன. அதைக் கேட்கவோ அதைப் பரிசீலிக்கவோ அல்லது அதை நினைத்து வருந்தவோ அவர்களுக்கு விளக்கம் சொல்லவோ எனக்கு அப்போது தோன்றவே இல்லை. என் கண் முன்னால் இருந்த ஒரே பணி இந்தப் படப்பிடிப்பை முதலில் முடிக்க வேண்டும் என்பதைத் தவிர வேறு எதுவுமாகவில்லை. எனக்குத் தெரிந்து தயாரிப்பாளருக்கு என் மீதான புகார்கள் தொலைபேசியில் போய்க் கொண்டே இருந்தன. ஆனால் இந்த இடத்தில் ஒன்றை நான் மிக மிக நெகிழ்வாக சொல்லிக் கொள்கிறேன். அவர் ஒருபோதுமே என்னைச் சந்தேகப்படவே இல்லை.
நான் எது செய்தாலும் – அது காயல் திரைப்படத்திற்காக மட்டுமே இருக்கும் என்று என்னைப் பரிபூரணமாக நம்பினார். அது மிகப்பெரிய ஒரு பலம். அதுவரை மிக மென்மையாக, “சாப்பிட்டீங்களாண்ணா?” என்று கேட்டுக் கொண்டிருந்த எனது குரல் மாறி இருந்தது. என் குரலில் ஒருவிதமான அழுத்தம் இடம்பெறத் துவங்கிவிட்டது. அது அவர்களுக்கு மிகப்பெரிய மாறுதலையும் கொடுத்திருக்கக்கூடும். ஆனால் அது அந்தத் தருணத்தில் எனக்கு அவசியமானதாக இருந்தது. “இந்த அம்மா ஏன் படம் எடுக்கணும்? தேவையா?” என்றெல்லாம்கூட படப்பிடிப்பு தளத்தில் என் காது படவே பேசினார்கள். இதற்கு அவர்களுக்குப் பதில் சொல்வது நான் அல்ல – என் படம்தான் பதில் சொல்ல வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருந்தேன்.
கடற்கரை ஒட்டிய காட்சி அமைப்பு என்பதனால் சில காட்சிகள் கடலுக்குள் எடுப்பதுபோல் இருந்தன. அப்போதெல்லாம் படகுகளை வாடகைக்கு அமர்த்திக் கொண்டுபோய் ஆழ்கடலில் நின்று குறைந்த உபகரணங்களை வைத்து அதைச் சாத்தியப்படுத்துவது என்பதே மிகக் கடினமான விஷயமாக இருந்தது. நான் அறிந்து அந்த ஒரு காட்சி மட்டும்தான் நாங்கள் மறுநாள் மறுஒளிப்பதிவு செய்ததாக இருக்கும். ஏழு ஊர்களில் தொடர்ந்து படப்பிடிப்பு நிகழ்ந்தபோதும் இந்தப் படகுழுவில் இருந்த ஒரு முக்கியமான விஷயம், எல்லோருக்குமே தயாரிப்பு நிறுவனம் சார்ந்து நல்ல உணவும் உறைவிடமும் கொடுக்கப்பட்டது.
ஒருவழியாக படப்பிடிப்பு முடிந்த பிறகு, பின்தயாரிப்பு வேலைகளில் ஈடுபட்டோம். அதில் ஏராளமான சிக்கல்கள் வந்தன. எனக்குச் சாதாரணமாக காய்ச்சல் வர, அப்போதிருந்த படத்தொகுப்பாளர் அதை ‘கொரோனா’ என்று நினைத்துக் கொண்டார். என்னைத் தொகுப்பு அறைக்குள்ளேயே வரக்கூடாது என்றும் காணொளி மூலமாகவே படத்தொகுப்பைத் தொடரலாம் என்றும் சொன்னார். ஆனால் அவ்வாறு செய்த எதுவுமே சரி வரவில்லை. அதற்குப் பிறகுதான் தடயம் படத்தொகுப்பைச் செய்திருந்த பிரவீன் இதைத் தொகுக்க முன் வந்தார். என்னுடைய சூழ்நிலையை அவரிடம் சொல்லியபோது, அவர் அதை மனமார ஏற்றுக்கொண்டு இந்த படத்தின் முதல் cut செய்து கொடுத்தார். அப்போது இந்தப் படம் இருந்த நீளம் 2 மணி 20 நிமிடங்கள். படம் மிக நிதானமாக ஒரு நாவலைப் பார்த்ததுபோல ஊர்வதாகச் சொன்னார்கள். மலையாளப் படம்போல் இருப்பதாக இன்னும் கொஞ்சம் பேர் சொன்னார்கள். நல்ல படம் என்று சொல்லிவிட்டு, பின்னால் சென்று, “இந்தப் படத்தில் உட்கார நிறைய பொறுமை வேண்டும், அனுப்பி வைத்து தொலைய வேண்டியதுதானே” என்றெல்லாம் பேசி இருக்கிறார்கள். இன்னும் சிலர், “இது பைசாவுக்கு பெறாது” என்றார்கள்.
கொஞ்சம் விட்டால், “நீ எல்லாம் ஏன் படம் எடுக்க வந்தாய்? பேசாமல் வீட்டில் உட்கார்ந்து சின்ன வெங்காயம், பூண்டு உரித்து வத்தக்குழம்பு வைத்துக் கொண்டிருப்பதுதானே” என்றுகூட சொல்வார்கள் என்று எனக்குத் தோன்றியது. நான் விடாமல் போராடினேன். இதற்கு நடுவில் தயாரிப்பு தரப்பில் இருந்து படத்தொகுப்பு வேறு விதமாக இருக்கலாம் என்றும் அவர்களே ஒரு தொகுப்பாளரை இதில் ஈடுபடுத்தப் போவதாகவும் சொல்லி, எல்லா ஹார்ட் டிஸ்கையும் வாங்கிக்கொண்டு சென்றார்கள். அதன் பிறகு நீண்ட காலம் எதுவுமே நிகழாமல் இருக்க, நான் மறுபடி தயாரிப்பாளரிடம் பேசி அந்த ஹார்ட் டிஸ்க் எல்லாவற்றையும் வாங்கி, இன்னும் நெருக்கமாக அதை எடிட் செய்ய ஆரம்பித்தோம். அதை ஒருசிலருக்கு போட்டு காட்டியபோது அவர்கள் இந்த நான்-லீனியர் பேட்டர்ன் கொஞ்சம் குழப்பமாக இருக்கிறது என்று சொன்னார்கள்.
அதன் பிறகு நீண்ட நாட்களாக எதுவுமே நிகழாமல் போக, நான் மறுபடி தயாரிப்பாளரிடம் அதைத் தொடர்வதற்காகப் பேசினேன். மறுபடி ஹார்ட் டிஸ்க் எங்களிடம் வந்து கொடுக்கப்பட்டது. என்றாலும் எந்த ஹார்ட் டிஸ்கில் நாங்கள் வேலை செய்தோமோ அது கிடைக்காமல் போய்விட்டது. எனவே நாங்கள் மறு எடிட் செய்தோம். ஒரு சிலையை எப்படி ஒரே சிற்பி பல வடிவங்களில் செதுக்க முடியும் என்று நான் ஓரளவு இந்த விஷயத்தில் கற்றுக் கொண்டேன் என்றே சொல்லலாம். என்றாலும் இது போன்ற சவால்களை எல்லாம் மற்ற இயக்குநர்கள் சந்திக்காமல் இருந்திருக்க மாட்டார்கள். ஆனால் எந்த ஒரு பிடிமானமும் இல்லாமல் தன்னந்தனியாகப் போராடுவது என்பது மிக சிரமமான ஒன்றாக இருந்தது.
பொதுவாகவே, பெண் இயக்குநர்கள், பெண் எழுத்தாளர்கள் என்று சொல்வதை நான் விரும்புவதில்லை. என்றாலும் களத்தில் பெண்களுக்கான மரியாதையோ மதிப்போ எள்ளளவும் இல்லை. ஒன்று, நமக்கு எந்தத் துறை ஆனாலும் ஒரு காட்ஃபாதர் தேவைப்படுகிறார்கள். இவர்கள் செய்யும் வேலை மிகத் திறமையானது என்று சொல்லக்கூடிய மனிதர்கள் தேவைப்படுகிறார்கள். அவர்கள் பிரபலமானவர்களாக இருக்க வேண்டிய நிர்ப்பந்தத்திலும் இருக்கிறார்கள். இதுதான் மிகப்பெரிய அடித்தளமாக இருக்கிறது.
வர்த்தக ரீதியாக காயல் திரைப்படத்தின் வெளியீட்டில் ஏகப்பட்ட சவால்கள் இருந்தன. பல சிறு வர்த்தகர்கள் அதை விரும்பி கேட்டபோதும் ஒரு சில வர்த்தகர்கள், “இது தியேட்டருக்கான படம் அல்ல, OTT இல் காணும் படம்” என்று சொல்லிய பிறகும், OTT-இல் வெளியிட வேண்டும் என்றால் நிச்சயமாகத் திரையரங்கில் இதை வெளிக்கொண்டு வர வேண்டிய நிர்ப்பந்தம் இருந்தது. சிறிய படங்களின் தலையெழுத்து என்னமோ இன்றைய வர்த்தக உலகத்தில் இப்படித்தான் இருக்கின்றது. உங்கள் படத்தில் ஸ்டார் காஸ்ட் இல்லை என்றார்கள். அனுமோல் இருந்தார். எதை வைத்துக்கொண்டு இவர்கள் இதையெல்லாம் சொல்கிறார்கள் என்று எனக்குச் சத்தியமாகப் புரியவில்லை. முதல் முயற்சியாக ஒரு தயாரிப்பு நிறுவனமும், ஒரு இயக்குநரும் இதை முன்னெடுத்துச் செல்லும்பொழுது இங்கு வழிநடத்த வேண்டிய அல்லது தோள் கொடுக்க வேண்டிய சப்போர்ட் சிஸ்டம் சுத்தமாக இல்லை. நாங்கள் ஒரு பெரிய தயாரிப்பு நிறுவனத்திற்கு விநியோகஸ்த உரிமைகளைக் கொடுத்தோம். மிகச் சிறப்பாக அவர்கள் எங்களுக்கு அதை அந்த வெளியிடும் காலத்தில் செயல்படுத்தியதாகத் தோன்றியது.
போஸ்டர்களை எப்படி எப்படி எல்லாம் வடிவமைக்க வேண்டும் என்பது முதல், ஒவ்வொரு நாளும் காலை 7 மணியிலிருந்து எங்களை அவர்கள் வேலை பார்க்க வைத்தவிதம், “அடடா நாம் சரியான இடத்திற்குத்தான் வந்திருக்கிறோம்” என்று கருத வைத்தது. “இந்தப் படம் வணிக ரீதியான படம் அல்ல, எனவே இதை வேறு மாதிரிதான் ப்ரோமோஷன் செய்ய வேண்டும்” என்றெல்லாம் அவர்கள் முந்தைய சந்திப்புகளில் எங்களுக்கு வகுப்பு எடுத்திருந்தார்கள். என்றாலும் முதல் வெளியீட்டு நாளான அக்டோபர் ஐந்துக்கு முந்தின நாளோ அல்லது அதற்கு ஒரு சில நாட்கள் முன்பாகவோ எங்களைத் தொடர்பு கொண்டு, “பெரிய படம் வருகிறது. எனவே ஐந்தாம் தேதி வேண்டாம், 12ஆம் தேதி செய்கிறோம்.” என்று சொன்னார்கள். அவர்களுக்கு நம்மைவிட சிறப்பாக எல்லாமே தெரியும் என்ற எண்ணத்தில் நாங்களும் சம்மதித்தோம். என்றாலும் 12ஆம் தேதி 8 படங்களோ 12 படங்களோ வரிசையில் நின்றன.
அதற்கு முந்தின நாள் அந்த விநியோகிஸ்தர் ஏதோ ஒரு மனக்கசப்பின் காரணமாக, மால்களில் திரைப்படம் வெளியிடும் நிறுவனத்துடன் முரண்பட்ட காரணத்தினாலும், அதைப் பற்றி அவர்களது மும்பை அலுவலகத்திற்குப் புகாரளித்து மின்னஞ்சல் அனுப்பியதாலும் ஒரு தியேட்டர்கூட மாலில் கிடைக்காமல் போனது. ஏவிஎம்-ற்கு எதிரே இருந்த மெட்ரோ தூணில் இந்தப் பக்கம் ஒரே ஒரு போஸ்டரும் அந்தப் பக்கம் ஒரே ஒரு போஸ்டரும் அவர்கள் ஒட்டி இருந்தார்கள். திரையிடப்பட்ட சில தியேட்டர்களிலும் ஒழுங்கான பேனர்கள் இல்லை. க்யூபில் படத்தை ஏற்றிய அன்று ஒரு சில பிழைகளினால் மீண்டும் நாங்கள் படத்தொகுப்பு அலுவலகத்திற்கு நள்ளிரவு மூன்று மணி போல் வந்தபோது, என்னை அறியாமல் ஆற்காடு சாலையில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருந்தது. இங்கு சினிமா என்பது கலை என்பதைக் காட்டிலும் ஒரு வர்த்தகம் என்பது எனக்கு அப்போது புரிந்தது.
திரையிடப்பட்ட காட்சிகளைக் குறித்து நண்பர்கள் முகநூலில் நன்றாக எழுதினார்கள். அதுபோக பணம் கொடுத்து ட்விட்டரிலும், அதேபோல இன்ஸ்டாகிராமிலும் நாங்கள் பிரமோஷன் செய்தோம். அதற்குப் பிறகு காயலின் வரவேற்பைப் பெற கிட்டத்தட்ட எல்லா இணையதளத்திற்கும் அதற்கான லைக்சைப் பெற காசு கொடுக்கத்தான் வேண்டியிருந்தது. “நீங்க ஒரு அஞ்சு ஃபைட் வச்சிருந்தா நிச்சயமா எஃப் எம் எஸ் ஜாஸ்தியா கிடைச்சிருக்குமே” என்று சொல்லி இருக்கிறார்கள். இது எல்லாமே மிகப் புதிதாக இருந்தது. ரிலீஸ் அன்று எனக்கு கிட்டத்தட்ட ஒரு ஜென் மனநிலை வந்துவிட்டது. அதற்கு முதல் நாள் இரவு இயக்குநர் சேரன் அவர்கள் இந்தப் படத்தை பார்த்துவிட்டு, “நல்ல படம். இந்த நிதானம் படத்திற்குத் தேவையான ஒன்று. ஒன்று முடிந்தால் செய்யுங்கள், இரண்டாம் பகுதியில் அந்தக் கதாநாயகன் இவர்களின் பயணத்தில் சேரும்பொழுது அவன் தனது இரண்டாம் காதலியோடு பாடுவதுபோல் இருக்கும் பாடல் காட்சியை நீக்கி விடுங்கள்” என்று சொன்னார். அது மிக நியாயமான ஒரு விமர்சனம்.
இந்தப் படம் தயாரிப்பாளருக்கும் எனக்கும் மிகப்பெரிய புரிதலை வணிக ரீதியாக ஏற்படுத்தி இருக்கிறது. இப்போது OTT தளங்களில் அது வெளியாகவுள்ளது. ரித்தன்யாவுக்காகவும் கவினுக்காகவும் மனம் நொந்து போகிறவர்கள் நிச்சயமாக காயல் தேன்மொழிக்காகவும் மனம் இரங்குவீர்கள். ஆனால் தமயந்தியைப் பற்றியும் நினைத்துக் கொள்ளுங்கள். ஏனெனில் ஒரு ஆண் இருபது வயதில் அடையக்கூடிய உயரங்களை ஒரு பெண் 20 வருடங்கள் போராடிதான் பார்க்கக்கூட முடிகிறது.
வானம் ஒரு நாள் வசப்படும்.











