The Talkie
Saturday, April 11, 2026
  • Login
  • Register
  • thetalkie
  • ஆளுமைகள்
  • திரைக்கதைகள்
  • உரையாடல்
  • கட்டுரைகள்
    • இந்தியத் திரைப்படங்கள்
    • உலகத் திரைப்படங்கள்
    • தமிழ்த் திரைப்படங்கள்
    • ஓடிடி திரை
  • தொடர்கள்
    • ட்ரெண்டு கொட்டாய்
    • திரை புத்தகம்
    • ஸ்டார்ட் கேமரா
    • I CALL THE SHOTS
    • குரு தத் 100
    • டேபிள் டாப்
  • தொடர்பு
No Result
View All Result
The Talkie
  • thetalkie
  • ஆளுமைகள்
  • திரைக்கதைகள்
  • உரையாடல்
  • கட்டுரைகள்
    • இந்தியத் திரைப்படங்கள்
    • உலகத் திரைப்படங்கள்
    • தமிழ்த் திரைப்படங்கள்
    • ஓடிடி திரை
  • தொடர்கள்
    • ட்ரெண்டு கொட்டாய்
    • திரை புத்தகம்
    • ஸ்டார்ட் கேமரா
    • I CALL THE SHOTS
    • குரு தத் 100
    • டேபிள் டாப்
  • தொடர்பு
No Result
View All Result
The Talkie
Subscribe
Home தொடர்கள் குரு தத் 100

குரு தத் 100 – #03

The Talkie by The Talkie
November 14, 2025
in குரு தத் 100, தொடர்கள்
A A
0
guru_datt_03
Share on WhatsappShare on FacebookShare on Twitter

Author Icon பாஸ்கர் சக்தி

ஹைதராபாத் தந்த தேவதைகள்

ஒரு திரைப்படத்தை இயக்குனரும், எழுத்தாளரும் முதலில் அவர்கள் மனதிலும் , விவாதத்திலும்  அதன் பின் காகிதத்திலும் உருவாக்குகின்றனர்.  காகிதத்தில் உருவான பாத்திரங்களை, திரையில் உயிருடன் உலவச் செய்யும் நடிகர், நடிகைகள்தான் ஒரு திரைப்படத்தின் முகமாக மாறுகின்றனர்.

ப்யாஸாவின் கதை குருதத்திடம் இருந்தது. அப்ரார் ஆல்வியும் அவரும் இணைந்து அதனை வடிவத்துக்குக் கொண்டு வந்தனர். கதாநாயகன் பாத்திரம்  மனதில் வந்து விட்டது. கதாநாயகியின் பாத்திரம் முடிவாகி விட்டது. அதற்கான முகங்களை குருதத் தேடத் துவங்கினார்.  

தன் படைப்புகளின் அங்கீகாரத்துக்கான  தாகத்தை  தீர்க்க  வழி தேடி அலையும், சமூகத்தால் புறக்கணிக்கப்படும் கவிஞன் விஜய் யார்? ( ப்யாஸா என்றால் தாகம் ) குலாபின் பாத்திரத்தை திரையில் உயிர்ப்புடன் கொண்டு வருவதற்கான  அந்த முகம் எது?

pyaasa 1

தேடல் துவங்கியது. கதாநாயகனாக குருதத்  நடிப்பது என்று முடிவானது. ஆனால் குருதத் மனதில் தன் நடிப்பு பற்றிய சந்தேகம் இருந்து கொண்டேயிருந்தது. படத்தின் ஷூட்டிங் துவங்கிய பிறகும் கூட. ( அந்தக் கதைக்கு பின்னால் வரலாம்.)

யார் குலாப் என்ற தேடல்கள். சில பரிசீலனைகள்,விவாதங்கள், குழப்பங்கள் போய்க்கொண்டிருக்க,  இடையே ஒரு சம்பவம் நிகழ்ந்தது. அந்த சம்பவம் ஒரு சந்திப்பை நிகழ்த்தியது. அதன் தொடர்ச்சியாக வஹிதா ரஹ்மான் என்கிற நட்சத்திரம் கண்டுபிடிக்கப்பட்டார். குருதத்தின் மாபெரும்  வெற்றியிலும், வீழ்ச்சியிலும் பங்களிக்கப் போகிற  வஹிதா ரஹ்மான்.

வஹிதா ரஹ்மானின் ஊர் நமது செங்கல்பட்டு. அந்த ஊரில்தான் அவர் பிறந்தார். அவரது 13 ஆம்  வயதிலேயே தந்தையை இழந்த குடும்பம் வாழ்வைத் தேடி ஆந்திராவுக்குச் சென்றது. நடனம் கற்ற பேரழகியான வஹிதா ரஹ்மான்,  ஒரு தெலுங்குத் திரைப்படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு நடனமாடும் வாய்ப்பினைப் பெற்றார்.

அந்தப் படத்தின் பெயர் ` ரோஜுலு மாறாயி ‘ அந்தப் பாடல் சூப்பர் ஹிட் ஆனது. தெருவெங்கும் அந்தப் பாடல்கள் ஒலிக்க , ஒரே ஒரு  பாடலுக்கு மட்டும் அந்தப் படத்தில் நடனமாடிய வஹீதா ரஹ்மான் உடனடியாக  ஆந்திரப்பிரதேசத்தில் பிரபலம் ஆகி விட்டார். ( அதன் பின் அலிபாபாவும் நாற்பது திருடர்களும் தமிழ்ப்படத்திலும்  நடனமாடி இருக்கிறார் )

மும்பையில் இருந்த குருதத்திடம்  அடுத்தடுத்த படங்களுக்கான திட்டங்கள் எப்போதும் இருந்தன.  அப்போது தெலுங்கில் சூப்பர் ஹிட் ஆக ஓடிய ` மிஸ்ஸியம்மா’ திரைப்படத்தை ஹிந்தியில் தயாரித்து வெளியிடலாம் என்று அவருக்கு ஒரு யோசனை சொல்லப்பட்டது. அந்தப் படத்தை பார்க்க ஆந்திரா செல்ல முடிவானது. குருதத்,  நண்பரும், ஸ்க்ரிப்ட் ரைட்டருமான அப்ரார் ஆல்வி , குருதத் டீமைச் சேர்ந்த தயாரிப்பு நிர்வாகி குருசாமி மூவரும் காரில் ஹைதராபாத்  வந்தனர்.  ` மிஸ்ஸியம்மாவை ‘ பார்த்து விட்டு ஒரே நாளில் பம்பாய் திரும்புவதாக திட்டம். ஆனால் ,  வந்த இடத்தில் கார் ஒரு எருமைமாட்டின் மீது  மோதி வண்டி சேதமாகி விட்டது.  சரி செய்ய மூன்று நாள் ஆகும் என்று மெக்கானிக் ஷெட்டில் சொல்லி விட, ஹைதராபாத்தில்  மேலும் மூன்று நாட்கள் தங்க வேண்டியதாகி விட்டது.

செகந்திராபாத்தில் உள்ள ஒரு வினியோகஸ்தரை சும்மா போய்  பார்த்து வரலாம் என்று கிளம்பி அங்கே போனார்கள். அவருடன் பேசிக் கொண்டிருக்கையில்  எதிர்ப் பக்கம் ஒரு கார் வந்து நின்றது. அந்தக் காரின் பின்னே பலர் ஓடி வந்தனர்.  காரிலிருந்து இறங்கிய ஒரு  பெண்ணை சூழ்ந்து கொண்டனர். ‘ யார் அது ?” என்று குருதத் கேட்க, அந்த டிஸ்ட்ரிப்யூட்டர் சொன்னார், ”அது வஹிதா ரஹ்மான், அவரு டான்ஸ் ஆடின ஒரு பாட்டு சூப்பர் ஹிட், அந்தப் படம் நூறு நாளைக்கு மேல ஓடிட்டு இருக்கு. அதனால இந்தப் பொண்ணு  ரொம்ப ஃபேமஸ் ஆயிடுச்சு. அதான் அந்தக் கூட்டம் “ என்று சொல்ல குருதத் , “அப்படியா?” என்று தலையசைத்தார்.

“ அந்தப் பொண்ணை சந்திக்கிறிங்களா?” என்று டிஸ்ட்ரிப்யூட்டர் வினவ,         “ ஒய் நாட்? சந்திக்கலாமே?” என்றார் குருதத்..  ஏனென்றால் ஹைதராபாத்தில் வேலை எதுவுமின்றி , நேரம் நிறைய இருந்தது. அவர் உடனே ஆள் அனுப்பி வஹிதா ரஹ்மானை அழைக்க, முதல் முதலாக குருதத் , வஹிதா சந்திப்பு நிகழ்ந்தது. பின்னாளில் வரப்போகும் வெற்றிகளையும் , புகழையும், புயலையும் முன்னறியாத  ஒரு சாதாரண சந்திப்பாகத்தான் அது இருந்தது.  பரஸ்பர அறிமுகம் , ஒன்றிரண்டு வார்த்தைப் பரிமாற்றத்துடன் அந்த சந்திப்பு முடிந்து போனது. வஹிதா போய் விட்டார்.

“ இந்தப் பொண்ணு ஆடின அந்த பாடலை பார்க்கிறீர்களா?” என்று டிஸ்ட்ரிப்யூட்டர் கேட்க, `ஓ எஸ்’ என்றார் குருதத்.  ஏற்கனவே சொன்ன அதே காரணம்தான், ஹைதராபாத்தில் வேலை எதுவுமின்றி , நேரம் நிறைய இருந்தது.

அந்த ரீல் வரவழைக்கப்பட்டு திரையிடப்பட்டது, வசீகரமான நடனம். அழகான முகம்,  அதை விட அழகான முகபாவங்கள். அதைப். பார்த்து முடித்ததும்,” நல்ல ஃபோட்டோஜெனிக்கான முகம் “ என்ற முடிவுக்கு குருதத்தும் நண்பர்களும் வந்தார்கள்.

மிஸ்ஸியம்மா திரைப்படம்  குருதத்துக்கு பிடிக்கவில்லை. இந்தப் படத்தை தான் தயாரிக்க விருப்பமில்லை என்று சொல்லி விட்டார், நான்கு நாட்கள் விரயம் என்ற முடிவுடன் மும்பை திரும்பினார்கள்.  ஆனால் உண்மை அதுவல்ல.  இது நிகழ்ந்திராவிட்டால் வஹிதா ரஹ்மான் குருதத்துக்கு கிடைத்து இருக்க மாட்டார்.

மும்பை திரும்பியதும் குருதத் ப்யாஸா வை மட்டும் துவங்கவில்லை. அவர் மனதில் ப்யாஸா ஓடிக்கொண்டே இருந்தாலும் ஒரு கமர்ஷியல் மசாலா ஹிட் வேண்டும் என்பதற்காக சிஐடி எனும் படத்தையும்  ஒருபுறம் தயாரித்தார். அதில் வரும் ஒரு கவர்ச்சியான பெண் பாத்திரத்துக்கான நடிகையை யோசிக்கையில் ஹைதராபாத்தில் பார்த்த அந்தப் பெண்ணின் அழகிய முகம் குருதத்துக்கு நினைவுக்கு வர வஹிதா அழைக்கப்பட்டார். அப்போதிருந்த நடைமுறைப்படி  அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு  குருதத்தின் படங்களில் நடிக்க வஹிதா ரஹ்மான் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

மறுபுறம் ப்யாஸா தயாரானது. ஷூட்டிங் துவங்கியது.

சில ரீல்கள் ஷூட் செய்யப்பட்டு விட்டன.  விஜய் பாத்திரத்தில் குருதத் நடிக்க, அது வரையிலும் டான்ஸ் மட்டுமே நன்றாக ஆடிக்கொண்டிருந்த வஹிதா ரஹ்மானை மெல்ல குலாப் பாத்திரத்துக்கு பொருத்தமாக மோல்டு செய்து , அவரும் அதில் பொருந்தி நடிக்க ஆரம்பிக்கையில் குருதத்தின் மனதில் அவருக்கே உரித்தான ஊசலாட்டம் துவங்கியது. 

அவருக்கு எப்போதுமே தன் நடிப்புத்திறன் குறித்த சந்தேகங்கள் இருந்தன. தான் ஒன்றும் சிறந்த நடிகன் அல்ல என்று அவரே தன்னை நடிப்பில் குறைத்து மதிப்பிட்டுக் கொண்டார். பலவிதமான நுட்பங்களும், பரிமாணங்களும், முதிர்ச்சியும் தேவைப்படும் கவிஞன் விஜயாக தான் நடிப்பதை விட, தன்னை விடச் சிறந்த வேறொரு    நடிகர் நடித்தால் சிறப்பாக இருக்கும் என்று தோன்றியது. தன் படைப்பு நன்றாக வர வேண்டும் என்பதற்காக பணத்தையோ, பிற எதையுமோ பொருட்படுத்தாத ஒரு மனம் குருதத்துக்கு இருந்தது. சில ரீல்கள் எடுத்து விட்டதைப் பற்றியோ, செலவைப் பற்றியோ  அலட்டிக் கொள்ளாமல் எடுத்ததைத் தூக்கிப் போட்டு விட்டு புதிதாக ஆரம்பிக்கலாம் என்ற முடிவுக்கு வந்தார். ( அது எல்லாமே அவர் பணம் என்பது நினைவில் கொள்ள வேண்டியது ) அவர் மனதில் அந்தப் பாத்திரத்துக்கு பொருத்தமாகத் தோன்றியவர்  அப்போது புகழுடன் வெற்றிகரமாகத் திகழ்ந்த  திலீப் குமார்.

திலீப்குமாருடன் குருதத்துக்கு நிகழ்ந்த அனுபவம்,சினிமாவில் பலருக்கும் நிகழ்வது. ஹீரோ  , இயக்குனருக்கு இடையிலான எலி பூனை விளையாட்டு. தன் படைப்பு குறித்து இரவும் பகலுமாக யோசிக்கும் இயக்குனரை சில  நடிகர்கள் கையாள்கிற எரிச்சலூட்டும் விதம்.  அது அன்றிலிருந்தே இருக்கிறது.

திலீப்குமாருக்கு கதை சொல்லப்பட்டது. கதையைக் கேட்ட பின் அவர் முக்கியமான  சிலதை மாற்ற ஆலோசனை சொன்னார். ப்யாஸாவில் இரு பெண் பாத்திரங்கள். ஒன்று விஜயின் கல்லூரிக்காதலி  மீனா ( மாலா சின்ஹா ) விலைமகள் குலாப் ( வஹீதா ரஹ்மான் )

“ இந்தக் கதையில் குலாபோட கேரக்டர் முக்கியமானதாவும், மீனா கேரக்டர் முக்கியத்துவம் குறைஞ்சும் இருக்கு அந்த விலைமகள் கேரக்டர் ஹீரோயினா இருக்கறது எனக்கு இஷ்டம் இல்லை. மீனாதான் ஹீரோயினா இருக்கணும். நீங்க ஒண்ணு பண்ணுங்க. மீனா கேரக்டருக்கு முக்கியத்துவத்தை கூட்டுங்க. அந்த கேரக்டருக்கு மாலா சின்ஹாவை மாத்திட்டு , மதுபாலாவை ஃபிக்ஸ் பண்ணுங்க. ( மதுபாலா அப்போது புகழ் பெற்றிருந்தார் ) குலாப் கேரக்டரை கொஞ்சம் சுருதியைக் குறைச்சிடுங்க “ என்று சொல்ல பொறுமையுடன் குருதத்தும், அப்ரார் ஆல்வியும் அதனைக் கேட்டனர்.

சினிமாவில் ஹீரோக்களிடம் படைப்பாளிகள்,  இப்படியான தருணங்களில் தங்கள்  மனதில் பொங்கும் உணர்வையோ,  கோபத்தையோ அப்படியே சொல்லி விட  முடியாது. சொன்னால் எல்லாமே நின்று விடும்.. எனவே அதற்கு நாகரிகமான வார்த்தைப் பூச்சுகள் வேண்டும். குருதத் விளைவுகளை யோசித்து அமைதி காக்க, அவர் மனதில் இருப்பதை அப்ரார் பேச வேண்டி இருந்தது. திலீப்குமார் சொல்லும் மாற்றங்களைச்  செய்வதில் உள்ள பிரச்சினைகளை அவர் விளக்கினார்.

ஆனால், அப்ரார்  விளக்கங்களை கொடுத்த பின்னரும் திலீப் குமார் பிடிவாதமாகவே பேசினார். அவரும் தேர்ந்தெடுத்த வாரத்தைகளில்தான் பேசினார்.

“நீங்க ஒரு அருமையான ரைட்டர், நீங்க மனசு வைச்சா நான் சொன்ன மாற்றங்களை உறுத்தாம செஞ்சுட முடியும் இல்லையா? “  – திலீப் குமார்.

 அப்ரார் நிதானமாக சொன்னார்  ‘ பண்ணலாம் சார். தாராளமாப்  பண்ணலாம். ஆனா அப்படி செஞ்சா அது வேற படமால்ல ஆயிடும்?. ஆனா  இப்ப நாம ப்யாஸான்னு ஒரு படத்தை இல்லை எடுக்கறோம்?” என்றார் சிரிக்காமல்.

இதற்கு மேல் திலீப் குமாரால் விவாதிக்க முடியவில்லை. மனம் ஒப்புக்கொள்ளாவிட்டாலும், சரி என்று சம்மதித்து விட்டார்.

அலுப்படைய வைத்த இந்த கதை குறித்த விவாதங்கள் முடிய நள்ளிரவு. களைத்துப் போன குருதத்தும், அப்ராரும் அடுத்த நாள் சம்பளம் பேசப் போனார்கள். திலீப் குமார் கேட்டது அதிக சம்பளம்…. ஆனால் படத்தின் பட்ஜெட் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டு விட்டதை விளக்கி, குருதத் சொன்ன சம்பளத்தை திலீப்குமார் ஏற்கவில்லை. அவர் இப்படிச் சொன்னார்.

“  இந்தப் படத்தில அப்போ திலீப்குமார் இல்லை. ஆனா இப்ப நான் உள்ள வந்திருக்கேன். ஸோ இது பெரிய படம் .  வேற டிஸ்ட்ரிப்யூட்டர்ஸை நான் ஃபிக்ஸ் பண்றேன்.. அவங்க நீங்க கேக்கற பணத்தை உடனே கொடுப்பாங்க”

“இல்லை. நான் ஏற்கனவே டிஸ்ட்ரிப்யூட்டர்ஸை எல்லாம் முடிவு செஞ்சு பேசிட்டேன். அவங்க என் எல்லாப் படத்திலேயும் கூட இருக்கறவங்க. அவங்களை நான் மாத்த முடியாது “

“ சரி, அவங்களை மாத்த வேணாம். ஆனா நான் ஹீரோவா இருக்கேன்னு  சொல்லி நீங்க  அவங்க கிட்ட அதிக தொகை டிமாண்ட் பண்ணுங்க. அவங்க கண்டிப்பா நீங்க கேக்கறதைக் குடுப்பாங்க. நோ ப்ராப்ளம்.”

குருதத் இதற்கு தீர்மானமான குரலில் சொன்ன பதிலை பொன் எழுத்துகளால் அல்ல, அதற்கும் மேம்பட்ட அறத்தின் வார்த்தைகளாவே பொறிக்க வேண்டும்.

குருதத் சொன்னார், “ நான் ஏற்கனவே டிஸ்டிரிப்யூட்டர்ஸ் கிட்ட  பேசிட்டேன்.  அவங்க என் மேல இருக்கற நம்பிக்கையில நான் சொன்னதை எல்லாம் ஏத்துக்கிட்டாங்க.  இப்ப நீங்க இதுல உள்ள வந்துட்டதால நான் அவங்ககிட்ட அதிகப் பணம் கேக்கறது  அறம் கிடையாது..   உங்க கிட்ட நான் ஒண்ணும் என் படத்தை விக்கிறதுக்காக வரலை. ஒரு டைரக்டரா வந்திருக்கேன். உங்களை நடிக்க வைக்கிறதால என் படம் இன்னும் நல்ல படமா ஆகும்,நீங்க அதை மெருகேத்துவீங்கன்னு நம்பற டைரக்டரா வந்திருக்கேன்.”

திலீப்குமாரால் இந்த முறையும் இதற்கு மேல் பேச முடியாமல் போய் விட்டது. ஒப்புக்கொண்டார்.

அதன்பின்னர் சில தினங்கள் கழித்து ஒரு நாள் ஷூட்டிங் தீர்மானிக்கப்பட்டது. திலீப்குமார் ஹீரோவாக நடிக்கும் ப்யாஸாவின் முதல் நாள் ஷூட்டிங்க்.  அன்று காலை ஒட்டு மொத்த யூனிட்டும், குருதத், மூர்த்தி, அப்ரார், குருசாமி , வஹீதா ரஹ்மான் எல்லோரும் காலையிலேயே வந்து திலீப் குமாருக்காக காத்திருந்தனர். அவர் வரவில்லை. மேலும் காத்திருந்தனர். ஓரிரு மணி நேரமாகியும் வரவில்லை. அந்தக் காலகட்டத்தில் எல்லா நடிகர்களும் சரியான நேரத்துக்கு வந்து விடுவதே வாடிக்கை என்பதால் இது வித்தியாசமாகப் பட்டது. எனவே  அதன் பின் அவரை குருசாமியும், அப்ராரும் போய் தேடினார்கள். வீட்டுக்கு ஃபோன் அடித்தார்கள்.  அவர் எங்கும் கிடைக்கவில்லை. எங்கே இருக்கிறார் என்றும் தெரியவில்லை..  ஆம்  அவர் ஹீரோ !!! .

மாலை மணி நாலு ஆனது. அதுவரை உள்ளுக்குள் கொந்தளித்தும் , புகை பிடித்தும் அலைபாய்ந்து கொண்டிருந்த குருதத் சேரிலிருந்து  எழுந்தார். அப்ரார் அவரிடம் போய் சொன்னார்.

“போதும். நீங்க மேக் அப் போடுங்க”

 குருதத் தீர்மானமான குரலில் அறிவித்தார்.

“ ஓகே. இட்ஸ் ஓவர். லெட்ஸ் ஸ்டார்ட் தி ஷூட்டிங்க் . ஐ வில் டூ த ஹீரோ”

குருதத் திட்டவட்டமாக ப்யாஸாவின் நாயகன் ஆனார். கவிஞன் விஜய் பாத்திரத்தை அவர் நடித்ததால் மட்டுமே அதற்கு சாகாவரம் பெற்ற தன்மை கிடைத்தது. திலீப்குமார் நடித்திருந்தால் அது வேறு மாதிரி திரிந்திருக்கும் என்று இப்போதும் திரைப்பட வல்லுனர்கள் கருதுகிறார்கள்.

ப்யாஸா திரைப்படத்தின் பாத்திரங்கள் மிக நுட்பமாக செதுக்கப்பட்டன. அந்தக் கதையுடனேயே வாழ்ந்தார்கள் குருதத்தும், அப்ரார் ஆல்வியும். ஒரு ரைட்டரின் பங்கு எவ்வளவு முக்கியமானது என்பதை அவர்கள் பற்றியும், அவர்கள் படைப்பைப் பற்றியும் அறிகையில் நம்மால் உணர முடிகிறது. எழுதுபவர்களின் லௌகீகக் கவலைகளை மட்டும் ஏற்றுக் கொண்டு                  ( சம்பளம் பற்றித்தான் சொல்கிறேன்) அவர்களை ஒரு திரைப்பயணத்தில் முழுமையாக இணைத்துக் கொண்டால் படைப்பு செழுமையடையும் என்பது ஒரு உண்மை.

ப்யாஸா ( தாகம் ) வின் பாத்திரங்கள் யாவுமே தாகம் கொண்டுதான் அலைகின்றன. கவிஞன் விஜய் கலைக்கான அங்கீகாரத்தையும், தூய்மையான அன்பையும் , மனிதர்களை அவர்களுக்கான இடத்தை அளித்து , அங்கீகரிக்கும் ஒரு சமூகத்துக்காகவும் ஏங்குகிறான்.

விலைமகளான குலாப் பணத்துக்காக தன் உடலை பண்டமாக ஆக்கிக் கொண்டாலும், அவள் மனம் ஒரு உன்னதமான இன்னொரு ஆத்மாவின் துணைக்காக ஏங்குகிறது . கவிஞன் விஜய்யிடம் அந்த ஆத்மாவைக் கண்டடைகிறது. ஆனால் சமூகம் அவளுக்குக் கொடுத்திருக்கிற விலைமகள் அடையாளம் தருகிற மனத்தடையை மீற இயலாமல் தாகத்துடன் ஏங்கிக் கொண்டிருக்கிறாள்.

 மற்றொரு பாத்திரமான மீனா ( குருதத்தின் கல்லூரிக்காதலி ) காதலா?, உத்தரவாதமான வசதிகளுடன் கூடிய வாழ்க்கையா? என்று வருகையில் காதலைப் புறக்கணித்து மற்றதைத் தேர்ந்தெடுக்கிறாள். ஆனால் வசதி வாய்ப்புகளுடன் கூடிய வாழ்க்கை ஒன்றும் அவளை மகிழ்ச்சியாக வைத்திருக்கவில்லை.  வசதியும், வாய்ப்பும் புறக்காரணிகளே அல்லவா? மனித மனம் அவையெல்லாம் கிடைத்த பின்னும் தன்னை நேசிக்கிற, தான் நேசிக்கப் பொருத்தமான ஒரு ஜீவனை தேடிக்கொண்டேதானே இருக்கிறது?.  அவள் இழந்து விட்ட காதல் உள்ளத்தில் ஒரு முள்ளாய் இருந்து உறுத்திக் கொண்டே இருக்கிறது. அவளும் அன்புக்கான தாகத்துடன்தான் அலைகிறாள்.

இந்த அடிநாதமான பாத்திரங்களை உள்ளுக்குள் உணர்ந்து தோய்ந்து, தனது சக்தியையும் , ஆற்றலையும் முழுமையாகக் கொடுத்து  ப்யாஸாவை உருவாக்கியதால்தான் குருதத் எனும் கலைஞனின் பேர் சொல்லும் படைப்பாக ப்யாஸா  காலத்தை வென்று இன்றும் நிற்கிறது .

அன்றைய நகரங்களில் விபசார விடுதிகள் வசதி படைத்தவர்கள், சகஜமாக  போய் வரும் இடமாக இருந்திருக்கிறது. சுதந்திரமடைந்து  பழைய மதிப்பீடுகளிலிருந்து நாடு மெல்ல தன்னை விடுவித்துக் கொண்டு, அடுத்த கட்டத்துக்கு நகரும் மாற்றத்துக்கான காலகட்டம். ப்யாஸா வில் அந்த நாட்களில் இருந்த விபசார விடுதிகளின் மனிதத்தன்மையற்ற அம்சம் குறித்த ஒரு காட்சியும் , அதனைத் தொடர்ந்து  ஒரு பாடலும் வருகின்றன.  ஆள்பவர்களின் மனசாட்சியை கேள்வி கேட்கும் வரிகளைக் கொண்ட பாடல் அது…

விபசார விடுதி  படத்தில் வர வேண்டும். ஆனால் குருதத் அப்படி ஒரு இடத்துக்குப் போனதில்லை. பார்த்ததில்லை.  அவர் அப்படியான இடங்களுக்குச் செல்கிற  ஒரு மனிதர் இல்லை.  ஆனால் அவரும் ஒரு முறை  அப்படி ஒரு இடத்துக்குப் போனார். மேலே குறிப்பிட்ட காட்சி அந்த அனுபவத்தை குருதத்தும் , அப்ராரும்  பெற்ற பிறகுதான் முழுமையானது.

மிஸ்ஸியம்மா பார்க்கப்போய் வஹிதா ரஹ்மானை சந்தித்த அதே  பயணத்தில்தான் ஹைதராபாத்தில் இருந்த ஒரு விபச்சார விடுதிக்கும் இவர்கள் போனார்கள். அந்த அனுபவம் வித்தியாசமானது .

ஹைதராபாத்தில் இருந்த ஒரு பிரமுகர் . கையில் வைரமோதிரங்கள் மின்னும், ஒரு உல்லாசப் பிரியர். குருதத்துக்கு ஒரு விஐபி உபசாரத்தை அளிக்க விரும்பினார். அவர் அதற்குத் தேர்ந்த இடம்தான் `கோத்தா ‘ என்று சொல்லப்படும் விபசார விடுதி. அவர் இதை உற்சாகமாகச் சொல்லி அழைக்க, குருதத்தோ மிகவும் தயங்கினார். அவர் அப்படிப்பட்ட ஆள் இல்லை என்பது ஒரு பக்கம் இருக்க, அப்போதே அவர் சில படங்களில் ஹீரோவாக நடித்திருந்த , முகம் தெரிந்த பிரபலம்.   எனவே மிகவும் தயங்கிய அவரை வற்புறுத்தி, அந்த உல்லாசி கூட்டிப்போய் விட்டார்.

விடுதிக்குச் சென்ற  உல்லாசி , விடுதித் தலைவியின் காதில் ஏதோ சொன்னார். பம்பாயிலிருந்து வந்த பிரமுகர்கள் என்று அவர் சொல்லியிருக்கக் கூடும்.  அவர் அந்தப் பெண்ணிடம் சீரியஸாக பேரம் பேச குருதத்துக்கு ஒரு மாதிரி ஆகி விட்டது. வழக்கம் போல அப்ரார் ஆல்விதான் குருதத்தின் குரலாகப் பேசினார்…’  நாம ஏதாவது பாட்டு பாடச் சொல்லி கேக்கலாம்’ என்று அவர் சொல்ல, அதற்கு ஏற்பாடானது .  அமர்ந்த வாக்கில் இரண்டு பெண்கள் பாடத் துவங்கினர். ரெண்டு பாடல்களுக்குப் பின் அவர்கள் பாடிய ஒரு பாடல் குருதத் இயக்கி நடித்த ` ஆர் பார்’ படத்தில் வரும் “ கபி ஆர் கபி பார் “ எனும் பாடல், இவர்களுக்கு `பக்’ என்றது. தாங்கள் யார் என்ற ரகசியம் இங்கே  வெட்ட வெளிச்சமாகி விட்டது. குருதத் அதிருப்தி அடைந்தார்.

கூடுதல் போனஸாக இப்போது ஒருவன் ஃபுல் போதையில் உள்ளே நுழைந்தான். அவன் அங்கே அடிக்கடி வரும் வசதியான வாடிக்கையாளன். கொஞ்சம் முரடன் போல.  எனவே அவனை வெளியே அனுப்ப அங்கிருந்த தலைவியால் முடியவில்லை. அவன் காதில் சில பிரமுகர்கள் வந்திருக்கிறார்கள் என்று வேறு  சொல்லப் போக, அவன் அதிகமாக பந்தா காட்டத் துவங்கினான். குருதத்தை ஓரக்கண்ணால் பார்த்தவாறே, ஒவ்வொரு பாடலுக்கும் பத்து ரூபாய், இருபது ரூபாய் என்று எடுத்து விசிறி அடித்தான்.. இவர்களின் எரிச்சல் அதிகமானது. அப்ரார் குருதத்தின் காதில் முணுமுணுத்தார், ‘ இவன் நம்மை சீண்டுறான். நீங்களும் கொஞ்சம் பணத்தை எடுத்து போடுங்க” என்று அப்ரார் சொன்னதை, குருதத் காதிலேயே வாங்கவில்லை. இறுக்கமாக இருந்தார்.

அடுத்து அவன்  ஒரு கேவலமான காரியத்தைச் செய்தான். அமர்ந்தவாறு பாடிக்கொண்டிருந்த பெண்ணை எழுந்து நின்று ஆடச்சொல்லி வற்புறுத்தினான். அந்தப் பெண் தயங்க, பணத்தை கொடுத்து , ஆடியே தீர வேண்டும் என்று சொல்ல, அந்தப் பெண் தயங்கியபடியே எழுந்து நின்றாள். அதுவரை அவள் அமர்ந்திருந்ததால் அவளை சரியாகப் பார்க்க இயலவில்லை. எழுந்து நின்றதும்தான் தெரிந்தது.

அவள் ஏழுமாத  கர்ப்பிணி, வயிறு உப்பியிருந்தது. அவளை ஆடச்சொல்லி அவன் கூச்சலிட , அவள் ஆட எத்தனிக்க, அதற்கு மேல் குருதத்தால் தாள இயலவில்லை… கோபத்துடன் எழுந்தார். சுருட்டி வைக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளை – மிக அதிகப் பணம் – அப்படியே அவர்கள் முன்னால் வைத்து விட்டு வேகமாக நண்பர்களுடன் வெளியேறினார்.

வெளியே வந்தவரின் படபடப்பு  அடங்கவில்லை. கோபத்துடனும் , பதட்டத்துடனும்  பேசினார், ‘ என்ன மனிதர்கள் இவங்க? ஒரு கர்ப்பிணியை ஆடச் சொல்லுமளவுக்கு  வக்கிரமான  மனிதர்கள் உலகில் இருக்க முடியுமா? இது என்ன மாதிரியான சமூகம் ?” என்று கொந்தளித்தார். புலம்பினார்.

அவரையே கவனித்துக் கொண்டிருந்த எழுத்தாளர் அப்ரார்  மனதில் இந்த உணர்வுகளைத் தாண்டி வேறு யோசனை ஓடிக்கொண்டிருந்தது.  

சில மணி நேரங்கள் கழிந்து எல்லாம் சமநிலைக்கு வந்ததும், அப்ரார் குருதத்திடம் சொன்னார், “ ப்யாஸாவில் வரும் விடுதிக் காட்சி எப்படி இருக்க வேண்டும் என்று சிந்தித்துக் கொண்டிருந்தோம் இல்லையா?. இதுதான் அந்தக் காட்சி “ என்று அவர் சொல்ல, குருதத் தலையசைத்து ஆமோதித்தார்.

( ஆனால், ப்யாஸா வில் இந்த சம்பவம் சிறிது மாற்றப்பட்டு, கர்ப்பிணி என்பதற்கு பதிலாக, நோயுற்றிருக்கும் ஒரு  குழந்தையின், பரிதாபத்துக்குரிய தாயாக அந்தப் பெண் சித்தரிக்கப்பட்டிருப்பாள் )

  ப்யாஸாவில் வரும் அந்த புகழ் பெற்ற காட்சியும் , பாடலும் சரியான விதத்தில் அமைந்ததற்கு அந்த ஹைதராபாத்தின் விபசார விடுதிக்கும் ஒரு பங்கிருக்கிறது.

அது மட்டுமல்ல ப்யாஸாவின் கதா நாயகியும் ஒரு விபசார விடுதியில்தான் உருவானாள்.  சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட கவிஞனைப் பற்றிய கதையில் , சமூகத்தால் வஞ்சிக்கப்பட்ட,  இழிவு படுத்தப்பட்ட பெண்கள் உள்ளே வந்தார்கள்.. புறக்கணிக்கப்படும் , அன்புக்காக, சமூகத்தில் தங்களுக்கான மரியாதைக்காக  ஏங்கும் , தாகம் கொண்ட கதை மாந்தர்களாக அவர்கள் மாறினார்கள்.

ப்யாஸா சூடு பிடித்தது..  இப்படியான அனுபவங்கள், அல்லாட்டங்கள், தேடல்கள் மற்றும் அர்ப்பணிப்புடன் ப்யாஸா  உருவாகிக் கொண்டிருந்தது.  குருதத்தும், அப்ராரும், மூர்த்தியும் அர்ப்பணிப்போடு இரவு பகல் பாராமல் வேலை செய்து கொண்டிருந்தார்கள்.

வேலையில் அவ்வளவு சீக்கிரம் திருப்தி அடையாத குருதத் பல காட்சிகளை திரும்பத் திரும்ப எடுத்தார். சில சமயங்களில் ரீ டேக், ரீ டேக் என்று நூறு டேக்குகள் வரை கூட சில காட்சிகள் சென்றன.  சில நாட்களில் கைவசம் இருந்த ஃபில்ம் ரோல் ஸ்டாக்குகள் தீர்ந்து போனதால் அன்றைய படப்பிடிப்பு பேக் அப் ஆகி, அடுத்த நாள் அந்த  டேக்குகள் தொடர்ந்த கதை எல்லாம் நடந்தது.

இதற்கெல்லாம் காரணம், இது மிகச்சிறப்பான படமாக வரவேண்டும் என்கிற குருதத்தின் கனவு, அதற்கான ஈடுபாடு. உச்சபட்ச அர்ப்பணிப்பு…

இத்தனை அர்ப்பணிப்பும், வேகமும் கொண்டு ஒரு காவியத்தை உருவாக்கிக் கொண்டிருந்த அதே குருதத்..

அந்தப் படம் கிட்டத்தட்ட முடியப் போகும்  தறுவாயில் யாருமே எதிர்பார்க்காத , எல்லோரையும் நொறுங்கச் செய்யும் ஒரு காரியத்தை செய்தார்.

யாரும் கற்பனையிலும் நினைத்திராத அதிர்ச்சி அது. எல்லோரையும் உலுக்கி விட்ட கொடூரம் அது…ஆம்… குருதத் முதல்முறையாக தற்கொலை செய்து கொள்ள முயன்றார். ப்யாஸாவின் உருவாக்கத்தின் போதுதான்  அது நிகழ்ந்தது.

  அவரது முதல் தற்கொலை முயற்சி,

                                                                                       ( தொடரும் )

Author Image

பாஸ்கர் சக்தி

திரைப்பட இயக்குநர். எழுத்தாளர்.

About The Author

The Talkie

The Talkie

See author's posts

Next Post
tokiyo

தனிமை வெல்லும் கதை

Please login to join discussion

Archives

  • Trending
  • Comments
  • Latest
Thug_Life_

Thug Life – ஒரு பார்வை

June 6, 2025
AMADEUS திரைக்கதை

AMADEUS திரைக்கதை

March 15, 2025
start camera

ஸ்டார்ட் கேமரா! வின்சென்ட் மாஸ்டர் – 01

March 19, 2025
Irunda-Pakkam

தொழில்நுட்பத்தின் இருண்ட பக்கங்கள்: திரைப்படங்கள் சொல்லும் உண்மை.

March 16, 2025
Thug_Life_

Thug Life – ஒரு பார்வை

11
rasigamagajanangale

ரசிக மகா ஜனங்களே

7
gurudutt-02

குருதத்தின் ப்யாஸா- உயிர்த்தெழுந்த தேவதை        

5
start camera

ஸ்டார்ட் கேமரா! வின்சென்ட் மாஸ்டர் – 01

4
table top-4-5

டேபிள் டாப் 04 & 05

January 24, 2026
bella darr

பேலா டார் – காட்சியை அனுமதித்தவர்

January 24, 2026
trend-kottaiye-11

ட்ரெண்டு கொட்டாய் 11 -நான் (திரை) காவிய நாயகன்

January 24, 2026
table top-3

டேபிள் டாப் 03

January 24, 2026
The Talkie

சினிமா அற்புதமான ஊடகம். இதனை அறிந்து கொள்ளவும், ரசிக்கவும் உருவாக்கப்பட்டிருக்கிற இணைய இதழ் இது. மேதைகளின் நேர்காணல்கள், திரைக்கதைகள், வெவ்வேறு மொழித் திரைப்படங்கள், ஆளுமைகள், திரைப்படப் புத்தகங்கள் , சினிமா ரசனை என சினிமா உலகத்தோடு இணைந்திட எங்களுடன் இணைந்திடுங்கள்.

Categories

  • I CALL THE SHOTS
  • ஆளுமைகள்
  • இந்தியத் திரைப்படங்கள்
  • உரையாடல்
  • உலகத் திரைப்படங்கள்
  • ஓடிடி திரை
  • கட்டுரைகள்
  • குரு தத் 100
  • டேபிள் டாப்
  • ட்ரெண்டு கொட்டாய்
  • தமிழ்த் திரைப்படங்கள்
  • திரை புத்தகம்
  • திரைக்கதைகள்
  • தொடர்கள்
  • ஸ்டார்ட் கேமரா

Site Navigation

  • About Us
  • Terms and Conditions
  • Privacy Policy
  • Returns and Cancellation
  • Shipping Policy
  • FAQ
table top-4-5

டேபிள் டாப் 04 & 05

January 24, 2026
bella darr

பேலா டார் – காட்சியை அனுமதித்தவர்

January 24, 2026
trend-kottaiye-11

ட்ரெண்டு கொட்டாய் 11 -நான் (திரை) காவிய நாயகன்

January 24, 2026

© 2026 Thetalkie - All rights reserved

Welcome Back!

Sign In with Google
OR

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Sign Up with Google
OR

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • thetalkie
  • ஆளுமைகள்
  • திரைக்கதைகள்
  • உரையாடல்
  • கட்டுரைகள்
    • இந்தியத் திரைப்படங்கள்
    • உலகத் திரைப்படங்கள்
    • தமிழ்த் திரைப்படங்கள்
    • ஓடிடி திரை
  • தொடர்கள்
    • ட்ரெண்டு கொட்டாய்
    • திரை புத்தகம்
    • ஸ்டார்ட் கேமரா
    • I CALL THE SHOTS
    • குரு தத் 100
    • டேபிள் டாப்
  • தொடர்பு
  • Login
  • Sign Up
  • Cart

© 2026 Thetalkie - All rights reserved

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?