ராணி கார்த்திக்
“சினிமா எடுக்க உனக்கு தேவை ஒரு கேமரா. முடிந்தால் அதை திருடிக்கொள்”
எனக்கு பிடித்த துறை மேதை Werner Herzog இன் பிரபலமான மேற்கோள் இது. சினிமா மீதான ஒரு தீவிரத்திற்காக இது சொல்லப்பட்டிருந்தாலும், herzog காலத்தில் கேமரா என்பது தற்போது இருப்பதைப் போல் ஜனநாயகமாக்கப்படவில்லை. ஆனால் கருப்பு வெள்ளை காலத்திய இயக்குனர்கள் தொடங்கி பலரும் கேமரா என்பது எளிதில் பயன்படுத்தக்கூடிய கருவியாக, அனைவருக்கும் கிடைக்கக்கூடிய ஒரு கருவியாக இருக்க வேண்டும் என்ற கனவை வெளிப்படுத்தியே வந்தனர்.
அந்த கனவுதான் தற்போது நம் கைகளில் நிஜமாகியிருக்கிறது. இயக்குனர், ஒளிப்பதிவாளர் கே. வி. ஆனந்த் சொன்னதை போல் இன்று செல்போன் வைத்திருக்கும் அனைவருமே ஒளிப்பதிவாளர் தான். ஆனால் ஏன் தமிழ்ச் சூழலில் ஸ்மார்ட்போனை கொண்டு முழு நீள திரைப்படங்கள் உருவாகவில்லை என்பது ஒரு மிகப்பெரும் கேள்வி? ( இயக்குனர் சந்தோஷ் நம்பிராஜன் இதை முயன்றிருக்கிறார் )
தமிழ் சுயாதீன திரைப்பட சூழலில், தோழர் நிழல் திருநாவுக்கரசின் பங்களிப்பு என்பது மிகவும் மெச்சத்தக்கது. இதுவரை 72 ஒரு வார பயிற்சி பட்டறைகளை நடத்தி 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு திரைப்படக் கல்வியை அவர் தலைமையிலான குழு அளித்திருக்கிறது.
இந்த பயிற்சி பட்டறைகளின் வாயிலாகவும் தனது நிழல் பத்திரிகை மற்றும் புத்தகங்கள் மூலமாகவும் பல சுயாதீன திரைப்படக் கலைஞர்களுக்கான வெளியை திறந்து விட்டிருக்கும் தோழர் திருநாவுக்கரசு தான் ‘எல்லோருக்கும் சினிமா’ என்ற இந்த நூலின் ஆசிரியர்.
“விதிமுறைகளை தகர்க்க வேண்டும் என்றால், முதலில் விதிமுறைகள் என்ன என்பது குறித்து தெரிந்து கொள்ள வேண்டும்” என ஒரு மேற்கோள் உள்ளது.
அந்த வகையில் எடுத்த எடுப்பிலேயே ஸ்மார்ட் போன் பயன்படுத்தி திரைப்படம் எடுக்கும் ஒரு உடனடி வழிமுறையாக இந்த புத்தகத்தை தொடங்காமல், சினிமா கொஞ்சம் கொஞ்சமாக தொழில்நுட்ப வளர்ச்சியின் வாயிலாக எப்படி ஜனநாயகமயமாக்கப்பட்டது என்று என்ற வரலாற்றில் இருந்து இந்த நூலை தொடங்குகிறார்.
நூலில் குறிப்பிடப்படுவதைப் போல, “திரைப்படம் தோன்றி 130 ஆண்டுகளில் இதுவரை மக்கள் தங்கள் சொந்த விருப்பங்களின் அடிப்படையில் திரைப்படம் எடுப்பதற்கு “அதிகாரம்” விட்டுத் தரவில்லை.
அதிகார வர்க்கம் கேமரா, ஸ்டூடியோ போன்றவற்றை தங்களுக்கானதாகவே கருதி வந்தது. அதை உடைத்துக்கொண்டு டிஜிட்டல் மற்றும் செல்போன் வந்த பிறகு, “எல்லோருக்குமான சினிமா” பிறந்தது. மக்களின் கையில் கேமரா வந்தவுடன், மக்கள் தங்கள் துயரங்களை இதன் மூலம் பதிவு செய்ய ஆரம்பித்தனர்”
“ஸ்மார்ட் போன், iphone அழகியலை வெளிக்கொணர்ந்த படங்கள்” என்ற அத்யாயத்தில் கிட்டத்தட்ட 40 செல்போன் மூலம் எடுக்கப்பட்ட படங்களை பட்டியலிடுகிறார்.
இந்த 40 படங்களின் கதைகள் மட்டுமின்றி அதன் ஆக்கங்களில் ஏற்பட்ட சிக்கல்கள் அவற்றை சரி செய்ய படக்குழுவினர் செய்த வேலைகள் என விவரிப்பதன் வாயிலாக படிப்பவர்களுக்கு நல்ல படிப்பினையை வழங்குகிறார் தோழர் திருநாவுக்கரசு.
Story board, Stage block, Frame, Scene பிரித்தல், Shot division குறித்த முக்கிய விவரணைகள் கொண்ட இந்த நூலில் ஆவணப் படங்கள் மற்றும் குறும்படங்களின் வகைமைகள் மட்டுமின்றி கண்டிப்பாக பார்த்தே தீர வேண்டிய ஆவண மற்றும் குறும்படங்களின் பட்டியல் உண்டு.
இது தவிர காட்சிகள் கோணங்களில் உள்ள பிரிவுகள், கேமராவை இயக்குவதற்கு முன்பாக தெரிந்து கொள்ள வேண்டியவை, ஒளியின் அடிப்படையான நான்கு குணங்கள், பகல் மற்றும் இரவு நேரத்திற்கு தகுந்தது போல் ஸ்மார்ட் போன் கேமராவை எவ்வாறு பயன்படுத்துவது என ஏராளமான தகவல்கள் இந்த நூலில் கொட்டி கிடக்கின்றன.
ஒரு கதையை எப்படி தேர்வு செய்வது என்பதில் தொடங்கி அதன் அடுத்தடுத்த படிநிலைகளை படிப்படியாக விவரித்து இறுதியில் ஒரு படத்தை எடுப்பதற்கு என்னென்ன துணைக் கருவிகள் தேவை அதன் விலை என்ன என பயணித்து எடுத்த படத்தை எப்படி சர்வதேச திரைப்பட விழாக்களுக்கு அனுப்புவது என்பது வரையில் ஒரு திரைப்படத்தை உருவாக்க வேண்டும் என நினைப்பவர்களுக்கான முழுமையான வழிகாட்டியாக இந்த நூல் இருக்கிறது.
நூலின் ஆய்வுரையில் பேராசிரியர் சொர்ணவேல் சொல்வதைப் போல, “இந்த நூல் எல்லோருக்குமான சினிமாவை மட்டும் விவரிக்கவில்லை. இது எல்லோரும் படைக்க வேண்டிய சினிமாவுக்கான திறவுகோலாக இருக்கிறது”
எட்டாம் வகுப்பு படிக்கும் ஒரு இளம் பருவத்தினர் இந்த நூலை படித்தால் கூட அவர்களுக்கும் புரியும் வகையில் இந்த நூல் அமைந்திருப்பது கூடுதல் சிறப்பு. என்னிடம் ஒரு நல்ல கதை இருக்கிறது ஆனால் அதை எடுப்பதற்கு ஒரு ஒளிப்பதிவாளர் நல்ல ஒளிப்பதிவு கருவியோ இல்லை என நினைக்கும் ஒருவர் இந்த நூலை வாசித்தால் ஏன் நாம் நினைத்ததை நம்முடைய ஸ்மார்ட் ஃபோனிலேயே எடுக்கக் கூடாது என யோசிக்கக்கூடும். அப்படி யோசித்தால் அதுவே இந்த நூலின், நூல் ஆசிரியரின் ஆகச்சிறந்த வெற்றி.











