உமா ஷக்தி
மனிதர்களுக்குத் தனிமை வாய்க்கும் போது அல்லது சுயத்தைப் பற்றிய சிந்தனை எழும்போது ஒருசில கேள்விகள் நிச்சயம் எழும். நாம் யார், இந்த வாழ்க்கையின் நோக்கம் என்ன? இந்த கேள்விகளை அடியாழம் வரை பின் தொடர்ந்து சென்றவர்கள் ஞானிகளாகவும் தத்துவ மேதைகளாகவும் மாறி சமூகத்தில் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளார்கள். வெகு அபூர்வமாக சிலர் கவிஞர்களாகவும் கூட உருமாறியுள்ளனர். ரூமி, அக்கமா தேவி, ஆண்டாள் போன்றவர்கள் அவ்வகையினர். பீட்டர் வியர் இயக்கத்தில் 1989-ம் ஆண்டு வெளியான Death Poets Society என்ற திரைப்படம் வாழ்க்கையில் சுதந்திரமும் தன்னுணர்வும் ஒருவரை எவ்வாறு மேம்படுத்தும் என்பதை அழகியலுடன் காட்சிப்படுத்துகிறது.
லண்டனில் வெர்மான்ட் எனும் இடத்திலுள்ள வெல்டன் அகாதெமி பிரசித்தி பெற்ற உயர்நிலைப் பள்ளி. இதில் இடம் கிடைப்பது மிகவும் கடினம். நல்ல மதிப்பெண்கள் பெற்றிருந்தால் மட்டுமே அது சாத்தியம். பல பெற்றோர்களின் கனவு தங்கள் பிள்ளைகளுக்கு அங்கு ஒரு இடம் கிடைக்குமா என்பதே. காரணம், பாரம்பரியம், மரியாதை, ஒழுக்கம், தரம் இவை நான்கும்தான் அப்பள்ளியின் தாரக மந்திரம். இந்த நான்கு தூண்களும் வெல்டன் அகாடமியை தாங்கி நிற்பவை. மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் எடுத்து வெற்றி பெறுவதற்கும் சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட மனிதர்களாக மாறுவதற்குமான உயர் கல்வியை பிறழாமல் கற்பித்து வெளியே அனுப்புகிறது. அதீதமான கண்டிப்புக்குப் பெயர் போன அந்தப் பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் அனைவரும் சமூகத்தில் உயர் நிலைக்கு வந்துள்ளனர். 1959-ஆம் ஆண்டு. இப்பள்ளியில் அனுமதிக்கப்பட்ட புதிய மாணவர்களை வரவேற்க தலைமை ஆசிரியரான கேல் நோலன் தலைமையில் பள்ளி நிர்வாகம் தயாராக இருந்தது. இந்நிலையில் அங்கு புதிதாக ஜான் கீட்டிங் (ராபின் வில்ல்லியம்ஸ்) என்ற ஆங்கில ஆசிரியர் பணியில் சேர்கிறார். அவர் அந்தப் பள்ளியின் பெருமைமிகு முன்னாள் மாணவர்.
பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை விடுதியில் விட்டுவிட்டு கிளம்பிச் செல்கின்றனர். வெல்டனில் ஒரு அங்கமாக மாறிய மாணவர்கள் மிகப் பெரிய எதிர்ப்பார்ப்புடன் உள்ளனர். கணக்கு ஆசிரியர், வேதியல் ஆசிரியர் மற்றும் பிற பாடங்களின் ஆசிரியர்கள் அனைவரும் ஒரே குரலாக ஒரே போன்று மாணவர்களிடம் கண்டிப்பாக இருக்கின்றனர். இறுக்கமான அந்த வகுப்புகள் ஒவ்வொன்றிலும் மாணவர்களின் அறிவு கூர் தீட்டப்படுகிறது. ஆனால் இயந்திரத்தனமாக அவை நகர்கின்றன. ஆங்கில வகுப்பிற்கான நேரம் வந்ததும், அவர்கள் சோர்ந்து போகிறார்கள். அப்போது விசில் அடித்தபடி சுறுசுறுப்பாக வகுப்பினுள் நுழைகிறார் ஆங்கில ஆசிரியர் கீட்டிங். மாணவர்கள் வியப்புடன் அவரைப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே அந்த வகுப்பறையின் இன்னொரு வாசல் வழியாக வெளியேறுகிறார்.. அவர்களின் வியப்பு அதிகரிக்கும் முன், “என்ன இங்கேயே அமர்ந்துவிட்டீர்கள், வகுப்பறையை விட்டு எழுந்து வெளியே வாருங்கள்” என்று ஹாலுக்கு அழைத்துச் செல்கிறார். அங்கிருந்த பழைய மாணவர்களின் புகைப்படம் ஒன்றைச் சுட்டிக் காட்டி இவர்கள் எல்லாம் எவ்வளவு உயிர்ப்புடன் இந்தப் படத்தில் காணப்படுகிறார்கள். ஆனால் இப்போது மண்ணுக்கு கீழே புதைந்து அமிழ்ந்து போயிருப்பார்கள். வாழ்க்கை இவ்விதம்தான் எல்லா பெருமைகளும் முடிந்துவிடும், ஆனால் எது முக்கியம்? அப்போதைக்கு அப்போது வாழ்ந்துவிடுவதுதான். உங்கள் மனத்தடைகளை உடைத்தெறிந்து, உங்களுக்காக வாழுங்கள், உள்ளார்ந்த கனவுகளைப் பின் தொடருங்கள், முக்கியமாக உங்களின் ஒவ்வொரு நாளினையும் இதற்காகவே பயன்படுத்துங்கள், carpe diem என்ற லத்தீன மொழி வாக்கியத்தை உணர்வெழுச்சியுடன் கூற மாணவர்களின் முகத்தில் மலர்ச்சி தோன்றுகிறது. கார்பெ டயம் என்றால் ஆங்கிலத்தில் sieze the day என்று அர்த்தம். இன்று இப்போது இந்த நொடி மட்டுமே நிச்சயம், எனவே இதைப் பற்றிக் கொள்ளுங்கள் என்றார். தங்கள் ஆசிரியர் வித்தியாசமானவர் மட்டுமல்ல அறிவுஜீவி என்பதை மாணவர்கள் புரிந்து மகிழ்ச்சியடைந்தனர்.
பெற்றோர்களிடமிருந்தும் பள்ளியிலிருந்தும் பெரும் அழுத்தங்களை எதிர்கொள்ளும் அந்த இளம் மாணவர்களுக்கு கீட்டிங்கின் வகுப்புகள் பெரும் விடுதலையாக அமைகின்றன. அவரது வகுப்புகள் ஒவ்வொன்றும் வழக்கத்திற்கு மாறானவையாக இருப்பதால் மாணவர்களை வெகுவாகக் கவர்ந்து விடுகிறார். ஒவ்வாத கருத்துள்ள பாடப் புத்தகத்தின் ஒருசில பக்கங்களைக் கிழித்தெறிவதில் தொடங்கி, மேஜை மேல் எழுந்து நிற்பது, கால்பந்து விளையாடும்போது கவிதைகளை உச்சரிப்பது, நடந்துகொண்டே காட்டுத்தனமாகக் கத்துவது மற்றும் கவித்துவமான வசனத்துடன் காத்திரமாகப் பேசுவது வரை பலவிதமாக அவர் பாடத்தை மாணவர்கள் மனதில் எளிதாகப் பதியச் செய்கிறார். தம் மாணவர்கள் ஒவ்வொருவரும் அசாதாரணமான வாழ்க்கை வாழ வேண்டும் என்பதே அவரது கனவு.
கீட்டிங்கின் உதவியுடன், மாணவர்கள் நீல் பெர்ரி, டாட் ஆண்டர்சன், நாக்ஸ் ஓவர்ஸ்ட்ரீட், ரிச்சர்ட் கேமரான், ஸ்டீவன் மீக்ஸ், ஜெரார்ட் பிட்ஸ் மற்றும் சார்லி டால்டன் உள்ளிட்ட மாணவர்கள் குழு கீட்டிங் சொல்லித் தரும் அரிதான விஷயங்களை ஆர்வத்துடன் கற்றுக் கொள்கிறார்கள். கீட்டிங்குடன் விரிவுரைளைத் தவிர சிறு வயதில் அவர் நடத்தி வந்த டெட் பொயட்ஸ் சொஸைட்டி என்ற ரகசிய குழுவினர் பற்றி அறிந்து அந்த மாணவர்கள் மெய்சிலிர்த்துப் போகிறார்கள். மாலை நேரங்களில் கவிதை குறித்தும் வாழ்க்கை குறித்தும் ரகசியமான ஒரு குகைக்குச் சென்று கலந்துரையாடுவதை வழக்கமாக கொண்டிருந்தனர் கீட்டிங் மற்றும் அவரது நண்பர்கள். பள்ளி நிர்வாகம் அதை கண்டுபிடிதது மட்டுமல்லாமல் உடனடியாக தடை செய்துவிட்டது. இத்தனை ஆண்டுகள் கழித்துத் தம் மாணவர்கள் அந்த டெட் பொயட்ஸ் சொஸைட்டி பற்றிக் கேட்டதும் தன்னை மறந்து அதைப் பற்றிய விவரங்களை கூறிவிடுகிறார். உடனே உற்சாகம் அடைந்த நீல் உள்ளிட்ட குழுவினர் தாங்களும் இனி அந்த ரகசிய குழுவைத் தொடர வேண்டும் என்று முடிவெடுக்கிறார்கள். ஒவ்வொரு வாரமும் நள்ளிரவு இரண்டு மணிக்கு ரகசியமாக அவர்கள் அந்தக் கூட்டத்தை நிகழ்த்தி கவிதையைப் பற்றியும் வாழ்க்கை குறித்தும் பேசத் தொடங்குகிறார்கள்.. அவ்வகையில் தன் தேவை என்ன, அடுத்த கட்ட நகர்வு எப்படி என்று பல விஷயங்களை அலசுகிறார்கள். கவிதை மட்டுமல்லாது பாடவும் செய்கிறார்கள். சுதந்திர உணர்வுடன் இருப்பது எத்தகைய அற்புதம். ஏதோ ஒரு வகையில் தங்களைக் கண்டுணரும்போது அவர்களின் வாழ்க்கை என்றென்றும் மாறுகிறது.
கீட்டிங் தனது வகுப்பில் ஒருநாள் மாணவர்கள் அனைவரையும் தன்னைச் சுற்றி அமரச் செய்து கவிதை குறித்து பாடம் நடத்துகிறார். “நாம் மனிதர்கள் என்பதால் கவிதைகளைப் படிக்கிறோம், எழுதுகிறோம். மனித இனம் பல விஷயங்களில் ஆர்வமும் ஈடுபாடும் உடையது. மருத்துவம், சட்டம், வணிகம், பொறியியல், இவையெல்லாம் உன்னதமான பணிகள் மட்டுமல்லாது வாழ்க்கையை நிலைநிறுத்தத் தேவையானவை. ஆனால் கவிதை, அழகு, காதல், அன்பு, இவை அனைத்தும் நம்மை உயிருடனும் உயிர்ப்புடனும் வைத்திருக்கும் உன்னதமான விஷயங்கள்” என்றார். மென்மையான குரலில் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் அவர் கூறி முடித்ததும் மாணவர்கள் ஆரவாரத்துடன் ஆமோதிக்கின்றனர்..
படைப்பாற்றல் மிகவும் முக்கியம், அதைவிட தனித்தன்மையை உருவாக்கிக் கொள்வதும், வாழ்க்கையை அதிகபட்சமாக வாழ்வதும் மிக முக்கியம் என்பதே கீட்டிங் சொல்லும் செய்தி. இது அவரது மாணவர்களை சிந்தனையைத் தூண்டி ஊக்கப்படுத்துகிறது. சமூக அழுத்தங்களை எதிர்கொண்டாலும் கூட, ஆர்வம் மற்றும் தனித்துவம் ஒருவரை உயர்த்தும். தம் வாழ்க்கையில் தனக்கான மகிழ்ச்சியைத் தேடுவதன் முக்கியத்துவத்தை கீட்டிங் வெவ்வேறு வகையில் வகுப்பெடுக்கிறார். ஒரு ஆசிரியர் தன் மாணவர்களுக்கு செய்ய வேண்டிய முக்கியமான கடமை அவர்கள் திறமையை அறிந்து அதற்கேற்றபடி அவர்களை வழிநடத்துவதே. ராபர்ட் ஃப்ராஸ்டின் புகழ்பெற்ற வரிகளை கீட்டிங் அடிக்கோடிட்டுக் காட்டுகிறார்.
”ஒரு காட்டில் இருவேறு பாதைகள் பிரிந்தன,
நான் மிகக் குறைவாக பயணிக்கப்பட்ட பாதையினை
தேர்ந்தெடுத்தேன்,
அதுதான் எல்லா மாற்றத்தையும் உருவாக்கியது”
“டெட் பொயட்ஸ் சொஸைட்டி” அதிகார அமைப்பினுள் இருக்கும் தவறான அணுகுமுறைகளையும், பெற்றோர்கள் அல்லது அதிகார மையத்தினரால் திணிக்கப்பட்ட விதிமுறைகளை கேள்விக்குட்படுத்துகிறது. மாணவர்களில் ஒருவனான சார்லி, ஒருமுறை பள்ளியின் செய்தித்தாளில் “டெட் பொயட்ஸ் சொஸைட்டி” என்ற பெயரில் ஒரு கட்டுரையை வெளியிட்டு, அதில் பெண்கள் வெல்டனில் அனுமதிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கையை முன்வைக்கிறான்.. அதைப் படித்த பலருக்கும் அதிர்ச்சி. காரணம் ஆசிரியர் கீட்டிங் அங்கு படித்த காலத்தில்தான் அந்த ரகசியக் குழு பயன்பாட்டில் இருந்தது, அதன் பின் யாரும் அந்தக் குழுவில் சேர முன்வரவில்லை. இத்தனை ஆண்டுகள் கழித்து அந்தப் பெயரை மறுபடியும் பார்த்த பள்ளியின் இயக்குனர் நோலனுக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்துகிறது..
எப்படியோ ஆசிரியர்களிடம் தங்களது ரகசிய குழுவைப் பற்றி எதுவும் சொல்லாமல் தப்பிக்கிறான் சார்லி. நீல் பெர்ரிக்கு நாடகத்தில் நடிப்பதில் விருப்பம். ஆனால் அவன் தந்தைக்கு முற்றிலும் அடிபணிந்து நடப்பவன். “நாங்கள் உன்னிடமிருந்து பெரிய விஷயங்களை எதிர்பார்க்கிறோம்” என்று ஆண்டின் தொடக்கத்தில் நீலின் தந்தை அவனிடம் கூறுகிறார். அவரின் ஆசைப்படி எல்லா பாடங்களிலும் முதல் மதிப்பெண் பெற்றிருந்தான். ஆனால் அவன் ஷேக்ஸ்பியர் நாடகத்தில் தன் சொல்லை மீறி நடித்ததை அவரால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. அவனை அங்கிருந்து வெளியேற்றி வெகு சில நாட்களில் வேறொரு பள்ளியில் சேர்த்து விடுகிறார். தந்தையின் கடுமையால் பாதிப்படைந்த அவன் எதையும் யோசிக்காமல் அவருடைய துப்பாக்கியால் தன்னை சுட்டுக் கொள்கிறான். ஒரே மகனின் ஆசையைக் கூட புரிந்து கொள்ளாத அந்த மனிதன் கல்லூரியில்தான் யாரோ அவனை ஏமாற்றி இருக்கிறார்கள் என்று புகார் அளிக்கிறார்.
அதன் பின் வெல்டன் அகாதெமியில் பிரச்னைகள் தீவிரமடைகிறது. நோலன் தலைமையில் ஒரு அவசரக் கூட்டம் நடைபெறுகிறது. கீட்டிங் மீது பழி போடக் காத்திருக்கும் நோலன் அவரை என்ன செய்தார்? கீட்டிங்கின் மாணவர்கள் அவரை காட்டிக் கொடுத்தனரா? அல்லது காப்பாற்றினரா? என்பதுதான் கதையின் முடிவு.
வார்த்தைகளுக்கு மிகப் பெரிய சக்தி இருக்கிறது. ஒரு சொல் வெல்லும் ஒரு சொல் கொல்லும் என்பது எத்தனை உண்மை. நாம் பேசும் சொற்கள், எழுதும் சொற்கள் யாவற்றுக்கும் அற்புத ஆற்றல் உள்ளது. அது ஒருவரின் மனதை தொட்டால், அவர் தம் சிந்தனையை தூண்டி மடைமாற்றம் செய்தால் அதுவே வெற்றி. ஆக்கபூர்வமாக சொற்களை பயன்படுத்தி மனித சமுதாயத்தை வழிநடத்துவதே படைப்பாளிகளின் முக்கிய பணி. தாஸ்தவெஸ்கி, டால்ஸ்டாய், ஷேக்ஸ்பியர், திருவள்ளுவர் என நாம் கொண்டாடும் அத்தனை எழுத்தாளுமைகளும் ஞானம் பெற்றவர்கள். சொற்களுனூடே ஆழமாக பயணித்து அதிலிருந்த முத்துக்களை உலகினருக்கு எடுத்துத் தந்தவர்கள். தம்மை கண்டுணர்ந்ததுடன் அனைவருக்குமான வெளிச்சத்தை காண்பித்தவர்கள். Dead Poets Society படம் இதைத் தான் சொல்லாமல் சொல்கிறது. இந்தப் படம் வெளியான சமயத்தில் அதிகம் பாராட்டுக்களை பெற்றாலும், கடுமையான விமர்சனத்தையும் எதிர்கொண்டது. பாரம்பரியமாக பாடம் நடத்தும் வழிமுறைகளை இப்படம் கேலிக்குரியதாக்குகிவிட்டது என்றும், நடைமுறைக்கு ஒவ்வாத விஷயங்களை ரொமாண்டிசைஸ் செய்கிறது என்றும் ரோஜர் இபர்ட் உள்ளிட்ட பல திரை விமர்சகர்கள் சாடினர். ஆனால் எல்லாவற்றையும் மீறி இப்படம் செவ்வியல் தன்மையடைந்து இன்றளவும் காண்பவர் மனங்களை கொள்ளை கொள்கிறது.
சிறந்த அசலான திரைக்கதைக்கான அகாதெமி விருதிபை 1990-ஆம் ஆண்டு இப்படம் வென்றது. திரைக்கதை ஆசிரியர் டாம் ஷூல்மென் இவ்விருதை பெற்றார். தவிர சிறந்த இயக்குனருக்கான பாஃப்டா விருதை டாம் வியர் பெற்றார். மேலும் சில விருதுகளை இப்படம் அடுத்தடுத்து வென்று குவித்ததும் விமர்சகர்கள் இப்படத்தைப் பற்றி பேசுவதை தவிர்த்தனர்.
நீ நீயாக இரு, உன் வாழ்க்கையை நீ வாழ்ந்து விடு என்ற காலம் தாண்டி நிற்கும் கீட்டிங்கின் வாசகம் இப்படத்தில் மாணவர்களுக்கு மட்டுமல்லாமல் பார்வையாளர்கள் அனைவருக்குமானது., சமூக அழுத்தங்களை ஒருவர் எதிர்கொண்டாலும் கூட, ஆர்வம், தனித்துவம் மற்றும் தனக்கான மகிழ்ச்சியைத் தேடுவதன் முக்கியத்துவத்தை உணர்ந்தவர்கள் நிச்சயம் தன்னை விட்டுக் கொடுக்கமாட்டார்கள். எளிதில் யாருக்கும் பணிய மாட்டார்கள். இந்தப் படம் நமக்கு மீண்டும் மீண்டும் அதைத் தான் உணர்த்துகிறது. ரூமியின் கவிதையொன்றும் இப்படத்தை பார்த்ததும் நினைவுகளில் நிழலாடுகிறது.
இந்தச் சொற்களை எனது உதடுகளில் இருந்து உதிர்ப்பது யார் ?
”என் கண்களின் மூலம் காண்பது யார் ? எது ஆன்மா ? என்னால் கேள்விகளை நிறுத்த இயலவில்லை.
ஒரு துளி பதிலைச் சுவைக்க நேர்ந்தால் போதும், மதுவுக்கு அடிமையானவர்களுக்கான இந்தச்
சிறையிலிருந்து என்னால் தப்பிக்க இயலும்;
நானாக விரும்பி இங்கு வரவில்லையே, நானாக திரும்பிச் செல்லவும் முடியாது.
என்னை இங்கு அழைத்து வந்தவரே என் இல்லத்தில் என்னை சேர்ப்பிக்க வேண்டும்.
இந்த கவிதை, நான் சொல்லப் போவது எதுவும் எனக்குத் தெரியாது.
நான் திட்டமிடுவதேயில்லை. சொற்களுக்கு வெளியில் நான் இருக்கையில்
பேச்சற்று மிகவும் அமைதியாகிறேன்.”











