கருந்தேள் ராஜேஷ்
பொதுவாகவே உலகம் முழுக்க இருக்கும் திரைப்பட ரசிகர்களுக்கிடையே ஒரு கருத்து நிலவுவதைப் பார்க்கலாம். ‘திரைப்படம் என்பது வேகமாக இருக்க வேண்டும்’ என்பதே அது. வணிகத் திரைப்படங்கள் இப்படி இருந்தால்தான் ஆடியன்ஸால் ரசிக்கப்படும் என்பது ஒரு விஷயம்.
உலகத் திரைப்பட ரசிகர்களுக்கேகூட இப்படி ஒரு எண்ணம் இருப்பதைக் கண்டிருக்கிறேன்.
இந்தியாவில் – குறிப்பாகத் தமிழகத்தில், கலைப்படங்களைப் பற்றி எப்போது எழுதப்பட்டாலும், நகைச்சுவையான உதாரணமாக ‘மரத்தையே அரைமணி நேரம் காட்டுதல்’, ‘கேமராவை நகர்த்தாமல் நீண்ட ஷாட்கள் எடுத்தல்’ என்றெல்லாம் எழுதப்படுவதைக் காண்கிறோம்.
ஆனால், வாழ்க்கை என்பதை எடுத்துக்கொண்டால், நிஜத்தில் அப்படியா இருக்கிறது? மெதுவாக நகரும் பல சம்பவங்களைக் கொண்டதே நம் வாழ்க்கை. இதில் இப்படிப்பட்ட சம்பவங்களைக் காண்பதால்/அனுபவிப்பதால் நமக்குள் ஏற்படும் எண்ணங்கள், நிகழும் மாற்றங்கள் ஆகியவற்றை எப்படி விளக்குவது?
இதைப்பற்றி யோசித்தால், slow cinema என்று அழைக்கப்படும் ஒரு குறிப்பிட்ட வகையான திரைப்படங்கள் பற்றிய தகவல்கள் நமக்குக் கிடைக்கும். slow cinema என்றால், வழக்கமான கமர்ஷியல் படங்கள் போல அதிரடித் திருப்பங்கள், அடிதடிகள், காமெடிகள், ஒரு நொடியிலேயே நூறுவிதமான எடிட்டிங் கட்கள் ஆகியவையெல்லாம் இல்லாமல், நமது வாழ்க்கை பெரும்பாலும் எப்படி நகர்கிறதோ அப்படியே நகரும் திரைப்படங்கள் என்று பொருள்.
உலகம் முழுக்க, இந்தியாவைத் தவிர எடுக்கப்படும் பெரும்பாலான வாழ்க்கை சார்ந்த திரைப்படங்கள், மெதுவாகவே நகரும் தன்மை உடையவை. ஆனால் அவற்றில் இடம்பெறும் உணர்ச்சிகள் ஏராளம்.
இப்படிப்பட்ட slow cinemaக்களைப் பற்றி யோசித்துப் பார்த்தால் உடனே நினைவு வரும் பெயர்தான் பேலா டார் (Béla Tarr). ஹங்கேரியில் பிறந்து உலகம் முழுக்கப் பிரபலம் அடைந்த திரைப்பட மேதை இவர். ஜனவரி 2026இல் காலமாகிவிட்டார்.
பேலா டாரின் மெதுவான, இருண்ட, தீவிரமான திரைப்படங்கள், கதை, காலம் மற்றும் யதார்த்தவாதம் பற்றிய வழக்கமான கருத்துக்களை முற்றிலும் மாற்றி, விவாதங்களை உருவாக்கின என்று அவசியம் சொல்லமுடியும். Slow Cinema அமைப்பின் மிக முக்கியமான நபர்களில் ஒருவராக அவர் ஒரு பாரம்பரியத்தை உருவாக்கிவிட்டே மறைந்திருக்கிறார்.
வாழ்க்கை – திரைப்பட ஆர்வம்
பேலா டார் 1955 இல் ஹங்கேரியின் பேய்ட்ச் (Pécs) நகரத்தில் பிறந்தார், பெரும்பாலான வெளிநாட்டு இயக்குநர்களின் வாழ்க்கையில் எப்போதுமே நடக்கும் ஒரு இன்றியமையாத சம்பவம் பேலா டாரின் சிறுவயதிலும் நடந்தது. பேலா டாரின் பதினான்காவது வயதில் அவரது தந்தை, ஒரு சிறிய 8MM கேமரா வாங்கித்தந்த சம்பவமே அது. அதைத்தொடர்ந்து அந்தக் கேமராவை வைத்துக்கொண்டு சின்னச்சின்ன படங்கள் எடுக்கத் துவங்கினார் பேலா டார். அதன்பின் அவரது பதினாறாவது வயதில் நண்பர்களுடன் சேர்ந்து ஒரு திரைப்பட அமைப்பை உருவாக்கினார்.
அதன் பெயர் Dziga Vertov. இந்தப் பெயர் ஐரோப்பிய சினிமாவில் மிகவும் முக்கியமானது. அறுபதுகளின் இறுதியில் புகழ்பெற்ற இயக்குநர்களான ஸான் லுக் கொதார் (Jean-Luc Godard: தமிழில் அனைவரும் தவறாகவே உச்சரிக்கும் பெயரான கொதார்டு அல்ல.
கொதார் என்பதே சரியான உச்சரிப்பு), ஸான் ப்யேய்ர் கோரின் (Jean-Pierre Gorin) ஆகியோர்கள் சேர்ந்து உருவாக்கிய ஒரு திரைப்பட அமைப்பே உண்மையில் Dziga Vertov. இந்த அமைப்பு சார்ந்து மொத்தம் நான்கு படங்கள் எடுக்கப்பட்டன. இந்தப் பெயரையே பேலா டார் தனது இளம்வயதில் உருவாக்கிய திரைப்பட அமைப்புக்கு வைத்தார்.
இந்த அமைப்பை வைத்துக்கொண்டு ஒரு பரிசோதனை முயற்சியாக, Guest Workers என்ற ஒரு திரைப்படம் பேலா டார் மற்றும் நண்பர்களால் எடுக்கப்பட்டது. அந்தப் படம் சற்றுப் பிரபலம் ஆகி, பெல்ஜியத்தில் ஒரு உள்ளூர் திரைவிழாவில் பரிசும் வாங்கியது. ஆனால் இந்தப் படத்தால் பேலா டார் சிக்கலில் சிக்கினார். ஹங்கேரியின் கம்யூனிஸ அரசு, பேலா டாரின் இந்தப் படம் தங்களை விமர்சிப்பதாகக் கருதியது.
இதனால் பேலா டாருக்குக் கல்லூரிப் படிப்பு படிக்க ஹங்கேரியெங்கும் தடை விதிக்கப்பட்டது. படிக்க இயலாமல், கைக்குக் கிடைத்த சின்னச்சின்ன வேலைகள் – கப்பல் கட்டும் தளங்கள், வரவேற்பாளர் வேலை போன்று – செய்து வாழத் துவங்கினார் பேலா டார். அப்படியே திரைப்படங்களும் எடுக்கத் துவங்கினார்.
அவரது ஆரம்பகால படங்கள் புடாபெஸ்டில் உள்ள பேல பேலாஸ் ( Béla Balázs – இவரைப் பற்றித் தேடிப் படித்துப் பாருங்கள்) ஸ்டுடியோவின் ஆதரவைப் பெற்றன, இது சோஷலிசத்தின் கீழ் இளம் திரைப்பட இயக்குநர்களை வளர்த்த ஒரு முக்கிய சோதனை மையம்.
பேலா டாரின் முதல் திரைப்படம், ஃபேமிலி நெஸ்ட் (Családi tűzfészek) (1979), அவரது இருபத்திரண்டாம் வயதில் ஆறு நாட்களில் தொழில் சாராத நடிகர்களை வைத்து மிகச்சிறிய பட்ஜெட்டுடன் படமாக்கப்பட்டது, இந்தப் படம் கறாரான முறையில் ஆவணப்படமும் திரைப்படமும் சேர்ந்து எடுக்கப்பட்டது போலவே இருந்தது.
இதுதான் சமூக எதார்த்தவாதம் சார்ந்து பேலா டாரின் படங்களின் திரைமொழி உருவானதன் துவக்கம். அடுத்தடுத்த அடுத்த தசாப்தங்களில், இந்த சமூக சினிமா உருவாக்கத்தில் இருந்து நீண்ட ஷாட்களும் மெட்டாபிசிக்கல் உருவகங்கள் அடங்கியதுமான திரைப்படங்களை நோக்கி அவர் பயணிக்கத் துவங்கினார். இது அவருக்கு சர்வதேசத் திரைவிழாக்களில் பாராட்டுகளையும் உலக சினிமா அகராதியில் ஒரு இடத்தையும் பெற்றுத் தந்தது.
திரைப்படப் பாணி
பேலா டார் தனது திரைப்படங்களை, உண்மையான மக்களின் உண்மையான பிரச்னைகள், இவைகளுக்குள்ளான உள்ளார்ந்த மோதல்கள் என்றே விவரிப்பது வழக்கம்.. செயற்கையான பெரும்பான்மை சினிமாவுக்கு எதிராக எப்போதும் எதிர்வினையாற்றியே வந்தார் அவர்.
1970களின் பிற்பகுதியிலும் 1980களின் முற்பகுதியிலும், கையடக்கமான கேமராக்கள், சற்றே மேம்படுத்தப்பட்ட வசனங்கள் தொழில்முறை சாராத நடிகர்கள் ஆகியவைகளை வைத்து உழைக்கும் வர்க்கம் மற்றும் விளிம்புநிலை வாழ்க்கை வாழும் மனிதர்கள் ஆகியோரைப் பற்றி அவர் தொடர்ச்சியாக எடுத்த திரைப்படங்களைப் பார்த்தால் பேலா டாரின் உள்ளார்ந்த கருத்து விளங்கும்.
டேம்னேஷன் என்ற பேலா டாரின் திரைப்படத்தில் இருந்து, அவரது படமாக்க முறை, நீண்ட டேக்குகளை நோக்கி மாறியது, எழுத்தாளர் லாஸ்லோ க்ராஸ்னஹோர்க்காய் (László Krasznahorkai) மற்றும் படத்தொகுப்பாளர் (பின்னர் இணை இயக்குநர் ஆனவர்) ஆக்னஸ் ஹ்ரானிட்ஸ்கி (Ágnes Hranitzky.) முதலிய மிகச்சிறிய குழுவுடனேயே சேர்ந்து அவர் படங்கள் எடுத்தார்.
பெரும்பாலும் மழையால் நனைக்கப்பட்ட தெருக்கள் அல்லது நெரிசலான உட்புறங்கள் வழியாக இந்தப் படங்கள் கதாபாத்திரங்களைப் பின்தொடர்கின்றன, கேமரா இயக்கம், அந்த இடத்தின் வானிலை மற்றும் மீண்டும் மீண்டும் தொடர்ந்து கதாபாத்திரங்களை நீண்ட ட்ராக்கிங் ஷாட்களின் மூலம் காட்டிக்காட்டி அவர்களின் உணர்வுகளைத் திரையில் பேசுதல் ஆகியவை பேலா டாரின் முக்கியமான அம்சங்களாக டேம்னேஷன் திரைப்படத்தில் இருந்து இடம்பெற்றன.
பேலா டாரின் திரைப்படங்களில் அவர் தொடர்ந்து வைக்கும் விஷயஙக்ள் என்னென்ன?
- மிக நீண்ட ஷாட்கள் – இவை சில சமயங்களில் பல நிமிடங்கள் நீளும். மொத்தப் படமும் மிகச்சில ஷாட்களிலேயே எடுக்கப்பட்டுவிடும். அவரது Macbeth தழுவலில் வெறும் இரண்டே ஷாட்கள் இருப்பது ஒரு உதாரணம் (சுமார் 5 நிமிடங்கள் மற்றும் 57 நிமிடங்கள்). அவரது The Turin Horse திரைப்படமும் இப்படியே மிகச்சில ஷாட்களிலேயே எடுக்கப்பட்டிருக்கும் (முப்பது ஷாட்கள்).
- மந்தமான வேகம் மற்றும் குறைந்தபட்சமான சம்பவங்கள். கதாபாத்திரங்கள் அங்குமிங்கும் அலைந்து, ஒரே இடத்தில் காத்திருந்து, திரைப்படத்தில் சொல்லப்படும் பிரச்னைகளை அனுபவிக்கையில், அவர்கள் அனுபவிக்கும் அதே கால அளவைப் படம் பார்க்கும் மக்களும் அனுபவிப்பார்கள். அதேபோல் நீண்ட ஷாட்களின் மூலம் அந்தக் கதாபாத்திரங்கள் அனுபவிக்கும் உடல் சார்ந்த சோர்வு, வலி, துயரம் ஆகிய உணர்வுகளையும் படம் பார்ப்பவர்கள் அனுபவிப்பார்கள். இது பேலா டாரின் மிக முக்கியமான அம்சம்.
- அவரது பெரும்பாலான முக்கியமான படைப்புகளில் அடர்த்தியான கருப்பு-வெள்ளை ஒளிப்பதிவு, சேறு, மூடுபனி, மழை மற்றும் சிதிலமடைந்த கட்டிடங்கள் ஆகியவைகளை வைத்து அந்தத் திரைப்படம் சார்ந்த கருத்துகளையும் உணர்வுகளையும் படம் பார்க்கும் மக்களுக்குக் கடத்துவது பேலா டாரின் இன்னொரு முக்கியமான அம்சம். (சிதிலமடைந்த கட்டிடங்கள் இந்தியில் குல்ஸார் இயக்கிய திரைப்படங்களில் மிக முக்கியமான அம்சங்களாகத் தொடர்ந்து இடம்பெற்றன. குல்ஸாரின் படங்கள் பல விருதுகளும் வாங்கின).
- திரைப்படத்தில் மிக்குறைவாகவே பின்னணி ஒலி மற்றும் இசை சார்ந்த அம்சங்களைப் பயன்படுத்துதல். ஆனால் அவை பின்னணியில் இடம்பெறும்போது ஏராளமான உணர்வுகளைக் கடத்திவிடும். அதேபோல் மீண்டும் மீண்டும் இடம்பெறும் இசை வடிவங்களும் பேலா டாரின் திரைப்படங்களின் முக்கியமான அம்சம். இவற்றில் பெரும்பாலானவை இசையமைப்பாளர் மிஹாலி விக் (Mihály Víg) இசையமைத்தவை, இப்படித் திரும்பத்திரும்ப இசையை வைப்பதால் கதை நேரடியாக செல்லும்போது எழும் உணர்வைவிடவும் ஒருவித மனோதத்துவம் சார்ந்த உணர்வு அவரது படங்களில் மேலோங்கியிருக்கும்.
பேலா டாரின் திரைப்படங்களின் கண்ணோட்டம் மற்றும் சுருக்கங்கள்
பேலா டாரின் திரைப்படங்கள் பெரும்பாலும் ஆரம்பகால ’சமூக யதார்த்தவாத’ கட்டம் மற்றும் பிற்கால ’மெட்டாஃபிஸிகல் Slow Cinema’ கட்டம் என்று பிரிக்கப்படுகின்றன.
ஆரம்பகாலப் படைப்புகள் மற்றும் ’சமூக சினிமா’
Family Nest (Családi tűzfészek, 1979) – சோஷலிச காலகட்டத்தைச் சேர்ந்த நெரிசலான வீடுகள் அடங்கிய பகுதி ஒன்றில் நடைபெறும் இந்தக் கதை, கணவனின் பெற்றோரின் மிகச்சிறிய அபார்ட்மெண்ட்டில் வாழ வேண்டிய கட்டாயத்தில் உள்ள ஒரு இளம் தம்பதியைப் பின்தொடர்கிறது, நெரிசல் மிகுந்த இடங்களில் இருக்கும் உணர்வுசார்ந்த வன்முறை, ஆணாதிக்கம், மக்களுக்காக எதையும் செய்யாத அதிகார வர்க்கத்தின் அலட்சியம் ஆகியவற்றைப் பற்றிப் பேசுகிறது. கிட்டத்தட்ட ஆவணப்படம் ஒன்றைப்போல் எடுக்கப்பட்டிருக்கும் படம் இது. இதில் நடித்தவர்களும் தொழில்முறை நடிகர்கள் அல்ல.
முகத்தில் அறைவதுபோன்ற நேர்மையுடன் பல தீவிரமான உணர்ச்சிகளை இப்படம் பேசியது. அதேபோல் பேலா டார் பிற்காலத்தில் எடுத்த திரைப்படங்களில் மிக நெருக்கடியான இடங்களையே தொடர்ந்து வைத்தார். அதற்கு இந்தப் படமும் ஒரு உதாரணம். இதில் இருந்துதான் அவருக்கு அப்படிப்பட்ட இடங்களின் மீது ஒரு விருப்பம் வந்திருக்கலாம் என்றே நாம் சொல்லமுடியும்.
The Outsider (Szabadgyalog, 1981) – இந்தப் படம், அதிருப்தியடைந்த ஒரு இளைஞனை மையமாகக் கொண்டது, வேலைகள், உறவுகள் மற்றும் குடிப்பழக்கம் ஆகியவற்றில் ஒன்றில் இருந்து இன்னொன்றுக்குத் தாவிக்கொண்டே இருக்கும் இளைஞன் ஒருவனைப்பற்றிய கதை இது. இவனால் சோஷலிசம் சார்ந்த சமூகத்தில் வாழ இயலாது. இந்தப் படத்தில் கேமராவும் அந்த இளைஞன் போலவே அலைபாய்ந்துகொண்டே இருக்கும்.
வழக்கமான கமர்ஷியல் படங்கள் போல் ஒரு நோக்கத்தை எடுத்துக்கொண்டு அதன்பின் செல்லாமல், ஒருவிதமான நோக்கமின்மையையே மையமாக இந்தப் படம் கொண்டிருக்கும். அந்த இளைஞனின் மனதை இது பிரதிபலிக்கும் (திரையில் வரும் உணர்வுகளைப் படம் பார்க்கும் மக்களுக்குக் கடத்துவது பேலா டாரின் முக்கியமான அம்சம் என்பதைப் பார்த்தோம் அல்லவா? இந்தப் படம் அதற்கு இன்னொரு உதாரணம்).
The Prefab People (Panelkapcsolat, 1982) – ப்ரீஃபேப் என்றால், ஒவ்வொரு செங்கல்லாகக் கட்டப்படாமல் ஏற்கெனவே ஏதோ ஒரு தொழிற்சாலையில் பகுதி பகுதியாக உருவாக்கப்பட்டு, வேண்டிய இடத்துக்குக் கொண்டுசென்று ஒன்றுசேர்க்கப்படும் வீடு என்று பொருள். இப்படிப்பட்ட வீடுகளின் கான்கிரீட் நிலப்பரப்பில் உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த தம்பதியின் திருமணம் சிதைவடைவதன் உருவகமாக எடுக்கப்பட்ட திரைப்படம் இது. இந்தப் படம் உணர்ச்சிகள் தளர்வடைந்து உடைந்து போதல், நுகர்வோரின் விரக்திகள் மற்றும் அன்றாட வாழ்க்கையின் குட்டிக்குட்டி அவமானங்களைப் பற்றிச் சொல்கிறது. இந்தப் படத்தில் இருந்துதான் பேலா டார் சற்றே பெரிய காட்சிகளை எடுக்கத் துவங்கினார்.
Macbeth (1982) – TV film – ஷேக்ஸ்பியரின் புகழ்பெற்ற நாடகத்தின் தழுவலான இந்தத் திரைப்படம், ஏற்கெனவே மேலே சொல்லியது போல இரண்டு ஷாட்களை மட்டுமே கொண்டது: ஒரு சிறிய துவக்கக் காட்சி மற்றும் திரைப்படத்தின் மீதி அடங்கிய கிட்டத்தட்ட ஒரு மணி நேர ஒரே டேக்கில் அமைந்த காட்சி. கதை மேக்பெத்தின் அதே கதைதான். ஆனால் இந்தப் படத்தில் அமைந்த மிக நீண்ட ஒரு மணி நேர ஒரே ஷாட்டில் அமைந்த காட்சி மூலம் பேலா டார் தனது பிந்தைய திரைப்படங்களுக்கான ஒத்திகை பார்த்துக்கொண்டார் என்று சொல்லலாம்.
Almanac of Fall (Őszi almanach, 1984) – முற்றிலுமாக இடிந்துபோய்ச் சிதைந்துகொண்டிருக்கும் ஒரு அபார்ட்மெண்ட்டிலேயே கிட்டத்தட்ட முழுப்படமும் நடப்பதாக அமைந்திருக்கும் கதை இது. வீட்டில் இருக்கும் அனைவரையும் தந்திரமாக அடக்கி ஆளும் வயதான பெண் ஒருவர், அவரது மகன் மற்றும் அவர்களைச் சார்ந்திருக்கும் சிலர் ஆகியோரே கதை மாந்தர்கள். இந்தத் திரைப்படம் மாறிக்கொண்டே இருக்கும் மனிதர்கள், அவர்களின் கொடூரமான குணங்கள், ஒருவரையொருவர் சார்ந்திருக்கும் வாழ்க்கை ஆகியவை ஒன்றுசேர்ந்து இடிந்துகொண்டிருக்கும் வீடு ஒன்றுக்குள் நடக்கும் உணர்ச்சிகள் சார்ந்த கதை ஒன்றை அரங்கேற்றுகிறது.
இந்தத் திரைப்படத்தில் முந்தைய படங்களில் இடம்பெற்ற இயல்பான எதார்த்தவாதம் சார்ந்த காட்சிகள் சற்றே மாற்றப்பட்டு, கொஞ்சம் நாடகத்தனமான லைட்டிங், வண்ணப்படமாக இதை எடுத்த முறை ஆகியவையால் முந்தைய படங்களில் இருந்து இந்தப் படம் மாறுபட்டிருக்கும். இவற்றாலேயே அந்த வீடு ஒரு நாடகம் நடைபெறும் மேடை போல மாற்றப்பட்டு அதில் பல உணர்வுகள் சார்ந்த காட்சிகள் நடக்கும்.
மெடாஃபிஸிகல் Slow Cinemaவுக்கு மாற்றம்
Damnation (Kárhozat, 1988) – பெரும்பாலும் இந்தப் படமே பேலா டாரின் முதிர்ந்த பிற்காலத் திரைப்படப் பாணியின் முதல் முழு வெளிப்பாடாகக் குறிப்பிடப்படுகிறது, இந்தப் படம் மழை வந்தபின் நனைந்திருக்கும் சுரங்கம் சார்ந்த நகரம் ஒன்றில் வரண்டுபோன இதயத்துடன் தனிமை சூழ்ந்திருக்கும் ஒரு மனிதனைப் பின்தொடர்கிறது, அந்த ஊரின் மதுபான விடுதியில் இருக்கும் ஒரு பாடகியின் மீது இவனுக்கு ஆர்வம். அதேசமயம் கடத்தல் சார்ந்த சிக்கலான ஒரு வலையினுள் இவன் ஈர்க்கப்படுகிறான்.
இந்தத் திரைப்படம், மதுபான விடுதியின் பல்வேறு நீண்ட கறுப்பு வெள்ளைக் காட்சிகள், சேறு, முடிவில்லாத மழை போன்றவற்றால் நிரம்பி, படம் பார்க்கும் பார்வையாளர்கள் மனதில் ஒருவிதமான தனிமை உணர்வை உருவாக்கும் வகையில் படமாக்கப்பட்டிருக்கும்.
Sátántangó (1994) – (சுமார் 7 மணிநேரத்துக்கும் மேல்) லாஸ்லோ க்ராஸ்னஹோர்க்காய் ( László Krasznahorkai) எழுதிய ஒரு நாவலில் இருந்து தழுவப்பட்டது, இந்தப் படம் ஒரு தாங்கோ நடனம் போலவே (ஆறு அடிகள் முன்னோக்கியும் ஆறு அடிகள் பின்னோக்கியும்) கட்டமைக்கப்பட்டுள்ளது. இறந்துவிட்டதாகக் கருதப்பட்ட இரண்டு ஆண்கள் – இரிமியாஸ் மற்றும் பெட்ரினா – ஆகியோர் உயிரோடு திரும்பிவந்தபிறகு, ஹங்கேரியின் கிராமப்புறப் பண்ணை ஒன்றின் சரிவைப் பதிவு செய்கிறது.
இதில் கிராம மக்கள் சிலர் பொதுமக்களின் பணத்தைத் திருடிக்கொண்டு ஓடத் திட்டமிடுவார்கள். சிறுவர்கள் பெரியவர்களால் கைவிடப்பட்டு, கொடுமைகளையும் தனிமையையும் அனுபவிப்பார்கள். இதுபோன்ற சிதைந்துகொண்டிருக்கும் இடங்களில் எப்போதும் இருப்பதுபோலவே ஒரு சாமியார் போன்ற நபர் ஒருவர், மக்களின் மீது அதிகாரம் செலுத்துகிறார். சேறு, மூடுபனி, கிராமத்தின் உட்புறங்கள் ஆகியவற்றில் இடைவிடாமல் பயணிக்கும் மிக நீண்ட டேக்குகள் இந்த உணர்ச்சிகளை நமக்கும் கடத்துகின்றன.
சேடன்தாங்கோ பரவலாக, பேலா டாரின் மாபெரும் படைப்பாகவும் உலக சினிமாவில் – குறிப்பாக Slow Cinema சார்ந்த முக்கியமான படங்களில் ஒன்றாகவும் கருதப்படுகிறது, அதன் ஏழரை மணி நேர நீளம், படம் பார்ப்பவர்களின் மனதில் எழும் சலிப்பு, காத்திருப்பு ஆகியவற்றை சோஷலிசத்தின் தோல்விக்குப் பின்னர் எழுந்த தத்துவார்த்தங்கள் சார்ந்த சரித்திர அனுபவங்களாக மாற்றுகிறது.
Werckmeister Harmonies (Werckmeister harmóniák, 2000) – மீண்டும் க்ராஸ்னஹோர்க்காயின் கதையை அடிப்படையாகக் கொண்ட திரைப்படம் இது. இந்தப் படம் ஒரு அப்பாவி இளம் தபால்காரனான யானோஸைப் பின்தொடர்கிறது. அதேசமயம் ஒரு மர்மமான சர்க்கஸ் ஒரு சிறிய நகரத்துக்கு மாபெரும் பாடம் செய்யப்பட்ட திமிங்கிலம் ஒன்றையும், “இளவரசர்” என்று அழைக்கப்படும் ஒரு நிழலான உருவத்தையும் தூக்கிக்கொண்டுவருகிறது, இதனால் அமைதியின்மையும் கும்பல் சார்ந்த வன்முறையும் தூண்டப்படுகின்றன.
இந்தப் படத்திலும் பல்வேறுவிதமான கறுப்பு வெள்ளை ஷாட்களின் மூலம், அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த சிதைவுகள் பல்வேறு காட்சிகளில் பார்வையாளர்களுக்கு நினைவூட்டப்படுகின்றன. ஒழுங்குமுறையின் சிதைவு, கும்பல் வன்முறை, கொள்கைகளின் வீழ்ச்சி ஆகியவையெல்லாம் இந்தப் படத்தில் விரிவாகவே காட்டப்படுகின்றன. பேலா டார் எடுத்த மிகச்சிறந்த படங்களில் இது ஒன்று என்று கருதப்படுகிறது.
The Man from London (A londoni férfi, 2007) – ஸோ(ர்)ஸெஸ் சிமெனோ ( Georges Simenon) எழுதிய நாவலில் இருந்து தழுவப்பட்டது இந்தத் திரைப்படம், இதில் மையக் கதாபாத்திரம் ஒரு தனிமையான ரயில்வே தொழிலாளி, அவர் ஒரு துறைமுகம் ஒன்றில் நடக்கும் குற்றத்தை நேரில் காண்கிறார். அப்போது அவருக்குப் பணம் நிரம்பிய சூட்கேஸ் ஒன்று கிடைக்கிறது. இது அவரைக் குற்ற உணர்வு மற்றும் சந்தேகம் ஆகியவை நிறைந்த சிலந்திவலை ஒன்றில் சிக்கவைக்கின்றன.
ஒரு க்ரைம் திரைப்படம் போன்ற கதை இடம்பெற்றிருந்தாலும், வழக்கமான க்ரைம் வணிகப்படங்கள் போல அல்லாமல் இதிலும் பேலா டாரின் முக்கியமான அம்சங்களான பனிமூட்டம் நிரம்பிய நீண்ட காட்சிகள் உண்டு. துறைமுகம், புகைவண்டி ஆகியவை இடம்பெறும் இந்த நீண்ட காட்சிகள் மூலமாக இந்தப் படம் வழக்கப்படியே பார்வையாளர்கள் மனதில், திடீரென்று பணம் கிடைத்த ஒருவன் தனது மனசாட்சியைப் பின்பற்றுவானா அல்லது அவனது மனதில் இருக்கும் கொள்கைகளை முற்றிலுமாகத் துறந்துவிட்டுப் பணத்தின் பின் போவானா என்பதில் இருக்கும் சிக்கல்களில் ஆழ்த்துகிறது.
இறுதித் திரைப்படம் – கலைவாழ்க்கையில் இருந்து விடைபெறுதல்
The Turin Horse (A torinói ló, 2011) – ஆக்னஸ் ஹ்ரானிட்ஸ்கி (Ágnes Hranitzky)யுடன் இணைந்து இயக்கிய இந்தப் படம், க்ராஸ்னஹோர்க்காயுடன் இணைந்து எழுதப்பட்டது,
‘ஜெர்மனியைச் சேர்ந்த தத்துவவாதி ஃப்ரீட்ரிஃக் நீட்ஸ்ஸே (Friedrich Nietzsche – நீட்ஷே என்று நாம் தவறாக உச்சரிக்கும் பெயர், ஜெர்மன் மொழியில் இப்படித்தான் சொல்லப்படுகிறது), 1889 ஜனவரி மூன்றாம் தேதி, டுரின் நகரில் ஆறாம் எண்ணுள்ள வீட்டில் இருந்து வெளியே வருகிறார். அப்போது, அங்கே ஒரு கோச்சுவண்டியில் பிணைக்கப்பட்டுள்ள குதிரை திமிறிக்கொண்டே இருப்பதைப் பார்க்கிறார்.
நகர மறுக்கும் அந்தக் குதிரையை, வேறுவழியில்லாமல் அந்தக் குதிரைக்காரர் அடிக்க முயல்கிறார். இதைக் கண்டதும் பொறுக்க முடியாமல் நீட்ஸ்ஸே ஓடிச்சென்று குதிரையின் கழுத்தைக் கட்டிக்கொண்டு அழத் துவங்குகிறார். அவரது நண்பர் உடனடியாக வந்து நீட்ஸ்ஸேவை உள்ளே அழைத்துச் சென்றுவிடுகிறார்.
வீட்டுக்குள் இரண்டு நாட்கள் அசையாமல் படுத்திருக்கும் நீட்ஸ்ஸே, கடைசியாக, ‘Mother, I am stupid’ என்று சொல்கிறார். இதன் பின் பத்து வருடங்கள் பேசாமலும் மனநிலை பாதிக்கப்பட்டும் உயிர் வாழ்ந்த நீட்ஸ்ஸேவை அவரது தாயும் சகோதரிகளும் கவனித்துக்கொண்டனர். அந்தக் குதிரையின் கதி தெரியவில்லை’.
இவை The Turin Horse (A torini l) என்ற படத்தின் ஆரம்ப வரிகள். நீட்ஸ்ஸேவால் காப்பாற்றப்பட்ட குதிரையின் கதை இது. ஆனால் நீட்ஸ்ஸேவுக்குப் பதிலாக, பேலா டார் குதிரையின் உரிமையாளர் மற்றும் அவரது மகளின் வாழ்க்கையைக் கற்பனை செய்கிறார்.
ஒரு பாழடைந்த பண்ணையில் ஆறு நாட்களில், தந்தை, மகள் மற்றும் குதிரை ஆகியோர் திரும்பத்திரும்ப அவர்கள் இத்தனை நாட்கள் செய்துவந்த அதே வேலைகளைச் செய்கிறார்கள் – தண்ணீர் இறைத்தல், வேகவைத்த உருளைக்கிழங்கு சாப்பிடுதல், விலங்கைப் பராமரித்தல் ஆகிய வேலைகளே அவை. சுற்றியிருக்கும் உலகம் சரிவை நோக்கிய விளிம்பில் விழுந்துகொண்டிருப்பதாகத் தெரிகிறது: காற்று ஊளையிடுகிறது, கிணறு வறண்டுவிடுகிறது, அந்நியர்கள் வருகை தருகிறார்கள், இறுதியாக ஒளி கூட மங்குவதாகத் தோன்றுகிறது.
மனித வாழ்க்கையின் அழுந்தும் பாரம் பற்றிய வெளிப்பாடுதான் இந்தப் படம் என்பது பேலா டாரின் கருத்து. ஒவ்வொரு நாளும் ஒரே விதமான வேலைகளைச் செய்துவருவது எத்தனை கடினம்? எத்தனை கொடுமை? ஒரேவிதமான இந்த வேலைகளைத் தினமும் முடிவே இல்லாமல் செய்வது, இவர்களின் உலகத்தில் எதுவோ தவறு இருக்கிறது என்பதைக் காட்டுகிறது என்பது பேலா டாரின் வாதம்.
இந்தப் படம் முக்கியமான உலக சினிமா விருதுகள் பலவற்றை வென்றது. பேலா டார் இது தனது கடைசி திரைப்படம் என்று அறிவித்தார், இதை சினிமாவிலிருந்து விடைபெறும் தனது குறியீடாக வழங்கினார். (ஏன் என்று யோசித்துப் பாருங்கள். ஒரேபோன்று செயல்கள் செய்துவருவதை மையமாகக் கொண்ட படம் இது என்பது ஒரு க்ளூ).
கருப்பொருட்கள் மற்றும் பேலா டாரின் பாரம்பரியம்
பேலா டாரின் படங்கள் திரும்பத் திரும்ப ஒருசில கருப்பொருட்களைச் சுற்றியே சுழல்வதைப் பார்க்கமுடியும்
- தார்மீக, வரலாற்று வெறுமை: பேலா டாரின் பல படைப்புகள் தோல்வியுற்ற அல்லது சிதைந்துகொண்டிருக்கும் சமூக அமைப்புகளின் பின்னணியில் இடம்பெறுகின்றன – சரிந்துபோகும் கூட்டுப் பண்ணைகள், சிதைந்த நகரங்கள், செயலிழந்த குடும்பங்கள் – இவற்றில் கதாபாத்திரங்கள் முன்னேறுவதை விட வட்டங்களில் மாட்டிக்கொண்டு அலைபாய்கின்றன
- விளிம்புநிலை வாழ்க்கைகளும் அதில் இடம்பெறும் மாந்தர்களின் கண்ணியமும்: ’பார்ப்பதற்குச் சோர்வான, சோகமான ஏழை மக்களுக்கும் தங்கள் வாழ்க்கை பிரதிநித்துவப்படவேண்டும் என்ற உரிமை உண்டு’ என்பது பேலா டார் அடிக்கடிப் பேசிய கூற்று. குடிகாரர்கள், ஏமாற்றுக்கார்கள், கிராமத்தில் வாடி வதங்கும் மக்கள் ஆகிய விளிம்பிநிலை மாந்தர்களுக்கும் வாழ்க்கையில் கண்ணியம் அவசியம் உண்டு என்பதையும் அவர் வலியுறுத்திக்கொண்டே இருந்தார் .
- காலம், திரும்பத்திரும்ப வரும் காட்சிகள் & சகிப்புத்தன்மை: பேலா டாரின் நீண்ட டேக்குகள், பார்வையாளர்களை திரைப்படம் நடக்கும் சூழலில் படத்தில் இடம்பெறும் கதாபாத்திரங்கள் சந்திக்கும் கால அளவையே எதிர்கொள்ளக் கட்டாயப்படுத்துகின்றன, கதாபாத்திரங்கள் திரும்பத்திரும்ப செய்யும் வேலைகளின் மூலமும், அவர்கள் சந்திக்கும் வாழ்க்கையின் அலுப்பான தருணங்களின் மூலமும் பேலா டார் இதை சாத்தியப்படுத்துகிறார்.
பொதுவாகவே பேலா டாரின் படங்களை உள்ளது உள்ளபடி கவனித்தால் பல கருத்துகளை நாம் அறியலாம். படம் பார்த்து முடித்தபின் மனித வாழ்க்கையின் துயரம் பற்றி நம் ஒவ்வொருவருக்கும் அவசியம் பல கருத்துகள் எழும். இதுபோன்ற கருத்துகள்தான் வாழ்க்கையைப் பற்றிய பல எண்ணங்களை நமது மனதில் அழித்து இன்னும் செம்மையாக எழுதுகின்றன.
இதுபோன்ற படங்கள்தான் பிற உயிர்களின்மீது கருணை கொள்ளவும், அவர்களின் வாழ்க்கையைப் புரிந்துகொள்ளவும் நமக்கு உதவுகின்றன என்பது எனது தனிப்பட்ட கருத்து. இதனாலேயே பேலா டாரின் திரைப்படங்கள் மிகவும் முக்கியமானவை என்று நான் எண்ணுகிறேன்.
டுரின் ஹார்ஸ் படத்துக்குப் பிறகு, சரஜேவோ நகரில் film.factory என்ற திரைப்படப் பள்ளியை பேலா டார் நிறுவி வழிநடத்தினார், பல்வேறு இடங்களில் திரைப்படங்களைக் கற்பித்தார், புதிய தலைமுறையைச் சேர்ந்த வளரும் திரைப்பட இயக்குநர்களுக்கு வழிகாட்டினார். ஹங்கேரியில் சர்வாதிகாரப் போக்குகளின் வெளிப்படையான விமர்சகராக இருந்தார்.
ஜனவரி 2026 இல் அவர் இறந்ததைத் தொடர்ந்து, திரைப்படங்கள் சார்ந்தவர்களின் அஞ்சலிகள் அவரை உலக சினிமா மற்றும் Slow Cinemaவின் பிதாமகர் என்றும் என்றும், 20-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி மற்றும் 21-ஆம் நூற்றாண்டின் முற்பகுதி சார்ந்த திரைப்பட வரலாற்றில் ஒரு முக்கியமான திரைப்படக் கலைஞர் என்றும் புகழ்ந்தன. அவரது படங்கள் காலஅளவு, யதார்த்தவாதம் மற்றும் விளிம்புநிலை மக்களுக்கான உரிமைகள் பற்றிய விவாதங்களுக்கு மையமாக எப்போதுமே இருந்துகொண்டிருக்கின்றன.
எது எப்படி இருந்தாலும், இதுவரை இல்லாத அளவு மிக வித்தியாசமான திரைப்படக் கலையைத் தொடர்ந்து நமக்குக் காட்டிக்கொண்டிருந்த பேலா டார் ஒரு நல்ல இயக்குநர் என்பதில் எந்த விவாதமும் எழப்போவதில்லை. அவரது படங்கள் பார்த்தால் சினிமா எடுப்பதில் இருக்கும் மிக முக்கியமான பல கூறுகள் புலப்படும்.











