காயத்ரி ஆர்.
ஆங் லீ (ANG LEE) அமெரிக்காவில் வசிக்கும் தைவானிய இயக்குநர். ஒவ்வொரு படங்களுமே அவருக்கு பெயரையும் புகழையும் பெற்றுத் தந்திருக்கின்றன. Sense and Sensibility, Broke back Mountain, Life Of Pi, Crouching Tiger and Hidden Dragon, Lust படங்களின் இயக்குநர். தற்போது ப்ரூஸ் லீயின் பயோ பிக்கை அவரது மகன் மேசன் லீயை நடிக்க வைத்து இயக்கிக் கொண்டிருக்கிறார்.
சினிமாத் தொழில்நுட்பத்தின் எதிர்காலத்தை முன்பே கணித்து படம் இயக்கியவர். உணர்வுப்பூர்வமான கதை சொல்லலை தொழில்நுட்பத்தின் உதவியோடு சொல்லக்கூடியவர். 3D, virtual Reality, சினிமாவின் எதிர்காலத் தொழில்நுட்பம் என பேசியிருக்கிறார். அதன் மொழியாக்கம் இது.
மிஸ்டர் லீ, நவீன திரைப்படத் தொழில்நுட்பம் படம் பார்க்கும் நமக்கு புதிதாக என்ன அனுபவத்தை கொடுக்கிறது நினைக்கிறீர்கள்?
அதை தொழில்நுட்பம் என்று அழைப்பதை நான் விரும்பவில்லை. திரைப்படம் என்பதே தொழில்நுட்பம்தான். பல் பரிமாண திரைப்படத் தயாரிப்பு (multidimensional filmmaking) என்பது ஒரு வடிவம் என்று நான் நினைக்கிறேன். அது ஒரு சினிமா மொழி. இந்த வடிவம் துல்லியமானது.. அப்படியே எதையும் காட்டக்கூடியது.. மிகப்பெரிய வித்தியாசம் இங்கு என்னவென்றால், நீங்கள் 2Dதிரைப்படத்தில் திரையில் என்னக் காட்டபப்டுகிறதோ அதை அப்படியே ஒன்றிப்போய் பார்க்கிறீர்கள்.
எதைக் காட்டுகிறார்களோ அதைப் பார்க்கிறீர்கள். ஆனால் இப்போதெல்லாம், படம் பார்ப்பது மிகவும் தனிப்பட்ட விஷயமாகிவிட்டது. ந படத்தினுள் நீங்களும் இருக்கிறீர்கள். பழைய தட்டையான படங்களை இப்போதிருக்கும் படங்களின் நேர்த்தியுடன் ஒப்பிடவே முடியாது.
ஆனால் இந்த வடிவம் அப்போது இருந்திருந்தாலும், Gone with the Wind-ஐ 3D-யில் பார்க்க நாம் விரும்பியிருக்க மாட்டோம் இல்லையா.
உண்மையில் நீங்கள் அதற்குப் பழகிவிட்டால், அதை வைத்து என்ன செய்வது என்று உங்களுக்குத் தெரிந்துவிட்டால், நீங்கள் எதையும் செய்ய முடியும். நகைச்சுவை, இசை நாடகம்…என்று எதையும் செய்ய முடியும். இப்போது மாற்றம் நடக்கும் தருணம். முன்பு, அகலத்திரை சினிமாஸ்கோப் என்பது பிரம்மாண்ட சினிமாப் படங்களுக்கு மட்டுமே உபயோகித்தார்கள். சாதாரண குடும்பக் கதைகளுக்கு அல்ல. அது இப்போது உண்மையல்ல. சில வண்ணங்கள் மட்டுமே வண்ணப் படங்களுக்கு பயன்படுத்தப்பட்டன, அதே நேரத்தில் குடும்ப நாடகங்கள் கருப்பு வெள்ளையில் வெளிவந்தன. இப்போது அப்படியில்லை. அதற்குப் பழகி, அந்த ஊடகத்தில் உள்ள கலைத்திறனைக் கண்டுபிடிப்பது ஒரு விஷயம். இதுவும் அப்படியே என்று நான் நினைக்கிறேன்.
ஒரு படத்தை 3D ல் நாம் பார்க்கவில்லை என்றால், நாம் ஏதாவது ஒன்றை, அதாவது அழகியலின் கூடுதல் அடுக்கை இழக்கிறோமா?
பல பரிமாண படங்களில் X, Y ,Z ஆகிய மூன்று அச்சுகள் உள்ளன என்று நான் நினைக்கிறேன். 3D -ல் பார்க்காவிட்டால் நீங்கள் Z-அச்சை இழப்பீர்கள்! (சிரிக்கிறார்) ஒன்றை எப்படிக் காட்டுகிறார்கள், எப்படி stage செய்திருக்கிறார்கள் என்பதை நிச்சயமாக நீங்கள் வேறொரு கோணத்தில் பார்ப்பீர்கள். இரு கண்களும் தனித்தனி காட்சிகளைப் பார்ப்பது போன்றது அது. குறைந்த வடிவங்களில் (lower formats) அதே விஷயத்தைப் பார்க்க முடியும். ஆனால் நீங்கள் தெளிவான ஒரு பரிமாணத்தை இழப்பீர்கள். 3D என்பது 3D ஆக மட்டுமல்லாமல், தெளிவாக, பிரகாசமாகப் பார்க்கும் ஒரு பரிமாண மொழி என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
பல் பரிமாண திரைப்படத் தயாரிப்பில் (multidimensional filmmaking )உங்களுக்கு எப்போது ஆர்வம் தொடங்கியது?
அது Life of Pi படத்திலிருந்து தொடங்கியது. Life Of Pi புத்தகத்தை முதலில் எப்படி அணுகுவது என்று எனக்குத் தெரியவில்லை. வேறு ஒரு கோணத்தை எடுத்துக் கொள்ளலாமா என்று நினைத்தேன்… முட்டாள்தனமான யோசனை என்றாலும் வேறு ஒரு கோணம் புத்தகத்தை தத்துவார்த்தமாக அணுக எனக்கு உதவும் என்று நினைத்தேன். புத்தகத்தில் இருப்பதுபோல் நான் முதல் நபர் மற்றும் மூன்றாம் நபர் கதைசொல்லலைப் பயன்படுத்தினேன். சரியான விழுமியம் அந்தக் கதையிலேயேதான் இருக்கிறது. அதைப் படத்தில் காட்டுவது மிகவும் கடினம். பார்வையாளர்களின் ஒருமித்த கவனம் வேண்டியிருந்தது. மட்டுமல்லாமல் படத்தைக் காண்பிக்கும் போது மக்கள் அதை உண்மை என்று நம்ப வேண்டும், இல்லையா?
அதாவது படத்துக்கும் அவர்களுக்குமான உணர்ச்சிபூர்வமான தொடர்பு வேண்டும்…இல்லையா?
ஆமாம். ஒரு வித்தியாசமான கோணத்துட,ன், Z-அச்சில், வேறுபட்ட கோணத்தில் வைக்க முடிந்தால் ஒருவேளை தப்பித்துவிடலாம் என்று நினைத்தேன். அப்படித்தான் நான் தொடங்கினேன். அதற்குமுன் அப்படி எதையும் செய்ததில்லை. ஆனால் டிஜிட்டல் சினிமா அதைத்தான் செய்ய வேண்டும் என்பதை நான் விரைவாக உணர்ந்தேன். அதற்கென்று ஒரு பரிமாணம் இருக்க வேண்டும். அது சாதாரண படம் செய்வதைச் செய்யக்கூடாது. அதற்கென்று விஷயம் இருக்க வேண்டும். அதனால் நான் இந்தப் பயணத்தைத் தொடங்கினேன். நாம் இன்னும் அதன் மேற்பரப்பைக் கூட கீறவில்லை என்று நினைப்பதால் எனக்கு அதன்மேல் ஆர்வம் இன்னும் அதிகமாகிறது. எனக்கு இப்போது 2D படங்கள் செய்ய ஈர்ப்பு இல்லை. எழுபதுகளில் இருந்து நாம் பலவற்றைக் கற்றுக்கொண்டிருக்கிறோம். இனி, அதைச் சிறப்பாகச் செய்வது எப்படி என்று பார்க்க வேண்டும்.
3D படங்களை நாம் முழுமையாக ஏற்றுக்கொள்ள வேண்டுமானால் அவற்றில் இன்னும் சில மாற்றங்கள் செய்யப்பட வேண்டும். இல்லையா?
நிச்சயமாக. என்னுடைய சொந்த அனுபவம்… நல்லதெளிவுடன், higher frame rateல் ஒரு 3D படம் பார்ப்பதுதான் சரியானது. அதைத்தான் நீங்கள் செய்ய வேண்டும். அப்படிச் செய்யும்போது அங்கு ஆக்ஷன் சீக்வென்ஸசை விட முக்கியமான ஒன்று எனக்குக் காணக் கிடைக்கிறது. அது உணர்ச்சிபூர்வமான மனித முகம். ஆனால் அது, நீங்கள் கற்றுக்கொள்ளும் அளவு இயற்கையான நடிப்பையும் சிக்கலான உணர்வுகளையும் பிரதிபலிக்கும் அற்புதமான முகங்களாக இருக்க வேண்டும். படிப்பதற்கு நம் முகங்களை விட சுவாரஸ்யமானது எதுவும் இல்லை. கடினமாக இருந்தாலும் வாழ்க்கையில் நம் மிக முக்கியமான வேலை, ஒருவர் முகத்தை இன்னொருவர் படிப்பதுதான். மக்கள் 3D ஐ தந்திரங்களுடன், காட்சியுடன் அல்லது ஆக்ஷனுடன் தொடர்புபடுத்துகிறார்கள். 2D-யிலிருந்து 3D-க்கு வரும்போது ஆக்ஷனை விட முகத்தின் close-up ஷாட்டில் இன்னும் நிறைய உங்களுக்குக் கிடைக்கும். அதுதான் Billy Lynn’s Long Halftime Walk படத்தின் பலமாக இருந்தது.
அப்படியானால், நாம் இந்தப் படங்களை எப்படிப் பார்க்கிறோம் என்பதைப் போலவே இந்தப் படங்களின் தரம், அவை எவ்வாறு தயாரிக்கப்படுகின்றன என்பதையும் பொறுத்தது என்று நீங்கள் நினைக்கிறீர்களா?
Life of Pi படம் வெளியானபோது விம் வெண்டர்ஸும் நானும் பெர்லினில் உள்ள திரைப்பட மாணவர்கள் குழுவிடம் பேசிக்கொண்டிருந்தோம். 3D-யில் செயல்திறனை சரிசெய்ய வேண்டும் என்று சொன்ன ஒரே திரைப்படத் தயாரிப்பாளர் அவர்தான். வேறு யாரும் அப்படிச் சொல்லி நான் கேள்விப்பட்டதில்லை. ஏனென்றால் பொதுவாக பல் பரிமாணப் படங்களைப் பார்த்தாலும் இன்னும் பழைய தட்டையான படங்களையே நினைத்துக்கொண்டு, அதற்கான எதிர்காலத்தைப் பற்றியே நினைத்துக்கொண்டிருப்பார்கள். இந்த ஹைப்பர்ரியல் அல்லது 3D திரைப்படங்களுக்கு அவர்கள் எதிர்வினையாற்றுகிறார்களா? எனக்குத் தெரியாது. சில நேரங்களில் திரைப்படங்கள் ஹிட் அடிக்கலாம். இல்லாமலும் போகலாம். ஸ்டுடியோக்கள், நிர்வாகிகள், யாருக்கும் தெரியாது ஒரு படம் என்னவாகப் போகிறதென்று.Life of Pi வெளியானபோது, நான் உட்பட அனைவரும் நிறைய பணத்தை இழப்போம் என்று எதிர்பார்த்தோம்.
உண்மையாகவா?
ஆமாம், அமெரிக்காவில் கூட, அது பெரிய அளவில் போகவில்லை. மந்தமாகவே இருந்தது… 85% வருவாய் வட அமெரிக்காவிற்கு வெளியே இருந்துதான் வந்தது. அது இங்கே கொஞ்சம் அங்கே கொஞ்சம் என்று பார்வையாளர்களை வசப்படுத்தியது. படத்தின் கரு முக்கியமானதாக இருந்தாலும்கூட என்ன நடக்கும் என்று நமக்குத் தெரியாது. ஒரு புதிய, உண்மையான கலை வடிவத்திற்கான சாத்தியக்கூறுகள் அருகே இருப்பதாக நினைக்கிறேன். நாம் ஓடிச் சென்று அதை பற்றிட வேண்டும்.
மெய்நிகர் யதார்த்தம் (virtual reality) போன்ற புதிய கலை வடிவங்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? ஒரு கட்டத்தில் நீங்கள் அதை உபயோகப்படுத்துவதை கற்பனை செய்ய முடியுமா?
இன்னும் இல்லை! டைரக்டர், தயாரிப்பாளர், கதாசிரியர் என்ற சினிமா அனுபவத்தை நான் நம்புகிறேன். நீங்கள் உங்கள் பார்வையாளர்களுக்கு ஐடியாக்களை விற்கிறீர்கள், படங்களை விற்கிறீர்கள், கதை சொல்கிறீர்கள். அந்தக் கதைக்குள், குறிப்பாக புதிய வடிவங்களுடன், கடந்த காலத்தை விட அதிகமாக சுற்றித் திரிந்து பார்வையாளர்களுக்கு ஒரு திசையை, கதைக்களத்தை கொடுக்க விரும்புகிறீர்கள். ஆனால் virtual realityல் நீங்கள் சொந்தமாக சுற்றித் திரிய வேண்டியிருக்கும். இன்றுவரை அப்படி எப்படிக் கதை சொல்வது என்று நமக்குத் தெரியாது. அல்லது எனக்குத் தெரியாது. இது நாம் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய ஒன்று என்பது தெரியும், ஆனால் அதை எப்படிப் பயன்படுத்துவது? நமக்கு இன்னும் சரியாகத் தெரியவில்லை. என்னைப் பொறுத்தவரை படத்தின் தரத்தைக் கட்டுப்படுத்துவது பற்றி நான் மேலும் தெரிந்துகொள்ள விரும்புகிறேன். இது Thrilla in Manilaவை மேம்படுத்துவதில் எனக்கு உதவும். டிஜிட்டல், தொழில்நுட்ப மற்றும் கலை ரீதியாக எங்களுக்கு உதவி தேவை என்று நான் நினைக்கிறேன், இதற்கிடையில், பார்வையாளர்களை வரவழைக்கவும் விநியோகத்திலும் தொடர்ந்து பணியாற்றுவோம். வேறு சில திரைப்பட தயாரிப்பாளர்கள் என்னுடன் சேர விரும்புவார்கள் என்ற நம்பிக்கை எனக்குண்டு.











