The Talkie
Saturday, April 11, 2026
  • Login
  • Register
  • thetalkie
  • ஆளுமைகள்
  • திரைக்கதைகள்
  • உரையாடல்
  • கட்டுரைகள்
    • இந்தியத் திரைப்படங்கள்
    • உலகத் திரைப்படங்கள்
    • தமிழ்த் திரைப்படங்கள்
    • ஓடிடி திரை
  • தொடர்கள்
    • ட்ரெண்டு கொட்டாய்
    • திரை புத்தகம்
    • ஸ்டார்ட் கேமரா
    • I CALL THE SHOTS
    • குரு தத் 100
    • டேபிள் டாப்
  • தொடர்பு
No Result
View All Result
The Talkie
  • thetalkie
  • ஆளுமைகள்
  • திரைக்கதைகள்
  • உரையாடல்
  • கட்டுரைகள்
    • இந்தியத் திரைப்படங்கள்
    • உலகத் திரைப்படங்கள்
    • தமிழ்த் திரைப்படங்கள்
    • ஓடிடி திரை
  • தொடர்கள்
    • ட்ரெண்டு கொட்டாய்
    • திரை புத்தகம்
    • ஸ்டார்ட் கேமரா
    • I CALL THE SHOTS
    • குரு தத் 100
    • டேபிள் டாப்
  • தொடர்பு
No Result
View All Result
The Talkie
Subscribe
Home திரைக்கதைகள்

AMADEUS திரைக்கதை

The Talkie by The Talkie
March 15, 2025
in திரைக்கதைகள்
A A
1
AMADEUS திரைக்கதை
Share on WhatsappShare on FacebookShare on Twitter
Author Icon ஜா.தீபா


AMADEUS திரைப்படம் 1984ஆம் ஆண்டு வெளிவந்தது. இன்றளவும் சிறந்த திரைக்கதைகளில் ஒன்றாக எல்லோராலும் அங்கீகரிக்கப்பட்டத் திரைப்படமாக இருக்கிறது.

மொசார்ட் என்கிற இசைமேதையின் புகழும், இசையும் இன்று அனைவரையும் அடைந்த ஒன்று. அவர் வாழும் காலத்திலும் அவர் பிரபலமாகவே இருந்தார். ஆனால், வறுமையில் தான் அவரால் வாழ முடிந்தது. 

மொசார்ட்டின் இசை அவர் காலத்துக்குப் பிறகே தனது முழுமையான அங்கீகாரத்தைப் பெற்றது. அவருடைய சமகாலத்தில் வாழ்ந்த அந்தோனியோ சலேரி என்கிற இசையமைப்பாளர் வூல்ஃப்காங் அமேடியஸ் மொசார்ட் மீது பொறாமையும் எரிச்சலும் கொண்டிருந்தார் என்பதும் மிக இளவயதிலேயே மொசார்ட் மரணமடைந்ததற்கு இந்தப் பொறாமை காரணமாக இருந்தது போன்ற  செவிவழிச் செய்திகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு நாடகம், பின்னாட்களில் திரைப்படமாகவும் வெளிவந்து நீடித்த புகழோடு விளங்குகிறது.

அமேடியஸ் மீது சலேரி கொண்ட பொறாமை என்பது மறைந்து சலேரிக்கு யார் மீது தீராத வன்மமும் பகையும் இருந்தது என்பதில் படம் முடிவடைகிறது. நாம் ஒருசேர மொசார்ட் மீதும் சலேரி மீதும் நம்முடைய இயலாமையின் பெருமூச்சினை வெளிக்காட்டும் தருணம் அது.

இந்தப் படத்தின் வெற்றிக்குப் மிகப் பலமான அடித்தளமாக இருந்தது ரஷ்ய எழுத்தாளர் அலெக்ஸாண்டர் புஷ்கின், மொசார்ட் மற்றும்  சலேரியைக் கொண்டு எழுதிய ஒரு கவிதை நாடகம். இதனை அடிப்படையாக்க் கொண்டு பீட்டர் ஷாஃபர் எழுதிய திரைக்கதையை மிலோஸ் ஃபோர்மன் இயக்கினார். 

53 விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டு 40 விருதுகளை வென்றது இந்தத் திரைப்படம்.

AMADEUS – திரைக்கதையின் இறுதிவடிவம் இது

வயதான சலேரியின் வீடு – இரவு/ INT – 1823 இருள்.

வயதான ஒருவரின் குரல் வேதனையிலும் வலியிலும் கத்துவது கேட்கிறது. அது வயதான சலேரியின் குரல். ஆங்கிலத்திலும், நடுநடுவே இத்தாலியிலும் கத்துகிறார்.

மொசார்ட்!மொசார்ட்? மொசார்ட்! என்னை மன்னித்துவிடு.

உனது கொலைக்காக என்னை மன்னித்துவிடு! மொசார்ட்!

மெல்லிய வெளிச்சம் திரையில் பரவுகிறது. அதனூடே, பதினெட்டாம் நூற்றாண்டின் பாணியிலான மேற்சுவர் தூண்கள் காட்டப்படுகின்றன. கல்லாலான படிகளையும் பார்க்க முடிகிறது. மேலிருந்து பார்ப்பது மாதிரியான பாயின்ட் ஆஃப் வியூ-ல் மாடிப்படிகள்  காட்டப்படுகின்றன. அந்த மாடிப்படிகளில் கையில் மெழுகுவர்த்திகளுடன் சலேரியின் சேவகர் மேலேறி வருகிறார். அவருடன் சலேரியின் சமையல் பணியாளரும் ஏறிவருகிறார். அவர் கேக்குகளும், பிஸ்கட்டுகளும் உள்ள தட்டினை எடுத்து வருகிறார்.  சேவகர் நடுத்தர வயதுடையவர், ஒல்லியான தேகம் கொண்டவர். சமையல்காரர் தடிமனானாவர். இத்தாலியர். குளிர்காலம் என்பதால் இருவரும் சால்வைகளை அணிந்திருக்கிறார்கள். அவர்கள் காலில் கனமான செருப்புகள் இருக்கின்றன. மூச்சு வாங்கிக்கொண்டே இருவரும் ஏறி வருகிறார்கள். மெழுகுவர்த்தியின் வெளிச்சம் சுவற்றில் படுகிறபோது அந்த வீட்டின் பழமையான பரிதாபகரமான தோற்றம் தெரிகிறது. அவர்கள் சலேரியின் அறையை அடையும்போது ஒரு பூனை அவர்களது கால்களுக்குள் புகுந்து ஓடுகிறது

சேவகர் கதவின் கைப்பிடியைத் திறக்க முயற்சிக்கிறார். அது உள்பக்கமாக பூட்டப்பட்டிருக்கிறது. சலேரியின் குரல் பின்னணியில் கேட்டுக் கொண்டே இருக்கிறது. குரலின் ஒலி ஏறிக்கொண்டே போகிறது. “எனக்கு கருணை காட்டு..இந்தக் கிழவனுக்கு கருணை காட்டு.”

சேவகர் கதவினை மெதுவாகத் தட்டுகிறார். “உங்களுக்காக என்ன எடுத்து வந்திருக்கிறோம் பாருங்கள்..கதவைத் திறங்கள்” என்கிறார்.

சலேரியின் குரல் உயர்ந்தும் அமைதியாகவும் இருக்கிறது. ஒரு ஜன்னல் திறப்பது போன்றதான ஒலி கேட்கிறது.

“மொசார்ட்..மொசார்ட்..கேளு? நான் ஒப்புக் கொள்கிறேன்”

என்று சலேரியின் குரல் கேட்க, இரண்டு பணியாளர்களும் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்கிறார்கள். சேவகர் மெழுகுவர்த்திகளை சமையல் பணியாளரிடம் தந்துவிட்டு அவரது தட்டில் இருக்கும் கேக்கினை எடுத்துக் கொள்கிறார். பின்னர் வேகமாக படிகளில் இறங்குகிறார். 

CUT TO:

சலேரியின் வீடு இருக்கும் தெரு – வியன்னா – இரவு – EXT

தெரு முழுவதும் மக்கள் நிரம்பியிருக்கின்றனர். பத்து  குதிரை வண்டிகள் ஓட்டுநர் சகிதம் நிற்கின்றன. ஐந்து குழந்தைகள், பதினைந்து பெரியவர்கள், இரண்டு காவல்காரர்கள், பதினைந்து ஜோடிகள், ஒரு கைவண்டி மற்றும் மூன்று நாய்கள் உள்ளன. அது குளிர்கால இரவு. பணி பெய்து கொண்டிருக்கிறது. மக்கள் தங்களது உடைகளை குளிருக்கு இதமாக அணைத்தபடி சென்று கொண்டிருக்கின்றனர். அவர்கள் முகத்தையும், கழுத்தையும் குளிருக்காக மூடியிருக்கின்றனர். பார்ப்பதற்கு கேளிக்கை விடுதியில் இருந்து திரும்புபவர்கள் போல காணப்படுகிறார்கள்.

இப்போது அவர்கள் அந்த பழைய வீட்டின் மாடியைப் பார்த்தபடி செல்கிறார்கள். 

அந்த வீட்டின் மேல்மாடி ஜன்னல் திறந்திருப்பது, தெருவில் இருந்து பார்த்தால் தெரிகிறது. ஜன்னலின் அருகில் சலேரி நின்று கொண்டிருக்கிறார். வானத்தைப் பார்த்தபடி எதையோ முணுமுணுக்கிறார். வெள்ளை முடி கொண்ட இத்தாலியர். எழுபது வயது மதிக்கத்தக்கவர். கறை படிந்த ஒரு கவுனை அணிந்திருக்கிறார்.

“மொசார்ட் என்னை மன்னித்துவிடு…நான்தான் உன்னைக் கொன்றேன்” 

என்கிறார்.

அப்போது அவரது அறைக்கதவு உடைத்து திறக்கப்படுகிறது. சேவகர் உள்ளே அவசரமாக நுழைகிறார். அவர் கையில் கேக் உள்ளது. 

வயதான சலேரி இப்போதும் “மொசார்ட் என்னை மன்னித்து விடு…நான் தான் கொன்றேன்” என்பதைத் திரும்பத் திரும்ப சொல்கிறார்.                         

சேவகர் தெருவுக்குச் சென்று அங்கிருந்து ஜன்னலை நிமிர்ந்து பார்க்கிறார். வயதான சலேரியிடம் சேவகர் உள்ளே போய்ப் படுத்துக் கொள்ளும்படி கெஞ்சுகிறார். சலேரி அதைப் பொருட்படுத்தாமல் சொன்னதையே சொல்லிக் கொண்டிருக்கிறார். தெருவில் போகிறவர்கள் நின்று  மாடியைப் பார்த்துக்கொண்டே நிற்கிறார்கள்.         

சலேரியை சேவகர் திரும்பவும் போகுமாறு சொல்கிறார். சேவகரை எரிச்சலுடன் பார்த்துவிட்டு, வேகமாக ஜன்னல் கதவினை அறைந்து சாற்றுகிறார் சலேரி. ஜன்னலின் கண்ணாடி வழியே கீழே தெருவில் இருந்து தன்னை பார்க்கும் சிறு கூட்டத்தினைப் பார்க்கிறார். அவர்களும் சேவகரை குழப்பமாகப் பார்க்கிறார்கள்.

அவர்களை சமாதானம் செய்யும் நோக்கில் “ஒன்றுமில்லை..நீங்கள் போங்கள்..அவருக்கு சற்று” என்று நிறுத்திவிட்டு மூளை சரியில்லை என்பதை சைகையால் காட்டுகிறார் சேவகர். 

CUT TO:

சலேரியின் வீடு – இரவு – INT

சமையல் பணியாளர் ஒரு கையில் கேக்குடனும், மறுகையில் மெழுகுவர்த்தியுடனும் அறையின் வாசலில் நின்று கொண்டிருக்கிறார். சேவகர் மூச்சு வாங்கிக் கொண்டே அங்கு வருகிறார்.

“திறந்தாரா?” என்று கேட்க, சமையல் பணியாளர் பயத்துடன் இல்லை என்று தலையாட்டுகிறார். சேவகர் மீண்டும் கதவைத் தட்டுகிறார். கதவைத் திறக்கச் சொல்கிறார். 

அப்போது அறைக்குள் இருந்து எதுவோ கீழே விழும் கனத்த சத்தம் கேட்கிறது. அதனைத் தொடர்ந்து உள்ளிருந்து பயங்கரமான உறுமல் சத்தமும் கேட்கிறது. சமையல் பணியாளரும், சேவகரும் பயந்து மீண்டும் கதவைத் திறக்கச் சொல்லிக் கேட்கிறார்கள. கதவின் கீழ் உள்ள இடைவெளியில் இரத்தம் வழிந்து வருகிறது. பயத்துடன் இருவரும் அதையே பார்க்கிறார்கள். 

சமையல் பணியாளரின் கையில் உள்ள உணவுத் தட்டு அவரது கை நடுக்கத்தினால் ஆடுகிறது. கேக் சிந்தி சிதறுகிறது.  மெழுகுவர்த்தியைக் கீழே வைத்துவிட்டு இருவரும் பித்து பிடித்தது போல இடிக்கிறார்கள். கதவுத் திறந்து கொள்கிறது.

இருவரும் ஒரு புயல்காற்று போல உள்ளே போகிறார்கள். இப்போது பின்னணியில் மொசார்ட்டின் 25வது சிம்பொனி (the little G Minor) ஒலிக்கிறது. இப்போது அந்தப் பணியாளர்கள் பார்ப்பதை நாமும் பார்க்கிறோம்.
 

CUT TO:

வயதான சலேரியின் வீடு – இரவு – INT

வயதான சலேரி தரையில் இரத்தத்துக்கு நடுவில் கிடக்கிறார். அவரது கையில் கத்தி இருக்கிறது. அவரது கழுத்தை அவர் அறுத்திருக்கிறார். உயிரோடு இருக்கிறார். சேவகரையும், சமையல் பணியாளரும் பார்த்து சைகையில் எதோ சொல்லவருகிறார். அவர்கள் அவரை நோக்கி ஓடுகிறார்கள். அந்த அறையில் இருக்கும் பொருட்கள் நமக்குத் தெரிகின்றன. பழைய நாற்காலி. புத்தகங்கள் அடுக்கப்பட்டிருக்கும் பழைய மேஜைகள், பியானோ, பூ ஜாடிகள் போன்றவை. சேவகரும், சமையல் பணியாளரும்  சலேரியைத் தூக்குகின்றனர். அவரது கழுத்தில் துணியை வைத்து இரத்தப் போக்கை நிறுத்த முயற்சிக்கின்றனர்.

CUT TO:

நடனமாடும் அறை (BALL ROOM) – இரவு – INT

நடனமாடும் ஜோடி 25 பேர், ஐம்பது விருந்தாளிகள், பத்து சேவகர்கள் மற்றும் முழு இசைக்குழுவும் இருக்கிறார்கள். 

இசை சற்று மெலிதாக ஒலிக்க, நாம் முகமூடி அணிந்து கொண்டு ஆடுகிற நடனத்தைப் பார்க்கிறோம். 

1820களில் பிரபலமாக இருந்த குழுவாக ஆடும் நடனத்தை ஆடிக்கொண்டிருக்கிறார்கள்.

CUT TO:

சலேரியின் வீட்டின் வெளிப்புறம் – இரவு – EXT

இப்போது அந்த நடன அறையில் ஒலித்த இசை உயர்ந்து கேட்கிறது/ வயதான சலேரியை அவரது வீட்டுக்குள் இருந்து ஸ்ட்ரெச்சரில்  இரண்டு பேர் தூக்கி வந்து குதிரை பூட்டிய வண்டியில் வைக்கிறார்கள். இதனை உயரமான தொப்பி அணிந்த நடுத்தர வயதுள்ள மருத்துவர் மேற்பார்வை செய்து கொண்டிருக்கிறார். அவர் மருத்துவர் குல்டன்.  குல்டன் வண்டிக்குள் ஏறி சலேரியின் அருகில் அமருகிறார். ஓட்டுநர் சாட்டையை சொடுக்க, பனி பொழியும் அந்த இரவில் குதிரை வண்டி வேகமெடுக்கிறது.

குதிரை வண்டி வெவ்வேறு தெருக்களில் செல்லும் காட்சிகள் – MONTAGE

வியன்னாவின் நான்கு வீதிகளும் , குதிரை வண்டிக்குள்ளும் – இரவு – INT-EXT

 குதிரை வண்டி தெருக்களில் போய்க் கொண்டிருக்கிறது. குதிரைகள் கனைக்கும் ஒலி கேட்கிறது. வண்டியினுள் அரை மயக்கத்தில் இருக்கிறார் சலேரி. மருத்துவர் குல்டன் சலேரியை பரிதாபகரமான பார்வை பார்க்கிறார். குதிரை வண்டி வியன்னாவின் பொது மருத்துவமனை வாசலில் வந்து நிற்கிறது. 

 CUT TO:

மருத்துவமனையின் காரிடர் – பின் மதியப்பொழுது – INT

பரந்த, வெள்ளையடிக்கப்பட்ட காரிடர். மருத்துவர் குல்டன் பாதிரியாருடன் நடந்து வருகிறார். பாதிரியார் நாற்பது வயது மதிக்கத்தக்கவர். அக்கறை கொண்டவர் போல தோற்றம் கொண்டவர். அதேநேரம் தன் மீதும் அக்கறை கொண்டவர் போல காணப்படுகிறார். பாதிரியாரின் பெயர் வோக்லர். அந்த மருத்துவமனைக்கான பாதிரியார். இவர்கள் அந்தக் காரிடாரில் நடக்கையில் நாம் சில நோயாளிகளைப் பார்க்கிறோம். அவர்களில் சிலர் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் என்பது பார்த்ததும் தெரிந்து கொள்ள முடிகிறது. எல்லோருமே வெள்ளை நிற உடையை அணிந்திருக்கிறார்கள். மருத்துவர் குல்டன் அடர் நிறத்தில் மருத்துவர்களுக்கான கோட் அணிந்திருக்கிறார். பாதிரியார் நீண்ட அங்கி அணிந்திருக்கிறார்.

மருத்துவர் குல்டன் சலேரியின் உடல்நிலை குறித்து சொல்லி வருகிறார். “ஒருவர் தனது தொண்டையை அறுத்துக் கொள்வதென்பது எல்லோரும் நினைப்பது போல சாதாரணமானது அல்ல”

என்று பேசிக்கொண்டே வருகிறபோது ஒரு கதவின் முன்பாக வந்து நிற்கிறார்கள்.

“நான் உங்களுடன் உள்ளே வர வேண்டுமா” என குல்டன் கேட்க, வேண்டாம் என்கிறார் பாதிரியார்.

பாதிரியார் வோக்லர் அறைக்குள் செல்கிறார்.

CUT TO:

வயதான சலேரியின் மருத்துவமனை அறை – பின் மதியப்பொழுது – INT

அந்த மருத்துவமனையிலேயே நல்லதொரு அறை என்று தெரிகிறது. அங்கு ஒரு படுக்கையும், மெழுகுவர்த்தி கொண்ட மேஜையும், நாற்காலிகளும், பத்தொன்பதாம் நூற்றாண்டின் பியானோவும் இருக்கின்றன. பாதிரியார் வோக்லர் உள்ளே நுழைகையில், சலேரி சக்கர நாற்காலியில் அமர்ந்திருக்கிறார். ஜன்னலுக்கு வெளியே பார்த்துக் கொண்டிருக்கிறார். பாதிரியார் அறையின் கதவை மூடிவிட்டு சலேரிக்குப் பின்னால் அமைதியாக நிற்கிறார்.

சலேரியை மரியாதையுடன் அழைக்கிறார்.

வயதான சலேரி திரும்பிப் பார்க்கிறார். அவருடைய  கழுத்தைச் சுற்றி காயத்துக்கான கட்டு போடப்பட்டிருப்பது தெரிகிறது. மருத்துவமனையில் தரப்பட்ட உடையை அணிந்திருக்கிறார். அதற்கு மேல் அவர் கௌரவக் குறியீடான மெடல்களையும், சங்கிலியையும் அணிந்திருக்கிறார். இவற்றை அவருக்கு சக்கரவர்த்தி தந்திருக்கிறார் என்பதை பின்னால் காட்டப்போகிறோம்.

வோக்லரிடம் சலேரி என்ன வேண்டும் என்று கேட்கிறார். வோக்லர் தன்னை பாதிரியார் என்று அறிமுகம் செய்து கொள்கிறார். சலேரிக்கு ஏதேனும் தன்னிடத்தில் சொல்ல வேண்டுமா என்றும் கேட்கிறார். சலேரி அப்படியெல்லாம் ஒன்றுமில்லை என்னைத் தனியாக இருக்க விடுங்கள் என்கிறார். “ஒரு ஆன்மாவை வாதையுடன் தனிமையாக விட முடியாது” என்கிறார் பாதிரியார். “கடவுளுக்கு முன் எல்லாரும் சமமானவர்கள்” என பாதிரியார் சொல்ல, “அப்படியா? எல்லாருமா” என்று கேட்கும் சலேரி “உனக்கு இசை தெரியுமா?” என்று கேட்கிறார். பாதிரியார் “கொஞ்சம் கற்றுக்கொண்டேன்” என்கிறார். சலேரி ஒரு இசைத்துணுக்கை பியானோவில் வாசிக்கிறார். “இது யாருடையது என்று தெரியுமா?” என்று கேட்க, பாதிரியார் “தெரியவில்லை..நான் கேள்விப்பட்டதில்லை” என்கிறார். “எப்படி இது உங்களுக்குத் தெரியாமல் போனது. அந்தக் காலத்தில் இது பிரபலமான இசைத்துணுக்கு…பரவாயில்லை…இது தெரியுமா” என்று மற்றொரு இசைத்துணுக்கை வாசிக்கிறார். 

ஓபரா நடக்கும் இடம் – இரவு – INT – 1780களில்

கேதெரீனா, இருபத்தி நான்கு வயது. பெர்சிய புராதன கால உடை அணிந்திருக்கிறார். உச்சஸ்தாயியில் மேடையில் பாடிக்கொண்டிருக்கிறார். சலேரி அவளுக்கு முன் நின்று அந்த இசை நாடகத்தை நடத்திக் கொண்டிருக்கிறார். பார்வையாளர்கள் ஆர்ப்பாட்டமாய் கைத்தட்டுகிறார்கள்.
 

CUT TO:        

வயதான சலேரியின் மருத்துவமனை அறை – பின் மதியப்பொழுது – 1823 – INT

வயதான சலேரி பியானோவில் இருந்து கையை எடுக்கிறார். வோக்லர் தனக்கு அந்த இசைத்துணுக்கைப் பற்றித் தெரியாததற்கு  வருத்தம் தெரிவிக்கிறார்.   “என்னுடைய பிரபலமான இசைத்துணுக்கு இது. ஐரோப்பாவில் இருந்து கொண்டு எப்படி இது தெரியாமல் இருக்கிறாய்..நான் நாற்பது ஒபேராக்கள் இயற்றியிருக்கிறேன். இதைக் கேளு” என்று   வேறு ஒரு இசைத்துணுக்கை வாசிக்கிறார்.                   

 அவர் மொசார்ட்டின் Eine Kleine Nachtmusikஐ வாசிக்கிறார். பாதிரியார் தலையை ஆட்டுகிறார். சட்டென்று புன்னகைக்கிறார். அந்த இசையோடு சேர்ந்து முணுமுணுக்கிறார்.

உற்சாகமாகும் பாதிரியார் அதனுடன் பாடுகிறார் “எனக்குத் தெரியும்…இதை நான் சிறு வயதில் கேட்டிருக்கிறேன்…” என்கிறார் உற்சாகம் குறையாமல்.                                                    

“நீங்கள் தான் இதை எழுதினீர்கள் என்பது தெரியாது” என்கிறார் வோக்லர்.

“இது நான் இயற்றியதில்லை. மொசார்ட்..வுல்ஃப்கங் அமேடியஸ் மொசார்ட்..அவரைத் தெரியுமா?” என்று கேட்க, நீங்கள் கொலை செய்ததாகச் சொன்ன மொசார்ட்டா என்று வோக்லர் கேட்கிறார்.

  நான் தான் அவரைக் கொலை செய்தேன் என நீ நம்புகிறாயா எனத் திரும்பத் திரும்ப பாதிரியாரிடம் கேட்கிறார் சலேரி.                       

பிறகு நீண்ட அமைதிக்குள் போகிறார் வயதான சலேரி. அவர் அவரது உலகத்துக்குள் அமிழ்கிறார் என்பதை பாதிரியார் புரிந்து கொள்கிறார். வோக்லர் சலேரியைப் பேசுமாறு தூண்டுகிறார். பாவ மன்னிப்புக் கேட்க வேண்டுமானால் கேட்கலாம் என்கிறார். 

“நீங்கள் தான் அவரைக் கொன்றீர்களா?” என்று வோக்லர் மென்மையாகக் கேட்கிறார். வயதான சலேரி அவரை அதீத அப்பாவித்தனத்தோடு பார்க்கிறார்.

“அவர் என்னுடைய முன்மாதிரி. அவருடைய பெயரை நான் கேள்விப்பட்டிராத காலம் என்ற ஒன்றே எனக்கு இல்லை. எனக்கு பதினான்கு வயதாகியிருக்கும்போதே அவர் பிரபலமாகியிருந்தார். இத்தாலியின் சிறிய நகரமான லேக்னகோவில் கூட …. 

எனக்கு அவரைத் தெரியும்.

CUT TO:

 இத்தாலியின் லம்பார்டியில் உள்ள சிறிய சதுக்கம் – பகல் – EXT – 1780’S

அந்தச் சதுக்கத்தில் பனிரெண்டு குழந்தைகளும், பெரியவர்கள் இருபது பேரும் இருக்கிறார்கள். அங்கு பதினான்கு வயதான சலேரி கண்களைக் கட்டிக்கொண்டு மற்ற இத்தாலிய சிறுவர்களுடன் கண்ணாமூச்சி ஆடிக்கொண்டிருக்கிறான். எல்லோரும் சிரித்தபடி விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். 

வயதான சலேரியின் குரல் பின்னணியில் ஒலிக்கிறது.

“நான் குழந்தைத்தனமாக விளையாடிக்கொண்டிருந்தபோது, அவன் அரசர்களுக்கும், சக்கரவர்த்திகளுக்கும் முன்பாக இசைத்துக் கொண்டிருந்தான். ரோமில் போப்புக்கும் கூட…” 

 CUT TO:

வாடிகனில் உள்ள வீடு – பகல் – INT – 1780’S

ஆறு வயது மொசார்ட் கண்களைத் துணியால் கட்டிக்கொண்டு போப் மற்றும் மற்ற தேவாலயப் பிரதிநிதிகளுக்கு வாசித்துக் காட்டிக் கொண்டிருக்கிறான். 

சிறுவன் மொசார்ட்டுக்கு அருகில் நிற்கும் அவனுடைய அப்பா லியோபோல்ட், பெருமையுடனும் கர்வத்துடனும் நின்று கொண்டிருக்கிறார்.

வயதான சலேரியின் குரல் பின்னணியில் கேட்கிறது.

“ஒப்புக் கொள்கிறேன்..அவனுடைய பெயரைக் கேட்கும்போதெல்லாம் நான் பொறாமைப்பட்டேன். அவன் புத்திசாலிதனமான குழந்தை என்பதால் அல்ல, அவனுடைய அப்பாவை நினைத்து..அவர் தான் அவனுக்கு எல்லாவற்றையும் கற்றுக் கொடுத்தவர்.”

இப்போது சிறுவன் மொசார்ட் வாசித்த இசைத்துணுக்கு நிற்கிறது. மொசார்ட்டின் அப்பா லியோபோல்ட் மொசார்டை எழுப்பி நிற்க வைக்கிறார். மொசார்ட் தன் கண்களில் கட்டியிருந்தத் துணியை விலக்கி மினுங்கும் கண்களால் எல்லாரையும் பார்க்கிறான். அப்பாவும், மகனுமாக மரியாதையாக பணிந்து நிமிருகிறார்கள். போப்பின் முதன்மை உதவியாளர் லியோபோல்டிடம் தங்கத்தாலான பெட்டி ஒன்றைத் தர, எல்லரும் கைத் தட்டுகிறார்கள். இந்தக் காட்சி நடந்து கொண்டிருக்கும்போதே வயதான சலேரியின் குரல் பின்னணியில் ஒலிக்கிறது. தன்னுடைய அப்பாவுக்கு இசையின் மீது ஆர்வம் இல்லது இருந்ததையும், மொசார்ட் போலத் தானும் ஆகவேண்டும் என்று சொன்னதற்கு “ஒரு பயிற்றுவிக்கப்பட்ட குரங்கினைப் போல மாற வேண்டும் என நினைக்கிறாயா அவனுடைய அப்பா ஐரோப்பா முழுவதும் அவனைத் தூக்கிக்  கொண்டுபோய் சர்க்கஸ் காட்டுவது போல நானும் பைத்தியக்காரத்தனை செய்யவேண்டுமா?” எனக் கேட்டார்.

இசை என்பது எனக்கு என்னவாக இருக்கிறது என்பதை அவரிடம் நான் எப்படி சொல்வேன்? என்கிறார் சலேரி.

CUT TO:

வட இத்தாலியில் உள்ள ஒரு கிராமப்புற தேவாலயம் – பகல் – EXT- 1780’S

 இத்தாலிய பரோக் (BAROQUE) Pergolesi’s Stabat Mater – ஐ சிறுவர் குழு இசைவாத்தியங்களுடன் பாடிக்கொண்டிருக்கிறார்கள். தேவலாயத்தின் வெளிப்புறம் காட்டப்படுகிறது. அது பதினேழாம் நூற்றாண்டியின் தேவாலயம். லாம்பார்டியின் பரந்த வெளியில் அமைந்திருக்கிறது.

CUT TO:

லேக்னகோவில் உள்ள தேவாலயம் – பகல் – INT – 1980’S

இசைத் தொடர்ந்து அதன் உச்சஸ்தாயியை அடைகிறது. பனிரெண்டு வயது சலேரி அவனது பெற்றோர்களுக்கு இடையின் தேவலாயத்தின் பார்வையாளர்கள் அரங்கில் அமர்ந்திருக்கிறான். அவனுடைய அப்பா பருமனாக இருக்கிறார். சற்று கர்வத்துடன் அமர்ந்திருக்கிறார். இயேசுவின் சிலை காட்டப்படுகிறது. அதற்கு முன்பாக மெழுகுவர்த்திகள் எரிந்து கொண்டிருக்கின்றன. வயதான சலேரியின் குரல் பின்னணியில் ஒலிக்கிறது. “அந்த உச்சஸ்தாயி இசை கூட என்னை மயக்கமடைந்து கீழே விழும்படி செய்தன.”

சிறுவன் சலேரி முட்டிப் போட்டு அமருகிறான். அவனுடைய பெற்றோர்களும் அப்படியே செய்கிறார்கள். சிறுவன் சலேரி இயேசுவைப் பார்க்கிறான்.

“என்னை எப்படியேனும் இசையில் ஈடுபடுத்து..என் பிரார்த்தனையைக் கேள். நீங்கள் இறந்தபிறகு என்னுடைய இசை குறித்து இந்த மக்கள் பேசட்டும்…அது அழியாத்தன்மை கொண்டதாக இருக்கட்டும்…ஆமென்” என்று பிரார்த்திக்கிறான். இசை மெதுவாக அதன் உச்சத்தினை அடைகிறது. மெழுகுவத்திகள் உயர்ந்து எரிகின்றன. அந்த வெளிச்சத்தின் ஊடாக இயேசு அந்த சிறுவனைப் பார்ப்பது போலத் தெரிகிறது.

வயதான சலேரியின் குரல் பின்னணியில் ஒலிக்கிறது “உங்களுக்குத் தெரியுமா என்ன நடந்தது என்று? ஒரு அதிசயம்!”

டைனிங் அறை – சலேரியின் வீடு – பகல் – INT – 1780’S

சமைக்கப்பட்ட பெரிய மீன் தட்டில் வைக்கப்பட்டிருப்பது க்ளோஸ் அப்பில் காட்டப்படுகிறது. கேமரா அதில் இருந்து பின்னால் நகர்ந்து சலேரியின் குடும்பம் டைனிங் டேபிளைச் சுற்றி அமர்ந்திருப்பதைக் காட்டுகிறது. சலேரியின் அப்பா, டேபிளின் தலைப்பகுதியில் அமர்ந்திருக்கிறார். இரண்டு பெண் பணியாளர்கள் கருப்பு நிற உடையணிந்து பரிமாறுகிறார்கள். சலேரியின் அம்மா மீன் துண்டுகளை தட்டில் பரிமாறுகிறார். சலேரியின் அப்பா மீன் துண்டினை ஆசையோடு எடுத்துச் சாப்பிட, அவருக்கு விக்கல் எடுக்கிறது. அவருடைய தொண்டையில் மீன் முள் சிக்குகிறது. எல்லாப் பெண்களும் அவரைச் சுற்றி வந்து நிற்கிறார்கள். அவருக்கு உதவ முயற்சிக்கிறார்கள். எல்லாம் வீணாய்ப் போகிறது. சலேரியின் அப்பா மடங்கி விழுகிறார். 

வயதான சலேரியின் மருத்துவமனை அறை – பின்மதியப்பொழுது – INT – 1823

தன்னுடைய அப்பா இறந்ததையும், சலேரியின் அம்மா அவரை இசை கற்றுக்கொள்ள அனுப்பியதையும் சொல்கிறார். கடவுள் தான் தன்னுடைய பிரார்த்தனையைக் கேட்டு அப்பாவை எடுத்துக் கொண்டார் என சிறுவனாக இருக்கும்போது தான் நினைத்ததாக வயதான சலேரி சொல்கிறார்.

ஒரு முறை நான் ஒரு சிறிய நகரத்தில் தனித்துவிடப்பட்ட சிறுவனாய் இருந்தேன். அடுத்து வியன்னாவில் இசை சூழ்ந்த நகரத்தில், க்ளக்கிடம் இசை கற்றுக் கொண்டிருந்தேன்…க்ளக்கினைத் தெரியுமா? அவர் ஒரு இசை மேதை. அவருக்கு என்னைப் பிடிக்கும். அவருக்குத் தெரிந்த எல்லாவற்றையும் எனக்குக் கற்றுக் கொடுத்தார். அவரே என்னை ஆஸ்திரியாவின் சக்கரவர்த்தியிடம் அறிமுகம் செய்து வைத்தார். இரவும் பகலும் நான் ஆஸ்திரியா மன்னர் ஜோசப் அருகிலேயே இருந்தேன். நாங்கள் இருவருமாக இசைப்போம்…ஜோசப் மன்னரே கூட இசை மன்னர் தான்…நான் கண்ணியமானவனாக இருந்தேன். பெண்களை ஏறெடுத்தும் பார்த்ததில்லை. ஒழுக்கமானவனாக இருந்தேன். எப்போதும் இசைதான். ஏழை மாணவர்களுக்கு இலவசமாக இசைக் கற்றுக் கொடுத்தேன். எல்லாருக்கும் என்னைப் பிடித்தது. எனக்கே என்னைப் பிடித்திருந்தது. இப்போது சொல்லுங்கள், கடவுள் எனக்கு அருளியிருந்தார் தானே. எல்லாம் நன்றாகப் போய்க்கொண்டிருந்தது  அவன் வரும் வரை – அவன் மொசார்ட்!”                                    

ஆர்ச்பிஷப்பின் சால்ஸ்பர்க் வசிப்பிடம் – வியன்னா – பகல் – INT – 1780’S

அலங்கரிக்கப்பட்ட அறையில் விருந்தினர்கள் இருக்கிறார்கள். நாடோடி இசைக்கலைஞர்கள் வெவ்வேறு விதமான இசைக்கருவிகளுடன் வாசித்துக் கொண்டிருக்கிறார்கள். எல்லாமே பதினெட்டாம் நூற்றாண்டின் இசைக்கருவிகள். அறையின் ஒரு பகுதியில் பெரிய நாற்காலி ஒன்று ARCHBISHOP OF SALZBURG என்று எழுதப்பட்டிருக்கிறது அங்கங்கு விருந்தினர்கள் நின்றுகொண்டும், பேசிக்கொண்டும் இசைநிகழ்வை கேட்க இடம் தேடிக்கொண்டு இருக்கிறார்கள்.

வயதான சலேரியின் குரல் பின்னணியில் கேட்கிறது. “ஒருநாள் வியன்னாவுக்கு அவன் வருவதாக இருந்தது. அவன் வருகையை நான் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். அந்த இரவு என் வாழ்க்கையே மாறியது” என்கிறார்.

நாம் சலேரியைப் பார்க்கிறோம். சலேரி 31 வயதானவராக இருக்கிறார். தேர்ந்த உடை உடுத்தியுள்ளார். பார்க்கக் கம்பீரமானவராக இருக்கிறார். விருந்தினர்களுக்கு இடையில் நடந்து வருகிறார். நாம் அவரைப் பின்தொடர்கிறோம்.

வயதான சலேரியின் குரல் பின்னணியில் கேட்கிறது 

“நான் எனக்குள் ஒரு விளையாட்டை விளையாடினேன். நான்கு வயதில் இசைக்குறிப்பை எழுதிய ஒருவன், முதல் சிம்பனியை ஏழு வயதில் எழுதியவன், முழு நீள ஒபேராவை பனிரெண்டு வயதில் எழுதியவன் எப்படி இருப்பான்? அவனுடைய திறமை அவன் முகத்தில் எழுதப்பட்டிருக்குமா?”

சலேரி நடக்க நடக்க, சில இளைஞர்கள் அங்கங்கே நிற்பது தெரிகிறது.

‘இவர்களில் யாராக இருப்பான்?” என்கிற சலேரியின் குரல் பின்னணியில் ஒலிக்கிறது.

சிலர் சலேரியை அடையாளம் கண்டுகொண்டு மரியாதையுடன் வணக்கம் சொல்கின்றனர். அப்போது ஒரு பணியாளர் ஒரு தட்டில் கேக்குகளையும், இனிப்புகளையும் எடுத்துக் கொண்டு கடந்து போகிறார். அதைப்பார்த்ததும் அவற்றால் எதோ உந்தப்பட்டு அந்தப் பணியாளர் பின்னால் செல்கிறார்.

அரண்மனையின் நடைக்கூடம், பகல் – INT – 1780’S

பணியாளர் இனிப்புகள் கொண்ட தட்டினை எடுத்துகொண்டு போக, சலேரி பின்தொடர்கிறார்.

 பணியாளர் ஒரு அறைக்குள் போகிறார்.

அரண்மனையின் விருந்து அறை – பகல் – INT – 1780’S 

 சலேரியின் பாயின்ட் ஆஃப் வியூ : சில மேஜைகள் தென்படுகின்றன. ஒரு மேஜை நிறைய உணவுப்பண்டங்கள் உள்ளன. பணியாளர் தான் கொண்டு வந்த தட்டினை மேஜையில் வைத்துவிட்டு அறையை விட்டுச் செல்கிறார்.

அரண்மனையின் நடைக்கூடம், பகல் – INT – 1780’S

பணியாளர் தன்னைப் பார்த்துவிடக்கூடாது என்று தன்னை மறைத்துக் கொள்கிறார் சலேரி. பணியாளர் மறைந்ததும், சலேரி மீண்டும் விருந்து அறைக்குச் செல்கிறார்.          

அரண்மனையின் விருந்து அறை – பகல் – INT – 1780’S

சலேரி அறைக்குள் சென்று கதவினை ஜாக்கிரதையாக மூடுகிறார். அவருக்கு அங்குள்ள உணவுப் பண்டங்களைப் பார்க்க பார்க்க நாவில் எச்சில் ஊறுகிறது. அங்குள்ள சாக்லேட் பந்துகள் போல இருக்கும் இனிப்பின் மீது கவனம் செல்கிறது. அவர் ஒரு சாக்லேட் பந்தினை எடுக்கிறார். அப்போது யாரோ கலகலவென சிரிக்கும் சத்தம் கேட்கிறது. அங்குள்ள ஓரிடத்தில் மறைந்து கொள்கிறார்.

ஒரு பெண் – கான்ஸ்டன்சா அந்த அறைக்குள் ஓடிவருகிறாள். அங்குள்ள ஒரு மேஜைக்குப் பின்பு ஒளிந்து கொள்கிறாள்.

 ஒரு அமைதிக்குப் பிறகு மொசார்ட் அறைக்குள் வருகிறார். நிற்கிறார். சுற்றிப் பார்க்கிறார். அவருக்கு வயது 26. தலையில் நல்ல விக்கினை அணிந்திருக்கிறார். தேர்ந்த கோட்டினை அணிந்திருக்கிறார். அதில் சால்ஸ்பர்க் ஆர்ச்பிஷப்பின் முத்திரை உள்ளது. கான்ஸ்டான்சா எங்கே போயிருப்பாள் என்பது போல பார்க்கிறார்.

குழப்பமடைந்து அங்கிருந்து போக நினைக்கையில், சுண்டெலி போன்ற குரலில் கான்ஸ்டான்சா கிரீச்சிடுகிறாள். உடனேயே மொசார்ட் தவழ்ந்து தரையோடு தரையாக மேஜைக்கு அடியில் போகிறார். மேஜைக்கு அடியில் இருக்கும் கான்ச்டான்சா மேலே விழுகிறார். இருவரும் வெடித்து சிரிக்கிறார்கள். இந்த சிரிப்பு தான் படம் முழுவதும் மொசார்ட்டுக்கான கதாபாத்திரத்தின் அடையாளமாக வரப்போகிறது.

CUT TO:

அரண்மனையின் அலங்கரிக்கப்பட்ட அறை – பகல் – INT – 1780S

அந்த அறையில் உள்ள நாற்காலிகள் நிரம்பியிருக்கின்றன. இசைக்கலைஞர்கள் அவரவர் இடத்தில் தயாராக இருக்கிறார்கள். மெழுகுவர்த்திகள் எரிந்துகொண்டிருக்கின்றன. அந்த நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் அங்கு வருகிறார். எல்லோருடைய கவனமும் அவரை நோக்கித் திரும்புகின்றன. 

அவர் தரையை இரண்டு முறை தட்டுகிறார். அப்போது கலாரடோ, சால்ஸ்பர்கின் ஆர்ச்பிஷப் அங்கு வருகிறார். அவருக்கு வயது ஐம்பது. விக் அணிந்திருக்கிறார். அவரைத் தொடர்ந்து அவருடைய அவையினரும், ஆர்கோவும் வருகிறார்கள்.   எல்லோரும் எழுந்து நிற்கிறார்கள். ஆர்ச்பிஷப் தன்னுடைய நாற்காலியில் அமருகிறார். தொடங்கலாம் என இசைக்குழுவைப் பார்த்து ஆர்கோ சைகை செய்கிறார். இசை தொடங்கவில்லை. ஒரு இசைக்கலைஞர் எழுந்து அங்குள்ளவர காதில் எதோ சொல்ல, அதை ஆர்கோவுக்கு சொல்ல, முகம் மாறும் ஆர்கோஆர்க்பிஷப்பின் காதில் சொல்கிறார்.

“மொசார்ட் இங்கு இல்லை” என்கிறார் ஆர்கோ. “எங்கே அவன்?” என்று கேட்கிறார் ஆர்ச்பிஷப். அவனைத் தான் தேடிக்கொண்டிருக்கிறார்கள் என்கிறார் ஆர்கோ.

அரண்மனையின் நடைபாதை – பகல் – INT – 1780’S

மூன்று சேவகர்கள் கதவுகளைத் திறந்து ஒவ்வொரு அறையாகப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

CUT TO:

அரண்மனையின் அலங்கரிக்கப்பட்ட அறை – பகல் – INT – 1780S

விருந்தினர்கள் ஆர்ச்பிஷப்பையே பார்க்கிறார்கள். இசைக்கலைஞர்களும் பார்க்கிறார்கள். எல்லோருக்கும் எதோ முணுமுணுகிறார்கள். ஆர்ச்பிஷப் தன்னுடைய உதடுகளை இறுக மூடுகிறார். பிறகு ஆர்கோவிடம்  “அவன் இல்லாமலே தொடங்கலாம்” என்கிறார்.

CUT TO:     

அரண்மனை விருந்து அறை – பகல் – INT – 1780’S

மொசார்ட் கான்ஸ்டன்சாவுடன் மேஜைக்கு அடியில் இருக்கிறார். அவர்கள் பேசிக்கொண்டே சிரித்துக்கொண்டிருக்கிறார்கள்.

மொஜார்ட் சிறு குழந்தை போல எதோ புரியாத மொழியில் சொல்லிக் கொண்டிருக்கிறார். கான்ச்டான்சாவின் கால்களைப் பற்றி இழுக்கிறார்.

அவர்கள் தரையில் உருண்டு கொண்டிருக்கிறார்கள். 

 மட்டமான நகைச்சுவைகளை மொசார்ட் சொல்லிக் கொண்டிருக்கிறார்.

பேசிக்கொண்டே இருக்கும்போது கான்ஸ்டான்சா மொசார்ட்டை முத்தமிட வருகிறாள். மொசார்ட் அவளை நிறுத்துகிறார். அவர் முகம் கூர்மையடைகிறது. “என்ன இது?” என்கிறார். கான்ஸ்டான்சா புரியாமல் என்னவென்று கேட்கிறாள்.

அதே நேரம் அடுத்த அறையில் இருந்து இசை கேட்கத் தொடங்குகிறது. “இது எனது இசை..ஆரம்பித்துவிட்டார்கள்” என்கிறார்.

சட்டென்று எழுந்திருக்கிறார். மிக அவசரமாக அந்த அறையை விட்டு வெளியேறுகிறார்.

சலேரி இவற்றையெல்லாம் அருவருப்புடனும், நம்பமுடியாமலும் திகைத்துப் போய்ப் பார்த்துக் கொண்டிருக்கிறார்.

அரண்மனை நடைபாதை – பகல் – INT – 1780’S

 இசை ஒலிக்கிறது. மொசார்ட் அலங்கரிக்கப்பட்ட அறைக்குள் வேகமாகச் செல்கிறார். செல்கிற வழியில் தன்னுடைய உடையை சரி செய்து கொள்கிறார்.

அலங்கரிக்கப்பட்ட அறை – பகல் – INT – 1780’S

இசையில் தொடக்கப்பகுதியை இசைக்கலைஞர் ஒருவர் வழிநடத்துகிறார். மொசார்ட் உள்ளே நுழைய, விருந்தினர்கள் திரும்பிப் பார்க்கிறார்கள். மொசார்ட் ஆர்ச்பிஷப்பின் முன்பாக நின்று பணிந்து வணக்கம் வைக்கிறார். பிறகு கம்பீரமாக இசை மேடைக்கு செல்கிறார். ஏற்கனவே இசைக்குழுவை வழிநடத்திக் கொண்டிருந்தவர் வழிவிட, மொசார்ட் அந்த இடத்தை எடுத்துக் கொள்கிறார்.

கான்ஸ்டான்சா அதீத கூச்சத்துடன் அறைக்குள் வந்து பின்னால் உள்ள சீட்டில் உட்கார்ந்து கொள்கிறார். 

CUT TO:

அரண்மனையின் விருந்தினர் அறை – பகல் – INT – 1780’S

இசையின் ஒலி மங்குகிறது. மொசார்ட் பேசியதைக் கேட்டதை நினைத்து அதிர்ச்சியாக நிற்கிறார் சலேரி. அடுத்த நொடி, மிதப்பது போல கதவின் அருகில் செல்கிறார். இசை மெதுவாக மங்குகிறது.

அலங்கரிக்கப்பட்ட அறை – INT – DAY – 1780’S

மொசார்ட்  இசை நிகழ்வை நடத்திக் கொண்டிருக்கிறார். சலேரி அந்த அறைக்குள் நுழைகிறார். மொசார்ட்டை நம்ப முடியாமல் பார்க்கிறார்.

வயதான சலேரியின் குரல் பின்னணியில் கேட்கிறது.

“அது தான் அவன். சிரித்துக் கொண்டு, அழுக்கான மனதோடு உருவான ஒருவன். தரையில் தவழ்ந்து கொண்டிருந்த ஒருவனை நான் பார்த்தேன். மொசார்ட். என்னுடைய இளமை கால கனவுகளை வேட்டையாடிய ஒருவன்…சாத்தியமேயில்லை!

இசை உயர்ந்து கொண்டே போகிறது. சலேரி கண்ணை மூடிக் கேட்கிறார். அவருக்கு ஆச்சரியமாக இருக்கிறது. அந்த இசை அவரை எங்கோ கொண்டு செல்கிறது. 

பார்வையாளர்கள் சந்தோஷத்தின் உச்சத்தில் இருக்கிறார்கள். மொசார்ட் அவர்களைப் பணிந்து வணங்குகிறார். கலாரடோ சட்டென்று எழுகிறார். அவர் மொசார்ட்டைத் திரும்பிக் கூடப் பார்க்காமல் அங்கிருந்து செல்கிறார். அர்கோ மொசார்ட்டை நோக்கிச் செல்கிறார். மொசார்ட் சந்தோஷமாக அவரை நோக்கித் திரும்புகிறார்.

அர்கோ தன்னுடன் வருமாறு மொசார்ட்டை அழைக்கிறார்.

மொசார்ட்டை எல்லோரும் வியந்து பார்த்துக் கொண்டிருக்க, அர்கோவுடன் மொசார்ட் சென்று கொண்டிருக்கிறார்.

அரண்மனையின் மற்றொரு நடைபாதை – பகல் – INT- 1780’S

CUT TO:

மொசார்ட்டும் அர்கோவும் நடந்து போய்க் கொண்டிருக்கிறார்கள். மொசார்டை திகைப்புடன் பார்த்துக் கொண்டிருக்கும் சலேரியைக் கடந்து போகிறார்கள். அவர்கள் போனதும், இசைக்குறிப்புகள் எழுதப்பட்ட ஸ்டாண்ட் நோக்கி செல்கிறார் சலேரி. தன்னையும் மீறி அந்த இசைக்குறிப்புகளை வாசிக்கத் தொடங்குகிறார்.

இசை நிகழ்ச்சி நன்றாக நடந்தது இல்லையா…என்றெல்லாம் மொசார்ட் பேசிக்கொண்டே போக, அர்கோ ஓரிரு வார்த்தைகளில் பதில் சொல்கிறார். ஆர்ச்பிஷப் மொசார்ட்டின் மீது கோபமாக இருக்கிறார் என்கிறார் அர்கோ. “ஏன்..என்ன சொல்கிறீர்கள்” என்கிறார் மொசார்ட். அதற்குள் ஆர்ச்பிஷப்பின் அறை வந்திருக்கிறது.

 அவரிடம் மன்னிப்பு கேள் என்று சொல்லி கதவைத் திறக்கிறார் அர்கோ.

CUT TO:

 ஆர்ச்பிஷப்பின் தனியறை – பகல் – INT – 1780’S

ஆர்ச்பிஷப் அமர்ந்திருக்கிறார். அங்குள்ளவர்களிடம் பேசிக்கொண்டிருக்கிறார். அவர்களில் சிலர் பெண்கள். அர்கோ அவரை பணிவுடன் அணுகுகிறார். மொசார்ட்டைப் பார்த்து ஆர்ச்பிஷப், “எதற்காக என்னை என் ஊழியர்கள், விருந்தினர்களுக்கு முன்னிலையில் அவமானப்படுத்தினாய்” என்று கேட்கிறார். மொசார்ட்டுக்கு ஒன்றும் புரியவில்லை. “உனக்கு நான் சலுகை தருகிறேனோ, அதனை நீ இப்படிப் பயன்படுத்திக் கொள்கிறாய்?” என்று பேச , அங்கு இருப்பவர்கள் ஆர்வமாக இதனைக் கவனிக்கிறார்கள். “உங்களுக்கு என்னுடைய இசை பிடிக்கவில்லை என்றால், தாராளமாக என்னை நீங்கள் அனுப்பிவிடலாம்” என்கிறார் மொசார்ட்.

“நீ உடனடியாக சால்ஸ்பர்க்க்கு போ. உன்னுடைய அப்பா அங்கு உனக்காகப் பொறுமையாகக் காத்துக் கொண்டிருக்கிறார். நான் அங்கு வரும்போது உன் அப்பாவை சந்தித்துப் பேசிக்கொள்கிறேன்” என்கிறார் ஆர்ச்பிஷப். “நீங்கள் என்னை அனுப்பினால், என்னுடைய இசையில் உங்களுக்குத் திருப்தியில்லை என்று அர்த்தமாகிவிடும்” என்கிறார் மொசார்ட். “உன்னை நான் நீக்கவில்லை மொசார்ட். இப்போது இங்கிருந்து நீ கிளம்பலாம்” என்று சொல்லி விடைகொடுக்கும் விதமாக தன் கையை முத்தமிட நீட்டுகிறார். மொசார்ட் ஒரு ஆவேசமான உடல்மொழியில் பரபரப்புடன் முத்தத்தைத் தந்துவிட்டு கதவு நோக்கிச் செல்கிறார்.

அரண்மனை நடைபாதை – பகல் – INT – 1780’S

இசை நிகழ்ச்சியை ரசித்தவர்கள் அங்கு நிற்கிறார்கள். அவர்களில் கான்ஸ்டான்சாவும் நிற்கிறாள். மொசார்ட் கதவு திறந்து வெளியே வந்ததும் எல்லாரும் அவரை நோக்கிக் கைதட்டுகிறார்கள். மொசார்ட்டுக்கு சட்டென்று சந்தோசம் வந்துவிடுகிறது. அவர் ஆர்ச்பிஷப்பின் அறைக்கதவை அகல திறக்கிறார். ஆர்ச்பிஷப்பையும் அந்த அறையில் இருப்பவர்களையும், வெளியில் நின்று கொண்டிருப்பவர்களால் பார்க்க முடியும். மொசார்ட்டின் இந்த செய்கையால் ஆர்ச்பிஷப்புக்கு சங்கடமாகிறது. அவர் ஒப்புக்கு புன்னகைக்கிறார். மொசார்ட்டின் பாராட்டில் தானும் கலந்து கொள்கிறேன் என்கிற வகையான வெற்று சிரிப்பாக இருக்கிறது.

மொசார்ட் நடைபாதையில் நின்றுகொண்டிருக்கிறார். கீழே பணிந்தும், சிரித்தும் அந்தப் பாராட்டுகளை ஏற்றுக்கொள்கிறார். எரிச்சலாகும் ஆர்ச்பிஷப் அர்கோவைப் பார்க்க,அவர் முன்வந்து கதவினை மூடுகிறார். கைத்தட்டும் சத்தம் இப்போது அறையின் உள்ளே கேட்கவில்லை.

அரண்மனையில் இசை நிகழ்ச்சி நடந்த இடம் – பகல் – INT – 1780’S

அந்த பரந்த அறையில் சலேரி மொசார்ட்டின் இசைக்குறிப்பை பார்த்துக் கொண்டிருக்கிறார். அந்தப் பக்கங்களை முன்னேயும், பின்னேயும் பார்க்கிறார். நமக்கு அந்த இசைக்குறிப்புகள் இசையாகக் கேட்கிறது. சலேரியால் அந்த இசைக்குறிப்புகளை நம்ப முடியவில்லை. நம்பமுடியாத பரவசத்தோடு அவர் மனதுக்குள் அதனை இசைத்துக் கொண்டிருக்கிறார்.

வயதான சலேரியின் குரல் கேட்கிறது.

 “அற்புதம்! வெற்றுப் பக்கங்களாகப் பார்க்கையில், அதில் ஒன்றுமே இல்லாதது போலத் தோன்றும். தொடக்கம் எளிமையானது. சொல்லப்போனால், சிரிக்கும்படியானது. ஒரு இடம்…ஃபஸுனும், பாஸி க்ளரினட்டும் ஒரு RUSTY SQUEEZEBOX போலத் தோன்றச் செய்தது. பிறகு சட்டென்று உயர்ந்து ஒரு ஓபோ, ஒரு தனித்த இசைக்குறிப்பு, கிளாரினெட் வந்து சேரும்வரை அங்கு அந்தரத்தில் அலைபாய்ந்து கொண்டிருந்தது. கேட்பதற்கு அப்படியொரு ஆனந்தமாக இருந்தது. இது நிச்சயம் பயிற்றுவிக்கப்பட்ட ஒரு குரங்கின் இசையல்ல. அதுவரை நான் கேட்டிராத ஒரு இசை அது. ஒரு ஏக்கத்தை….நிறைவேறாத ஏக்கத்தை நான் கொண்டிருந்தேன். அது என்னை நடுங்கச்செய்து கொண்டிருந்தது. கடவுளின் ஒலியை கேட்பதாக உணர்ந்தேன்.

சட்டென்று இசை நிற்கிறது. மொசார்ட் அவருக்கு முன்பாகவந்து நின்று இசைக்குறிப்புகளை அங்கிருந்து எடுத்து, சட்டென பணிந்து அதே வேகத்தில் வெளியே செல்கிறார். தனக்கு முன்பாக வந்து நின்று சென்ற மொசார்ர்த்டை எதுவும் தோன்றாமல். திகைப்பு மாறாமல் சலேரி பார்த்துக் கொண்டிருக்கிறார். 

 வயதான சலேரியின் குரல் பின்னணியில் கேட்கிறது

“ஆனால் ஏன்?”                                                

வயதான சலேரியின் மருத்துவமனை அறை – இரவு – INT – 1823

வயதான சலேரி பேசிக்கொண்டிருக்கிறார்

ஏன்?

கடவுள் தன்னுடைய இசைக்கருவியாக ஒரு பைத்தியக்காரத்தனமான குழந்தையைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்? இதை நம்பவே முடியவில்லை. இது எதோ விபத்தாகத் தான் நடந்திருக்கிறது. அப்படித் தான் இருக்க வேண்டும்!

அரண்மனை விருந்தினர் அறை – பகல் – INT – 1780’S

மேஜையில் சக்கரவர்த்தி இரண்டாம் ஜோசப் அமர்ந்திருக்கிறார். அவர் தன்னுடைய எளிமையான இரவு உணவையும், ஆட்டுப் பாலையும் அருந்திக் கொண்டிருக்கிறார். அவர் பார்க்க புத்திசாலித்தனமானவராக இருக்கிறார். நாற்பது வயது மதிக்கத்தக்கவர். இராணுவ சீருடையை அணிந்திருக்கிறார். அவரைச் சுற்றி அவருடைய அவையினரான யோகன் வான் ஸ்ட்ராக் நிமிர்ந்த முதுகோடு நின்று கொண்டிருக்கிறார். அவருக்கு அருகில் ஒபேராவின் இயக்குநர் பருமனான உடல்வாகு கொண்ட ஆர்சினி ராசன்பர்க் நிற்கிறார். அவருக்கு வயது அறுபது. மற்றொருவர் பாரன் வான் ஸ்வீட்டன். இவர் நூலகர். நன்கு படித்தவருக்கான தோற்றம், ஐம்பதுகளில் இருக்கும் மனிதர். அடுத்ததாக குசேப்பே போன்னோ நிற்கிறார். இவர் இத்தாலியர். எழுபது வயதுக்கு மேல் உள்ளவர். வியன்னாவின் முதல் ஒபேரா நடத்துநர். சலேரி தனது வழக்கமான கருப்பு நிற உடையில் நின்று கொண்டிருக்கிறார்.

பக்கவாட்டில் உள்ள மேஜையில் இரண்டு அரண்மனை செயலர்கள் இறகுப் பேனாக்களுடனும், மைக்கூடுடனும் அமர்ந்திருக்கிறார்கள். அங்கு பேசப்படுவதை உடனுக்குடன் குறிப்பெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

மொசார்ட் எப்படி இசைக்கிறார்? என ஜோசப் கேட்கிறார். அவரைப் பற்றி புகழ்ந்து சொல்கிறார் வான் ஸ்வீட்டன்.  ஆர்சினி ராஸன்பர்க், மொசார்ட் தன்னுடைய தகுதிக்கு மீறி இசையில் நுணுக்கங்களைக் கொண்டு வந்திருக்கிறார் என்றும், அது கேட்பதற்கு அலுப்பூட்டும் விதத்தில் இருப்பதாகவும் சொல்கிறார். 

மொஸார்ட்டின் இசை குறித்து வெவ்வேறு கருத்துகள் வெளிப்பட்டதால் அவரை வியன்னாவின் அரண்மனைக்கு அழைத்து வந்து இசை நிகழ்ச்சி நடத்தலாம் என ஜோசப் முடிவு செய்கிறார். ஆனால் அவர் ஆர்க்பிஷப்பின் சேவையில் இருப்பதால் அவரை அழைப்பதில் தடை இருப்பதை சொல்கிறார்கள். பணம் கூடுதலாகக் கொடுத்தால் மொஸார்ட் வந்துவிடுவார் என்கிறார் ஜோசப். நேஷனல் இசை அரங்கில் ஜெர்மனியில் ஒபேரா இருப்பது அற்புதமாக இருக்கும் என்கிறார் ஜோசப்.  

ஆனால் ஜெர்மனி விட இத்தாலியில் ஒபேரா அமைந்தால் அது இன்னும் நன்றாக இருக்கும் என்கிற வாதம் வருகிறது. ஜோசப் அரண்மனையில் இசையமைப்பாளரான சலேரியிடம் மொசார்ட்டின் வருகை குறித்து  கேட்கிறார். மொஸார்ட்டை வியன்னாவுக்கு அழைப்பது நல்ல முடிவு என்கிறார் சலேரி. மொசார்ட்டை சந்திக்க தான விருப்பமாக இருப்பதாகவும், அவரை நல்ல முறையில் வரவேற்க வேண்டும் என்றும் ஜோசப் சொல்கிறார்.

சலேரியின் வீட்டு படுக்கையறை – பகல் – INT – 1780’S

அந்த அறை படுக்கையறை மற்றும் படிப்பறையாகவும் இருக்கிறது. ஆலிவ் மரத்தில் செய்யப்பட்ட சிலுவையில் அறையப்பட்ட இயேசுநாதரின் உருவம் மாட்டப்பட்டிருக்கிறது அதற்கு முன்பு மெழுகுவர்த்திகள் ஏற்றப்பட்டிருக்கின்றன. அதற்கு எதிராக சலேரி இறகுப் பேனா மற்றும் மைக்கூடு சகிதம் அமர்ந்திருக்கிறார். அவருக்கு முன்பாக காகிதங்கள் இருக்கின்றன. அவருக்கு அருகில் பியானோ இருக்கிறது. இசைக்குறிப்புகளை எழுதுவதற்கு இடையில் பியானோவில் எதையோ வாசிக்கிறார். அவருடைய தலையில் விக் இல்லை. அப்போது யாரோ கதவினைத் தட்டும் ஓசை கேட்கிறது.

உள்ளே வருமாறு சொல்கிறார் சலேரி. பணிப்பெண் லாரல் வருகிறார். அவர் பேக்கரிக்கு போய் வந்திருக்கிறார் என்பதை உணர்த்தும் விதமாக கையில் நாப்கின்களால் மூடப்பட்ட கூடை இருக்கிறது. 

சலேரி எழுந்து போய் ஆர்வத்துடன் லாரலிடம் அவளது உடல்நிலையை விசாரித்தபடி பிஸ்கட்டினை எடுத்து சுவைக்கிறார். அது நன்றாக இருக்கிறது என்றும் பேக்கரி கடைக்காரரிடம் அதனைச் சொல்லும்படியும் சொல்கிறார். 

லாரல் வெட்கத்துடனும் கூச்சத்துடனும் அங்கிருந்து போக, சலேரி உற்சாகமாய் மீண்டும் அமர்ந்து இசைக்குறிப்புகளை எழுதி முடித்துவிட்டு அதனை வாசிக்கத் தொடங்குகிறார்.

CUT TO:

 விக் தயாரிக்கும் கடை – வியன்னா – பகல் – INT – 1780’S

முந்தைய காட்சியில் சலேரி வாசித்த இசை தொடர்கிறது.

மொசார்ட் ஒரு கண்ணாடியின் முன்பு அமர்ந்திருக்கிறார். ஒரு ஆடம்பரமான விக்கினை அணிந்திருக்கிறார். அவருக்கு இருபக்கமும் கடையின் பணியாளர்கள் நிற்கிறார்கள். ஒருவர் கையில் மற்றொரு ஆடம்பரமான விக் உள்ளது. மொசார்ட் தனது தலையில் அணிந்திருந்த விக்கினை கழற்றுகிறார். மிகுந்த பெருமையுடன் அதனைத் திருப்பித் தருகிறார்.

மற்றொரு விக்கினை பணியாளர் மொசார்ட்டின் தலையில் அணிவிக்கிறார். எப்படி இருக்கிறது என்று கண்ணாடியில் பார்க்கிறார். முதல் விக்கினை வைத்துப் பார்க்கிறார். “இரண்டு விக்குகளுமே நன்றாக இருக்கின்றன. எனக்கு ஏன் இரண்டு தலைகள் இல்லை” என்று சொல்லிவிட்டு சத்தம் போட்டு சிரிக்கிறார்.

பின்னணி இசை முடிவடைகிறது.  

 பிரம்மாண்டமான அவை – அரண்மனை – பகல் – INT- 1780’S

ஒரு கதவு திறக்கிறது. அதற்குள் சக்கரவர்த்தி ஜோசப் மேஜையைச் சுற்றி நின்று கொண்டிருக்கும் இராணுவ அதிகாரிகளுக்கு விடை கொடுத்துக் கொண்டிருக்கிறார். 

அவர் அவைக்கு வருகிறார். அங்கு  யோகன் வான் ஸ்ட்ராக், ஆர்சினி ராசன்பர்க், குசேப்பே போன்னோ, சலேரி போன்றோர் இருக்கிறார்கள். 

அவையில் பல நாற்காலிகளும், பியானோவும் இருக்கிறது. ஜோசப்பிற்கு எல்லோரும் பணிந்து மரியாதை செய்கிறார்கள். அன்று மொசார்ட் வரப்போவதாக ஜோசப்பிடம் தெரிவிக்கிறார்கள். மொசார்ட்டை வரவேற்கும் விதமாக தான் ஒரு இசைக்குறிப்பினை எழுதி வாசிக்கயிருப்பதாக சலேரி சொல்கிறார். ஜோசப் அதைப் பார்க்கலாமா என்று கேட்கிறார். சலேரி சிறிய கூச்சத்துடனும் பெருமையுடனும் ஜோசப்பிடம் தான் எழுதிய இசைக் குறிப்பினைத் தருகிறார். அதைப் பார்க்கும் ஜோசப் “நான் இதை வாசித்துப் பார்க்கலாமா? என்று கேட்க, சலேரிக்கு கூடுதல் பெருமையாகிறது. ஜோசப் அந்த இசைக்குறிப்பை  பியானோவில் வாசிக்கிறார். “அற்புதமாக இருக்கிறது. மொசார்ட் வரும்போது நான் இதனை வாசிக்கலாமா?” என்று கேட்க, சலேரி மகிழ்ச்சியுடன் சம்மதிக்கிறார். அங்கிருக்கும் ஏவலாளியிடம், “மொசார்டை மெதுவாக அழைத்து வாருங்கள். நான் கொஞ்சம் பயிற்சி எடுத்துக் கொள்ள வேண்டும் என்கிறார். ஏவலாளி அங்கிருந்து போகிறார். அவர் போனதும் ஜோசப் வாசிக்கத் தொடங்குகிறார். ஓரிடத்தில் தவறாக வாசித்துவிட, பவ்யமாக சலேரி திருத்துகிறார் “அது A – FLAT’ என்கிறார் சலேரி. ஜோசப் புன்னகையுடன் சரியாக வாசிக்கிறார்.  

அரண்மனை நடைபாதை – வியன்னா – பகல் – INT- 1780’S

ஏவலாளி தனக்கு இடப்பட்ட கட்டளையினால் மொசார்ட்டினை மெதுவாக அழைத்து வருகிறார். மிகுந்த ஆர்வத்துடனும் குழப்பத்துடனும் முன்னால் வேகமாக செல்ல முடியாதவாறு மொசார்ட் நடந்து வருகிறார். அவர் வருகையில் ஜோசப் வாசிக்கிற பியானோ இசை கேட்கிறது. மொசார்ட் அதில் கவனம் செலுத்தியது போல காணப்படவில்லை. அவர் ஜோசப் இருக்கும் அறைக்குள் வருகிறார். அவரை வரவேற்கும் விதமாக வாசித்துவிட்டு ஜோசப் எழுந்து கொள்ள, சுற்றி உள்ளவர்கள் கைத்தட்டுகிறார்கள். ஜோசப்பை பாராட்டுகிறார்கள் . “நீங்கள் என்னை மிகவும் புகழ்கிறீர்கள்” என்கிறார் ஜோசப். பிறகு மொசார்ட்டை வரவேற்கிறார். மொசார்ட் யாரும் எதிர்பாராதவிதமாக சட்டென்று குனிந்து ஜோசப்பின் புறங்கையைப் பிடித்து முத்தமிடுகிறார். ஜோசப் சங்கடத்துடனும், சமாளிப்புடனும் அதை ஏற்றுக்கொள்கிறார். பிறகு, “மொசார்ட் நீ இங்கு இரண்டாவது முறையாக  வருகிறாய். முதன்முறை நீ இங்கு வரும்போது உனக்கு வயது ஆறு” என்பவர் பொதுவாக எல்லாரிடத்திலும் சொல்கிறார்,  “இப்படி பியானோவில் வாசித்துவிட்டு அவன் குதித்து இறங்குகையில் தவறி விழுந்துவிட்டான். என் தங்கை அன்ட்டோனியோ தான் அவனைத் தூக்கினாள். இவன் என்ன செய்தான் தெரியுமா? அவளுடைய தோளில் ஏறி அமர்ந்து “என்னைத் திருமணம் செய்து கொள்கிறாயா?” என்று கேட்டான். என்று சொல்ல, மொசார்ட் சட்டென்று சத்தமாக சிரித்து விடுகிறார். 

யாரும் எதிர்பாராத அந்த சிரிப்பினை சமாளிக்கும் விதமாக ஜோசப் மொசார்ட்டிடம் அங்குள்ளவர்களை அறிமுகம் செய்கிறார்.  மற்றவர்கள் மொசார்ட்டிடம் அவருடைய ரசிகர்கள் என்று சொல்ல, ஆர்சினி ராசன்பர்க் மட்டும் எந்த உற்சாகமும் இல்லாமல் அறிமுகம் செய்கையில் தலையை மட்டும் ஆட்டுகிறார். சலேரியை அறிமுகம் செய்கிறார் ஜோசப். மொசார்ட்டினை சந்தித்ததில் மகிழ்ச்சி என்கிறார் சலேரி. அதற்கு மொசார்ட், ‘உங்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன்..உங்களுடைய சில இசைத்துணுக்குகளைக் கேட்டிருக்கிறேன்” என்று சொல்ல, சலேரிக்கு ஆச்சரியமாக இருக்கிறது. “ஆனால்..அது கொஞ்சம் வேறு மாதிரி இருந்திருக்கலாம் என்று தோன்றும்..ஆனாலும் சில துணுக்குகள் நன்றாகவே இருந்தன” என்கிறார். சலேரிக்கு திகைப்பாக இருந்தாலும் சமாளிக்கிறார். 

ஜோசப் மொசார்ட்டிடம் ஒரு இசை நிகழ்வை நடத்த வேண்டும் என்று கேட்கிறார். “ஒரு ஒபேராவை நடத்துகிறேன்” என்கிறார் மொசார்ட். அதனை ஜெர்மானிய மொழியில் நடத்தலாமா அல்லது இத்தாலியிலா என்கிற விவாதம் வருகிறது. எந்த மொழியில் இருந்தாலும் இசை தான் முக்கியம் என்கிறார் மொசார்ட். இத்தாலி தான் சிறந்ததாக இருக்கும் என்பது போல சலேரி சொல்ல, ‘இத்தாலியில் காதல் பாடல்கள் எல்லாம் இரண்டு பேர் சும்மாவேனும் கண்ணை உருட்டி உருட்டி பாடுவது போல இருக்கும்..அதுவா காதல்” என்கிறார் மொசார்ட். பிறகு ஜோசப்பிடம், “உங்களுக்கு எந்த மொழியில் வேண்டும் என்று சொல்லுங்கள்..எந்த மொழியாக இருந்தாலும் நீங்கள் இதுவரை அனுபவித்திராத ஒரு இசையைத் தருவேன்” என்கிறார் மொசார்ட். அப்படி அவர் சொன்னது அகங்காரமாக சொன்னது போல எல்லோருக்கும் தோன்றுகிறது. ‘ஜெர்மனில்’ என்கிறார் ஜோசப். ஏற்கனவே ஒரு ஒபேராவை யோசித்து வைத்திருப்பதாகவும், அது துருக்கியில் நடப்பது போலவும் அமையப்போகிறது என்று சொல்ல, எல்லோரும் துருக்கியா என்று ஆச்சரியப்படுகிறார்கள். துருக்கியில் ஒரு பாலியல் விடுதியில் நடப்பது போன்றதான பின்னணியில் எழுதப்பட்ட ஒபேரா என்று சொல்ல, எல்லாருக்கும் முகம் மாறுகிறது. அதைப் புரிந்து கொள்ளும் மொசார்ட் சூழலை சரி செய்கிறேன் என்று தொடர்ந்து அபத்தமாகவே பேசுகிறார். பிறகு ஜெர்மனியில் அந்த ஒபேரா அமையும் என்பதாக முடிவாகிறது. அதைப் பார்க்கும் ஆவலில் தான் இருப்பதாக ஜோசப் சொல்கிறார்.

இது குறித்து பேசி முடித்ததும் ஜோசப் , மொசார்ட்டிடம் தன் கையில் வைத்திருந்த சலேரியின் இசைக்குறிப்பை பரிசாகத் தருகிறார். “நீ வரும்போது நான் வாசித்த இசைக்குறிப்பு இது. சலேரி இயற்றியது.  இது உனக்கான பரிசு” என்கிறார். “எனக்கு வேண்டாம் சக்கரவர்த்தியே..நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்.. அது என் மனதில் இருக்கிறது’ என்கிறார். எல்லாரும் ஆச்சரியப்படுகிறார்கள். “வேண்டுமென்றால் கேட்கிறீர்களா?” என்று பியானோவில் போய் அமருகிறார். சலேரியைத் தவிர எல்லோரும் போய் சூழ்ந்து கொள்கிறார்கள். 

சலேரி கூர்மையாகப் பார்க்கிறார். மொசார்ட் அந்த இசைத்துணுக்கை எந்தப் பிழையுமில்லாமல் வாசிக்கிறார். எல்லோருக்கும் ஆச்சரியம். வாசிக்கும்போதே நிறுத்தி, “இது இன்னும் கொஞ்சம் நன்றாக வந்திருக்கலாம் இல்லையா?” என்கிறார். எல்லோரும் சலேரியைத் திரும்பிப் பார்க்க, அவர் சமாளித்து புன்னகைக்கிறார். அது எப்படி இருந்திருக்க வேண்டும் என்று மொசார்ட் வேறு மாதிரி வாசிக்கிறார். இப்போது அந்த இசையின் தன்மையே மாறிவிடுகிறது. கொண்டாட்டமான இசையாக மாறுகிறது. மொசார்ட் வாசித்து விட்டு “இப்படித்தான் இருக்க வேண்டும்” என்கிறார். சலேரி உள்ளுக்குள் அடிபடுகிறார் என்பது அவரது முகத்தில் தெரிகிறது,  

சலேரியின் வீடு , படுக்கையறை – பகல் – INT – 1780’S

சலேரியின் படுக்கையறையில் உள்ள ஆலிவ் மாற சிலுவையைப் பார்க்கிறோம். சலேரி அதற்கு எதிரில் அமர்ந்து அதைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்.

அப்போது அவரை யாரோ அழைக்கும் சத்தம் கேட்கிறது. அதோடு கதவுத் தட்டப்படும் ஒலியும் கேட்கிறது. சலேரி அதனைக் காதில் வாங்கவில்லை. கதவு பலமாகத் தட்டப்படுகிறது. சலேரி உணர்வுக்கு வருகிறார். லாரல் உள்ளே வருகிறாள். ‘மேடம் கேவலீரி வகுப்புக்காக வந்திருப்பதாகச் சொல்கிறாள்.’ சலேரி அங்கிருந்து எழுந்து செல்கிறார். 

சலேரியின் வீடு – இசை அறை – பகல் – INT – 1780’S

காதரினா கேவலீரி இருபது வயதுகளில் இருக்கிறார். உச்சஸ்தாயி குரலில் பாடும் திறமை கொண்டவர். மிக நாகரீகமான உடையை அணிந்திருக்கிறார். தலையைச் சுற்றி சாட்டின் ரிப்பன் மற்றும் இறகுகளால் அலங்காரம் செய்திருக்கிறார். காத்திருக்கிறார். லாரல் வெளியே போகிறாள்.

சலேரி, காதரினா கேவலீரியின் தலை அலங்காரத்தை வியப்பாகப் பார்க்கிறார். அதைப் பார்த்ததும் காதரினா கேவலீரி, அது துருக்கிய பாணியில் அமைந்த தலையலங்காரம் என்றும் இனி இந்த வருடம் எல்லோருமே துருக்கிய பாணியில் தான் அலங்காரம் செய்து கொள்வார்கள் என்றும் சொல்கிறாள்.  ஆச்சரியப்படுகிறார் சலேரி. மொசார்ட் ஒரு ஒபராவை நிகழ்த்தப் போகிறாராம், அதில் எனக்கு ஏதாவது வாய்ப்பு இருக்குமா? என்று காதரினா கேவலீரி கேட்க, “அப்படியே இருந்தாலும் நீ அதில் பங்கு கொள்ள முடியாது. அது பாலியல் விடுதியில் நடப்பது போல அமைக்கப்பட்டது” என்கிறார் சலேரி. அதனால் என்ன? நான் அதில் பங்கு கொள்ள விரும்புகிறேன் என்கிறாள். அது சலேரிக்குப் பிடிக்கவில்லை என்பது அவரது முகத்தில் தெரிகிறது. அவர் பியானோவில் ஒரு ஸ்வரத்தை வாசிக்க, காதரினா கேவலீரி பாடத் தொடங்குகிறாள். உச்சஸ்தாயியில் பாடுகிறபோது சட்டென்று நிறுத்தி, “”மொசார்ட்டைப் பார்த்தீர்களா? அவர் எப்படி இருந்தார் என்று காதரினா கேவலீரி கேட்கிறாள். “தோற்றத்துக்கும் அறிவுக்கும் தொடர்பில்லை என்று அவரைப் பார்த்ததும் புரிந்து கொள்வாய்” என்கிறார் சலேரி. “அறிவு தான் முக்கியம்..தோற்றம் எதற்கு?” என்கிறாள் காதரினா கேவலீரி. “பெண்களுக்கு புத்திசாலிகளைத் தான் பிடிக்கும்” என்கிறாள். 

சலேரி அடுத்த ஸ்வரத்தை பியானோவில் வாசிக்கிறார். அவர் உச்சஸ்தாயி ஸ்வரங்களை வாசித்துக் கொண்டே போக, மொசார்ட்டைப் பார்த்தீர்களா? எனக் கேட்டுவிட்டு காதரினா கேவலீரி விடாமல் உச்சஸ்தாயியில் பாடுகிறாள். சலேரி அவளது திறமையைப்  பெருமையுடனும் பெருமூச்சுடனும் பார்க்கிறார்.

அந்த இசை மெதுவாக மாறுகிறது. அது மொசார்ட் இசையமைத்த II SERAGLIO  Martern Aller Arten ஆக மாறுகிறது. 

DISSOLVE – காதரினா கேவலீரி மேடையில் பாடிக்கொண்டிருக்கிறாள். அவளுக்கு முன்பாக மொசார்ட் நின்று கொண்டிருப்பது தெரிகிறது.

ஒபேரா மேடை – வியன்னா – INT – 1780’S

ஒபேரா நாடகத்தின் நாயகி (காதரினா கேவலீரி) தனது திறமையை வெளிப்படுத்தும் விதமாக பாடிக்கொண்டிருக்கிறாள். கதைப்படி துருக்கிய பாதுஷாவை பாடலில் ஏசிக்கொண்டிருக்கிறாள்.

அந்த அரங்கம் பார்வையாளர்களால் நிரம்பியிருக்கிறது. அவர்கள் மொசார்ட் நடத்தும் அந்த ஒபேராவைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். காதரினா கேவலீரி மேடையின் நடுவே நின்று பாடிக்கொண்டிருக்கிறாள்.  சக்கரவர்த்தி ஜோசப் முதல் வரிசையில் அமர்ந்திருப்பதைப் பார்க்க முடிகிறது. 

மற்றொரு இடத்தில் ஒரு நடுத்தர வயது பெண்மணி அதீதமாய் ஒப்பனை செய்து கொண்டு அமர்ந்திருக்கிறார். அவர் மேடம் வேபர். அவருக்கு அருகில் மூன்று இளம்பெண்கள் அமர்ந்திருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் கான்ஸ்டான்சா மற்ற இருவர் ஜோசேஃபா, சோஃபி. மேடம் வேபர் மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் பார்த்துக் கொண்டிருக்கிறார். இதற்கு மாறாக, மற்றொரு இடத்தில் அமர்ந்திருக்கும் சலேரி எரிச்சலாக மேடையைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்.

 காதரினா கேவலீரி, Doch du bist entschlossenல் இருந்து  Martern aller Arten பாடிக்கொண்டிருக்கிறாள்.

காதரினா கேவலீரி, பாடிக்கொண்டே மொசார்ட்டைப் பார்க்கிறாள். அவர் அவளுக்கு உதவும் விதமாக கூடவே பாடலை வாயசைக்கிறார். காதரினா கேவலீரி, கண்ணெடுக்காமல் மொசார்ர்டைப் பார்த்து பாடிக் கொண்டிருக்கிறாள். இருவரும் சுற்றிலும் யாரும் இல்லாதது போல அவர்களுக்குள் இலயித்து பாடிக்கொண்டிருக்கிறார்கள்.

இதனைப் பார்த்து எரிச்சலடைகிறார் சலேரி. வயதான சலேரியின் குரல் பின்னணியில் கேட்கிறது.

“அவள் அங்கு நின்று கொண்டிருந்தாள். அவர்கள் எங்கே, எப்படி  சந்தித்தார்கள் என்பது எனக்குத் தெரியாது. அவள் அந்த மேடையில் நின்று கொண்டிருந்தாள். பார்ப்பதற்கு ஒரு பேராசைப் பிடித்த பாடகி போல இருந்தாள். பத்து நிமிடங்கள்..விதவிதமான ஏற்ற இறக்கங்களுடன் அவள் பாடியது, கண்காட்சியில் பட்டாசுகளை வெடித்தது போல இருந்தது” என்கிறார்.

இசை மீண்டும் இசைக்கப்படுகிறது. 

காதரினா கேவலீரி, பாடிக்கொண்டிருக்கிறாள்.

அந்த இசை முடிவடைவதற்கு முன்பு 

CUT TO:

 வயதான சலேரியின் மருத்துவமனை அறை – இரவு -INT – 1823

அந்த அறையின் ஜன்னல் வழி பார்க்கையில் இரவு வந்துவிட்டது தெரிகிறது. 

புரிந்து கொள், நான் அவள் மேல் காதலாக இருந்தேன்..அல்லது ஆசையுடன். நான் ஒன்றும் துறவி இல்லையே. நான் அவள் மேல் எனது சுட்டு விரலைக் கூட வைத்ததில்லை. அதே நேரம், யாரும் அவளை அடைவதையும் நான் விரும்CUT TO:

ஒபேரா அரங்கு – வியன்னா – இரவு – INT – 1780’S 

SERAGLIOவின் அற்புதமான இறுதிப் பகுதி ஆர்ப்பாட்டமாகவும், உற்சாகமாகவும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நடித்த எல்லாக் கலைஞர்களும் அதில் ஈடுபட்டிருக்கிறார்கள். மொசார்ட் மிகுந்த உற்சாகத்துடன் அதை நடத்திக் கொண்டிருக்கிறார்.

நிகழ்வு முடிந்ததும் , திரை விழுகிறது. எல்லாரும் கைதட்டும் ஓசை பலமாகக் கேட்கிறது. சக்கரவர்த்தி சந்தோஷமாக கைத்தட்டுகிறார். அவரைத் தொடர்ந்து எல்லோருமே கைதட்டிக்கொண்டே இருக்கிறார்கள். மொசார்ட் சட்டென்று தாவி மேடையில் ஏறுகிறார். உற்சாக மிகுதியில் இருக்கிறார் என்பது தெரிகிறது. அவர் குனியும்போது திரை விழுந்து முடிந்திருக்கிறது.

அரங்கம் முழுவதும் விளக்கு எரிகிறது.

CUT TO:

ஒபேரா அரங்கின் மேடை – வியன்னா – இரவு – INT- 1780’         

திரை மூடியிருக்கிறது. பாடகர்கள் மொசார்ட்டையும், காதரினா கேவலீரியையும் சூழ்ந்து கொள்கிறார்கள். எல்லாருமே உற்சாகமாக பேசிக்கொள்கிறார்கள். அங்கு சக்கரவர்த்தி வருகிறார். அவர் வருகிறபோது மெழுகுவர்த்தியை ஏந்திக் கொண்டு பணியாளர்கள் உடன் வருகிறார்கள். அவருடன் யோகன் வான் ஸ்ட்ராக், ஆர்சினி ராசன்பர்க், குசேப்பே போன்னோ, இவர்களுடன் சலேரியும் அங்கு வருகிறார்.

ஜோசப் , காதரினா கேவலீரியை பாராட்டுகிறார். சலேரியை நோக்கி, “உங்கள் மாணவி அற்புதமாக பாடினார்..உங்களுக்கு பெருமை சேர்த்திருக்கிறார்” என்கிறார்.

மேடையின் கீழ் – வியன்னா – இரவு – INT – 1780’S

அங்கு மேடம் வேபர் எல்லோரையும் தள்ளிக் கொண்டு வருகிறார். அங்குள்ள காவலர் , மேடைக்குப் போக அனுமதியில்லை என்கிறார். 

அதற்கு மேடம் வேபர், “நான் யாரென்று தெரியுமா? கான்ஸ்டான்ஸாவைக்காட்டி நாங்கள் எல்லாரும் முக்கியமான் விருந்தினர்கள் என்கிறாள். அப்போதும் காவலாளி அவர்களை மேடைக்கு விடவில்லை. 

கூப்பிடுங்கள்; மொசார்ட்டை..மொசார்ட் மொசார்ட் என்று கத்துகிறாள். கான்ஸ்டான்ஸா “அம்மா சும்மா இரு” என்கிறாள. யாரையும் பொருட்படுத்தாமல் கத்திக் கொண்டே இருக்கிறாள் மேடம் வேபர். 

 CUT TO:

ஒபேரா அரங்கின் மேடை – வியன்னா – இரவு – INT – 1780’S

எல்லோரும் காதரினா கேவலீரியைப் பாராட்டுகிறார்கள். கைத்தட்டுகிறார்கள். ஜோசப் மொசார்ட்டை நோக்கித் திரும்புகிறார். “அற்புதமான முயற்சி..மறக்க முடியாத மாலை இது” என்கிறார். மொசார்ட்டுக்கு சந்தோஷத்தில் தலைகால் புரியவில்லை. பணிந்து வணகுகிறார். மொசார்ட்டுக்கு இன்னும் இன்னும் சக்கரவர்த்தி தன்னுடைய இசையைப் பற்றி சொல்ல வேண்டுமாய் இருக்கிறது.அதனால் அது குறித்து கேட்டுக் கொட்னே இருக்கிறார். “ஜெர்மனில் அமைந்திருந்தது..எப்படி இருந்தது” என்று மொசார்ட் கேட்க, “மிக நன்றாக இருந்தது” என்கிறார் ஜோசப்.

பேசிக்கொண்டே இருக்கும்போது ஜோசப், “சற்று கூடுதலாக இருந்தது போல தோன்றியது” என்று சொல்லிவிட , மொசார்ட் அதனைப் பிடித்துக் கொள்கிறார். “கூடுதல் என்றால்..எதைச் சொல்கிறீர்கள் சக்கரவர்த்தி” என்று கேட்க, ஜோசப் சொல்வதற்குத்திணறி “அதாவது..என்னவென்றால்” என்று யோசித்து சலேரியைப் பார்க்க “அதிகமான ஸ்வரங்கள்..” என்கிறார் சலேரி ..”சரியாய்ச் சொன்னீர்கள்..ஆமாம் மொசார்ட்..ஒரு மாலை நேரத்துக்கு இத்தனை அடர்த்தியான ஸ்வரக் கோர்வைகளுடன் கேட்டதேயில்லை..சற்றுக் குறைத்தால் இன்னும் நன்றாக இருக்கும்..மற்றபடி மிக அற்புதமான இசை நிகழ்வு இது” என்கிறார் ஜோசப். 

தன்னுடைய இசை குறித்த இப்படியான விமர்சனத்தை மொசார்ட்டால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை “எதைக் குறைக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள் சக்கரவர்த்தி..எந்த இடத்தில் குறைக்க வேண்டும்” என்று சற்று தீவிரத்துடன் கேட்டுவிட, எல்லாரும் அமைதியாகி திகைத்து ஜோசப்பையும் மொசார்ட்டையும் பார்க்கிறார்கள். அங்கு சட்டென்று ஒரு அசாதரணமான சூழல் வந்துவிடுகிறது.

அப்போது அங்கு ஒரு குரல் கேட்கிறது. அது வேபருடைய குரல் என்பது தெரிகிறது. அவர் மொசார்ட்டை அழைத்துக் கொண்டே வருகிறார். அவருக்குப் பின்னால் அவருடைய மூன்று மகள்களும் வருகிறார்கள். எல்லோருடைய கவனமும் அவர்கள் பக்கம் திரும்புகிறது. மேடம் வேபர் மொசார்ட்டை நோக்கிச் செல்கிறாள். ‘வுல்ஃபி…என் டியர்..” என்று கொஞ்சுகிறாள்.

சக்கரவர்த்தி ஜோசப்பைப் பார்த்ததும் அப்படியே திகைத்து நின்று, பணிவாக வணக்கம் சொல்லி, திணறி வாய் பேச முடியாமல் நிற்கிறாள். 

மொசார்ட் திடிரென்று ஏற்பட்ட இந்த சங்கடத்தால், தன்னை சரி செய்து கொண்டு எனது வீட்டின் உரிமையாளர் என்கிறார். மேடம் வேபர் சுயநினைவுக்கு வந்தது போல, “ஆமாம்..என் மகள் கான்ச்டான்ஸா இவள்..இவளைத் தான மொசார்ட் திருமணம் செய்து கொள்ளப் போகிறான்” என்று சொல்ல, எல்லாரும் கான்ச்டான்ஸாவைப் பார்க்கிறார்கள். அவள் சக்கரவர்த்திக்கு பணிந்து வணக்கம் சொல்கிறாள். இதைக் கேட்டதும் காதரினா கேவலீரி முகம் சுருங்குகிறது. இதனை சலேரி கண்டுகொள்கிறார்.

மொசார்ட் அவசரமாக, “என்னுடைய் அப்பாவிடம் இன்னும் நான் இது குறித்து  போஎசவில்லை..அதனால் திருமணத்தினை நிச்சயம் செய்யவில்லை சக்கரவர்த்தி” என்கிறார். சொல்லிவிட்டு சமாளிக்கும் விதமாக சத்தமாக சிரிக்கிறார். ஜோசப் மொசார்ட்டிடம் கான்ஸ்டான்சாவைத் திருமணம் செய்து கொண்டு வியன்னாவிலேயே வசிக்கும்படி சொல்கிறார். 

காதரினா கேவலீரி மொசார்ட்டை முறைக்கிறாள். மொசார்ட் அவள் பார்வையைப் பதற்றமாகத் தவிர்க்கிறார்.

வேபர் அதீத உற்சாகத்தில் “நான் உங்கள் கையினை முத்தமிடலாமா” என்று கேட்டபடி ஜோசப்பினை நெருங்க, அவர் தர்மசங்கடத்துடன் பார்க்கிறா.ர் அவரருகில் அவரும் வேபர் சட்டென்று மயக்கமாகி கீழே விழுகிறாள்.

அதைப் பார்த்துவிட்டு நான் கிளம்புகிறேன் என்று செல்கிறார் ஜோசப்…அவருடன் வந்தவர்களும் சக்கரவர்த்தியுடன் செல்கிறார்கள்.

காதரினா கேவலீரி மேடையில் இருந்து வேகமாகச் செல்கிறாள். போகையில் அவளுடைய தலை அலங்காரத்தை கோபத்தில் பிய்த்தபடி செல்கிறாள். சலேரி இதனைப் பார்க்கிறார். மொசார்ட் ஒரு நொடி தயங்கி, அவள் பின்னால் போவதா, மேடம் வேபரை சரி செய்வதா என்று திண்டாடுகிறார். பின்னர் மேடம் வேபரை நோக்கிப் போக்கிறார்.

கான்ஸ்டான்சா மொசார்ட்டிடம் “தண்ணீர்..தண்ணீர் வேண்டும்” என்கிறாள். மொசார்ட் அங்கிருந்து வேகமாக செல்கிறார்.

வேபரின் மகள்கள் அவரைச் சூழ்ந்து கொள்கிறார்கள்.

ஒப்பனை அறை – இரவு – INT – 1780’S

காதரினா கேவலீரி கண்ணாடியைப் பார்த்து உட்கார்ந்திருக்கிறாள். அவள் கோபமாக இருக்கிறாள் என்பது தெரிகிறது. அவளுடைய தலை அலங்காரத்தில் உள்ள பின்களை ஒப்பனையாளர் எடுத்துக் கொண்டிருக்கிறார். மொசார்ட் அங்குள்ள கதவின் மீது தலையை வைத்து நின்று கொண்டிருக்கிறார். 

முன்னுக்குப் பின் தொடர்பில்லாமல் உளறிக்கொண்டிருக்கிறார் மொசார்ட். “நான் என்ன செய்வதென்று தெரியவில்லை..உனக்காக இன்னொரு நாடகத்தை எழுதிக் கொண்டிருக்கிறேன்..ஐயோ..அவர் வேறு மயங்கிவிட்டார்..தண்ணீர் வேண்டும்” என்கிறார். “

கோபத்தில் இருக்கும் காதரினா கேவலீரி, “ஒன்றும் கவலையில்லை..” என்று சொல்ல, “நான் உடனே வருகிறேன்” என்று அங்கிருந்து அவசரமாக வெளியேறுகிறார் மொசார்ட்.

ஒபேரா அரங்கு மேடை – வியன்னா – இரவு – INT -1780’S  

மொசார்ட் நாடக மேடைக்கு வருகிறார். அங்கு மேடையை ஒருபக்கம் கழற்றிக் கொண்டிருக்கிறார்கள். ஒரே குழப்பமாக இருக்கிறது. ஆட்கள் அங்கும் இங்கும் போய்க் கொண்டிருக்கிறார்கள். மேடம் வேபர் தரையில் இன்னும் படுத்துக் கொண்டிருக்கிறார். மயக்கம் தெளியவில்லை என்பது தெரிகிறது. ஒருவர் கையில் வாளியுடன் சென்று கொண்டிருக்க, மொசார்ட் அவரிடமிருந்து அதைப் பிடுங்கிக் கொண்டு மேடம் வேபர் இருக்கும் இடத்துக்கு வருக்கிறார். அவர் முகத்தில் தண்ணீரைத் தெளிக்கிறார். வேபர் கண்களைத் திறக்கிறார். சந்தோஷமாக “என்ன ஒரு மாலை நேரம் இது! உடனே மொசார்ட்டின் அப்பாவுக்கு சக்கரவர்த்தி சொன்னதைக் கடிதம் எழுத வேண்டும்” என்கிறாள். மொசார்ட்டுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.

“வீட்டுக்குக் கிளம்பலாம்” என்று வேபர் சொல்ல, “நீங்கள் போங்கள்..எனக்கு  பாடகர்களுடன பேச வேண்டும் ]” என்கிறார் மொசார்ட். “நாங்கள் காத்திருக்கிறோம்..நீங்கள் வாருங்கள்..சேர்ந்து போகலாம்..எப்படியும் இரவு முழுக்க இங்கே இருக்க மாட்டீர்கள் தானே” என்கிறாள் மேடம் வேபர்.

ஒப்பனை அறை – இரவு – 1780’s

காதரினா கேவலீரி நாடகத்தில் அணிந்திருந்த உடையையே அணிந்திருக்கிறாள். கோபத்தில் அறைக்குள் முன்னும் பின்னுமாக நடந்து கொண்டிருக்கிறாள். சலேரி அங்கு இருக்கிறார். அவரிடம் மொசார்ட் திருமணம் செய்து கொள்ளப்போகும் செய்தியைக் கோபத்துடன சொல்லிக்கொண்டிருக்கிறாள். “அதில் உனக்கு என்ன பிரச்சனை?” என்று சலேரி கேட்க, “அதானே..எனக்கென்ன பிரச்சனை..யார் யாரை வேண்டுமானாலும் திருமணம் செய்து கொள்ளட்டும்” என்று கோபத்தில் சொல்லிக் கொண்டிருக்க, அங்கு அப்போது மொசார்ட் வருகிறார். அவரைப் பார்த்ததும் சலேரி “இன்று நிகழ்ச்சி பிரமாதமாக இருந்தது” என்கிறார். “ஆமாம்..வியன்னாவில் இதற்கு முன்பு இப்படிப்பட்ட இசையைக் கேட்டிருக்க மாட்டீர்கள்” என்கிறார் மொசார்ட். 

காதரினா கேவலீரி மொசார்ட்டிடம் “இன்னும் அந்தம்மா மயக்கத்தில் தான இருக்கிறாரா?” என்று கேட்கிறாள். 

“இல்லை அவர் தெளிந்துவிட்டார்” என்று சொல்ல, காதரினா கேவலீரி கண்ணாடிக்கு முன் உட்கார்ந்து தன்னுடைய ஒப்பனையைக் கலைக்கத் தொடங்குகிறாள். அவள் உன்னுடன் அருமையாக உறவு கொண்டாளோ? என்று குத்தும் விதத்தில் காதரினா கேவலீரி கேட்க, திகைப்புடன் “என்ன?” என்கிறார் மொசார்ட். “அதனால் தானே அவளை உனக்குப் பிடித்திருக்கிறது” என்கிறாள். சலேரி அடிபட்ட பார்வை கொண்டிருக்கிறார்.

அப்போது யாரோ கதவைத் தட்டும் சத்தம் கேட்கிறது. கதவைத் திறந்து கான்ஸ்டான்சா வருகிறாள். மொசார்ட்டைத் தன்னுடன் அழைக்கிறாள். “மொசார்ட்டுக்கு இங்கு வேலை இருக்கிறது” என்று காதரினா கேவலீரி சொல்ல, தன்னுடன் வருமாறு மீண்டும் கான்ஸ்டான்சா அழைக்கிறாள். மொசார்ட் அங்கிருந்த போகிறார். இது காதரினா கேவலீரிக்கு எரிச்சலையும் கோபத்தையும் ஏற்படுத்த அவள் கத்துகிறாள். கத்திக் கொண்டே சலேரியின் தோளில் சாய்கிறாள். 

வயதான சலேரியின் குரல் பின்னணியில் கேட்கிறது.

“எனக்குப் புரிந்து விட்டது..அவன்..என்னுடையவளை அடைந்து விட்டான்..அடைந்தேவிட்டான்”

வயதான சலேரியின் மருத்துவமனை அறை – இரவு – INT – 1820’S

வயதான சலேரி பாதிரியாரிடம் ஆர்வமாகப் பேசிக்கொண்டிருக்கிறார்.

‘என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. கடவுள் என்பவர் எதற்கு இருக்கிறார்? நான் என்னுடைய் எல்லா இன்பங்களையும் விட்டுவிட்டு இசைக்காக வாழ்ந்து கொண்டிருக்கிறேன். ஆனால், மொசார்ட் போன்ற ஒருவன் மூலமாக என்னை கடவுள் அவமானப்படுத்துகிறார். மொசார்ட் மேல் எனக்கு வெறுப்பு மண்டிக் கொண்டிருந்தது. என்னுடைய வாழ்க்கையிலேயே முதன்முறையாக வன்முறை எண்ணங்கள் எனக்குள் உருவானது. என்னால் அதை நிறுத்தவே முடியவில்லை.

“நீங்கள் அப்படித் தொடர்ந்து நினைத்துக் கொண்டிருந்தீர்களா?” என பாதிரியார் வோக்லர் கேட்கிறார்.

“தினமும். ..மணிக்கணக்கில்” – சலேரி

சலேரியின் வீடு – படுக்கையறை – பகல் –1780’S

சலேரி சிலுவைக்கு முன்பாக மண்டியிட்டிருக்கிறார்.

“அவனை சால்ஸ்பர்குக்கே திருப்பி அனுப்பிவிடுங்கள்..அவனுக்கானகவும், எனக்காகவும்”

சிலுவையில் இருந்து இயேசு அவரையே பார்த்துக் கொண்டிருக்கும் க்ளோஸ் அப்.

 CUT TO:

ஆர்ச்பிஷப் இல்லம்- சால்ஸ்பர்க் – பகல் – INT – 1780’S

மொசார்ட்டின் அப்பா லியோபோல்டும் மண்டியிட்டபடி இருக்கிறார் எனக் காட்டப்படுகிறது. ஆனால் சிலுவைக்கு முன்பாக அல்ல, ஆர்க்பிஷப் முன்பாக. ஆர்க்பிஷப் அரியணையில் அமர்ந்திருக்கிறார். ஆர்கோ அவருக்கு அருகில் நின்று கொண்டிருக்கிறார். லியோபோல்ட் கையறு நிலையில் இருக்கிறார். பார்ப்பதற்கு அறுபது வயது மதிக்கத்தக்க கம்பீரமிக்க ஒருவராக இருக்கிறார். அறுபது வயது கொண்டவர்                

ஆர்ச்பிஷப் கோபமாக இருக்கிறார் என்று தெரிகிறது. மொசார்ட் வியன்னாவிலேயே தங்க முடிவெடுத்தது குறித்து ஆர்க்பிஷப் கோபமாக இருக்கிறார். அவரை சமாதானம் செய்து கொண்டிருக்கிறார் லியோபோல்ட். எப்படியேனும் மொசார்ட்டை சால்பர்குக்கு அழைத்து வந்துவிடுகிறேன், நான் சொன்னால் கேட்பான். ஒரு பெண்ணின் வலையில் மாட்டிக் கொண்டிருக்கிறான்” என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். “உன்னுடைய மகனுக்கு நாகரீகமே தெரியவில்லை. அவனுக்கு பணம் தான் முக்கியமானதாக இருக்கிறது” என்று ஆர்க்பிஷப் எரிச்சலாகச் சொல்கிறார். அவரிடம் பணிவாக பேசி, எப்படியேனும் மொசார்ட்டை அழைத்து வந்துவிடுகிறேன் என சொல்லிக் கொண்டிருக்கிறார் லியோபோல்ட். “சரி..முயற்சி செய்..இப்போது கிளம்பு” என்கிறார் ஆர்க்பிஷப். மகிழ்ச்சியுடன் அவர் கைகளில் முத்தமிட்டு நன்றி சொல்கிறார் லியோபோல்ட்.

மொசார்ட்டினுடைய Don Giovanni  ஒபேராவின் fortissimo பின்னணியில் கேட்கிறது. (Fortissimo – ஒரு இசைத்துணுக்கின் ஆர்ப்பாட்டமான தொடக்கம்)

லியோபோல்ட் தன்னுடைய மகனுக்கு கடிதம் எழுதுகிறார். அவருடைய குரல் பின்னணியில் கேட்கிறது, “அருமை மகனே” இப்போது இரண்டாவது fortissimo கேட்கத் தொடங்குகிறது.

பாரக் பாணி சர்ச் – பகல் -int – 1780’          

மொசார்ட் தலை குனிந்திருக்கிறார். அவருடைய தலை முன்னும் பின்னுமாக அசைந்து கொண்டிருகிறது. லியோபோல்ட் எழுதிய கடிதத்தைப் படித்துக் கொண்டிருக்கிறார் என்பது தெரிகிறது. பின்னணியில் லியோபோல்டின் குரல் கேட்கிறது. அது கடிதத்தின் வரிகளை வாசிக்கிறது. “நான் வரும்வரை கல்யாணத்தைப் பற்றி எந்த முடிவும் எடுக்காதே..உனக்காகவே என்னுடைய வாழ்க்கையை நான் அர்ப்பணித்திருக்கிறேன்.நான் வரும் வரை அமைதியாக இரு” என்கிற லியோபோல்டின் குரல் கேட்கிறது. மொசார்ட் தனக்குள் சொல்லிக் கொள்கிறார். “நான் அப்படியே இருப்பேன்”

இப்போது கேமரா பின்னகர்கிறது. பாதிரியாரின் முன்பு மொசார்ட்டும் கான்ஸ்டான்சாவும் திருமணக் கோலத்தில் நின்று கொண்டிருக்கிறார்கள். பாதிரியார் அவர்களுக்குத் திருமணம் செய்து வைக்கிறார். 

C Minor ல் தொடக்கப் பிரார்த்தனைக்கான இசை பின்னணியில் ஒலிக்கிறது.

கான்ஸ்டான்சாவின் அம்மாவும்,சகோதரிகளும் திருப்தியுடன் காணப்படுகிறார்கள்..

லியோபோல்ட் வீட்டின் ஒரு அறை – சால்ஸ்பர்க் – இரவு – INT – 1780’S

பின்னணியில் அரண்மனைத் தெரிகிறது. லியோபோல்ட் தனியாக தன்னுடைய அறையில் அமர்ந்திருக்கிறார். மொசார்ட்டிடம் இருந்து வந்திருந்த கடிதத்தைப் படித்துக் கொண்டிருக்கிறார். அவருடைய காலடியில் பயணத்துக்குத் தயராகியிருக்கிறார் என்பதைக் காட்டக்கூடிய பெட்டிகள் இருக்கின்றன. மொசார்ட்டின் கடிதத்தை மொசார்ட்டின் குரல் படிக்கிறது. கேமரா அந்த அறையைச் சுற்றி வருகிறது. சிறு வயது மொசார்ட் பெற்றிருந்த பரிசுகள், விருதுகள், பதக்கங்கள் அந்த அறையில் இருக்கின்றன. சிறுவன் மொசார்ட்டுக்கு வசதியாக செய்யப்பட்ட சிறிய பியானோ, சிறிய வயலின் அந்த அறையில் இருக்கின்றன. மொசார்ட்டின் பிரபலமான அவருடைய சகோதரியுடன் உடன் மொசார்ட் நிற்கும் ஓவியம் மாட்டப்பட்டிருக்கிறது. மற்றொரு ஓவியத்தில் மொசார்ட்டின் அம்மா இருக்கிறார்.

மொசார்ட்டின் குரல் பின்னணயில் ஒலிக்கிறது. நீங்கள் வருவதற்குள் நான் திருமணம் செய்து கொண்டேன். மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். நீங்கள் தானே சொல்வீர்கள், வியன்னாவில் இசைப்பது என்பது உலகத்தின் இசையை ஆள்வது என்று. நான் அதைத் தான் செய்யப்போகிறேன் என்னுடைய மனைவியின் துணையுடன். அவளை நீங்கள் சந்திக்க வேண்டும். மிக நல்லவள். விரைவில் நான் அதிகம் சம்பாதிப்பேன். நீங்கள் எங்களுடன் வந்து தங்கும் நாளை நான் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். உங்கள் கைகளில் பல ஆயிரம் முறை முத்தமிட்டுக் கொள்கிறேன்” என்று எழுதியிருப்பதை மொசார்ட்டின் குரல் வாசிக்கிறது.

கோபத்தில் அந்தக் கடிதத்தை லியோபோல்ட் கசக்குகிறார். 

பிரார்த்னைக்கான இசை பின்னணியில் ஒலிக்கிறது.

இம்பீரியல் கார்டன் – வியன்னா – பகல் – EXT – 1780’S

சலேரி ஒரு கையில் தொப்பியுடன் நின்று கொண்டிருக்கிறார். தோட்டத்தில் சில பணியாளர்கள் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். அங்கு சக்கரவர்த்தி ஜோசப்பும், அவருடைய மருமகள் இளவரசி எலிசபத்தும் வருகிறார்கள். அவர்கள் உயர்தர குதிரையில் வருகிறார்கள். சலேரியின் அருகில் வந்து நிற்கிறார்கள். எலிசபெத் பதினாறு வயதான பெண். பார்ப்பதற்கு பருமனாக இருக்கிறார். இருவருக்கும் பணிந்து வணக்கம் சொல்கிறார் சலேரி.

ஜோசப், எலிசபெத்தை சலேரிக்கு அறிமுகம் செய்கிறார். எலிசபெத் இசைக் கற்றுக்கொள்ள விரும்புவதாக் சொல்கிறார் ஜோசப். “தகுதிவாய்ந்த ஒருவரிடம் இசைக் கற்றுக்கொள்ள வேண்டும் என ஆசைப்படுகிறாள். நான் ஒருவரை மனதில் வைத்திருக்கிறேன் என்று ஜோசப் சொன்னதும் தன்னைத் தான் சொல்லப்போகிறார் என்று நினைத்து, “அதற்கு என்ன சக்கரவர்த்தி” என்று சலேரி சொல்லப்போக, “நான் மொசார்ட்டிடம் இவள் கற்றுக்கொள்ளலாம் என நினைக்கிறேன்” என்கிறார் ஜோசப். சலேரிக்கு இது அவமானமாகவும் ஏற்றுக் கொள்ள முடியாததாகவும் இருக்கிறது. அவர் ஜோசப்பிடம் “நாம் இதற்கு தகுதித் தேர்வு வைத்து அதில் வெற்றி பெறும் ஒருவரைத் தேர்ந்தெடுக்கலாம் சக்கரவரத்தி” என்கிறார். “ஏன்” என ஜோசப் கேட்க, “ஏற்கனவே மொசார்ட் இத்தாலி மொழியில் அல்லாமல் ஜெர்மானிய மொழியில் ஒபேரா நிகழ்த்தியது குறித்த ஒவ்வாமை பலருக்கும் இருக்கிறது. எல்லோரும் உங்களுக்காகத் தான் பொறுத்துக் கொண்டிருக்கிறார்கள். நீங்கள் இளவரசிக்குக கற்றுக் கொடுக்க அவரை நியமனம் செய்தால் நீங்கள் ஒரு சார்பாக செயல்படுகிறீர்கள் என்று எல்லாரும் நினைப்பார்கள்..அதனால் தகுதித் தேர்வு வைத்து அதில் வெற்றி பெறுபவர் தான் இளவரசிக்கு சொல்லிக் கொடுக்க முடியும் என்று அறிவித்து விடுங்கள்..” என்று சலேரி சொல்கிறார். 

இது மிக நல்ல யோசனை என்று சலேரியைப் பாராட்டுகிறார் ஜோசப். அங்கிருந்து ஜோசபும் அவரது மருமகளும் விடைபெற்று செல்கின்றனர்.

CUT TO:

அவை உறுப்பினரான வான் ஸ்ட்ராக்கின் படிப்பறை – பகல் – INT- 1780’S

வான் ஸ்ட்ராக் மேஜையின் முன் அமர்ந்திருக்கிறார். மொசார்ட் அவருக்கு முன்பு கோபமாக நிற்கிறார். “ஒரு பதினாறு வயதுப் பெண்ணுக்காக நான் என்னுடைய இசையின் மாதிரிகளை கமிட்டியின் முன்பு சமரப்பிக்க வேண்டுமா?” என்று கேட்கிறார். “சக்கரவர்த்தி அப்படித் தான விரும்புகிறார்” என்று வான் ஸ்ட்ராக் சொல்ல, “ஏன் என் திறமை மீது நம்பிக்கையில்லையா?” என்று மொசார்ட் கேட்கிறார். “வியன்னாவில் மற்ற இசையமைப்பாளர்களும் இருப்பார்கள் மொசார்ட்” என்கிறார் வான் ஸ்ட்ராக். “ஆனால் நான் தான் சிறந்தவன்” என்கிறார் மொசார்ட். “கொஞ்சம் தன்னடக்கம் இருக்கட்டும் மொசார்ட்” என்கிறார் வான் ஸ்ட்ராக். “கமிட்டியில் எல்லோருமே இத்தாலியர்கள். இத்தாலியர்களுக்கு ஒரே மாதிரியான இசையைக் கேட்டுத்  தான் பழக்கம். என்னுடைய இசை உங்களுக்கு புதிதாகத் தான் இருக்கும்” என்று இத்தாலியர்களின் இசையைப் பாடிக்காட்டி கிண்டல் செய்கிறார் மொசார்ட். வான் ஸ்ட்ராக் எரிச்சலாகிறார். “உனக்கு இந்த வேலை வேண்டுமானால் நீ உன்னுடைய இசை மாதிரிகளை சமர்ப்பிக்கத் தான் வேண்டும்” என்று சொல்ல, “முடியாது..முடியவே முடியாது” என்று சொல்லி அங்கிருந்து கோபமாக வெளியேறுகிறார் மொசார்ட்.

CUT TO:

மொசார்ட்டின் வீடு – படுக்கையறை – வியன்னா – பகல் – INT – 1780’S

அந்த அறை சிறியதாக இருக்கிறது. பொருட்கள் ஒழுங்கின்மையுடன் கலைந்து கிடக்கின்றன. மொசார்ட் படுக்கையில் படுத்திருக்கிறார். கான்ஸ்டான்ஸா கோபத்துடன் நடந்து கொண்டிருக்கிறாள். “நீ ஒரு முட்டாள். அவர்கள் என்ன கேட்டார்கள்..உன்னுடைய இசை மாதிரியைத் தானே கேட்டார்கள்..அதைக் கொடுப்பதற்கென்ன?..இளவரசி உன்னிடம் இசை கற்க வந்தால் வியன்னாவே அடுத்து வந்து நிற்கும். நாமும் நன்றாக வாழலாம்..இனி என் அம்மாவிடம் போய் பணம் கேட்டு வாங்கி என்னால் வாழ்க்கை நடத்த முடியாது” என்கிறாள் கான்ஸ்டான்ஸா.. “உன்னுடைய அம்மாவிடமா கேட்கிறாய்..இனி கேட்காதே” என்கிறார் மொசார்ட். “பிறகு என்ன செய்வது..நான் தெருவில் இறங்கி பிச்சை எடுக்கவா?” என்று கான்ஸ்டான்ஸா கேட்க, “எனக்கு எந்த இளவரசிக்கும் கற்றுத்தர வேண்டியதில்லை…இந்த நகரத்தின் மக்கள் என்னை விரும்புகிறார்கள்’ என்கிறார் மொசார்ட். “இல்லை..யாரும் இங்கு விரும்பவில்லை..இந்த நகரத்தைப் பற்றி எனக்குத் தான் தெரியும்” என்கிறாள். “உன்னிடம் இருப்பது வெற்றுப் பெருமை..முட்டாள்தனம்” என்று கத்துகிறாள் கான்ச்டான்ஸா.

CUT TO:

சலேரியின் இசை அறை – பிற்பகல் – INT – 1780’S

சலேரி ஒரு மாணவிக்கு இத்தாலியப் பாடலான Caro Mio Ben பாடலை சொல்லித் தந்து கொண்டிருக்கிறார். 

அப்போது கதவு தட்டப்படும் ஓசை கேட்கிறது. 

பணியாள் உள்ளே வருகிறார். சலேரியைப் பார்க்க யாரோ ஒரு பெண் வந்திருப்பதாக சொல்கிறார். யாரென சலேரி கேட்க, “தெரியவில்லை..உங்களை அவசரமாகப் பார்க்க வேண்டும் என்கிறார்” என்று பணியாள் சொல்ல, சலேரி எழுந்து போகிறார்.

CUT TO:

கூடம் – பிற்பகல்- INT- 1780’S

கான்ஸ்டான்சா நின்று கொண்டிருக்கிறாள். முகத்தைத் துணியால் மறைத்திருக்கிறாள். அவரது கையில் கையால் எழுதப்பட்ட குறிப்புகள்  அடங்கிய பை இருக்கிறது. சலேரி கூடத்துக்குள் வருகிறார். கான்ஸ்டான்சா கூச்சத்துடன் நிற்கிறாள்.

கான்ஸ்டான்சா தன்னுடைய முகத்திரையை விலக்க, அது மொசார்ட்டின் மனைவி கான்ஸ்டான்சா என்பதை புரிந்து கொண்ட சலேரி ஆச்சரியமாகிறார். “நான் எனது கணவருக்காக வந்தேன். அவருடைய சில இசைக்குறிப்புகளை எடுத்து வந்திருக்கிறேன். அதை மாதிரியாக வைத்துகொண்டு அவருக்கு அரசவையில் இசை கற்பிக்கும் வாய்ப்பினைத் தர வேண்டும்” என்கிறாள்.

சலேரிக்கு ஆச்சரியமாகிறது.  “மொசார்ட் ஏன் வரவில்லை?” என்று கேட்க, “அவர் பிஸியாக இருக்கிறார்” என்கிறாள் கான்ஸ்டான்சா. “அந்த இசைக்குறிப்புகளை வைத்துவிட்டுச் செல்லுங்கள்..பிறகு பார்க்கிறேன்” என்று சலேரி சொல்ல, “மொசார்ட் அதனை அனுமதிக்க மாட்டார்” என்கிறாள் கான்ஸ்டான்சா. தான் அங்கு வந்தது மொசார்ட்டுக்குத் தெரியாது என்கிற உண்மையைச் சொல்லி விடுகிறாள். 

அவர்களுக்கு பணத்தேவை இருக்கிறது என்றும் இந்த வேலை கிடைத்தால் நன்றாக இருக்கும் என்றும் மொசார்ட் செலவாளியாக இருக்கிறார் என்றும் கான்ஸ்டான்சா சொல்ல, அதனை ஆர்வத்துடன் கேட்டுக் கொள்கிறார் சலேரி.

அங்கிருக்கும் உணவுப்பண்டத்தை அவளிடம் நீட்டுகிறார். “இது என்ன தெரியுமா?” என்கிறார்.

அங்கு சர்க்கரையால் தடவப்பட்ட செஸ்ட்நட்கள் ஒரு தட்டில் இருக்கின்றன. 

இதற்கு   Cappezzoli di Venere என்று பெயர். சர்க்கரையால் தடவப்பட்ட ரோமன் செஸ்ட்நட்கள் என்று சொல்ல, கான்ச்டான்ஸா அதில் இருந்து ஒன்றை எடுத்துக் கொள்கிறாள். 

சலேரியும் ஒன்றை எடுத்துக் கொள்கிறார். அவரது கையில் பெரிய தங்க மோதிரம் இருப்பதைப் பார்க்க முடிகிறது. 

“நன்றி திருவாளரே” என்று கான்ச்டான்ஸா சொல்ல, சலேரி அவளிடம் “என்னை அப்படி அழைக்காதீர்கள்..நான் என்ன பிறக்கும்போதே அரசவை இசையமைப்பாளரா என்ன! நானும் ஒரு கிராமத்தில் இருந்தே வந்திருக்கிறேன், உங்களுடைய கணவரைப்போல! என்று அவளை நோக்கி புன்னகைக்க, கான்ஸ்டன்சா மற்றொரு செஸ்ட்நட்டை எடுத்துக் கொள்கிறாள்.

சலேரி, மொசார்ட்டின் இசைக்குறிப்புகளை ஒரு மேஜையில் விரித்து வைக்கிறார். “இது இங்கே இருக்கட்டும்..நான் பார்த்துவிட்டு சொல்கிறேன்’ என்று சொல்ல, மீண்டும் கான்ஸ்டான்சா அது முடியாது என்கிறாள். அந்த இசைக்குறிப்புகள் அசலானவை அதற்கு வேறு பிரதிகளை மொசார்ட் எடுத்துக் கொள்ளவில்லை” என கான்ஸ்டான்சா சொல்ல, ஆச்சரியமும் திகைப்பும் அடைகிறார் சலேரி. “இவையெல்லாம் அசலானவையா?’ என்று திரும்பத் திருபக் கேட்கிறார். “ஆம் அவர் எதற்கும் பிரதி எடுத்துக் கொள்வதில்லை” என கான்ஸ்டான்சா சொல்கிறாள். 

அந்த ஆச்சரியத்தோடு அந்த இசைக்குறிப்புகளைப் பார்க்கிறார் சலேரி.

 CUT TO:

வயதான சலேரியின் மருத்துவமனை அறை – இரவு – INT – 1823

 வயதான சலேரி பாதிரியாரைப் பார்த்தபடி  அமர்ந்திருக்கிறார்.

மகா அற்புதம் ! அது நமது நம்பிகைக்கு அப்பாற்பட்டது. ஒரு திருத்தம் கூட இல்லாமல் எழுதப்பட்ட இசைக்குறிப்புகள் அவை! அதற்கு என்ன அர்த்தம் என்று தெரிகிறதா?” என்று சலேரி கேட்க, பாதிரியார் வோக்லர் அவரையே பார்க்கிறார்.

“ஏற்கனவே தலைக்குள் அவனுக்குள் முழு இசையும் இசைத்து முடிந்திருக்கிறது” என்கிறார் ஆச்சரியமாக.

சலேரியின் வீட்டுக்கூடம் – பிற்பகல் – INT – 1780’S

க்ளோஸ் அப் – மொசார்ட்டின் கையெழுத்து பிரதி காட்டப்படுகிறது. அந்தப் பிரதியில் இருக்கும் இசைக்குறிப்புகள் இசையாக பின்னணியில் ஒலிக்கின்றன.

அதோடு வயதான சலேரியின் குரலும் பின்னணியில் ஒலிக்கிறது.

“ஒரு நோட்சினை மாற்றினாலும் மொத்தமாய் மாறிவிடும். அன்றைய தினம் ஆர்க்பிஷப்பின் மாளிகையில் நான் கேட்டது விபத்தல்ல. இது கடவுளின் குரலே தான்! நான் பார்த்துக் கொண்டிருந்ததெல்லாம் நேர்த்தியாக, துல்லியமாக எழுதப்பட்ட அளப்பரிய அழகை!” என்கிறார்.

இசை பெருகிக் கொண்டே போகிறது. சலேரி அதை மனதுக்குள் இசைத்துக் கொண்டிருக்கிறார் என்பது தெரிகிறது. மொசார்ட் எழுதும் காட்சியும் இசையும் சலேரியின் மனதில் இருப்பதைப் பின்னணி இசை மூலம் சொல்லப்படுகிறது. பக்கமாக பக்கமாக ஆவேசத்துடனும், நம்ப முடியாமலும் உணர்வுப் பெருக்கிலும் படித்துக் கொண்டே போகிறார் சலேரி. அவர் ஒவ்வொரு பக்கமாய் வாசிக்க வாசிக்க, அதன் தாள்கள் அவர் கையில் இருந்து நழுவி விழுந்து கொண்டே இருக்கின்றன. கான்ஸ்டான்சா கூடத்தின் நடுவே உட்கார்ந்திருக்கிறாள். சலேரிக்குள் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை அவள் அறியவில்லை. அவரையே பார்த்துக் கொண்டிருக்கிறாள். சலேரியால் அந்த இசையின் கனத்தைத் தாங்க முடியவில்லை என்பது அவரது முகத்தில் தெரிகிறது. அவர் அந்த இசைக்குறிப்புகளை வாசித்தபடி அறையைச் சுற்றி சுற்றி வருகிறார். 

இறுதியாக நாம் C MINORல் QUI TOLLIS கேட்கிறோம். ஒரு அலை போல அவரை அது சூழ்ந்து கொண்டிருக்கிறது. அவரால் அதைத் தாங்கிக் கொள்ள முடியாமல் சட்டென்று இசைக்குறிப்புத் தாள்களை மூடுகிறார். சட்டென்று இசை நிற்கிறது. அவரது கைகள் ஆடிக்கொண்டிருக்கின்றன. அவர் எங்கோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறார். கான்ஸ்டான்சா எழுந்து அருகில் வருகிறாள். அவளுக்கு பயமாக இருக்கிறது.

“நன்றாக இல்லையா?”: என்று கேட்கிறாள். சலேரி ஒரு நிதானத்துக்கு வருகிறார். “அற்புதமாக இருக்கிறது” என்கிறார்.

ஆமாம்..அவருக்கு அவரது இசையின் மீது பெருமை” என்கிறாள். சலேரி அமைதியாக இருக்கிறார்.

சலேரி மீண்டும் தனது நிலைக்கு வருகிறார். “நாளை நான் சக்கரவர்த்தியுடன் இரவு உணவு எடுத்துக் கொள்வேன். அப்போது ஒரு வார்த்தை உன் கணவரைப் பற்றிச் சொல்லி வைக்கிறேன்” என்கிறார் சலேரி. 

மிகவும் சந்தோஷத்துடன் என்ன செய்வதென்று தெரியாமல் சலேரியின் கைகளைப் பற்றி முத்தமிடுகிறாள் கான்ஸ்டான்சா.

“இன்று இரவு நீ வரவேண்டும்” என்கிறார். கான்டான்ஸாவுக்குப் புரியவில்லை. “ஏன்?; என்று கேட்க, “எந்த உதவியும் பிரதி உபகாரத்திலேயே செய்யப்படுகிறது என்று சொல்ல, கான்ச்டான்ஸாவுக்கு புரிகிறது. அவமானப்பட்டதாக உணரும் கான்ஸ்டான்சா அவரையேப் பார்க்கிறாள். “வேண்டாம் என்றால் இங்கிருந்து கிளம்பு” என்கிறார் சலேரி. சொல்லிவிட்டு அங்கிருக்கும் மணியை அழுத்துகிறார்.அவர் உள்ளே போய்விட பணியாள் வந்து நிற்கிறாள். அதிர்ச்சியில் நிற்கும் கான்ஸ்டான்சா தரையில் கிடக்கும் இசைக்குறிப்புகளை சேகரிக்கத் தொடங்குகிறாள். 

 CUT TO:

வயதான சலேரியின் மருத்துவமனை அறை – இரவு – INT – NIGHT

பாதிரியார் வோக்லரின் முகம் திகைப்பில் இருக்கிறது. 

வயதான சலேரி, “ஆமாம் ஃபாதர். அது எனது கற்புநிலைக்கு எதிரானது தான். அதனால் என்ன? நல்லவனாக, புத்திசாலியாக, கடின உழைப்பாளனாக, கற்போடு நான் இருந்து என்ன பயன்? இவையெல்லாம் என்னை நல்ல இசையமைப்பாளராக மாற்றி விட்டதா? 

இப்படித் தான் அந்த கணத்தில் உணர்ந்தேன். படைப்பின் முன்பு நல்லவன் என்பதெல்லாம் ஒன்றுமேயில்லை. நான் என்றால், கடவுளுக்கு ஒரு பொருட்டேயில்லை

வோக்லர் அவசரமாக , அப்படியெல்லாம் சொல்லக்கூடாது”

“அப்படியா? மொசார்ட் நல்லவனா?”

“கடவுளை நீங்கள் கேள்வி கேட்க முடியாது. பொறுமை தான் முக்கியம். நீங்கள் உப்பின் அளவுக்கு பொறுமையைக் காட்டினால், அவர் திரும்ப ரொட்டித் துண்டினைத் தருவார். அவர் இரக்கம் கொண்டவர்” என்கிறார் பாதிரியார் வோக்லர்.

“நான் கடவுளைத் தானே பாட வேண்டும் என்று நினைத்தேன். அவர் தானே எனக்கு இசையைக் கொடுத்தவர்.  அவர் இசையின் மீது எனக்கு ஏன் நாட்டத்தினை ஏற்படுத்த வேண்டும். ஒரு காமம் போல் என்னுடன் இசை பயணித்துக் கொண்டே இருந்தது. எனக்கு இசையின் மீதான இச்சையை ஏற்படுத்திவிட்டு அவர் ஏன் என்னை மௌனமாக்குகிறார்.. அவருக்காக நீங்கள்.சொல்லுங்கள்” என்கிறார் சலேரி. 

“யாரும் கடவுளுக்காக பேசமுடியாது”

“ஒ..நீங்கள் தினமும் அதைத் தான் செய்து கொண்டிருக்கிறீர்கள் என நினைத்தேன்”

“நான் மர்மங்களை ஆராய்ச்சி செய்ய முடியாது. நான் பொக்கிஷங்களை மட்டுமே காண்கிறேன். நீங்களும் அப்படித் தான் செய்ய வேண்டும்”

வயதான சலேரி எரிச்சலுடன் “கடவுள் இரக்கமானவர் அல்ல. அவர் ஒரு துன்புறுத்தல்” என்கிறார். 

CUT TO:

சலேரியின் வீடு – படுக்கையறை – இரவு – INT -1780’S

சலேரி அவருடைய மேஜையின் முன் அமர்ந்திருக்கிறார். சிலுவையையே பார்த்துக் கொண்டிருக்கிறார்.

வயதான சலேரியின் குரல் பின்னணியில் கேட்கிறது.

“அந்த அறைக்குள் மாலை நேரம் வரத் தொடங்கியிருந்தது. அந்தப்பெண் திரும்பி வருவாளா மாட்டாளா என்று எனக்குத் தெரியாது. அன்று பிரர்ர்த்தனை செய்தது போல அதற்கு முன்பு நான் பிரார்த்தித்தது இல்லை.

சலேரி பிரார்த்தனை செய்கிறார்

“கடவுளே என்னை உனக்குள் ஏற்றுக் கொள். உண்மையான ஒரு துண்டு இசையால் என்னை நிரப்பு. ஒரு துண்டு இசையில் உன்னுடைய மூச்சு கலந்திருக்கட்டும். அப்போது தான் நீ என்னை விரும்புகிறாய் என்று தெரிந்து கொள்ள முடியும். தயவுசெய்து ஒரு முறை..ஒரே ஒரு முறை. உனக்கு நான் பிடித்தமானவன் என்று ஒருமுறை மட்டும் காட்டிவிடு. நான் என்னை மொசார்ட்டுக்கும் அவனது மனைவிக்கும் காட்டுவேன். அவனை அரச பதவியில் அமர்த்துகிறேன். அவளுக்கு மதிப்பையும் மரியாதையும் பெற்றுத் தருகிறேன். அவர்களது வீட்டிற்கு சந்தோஷத்தினை அனுப்புகிறேன்…என்னை உனக்குள் ஏற்றுக் கொள்…” என்று இறைஞ்சுகிறார்.

பிறகு நீண்ட மௌனம். சலேரி சிலுவையையே பார்த்துக் கொண்டிருக்கிறார். இயேசு அவரைத் திரும்பிப் பார்த்துக் கொண்டே இருக்கிறார். கதவுத் தட்டப்படுகிறது. சலேரி திரும்பிப் பார்க்கிறார். ஒரு பணியாள் வருகிறார்.

‘அந்தப் பெண் மீண்டும் வந்திருக்கிறார் “ என்கிறார்.               

“அவளை உள்ளே அனுப்பு. பிறகு நீ உறங்கச் செல்” என்கிறார் சலேரி.

பணியாள் செல்கிறார். நான் அவரைப் பின்தொடர்கிறோம்.

சலேரியின் வீட்டில் இசை அறை – இரவு – INT – 1780’S

பணியாள் அந்த அறையைக் கடந்து செல்கிறார்.

சலேரி வீட்டின் கூடம் – இரவு – INT – 1780’S

கான்ஸ்டான்சா அங்கிருக்கும் நாற்காலியில் அமர்ந்திருக்கிறாள். முன்பைப் போலவே முகத்தைத் துணியால் மறைத்திருக்கிறாள். அவளது மடியில் இசைக்குறிப்புகள் இருக்கின்றன. மற்றொரு கதவுப் பக்கத்தில் இருந்து ஒரு பனியாள் அவளையே பார்க்கிறாள். முதல் பணியாள் அங்கு வர,. இருவரும் கதவை மூடிவிட்டு அங்கிருந்து செல்கிறார்கள்.  

நாம் கான்ஸ்டான்சாவைப் பார்க்கிறோம். கடிகாரம் ஓடிகொண்டிருக்கும் ஓசை கேட்கிறது. ஒரு பழைய வண்டி சாலையில் கடந்து செல்லும் ஒலி கேட்கிறது. பதற்றத்துடன தனது முகத்தின் துணியை விலக்கி பார்க்கிறாள் கான்ஸ்டான்சா. 

சட்டென சலேரி அந்த அறைக்குள் வருகிறார். அவர் முகம் இறுக்கமாகவும் வெளுத்தும் இருக்கிறது. இருவரும் பார்த்துக் கொள்கிறார்கள். கான்ஸ்டன்சா அவரைப் பார்த்து புன்னகைத்துக் கொண்டே எழ முயற்சிக்கிறாள். 

“இதோ..நான் இங்கே இருக்கிறேன். என்னுடைய கணவர் ஒரு இசைக்கச்சேரிக்கு சென்றிருக்கிறார். எனக்கு அதெல்லாம் புரியாது என்று அவர் முடிவெடுத்துவிட்டார” என்று சொல்லிவிட்டு தான் எதற்கும் தயாராக வந்திருப்பதாக உணர்த்துகிறாள். மொசார்டைப் பற்றி பேசக்கூடாது என்று நினைத்தாலும் அவளால் கட்டுப்படுத்த முடியவில்லை மொசார்ட்டைப் பற்றியே பேசிக்கொண்டிருக்கிறாள். சலேரி அவளையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறார். 

“நாம் இங்கேயே இருக்கலாமா?” என்று கேட்டு தன்னுடைய ஆடையைக் கழற்றத் தொடங்குகிறாள். கழற்றுதுவதற்கு முன்பு அங்குள்ள மெழுகுவர்த்திகளை அணைக்கிறாள்.

தன்னை சரி செய்து கொள்வதற்காக பேசிக்கொண்டே அவள் உடையைக் கழற்றிக் கொண்டிருக்கிறாள்.

ஒருகட்டத்தில் சலேரி அவளை நோக்கி ‘போதும்..நிறுத்து..இங்கேருந்து போ” என்கிறார்.

அதிர்ச்சியுடன் அவரையேப் பார்க்கிறாள் கான்ஸ்டான்சா..

பணியாள் எங்கிருந்தோ வருகிறாள்.

அவளுக்கு முன்பு இப்படி அரை நிர்வாணத்தில் இருப்பது கான்ஸ்டான்சாவுக்கு அவமானமாக இருக்கிறது.

‘இவளை இங்கேருந்து வெளியேற்று” என்று சொல்லிவிட்டு சலேரி கோபத்துடன் அங்கிருந்து செல்கிறார்.

கான்ஸ்டான்சா தன்னுடைய உடையை அவசரமாக அணிந்து கொள்கிறாள்.

பணியாள் தன்னையேப் பார்ப்பதைப் பார்த்து அவமானத்தில் கத்துகிறாள். “‘என்ன பார்க்கிறீர்கள்..போங்க அந்தப்பக்கம்” என்று கோபப்பட்டுவிட்டு அங்கிருந்து கோபத்துடனும் உடல் நடுக்கத்துடனும் செல்கிறாள்.

சலேரியின் வீடு – படுக்கை அறை – இரவு – 1780’S

சலேரியின் முகம் க்ளோஸ் அப்பில் காட்டப்படுகிறது. அவரது கண்கள் மூடியிருக்கின்றன. அவர் நின்று கொண்டிருக்கிறார் எனக் காட்டப்படுகிறது. அவர் கண்களைத் திறக்கிறார். அவை நடுங்குகின்றன. தனக்கு எதிரில் இருக்கும் சிலுவையில் அறையப்பட்ட இயேசுவைப் பார்த்துக் கொண்டே இருக்கிறார்.

வயதான சலேரியின் குரல் பின்னணியில் ஒலிக்கிறது

“இப்போது இருந்து நீயும் நானும் எதிரிகள்” என்கிறார் இயேசுவிடம்.

CUT TO:

வயதான சலேரியின் மருத்துவமனை அறை – இரவு – 1823 

தனது அனுபவத்தை சொல்லிவிட்ட மனதோடு வயதான சலேரி அமர்ந்திருக்கிறார். பாதிரியார் வோக்லர் அவரை பயத்துடன் பார்க்கிறார்.

வயதான சலேரி “ஏனென்றால் நீ எனக்குள் இறங்கவில்லை. ஆனால், நான் உனக்காகவே வாழ்ந்தேன். என்னுடைய முயற்சிகளை நீ பொசுக்கிவிட்டாய். ஏனென்றால், நீ உன்னுடைய கருவியாக ஒரு கீழ்த்தரமான சிறுவனை தேர்ந்தெடுத்து அவன் மூலம் உனக்கு பாரட்டுகளை சூடிக் கொண்டாய். ஏனென்றால் நீ நியாயமில்லாதவன். இரக்கமில்லாதவன்..நான் உன்னை தடுக்கிறேன். நான் உன்னைத் தடுப்பேன். இந்த பூமிக்கு நீ படைத்த அவனை நான் துன்புறுத்துவேன். உனது படைப்பினை நான் நாசம் செய்வேன்!” என்கிறார்.

                                                        

சலேரியின் வீடு – படுக்கையறை- இரவு – 1780’s

கனப்பு அடுப்பின் க்ளோஸ் அப் காட்டப்படுகிறது. அதற்குள் சிலுவையில் அறையப்பட்ட இயேசுவின் சிலை எரிந்து கொண்டிருக்கிறது.

அதையேப் பார்த்துக் கொண்டிருக்கிறார் சலேரி.

மொசார்ட்டின் வீடு – கூடம் – இரவு – 1780’s  வாசல் கதவு படாரென்று திறக்கிறது. மொசார்ட் தள்ளாடி உள்ளே வருகிறார். அவருக்குப் பின்னால் இம்மானுவேல் சிகநேடர் மற்றும் மூன்று நடிகைகள் வருகிறார்கள். இவர்களுடன் மற்றொருவரும் வந்திருக்கிறார். எல்லோருமே மது அருந்தியிருக்கிறார்கள் என்பது தெரிகிறது. சிகநேடர் (எப்போதுமே இளம் பெண்களுடன் இருப்பவராகக் காட்டப்படுகிறார்).  இவர் பருமனானவர், முப்பத்தி ஐந்து வயதுக்கு மேற்பட்டவர்.

மொசார்ட் எதையோ சொல்லிக் கிண்டல் செய்ய எல்லாருமே சிரித்துக் கொண்டிருக்கிறார்கள். எல்லாமே மட்டமான ஜோக்குகளாக இருக்கின்றன.                                     

மொசார்ட் தள்ளாடிக் கொண்டே படுக்கையறைக்குச் சென்று கதவைத் திறக்கிறார். கான்ஸ்டான்சா படுக்கையில் படுத்துக் கொண்டிருக்கிறார். மொசார்ட் கதவை மூடுகிறார்.  

மொசார்ட் எதையோ உளறிக்கொண்டே கான்ஸ்டான்சாவை நோக்கிப் போக, கான்ஸ்டான்சா திரும்புகிறாள். அவளது கண்கள் அழுது சிவந்தது போலக் காணப்படுகிறது. மொசார்ட் அதிர்கிறார். கான்ஸ்டான்சா அருகில் சென்று அமருகிறார். அவள் அழுகிறாள். 

மொசார்ட் அவளைத் தாங்கிப் பிடிக்க, அவளுடைய கண்களில் இருந்து வெள்ளம் போல கண்ணீர் வருகிறது. “நிறுத்து..உடனே நிறுத்து..நான் நண்பர்களை அழைத்து வந்திருக்கிறேன். அவர்கள் வெளியில் காத்திருக்கிறார்கள். எல்லாருக்குமே பசிக்கிறது. சாப்பிட ஏதாவது இருக்கிறதா?” என்று கேட்கிறார். 

“அவர்களைப் போகச் சொல்லுங்கள்..எனக்கு யாரையும் பார்க்கப் பிடிக்கவில்லை” என்று கத்துகிறாள். 

“என்ன ஆயிற்று?” இரு மொசார்ட் கேட்க, “ஐ லவ் யூ..ஐ லவ் யூ” என்கிறாள் ஆவேசமாக. பிறகு மொசார்ட்டைக் கட்டிக் கொண்டு அழுகிறாள். “என்னுடன் இருங்கள்..எனக்கு பயமாக இருக்கிறது’” என்கிறாள்.

CUT TO:

அரண்மனை – உணவறை – பகல் – 1780’s

ஜோசப் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார். அவருக்கு ஆட்டுப்பால் பரிமாறப்படுகிறது. ஜோசப்பின் கையில் சலேரியிடமிருந்து பெற்றுக்கொண்ட குறிப்பாணை இருக்கிறது. சலேரி அவருக்கு அருகில் நின்று கொண்டிருக்கிறார். 

அந்த குறிப்பாணையில் மொசார்ட்டை இளவரசிக்கு இசைக் கற்றுக் கொடுக்க வேண்டாம் என்று சலேரி பரிந்துரைத்திருப்பதைப் பற்றி ஜோசப் சலேரியிடம் கேட்கிறார். “மொசார்ட்டினை இளவரசிக்கு இசைக் கற்றுக் கொடுக்க பரிந்துரை செய்ய இயலவில்லை சக்கரவர்த்தி” என்று சொல்ல, ஜோசப் அந்தப் பணியாளைப் பார்க்கிறார். அவர் அந்த அறையை விட்டு வெளியேற, சலேரி தொடர்கிறார். மொசார்ட் இளம்பெண்களிடம் தவறாக நடந்து கொள்கிறவர் என்றும், அதனால் தான அவரிடம் யாருமே இசைக் கற்றுக் கொள்ள வருவதில்லை என்றும், அவரிடம் படிக்கும் ஒரு பெண்ணிடம் இரண்டு முறை “ என்று சொல்லி சலேரி நிறுத்திவிட “புரிகிறது”  என்கிறார் ஜோசப் 

CUT TO:

 சலேரியின் வீடு – மாடிப்படி – வியன்னா – பகல் – 1780’s

சலேரி அப்போது தான் அரண்மனையில் இருந்து திரும்பியிருக்கிறார். மாடிப்படியில் ஏறிக்கொண்டிருக்கிறார். பணியாள் அவரை எதிர்கொள்கிறார்.  சலேரியைப் பார்க்க மொசார்ட் வந்திருப்பதாகச் சொல்கிறார் பணியாள். சலேரிக்கு பயமாகிறது. 

எதற்காக வந்திருக்கிறாராம் என சலேரி கேட்க, “உங்களுக்காகத் தான் காத்திருக்கிறார்..உங்களிடம் தான பேச வேண்டும் என்கிறார்” என்று பணியாள் சொல்ல, சலேரி தன்னுடன் அந்தப் பணியாள் அறைக்கு வரும்படி அழைத்துக் கொண்டு போகிறார். இருவரும் மாடிப்படிகளில் ஏறுகிறார்கள். 

சலேரியின் வீடு – கூடம் – பகல் – 1780’s

மொசார்ட் சலேரிக்காகக் காத்திருக்கிறார். கையில் அவரது இசைக்குறிப்புகள் அடங்கிய பிரதிகள் இருக்கின்றன. சலேரி மொசார்ட்டை நோக்கிப் பதற்றமாகச் செல்கிறார். மொசார்ட் பணிவாக எழுந்து நிற்கிறார். “மொசார்ட்டை வரவேற்கிறார் சலேரி. மொசார்ட் சலேரியிடம் தன்னுடைய இசைக்குறிப்புகளைக் கொடுத்து “நீங்கள் இந்த இசைக்குறிப்புகளைப் பார்க்க வேண்டும் என்று சொன்னீர்களாம்..நான் மிக மோசமான நிலையில் இருக்கிறேன். எனக்கு நீங்கள் தான் உதவ முடியும். பணப்பிரச்சனை அதிகமாக உள்ளது. இப்போது எனக்குத் திருமணம் வேறு ஆகிவிட்டது”
என்கிறார். 

“எப்படி இருக்கிறார் உங்களது அழகான மனைவி? என்று சலேரி கேட்கிறார். 

“நன்றாக இருக்கிறார். நான் அப்பாவாகப் போகிறேன். நேற்றிரவு தான் அவள் எனக்கு இதைச் சொன்னாள். உங்களிடம் தான் முதலில் இதைச் சொல்கிறேன்” என்கிறார் மொசார்ட். வாழ்த்து தெரிவிக்கிறார் சலேரி. “எனக்கு இந்த வேலை மிக முக்கியம்” என்கிறார் மொசார்ட் அவரை நிராதரவாகப் பார்க்கிறார் சலேரி.

“நீங்கள் ஏன் என்னை நேற்றே வந்து சந்திக்கவில்லை மொசார்ட்? நேற்று என்றால் என்னால் உதவியிருக்க முடியும்,. இன்று என்னால் முடியாது. “ – சலேரி

“இதோ என்னுடைய இசை உங்கள் முன்னால் இருக்கிறது. இதை நான் பணிவாக சமர்ப்பிக்கிறேன். இதைத் தானே நீங்கள் கேட்டீர்கள் என மொசார்ட் சொல்கிறார்.

“இப்போது தான் அரண்மனையில் இருந்து வருகிறேன். அந்த வேலைக்கு ஆள் எடுத்து விட்டார்கள் என்கிறார் சலேரி.

“எப்படி இது நடந்தது? என்னுடைய இசைக்குறிப்புகளை நீங்கள் பார்க்கவேயில்லையே..எனக்கு நீங்கள் உதவ முடியாதா..தயவு செய்து உதவுங்கள்” என்று கெஞ்சுகிறார். 

என்னால் முடியாது மொசார்ட்..என்று சொல்ல, “யாரை நியமித்திருக்கிறார்கள் என்று மொசார்ட் கேட்கிறார். சாமரை என்று சலேரி சொல்கிறார். 

சாமர் ஒரு முட்டாள் என்கிறார் மொசார்ட். “சாமர் சரியான நபர் இல்ல என்று நீங்கள் சகக்ரவர்த்தியிடம் தெரிவியுங்கள்..அவரால் நல்ல இசையைக் கற்றுத் தரவே முடியாது. இசைக்கே அவர் களங்கம் செய்து விடுவார்” என்று ஆவேசமாக சொல்றார் மொசார்ட்.

சலேரி மொசார்ட்டுக்கு ஒரு இனிப்பைத் தருகிறார். மொசார்ட் தன்னையறியாமல் வாங்கிக் கொள்கிறார். நிறுத்தாமல் பேசிக்கொண்டே இருக்கிறார். 

“எனக்கு மாணவர்கள் வேண்டும்” என்கிறார். “நான் தோல்விஅடைந்து கொண்டே இருக்கிறேன்..ஏன் என்று தான் தெரியவில்லை என்று மொசார்ட் சொல்ல, “நீங்கள் தகுதிக்கு  மீறிய வாழ்க்கை வாழ்வதாக என்னுடைய நண்பன் சொன்னான்” என்கிறார் சலேரி. “அப்படியெல்லாம் இல்லை..எங்கள் வீட்டில் சமையலுக்கு ஆள் இல்ல, பணியாள் கிடையாது..யாருமே இல்லை” என்று மொசார்ட் சொல்ல, 

“இது எப்படி சாத்தியம்? நீங்கள் வெற்றிகரமாக இசை நிகழ்ச்சிகளை நடத்துவதாகத் தானே கேள்விப்பட்டேன்” என்கிறார் சலேரி.

“ஆமாம்..அவை எல்லமே வெற்றி தான். உட்கார இருக்கை கூட கிடைக்காது ..அத்தனை கூட்டம். அவர்கள் எல்லாருமே என்னுடைய இசையைக் கேட்க ஆர்வமாக இருக்கிறார்கள். ஆனால் யாரும் என்னிடம் கற்றுக் கொள்ள வர மாட்டார்கள். அவர்கள் தங்களுடைய மகள்களை என்னிடம் இசைக் கற்க அனுப்ப மாட்டார்கள்.  அவர்கள் என்னை எதிரி போல் நினைக்கிறார்கள். நான் எதிரி அல்ல. உங்களுக்கு மகள் இருக்கிறாளா?” என்று மொசார்ட் கேட்க,  இல்லை என்கிறார் சலேரி. சலேரியிடம் தனக்கு பணம் கடனாகக் கிடைக்குமா என்று கேட்கிறார். 

ஆறு மாதத்தில் திருப்பித் தருகிறேன். அதற்குள் இந்த வியன்னாவின் பணக்காரனாகி விடுவேன். நான் இப்போது எழுதிக் உருவாக்கிக் கொண்டிருக்கும் இசை இந்த ஐரோப்பாவையே அசைத்துவிடும் “ என்கிறார் மொசார்ட். 

அதைப் பற்றித் தெரிந்து கொள்ள சலேரி ஆர்வம் காட்டுகிறார். இதைப் பற்றி மேலும் சொல்லுங்கள் என்கிறார்.

மொசார்ட் அது ஒரு ரகசியம் என்கிறார். சலேரி மொசார்ட்டுக்கு வெண்ணெய்யும், சர்க்கரையும், ரம்மும் கலந்த ஒருவகை இனிப்பைத் தருகிறார். அப்போதும் அது எப்படியான இசை நிகழ்ச்சி என்று கேட்க, மொசார்ட் சொல்ல மறுக்கிறார். தனக்கு கடன் தரும்படி கேட்கிறார். 

மொசார்ட் அந்த இசையைப் பற்றி ஒன்றும் சொல்லமாட்டார் என்று தெரிந்ததும் சலேரி மொசார்ட்டிடம் தனக்கு இந்த ஊரில் உள்ள முக்கியஸ்தர் ஒருவரைத் தெரியும் என்றும் அவருடைய மகளுக்குக் கற்றுக் கொடுக்க முடியுமா என்றும் கேட்கிறார். 

மைக்கேல் ஸ்க்லூம்பெர்க் வீடு – பகல் – 1780’s

நாய்களின் குரைப்பு சத்தம் கேட்கிறது. அந்த வீட்டின் கூடத்தில் எங்கு பார்த்தாலும் நாய்களாக இருக்கின்றன. .

மொசார்ட் அங்கு வந்திருக்கிறார். அது பணக்கார வியாபாரியான மைக்கேல் ஸ்க்லூம்பெர்க் வீடு. நாய்களுக்கு நடுவே நடந்து வந்து மொசார்ட்டை வரவேற்கிறார் ஸ்க்லூம்பெர்க். பார்ப்பதற்கு நட்பாக பழகும் மனிதரைப் போல இருக்கிறார். மொசார்ட்டை நோக்கி நாய்கள் குரைக்கின்றன. அவற்றை அமைதியாக இருக்கும்படி சொல்கிறார் ஸ்க்லூம்பெர்க்.

மொசார்ட்டை வரவேற்கிறார். “இந்த நாய்கள் தன்னுடைய பிள்ளைகள் போல” என்கிறார். “இதில் யாருக்குக் கற்றுத் தர வேண்டும்” என்று மொசார்ட் கேட்க, விழுந்து விழுந்து சிரிக்கிறார் ஸ்க்லூம்பெர்க். “உங்களது நகைச்சுவை உணர்வு எனக்குப் பிடித்திருக்கிறது மொசார்ட்” என்கிறார்.

தன்னுடைய மனைவியை அழைத்து மொசார்ட்டை அறிமுகம் செய்கிறார். “சலேரி சொல்லி நமது மகளுக்குக் கற்றுக் கொடுக்க வந்திருக்கிறவர்” என்று சொல்ல, “நீங்கள் மொசார்ட்டாக இருக்க முடியாது. உங்களைப் பற்றி அதிகம் கேள்விப்பட்டிருக்கிறேன். வயதானவராக இருப்பீர்கள் என்று நினைத்தேன்” என்கிறாள் ஸ்க்லூம்பெர்க்கின் மனைவி. பிறகு தங்களுடைய மகளை அறிமுகம் செய்கிறார்கள். அவள் பதினைந்து வயதான பெண். பார்ப்பதற்கு சற்று மந்தமான, சோம்பேறிப் பெண் போல இருக்கிறாள். விலையுயர்ந்த ஆடைகளை அணிந்திருக்கிறாள். பதற்றமாகக் காணப்படுகிறாள்.

ஸ்க்லூம்பெர்க்கின் மனைவி மொசார்ட் தங்கள் வீட்டுக்கு வந்ததற்கும், தங்களுடைய மகளுக்குக் கற்றுக் கொடுப்பதும் தங்களுக்கு மிக சந்தோஷமான விஷயம் என்கிறார். காலையில் இருந்து தன்னுடைய மகள் கற்றுக் கொள்ளத் தயாராக இருப்பதைச் சொல்கிறாள். இடையிடையே நாய்கள் குரைத்துக் கொண்டிருக்கின்றன.

மொசார்ட்டை இசை அறைக்கு அழைத்துச் செல்கிறார்கள். அங்கு ஒரு பியானோ இருக்கிறது. ஸ்க்லூம்பெர்க்கும் அவரது மனைவியும் அங்குள்ள சோஃபாவில் அமர்ந்து கொள்கிறார்கள். அவர்களைச் சுற்றி நாய்கள்  நிற்கின்றன. மொசார்ட்டைப் பார்த்து குரைத்துக் கொண்டே இருக்கின்றன. “அவற்றைக் கண்டுகொள்ள வேண்டாம் என்றும் பாடத்தை ஆரம்பிக்கும்படியும் சொல்கிறார் ஸ்க்லூம்பெர்க்.

மொசார்ட் ஸ்க்லூம்பெர்க்கின் மகளிடம் “எதையாவது வாசித்துக் காட்டு” என்கிறார். அவள் தயங்குகிறாள் “எத்தனை வருடம் கற்றுக்கொண்டாய்? யாரிடம் கற்றுக்கொண்டாய்  என்று மொசார்ட் கேட்கிறார். “என்னிடம் தான் ஒரு வருடமாகக் கற்றுக் கொண்டாள்..” என்கிறார் ஸ்க்லூம்பெர்க்கின் மனைவி.

“நீங்கள் இருந்தால் என்னால் வாசிக்கமுடியாது என்கிறாள் ஸ்க்லூம்பெர்க்கின் மகள். மொசார்ட்டும் அதைச் சொல்ல,. “அதெல்லாம் முடியாது .நாங்கள் இங்கே தான் இருப்போம்” என்கிறார் ஸ்க்லூம்பெர்க்.

ஸ்க்லூம்பெர்ககின் மகள் வாசிப்பதில் தயக்கம் காட்டி பியானோவையே பார்த்துக் கொண்டிருக்கிறாள். மொசார்ட் அவளை உற்சாகப்படுத்தும் விதமாகத் தான் முதலில் வாசித்துக் காட்டுகிறார். அவர் வாசிக்கத் தொடங்கும்போது ஒரு பீகில் வகை நாய் எழுந்து நின்று ஆவேசமாகக் குறைக்கிறது. மொசார்ட்டுக்கு பயத்தில் தூக்கி வாரிப்போடுகிறது. “கண்டு கொள்ளாதீர்கள்..இவன் எப்போதும் இப்படித் தான்” என்கிறார் பெருமையாக ஸ்க்லூம்பெர்க். மொசார்ட் எரிச்சலை அடக்கிக் கொண்டு வாசிக்கத் தொடங்குகிறார். அது கத்திக் கொண்டே இருக்கிறது ஒரு கட்டத்தில் அது அமைதியாகிவிடுகிறது. மொசார்ட்டின் இசையைக் கேட்பது போன்ற பாவனைக்குள் வந்துவிடுகிறது.  

ஸ்க்லூம்பெர்க்கும் அவரது மனைவியும் ஆச்சரியப்படுகின்றனர். பேசிக்கொண்டே இருக்கிறார்கள் “நிறுத்தாதீர்கள் மொசார்ட்..அற்புதம்..வாசியுங்கள்.. இவன் அமைதியாகிவிட்டான். உங்கள் இசையைக் கேட்கிறான்” என்கிறார்கள். அவர்கள் பேசுவது மொசார்ட்டுக்கு எரிச்சலாக இருந்தாலும் வாசிக்கிறார் . “நீங்கள் வாசித்துக் கொண்டே இருங்கள்..இவன் சாப்பிடுவதேயில்லை..அவனுக்கான பிஸ்கட்டுகளை அவனுக்குத் தருகிறோம்..அவன் சாப்பிடுவான்..நிறுத்தாதீர்கள்” என்கிறார்கள். மொசார்ட் வாசிப்பதை சட்டென்று நிறுத்திவிட்டு எழுகிறார்.

கோபத்துடன “அடுத்தமுறை இவர்களில் ஒருவருக்குக் கற்றுத் தர வேண்டுமானால் என்னைக் கூப்பிடுங்கள்” என்று சொல்லிவிட்டு வேகமாக வெளியேறுகிறார்.

அவர் போவதையே மூவரும் ஆச்சரியமாகவும் அதிர்ச்சியுடனும் பார்க்கிறார்கள். 

“என்ன மாதிரியான மனிதர் இவர்” என்று பேசிக்கொள்கிறார்கள்.

CUT TO:                     

வியன்னாவில் பரபரப்பான தெரு – பகல் – 1780’s

உற்சாகமான, பரபரப்பான தெரு காட்டப்படுகிறது. தெருவில் பல்வேறு வியாபாரங்கள் நடந்து கொண்டிருக்கிறது. அவற்றுக்கு நடுவில் கையில் ஒயின் பாட்டிலுடன் மொசார்ட் உற்சாகமாக நடந்து வந்து கொண்டிருக்கிறார்.  பின்னணியில் அவருடைய மனநிலையை சொல்லும் விதமாக உற்சாகமான Non piu Andrai பியானோவில் ஒலிக்கிறது.

 தன்னுடைய வீட்டுக்குள் உற்சாகமாக நுழைகிறார் மொசார்ட்.

மொசார்ட் வீடு – பகல் – 1780’s

வீட்டுக்குள் நுழையும் மொசார்ட் சட்டென்று நிற்கிறார். மாடிப்படியினைப் பார்க்கிறார். அங்கு தொப்பி அணிந்து கொண்டு ஓர் உருவம் தெரிகிறது. நிழலுருவமாய்த் தெரிகிறது. இரு கைகளையும் விரித்துக் காட்டுகிறது உருவம். மொசார்ட் அதை சில நொடிகள் பார்க்கிறார். அவருக்கு யாரென்று புரிகிறது. உற்சாக மிகுதியில் ஒயின் பாட்டிலைக் கீழே வைத்துவிட்டு ‘அப்பா..” என்று அழைத்தபடி போய்க் கட்டிக் கொள்கிறார்.  

மொசார்ட்டின் வீடு – கூடம் – பகல் _1780’s

வீட்டினுள் வருகிறார்கள். வீடு சுத்தமில்லாமல் அங்கங்கே டீ கப்புகள், காலியான பாட்டில்கள் என சிதறிக் கிடக்கின்றன. மொசார்ட்டின் இசைக்குறிப்புகள் அங்கங்கே கிடக்கின்றன. இவற்றை லியோபோல்ட் பார்க்கிறார். இப்போது லியோபோல்ட் காட்டப்படுகிறார். இன்னும் அவருக்கு வயதாகியிருக்கிறது. முகத்தில் பயணக்களைப்புத் தெரிகிறது. அவர் உடல்நிலை சரியில்லாதவர் போல இருக்கிறார். 

மொசார்ட் அவரிடம் உற்சாகமாகப் பேசுகிறார். லியோபோல்ட் அந்த வீட்டிற்கு வேலையாள் யாரும் இல்லையா எனக் கேட்கிறார். கான்ஸ்டான்சாவே எல்லா வேலைகளையும் செய்ய விரும்புவாள் என்றும் அதனால் பணியாள் யாரும் இல்லை என்றும் மொசார்ட் சமாளிக்கிறார். கான்ஸ்டான்சா எங்கே என்று லியோபோல்ட் கேட்க, “அவள் வீட்டில் இல்லை என்று நினைக்கிறேன்.அதனால தான் வீடு இப்படி இருக்கிறது. மற்றபடி நன்றாக இருக்கும். அவள் அவளுடைய அம்மா வீட்டுக்குப் போயிருப்பாள்” என்று சொல்லிக் கொண்டே படுக்கையறைக் கதவைத் திறக்க அங்கு கான்ஸ்டான்சா இருக்கிறாள். மொசார்ட்டுக்கு என்ன செய்வதென்று தெரியாமல் சமாளிக்கிறார். “கான்ஸ்டான்சா..என்னுடைய அப்பா வந்திருக்கிறார்..கொஞ்சம் வாயேன்” என்று சொல்லிவிட்டு கதவை மூடிவிட்டு லியோபோல்டைப் பார்த்து சிரிக்கிறா.ர் “அவள் பாவம்..இப்போது வந்துவிடுவாள்” என்கிறார்.

லியோபோல்ட் மொசார்ட்டிடம் “நீ நன்றாக இருக்கிறாயா? கடனில் இருப்பதாகக் கேள்விப்பட்டேன்” என்கிறார். “அதெல்லாம் இல்லை..நான் நன்றாக இருக்கிறேன்..யாரோ உங்களிடம் பொய் சொல்லியிருக்கிறார்கள்” என்கிறார் மொசார்ட். “எத்தனை மாணவர்கள் உன்னிடம் கற்றுக் கொள்கிறார்கள்?” எனக் கேட்கிறார். “மாணவர்களா? அவர்கள் எதற்கு? நான் இசையமைக்கிறேன் என்கிறார் மொசார்ட். “இசையமைப்பது எப்படி பணம் பெற்றுத் தரும்?” என்று லியோபோல்ட் கேட்க, மொசார்ட் அங்கிருக்கும் ஒரு இசைக்குறிப்பு எழுதப்பட்ட காகிதத்தைக் கையில் எடுத்து, “இது எனக்கு பெற்றுத் தரும்..மிக சிறப்பான ஒன்றை நான் எழுதிக் கொண்டிருக்கிறேன்” என்கிறார். “அது என்னவென்று லியோபோல்ட் கேட்க, “இப்போது ஒன்றும் கேட்காதீர்கள், ரகசியம்” என்கிறார் மொசார்ட்.

அப்போது கான்ஸ்டான்சா கதவைத் திறந்து கொண்டு வெளியே வருகிறாள். மேடிட்ட வயிறுடன் நிற்கிறாள். தலைமுடியை அவசரமாக அள்ளி முடிந்திருக்கிறாள் என்பது தெரிகிறது. சோர்வாக இருக்கிறாள். “குழந்தை பிறக்கப்போகிறதா?” எனக்கு இதனை நீ கடிதத்தில் சொல்லவேயில்லையே என்கிறார் லியோல்போல்ட் மொசார்ட்டிடம்.. “சொல்லவில்லையா? அப்படியா? நான் சொல்லிவிட்டேன் என்றே நினைத்தேன்’  என்கிறார் மொசார்ட்.

“டீ சாப்பிடுகிறீர்களா?” என்று கான்ஸ்டன்சா கேட்க , மொசார்ட் அதற்கு “டீயா? அதெல்லாம் வேண்டாம்..அப்பாவை வெளியில் அழைத்துச் செல்வோம். வெளியில் சாப்பிடலாம்” என்கிறார் மொசார்ட். “எனக்காக செலவு செய்ய வேண்டாம் “ என்கிறார் லியோபோல்ட்.

“அதெல்லாம் இல்லை..வாருங்கள் வெளியே போவோம்” என்கிறார் மொசார்ட்.

பின்னணியில் Ich Mochte Wohl Der Kaiser sein (K.539) ஒலிக்கிறது.   
    

CUT TO:

வியன்னாவின் தெரு – பகல் – 1780’S

மொசார்ட் மற்றும் கான்ச்டான்சாவுடன் லியோபோல்ட் நிற்கிறார். மொசார்ட்டும் கான்ஸ்டான்சாவும் ஷாப்பிங் செய்து கொண்டிருக்கிறார்கள். 

உடையலங்கார கடை – வியன்னா – பகல் – 1780’S

முகமூடிகள் விற்கும் கடை அது. வெவ்வேறு விதமான உடைகள் அங்கு தொங்கவிடப்பட்டிருக்கின்றன. மொசார்ட் ஒரு முகமூடியை அணிந்திருக்கிறார். கான்ச்டான்ஸா வெள்ளை நிற வெல்வெட் மாஸ்க்கினை அணிந்திருக்கிறாள்.

லியோபோல்டுக்கு இரண்டு கடை பணியாளர்கள் அடர் நிற கோட் மற்றும் முக்கோணத் தொப்பியை அணிவிக்கிறார்கள். அவை அடர் நிற முகமூடியுடன் இணைக்கப்பட்டிருக்கிறது. அதன் வாய்ப்பகுதி எப்போதும் சிரித்துக் கொண்டிருப்பது போல வடிவமைக்கபப்ட்டுள்ளது.

லியோபோல்ட் திரும்பி முகமூடி வழியாகத் தன்னுடைய மகனைப் பார்க்கிறார்.

                                                                      

பெரிய பார்ட்டி அறை – வியன்னா – இரவு – 1780’S

ஒரு பார்ட்டி ஹாலில் விதவிதமான முகமூடிகள் அணிந்து பலர் இருக்கிறார்கள். எல்லோருமே ஆடம்பரமான உடையில் தெரிகிறார்கள்.   Ich Mochte Wohl Der Kaiser sein இசை உச்சஸ்தாயியில் ஒலிக்கிறது. எல்லோரும் ஆடிக்கொண்டிருக்கிறார்கள். இம்மானுவேல் சிகநேடர் அங்கு இருக்கிறார். அவர் கிரேக்க உடையை அணிந்திருக்கிறார். ஏற்கனவே அவருடன் காணப்பட்ட மூன்று நடிகைகளுடன் இருக்கிறார். கான்ஸ்டான்சாவும், மொசார்ட்டும் அந்த பாதி இருளடைந்த  பார்ட்டி ஹாலில் லியோபோல்டின் கைகளைப் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அங்கிருப்பதை சலேரி ஓரிடத்தில் இருந்து பார்க்கிறார். அவர் சாதாரண மாலை நேர உடையில் இருக்கிறார். அவர்கள் தன்னைப் பார்க்காதவாறு மறைந்து கொள்கிறார். 

அவர்கள் மூவரும் வேறு பக்கம் போனதும் அங்கு இருக்கும் ஒரு பெண்மணியிடம் முகத்தை மறைக்கும் முகமூடி ஒன்றினை வாங்கி வைத்துக் கொள்கிறார் சலேரி. அதை வைத்து தனது முகத்தை மூடியபடி மொசார்ட்டைக் கவனிக்கிறார். 

அங்கு மெழுவர்த்திகளால் பிரகாசமடைந்த ஒரு அறை உள்ளது. அங்குள்ள பியானோவில் இம்மானுவேல் சிகநேடர் Ich Mochte Wohl Der Kaiser sein ஐ வாசிக்கிறார். அடுத்தடுத்து இசைத்துக் கொண்டே இருக்கிறார்.

அங்கு இரண்டிரண்டு பேராக அங்கிருக்கும் ஒன்பது நாற்காலிகளையும் சுற்றி வருகிறார்கள். இசை நிறுத்தபப்ட்டதும் நாற்காலிகளில் சென்று அமருகிறார்கள். 

கான்ஸ்டான்சா லியோபோல்டுடன் ஆடுகிறாள். மொசார்ட் ஒரு நடிகையுடன் ஆடுகிறார். இவற்றையெல்லாம் சலேரி பார்த்துக் கொண்டிருக்கிறார்.

சிகநேடர் இசையை நிறுத்துகிறார். எல்லாரும் நாற்காலிகளில் உட்காருகிறார்கள். லியோபோல்டும் கான்ஸ்டான்சாவும் ஒரே நாற்காலியில் அமரப்போக, யாருக்கு அந்த நாற்காலி என்பது போல இருவரும் ஒருவரையொருவர் தள்ளுகிறார்கள். இருவருமே தரையில் விழுகிறார்கள். கான்ஸ்டான்சா உடனே எழுந்து நாற்காலியில் போய் உட்கார்ந்து கொள்கிறாள். இருவருமே தோற்றுவிட்டதாக சிகநேடர் சொல்கிறார். இரண்டு பேரும் அதற்கு தண்டனையாக விக்குகளை மாற்றிக் கொள்ள வேண்டும் என்கிறார். 

இது லியோபோல்டுக்குப் பிடிக்கவில்லை. 

எல்லோரும் விக்குகளை மாற்றிக்கொள்ளுமாறு உற்சாகமாக கூச்சலிடுகிறார்கள். மூன்று நடிககளும் லியோபோல்டின் கையைப் பிடித்து அவரது விக்கினை பலவந்தமாகக் கழற்றுகிறார்கள். கான்ஸ்டான்சாவின் விக்கினை லியோபோல்டுக்கு மாட்டுகிறார்கள். அது பெண்கள் அணிந்து கொள்ளும் விக் என்பதால் லியோபோல்ட் அவமானமாக உணருகிறார். 

மொசார்ட் லியோபோல்டிடம் “இது வெறும் விளையாட்டு தான் அப்பா” என்கிறான். 

எல்லோரும் சிரிக்கிறார்கள். லியோபோல்ட் கோபமாக அங்கிருந்து கிளம்ப எழுந்திருக்கிறார். 

“அப்பா.. போகாதீர்கள்..நில்லுங்கள்” என மொசார்ட் பின்னாலேயே போகிறார். 

மீண்டும் லியோபோல்டை அழைத்து வருகிறார்கள். இப்போது விளையாட்டு மீண்டும் தொடங்க, வேண்டுமென்றே லியோபோல்டுக்காக நாற்காலியை மொசார்ட் விட்டுக் கொடுத்துவிட்டு நிற்கிறார். “உங்கள் மகன் தோற்று விட்டான்..அவனுக்கான தண்டனையைக் கொடுங்கள்” என்கிறார் சிகநேடர்.

“என்னுடன் சால்ஸ்பர்க் வந்துவிடு” என்கிறார் லியோபோல்ட். 

“”அப்பா…இந்த அறையில் நான் செய்யக்கூடிய ஒன்றை சொல்லுங்கள்” என்கிறார் மொசார்ட்.                                

எல்லோரும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். “எனக்கு அலுப்பாக இருக்கிறது. நான் போகிறேன் “ என்கிறார் லியோபோல்ட். அப்போது சிகநேடர் நான் ஒன்றைச் சொல்கிறேன்..மொசார்ட் நீ பியானோவை  பின்னங்கைகளால் வாசிக்க வேண்டும் என்று சொல்ல, மொசார்ட் உற்சாகமாக சம்மதிக்கிறார். எல்லோரும் ஆச்சரியப்படுகிறார்கள். 

கான்ஸ்டான்சாவின் விக்கினை அணிந்து கொண்டு மொசார்ட் பியானோவுக்கு முதுகு காட்டி அமர்ந்து கொண்டு அனாயசமாக பின்னங்கைகளால் வாசிக்கிறார். இரண்டு கைகளின் விரல்களும் பியானோவில் நடனமாடுகின்றன. இதைப் பார்த்துக் கொண்டிருக்கும் சலேரி தன்னையுமறியாமல் வியப்புடன் முன்னே வருகிறார். மொசார்ட் வாசிப்பதைப் பார்க்கிறார். கூட்டத்துக்கிடையில் சலேரி நிற்பதை கான்ஸ்டான்சா பார்த்து விடுகிறாள். 

               .

நிறுத்தாமல் வாசியுங்கள் என்று கூட்டத்தினர் மொசார்ட்டிடம் கூச்சலிடுகிறார்கள் “யாரைப் போல வாசிக்கவேண்டும்?” என்று மொசார்ட் கேட்கிறார். 

ஒவ்வொருவரும் ஒரு பெயரைச் சொல்ல, கான்ஸ்டான்சா “சலேரி..” என்கிறாள். 

மொசார்ட் “ஐயோ..அது ரொம்ப கஷ்டமாச்சே” என்று கிண்டல் செய்து விட்டு பியானோவைப் பார்த்துத் திரும்பி உட்காருகிறார். பிறகு சலேரியின் இசையை பகடி செய்வது போல  வாசிக்கிறார்.

வேண்டுமென்றே புருவங்களை சுருக்கி, கண்ணை மூடி வாசிக்க, எல்லாரும் சிரிக்கிறார்கள். எல்லோரும் அந்த இசையைக் கேட்டு சிரிக்கிறார்கள். 

சலேரி அதையே வலியுடன் பார்த்துக் கொண்டிருப்பது தெரிகிறது. 

CUT TO:

வயதான சலேரியின் மருத்துவமனை அறை – இரவு – 1823

அவமானப்படுத்தப்பட்ட பழைய நினைவுகளால் வயதான சலேரி நடுங்கிக் கொண்டிருப்பதன் க்ளோஸ் அப் காட்டப்படுகிறது. “சிரியுங்கள்..நன்றாக சிரியுங்கள்” என்கிறார்.

                                                               

 பார்ட்டி ஹால் – இரவு – 1780’s

கான்ஸ்டான்சாவின் விக்கினை அணிந்து கொண்டு மொசார்ட் பியானோவை வாசித்து கிண்டல் செய்து சிரிப்பது மீண்டும் காட்டப்படுகிறது 

CUT TO:

சலேரியின் வீடு – படுக்கையறை – இரவு – 1780’s

சலேரி தனது மேஜையில் அமர்ந்திருக்கிறார். அவரது கையில் பார்ட்டிக்கு செல்லும் போது அணிந்திருந்த கருப்பு நிற முகமூடி இருக்கிறது. அதனை வெறுப்புடன் பார்த்துக் கொண்டிருக்கிறார். சுவற்றில் இயேசுவின் சிலுவை மாட்டப்பட்டிருந்த இடத்தைப் பார்க்கிறார். அதில் சிலுவைக்குறி மங்கலாகத் தெரிகிறது. 

வயதான சலேரியின் குரல் கேட்கிறது.

“அப்போது சிரித்தது மொசார்ட் அல்ல. கடவுள். அது கடவுள் தான் ஃபாதர். ஒரு ஏளனமான இளிப்பின் வழியே கடவுள் என்னைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தார்.  

சிரி..நன்றாகச் சிரி..உன்னைப் பார்த்து நான் சிரிப்பேன். இந்த பூமியை விட்டு நான் அகலும் முன் உன்னைப் பார்த்து நான் சிரிப்பேன் ! ஆமென்!

மொசார்ட் வீடு – பகல் – 1780’s

பில்லியார்ட் மேஜையில் தாள்கள் சிதறிக்கிடக்கின்றன. மொசார்ட் அதன் மீது சாய்ந்து நின்று இசைக்குறிப்புகளை எழுதிக் கொண்டிருக்கிறார். ஒரு பந்தினை தட்டிவிட்டு அது திரும்பவும் வந்து சேருவதற்குள் ஒரு கணக்கினை வைத்து எழுதுகிறார். பந்து அருகில் வந்ததும் மீண்டும் தட்டி விடுகிறார். மொசார்ட் அவருடைய உலகத்துக்குள் பயணிக்கிறார் என்பது தெரிகிறது. அப்போது யாரோ கதவினைத் தட்டும் சத்தம் கேட்கிறது. அதுவரை ஒலித்துக் கொண்டிருந்த பின்னணி இசை சட்டென்று நிற்கிறது.

 மொசார்ட் கதவினைத் திறக்கிறார். கான்ஸ்டான்சா அறையின் வாசலில் நிற்கிறாள். “உங்களைப் பார்க்க ஒரு பெண் வந்திருக்கிறாள்” என்கிறாள் கான்ஸ்டான்சா. யாரையும் பார்க்கும் மனநிலையில் மொசார்ட் இல்லை. ஆனால் அந்தப் பெண் மொசார்ட்டைப் பார்க்க வேண்டும் என்று சொல்கிறாள் என்கிறாள் கான்ஸ்டான்சா. 

  எரிச்சலுடன் செல்கிறார் மொசார்ட்.

மொசார்ட்டின் வீடு – கூடம் – பகல் – 1780’s

மொசார்ட் கூடத்துக்கு வருகிறார். வாசலில் கதவுக்கு வெளியில் ஒரு இளம்பெண் நிற்கிறாள். அவள் தன்னை லார்ல் என்று அறிமுகம் செய்து கொள்கிறாள். மொசார்ட் வீட்டில் பணியாள் வேலைக்கு வந்திருப்பதாகவும், தன்னை சேர்த்துக் கொள்ளும்படியும் கேட்கிறாள். பெயரைச் சொல்ல விரும்பாத ஒரு கனவான் மொசார்ட்டின் ரசிகர் என்றும் அவர் தான் இந்த ஏற்பாட்டைச் செய்ததாகவும் சொல்கிறாள் லார்ல். கான்ஸ்டான்சா சந்தோஷமடைகிறாள். வேலைக்கு சேர்ந்து கொள் என்கிறாள் கான்ச்டன்சா.

மொசார்ட்டின் அப்பாவுக்கு இதில் விருப்மில்லை. “இவள் யார் அனுப்பி வந்திருக்கிறாள் என்பது தெரியவில்லை. எனக்கு சந்தேகமாக இருக்கிறது. அவசரப்பட்டு சேர்க்க வேண்டாம்” என்கிறாள். கான்ஸ்டான்சா அவரை எதிர்த்துப் பேசுகிறாள். இருவருக்கும் வாக்குவாதம் ஏற்படுகிறது. மொசார்ட் லார்லை வெளியில் இருக்கும்படி சொல்கிறார்.

லார்ல் வெளியில் வந்து நிற்கிறாள். அவள் கதவின் மீது காது வைத்து உள்ளே என்ன நடக்கிறது என்பதை ஒட்டுக் கேட்கிறாள். இந்தச் செயல் அவள் மீது நமக்கு சந்தேகம் வரவழைக்கிறது.

கான்ஸ்டான்சாவுக்கும், லீபோல்டுக்கும் வாக்குவாதம் முற்றுகிறது. தனக்கு அங்கு மரியாதை இல்லை என்கிறார். அந்த வீடு குப்பைக் கூளமாக இருக்கிறது என்கிறார். 

லியோபோல்ட் ஒருகட்டத்தில் நான் இங்கிருந்து கிளம்புகிறேன் என்கிறார். “யாரும் உங்களை இங்கு இருக்கும்படி சொல்லவில்லை” என்கிறாள் கான்ஸ்டான்சா. இப்படி மாற்றி மாற்றிப் பேசி சண்டை வலுக்கிறது. வேகமாக வீட்டின் கதவைத் திறந்து அங்கு நின்று கொண்டிருக்கும் லார்லிடம் உடனேயே வேலைக்கு சேரு என்கிறாள். 

“இந்த அறையை முதலில் சுத்தப்படுத்து” என்று லியோபோல்ட் தங்கியிருந்த அறையைக் காட்டுகிறாள். மொசார்ட் மெதுவாக தன்னுடைய அறைக்குப் போய்க் கதவை மூடிக் கொள்கிறார். 

லியோபோல்ட் நடுக்கூடத்தில் நின்று சத்தம் போட்டுக் கொண்டே இருக்கிறார். 

மொசார்ட் தன்னுடைய அறைக்குள் இருந்தபடி லியோபோல்ட் சத்தம் போடுவதைக் கேட்டுக் கொண்டிருக்கிறார். 

இப்போது Tutti contenti! Saremo cosi from Act IV of Figaro கேட்கத் தொடங்குகிறது. எதிலிருந்தோ விடுபட்டது போல தலையை உலுக்கிக் கொண்டு மீண்டும் பில்லியர்ட் டேபிளில் உள்ள பந்தினைத் தட்டி விட்டு எழுதத் தொடங்குகிறார் மொசார்ட்.. மீண்டும் தன்னுடைய உலகுக்குள் புகுந்து கொள்கிறார். 

 சலேரியின் வீடு – இரவு – 1780’s

இசை மங்குகிறது. லார்ல் யாரிடமோ ரகசியமாகப் பேசிக்கொண்டிருக்கிறாள் என்பது தெரிகிறது. அவளுக்கு எதிரில் அமர்ந்திருக்கும் நபர் யாரென்று காட்டப்படவில்லை. “அவர்கள் ஒவ்வொரு இரவும் வெளியில் செல்கிறார்கள். நீண்ட நேரம் கழித்தே வருகிறார்கள்” என்கிறாள். அவளுக்கு எதிரில் அமர்ந்திருப்பவர் அவளுக்கு சர்க்கரையில் தோய்ந்த பிஸ்கட்டுகளை நீட்டுகிறார். அவருடைய கைகள் மட்டும் காட்டப்படுகின்றன. அதில் அணிந்திருக்கும் மோதிரத்தை வைத்து அது சலேரி என்று தெரிய வருகிறது. 

இப்போது சலேரி காட்டப்படுகிறார். மொசார்ட் தினமும் என்னென்ன செய்கிறார் என்று விசாரித்துக் கொண்டிருக்கிறார். 

மொசார்ட் எழுதிக் கொண்டே இருக்கிறார் என்றும் சாப்பிடக்கூட வரமாட்டார் என்றும் லார்ல் சொல்கிறாள். “என்ன எழுதுகிறார்?” என்று தெரியுமா என்று சலேரி கேட்க “எனக்கு அதைப் பற்றித் தெரியாது” என்கிறாள் லார்ல். 

                                     .

அடுத்த முறை அவர்கள் வெளியில் சென்றிருக்கும் சமயம் எனக்குத் தகவல் தர வேண்டும் என்கிறார். லார்ல் தயங்குகிறாள். அவளுக்கு சில தங்க நாணயங்களைத் தருகிறாள். அவள் சம்மதிக்கும் விதமாகத் தலையாட்டிவிட்டு சந்தோஷமாக அங்கிருந்து செல்கிறாள். 

CUT TO:

மொசார்ட்டின் வீடு – வியன்னா தெரு – மதியம் – 1780’s 

மொசார்ட்டின் பியானோ இசைக்கச்சேரியின் இறுதிப் பகுதி பின்னணியில் ஒலிக்கிறது. (E Flat K.482)

மொசார்ட்டின் வீட்டுக் கதவு வேகமாகத் திறக்கப்பட்டு அதிலிருந்து பியானோ ஆறு பேரால் எடுத்துச் செல்லப்படுகிறது. அவர்கள் வீதிகளில் பியானோவை எடுத்துக் கொண்டு பரபரப்பாக செல்கிறார்கள். அவர்களுக்குப் பின்னால், இசைக் கச்சேரிக்கு செல்லும் உடையுடன் மொசார்ட், லியோபோல்ட், கான்ஸ்டான்சா மூவரும் பின்தொடர்கிறார்கள். அவர்கள் காத்திருக்கும் ஒரு வண்டியில் ஏறுகிறார்கள். அவர்கள் போகும்வரை பார்த்துக் கொண்டே இருக்கிறாள். பிறகு கதவை மூடிவிட்டு அவர்கள் சென்ற திசைக்கு எதிர்த் திசைக்கு செல்கிறாள். 

CUT TO:

அலங்கரிக்கப்பட்ட தோட்டம் – வியன்னா – மதியம் – 1780’s 

வெளிப்புறத்தில் ஓரிடத்தில் இசைக்கச்சேரி நடந்து கொண்டிருக்கிறது. மொசார்ட் தனனுடைய இசைக்குழுவினருடன் இறுதிப் பகுதியை வாசித்துக் கொண்டிருக்கிறார். அங்கு போதுமான அளவு பார்வையாளர்கள் ஆம்தர்ந்திருக்கிறார்கள். அவர்களில் சக்கரவர்த்தியும் , அவையினரும் இருக்கிறார்கள்.

கூட்டம் மகிழ்ச்சியாக இருக்கிறது. அது அழகான வெளிப்புற இடம். மிக சிக்கலான ஒரு இசைப் பத்தியை வாசித்துக் கொண்டிருக்கிறார்கள். மொசார்ட் தன்னை மறந்து தன்னுடைய உலகத்தில் இருந்து பிரமாதமாக வாசிப்பதை லீபோல்டும், கான்ஸ்டான்சாவும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இந்தக் காட்சி சிறிது நேரம் தொடர்ந்து கொண்டிருக்கிறது

CUT TO:

வியன்னா தெரு – மதியம் – 1780’s – 

ஒரு சாரட் வண்டி அந்தத் தெருவுக்குள் வருகிறது. லார்ல் ஓட்டுநருக்கு அருகில் உள்ள இடத்தில் அமர்ந்திருக்கிறாள். வண்டிக்குள் நாம் சலேரியின் உருவத்தைப் பார்க்கிறோம்,

 அலங்கரிக்கபப்ட்ட தோட்டம் – வியன்னா – மதியம் – 1780’s

இசைக்கச்சேரி தொடர்ந்து கொண்டிருக்கிறது. K.482வின் கடைசி இசைத்துண்டு வாசிக்கப்படுகிறது. மொசார்ட் இசைநிகழ்வை நடத்திக் கொண்டிருக்கிறார். 

 CUT TO:

மொசார்ட்டின் வீடு – மதியம் – 1780’S

லார்ல் கதவைத் திறந்து சலேரியை உள்ளே அனுமதிக்கிறாள். அவர்கள் உள்ளே செல்கிறார்கள். கதவு மூடப்படுகிறது.

மொசார்ட் வீடு – மதியம் – 1780’S

மொசார்ட்டின் வீடு லார்ல் உதவியால் சுத்தமாக இருக்கிறது. சலேரி அந்த வீட்டினை மிகுந்த ஆர்வத்துடன் சுற்றிப் பார்க்கிறார்.

சலேரி பணத்துக்காகத் தான் வந்திருப்பார் என்று நினைத்து மொசார்ட் வீட்டில் எங்கெல்லாம் தங்கப் பதக்கங்கள் இருக்கும் என சொல்லிக் கொண்டே போகிறாள் லார்ல். ஒரே ஒரு பதக்கம் மட்டும் இருக்கிறது என்றும் மற்றவை அடகுக்கடையில் இருக்கலாம் என்றும் சொல்கிறாள். அதில் கவனம் செலுத்தாத சலேரி மொசார்ட் எங்கிருந்து வேலை பார்ப்பார் என்று கேட்கிறார். மொசார்ட்டின் அறையைக் காட்டுகிறாள் லார்ல். சலேரி அந்த அறையை நோக்கித் தனியாகச் செல்கிறார். 

மொசார்ட் வேலை செய்யும் அறை – மதியம் – 1780’S

மொசார்ட் வேலை செய்யும் அறையில் தனியாக நுழைகிறார் சலேரி. அவருக்குள் ஒரு பரபரப்பும் ஆர்வமும் ஏற்படுகிறது. அங்கிருக்கும் ஒவ்வொரு பொருளையும் பார்க்கிறார். மொசார்ட்டின் மேஜையின் அருகே வருகிறார். அங்கே மொசார்ட் கைப்பட எழுதியிருக்கும் பிரதிகள் இருக்கின்றன. இறகினை செருகி வைத்த பேனா அங்கிருக்கிறது. அதை எடுக்கிறார். பாதி எரிந்த நிலையில் இருக்கும் மெழுகுவர்த்தியைப் பார்க்கிறார். அதில் தன் விரலை வைக்கிறார். ஒரு காதலனின் பொருளைத் தொடுவது போல  ஒவ்வொன்றையும் கவனமாகவும் ஆர்வமாகவும் தொடுகிறார். 

அவருக்குள் ஆச்சரியம் பரவுகிறது. அங்கிருக்கும் இசைக்குறிப்புகள் எழுதப்பட்ட தாள்களின் மீது அவருக்கு கவனம் செல்கிறது. அவர் அதனை வேகமாக எடுக்கிறார். 

அந்தக் காகிதத்தின் பக்கங்கள் க்ளோஸ் அப்பில் காட்டப்படுகின்றன. ஒவ்வொரு வரிக்குக் கீழேயும் கான்டசா, சுசான்னா, செருபினோ என எழுதப்பட்டிருக்கின்றன. மற்றொரு காகிதத்தில் மொசார்ட்டின் கைப்பட அந்த இசை நாடகத்தின் தலைப்பு எழுதபப்ட்டிருக்கிறது. 

    Le Nozze di Figaro Comedia per musica tratta dal Francese in 

               quattro atti.

FIGARO என்கிற எழுத்து தனித்துக் காட்டப்படுகிறது.

சலேரி அதனையே ஆச்சரியமாகவும் திகைப்பாகவும் பார்ப்பது காட்டப்படுகிறது.

                                                                  

அலங்கரிக்கப்பட்ட தோட்டம் – வியன்னா – மதியம் – 1780’S

மொசார்ட் ஆர்ப்பாட்டமாக இசைநிகழ்ச்சியை முடிக்கிறார். பலத்த கைத்தட்டல் சத்தம் கேட்கிறது. சக்கரவர்த்தி எழுந்து நிற்கிறார். மொசார்ட் கீழே இறங்கி வந்து சகக்ரவர்த்திய்டியம் வாழ்த்தினைப் பெறுகிறார். 

மொசார்ட் தன்னுடைய மனைவியையும், அப்பாவையும் பார்க்கிறார். 

மொசார் சக்கரவத்தியிடம் ஒரு உதவி எனக்காக நீங்கள் செய்ய முடியுமா என்று கேட்கிறார். என்னவென்று சக்கரவர்த்தி ஜோசப் கேட்க, “என்னுடைய அப்பா வந்திருக்கிறார். விரைவில் சால்ஸ்பர்க் திரும்பிவிடுவார். அவரைத் தங்களுக்கு அறிமுகம் செய்து வைக்க வேண்டும். அவர் உங்கள் கைகளை முத்தமிட விரும்புகிறார் “ என்கிறார். அதற்கு ஜோசப் சம்மதம் சொல்கிறார். 

லியோபோல்ட் முன்வந்து சக்கரவர்த்தியின் கைகளில் மகிழ்ச்சியுடன் முத்தமிடுகிறார். 

“நாம் ஏற்கனவே சந்தித்திருக்கிறோம் சக்கரவர்த்தியாரே.. இருபது வருடங்கள் இருக்கும்..அப்போது நீங்கள் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் எனக்கு நினைவிருக்கிறது” என்று சொல்லி முன்னுக்குப் பின் எதோ உளறத் தொடங்குகிறார் சந்தோஷத்தில் . எல்லோரும் அவரையே விசித்திரமாகப்  பார்க்கிறார்கள். 

“நீங்கள் என்னுடைய மகனுக்கு ஒரு தந்தைக்கு மகன் ஆற்ற வேண்டிய கடமைகள் குறித்து சொல்லித் தர வேண்டும்” என்று சொல்கிறார். சமாளிக்கும் விதமாக சக்கரவர்த்தி “அதற்கென்ன?” என்கிறார். 

                                                                 

ஆர்சினி ராசன்பர்கின் படிப்பறை – பகல் – 1780’S

இயக்குநர் ஆர்சினி ராசன்பர்க் சலேரி மற்றும் போன்னோவுடன் அமர்ந்திருக்கிறார். சலேரி அவர்களிடம், மொசார்ட் புதிய இத்தாலிய இசை நாடகத்தை எழுதிக் கொண்டிருப்பதாகவும் அது FIGARO திருமணத்தை எடுத்துக் காட்டும் இசை நாடகம் என்றும் சொல்கிறார். இது வியன்னாவின் சக்கரவர்த்தியால் தடை செய்யப்பட்ட நாடகம் என்கிறார் சலேரி. ராசன்பர்கும் போன்னோவும் திகைக்கிறார்கள். “உங்களுக்கு எப்படித் தெரியும்?” என்று சலேரியிடம் கேட்கிறார்கள். “அது குறித்து இப்போது பிரச்சனையில்லை” என்கிறார் சலேரி.

CUT TO:

அதிகாரி வான் ஸ்ட்ராக் படிப்பறை – பகல் – 1780’S

ஆர்சினி ராசன்பர்க், வாஸ் ஸ்ட்ராக்கிடம் மொசார்ட் எழுதிக் கொண்டிருக்கும் தடை செய்யப்பட்ட இசை நாடகத்தைப் பற்றிச் சொல்கிறார். வான் ஸ்ட்ராக்கிற்கு எதற்காக அத்தடை செய்யப்பட்டது என்கிற நினைவில்லை. அவருக்கு ஆர்சினி ராசன்பர்க் நினைவுபடுத்துகிறார். 

அரசத் துரோகம் செய்தவரின் கதை என்பதால், அது இங்கு அனுமதிக்கப்பட்டால் சக்கரவர்த்திக்கு எதிராக நாம் செயல்பட்டது போலாகும். அதனால் தான் பிரான்சில் இந்த நாடகம் தடை செய்யப்பட்டது என்கிறார் ஆர்சினி ராசன்பர்க்.

இதைக் கேட்டு வான் ஸ்ட்ராக் திகைக்கிறார். 

CUT TO:

              ‘

சக்கரவர்த்தியின் படிப்பறை – பகல் – 1780’S

சக்கரவர்த்தி அறையின் நடுவே நின்று கொண்டிருக்கிறார். அங்கே வான் ஸ்ட்ராக், ஆர்சினி ராசன்பர்க், வான் ஸ்வீட்டன், போன்னோ இருக்கிறார்கள். சலேரி அங்கே இல்லை. கதவைத் திறந்து கொண்டு பணியாள் வருகிறார். மொசார்ட் வந்திருப்பதாகச் சொல்கிறார்.

மொசார்ட் உள்ளே வருகிறார். வந்ததும் சக்கரவர்த்தியின் கைகளில் முத்தமிடுகிறார். எல்லோரும் அமர்ந்து கொள்ள மொசார்ட் நடுவே நிற்கிறார். இப்போது அது ஒரு குற்றவிசாரணை அறை போலாகிறது.

சக்கரவர்த்தி மொசார்ட்டிடம் தடை செய்யப்பட்ட பிரெஞ்சு நாடகமான FIGAROவை எழுதுகிறாயா என்று கேட்க, யார் சொன்னது என்று மொசார்ட் கேட்கிறார். “இங்கு கேள்விகளுக்கு இடமில்லை” என்கிறார் சக்கரவர்த்தி., “ஆமாம்” என ஒப்புக் கொள்கிறார் மொசார்ட்.”அது பிரெஞ்சு தேசத்தில் தடை செய்யப்பட்ட நாடகம் என்று தெரியுமா?” என்று கேட்க, “தெரியும். ஆனால், எனக்கு அரசியலில் ஆர்வமில்லை. நான் இதை நகைச்சுவை நாடகமாகவே எழுதியிருக்கிறேன்” என்கிறார் மொசார்ட்.

‘பிரான்சில் இந்த நாடகத்தால் மக்கள் அரசுக்கு எதிராகக் கழகம் செய்ய நினைத்தார்கள் என்று எனக்கு என்னுடைய தங்கை ஆண்டோநெட் எழுதியிருயிருக்கிறாள். அதே நிலைமை இங்கு வர வேண்டுமா என்கிறார் சக்கரவர்த்தி.

இந்த நாடகத்தில் அப்படி எதுவும் நிகழாது என்று சொல்லும் மொசார்ட், “உதாரணத்துக்கு ஒன்றைச் சொல்கிறேன். கணவனும் மனைவியும் பேசிக்கொண்டிருக்கிறார்கள். சண்டையிடுகிறார்கள். இப்போது தோட்டக்காரன் வருகிறான்..அவனும் பேசுகிறான்..அடுத்து வேலையாள் வருகிறார்..அவரும் பேசுகிறார்..இப்படி ஆட்கள் கூடிக் கொண்டே போகிறார்கள்..ஒபேராவைப் பொறுத்தவரை இரண்டு பேருக்கு மேல் பேசினால் அது சத்தமாக மாறும். ஆனால் நான் எத்தனை பேரை பாட வைக்கப் போகிறேன் தெரியுமா? அதுவும் ஒரே நேரத்தில் எல்லோருமே பாடுவார்கள்..ஆனால் வெவ்வேறு தொனியில்…உங்களால் யோசிக்க முடிகிறதா? அதுவும் எத்தனை நிமிடத்துக்கு தெரியுமா? இருபது நிமிடங்களுக்கு” என்கிறார் மொசார்ட் உற்சாகமாக. சக்கரவர்த்தியே ஆச்சரியமாகிறார். அவருக்குமே சட்டென்று சிறிது ஆர்வம் வருகிறது.

மற்றவர்கள் மொசார்ட் பேசுவதைத் தடுத்து நிறுத்த நினைக்கிறார்கள், அதைப் பற்றிக் கவலைப்படாதத் மொசார்ட் சக்கரவர்த்தியிடம் மட்டுமே பேசுகிறார்.

“உன்னுடைய இசைத் திறமை மேல் எங்களுக்கு சந்தேகம் இல்லை..ஆனால் எடுத்துக் கொண்ட கரு தான் பிரச்சனைக்குரியது..சொல்வதற்கு எத்தனையோ மென்மையான விஷயங்கள் இருக்கிறபோது எதற்காக இதைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று கேட்கப்பட அதற்கு மொசார்ட் “எது மேன்மை? எப்போதும் புகழ்ந்து பாடிக்கொண்டே இருப்பதா? கடவுளர்கள் குறித்து பாடப்படுவதா..? மக்களுக்கு அலுப்பு ஏற்பட்டுவிடும்” என்று கோபத்தில் சொல்ல மற்றவர்கள் மொசார்ட்டிடம் ‘நாவை அடக்கு” என்கிறார்கள்.

மொசார்ட் சட்டென்று “என்னுடைய இசை நாடகத்தின் தொடக்கம் எப்படி இருக்கும் தெரியுமா?” ஒரு பணியாள் எதையோ அளந்து கொண்டிருப்பான்.,,.என்னவென்று நினைக்கிறீர்கள்..? கட்டிலை.. அவனுக்கு அப்போது தான் திருமணமாகியிருக்கும்..அவன் கட்டிலை அளந்து கொண்டிருக்கிறான்” என்று சொல்லிவிட்டு மொசார்ட் சிரிக்கிறார்.

CUT TO:

ஓப்ரா அரங்கம் – பகல் – 1780’S

மொசார்ட் இசை நாடகத்துக்கான ஒத்திகையில் இருக்கிறார். நடுவர்கள் மேடையில் நிற்கிறார்கள். ஃபிகாரோவாக நடிப்பவர் மேடையில் கட்டிலை அளந்து கொண்டிருப்பது போல நடித்துக் கொண்டிருக்கிறார். சுசான்னாவாக நடிப்பவர்  அதைப் பார்த்துக் கொண்டிருக்கிறாள்.

CUT TO:

சலேரியின் வீடு – பகல் – 1780’S 

ஆர்சினி ராஸன்பர்க் போன்னோ இருவரும் சலேரியுடன் அமர்ந்திருக்கிறார்கள். மொசார்ட் ஒத்திகையை ஆரம்பித்துவிட்டான், சக்கரவர்த்தியே அனுமதி கொடுத்திருக்கிறார் என்று போன்னோ சொல்கிறார். சலேரி எதையோ யோசித்துவிட்டு “அப்படியென்றால் நாம் மொசார்ட்டுடன் தான் நிற்க வேண்டும். சக்கரவர்த்தியின் கோபம் மொசார்ட்டின் மீது ஏற்பட்டுவிடாமல் நாம் அதான் மொசார்ட்டை பாதுகாக்க வேண்டும்” என்கிறார். சக்கரவர்த்தியே நாடகத்துக்கு அனுமதி கொடுத்த பிறகு எதற்காக மொசார்ட் மீது கோபப்படப் போகிறார் என்று கேட்க, அதற்கு சலேரி “நாடகத்தின் மூன்றாவது அங்கத்தில் வருகிற காட்சிகள் சக்கரவர்த்தியை நிச்சயம் கோபப்படுத்தும்..அது தான் தடைசெய்யப்பட்ட பகுதி “ என்கிறார் சலேரி அமைதியாக. இதைக் கேட்டு மற்ற இருவரும் ஒருவருக்கொருவர் பார்த்துக் கொள்கிறார்கள். 

CUT TO:

ஒபேரா அரங்கம் – பகல் – 1780’S

நாடகத்துக்கான ஒத்திகை முழு வீச்சில் நடந்து கொண்டிருக்கிறது. அங்கு ஆர்சினி ராசன்பர்க் மற்றும் போன்னோ பார்வையாளர்கள் பகுதியில் அமர்ந்திருக்கிறார்கள். மற்ற நாற்காலிகள் காலியாக இருக்கின்றன. அவர்கள் கூர்ந்து கவனித்தபடி இருக்கிறார்கள். நாடகத்தின் மூன்றாவது அங்கம் வருகிறது. அது ஃபார்கோவின் கல்யாண ஊர்வலப் பகுதி. அதைத் தொடங்கும்போது ஆர்சினி எழுகிறார். மொசார்ட்டை அழைக்கிறார். “உன்னிடம் கொஞ்சம் பேச வேண்டும் “ என்கிறார். மொசார்ட் மேடையில் இருப்பவர்களிடம் “இப்போது வந்துவிடுகிறேன் என சொல்லிவிட்டு ஆர்சினியிடம் செல்கிறார்.

ஆர்சினி அவரிடம் “மூன்றாவது அங்கம் சக்கரவர்த்தியால் தடைசெய்யப்பட்ட பகுதி தானே?” என்று கேட்கிறார் “இல்லை..அது ஃபார்கோவின் திருமணப் பகுதி” என்று சொல்ல, “ஆம் அது தடைசெய்யப்பட்ட அங்கம்” என்று சொல்லி மொசார்ட்டிடம் அவருடைய இசைக்குறிப்புகளைக் கேட்கிறார். மொசார்ட் அவரது கையில் கொடுக்க, அதைப் படித்துக் கூட பார்க்காமல் கிழித்துவிடுகிறார். மொசார்ட்டுக்கு அதிர்ச்சியாகிறது. 

CUT TO:

சலேரி வீடு – பகல் – 1780’s

ஒரு பணியாள் கதவைத் திறந்து மொசார்ட் வந்திருப்பதை சொல்கிறார். 

மொசார்ட் அந்த பணியாளைத் தள்ளிக்கொண்டு சலேரி இருக்கும் அறைக்குள் வருகிறார். மொசார்ட் கோபத்தின் உச்சத்தில் இருக்கிறார் என்பது தெரிகிறது. 

“எனக்கு வேறு வழியே இல்லை..எனக்கு உதவுங்கள்” என்கிறார் முதலில் அமைதியாகுங்கள் என்கிறார் சலேரி. 

என்னுடைய இசைக்குறிப்பினை இயக்குநர் கிழித்துவிட்டார். என்கிறார். சலேரி தெரியாத மாதிரி அப்படியா என்று கேட்கிறார். தன்னை மீண்டும் ஓப்ராவை எழுதச் சொல்கிறார்கள் என்கிறார் மொசார்ட். சக்கரவர்த்தியிடம் பேச முடியுமா என்று மொசார்ட் கேட்கிறார். நிச்சயமாகப் பேசுகிறேன் என்று நம்பிக்கையுடன் சொல்லி மொசார்ட்டை அனுப்பி வைக்கிறார் சலேரி.   

CUT TO:

வயதான சலேரியின் மருத்துவமனை அறை – இரவு – 1823

வயதான சலேரி பேசிக்கொண்டிருக்கிறார். “நான் சக்கரவர்த்தியிடம் ஒன்றுமே சொல்லவில்லை என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. சக்கரவர்த்தி உன்னுடைய கோரிக்கையை நிராகரித்துவிட்டார் என்று சொல்வதற்காக மொசார்ட் ஒத்திகைப் பார்க்கும் அரங்குக்கு சென்றிருந்தேன். 

ஆனால் நான் எதிர்பாராத ஒன்று நடந்தது. அங்கு சக்கரவர்த்தியே வந்துவிட்டார். 

           

ஒபேரா அரங்கம் – பகல் – 1780’s

சக்கரவர்த்தி ஜோசப் அந்த அரங்குக்கு வருகிறார். ஒத்திகை நடந்து கொண்டிருக்கிறது. மொசார்ட் சக்கரவர்த்தி வந்ததைத் கவனிக்கவில்லை. ஜோசப் அங்கிருக்கும் எல்லோரிடமும் அமைதியாக இருக்கும்படி சைகையில் சொல்லிவிட்டு அமர்ந்து கொள்கிறார். ஒத்திகையைக் கவனிக்கிறார். 

சலேரி, வான் ஸ்ட்ராக், ஆர்சனி மூவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்கிறார்கள்.  ஃபிகாரோவின் திருமண ஊர்வலக் காட்சி வருகிறது. எல்லோரும் இசையை நிறுத்துகிறார்கள். அமைதியாகிறது. பிறகு சட்டென்று கதையைத் தொடங்குகிறார்கள். சக்கரவர்த்திக்கு ஒன்றும் புரியவில்லை.  

அவர் ரகசியமான குரலில் “என்ன ஆயிற்று? இது நவீன நாடகமா?”என்று கேட்கிறார்.  “இல்லை சக்கரவர்த்தி..அவர் ஒரு அங்கத்தை நாடகத்தில் நீக்கியிருக்கிறார்.” என்கிறார் போன்னோ.

ஏன் என்று சக்கரவர்த்தி கேட்க, “அது தடை செய்யப்பட்ட பகுதி சக்கரவத்ர்த்தி” என்கிறார்கள். “இது உங்களுக்கு சரியென்று படுகிறதா சலேரி?” என்று சக்கரவர்த்தி சலேரியிடம் கேட்க, “நேரடியாக பதில் சொல்லாத சலேரி, “இது சரி தவறு என்பதில்லை .. தடை செய்யப்பட்ட பகுதியை நீக்கச் சொல்லி உத்தரவு இருப்பதால் நீக்கப்பட்டிருக்கிறது” என்கிறார் சலேரி. 

“இல்லை..இது முட்டாள்தனம். இசையோடு நான் கேட்க விரும்புகிறேன்” என்கிறார் ஜோசப். ஆர்சனி இதை எதிர்பார்க்காததால் திணறுகிறார். வேறு வழியில்லாமல் மொசார்ட்டை அழைக்கிறார்கள். இசையோடு பாடும்படி சொல்கிறார். மொசார்ட்டுக்கு உற்சாகமாகிறது.              

மொசார்ட் இசையோடு முழுவதையும் மீண்டும் நடத்துகிறார். இதைக் கேட்க கேட்க சக்கரவர்த்தியின் ,முகம் பிராகசமடைகிறது.                         

CUT TO:

ஒபேரா அரங்கம் – இரவு – 1780’s 

அந்த அரங்கத்தில் மக்கள் கூட்டம் நிரம்பியிருக்கிறது. சக்கரவர்த்தி, வான் ஸ்ட்ராக், ஆர்சனி, வான் ஸ்வீட்டன், போன்னோ இருக்கிறார்கள். மேடம் வெபர் மற்றும் அவளது மகள்களும் இருக்கிறார்கள். மொசார்ட் இசை நிகழ்ச்சியினை நடத்திக் கொண்டிருக்கிறார். நாடகத்தின் உச்சக்கட்டம் வெற்றிகரமாகவும் ஆர்ப்பாட்டமாகவும் நடந்து கொண்டிருக்கிறது. மக்கள் முதன்முறையாக ஃபிகாரோவின் இசை நாடகத்தைக் கண்டு களிக்கின்றனர். 

CUT TO:

வயதான சலேரியின் மருத்துவமனை அறை – இரவு – 1823

வயதான சலேரி வாக்லரிடம் பேசிக்கொண்டிருக்கிறார்.

ஃபிகாரோ பிரமாதமாக அரங்கேறிக் கொண்டிருந்தது. அது அற்புதமான கலை அதிசயங்களுள் ஒன்று. மூன்றாவது அங்கம் அற்புதம். நான்காவது ஒரு பேரதிசயம் என்று அந்த இசை குறித்து சொல்லிக் கொண்டிருக்கிறார் சலேரி.  

அவர் சொல்லச் சொல்ல, பின்னணியில் அந்த இசை கேட்கத் தொடங்குகிறது 

ஒபேரா அரங்கம் – இரவு – 1780’s

மேடையில் பாடிக் கொண்டிருக்கிறார்கள்.

வயதான சலேரியின் குரல் பின்னணியில் கேட்கிறது.

அந்த இசையைக் கேட்டு எல்லோருமே மெய்மறந்து உட்கார்ந்திருந்தோம். அது பாவமன்னிப்புக் கோரும் காட்சி. எல்லாருக்கும் பரிசுத்தமான மனம் விழிப்படைந்திருந்து. 

சலேரியின் முகம் காட்டப்படுகிறது. கண்ணீர் அவரது கன்னத்தில் வடிந்து கொண்டிருக்கிறது. நீண்ட நேரம் அது காட்டப்படுகிறது. அதன்பிறகு காட்சி மறைகிறது.

வயதான சலேரியின் மருத்துவமனை அறை – இரவு – 1823

வயதான சலேரி சொல்கிறார் “அப்போது தான் அந்த அற்புதம் நிகழ்ந்தது”

CUT BACK TO:

ஒபேரா அரங்கம் – இரவு – 1780’s

அந்த நாடகத்தின் இறுதிப் பகுதி என்ற தெரிகிறது. மிக மெதுவான இசை கேட்கிறது. சலேரி அப்போது தான் கவனிக்கிறார் , பார்வையாளர்களில் சிலர் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள். சக்கரவர்த்தி கொட்டாவியை மறைக்க நினைக்கிறார். இதனைப் பார்க்கும் ஆர்சினி ராசன்பர்க் சலேரியைப் பார்த்து புன்னகைக்கிறார்.

CUT BACK TO:

வயதான சலேரியின் மருத்துவமனை அறை இரவு – 1823

வயதான சலேரி வோக்லரிடம் கேட்கிறார், ‘உங்களுக்கு அதன் அர்த்தம் என்னவென்று தெரியுமா? அந்தக் கொட்டாவியில் என்னுடைய தோல்வி வெற்றியாக மாறுவதைக் கண்டேன். மொசார்ட் அதிர்ஷ்டசாலி. சக்கரவர்த்தி ஒருமுறை மட்டுமே கொட்டாவி விட்டார். மூன்றுமுறை கொட்டாவி விட்டிருந்தால், அந்த இரவு நாடகம் முடிவுக்கு வந்திருக்கும், இரண்டு என்றால், ஒரு வாரம் தாக்குப் பிடிக்கும்..

CUT TO:

சலேரியின் வீடு – பகல் – 1780’S

மொசார்ட் முன்னும் பின்னும் நடந்து கொண்டிருக்கிறார். சலேரி அவரையே பரிதாபமாக பார்த்துக் கொண்டிருக்கிறார்

“எல்லோரும் நன்றாக இருப்பதாகச் சொன்னார்கள். ஆனால் நாடகத்தை நிறுத்தச் சொல்லிவிட்டார்கள்” என்கிறார்  மொசார்ட்.  நீங்கள் தான் சக்கரவர்த்தியிடம் இந்த நாடகம் திரும்ப நடக்க வேண்டும் என்பதைப் பற்றி சொல்ல வேண்டும் என்கிறார்.

“நான் நிச்சயம் பேசுகிறேன். ஆனால் நீங்கள் அதிகமான இசையை சக்கரவர்த்திக்குத் தந்துவிட்டீர்கள். ஒரு மணிநேரத்தில் அத்தனை கனமான இசையை சக்கரவர்த்தியால் தாங்கிக் கொள்ளவே முடியாது. 

“உங்களுக்குப் பிடித்திருந்ததா?” என்று கேட்கிறார் மொசார்ட். 

“அற்புதமாக இருந்தது” என்கிறார் சலேரி.

“பிறகு ஏன் இங்கு அனைவருக்கும் அது பிடிக்காமல் போனது”

நீங்கள் வியன்னா மக்களிடம் அதிகம் எதிர்பார்த்துவிட்டீர்கள். நீங்கள் ஒரு பாடல் முடியும் போது சத்தமான இசையைக் கொடுத்து நிறுத்தினால் தான் அவர்களுக்கு கைத் தட்ட வேண்டும் என்கிற எண்ணமே வரும்’ என்கிறார் சலேரி.

“நீங்கள் இது குறித்து எனக்கு இன்னும் சொல்லித் தர வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்” என்கிறார் மொசார்ட்.

“நான் புதிதாக இயற்றியிருக்கும் நாடகத்தைப் பார்க்க நீங்கள் வரவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என்று அழைப்பு விடுக்கிறார் சலேரி. 

நிச்சயமாக என்று சொல்லிவிட்டு விடைபெறுகிறார் மொசார்ட். 

CUT TO:

ஒபேரா அரங்கம் – இரவு – 1780’S

சலேரியின் இசை நாடகம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. எல்லோரும் ஆரவாரமாக கைத்தட்டுகிறார்கள். கேதரீனா புராதனமான பெர்சிய உடையில் நின்று மேடையில் பாடிக்கொண்டிருக்கிறாள். சக்கரவர்த்தி ஜோசப், ஆர்சினி ராசன்பேர்க், வான் சுவீட்டன், போன்னோ கைத்தட்டுகிறார்கள். ‘சலேரி..சலேரி…அருமை’ என்கிற குரல்கள் கேட்கின்றன. 

சலேரி கூட்டத்தினைப் பார்க்கிறார். மொசார்ட் எழுந்து நின்று ஆரவாரமாகக் கைத் தட்டிக் கொண்டிருப்பதைப் பார்க்கிறார். அவருக்கு அருகில் ஏற்கனவே நாம் பார்த்த நடிகைகள் மூவரும், சிகநேடரும் அமர்ந்திருக்கிறார்கள். 

சலேரி மொசார்ட்டையே பார்த்துக் கொண்டிருக்கிறார். மொசார்ட் உற்சாகமாக கைத் தட்டிக் கொண்டிருக்கிறார்.

வயதான் சலேரியின் குரல் பின்னணியில் கேட்கிறது

“என்ன அது? அவன் இப்படி எந்தவொரு இசைக்கும் உற்சாகமாகக் கைதட்டி ஆராவரம் செய்ததை நான் இதற்கு முன்பு பார்த்ததில்லை. நிஜமாகவே நான் அதைப் பார்த்துக் கொண்டிருக்கிறேனா?”

CUT TO:

வயதான சலேரியின் மருத்துவமனை அறை – இரவு – 1823

வோக்லரிடம் பேசிக்கொண்டிருக்கிறார் வயதான சலேரி 

“உண்மையாகவே அவனுக்கு என்னுடைய இசை பிடித்திருந்ததா? அதை அவன் வாயால் கேட்கப்போகிறேனா? உடனேயே அதை கேட்க வேண்டும் என்று தோன்றியது” என்கிறார்

CUT BACK TO:

ஒபேரா அரங்கம் – இரவு – 1780’S

சலேரி நாடகத்தின் இறுதிப் பகுதியை இசைக்கிறார். அந்த இசை முற்றிலும் மரபு சார்ந்த கேட்டுப் பழக்கமான ஒரு இசையைப் போல உள்ளது.

மொசார்ட் இதனை அமர்ந்து பார்த்ஹ்டுக் கொண்டிருப்பதும், உடன் சிகநேடர் மற்றும் மூன்று நடிகைகள் இருப்பதும் காட்டப்படுகிறது. மொசார்ட் அவர்களிடம் ஒயின் பாட்டில்களைத் தருகிறார். மொசார்ட் மது அருந்தியிருப்பது தெரிகிறது. ஆனாலும் மொசார்ட் முகத்தைத் தீவிரமாக வைத்துக் கொண்டிருக்கிறார். 

ஓபேரா அரங்கின் நடைபாதை – இரவு – 1780’S

மொசார்ட் சிகநேடரிடம் “இந்த மாதிரி இசையெல்லாம் மரணத்தால் தண்டிக்கப்படவேண்டியவை” என்கிறார். இதூக் கேட்டு சிகநேடர் சிரிக்கிறார். 

CUT TO:

ஒபேரா அரங்கின் மேடை – இரவு – 1780’S

சலேரியைச் சுற்றி மரியாதையின் நிமித்தம் சிலர் சுற்றி நின்று கொண்டிருக்கின்றனர். சக்கரவர்த்தி ஜோசப் சலேரிக்கு சிவிலியன் பதக்கமும், சங்கிலியும் அணிவிக்கிறார்.

“இதுவரை எழுதப்பட்டதில் சிறந்த ஒபேரா இது தான் என்று என்னால் சொல்லமுடியும். வியன்னாவின் நம்பிக்கைக்குரிய பிரகாசமான நட்சத்திரமாக சலேரி இருக்கிறார்” என்று சொல்ல எல்லோரும் கைத்தட்டுகிறார்கள். 

சலேரி குனிந்து பணிவாக அதை ஏற்றுக்கொள்கிறார்.

எல்லோரும் சலேரியிடம் கைகொடுக்கவும், பாராட்டுத் தெரிவிக்கவும் முன்வருகிறார்கள். சலேரியின் கண்கள் ஒரே ஒரு நபரைத் தான் தேடுகின்றன. தேடிக் கண்டுபிடித்துவிடுகின்றன. மொசார்ட் அங்கு நிற்கிறார். சலேரி ஆர்வத்துடன மொசார்ட்டை நோக்கிச் செல்கிறார். 

எப்படி இருந்தது என்று சலேரி மொசார்ட்டிடம் கேட்க, 

இப்படியொரு இசையை நான் கேட்டதில்லை..” என்கிறார் மொசார்ட். சலேரி பெருமையுடன புன்னகைக்கிறார். 

CUT TO:

மொசார்ட் வீடு – கூடம் -இரவு – 1780’S

மொசார்ட்டின் வீட்டுக்குள் மொசார்ட் தன்னுடைய நண்பர் சிகநேடர், மூன்று நடிகைகளுடன் நுழைகிறார். வெடித்து சிரித்தபடி வருகிறார்கள். கான்ஸ்டான்சாவிடம் “எங்களுக்கு பசிக்கிறது உணவிருந்தால் கொடு” என்கிறார். சலேரியின் இசையைக் கிண்டல் செய்கிறார். அப்போது தான் அங்கு இரண்டு புதிய நபர்கள் இருப்பதைப் பார்க்கிறோம். கான்ஸ்டான்சா மொசார்ட்டிடம் “அவர்கள் சால்ஸ்பர்க்கில் இருந்து வந்திருக்கிறார்கள்” என்கிறாள்.

“சால்ஸ்பர்க்கா.. அப்பாவிடம் சொல்லுங்கள் நான் இனி வியன்னாவை விட்டுக் கிளம்பி சால்ஸ்பர்குக்கே வந்துவிடுவேன்  என்று..சரியான சமயத்தில் தான வந்திருக்கிறீர்கள்” என்கிறார் மொசார்ட்.

சொல்லிவிட்டு மொசார்ட் வெடித்துச் சிரிக்க, கான்ஸ்டான்சா மொசார்ட்டிடம் “உன்னுடைய அப்பா இறந்துபோயவிட்டார்” என்கிறாள். 

மொசார்ட் அதிர்ச்சியாகி நிற்கிறார். 

Don Giovanniயின்  காட்சியில் இசைக்கப்பட்ட பெரும் இசை அதிர்ந்து ஒலித்து நிற்கிறது. 

ஒபேரா அரங்கம் – இரவு – 1780’s

இரண்டாவது Chord ஒலி கேட்கிறது. மேடையில் நாம் ஆளுமையான இத்தாலிய வீரர் உடையில் உள்ள ஒருவரைப் பார்க்கிறோம். தோளை விரித்து யாரைப் பார்த்தோ குற்றம்சாட்டுவது போல நிற்கிறார். 

ஒபேரா அரங்கம் – இரவு – 1780’s

இரண்டாவது  chord ஒலி கேட்கிறது. 

மேடையில் நாம் ஒரு உணவக அறையினைப் பார்க்கிறோம். முந்தைய காட்சியில் பார்த்த இத்தாலிய வீரர் அந்த உணவக அறைக்குள் வருகிறார். அங்கு அமர்ந்து உணவருந்திக் கொண்டிருக்கும் Don   Giovanni ஐ குற்றஞ்சாட்டுவது போல பார்க்கிறார். அவரது கைகள் அவரை நோக்கி நீள்கின்றன. Don   Giovanni தன்னருகில் நின்று கொண்டிருக்கும் பணியாள் லேபோரலைப் பார்க்கிறார். அவர் பயந்து போய் மேஜையின் அடியில் ஒளிந்து கொள்கிறார். 

இந்த நாடகத்தை மொசார்ட் நடத்திக் கொண்டிருக்கிறார். அவர் பார்ப்பதற்கு சோர்வாகவும் பலவீனமாகவும் இருக்கிறார். 

வயதான சலேரியின் குரல் பின்னணியில் கேட்கிறது.

அந்த ஒபேராவில் ஒரு கரிய நிற ஆவி எழுந்து வந்தது. வருத்தம் கொள் …வருத்தம் கொள் என்றது அந்தக் குரல். 

இசை உச்சகதியை அடைகிறது. சலேரி ஓரிடத்தில் யாரும் பார்க்காதவாரு மறைந்து நின்று பார்த்துக் கொண்டிருக்கிறார்.

வயதான சலேரியின் குரல் ஒலிக்கிறது

அந்த கரிய நிற உருவம் லியோபோல்டைக் குறிக்கிறது என்பது எனக்கு மட்டும் தான் தெரியும். 

தன்னுடைய அப்பாவான லியோபோல்டின் மரணத்துக்காக தன் மேல் மொசார்ட் குற்றஉணர்வில்இருக்கிறார் என்பதை புரிந்து கொண்டேன். அந்த கரிய நிற உருவம் எழுந்து வந்து நிற்கும் காட்சி எனக்கு பயத்தைக் கொடுத்தது, அதே நேரம் கிளர்ச்சியாகவும் இருந்தது. 

இசை உச்சத்தினை அடைகிறது. மேடையும், சலேரி ஒளிந்து நிற்கும் காட்சியும் மாறி மாறி காட்டப்படுகிறது. இசை மங்குகிறது. 

வயதான சலேரியின் மருத்துவமனை அறை – இரவு –  1823

இப்போது எனக்குள் பைத்தியக்கரத்தனம் தோன்ற ஆரம்பித்தது. ஒரு மனிதன் பைத்தியமாக எனக்குள் மாறத் தொடங்கினான் வியன்னாவில் அந்த நாடகம் நடக்கும் ஐந்து நாட்களும் நான் சென்றிருந்தேன். தனியாக சென்றிருந்தேன். அந்த இசையை நான் ஆராதித்தேன்.  

ஒபேரா அரங்கம் – இரவு – 1780’s

வயதான சலேரியின் பின்னணிக் குரல் கேட்கிறது. 

“நான் அங்கு நிற்க, நிற்க அந்த லியோபோல்ட் எந்தளவுக்கு அவரது மகனைத் தன் வசப்படுத்தியிருக்கிறார் என்பது புரிந்து கொள்ள முடிந்தது. இதனை நான் வேறு மாதிரி பார்க்க ஆரம்பித்தேன். என்னைத் துன்புறுத்தும் கடவுளை நான் வென்று கொண்டிருந்தேன்.

இசை உச்சகதியில் நடந்து கொண்டிருந்தது. Dio Giovanni அந்த சிலையின் குளிர்ச்சியான கைகளைப் பற்றி கொண்டிருந்தான். அவரைச் சுற்றிலும் நெருப்பு எரிந்தது..பாறைகள் உருண்டன..ஆவிகள் வரத்தொடங்கின. அவனை நரகத்துக்கு எடுத்துப் போனது..

என்று சொல்ல சொல்ல..நாடகம் உச்சகதிக்கு சென்று இசை முடிகிறது

சலேரி அதையே பார்த்துக் கொண்டிருக்கும் காட்சி காட்டப்படுகிறது.

CUT TO:

சிகநேடர் நாடக அரங்கம் – வியன்னா – இரவு – 1780’S

சிகநேடரின் குழுவினைப் பற்றிய கண்ணைக்கவரும் போஸ்டர்களும், விளம்பரத் தட்டிகளும் வைக்கப்பட்டிருக்கின்றன. அதில் சிகநேடரின் நாடகம் பற்றி எழுதப்பட்டிருக்கிறது

CUT TO:

சிகநேடரின் நாடக அரங்கம் – இரவு – 1780’S

 இரவு நேரம். புகையும், சத்தமுமாக இருக்கிறது அந்த நாடக அரங்கம். மொசார்ட், கான்ஸ்டான்சா, அவர்களின் மகன் கார்ல் ஒரு மேஜையின் முன் அமர்ந்திருக்கிறார்கள், கார்லுக்கு இப்போது வயது இரண்டு. அவன் கான்ஸ்டான்சா மடியில் அமர்ந்திருக்கிறான். இவர்கள் நாடகத்தைப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். மொசார்ட்டின் நாடகத்தில் இருந்து இசைத் துணுக்குகள் அங்கு ஒலிக்கப்படுகின்றன. அவர்களது மேஜை மீது ஒயின் பாட்டிகளும், தின்பண்டங்களும் உள்ளன.

அந்த மேடையில் இதற்கு முன்பு நாம் Don  Giovanniயின் அரண்மனையில் பார்த்த உணவு மேஜை அரங்கம் தெரிகிறது. அங்கு காட்சிகள் நடைபெறுகின்றன. 

நாடகத்தின் காட்சிகள் விரிவாகக் காட்டப்படுகின்றன. மொசார்ட்டின் இசை நாடகத்தின் வேறொரு தழுவல் என்பது தெரிகிறது. மொசார்ட்டின் பாடல்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. 

நாடகம் முடிந்ததும் சிகநேடர், மொசார்ட்டும் அவனது குடும்பமும் அமர்ந்திருக்கும் மேஜைக்கு வருகிறான். நாடகம் எப்படி இருக்கிறது என்று கேட்கிறான். நன்றாக இருந்ததாக மொசார்ட் சொல்கிறார். “இன்னும் நான் போடப்போகும் நாடகத்துக்கு உன்னுடைய பாடல்கள் வேண்டும்..நீ இசையமைக்க வேண்டும்” என்கிறான் சிகநேடர். அதற்கு கான்ஸ்டான்சா “எவ்வளவு பணம் தருவீர்கள்?” என்று கேட்கிறாள். வசூலாகும் தொகையில் பாதிக்கு பாதி தருகிறேன் என்று சொல்ல, மொசார்ட் ஆச்சரியப்படுகிறார். சரி என்று ஒப்புக் கொள்கிறார் ஆனால் கான்ஸ்டான்சா வேண்டாம் என்கிறாள். “இப்போது கையில் எவ்வளவு பணம் தருவீர்கள்?” என்று கேட்க, சிகநேடர் அதற்கு சரியாக பதில் சொல்லாமல் எழுந்து போகிறான். அவன் போனதும் மொசார்ட் கான்ஸ்டான்சாவிடம் :”பாதிக்கு பாதி தருவதாக சொல்கிறான்” என்று சொல்ல, “எனக்கு அவனைப் பிடிக்கவில்லை. ஏமாற்றுக்காரன் அவன். நமக்கு இப்போது பணம் தேவை..அவன் தரமாட்டான்” என்கிறாள் கான்ஸ்டான்சா. உன்னுடைய பாடல்களை எப்படி இதில் இதில் பயன்படுத்தியிருக்கிறான் பார்..அதற்குக் கூட அவன் பணம் தரவில்லை என்கிறாள். 

  CUT TO:

ஸ்க்லூம்பெர்க் வீடு – கூடம் – பகல் – 1780’S

நாய்கள் குரைத்துக் கொண்டிருக்கின்றன. மைக்கேல் ஸ்க்லூம்பெர்க் அங்கு வருகிறார். மொசார்ட் அவரைப் பார்த்ததும் எழுந்து நிற்கிறார். பார்ப்பதற்கு மிக சோர்வாக இருக்கிறார். குடித்திருக்கிறார் என்று தெரிகிறது. ஆனால் தன்னைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ளும் முயற்சியில் இருக்கிறார்.

ஸ்க்லூம்பெர்க்கிடம் தான் அவரது மகளுக்கு மீண்டும் இசை கற்றுத் தர வந்திருக்கிறேன் என்று சொல்ல, அவள் திருமணமாகி சென்றுவிட்டாள் என்கிறார். உங்கள் மனைவிக்குக் கற்றுத் தருகிறேன் என்கிறார் மொசார்ட். அது முடியாது என்கிறார். எனக்கு பணம் வேண்டும் என்று மொசார்ட் கேட்க “நான் ஏன் உனக்கு பணம் தர வேண்டும்?” என்று ஸ்க்லூம்பெர்க் கேட்கிறார். “என்னிடம் திறமை இருக்கிறது..உங்களிடம் பணம் இருக்கிறது..என்னிடம் இல்லாதது உங்களிடம் இருப்பதால் அதை நீங்கள் எனக்குத் தரலாம்” என்று சொல்ல, தர முடியாது என்கிறார். அவரிடம் பணம் தாருங்கள். என்று கேட்கிறார் மொசார்ட். பார்ப்பதற்கு பரிதாபமாக இருக்கிறார்.

 CUT TO:

இம்பீரியல் நூலகம் – பகல் – 1790’S

வான் ஸ்வீட்டனும் சலேரியும் அருகருகே நின்று கொண்டிருக்கிறார்கள். சில ஆய்வாளர்கள், மாணவர்கள்  அறையில் எதையோ வாசித்துக் கொண்டிருக்கிறார்கள். 

வான் ஸ்வீட்டன் சலேரியிடம் “எனக்கு அவமானமாக இறக்கிறது நீ சொன்னாய் என்று என்னுடைய நண்பரை மொசார்ட்டுக்கு அறிமுகம் செய்தேன். மொசார்ட் அவரிடம் போய் பணம் வேண்டும் என பிச்சை எடுப்பது போலக் கெஞ்சியிருக்கிறான். நீ ஏதாவது மொசார்ட்டுக்கு உதவி செய்யக்கூடாதா? பாவம் அவன்” என்கிறார் வான் ஸ்வீட்டன். தன்னால் எதுவும் செய்ய முடியாது என்று சொல்லும் சலேரி நினைவுக்கு வந்தவராய் “மொசார்ட்டுக்கு உதவி செய்யக்கூடிய ஒருவரை நான் அறிவேன்..ஆம் அவர் தான் மொசார்ட்டுக்கு உதவி செய்ய சரியான ஆள்” என்கிறார் தீவிரமான யோசனையுடன்.

பியானோ இசை ஒலிக்கிறது. D MINOR  கேட்கிறது.

 CUT TO:

ஒப்பனை பொருட்கள் விற்கும் கடை – வியன்னா – பகல் – 1790’s

இதே கடைக்குத் தான் கான்ச்டான்சாவும் மொசார்ட்டும் லியோபோல்டுடன் வந்திருந்தனர். அதே கடையில் சலேரியின் பணியாள் நின்று கொண்டிருக்கிறார். அங்கு வியாபாரம் நடந்து கொண்டிருக்கிறது. ஒரு ஊழியர் கடையின் பின்பக்கத்தில் இருந்து வருகிறார். அவரது கையில் ஒரு பெட்டி இருக்கிறது அதை பணியாளிடம் தர, அதை எடுத்துக் கொண்டு சலேரியின் பணியாள் செல்கிறார். வெளியில் பனி கொட்டிக் கொண்டிருக்கிறது. பனி படர்ந்துள்ள தெரு வழியாக அந்த ஊழியர் சென்று கொண்டிருக்கிறார். 

சலேரியின் வீடு – அந்திநேரம் – 1790’S

D minor தொடர்கிறது. சலேரி ஒப்பனைப் பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் இருந்து கொண்டு வரப்பட்ட பெட்டியை ஆவலோடு திறக்கிறார். அதில் லியோபோல்ட் அணிந்து கொண்டிருந்த கருப்பு நிற முகமுடி இருக்கிறது. இந்த முகமுடி சிரிப்பைக் காட்டாமல் வாய்ப்பகுதியில் ஒரு இறுக்கத்தைக் காட்டுவது போல அமைக்கப்பட்டிருக்கிறது. பார்க்கவே வெறுப்பும், இறுக்கமும் கொண்ட ஒரு முகத்தை நினைவுபடுத்துவது போல இருக்கிறது. அவர் அந்த முகமூடியைப் போட்டுக் கொண்டு திரும்புகிறார். நாம் அவர் முன்னாள் இருக்கும் கண்ணாடியில் பயம்கொள்ளத்தக்க ஒரு உருவத்தைப் பார்க்கிறோம். இசை உச்சகதியில் இசைக்கிறது.

 CUT TO:

வியன்னாவின் பனிபொழியும் தெரு – அந்தி நேரம் – 1790’          

D minorஇசை கேட்டுக் கொண்டிருக்கிறது. சலேரி பயமுறுத்தும் அந்த உடையுடன் பனியின் நடுவில் கருமையான உருவத்தோடு சென்று கொண்டிருக்கிறார். அங்கங்கு மக்கள் விழாக்களுக்குச் செல்லும் மனநிலையோடு வெவ்வேறு விதமான உடையில் சென்று கொண்டிருக்கிறார்கள். 

CUT TO:

மொசார்ட் வீட்டின் கூடம் – அந்தி நேரம் – 1790’s

மொசார்ட் மேஜையின் முன் அமர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறார். பார்ப்பதற்கு மிகவும் சோர்வாக இருக்கிறார். அவருடைய தீராத வயிறு வலியின் காரணமாக முகத்தில் கடும் வேதனை தெரிகிறது. அப்போது கதவை யாரோ மென்மையாகத் தட்டுவது கேட்கிறது. மொசார்ட் எழுந்து கதவுக்கு அருகில் சென்று திறக்கிறார். அவருக்கு உடனேயே அதிர்ச்சி பாய்கிறது 

கருமையான, இறுக்கமான முகத்தைக் கொண்ட முகமுடி மொசார்ட்டையும் நம்மையும் வெறித்துப் பார்க்கிறது. Don Giovanniயின் D Minor கேட்கிறது. சலேரி கரிய உடையில் அங்கு நின்று கொண்டிருக்கிறார்.

மொசார்ட் அவரையே பயத்துடன் பார்த்துக்கொண்டிருக்க மொசார்ட் தானே? என்று சலேரி கேட்கிறார். உங்களுக்கு ஒரு வேலை தர வந்திருக்கிறேன் என்கிறார் சலேரி. இரங்கற்பா எழுத வேண்டும் என்கிறார். உடனே வேண்டும் என்றும் அதற்கு முதலில் ஐம்பது பொற்காசுகள் தருவதாகவும், இரங்கற்பா எழுதி முடித்ததும் இன்னும் ஐம்பது பொற்காசுகள் தரப்போவதாகவும் சொல்கிறார். உடனேயே வேண்டும் எழுதத் தொடங்கு என்று சொல்ல, “நீங்கள் யார்?” என்று கேட்கிறார் மொசார்ட். தான் வெறும் தூதுவன் தான் என்றும் இந்தப் பணியைச் செய்வது யாருக்கும் தெரியக்கூடாது என்றும் சொல்லிவிடுகிறார். தனனுடைய பையைத் திறக்க, அதில் பணம் இருப்பதை மொசார்ட் பார்த்துவிடுகிறார். தன்னையறியாமல் வாங்கிக்கொள்கிறார். சலேரி சென்றுவிடுகிறார்.

மொசார்ட் கதவை மூடுகிறார் அவருடைய அப்பாவின் ஒவியத்தைப் பார்க்கிறார். Requime Of Mass D Minor இசை பின்னணியில் கேட்கிறது. அறையில் இருந்து கான்ஸ்டான்சா எட்டிப் பார்க்கிறார். மொசார்த்டை அழைக்கிறாள்.  

மொசார்ட் அப்பாவின் ஓவியத்தையேப் பார்க்க, ஓவியம் மொசார்ட்டையே பார்ப்பது போல இருக்கிறது. கான்ஸ்டான்சா அழைத்துக் கொண்டே இருக்க, மொசார்ட் சுயநினைவுக்கு வந்து திரும்பிப் பார்க்கிறார். இசை அந்தரத்தில் நிற்கிறது. 

கான்ஸ்டான்சா, ‘யார் வந்துவிட்டுப் போனது யாரோ பேசும் குரல் கேட்டதே’ என்கிறாள். “யாருமில்லை” என்கிறார். பணப்பையைப் பார்த்துவிட்டு யார் வந்தது என்று கேட்க, “சொல்ல மாட்டேன்..நீ என்னைப் பைத்தியம் என்று நினைப்பாய்” என்று சொல்லிவிட்டு அவர் எப்போதும் சிரிப்பது போல சிரிக்கிறார். கான்ஸ்டான்சா மொசார்டையே பார்க்கிறாள. 

CUT TO:

வயதான சலேரியின் மருத்துவமனை அறை/ இரவு / 1823

வயதான சலேரி எல்லாவற்றையும் வோக்லரிடம் கொட்டிவிடும் ஆவேசத்தில் இருக்கிறார்.

“எனது திட்டம் எளிமையானது. எனது திட்டம் என்னையே பயமுறுத்தியது. முதலில் இரங்கற்பாவை வாங்க வேண்டும். பிறகு மரணத்தை அடையச் செய்ய வேண்டும்.

வோக்லர் பயத்துடன் பார்க்கிறார். “என்ன” என்கிறார் நம்ப முடியாமல்.

‘அவனுடைய இறுதிச்சடங்கு..யோசித்துப் பாருங்கள்..கதீட்ரலில் ..வியன்னாவே அங்கிருக்கும். அவனுடைய சவப்பெட்டி..மொசார்ட்டின் சிறிய சவப்பெட்டி நடுவில் இருக்கும். அங்கு அமைதி நிரம்பியிருக்கும். திடிரென எங்கிருந்தோ இசை கேட்கும்.  ஒரு தெய்வீக இசை அங்கு நிறையும். மாபெரும் இரங்கற்பா..அது வுல்ஃப்காங் மொசார்டுக்கான இரங்கற்பா. அதை இயற்றியது அவனுடைய நண்பனான அந்தோனியோ சலேரியாக இருக்கும். என்னவொரு ஆழம்..என்னவொரு அற்புதம்..என்னவொரு இசை வேட்கை..

சலேரி இறுதியாக கடவுளால் தொடப்பட்டவனாவான். கடவுள் இப்போது வேறு வழியில்லாமல் கேட்டுத் தானே ஆகவேண்டும். அவனுக்கு அதை நிறுத்துவதற்கான சக்தி இருக்காது..நான் இறுதியில், ஒரே ஒரு முறை கடவுளைப் பார்த்து சிரிப்பேன். புரிகிறதா? உங்களுக்குப் புரிகிறதா?

நான் கவலைப்பட்டதெல்லாம் ஒரு விஷயத்துக்குத் தான்.. எப்படி ஒரு மனிதனைக் கொல்வது? அதுவும் வெறுங்கைகளாக இல்லாமல்..

என்று தன்னுடைய கைகளை கழுத்தை  நெறிப்பது போலக் கொண்டு வருகிறார். 

 CUT TO:

மொசார்ட்டின் வீடு – கூடம் – இரவ – 1790’s

மொசார்ட் மர்மமான இசையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார். அவருடைய முழு ஈடுபாட்டினால் அவருக்குள் ஒரு பயங்கரத்தன்மையும், காய்ச்சலும் ஏற்பட்டிருக்கிறது. அவர் ஒயினைத் தன்னுடைய வயிற்றில் நேரடியாக கொட்டிக் கொள்வது போல அவசரமாக வாய்க்குள் ஊற்றுகிறார். அவரைச் சுற்றி கையால் எழுதப்பட்ட இசைக்குறிப்புகள் பரந்து கிடக்கின்றன.

வாசல் கதவைத் தட்டும் சத்தம் கேட்கிறது. மொசார்ட் அதனைக் கவனிக்கவில்லை. இசை பின்னணியில் கேட்டுக்கொண்டிருக்கிறது. இப்போது கதவு இன்னும் சத்தமாகத் தட்டப்படுகிறது. கான்ஸ்டான்சா தன்னுடைய படுக்கையறையில் இருந்து வெளியே வருகிறாள். மொசார்ட்டைப் பார்க்கிறாள். இப்போது கதவு மேலும் வேகமாகத் தட்டப்படுகிறது.

கான்ஸ்டான்சா மொசார்ட்டை அழைக்கிறாள். மொசார்ட் கான்ஸ்டான்சாவைப் பார்க்கிறான். இசை அந்தரத்தில் நிற்கிறது. ஒரு மௌனம். இப்போது கதவுத் தட்டப்படும் ஓசை மொசார்ட்டுக்குள் பயத்தை ஏற்படுத்துகிறது.                                      

கான்ஸ்டான்சா கதவைத் திறக்கப்போகிறாள். மொசார்ட் அவசரமாக, “வேண்டாம் கதவைத் திறக்காதே” என்கிறார்.  அவர் பயந்திருப்பது தெளிவாகத் தெரிகிறது. 

‘அவனிடம் நான் அவனுக்காகத் தான் வேலை செய்து கொண்டிருக்கிறேன் என்று சொல்..பிறகு வரச்சொல்’ என்கிறார்.

மொசார்ட் தன்னுடைய அறைக்குள் சென்று கதவை மூடிக் கொள்கிறார். கான்ஸ்டான்சாவுக்குள் இப்போது சின்ன பயம் தோன்றுகிறது. அவள் கதவைத் திறக்கிறாள். சிகநேடர் அங்கு நிற்கிறார். லார்ல் சமையலறையில் இருந்து எட்டிப் பார்க்கிறாள். 

‘உங்களுக்காகத் தான் எழுதிக் கொண்டிருப்பதாகச் சொன்னார்’ என்று கான்ஸ்டான்சா சொல்ல, “அப்படியா..நன்றாக வந்திருக்கிறதா?” என்று கேட்டுக்கொண்டே அங்கே இருக்கும் இசைக்குறிப்புகளை எடுத்துப் பார்க்கிறார். அதனை உள்வாங்கியதும் அவருடைய முகம் மாறுகிறது. “இது என்ன? நான் என்ன இறுதிச்சடங்கு நடத்தும் காரியமா செய்கிறேன்..எதற்கு இந்த இரங்கற்பா” என்று கோபமாகக் கேட்கிறார். 

உள்ளிருந்து மொசார்ட் வருகிறார். “அதை அப்படியே வைத்துவிடு” என்கிறார்.                              

“அது உனக்கானது அல்ல” என்றதும் ஆசுவாசமாகிறார் சிகநேடர். உனக்காக எழுதியிருப்பது என் மனதுக்குள் இருக்கிறது என்கிறார் மொசார்ட். சிகநேடருக்கு கோபம் வருகிறது. “உன்னால் அத்தனை பேரையும்காக்க வைத்திருக்கிறேன். எல்லோருக்கும் பணம் கொடுத்திருக்கிறேன். நீ இன்னும் எழுதவில்லை என்கிறாய். விளையாடிக்கொண்டிருக்கிறாயா’ என்று கேட்க, கான்ஸ்டான்சாவுக்குக் கோபம் வருகிறது. ;அவரை விடு..உன்னைப் போல ஒரு முட்டாள் தான் சக்கரவர்த்திகளுக்கு எழுதும், ஒருவரிடம் மட்டமான ஒரு நாடகத்தை எழுதச் சொல்வான்’ என்று சொல்ல, ‘ஆமா..இப்போது இரங்கற்பா எழுதுவது மட்டும் உசத்தியா’ என்கிறான் சிகநேடர். “அதில் பணம் வருகிறது’ என்கிறாள் கான்ஸ்டான்சா. இருவரையும் திட்டிவிட்டு மொசார்ட்டை எச்சரிக்கிறான் சிகநேடர்.

CUT TO:

சலேரியின் வீடு – பகல் – 1790’s

பயந்துபோன லார்ல் அழுதுகொண்டே சலேரியின் முன் அமர்ந்திருக்கிறாள்.                               

“என்னால் இனிமேல் அங்கு வேலை செய்ய முடியாது” என்கிறாள் லார்ல். “மொசார்ட் குடித்துக் கொண்டே இருக்கிறார். அவர் வயிற்று வலிக்காக மாத்திரை எடுத்துக் கொண்டிருக்கிறார். சம்பந்தம் இல்லாமல் எதையோ பேசுகிறார். நரகத்தில் வாழ்வது போல இருக்கிறது அங்கு இருப்பது” என்கிறாள்.

“என்னுடைய அப்பாவைப் பார்த்தேன்” என்கிறார். “அவர் இறப்பதைப் பார்க்கிறேன்” என்கிறார் எனக்குப் பயமாக இருக்கிறது” என்கிறாள லார்ல்.

மீண்டும் மீண்டும் மொசார்ட் எதுதுகிறாரா என்பதையே சலேரி கேட்டுக் கொண்டிருக்கிறார். “ஆமாம் ஒபேரா எழுதுகிறார்” என்றதும் திகைக்கிறார் சலேரி.  ‘The Magic Fluteன் இசை கேட்கிறது..’ 

CUT TO:

மொசார்ட்டின் வீடு – கூடம் – இரவு – 1790’s          

மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் அந்த அறை காட்டப்படுகிறது. அழுக்காக இருக்கிறது. லியோபோல்டின் ஓவியம் அங்கிருப்பதைக் கேமரா காட்டுகிறது. லியோபோல்ட் அந்த அறையின் அவலங்களைப் பார்ப்பது போல இருக்கிறது.

காகிதங்கள் குப்பை போல மேஜையில் கிடைக்கின்றன. அழுக்கான பாத்திரங்கள் கணப்பு அடுப்புக்கு அருகில் கிடக்கின்றன. பியானோவின் மேல் மொசார்ட்டின் உடை ஒன்று கிடக்கிறது. பின்னணி இசையில் ஒரு பாடல் கேட்கிறது. மொசார்ட் மெழுகுவர்த்தியை எடுத்துக் கொண்டு அங்கே வருகிறார்.

CUT TO:

மொசார்ட் வீடு – படுக்கையறை – இரவு – 1790’s

கான்ஸ்டான்சா தூங்கிக்கொண்டிருக்கிறாள். பார்ப்பதற்கு காய்ச்சல் வந்தவள் போல சோர்வாக இருக்கிறாள். மொசார்ட் மென்மையாக அவளது தலையைத் தடவுகிறார். 

பிறகு தனது மகன் படுத்திருக்கும் கட்டிலுக்குச் செல்கிறார். மகனைப் போர்த்தியிருக்கும் போர்வையை மெதுவாக விலக்குகிறார் மகனுக்கு அருகில் தன் தலையை சாய்க்கிறார். கான்ஸ்டான்சா விழித்து மொசார்ட்டையே பார்க்கிறாள். மொசார்ட் எழுந்து அறையை விட்டு வெளியே செல்கிறார்.

CUT TO:

மொசார்ட்டின் வீடு – கூடம்- இரவு – 1790’s

கடந்த காட்சியின் பின்னணி இசை தொடர்கிறது. அது முடியும் தருவாயில் மெல்லிய இசை தொடர்கிறது. மொசார்ட் தனியாக நடனமாட ஆரம்பிக்கிறார். குழந்தை போல சிரிக்கிறார். தனது அப்பாவின் ஓவியத்தைப் பார்க்கிறார். கோபமான சைகை காட்டுகிறார். திரும்பதும் பழைய பொறுப்பற்ற சிறுவன் போலத் தன்னை நினைத்துக் கொள்கிறார்

அப்போது வாசல் கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்கிறது. இசை மங்குகிறது. மொசார்ட் கதவைத் திரிக்கிறார். Don Giovanniன் பிரபலமான அடர்ந்த இசை கேட்கிறது. ஏற்கனவே கேட்டுக் கொண்டிருந்த இனிமையான சந்தோஷமான இசைக்கு மாற்றாக இருக்கிறது இது. மொசார்ட்டுக்கு முன்பாக முகமுடி அணிந்த ஒருவர் நிற்கிறார்

 “நான் இன்னும் முடிக்கவில்லை” என்கிறார். “முகமுடியில் வந்திருக்கும் சலேரி, “என் கோரிக்கையை நிராகரிக்கிறாயா?” என்று கேட்க, “இல்லை நான் எழுதிக் கொண்டிருப்பதில் சிறந்த இசை இது தான்” என்கிறார்

அப்போது அங்கே வரும் கான்ஸ்டன்சா வர அவளை சுட்டிக் காட்டி வந்தவரிடம் “இவள் என்னுடைய மனைவி” என்கிறார். கான்ஸ்டான்சா  வந்த நபரிடம் “அவர் உங்களுக்காகத் தான் எழுதிக் கொண்டே இருக்கிறார்” என்கிறாள். 

இரண்டு வாரங்கள் அவகாசம் கொடுங்கள் என்று மொசார்ட் கேட்க, “சீக்கிரம் வேலையை முடித்தால் வெகுமதியும் சீக்கிரம் வந்து சேரும்” 

என்று சொல்லி விட்டு வேகமாகப் படியில் இறங்கிப் போகிறார். மொசார்ட் பயத்தில் கண்களை மூடிக்கொள்கிறார்.

கான்ச்டான்சா மொசார்ட்டிடம் இந்த வேலையை சீக்கிரம் முடிக்கக் கூடாதா என்று கேட்க, “இல்லை என்னால் முடியவில்லை. இது என்னைக் கொல்கிறது” என்கிறார் மொசார்ட் பயத்துடன். 

கான்ஸ்டான்சாவுக்கு கோபம் வருகிறது “நாள் முழுக்கக் குடித்து குடித்து ஒரு குடிகாரனைப் போல உளறுகிறாய்” என்று சண்டை போடுகிறாள். அழத் தொடங்குகிறாள். மொசார்ட்டுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. தன்னுடைய நிலையை விளக்க முடியாத நிர்க்கதியோடு நிற்கிறார். 

“நீ தூங்கப் போ” என்கிறார் மொசார்ட். “இல்லை..நான் இங்கேயே இருக்கிறேன்” என்று அங்கே இருக்கும் நாற்காலியில் அமர்ந்து கொள்கிறாள். 

கண்ணீருடன் மொசார்ட்டையே பார்த்தபடி அமர்ந்திருக்கிறாள்

இரங்கற்பாவில் உள்ள Rex Tremendai Majestatisஐ கேட்கிறோம். மொசார்ட், லியோபோல்டின் ஓவியத்தைப பறக்கிறார். கேமெரா மெதுவாக அங்கிருந்து நகர்ந்து மேஜையைக் காட்டுகிறது. மொசார்ட் இசைக்குறிப்புகளை எழுதிக் கொண்டிருக்கிறார். மொசார்ட் நிமிர்ந்து பார்க்க, நாற்காலியில் அமர்ந்தபடியே கான்ஸ்டான்சா தூங்கிக் கொண்டிருப்பது தெரிகிறது. மொசார்ட் மெதுவாக அடிமேல் அடி வைத்து வீட்டை விட்டு வெளியே செல்கிறார்.

இப்போது உல்லாசமான துள்ளல் இசைக் கேட்கத் தொடங்குகிறது. 

 CUT TO:

சிகநேடரின் கோடை விடுதி – இரவு – 1780’s

சிகநேடர் மற்றும் மூன்று நடிகைகளும் இருக்கிறார்கள். மொசார்ட்டும் இருக்கிறார். உள்ளே மேஜைகள், நாற்காலிகள், பியானோ இருக்கின்றன. பாட்டில்களும், காகிதங்களும் அங்கங்கே கிடக்கின்றன. நடிகைகள் சிரித்துக் கொண்டிருக்கிறார்கள். சிகநேடர், மொசார்ட் இருவரும் மது அருந்தியிருக்கிறார்கள். இருவரும் பாடிக்கொண்டிருக்கிறார்கள். பாடிக்கொண்டே போதையில் ஒருவர் மேல் ஒருவர் படுத்துத் தூங்குகின்றனர். 

வியன்னாவின் தெரு – இரவு – 1790’s

மொசார்ட் மது அருந்திக்கொண்டே சந்தோஷமாக பனிக்கு நடுவே நடந்து வருகிறான். சொற்ப மக்கள் மட்டுமே நடமாடிக்கொண்டிருக்கிறார்கள். தன்னுடைய வீட்டுக்குச் செல்கிறார்.

CUT TO:

மொசார்ட் வீடு – பகல் -l 1790’s

கூடத்தையும், படுக்கை அறையையும் பார்ம்க்கிறான். கான்ச்டான்சா, மகன் இருவருமே எங்கும் இல்லை. மொசார்ட்டுக்கு குழப்பமாகிறது. கான்ஸ்டன்சாவை அழைக்கிறான். அவள் வீட்டில் இல்லை என்பது தெரிகிறது.             

மேடம் வேபர் வீடு – கூடம் – பகல் – 

மேடம் வேபர் இறுக்கமான முகத்தோடு அமர்ந்து பேசிக்கொண்டிருக்கிறார். மொசார்ட் சோர்வாக அவள் பேசுவதை வேறு வழியில்லாமல் கேட்டுக்கொண்டிருக்கிறார். 

“அவள் உன் வீட்டுக்கு வரமாட்டாள். போதும் அவளை நீ பாடாய்ப்படுத்தியது..உன்னைப் போல ஒரு முட்டாள்தனமான ஒருவனுக்கு என் பெண்ணைக் கல்யாணம் செய்து கொடுத்ததே தவறு..நான் வேண்டாம் என்று தான் சொன்னேன்..அவள் எங்கே கேட்டாள்..இதோ இப்போது அனுபவிக்கிறாள். உன்னை நினைத்து அழுதழுது அவள் மூளையில் இருக்கிற கண்ணீரெல்லாம் வற்றிவிட்டது.             

நீ ஒரு சுயநலவாதி. சுயநலவாதி ..சுயநலவாதி” என்று பேசிக்கொண்டேயிருக்க, THE MAGIC FLUTE ன் QUEEN OF NIGHT ன் இரண்டாவது அங்கத்தின் இசை பின்னணியில் கேட்கிறது.

 DISSOLVE TO:

சிகநேடரின் அரங்கம் – இரவு – 1790’S

மேடையில் QUEEN OF NIGHT ஆர்ப்பாட்டமாக உடை அணிந்திருக்கிறாள். சரஸ்ட்ராவாவைக் கொள்ளும்படி தன் மகளிடம் சொல்லிக் கொண்டிருக்கிறாள். அவள் பாடப்பட நாம் அரங்கின் உள்ளே பார்க்கிறோம். சாதாரண ஜெர்மானிய குடிமகன்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் உற்சாகமாக இருக்கிறார்கள்., 

அங்கும் தனியாக அமர்ந்து பார்ப்பதற்கான அமைப்புகள் இருக்கின்றன. அதில் ஒரு இடத்தில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறார் சலேரி.

நாடகம் நடந்து கொண்டிருக்கிறது.

பார்வையாளர்கள் கைத்தட்டுகிறார்கள்.

CUT TO:

அரங்குக்கு வெளியே – இரவு – 1790’s

அங்கு ஓட்டப்பட்டிருக்கிற நோட்டிஸ் காட்டப்படுகிறது. அதில் சிகநேடர் இயக்கத்தில் அவருடைய நண்பரான மொசார்ட் நேரடியாக நடத்தும் இசைப் பின்னணியுடன் நடக்கும் THE MAGIC FLUTE நாடகம் குறித்து அறிவிக்கப்பட்டிருக்கிறது

அரங்கின் உள்ளே – இரவு 1790’s

மேடையில் நாடகம் நடந்து கொண்டிருக்கிறது. 

நாடகத்தின் மத்தியில் மொசார்ட் வயலின் வாசிப்பவரிடம் வாசிக்கும்படி கைகாட்டிவிட்டு திரையரங்குக்குப் பின்னாடி சொல்கிறார். நாம் அவரைப் பின்தொடர்கிறோம். பின்னணியில் நாடகத்தின் இசைக் கேட்டுக்கொண்டிருக்கிறது. 

மொசார்ட் மேடைக்கு பின்னால் சென்று அங்கே உள்ள ஒரு இசைக்கருவியைத் தானே வாசிக்கப்போவதாக சொல்கிறார். 

உற்சாகமாக நாடகம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

நான் இப்போது சலேரியின் பார்வையில் நாடகத்தைப் பார்க்கிறோம். சலேரி அங்கிருந்து எழுகிறார். 

CUT TO:

சிகநேடர் அரங்கம் மேடையின் பின்பகுதி – இரவு – 1790’s

ஒரு நடிகை தரையைப் பார்த்துக் கொண்டிருக்கிறாள். அவள் முகத்தில் திகைப்பும், அதிர்ச்சியும் தெரிகிறது. அவள் பார்க்கும் இடத்தில் மொசார்ட் நினைவிழந்து விழுந்திருக்கிறார். அவர்களைச் சுற்றி சிலர் கூடுகிறார்கள். ‘யாரேனும் டாக்டரை அழியுங்கள்’ என்கிற குரல் கேட்கிறது. யாரோ வண்டியை அழைக்கிறார்கள். அப்போது அங்கே சலேரியின் குரல் கேட்கிறது. 

            .

“நான் பார்த்துக் கொள்கிறேன்” என்று முன்னே வருகிறார். என்னிடம் வண்டி இருக்கிறது என்கிறார் 

எல்லாரும் மரியாதையுடன வழிவிடுகிறார்கள். பலவீனமான மொசார்ட்டைத் தூக்கிக் கொள்கிறார் சலேரி. மொசார்ட்டைத் தன்னுடைய தோளில் போட்டுக் கொள்கிறார். மேடையில் நாடகம் நடந்து கொண்டிருக்கிறது. 

நாடகம் தொடர்ந்து நடந்து கொண்டிருப்பதையும், எல்லாரும் சிரித்து உற்சாகமாகப் பார்ப்பதும் காட்டபப்டுகிறது. 

CUT TO:

சிகநேடர் அரங்கம் – இரவு – 1790’s 

வண்டியில் மொசார்ட் மயக்கத்தில் இருக்கிறார். மெதுவாக அவருக்கு விழிப்பு வருகிறது. ஆனால் மிகவும் பலவீனமாக இருக்கிறார். சலேரி மொசார்ட்டுக்கு அருகில் அமர்ந்திருக்கிறார். வெளியே பனி கொட்டிக் கொண்டிருக்கிறது.

மொசார்ட் பலவீனமாக “என்ன ஆயிற்று? முடிந்ததா?’ என்று கேட்கிறார். சலேரி அவரிடம் “உங்களுக்கு உடல்நிலை சரியில்லை. உங்களை நான் வீட்டுக்கு அழைத்துப் போகிறேன்” என்கிறார். “இல்லை நான் போக வேண்டும்” என்று சொல்லிக் கொண்டே எழ முயற்சிக்க, முடியாமல் துவண்டு விழுகிறார். சலேரி மொசார்ர்டை மீண்டும் படுக்க வைக்கிறார். வண்டியில் லாந்தர் விளக்கு ஆடிக்கொண்டிருக்கிறது 

மொசார்ட்டின் வீடு – கூடம் – இரவு – 1790’s

கதவு திறக்கிறது. சலேரி கையில் விளக்குடன் உள்ளே வருகிறார். பின்னாடியே மொசார்ட்தைத் தூக்கி கொண்டு ஒரு கூலியாள் வருகிறார். அறை முழுவதுமாக அலங்கோலமாக இருக்கிறது. மேஜை மீது காலியான ஒயின் பாட்டில்களும், எழுதப்பட்ட இசைக்குறிப்புகளும் உள்ளன. கூலியாள் மொசார்ர்டை உள்ளேத் தூக்கிப் போகிறார்.  

மொசார்ட்டின் வீடு – படுக்கையறை – இரவு – 1790’S

அந்த அறை கைவிடப்பட்ட ஒன்று போல உள்ளது. அங்கங்கே துணிகள் கிடக்கின்றன. உடைந்த ஜன்னலில் சாக்குப் பை தொங்கிக்கொண்டிருக்கிறது.

கூலியாள் மொசார்ட்டினை படுக்கையில் படுக்க வைக்கிறார். அங்கிருக்கும் மெழுகுவர்த்திகளை சலேரி ஏற்றுகிறார். அதன் வெளிச்சத்தில் சாப்பிட்ட தட்டுகள் சுத்தப்படுத்தப்படாமல் அங்கு கிடப்பதைப் பார்க்கிறார். சலேரி கூலியாளுக்கு கூலி கொடுத்து அனுப்புகிறார் 

மொசார்ட் தன்னை மறந்து அரை மயக்க நிலையில் ‘அப்பா..அப்பா’ என்று எதோ பாடுகிறார். கண்ணைத் திறந்து பார்க்கிறார். சலேரியைப் பார்த்து புன்னகைக்கிறார். 

சலேரி மொசார்ட்டின் கோட்டினை கழற்ற உதவி செய்கிறார். 

மனைவி எங்கே என்று விசாரிக்கிறா.ர் அவள் திரும்பி வரப்போவதில்லை என்று புரிந்து கொள்கிறார். 

சலேரி நாடகத்துக்கு வந்தது குறித்து தன்னுடைய மகிழ்ச்சியினைத் தெரிவிக்கிறார் சலேரி. ‘நீங்கள் ஒரு மேதாவி’ என்று சலேரி சொல்ல, “உண்மையாகவா?”என்று குழந்தை போலக் கேட்கிறார் மொசார்ட். 

அப்போது வாசல் கதவை யாரோ பலமாகத் தட்டும் சத்தம் கேட்கிறது. மொசார்ட் பயப்படுகிறார். “அவர் தான்..அவர் தான வந்திருக்கிறார்..எனக்கு பயமாக இருக்கிறது” என்று சொல்ல, “யார் என்று கேட்கிறார் சலேரி. “அவர் தான்..அவரிடம் ..சீக்கிரம் முடித்து விடுவேன் “ என்று சொல்லுங்கள். எனக்கு அவரைப் பார்த்தாலே பயமாக இருக்கிறது” என்று சொல்ல “நான் போய்ப் பார்க்கிறேன்” என்று சொல்லிவிட்டு சலேரி செல்கிறார்.             

மொசார்ட்டின் வீடு – கூடம் – இரவு – 1790’s

சலேரி கதைவைத் திறக்க், அங்கு ஸ்கநேடர் மற்றும் நடிகைகள் ஒப்பனை கலைக்காமல் வந்திருக்கிறார்கள். மொசார்ட்டைப் பார்க்க வேண்டும் என்று சொல்ல, “அவர் தூங்கிக் கொண்டிருக்கிறார் “ என்கிறார் சலேரி. “மொசார்ட் எழுந்ததும் நாடகம் மிகப் பிரமாதமான வரவேற்பைப் பெற்றது என்றும் பார்வையாளர்கள் நூறு முறை மொசார்ட்டின் பெயரைச் சொல்லி கத்தினார்கள் என்றும் சொல்லுங்கள்” எனச் சொல்லி “நாடகத்தில் கிடைத்த இலாபத்தில் மொசார்ட்டின் பங்கு “ என்று பணப் பையைக் கொடுத்து விட்டுச் செல்கிறார் சிகநேடர்.                                   

சிகநேடரை அனுப்புவதில் சலேரி கவனமாக இருக்கிறார். இது சிகநேடருக்கு சற்று சந்தேகம் தருகிறது இதைப் புரிந்து கொள்ளும் சலேரி சிரித்தபடி வழியனுப்பிவிட்டு கதவை மூடுகிறார். ஒரு கணம் யோசிக்கிறார். அந்தப் பணத்தைப் பார்க்கிறார். 

மொசார்ட்டின் வீடு – படுக்கையறை – இரவு – 1790’s

மொசார்ட் படுக்கையில் எழுந்து அமர்ந்திருக்கிறார். கதவைத் திறந்து சலேரி வருகிறார். அவர் கையில் பணப்பை இருக்கிறது. “என்ன ஆனது?” என்று மொசார்ட் கேட்க, படுக்கையில் அந்த பணப்பையில் இருக்கும் பணத்தைக் கொட்டுகிறார். “அவர் இதை எங்களிடம் தரச் சொன்னார். நாளை இரவுக்குள் நீங்கள் அவருக்குத் தர வேண்டுமாம். அப்படித் தந்தால் இன்னும் நூறு டக்கட்டுகளைத் தருவாராம்.

அந்தப் பணத்தைத் திகைப்போடு பார்க்கிறார் மொசார்ட்.                                  

“நாளை இரவுக்குளா?” எனப்படி முடியும் என்று மொசார்ட் கேட்க, “நான் வேண்டுமானல உங்களுக்கு உதவட்டுமா/ என்று கேட்கிறார். 

“நிச்சயமாக..ஆனா யாரிடமும் சொலல் மாட்டீர்களே” என்று மொசார்ட் கேட்க “மாட்டேன் என்கிறார் சலேரி. 

“எல்லாமே என் தலைக்குள் இருக்கிறது…எழுத உட்காரும்போது கண்கள் இருட்டிக் கொண்டு வருகிறது. என்னால் கவனம் செய்ய முடியவில்லை” என்கிறார். 

“ஒன்று செய்யலாம்..நான் உதவுகிறேன். நீங்கள் சொல்லச் சொல்ல நான் எழுதுகிறேன்” என்று சொல்லிவிட்டு “என்ன எழுத வேண்டும்” என்று கேட்கிறார். “இரங்கற்பா..மரணத்துக்கான இரங்கற்பா” என்கிறார் மொசார்ட். 

CUT TO:

சிறிய நடன அறை – பாடன் – இரவு – 1790’S

இசைப் பின்னணியில் நடனம் ஆடிக்கொண்டிருக்கிறார்கள், கான்ஸ்டான்சா அங்கு இளம் அதிகாரி ஒருவருடன் ஆடிக்கொண்டிருக்கிறாள். அவர் இராணுவ உடை அணிந்திருக்கிறார். ஒரு கணம் அவள் நடனத்தை நிறுத்துகிறாள். அவள் முகம் வெளிறிப் போயிருக்கிறது.

 நான் கிளம்ப வேண்டும் என்கிறாள். அந்த அதிகாரி திகைத்துப் போய்ப் பார்க்க, “ஏதோ தப்பாக இருக்கிறது..நான் வியன்னாவுக்குப் போக வேண்டும் என்று அவசராமாக அங்கிருந்து வெளியேறுகிறாள். 

CUT TO:

மொசார்ட்டின் வீடு – படுக்கையறை – இரவு – 1790’S

மொசார்ட் கட்டிலில் அமர்ந்திருக்கிறார். படுக்கையில் பணம் கிடக்கிறது. மெழுகுவர்த்திகள் எரிந்து கொண்டிருக்கின்றன. சலேரி கோட் மற்றும் விக் இல்லாமல் மேஜையின் முன் அமர்ந்திருக்கிறார். அந்த மேஜையில் இசைக்குறிப்புகளின் வெற்றுத் தாள்கள் இருக்கின்றன. மைக்கூடுகளும், இறகுகளும் இருக்கின்றன. அதுவரை எழுதப்பட்ட இரங்கற்பா இருக்கிறது. மொசார்ட்டுக்கு காய்ச்சல் இருக்கிறது என்பது தெரிகிறது. மொசார்ட் சொல்லச் சொல்ல, காய்ச்சல் கண்டது போல சலேரி வேகவேகமாக எழுதுகிறார். 

“நான் எங்கே நிறுத்தினேன்” என்று மொசார்ட் கேட்கிறார்

சலேரி தாள்களைப் பார்த்துவிட்டு “Recordare – Statuens in parte dextraன் இறுதியில் “ என்கிறார் சலேரி 

இப்போது Confutatis Maledicts (குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் நரகத்தின் தீயில் எறியப்படும் முன் தான் ஆசிர்வதிக்கப்பட வேண்டும் என்று பிரார்த்தனை செய்வது ).  இதை நீங்கள் நம்புகிறீர்களா? என்று மொசார்ட் சலேரியிடம் கேட்கிறார். 

இந்த நெருப்பு அணையவே அணையாது என்பதை நம்புகிறீர்களா? என்று கேட்க ஆமாம் என்கிறார் சலேரி. 

மொசார்ட்டினை அடுத்து சொல்லுமாறு தூண்டுகிறார் சலேரி. “இதனை F Major -ல் முடிக்கலாம். என்கிறார். 

இப்போது A minor சட்டென்று வரவேண்டும்.

சலேரி எழுதிக் கொண்டிருக்கிறார். 

மொசார்ட் சொல்லச் சொல்ல, சலேரி வேகவேகமாக எழுதுகிறார். 

மொசார்ட்டின் மனதின் வேகத்துக்கு ஈடு கொடுத்து எழுதிக் கொண்டிருக்கிறார். 

இப்போது பாடுகிறீர்களா?” என்று மொசார்ட் கேட்க, சலேரி மொசார்ட் இதுவரை சொன்ன இசைக்குறிப்புகளைப் பாடிக்காட்டுகிறார். 

நல்லது. இப்போது Tenor. 

என்று தொடங்கி மீண்டும் சொல்ல ஆரம்பிக்கிறார்,. சலேரி காய்ச்சல் கடந்து போல வேகம் வேகமாக எழுதுகிறார். இசைக்குறிப்புகள் வேகமாக எழுதப்படுவதைப் பார்க்கிறோம். 

 இசை நிற்கிறது.

ஒரு நிமிடம் என்று சலேரி சொல்ல,  மொசார்ட்டுக்கு எரிச்சல் வருகிறது. அவருடைய கைகள் பொறுமையில்லாமல் அலைகின்றன. சலேரி வேகமாகக் கிறுக்குகிறார்.        

சில சந்தேகங்களை இருவருமாக பேசிக்கொள்கிறார்கள். 

மீண்டும் குறிப்புகளை சொல்ல ஆரம்பிக்கிறார். 

எழுதியதைக் காட்டச் சொல்கிறார் மொசார்ட். சலேரி காட்டுகிறார். “அதைப் பார்த்து திருப்தி கொள்கிறார் மொசார்ட்.`

மிக அருமையாக இருக்கிறது என்கிறார் சலேரி. 

“ஆமாம் என்று சொல்லும் மொசார்ட் கொஞ்சம் தெம்பு வந்ததைப் போல நிமிர்ந்து உட்காருகிறார். 

மீண்டும் மொசார்ட் சொல்லச் சொல்ல எழுதிக் கொண்டிருக்கிறார் சலேரி. 

மொசார்ட் தன் நிலை மறந்தவரைப் போல வேகமாக சொல்லிக் கொண்டிருக்கிறார். சலேரி அவரிடம் ‘நீங்கள் வேகமாகப் போகிறீர்கள்” என்கிறார். மொசார்ட் இடை நிறுத்தாமல் சொல்லிக் கொண்டிருக்கிறார். 

“முதலில் இருந்து நான் கேட்க நினைக்கிறேன்..நீங்கள் காட்டுங்கள் “ என்கிறார்.

எழுதப்பட்ட இசைக்குறிப்புகள் தொடக்கத்தில் இருந்து கேட்கத் தொடங்குகின்றன. மொசார்ட் சலேரியிடமிருந்து பிடுங்கி வாசிக்கிறார். பாடுகிறார். சலேரி அளவுக்கு மீறிய திகைப்பிலும் ஆச்சரியத்திலும் மொசார்ர்டைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். இசை தொடர்ந்து கொண்டிருக்கிறது. 

ஒரு கிராமத்து சாலை – பனிக்கால இரவு – 1790’s

பயணிகள் வண்டி வேகமாக இரவில் வந்து கொண்டிருக்கிறது. கிராமப்புறம் என்று தெரிகிறது. பனி பெய்து கொண்டிருக்கிறது 

பயணிகள் வண்டி – இரவு – 1790’s

பயணிகள் வண்டிக்குள் பயணிகள் அமர்ந்திருக்கிறார்கள். அவர்களுள் கான்ஸ்டான்சாவும் இருக்கிறாள். உடன் கார்லும் இருக்கிறான். இருவரும் தூங்காமல் வண்டியின் ஓட்டத்திற்கேற்ப அசைந்து கொண்டிருக்கின்றனர்.

CUT TO:

மொசார்ட்டின் வீடு -படுக்கையறை- இரவு – 1790’s

மொசார்ட் படுக்கையில் படுத்திருக்கிறார். முற்றிலும் சோர்வாக இருக்கிறார். ஆனாலும் வேகவேகமாக இசைக்குறிப்புகளை சொல்லிக் கொண்டே இருக்கிறார். அவர் சலேரியிடம் என்ன சொல்கிறார் என்று நமக்குக் கேட்பதில்லை. சலேரி அதே வேகத்தோடு எழுதிக் கொண்டிருக்கிறார். மொசார்ட் பலவீனமாகத் தெரிகிறார். அவருடைய நெற்றியில் இருந்து வியர்வை வழியத் தொடங்குகிறது.

ஒரு கிராமத்து சாலை – பனிக்கால இரவு – 1790’s

இரவில் ஒரு வண்டி வந்து கொண்டிருக்கிறது.

மொசார்ட்டின் வீடு – படுக்கையறை – இரவு – 1790’s

மொசார்ட் இசைக்குறிப்புகளை சொல்லிக் கொண்டிருக்கிறார். சலேரி நிறுத்தாமல் எழுதிக் கொண்டிருக்கிறார்.

வியன்னா தெரு – அதிகாலை – 1790’s

பயணிகள் வண்டி வந்து சேர்ந்து விடுகிறது. கான்ஸ்டான்சா, கார்ல் இருவரும் மற்றப் பயணிகளுடன் இறங்குகிறார்கள். 

இசை முடிவடைகிறது. End of the Confutatis.

மொசார்ட்டின் வீடு – படுக்கையறை – இரவு – 1790’S

மொசார்ட் சலேரியிடம் “:நீங்கள் சற்று ஒய்வு எடுத்துக் கொள்கிறீர்களா?”என்று கேட்க “வேண்டாம்..நான் களைப்பாக இல்லை” என்கிறார் சலேரி. தூங்கி எழுந்து தொடங்கலாம், நான் தூங்கும்போது என்னை விட்டுப் போய்விட மாட்டீர்களே என்று மொசார்ட் கேட்க, மாட்டேன் என்கிறார் சலேரி. 

“நான் ஒரு முட்டாள். நீங்கள் என்னுடைய திறமை குறித்து கண்டு கொள்ள மாட்டீர்கள் என்று நினைத்துக் கொண்டேன். என்னை மன்னித்துக் கொள்ளுங்கள். தயவுசெய்து என்னை மன்னித்து விடுங்கள்” என்கிறார் மொசார்ட். 

சொல்லிவிட்டு மொசார்ட் கண்களை மூடிக் கொள்கிறார். சலேரி அவரையே பார்த்துக் கொண்டிருக்கிறார். 

வியன்னா தெரு – பனிபொழியும் அதிகாலை – 1790’S

கான்ஸ்டான்சா மற்றும் கார்ல் வீட்டுக்கு அருகில் வருகிறார். தெருவில் பனி விழுந்து கொண்டிருக்கிறது. 

மொசார்ட்டின் வீடு – படுக்கையறை – அதிகாலை – 1790’S

மொசார்ட் தூங்கிக் கொண்டிருக்கிறார். அவர் கையில் இசைக்குறிப்புகள் இருக்கின்றன. சலேரி கார்ல் படுக்கும் படுக்கையில் படுத்திருக்கிறார். அவருடைய உயரத்துக்கு அது சிறிய படுக்கை என்பதால் சுருக்கிக் கொண்டு படுத்திருக்கிறார். 

மொசார்ட்டின் வீடு – அதிகாலை – 1790’S

கான்ஸ்டான்சா மற்றும் கார்ல் கதவுக்கு அருகில் வருகிறார்கள். உள்ளே வருகிறார்கள். 

மொசார்ட்டின் வீடு – கூடம் – 1790’S

வீடு அதே ஒழுங்கின்மையுடன் இருக்கிறது. ஆனால் மேஜை மட்டும் காகிதங்கள் எதுவும் இல்லாம சுத்தமாக இருக்கிறது. கான்ஸ்டான்சா அதை ஆச்சரியமாகப் பார்க்கிறாள். அவள் படுக்கையறைக்குள் நுழைகிறாள்.

மொசார்ட்டின் படுக்கையறை – அதிகாலை – 1790’S

மொசார்ட் படுக்கையில் படுத்திருக்கிறார். சலேரி தூக்கக்கலக்கத்தில் கார்ல் படுக்கையில் படுத்திருக்கிறார். அந்த அறை முழுக்க எரிந்து போன மெழுகுவர்த்தியின் புகைகளால் நிரம்பியிருக்கிறது. கான்ஸ்டான்சா மற்றும் கார்ல் உள்ளே நுழைந்ததும் இதை எதிர்பாராத சலேரி தடுமாறி எழுந்து நிற்கிறார். 

எழும்போதே தன்னிச்சையாக தன்னுடைய கோட் பட்டனைப் போட்டுக் கொள்கிறார்.

கான்ஸ்டான்சா அவரிடம் “நீங்கள் இங்கு என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?” எனக் கேட்கிறாள். 

“உங்களுடைய கணவர் உடல்நலம் சரியில்லாமல் இருக்கிறார். அவரை நான் தான் இங்கு அழைத்து வந்தேன்” என்கிறார். “நன்றி நீங்கள் போகலாம்” என்கிறாள் கான்ஸ்டான்சா. 

“அவருக்கு நான் தேவைப்படுவேன் மேடம்” என்கிறார். கான்ஸ்டான்சா அவரை அங்கிருந்து அனுப்புவதிலேயே இருக்கிறாள்.

 அப்போது மொசார்ட் புரண்டு படுக்கிறார். அவர் விழிக்கிறார். கான்ஸ்டான்சாவையும தனது மகனையும் பார்க்கிறார். அவர் உண்மையான சந்தோஷத்தோடு சிரிக்கிறார். சலேரியை மறந்துவிட்டு தனது கணவனிடம் செல்கிறாள் கான்ஸ்டான்சா. 

“நான் வந்து விட்டேன்..உங்கள் மீது இன்னும் கோபமிருக்கிறது. ஆனாலும் உங்களை நான் மிஸ் செய்தேன்” என்கிறாள். அவள் மொசார்ட் அருகில் சாய்கிறாள். “உங்களை விட்டு நான் போக மாட்டேன்..கொஞ்சம் எனக்கு இசைவாக இருங்கள்..நானும் என்னால் முடிந்தளவு உங்களுக்கு பிடித்தது போல இருக்கிறேன். 

என்று மொசார்ட்டைக் கட்டிக்கொள்கிறாள். அவர் அவளையேப் பார்க்கிறார். மொசார்ட்டால் பேச முடியவில்லை. அவர் கையில் இசைக்குறிப்புகள் இருப்பதைப் பார்க்கிறாள்.

“என்ன இது?”; என்று கேட்கிறாள். 

அதைப் பார்த்ததுமே அவளுக்கு புரிந்து விடுகிறது. 

வேண்டாம் ..இது உங்களுக்கு வேண்டாம்..நான் முடிவு செய்துவிட்டேன்..நீங்கள் இனிமேல் இதில் வேலையே செய்யக்கூடாது” என்கிறாள். 

அவருடைய பலவீனமான கைகளில் இருந்து அந்த இசைக்குறிப்புகளை வாங்குகிறாள். அதே சமயம் சலேரி முன்னாடி வந்து அந்தக் காகிதங்களை வாங்கி ஏற்கனவே குவித்து வைக்கப்பட்ட இசைக்குறிப்புகளோடு சேர்க்கிறார் 

கான்ஸ்டான்சா சலேரியைப் பார்க்கிறாள். அந்தப் பார்வையில், அச்சம், சந்தேகம் எல்லாம் இருக்க்ரியாடு. அப்போது மௌனம் மட்டுமே நிலவுகிறது. மொசார்ட் வேகமாக கையை ஆட்டி அதைத் தன்னிடம் திருப்பித் தருமாறு சைகை செய்கிறார். படுக்கையின் மேல் இருந்த பணப்பை தரையில் விழுந்து சில்லறைகள் சிதறுகின்றன. கார்ல் அந்த சில்லறைகளை எடுக்க ஓடுகிறான். அவை பல திசைகளில் உருண்டு ஓடுகிறது. கார்ல் சிரிக்கிறான் 

கான்ஸ்டான்சா சலேரியிடம் “இது அவரது கையெழுத்து இல்லை” என்கிறாள். 

“நான் அவருக்கு உதவி செய்தேன். அவர் என்னைக் கேட்டுக் கொண்டார் ”

“இனிமே அவர் இதில் வேலை செய்ய மாட்டார். அது அவரை மோசமாக்குகிறது. “ என்று சொல்லி அந்த இரங்கற்பாவுக்காக கையை நீட்டுகிறாள். அவள் எழுந்து நிற்கிறாள். சலேரி அவளிடம் தருவதற்கு தயங்குகிறார். 

அவள் வலியுறுத்தி கேட்க வேறு வழியில்லாமல் அந்த இரங்கற்பாவை அவளிடம் கொடுக்கிறார். 

நன்றி என்கிறாள் கான்ச்டான்சா.

அவள் அந்த இசைக்குறிப்புகளை அந்த  அறையில் உள்ள ஒரு இடத்தைத் திறந்து உள்ளே தூக்கிப் போடுகிறாள். அதை மூடுகிறாள். அதைப் பூட்டிச் சாவியை வைத்துக் கொள்கிறாள். சலேரி தன்னையுமறியாமல் முன்னாடி சென்று பார்க்கிறார் 

நீங்கள் கிளம்பலாம் என்கிறாள்.

“என்னை அவர் இங்கே இருக்கச் சொல்லியிருக்கிறார்” என்று சலேரி சொல்ல, கிளம்புங்கள் என்கிறாள் கான்ஸ்டான்சா.

 இருவரும் ஒருவரையொருவர் வெறுப்புடன் பார்த்துக் கொள்கிறார்கள். 

கான்ஸ்டான்சா மொசார்ட்டை எழுப்புகிறாள். கார்ல் தரையில் சில்லறைகளுடன் விளையாடிக்கொண்டிருக்கிறான். பின்னணியில் எங்கோ கேட்பது போல இரங்கற்பாவில் உள்ள Lacrimosa கேட்கிறது. கான்ஸ்டான்சா மொசார்ட்டின் கைகளைத் தொடுவதை சலேரி பார்க்கிறார். இசை கூடிக்கொண்டே போகிறது. மொசார்ட் மரணமடைந்துவிட்டார் என்பது நமக்கு புரிகிறது.

கான்ஸ்டான்சா மொசார்ட்டையே அதிர்ச்சியோடு பார்ப்பது காட்டப்படுகிறது. 

சலேரி ஏமாற்ற உணர்வோடு மொசார்ட்டையே பார்க்கிறார்.           

இசை கூடிக் கொண்டே போகிறது.

கார்ல் சில்லறைகளோடு விளையாடிக் கொண்டிருக்கிறான்.

CUT TO:

ஸ்டீபன் கதீட்ரல் – வியன்னா – ஒரு மழைநாள் – 1790’S

LACRIMOSA தொடர்கிறது. குறைவான ஆட்கள் அந்த ஈரமான நாளில் சிறிய கதவின் வழியாக வெளியே வருகிறார்கள். அவர்களுடன் மிக மலிவான மரத்தாலான சவப்பெட்டியும் வருகிறது. சிகநேடர் துக்கத்துக்கான உடையில் இருக்கிறார். அந்த சவப்பெட்டியை பலவீனமான கருப்பு குதிரை கொண்ட ஒரு வண்டியில் ஏற்றுகிறார்கள். மற்றவர்கள் அனைவருமே கருப்பு உடையில் இருக்கிறார்கள். சலேரி, வான் ஸ்வீட்டன், கான்ஸ்டான்சா அவர்களது மகன் கார்ல் , மேடம் வேபர் மற்றும் சோஃபி, பணிப்பெண் லார்ல் இருக்கிறார்கள். மழை தூறிக்கொண்டிருக்கிறது. வண்டி நகரத் தொடங்குகிறது. எல்லோரும் பின்தொடர்கிறார்கள்.

CUT TO:

வியன்னாவின் கோட்டைச்சுவருக்கு வெளியே – மழை நாள் – 1790’S

LACRIMOSA தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருக்கிறது. அந்தச் சிறிய கூட்டம் அந்த வண்டியின் பின்னால் சென்று கொண்டிருக்கிறது. 

இப்போது தூறல் வலுத்து மழை பெய்கிறது. ஒவ்வொருவராக அங்கு இருக்கும் மரத்தின் கீழ் நிற்கிறார்கள். அந்தவண்டி கல்லறைத் தோட்டத்தை நோக்கிச் செல்கிறது. மிகத் தனிமையாக சென்று கொண்டிருக்கிறது. யாரும் அதன் பின்னால் செல்லவில்லை. அது தூரம் தூரமாகப் போய்க் கொண்டிருக்கிறது தனியாக. 

அவர்கள் அது போவதையே பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். 

சலேரியும் வான் ஸ்வீட்டனும் ஒருவருக்கொருவர் துக்கத்தினால் கைகுலுக்கிக் கொள்கிறார்கள். அவர்களின் கறுப்புத் தொப்பியை நிறைத்து தண்ணீர் வழிகிறது. சிகநேடர் அழுது கொண்டிருக்கிறார். கான்ஸ்டான்சா மயக்கத்தில் தள்ளாகிறாள். சலேரி அவள் கீழே விழாமல் இருக்க பிடிக்கப் போகிறார். அவள் அவரை ஒரு பார்வை பார்த்துவிட்டு கேதரீனாவின் தோளில் சாய்கிறாள். மேடம் வேபர் கார்லின் கைகளைப் பிடித்துக் கொள்கிறார்

இப்போது இசை Dona Eis Pacem க்ளைமாக்ஸ் நோக்கிச் செல்கிறது. 

CUT TO:

வயதான சலேரியின் மருத்துவமனை அறை – பகல் – 1823

காலை வெளிச்சம் அறைக்குள் நிரம்பியிருக்கிறது. வயதான சலேரி அழுது கொண்டிருக்கிறார். இசை நிற்கிறது. கண்ணீர் பெருக்கெடுத்து அவர் முகத்தில் வழிகிறது. வோக்லர் ஒரு திகைப்புடன் அவரையே பார்த்துக் கொண்டிருக்கிறார். 

“நீங்கள் ஏன் பாவ மன்னிப்பு கேட்க வேண்டும் என்கிறீர்கள்? நீங்க அவரைக் கொளல்வில்லை”

“நான் தான் கொன்றேன்..”

“இல்லை நீங்கள் இல்லை” 

“அவன் வாழ்க்கையில் நான் விஷமேற்றினேன்”

“ஆனால் அவரது உடலுக்கு இல்லையே..”

“என்ன வித்தியாசம் இரண்டுக்கும்?”

அவருடைய மரணத்துக்கு பொறுபேற்றுக்கொள்ள வேண்டும் என ஏன் நினைக்கிறீர்கள்? இந்த மொத்த வியன்னாவும் அதை நம்ப வேண்டும் என்று நினைக்கிறீர்கள்? இது தான் உங்கள் பாவ பரிகாரம் என நினைக்கிறீர்களா?

இல்லை ஃபாதர். இப்போதில் இருந்து மொசார்ட்டைப் பற்றிப் பேசுபவர்கள் யாரும் என்னைப் பற்றி  நினைக்காமல் இருக்க முடியாது. மொசார்ட்டை அன்புடன் நினைவு கூறுபவர்கள் எல்லாருமே என்னை வெறுப்புடனேயே நினைப்பார்கள். அது தான் எனக்கான அழியாத்தன்மை..எங்கள் இருவரின் பெயர்களும் காலம் கடந்து நிற்கும். அவர் புகழுடனும், நான் இகழ்ச்சியுடனும் நினைக்கப்படுவோம். உங்களுடைய கருணையுள்ள கடவுள் என்னை முற்றிலுமாக மறந்து போனார் என்பதை விட இது மேல் அல்லவா!!

“என்னைக் கண்டு இரக்கம் கொள்ளதீர்கள். உங்கள் சூதுவாதான கடவுளைக் கொண்டாடுவதால், உங்களைக் கண்டு நீங்களே  இரக்கம் கொள்ளுங்கள். அவர் தான் மொசார்ட்டைக் கொன்றவர் நான் அல்ல. கடவுள் தன்னால் மறக்கப்பட்டவர்களுக்கும், தன்னால் பயன்படுத்திக் கொள்ளப்பட்டவர்களுக்கும் ஒன்றும் செய்வதில்லை..அவர் மொசார்ட்டை இரண்டாக உடைத்தார்..அவனுடைய தேவை முடிந்ததும் அவனைத் தூக்கி எறிந்துவிட்டார்..பழைய புல்லாங்குழலை வீசுவது போல..”

புனித மார்க்ஸ் கல்லறைத் தோட்டம் – பிற்பகல் நேரம் – 1790’S

மழை நின்றிருக்கிறது. உள்ளூர் பாதிரியார் நின்று கொண்டிருக்கிறார். மொசார்ட்டின் சடலம் வெளியே எடுக்கப்பட்டு ஒரு மூட்டை போல வைக்கப்படுகிறது. அங்கு இதே போல இருபது மூட்டைகளைப் பார்க்கிறோம். 

குழி தோண்டுபவர் மொசார்ட்டின் சடலமிருக்கும் சாக்கினை மற்றவர்களுடன சேர்த்து எறிகிறார். ஒரு உதவியாளர் அதில் எதையோ ஊற்றுகிறார். 

பைபிள் வசனங்கள் வாசிக்கப்படுகின்றன

CUT TO:

வயதான சலேரியின் மருத்துவமனை அறை – காலை – 1823

“கடவுள் என் அப்படி செய்ய வேண்டும்? அவநுப்க்கு பதிலாக என்னை ஏன் அவர் எடுத்துக் கொள்ளவில்லை? ஏனெனில் ஈக்கு மதிப்பு இல்லை. என்னை முப்பத்தி ரெண்டு வருடங்கள் துன்புறுத்தலில் வைத்திருக்க வேண்டும்? முப்பத்திரண்டு வருடங்கள் விருதுகளிலும்..கொவ்ரவங்களிலும்..

என்று தனக்குக் கிடைத்த விருதுகளை பதக்கங்கள் கொர்ககபட்ட சங்கிலிகளைத் தூக்கி எறிகிறார்.சக்கரவர்த்தியால் சூடப்பட்ட ஒவோர்நும் தரையில் உருண்டு விழுந்திருக்கின்றன.

முப்பத்திரண்டு வருட எனக்கு கௌரவம் தறியில் கிடைக்கிறது. என்னுடைய இசை நாளுக்கு நாள் தேர்ந்து கொண்டு போகிறது. யாருமா தை வாசிபப்தில்லை. அவனுடையது இன்னும் சத்தமாக இன்னும் உயர்வாக வளருகிறது. உலகத்தை அது ஆச்சரியபப்டுகிறது..மொசார்ட்…நான் உன்னை ஆசிர்வதிக்கிறேன்..மொசார்ட் ..

கதவுத் திறக்கிறது. ஒரு உதவியாளர் வருகிறார்.

உற்சாகமாக “குளிக்க வாருங்கள்..உங்களுக்கான காலையுணவு தயாராக இருக்கிறது..சர்க்கரைப் பண்டங்கள் “ என்கிறார்

வோக்லரிடம் சலேரி “சர்க்கரை பண்டம்..அவனுக்கு மிகப்பிடிக்கும்” என்கிறார்.             

சலேரி வோக்லரையே பார்க்கிறார். வோக்லர் அவரையேப் பார்க்கிறார். 

“வருகிறேன் ஃபாதர். நன் உங்களுக்காக பேசுகிறேன். இந்த உலகத்தில் உள்ள அத்தனை சாதாரணமானவர்களுக்காகவும் பேசுகிறேன். நான் அவர்களின் முன்னோடி. நான் அவர்களது குலகுரு. அவர்களின் சார்பாக நான் அவரை (கடவுளை) மறுக்கிறேன். உங்கள் கடவுள்..இரக்கமற்ற கடவுளை. ஆசைகளையும், ஏக்கங்களையும் கொடுத்து அதை நிறைவேற்றாத துன்பத்தைக் கொடுக்கும் கடவுளை..அவர் வேண்டுமனால என்னை மன்னிக்கலாம்..நான் அவரை மன்னிக்கவே போவதில்லை.

உதவியாளரிடம் கையைக் காட்ட , அவர் அவரை அங்கிருந்து அழைத்துப் போகிறார். சக்கர நாற்காலியில் போகும் சலேரியை வோக்லர் பார்த்துக் கொண்டே இருக்கிறார்/

மருத்துவமனை நடைபாதை – காலை 

நடைபாதை முழுவதும் நோயாளிகள் இருக்கிறார்கள். சிலர் செவிலியர்களின் உதவியோடு நடந்து கொண்டிருக்கிறார்கள். சிலர் உடற்பயிற்சி செய்கிறார்கள். சிலரைப் பார்க்கும்போதே மிகவும் தொந்தரவுக்கு உள்ளாகியிருக்கிறார்கள்  என்பது புரிகிறது. வயதான சலேரி அவர்களுக்கு இடையில் சக்கர நாற்காலியில் செல்கிறபோது ஆசிர்வாதிப்பது போல கைகளைத் தூக்கிக் கொண்டே போகிறார். 

வயதான சலேரியின் குரல் பின்னணியில் ஒலிக்கிறது “சாதாரணமானவர்கள் தான் எங்கும் நிறைந்திருக்கிறார்கள்..இப்போதும் எப்போதும் அவர்கள் இருப்பார்கள்..உங்களை நான் எல்லாக்க் குற்றங்களில் இருந்தும் விடுவிக்கிறேன். ஆமென்..ஆமென்..ஆமென் 

அவர் திரும்பி கேமராவைப் பார்க்கிறார். பார்வையாளர்களை ஆசிர்வதிக்கிறார். சிலுவை இடுகிறார். பின்னணி இசையாக மொசார்ட்டின் இறுதிச் சடங்கில் இசைக்கப்பட்ட இசை கேட்கிறது.

                                                                 FADE OUT:

THE END


Author Image

ஜா.தீபா

எழுத்தாளர். ‘மேதைகளின் குரல்கள்’ ‘கறுப்புத் திரை’ போன்ற திரைப்படம் சார்ந்த புத்தகங்களையும், “நீலம் பூக்கும் திருமடம்’, ‘மறைமுகம்’ சிறுகதைத் தொகுப்பும் கவனம் பெற்றவை. தொலைகாட்சித் தொடர்களுக்கு திரைக்கதைகள் எழுதி வருகிறார்.

About The Author

The Talkie

The Talkie

See author's posts

Next Post
northeast-indian-movie

கதைகளின் நதி

Please login to join discussion

Archives

  • Trending
  • Comments
  • Latest
Thug_Life_

Thug Life – ஒரு பார்வை

June 6, 2025
AMADEUS திரைக்கதை

AMADEUS திரைக்கதை

March 15, 2025
start camera

ஸ்டார்ட் கேமரா! வின்சென்ட் மாஸ்டர் – 01

March 19, 2025
Irunda-Pakkam

தொழில்நுட்பத்தின் இருண்ட பக்கங்கள்: திரைப்படங்கள் சொல்லும் உண்மை.

March 16, 2025
Thug_Life_

Thug Life – ஒரு பார்வை

11
rasigamagajanangale

ரசிக மகா ஜனங்களே

7
gurudutt-02

குருதத்தின் ப்யாஸா- உயிர்த்தெழுந்த தேவதை        

5
start camera

ஸ்டார்ட் கேமரா! வின்சென்ட் மாஸ்டர் – 01

4
table top-4-5

டேபிள் டாப் 04 & 05

January 24, 2026
bella darr

பேலா டார் – காட்சியை அனுமதித்தவர்

January 24, 2026
trend-kottaiye-11

ட்ரெண்டு கொட்டாய் 11 -நான் (திரை) காவிய நாயகன்

January 24, 2026
table top-3

டேபிள் டாப் 03

January 24, 2026
The Talkie

சினிமா அற்புதமான ஊடகம். இதனை அறிந்து கொள்ளவும், ரசிக்கவும் உருவாக்கப்பட்டிருக்கிற இணைய இதழ் இது. மேதைகளின் நேர்காணல்கள், திரைக்கதைகள், வெவ்வேறு மொழித் திரைப்படங்கள், ஆளுமைகள், திரைப்படப் புத்தகங்கள் , சினிமா ரசனை என சினிமா உலகத்தோடு இணைந்திட எங்களுடன் இணைந்திடுங்கள்.

Categories

  • I CALL THE SHOTS
  • ஆளுமைகள்
  • இந்தியத் திரைப்படங்கள்
  • உரையாடல்
  • உலகத் திரைப்படங்கள்
  • ஓடிடி திரை
  • கட்டுரைகள்
  • குரு தத் 100
  • டேபிள் டாப்
  • ட்ரெண்டு கொட்டாய்
  • தமிழ்த் திரைப்படங்கள்
  • திரை புத்தகம்
  • திரைக்கதைகள்
  • தொடர்கள்
  • ஸ்டார்ட் கேமரா

Site Navigation

  • About Us
  • Terms and Conditions
  • Privacy Policy
  • Returns and Cancellation
  • Shipping Policy
  • FAQ
table top-4-5

டேபிள் டாப் 04 & 05

January 24, 2026
bella darr

பேலா டார் – காட்சியை அனுமதித்தவர்

January 24, 2026
trend-kottaiye-11

ட்ரெண்டு கொட்டாய் 11 -நான் (திரை) காவிய நாயகன்

January 24, 2026

© 2026 Thetalkie - All rights reserved

Welcome Back!

Sign In with Google
OR

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Sign Up with Google
OR

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • thetalkie
  • ஆளுமைகள்
  • திரைக்கதைகள்
  • உரையாடல்
  • கட்டுரைகள்
    • இந்தியத் திரைப்படங்கள்
    • உலகத் திரைப்படங்கள்
    • தமிழ்த் திரைப்படங்கள்
    • ஓடிடி திரை
  • தொடர்கள்
    • ட்ரெண்டு கொட்டாய்
    • திரை புத்தகம்
    • ஸ்டார்ட் கேமரா
    • I CALL THE SHOTS
    • குரு தத் 100
    • டேபிள் டாப்
  • தொடர்பு
  • Login
  • Sign Up
  • Cart

© 2026 Thetalkie - All rights reserved

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?