ராணி கார்த்திக்
ஆக்ஷன் திரைக்கதை எழுதுவது எப்படி?
தற்போது உள்ள சூழலில் யாரும் ஒரு படத்தின் முழு கதையையும் கேட்க தயாராக இல்லை. ரசிகர்கள் Single reels இல் முழு படத்தின் விமர்சனத்தையும் பார்க்கும் மனநிலைக்கு வந்துவிட்டனர். Oneline கேட்ட பிறகு, அடுத்து ஒருவர் கேட்பது இது என்ன ஜானர்?(Genre) என்பதுதான். அந்த வகையில் பாகுபலி, கே.ஜி,எஃப் உள்ளிட்ட பேன் இந்தியா சினிமாக்கள் ஏற்படுத்திய தாக்கத்தினால், இந்திய அளவில் ஆக்சன் படங்களுக்கான வரவேற்பு முன்னெப்போதும் இருந்ததை விட சற்றுத் தீவிரமாகவே இருக்கிறது.
எத்தனையோ கலை படைப்புகளை கொடுத்த கமல்ஹாசன் கூட விக்ரம் படத்தின் வெற்றியை ஒரு குழந்தையைப் போல் கொண்டாடியதை நாம் கவனித்திருப்போம். அண்மையில் பிரதீப் ரங்கநாதனின் வெற்றி பல இளம் நடிகர்களை ஆக்சன் கதையை நோக்கி திருப்பி இருப்பதையும் கவனிக்க முடிகிறது. மேலும், தயாரிப்பாளர்களுக்கு மினிமம் கேரன்டி கொடுக்கக்கூடிய படங்களாக தொடக்கம் முதல் இன்று வரை இருக்கும் ஜானர்களில் ஒன்று ஆக்சன்.
ஆக்சன் மற்றும் த்ரில்லர் வகை கதைகள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வரும் இந்த சூழலில், திரைக்கதை எழுத்தாளர்களுக்கும், புதிய இயக்குனர்களுக்கும் வழிகாட்டியாக ஆக்சன் திரைக்கதையில் தவிர்க்க முடியாத மிகவும் அடிப்படையான ஒரு கட்டமைப்பை, மிக எளிமையாக விளக்கும் வகையில் “ஆக்சன் திரைக்கதை எழுதுவது எப்படி?” என்ற இந்தப் புத்தகம் உருவாகியுள்ளது.
எழுத்தாளர் அரவிந்த் சச்சிதானந்தம் முன்னுரையில் குறிப்பிடுவதைப் போல William C Martell எழுதிய The Secrets of Action Screenwriting நூலுடன், தனது அனுபவங்களையும் ஆய்வுகளையும் அடிப்படையாகக் கொண்டு இதன் உள்ளடக்கத்தை வடிவமைத்துள்ளார்.
ஆக்சன் மற்றும் திரில்லர் வகை படங்களை குறித்து பேசும்போது, ஹிட்ச்காக் குறித்து பேசாமல் இருக்கவே முடியாது. அந்த வகையில் திரைக்கதை ஒரு ஆக்கத்திற்கு எவ்வளவு முக்கியம் என்பதை ஹிட்ச்காக் ஒரு நடிகருக்கு உணர்த்தும் சம்பவம் உண்டு.
அவரது திரைக்கதையைப் படித்துவிட்டு ஒரு நடிகர், “திரைக்கதையை படித்து விட்டேன் இதற்கு மேல் நான் என்ன செய்ய வேண்டும்?” என்று மிகவும் ஆர்வமாக கேட்பார்.
அதற்கு ஹிட்ச்காக், “it’s in the script” என பதிலளிப்பார்.
“இல்லை. ஸ்கிரிப்ட்டை நான் படித்து விட்டேன். இருந்தாலும், நான் அதற்காக வேறு ஏதாவது புதிதாக கொண்டு வர வேண்டும். இல்லையா?” என்று அந்த நடிகர் மீண்டும் கேட்பார்.
அதற்கும் “it’s in the script” என பதிலளிப்பார்.
அவரின் கூற்றுப்படி, அடிப்படையிலேயே ஒரு திரைக்கதையை எப்படி மிகவும் வலுவாக கட்டமைத்து, அதை மெருகேற்றுவது என்பதை தான் அரவிந்த் சச்சிதானந்தம் இந்த நூலில் எளிமையாகவும் சுருக்கமாகவும் கூறியிருக்கிறார். கேரக்டர் ஆர்க், சஸ்பென்ஸ் அண்ட் ட்விஸ்ட் என்று ஒரு பக்கா ஆக்சன் மெட்டீரியல் கதைகளுக்கு தேவைப்படும் அனைத்து மூலக்கூறுகளையும் உள்ளடக்கி, சொல்லப்போனால் ஒரு கேப்சூல் வடிவத்தில் கொடுத்திருக்கிறார்.
இந்த அடிப்படையை கொண்டு ஒரு புதிய இயக்குனர் மாறுபட்ட பல ஆக்சன் திரைக்கதைகளை உருவாக்க முடியும்.
திரைத்துறை நண்பர்களோடு உரையாடும்போது அதில் கமர்சியல் சினிமா சார்ந்து செயல்படக்கூடிய பலரை சந்திக்க நேரிடும். என் அளவில் ஒரு ஆர்ட் ஃபிலிம் எடுப்பதை போல, இன்னும் சொல்லப்போனால் அதைவிட சற்று கடினமான ஒன்றுதான் கமர்சியல்.
ஆனால் கமர்சியல் படம் எடுக்க விரும்பும் பல நண்பர்கள் சில ஃபார்முலாக்களில் சிக்கிக் கொண்டிருப்பதை 100 சதவிகிதம் அதைப் பின்பற்றி திரைக்கதை எழுதுவதை கவனித்திருக்கிறேன். அப்படியான பல கற்பிதங்களை இதில் உடைத்து இருக்கிறார்.
வெறும் சண்டை காட்சிகள் அல்லாமல், கதை – வேகம் – உணர்ச்சி – தர்க்கம் ஆகியவற்றை எப்படி ஒரு திரைகதையில் ஒருங்கிணைப்பது என்பதையும், புதிதாக திரைக்கதை எழுதுபவர்கள் செய்யும் பொதுவான தவறுகளையும் போகிற போக்கில் சுட்டிக்காட்டி ஒரு தெளிவான பார்வையை முன் வைக்கிறார்.
ஆக்சன், த்ரில்லர், கிரைம், சஸ்பென்ஸ் போன்ற வகைகளின் வித்தியாசங்களை விளக்கி, Plotting மற்றும் Structure என்ற கட்டமைப்பின் முக்கியத்தை உணர்த்தி, கதையை எங்கு வேகமாக நகர்த்த வேண்டும், எங்கு மெதுவாக்க வேண்டும் என்பதையும் கூறுகிறார்.
ஹீரோ, வில்லன் மட்டுமல்ல துணை கதாபாத்திரங்களுக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதை Character Arc அத்தியாயத்தில் விரிவாகவே பேசுகிறார்.
ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவான வலிமை திரைப்படம் கமர்சியல் ரீதியாக வெற்றிப்படமாக அமையாவிட்டாலும், அதில் வந்த பைக் சேஸ் காட்சி பரவலாக பேசப்பட்டது. ஆக்சன் காட்சிகளை வடிவமைப்பது, முன்பே திட்டமிடுவது குறித்தும் இந்த நூல் பேசுகிறது. அதே நேரம் ஆக்சன் காட்சிகள் வெறும் அலங்காரமாக இருக்கக் கூடாது என்பதையும் உணர்த்துகிறது.
காட்சி, இடம், வேகம், விளைவுகள் (Consequences) ஆகியவை எப்படி எழுதப்பட வேண்டும்? ஒரு தகவலை எப்போது மறைக்க வேண்டும். எப்போது வெளிப்படுத்த( Reveal ) வேண்டும். கிளைமாக்ஸை எப்படி கட்டமைக்க வேண்டும் என்பதையும் இந்த சிறிய நூல் விவரிக்கிறது.
ஆக்சன் திரைக்கதை எழுதும் ஒரு மனநிலையை உருவாக்கும் பயிற்சி நூலாக இருக்கும் அதே நேரத்தில், புதிய தலைமுறை எழுத்தாளர்களுக்கு இது ஒரு நம்பிக்கையான தொடக்கப் புள்ளியை உருவாக்கித் தரும்.
நூலாசிரியர் : அரவிந்த் சச்சிதானந்தம்
பதிப்பகம் – ஜீரோ டிகிரி
மதயானைக்கூட்டம் திரைக்கதை
“சாபக்கேடு” என்ற வார்த்தையை சொல்லி சொல்லி நமக்கு சலித்துப் போயிருந்தாலும், கனவுத் தொழிற்சாலையான தமிழ் சினிமாத்துறைக்கு, அது மிகவும் இயல்பான ஒன்று. கருப்பு வெள்ளை கால சந்திரபாபு தொடங்கி, தற்போது வரை தமிழ் சினிமா கொண்டாடாமல் விட்ட, இன்னும் சொல்லப்போனால் கவனமாக கொண்டாடாமல் தவிர்த்த ஆளுமைகள், திரைப்படங்கள் ஏராளம். அப்படியான சாபக்கேட்டால் தவிர்க்கப்பட்ட, கவனிக்காமல் கூட கடந்து செல்லப்பட்ட ஒரு பாடப்படாத நாயகன் ( unsung hero ) தான் விக்ரம் சுகுமாரன்.
சினிமா கனவுகளுடன் சென்னையில் அலைந்த காலத்தில் எங்களுக்கு நாயகனாகத் தெரிந்த வெகு சில இயக்குனர்களில் ஒருவர்தான் விக்ரம் சுகுமாரன். தமிழ் சினிமாவில் மீண்டும் நிகழ்த்தவே முடியாத ஒரு அற்புதம் தான் அவரது முதல் சினிமாவான மதயானைக் கூட்டம். ஒரு படைப்பாளியை விட, ஒரு படைப்பை நேசிப்பவனுக்கு, அந்தப் படைப்பை தவறாக புரிந்து கொள்ளப்படுவதன் வலி தெரியும்.
அப்படி நாங்கள், “இதை எப்படி சாதிய சினிமாவாக பார்க்கிறார்கள்?” என்று ஆச்சரியப்பட்டு, பலருடன் விவாதித்து, சண்டையும் போட்டிருக்கிறோம். படைப்பு, படைப்பாளி, அதை ரசிப்பவர் என இந்த மூன்று வித மனநிலையும் ஒரு நேர்கோட்டில் அமைவது மிகவும் அரிதான ஒன்று.
இப்போதும் மதயானைக் கூட்டம் என கூகுளில் தேடினால் அந்த திரைப்படம் வெளியான காலத்தில் அதற்கு கொடுக்கப்பட்ட மதிப்பீடுகள், விமர்சனங்களைப் பார்க்கையில் பெரும் அதிர்ச்சி எல்லாம் ஏற்படவில்லை. சினிமா ரசனை (Film appreciation ) என்ற வகையில் இந்த சமூகம் எவ்வளவு பின்தங்கி உள்ளது என்பதையே காட்டுகிறது. அதே நேரத்தில் இந்தப் படம் வெளியான போது படத்தை சரியான முறையில் உள்வாங்கி இதுகுறித்து பேசி வந்த தமிழ் ஸ்டுடியோ அருண், நிழல் திருநாவுக்கரசு ( என் நினைவிலிருந்து ) போன்றவர்கள் மிகவும் முக்கியமானவர்கள்.
நிழல் நடத்திய பயிற்சி பட்டறைக்கு விக்ரம் சுகுமாரன் வருகை தந்திருக்கிறார். அங்கு அவர் பகிர்ந்து கொண்ட விடயங்களே இந்த நூலின் தொடக்கப் புள்ளி.
ஒருமுறை மறைந்த இயக்குனர் எஸ் பி ஜனநாதனை திரைத்துறை சார்ந்த ஒருவர் பார்க்கச் சென்று இருக்கிறார். அப்போது அவரது உதவி இயக்குனர்கள் மற்றும் மாணவர்கள் என ஒரு 50 பேர் சேர்ந்து மதயானை கூட்டம் திரைப்படத்தை பார்த்துக் கொண்டிருக்கின்றனர். நண்பரும் பின் வரிசையில் அமர்ந்து படத்தை பார்க்கிறார்.
திரைப்படம் முடிந்து அந்த திரைத்துறை நண்பரை பார்க்கையில் எஸ் பி ஜனநாதன், “இப்படி ஒரு படம் எடுத்திருக்கிறான். இது பற்றி இவ்வளவு நாள் தெரியாமல் போய்விட்டதே” என மிகவும் வருத்தப்பட்டு இருக்கிறார். இதுபோன்று ஏராளமான சம்பவங்கள் நினைவில் எழுகின்றன.
“வன்முறை என்பது ஒரு மனிதனின் இயல்பு அல்ல. அது ஒரு சமூகத்தின் பழக்கம்” என ஒரு மேற்கோள் உண்டு. அந்த வகையில் முக்குலத்தோர் சமூகத்தின் ஒரு கூறாக இருக்கும் வன்முறையின் தோற்றுவாயை, அடுத்த தலைமுறைக்கு கடத்தப்படும் விதத்தை மிக நுணுக்கமாக தோலுரித்த ஒரே படம் மதயானைக் கூட்டம்.
ஆங்கிலேயர் காலத்தில் தடை செய்யப்பட்ட, வளரியை கிளைமாக்சில் பயன்படுத்தியது, கவுரருப்பு (சுன்னத்) என்ற ஆண் சடங்கு இஸ்லாமியர்களுக்கு மட்டுமானது அல்ல என்பதை ஒரே ஒரு Frame இல் உணர்த்தியது, ஒரு மரண வீட்டின் ஒப்பாரி பாடலில் இருந்து கதாபாத்திரங்களின் அறிமுகத்தை உருவாக்கியது, பெண்களுக்கும் சாதிப் பெருமைக்கும் உண்டான தொடர்பை நுணுக்கமாக வெளிப்படுத்தியது என இந்தத் திரைப்படம் உருவாக்கிய வெளி விரிந்து கொண்டே செல்லக்கூடியது.
“புள்ள குட்டிங்கள படிக்க வைங்கடா” என்ற விமர்சனத்துடன் முடியும் தேவர் மகன் படம் விவாதிக்கப்பட்ட அளவிற்கு, தமிழ்ச் சூழலில் மதயானைக் கூட்டம் விவாதிக்கப்படாமல் போனது ஒரு கெடு வாய்ப்பு தான். ஒரு Mainstream சினிமா என்ற வகையில் தேவர் மகனில் வரும் சாதிப் பெருமை பாட்டு சாதிய ஒடுக்கு முறையின் நவீன வடிவமாக மாறியதும், மதயானை கூட்டம் படத்தில் கவிஞர் ஏகாதசி எழுதிய பாடல்கள் தற்போது வரை தேனி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் திருமணம் மற்றும் துக்க வீடுகளில் ஒலிக்கப்படுவதும் நாம் ஒப்பு நோக்க வேண்டிய ஒன்று.
ஒருவேளை இயக்குனர் நினைத்தபடி தனுஷ் இந்த படத்தில் நடித்திருந்தால் இன்னும் இந்த படம் பேசப்பட்டிருக்குமோ, அல்லது வெற்றிமாறன் ஃபார்முலா படி தன்னை தக்க வைப்பதற்காக ஒரு கமர்சியல் படத்தை செய்துவிட்டு இரண்டாவது படமாக இதை செய்திருந்தால் இந்தப் படம் கவனிக்கப்பட்டு இருக்குமோ என்று விடை தெரியாத பல கேள்விகள் எங்களிடம் இருந்ததுண்டு.
திரைப்படம் வெளியாகி 12 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த கலைஞனுக்கு செய்யப்பட்ட மீச்சிறு அஞ்சலி தான் இந்த புத்தகம். அந்த வகையில் இந்த புத்தகத்தின் ஆசிரியரும் படத்தொகுப்பாளருமான ஜீவா பொன்னுசாமியின் உழைப்பு அபாரமானது. அவரது ஆறு மாத உழைப்பு இந்த புத்தகத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் திறம்பட வெளிப்படுகிறது. வழக்கமான திரைக்கதை புத்தகங்களை போல் ( Script to Screen ) இல்லாமல் அதற்கு நேர் மாறாக ( Screen to Script ) என்ற வகையில் உருவாக்கப்பட்டதுதான் இந்த புத்தகத்தை தனித்து அடையாளம் காண வைக்கிறது. இது தவிர்த்து சினிமாவுக்குள் பயன்படுத்தப்பட்ட புழங்கு பொருட்கள், சேர்க்கப்பட்ட ஒலிக் கலவைகள், என பல முக்கியமான கட்டுரைகள் இந்த புத்தகத்தில் உண்டு.
அதேநேரம் திரைப்படத்தின் பல்வேறு மட்டத்தில் பணியாற்றியவர்களின் அனுபவ குறிப்புகளும், திரைப்படம் வெளியான போது பெற்ற விமர்சனங்களும் இதில் உண்டு. இந்த சினிமாவில் white flash cut-கள் அதிகம் பயன்படுத்தப்பட்டது, கலையரசன் கதாபாத்திரத்திற்கு இயக்குனர் விக்ரம் சுகுமாரனை டப்பிங் பேசியது என ஏகப்பட்ட புதிய தகவல்களும் உண்டு.
இந்த நூல் குறித்து தமிழின் மிகச் சிறந்த விமர்சகர்களில் ஒருவரான சொர்ணவேல் ஈஸ்வரன் தனது முன்னுரையில் குறிப்பிட்டிருக்கும்படி, “சில நேரங்களில் புனைவு திரைப்படம் ( Feature film ) என்பது ஆவணப்படத்தை விட ஆழமான மானுடவியல் கருவியாக மாறிவிடுகிறது. ஒரு ஆவணப்படம் பெரும்பாலும் ஒரு பண்பாட்டின் வெளிப்புறச் சடங்குகளையும், நிகழ்வுகளையும் காத்திரமாக பதிவு செய்ய முடியும்.
ஆனால், ஒரு புனைவுக் கதையால் அந்த பண்பாட்டின் உளவியலுக்குள் (psyche) ஆழமாகச் செல்ல முடியும். அந்த கலாச்சாரக் குறியீடுகளின்( Cultural values) உளவியல் தாக்கத்தையும், தனி மனிதர்கள் மீதான அதன் பிடியையும் ஒரு புனைவு கதாபாத்திரத்தின் வழியாக ஆராய்வது எளிது. மதயானை கூட்டம் இந்த அரிய வகை மானிடவியல் புனைவு திரைப்படங்களின் மரபில் மிக முக்கிய இடத்தை பிடிக்கிறது”
“இந்த ஆணாதிக்க வன்முறை அமைப்பில் பெண்கள் வெறுமனே பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமல்ல. அந்த அதிகார அமைப்பை தேடுபவர்களாகவும் அதன் சிக்கலான முகவர்களாகவும் பெண்கள் செயல்படுகிறார்கள். அந்த வன்முறை சங்கிலியின் அடுத்த கண்ணியாகவும் மாறுகிறார்கள்”
“விக்ரம் சுகுமாரன் ஒரு படைப்பாளியாக இந்த கேள்விகளை மட்டும் நம் முன் வைத்து விட்டு பதிலை நாம் தேடுதலுக்கு விட்டு விடுகிறார் இந்த திரைக்கதை அதன் சமரசமற்ற தன்மைக்காகவும் ஆழமான பண்பாட்டு பதிவிற்காகவும் தமிழ்/இந்திய சினிமா வரலாற்றில் ஒரு முக்கியமான மறக்க முடியாத ஆவணமாக என்றும் நிலைத்திருக்கும்” எனும் சொர்ணவேலின் வரிகள் இந்த திரைப்படத்தை சரியாக அடையாளம் காண வைக்கிறது.
“அவள் அப்படித்தான்” என்ற ஒரே ஒரு படத்திற்காக எப்படி ருத்ரையா தற்போது வரை நினைவு கூறப்படுகிறாரோ, அதேபோல் மதயானை கூட்டம் படத்திற்காக தமிழ் சினிமா உள்ளவரை விக்ரம் சுகுமாரன் நினைவு கூறப்படுவார் என்பதில் துளியும் சந்தேகமில்லை. இந்த புத்தகம் ஒன்று மதயானைக் கூட்டம் படத்தை பார்க்க வைக்கும். அதை இன்னும் நுட்பமாக புரிந்து கொள்ள வைக்கும். மேலும் படம் பார்த்தவர்களை மீண்டும் ஒருமுறை, “என்ன மாதிரியான கலைஞன் இவன்?” என்று சொல்ல வைத்து விக்ரம் சுகுமாரன் என்ற போதத்தில் திளைக்க வைத்துக் கொண்டே இருக்கும். இந்த படத்தை ரீ ரிலீஸ் செய்வது என்பதே விக்ரம் சுகுமாரனுக்கு செய்யும் மிகச்சிறந்த அஞ்சலியாக இருக்கும். ஆனால் அது சாத்தியமா? என்பது மற்றொரு சாபக்கேடு.
நூலாசிரியர் : ஜீவா பொன்னுசாமி
பதிப்பகம் : நிழல்










