The Talkie
Saturday, April 11, 2026
  • Login
  • Register
  • thetalkie
  • ஆளுமைகள்
  • திரைக்கதைகள்
  • உரையாடல்
  • கட்டுரைகள்
    • இந்தியத் திரைப்படங்கள்
    • உலகத் திரைப்படங்கள்
    • தமிழ்த் திரைப்படங்கள்
    • ஓடிடி திரை
  • தொடர்கள்
    • ட்ரெண்டு கொட்டாய்
    • திரை புத்தகம்
    • ஸ்டார்ட் கேமரா
    • I CALL THE SHOTS
    • குரு தத் 100
    • டேபிள் டாப்
  • தொடர்பு
No Result
View All Result
The Talkie
  • thetalkie
  • ஆளுமைகள்
  • திரைக்கதைகள்
  • உரையாடல்
  • கட்டுரைகள்
    • இந்தியத் திரைப்படங்கள்
    • உலகத் திரைப்படங்கள்
    • தமிழ்த் திரைப்படங்கள்
    • ஓடிடி திரை
  • தொடர்கள்
    • ட்ரெண்டு கொட்டாய்
    • திரை புத்தகம்
    • ஸ்டார்ட் கேமரா
    • I CALL THE SHOTS
    • குரு தத் 100
    • டேபிள் டாப்
  • தொடர்பு
No Result
View All Result
The Talkie
Subscribe
Home ஆளுமைகள்

குறுகலற்ற பாதை – சாரா பாலியின் திரையுலகம்

The Talkie by The Talkie
January 24, 2026
in ஆளுமைகள்
A A
0
sara polley
Share on WhatsappShare on FacebookShare on Twitter

Author Icon ஜா.தீபா

உயிரோட்டமான காட்சிகள், தேர்ந்த திருப்பங்கள் போன்றவை திரைக்கதை எழுதுவதற்கான அம்சங்கள்  என்றால், இயக்குநர் சாரா பாலியின் வாழ்க்கை இதற்குள் கச்சிதமாகப் பொருந்தும். இதைப் பலரும் சாராவிடம் சொல்லியிருக்கின்றனர்.

தனது வாழ்க்கையை திரைப்படமாக எடுக்கும் ஆர்வம் இல்லாவிட்டாலும் அதன் ஒரு பகுதியை ஆவணப்படமாக எடுத்திருக்கிறார். அந்த ஆவணப்படத்தின் மையம், சாராவின் அம்மாவைச் சுற்றியே சுழல்கிறது.

சாரா பாலி கனடாவிலும், ஹாலிவுட்டிலும் பிரபலமான நடிகை. சிறந்த நடிப்புக்கான விருதுகளை பலமுறை பெற்றிருக்கிறார். புகழ்பெற்ற இயக்குநர்கள் பலரும் தங்கள் படங்களில் சாராவின் பங்களிப்பு இருக்கவேண்டும் என்று நினைக்கின்றனர்.

ஆனால் சாரா, தன்னை ஒரு நடிகையாக மட்டும் நினைத்துவிடவில்லை. எப்போதுமே தனக்குள் விழித்துக்கொண்டிருக்கும் ஒரு படைப்பாளியை வெளிக்கொண்டு வரவேண்டும் என்பதுதான் சிறு வயதிலிருந்தே சாராவின் விருப்பமாக இருந்தது.

ஒரு எழுத்தாளராகத் தன்னை நிரூபிக்கவேண்டும் என்று சாரா நினைத்தபோதெல்லாம் அதற்கானச் சூழல் அவருக்கு அமையவில்லை. ஏனென்றால், சாரா நடிக்கத் தொடங்கும்போது அவருக்கு வயது நான்கு.

சாராவின் அம்மா டயான் ஒரு நடிகை. அப்பா மிக்கேல் பாலியும், அண்ணனும் திரைப்படத்துக்கான நடிகை, நடிகர்களைத் தேர்வுசெய்யும் ‘காஸ்டிங்’ இயக்குநர்களாக இருந்தனர். அதனால் திரைப்படத்துறை என்பது சாராவுக்கு ஒரு விளையாட்டு உலகத்துக்குள் நுழைந்த ஒரு உணர்வையே தந்தது.

கனடாவில் எங்கு போனாலும் சிறுமி சாராவை மக்கள் அடையாளம் கண்டுகொண்டனர். அந்த வயதில் சாரா நடித்து சம்பாதித்த தொகை ஒரு குடும்பம் செழிக்கப் போதுமானதாயிருந்தது. பதினோரு வயதுவரை சாராவுக்கு எல்லாமே இயல்பாகப் போய்க்கொண்டிருந்தது. சாராவுக்கு பதினோராவது பிறந்த நாள் கழிந்து இரண்டு நாட்கள் ஆனபோது, அவருடைய அம்மா மரணமடைந்தார்.

மிக நீண்டநாட்கள் புற்றுநோயினால் படுக்கையிலேயே நாட்களைச் செலவழித்திருந்த அம்மாவின் இழப்பு என்பது சாராவுக்குள் கலவையான உணர்வுகளை ஏற்படுத்தியது. அம்மாவின் மரணம் ஒருவகையில், விடுதலையுணர்வைத் தந்ததாக நினைவுகூர்கிறார் சாரா. ஏனெனில், நோயின் தாக்கத்தால் அம்மா படும் வேதனைகளை எதிர்கொள்ளும் தைரியம் சாராவுக்கு இல்லாமல் இருந்தது.

இதோடு, சாராவின் உடல்நிலையும் அப்போது சீராக இல்லை. பல நாட்கள் படுக்கையிலேயே கழிக்கவேண்டிய சூழல் ஏற்பட்டது. அதிலிருந்து மீண்டுவந்தவர், ‘நடிப்பு என்பது கடந்து நாம் படைப்புரீதியாக சிந்திக்கவும் செய்ய வேண்டும்’ என்று யோசிக்கத் தொடங்கினார். எழுதவேண்டும் என்ற உந்துதல் ஏற்பட்டது. ஆனால் அது, அவருக்கு சுலபமாக அமையவில்லை. மிகுந்த மனநெருக்கடி ஏற்பட்டதால் தன் கவனத்தை திசைதிருப்ப அப்பாவின் உதவியோடு மீண்டும் நடிக்கத் தொடங்கினார்.

இந்தச் சம்பவங்களுக்குப் பிறகு, பல வருடங்கள் கழித்து சாராவுக்கு மற்றொரு திகைப்பான செய்தி கிடைத்தது. அதுவரை தன்னுடைய அப்பாவாக நினைத்திருந்த மிக்கேல், தனது வளர்ப்புத்தந்தை என்று தெரியவந்தது. அம்மாவுக்கு ஏற்கனவே திருமணமாகியிருந்தது குறித்து தெரியவரும்போது தன அம்மாவைப்பற்றி மேலும் அறிந்துகொள்ள வேண்டும் என்று விரும்பினார்.

நடிப்புக்கும், படம் இயக்குதலுக்கும் ஐந்து வருட காலங்கள் இடைவெளி தந்தார். பல படங்களில் ஒரே நேரத்தில் நடித்துக்கொண்டிருந்த சாரா, யாரிடமும் சொல்லாமல் பொது வாழ்க்கையிலிருந்து தன்னை மறைத்துக் கொண்டார். ஐந்து வருடத்துக்குப்பிறகு அவர் Stories We Tell (2012) என்ற ஆவணப்படத்தோடு மீண்டு வந்தார். இருபது வருடங்களுக்குமுன்பு வாழ்ந்திருந்த தன் அம்மாவைப்பற்றி தெரிந்துகொள்வதற்காக அவருடன் பழகிய அத்தனைபேரையும் அந்த ஆவணப்படத்தில் பேட்டி கண்டிருந்தார்.

அம்மாவைப்பற்றி அவர் நினைத்திருந்ததும், இந்தப் படத்தின்மூலமாக சாராவின் அம்மா அவருக்குக் காட்டிய தரிசனமும் வெவ்வேறாக இருந்தது. தன்னை ஒருபோதும் அம்மா ஒதுக்கவில்லை, எப்போதும் பிரியமாகவே இருந்திருக்கிறார் என்பது சாரா அதில் கண்டுகொண்ட உண்மை. ஒரு குடும்பத்தின் கதை என்பதாக இல்லாமல் திருமணம், உறவுகள், விவாகரத்து, மறுமணம், குழந்தை வளர்ப்பு போன்றவற்றைப்பற்றியும் பேசிய படமாக இருந்ததால் திரைப்பட விழாக்களில் பங்குகொண்டு விருதுகளையும் பெற்றது. அதோடு, ஒரு படைப்பாளியாக சாராவுக்கு நற்பெயரையும் இந்த ஆவணப்படம் பெற்றுத் தந்திருக்கிறது.

இந்த ஆவணப்படம் தவிர, சாரா இதுவரை இயக்கியது இரண்டே திரைப்படங்களும், சில தொலைக்காட்சித் தொடர்களும்தான். இரண்டு திரைப்படங்களுமே அவர் மேலுள்ள மதிப்பை உயர்த்தியிருக்கிறது. ‘ஒரு நடிகை என்ன இயக்கிவிடப்போகிறார்?’ என்று அவர்முன்பாகவே பலர் விமர்சனம் செய்திருக்கின்றனர். விமர்சனங்களுக்கு பதில்சொல்லி தன்னை இழந்துவிடாததன்மை எப்போதுமே சாராவுக்கு இருந்தது. அதனால் மௌனம் காத்தவர் Away From Her (2006) படத்தோடு அனைவரையும் எதிர்கொண்டார்.

‘சிறுகதைகளின் மகாராணி’ என்று அறியப்படுகிற கனடா நாட்டு எழுத்தாளரான அலிஸ் மன்றோவின் The Bear came over the Mountain கதை சாராவை பாதித்தது. கணக்கில் வைக்கமுடியாதளவுக்கு அதை மீண்டும் மீண்டுமாக வாசித்தார். அப்போதும்கூட அதைத் திரைப்படமாக்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு ஏற்பட்டுவிடவில்லை. ஆனால் அந்தக் கதையில் தன்னை எது அப்படி ஈர்க்கிறது என்பதைத் தொடர்ச்சியாக யோசிக்கும்போதுதான் ஒரு கதை, திரைக்கதையாக அவரை அறியாமலேயே உருமாறத் தொடங்கியது.

மற்றொரு காரணம், ஜூலியா கிறிஸ்டி என்ற நடிகையின் முகம். இந்தக் கதையைப் படிக்கும்போதெல்லாம் ஃபியானோ என்ற கதாபாத்திரத்தில் ஜூலியா கிறிஸ்டியை நினைத்துக்கொண்டே படித்தார். இந்தக் கதையை படமாக்கினால் எப்படி இருக்கும் என்று யோசித்ததன்விளைவாக அவருக்குள் அந்தக் கதை பல பரிமாணங்களை காட்டத் தொடங்கியது.

உடனே அலிஸ் மன்றோவிடம் அதற்கான முறையான அனுமதியைப் பெற்றார். ‘திரைப்படமாக்குமளவுக்கு இந்தக் கதையில் என்ன இருக்கிறது. அலிஸ் எழுதிய எளிமையான கதைகளில் இதுவும் ஒன்று’ என்றுதான் பலரும் நினைத்தனர். அந்த ‘எளிமை’ என்பதுதான் சாராவை ஈர்த்திருந்தது. Away From Her என்கிற திரைப்படமாக மாற்றம் பெற்றது.

நாற்பது ஆண்டுகால திருமண வாழ்க்கையை திருப்தியோடு கழித்த கிரான்ட், ஃபியானோ  தம்பதிதான் படத்தின் முக்கியக் கதாபாத்திரங்கள். கனடாவில் பனிசூழ்ந்த சமவெளியின் நடுவே ஒரு அழகான பண்ணை வீட்டில் இருவரும் வசிக்கிறார்கள். வெளிப்பார்வைக்கு மிகச் சாதாரணமாகவே நடந்துகொள்ளும் ஃபியானோவுக்குள் சின்னச் சின்ன மாறுதல்கள் ஏற்படுவதை கிரான்ட் வருத்தத்துடன் கவனிக்கிறார்.

பாத்திரங்களைக் கழுவி குளிர்சாதனப் பெட்டிக்குள் வைக்கிறாள். பேசிக்கொண்டிருக்கும்போதே என்ன பேசுகிறோம் என்பதை மறந்து திணறுகிறாள்.

கிரான்ட்டுக்கு நிலைமையின் தீவிரம் புரிகிறது. ஃபியானோவுக்கு வந்திருப்பது வயதான காலத்தில் தாக்குகிற ஞாபகமறதி நோயான அல்ஜிமர் என்பது தெரியவருகிறது.இந்த நோய் தாக்குபவர்களைப் பாதுகாக்கும் ‘மெடோஹவுஸ்’ என்கிற வயதானவர் விடுதியில் ஃபியானோ சேர்க்கப்படுகிறாள். அந்த விடுதியின் ஒரு விதிமுறை, நோயாளியைச் சேர்த்ததும் ஒரு மாத காலத்துக்கு அவருடைய உறவினர்கள், நண்பர்கள் யாரும் வரக்கூடாது என்பது.

திருமணமான காலத்திலிருந்து இருவரும் இத்தனை நாட்கள் பிரிந்திருந்ததில்லை என்றெல்லாம் கிரான்ட் வாதாடுகிறார். விடுதியின் மேற்பார்வையாளர் விதிமுறைகளைத் தளர்த்தமுடியாது என்கிறார்.

வேறுவழியில்லாமல் ஃபியானோவை அங்கே விட்டுச் செல்கிறார். ஒருமாத காலமும் கிரான்ட்டுக்கு தனிமை என்பது வேதனை தருவதாக இருக்கிறது. ஃபியானோவைப் பார்க்கப்போகும் நாள் வருகிறது. மனைவிக்குப் பிடித்தமான பூக்களை வாங்கிக்கொண்டு விடுதிக்கு விரைகிறார். ஃபியானோவைப் பார்த்ததும் கிரான்ட் உணர்ச்சிவசப்படுகிறார். ஃபியானோ அருகில் போய் நிற்கிறார்.

அவரைப் பார்த்ததும் ஃபியானோ புன்னகைக்கிறாள். கிரான்ட்டிடம் ஏதேதோ பேசுகிறாள். ஆனால் கிரான்ட்டை ஒரு விருந்தினராக மட்டுமே நினைத்துப் பேசிக்கொண்டிருக்கிறாள். இது கிரான்ட்டுக்குள் மன நடுக்கத்தை ஏற்படுத்துகிறது. இதற்கடுத்த அதிர்ச்சியாக, அங்கே சக நோயாளியாக அனுமதிக்கப்பட்டிருக்கும் ஆப்ரே என்பவரைக் காட்டி தன்னுடைய பால்யகால சிநேகிதன் என்கிறாள்.

இதோடு ஆப்ரேயும், ஃபியானோவும் மன நெருக்கம்கொண்ட தம்பதியினர் போல நடந்துகொள்கிறார்கள். ஆப்ரேயிடம் ஃபியானோ காட்டும் இந்த நேசத்தை சகித்துக்கொள்ள முடியாமல் போராடுகிறார் கிரான்ட். ஒவ்வொருநாளும் ‘நான்தான் உன்னுடைய கணவன்’ என்பதை ஃபியானோவுக்கு நினைவுபடுத்தவருகிறார் கிரான்ட். ஆனால் ஃபியானோ அதற்கு இடம்கொடுக்காமல் ஆப்ரேயை கவனிப்பதிலேயே நேரம் செலவிடுகிறாள். ஒருநாள் ஃபியானோவிடம் ‘நான் உன்னுடைய கணவன்’ எனச் சொல்லியும் விடுகிறார்.

ஃபியானோவோ குழம்பியவளாக, ‘நாளை நீங்கள் என்னைப் பார்க்க வரவேண்டாம்’ என்று கண்ணீரோடு கிரான்ட்டிடம் சொல்லிவிட்டு ஆப்ரேவை நோக்கிச் செல்கிறாள். உடைந்து போகிறார் கிரான்ட். ஆனாலும் ஃபியானோ மீண்டும் தன்னை நினைவுகொள்வாள் என்ற நம்பிக்கையில் தினமும் விடுதிக்கு வந்து ஒரு ஓரமாக அவளைப் பார்த்தபடியே அமர்ந்திருக்கிறார் கிரான்ட்.

ஆப்ரேவை விடுதியில் இருந்து  அவரது மனைவி வீட்டுக்கு அழைத்துச் சென்றுவிடுகிறாள். இதனால் எப்போதும் துயரத்துடனேயே ஃபியானோ இருக்கிறாள். மீண்டும் ஆப்ரேவை ஃபியானோவிடத்தில் அழைத்துவருவதற்கான முயற்சியில் இறங்குகிறார் கிரான்ட். அவர் மனைவியிடத்தில் போய்ப் பேசுகிறார். இறுதியில், ஒருவழியாக அவர் மனைவியின் சம்மதம் பெற்று ஆப்ரேவை மருத்துவ விடுதிக்கு அழைத்து வந்துவிடுகிறார்.

ஆப்ரேவை ஃபியானோ தங்கியிருக்கும் அறையின் வாசலில் இருத்திவிட்டு ‘உனக்கொரு ஆச்சரியத்தைத் தரப்போகிறேன்’ என்று ஃபியானோவிடம் சொல்கிறார் கிரான்ட். ஆனால் இப்போது ஃபியானோவுக்கு கிரான்ட்டை அடையாளம் தெரியத் தொடங்குகிறது. அதை, அவள் வெளிப்படுத்தியதும் அந்த நொடிக்காகவே காத்திருந்த கிரான்ட்டுக்கு அது நெகிழ்வைத் தருவதாகவும் படம் முடிகிறது.

ஒரு இலக்கியப் படைப்பு திரைப்படமாக உருமாறும்போது ஏற்படும் சவால்களை சாரா நன்கு உணர்ந்திருந்தார். இதற்கு அவரின் வாசிப்புப் பழக்கமும்கூட காரணமாக இருந்திருக்கிறது. அலிஸ் மன்றோவின் கதைக்கு சாரா திரைக்கதை வடிவத்தை நேர்த்தியாகத் தந்திருக்கிறார்.

அதற்காகவே இந்தப் படத்துக்கான திரைக்கதை ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டது. சிறுகதையின் சில வசனங்கள் காட்சிகளாகவும், காட்சிகள் வசனங்களாகவும் தேவைக்கேற்ப கச்சிதமாக மாற்றம் பெற்றிருக்கின்றன.

அல்ஜிமர் நோயின் கூறுகளை அலிஸ் சில பக்கங்களை செலவழித்து விளக்கியிருக்கிறார். இரண்டே காட்சிகளில் ஃபியானோவின் நோய்த் தீவிரத்தை சாரா உணர்த்திச் சென்று விடுகிறார். கிரான்ட் மற்றும் ஃபியானோவின் இளமைக்கால சம்பவங்களில் இருந்து அலிஸ் சிறுகதையைத் தொடங்குகிறார்.

திரைப்படமோ ஃபியானோவின் மறதியினால் கிரான்ட் எதிர்கொள்ளும் உளைச்சலையும், ஏக்கங்களையும், அவரின் பேரன்பையுமே மையமிடுகிறது. சிறுகதையாக எழுதும்போது உள்ள சுதந்திரம் அதைத் திரைக்கதையாக்கும்போது மட்டுப்படும் வாய்ப்பு உண்டு. கிரான்ட்டின் பார்வையிலேயே ஃபியனோவை நாம் பார்ப்பதாக அமைத்திருக்கும் திரைக்கதைவழியாக அந்தக் கட்டுப்பாட்டை அழகாகத் தாண்டிவிடுகிறார் சாரா.

சாராவின் அடுத்தபடமான Take this Waltz (2011) படமும் திருமண உறவைப்பற்றி பேசுவதாகவே இருந்தது. மார்கோ என்ற பெண், தனது திருமண வாழ்வை உப்புச்சப்பற்றது என்றே நினைக்கிறாள். அவளுக்கு டானியல் என்பவருடன் பழக்கம் ஏற்படுகிறது.

அந்தப் பழக்கம் டானியலை மறுமணம் செய்துகொள்ளச் செய்கிறது. ‘வாழ்க்கை இடைவெளிகள் நிறைந்தது. அதை வேறொரு உறவுமூலம் இட்டுநிரப்ப முடியாது’ என்ற இந்தப் படத்தின் வசனம்தான் படம் சொல்லும் செய்தி.

சாராவுக்கு திருமணம் ஆகி விவாகரத்தும் முடிந்திருக்கிறது. இரண்டு பெண் குழந்தைகளோடு வாழ்கிறார். இயல்பிலேயே போராட்டகுணம் கொண்ட சாரா, அதை சமூக வாழ்க்கையிலும் காட்டுகிறார். அரசியலில் ஈடுபட்டிருக்கும் சாரா பலமுறை சமூகம் சார்ந்த போராட்டங்களில் பங்கு கொண்டுள்ளார். தனது கருத்துகளை தைரியமாக எடுத்துரைக்கும் அவரது குணம் பல எதிரிகளை அவ்வப்போது அவருக்குக் கொடுத்திருக்கிறது.

ஆனாலும் சாரா அசருவதில்லை. ஒரு போராட்டத்தின்போது போலீசாரால் தாக்கப்பட்டு, தன்னுடைய இரண்டு பற்களையும் இழந்திருக்கிறார். ஒரு நடிகையாக, முகம் என்பது அவருக்கு முக்கியமானது. ஆனாலும்கூட தனது கொள்கைகளுக்காக அதைப்பற்றி கவலைப்படாமல் வீதிகளில் இறங்கிப் போராடிவருகிறார்.

மார்கரெட் அட்வுடின் Alias Grace என்கிற நாவல் இவரது திரைக்கதையில் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் தொடராக வெளிவந்துள்ளது. 

சாரா பாலியின் திரைக்கதைக்கும் இயக்கத்திற்கும் அற்புதமான வெளிப்பாடாக Women Talking படம் வெளிவந்திருக்கிறது. சிறந்த திரைப்படம் மற்றும் சிறந்த தழுவல் திரைக்கதைக்கான ஆஸ்கர் விருதுகளை இந்தப் படம் பெற்றிருக்கிறது. நம்மால் நம்ப முடியாத யதார்த்தம் கொண்ட கதை இது.

கனடிய எழுத்தளார் மிரியம் டேய்ஸ் எழுதிய நாவல் இது. வெளியுலகை சந்தித்திராத ஒரு காலனிப் பகுதியில் குடியிருக்கும் பெண்கள் தங்களுக்கு ஏற்படுகிற பாலியல் தொல்லையில் இருந்து விடுபடவேண்டும் என்று நினைக்கின்றனர். அதற்கு இருக்கும் ஒரே வழி அங்கிருந்து தப்பிப்பது தான் என்று பெண்களில் ஒரு தரப்பும், அங்கேயே வாழ்ந்தாகவேண்டும் என்கிற மறுதரப்பும் உரையாடுவது தான் நாவல்.

ஒவ்வொரு பெண்களின் உளவியல் சிக்கல்கள், கொந்தளிப்புகள் என உரையாடலின் மூலமாக மட்டுமே கதை சென்று கொண்டிருக்கும். இதனை முன்வைத்து திரைக்கதை எழுதுவது என்பது சவாலானது. அந்தச் சவாலை சாரா பாலி அற்புதமாகக் கையாண்டிருக்கிறார்.

முதலில் இது போன்ற கதை நடந்திருக்கிறது என்பதை நம்ப வைக்க வேண்டும். பிறகு படம் முழுவதும் ஒரே விஷயத்தைப்  பேசுவதனால் ஏற்படும் அலுப்புகளை சரி செய்ய வேண்டும். இதோடு கதைக்குத் தேவைப்படுகிற நம்பகத்தன்மையும் கொண்டு வர வேண்டும். இத்தனையையும் கையாண்டு திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார் சாரா பாலி. நிச்சயம், இந்தப் படம் உலகப் படங்களில் சிறந்ததொரு இடத்தைப் பெறுவதற்கான தகுதி கொண்டது.

தனக்குத் தோன்றும்போது அடுத்த படத்தை இயக்கப்போவதாக அறிவித்திருக்கிறார். எப்போது அவருக்குத் தோன்றினாலும் அவரால் நல்ல படைப்பையே தரவியலும். ஏனெனில், அவரே சொல்வதுபோல முடிவு குறுகலாக இல்லாத பரந்து விரிந்த உலகம் அவருடையது.

சாரா பாலி இயக்கியத் திரைப்படங்கள்

  1. Away from her (2006)
  2. Take this waltz (2011)
  3. Women Talking (2022)

(ஜீரோ டிகிரி வெளியிட்டுள்ள மாதர் திரையுலகு புத்தகத்தில் இடம்பெற்றுள்ள கட்டுரை)

Author Image

ஜா.தீபா

எழுத்தாளர். ‘மேதைகளின் குரல்கள்’ ‘கறுப்புத் திரை’ போன்ற திரைப்படம் சார்ந்த புத்தகங்களையும், “நீலம் பூக்கும் திருமடம்’, ‘மறைமுகம்’ சிறுகதைத் தொகுப்பும் கவனம் பெற்றவை. தொலைகாட்சித் தொடர்களுக்கு திரைக்கதைகள் எழுதி வருகிறார்.

About The Author

The Talkie

The Talkie

See author's posts

Next Post
table top-3

டேபிள் டாப் 03

Please login to join discussion

Archives

  • Trending
  • Comments
  • Latest
Thug_Life_

Thug Life – ஒரு பார்வை

June 6, 2025
AMADEUS திரைக்கதை

AMADEUS திரைக்கதை

March 15, 2025
start camera

ஸ்டார்ட் கேமரா! வின்சென்ட் மாஸ்டர் – 01

March 19, 2025
Irunda-Pakkam

தொழில்நுட்பத்தின் இருண்ட பக்கங்கள்: திரைப்படங்கள் சொல்லும் உண்மை.

March 16, 2025
Thug_Life_

Thug Life – ஒரு பார்வை

11
rasigamagajanangale

ரசிக மகா ஜனங்களே

7
gurudutt-02

குருதத்தின் ப்யாஸா- உயிர்த்தெழுந்த தேவதை        

5
start camera

ஸ்டார்ட் கேமரா! வின்சென்ட் மாஸ்டர் – 01

4
table top-4-5

டேபிள் டாப் 04 & 05

January 24, 2026
bella darr

பேலா டார் – காட்சியை அனுமதித்தவர்

January 24, 2026
trend-kottaiye-11

ட்ரெண்டு கொட்டாய் 11 -நான் (திரை) காவிய நாயகன்

January 24, 2026
table top-3

டேபிள் டாப் 03

January 24, 2026
The Talkie

சினிமா அற்புதமான ஊடகம். இதனை அறிந்து கொள்ளவும், ரசிக்கவும் உருவாக்கப்பட்டிருக்கிற இணைய இதழ் இது. மேதைகளின் நேர்காணல்கள், திரைக்கதைகள், வெவ்வேறு மொழித் திரைப்படங்கள், ஆளுமைகள், திரைப்படப் புத்தகங்கள் , சினிமா ரசனை என சினிமா உலகத்தோடு இணைந்திட எங்களுடன் இணைந்திடுங்கள்.

Categories

  • I CALL THE SHOTS
  • ஆளுமைகள்
  • இந்தியத் திரைப்படங்கள்
  • உரையாடல்
  • உலகத் திரைப்படங்கள்
  • ஓடிடி திரை
  • கட்டுரைகள்
  • குரு தத் 100
  • டேபிள் டாப்
  • ட்ரெண்டு கொட்டாய்
  • தமிழ்த் திரைப்படங்கள்
  • திரை புத்தகம்
  • திரைக்கதைகள்
  • தொடர்கள்
  • ஸ்டார்ட் கேமரா

Site Navigation

  • About Us
  • Terms and Conditions
  • Privacy Policy
  • Returns and Cancellation
  • Shipping Policy
  • FAQ
table top-4-5

டேபிள் டாப் 04 & 05

January 24, 2026
bella darr

பேலா டார் – காட்சியை அனுமதித்தவர்

January 24, 2026
trend-kottaiye-11

ட்ரெண்டு கொட்டாய் 11 -நான் (திரை) காவிய நாயகன்

January 24, 2026

© 2026 Thetalkie - All rights reserved

Welcome Back!

Sign In with Google
OR

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Sign Up with Google
OR

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • thetalkie
  • ஆளுமைகள்
  • திரைக்கதைகள்
  • உரையாடல்
  • கட்டுரைகள்
    • இந்தியத் திரைப்படங்கள்
    • உலகத் திரைப்படங்கள்
    • தமிழ்த் திரைப்படங்கள்
    • ஓடிடி திரை
  • தொடர்கள்
    • ட்ரெண்டு கொட்டாய்
    • திரை புத்தகம்
    • ஸ்டார்ட் கேமரா
    • I CALL THE SHOTS
    • குரு தத் 100
    • டேபிள் டாப்
  • தொடர்பு
  • Login
  • Sign Up
  • Cart

© 2026 Thetalkie - All rights reserved

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?