ரமேஷ் வைத்யா
ப்ரியா படம் பார்த்துவிட்டு வந்திருந்தேன். மொத்தப் படத்திலும் எனக்குக் கிடைத்தது வேறு யாருக்குக் கிடைத்ததோ அறியேன். ஸ்ரீதேவியின் இளமைகூட என் மனதுக்குப் படவில்லை. படம் பார்த்ததற்கு அடுத்த நாள் நான் ரோமப் பேரரசனாக இருந்தேன். மேற்படிப் படத்தில் ரஜினி இன்ட்ரோ காட்சியாக ஜூலியஸ் சீஸர் நாடகம் வரும். ஒரு நடை போட்டு ரஜினி என்ட்ரி கொடுப்பார்.
ராஜபார்ட்டாக சிவாஜியின் நடையைப் பார்த்த அதே கண்கள் இந்த நடையையும் பார்த்தன. வந்து திரை மையத்தில் நின்றதும், “எல்லாரும் பந்தாயித்தா?” என்று சீஸர் கேட்டார். அடச்சீ என் காதில்தான் அப்படி விழுந்திருக்கிறது. அவர் கேட்டதென்னவோ, “எல்லோரும் வந்தாயிற்றா?” என்றுதான். சீஸர் நாடகக் கதையை விடுங்கள், அந்தக் காட்சி என் மனதில் பதிந்துவிட்டது போலும்.
மறுநாளே நான் ரோமப் பேரரசனாக மாற ஆசைப்பட்டுவிட்டேன். அப்படி ஆவது ரொம்ப ஈஸியாக இருந்தது. முடி வெட்டும்போது சலூனின் துண்டு போர்த்துவார்கள் அல்லவா (மென் மெட்டீரியல்) அந்த மாதிரி இல்லாமல், துண்டை குறுக்கு வாக்கில் முந்தானை போல் போர்த்திக்கொண்டால் தீர்ந்தது, நான் ரோம அரசன். சீஸர். என் மெல்லிய தேகத்தில் முடிந்த அளவு கம்பீரத்தைக் கொண்டுவந்து, “எல்லாரும் பந்தாச்சா? அந்தக் கலா எங்கே காணோம்?” என்று சமையலறையைச் சமையலவையாக்கி உலவினேன்.
முன்னதாக, பாசமலர் பார்த்த அனுபவம் ஒன்றும் எனக்குண்டு. ‘எங்களுக்கும் காலம் வரும் காலம் வந்தால் வாழ்வு வரும் வாழ்வு வந்தால் அனைவரையும் வாழவைப்போமே’ என்கிற சந்தோஷப் பாட்டு என் ஆறாவது வயதிலேயே என்னை ஈர்க்கவில்லை.
சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு என்று அழுதுகொண்டே சிவாஜி பாடும் கண்ணீர்ப் பாட்டுத்தான் பிடித்திருந்தது. இதில் ஓர் உளவியல் இருப்பதைப் பிற்காலத்தில் உணர்ந்தேன். என் குணாம்சம். அது, சந்தோஷ ஆகாயத்தைக்கூட துக்க ஜன்னல் வழியாகத்தான் பார்க்கும் போல.
கூலிங் கிளாஸ் போட்டு பகலையும் இருட்டாகப் பார்ப்பது போல எல்லாவற்றிலும் துக்கத்தைத் தேடும் ஆள் போலும் நான். மேஸோக்கிசம் என்கிற உளவியற்கோளாறின் ஓர் உட்பிரிவாக இது இருக்கலாம்.
அந்த சிவாஜி – சாவித்ரியாகப்பட்ட அண்ணன் தங்கைக்கு சகல சோகங்களும் நிகழ்ந்து உச்சக்கட்டக் காட்சியில் எங்களுக்கும் காலம் வரும் பாட்டையே ஒரு கதறலோடு பாடுவார் சிவாஜி.
அப்போது அதே பாட்டு எனக்குப் பிடித்தது. ஒரு வரி பாடியதும் அவரே செத்து விழுந்துவிடுவார். பக்கவாட்டில் தங்கை சாவித்ரியும் செத்து வீழ்வார். பின்னணியில் மேல் ஸ்தாயியில்,
தங்கை உயிரெண்ணி தன்னுயிரை வைத்திருந்தான்
அண்ணன் வளர்த்த உயிர் அவனுடனே சென்றதம்மா
என்று பாடல் ஒலிக்கும். இது எனக்கு மிகவும் உவப்பாக இருந்திருக்க வேண்டும்.
ஒரு நாள் நான் பள்ளி விட்டு வீட்டுக்கு வந்தேன். காலையிலேயே அக்காவுக்கு உடம்பு சரியில்லாததால் அவள் வீட்டிலேயே இருந்துகொண்டாள். லீவு, ப்ரெட் ஆகிய இரண்டு காரணங்களுக்காக மனம் நொந்தபடியே நான் பள்ளிக்குப் போகவேண்டிய கட்டாயம். சாயங்காலம் வந்து பார்த்தால் அக்கா பேச்சு மூச்சு இல்லாமல் கிடக்கிறாள்.
அம்மா கண்ணீரோடு இருந்ததையும் கவனித்தேன். அக்காளை டாக்டரிடம் கூட்டிப் போனது, ஊசி போட்டதால் அவள் தூங்கியது, அக்காவுக்குக் காய்ச்சல் வந்ததால் அம்மாவை அப்பா திட்டியது எல்லாம் பிற்பாடுதான் தெரிந்தது. அவள் செத்துப்போய்விட்டாள் என்றுதான் அப்போது நினைத்தேன். எனக்குப் பெரிய வேதனை ஆகிவிட்டது. நானும் செத்துவிட வேண்டும் என்று தோன்றியது.
தலைசுற்றி அக்காவின் பக்கத்தில் விழுந்துவிட்டேன். கண்ணை இறுக மூடிக்கொண்டேன். நான் விழுந்த சத்தம் கேட்டு அம்மா ஓடி வந்தாள். இதற்கு இரண்டு விநாடிகள் ஆகவே நான் கண்ணைத் திறக்காமல், ‘அக்கா வளர்த்த உயிர் அவளுடனே சென்றதம்மாஆஆஆஆ… என்று கத்த ஆரம்பித்தேன். புட்டத்தில் ஒரு மிதி விழுந்ததும்தான் கண்ணைத் திறந்தேன். அப்பா கோபக்கனல் வீசும் கண்களோடு நின்றிருந்தார்.
இவையெல்லாம் ஒரு படத்தில், ஒரு குறிப்பிட்ட காட்சி என்னை ஈர்த்ததால் நடந்ததவை. நான் காவிய நாயகனாக உலா வருவதற்கு கதாபாத்திரங்களால் ஒத்தாசை செய்த படங்கள் பல உண்டு.
நீண்ட காலங்கள் நான் சப்பாணியாக உலா வந்ததே ஆரம்பம் என்று நினைக்கிறேன். இடக்கால் சாதாரணமாக நடக்கலாம். வலக்கால் இருக்கிறதே… அது முழங்காலில் மடங்கக்கூடாது. அப்படி நடந்து பாருங்கள், சப்பாணி ஆகிவிடலாம்.
அந்த நாட்களில் எனக்கு டுடிக்கி என்று ஒரு பட்டப் பெயர் இருந்தது. எங்கேயோ தட்டிக்கொண்டு கால் கட்டைவிரல் நகம் ஏடாகூடமாக உடைந்திருந்தது. அதில் ஒருவன் மிதித்துவிட்டான். நான் துடிதுடித்துப் போனேன்.
நான் வலியால் குதிக்கும் விதத்தைப் பார்த்த சுற்றியிருந்த பாதகர்களுக்குக் குதூகலம். மறுபடி மறுபடி மிதித்து என் வலித் துடிப்பு நடனத்தை அனுபவித்தார்கள். ‘துடிக்கும் டுப்பாக்கி’ என்று பெயர் வைத்தார்கள். அதையே செல்லமாகவும் சுருக்கமாகவும், டுடிக்கி என்று கூப்பிட்டார்கள்.
பதினாறு வயதினிலே பார்த்துவிட்டு, நானே வலக்கால் மடங்காமல் தாங்கித் தாங்கி நடந்து பெட்டிக்கடைக்குப் போய் ரெண்டு தேன் மிட்டாய் வாங்கி ஒருசேர வாயில் போட்டபோது, ‘ஏலே டுடிக்கி’ என்று கத்தியபடியே நெருங்கினான் மூட்டைப்பூச்சி. இந்தப் பெயருக்கான கதை இங்கே அநாவசியம்.
கெந்திக் கெந்தி வேகமாகப் போய் அவன் கன்னத்தில் ஒரு அறை விட்டேன். ‘இனிமே யாராவது ஒன்ன டுடிக்கின்னு கூப்புட்டா படக்குன்னு அடிச்சிருன்னு மயிலு ஸொல்லுச்சு’ என்றேன். தேன்மிட்டாய்க் குதப்பலில் சிவந்திருந்த வாயும் பொருந்திப் போனது. ஆனால், எனக்கு சேதாரம் ஏற்பட்டதும் குறிப்பிடத் தகுந்தது. இருந்தாலும், தெய்வ மகன் பார்க்கும் வரை நான் சப்பாணியாகவே ‘நடந்ததும்’ தொடர்ந்தது.
இரண்டாம் சுற்று, மூன்றாம் சுற்றாக சிவாஜி எம்ஜியார் படங்களைப் போடுவதெல்லாம் அக்காலக் கிராம வழக்கங்கள்தானே… தெய்வ மகனில், அழகான தம்பி சிவாஜியை எனக்குப் பிடிக்காது. பல சிவாஜிகள் வரும் படங்களில் – மற்றோர் உதாரணம் திரிசூலம் – கடைக்குட்டி சிவாஜி பயங்கரத் துள்ளலோடு இளமை கொப்பளிக்க நடந்துகொள்வார். மேடம் டுஸ்ஸாட் மெழுகுச் சிலை போல் இருப்பார்.
காமெடிப் பீஸு. சிவாஜி ரசிகர்கள் கோபிக்க மாட்டார்கள். அவரே அந்த கேரக்டரை காமெடியாகத்தான் டீல் செய்திருப்பார். இவரைத் தவிர மேலும் இரண்டு சிவாஜிகள் தெய்வ மகனில். அவர்கள் இருவரும் ஒரே சாயலில் இருப்பார்கள். இடக்கன்னம் அவிந்தது போல் காணப்படும். தீயில் அகப்பட்ட மெழுகுச் சிலை முகம். நடை உடை பாவனைகள் எல்லாம் தீயவர்கள் போல் இருக்கும். ஆனால், கதைப்படி அப்பாதான் கெட்டவர்.
சரி, சந்தர்ப்ப சூழ்நிலையால் ஓரளவு கெட்டவர் என்று வைத்துக்கொள்ளுங்களேன்… மூத்த மகன் சிவாஜி (முகத்தைத் தவிர மற்றபடி) அப்பழுக்கு இல்லாதவன். நான்தான் அது. முதுக சற்றே பின்புறமாக வளைந்த நிலையில் பச்சாதாபத்தைப் பிரதிபலிக்கும் முக பாவனையோடு நான் நடந்து செல்வேன். ஒரு நாள் அப்படி நடந்து நான் வந்து பக்கத்தில் நிற்பது தெரிந்தும் கவனிக்காமல் அம்மா வேலையாக இருந்தாள். அதுதானே எனக்கு வேண்டும்…
“பேச மாட்டே இல்ல…? எப்பிடிப் பேசுறதுன்னு ஒனக்குத் தயக்கம். என்ன பேசுறதுன்னு எனக்குக் கலக்கம்” என்று வேதனை ததும்பும் அடிக்குரலில் சொன்னேன். நிமிர்ந்து பார்த்த அம்மா, “வெல்லச் சீடைதானே, அந்த டப்பாவுல இருக்கு. எடுத்துக்க” என்று என்னைக் கேவலமாக நடத்தி அனுப்பிவிட்டாள்.
நம்முடைய பெர்ஃபார்மன்ஸ் வேலைக்கு ஆகவில்லை. இன்னும் அதிகமாக இந்த உலகம் எதிர் பார்க்கிறது என்று புரிந்துகொண்டேன். நல்ல கதாபாத்திரங்களுக்காகக் காத்திருக்க ஆரம்பித்தேன்.
‘கதாபாத்திரமென்ன நடிகனாகவே வருகிறேன்’ என்று என் மனவானில் சிறகடித்து நுழைந்தார் பிரதாப். முட்டைக்கண், அதில் பொருந்தாக் கண்ணாடி, நெற்றியில் விழும் நேர்கோட்டு மயிர், அசட்டு இளிப்பு… ஆஹா இவர்தாண்டா நம்மாளு. ஆளே நல்ல அப்நார்மல் கேரக்டராக இருக்கிறார் என்று எனக்கு ஒரே குஷி. போதாக்குறைக்கு மூடுபனியில் கொலை வேறு செய்வாரா… பச்சக் என்று ஒட்டிக்கொண்டார்.
அவர் மாதிரியே திரிவது எளிதாகவும் சுவாரசியமாகவும் இருந்தது. இவரைத் தொடர ஆரம்பித்தது, மாஸ்டர் அஃப் அப்நார்மல்ஸி கோர்ஸ் முடித்த பல நடிகர்களை ரசித்து போலச் செய்யும் வழக்கத்தில் கொண்டுபோய் விட்டது. ‘வானும் மண்ணும் ஒன்றாய்ச் சேர்ந்தது உன்னால் ஈஸ்வரா’ கரண், ‘ஏய் நீ தொண்ணூத்துரெண்டுலதான் வில்லன்.
நான் எம்பத்திரெண்டுலருந்தே வில்லன்’ ரகுவரன், ‘ஆமாம்ப்பா, நான் தொண்ணூத்துரெண்டு. நீதான் எம்பத்திரண்டு. நீதான் கிரேட்டெஸ்ட்டு. ஆனா நான் லேட்டஸ்ட்டு…’ பிரகாஷ் ராஜ் என்று என் வில்ல உலகம் பரந்தது. பிரதாப் அப்பா, ரகுவரனும் பிரகாஷ் ராஜும் அண்ணன் தம்பி, கரண் மகன் என்று ஒரு ஸ்கிரிப்ட் எழுத வேண்டுமென்ற விபரீத எண்ணமும் எனக்கு உதித்ததுண்டு.
இப்படி, பைத்தியக்காரப் பாத்திரங்களை அன்றாட வாழ்வில் சுமந்து திரிந்ததில் எனக்கு மிகவும் தோதாக இருந்தது ஆவாரம் பூ வினீத் பாத்திரம். பேசி முடித்த பிறகும் வாயை அகலத் திறந்தே வைத்திருந்தால் வினீத்தைக் கொண்டுவந்துவிடலாம். ஏறி உட்கார்ந்து சவாரி செய்ய அய்யனார் கோயில் குதிரையைத் தேடிக் கிடைக்கவில்லை. இந்த இடத்தில் ஒரு வாக்குமூலத்தைச் சேர்த்துக்கொள்ளலாம்.
மற்ற எல்லா விவகாரங்களிலும் சம்பந்தப்பட்ட கேரக்டரைப் பார்த்து அதுவாக நான் மாற விரும்பினேன். ஆவாரம் பூவில் மட்டும், நான் வினீத்தாக மாறியது, நந்தினிக்காக. வேறு மாதிரியான அழகை நந்தினி வெளிப்படுத்தியிருந்தார். அதையும் தாண்டி அந்தப் படத்தில் ஒரு விஷயம் என்னைத் தாக்கியது. அது கவுண்டமணி சிறந்த நடிகர் என்பது. ஒரு படம் என்று இருந்தால் நாயகியை மூன்றாவது கேரக்டர் விரும்புவது இயல்பு.
அவனைப் பார்வையாளர்கள் சபிப்பார்கள். இந்தப் படத்தில், நந்தினியிடம் கவுண்டமணி விருப்பம் தெரிவிக்கும் பாவனையை வெளிப்படுத்தும்போதெல்லாம், ‘களுத அவன இவ லவ் பண்ணிட்டாத்தான் என்ன’ என்று எனக்குத் தோன்றியது. அப்படிச் சொல்லி முடித்துவிட்டு வாயைத் திறந்தே வைத்திருந்தேன். வினீத் மாதிரி.
எத்தனை காலத்துக்குத்தான் அபத்தமான ஆளாகவே இருப்பது? நானும் திருந்த வேண்டாமா? ஹீரோவாக விரும்பினேன். ராஜபார்வை பார்த்தேன். இல்லை, ராஜபார்வை படம் பார்த்தேன் என்கிறேன். எனக்கு ஏதோ காரணத்தால் பார்வை பறிபோய்விடுகிறது. டாக்டரும் கைவிரித்து விடுகிறார்.
நான் இருட்டு உலகத்துக்குள் வாழ ஆரம்பிக்கிறேன். மளிகைக் கடைக்கு அம்மா அனுப்பினால், கண்ணுக்கு எட்டிய தொலைவுக்கு பார்வையை வீசிவிட்டு கண்களை மூடிக்கொள்வேன். நிதானமாக இருளுக்குள் நடக்க ஆரம்பிப்பேன். ஒரு நாள் பசு ஒன்று மூத்திரம் தோய்ந்த வாலால் என் முகத்தில் சாமரம் வீசியது நடந்தது. அதிலிருந்து எனக்குப் பார்வை திரும்பிவிட்டது.
கமல் வந்தால் ரஜினி வரவேண்டாமா? முள்ளும் மலரும் வந்தது. இடக்கையை சட்டையின் கைக்குள் நுழைக்க மாட்டேன். டவுசருக்குள் நுழைத்துக்கொள்வேன். வலக்கையால் ஒரு துண்டை எடுத்து இடத் தோளில் போட்டுக்கொள்வேன். சீஸருக்குத் தேவைப்படும் அளவுக்குப் பெரிய துண்டல்ல, இது சின்னத் துண்டு. ‘கெட்ட பய சார் இந்த ரமேசு…’ என்பது ரஜினி அளவுக்கு இருக்காது என்பதுதான் சோகம். தேனி போன்ற இடைநிலை நகரத்துக்கு அது போதுமானதாக இருந்தது.
எல்லாம் போக, காலம் போன காலத்தில், மூச்சுப் பிடிப்பு, மூட்டு வலி என்கிற உபாதைகள் தாக்க என் இடத் தோள் கொஞ்சம் தூக்கிக்கொண்டது. இப்போதும் என்னை நீங்கள் ஏதேனும் இலக்கியக் கூட்டங்களில் பார்க்க நேர்ந்தால் கூராமல் கவனித்தாலே தெரியும். ஒருவன் சொன்னான்:
“அண்ணே, என்னண்ணே புஸ்பா மாரியே இருக்க…”











