ராணி கார்த்திக்
சென்னை புத்தகக் கண்காட்சி சிறப்புக் கட்டுரைத் தொடர்
சினிமா ரசனை

படம் பிடித்திருந்தால் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுவதும், இல்லையென்றால் மட்டையடியாக அடித்துக் கண்டம் செய்வதும், சம காலத்தில் திரைத்துறைக்கே அச்சுறுத்தலாக மாறி வரும் நிலையில், ‘சினிமா ரசனை’ ( film appreciation ) என்ற தலைப்பே முக்கியமான ஒன்று. Blog காலத்தில் இருந்தே நான் வாசித்து வரும் சினிமா எழுத்து கருந்தேள் ராஜேஷூடையது. அதன் தனித்துவம் என நான் நினைப்பது, விருது பெற்ற படங்கள், அல்லது பிடித்த இயக்குநர்கள் என ஒவ்வொருவரும் ஒரு அச்சில் சுழலும் போது, அடிப்படையில் திரைக்கதை எழுத்தாளர் என்ற வகையில் இவர் கவனப்படுத்தும் படங்கள் தனித்துவம் பெறுகின்றன.
‘சினிமா ரசனை’ தொகுப்பில் திரைப்படங்கள் கவனப்படுத்தப்பட்டதை போல், இதில் வெப் சீரிஸ்கள் கவனம் பெறுகின்றன. கொரோனா காலத்திற்கு முன்பிருந்தே சீரிஸ்- களைப் பார்த்த எலைட் சினிமா ரசிகர்கள் ஒரு புறம் என்றால், கொரோனாவுக்குப் பிறகு Money Heist, Game of Thrones என வெகுஜன சீரிஸ்களைப் பார்த்து வெப் சீரிஸ்களுக்கு அடிமையானவர்கள் பலர் உண்டு. இந்த இரு தரப்பிலும் பலராலும் பேசப்படும் main stream சீரிஸ்களை பார்க்க துடிக்கும் ஒரு பொதுவான குணம் உண்டு.
அதேநேரம், தனக்குப் பிடித்த இயக்குநர்களின், திரைக்கதை எழுத்தாளர்களின் சீரிஸ்களை தேடிப் பிடித்துப் பார்க்கும் சீரிஸ் வெறியர்கள் எப்போதும் உண்டு. நீங்கள் அப்படிப்பட்டவர்கள் என்றால் நிச்சயம் இந்தப் புத்தகம் உங்களுக்கானது தான். தொகுப்பில் உள்ள ஒவ்வொரு அத்தியாயமும் உள்ளடக்கத்தில் ஏதேனும் ஒரு வகையில் வித்தியாசப்பட்டிருப்பது பரவலான அனுபவத்தைப் பெற உதவுகிறது.
ஒவ்வொரு அத்தியாயத்திலும் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்கிற சுருக்கமான வடிவத்தைத் தருகிறேன்.
வெஸ்டர்ன் என்பது ஒரு தனி உலகம்
The queen’s Gambit என்னை சொக்க வைத்த சீரிஸ் களில் ஒன்று. அதை எழுதி இயக்கிய Scott Frank இன் மற்றொரு படைப்பான Godless குறித்த இந்த அத்தியாயத்தில் வெற்றி மாறனின் விடுதலைக்கும் Godless க்குமான தொடர்பு, தவற விடக் கூடாத வெஸ்டர்ன் genre இயக்குநர்கள் என சினிமா ரசிகர்களுக்கு தேவையான பல குறிப்புகள் உண்டு.
பதின்மத்தின் வர்ணஜாலம்
Coming of age என்ற ஒரு genre குறித்த விளக்கத்தை அளித்துவிட்டு, தமிழில் பேசப்படாமல் போன ஶ்ரீதரின் ‘ஓ மஞ்சு’, நவீன தலைமுறை பார்த்திராத ‘அழியாத கோலங்கள்’ வழியாக நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட இந்த சீரிஸின் சிறப்பை சொல்கிறது
ஒரு கொலைகாரன் கலைஞன் ஆனால்
கூலிப்படையாக மாறும் முன்னாள் அமெரிக்க ராணுவத்தை சேர்ந்த Protoganist. ஒரு கொலைக்காக நடிப்புப் பள்ளியில் சேரும் நிர்பந்தம் ஏற்பட, பழைய எதிரிகள் துரத்த என black comedy ரசிகர்களுக்கான அத்தியாயம்
வரலாறு முக்கியம்
என்னைப் போன்ற பல சினிமா ஆர்வலர்களுக்கு பிடித்த Peaky Blinders சீரிசுக்கும் இந்த அத்தியாயம் பேசும் taboo என்ற பிரிட்டன் அமெரிக்க போரை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட சரித்திர தொடருக்கும் ஒரு முக்கிய தொடர்பு உண்டு. கூடுதலாக இந்திய சரித்திர சினி குறித்த பார்வையும் உண்டு.
திரைவெளியில் பழங்குடிகள்
எனக்கு மிகவும் பிடித்தமான திரை மேதைகளில் ஒருவரான Werner Herzog இயக்கிய The Wrath of God திரைப்படம் உங்களுக்கு பிடிக்கும் என்றால் இந்த அத்தியாயத்தில் பேசப்பட்டிருக்கும் சீரிசும் உங்களுக்கு பிடிக்கும். சினிமா ரசனை முதல் பாகத்தில் பேசப்பட்ட Embrace of the Serpent பட இயக்குநரான Ciro Guerra தான், இந்த சீரிசின் இயக்குநர் என்பது கூடுதல் ஸ்பெஷல்.
அறிவியல் புனைவின் உச்சம்
உலகில் இதுவரை விவாதிக்கப்பட்ட மொத்த சயின்ஸ் பிக்சன் கருத்துகளையும் ஒரே சீரிஸில் வைத்தால் எப்படி இருக்கும்? என்ற வியப்பூட்டும் கேள்வியுடன் தொடங்கும் இந்த அத்தியாயம், சயின்ஸ் பிக்சன் கதைகளுக்கென்றே நேர்ந்துவிடப்பட்ட ஒரு mad scientist கதாபாத்திரம் இதிலும் உண்டு. Web series ரசிகர்களால் பெரிதும் விவாதிக்கப்பட்ட Dark சீரிசுக்கும் இந்த அத்தியாயம் பேசும் சீரிசுக்கும் ஒரு தொடர்பு உண்டு.
உலகில் மிஞ்சப் போகும் இரண்டே நாடுகள்
ஒரே ஒரு season உடன் முடிந்து விட்ட ஒரு web series காக அதன் hardcore ரசிகர்கள் ஒன்று சேர்ந்து ஒரு தயாரிப்பு நிறுவனத்தையே தொடங்கும் முயற்சியில் ஈடுபட்ட கதை தெரியுமா? அந்த கதை குறித்தும் இயக்குநரின் பின்னணி குறித்தும் பேசும் அட்டகாசமான அத்தியாயம் இது.
துருவங்கள் மாறலாம்
என்னை பைத்தியமாக சுற்ற வைத்த web series களில் ஒன்று Orange is the new black. அதே வகைமையை சேர்ந்த சீரிஸ் குறித்து விவாதிக்கும் அத்தியாயம் இது. இதன் நான்கு சீசன்களும் நான்கு பெண் திரைக்கதை எழுத்தாளர்களால் எழுதப்பட்டது.
ஆளை அசத்தும் அனிமேஷன் சாகசம்
தலைப்பே சொல்லும்படி anime addict களுக்கான அத்தியாயம் இது. Naruto, one piece, blue eye samurai போன்று இல்லாமல் முழுக்க முழுக்க பகடியை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட web series குறித்த இந்த அத்தியாயத்தில் சில கூடுதல் தகவல்களும் உண்டு
இந்த கட்டுரையில் 9 அத்தியாயங்கள் குறித்த சிறுகுறிப்பே எழுதப்பட்டுள்ளது. இதே போன்று மொத்தம் 26 அத்தியாயங்கள் இந்த தொகுப்பில் உள்ளது. 5 முதல் 10 பக்கங்களில் ஒரு சீரிஸ் குறித்த பல தகவல்களும், தனித்த பார்வைகளும் உண்டு.
Name dropping என்பது சமூக வலைதளங்களில் சகஜமாகிவிட்ட காலத்தில், வெறுமனே பெயர்களை சொல்லி பயமுறுத்தாமல், அந்த பெயர்களுக்குப் பின்னால் உள்ள சுவாரசியமான தகவல்களை தொட்டுச் செல்வதும், சில தகவல்களை இணையத்தில் தேடிப் படிக்கச் சொல்லி நகர்ந்து விடுவதும் இந்த தொகுப்பின் ஸ்பெஷல். Web series வெறியர்கள் புதிய சீரிஸ்களை காணவும், தனக்கு தெரிந்த பல genre – கள் குறித்து எடை போடவும் உதவும் இந்த தொகுப்பு சினிமா ஆர்வலர்கள் Miss செய்யக்கூடாத ஒன்று.
நூலாசிரியர் : கருந்தேள் ராஜேஷ்
பதிப்பகம் :Zero Degree Publishing
டேபிள் டாப் 02
திரையெல்லாம் செண்பகப்பூ

எடுத்த எடுப்பிலேயே இந்த தொகுப்பில் தீபா உருவாக்கிய கதை மாந்தர்கள் இருக்கிறார்களே.., என்று தொடங்காமல் அவர் எழுதிய சில வரிகளைத் தந்து விட்டு, அது உருவாக்கும் வழியில் கட்டுரையை நகர்த்திச் செல்ல நினைக்கிறேன்.
“ஆண்கள் காட்சிகளைப் பேசுவார்கள். பெண்கள் அகத்தும் புறத்துக்குமாகப் போய் வருவார்கள்”
“யாருக்கும் பதில் சொல்ல வேண்டிய தேவையின்றி சிரிக்கவும், அழவும் தூண்டுகிற ஓர் இடமே திரையரங்கு மட்டும்தான். அவர்களுக்கு..,”
“சினிமாவுக்கு அழைத்துப்போய் முழு படத்தையும் தூங்கியே கழித்த கணவரை வாழ்நாள் முழுவதும் மன்னிக்காத பெண்களும் உண்டு”
“ஏனெனில் அம்மன்கள் அவர்களுக்கு ரகசிய சிநேகிதிகள்”
குறிப்பாக, பாளையத்தம்மன் படத்தை பார்த்துவிட்டு திரையரங்கில் மருமகள் சாமி ஆடுவதைப் பார்த்து அடுத்தநாள் சாமியாடும் மாமியார், “பொறவு உலகம்மைய நான் பொறந்ததுலேந்து பாக்கேன். என் மருமவ வெளியூர்க்காரி.
அவளுக்கே வாரான்னா.., எனக்கு வர மாட்டாளாட்டீ..,”
( இதை சொல்லிவிட்டு, திருநெல்வேலியில் மட்டுமே இருக்கும் உலகம்மையும், ஆரணியில் குடி கொண்டிருக்கும் பாளையத்தம்மனையும் தொடர்பு படுத்தி தீபா சொல்லும் வார்த்தைகள் அரசியலும் அழகியலும் ஒருங்கிணைந்தவை )
காசியில் கைவிடப்பட்ட முதியவர்கள் குறித்த கட்டுரையில் “சிலரோ தாம் தொலைக்கப்பட்டது தெரியாமல், தன்னை கைவிட்டவர்களை தேடிக் கொண்டிருப்பார்கள்”
“ஆண்டு விழாவுக்கான ஜன்மாந்திர பாடலை ( இந்திய நாடு என் வீடு, பாரத விலாஸ் ) அந்த ஆண்டிலும் சேர்த்து விட்டார்கள்”
“ஒரு பெண்ணோடு தோன்றிடும் தாபம் என்ற வரியில் தான் பத்மா டீச்சர் நிறுத்தி இருக்க வேண்டும். பிறகு தனிமையில் பலமுறை கேட்டிருப்பாராக இருக்கும்”
“கண்ணாளனே பாடலை முணுமுணுத்து கொண்டிருந்தால் முதலில் எச்சரிக்கை கொள்வது அம்மாக்களே..”
“தோழியின் அம்மா என்பதால் எங்களால் அமைதி காக்கப்பட்டது”
“எது அவர்களை மூச்சு முட்ட வைக்கிறதோ அதுவே ஆசுவாசப்படுத்தவும் செய்யும் என்பது சமையல் அறைக்கு பொருத்தமான ஒன்று”
“உலக சினிமாக்கள் ஆயிரம் இருக்கட்டும். நாம அண்ணிகளை ஸ்கிரீன்ல காட்டினது மாதிரி, ஒரு உலக படத்தை உடனே சொல்லுங்க பார்ப்போம் என்றேன்.
அவர் ஒரு படத்தையாவது சொல்ல வேண்டும் என்று நீண்ட நேரம் யோசித்துக் கொண்டிருந்தார்”
ஊரில் பிள்ளை பூச்சிகள் என்று சொல்லும் வண்ணம் அமைதியே வடிவான சில அக்காக்கள், மதினிமார்கள் இருப்பார்கள். முதல் நாள் இரவு அவர்கள் உக்கிரமாக சாமியாடியதை பார்த்து பயந்து போய் அடுத்த நாள் காலை வீட்டின் ஓரமாய் நடந்து செல்கையில், டேய்.., டீ குடிக்கிறியா?
என்று பாசத்தோடு விசாரிப்பார்கள். அப்படி ஒரு சாமி ஆட்டத்தை தான் ‘திரையெல்லாம் செண்பகப்பூ’ என்ற இந்த தொகுப்பில் ஆடி இருக்கிறார் ஜா.தீபா.
புத்தகம் முழுவதிலும் தன் உணர்வுகளால், அனுபவங்களால் நிறைந்திருக்கிறார். என்னளவில், மனிதர்களை அவர்களின் சிடுக்குகளை, நுணுக்கங்களை, உன்னதங்களை அறிந்து கொள்வதில் இரண்டு வகைகள் உண்டு.
அதில் இரண்டாவது புத்தகம் என்றால், முதலாவது நேரடியான அசல் மனிதர்கள். இதில் தீபா முதலாவதை தேர்ந்தெடுத்து இருக்கிறார் என்பது இந்த தொகுப்பின் ஒவ்வொரு வரிகளிலும் உரைக்கிறது. நூல் முழுக்க அவ்வளவு மனிதர்கள்.
அண்ணி என்கிற ஒரு உறவை புனிதப்படுத்தும் அல்லது அதன் முக்கியத்துவத்தை சொல்லும் அதே நேரம் அவரால் அம்மாவுக்கு அடுத்து அதிகம் உழைப்பு சுரண்டலுக்கு ஆளானது அண்ணி என்ற கதாபாத்திரம்தான் என்பதை சுட்ட முடிகிறது.
மேலும் ஆணாதிக்கம் தொடங்கி பாலின சமத்துவம் என சமூகத்தில் தற்போது வரை நிலவிக் கொண்டிருக்கும் தீரா விவாதங்கள் குறித்த தீபாவின் தனித்துவமான பார்வை இந்த தொகுப்பில் மிக இயல்பாக வெளிப்படுகிறது.
பக்தி உள்ளிட்ட பல கற்பித்தங்களை தலைமுறை வாரியாக உடைத்துப் போடுகிறார். அதே நேரம் அதை நம்புபவர்களை ஒருபோதும் பரிகாசம் செய்வதில்லை. அதையும் ஏற்றுக் கொண்டே, மனிதர்களை எடை போடாத ஒரு ஜென் மனம் தீபாவுக்கு வைத்திருக்கிறது.
தொடர்ந்து அவரை வாசித்து வருபவன் என்ற முறையில் உணர்வின் உச்சம் என்ற வார்த்தையை அவர் மிகவும் அரிதாகவே பிரயோகிப்பார். அப்படி பிரயோகிக்கும் ஒரு காட்சி இந்த புத்தகத்தில் உண்டு.
அதை வெற்று வார்த்தைகளால் விவரிக்க முடியாது. தமிழ் சினிமா பாடல்களின் ஆழம் குறித்த அற்புதமான அனுபவம் அது.
உணர்ச்சிகரமாக ஒரு காட்சி பற்றி பேச நினைக்கும் போது அதில் அந்த நாயகி அணிந்திருக்கும் ஆபரணங்களைப் பற்றிப் பேசும் தோழிகள் வாய்த்த தலைமுறை தீபாவின் தலைமுறை.
பெண்கள் அப்போதெல்லாம் கைக்கடிகாரத்தின் டயல் உள்ளங்கைக்கு உள்ளே இருக்கும்படி கட்டுவார்கள் என்ற வரிகளைப் படிக்கும் போது ராணியை (அம்மா) நினைத்துக் கொண்டேன்.
சரோஜாதேவியாக தன்னை உருவாக்கிக்கொண்ட செவிலியர், தோழிக்காக ஒரே தெருவில் இருக்கும் நபர்களை திருமணம் முடித்தவர்கள், தன் தோழிக்கு இடப்பட்டதைப் போன்று பச்சை குத்திக் கொண்டவர்கள், பசுமை நிறைந்த நினைவுகளை பாடலைக் கேட்கும்போது வரும் தீபா அம்மாவின் பழமையானதொரு கண்ணீர், காதல் படத்தில் சந்தியாவின் தோழியாக வரும் சத்யா கதாபாத்திரத்தை சங்கப் பாடலுடன் இணைத்த விதம், மின்சார ரயிலில் காய்கறி நறுக்கியபடியே எங்கு சென்றாலும் தன்னுடன் சமையல் அறையை சுமந்தபடியே செல்லும் பெண்கள், ‘மகளிர் மட்டும்’ படத்தின் ஆரம்பக் காட்சி, என சிலிர்க்க வைக்கும் இடங்கள் பல இந்த பனுவல் நெடுக உண்டு.
“பாரதியை போன்றவர்கள் கடைசி வரை மாறுவதே இல்லை” என்ற வரிகளுக்கு பின்னால் இருக்கிறது ஒரு சிறுகதை அல்லது நாவல்.
“எம்ஜிஆர், சிவாஜிக்கு கிடைத்ததைப் போல் எங்களுக்கு ஒரு அம்மா கிடைக்கவில்லையே என ஏங்கிய தலைமுறை எங்களுடையது” என தியோடர் பாஸ்கரன் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருப்பார்.
தாய்மை குறித்த தீபாவில் பல வரிகள் இதை நினைவு படுத்தின.
பாரிஜாத பூவே எனும் பாடலைக் கொண்டு காதலை வெளிப்படுத்திய அதே கணவன் அப்பாடலில் வரும் பவளமல்லியை வெட்டிய கதையும் இந்த தொகுப்பில் எழுதப்படாத அல்லது எழுத முடியாத ஒரு சிறுகதையாக உண்டு.
இறுதிச்சுற்று திரைப்படத்தின் நாயகி ரித்திகா சிங்கிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. நீங்கள் இருந்த விளையாட்டு துறையில் பாலியல் அத்துமீறல்கள் இருக்கிறதா? என்று.., அதற்கு அவர் அளித்த பதில்..,
“எந்த துறையில் தான் இல்லை” என்பதுதான். இதை வெளிமாநில படப்பிடிப்பின் போது தீபாவின் அனுபவமாக மிக கூர்மையாகவே உணர முடிகிறது.
உண்மையில் இந்த நூலை எப்படி வகைப்படுத்துவது என்பதே புரியவில்லை. எல்லாவற்றையும் ஒரு பெட்டிக்குள் போட்டு அடைத்து தான் ஆக வேண்டுமா என்ற சிந்தனை ஒரு புறம் இருந்தாலும், தமிழ் சினிமாவின் தாக்கம், நாட்டார் வழக்காற்றியல், மானுடவியல், பெண்களின் உளவியல், வெகுஜன சினிமாக்களால் கட்டமைக்கப்பட்ட ஆண்களின் உளவியல், திரைத்துறையில் பாலினம் சார்ந்து இருக்கும் பாகுபாடுகள், அது செயல்படும் விதம் என பல தளங்களில் இன்னும் சொல்லப்போனால் ஒரே நேரத்தில் அறிவுத் தளத்திலும் உணர்வு தளத்திலும் உரையாடும் இத்தகைய ஒரு நினைவுத் தொகுப்பு எந்நாளும் வாசக நனவிலி மனதில் காட்சிகளாக நினைவூட்டப்பட்டுக் கொண்டே இருக்கும்.
சில இடங்களில் வகுப்பெடுக்கும் தொணி சற்று கூடுதலாக இருந்தாலும், ஒரு Mainstream இதழான ஆனந்த விகடனுக்காக எழுதப்பட்ட கட்டுரைகள் இவை என்பதன் பின்னணியில் வகுப்பெடுக்க வேண்டிய தேவை இருப்பதை புரிந்து கொள்ள முடிகிறது.
நூலாசிரியர் : ஜா.தீபா
பதிப்பகம் : விகடன்











