பரிசல் கிருஷ்ணா
திரைப்படங்கள் என்பது மக்களை மகிழ்விக்கும் கலை. ஐயமில்லை. ஆனால் அந்தக் கலையினூடாக மக்களின் ரசனையை மேம்படுத்துவதாகவும், அவர்களின் பார்வையின் கோணத்தைத் தவறிலிருந்து சரிக்கு திருப்புவதாகவும் அமைய வேண்டும். அப்படி இருக்கும் படங்களே காலத்தையும் கடந்து நிற்கும்.
2025 அப்படியான ஓர் ஆண்டா என்று யோசிக்கையில் பல்வேறு விதமான வகைமைகளில் (Genre) இந்த ஆண்டின் படங்களை வரிசைப்படுத்தலாம் என்று தோன்றியது.
முக்கியக் குறிப்பு: இதில் குறிப்பிட்டுள்ள படங்கள் என்னுடைய ரசனையின் தெரிவே. பலவற்றில் பலருக்கு மாற்றுக்கருத்து இருக்கலாம். போலவே, நான் பார்த்த படங்களையே இந்த வகைமைப்படுத்துதலுக்குள் கொண்டு வந்திருக்கிறேன்.
2025ல் மட்டும் 280க்கும் மேற்பட்ட படங்கள் வெளியானதாக கேள்விப்படுகிறேன். கமல் – மணிரத்னம் இணையும் தக்லைஃப், ரஜினியின் கூலி போன்ற பல பெரிய படங்கள் பல்வேறு எதிர்ப்பார்ப்புகளுக்கு இடையே வெளிவந்தன. அதே சமயம் எந்த எதிர்பார்ப்புமின்றி வந்த படங்கள் கொஞ்சம் கொஞ்சமாக மக்களிடையே பேசுபொருளாகி ரசிகர்களின் ஆதரவையும் வசூலையும் பெற்றன.
ஒரு சில படங்கள் நல்ல படங்களாக இருந்தும் தியேட்டரில் மக்கள் கொண்டாடாமல் ஓடிடியில் பார்த்துவிட்டு, ‘நல்லாதானே இருக்கு… தியேட்டர்ல ஏன் சரியா ஓடல’ என்று தங்களையே கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வியை சமூகத்தை நோக்கி வைத்தனர். ஒரு சில வழக்கம்போல நன்றாக வந்திருக்க வேண்டிய – ஆனால் – முழுமையடையாத படமாக இருந்தன.
சரி, படங்களோடு அவற்றைக் குறிப்பிட்டால் இன்னும் எளிதாகப் புரியலாம். பெரிய எதிர்பார்ப்பு ஆனால் ஏமாற்றம் என்ற வகையில் வருடத்தின் ஆரம்பத்திலேயே வெளிவந்த இயக்குநர் பாலாவின் வணங்கானையே சொல்லலாம். அருண் விஜய் திறமையான நடிகர். அவரை பாலா எப்படி இயக்கியிருப்பார் என்ற எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்யவில்லை. வழமையான பாலா டெம்ப்ளேட்டில்தான் இருந்தது. ஏப்ரலில் வெளியான அஜித்தின் ‘குட் பேட் அக்லி’யும் அவ்வகைதான்.
வெறும் நாயக துதி மட்டுமே இருந்தது. தியேட்டரில் வசூல் ஓரளவுக்குப் பெற்றது என்று சொல்லப்பட்டாலும் ரசனையின் அளவீட்டைப் பின்னுக்குத்தள்ளிய படமாகவே ‘குட் பேட் அக்லி’ இருந்தது. ஒவ்வொரு இருபது நிமிடங்களுக்கும் ஒரு ‘கூஸ்பம்ப் மொமண்ட்’ என்பதை மட்டுமே குறிக்கோளாக வைத்துக்கொண்டு இயக்கிய படம். அதுவும் அஜித்தின் ரசிகர்களுக்கு மட்டுமே; ‘மற்றவர்களுக்கு இங்கே என்ன வேலை?’ என்று இயக்குநர் கேட்காமல் கேட்டிருந்தார்.
எதிர்பார்ப்பு என்று சொல்வது ஒரு சிறிய அளவில்தான் குறிப்பிடுகிறேன். பெரும்பாலும் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், ஒரு சில சமயம் டிரெய்லரை மட்டும் பார்த்து / அந்தப் படம் குறித்த வேறெந்தத் தகவல்களையும் பேட்டிகளையும் கொஞ்சம்கூடப் பார்க்காமல்தான் படம் பார்க்கச் செல்வேன். ஆனால் ‘இந்தப் படத்துக்கு எதிர்ப்பார்ப்பில்லாமல் பார்க்கச் சொன்னால் எப்படி?’ என்று எனக்கு நானே கேட்டுக்கொண்ட படம் – மணிரத்னம் ஆங்கிலத்தில் டைட்டில் வைத்த முதல் தமிழ்ப்படமான – தக் லைஃப். ஜுனில் வெளியானது.
இத்தனை வருடங்களாக நாம் கொண்டாடிக்கொண்டிருக்கும் இருவர், நாயகனுக்குப் பிறகு இணையும் படம். சிம்பு, நாசர், ஜோஜு ஜார்ஜ் என்று மனதிற்கு நெருக்கமான கலைஞர்கள் வேறு. ஆனால் சம்மட்டி அடியைக் கொடுத்த படம்.
அதே போலவே ‘உனக்கு அவன் அப்பாவா இருக்கலாம்; ஆனா அவன் எனக்கு நண்பன்’ என்று கமல் மகள் ஸ்ருதியிடம் ரஜினி சொல்லும் வசனம் மூலம் டிரெய்லரில் ஈர்த்த கூலியும் தியேட்டரில் திருப்தி தரவில்லை. படத்தைத் தாண்டி வெளியுலகின் விஷயங்களை வைத்து படத்தின் கருவுக்குள்ளே ரசிகர்களை ஈர்க்க நினைத்தால் இதுதான் கதி என்று தோன்றியது. கூலியின் எழுத்தில் ஏகப்பட்ட போதாமைகள் நிரம்பி இருந்தன.
செப்டம்பரில் வெளிவந்த மதராஸியையும் இவ்வகைமையில் சேர்க்கலாம். சிவகார்த்திகேயன் நடிக்க முருகதாஸ் இயக்கியிருந்தார். இதுவும் எழுத்தில் நிறைய குறைகளைக் கொண்டிருந்த படமாதலால் ஒன்றி ரசிக்க முடியாமல் போனது.
இவ்வருடத்தில் வந்த வேறு சில படங்களோ, பெரிய குழு, பெரிய நடிகர்கள் என்று இல்லமால் Content is the Queen என்பதை மீண்டும் நிரூபித்தது. அந்த வகைமையில் இவ்வருட முதல் படம் ஜனவரியில் வந்த குடும்பஸ்தன். மணிகண்டன் நடித்து ராஜேஸ்வர் காளிசாமி இயக்கியிருந்தார்.
இயக்குநரோடு இப்படத்தின் எழுத்தில் பங்குகொண்ட பிரசன்னா பாலசந்திரனும் குறிப்பிடவேண்டியவராகிறார். நக்கலைட்ஸ் யூட்யூப் சேனலின் முதுகெலும்பான இவ்விருவரின் புத்திசாலித்தனம் படம் முழுதும் பிரதிபலித்தது. கொஞ்சம் தடம் மாறினால் வெகு சீரியஸாக அழுகாச்சி காவியமாக ஆகியிருக்கக்கூடிய ஒரு கதையை சரிவிகிதமாக செண்டிமெண்ட், நகைச்சுவை, காதல், நட்பு என்று கலந்து நல்லதொரு உணர்வை ரசிர்களுக்கு வழங்கியிருந்தனர்.
இவ்வகையில் ஆச்சர்யமளித்து இவ்வருடத்தின் டாப் லிஸ்டில் தன்னை இருத்திக்கொண்ட இன்னொரு படம், மே மாதம் வெளியான டூரிஸ்ட் ஃபேமலி. தனிப்பட்ட முறையில் படத்தின் எழுத்தில் எனக்கு நிறைய குறைகளும், இறுதிக்காட்சியின் காட்சியமைப்பில் கேள்விகளும் உண்டென்றாலும் இத்திரைப்படம் ரசிகர்களுக்குத் தந்த நேர்மறை உணர்வுக்காகவே தியேட்டரில் கொண்டாடினர். நகைச்சுவை என்பதை, திணிப்பாக இல்லாமல் படமாக்கியிருந்தார் அபிஷன் ஜீவிந்த். நம்மையும் அறியாமல் வெடித்துச் சிரிக்கும் பல காட்சிகளை படம் கொண்டிருந்தது.
ஜூலையில் வெளிவந்த ‘‘பறந்து போ’-வும் ரசிகர்களை ஏமாற்றாத ஒரு படம். ராம் இயக்கத்தில் சிவா நடித்திருந்தார், ஆம், நடித்திருந்தார். அஜு வர்கீஸ் – அஞ்சலி ஜோடியின் கதாபாத்திரப்படைப்பு கவனமாகக் கையாளப்படிருந்தது. நாயகி கிரேஸ் ஆண்டனியின் நடிப்பு படத்திற்கு பலம் சேர்த்தது. அக்குழந்தையின் செயல்கள் அதிகப்பிரசங்கித்தனமாக ஒரு சாராரால் விமர்சிக்கப்பட்டாலும் படம் சொல்லும் விஷயத்திற்காக அதை மன்னிக்கலாம் என்று தோன்றியது.
ஜுனில் வெளியான மெட்ராஸ் மேட்னியும் ‘அட’ சொல்ல வைத்த இன்னொரு படம். தியேட்டரில் அவ்வளவாக ஓடவில்லை என்றாலும் ஒரு குடும்பத்தின் வாழ்வியலைக் கண்முன்னே ‘ஓவர் டோஸான’ காட்சிகளேதுமன்றி முன் நிறுத்தியது. காளி வெங்கட் நடிப்பு, படத்திற்கு பெரும் பலம் சேர்த்தது.
ஓடிடி என்றொரு ப்ளாட்ஃபார்ம் வந்த பிறகு, அதில் பார்த்துவிட்டு ‘அடடா நல்ல படமாச்சே’ என்று சொல்லப்படுகிற படங்கள் வருடா வருடம் அதிகரித்துக்கொண்டேதான் இருக்கின்றன. ஒரு சில, நல்ல படமாக இருப்பினும் தியேட்டரில் கவனிக்கப்படாமலும் – ஓடிடியில் அதீத கெடுபிடிகள் காரணமாக வெளிவராமலும் இருக்கின்றன.
இப்படியான வகைமையில் நாங்கள், ஜெண்டில் வுமன், காதல் என்பது பொதுவுடமை, எமகாதகி, பெருசு, மாயக்கூத்து, மாரீசன், ஹவுஸ் மேட்ஸ், பேட் கேர்ள், குமார சம்பவம் போன்ற படங்களைக் குறிப்பிடலாம்.
இவற்றில் மாரீசன் என்னை மிகவும் ஈர்த்த படம். கொலைக்கான காரணம், பல படங்களில் பார்த்த ஒன்று என்ற குறையைத் தாண்டி படம் அவ்வளவு பிடித்திருந்தது. வடிவேலுவின் பாத்திரப்படைப்பு, இடைவேளை வரை ட்விஸ்டை இழுத்துப்பிடித்து வைத்திருந்த திரைக்கதையாக்கம், ஃபகத் ஃபாசில், வடிவேலு இருவரின் நடிப்பு என்று ஒரு முழுமையான படம்.
ஜெண்டில் வுமன், காதல் என்பது பொதுவுடமை, பேட் கேர்ள், எம காதகி நான்குமே பெண் உலகத்தை மிக அருமையாகப் பேசியிருந்த படம். நாங்கள், குழந்தைகள் உலகைப் பேசியது. படம் நன்றாக இருந்ததால், இன்னும் நன்றாக மார்க்கெடிங் செய்து மீண்டும் அதை தியேட்டரில் வெளியிடும் உத்தேசத்தில் அப்படக் குழுவினர் இருப்பதாகத் தகவல். குமார சம்பவமும் அப்படியாக, மீண்டும் வெளியிடலாம் என்ற வகைதான்.
பாலாஜி வேணுகோபாலுக்குச் சொல்லிக்கொள்ளும்படியான ஓர் இயக்கம். ஆனால் தியேட்டர்களில் அதிக ஷோக்கள் இல்லாமல் பேசப்படாமலே போனது. பேட் கேர்ள், மிக நல்ல படைப்பு என்றாலும் அதற்கான தனிப் பார்வையாளர்களைத் தாண்டி வெகுஜனப் பார்வையாளர்கள் பக்கம் போகவில்லை.
மாயக்கூத்து ஒரு நல்ல எழுத்து. படமாக்கலில் இன்னும் மெனக்கெட்டிருக்கலாம். ஹவுஸ் மேட்ஸ் ஓடிடியில் நல்ல ஹிட். ரஜினியின் கூலியுடன் வந்ததால் தியேட்டர் கிடைக்கவில்லை. ஃபேண்டஸி என்ற வகைமையில் மிக நேர்த்தியாக எழுதப்பட்டிருந்தது அந்தப் படம்.
ஒரு பெண் தானாக உயிரை மாய்த்துக்கொண்டால் ஊர் பேசும் பேச்சுக்களை, பிணமானபின்னும் தட்டிக்கேட்டால் என்ன ஆகும் என்று வித்தியாசனான சிந்தனையில் பெண்ணியம் பேசியது எமகாதகி. பிரசார நெடியெல்லாம் இல்லாமல் நேர்த்தியாக எழுதப்பட்ட வசனங்கள் அப்படத்தைப் பேசவைத்தது.
பெருசு, கொஞ்சம் விட்டால் ஆபாசம் என்ற எல்லைக்குள் போகிற கதையை நகைச்சுவைப் பூச்சால் சமாளித்த படமாக பேசப்பட்டது.
DNA, காந்தாரா சேப்டர் ஒன்,, காந்தா ஆகிய படங்கள் ஏ செண்டர் எனப்படும் நகர எல்லைக்குள் ஓடியும் அதைத்தாண்டி பெரிதாக ஈர்க்கப்படாமலும் போன படங்கள் எனும் வகைமைக்குள் வந்தன. இவற்றில் DNA, தியேட்டரை விட ஓடிடியில் வந்தபோது இன்னும் பேசப்பட்டது.
மதகஜராஜா, தலைவன் தலைவி, மாமன், ஆண்பாவம் பொல்லாதது போன்றவற்றை ‘படம் ஹிட்தான். ஆனா தப்பான படம்!’ என்று சில படங்களை சொல்லலாம் என்று தோன்றியது. ஹிட் ஆகாத இட்லி கடையும் அப்படித்தான். அரசியல் சரிநிலையற்ற, பிற்போக்குத்தனம் பேசுகிற, முழுக்க ஒரு சார்புப் பார்வை கொண்ட மேல்பூச்சுப் படங்கள் இவை.
இவற்றில் மதகஜராஜா, எடுக்கப்பட்டு 12 வருடங்கள் கழித்து வெளியாகி வசூலில் வெற்றியடைந்த படம் என்ற ஒரு புதிய சாதனையை நிகழ்த்தினாலும் ரசனையை மிகவும் பின்னுக்குத் தள்ளுகிற காட்சிகள் வசனங்கள் கொண்ட படமாக இருந்தது.
பிரசார நோக்கோடு ஒரு சார்பு பேசும் படங்களைக்கூட விட்டுவிடலாம்; ஆனால் சரியான படம் என்ற போர்வையில் இப்படியான படங்கள் வருவதை வரவேற்பது தவறாகிவிடும்.
ஒரு சில படங்கள் பெரிய வெற்றியும் பெறாமல், தோல்விப்படம் என்று சொல்லவும் முடியாமல் சராசரியாக நின்றன. விடாமுயற்சி, வீரதீரசூரன் பாகம் 2, கிஸ், 3BHK, சக்தித்திருமகன், தண்டகாரண்யம், ஆரோமலே, அங்கம்மாள் போன்றவை அந்த வகைமை. இதில் 3BHK-யில் சரத்குமாரையும் தேவயானியையும் கொஞ்சம் மகிழ்ச்சியாகக் காட்டியிருந்தால் படம் வெற்றிப்பட வரிசையில் வந்திருக்கும். விடாமுயற்சி, வீரதீர சூரன் இரண்டுமே கலவையான விமர்சனங்களைப் பெற்றன.
2025-ன் திரைப்படங்கள் குறித்து எழுதுகையில் மறுவெளியீட்டுப் படங்களைக் குறிப்பிட்டே ஆகவேண்டும். சமீப ஆண்டுகளில் புதிதாக ஆரம்பித்த்திருக்கிற, இந்த ரீ ரிலீஸ் என்ற கலாசாரம் இவ்வாண்டு சற்று அதிகமாகவே இருந்தது. சிவாஜியின் ராமன் எத்தனை ராமனடி, எம்ஜிஆரின் இதயக்கனி, மலைக்கள்ளன், அஜித்தின் அட்டகாசம், விஜயகாந்தின் கேப்டன் பிரபாகரன் இந்த வருட ரி ரிலீஸ் பட்டியல். 2025ல் விஜய்யின் புதிய படம் எதுவும் வரவில்லை.
அவர் ரசிகர்களுக்காக சச்சின், மெர்சல், பகவதி, ஃப்ரெண்ட்ஸ், குஷி ஆகிய படங்கள் வெளிவந்து ஒரு சில தியேட்டர்களில் ஓரளவு மட்டும் ஓடியது. தக் லைஃப் கண்டு தளர்ந்திருந்த மணிரத்னம் – கமல் ரசிகர்களுக்கு நாயகன் ரி ரிலீஸ் ஆறுதல் தந்தது. புதிய அச்சில் கமலைக் கண்டும், தெளிவான ஒலியில் இளையராஜாவைக் கேட்டும் மகிழ்ந்து கொண்டோம். ரஜினிக்கு மனிதன், படையப்பா இரண்டு மறுவெளியீடுகள்.
படையப்பா காய்ந்து போயிருந்த தியேட்டர் உரிமையாளர்களுக்கு எல்லா செண்டர்களிலும் வசூலைக் கொடுத்தது. Misogynist வசனங்கள் படத்தின் குறை. திரைக்கதையில் ஒரு வெற்றிப்படத்திற்கான ஃபார்முலா என்பதை அத்தனை வருடங்கள் கழித்தும் தக்கவைத்துக்கொண்டிருக்கிற படமாக இருந்தது.
சரி, அப்படியானால் இந்த ஆண்டின் வெற்றிப்படங்கள்? ஏற்கெனவே டூரிஸ்ட் பேமலி பற்றிக் குறிப்பிட்டேன். அது வெற்றிப்படம்தான். அதைத் தாண்டி டிராகன், பைசன், டூட் மூன்றுமே இவ்வாண்டின் சிறந்த படங்களாக எழுத்திலும் பார்வையாளர்களின் கவனத்தைப் பெற்றதிலும் முன்னிலை வகிக்கின்றன. பைசன், ஒரு உண்மைக்கதையின் தாக்கத்தில் எழுதப்பட்டிருந்தாலும் மாரி செல்வராஜின் மிக நேர்த்தியான எழுத்தும், நடிகர்கள் தேர்வும் படத்தை தூக்கி நிறுத்தியது. டூட், இக்கால இளைஞர்களின் ரசனைக்கு எழுதப்பட்டிருந்தது.
அதில் ஒரு சில பிற்போக்குத்தனங்களை இயக்குநர் விவாதத்துக்குட்படுத்தி இருந்தார். அக்டோபரில் வந்த டுட் மற்றும் பிப்ரவரியில் வெளிவந்த டிராகன் இரண்டுமே, 2025 பிரதீப் ரங்கநாதனின் வருடம் என்று சொன்னது. அதிலும் என்னளவில் இவ்வாண்டின் ஜனரஞ்சகமான படமாக்கலிலும் சரியான கருத்திலும் மிகச்சிறந்த படமாக டிராகன் இருந்தது.
இனி 2026 பற்றி ஒரு சில வரிகள். ஜனவரியிலேயே – இதுவரை சொல்லிக்கொண்டிருப்பதன் அடிப்படையில் – விஜய்யின் கடைசி திரைப்படம் ‘ஜனநாயகன்’ வெளியாகிறது. அவர் கொடுத்த துப்பாக்கியை ஓரமாக வைத்துவிட்டு சிவகார்த்திகேயனும் அவரோடு ‘பராசக்தி’யை களத்தில் இறக்குகிறார்.
பராசக்தி பேசவிருக்கும் மொழி அரசியல் தமிழ்நாட்டின், தமிழர்களின் வாழ்வில் கலந்த ஒன்று என்பதால் அதைச் சரியாகக் கொடுத்திருக்கிறார்களா என்று இப்போதே பக் பக் என்கிறது. கருப்பு, ஜெயிலர் 2, சர்தார் 2 என்று பல படங்களும் வர இருக்கின்றன.
இதுவரை இறங்குமுகமின்றி களத்தில் இருக்கும் ப்ரதீப் ரங்கநாதனை, விக்னேஷ் சிவன் இயக்கிய படமான ‘லவ் இன்ஸ்யூரன்ஸ் கம்பெனி’யும் ஃபிப்ரவரியில் வெளியாகிறது. இவைபோக ராமின் ஏழு கடல் ஏழு மலை, மிஷ்கினின் டிரெய்ன், இதயம் முரளி, தனி ஒருவன் 2, கைதி 2, மூக்குத்தி அம்மன் 2, எல்லா வருடத்திலும் இந்த வருடம் வெளியாகும் என்று பட்டியலில் காட்டப்படும் துருவ நட்சத்திரம் என்று பல படங்கள் வரிசை கட்டி நிற்கின்றன.
2026-ல் திரைப்படங்கள் இன்னும் மக்களை மகிழ்ச்சிப்படுத்தவும், தியேட்டர் அதிபர்கள் மகிழ்ச்சி கொள்ளவும், ரசிகர்களுக்கு தியேட்டரில் குறைந்த விலையில் ஸ்நாக்ஸ் கிடைக்கவும், பெரிய வணிக வளாகமானாலும் பார்க்கிங் கட்டணம் குறைவாக இருக்கவும், விமர்சகர்கள் திரைப்படங்களை நேர்மையாக அணுகவும், தயாரிப்பாளர்களும் நாயகர்களும் விமர்சனங்களை கண்ணியமாக எதிர்கொள்ளவும், ஆடியோ லாஞ்சில் நிருபர்கள் புரிதலற்ற கேள்விகளைத் தவிர்க்கவும், அதே ஆடியோ லாஞ்சில் நாயகர்கள் உளறாமல் இருக்கவும், இன்னும் மக்கள் ரசனை மேம்படவும் எல்லாம் வல்ல லூமியர் சகோதரர்களின் ஆவி அருளட்டும்!











