ரமேஷ் வைத்யா
வச்சாம் பாரு வசனோம்
ஊமைப் படம்கூடப் பார்த்திருக்கிறேன். மீப்பழைய ரெஃபரென்ஸ் வேண்டாம் எனில், சார்லி சாப்ளின் படங்களை நினைத்துக்கொள்ளுங்கள்.
செய்தியாகத் தெரிந்துகொண்டது ஒன்று: திரையில் படம் ஓட, கதை சொல்ல ரெண்டு பேரும், இசைக்குழுவினரும் திரையின் கீழ் செயல்படுவார்கள் என்பது.
சினிமா பேச ஆரம்பித்ததுமே அது வசன மீடியமாக வெளிப்பட்டது. இந்தியாவிலோ வசனம் வேறு; பாட்டு வேறல்ல என்று இருந்தது. வசனம் பேசுவார்கள், நான்கு வார்த்தைகளுக்குப் பிறகு அந்த உரையாடல் அப்படியே பாட்டாடலாக மாறிவிடும். எம்பத்திரெண்டு பாட்டு, எழுவத்திநாலு பாட்டெல்லாம் கொண்ட படங்களைப் பார்த்த பாரம்பரியம் நமது.
நதியோ ஓடையோ ஓடிக்கொண்டிருக்க நாயகியின் கைக்குட்டை நழுவிவிழுந்து நாயகன் நெஞ்சில் போய்ப் படிவதெல்லாம் ‘ஆ’ என்று பார்க்கவைத்த பிற்காலக் காட்சிகள். அதற்கு முன்னெல்லாம் வசன மழைதான்.
கத்தியால் குத்துப்பட்டாலும், “ஹா… நல்வாழ்வின் நன்மைக்கென நாளும் நடைபோடும் நண்பனென்று நம்பியிருந்தேனே… நயவஞ்சகமாகக் கட்டாரியை ஏந்திவிட்டாயே… என் செய்வேன்? இத்துரோகத்தின் சுமையை எங்ஙனம் தாங்குவேன்?” என்று சொல்லிவிட்டுச் சாகும் ஆள்கள்தான் நம்மவர்கள்.
இந்தக் கொடூரம் மாறிய உடனேயே அடுக்குமொழிக் காலம் தொடங்கிவிட்டது.
“கரிகாலன் குறிவைத்தால் தப்பாது; தப்பினால் குறி வைக்க மாட்டான்” என்று அறைகூவிய எம்ஜிஆர். என் சின்ன வயது மூளையைக் குழப்பிவிடுவதே அந்த வசனகர்த்தாவின் வேலையா? குறி தப்பிய பிறகுதானே அது தப்பியது தெரியும்? ‘தப்புமென்று தெரிந்தால் குறி வைக்க மாட்டான்’ என்றுதானே இருக்க வேண்டும்?
அப்புறம், “வரி வட்டி கிஸ்தி” என்று தொடங்கிய உலகப் புகழ் வசனம். அது மேஜர் சுந்தர்ராஜனின் மீது சிவாஜி நடத்திய சொற்குஸ்தி.
“அம்பாள் எப்போதடா பேசினாள்?” – இப்போதும் பொருத்தப்பாடு கூடிய சிவாஜி. அல்லது வசனகர்த்தா கருணாநிதி.
“நா ஒரு தடவே சொன்னா நூறு தடவே சொன்ன மாதிரி” என்கிற ஏமாற்று வசனம் ஒன்று. ஒருவன் பெரியாள் என்றால் ஒரு தடவை சொன்னாலே காரியம் நடந்துவிட வேண்டாமோ?
“இத இட்லின்னா சட்னிகூட நம்பாது” என்பதும் அர்த்தத் தெளிவோ யோசனைத் திறனோ இல்லாதது. ஆனாலும் இவை வெற்றி பெற்றவை.
இவற்றையொத்த வசனங்களில் பல, அன்றாட வாழ்க்கைப் பயன்பாட்டில் ஏறிவிட்டது உங்களுக்கே தெரியும். “நெற்றிக்கண் திறந்தாலும் குற்றம் குற்றமே”, “மண்டபத்தில யாரோ எழுதிக் குடுத்தாங்களா?”, “நாட்டாம தீர்ப்ப மாத்திச் சொல்லு”, “ஆணியே புடுங்க வேண்டாம்”, “பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேணுமா?” போன்றவை. இதில் காலப்பிரமாணத்தை விட்டுவிடுங்கள். நினைவிலிருந்து வருபவை.
நினைவுக்குள் வசனங்கள் நுழைந்ததற்கு, பழைய காலத்தில் ஒரு சரித்திரம் இருக்கிறது. பொது இடங்களில் எல்பி ரெக்கார்டு பாட்டுப் போடும் கலாச்சாரம் இருந்தபோதே வசன ரெக்கார்டுகளும் வந்துவிட்டன. திருவிளையாடல் வசனம் இந்த வகைமைக்கு முன்னோடி. ‘கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி காமஞ்செப்பாது கண்டது மொழிமோ பயிலியது கெழீஇய நட்பின் மயிலியல் செரிஇயற்றரிவை கூந்தலின் நறியவும் உளவோ நீயறியும் பூவே இதுதான் எமது செய்யுள்’ என்று ஒரு வசனத்தைப் போன இடங்களிலெல்லாம் சொல்வேன். அதில் கடைசி மூன்று வார்த்தையும்கூட அந்தச் செய்யுளின் ஒரு பகுதி என்றுதான் நினைத்திருந்தேன்.
“அழைத்து வரவில்லை, இழுத்துவரப்பட்டிருக்கிறேன்” என்ற மனோகராவும், ‘கண்ணகி’யின் இளங்கோவனும் ‘பூம்புகார்’ படத்தின் கலைஞர் கருணாநிதியும் வசனகர்த்தாக்களாக நிலைபெற்றதெல்லாம் மேற்படி வகைமையே.
சமூகப் படங்கள் வந்த பிறகும் இந்த வாதை தீரவில்லை. விதி. ‘விதி’ படத்தின் வசனம் ஓடாத பட்டியோ தொட்டியோ கிடையாது. “அடுத்து என்ன செஞ்சான் எங்க தொட்டான்” என்ற டைகர் தயாநிதியின் குரல் இன்னும் என் மனக்காதில் கேட்கிறது.
கட்புலனே இல்லாவிட்டாலும் பார்க்க முடிகிற படங்களாக உருவாக்கிக்கொடுக்க, விசு வந்து சேர்ந்தார். காதே போதும். வசனங்களோ ‘போதும் போதும்’. உதாரணங்கள் கொடுத்து ரணப்படுத்த விருப்பமில்லை.
எல்லா கேரக்டர்களும் ஒர்ரே விதத்தில் வசனம் பேசும் புதுமையைச் செய்து காட்டிய டி.ராஜேந்தர் எம்.ஏ. மறக்கப்படக்கூடியவரா?
இப்படியாக தமிழ்த் திரையின் தொடக்க காலம் வசனத்தின் பொற்காலமாகவே திகழ்ந்தது. வசனத்தினூடாகவே நாம் சினிமாவைப் புரிந்துகொள்ள வேண்டியிருந்தது.
கறுப்பு வெள்ளைக் காலம் தொட்டு வசனங்களால் மனதில் நின்றுவிட்ட சில காட்சிகள், கருத்துகள் இப்போது என் மனதில் நிழலடிக்கின்றன.
‘குலமா குணமா’ படத்தில் சகோதரர்களுக்கிடையே சொத்துத் தகராறு. அண்ணன் சிவாஜி. மொத்தச் சொத்துப் பத்திரங்களையும் ஒரு நாற்காலியில் வைத்தார். பக்கத்தில் இருந்த நாற்காலியில் தான் அமர்ந்தார். தம்பியைப் பார்த்துச் சொன்னார்: “வேணும்ங்கிறதை எடுத்துக்க.” பாருங்கள், பன்ச் இருப்பது மாதிரியே தெரியவில்லை; ஆனால், என் மனதில் இருக்கிறது.
“அபிராமியைப் பத்திப் பேசும்போது அழகாப் பேசுற. மத்த விஷயங்களைப் பத்திப் பேசுனா பைத்தியக்காரன் மாதிரி உளர்றியே?” என்ற கேள்விக்கு குணா சொல்கிறான்: “அபிராமி உள்ள இருக்கு. வார்த்தையெல்லாம் வெளிய இருக்கு.”
குருதிப்புனல் படத்தில் ஒரு வீச்சு: “உன்னை போலீஸ் ஆக்கியிருக்கிற இதே சிஸ்டம்தான் என்னைத் தீவிரவாதி ஆக்கியிருக்கு.”
ஒரு படத்தின் மொத்தச் செய்தியை பதினெட்டு சொற்களில் சொன்னது ‘உதிரிப்பூக்கள்’ கிளைமாக்ஸ். “நீங்க எல்லாரும் ரொம்ப நல்லவங்களா இருந்தீங்க. இன்னிக்கு உங்க எல்லாரையும் நான் என்னைப் போல மாத்திட்டேன். நான் செஞ்ச தவறுகள்லேயே பெரிய தவறு இதுதான்.”
இதற்கு நீண்ட இடைவேளைக்குப் பிறகு, படத்தில் வசனம் ஒவ்வொன்றும் கத்தி போல் இருக்கிறது என்று நான் உணர்ந்த படம் ‘சதுரங்கவேட்டை’. படம் முடிந்த நிமிடம் பத்துப் பதினைந்து போன்களைப் போட்டு, பார்க்கச் சொல்லிப் பரிந்துரைத்தது நினைவில் இருக்கிறது. “ஒரு பொய் சொல்றோம்னா அதுல உண்மையும் கலந்திருக்கணும்” என்பது ஒரு பருக்கைப் பதம். பொய்யர்கள் நம்பகத்தன்மை பெறுவதற்கான உத்தியாக இதைப் பயன்படுத்துவதை நடைமுறையில் பார்க்கிறோம். இந்தப் படம் முழுதுமே கூர்ந்த வசனங்கள் நிரம்பியிருக்கும். இன்னொரு முறை பார்க்க வேண்டும்.
வசனத்தாலேயே முக்கியமான இடத்தைக் கடந்த இன்னொரு காட்சி. படத்தின் பெயர் ராசுக்குட்டியாகலாம். ஏதோ ஒன்று நடக்கவில்லை என்றால் ‘இந்த இடத்தை விட்டு எழுந்திருக்க மாட்டேன்’ என்று நாயகன் சத்தியம் செய்திருப்பான். அது நடக்காது. ஆனாலும் நாயகன் எழுந்திருக்க வேண்டிய சூழ்நிலை. பக்கத்துப் பாத்திரம், ‘சத்தியமெல்லாம் செஞ்சியே, எந்திரிச்சுப் போனா அசிங்கமாப் பேசுவாங்களே…’ என்று கேட்கும். அன்றாட வாழ்வில் சத்தியங்கள் மீறப்படுவது சாதாரணம்; தமிழ்த் திரைக் கதையில் இது மிகவும் சிக்கலான இடம். இதை ஒரு வசனத்தால் கடந்திருப்பார் இயக்குநர். “செத்த நாய் மேல எத்தனை லாரி ஏறினா என்ன?”
என்ன ஒரு புத்திசாலித்தனம்!
இப்படிப்பட்ட வசனங்கள் கோலை எடுத்து ஓச்ச, ரெண்டே எழுத்தில் ஒரு வசனமும் தமிழ்நாட்டை உலுக்கியது நினைவுக்கு வருகிறது.
தமிழ்ப் படமென்றாலும் இந்த வசனத்தின் மூலாதாரம் தெலுங்காக இருக்கலாம்.
பயங்கரமான வில்லன். அவனையே அஸால்ட் செய்துவிடும் ஹீரோ. இருவரும் சொல் யுத்தம் செய்கிறார்கள்.
“ஏய்…”
“ஏய்…”
(போல்டு எழுத்துகளில்) “ஏய்…”
“ஏய்…”
(இன்னும் உரத்த குரலில்) “ஏஏஏய்…”
“ஏஏஏய்…”
கட்டக் கடைசியாக,
“ஏஏஏஏய்ய்ய்ய்…”
“ஏஏஏஏய்ய்ய்ய்…”
அவ்வளவுதான் வில்லன் தோற்றுப்போய்விடுகிறான்.
‘அட இது நல்லா இருக்கே பாஸு’ என்று ஒரு படத்தின் தலைப்பாகவே இதை வைத்தார்கள். ‘ஏய்.’ (இதை ஆங்கிலத்தில் ‘ஆய்’ என்று வாசிக்கும்படி லிபி மாற்றம் செய்திருந்தார்கள்.)
இருபத்தேழு ஆண்டுகளுக்கு முன்பு பார்த்த ஒரு படத்தின் வசனம் இன்றும் என்னை அசைத்துப் பார்ப்பதை இங்கேதான் சொல்ல வேண்டும்.
‘வேட்டி மடிச்சு கட்டு’ என்று ஒரு மகா சாதாப் படம். நடிப்பில் முன்னோரைத் தூக்கிச் சாப்பிடும் நக்மா வேறு. எனக்குப் பிடிக்கவே பிடிக்காத எஸ் எஸ் சந்திரன் இடம்பெற்ற காட்சி.
பம்பாய். தமிழ் பேசுகிறானே என்று பழகிய சந்திரனைத் தன் வீட்டுக்கு அழைக்கிறார் பாக்யராஜ். நக்மாவுக்குப் பிடிக்கவில்லை. வேண்டா வெறுப்பாக ரெண்டு சப்பாத்தி தருகிறார். ஒன்றை பாக்யாவின் மகனே எடுத்துக்கொள்கிறான். ஜன்னலுக்கு வெளியே நின்று கெஞ்சும் பிச்சைக்காரருக்குப் பாதி சப்பாத்தியைக் கொடுக்கிறார் சந்திரன். மீதியைச் சாப்பிட்டுவிட்டுப் போய்விடுகிறார் என்பது போல் ஒரு காட்சி.
இடையில், கோழையான பாக்யராஜ் கொலை ஒன்றைப் பார்த்துவிட, அக்கொலையைச் செய்த ரவுடி இவரைக் கொல்லத் துரத்துகிறான். யாரென்று தெரியாத, தாதா டைப்பான ஓர் ஆள் பாக்யராஜையும் குடும்பத்தையும் காப்பாற்றுகிறார். அவரை வாடகைக்கு அமர்த்தி இவரைக் காப்பாற்றியது சந்திரன் என்று தெரியவருகிறது.
எப்படி அந்த ஆளை அமர்த்தினாய்?
என் வாழ்வாதாரமான குதிரை வண்டியையும் கால் ஏக்கர் நிலத்தையும் விற்றேன்.
ஏன் அப்படிச் செய்தாய்?
இங்கே தான் அந்த வசனம் வருகிறது. “நான் உன் வீட்ல அரைச் சப்பாத்தி சாப்பிட்டிருக்கேனே…”
இதை டைப் அடிக்கும்போதும் நெஞ்சு நெகிழ்கிறது.
விகடன் விமர்சனக் குழுவுக்காக அணியினரோடு பார்த்த படம். இருட்டுக்குள் நான் அழுததை ஒருவர் பார்த்துவிட, ஒரு வருட காலத்துக்கு என்னைக் கிண்டல் செய்ய அவர்களுக்கு கன்டென்ட் கிடைத்தது. ‘இந்த உலகத்துல வேட்டி மடிச்சுக் கட்டு பாத்து அழுத ஒரே நபர்னு ரமேஷ் வைத்யா வரலாற்றுல இடம் பிடிச்சுட்டாப்டி…’
ஆனால், இத்தனை கலைகளும், இலக்கியங்களும் அந்தக் கண்ணீரைத்தான் தேடுகின்றன என்று இன்னமும் நான் நம்புகிறேன்.











