பாஸ்கர் சக்தி
தன் வாழ்நாளின் மாஸ்டர் பீஸ் திரைப்படத்தை, சரியாகச் சொன்னால் இந்திய சினிமாவின் மாஸ்டர் பீஸ்களில் ஒன்றை உருவாக்கிக் கொண்டிருந்த ஒரு கலைஞன், அது நிறைவடையப் போகும் தருணத்தில், தன் வாழ்க்கையை முடித்துக் கொள்ள நினைப்பது கற்பனையே செய்ய முடியாத ஒரு நிகழ்ச்சி. ஆனால் குருதத்தின் வாழ்க்கை அப்படியான சம்பவங்களும், துயரங்களும் நிறைந்தது.
தனி மனிதனின் வாழ்வு ஒற்றைப்படையானது அல்ல. அது பல்வேறு பகுதிகளாக பிரிக்கப்பட்டிருக்கிறது. குடும்பம், சமூகம், தொழில், வெளியுலகம், உறவுகள் , நட்புகள் என்று பல்வேறு தளங்களில் நாம் செயல்படுகிறோம். இவை அனைத்துக்கும் முகம் காட்டியவாறு நாம் இயங்குகையில், இதற்கிணையாக நமது உள்மன உலகம் ஒன்று இயங்கியபடியே இருக்கிறது. புற உலகில்,இந்த அனைத்து தளங்களிலும் நிகழும் ஒவ்வொன்றும், நம் உள்மன உலகை பாதிக்கிறது.
உலகின் மேற்பரப்பு நாம் வாழும் புற உலகென்று கொண்டால், நமது அக உலகம் ஒரு மகாசமுத்திரம். அதனுள்ளே நிகழும் கொந்தளிப்பும், எரிமலை வெடிப்பும், பிரளயமும் வெளி உலகத்துக்கு சட்டென்று தெரியாது. உள்ளிருக்கும் எரிமலை வெடிக்கையில்தான் மேற்பரப்பில் அது சுனாமியாக வெளிப்படும். குருதத்தின் தற்கொலை முயற்சியைப் போல்.
வெளி உலகில் `ப்யாஸா’ வை உருவாக்கிக் கொண்டிருந்த குருதத்தின் மனதுக்குள் இருந்த கொந்தளிப்பும், பிரளயமுமே அவரை தற்கொலை எண்ணத்தை நோக்கித் தள்ளி இருக்கிறது. குடும்ப வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சினைகள்தான் அதற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது. அதிகமான ஓப்பியம் உண்டு அவர் தற்கொலைக்கு முயன்றிருக்கிறார்.
அந்த முயற்சியில், அவரது கண்பார்வை சட்டென்று மிக மோசமாக மங்கிப் போய் விட, `என்னால் பார்க்க முடியவில்லை,’ என்று கதறி இருக்கிறார். ஆனால் மருத்துவமனைக்கு சரியான நேரத்தில் கொண்டு செல்லப்பட்டு காப்பாற்றப்பட்டு விட்டார்.
(அது அவர் அடித்த முதல் எச்சரிக்கை மணி. ஆனால் அன்றைய காலகட்டத்தில் யாரும் அதற்கான காரணத்தையோ, வேர்களையோ தேடவோ, அதற்கான சிகிச்சைகளையோ, தீர்வுகளையோ விவாதிக்கவோ விரும்பவில்லை. அவர் தனக்குள் நிகழ்ந்த துயர் மிகுந்த போராட்டத்தை இறுதி வரை அனுபவித்தார். அதற்கு அவரது இயல்பும் ஒரு முக்கிய காரணமாக இருந்திருக்கிறது )
ஒரு வழியாக `ப்யாஸா’ திரைப்படம் நிறைவடைந்தது. அதன் முதல் திரையிடல் சில சினிமா முக்கியஸ்தர்களுக்காகத் திரையிடப் பட்டது. ஆனால் படத்தைப் பார்த்த சிலர் , “இந்தப் படம் தேறாது, ரொம்ப சோகம்,” என்றெல்லாம் குருதத்தின் காதுபடவே பேசினார்கள். பல நாள் உழைப்பு, பார்த்துப் பார்த்து செதுக்கிய ஒரு படம், குருதத்தின் ஒட்டு மொத்த டீமும் `ப்யாஸா’ குறித்து பெரும் எதிர்பார்ப்புடன் இருக்கையில், இப்படியான ஆரம்ப கட்டப் பேச்சுகள் அவர்களுக்குள் லேசான பதட்டத்தை உருவாக்கியது. ஆனாலும் அவர்கள் நம்பிக்கையோடு இருந்தார்கள்.
`ப்யாஸா’ ( தாகம்) ரிலீஸ் ஆனது.
ஆரம்பத்தில் பார்த்து விட்டு தேறாது என்று சொன்னவர்களின் அத்தனை கணிப்புகளையும் தகர்த்தெறிந்தது `ப்யாஸா’. அது அடைந்தது மிகப்பெரும் வெற்றி. எல்லா இடங்களிலும் பாக்ஸ் ஆஃபிஸ் ஹிட், சென்னை போன்ற தென்னிந்திய நகரங்களிலும் கூட பல வாரங்கள் ஹவுஸ்ஃபுல்லாக ஓடியது `ப்யாஸா’.
அதுவரையிலும் குருதத் பற்றி இருந்த மதிப்பீடுகளையும் மாற்றிப் போட்டது `ப்யாஸா’. அதுவரை குருதத் ஒரு கூர்மையான, திறமை மிகுந்த டெக்னீஷியன். கமர்ஷியல் படங்களை வெற்றிகரமாக எடுப்பவர் என்கிற அளவில் மட்டுமே இருந்த கருத்தை மாற்றி, குருதத்தை ஒரு கலைஞன் என்று நிறுவிய காவியம் `ப்யாஸா’.
இன்று பார்க்கையிலும் கூட, `ப்யாஸா’ அது ஒரு க்ளாஸிக் என்பதை உறுதிப்படுத்தும் படமாக இருக்கிறது. அன்றைய காலகட்டத்தில் இருந்த சினிமாவோடு ஒப்பிட்டுப் பார்க்கையில் , பல விதங்களில் `ப்யாஸா’ ஒரு முன்னோடியாக இருந்ததையும், அதன் பின் வந்த பல படங்களில் `ப்யாஸா’வின் சாயல்கள் இருப்பதையும் உணர முடிகிறது.
`ப்யாஸா’ திரைப்படத்தில் நான் உணர்ந்தவை பற்றிச் சொல்ல விரும்புகிறேன். ப்யாஸா பார்க்காதவர்களும் இதை வாசிக்கக் கூடும்..எனவே அவர்களுக்காக, இரண்டாவது அத்தியாயத்தில் அளித்த கதைச்சுருக்கத்தை அடைப்புக் குறிக்குள் தருகிறேன். கதை தெரிந்தவர்கள் இந்தக் கதைச்சுருக்கத்தை தேவையில்லை எனில் கடந்து செல்லலாம்.
( கதையின் நாயகன் விஜய் ( குருதத் ) ஒரு மென் மனம் கொண்ட கவிஞன். அவனது கவிதைகளை யாரும் அங்கீகரிக்கவில்லை. அவனது சகோதரர்கள் அவனை சுத்தமாக மதிப்பதில்லை. மாறாக சிறுமைப்படுத்தியபடியே இருக்கின்றனர். லௌகீக உலகம் கலைஞர்களை புரிந்து கொள்ள மறுப்பதும் , புறக்கணிப்பதும் என்றும் நடப்பதுதானே.
அவனை அவனது தாய் மட்டுமே அரவணைத்து அன்பு செலுத்துகிறாள். விஜய் யால் அவளது அன்பை ஏற்க முடிந்தாலும், சகோதரர்களின் அவமதிப்பை சகிக்க முடியாமல் ஒரு நாடோடி போல் ஊரெங்கும் அலைந்து திரிகிறான். பூங்காக்களில் படுத்து உறங்குகிறான். வீடற்று அலையும் மனிதர்களில் ஒருவனாக இருக்கிறான். மூட்டை தூக்குகிறான்.
அவனது கவிதைகளை பப்ளிஷர் ஒருவர் அவமானப்படுத்துகிறார். விஜய்யின் கவிதைகளை அவனது சகோதரர்கள் எடைக்குப் போட்டு விடுகின்றனர். அதனை பாலியல் தொழிலாளி குலாப் ( வஹிதா ரஹ்மான் ) வாங்கிப் போய் விடுகிறாள். ஒரு நாள் இரவு பூங்காவில் விஜய் இருக்கையில் அவனது கவிதை வரிகளைப் பாடியவாறே குலாப் அறிமுகமாகிறாள். தனது கவிதைகளை ஒரு பெண் பாடுவதால் ஈர்க்கப்பட்டு விஜய் அவள் பின்னால் செல்ல, அவளோ ஒரு வாடிக்கையாளனாக இவனை நினைத்துக் கொள்கிறாள். அவனிடம் பணம் இல்லை என்றதும் கடுமை காட்டுகிறாள். ஆனால் அவன் சென்ற பிறகு அவன்தான் பழையபேப்பர் கடையில் தான் வாங்கிய கவிதைகளை எழுதிய கவிஞன் என்று அறிகிறாள். அவன் பால் ஒரு ஈர்ப்பும் , மரியாதையும் கொள்கிறாள்.
விஜய் ஒரு நாள் தனது முன்னாள் காதலி மீனாவை ( மாலா சின்ஹா ) சந்திக்கிறான். அவனுக்கு தன் கல்லூரி, காதல் நாட்கள் நினைவுக்கு வருகின்றன. அப்போது வாழ்க்கை பற்றிய வண்ணமயமான கனவுகள் அவனுக்கு இருந்தன. காதலி இருந்தாள். ஆனால் அந்தக் காதலி விலகிப்போய் விட்டாள். கனவுகள் சாயம் போய், ஒரு தோல்வியடைந்த மனிதனாக, அங்கீகாரம் அற்ற கவிஞனாக தற்போதைய விஜய் ஆகி விட்டான்.
அதன் பின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு ஒன்று அவனது கல்லூரியில் நடக்கிறது. ஏழ்மைத் தோற்றத்துடன் அங்கு செல்லும் விஜய் அங்கே மேடையில் தன் சோகம் நிறைந்த வாழ்வைப் பாடுகிறான்.
அங்கே விஜயின் முன்னாள் காதலி மீனாவின் கணவன் கோஷ் ( ரெஹ்மான் ) விஜயை சந்திக்கிறான். அவனுக்கு விஜய் மீது ஒரு வித சந்தேகம் ஏற்படுகிறது. அவன் ஒரு பப்ளிஷர். தனது அலுவலகத்தில் விஜய்க்கு ஒரு சின்ன வேலையை தருகிறான். அவன் அடிமனதில் விஜய்க்கும் தன் மனைவிக்கும் நடுவில் ஏதோ இருக்கிறது என்ற எண்ணம் இழையோடியபடி இருக்கிறது. விஜய் அவனிடம் தன் கவிதைகள் பற்றி சொல்லி அதனை பிரசுரிக்க இயலுமா என்று கேட்க, அவன் அதனை ஒரு பொருட்டாகவே கருதாமல் அலட்சியப்படுத்துகிறான்.
ஒரு நாள் மீனாவுக்கும், விஜய்க்கும் நடுவில் ஒரு உரையாடல் நிகழ்கிறது. தங்களது காதலை விட்டு தான் ஏன் விலகினேன் என்று மீனா விஜய் யிடம் சொல்கிறாள். இந்த உரையாடலைக் கேட்கும் கோஷ் கடும் கோபம் கொண்டு விஜயை வேலையை விட்டு வெளியேற்றுகிறன்.
விஜய்யை துன்பங்கள் தொடர்கின்றன. அவன் தாய் மறைந்த செய்தியைக் கூட அவன் சகோதரர்கள் இவனிடம் சொல்லவில்லை. இவனை புறக்கணித்து இறுதிச்சடங்கினை செய்கின்றனர். விஜய் உடைந்து போகிறான்.
குலாப் இவன் மீது ஒரு விதமான காதலுடன் இருக்கிறாள். ஆனால் அதனை முழுமையாக வெளிப்படுத்த இயலாத மனநிலையில் அவள் இருக்கிறாள்.
வாழ்வின் மீது விரக்தியும் சலிப்பும் கொண்ட விஜய் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுக்கிறான். தன் முடிவை ஒரு கடிதத்தில் எழுதி தனது கோட் டில் வைத்துக் கொண்டு ரயில்வே ட்ராக்கை நோக்கி நடக்கிறான். வழியில ஒரு பிச்சைக்காரன் குளிரில் நடுங்குவதைப் பார்த்து தனது கோட்டை கழட்டி அவனிடம் கொடுத்து விட்டு செல்கிறான். பின்னால் வரும் பிச்சைக்காரன் ரயிலில் அடிபட்டு இறக்க, அந்த விபத்தில் விஜய் அடிபட்டு மயங்கி விழுகிறான்.
பிச்சைக்காரன் உடலில் இருந்த கோட்டும் , அதிலிருந்த கடிதமும் இறந்து போனது விஜய் என்ற எண்ணத்தை ஏற்படுத்தி விடுகிறது. குலாப் செய்தி தெரிந்து அதிர்ச்சியடைகிறாள். இவை எதையும் அறியாத விஜய் எங்கோ மருத்துவமனையில் மயக்கத்தில் கிடக்கிறான்.
குலாப் உடைந்து போகிறாள். தன்னிடமிருந்த நகைகள் எல்லாவற்றையும் திரட்டி கோஷ் ஷிடம் கொடுத்து விஜய் யின் கவிதைகளை பதிப்பிக்கிறாள்.
விஜய் யின் கவிதைகள் வெளிவந்தவுடனே பெரும்புகழை அடைகின்றன. அந்த புத்தகம் அமோகமாக விற்கிறது. விஜய் எனும் கவிஞன் உடனடியாக பெரும்புகழ் பெறுகிறான்.
மருத்துவமனையில் மயக்கம் தெளிந்து இதை அறியும் விஜய் நான்தான் அந்தக் கவிஞன் என்று சொல்ல அதனை நம்பாமல் அவனை மனநல மருத்துவமனையில் சேர்த்து விடுகின்றனர். ஒரு சிறையில் இருப்பது போல அங்கு இருக்கிறான். அந்த விஷயம் தெரிந்தும் கூட விஜய்யின் நண்பனும், சகோதரர்களும் விஜயை மீட்க முன்வரவில்லை. அது மட்டுமல்ல.
இவன் விஜய்தான் என்று அடையாளம் காட்டவும் மறுத்து விடுகின்றனர். ஏனென்றால் இப்போது விஜய் யின் கவிதைகள் மூலம் அவர்களுக்கு கிடைக்கும் பணத்தை அவர்கள் இழக்க விரும்பவில்லை. விஜய் மனநலவிடுதியிலேயே இருக்கிறான். வெளி உலகிற்கு விஜய் என்பவன் மறைந்து விட்ட, புகழ் பெற்ற மகோன்னதமான கவிஞன்.
ஓராண்டு ஆகிறது. இறந்து போன கவிஞன் விஜய் ( குருதத் ) யின் முதலாமாண்டு அஞ்சலி கூட்டத்துக்கு மனநல விடுதியில் இருந்து தப்பி வரும் விஜய் வருகிறான். அவனது புகழையும், கவிதைகளின் சிறப்பையும் அனைவரும் போற்றிப்பாடுவதை கசப்புடன் கேட்கிறான். உயிருடன் இருக்கையில் இகழ்ந்து, இறந்த பின் புகழ்பாடும் சமூகத்தின் அருவருப்பான போலித்தனத்தை பற்றிப் பாடுகிறான்…அங்கே ஒரு கலவரம் வெடிக்கிறது.
திரும்பி வந்தது விஜய் தான் என்று உலகம் அறிகிறது . இப்போது விஜய் மதிப்பு வாய்ந்த ஒரு மனிதன். அவன் திரும்ப வந்து விட்டான் . எனவே அவனை வரவேற்க ஒரு கூட்டம் ஏற்பாடாகிறது. ஆனால் இப்போது விஜய் இந்த உலகம், இந்த மனிதர்களின் சுயநலம், பேராசை, வேஷம் அணிந்த முகங்கள், போலியான உறவுகள் அனைத்தின் மீதும் வெறுப்பு கொண்டவனாக இருக்கிறான். அந்தக் கூட்டத்தில் தான் அந்தக் கவிஞன் விஜய் இல்லை என்று அறிவிக்கிறான். கூட்டம் வெறிபிடித்து கத்துகிறது. குழப்பமும் கலவரமும் சூழ அங்கிருந்து வெளியேறுகிறான்.
தன்னை மனதார நேசித்த, தன்னை கவிதைகளை ஆரம்பத்திலேயே கண்டுகொண்டு கொண்டாடிய, இவனது மறைவுக்குப் பின் அந்த கவிதைகளை உலகுக்கு கொண்டு வந்த நல்ல ஆத்மா, ஒழுக்கம் அற்றவள் என்று சமூகம் மதிப்பிடும், பாலியல் தொழிலாளியான குலாபை ( வஹீதா ரஹ்மான் ) தேடிச் செல்கிறான் .
“ என்னோடு வந்து விடுகிறாயா? இந்த பைத்தியக்கார உலகிலிருந்து விலகி தொலைதூரம் சென்று விடுவோம்” என்று அழைக்கிறான். அவனுக்காகவே எப்போதும் காத்திருக்கும் குலாப் அவனுடன் கிளம்புகிறாள். இருவரும் தொடுவானத்தை நோக்கி நடந்து செல்கின்றனர்.
இதுதான் ப்யாஸா திரைப்படத்தின் சுருக்கமான கதை. )
ஒரு திரைப்படத்தின் துவக்கக் காட்சி என்பது மிகவும் முக்கியமானது. சிறந்த திரைப்படங்களில் முதல் காட்சியிலேயே, அந்தப் படம் சொல்ல வருகிற விஷயத்தைப் பற்றிய ஒரு செய்தி, சில சமயங்களில் கதையின் ஆன்மா, உணர்த்தப்பட்டு விடும். `ப்யாஸா’ வின் முதல் காட்சியில் ஏகாந்தமாய் படுத்திருக்கும் விஜயின் மீது மரத்திலிருந்து ஒரு மலர் விழுகிறது விஜய் இயற்கையை, உலகை ரசித்துப் பாடுகிறான். ஒரு மலரின் மீது அமர்ந்திருக்கும் வண்டை ரசிக்கிறான்.
“ புன்னகைக்கும் மலர்கள், மணம் வீசும் தோட்டம்
ஒளியும், வண்ணங்களும் நிரம்பிய பாதைகள்.
மலர்களின் தேனை உண்டு வண்டுகள் மயங்குகின்றன.”
என்று அவன் ரசித்துப் பாடுகையில் , அந்த வண்டு புல்வெளியில் அமர, ஒரு ஷு அந்த வண்டை மிதித்து நசுக்கியபடி கடந்து செல்கிறது.
அதனைக் கண்டதும் அவனது குரலும், முகமும் மாறுகின்றன. தொடர்ந்து பாடுகின்றான்.
“ உன்னதமான இயற்கையே, உனக்கு நான் என்ன தர இயலும்,
என்னிடமிருப்பதெல்லாம் சில துளி கண்ணீரும், சில பெருமூச்சுகளும் மட்டுமே “
என்று பாடியபடி, அந்த இயற்கை வனப்பு மிகுந்த இடத்திலிருந்து நகரை நோக்கிச் செல்கிறான். அவனுடைய பின் பக்கத்திலிருந்து இந்த ஷாட் காட்டப்படுகிறது. அவனுக்கு உவப்பான கற்பனை உலகத்திலிருந்து, கசப்பு நிறைந்த எதார்த்த உலகை நோக்கிச் செல்கிறான் என்பது உணர்த்தப்படுகிறது.
ஒரு கலைஞனை, சொரணையற்ற இந்த சமூகம் நசுக்குவதுதான் படத்தின் செய்தி. அது முதல் காட்சியிலேயே சொல்லப்பட்டு, உணர்த்தப்பட்டு விடுகிறது.
1957 இல் வெளியான இந்தப் படம் மிக நவீனமான காட்சியமைப்புகளை கொண்டிருக்கிறது. விஜய்யின் தற்போதைய வறுமை நிலையில் தொடங்கும் படம், ஃப்ளாஷ்பேக்கில் அவனது கல்லூரிக்காதலைக் காட்டுகிறது. அந்த ஃப்ளாஷ் பேக் ஒரே தடவையாக காட்டப்படவில்லை. அது இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு, வெவ்வேறு தருணங்களில் காட்டப்படுகிறது. அது ஒரு புத்திசாலித்தனமான திரைக்கதை அமைப்பு.
பிரிந்து போன காதலியை பல ஆண்டுகள் கழித்து விஜய் பார்க்கிறான். அவள் ஒரு விலை உயர்ந்த காரில் வந்து இறங்குகிறாள். அவளையே பார்க்கிறான். அவளது தற்போதையை அந்தஸ்து அவளது தோற்றத்திலேயே தெரிகிறது. அவளைப் பார்த்தபடியே இருக்கும் விஜயின் முகத்தின் க்ளோஸ் அப்பில் ஃப்ளாஷ்பேக்கின் முதல் பகுதி விரிகிறது.
கல்லூரியில் இருவரும் வகுப்பில் சந்திப்பது, விஜய் அவள் மீது உடனடியாக ஒரு கவிதையை பாட அதில் அவள் கவரப்பட்டு, இவனை பார்ப்பது. காதலுடன் அவனை பார்க்கும் மீனாவை ப்ரொபசர் அட்டென்டன்ஸுக்காக அழைக்க அவள் `எஸ் சார்,’ என்பதோடு அந்தக் காட்சி கட் செய்யப்பட்டு, அடுத்து இருவரும் ஷட்டில்காக் ஆடுகிறனர்.
வலையில் பந்து மாட்டிக்கொள்ள இருவரும் ஒரே நேரத்தில் அதனை எடுக்க முயல, பார்வைகள் சந்திக்கின்றன. விரல்கள் லேசாகத் தொட்டுக்கொள்கின்றன. ( காதலுக்கு மரியாதை படத்தில் விஜயும் , ஷாலினியும் புத்தகத்தை தொடும் முதல் சந்திப்பு நினைவுக்கு வருகிறது ) அடுத்து ஷாட்டில் அந்தப் பந்து செடிகளிடையே விழ, அதனை எடுக்கும் மீனாவின் கரங்களை விஜய்யின் கரங்கள் பற்றி அந்தப் பந்தை வாங்க, இருவருக்குமான நெருக்கம், விஜய் அவளை இழுத்து அணைப்பது, உடனே ஒரு சிறிய பாடல், அந்த வயதுக்குரிய துள்ளலுடன் அந்தப் பாடலில், `நாம் ஒரு போதும் பிரிய மாட்டோம்’, என்று அவர்கள் பாடுவதோடு ஃப்ளாஷ்பேக்கின் முதல் பகுதி முடிவடைகிறது.
அதன் பிறகு விஜய்யின் தற்போதைய பாடுகளை சொல்லும் சில காட்சிகளுகள். அதனையடுத்து கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பில் விஜய் மேடையேறி, தற்போதைய தனது துயர்மிகுந்த நிலை பற்றி ஒரு பாடலைப் பாடுகிறான். அந்த சந்திப்புக்கு மீனாவும் வந்திருக்கிறாள். இருவரும் பார்த்துக் கொள்கின்றனர். ஆனால் பேசவில்லை. மீனா இவனது நிலை கண்டு வேதனை அடைகிறாள்.
மீனாவின் கணவனிடம் விஜய் வேலைக்குச் சேர்ந்த பின்னர் இருவரும் லிஃப்டில் நேருக்கு நேர் முதல் முறையாக சந்திக்கும் அந்தக் காட்சி மிக அருமையான ஒன்று.
அந்தக்காட்சி இப்படித் துவங்குகிறது. லிஃப்டின் கம்பிக் கதவுகள் திறக்க, விஜய் உள்ளே வருகிறான். லிஃப்டின் உள்ளே மீனா இருக்கிறாள். இருவரின் பார்வையும் நேருக்கு நேர் சந்திக்க, அவள் முகத்தில் ஏதேதோ உணர்வுகள். விஜய் முகத்திலும்தான். இவன் அவளைப் பார்த்து, “ ஹலோ மீனா” என்க, அவள் மகிழ்ச்சியுடனும், ஆச்சரியத்துடனும் மெதுவாக உதடுகளைப் பிரித்து, “விஜய்” என்று அழைக்க, லிஃப்டினுள் மேலும் சிலர் வந்து விட, இவர்கள் மேற்கொண்டு ஏதும் பேசவில்லை. விஜய் லிஃப்டின் பக்கவாட்டில் பார்க்க அதில் மீனாவின் முகம் கலங்கலாக பிரதிபலிக்கிறது. அந்தக் கலங்கலான முகம் லேசாகப் புன்னகைக்க, ஃப்ளாஷ் பேக்கின் அடுத்த பகுதி துவங்குகிறது.
அதில் ஒரு புல்வெளியில், ஓர் இரவு நடனம். இருவரும் அந்த மயக்கும் மெல்லிய மேலை நாட்டு இசையின் பின்னணியில், உணர்வு வயப்பட்ட நிலையில், கைகள் கோர்த்தபடி ஒரு பெஞ்சில் அமர்கின்றனர். அவள் அவனது முகத்தை இமைக்காது உற்றுப் பார்க்கிறாள். முகத்தில் ஒரு தவிப்பு. ஏதோ சொல்ல வருகிறாள்.
ஆனால் எதுவும் சொல்லவில்லை. ஒரு சின்ன வசனம் கூட இல்லை. அந்தச் சூழலும், இசையும், முகபாவங்களும் பார்வையாளனின் எதிர்பார்ப்பைத் தூண்டுகின்றன.. அதன் பின் விஜயின் முகத்தின் மீது க்ளோஸ்-அப்.. அதிலிருந்து ஒரு பாடல் துவங்குகிறது
அந்தப் பாடலின் வரிகளில் இயக்குனரும், கவிஞரும், இசையமைப்பாளரும் விளையாடி இருக்கின்றனர். கேள்வி-பதில் வடிவில் அமைந்திருக்கும் அந்தப் பாடலில், விஜயின் அர்ப்பணிப்பு மிகுந்த காதலும், அவனை அவள் கைவிடப் போகிறாள் எனும் தகவலும் உள்ளே பொதிந்திருக்கின்றன.
விஜய் – “என் இதயம் உன் கண்களுக்குள் குடியேறினால் என்ன ஆகும்?”
மீனா – “நான் என் கண்களை மூடிக்கொண்டு, உன் இதயத்தைத் தண்டித்தால் என்னவாகும்?”
விஜய் – “உன் கூந்தலில் நான் காதலெனும் மலர்களைச் சூட்டினால் என்னாகும்”,
மீனா – “ஒருவேளை அந்த மலர்களை நான் தரையில் உதறித் தள்ளினால் என்னவாகும்
விஜய் – “நான் மயக்கத்துடன் உன் பாதம் பணிந்து இதயத்தை சமர்ப்பிப்பேன்,”
மீனா – “அப்போதும் நான் உனக்கு ஆறுதல் தராவிட்டால் என்னவாகும்?”
என்று இருவருக்கிடையிலான உரையாடலாக, அவனது காதல் பித்தேறிய கேள்விகளுக்கு அவனை உதறித்தள்ளும் விதமான அவளது பதில்களுடன் போகிறது அந்தப் பாடல் .
பாடல் வரிகள் தவிர்த்து, இந்தப் பாடல் துவங்கும் விதத்திலும், முடியும் விதத்திலும் விஷுவலாகவும் ஒரு செய்தி இருக்கிறது. பாடல் துவங்குகையில் மீனா நிலவின் பின்னணியில் சில்ஹவுட் ஆகத் தோன்றி, உயர்ந்து வளைந்து கீழ்நோக்கி வரும் படிகளில் இவனை நோக்கி இறங்கி வருவாள். பாடல் முடிகையில் இவனிடமிருந்து விலகி அந்தப் படிகளில் ஏறிச் சென்று சில்ஹவுட்டாக நிலவிடம் போய் மறைந்து விடுவாள்.
(விஜய்யின் வாழ்வில் ஒரு சிறு பகுதியாக வந்து விட்டுப் போய் விடுகிறாள் அவள்)… அந்தப் பாடல் முடிந்தவுடன், அவள் எழுந்து போன இடத்திலிருக்கும் ஒரு கடிதத்தை விஜய் எடுத்துப் படிக்கிறான். அந்தக் கடிதத்தில் இருக்கும் செய்தி எதுவும் ஆடியன்ஸுக்கு நேரடியாக சொல்லப்படவில்லை. அது அவள் அவனை விட்டு விலகும் கடிதமாகத்தானே இருக்கும் என்பது உணர்த்தப்பட்டு விட்டது.
கடிதத்தைப் படித்து விஜய்யின் முகம் மாற, ஃப்ளாஷ் பேக்கின் இரண்டாம் பகுதி முடிகிறது.
இப்போது லிஃப்டில் விஜய்யும், மீனாவும் பேசுகின்றனர். இருவருக்குமிடையே நடைபெறும் உரையாடல் சுருக்கமாக, ஆனால் எல்லாவற்றையும் உரைப்பதாக இருக்கிறது. சினிமாக்கள் பல பக்க வசனங்களைப் பேசிக்கொண்டிருந்த காலம் அது. ஆனால், ப்யாஸா வில் அது இல்லை. அப்ரார் ஆல்வியின் வசனங்கள் பல இடங்களில் வியக்க வைப்பவை. கூர்மையானவை.
“ நீ எப்படி இருக்கே?”, இது மீனா.
“உயிரோட இருக்கேன்”
“நீ சந்தோஷமா இருக்கறதைப் பாக்க நான் ஆசைப்படறேன்”
“கவலைப்படாதே. நான் சந்தோஷமா இருக்க கத்துக்கறேன்”
ஆர்வத்துடன், “ (ஒருவேளை)வேற ஒரு பொண்ணு உனக்கு அதை கத்துத் தருவாளா?”
“இன்னொரு பொண்ணா? ஒருத்தி கத்துக்குடுத்ததே வாழ்நாள் முழுக்க போதும், இன்னொரு முறை துன்பப்பட நான் தயாரா இல்லை “
இன்னொரு காட்சியின் வசனத்தையும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். விஜய் தன் கணவனிடமே வேலைக்குச் சேர்ந்தபின், விஜயை மீனா தனிமையில் சந்திக்கிறாள். `என் வாழ்க்கையை வேறு விதமாக நான் அமைத்துக் கொண்டு விட்டேன். ஆனால்,இப்போது நீ என் உணர்வுகளை மறுபடியும் கிளறி விட்டு விட்டாய்,’ என்கிறாள்.( இந்த வசனம் மிகவும் கவித்துவமான ஒரு ஷாட்டில் சொல்லப்படுகிறது . ஒரு சாய்வான இருக்கையில் மல்லாக்க சாய்ந்து, முழங்கையை மடக்கி முகத்தை மூடிக் கொண்டு அவள் இதனைச் சொல்கிறாள். அது ஒருவிதமான erotic ஆன ஒரு உடல்மொழி)
“ஏன் என் வாழ்க்கைக்குக்குளே திரும்பவும் வந்தாய் ?,” என்ற அவள் கேள்விக்கு விஜய் சொல்கிறான்.
“ நான் உன்னை விட்டுப் போகவே இல்லையே மீனா, நீதான் என்னை விட்டுட்டுப் போயிட்டே. நீ பண்ண முதல் தப்பை இன்னொரு தப்பால சரி பண்ண முயற்சி பண்ணாதே”
“நான் தப்பெல்லாம் பண்ணலை. ஒரு புத்திசாலியான பொண்ணுக்கு காதலைத் தவிர வசதியான வீடும், கொஞ்சம் செல்வமும் கூடவே தேவைப்படுது..”
“ அந்த வசதிகளுக்காகத்தானே நீ கோஷ்ஷை கல்யாணம் பண்ணிகிட்டே? பணத்துக்காக நம்ம காதலை வித்துட்டே”
“தப்பா சொல்லாதே. நான் உன்னை காதலிச்சேன். ஆனா நீ ஏழை, உனக்கு வேலையில்லை, வாழ்க்கையில கவிதையும் , காதலும் மட்டுமே இல்லை. பசியும் கூட இருக்கு. நீ உன் பசியையே தீர்த்துக்க முடியாதப்ப என்னை எப்படி காப்பாத்த முடியும்?”
என்று அவள் சொல்ல, அதற்கு விஜய் சொல்லும் பதில் வெகு அருமையான ஒன்று.
“ நீ அதுக்கான வாய்ப்பையே எனக்கு கொடுக்கலையே, ஒரு மனுஷனுக்கு பொறுப்பு வரும்போது அந்த சுமைகளை தாங்கிக்க அவன் கத்துக்குவான். உன்னை நீயே ஏமாத்திக்காத மீனா, உனக்கு பணமும், அந்தஸ்தும் தேவைப்பட்டுச்சு. அதுக்காக அந்த முடிவை எடுத்தே. இப்ப அதெல்லாமே உனக்கு கிடைச்சிருக்கு. ஆனாலும் நீ சந்தோஷமா இல்லை. ஏன் தெரியுமா? நீ எப்பவுமே சுயநலவாதியா இருந்திருக்கே. நான் எவ்வளவு துயரப்படுவேன்னு யோசிக்காமலேயே என்னை கைவிட்டுட்டே. இப்ப உன் கணவனுக்கும் அதே துயரத்தை தர நினைக்கிறே. வாழ்க்கையில உண்மையான மகிழ்ச்சி, மத்தவங்களை சந்தோஷப்படுத்தும் போதுதான் கிடைக்கும். அதை நீ புரிஞ்சுக்கவே இல்லை. அதனாலதான் நீ எப்பவுமே சந்தோஷமா இல்லை.”
திரைப்படங்களில் வசனத்தின் முக்கியத்துவம், சிறப்பு என்பது இதுதான்.பாத்திரங்கள் தங்களுக்கிடையேயான முரண்களை பேசும் அதே நேரம் வாழ்வின் உண்மைகளையும், தேடல்களையும், சொல்லப்பட வேண்டிய செய்திகளையும் சிறந்த வசனங்கள் உணர்த்தி விடும். விஜய், மீனாவிடம் சொல்லும் செய்தி அவளுக்கானது மட்டுமல்ல. பார்வையாளனுக்கானதும் கூட. வாழ்வில் மகிழ்ச்சி என்பது என்ன? என்பதை சிந்திப்பதற்கான ஒரு தருணத்தை அது பார்ப்பவனுக்கு உருவாக்கித் தருகிறது இல்லையா? ஒரு நல்ல படைப்பு நம் சிந்தனையை விரிப்பது இப்படித்தான்.
`ப்யாஸா’ வின் பல இடங்கள் நம்மை வசீகரிப்பவை, இசை, கேமரா, நடிப்பு,பாடல்கள், இவையனைத்தும் இணைந்து நமக்கு கடத்தும் உணர்வுகள் எல்லாமே அப்படி ஓர் ஒத்திசைவைக் கொண்டிருக்கும். அப்படி ஒரு முக்கியமான காட்சி “ஆஜ் சஜன் மொஹே அங்க் லகா லோ” என்கிற பாடலும், காட்சியும்.
மீனாவுடனான சந்திப்பும், கொந்தளிப்பும் முடிந்த பின்னர் விஜய்,குலாபை ஒரு இரவு நேரத்தில், ஓர் இக்கட்டிலிருந்து மீட்கும் சூழல். அப்போது போலிஸ்காரனிடம் குலாபை “ இவள் என் மனைவி “ என்று பொய் சொல்கிறான். விஜய் மீது காதலாகி இருக்கும் குலாபுக்கு அந்த வார்த்தை மிகுந்த பரவசத்தை அளிக்கிறது. அவளை அழைத்துச் சென்று விட்ட பின்னர், அவன் மாடிப்படியேறுகையில், தெருவின் எதிர்முனையில் ஒரு கீர்த்தனைப் பாடலை ஒரு பெண் பக்கவாத்தியங்களுடன் பாடுகிறாள். கிருஷ்ணனை நோக்கி ராதை பாடுவதாக அமைந்த பாடல் அது ( குருதத் இளமைப்பருவத்தில் கல்கத்தாவில் வாழ்ந்தபோது இந்த மாதிரி பவுல்( Baul ) இசைக்கலைஞர்களின் பாடலைக் கேட்டு அதனால் கவரப்பட்டிருக்கிறார். அது அவரது மனதில் இருந்திருக்கிறது. அதை ஒட்டியே இந்தப் பாடல் உருவாக்கப்பட்டு படத்தில் இடம்பெற்றிருக்கிறது )
குலாபுக்கு விஜயின் கவிதைகள் மீதான மரியாதை, விஜயின் மீதான காதலாகவும் மாறி விடுகிறது. அவளை முதல் முதலில் மரியாதையாக நடத்தியதும், மரியாதை அளித்துப் பேசியவனும் விஜய்தான். எனவே அவன் மீதான அவளது பிரேமை வலுவாகி விட்டது. ஆனால் அதனை அவனிடம் சொல்லும் துணிச்சல் அவளிடம் இல்லை. பெரும் காதல் சமுத்திரத்தை அவள் தன் மனதில் மூடிபோட்டு மறைத்து வைத்திருக்கிறாள். இப்போது அவன் இவளை மனைவி என்று சொன்ன அந்த ஒரு வார்த்தை அவளது உணர்வுகளைக் கிளறி விட்டு விட, அவன் படிகளில் ஏறிச்செல்வதை கவனித்தபடி அவள் இருக்க, பாடல் துவங்குகிறது.
“ நீண்டகாலப் பிரிவின் துயரால் களைத்துப் போன ராதை,
தன்னை மயக்கும் கண்ணனை ஒருநாள் தேடிப்போனாள்
அவள் சொன்னாள் –
அன்பே,இன்று என்னை உன் தோளோடு அணைத்துக்கொள்,
என் வாழ்வு முழுமை அடையட்டும்.
என் இதயத்தின் வலியைக் குறைத்து, உன் ஸ்பரிசத்தால் என் வெம்மையைக் குளிர்வித்திடு…
என்று ஆரம்பிக்கும் இந்தப் பாடல் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் விதம் நம்மை கட்டிப்போடுகிறது.
இந்த ஒட்டுமொத்தப் பாடல் காட்சியுமே, கீழே இருக்கும் குலாப் இந்தப் பாடலின் பின்னணியில், தன் மனதில் இருக்கும் காதலும், ஆசையும் உந்தித் தள்ள விஜயை நோக்கி படிக்கட்டுகளில் ஏறி மேலே சென்று தன் காதலை அவனுக்கு உணர்த்த முயலும் ஒரு செய்கையை மட்டுமே காட்சிப்படுத்துகிறது.
விஜய் மொட்டை மாடியில் சிகரெட் பிடித்தபடி எங்கோ பார்த்துக்கொண்டு யோசனையில் ஆழ்ந்திருக்கிறான்.
மிகுந்த தாபத்துடன் ஒலிக்கும் இந்தப் பாடலின் பின்னணியில் மெதுவாக ஏறி அவனை நோக்கி ஒவ்வொரு கட்டத்திலும் தயங்கியபடி சென்று அவனிருக்கும் மொட்டை மாடியை அடைகிறாள் குலாப்.
இயக்குனருடன், இசையமைப்பாளரும், பாடும் குரலும், இசையும், ஒளிப்பதிவாளரும் சேர்ந்து, ஒரு வசியம் நிரம்பிய தருணத்தை ஒருங்கிணைத்து பார்வையாளனுக்கு வழங்குகிறார்கள். படிக்கட்டில் ஏறிச் செல்கையில் நிழலும், வெளிச்சமுமான அந்த ஒளியமைப்பு, விஜய் முதுகைக் காட்டியபடி ஏறிச் செல்ல பின் தொடர்ந்து தயங்கிச் செல்லும் குலாப்……
மாடியை அடைந்ததும் இந்த முனையில் தயங்கி ஒரு கதவைப் பற்றி நின்று, காதல் பொங்கும் கண்களுடன் விஜயைப் பார்க்கிறாள்.
பாடும் பெண்குரல் ( கீதா தத் -குருதத்தின் மனைவி ) உச்சமான குரலில்
“ ஓ என் அன்பே, காதலெனும் அமுதமே “
என்று கசிந்துருகி அழைக்க,
கேமரா விஜயையும், குலாபையும் மாறி மாறிக் காட்ட, இசையின் லயம் வேகமெடுக்கிறது. ஒரு பரபரப்பு லேசாகத் தொற்றுகிறது. அதற்கேற்ப குலாபின் முகத்தின் உணர்வுகளும் தீவிரமாகின்றன.
“என்னை சொந்தமாக்கி, உன் தோளில் சேர்த்தணைத்துக் கொள்
நான் ஜென்மங்கள்தோறும் உனக்கு சேவை செய்யப் பிறந்து வருவேன்”
அவள் அவனை நெருங்குகிறாள்.
“ என் அழகான கண்ணனே, என் காதல் தாகத்தை தீர்த்து வை”
என்று அவள் அவனை மேலும் நெருங்குகிறாள்
( இந்த இடத்தில் ஒரு ஷாட் காட்டப்படுகிறது. இப்போது உள்ளது போல் அன்று ட்ரோன், வசதி எல்லாம் இல்லை. ஆனால் பிரமிக்க வைக்கும் ஷாட் அது . குலாப் ( வஹிதா ரஹ்மான்) முகத்திலிருந்து பின்னோக்கிச் வந்து, மேலே உயர்ந்து, மொட்டை மாடிச் சுவரில் சாய்ந்து நிற்கும் விஜயை ( குருதத் ) அந்தரத்தில் கடந்து மொட்டை மாடி முழுதும் தெரிய அதற்கு வெளியே மேலே சென்று ஒரு வினாடி நின்று அதன் பின்புதான் அந்த ஷாட் கட் ஆகிறது. வி.கே. மூர்த்தி எனும் மாஸ்டர் இதனை நிகழ்த்தி இருக்கிறார்)
விஜயை காதலுடன் நெருங்கும் குலாபின் கண்கள் மூடி இருக்கின்றன. அவள் இப்போது பக்திக்கும் , காதலுக்கும் இடையிலான ஒரு பரவச நிலையில் இருக்கிறாள். முகத்திலொரு காதல் பொங்கும் சரணாகதி பாவத்துடன் அவனை நெருங்குகிறாள்.
“காதலெனும் அமுதம் பெருக்கெடுத்து ஓடட்டும், இந்த உலகம் உணர்வு வெள்ளத்தில் மூழ்கட்டும்,
அன்பே,இன்று என்னை உன் தோளோடு அணைத்துக்கொள்,
என் வாழ்வு முழுமை அடையட்டும்.
என் இதயத்தின் வலியைக் குறைத்து, உன் ஸ்பரிசத்தால் என் வெம்மையைக் குளிர்வித்திடு…”
என்று வரிகள் உச்சத்தை அடைந்து, உணர்வுகள் கொதிநிலையில் கொந்தளிக்க,
அவனது முதுகில் தன் தலையை சாய்த்து அவனை அணைத்துக் கொள்ளச் செல்லும் குலாப் , கடைசி நொடியில் அப்படியே நிற்கிறாள். மெல்லத் தயங்கி, அப்படியே மெதுவாகப் பின்வாங்கி நகர்ந்து சென்றவள், சட்டென்று திரும்பி ஓடிப்போய் விடுகிறாள்.
அவளது தாகம் தீரவில்லை. அந்தக் கண்ணனிடம் அவள் தன் தாகத்தை சொல்லவே இல்லை.
பாடல் காட்சிகளைப் படமாக்குவதில் குருதத்துக்கு நிகரில்லை என்று சொல்வார்கள். அதற்கு இந்தப் பாடல் ஒரு வலிமையான சாட்சி.
இந்தப் பாடலை படமாக்குகையில் வஹிதாவுக்கு முகபாவங்கள் கூடி வரவில்லை. மிக நுட்பமான முகபாவங்கள் இந்தப் பாடலில் தேவைப்பட்டன.அவற்றை வஹிதாவால் சரியாகப் புரிந்துகொண்டு வெளிப்படுத்த இயலவில்லை. எடுத்து எடுத்து சரியாக வராமல் குருதத் சற்று யோசித்தார். கட் சொல்லி விட்டு, செட்டின் விளைக்குகளை அணைக்கச் சொல்லி விட்டு ஒரு ஓரமாக இரண்டு சேர்களைப் போட்டு எதிரே வஹிதாவை அமர வைத்து ரிலாக்ஸாக பேச ஆரம்பித்தார்,
“ இத பார், இந்தக் காட்சியில் விஜய் மேல் உனக்கு மிகுந்த காதல், ஆனால் நீ ஒரு விலைமகள். எனவே அவனை அணுக உனக்கு ஒரு பயம், தயக்கம், மனது முழுக்க காதல் பொங்குகிறது. ஆனால் அதை சொல்வதற்கு தைரியம் இல்லை. தயக்கமும், பயமும் உன்னைத் தடுக்கிறது…இந்த உணர்வு வர வேண்டும்..”
“புரிகிறது…”
வஹிதாவுக்கு கதையின் சூழல் புரிகிறது. ஆனால் அதனை முகபாவங்களில் எப்படிக்கொண்டு வருவது என்பது பிடிபடவில்லை. குருதத் சிகரெட் பிடித்தபடியே யோசித்தார். பிறகு சொன்னார்.
“உனக்கு யாரை வாழ்க்கையில் ரொம்ப பிடிக்கும்”
“என் அம்மா , அப்பாவை “
“அதில யாரை மிகவும் பிடிக்கும்”
“ என் அப்பாவை, என்னை ரொம்ப கெடுத்து வைச்சவர் அவருதான்.”
“ இப்ப அவரு உயிரோட இல்லை. இல்லையா?”
“ஆமா.”
“குட், அவரை மனசில நினைச்சுக்க. அந்த மொட்டைமாடியில சுவரில அவருதான் சாஞ்சுகிட்டு நிக்கிறாரு. அவரை உனக்கு ரொம்ப பிடிக்கும்,, அவரை ரொம்ப மிஸ் பண்றே. ஆனா அவரு கிட்ட போக உனக்கு பயம். அந்த பயத்தோடயே போய் அவரை அணைச்சுக்க நினைச்சு பக்கத்தில போறே…. புரியுதா?”
வஹிதாவுக்கு உடனே அது பிடிபட்டது. அந்த நொடியில் வஹிதா, தனது தந்தையை தான் எவ்வளவு தூரம் மிஸ் பண்ணுகிறோம் என்று மனதார உணர்ந்தார்.தயார் ஆனார். தலை அசைத்தார்.
“குட் . லைட்ஸ் ஆன்.. லெட்ஸ் ஷூட் நௌ “
என்று குருதத் எழுந்தார். வஹிதா தன் தந்தையை மனதில் நினைத்துக் கொண்டு நடித்த அந்த முகபாவங்கள் , அந்தக் காட்சிக்கு வெகு கச்சிதமாகப் பொருந்தின.
குருதத்துக்கு நடிப்பை எப்படி வாங்குவது, திறமையை எப்படி வெளிக்கொண்டு வருவது என்று நன்றாகத் தெரிந்திருக்கிறது.
இந்தக் கீர்த்தனையின் இசை மிகவும் இனிமையானது, மென்மையான பக்திரசம் சொட்டுவது போல் துவங்கும் இந்தப் பாடல், போகப்போக வேகம் எடுத்து, உணர்வுகளின் உச்சத்தில் போய் முடியும். தாளம் துரித கதி அடையும். இந்தப் பாடலைப் பாடியவர் குருதத்தின் மனைவி கீதா தத். அவரது குரலில் இந்தப்பாடலில், காதலின் தாகம் மிகுந்த உணர்வுப்பூர்வமாக வெளிப்பட்டிருக்கும்.
வஹிதா ரஹ்மான் முதல் முதலில் குருதத்தைப் பார்க்கும் ஆரம்பக் காட்சியில் வரும் பாடலையும் கீதாதத் தான் பாடி இருக்கிறார். தனது குரலால் யாருடைய திரைவாழ்க்கையை துவக்கி வைத்தாரோ அதே வஹிதா ரஹ்மானால்தான் இவரது வாழ்க்கையிலும், குருதத்தின் வாழ்க்கையிலும் குழப்பங்கள் நிகழ்ந்தன என்பது வாழ்வின் விசித்திரமான , விளங்கிக்கொள்ள முடியாத முரண்.
இந்தக் கீர்த்தனைப் பாடலின் தாளம்தான் இறுதிக் காட்சியில் விஜயுடன் சேர்வதற்காக குலாப் படிகளில் ஓடி வருகையில் வேகமாக இசைக்கப்படும்.
முதலில் காதலனை சேர எண்ணி, பின் தயங்கி விலகி ஓடும் இந்தப் பாடலின் தாளத்தை வேகமாக்கி, அதே தாளத்தை அவள் அந்தக் காதலனுடன் ஓடி வந்து சேர்கின்ற காட்சியின் பின்னணி இசையாக மாற்றியது எஸ். டி. பர்மனின் மேதமை.
( இந்த இசையைக் கேட்கையில் முள்ளும் மலரும் திரைப்படத்தின் க்ளைமாக்ஸில் ஷோபா , ரஜினியிடம் ஓடி வரும் காட்சியில் வரும் வேகமான தாளம் மட்டுமே கொண்ட இளையராஜாவின் அற்புதமான பின்னணி இசை நினைவுக்கு வந்தது.)
படத்தில் இந்தக் காட்சி முடிந்தபிறகு மற்றொரு கவித்துவமான காட்சி வருகிறது. ஒரு பூங்காவில் படுத்திருக்கும் விஜய் அங்கிருக்கும் ஒரு குழாயில் குனிந்து நீரருந்துகிறான். இவன் முகம் க்ளோஸ் அப்பில் இருக்க , பின்னணியில் அருகே இருக்கும் மேடான சாலையில் அந்த உயர்ரகக் கார் வருகிறது. ஒரே ஃப்ரேமில் இவனது குனிந்து நீரருந்தும் முகமும்,கார் வந்து நிற்பதும் அழகாக கம்போஸ் செய்யப்பட்டிருக்கும் சிறப்பான ஷாட் அது…
இவன் குனிந்து அந்தக் குழாயில் நீரருந்துகிற அதே கோணத்தில் காரைப் பார்க்க. கார் நிற்கிறது அதிலிருந்து மீனா இறங்குகிறாள். மீனாவைப் பார்க்கிறான். அவளும் அவனைப் பார்க்கிறாள்.
இடையிலிருக்கும் ரயில் தண்டவாளத்தில் ஒரு ரயில் கடந்து செல்கிறது.
(இரண்டு பாத்திரங்களுக்கிடையிலான பிரிவைக் குறிப்பதற்கு நடுவே ஒரு ரயில் கடந்து செல்லும் ஷாட்டை வைப்பதை, பல படங்களில் பார்த்திருக்கிறோம். பெரிய இயக்குனர்கள் எல்லாம் பின்னாளில் அதை செய்திருக்கிறார்கள். எல்லோரும் நன்றி சொல்ல வேண்டியது குருதத்துக்குத்தான் போல என்று தோன்றியது )
கடந்து செல்லும் ரயிலுக்கு நடுவே ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள, பிறகு விஜய் நடந்து செல்லத் துவங்க, மீனாவும் அவனை ஒரு முறை பார்த்து விட்டு காரிலேறிக் கிளம்பிச் செல்கிறாள்.
இந்தத் திரைப்படத்தில் மீனாவை விஜய் முதலில் பார்க்கும் காட்சியில் அவள் காரில்தான் வந்து இறங்குவாள். இப்போது அவனை விட்டு மறுபடி மனதளவில் நிரந்தமாகப் பிரிகையில், காரில் ஏறிச் செல்கிறாள். ஒரு பாத்திரம் எப்படி இப்போதைய வாழ்வுக்குள் வந்ததோ, அது போலவே, வந்த விதத்திலேயே திரும்பிப் போய் விட்டது. இயக்குனரின் எவ்வளவு அழகான ஒரு டச் இது !
ப்யாஸாவின் பார்த்து வியந்து ரசித்த இதே போன்ற மற்றொரு டச்.. படிக்கட்டுகளை குருதத் பயன்படுத்தி இருக்கிற விதம். முதல் முதலில் குலாப் , விஜயை பூங்காவில் பார்த்து, ஒரு வாடிக்கையாளனாக எண்ணி பாடியடியே அழைத்துப் போய் அந்தப் படிக்கட்டுகளில்தான் ஏறுவாள். ஏறுகையில், அவனிடம் பணம் இல்லையென்று அறிந்து அவமானப்படுத்துவாள். அந்தப் படிக்கட்டில் அவன் விட்டுச் சென்ற ஒரு காகிதத்தில் இருக்கும், கையெழுத்தைப் பார்த்துத்தான் இவன் கவிஞன் விஜய் என்று அறிவாள்.
அதன் பின் மேலே சொன்ன கீர்த்தனைப் பாடலின் போது, அவனை தழுவும் ஆசை கொண்டு படிக்கட்டுகளில் ஏறி மேலே செல்வதுதான் அந்தப் பாடல் காட்சி முழுவதுமே..
அதன் பின் மனம் நொந்து, வாழ்க்கையை வெறுத்து, குடித்து விட்டு வரும் விஜயை தோளோடு அணைத்து தேற்றியபடி அந்தப் படிக்கட்டுகளில்தான் ஏற்றிச் செல்வாள். அப்போதுதான் விஜய் அவள் தன்னை காதலிப்பதை அறிவான். `என்னால் உனக்கு துயரை மட்டுமே தர இயலும், இது வேண்டாம்,’ என்று சொல்லி அவள் கால்களில் சரிவான்.
இறுதிக்காட்சியில் அவன் அவளைத் தேடி வருகையில் , அவன் குரல் கேட்டு குலாப் வேகமாக அந்தப் படிக்கட்டுகளில் இறங்கி ஓடோடி வந்து அவனிடம் சேர்வாள்.
ஒரு கலைமனம் கொண்ட இயக்குனரால் மனிதர்களை மட்டுமல்ல, இடங்களையும், படிக்கட்டுகளையும் கூட கேரக்டர் ஆக்க முடிகிறது. இவர்களது வாழ்க்கையின் பல்வேறு படிகளில், அந்தப் படிக்கட்டுகளும் ஒரு பங்கு வகிக்கின்றன, மவுன சாட்சியாக உடனிருக்கின்றன. அவர்களைத் தாங்கி மேலே அனுப்புகின்றன. கீழே இறக்குகின்றன. பிரிக்கின்றன. பின் சேர்க்கவும் செய்கின்றன. ( மீனா,விஜயைப் பிரியும் அந்தப் பாடல் காட்சியிலும், மீனா படிகளில் இறங்கி வந்து பாடி விட்டு மீண்டும் படிகளிலேறி அவனைப் பிரிந்து மறைவாள் )
போதையில் இருக்கும் குருதத்தை , வஹிதா படிகளில் மேலே கூட்டிச் செல்கையில், குருதத் சொல்லும் சில வசனங்கள் மனதில் தைக்கின்றன.
“நீங்க களைப்பா இருக்கீங்க, ஓய்வெடுத்துட்டு நீங்க சரியான பிறகு கிளம்பிப் போங்க “ என்கிறாள் வஹிதா ( குலாப் ).
“சரியான பிறகா? இந்த உலகத்தை விட்டுப் போகும்போகுதான் நான் சரியாவேன் ( நிம்மதியடைவேன் ) ”
….. நான் ஏன் இங்க இருக்கேன்? நான் ஏன் உயிரோட இருக்கேன் குலாப்?”
“ இந்த மாதிரி பேசாதீங்க. இந்த உலகத்துக்கு நீங்க தேவை. உங்க கவிதைகள் தேவை “
குருதத்தின் திரைப்பட வசனங்களாக மட்டும் இவை இல்லை. அவர் மனதின் அடியிலிருந்து எழுந்த வலி மிகுந்த குரலின் நிழலாகவே இந்த வசனங்கள் தொனிக்கின்றன.
ஏதோ ஒரு விதத்தில் அவர் தன் மனதின் அடி ஆழத்தில் இருந்த அந்த எரிமலைக்குமுறலை இப்படி அலைகள் போல வெளிப்படுத்தியது போலத்தான் இந்த வசனங்கள் அமைந்திருந்தன.
இறுதியில் அவர் சொன்னதுதான் நடந்தது. அவர் இந்த உலகத்தை விட்டு நீங்கும் வரையிலும் நிம்மதி இன்றித்தான் இருந்தார்.
( தொடரும் )











