ஜா.தீபா
எத்தகைய துயர நிகழ்வையும் பெருமூச்சோடு மட்டும் கடந்து செல்பவர்கள் மத்தியில்தான், சிலரின் குரல்கள் உரக்க ஒலிக்க வேண்டியதாயிருக்கின்றன. அதுவே, அந்தக் குரல்களுக்கு வலுச் சேர்த்துவிடுகிறது. எசிம் உஸ்டாக்லுவின் திரைப்படப் படைப்புகள் அவர் சார்ந்த சமூகத்தின் குரல் மட்டுமல்ல, அனைவருக்குமானது.
துருக்கிய திரைப்படங்களுக்கு எப்போதுமே உலக அரங்கில் வரவேற்பு அதிகம். இந்த வரவேற்புக்கான எதிர்பார்ப்பைக் கூட்டியவர்களில் எசிம் உஸ்டாக்லு தவிர்க்கமுடியாதவர். துருக்கிய நாட்டின் நிலவரம் அறிந்திருப்பவர்கள் மட்டுமல்லாமல் எசிமினுடைய படங்களைப் பார்க்கும் அனைவராலும் அவர் விமர்சிக்கிற அரசியலையும், கையாள்கிற மனித உணர்வுகளையும் உள்வாங்கிக் கொள்ள முடியும்.
தான் வாழ்கிற சமூகத்தின்மேல் கொண்ட அக்கறையும் பெருங்கோபமுமே அவரின் திரைப்படங்களில் முன்வைக்கப்படுகின்றன.
படிப்பில் மிகுந்த ஆர்வம்கொண்ட எசிம் கட்டட வடிவமைப்பாளராக வரவேண்டும் என்ற நோக்கம் கொண்டிருந்தார். பத்து ஆண்டுகள் கட்டட வடிவமைப்பாளராக வேலை செய்தார். நல்ல சம்பளம், வசதியான வாழ்க்கை என்று சீராகப் போய்க்கொண்டிருந்தாலும் ஒரு சலிப்பான மனநிலையை தொடர்ந்து அனுபவித்து வந்திருந்தார்.
பணி காரணமாக துருக்கியின் பல பகுதிகளுக்கும் அவர் பயணம் மேற்கொள்ள வேண்டியிருந்தது. இந்தப் பயணங்கள் அவருக்குத் தன்னுடைய நாடுகுறித்த பரந்த பார்வையைத் தந்தது. குறிப்பாக, இனரீதியாக துருக்கி பிளவுபட்டுக் கிடப்பதும் அதற்கு அரசியல்ரீதியான தீர்வு எட்டப்படாமல் இருப்பதும் அவரை உறுத்திக்கொண்டே இருந்திருக்கிறது.
ஆனால் ஒரு தனிமனுஷியாக இதை உரத்துப் பேசமுடியாத நிலை. தன்னால் இவற்றுக்கு தீர்வு காண முடியாது என்பதை உணர்ந்திருந்தார். அதேசமயம் ‘இப்படிப்பட்ட நிலை எங்கள் தேசத்தில் உள்ளது’ என்பதை வெளிக்கொண்டு வரவேண்டும் என்றும் நினைத்தார்.
இதற்காகவே தன்னுடைய வேலையை முதலில் ராஜினாமா செய்தார். அரசியலுக்குள் ஈடுபடுத்திக் கொள்ளலாமா? என்ற எண்ணம் வந்து உடனேயே மறைந்தும்போனது. பத்திரிகையாளராகலாம் என்று முடிவெடுத்தார்.
ஆனால் அதிலும்கூட தான் நினைத்தபடி செயல்படமுடியாது என்பதை விரைவில் புரிந்துகொண்டார். அப்போதுதான் திரைப்படம் எடுக்கலாம் என்ற எண்ணம் வந்தது. மக்களின் பிரச்னையை பல்வேறு கோணங்களில் எடுத்துக்காட்ட திரைப்பட ஊடகம் கைகொடுக்கும் என்பதை நம்பினார். நம்பியதை அவரால் செயல்படுத்தவும் முடிந்தது.
1994ஆம் ஆண்டு The Trace என்ற படத்தை இயக்கினார். அதன்பின், அவர் எடுத்த குறும்படங்கள் சர்வதேச அங்கீகாரங்களைத் தொடர்ந்து பெற்றன. முதல் திரைப்படத்துக்குப் பின்பாக ஐந்து வருடங்கள் கடந்து இவர் எடுத்த Journey to the Sun என்ற திரைப்படம்தான் உலக அரங்கில் இவரின் தைரியத்தையும் திறமையையும் எடுத்துக் காட்டியது.
துருக்கிய நாட்டின் அரசியல் வரலாற்றை சிறிது அறிமுகப்படுத்திக் கொண்டால் இவருடைய படங்களை நம்மால் அதன்போக்கில் இன்னும் நெருக்கமாக உள்வாங்கிக்கொள்ள முடியும்.
முதலாம் உலகப் போர் முடிவடைந்த சமயம். துருக்கிய அரசு புதிய கொள்கையை முன்வைத்தது. துருக்கிய குடியரசு என்பது ஒரே இனத்தவர்களைக் கொண்டு உருவாக்கப்படும் ஒரே தேசமாக வேண்டும் என்பது அதன் கொள்கை. ஒரே தேசம், ஒரே இனம் என்பதாக மக்களை மூளைச்சலவை செய்தது அரசு. இதில் அதிகம் பாதிக்கப்பட்டது குர்து இன மக்கள்.
மலைவாழ் துருக்கியர்கள் என்று அழைக்கப்பட்ட பழங்குடி இனத்தைச் சேர்ந்த இவர்கள் துருக்கியின் வடகிழக்கு மண்ணின் மைந்தர்கள்.
இவர்களுக்கென்று தனி மொழி, கலாசாரம் இருக்கிற காரணத்தினாலேயே துருக்கிய அரசு இவர்களின் உரிமைகளைப் புறந்தள்ளியது. இதையெதிர்த்து அவர்கள் போராடத் தொடங்கினர். இனவாதத்தை முன்வைத்து துருக்கியின் மற்றப் பகுதி மக்களை இவர்களுக்கெதிராக அரசு திருப்பியது. இதைப்பற்றி துருக்கிய பத்திரிகைகளே பார்த்து பதமாகத்தான் செய்திகள் வெளியிடும்.
இப்படி இருக்கையில், குர்து இனத்தவரின் பிரச்னையை முன்வைத்து ‘Journey to the sun’ படத்தை இயக்கினார் எசிம். துருக்கியில் ஒரு தைரியசாலியாவது இருக்கிறாரே என்று படத்தைப் பார்த்த பல வெளிநாட்டு விமர்சகர்கள் எசிமைப் பாராட்டினார்கள்.
இந்தப் படத்தின் கதை உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது.
மஹ்மூத் என்ற இளைஞன் பேருந்தில் பயணம் செய்கிறபோது அந்தப் பேருந்து காவல்துறையினரால் சோதனையிடப்படுகிறது. அந்தச் சோதனையில் மஹ்மூதின் அருகில் உள்ள இருக்கையில் இருந்து பை ஒன்று கைப்பற்றப்படுகிறது. அதில் ஒரு துப்பாக்கி இருக்கிறது. காவலர்கள் உடனே மஹ்மூதைக் கைது செய்கிறார்கள். குர்து இனத்தவன் அல்லாத மஹ்மூதுவை குர்து இனத்தைச் சேர்ந்த தீவிரவாதி என்று தீர்மானிக்கிறார்கள். அவன் குர்து இனத்தவன்தான் என்பதற்காக காவல்துறை சொல்லும் காரணங்களுள் ஒன்று அவன் மாநிறமாக இருப்பது.

ஒரு வார காலம் அவனை விசாரணை என்ற பெயரில் சித்திரவதை செய்து பிறகு அவனை விடுதலை செய்கிறது காவல்துறை . ஆனால் அவன் தங்கியிருக்கும் அறையின் வாசலில் சிவப்பு மையினால் அடையாளம் இடுகிறார்கள். இதற்கு அர்த்தம் அந்த வீட்டினர் அரசின் கண்காணிப்புக்கு உள்ளானவர்கள் என்பது. இதனால் அறையில் தங்கியிருந்த மற்றவர்களால் மஹ்முத் அங்கிருந்து துரத்தப்படுகிறான். அடுத்ததாக அவனுடைய வேலையும் பறிபோகிறது.
மஹ்மூதுக்கு பெர்சன் என்ற குர்து இனத்தைச் சேர்ந்த நண்பன் ஒருவன் இருக்கிறான். பெர்சனின் ஆசையெல்லாம் அவனுடைய கிராமத்துக்கு திரும்பிப்போய் தன் காதலியைச் சந்திக்க வேண்டும் என்பதாக இருக்கிறது. கூடவே, எப்போதும் காதலியின் புகைப்படத்தையும் வைத்திருக்கிறான். பெர்சனையும் காவல் துறையினர் ‘தீவிரவாதி’ முத்திரை குத்தி சிறையில் அடைக்கிறார்கள். சிறையில் ஏற்பட்ட ஒரு கலவரத்தில் பெர்சன் கொல்லப்படுகிறான். பெர்சனின் சடலத்தை யாரும் பெற்றுக்கொள்ளாத நிலையில் மஹ்மூத் அவன் உடலை வாங்கிக் கொள்கிறான்.
பெர்சன் போக விரும்பிய அவனுடைய கிராமத்துக்கு அவனுடைய உயிரற்ற உடலோடு மஹ்மூத் பயணம் மேற்கொள்கிறான். ஒரு ட்ரக்கில் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகி ஒருவழியாக பெர்சனின் கிராமத்தை அடைகிறான். அங்கு அவனுக்கு மீளமுடியாத அதிர்ச்சி காத்திருக்கிறது. குர்தி இனத்தவர் வசிக்கும் பெர்சனின் கிராமம் நீருக்கடியில் மூழ்கியிருக்கிறது.
திட்டமிட்டே ஊர் மூழ்கடிக்கப்பட்டிருக்கிறது என்பது தெரிந்ததும் என்ன செய்வதென்று தெரியாமல் நீரின் கரையில் சடலத்தோடு நிற்கிறான் மஹ்மூத். பெர்சனுடைய காதலியின் புகைப்படத்தை தண்ணிரில் மிதக்க விடுகிறான் மஹ்மூத்.
குர்தி இனத்தவர் அடக்குமுறைகளால் அல்லல்படுவதை படமாக எடுக்கும் துணிச்சல் துருக்கியில் அதற்குமுன்பு யாருக்கும் இருந்ததில்லை.
எசிம் இந்தப் படத்துக்கான திரைக்கதையை முடித்தவுடன் முன்தயாரிப்பு வேலைகள் அனைத்தையும் தனியொரு மனுஷியாக முடித்தபின்னரே படப்பிடிப்புக் குழுவினரை அழைத்திருக்கிறார். எந்த ஆர்ப்பாட்டமுமில்லாமல் படப்பிடிப்பை முடித்தார் எசிம். துருக்கியில் தணிக்கைத் துறை இல்லை என்பதால் சர்வதேச திரைப்பட விழாக்களுக்கு படத்தை அனுப்பிவைக்கிறார். படம் பெரும் வரவேற்பைப் பெறுகிறது.
பெர்லின் திரைப்பட விழாவில் விருது பெற்றது. மற்றொரு படமாக இருந்திருந்தால் துருக்கி அரசு இந்த கௌரவத்தைக் கொண்டாடியிருக்கும். ஆனால் தங்களை நோக்கிக் கேள்வி எழுப்புகிற ஒரு படைப்பை எப்படி அரசு ஏற்றுக்கொள்ளும். அதனால் படத்தை துருக்கியத் திரையரங்குகளில் திரையிட மறைமுக முட்டுக்கட்டைகள் போட்டது. ஒரு வருட காலம் போராடிப் பார்த்தார் எசிம்.
அந்த ஒரு வருடமும் தொடர்ந்து பல்வேறு விருதுகளை வெளிநாடுகளில் படம் குவித்ததும் வேறுவழியில்லாமல் திரையரங்குகளை அரசு திறந்துவைத்தது. ஆனால் பத்திரிகைகள் இந்தப் படம் குறித்து கண்டுகொள்ளவில்லை. மக்கள்தான் இந்தப் படத்தைப்பற்றி பேச ஆரம்பித்தனர்.
அதிலும் பல காலங்களாக குர்து இன மக்களுக்கு எதிராக அரசு மேற்கொள்ளும் அடக்குமுறையைப் பார்த்து சலித்துப்போன இளம்தலைமுறையினர் இந்தப் படத்தை வரவேற்றார்கள். இது எசிமுக்கு நம்பிக்கையைக் கொடுத்தது. துருக்கி குறித்த தவறான சித்தரிப்பை எசிம் உலகத்தின் பார்வைக்கு கொண்டு செல்கிறார் என்றெல்லாம் விமர்சனமும் கிளம்பியது. எசிம் கவலைப்படவில்லை.
அடுத்த படத்தை இயக்கினார். இதுவும் அரசியல் பின்னணிகொண்ட படம்தான்.
துருக்கிய அரசின் ‘துருக்கிய குடியரசு’ கொள்கையில் பாதிக்கப்பட்டவர்களாக நூற்றாண்டு காலமாக அங்கு வாழ்ந்த சிறுபான்மையினரான அர்மேனியர்களும் கிரேக்கர்களும் இருந்தனர். இதனால் துருக்கியில் வாழ்ந்த கிரேக்கர்களும், கிரீஸில் வாழ்ந்த துருக்கியர்களும் அவரவர் தேசத்துக்கு செல்லும்படியான உடன்படிக்கையை முதல் உலகப் போர் முடிந்ததும் இரு நாட்டு அரசும் ஏற்படுத்திக் கொண்டது.
இதை மீறி துருக்கியில் வாழ நினைக்கும் கிரேக்கர்கள் தங்களது மதம், மொழி போன்ற அடையாளத்தை மறந்தும், மறுத்தும் துருக்கியர்களாக வாழவேண்டிய நிலைக்கு மாற்றப்பட்டார்கள். இப்படி தங்களின் அடையாளத்தை இழந்து வாழ்பவர்களை எசிம் சந்திக்க நேரும்போதெல்லாம் அவரது மனம் பல கேள்விகளை எழுப்பியபடி இருந்தன. மனம் எழுப்பும் கேள்விகள் படைப்பு வடிவம் கொள்வதை எசிம் தவற விடவில்லை.
‘Waiting for clouds’ என்ற திரைப்படத்தை அவர் இயக்கினார். துருக்கிய சரித்திரத்தில் ‘கிரேக்க – துருக்கிய இனப் பரிமாற்றம்’ மிக சொற்பமான கவனத்தை மட்டுமே பெற்றிருக்கிறது. இதை முன்வைத்து ஒரு திரைப்படம் இயக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கும்போதுதான் ‘தமன்னா’ என்ற நாவல் எசிமுக்குக் கிடைக்கிறது. தன்னுடைய திரைப்படத்துக்கான கருவை அந்த நாவல் கொண்டிருந்ததால் அதையே திரைப்படமாக மாற்றினார் எசிம்.
துருக்கியின் ஒரு மலை கிராமத்தில் ஆயிஷா, செல்மா என்று இரு முதிய சகோதரிகள் வாழ்கிறார்கள். உடல்நலம் சரியில்லாத செல்மா ஒரு நாள் இறந்துபோகிறாள். யாருமற்ற ஆயிஷா மற்றவர்களுடன் பேசாமல் அமைதியாகிவிடுகிறாள். பழுப்பேறிய ஒரு புகைப்படத்தை அடிக்கடி எடுத்துப் பார்த்துக்கொண்டே இருக்கிறாள். அது அவளது குடும்பப் புகைப்படம் என்பது தெரிகிறது.
ஆயிஷாவின் அமைதிக்கான காரணம் தெரியவருகிறது. ஆயிஷா, செல்மாவின் குடும்பத்தால் எடுத்து வளர்க்கப்பட்டவள். கிரேக்க இனத்தவரான ஆயிஷாவின் குடும்பத்தில் அனைவரும் கொல்லப்பட பத்து வயதான ஆயிஷா மட்டும் தனது தம்பியுடன் கிரேக்க நாட்டை நோக்கி அகதியாக பயணம் மேற்கொள்கிறாள். பனி படர்ந்த பாதையில் மாதக்கணக்கில் நடக்கிறார்கள்.
ஒரு கட்டத்தில் ஆயிஷா ஓரடிகூட எடுத்துவைக்க முடியாமல் மயங்குகிறாள். அவளை பனி மூடுகிறது. தம்பி மற்ற அகதிகளுடன் சேர்ந்து கொள்கிறான். துருக்கி குடிமகனான செல்மாவின் அப்பா ஆயிஷாவைக் காப்பாற்றி தன்னுடைய குடும்பத்தில் பாதுகாப்புத் தருகிறார். தம்பி என்னவானான் என்பது ஆயிஷாவுக்குத் தெரியவில்லை. கிறித்தவ குடும்பத்தைச் சேர்ந்த ஆயிஷா தன்னுடைய பெயர், மதம், மொழி, பழக்கங்கள் எல்லாவற்றையும் மாற்றிக்கொண்டு ஆயிஷாவாக செல்மாவின் வீட்டில் வளருகிறாள்.
ஆனால் அவள் மனதுக்குள் தம்பியைத் தவறவிட்ட குற்றவுணர்வு உறுத்திக்கொண்டே இருக்கிறது. ஐம்பது வருடங்களாக தன்னுடைய அடையாளத்தை மறந்து வாழ்ந்த ஆயிஷா, எடுத்து வளர்த்த குடும்பத்தினர் அனைவரையும் இழந்ததும் பால்யகால நினைவுகளால் அழுத்தப்படுகிறாள். மீண்டும் தன்னுடைய தம்பியின் நினைவு அவளை ஏங்க வைக்கிறது.
தன்னுடைய தம்பி கிரிஸ் நாட்டில் இருக்கிறான் என ஆயிஷாவுக்குத் தெரியவருகிறது. உற்சாகமாகும் ஆயிஷா துருக்கியில் இருந்து கிரீஸ் நாட்டை நோக்கி தனியாகப் பயணமாகிறாள். மிகுந்த சிரமத்துக்கிடையில் தம்பியின் வீட்டையும் கண்டுகொள்கிறாள்.
தம்பியைச் சந்தித்து. தன்னை அவனது மூத்த சகோதரி என்று அறிமுகம் செய்து கொள்கிறாள். அவர் தனக்கு மூத்த சகோதரி இருந்ததாக ஞாபகம் இல்லையென்று என்று அலட்சியமாகச் சொல்கிறான். நிலைகுலைந்து போகிறாள் ஆயிஷா. தம்பியின் வீட்டு வாசலிலேயே வெகுநேரமாக நிற்கிறாள். தம்பியின் மனைவி ஆயிஷாவை வீட்டின் உள்ளே அழைத்து தங்கவைக்கிறாள்.
மறுநாள் ஆயிஷாவிடம் தன்னுடைய குடும்ப புகைப்படங்களைக் காட்டுகிறார் தம்பி. குழந்தைகளுக்குப் பெயரிடுதல், மகன், மகள் திருமணம் போன்ற குடும்பத்தில் நடந்த ஒவ்வொரு விசேஷத்தின்போதும் எடுத்த புகைப்படங்களில் தன்னுடைய உறவுகளாக ஒவ்வொருவரையும் சொல்கிறார். தம்பியின் வாழ்க்கை மொத்தத்தையும் புகைப்படம்வழியே பார்ப்பதில் பேருவகை கொள்கிறாள் ஆயிஷா.
எல்லா புகைப்படங்களையும் காட்டிவிட்டு, ‘இதில் என்னுடைய உறவினர்கள் அத்தனை பேரும் இருக்கிறார்கள், நீ இதில் எங்கு இருக்கிறாய்?’ எனக் கேட்கிறார் தம்பி. ஆயிஷா ஒன்றும் பேசாமல் தன்னிடம் இருந்த பழுப்புநிறப் புகைப்படத்தை எடுத்துக் காட்டுகிறாள். அதில் அவர்களது குடும்பம் மொத்தமும் இருக்கிறார்கள் ஆயிஷாவும் அவளது தம்பியும் உட்பட. தம்பியால் அதிர்ச்சியில் ஒன்றும் பேசமுடியாமல் போகிறது. `
இந்தப் படமும் சர்வதேச அளவில் பாராட்டுகளைப் பெற்றது. ஆயிஷாவாக நடித்தவர் தவிர படத்தில் நடித்த அத்தனைபேரும் தொழில்முறை நடிகர்கள் அல்ல. ஒரு தலைமுறையே தங்களின் சுயத்தைத் தொலைத்து மரித்தும் போயிருக்கிறது. இதை உணர்வுபூர்வமாகச் சொல்கிறது இந்தத் திரைப்படம். இதில் வருகிற ஒரு காட்சி குறிப்பிடப்பட வேண்டியது.
ஆயிஷா தம்பியின் ஊருக்குச் சென்றதும் மறுநாள் ஒரு தேவாலயத்துக்குள் செல்கிறாள். ஐம்பது வருடங்களாக அவள் மறந்திருந்த கடவுளும், மதமும், வழிபாடும் அவளை அலைக்கழிக்கின்றன. ஆனாலும் அமைதியாக அங்குள்ள ஒவ்வொன்றையும் கூர்ந்து பார்க்கிறாள். அங்கு வரையப்பட்ட ஓவியங்கள், பலிபீடம், சிலுவை என ஒவ்வொன்றும் அவள் ஆன்மாவால் ஸ்பரிசிக்கப்படுகிறது. இந்தக் காட்சி மூலமாக எசிம் பல தர்க்கங்களை நம்முன் வைக்கிறார்.
இந்த இரண்டு படங்களும் துருக்கிய திரைப்படங்களில் தவிர்க்கமுடியாத இடத்தைப் பெற்றிருக்கின்றன.
இதன்பிறகு அவர் Pandora’s Box, Somewhere in between என இரண்டு படங்களை இயக்கியிருக்கிறார். இவையும் அரசியல் பேசும் படங்கள்தான்.
2016 ஆம் ஆண்டு Clair Obscur என்கிற திரைப்படத்தை எசிம் இயக்கி வெளியிட்டார். கலாசாரத்தில் விட்டுக் கொடுக்காதவர்கள் என்று தங்களைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்கும் துருக்கியர்கள் அசந்து போனார்கள். எசிம் எதையும் தைரியமாக முன்னெடுத்து சொல்பவர் தான் என்றாலும் இதில் அவர் கையாண்ட களம் துருக்கியத் திரைப்பட இயக்குனர்கள் தவிர்க்க நினைத்தது.
நவீனமயமாக்கதிற்குள் வேகமாய் நுழைகிற துருக்கியில் பெண்களின் நிலைமை மட்டும் இன்னும் பேசப்படாமல் சிக்கலாக இருப்பது பற்றியே படமே ‘Clair Obscur’. மாமியார், கணவன் என்று அடைப்புக்குறிக்குள் வாழ்ந்து வருகிற ஒரு பெண்ணும், நவீனமயத்தின் அதனை கதவுகளையும் தன்னுடைய வாழ்க்கைக்குள் திறந்து வைத்திருகிற மற்றுமொரு பெண்ணுமே முக்கிய கதாபாத்திரங்கள். இருவருக்குள்ளும் தீர்க்கப்படாத, புரிந்து கொள்ளப்பட வேண்டிய பாலியல் இச்சைகளையே படம் பேசுபொருளாய்க் கொண்டிருக்கிறது. ‘தனிமனித சுதந்திரம் என்பது பற்றி நாம் நமக்குள் மறுவிசாரணை செய்யவேண்டுமென நினைத்ததன் விளைவே இந்தப் படம்’ என்கிறார் எசிம்.
எஸிமின் மிகப்பெரிய பலமே, எந்தவொரு சிக்கலான பிரச்னையையும் மனித உணர்வுகள் மூலம் அவரால் காட்டிவிட முடிகிறது. அரசின் கொள்கை மேல் எசிமுக்கு உள்ள வெறுப்பைக் காட்டிலும், மனிதர்கள்மேல் கொண்ட அக்கறையின் வெளிப்பாடுகளாகவே இவரது படங்களாக அமைகின்றன.
‘பழகுவதற்கும் பார்ப்பதற்கும் மென்மையானவராக இருக்கிறீர்கள், எப்படி இதுபோன்ற வலுவான திரைப்படங்கள் உங்களிடமிருந்து வெளிப்படுகின்றன’ என்று ஒரு பத்திரிகையாளர் எஸிமிடம் கேள்வி கேட்டிருந்தார். அதற்கு எசிம் சொன்ன பதில் , ‘நான் பெண்ணாக இருப்பதுகூட காரணமாக இருக்கலாம்’.
எசிம் உஸ்டாக்லு இயக்கியத் திரைப்படங்கள்
- The Trace (1994)
- Journey to the Sun (1999)
- Waiting for the Clouds (2003)
- Pandara’s Box (2008)
- Araf – Somewhere in between (2012)
- Clair Obscur (2016)











