காயத்ரி ஆர்.
அலஹான்ரோ இனாரிட்டு (Alejandro Inarritu) மெக்சிகன் இயக்குநர். 21 Grams, Babel, Amores Perros, Biutiful, The Revenant, Birdman, Bardo படங்கள் இவர் இயக்கியவை. எடுக்கும் ஒவ்வொரு படங்களிலும் உலகளாவிய கவனத்தை ஈர்த்துக் கொள்பவர். எந்தவொரு படத்தையுமே அதற்கான மெனக்கிடலுடன் எடுக்கக்கூடியவர்.
அவருடைய நேர்காணலின் மொழிபெயர்ப்பு இது
மிஸ்டர் இனாரிட்டு , ஒரு திரைப்பட இயக்குநர் தன் திரைப்படங்களில் வாழ வேண்டுமா?
ஒவ்வொரு படமும் ஒரு வகையில் உங்களுடைய நீட்சிதான் என்று நான் நினைக்கிறேன். என்ன சொன்னாலும் நான் இயக்கிய ஒவ்வொரு படமும் என்னுடைய நீட்சியே. சில நேரங்களில் படங்கள் யதார்த்தத்துடன் கலக்கத் தொடங்குகின்றன என்று தோன்றுகிறது. திடீரென்று சினிமாவுக்கும் வாழ்க்கைக்கும் இடையே உள்ள அந்த விசித்திரமான கோடு மறைந்து அந்தப் படம் உங்களை சூழ்ந்து கொள்கிறது. எனக்கு இது பல முறை நடந்திருக்கிறது.
எந்தப் படம் என்று சொல்ல முடியுமா?
The Revenant படத்தின்போது சினிமாவின் கருப்பொருள் எங்கள் அன்றாட வாழ்க்கையானது. தண்ணீர் மிகக் குளிர்ந்து இருந்தது. ஒரு நாள் மைனஸ் நாற்பது டிகிரியில் இருந்தோம். கதாப்பாத்திரங்களின் யதார்த்தம் எங்கள் அனுபவத்துடன் பின்னிப் பிணைந்தது.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஏன் படம் எடுக்க வேண்டும்?
இப்படிக் காட்டுக்குள் சென்று படமெடுப்பதில் எனக்கு சந்தோஷம். உண்மையான இடத்துக்கே சென்று படமெடுப்பது, பாரம்பரியத்துக்குத் திரும்புவதைப் போன்ற உணர்வைத் தருகிறது. செட்டுகளோ, டிஜிட்டல் முறையிலோ நம்மைச் சுற்றி செயற்கை உலகத்தை உருவாக்காத காலத்துக்கு என்னை இட்டுச் செல்கிறது. திடீரென்று தெரியும் அந்த உண்மை… அதாவது உண்மையான ஒளியும் அதனின் சிக்கலான தன்மையும் எப்பேர்ப்பட்ட சிறந்த கம்ப்யூட்டர் டிசைனராலும் செட் வடிவமைப்பாளராலும் ஒருபோதும் அதன் அருகில் வர முடியாது என்று எனக்குத் தெளிவாகத் தெரிகிறது.
ஏன்?
இயற்கையின் சிக்கலான தன்மையும் அழகும் மட்டுமல்ல, படக்குழுவின் மனநிலையையும் அது மாற்றுகிறது. தாக்கம் ஏற்படுத்துகிறது. அந்த வகையில் அந்த அனுபவம் எனக்குப் பிடித்திருக்கிறது. படமெடுப்பதன் கஷ்டங்கள் அனைத்தும் படமாகவே ஆகிவிடும். நாங்களே அந்தக் கதாபாத்திரங்களாக மாறிவிடுவோம். உடலும் உணர்ச்சியும் ஒரு பெரிய அனுபவத்தைப் பெறுகின்றன.
இது ஹெர்சாகின் Aguirre, the Wrath of God படங்களை ஞாபகப்படுத்துகிறது. பெரூவியன் மழைக்காடுகளில் படப்பிடிப்பு நடத்தினால் அதன் கடுமையான சூழ்நிலைகள் படத்தினுள்ளும் ஊடுருவும் என்று அவர் நம்பினார்.
ஆமாம். ஹெர்சாகின் Aguirre, Fitzcarraldo படங்களின் தாக்கம்தான். அகிரா குரோசவாவின் Dersu Uzalaபோல Apocalypse Now போல மனிதன் இயற்கைக்கு எதிராகப் போராடும் கதைகள், இயற்கை கதாபாத்திரங்களின் மனநிலையை நிர்ணயிக்கும் கதைகள் எனக்கு மிகவும் பிடித்தவை.
ஆனால், இப்படிப்பட்ட படப்பிடிப்பு கடினமானதல்லவா? Aguirre படத்தின்போது ஹெர்சாகும் க்ளாஸ் கின்ஸ்கியும் மனஅழுத்தத்தால் மோசமாக சண்டையிட்டார்கள் இல்லையா?
ஆம், அங்கே சென்ற பிறகு தான், அது பத்துமடங்கு கடினம் என உணர்ந்தேன்! அந்தத் திரைப்படம் அறியாமையால் எடுத்த முடிவின் விளைவு. கண்மூடித்தனமான யோசனை. நீங்கள் வசதியை முழுவதுமாகத் துறக்க வேண்டி வரும். ஒவ்வொரு நாளும் போராட வேண்டும். அது கயிறு இல்லாமல் பாறை ஏறுவது போல. ஒரு தவறு செய்தால் விழுந்து இறக்க வேண்டியதுதான். அந்தத் திரைப்படம் எடுக்கையில் இதுதான் எங்கள் உணர்வு.
கேட்பதற்கு பயங்கரமாக இருக்கிறதே.
நான் எவ்வளவு பைத்தியமென்று நினைத்தால் பயமாகத்தான் இருக்கிறது! எல்லாம் தவறாகி இருக்கலாம். ஒவ்வொரு நாளும் ஒரு சவால். சில நேரங்களில் நீங்கள் கடவுளாக இருப்பீர்கள், சில நேரங்களில் நீங்கள் உங்கள் படைப்பின் சிறைப்பிடியில். நிதியிலும், தொழில்நுட்பத்திலும், தரத்திலும் மிகப் பெரிய அழுத்தம் இருந்தது. நான் என்னுடைய விதிகளிலேயே சிக்கிக்கொண்டேன். திரும்ப முடியாது ஒரு சுவரில் முட்டியாயிற்று. என்ன செய்வது? நான் படத்தை முடிக்காவிட்டால், அதாவது நான் நினைத்தபடி முடியாவிட்டால் முழுமையான பேரழிவுதான். அது ஒரு மாரத்தான் ஓட்டம் போல. நிறுத்த முடியாது. மயக்கம் வருவதுபோல் இருக்கும், ஆனால் முடித்துத்தான் ஆக வேண்டும்.
இது உங்கள் குடும்ப வாழ்க்கையை பாதிப்பதில்லையா?
விரைவில் விவாகரத்து ஆகாது என்று நம்புகிறேன்! (சிரிப்பு) ஆம், இது கடினம்தான். சினிமா உங்களிடம் நிறைய கேட்கும். நிறைய எடுத்துக் கொள்ளும். உங்களை நேசிப்பவர்களிடமிருந்து நீங்கள் தூரமாக இருக்க வேண்டுமென்பதே இதில் மிகக் கடினமான பகுதி.
நீங்கள் Birdmanக்கு ஆஸ்கர் வென்றபோது, The Revenant ஏற்கனவே ஆரம்பித்து விட்டீர்கள். ஓய்வு எடுக்கவில்லையா?
ஆம், நான் இரண்டு மாரத்தான்கள் ஓடியுள்ளேன். எனவே இப்போது நின்று விட வேண்டும். உண்மையைச் சொன்னால், Birdman பற்றிச் சிந்திக்கக் கூட நேரமில்லை. இரண்டு மூன்று மாதம் ஓய்வெடுத்து கடந்த இரண்டரை வருடங்களில் என்ன நடந்தது என புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. பொதுவாக, நான் ஒவ்வொரு படத்திற்கும் இடையில் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் இடைவெளி எடுப்பேன். எனவே இப்போது எனக்கு வேண்டியது, மூன்று வருட ஓய்வு.
இப்படிப்பட்ட பெரிய படங்களை உருவாக்க – Birdman, The Revenant, Once Upon a Time in America, Brazil போன்ற படங்களை பைனான்ஸ் செய்த- அர்னான் மில்சன் போன்ற பெரும் பணக்காரர்கள் தேவைப்படுகிறார்களா?
கண்டிப்பாக. அந்த அளவிலான ஆர்வம், கலை உணர்வு, சிறிது பைத்தியக்காரத்தனம் (நல்ல அர்த்தத்தில்) இவை எல்லாம் சேர்ந்தால்தான் இப்படியான படம் உருவாக முடியும்.
மற்றவர்கள் பணம் பற்றி அதிகம் கவலைப்படுகிறார்களோ?
அதனால்தான் இப்படியான படங்கள் உருவாவதில்லை. இப்போது பெரும்பாலானவர்கள் பைனான்ஸ் செய்பவர்கள். அவர்களின் ஒரே நோக்கம் லாபம். லாபம் மட்டுமே நோக்கமாக இருக்கும்போது, சினிமா யாருக்கும் சிரமம் தராத ஒரு பொருளாக மாறுகிறது. இப்போது இந்த ஆபத்தான நிலையில் நாம் இருக்கிறோம். லாபம் மட்டுமே நோக்கம். முன்பும் இப்படியான சூழ்நிலை இருந்தாலும் எப்போதை விடவும் இப்போது மிகவும் அதிகமாகியுள்ளது.
பின்னோக்கிப் பார்த்தீர்களானால், The Revenantஐ மீண்டும் அதேபோல எடுத்திருப்பீர்களா?
அந்தப் படம் எடுத்ததற்கு நான் வருத்தப்படவில்லை. கிடைத்த அனுபவம் அற்புதமானது. எனக்கு அதில் மிகவும் பெருமையுண்டு. ஆனால் மீண்டும் அப்படி ஒரு படம் எடுக்க மாட்டேன்! (சிரிப்பு) அது மிகவும் கடினம். ஒரு இயக்குநராக உயிர் வாழ்வதே மிகப் பெரிய சவாலாக சில தருணங்கள் இருந்தன.
அந்த தருணங்களில் நம்பிக்கையை எப்படி இழக்காது இருப்பீர்கள்?
சில நேரங்களில் நீங்கள் நம்பிக்கையை இழப்பீர்கள். நீங்கள் கனவு கண்டது போல் நடந்தேறாது என நினைப்பீர்கள். ஆனால் முயற்சியைத் தொடர்கிறீர்கள். திடீரென்று ஒரு விஷயம் மாறி மற்றது எல்லாம் சரியாக அதனதன் இடத்தில் உட்கார்ந்துவிடும். மிகவும் கஷ்டமான நேரத்தில், எதுவுமே சரியாக அமையவில்லை என்னும் எரிச்சலில் இருக்கும்போது, முயற்சியைக் கைவிடாமல் இருக்கும்போது திடீரென எல்லாம் சரியாகி விடும். அது ஒரு பேரானந்தமான அனுபவமாக இருக்கும்.











