ரமேஷ் வைத்யா
இசைக் கடலில் திரைப் படகில்
அண்ணன் வேலைக்கு வந்த பிறகுதான் வீட்டுக்கு சொந்த டிவி வந்தது. தெருவில் காஜா முகையதீன் அட்வகேட் என்று போர்டு போட்டிருக்கும் பெரிய வீட்டில் ஒரு அப்போது நான் ஏறி உட்காரப் போதுமான அளவில் ஒரு மரப்பெட்டி இருக்கும். அட்வகேட்டின் மகன் இம்தியாஸ் என் தோழன்.
வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவன் கூப்பிட்டால் போகலாம். முன்பக்கம் சல்லாத் துணி பரவியிருந்த அந்த மரப்பெட்டியைத்தான் அவன் ரேடியோ என்று சொல்லியிருந்தான். அதற்கு கரன்ட் செருகி, குமிழை ஆன் செய்தால் ரொம்ப நேரம் பேசாமலேயே இருக்கும்.
ஆன் செய்தோமா இல்லையா என்ற சந்தேகம் எழும் நேரத்தில் பெட்டியில் ஒரு பச்சைச் சிறுவிளக்கு உயிர் பெறத் தொடங்கும். வால்வு ரேடியோ. க்ர்ர்ர்ர்ர்ர் என்ற ஸ்டாட்டிக் ஒலி கசியும். பாட்டு வருவதற்கு முன் அட்வகேட்டின் ஸ்கூட்டர்ச் சத்தம் வரும்.
நாங்கள் வெளியே ஓடிவிடுவோம். டேப்ரெக்கார்டர் என்றழைக்கப்பட்ட கேஸட் ப்ளேயர் பின்னாளில் கண்டுபிடிப்பார்களா என்றே நாங்கள் அனுமானித்திருக்க நியாயமில்லை.
இந்த நிலையில் பாட்டுகள் கேட்பது எங்கே போய்?
டைப்ரைட்டிங் இன்ஸ்டிட்யூட்காரர்கள் ஆண்டு விழா கொண்டாடுவார்கள். ரெண்டு நாள் ஸ்பீக்கர் செட் வைத்துப் பாட்டுப் போடுவார்கள். அங்கே போய்ப் பழியாய்க் கிடப்போம். ‘தேனினுமினிய தெள்ளுதமிழ்ப் பாடல்களை தேனி தெய்வக்கனி ஒலி அண்டு ஒளிபரப்பு நிறுவனத்தின் மூலமாகக் கண்டும் கேட்டும் களிக்க அழைக்கிறோம்’ என்று இடைக்கிடை மைக்கில் கத்துவார்கள். இதில் ஒளிபரப்பு என்பது சீரியல் செட் பல்புகள். அழைக்கிறோம் என்பது சும்மாச் சொல்லியிருப்பார்கள் போல, நாங்கள் போய் ஸ்பீக்கரின் எதிரே நின்றால் அவர்களிடம் வாங்கித்திங்கக் காசு கேட்கப் போனதைப் போல் நடத்துவார்கள். சுயமரியாதை புரியாத வயது. ‘அண்ணே அன்னக்கிளி போடுண்ணே, கவிக்குயில் போடுண்ணே’ என்று எங்கள் பயல்கள் கெஞ்சுவது மைக் செட்டுக்காரனுக்கு ஒரு கெத்து. ‘எலேய், சும்மா ஒக்காரணும். அண்ணெம் போடுவேன்’ என்பான். இவனெல்லாம் அண்ணனாம்.
மற்றபடி சினிமா பார்க்கும்போது கேட்பதுதான் பாட்டு. இப்போதைய மனிதர்களுக்கு ஒரு விஷயம் தெரியாது. பாட்டுகளுக்காகவே படங்கள் ஓடின என்கிற தகவல். ஆரம்பக் காலத்தில் படம் பார்த்துவிட்டு வந்தவர் சொல்லித்தான் தேனினுமினிய பாடல்கள் படத்தில் இருப்பது தெரியவரும். தெருவுக்கு ஒரு வீட்டில் இருக்கும் ரேடியோவில் கேட்பது போனஸ்தான். அந்தப் பாட்டுகளைக் கேட்கப் படத்துக்குப் போயிருக்கிறார்கள். அதனால், போஸ்டர்களிலேயே பாடல்களைப் பற்றிய பிரதாபங்கள் இருக்கும். ‘பாடல்கள் எட்டும் தேன் சொட்டும்.’
இடைப்பட்ட காலத்தில் கேஸட்டின் வரவு. இளையராஜாவின் வரவு நிகழ்ந்த காலக்கட்டம். போஸ்டர் ஒட்டப் பணம் தேற்றிக்கொண்டு, படமெடுக்கப்போவதாகச் சொல்லி இளையராஜாவிடம் இசையமைப்புக்கு ஒப்புதல் வாங்கிவிட்டால் போதும். ஆர்மோனியத்தின் முன்னால் அவர் உட்கார்ந்திருக்கும் படம் வெளியானால், விநியோகஸ்தர்கள் கொடுக்கும் முன்பணக் காசிலேயே படம் எடுத்துவிடலாம். அதை அடுத்து கேஸட் வந்துவிடும். ஒரிஜினல் ஒரு பங்கு பைரசி பலப்பல பங்கு என்று இண்டு இடுக்கு விடாமல் பாடல்கள் பரவ, மினிமம் கியாரன்டி ஓட்டம் உறுதிப்படும். இந்த கேஸட் யுகத்துக்கு முந்தைய காலத்தில், சொன்னேனே, சினிமா பார்க்கும்போது கேட்பதுதான் பாட்டு.
சின்ன வயசில் பார்த்த படங்களின் பாடல்கள் எடுத்த எடுப்பில் ஈர்க்கவில்லை. பாட்டு தொடங்கினால் சிகரெட் குடிக்கப் போவார்கள் என்பதை நீங்களும் கேள்விப்பட்டிருக்கக் கூடும். படமென்றால் பாட்டு இருக்க வேண்டுமென்பதற்காகப் போடுகிறார்கள். நமக்குக் கதை தெரிந்தால் போதும் என்று பார்வையாளர் நினைக்குமளவுக்குத்தான் நிலைமை இருந்தது. நானும் அப்படிப்பட்ட பார்வையாளன்தான்.
நான் சினிமா அரங்கத்துக்குப் போகத் தொடங்கியபோது இருந்தது கேவி மகாதேவன் மெல்ல விலகவும் எம்எஸ்வி நுழையவுமான காலம். எங்கள் ஊரில் வெள்ளி வெள்ளிக் கிழமைகளில் படம் மாற்றியாக வேண்டும். அதற்கேற்ற எண்ணிக்கையில் புதுப்படங்கள் தயாரிக்கப்படா. எனவே பழைய படங்கள் போட்டாக வேண்டும். அரதப் பழைய படங்களும் போடுவார்கள். சாந்த சக்குபாய், பக்த பிரகலாதா, சிந்தாமணி, க்ருஷ்ணவிஜயம்…
ஹரிதாஸ் படத்தில்,
‘கண்ஜாடை செய்யும் பெண் இவள் பார்வை
காமன் மலர் கணைதானோ
விரைவுடன் செல்லும் என் மனம் இவளோடு,
தெருவென நினையாதேனோ
வாழ்வில் ஓர் திருநாள்
இன்றே வாழ்வில் ஓர் திருநாள் ’
என்று வெள்ளைக் குதிரையில் ஆரோகணித்து எம்கேட்டி வர, அவர்தம் சுந்தரவதனப்பேரழகைப் பார்த்து மயலுற்ற பெண்கள் எதிரில் வருவாரை அறியாது மோதி தண்ணீர்ப் பானையை உடைக்க, அந்தப் பாட்டு உட்பட அந்தப் படத்தில் இருபது பாட்டுகள், அவையாவன, சாருகேசி, பிலஹரி, சுத்ததன்யாசி, மாண்டு, உசேனி என அப்பட்டமான கர்நாடக இசை என்று தெரியாது.
சமயங்களில் நன்றாக இருப்பதாக உணர்ந்தும், சமயங்களில் ‘அம்மா உச்சா போயிட்டு வரேன்’ என்றும் அவை கடந்து போயின.
கர்நாடக கிளாசிக் இசை என்பது எப்படி நம்மை ஈர்க்கும் என்பதை தியரியாகவும் பிராக்டிகலாகவும் சொல்லிக் கொடுக்க வந்தது சங்கராபரணம் என்ற படம். சோகம் இருக்கும் படங்களை எல்லாம் திரைக்காவியம் என்று குறிப்பிடும் வழக்கம் இருந்த காலம் அது. சங்கராபரணம்தான் அந்த சொல்லோடு சேர்ந்தே என் மனதில் பதிந்த முதல் படம்.
மகானுபாவர்கள் கே.விஸ்வநாத், கே.வி.மகாதேவன் இணைந்து கிளாஸிக் இசையை ரசிப்பது எப்படி என்று மியூசிக் அப்ரிசியேஷன் கோர்ஸ் எடுத்திருந்தார்கள். ‘சங்கரா நாத சரீரா பரா’, ‘ஏதீருக நனு தய சூசெதவோ’, ‘பலுகே பங்காரமாயனா’, ‘ப்ரோசேவாரெவருரா’ என அறியாத மொழியில் வித்தியாசமான பாடல்கள் காதை நிரப்பின. அவை இசையின் எந்தப் பிரிவைச் சேர்ந்தவை என்று படத்தின் கதையே விளக்கியது. கர்நாடக இசையின் ஜனரஞ்சக வடிவம் அது என்று புரியவைக்கப்பட்டது.
அதை ஒட்டி, அத்தனை நாள் நான் கேட்டுவந்த பழைய பாடல்களின் இசை வேறு அர்த்தத்தில் புரிபட்டது. ஜி.ஆர்.ராமநாதனோ கே.வி.மகாதேவனோ திரையிசையில் என்ன செய்தார்கள் என்பது டெக்னிககல் வார்த்தைகளன்றி ஏதோ கொஞ்சம் புரிந்தது. பழைய பாடல்களைப் புதுக் காதுகளால் கேட்கும் வழக்கத்தை எனக்கு சங்கராபரணம் தொடங்கிவைத்தது.
அதே மகாதேவன் வேறு விதமான பாடல்களையும் அறிமுகப்படுத்தி ஆச்சரியப்படுத்தினார். பள்ளிக்கு கட் அடித்தால் எங்கேயாவது உட்காரவேண்டுமே, குமுதம் படத்தில் போய் நின்றேன். கள்ளபார்ட் நடராஜன், ‘மாமா மாமா மாமா ஏம்மா ஏம்மா ஏம்மா’ என்று ஆடிப்பாடும் பாட்டுத்தான் டப்பாங்கூத்து. அட அட அட, இதென்னடா இது புதுசா இருக்கு என்று வியக்கத் தொடங்கியது,,வாங்க மாப்பிள்ளை வாங்க படத்தின் ‘என்னாடி முனியம்மா ஓங்கண்ணுல மையீ யாரு வச்ச மையி இது நா வச்ச மையீ’ என்று டி.கே.எஸ்.நடராஜன் + சங்கர் கணேஷ் வழியாகத் தொடர்ந்தது, ‘ஒத்த ரூவா தாரேன் நா ஒனப்பதட்டும் தாரேன் ஒத்துக்கிட்டு வாடி நாம ஓடப்பக்கம் போவோம்’ என்று இளையாராஜாவில் வந்து திருப்தி நிலையை எட்டியது. சந்தேகம் வந்துவிடக் கூடாது என்று படத்தின் பெயரே நாட்டுப்புறப் பாட்டு எனத் துலங்கியது, துலக்கியது.
எங்கள் வயசுக்கு சமகால ஹிட் பாட்டு என்பதற்கு ஒரு அமிலச் சோதனை (Acid test) உண்டு. தேனி – சென்னை – தேனி நெடுஞ்சாலை வழித்தடத்தில் முழு இரவுப் பயணத்தின் நிசிகளில் பேருந்துகள் தேநீருக்கும் நிற்கும் (சிறுநீருக்கு நிற்கும் என்று சொன்னாலும் ஒரே அர்த்தம் வருவது விந்தை) இடங்களில் உச்ச டெசிபலில் ஒலிக்கும் பாடலே அன்றைய சூப்பர் ஹிட். நாலு இடங்களில் நின்றால் நாலிலும் ஒரே பாடல் ஓடும். தமிழ் ரசிகர்களின் ரசனை மாறுபாட்டுக்கு ஏற்ப பட்டிமன்றங்களும் சொற்பொழிவுகளும் நகைச்சுவை மிமிக்ரிகளும்கூட ஒலிபரப்பாகும். அப்படி லைம்லைட்டிலேயே இருந்த பாடல்களில் என் வயது நினைவுகளில் முதன்மையானது மேற்படி என்னாடி முனியம்மாதான்.
திரைப்படங்களின் இந்தக் கைங்கர்யத்தால் பழைய நாட்டுப்புறப்பாட்டு கேசட்டுகளைத் தேடிக் கேட்டேன். தேக்கம்பட்டி சுந்தர்ராஜனின் கிளாசிக்கான (அதாவது நாட்டுப்பாட்டுகளிலேயே கிளாசிக்கான) ‘அங்கே இடி மொழங்குது கருப்பசாமி தங்கக் கலசம் மின்னுது’ பாட்டு ஆல்பம் அறிமுகமானது அவ்வண்ணமே. இத்தனை காலங்கள் கடந்து ‘சரிகமப’, ‘சூப்பர் சிங்கர்’ மேடைகளில் இன்றைக்கும் இப்பாடல் சக்கைப்போடு போடுவதை நீங்கள் கவனிக்கலாம்.
நாட்டுப்பாட்டை சாஸ்திரீய சங்கீதத்தோடு ஒப்பிடுகையில் மாற்று நாகரிகப் பாடல் எனச் சொல்லலாம். இதே போல் இன்னொரு மாற்று வகை திடுதிப்பென மனதில் பாய்ந்தது. கானா. தமிழ்ப் படத்தில் முதன் முதலாக அதைச் செய்து காட்டிய இசையமைப்பாளர் ஆதித்யன். சமையல் கலை, சவுண்ட் இஞ்சினீரிங் என்று தாரதம்மியம் பார்க்காமல் கலந்துகட்டி அடித்தவர், சினிமாவில் கானா கலக்கவும் காரணராக இருந்திருக்கிறார். அமரன் படத்தில், இப்போது இதைச் சொல்ல வேண்டுமானால் அமரன் 1992 என்று சொல்ல வேண்டும் போல, ‘வெத்தல போட்ட ஷோக்குல நான் டப்புனு குத்துனன் மூக்குல வந்துது பாரு ரத்தம் இந்த அமரன் மனசு சுத்தம்’ என்று புதுப் பதாகையை ஏந்தி வந்தார். பிற்காலத்தில் தேவா அந்தப் பதாகையை ஆட்டிய ஆட்டலில் கானா அவருக்கே பாத்தியம் ஆகிப்போனது.
அண்ணாநகரு ஆண்டாளு, விதவிதமா சோப்பு சீப்பு கண்ணாடி அக்கா மக வந்து நின்னா முன்னாடி, கந்தன் இருக்குமிடம் கந்தக்கோட்டம் காதலி இருக்குமிடம் மலர்த்தோட்டம், உதயம் தியேட்டருல என் இதயத்த தொலச்சேன், குன்றத்துல கோயிலக் கட்டி கும்மாளமா கும்மி அடிச்சு… அடேங்கப்பா…
எத்தன எத்தன கானா – அட
ஒண்ணுமெ போகல வீணா…
இதற்கு முன்னதாகவே ஒரு மாற்றிசை, சினிமாக் காற்றில் அடித்துக்கொண்டுவந்து காதில் விழுந்திருந்தது.
சுராங்கனி சுராங்கனி
சுராங்கனிக்க மாலு கினாவா
மாலு மாலு மாலு
சுராங்கனிக்க மாலு
சுராங்கனிக்க மாலு கினாவா
– என்று அவர் எனக்கே சொந்தம் படத்தில் வந்த பாட்டு இலங்கை இசையின் ஒரு வகையை இளையராஜாவின் கைவண்ணம் சேர்த்து அறிமுகப்படுத்தியது. அதை அடியொற்றிப் போய்த்தான்,
சின்ன மாமியே – உன்
சின்ன மகளெங்கே
பள்ளிக்குச் சென்றாளோ
படிக்கச் சென்றாளோ – அட
வாடா மருமகா – என்
அழகு மன்மதா
பள்ளிக்குத் தான்சென்றாள்
படிக்கத்தான் சென்றாள்
என்றெல்லாம், ‘பொப்’ இசையைக் கேட்பது வழக்கமாயிற்று.
வறப்பட்டிக்காட்டில் இருந்து ஹிந்துஸ்தானி கேட்பதைப் பற்றி நப்பாசைப்பட முடியாதே… பாலைவனச் சோலை படத்தின் மேகமே மேகமே பாட்டு வந்து ஓரளவு குறை தீர்த்தது. ‘வான மழை போலே என் பாடல்கள் கான மழை தூவும் முகிலாடல்கள்’ என்று இது நம்ம பூமியில் இளையராஜா அடித்த அடி நல்ல வழியைக் காட்டியது. அந்தக் கதவு பல கஸல் கதவுகளை அடுத்தடுத்துத் திறந்துவிட்டது. குலாம் அலி, ஜக்ஜீத் சிங், சித்ரா சிங், பங்கஜ் உதாஸ், பூபிந்தர், சுரேஷ் வாத்கர் என்று வரிசையாகத் திறந்த கதவுகள் ஒரு புதிய கனவுலகிற்கு இட்டுச் சென்றன.
கேவிஎம் காலத்திலேயே மாறுவேடத்தில் நுழைந்து மறைந்து இருந்த மேற்கத்திய இசை, எனக்கு, புன்னகை மன்னன் படத்தில்
‘One two three four now
Come into the boogie
Lets just stay alive
Feeling very groovy (இப்படித்தான் காதில் விழுந்தது. பிழை இருப்பின் மன்னிக்க) என்று கோலாகலமாகத் தொடங்கியது.
அரபி இசையும் பஞ்சாபி இசையும்கூட தமிழ்ப் படங்களில் இருந்து புறப்பட்டுப் போய்க் கேட்க முடிந்தது.
இசை கடல். போகும் எண்ணம் இல்லை. ஏதோ படகு என்று ஏறி உட்கார்ந்ததில் அது கொண்டுபோய்க் காட்டிய இடங்கள் இத்தனை இசை.
நன்றி தமிழ் சினிமா.
தொடரும்…











