ரமேஷ் வைத்யா
சுற்றிலும் விழா மனோநிலை. சென்னைச் சாலைகள் வெறிச்சோடிவிட்டன. ஆனாலும் தெருக்களில் பரபரப்புத் தெரிகிறது. கந்தக நெடி தொடங்கியிருக்கிறது. கடைசி நேரத்தில் கடைக்கு அலைகிறவர்களை நினைத்துப் பரிதாபப்படலாமா என மனம் யோசிக்கிறது. சுயமாக – தன்னை நினைத்தே – அதைச் செய்துகொள்ளலாமே என அறிவு அறிவுறுத்துகிறது. தீபாவளியைப் பற்றி யோசனை கிளம்புகிறது.
தீபாவளி + படம் என்பதை தீபாவளிப் படம் என்றும், பட தீபாவளி எனவும் இரு விதங்களில் இணைக்க முடிகிறது.
நாளுங்கிழமையும் நலிந்தேனுக்கில்லை. எனினும், தமிழ்நாட்டில் ஒருவர் தீபாவளி என்பதிலிருந்து முற்றிலுமாகத் தள்ளியிருந்துவிட முடியாது. புராணத்தை விட்டாலும், விடுமுறை, போனஸ், புதுத் துணி வாசனை, குடும்பப் பிடுங்கல் எனப் பல வழிகளில் தீபாவளி தன் பல கரங்களையும் பலகாரங்களையும் நீட்டும்.
சந்தோஷ ஆகாயத்தையும் துக்க ஜன்னலின் வழியாகப் பார்க்கிற மனப் பிறழ்வுக்கு உளவியல் புத்தகத்தில் என்ன பெயர் வைத்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை. ஆனால், அது எனக்குச் சின்ன வயதிலிருந்தே உண்டு. சோக காவியத்தின் நாயகனாக இருப்பதொரு வருத்த மகிழ்ச்சி.
தீபாவளி என்பது சந்தோஷத்தைக் கொண்டுவரும் பெரும்பண்டிகை. உள்ளே இல்லாவிட்டாலும் வெளியில் பரவிக் கிடக்கும் மகிழ்ச்சி நம் மேலும் பூசப்பட்டுவிடும். தேனியில் காதலித்துக்கொண்டிருந்த காலத்தில் வந்த ஒரு தீபாவளி மாத்திரமே அந்தப் பொது உணர்வை நானும் கொள்ளும் சந்தர்ப்பமாக அமைந்தது. நடுராத்திரி ரெண்டு மணிக்கு எழுந்து அணுகுண்டை அவள் வீட்டு அருகில் வெடித்தால் அவள் மட்டும் வெளிவருவாளா, மாமனார் வருவாரா போன்ற ஐயங்கள் இருந்த சந்தர்ப்பம். என் காதல் உணர்வுகளுக்கு ஒத்தாசையாக ‘பூவே பூச்சூட வா’ வந்திருந்தது. ‘பட்டாசைச் சுட்டுச் சுட்டுப் போடட்டுமா மத்தாப்புச் சேலை கட்டி ஆடட்டுமா’ என்று புத்திளமைக் கொண்டாட்டம் ஒன்று நதியா ரூபத்தில் சரவெடி ஆட்டம் போட்டுக்கொண்டிருந்தது இளவட்டங்களின் மனங்களில். அந்தக் காலக் கட்டத்தில் இளையராஜாவின் பாட்டுக் கச்சேரி சுத்துப்பட்டில் பக்கத்தில் இருந்த ஊரான பண்ணைப்புரத்தில் ஏற்பாடாகியிருந்தது. இப்போது எல்லா பஸ்ஸையும் கிளாம்பாக்கம் டு தெற்குப்பக்கம் விடுவது போல, ஒருங்கிணைந்த மதுரை மாவட்ட பஸ்கள் அம்புட்டும் பண்ணைப்புரத்தை நோக்கியே போயின. நானும். உடன் சில கம்யூனிஸ்ட் தோழர்கள். பொதுவாகவே உற்சாகத்தில் – யூஃபோரியாவில் – ததும்பிக்கொண்டிருந்த கூட்டம். சித்ரா வந்து, ‘பூவே பூச்சூட வா எந்தன் நெஞ்சில் பால் வார்க்க வா’ என்று பாட ஆரம்பித்ததும் பென்னம்பெரிய பிரச்சாரப் பேருந்து கூட்டத்தில் புகுந்த மாதிரி ஆகிவிட்டது. பேரிரைச்சலுடன் கூடிய வரவேற்பு. “நம்மாளுங்க இந்த அளவுக்கு இசை ரசிகர் ஆயிட்டாங்களா? ஒரு வரிக்கே கத்துறாங்களே” என்று கேட்டார் ஒரு தோழர். “சித்ரா வடிவத்துல நதியாவைப் பாக்குறாங்க தோழர்” என்று உளவியல்பூர்வமாகச் சொன்னேன். ஆமோதித்தார். சுடிதார் தொடங்கி, ஸ்டட், பொட்டு, கொண்டை வளையம் எல்லாவற்றிலும் நதியா பிராண்டு ஏறியிருந்தது அப்போது.
தீபாவளியில் என் ஆள் மஞ்சள் பாவாடை சட்டையில் பட்டாசைச் சுட்டுச் சுட்டுப் போட்டுக்கொண்டிருந்தாள். “ஏய், இவ ஒரு சாயல்ல நதியா மாதிரியே இருக்கால்லடா” என்று என் மாமியார் வியந்தார். நானும் உடனடியாக ஒப்புக்கொண்டேன். பக்கத்திலிருந்த ரெண்டு பேர் ஏன் சிரிப்பை அடக்கிக்கொண்டு வேறு பக்கம் பார்த்தார்கள் என்பதுதான் விளங்கவில்லை. அவள் கொஞ்சம் நதியா மாதிரித்தான் இருந்தாள் என்பதற்கு இன்னொரு ஆதாரமும் உண்டு. எங்கள் காதல் விவகாரம் அரசல் புரசலாகப் பரவிய சூழலில் ஒரு சிறுவன் சொன்னதுதான் அந்த ஆதாரம். ‘உனக்காகவே வாழ்கிறேன்’ படம் பார்த்துவிட்டு, ‘கண்ணே உனைத் தேடுகிறேன் வா காதல் குயில் பாடுகிறேன் வா’ என்று கண்ணீரோடு பாடிக்கொண்டிருந்தேன். என் பாட்டை நிப்பாடுவதற்காகவோ என்னவோ பக்கத்துவீட்டு காளிதாஸ் இடைமறித்து, “ஏண்ணே, இந்தப் பாட்டுல வர்ற நதியா நம்ம அண்ணி மாதிரியே இருக்காண்ணே” என்றான். “நான் சிவகுமார் மாதிரி இல்லல்லடா?” என்று கேட்டுவைத்தேன். நியாயப்படி நான் சிவகுமார் மாதிரி இருக்க வேண்டுமா கூடாதா என்பதுகூட அப்போது எனக்குத் தெளிவில்லை. காதல் வேகம். எப்படியோ காதல் கையறு நிலைப் பாட்டுப் பாடி வேதனையை அனுபவிக்க வேண்டும் என்பதே உத்தேசமாக இருந்தது. நான் உறங்கும் நாள் வேண்டும். சாய்ந்துகொள்ளத் தோள் வேண்டும். என் கண்ணில் நீர் வேண்டும். சுகமாக அழவேண்டும்.
அழுவதில் சுகம் காண்பவனுக்கு அதற்கான வாய்ப்புகள் அமைந்தே தீரும். ஜீவனோபாயம் தேடி சென்னைக்கு வந்தேன். கையில் ரெண்டு செட் துணி, கொஞ்சம் புத்தகங்கள். கூடவே தனிமை.
மலையாள மங்களம் பத்திரிகையின் தமிழ்ப் பதிப்பில் வேலை. ‘கொரட்டூர்லருந்து ஜெமினி வந்துபோற பஸ் காசு மட்டும் குடுங்க’ என்று சம்பளம் பேசினேன். பொறுப்பாசிரியர் தவிர ஒற்றையாள் அலுவலகம். பக்க லே அவுட் முடித்து திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ்ஸில் எர்ணாகுளத்துக்கு அனுப்ப வேண்டும். தீபாவளி முதல் நாளில் லே அவுட் பக்கங்களை அனுப்பிவிட்டு நடை போடலானேன். ஊரெங்கும் உற்சாகம். திருநாள். கூட்டம் கூட்டமாக உல்லாச ஜனங்கள். நான் மட்டும் ஆள் கூட்டத்தில் தனியே. நாலைந்து நிறுத்தங்கள் நடந்து பஸ் ஏறுமளவு மனசில் தனிமை வருத்தம். கூடவே ஆள்கள் இருந்தாலும் தனிமை உணர்ச்சி என்பது காதல் பரிசு. ஊரில் பாதியில் விட்டு வந்த காதல் தொடருமா, துண்டாகுமா? கல்யாணப்பரிசு பாட்டு மனதில் ஓடியது.
‘உன்னைக் கண்டு நான் வாட
என்னைக் கண்டு நீ வாட
கண்ணீரும் கதை பேசும் தீபாவளி
ஊரெங்கும் மணக்கும்
ஆனந்தம் நமக்கு
காணாத தூரமடா
நெஞ்சமும் கனலாகி நீறாகும்போது
நிம்மதி என் வாழ்வில் இனி ஏது
கொஞ்சிடும் மொழி கேட்டு
மகிழ்ந்தவள் எங்கே
குலத்தின் விளக்காய்
திகழ்ந்தவள் எங்கே
கண்ணுக்குள் நடந்த காட்சிகள் எல்லாம்
கனவாகிப் போனதடா …’
அப்போது எவளும் என்னிடம் வரவே இல்லைதான். எனினும் எவளோ போய்விட்ட சோகம் வேண்டியிருந்தது. பல தீபாவளிகளில் இந்தப் பாட்டே எனக்கு பண்டிகைப் பாட்டாக இருந்தது.
அதற்கப்புறம் படங்கள் வராமலிருக்குமா? தீபாவளி தினத்தில் பாடப்பட்டதா, வேறொரு நாளிலா என்று நினைவில் இல்லாத – ஆனால் நினைவில் இருந்து நீங்காத – பாட்டு, ‘நான் சிரித்தால் தீபாவளி நாளுமிங்கே ஏகாதசி…’
கஷ்டகாலம் இது உற்சாகமாகக் காதில் கேட்டாலும் உள்ளூரத் துன்ப மயமானதுதான்.
சண்டைக்கோழியில்,
‘தாவணி போட்ட தீபாவளி
வந்தது என் வீட்டுக்கு
கை மொளச்சு கால் மொளச்சு
ஆடுது என் பாட்டுக்கு’
என்ற வரிகள் எங்கிருந்தோ கசிந்தபோது, விகடன் பணியால் விளைந்த தொடர்புகளால் கிட்டிய சுடிதார் போட்ட தீபாவளி வந்திருந்தது என் வீட்டுக்கு.
அல்லி அல்லி அல்லி அல்லி தீபாவளி, தீபாவளி தல தீபாவளி, தீபாவளி தீபாவளி தீபாவளி நீதானடி சூறாவளி சூறாவளி சூறாவளி நீதானடா, தீபங்கள் ஆயிரம் தேவியர் ஏற்றிடும் தீபாவளி, ஊரே கொண்டாடும் தீபாவளி வந்தாச்சு, தினந்தினந்தினம் தீபாவளி உங்கள் திருவிழிகளில் புஷ்பாஞ்சலி முதலான பாட்டுகளோடு பல தீபாவளிகள் கடந்தன.
அவசரவசரமாக எழுதப்படும் இந்தக் கட்டுரையை முடித்துவைக்க தேவகோட்டை அபிராமி பாடும் புத்தம்புதுப் பாட்டுக் கேட்கிறது.
‘வெடிய வெடிச்சுப் பாரு
தீபாவளி ஜோரு
எண்ண தேச்சு குளிச்சு
நீ ஜாலியாக் கொண்டாடு
வெடிப்போமா பட்டாச
எடுப்போமா புது ட்ரெஸ்ஸ…’
எல்லோருக்கும் நவீன தீபாவளி வாழ்த்துகள்.











