கருந்தேள் ராஜேஷ்
எதிர்காலத்துக்காகத் திரைப்படங்கள் எடுத்த ஒரு மனிதர். சிசில். பி. டெமில்லின். ஹாலிவுட் படங்களுக்கு இணையாக – ஏன் – அவற்றை விடவும் ஆழமான கருத்துகள், உணர்வுகள் ஆகியவைகளைச் சேர்த்துக்கொண்டு ஆசியாவில் இருந்துகொண்டே உலகத்துக்கு மிகப் பிரம்மாண்டமான படங்கள் மூலமாகச் சவால் விட்டவர்.
மிகுந்த கலையுணர்வு கொண்டவர். தனிமையை விரும்பியவர். ஒரு பெர்ஃபக்ஷனிஸ்ட் என்றே சொல்லும் அளவு மிக நேர்த்தியாகத் திரைப்படங்கள் எழுதி எடுத்தவர். ஆனால் இத்தனை இருந்தும் மிக மரியாதையான மனிதர். ஒரு காலகட்டத்தில் – புகழின் உச்சியில் இருந்தபோது தற்கொலை செய்துகொள்ள முயன்றவர் – ஆனால் அதிலிருந்து மீண்டு வந்து உலகின் மறக்க முடியாத திரைப்படம் ஒன்றை எடுத்தவர். கோபக்காரர்.
குடிப்பழக்கத்தால் துன்புற்றவர். உலகத்தின் சுயநலமிக்க முன்னேற்றத்தால் கோபமடைந்து, ஒருசில நெருங்கிய மனிதர்களைத் தவிர வேறு யாரையும் சந்திக்காமல் தனிமையில் காலம் கழித்தவர்.
இத்தனை குணாதிசயங்களும் சேர்த்தால் கூட, உலகின் மிக முக்கியமான இயக்குநர்களில் ஒருவரான அகிரா குரஸவாவை முழுமையாகப் பிறருக்கு விளக்கிவிட முடியாது. அப்படிப்பட்ட அகிரா குரஸவாவைப் பற்றிய ஒரு மிக முக்கியமான புத்தகம்தான் ‘Something Like an Autobiography’. இந்தப் புத்தகத்தைக் குரஸவாவே ஜப்பானிய மொழியில் எழுதினார்.

அதை ஆங்கிலத்தில் Audie. E. Bock மொழிபெயர்த்திருக்கிறார்.
இந்தப் புத்தகம் திரை ஆர்வலர்களுக்கு எதனால் முக்கியமாகிறது?
இதைப் பற்றிக் குரஸவாவே புத்தகத்தின் முன்னுரையில் விளக்குகிறார்.
“பலரும் என்னை ஒரு சுயசரிதை எழுதச்சொல்லி வற்புறுத்தினார்கள். ஆனால் எனக்கோ அதில் பெரிதாக விருப்பம் இல்லை. அப்போதுதான் புகழ்பெற்ற ஃப்ரெஞ்ச் இயக்குநர் ஸான் ரென்வா (Jean Renoir), அவரது சுயசரிதையை எழுதியுள்ளார் என்று கேள்விப்பட்டேன். அவருடன் ஒரு முறை உணவு அருந்தியுள்ளேன். அப்போது அவருடன் நிறையப் பேசியிருக்கிறேன். அவரைப் பற்றிய எனது உறுதியான கருத்து என்னவென்றால், அவர் என்ன வேண்டுமானாலும் செய்யக்கூடும் – ஆனால் ஒரு சுயசரிதை மட்டும் அவசியம் எழுதமாட்டார் என்பதே. ஆனால் அவர் சுயசரிதை ஒன்றை எழுதியுள்ளார் என்று கேள்விப்பட்டதுமே எனக்குள் ஒரு குண்டு வெடித்தது போலவே உணர்ந்தேன்.
அவரது முன்னுரையில் ரென்வா இப்படி எழுதியிருக்கிறார்.
‘ஒரு கலைஞன் கேமராவையும் கையில் மைக்ரஃபோன் ஒன்றை வைத்துக்கொண்டும் கத்திக்கொண்டும் இறைந்துகொண்டும் திரைப்படம் ஒன்றை எடுத்து, அதன்மூலம் தன்னைப் பற்றியே பல விஷயங்கள் சொல்லியிருக்கிறான் என்பது பலருக்கும் முக்கியமில்லை. எப்படியாவது சுயசரிதை ஒன்றை எழுதி, அதில் தன்னைப்பற்றி நிறையச் சொல்லவேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர்’.
மேலும், ’ஒரு மனிதன், சுயமாக எழும்பி நிற்பதில்லை. அவன் ஒரு ஆளுமையாக உருமாறுவதற்குப் பல அம்சங்கள் துணை நிற்கின்றன. அவன் சிறுவயதில் பள்ளியில் பழகிய நண்பர்கள், அவன் படித்த முதல் கதையின் ஹீரோ, அவனது உறவினனிடம் இருந்த நாய்.. இப்படிப் பலவும் சேர்ந்துதான் ஒரு மனிதன் உருவாகிறான். அவனைச் செதுக்கிய சுற்றுச்சூழல் இதில் ஒரு முக்கியமான பங்கு வகிக்கிறது. இதனாலேயே நானும் எனது வாழ்க்கையைச் செதுக்கிய மனிதர்கள், சம்பவங்கள் ஆகியவற்றை இந்தப் புத்தகத்தில் முக்கியமாக நினைவுகூர்ந்துள்ளேன்’.
இது ஸான் ஜென்வாவின் முன்னுரை. இதைப் படித்ததும், ரென்வாவுடன் பழகியதும்தான் என்னையும் என் சுயசரிதையை எழுதத் தூண்டியது. ரென்வா என்ற ஆளுமை என் மீது ஏற்படுத்தியிருந்த தாக்கமும் என் சுயசரிதைக்கு மிக முக்கியமான காரணம். நானும் அவரைப் போலவே முதுமையடைய விரும்புவதும் இன்னொரு காரணம்’.
இது அகிரா குரஸவா, தனது சுயசரிதையின் முன்னுரையில் எழுதியிருக்கும் ஒரு முக்கியமான விஷயம். ஸான் ரென்வாவை நினைவுகூர்வதைப் போலவே, ஹாலிவுட் இயக்குநர் ஜான் ஃபோர்டையும் நினைத்துப் பார்க்கிறார் குரஸவா. ஆனால் ஜான் ஃபோர்ட் சுயசரிதை எதுவும் எழுதியிருக்கவில்லை. இருந்தாலும், அவர் உருவாக்கியிருந்த தாக்கமும் தனது சுயசரிதைக்கு ஒரு காரணம் என்பது குரஸவாவின் கருத்து.

இப்படி அகிரா குரஸவாவைப் பாதித்த இரண்டு ஆளுமைகளை வைத்துக்கொண்டு, தனது சுயரிதையை குரஸவா துவங்குகிறார். இந்தப் புத்தகத்தின் மூலம், குரஸவாவின் திரைப்படங்களின் பல முக்கியமான அம்சங்கள் நமக்குப் புரியவருகின்றன. ஏன் அவரது காட்சிகள் மிகுந்த உணர்ச்சிப்பூர்வமாகவும் ஆழமாகவும் இருந்தன என்பதற்கெல்லாம் அவரது சுயசரிதையில் விளக்கங்கள் தானாகவே நமக்குப் புரியும் வண்ணமே அவர் இந்தப் புத்தகத்தை எழுதியிருக்கிறார்.
இந்தப் புத்தகம், அவரது பிறப்பில் துவங்கி, Rashoman திரைப்படத்தை அகிரா குரஸவா இயக்கிய காலகட்டத்தோடு இந்தச் சுயசரிதை முடிந்துவிடுகிறது. அதற்கும் காரணத்தை முன்னுரையிலேயே குரஸவா சொல்கிறார். அவரைப் பொறுத்தவரை, ஒரு திரைப்பட இயக்குநரிடம் இருந்து திரைப்படங்களைப் பிரித்துவிடமுடியாது. அவன் திரைப்படங்களில் அவனது கருத்துகளை வெளிப்படுத்தும் காலத்தோடு அவன் தனிப்பட்ட வாழ்க்கை முடிந்துவிடுகிறது. அவனிடம் இருந்து அவனது திரைப்படங்களைப் பிரித்தால் அவனது வாழ்க்கை பூஜ்யமாக மாறிவிடுகிறது. இதனாலேயே Rashoman திரைப்படத்தை அவர் இயக்கிய காலகட்டத்தோடு அவரது சுயசரிதையை முடிப்பதாக விளக்கியிருக்கிறார்.
இந்தப் புத்தகத்தில் மொத்தம் 53 சிறு அத்தியாயங்கள் இருக்கின்றன. அனைத்துமே மிக விரைவாகப் படித்துமுடிக்கும் வகையிலேயே குரஸவாவால் எழுதப்பட்டிருக்கின்றன. இவைகளின் மூலமாகக் குரஸவாவின் வாழ்க்கையின் மிக முக்கியமான சம்பவங்கள் விரிகின்றன.
குரஸவாவின் குழந்தைப்பருவத்தில் நிகழ்ந்த பல சம்பவங்களை மிகத்தெளிவான நினைவுகளாக அவர் விளக்குகிறார். அவரது குடும்பம், வளர்ப்புப் பிராணிகள், அவர் சிறுவயதில் பார்த்த திரைப்படங்கள், ஜப்பானில் நிகழ்ந்த இயற்கைப் பேரழிவுகள், அவற்றால் அவர் அடைந்த அதிர்ச்சிகள் மற்றும் மன உளைச்சல்கள் ஆகியவை நன்றாக விளக்கப்பட்டிருக்கின்றன.
இந்தப் பேரிடர்களே அவர் மனதில் பல எண்ணங்களை உருவாக்கி, அவரது உணர்வுகளைக் கூர்தீட்டி, அவரை ஒரு கலைஞனாக மாற்றியுள்ளன.
பள்ளிக்காலத்தில் அவர் தடகள விளையாட்டுகளில் ஈடுபடுமாறு பள்ளி நிர்வாகத்தால் வற்புறுத்தப்பட்டுள்ளார். ஆனால் சிறுவன் குரஸவாவுக்கு இவைகள் முற்றிலும் பிடிக்கவில்லை, அவரது குரலும் பெண்மை நிரம்பிய குரலாக இருந்திருக்கிறது. ஓவிய வகுப்புகளே அவருக்கு மிகவும் பிடித்திருந்தன. கூடவே கட்டுரை எழுதுதல். குரஸவாவின் படைப்புகள் பள்ளியில் நடத்தப்பட்ட பத்திரிக்கையில் பிரசுரமாகியிருக்கின்றன. இதனுடன் சேர்த்து, அப்போதே தனிமை விரும்பியாகவும் குரஸவா இருந்திருக்கிறார்.
பள்ளியின் அருகே ஓடும் ஒரு ஓடையின் அருகே பள்ளி முடிந்ததும் போய்த் தனிமையாக அமர்ந்துகொள்வது சிறுவன் குரஸவாவின் வழக்கம்.
அவருக்கு உயரம் தாண்டுதல் அறவே வராது. பல தோல்விகளை அதில் கண்டுள்ளார். அதனாலேயே பிற பள்ளி மாணவர்களின் சிரிப்புக்கும் உள்ளாகியிருக்கிறார். ஆனால் திடீரென்று பள்ளியின் உயரம் தாண்டுதல் பயிற்சிகளில், பிற நண்பர்கள் சிரிப்பதையும் பொருட்படுத்தாமல் பங்கேற்று, எதிர்பாராமல் வெற்றிகள் அடைந்துள்ளார் குரஸவா.
இன்றுவரை அது எப்படி நடந்து என்று புரியவில்லை என்று சொல்கிறார். ‘பள்ளியின் விளையாட்டு அறையில், நான் அடைந்த பல தோல்விகளைப் பார்த்துப் பரிதாபப்பட்ட யாரேனும் ஒரு தேவதையே என்னை வெல்ல வைத்திருக்கக்கூடும் ’ என்பது அவரது கூற்று.
செப்டம்பர் 1, 1923யில் கோடை விடுமுறை முடிந்து, பள்ளியின் முதல் நாளை வேண்டாவெறுப்பாகக் கழித்துவிட்டு, ஜப்பானின் மிகப்பெரிய புத்தகக் கடையான மாருஸென் (Maruzen) என்ற இடத்துக்குச் செல்கிறான் சிறுவன் குரஸவா. ஆனால் அந்தக் கடை இன்னும் திறக்கப்படவில்லை என்பதால் திரும்பிவிடுகிறான். சரியாக இரண்டு மணி நேரங்களில், ஒரு மிகப்பெரிய பூகம்பத்தால் (Great Kanto Earthquake) அந்தக் கடை சின்னாபின்னமாகிறது.
அந்த பூகம்பம் நேர்ந்ததும் டோக்யோவில் பெரும்பகுதி, ஒரு பெருநெருப்பால் பாதிக்கப்பட்டிருக்கிறது. பூகம்பத்தில் இருந்து ஒருவேளை தப்பித்திருந்தாலும், இந்த நெருப்பில் இருந்து அவர் வெளியேறியிருப்பது மிகவும் கடினம் என்று இந்தக் கொடூரத்தை நினைவுகூர்கிறார் குரஸவா. அன்று என்னென்ன நடந்தது என்பதையெல்லாம் விரிவாக எழுதியிருக்கிறார்.
இந்த பூகம்பத்தைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் நிகழ்ந்த ஒரு பெரும் கொடூர நிகழ்வு – நூற்றுக்கணக்கில் ஒரு கலவரத்தால் மக்கள் கொல்லப்பட்டது – குரஸவாவை நேரடியாகப் பாதித்திருக்கிறது. இதெல்லாம் பதிமூன்று வயதில் குரஸவாவே நேரில் பார்த்த நிகழ்வுகள்.
குரஸவாவுக்குப் பலவகைகளிலும் ஒரு முன்னோடியாக இருந்த அவரது அண்ணன் ஹெய்கோ (Heigo) ஒரு நாள் திடீரென இறந்துவிடுகிறார். அது ஒரு தற்கொலை. இது 23 வயது இளைஞர் குரஸவாவை மிகவும் பாதித்திருக்கிறது. அவர் மௌனப்படங்கள் திரையரங்குகளில் ஓடும்போது அவற்றின் காட்சிகளை அனைவருக்கும் உரத்துச் சொல்லி விளக்கும் வேலையில் (Film Narrator) இருந்துவந்திருக்கிறார். உலகெங்குமே, ஏன் இந்தியாவில் கூட – இந்த வேலை இருந்திருக்கிறது.
மௌனப்படங்களின் காலகட்டம் முடிந்து, திரைப்படங்கள் பேசத் துவங்கிய காலகட்டத்தில், வேலையில்லாமல் திணறிய ஹெய்கோ, திடீரெனத் தற்கொலை செய்துகொண்டுவிடுகிறார். இதைப்பற்றி ஒரு முழு அத்தியாயமே குரஸவாவின் புத்தகத்தில் இருக்கிறது (A Story I don’t want to Tell). இதற்கு நான்கு மாதங்கள் கழித்து, குரஸவாவின் மூத்த அண்ணனும் இறந்துவிடுகிறார். அச்சமயத்தில் என்ன செய்வது என்றே தெரியாமல் மன உளைச்சல் அடைந்திருக்கிறார் இளைஞர் குரஸவா.
இதன்பின் தன்னைத் தேற்றிக்கொண்டு, திரைத்துறை பக்கம் கவனம் செலுத்துகிறார் குரஸவா. ஒரு புகழ்பெற்ற திரைனிறுவனம், ஜப்பானியப் படங்களில் என்ன பிரச்னைகள் இருக்கின்றன என்று கேட்டபோது விரிவான ஒரு கட்டுரை எழுதி அவர்களின் கவனத்தைக் கவர்ந்து, பிரபல இயக்குநர் கஜிரோ யமமோட்டோவால் பரிந்துரைக்கப்பட்டு, அந்த நிறுவனமான Photo Chemical Laboratoriesஇல் வேலைக்கு சேர்த்துக்கொள்ளப்படுகிறார்.
இதன் பின்னர் இரண்டாம் உலகப்போர் துவங்குகிறது. குரஸவாவுக்குத் திருமணமும் நடக்கிறது. இதன்பின்னர் அவருக்குப் பல விரிவான, முக்கியமான அனுபவங்கள் கிடைக்கின்றன. அவைகளையெல்லாம் புத்தகத்தில் மிக விரிவாக எழுதியிருக்கிறார்.
இப்போதுதான் திரைப்படங்கள் எடுக்கத் துவங்குகிறார் குரஸவா. எப்படி எடுக்கத் துவங்கினார்? அவரது ஆரம்பகாலப் படங்களில் அவருக்குக் கிடைத்த அனுபவங்கள் என்னென்ன? Rashoman திரைப்படத்தை எடுக்க இவையெல்லாம் எப்படி அவருக்கு உதவின என்பதெல்லாம் புத்தகத்தில் நீங்கள் பல சுவையான தகவல்களுடன் தெரிந்துகொள்ளலாம். Rashoman திரைப்படத்துடன் அவரது புத்தகம் முடிவடைகிறது.
இந்தப் புத்தகத்தின் பின்னிணைப்பாக, திரைப்படம் எடுப்பது பற்றிய மிக அட்டகாசமான குரஸவாவின் மேற்கோள்கள், அவரது விளக்கங்கள் ஆகியவை கொடுக்கப்பட்டிருக்கின்றன. இவை இன்றுவரை அனைவருக்கும் பயனுள்ளவையாகவே உள்ளன.
திரைப்படம் என்றால் என்ன? திரையில் நாம் காணும் அனுபவம் என்பது (Cinematic beauty) என்ன? மனதில் தோன்றும் பல்வேறு ஐடியாக்களில் (ஒன் லைன்கள்) எப்படிச் சிறந்த ஒன்றைத் தேர்வு செய்து ஒரு படத்தை எழுதுவது?ஒரு திரைப்படத்தில் இயக்குநரின் பங்கு என்ன? திரைக்கதைக் கட்டமைப்பு என்பதை எப்படி சுவாரஸ்யமாக மாற்றுவது? திரைக்கதைகளை எழுதுவதற்கு முன்னர் நம்மை எப்படித் தயார் செய்துகொள்வது? நமது திரைக்கதைகளில், நம்மை வாழ்க்கையில் பாதித்த உணர்வுகளை எப்படிக் கொண்டுவருவது? கதையை விவாதிப்பதன் சாதக பாதகங்கள் என்னென்ன? எடிட்டிங் என்ற படத்தொகுப்பின் முக்கியத்துவம் என்ன? இப்படியெல்லாம் துவங்கி, இன்னும் ஏராளமான திரைசார்ந்த விஷயங்களை எளிதாகவும் ஆழமாகவும் குரஸவா இந்தப் புத்தகத்தின் பின்னிணைப்பில் விளக்குகிறார். இதுதான் இந்தப் புத்தகத்தின் மிகச்சிறப்பான அம்சங்களில் ஒன்று.
ஒரு கலைஞராக அகிரா குரஸவா உலகின் திரைப்படங்களுக்குக் கொடுத்துள்ள பங்களிப்பு ஏராளமானது, கமர்ஷியல் என்று அழைக்கப்படும் வணிக சினிமாவில் உணர்வுகளைக் கோர்த்து ஆழமாக்கி ஒரு பத்தை எப்படி மறக்கமுடியாமல் மாற்றுவது என்ற கலையில் குரஸவா ஒரு மாஸ்டர். இன்றுவரை அவரது திரைப்படங்கள் உலகெங்கும் விவாதிக்கப்படுகின்றன. ஆங்காங்கே நகலெடுக்கவும் படுகின்றன (செர்ஜியோ லியோனிக்கு எதிராக வழக்குத் தொடர்ந்து குரஸவா வென்றது தெரிந்திருக்கலாம்).
அப்படிப்பட்ட குரஸவா எப்படியெல்லாம் தனது திரைப்படங்களை எடுக்கத் துவங்கினார் என்று அவரது வேர்களை அவரே விவரிக்கும் ‘Something Like an Autobiography’ என்ற இந்தப் புத்தகம் நமக்குள் பல திறப்புகளை ஏற்படுத்தும் என்பதில் எனக்குத் துளிக்கூட சந்தேகம் இல்லை. அனைவருக்கும் மிகவும் உபயோகமான புத்தகம் இது. குரஸவாவின் விவரிப்பில் அவரது உணர்ச்சிகள் சார்ந்த பிரம்மாண்டமான திரைப்படங்கள் போலவே நம்மை அவரது வாழ்க்கைக்குள் இழுத்துச் செல்கிறது.











