The Talkie
Saturday, April 11, 2026
  • Login
  • Register
  • thetalkie
  • ஆளுமைகள்
  • திரைக்கதைகள்
  • உரையாடல்
  • கட்டுரைகள்
    • இந்தியத் திரைப்படங்கள்
    • உலகத் திரைப்படங்கள்
    • தமிழ்த் திரைப்படங்கள்
    • ஓடிடி திரை
  • தொடர்கள்
    • ட்ரெண்டு கொட்டாய்
    • திரை புத்தகம்
    • ஸ்டார்ட் கேமரா
    • I CALL THE SHOTS
    • குரு தத் 100
    • டேபிள் டாப்
  • தொடர்பு
No Result
View All Result
The Talkie
  • thetalkie
  • ஆளுமைகள்
  • திரைக்கதைகள்
  • உரையாடல்
  • கட்டுரைகள்
    • இந்தியத் திரைப்படங்கள்
    • உலகத் திரைப்படங்கள்
    • தமிழ்த் திரைப்படங்கள்
    • ஓடிடி திரை
  • தொடர்கள்
    • ட்ரெண்டு கொட்டாய்
    • திரை புத்தகம்
    • ஸ்டார்ட் கேமரா
    • I CALL THE SHOTS
    • குரு தத் 100
    • டேபிள் டாப்
  • தொடர்பு
No Result
View All Result
The Talkie
Subscribe
Home தொடர்கள் குரு தத் 100

குருதத்தின் ப்யாஸா- உயிர்த்தெழுந்த தேவதை        

The Talkie by The Talkie
October 17, 2025
in குரு தத் 100, தொடர்கள்
A A
5
gurudutt-02
Share on WhatsappShare on FacebookShare on Twitter
Author Icon பாஸ்கர் சக்தி

இந்தத் தொடரை ஆரம்பிக்கையில் ஒரு எண்ணம் வந்தது.

குரு தத் பிறந்து நூறு ஆண்டுகளும், இறந்து  அறுபத்தி ஒரு ஆண்டுகளும் ஆகி விட்டன. அவரைப் பற்றி நிறைய எழுதி விட்டிருக்கிறார்கள். தமிழிலும் கூட சில நூல்களும், கட்டுரைகளும் வந்திருக்கின்றன. 

இதில் நாம் புதிதாக என்ன எழுதி விட முடியும்? எந்தத் தகவல்களைக் குறிப்பிட்டாலும் அது ஏதோ ஒரு நூலில், அல்லது வலைத்தளத்தில் உள்ளதாகத்தானே இருக்கும்? அப்படி இருக்கையில் மேலும் ஒரு கட்டுரை அல்லது தொடரின் அவசியம் என்ன  என்கிற கேள்வி மனதுக்குள் விவாதமாக உருவெடுத்தது.

ஆனால் மறைந்த மாமனிதர்களைப் பற்றி எழுதப்பட்ட அனைத்துமே இந்த வகையில் ஆனவைதானே? அவற்றை எழுதும் ஒவ்வொரு தனி மனிதனும் தான் தேடிப் பெற்ற தரவுகளையும் , தகவல்களையும் தனது பாணியில், தனது மொழியில் தொகுத்துச் சொல்கிறான்.

அதன் மீது தனது அறிவையும், அதில் விளைந்த கருத்துகளையும் கொண்டு புதிதாக ஒரு வெளிச்சத்தை பாய்ச்ச முயல்கிறான். அதுதான் சாத்தியம். அதுதானே நடைமுறை.  அவசியமான ஒன்றும் கூட அல்லவா?.

கலைஞர்களைப் பொறுத்தவரையில் இது இன்னும் தேவையான ஒரு காரியம். ஏனெனில் அவர்களுடைய படைப்புகள் இன்றும்  நம்மிடையே இருக்கின்றன. அவற்றை நாம் நமது பார்வையில் வாசிக்கிறோம். புதிதாக அதில் ஒன்றைக் கண்டடைகிறோம். சமயத்தில் அந்தப் படைப்பாளியே சிந்தித்திராத ஒரு கோணத்தையும், அழகையும் கூட கண்டுபிடிக்கிறோம்.  

அப்போது நமக்குள் ஏற்படும் வியப்புக்கு இணையேயில்லை. அந்தப் படைப்பாளியின் மனதோடு அப்போது நாம் நெருங்குகிறோம். மானசீகமாக உரையாடுகிறோம். அது ஒரு உன்னதமான உணர்வு.  அத்தகு தருணங்கள் அந்தப் படைப்புக்கு மேலும் சிறப்புச் சேர்க்கின்றன. அர்த்தமுள்ளதாக்குகின்றன.

அந்தக் காரியம்  அவனது  படைப்பை நாம் கொண்டாடுவதாகவும், அந்தப் படைப்பாளிக்கான மிகச் சிறந்த அஞ்சலியாகவும் ஆகிறது. `நவில் தொறும் நூல் நயம்’  போல ஒவ்வொரு முறையும் ஒன்றை நமக்கு புதிதாக உணர்த்துகிற ஒன்றாக ஒரு கலைப்படைப்பு திகழுமென்றால் அது போல சிறந்தது வேறொன்றில்லை.

ஒரு வாழ்க்கைதான், ஒரு மனிதர்தான். ஆனால்  ஒவ்வொரு முறையும் அவர் எனக்குள்ளே வளர்ந்தார். பிரகாசமானார். அவரது படைப்புகள் பிரமிப்பூட்டி மகிழ்ச்சி தந்தன. அவர் வாழ்க்கை எனக்குள் பல கேள்விகளை எழுப்பியது.

அவர் குரு தத்…

மனதுக்குள் எழுந்த இந்த விவாதம் முற்றுப் பெற்ற பின்னர், குரு தத்தைப் பற்றி எழுதியே தீர வேண்டும் என்ற முடிவுக்கு வந்தேன்.  

அவரது திரைப்படங்கள் பற்றியும், அவரைப் பற்றியும் எழுத வேண்டும் என்று நினைத்தவுடன் பியாஸாவும், காகஸ் கி பூல் படமும்தான் நினைவுக்கு வரும். அது இயல்பானதே. ஆனால் ஒரு இயக்குநராக  பியாஸா அவரது ஏழாவது படம்,. காகஸ் கி பூல் எட்டாவது படம். பியாஸாவுக்கு முந்தைய அவரது திரைப்படங்கள் பற்றியும் பேச வேண்டும். ஏனெனில் குரு தத்தை முழுதும் அறிய அது தேவை. ஆனால் பியாஸா என்கிற அவரது மாஸ்டர் பீஸைப் பற்றிப் பேசுவதுதான் துவக்கமாக  இருக்க வேண்டும் என்று மனம் சொன்னது.

எனவே ப்யாஸாவில் இருந்து துவங்குகிறேன்.

இந்தக் கட்டுரையை ப்யாஸா பார்த்திராதவர்களும் படிக்க வாய்ப்பிருக்கிறது. எனவே  ப்யாஸா திரைப்படத்தின் கதையை சுருக்கமாகச் சொல்லிவிட்டால் சரியாக இருக்கும்.

கதையின் நாயகன் விஜய் ( குரு தத் )  ஒரு மென் மனம் கொண்ட கவிஞன். அவனது கவிதைகளை யாரும் அங்கீகரிக்கவில்லை. அவனது சகோதரர்கள் அவனை சுத்தமாக மதிப்பதில்லை. மாறாக சிறுமைப்படுத்தியபடியே இருக்கின்றனர். லௌகீக உலகம் கலைஞர்களை புரிந்து கொள்ள மறுப்பதும், புறக்கணிப்பதும் என்றும் நடப்பதுதானே.  அவனை அவனது தாய் மட்டுமே அரவணைத்து அன்பு செலுத்துகிறாள். விஜயால் அவளது அன்பை ஏற்க முடிந்தாலும், சகோதரர்களின் அவமதிப்பை சகிக்க முடியாமல் ஒரு நாடோடி போல் ஊரெங்கும் அலைந்து திரிகிறான். பூங்காக்களில் படுத்து உறங்குகிறான். வீடற்று அலையும் மனிதர்களில் ஒருவனாக இருக்கிறான். மூட்டை தூக்குகிறான்.

அவனது கவிதைகளை பதிப்பாளர் ஒருவர் அவமானப்படுத்துகிறார். விஜய்யின்  கவிதைகளை அவனது சகோதரர்கள் எடைக்குப் போட்டு விடுகின்றனர். அதை  பாலியல் தொழிலாளி குலாப் ( வஹிதா ரஹ்மான் ) வாங்கிப் போய் விடுகிறாள். ஒரு நாள் இரவு  பூங்காவில் விஜய் இருக்கையில்  அவனது கவிதை வரிகளைப் பாடியவாறே குலாப் அறிமுகமாகிறாள். தனது கவிதைகளை ஒரு பெண் பாடுவதால் ஈர்க்கப்பட்டு விஜய் அவள் பின்னால் செல்ல, அவளோ ஒரு வாடிக்கையாளனாக இவனை நினைத்துக் கொள்கிறாள். அவனிடம் பணம் இல்லை என்றதும் கடுமை காட்டுகிறாள். ஆனால் அவன் சென்ற பிறகு அவன்தான்   பழையபேப்பர் கடையில் தான் வாங்கிய கவிதைகளை எழுதிய  கவிஞன் என்று அறிகிறாள். அவன் பால் ஒரு ஈர்ப்பும் , மரியாதையும் கொள்கிறாள்.

விஜய் ஒரு நாள் தனது முன்னாள் காதலி மீனாவை (மாலா சின்ஹா)  சந்திக்கிறான். அவனுக்கு தன் கல்லூரி, காதல் நாட்கள் நினைவுக்கு வருகின்றன. அப்போது வாழ்க்கை பற்றிய வண்ணமயமான கனவுகள் அவனுக்கு இருந்தன. காதலி இருந்தாள். ஆனால் அந்தக் காதலி விலகிப்போய் விட்டாள். கனவுகள் சாயம் போய், ஒரு தோல்வியடைந்த மனிதனாக, அங்கீகாரம் அற்ற கவிஞனாக தற்போதைய  விஜய் ஆகி விட்டான்.  

  அதன் பின்  முன்னாள் மாணவர்கள் சந்திப்பு  ஒன்று அவனது கல்லூரியில் நடக்கிறது. ஏழ்மைத் தோற்றத்துடன் அங்கு செல்லும் விஜய் அங்கே மேடையில் தன் சோகம் நிறைந்த வாழ்வைப் பாடுகிறான்.

அங்கே விஜயின் முன்னாள் காதலி மீனாவின் கணவன் கோஷ் (ரெஹ்மான்) விஜயை சந்திக்கிறான். அவனுக்கு விஜய் மீது ஒரு வித சந்தேகம் ஏற்படுகிறது. அவன் ஒரு பதிப்பாளர். தனது அலுவலகத்தில்  விஜய்க்கு ஒரு சின்ன வேலையை தருகிறான். அவன் அடிமனதில் விஜய்க்கும் தன் மனைவிக்கும் நடுவில் ஏதோ இருக்கிறது என்ற எண்ணம் இழையோடியபடி இருக்கிறது.  விஜய் அவனிடம் தன் கவிதைகள் பற்றி சொல்லி அதனை பிரசுரிக்க இயலுமா என்று கேட்க, அவன் அதனை ஒரு பொருட்டாகவே  கருதாமல் அலட்சியப்படுத்துகிறான்.

ஒரு நாள் மீனாவுக்கும் விஜய்க்கும் நடுவில் ஒரு உரையாடல் நிகழ்கிறது. தங்களது காதலை விட்டு தான் ஏன் விலகினேன் என்று மீனா விஜய்யிடம் சொல்கிறாள். இந்த உரையாடலைக் கேட்கும் கோஷ் கடும் கோபம் கொண்டு விஜயை வேலையை விட்டு வெளியேற்றுகிறன்.

விஜய்யை துன்பங்கள் தொடர்கின்றன. அவன் தாய் மறைந்த செய்தியைக் கூட அவன் சகோதரர்கள் இவனிடம் சொல்லவில்லை. இவனை புறக்கணித்து இறுதிச்சடங்கினை செய்கின்றனர்.  விஜய் உடைந்து போகிறான்.

குலாப் இவன் மீது ஒரு விதமான காதலுடன் இருக்கிறாள். ஆனால் அதனை  முழுமையாக வெளிப்படுத்த இயலாத மனநிலையில் அவள் இருக்கிறாள்.

வாழ்வின் மீது விரக்தியும் சலிப்பும் கொண்ட விஜய் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுக்கிறான்.  தன் முடிவை ஒரு கடிதத்தில் எழுதி தனது கோட் டில் வைத்துக் கொண்டு ரயில்வே ட்ராக்கை நோக்கி நடக்கிறான். வழியில ஒரு பிச்சைக்காரன் குளிரில் நடுங்குவதைப் பார்த்து தனது கோட்டை கழற்றி அவனிடம் கொடுத்துவிட்டு செல்கிறான். பின்னால் வரும் பிச்சைக்காரன் ரயிலில் அடிபட்டு இறக்க, அந்த விபத்தில் விஜய் அடிபட்டு மயங்கி விழுகிறான்.

பிச்சைக்காரன் உடலில் இருந்த கோட்டும், அதிலிருந்த கடிதமும், இறந்து போனது விஜய் என்ற எண்ணத்தை ஏற்படுத்தி விடுகிறது.  குலாப் செய்தி தெரிந்து அதிர்ச்சியடைகிறாள். இவை எதையும் அறியாத விஜய் எங்கோ மருத்துவமனையில் மயக்கத்தில் கிடக்கிறான்.

குலாப் உடைந்து போகிறாள். தன்னிடமிருந்த நகை எல்லாவற்றையும் திரட்டி கோஷ்ஷிடம் கொடுத்து விஜய்யின் கவிதைகளைப் பதிப்பிக்கிறாள்.

விஜய்யின் கவிதைகள் வெளிவந்தவுடனே பெரும்புகழை அடைகின்றன. அந்த புத்தகம் அமோகமாக விற்கிறது. விஜய் எனும் கவிஞன் உடனடியாக பெரும்புகழ் பெறுகிறான்.

மருத்துவமனையில் மயக்கம் தெளிந்து இதை அறியும் விஜய் நான்தான் அந்தக் கவிஞன் என்று சொல்ல அதனை நம்பாமல் அவனை மனநல மருத்துவமனையில் சேர்த்து விடுகின்றனர். ஒரு சிறையில் இருப்பதுபோல அங்கு இருக்கிறான். அந்த விஷயம் தெரிந்தும் கூட விஜய்யின் நண்பனும், சகோதரர்களும் விஜயை மீட்க முன்வரவில்லை. அது மட்டுமல்ல. இவன் விஜய்தான் என்று அடையாளம் காட்டவும்  மறுத்து விடுகின்றனர். ஏனென்றால் இப்போது விஜய்யின் கவிதைகள் மூலம் அவர்களுக்கு கிடைக்கும் பணத்தை அவர்கள் இழக்க விரும்பவில்லை. விஜய் மனநலவிடுதியிலேயே இருக்கிறான்.  வெளி உலகிற்கு  விஜய் என்பவன் மறைந்து விட்ட,  புகழ் பெற்ற மகோன்னதமான கவிஞன்.

ஓராண்டு ஆகிறது. இறந்து போன கவிஞன் விஜய்யின் (குரு தத்) முதலாமாண்டு அஞ்சலி கூட்டத்துக்கு மனநல விடுதியில் இருந்து தப்பி வரும் விஜய் வருகிறான். அவனது புகழையும், கவிதைகளின் சிறப்பையும்  அனைவரும் போற்றிப்பாடுவதை கசப்புடன் கேட்கிறான்.  உயிருடன் இருக்கையில் இகழ்ந்து, இறந்த பின் புகழ்பாடும் சமூகத்தின் அருவருப்பான போலித்தனத்தை பற்றிப் பாடுகிறான்… அங்கே ஒரு கலவரம் வெடிக்கிறது.

திரும்பி வந்தது விஜய்தான் என்று உலகம் அறிகிறது. இப்போது விஜய் மதிப்பு வாய்ந்த ஒரு மனிதன். அவன் திரும்ப வந்து விட்டான். எனவே அவனை வரவேற்க ஒரு கூட்டம் ஏற்பாடாகிறது. ஆனால் இப்போது விஜய் இந்த  உலகம், இந்த மனிதர்களின் சுயநலம், பேராசை, வேஷம் அணிந்த முகங்கள், போலியான உறவுகள் அனைத்தின் மீதும் வெறுப்பு கொண்டவனாக இருக்கிறான். அந்தக் கூட்டத்தில் தான் அந்தக் கவிஞன் விஜய் இல்லை என்று அறிவிக்கிறான். கூட்டம் வெறிபிடித்து கத்துகிறது. குழப்பமும் கலவரமும் சூழ அங்கிருந்து வெளியேறுகிறான்.

தன்னை மனதார நேசித்த, தன்னை கவிதைகளை ஆரம்பத்திலேயே கண்டுகொண்டு கொண்டாடிய, இவனது மறைவுக்குப் பின் அந்த கவிதைகளை உலகுக்கு கொண்டு வந்த நல்ல ஆத்மா, ஒழுக்கம் அற்றவள் என்று சமூகம் மதிப்பிடும், பாலியல் தொழிலாளியான குலாபை  ( வஹீதா ரஹ்மான் ) தேடிச் செல்கிறான். “என்னோடு வந்து விடுகிறாயா? இந்த பைத்தியக்கார உலகிலிருந்து விலகி தொலைதூரம் சென்று விடுவோம்” என்று அழைக்கிறான். அவனுக்காகவே எப்போதும் காத்திருக்கும் குலாப் அவனுடன் கிளம்புகிறாள். இருவரும் தொடுவானத்தை நோக்கி நடந்து செல்கின்றனர்.

இதுதான் ப்யாஸா திரைப்படத்தின் சுருக்கமான கதை.

ப்யாஸாவுக்கான விதை குருதத்தின் பிள்ளைப்பருவத்திலேயே விதைக்கப்பட்டது எனலாம்.  கலை மனம் கொண்ட ஒரு மனிதனுக்கும், பணத்தை மையமாகக் கொண்டு இயங்கும் லௌகீக உலகுக்குமான போராட்டம்தான் ப்யாஸாவின் மையக்கரு. இது காலகாலமாக இருக்கிற ஒரு முரண். இது தீர்வதில்லை. ஆனால் இந்த உரசலில் விளையும் தீப்பொறியில் கலைஞர்கள் உருவாகிறார்கள். எரிந்து சாம்பலாகவும் செய்கிறார்கள்.

குருதத்தின் தந்தை சிவசங்கர் ராவ் படுகோனே இந்தச் சிக்கலில் மாட்டியவர்தான். அவர் க்ரியேட்டிவான மனிதர். நன்கு வாசிக்கக் கூடியவர்.   எழுத்தாளனாகும் ஆசை கொண்டவர். ஆனால் காலம் முழுவதும் குமாஸ்தா வாழ்க்கையில் அல்லாடியவர். நிரந்தரமற்ற வேலை, வருமானமின்மை இவற்றால் ஏற்பட்ட நிரந்தர மன உளைச்சலினால் அவரது கலையின் தேடலுக்கான வடிகாலுக்கு வழியின்றி சிடு சிடு என்று இருந்திருக்கிறார். குடும்பத்தில் சச்சரவுகள் அன்றாட நடவடிக்கைகளாக இருந்திருக்கின்றன. குரு தத்தின் மனதில் இது ஆழமாகப் பதிந்திருக்கிறது. அதன் பின் குரு தத்தின் இருபத்தி இரண்டாவது வயதில் மும்பையில் குரு தத் திரைப்பட வாய்ப்புகளுக்காக அலைந்தபோது அதே விதமான மனச் சங்கடத்துக்கு ஆளாகி இருக்கிறார். கலைமனம் கொண்ட ஒருவனை வியாபார சினிமா உலகம் எப்படி அலைக்கழிக்கும் என்பதை அனுபவித்திருக்கிறார்.  அந்தத் தவிப்பையும், வலியையும் வைத்து அவர் எழுதிய Kashmakashh  என்ற கதைதான் பத்து ஆண்டுகள் கழித்து பல மாறுதல்களுடன் ப்யாஸாவானது.

  ஆறு திரைப்படங்களை உருவாக்கி குறிப்பிடத்தக்க வணிகவெற்றிகளை சாதித்துக் கொண்டிருந்தாலும், குருதத்தின் மனதுக்குள் ப்யாஸா ஓடிக்கொண்டே இருந்தது. அவரது திறமை மெருகேறிக்கொண்டே இருந்தது.. குருதத் தின் மனதில் உருவாகும்  காட்சிகளை ஓவியம் போல் படம் பிடிக்கும் ஒளிப்பதிவாளர் வி.கே.மூர்த்தி, கதைகளை , பாத்திரங்களை உருவாக்குவதில் சிந்தனைத் தோழனாக  எழுத்தாளர் அப்ரார் ஆல்வி, காட்சிகளை இசையால் காவியமாக்கும் இசையமைப்பாளர் எஸ். டி. பர்மன் என்று ஆகிய மூவரையும் உள்ளடக்கிய ஒரு கூட்டணியுடன் வெற்றிகளைக் குவித்துக் கொண்டிருந்தார் குருதத்.  அவர் மனதுக்குள் ப்யாஸா  திரண்டு வந்து கொண்டிருக்கையில் திருப்புமுனையாக ஒரு மாலைப்பொழுது அமைந்தது.

அப்போது ப்யாஸாவின் கதையின் நாயகன் ஒரு ஓவியனாகவும், கதையின் நாயகி ஆர்ட் கேலரி வைத்திருக்கும் ஒரு பணக்காரப் பெண்ணாகவும் பாத்திரங்கள் உருவாக்கப்பட்டிருந்தன. அந்தப் பெண் ஓவியனை கைவிடுவதாக கதையின் போக்கு இருந்தது.

அப்ரார் ஆல்வி குரு தத்துடன் இணைந்து ஸ்க்ரிப்ட் பேசிக்கொண்டிருந்தார் .ஆனால் அவர் மனதில் ஒரு விஷயம் நிரடிக்கொண்டே இருந்தது.  பேசிக்கொண்டிருக்கும் கதையில் ஒரு பெண் ஆணை கை விடுகிறாள்…இல்லையா?

ஆனால் தன்னைச் சார்ந்த பெண்ணை ஒரு ஆண் கைவிடுவதுதான் வழக்கம். பெண் ஒரு போதும் ஆணைக் கைவிட மாட்டாள் என்று அவருக்குத் தோன்றியது. அதற்குக் காரணம் பெரும் சோகம் பொருந்திய  ஒரு உண்மை நிகழ்வு…அது அவர் மனதில் பெரும் காயமாக இருந்தது.

அந்த மாலை நேரத்தில், குரு தத்தும், அப்ராரும் மது அருந்தியபடி நிகழ்ந்த ஒரு உரையாடலில், அப்ரார் ஆல்வி  குருதத்திடம் சொல்லத் துவங்கினார். அந்தக் காயத்தைப் பற்றி, அந்தப் பெண்ணைப் பற்றி…

அந்தப் பெண்ணின் பெயர் குலாப்.

ஒரு நாள் அப்ராரை பார்க்க அவரது கல்லூரி நண்பர்கள் மும்பை வந்திருக்கிறார்கள். அனைவரும் ஜமீந்தார் போன்ற வசதியான வீட்டு மைனர்களைப் போன்றவர்கள். வந்தவர்கள் மாலை மது அருந்தி விட்டு அப்ராரை கூட வா என்று சொல்லி கூட்டிப் போன இடம் அந்த நாட்களின் மும்பையில்  ஒரு விபசார விடுதி.  கூட்டிப்போனவர்கள் அந்த மாதிரி இடத்துக்கு அடிக்கடி சென்று வந்த அனுபவசாலிகள். அப்ரார் ஒரு கத்துக்குட்டி. ஆனால் அவரையும் வற்புறுத்தி ஒரு பெண்ணை தேர்ந்தெடுக்கச் சொல்கிறார்கள்… அவர்கள் எல்லாம் பதினாறு பதினேழு வயதுப் பெண்களைத் தேர்ந்தெடுக்கையில் அப்ரார் அங்கிருந்தவர்களிலேயே வயது சற்று அதிகமுள்ள ஒரு பெண்ணை தயக்கத்துடன் கை நீட்டி இருக்கிறார்..

அந்தப் பெண்ணுடன் அறைக்குச் சென்ற அப்ரார் ஒரு எழுத்தாளர் இல்லையா? எனவே பேசத் துவங்கி இருக்கிறார். அந்தப் பெண்ணும் பேசி இருக்கிறாள். அவள் மிகவும் நகைச்சுவையாகப் பேச, இவரும் பேச  காலை ஆறுமணி வரை இதெல்லாம் நீடித்திருக்கிறது.  காலை ஆறு மணிக்கு கிளம்புகையில்  ஒரு காரில் அனைவரும் ஏற ,இடம் இருக்காதே என்று அப்ரார் தயங்க,  குலாப் “அட வாங்க” என்று இவர் கையைப்பிடித்து இழுத்திருக்கிறாள். “எங்கே உட்கார்வது,” என்று அப்ரார் கேட்க , “என் மடியில் உட்கார்ந்துக்கங்க,” என்று அவள் சொல்ல, இவருக்கு உடம்பெல்லாம் கூச, ஒருவழியாக வண்டியில் இவரைத் திணித்துக் கொண்டு கிளம்பி இருக்கின்றனர்.

அதன்பின் இவர்கள் இருவருக்குமான சந்திப்புகள் தொடர்ந்திருக்கின்றன. அப்ரார் ஆல்வி அவளாலும், அவள் இவரது கண்ணியமான அணுகுமுறையாலும் பரஸ்பரம் கவரப்பட்டிருக்கின்றனர்.  

ஒரு முறை இவர் அவளை தேடிச்சென்ற போது அங்கிருந்த மற்றொரு பெண்,  “குலாப் வெளியே போயிட்டா,என் கூட வாங்க,” என்று அழைத்திருக்கிறாள். பக்கத்து அறையிலிருந்த குலாபுக்கு இந்த உரையாடல் கேட்டு விட்டது. கடும் கோபத்துடன் வந்த  குலாப் அவள் மீது பாய,  அந்தப் பெண் இவளை அடிக்க என்று  இருவருக்கும் அடிதடி சண்டை  நிகழ்ந்திருக்கிறது.

எழுத்தாளர் அப்ரார் திகைத்து நிற்க, அவர் கையைப் பிடித்து இழுத்து  டாக்சியில் ஏற்றி ஒரு லாட்ஜுக்கு கூட்டிப்போயிருக்கிறாள் குலாப். “இனிமேல் இங்கே ரெகுலராக சந்திப்போம்,” என்று சொல்கிறாள். “என்னிடம் இப்போது அவ்வளவு பணமில்லை,” என்று அப்ரார் சொல்ல, “நான் தருகிறேன்,” என்று டாக்சிக்கும் லாட்ஜுக்கும் குலாபே பணம் தந்திருக்கிறாள். அப்ராருக்கு மிகவும் வெட்கமாக இருந்திருக்கிறது.

அதன்பின் அந்த லாட்ஜில்  இருவரும் அடிக்கடி சந்திக்கின்றனர். அவ்வப்போது குடிப்பதும் உண்டு. குலாப் சமயங்களில் கெட்ட வார்த்தை சரளமாகப் பேசுவாள். ஒரு முறை அப்ரார் வாயிலிருந்து கெட்ட வார்த்தை ஒன்று வர குலாப் அவர் வாயைப் பொத்துகிறாள். 

“ஏன்?“ என்று அப்ரார் கேட்க, “நான் மோசமானவள், இந்த மாதிரி வார்த்தைகளை நான் பேசலாம். ஆனால் உங்க வாயிலிருந்து இப்படி வார்த்தைகள் வர்றது நல்லாவே இல்லை” என்று குலாப்  சொல்கிறாள். அந்த அளவுக்கு அப்ரார் மீது  மரியாதையோடு கூடிய காதல் அவளுக்கு இருந்திருக்கிறது .

ஒவ்வொரு வியாழக்கிழமை அன்றும் இவர்கள் சந்திப்பது வழக்கம். ஒரு கட்டத்தில் அப்ரார் தொடர்ந்து படங்களில் வேலை செய்கிறார். வேலைச்சுமை அதிகரிக்கிறது. அவரால் ரெகுலராக குலாபை சந்திக்கச் செல்ல முடியவில்லை. ஒரு இடைவெளி ஏற்பட்டு விட்டது… அந்த இடைவெளி குலாபுக்கு இவர் மீதான ஏக்கத்தை அதிகப்படுத்துகிறது. சந்தித்த சந்தர்ப்பங்களில் குலாப் அதனை வெளிப்படுத்துகிறாள். ஆனால் வேலை காரணமாக அப்ராரால்  தனது  வாக்கைக் காப்பாற்ற இயலவில்லை. பல வியாழக்கிழமைகள் கடந்து போய்க்கொண்டிருக்க, அந்த சந்திப்புகள் நின்று போயின.

எட்டு மாத இடைவெளி. ஒரு நாள் ஒரு ஆள் அப்ராரைத் தேடி வருகிறான். ”குலாபுக்கு உடல்நிலை சரியில்லை, அவசியம் உங்களைப் பார்க்க வேண்டும் என்று சொன்னாள்” என்று சொல்கிறான். அப்ராருக்கு குற்ற உணர்வு தலைதூக்க,  அன்றே அவளது வீட்டைத் தேடிச் செல்கிறார். வீடு பூட்டி இருக்கிறது . ஒரு சிறுமி வருகிறாள். “அம்மா வெளியே போயிருக்காங்க. நீங்க வருவீங்கன்னு சொன்னாங்க… அவங்க வர வரைக்கும் உங்களை காத்திருக்க சொன்னாங்க,” என்று சொல்கிறாள். அப்ரார் காத்திருக்கிறார். கொஞ்ச நேரம் கழித்து குலாப் அங்கே வருகிறாள். இவரைப் பார்த்ததும் மகிழ்ச்சியுடன் இவரை நோக்கி ஓடி வருகிறாள்.

ஒல்லியாக, உடல் நலிந்து , முகத்தில் நோயுற்ற சுவடுகளுடன்  தன் பொலிவை இழந்தவளாக இருக்கிறாள் குலாப்.  அவள் கண்ணில் இவரைப் பார்த்த மகிழ்ச்சி மட்டும் பிரகாசமாக ஒளிர்கிறது.  “நீங்க வருவீங்கன்னு எனக்குத் தெரியும்” என்கிறாள் கண்கள் கலங்கி. மகிழ்ச்சியுடன் வீட்டுக்குள் கூட்டிப் போகிறாள்.  தொடர்ந்து தனக்கு காய்ச்சல் வந்து கொண்டிருந்ததையும், உடல் நலிந்து போனதையும், அவளுக்கு டி பி வந்திருக்கிறது என்று டாக்டர்கள் சொன்னதையும் சொல்கிறாள்.

வேதனையுற்ற அப்ரார் தன் கையிலிருந்த பணத்தை அவள் கணவனிடம் கொடுக்கிறார். அவளுக்கு தவறாமல் மருந்து வாங்கிக் கொடுக்கச் சொல்கிறார்.

குலாபிடம் ” நான் அடுத்த வியாழக்கிழமை அவசியம் வருகிறேன்.  அப்போது கொஞ்சம் அதிகமாக பணம் கொண்டு வருகிறேன் குலாப்” என்கிறார்.

“நீங்க வர மாட்டீங்க… ஏன்னா, நீங்க இப்ப ரொம்ப பிசி ஆயிட்டீங்க.  இத்தனை நாள் உங்களோட குலாபை மறந்துட்ட மாதிரியே இப்பவும் மறந்துடுவீங்க. நீங்க என்னை தேடி வரும்போது அநேகமா  நான் செத்துப்போயிருப்பேன்.”

இதைக் கேட்டு அப்ராரின் கண்கள் கலங்குகின்றன. அவள் கையைப் பற்றி சத்தியம் செய்கிறார். “இல்லை குலாப், நான் வர்றேன். வர்ற வியாழக்கிழமை சத்தியமா வர்றேன்.”

ஆனால் குலாப் சொன்னதுதான் நடந்தது. அடுத்த வியாழக்கிழமை அப்ராரால் போக முடியவில்லை… வழக்கம் போல வேலைகளுக்கு நடுவே மாட்டிக்கொண்டார். அடுத்தடுத்த பணி அழுத்தங்களின் நடுவே குலாபின் நினைவு ஆழத்தில் அமிழ்ந்து போய் விட்டது. சில மாதங்கள் கடந்து விட்டன.

ஒருநாள் குரு தத் ஒரு சினிமாவை குறிப்பிட்டு  “ நீ போய் அதை பார்த்து விட்டு வா,” என்று சொல்லி அப்ராரிடம் சொல்ல, அப்ரார் கிளம்பி அந்தப் படத்தை பார்க்கிறார். படத்தை பார்த்து விட்டு  பஸ்ஸில் திரும்புகிறார்.  அது ஒரு மாடி பஸ். அதன் மாடியில் ஜன்னலோரம் அமர்ந்து ஏதோ யோசனையுடன் வந்து கொண்டிருக்கையில் திடீரென்று குலாபின் நினைவு மின்னல் போல் மனதில் தோன்றுகிறது. இத்தனை நாள் அவளை மறந்து போனது நினைவுக்கு வருகிறது. அத்துடன் இன்று வியாழக்கிழமை வேறு என்று உணர்ந்ததும் உள்ளுக்குள் அதிர்கிறது. உடனே பஸ்ஸை நிறுத்தச்சொல்லி இறங்கிப் போய் குலாபை சந்திக்க வேண்டும் என்று தோன்றுகிறது. ஆனால் இரவு ஒன்பது மணி ஆகி விட்டதே என்று சிறிய குழப்பமும் தோன்றுகையில் பஸ் எதற்காகவோ நிற்கிறது.

பஸ் நின்றதன் காரணம் ஒரு சவ ஊர்வலம். குறுகிய அந்த சாலையில் பஸ்ஸை அந்த ஊர்வலம்  மெதுவாகக் கடக்கிறது. பஸ்ஸில் இருந்து அதனை அப்ரார் பார்க்கிறார். ஊர்வலத்தில் வரும் சடலத்தின் முகம் திறந்து இருக்கிறது. அந்த முகத்தை அப்ரார் பார்க்கிறார்.

அது குலாபின் முகம்.

அது குலாப்…

`என்னை பார்க்க நீங்க வரமாட்டீங்க. நீங்க வரும்போது நான் செத்துப்போயிருப்பேன்’ என்று சொன்ன அந்த குலாப்.

‘எழுத்தாளனின் ஆன்மாவை நேசித்த அந்த விலைமகள் குலாப்.’

 `அன்பால் அகம்  நிறைந்து ததும்பிய குலாப்.’

—– சொல்லி முடித்து விட்டு குற்ற உணர்வு பெருகும் குரல் உடைந்து, அப்ரார் அல்வி அமர்ந்திருக்க…

அதற்கிணையான உணர்வுக் கொந்தளிப்புடன் குரு தத் கண்கலங்கி அமர்ந்திருக்கிறார்.

வெகுநேரம் இருவரும் எதுவும் பேசவில்லை.

அன்று இருவரையும் அமைதியாக்கிய,

 மறைந்து போன குலாப் திரையில் உயிர்த்தெழுந்தாள்.

ப்யாஸாவின் கதாநாயகியாக.

                                                                                       ( தொடரும் )

Author Image

பாஸ்கர் சக்தி

திரைப்பட இயக்குநர். எழுத்தாளர்.

About The Author

The Talkie

The Talkie

See author's posts

Next Post
rasigamagajanangale

ரசிக மகா ஜனங்களே

Please login to join discussion

Archives

  • Trending
  • Comments
  • Latest
Thug_Life_

Thug Life – ஒரு பார்வை

June 6, 2025
AMADEUS திரைக்கதை

AMADEUS திரைக்கதை

March 15, 2025
start camera

ஸ்டார்ட் கேமரா! வின்சென்ட் மாஸ்டர் – 01

March 19, 2025
Irunda-Pakkam

தொழில்நுட்பத்தின் இருண்ட பக்கங்கள்: திரைப்படங்கள் சொல்லும் உண்மை.

March 16, 2025
Thug_Life_

Thug Life – ஒரு பார்வை

11
rasigamagajanangale

ரசிக மகா ஜனங்களே

7
gurudutt-02

குருதத்தின் ப்யாஸா- உயிர்த்தெழுந்த தேவதை        

5
start camera

ஸ்டார்ட் கேமரா! வின்சென்ட் மாஸ்டர் – 01

4
table top-4-5

டேபிள் டாப் 04 & 05

January 24, 2026
bella darr

பேலா டார் – காட்சியை அனுமதித்தவர்

January 24, 2026
trend-kottaiye-11

ட்ரெண்டு கொட்டாய் 11 -நான் (திரை) காவிய நாயகன்

January 24, 2026
table top-3

டேபிள் டாப் 03

January 24, 2026
The Talkie

சினிமா அற்புதமான ஊடகம். இதனை அறிந்து கொள்ளவும், ரசிக்கவும் உருவாக்கப்பட்டிருக்கிற இணைய இதழ் இது. மேதைகளின் நேர்காணல்கள், திரைக்கதைகள், வெவ்வேறு மொழித் திரைப்படங்கள், ஆளுமைகள், திரைப்படப் புத்தகங்கள் , சினிமா ரசனை என சினிமா உலகத்தோடு இணைந்திட எங்களுடன் இணைந்திடுங்கள்.

Categories

  • I CALL THE SHOTS
  • ஆளுமைகள்
  • இந்தியத் திரைப்படங்கள்
  • உரையாடல்
  • உலகத் திரைப்படங்கள்
  • ஓடிடி திரை
  • கட்டுரைகள்
  • குரு தத் 100
  • டேபிள் டாப்
  • ட்ரெண்டு கொட்டாய்
  • தமிழ்த் திரைப்படங்கள்
  • திரை புத்தகம்
  • திரைக்கதைகள்
  • தொடர்கள்
  • ஸ்டார்ட் கேமரா

Site Navigation

  • About Us
  • Terms and Conditions
  • Privacy Policy
  • Returns and Cancellation
  • Shipping Policy
  • FAQ
table top-4-5

டேபிள் டாப் 04 & 05

January 24, 2026
bella darr

பேலா டார் – காட்சியை அனுமதித்தவர்

January 24, 2026
trend-kottaiye-11

ட்ரெண்டு கொட்டாய் 11 -நான் (திரை) காவிய நாயகன்

January 24, 2026

© 2026 Thetalkie - All rights reserved

Welcome Back!

Sign In with Google
OR

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Sign Up with Google
OR

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • thetalkie
  • ஆளுமைகள்
  • திரைக்கதைகள்
  • உரையாடல்
  • கட்டுரைகள்
    • இந்தியத் திரைப்படங்கள்
    • உலகத் திரைப்படங்கள்
    • தமிழ்த் திரைப்படங்கள்
    • ஓடிடி திரை
  • தொடர்கள்
    • ட்ரெண்டு கொட்டாய்
    • திரை புத்தகம்
    • ஸ்டார்ட் கேமரா
    • I CALL THE SHOTS
    • குரு தத் 100
    • டேபிள் டாப்
  • தொடர்பு
  • Login
  • Sign Up
  • Cart

© 2026 Thetalkie - All rights reserved

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?