The Talkie
Thursday, April 9, 2026
  • Login
  • Register
  • thetalkie
  • ஆளுமைகள்
  • திரைக்கதைகள்
  • உரையாடல்
  • கட்டுரைகள்
    • இந்தியத் திரைப்படங்கள்
    • உலகத் திரைப்படங்கள்
    • தமிழ்த் திரைப்படங்கள்
    • ஓடிடி திரை
  • தொடர்கள்
    • ட்ரெண்டு கொட்டாய்
    • திரை புத்தகம்
    • ஸ்டார்ட் கேமரா
    • I CALL THE SHOTS
    • குரு தத் 100
    • டேபிள் டாப்
  • தொடர்பு
No Result
View All Result
The Talkie
  • thetalkie
  • ஆளுமைகள்
  • திரைக்கதைகள்
  • உரையாடல்
  • கட்டுரைகள்
    • இந்தியத் திரைப்படங்கள்
    • உலகத் திரைப்படங்கள்
    • தமிழ்த் திரைப்படங்கள்
    • ஓடிடி திரை
  • தொடர்கள்
    • ட்ரெண்டு கொட்டாய்
    • திரை புத்தகம்
    • ஸ்டார்ட் கேமரா
    • I CALL THE SHOTS
    • குரு தத் 100
    • டேபிள் டாப்
  • தொடர்பு
No Result
View All Result
The Talkie
Subscribe
Home தொடர்கள் குரு தத் 100

 குரு தத் – `சூனியத்தில் சிறகடித்த தேவதை ‘

The Talkie by The Talkie
September 25, 2025
in குரு தத் 100, தொடர்கள்
A A
2
gurudutt100-1
Share on WhatsappShare on FacebookShare on Twitter
Author Icon பாஸ்கர் சக்தி

கல்லூரியில் இளங்கலை ஆங்கில இலக்கியம் படித்துக்கொண்டிருந்த சமயம். கீட்ஸ்,  ஷெல்லி, பைரன் எல்லாம் பாடத்தில் இருந்தார்கள். எனவே ஆங்கிலக் கவிதைகளும் கவிஞர்களும்  வாழ்க்கைக்குள் வந்தார்கள்.

அந்தக் கவிதைகளைப் படிக்கையில், இயல்பாகவே நான்  அந்தக் கவிஞர்களின் வாழ்க்கைக் குறிப்பையும் தேடிப் படித்தேன். சொல்லி வைத்த மாதிரி எல்லோரும் இருபத்தி எட்டு வயதிலும், முப்பது வயதிலுமாக செத்துப் போயிருந்தார்கள்.

  மேதைகள் என்றால் அல்பாயுசு போல என்று மனதில் தோன்றியது. போதாக்குறைக்கு நம்ம ஊர் பாரதியாரும், புதுமைப்பித்தனும் அதற்கு வலுச்சேர்த்தார்கள். 

எனது ப்ரொஃபசரிடம்  கேட்கையில் சிரித்தார். இளவயதில் இறந்து  போன மேதைகள் சிலரைப் பற்றிச் சொன்னார். அவர் சொன்ன சில பெயர்களில் ஒன்று குரு தத்.

“ சினிமா மேதைடா அந்த ஆள். ஆனா சூஸைட் பண்ணிட்டு இறந்துட்டாரு. ஜஸ்ட் 39 வயசுதான்  அவருக்கு. பாரதியார் மாதிரி.’’

அப்படித்தான் குரு தத் தெரிய வந்தார். ஒருவரின் அகால மரணத்திலிருந்து அவரை அறிந்து கொள்வது மனதில் அப்படியே தங்கி விடுகிறது.  அவர் என்ன படம் எடுத்தார் என்றெல்லாம் அன்று தெரியாது.

தூர்தர்ஷனில் சிறந்த  திரைப்படங்களை அகால நேரத்தில் போடுவார்கள். வீடே தூங்கிக் கொண்டிருக்க, தன்னந்தனியே இரவு கண்விழித்து  கறுப்பு வெள்ளைப்படமான குரு தத்தின் `ப்யாஸா’வை முதல் முதலில் பார்த்தேன். மேதை என்று என் ப்ரொஃபசர் குறிப்பிட்ட  குரு தத். அந்தப் படத்தில் புறக்கணிக்கப்படும் ஒரு கவிஞனாக நடித்திருந்தார். படம் நெடுகிலும் ஒரே சோகம்.   ஆனால் அந்த வயதிலேயே நான் வங்க மொழிப்படங்களுக்கும், சரத் சந்திரர் கதைகளுக்கும் பழகி விட்டிருந்ததால் சோகம் ஒரு பிரச்சினையாக இல்லை.

`ப்யாஸா’ வங்க மொழிப் படத்தின் சாயலில் இருந்ததை உணர முடிந்தது. அந்தப் படத்தில் ஒரு காவியத்தன்மை இருந்தது. குறிப்பாக குரு தத் இறந்து விட்டதாக நினைத்து கூடி இருக்கும் கூட்டத்தில் குரு தத் வந்து நின்று  பாடுவதும், அடிபடுவதும் பார்க்கையில்,  அந்த செமஸ்டரில் படித்த ஷேக்ஸ்பியரின் ஜூலியஸ் சீசர் நாடகத்தின் காட்சிகள் மனதில் தோன்றி உலுக்கியது. முடிவில் குரு தத் தன் காதலி வஹிதா ரஹ்மானுடன்( படத்தில் அவர் ஒரு பாலியல் தொழிலாளி)  நடந்து செல்லும் காட்சி அதுவரையிலான எனது  சோகத்தை முடிவுக்குக் கொண்டு வந்து அன்றிரவு மகிழ்ச்சியாகத் தூங்க வைத்தது.

அதன் பின்  திரைவிழாக்களில் குரு தத் படங்களை பார்த்தும் அவரைப் பற்றிப் படித்தும் படிப்படியாக  அறிந்து கொள்ள முடிந்தது.

ஒரு எழுத்தாளன் அல்லது கலைஞனின் படைப்புகளைப் புரிந்து கொள்ள அவனது வாழ்க்கையையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஒரு கருத்து உண்டு. கலை வேறு கலைஞனின் வாழ்க்கை வேறு என்று அதற்கு நேர்மாறான கருத்தும் உண்டு. ஆனால் ஒரு படைப்பின் தன்மையை சரியாக உணர்ந்து கொள்ள, அது வெளியான காலகட்டம் மற்றும் அதைப் படைத்தவனின் வாழ்க்கை இவ்விரண்டைப் பற்றிய புரிதலும், தெளிவும் அவசியம் என்றுதான்  கருதுகிறேன்.

பாரதியின் “தனியொரு மனிதனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்“ எனும் வரியை பாரதியின் வாழ்வோடு பொருத்திப் பார்க்கையில், பாரதியின் வறுமையை அறிகையில் அந்த வரி நம் ஆன்மாவில் பதிகிறது.

நிஜமான கலைஞர்களின் கலையும் வாழ்வும் மிகுந்த தொடர்புடையதாக, சமயங்களில் இரண்டும் ஏறக்குறைய ஒன்றாக இருந்து விடுகிறது. 

குரு தத்தின் கலையும் வாழ்வும் கிட்டத்தட்ட ஒன்றுதான். அவரது வாழ்வின் சாயல் அவருடைய திரைப்படங்களிலும், திரைப்படங்களின் சாயல் அவரது வாழ்விலும் இருப்பதை உணர முடிகிறது.

குரு தத்தின் இளம்பிராயம் அங்குமிங்கும் அலைந்து திரிவதாக இருந்திருக்கிறது. மங்களூர், கல்கத்தா, மும்பை, அகமதாபாத் ,புனே என்று வெவ்வேறு ஊர்களுக்கு குரு தத்தையும் அவர் உடன்பிறந்தவர்களையும் அழைத்துக் கொண்டு குரு தத்தின் அம்மா வாசந்தி படுகோனே அலைந்திருக்கிறார். குரு தத்தின் தந்தைக்கு வேலை கிடைப்பதும், போவதுமாக வாழ்க்கை பொருளாதார ரீதியாக அந்தக் குடும்பத்தை சுழற்றி அடிக்க, அலைக்கழியும் பருவமாக குரு தத்தின் இளமைப்பருவம் இருந்திருக்கிறது. இரண்டாம் உலக யுத்தச் சூழல் கல்கத்தாவில்  இருந்து அவர்களை ஓட வைத்திருக்கிறது. 

( குருதத்தின் அம்மா வாசந்தி படுகோனே எழுதிய ‘ என் மகன் குருதத்” எனும் நூல் கே.நல்லதம்பி மொழிபெயர்ப்பில் எதிர் வெளியீடாக வந்திருக்கிறது. அதில் குரு தத்தின் தாய் வாசந்தி, பிள்ளைகளைக் கூட்டிக்கொண்டு வீடு வீடாக அலைந்து திரிந்ததையும், ஊர் விட்டு ஊர் பயணம் செய்ததையும் படிக்கையில்  பரிதாபம் தோன்றுகிறது. ஆனால் அந்தக் குடும்பத்தில் இருந்து குரு தத் எனும் மேதை மட்டுமல்ல, லலிதா லாஜ்மி எனும்  ஓவியரும் உருவாகி இருக்கிறார்.  லலிதா லாஜ்மி குரு தத்தின் தங்கை, புகழ் பெற்ற ஓவியர். ஆமிர் கானின் தாரே ஜமீன் பர் படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருக்கிறார். )

இப்படி நிலையற்ற, கடினமான இளமைப்பருவம் தான் குரு தத்துக்கு வாய்த்திருக்கிறது. ஆனால் அத்தனை அல்லாட்டங்களையும் தாண்டி குரு தத்துக்கு இசையின் மீதும் நாடகத்தின் மீதும் நடனத்தின் மீதும் பெரிய ஈடுபாடு இருந்திருக்கிறது. எல்லாவற்றையும் ஆர்வத்துடன் கற்கிற சிறுவனாக குரு தத் இருந்திருக்கிறார்.

பெனகல் எனும் அவனது உறவினர் கல்கத்தாவில்  சினிமா பேனர் வரையும் ஒரு ஓவியர். சிறுவன் குரு தத் அவரது ஸ்டூடியோவிலேயே பெரும்பாலான நேரத்தை கழித்திருக்கிறார். பின்னால் பெனகலின் உதவியோடு நடன மேதை உதயஷங்கரை சந்தித்து அவரது பள்ளியில் நடனம் கற்றிருக்கிறார். உதயஷங்கரின் குழுவில் இணைந்து நிகழ்ச்சிகள் நடத்தி இருக்கிறார். நிகழ்ச்சிக்காக மும்பைக்கு அடிக்கடி வந்த குரு தத் ஒரு கட்டத்தில் புனேயில் தங்கி இருந்து சினிமாவில் நுழைந்திருக்கிறார். அவரோடு ஒரே அறையில் தங்கி இருந்தவர் தேவ் ஆனந்த். இருவரும் நெருங்கிய நண்பர்கள். தேவ் ஆனந்த் ஹீரோ ஆகிவிட்டால் குருதத்துக்கு டைரக்‌ஷன் வாய்ப்பு தருவதாகவும், ஒருவேளை குரு தத்  இயக்குனராகி விட்டால் தேவ் ஆனந்துக்கு  நடிக்க வாய்ப்பு தர வேண்டும் என்று நண்பர்களிடையே ஒப்பந்தம். இருவருமே பின்னாளில் திரையுலகில் பெரும்புகழ் பெற்றார்கள்.

தேவ் ஆனந்த் புகழ் பெற்ற நடிகர் ஆனார்.  குரு தத் சில திரைப்படங்களில் உதவி இயக்குனராகப் பணியாற்றிய பின்னர் தன் முதல் படத்தை இயக்கினார். தேவ் ஆனந்த்  அந்தப் படத்தை தயாரித்து, தான் கொடுத்த வாக்கை காப்பாற்றி நண்பனை இயக்குநர் ஆக்கினார். முதல் படம் `பாஸி’ . மிகப்பெரிய வசூல் வெற்றியைப் பெற்றது. இந்தியாவில் தயாரான முதல்  மர்மத் திரைப்படம்  ( crime noir cinema  ) பாஸி தான்.

மணிரத்னம் ஒரு முறை ஒரு பேட்டியில்  என்னை மிகவும் பாதித்த இயக்குநர் குரு தத் என்று குறிப்பிட்டதைப் படித்தேன்.  அவரது பாணியில் நான் சில காட்சிகளை அமைத்திருக்கிறேன் என்றும் அந்தப் பேட்டியில் சொல்லி இருந்தார்.  

பம்பாய் திரைப்படத்தில் `கண்ணாளனே’ பாடலில் மனீஷா கொய்ராலா மதுரை திருமலை நாயக்கர் மஹால் தூண்களின் நடுவே முக்காடிட்டு பாட, அரவிந்த் சாமி அவரைத் தேடுவார். `ப்யாஸா’ படத்தில் வஹீதா ரஹ்மான் அறிமுகக்காட்சியில் அதே போன்ற நெடிதுயர்ந்த தூண்களில் நடுவே முக்காடிட்ட வஹீதா ரஹ்மான், பின் தொடரும் குரு தத். 

தவிர மௌனராகம், நாயகன், அக்னி நட்சத்திரம் போன்ற படங்களில் குறிப்பிட்ட இடங்களில் மட்டும் அதிகமான ஒளியைப் பாய்ச்சி, அந்த ஒளிச்சிதறலில் ஒரு உணர்வினை,  மாயத்தை உருவாக்கிக் காட்டும் உத்தி பல குரு தத் படங்களில் உண்டு. ப்யாஸா திரைப்படத்தில் கவிஞன் விஜய்க்கு நடக்கும் இரங்கல் கூட்டக் காட்சியின்  லைட்டிங்கும், காட்சி அமைப்பும் அன்றைய காலகட்டத்தில்  மிகவும் தனித்துவமானவை.      ( கேமராமேன் வி.கே .மூர்த்தி. குருதத்தின் ஆஸ்தான கேமராமேன் ).  அதே போல, ஆணும் பெண்ணும் உணர்வுப் போராட்டங்களின் போது,  நெருக்கமாக  நின்று, க்ளோஸ் அப்பில், தாழ்ந்த குரலில் பேசும் பாணி குரு தத் படங்களைப் போலவே மணிரத்னம் படங்களிலும் உண்டு.

குரு தத் படங்களின் கதையின் சாயலை நான் மற்றொரு புகழ் பெற்ற இயக்குநர் படங்களிலும் கண்டிருக்கிறேன். அவர் `சங்கராபரணம்’ புகழ் கே.விஸ்வநாத்.  `ப்யாஸா’ திரைப்படத்தில் ஒரு மேதையை உலகம் புரிந்து கொள்வதில்லை. ஆனால் ஒரு பெண் (ஒழுக்கமற்றவள் என்று சமூகம் சொல்லும் பெண்) அவனை உபாசிக்கிறாள். அவனது புகழை உலகுக்கு எடுத்துக் காட்டுகிறாள். சங்கராபரணம் படத்தின் மையக்கருவும் அதுதான். சலங்கை ஒலியிலும் அதே கதைதான். காகஸ் கீ பூல் திரைப்படத்தில் இயக்குனர் சின்ஹா ( குரு தத் ) அறிமுகப்படுத்தும் பெண் புகழ் பெற்று விளங்க, அறிமுகப்படுத்திய குரு தத் தோற்றுப் போய் அலைவார். கே. விஸ்வநாத் கதையில் உருவான தமிழ்த்திரைப்படமான `ஏணிப்படிகள்’ படத்தின் கதையில் இந்த சாயல் உண்டு…இப்படி பெரும் இயக்குனர்களை பாதித்த படைப்புகளாக குரு தத்தின் படங்கள் இருந்திருக்கின்றன. பல விஷயங்களில் அவர் முன்னோடியாக இருந்திருக்கிறார்.

குரு தத்தின் சிறப்பே அவர் கமர்ஷியல் வெற்றிப்படங்களையும் கொடுத்தார், கலைத்தன்மை வாய்ந்த படங்களையும் உருவாக்கினார் என்பதுதான். `ப்யாஸா’ கலைத்தன்மை கொண்ட ஒரு திரைப்படம்.   வாழும் காலத்தில் மேதைகள் புறக்கணிக்கப்படுவதையும், மரணத்தின் பின் அவர்கள் கொண்டாடப்படுவதையும் அது பேசியது. இது எக்காலத்திலும் நடப்பது. ஆனால் இந்தக் கருவைக் கொண்ட ஒரு திரைப்படம் எல்லா மக்களாலும் கொண்டாடப்பட்டதும்,  கமர்ஷியலாக பெரும் வெற்றி பெற்றதும் ஒரு அபூர்வ சாதனை. அது ‘ப்யாஸா’ வில் குரு தத்துக்கு நிகழ்ந்தது.

ஆனால் அவருடைய அடுத்த திரைப்படமான `காகஸ் கீ பூல்’                                        (காகிதப்பூ) திரைப்படத்தில் அது நிகழவில்லை. இத்தனைக்கும் குரு தத் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு ரசித்து ரசித்து எடுத்த திரைப்படம் அது. ஒரு விதத்தில் அது குரு தத்தின் வாழ்க்கையை பிரதி எடுத்தது போன்ற கதை அமைப்பைக் கொண்டது.

கதாநாயகன் குரு தத் ஒரு இயக்குனர். தான் தற்செயலாக சந்தித்த ஒரு பெண்ணை அவன் இயக்கும் திரைப்படத்தில் நடிக்க வைக்கிறான். அந்தப் பெண்ணுக்கும் அவனுக்குமிடையில் இருக்கும் உறவு அவனது மனைவியை அவனிடமிருந்து பிரிக்கிறது.  அவனது செல்ல மகளையும் மனைவி தன்னுடன் கூட்டிப் போய் விடுகிறாள். இயக்குநர் குரு தத் தனது கேரியரில் தோல்விகளை சந்திக்கிறான். அவமானப்படுகிறான். சுய இரக்கம் கொண்டு குடிக்கத் துவங்கி தன் வீழ்ச்சியை நோக்கி தானே செல்கிறான். அவன் அறிமுகப்படுத்திய நாயகி   (வஹிதா ரஹ்மான்)  புகழின் உச்சத்துக்குச் சென்றவள் ஒரு கட்டத்தில் நடிப்பதில் இருந்து விலகிப் போனவள் இவனுக்கு உதவ வருகிறாள். ஆனால் குரு தத்தின் ஈகோ அதனை ஏற்கவில்லை.  மனச்சோர்வும்  குடியும் மீள முடியாத ஒரு இடத்துக்கு அவனைக் கொண்டு செல்கிறது. முடிவில் ஸ்டுடியோவில் இயக்குநரின் நாற்காலியில் அமர்ந்தபடி தனிமையில் அவன் இறந்து கிடக்கிறான்.

இது எல்லாமே குரு தத்தின் வாழ்விலும் நிகழ்ந்தது என்பது பெரும் துயரம்.     தன் வாழ்க்கையில் இருந்து ஒருவேளை அவர் இந்தக் கதையை உருவாக்கி இருக்கலாம். ஆனால் அந்தக் கதையின் முடிவில் வருவதைப் போலவே குரு தத்தும் தன் அறையில் இறந்து கிடந்தார். அதீதமான மதுவுடன் தூக்க மாத்திரைகளும் எடுத்துக் கொண்டது அவரது மரணத்துக்கு காரணம் என்று தெரிய  வந்தது . ஆனால் அதனை அவர் வேண்டுமென்றே செய்தாரா அல்லது விபத்தாக அந்த முடிவு நிகழ்ந்ததா என்று தெரியவில்லை. வேண்டுமென்றே செய்வதற்கான சூழல் இருந்திருக்கிறது. ஏனெனில் முந்தைய இரவு அவர் மனைவியுடன், தன் பிள்ளைகளை தன்னிடம் அனுப்புமாறு ஃபோனில் கடுமையான வாக்குவாதம் நடந்திருக்கிறது. ( குரு தத்தின் மனைவி கீதா தத் பிரபல பின்னணிப்பாடகி. இருவருக்கும் நடந்தது காதல் திருமணம்.  குரு தத் – வஹீதா ரஹ்மான் இருவரிடையே நிலவிய  உறவு குரு தத்தின் குடும்ப வாழ்வில் பிரச்சினைகளை உருவாக்கியது)

`காகஸ் கீ பூல்’ திரைப்படம் இன்று ஒரு கல்ட் மூவி.  பல்வேறு உலக அளவிலான அங்கீகாரங்களையும், மதிப்பையும் பெற்ற திரைப்படம். இன்றும் அதன் ஒளிப்பதிவும்  காட்சி அமைப்புகளும் சினிமா மொழியும் பெரும் சிலாகிப்புக்கு உள்ளாகின்றன.  ஆனால் அந்தப் படம் வெளியான போது படுதோல்வி அடைந்தது. குரு தத் அவமதிப்புக்கு உள்ளானார் (இது போன்ற ஒரு காட்சி அமைப்பும் அந்தத் திரைப்படத்துக்கு உள்ளேயே இருப்பது ஆச்சரியமானது, வேதனையானது.)

தான் மிகவும் நேசித்து, ரசித்துச் செய்த சினிமா இப்படிப்பட்ட எதிர்வினைகளை அளித்தது குரு தத்தின் மென்மையான கலை மனதை பெரிதும் பாதித்து இருக்க வேண்டும். அடுத்து அவர் படம் எதையும் இயக்கவில்லை. `காகஸ் கீ பூல் ‘  தான் அவர் இயக்கிய கடைசிப் படம். அதன் பின்பு அவர் தயாரிப்பு மட்டுமே செய்தார். அவர் தயாரித்த மற்றொரு முக்கிய திரைப்படமான  ‘சாஹிப், பீபி அவுர் குலாம் ‘ திரைப்படத்தை அவரது ஆஸ்தான திரை எழுத்தாளரான அப்ரார் ஆல்வியை  இயக்கச் செய்தார். படங்களில் நடித்தார். ஆனால் காகஸ் கீ பூல் திரைப்படத்தின் தோல்வியை அவரால் ஜீரணிக்கவே முடியவில்லை. ஒரு பேட்டியில் நொந்து போய் சொல்கிறார்.

“நமது சினிமா ஃபார்முலாக்களால் ஆனது. ஒருவன் அந்தப் பழகிய பாதையிலிருந்து விலகி ஏதாவது செய்தால், மாத்யூ ஆர்னால்ட் கவிஞர் ஷெல்லி பற்றிச் சொன்னதுபோல்  அவன் ‘சூனியத்தில் சிறகடிக்கும் தேவதை‘ போல ஆகி விடுகிறான். நிலவுகிற சூழலுக்கு எதிர் திசையில் பயணிப்பவன் பூங்கொத்துகளுக்கும், கல்லடிக்கும் – வெற்றிக்கும், மனச்சோர்வுக்கும் தயாராக இருக்க வேண்டும். நல்ல படம் எடுப்பதா இல்லை வசூலைக் குவிப்பதா என்கிற குழப்பமான, நிச்சயமற்றதன்மை சினிமாவை உருவாக்குவதிலிருக்கும் மகிழ்ச்சியைக்  குலைத்து விடுகிறது.”

இந்த சோர்வுற்ற மனநிலையில் இருந்து குரு தத் மீளவே இல்லை.

அக்டோபர் 10 1964  அன்று அவர் இறந்து போனார்.

அசாத்தியமான கலை மனம், அதற்கே உரிய பலவீனங்கள், மேதைமை இவற்றின் அடையாளம் அவர். வாழ்ந்த போது அவர்  பெற்ற வெற்றிகளும், புகழும் அவரது மென்மையான மனதின் பாதிப்புகளை குணப்படுத்த போதுமானவையாக இல்லை. அவர் மனதில் எப்போது ஒரு சஞ்சலமும்  கவலையும் இருந்துகொண்டே இருந்தது. அமைதியின்மை அவரை அலைக்கழித்தது. மதுவில் தன்னை மூழ்கடித்துக் கொண்டு விடுபட முயன்றார். கடைசியில் மதுவுடன்தான் விடைபெற்றார்.

இன்றும் கொண்டாடப்படும் படைப்புகளை தன் அடையாளமாக விட்டுச் சென்றிருக்கிறார்.

இது குரு தத்தின் நூற்றாண்டு. மரியாதையும், அன்பும் கொண்ட அஞ்சலிகள் அந்த மாபெரும் கலைஞனுக்கு. 

( இந்த அஞ்சலியை இன்னும் சில அத்தியாயங்கள் தொடர எண்ணுகிறேன். அவருடைய திரைப்படங்கள் குறித்து தொடர்ந்து எழுத இருக்கிறேன். )

Author Image

பாஸ்கர் சக்தி

திரைப்பட இயக்குநர். எழுத்தாளர்.

About The Author

The Talkie

The Talkie

See author's posts

Next Post
Thirumbi Parkiren

திரை புத்தகம் 07

Please login to join discussion

Archives

  • Trending
  • Comments
  • Latest
Thug_Life_

Thug Life – ஒரு பார்வை

June 6, 2025
AMADEUS திரைக்கதை

AMADEUS திரைக்கதை

March 15, 2025
start camera

ஸ்டார்ட் கேமரா! வின்சென்ட் மாஸ்டர் – 01

March 19, 2025
Irunda-Pakkam

தொழில்நுட்பத்தின் இருண்ட பக்கங்கள்: திரைப்படங்கள் சொல்லும் உண்மை.

March 16, 2025
Thug_Life_

Thug Life – ஒரு பார்வை

11
rasigamagajanangale

ரசிக மகா ஜனங்களே

7
gurudutt-02

குருதத்தின் ப்யாஸா- உயிர்த்தெழுந்த தேவதை        

5
start camera

ஸ்டார்ட் கேமரா! வின்சென்ட் மாஸ்டர் – 01

4
table top-4-5

டேபிள் டாப் 04 & 05

January 24, 2026
bella darr

பேலா டார் – காட்சியை அனுமதித்தவர்

January 24, 2026
trend-kottaiye-11

ட்ரெண்டு கொட்டாய் 11 -நான் (திரை) காவிய நாயகன்

January 24, 2026
table top-3

டேபிள் டாப் 03

January 24, 2026
The Talkie

சினிமா அற்புதமான ஊடகம். இதனை அறிந்து கொள்ளவும், ரசிக்கவும் உருவாக்கப்பட்டிருக்கிற இணைய இதழ் இது. மேதைகளின் நேர்காணல்கள், திரைக்கதைகள், வெவ்வேறு மொழித் திரைப்படங்கள், ஆளுமைகள், திரைப்படப் புத்தகங்கள் , சினிமா ரசனை என சினிமா உலகத்தோடு இணைந்திட எங்களுடன் இணைந்திடுங்கள்.

Categories

  • I CALL THE SHOTS
  • ஆளுமைகள்
  • இந்தியத் திரைப்படங்கள்
  • உரையாடல்
  • உலகத் திரைப்படங்கள்
  • ஓடிடி திரை
  • கட்டுரைகள்
  • குரு தத் 100
  • டேபிள் டாப்
  • ட்ரெண்டு கொட்டாய்
  • தமிழ்த் திரைப்படங்கள்
  • திரை புத்தகம்
  • திரைக்கதைகள்
  • தொடர்கள்
  • ஸ்டார்ட் கேமரா

Site Navigation

  • About Us
  • Terms and Conditions
  • Privacy Policy
  • Returns and Cancellation
  • Shipping Policy
  • FAQ
table top-4-5

டேபிள் டாப் 04 & 05

January 24, 2026
bella darr

பேலா டார் – காட்சியை அனுமதித்தவர்

January 24, 2026
trend-kottaiye-11

ட்ரெண்டு கொட்டாய் 11 -நான் (திரை) காவிய நாயகன்

January 24, 2026

© 2026 Thetalkie - All rights reserved

Welcome Back!

Sign In with Google
OR

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Sign Up with Google
OR

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • thetalkie
  • ஆளுமைகள்
  • திரைக்கதைகள்
  • உரையாடல்
  • கட்டுரைகள்
    • இந்தியத் திரைப்படங்கள்
    • உலகத் திரைப்படங்கள்
    • தமிழ்த் திரைப்படங்கள்
    • ஓடிடி திரை
  • தொடர்கள்
    • ட்ரெண்டு கொட்டாய்
    • திரை புத்தகம்
    • ஸ்டார்ட் கேமரா
    • I CALL THE SHOTS
    • குரு தத் 100
    • டேபிள் டாப்
  • தொடர்பு
  • Login
  • Sign Up
  • Cart

© 2026 Thetalkie - All rights reserved

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?