காயத்ரி ஆர்.
ஆந்தனி ஹாப்கின்ஸ். திரைப்பட ரசிகர்ககுள் அனைவருக்கும் அறிமுகமான பெயர். இவர் நடித்த ஒரே ஒரு திரைப்படத்தைப் பார்த்து, இவரது நடிப்புக்காகவே தேடித் தேடி படம் பார்த்தவர்கள் உண்டு.
வயதுக்கும் நடிப்புக்கும் தொடர்பில்லை என்று நிரூபித்த்வர்களுள் முதன்மையானவர். இயற்கை ஆர்வலர், போராளி. திரைப்பட, நாடக வளர்ச்சிக்கு தனது வருமானத்தின் பெரும்பகுதியைத் தந்தவர்,
இவர் முகம் நமக்கு எண்ணற்ற கதாபாத்திரங்களை நினைவுக்குக் கொண்டு வருவது. ஆந்தனி ஹாப்கின்ஸ் நேர்காணலின் மொழிபெயர்ப்பு இது.
மிஸ்டர். ஹாப்கின்ஸ், வாழ்க்கையை அனுபவிக்க அனுபவிக்க, அது ஒரு கனவு போல் தெரிகிறது என்று நீங்கள் ஒரு முறை சொன்னீர்கள்.
உங்கள் வாழ்க்கையில் யதார்த்தத்திலிருந்து வேறுபட்டதாகத் தோன்றிய ஒரு குறிப்பிட்ட தருணம் இருந்ததா?
கடந்த முப்பது ஆண்டுகளாக என் வாழ்க்கை அப்படித்தான் இருக்கிறது. நான் சிறு குழந்தையாக, பையனாக, இளைஞனாக இருக்கையில் கனவு கண்டது எல்லாமே நடக்கிறது. அதை முப்பது ஆண்டுகளுக்கு முன்னரே உணர்ந்தேன். “இது உண்மையா! நான் எதிர்பார்த்தபடி, நான் கற்பனை செய்தபடி அப்படியே நடக்கிறதே” என்று நினைத்திருக்கிறேன். என் முழு வாழ்க்கையும் இப்படித்தான் இருந்திருக்கிறது. நம் அனைவருக்குமே இப்படிப்பட்ட சக்தி உண்டு. நம் வாழ்க்கையை நாம்தான் தீர்மானிக்கிறோம்.
நடிகர்களும் திரைப்பட இயக்குநர்களும் உள்ளுக்குள் மிகத் தைரியமானவர்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? நடிகர்கள் எளிதில் உணர்ச்சிவசப்படுபவர்கள் என்று சொல்வார்களே?
கலை என்ற வார்த்தையை நடிப்புக்குப் பயன்படுத்துவது எனக்குப் பிடிப்பதில்லை. நடிப்பு பற்றிய எந்த பகட்டான விஷயத்திலும் நம்பிக்கை இல்லாத ஒரு சாதாரண நடிகனாக இருக்கத்தான் விரும்புவேன். அதனால் நான் எதையும் கொஞ்சம் கிண்டலுடனே பார்ப்பதுண்டு. ஆனால் நடிப்பதற்கும் இயக்குவதற்கும் இசையமைப்பதற்கும் படைப்பாற்றல் அவசியம். நான் என்னை படைப்பாற்றல் மிக்கவனாக நினைக்கிறேன். அதற்காக நீங்கள் நடிகனாகவோ பாடகனாகவோ ஓவியனாகவோ இருக்க வேண்டுமென்பதில்லை. படைப்பாற்றல் வேண்டிய தொழிலில் நீங்கள் இருந்தால் உங்களுக்கு விழிப்புணர்வு அதிகமாக இருக்கும். அதனால் நீங்கள் ஒன்றும் மற்றவரிடமிருந்து வித்தியாசப்பட்டவர் இல்லை.
ஆனால் பல நடிகர்கள் அப்படித்தானே நடந்து கொள்கிறார்கள்…
இதில் கவனமாக இருக்க வேண்டும். நீங்கள் ஒரு தனித்துவமானவர் என்றும் அதனால் உங்களுக்கு சலுகைகள் இருப்பதாகவும் நீங்கள் நம்பத் தொடங்கும்போது, பெரிய சிக்கலில் மாட்டிக் கொள்கிறீர்கள். அதுதான் பைத்தியக்காரத்தனத்திற்கான பாதை. சினிமாவில் உள்ள பலர் அப்படித்தான். அவர்கள் தாங்கள் சிறப்பு வாய்ந்தவர்கள் என்று நம்புகிறார்கள். மற்றவர்களை விட சற்று விழிப்புணர்வு அதிகம் என்பதால் நடிகர்கள் ஆசிர்வதிக்கப்பட்டவர்களாக அல்லது சபிக்கப்பட்டவர்களாக இருக்கலாம் என்று நினைக்கிறேன். இதனால் நீங்கள் மற்றவரைவிட பெரியவர் இல்லை. நம் மூளை வேலை செய்வது அப்படி. அவ்வளவுதான்!
உங்களுக்கு ஆதர்சமான இயக்குநர்கள் யாராவது இருந்திருக்கிறார்களா?
பலர் இருந்திருக்கிறார்கள். ஒவ்வொருவரும் அவரவர் பாணியில் வித்தியாசமாக வேலை செய்பவர்கள். எனக்கு ஆலிவர் ஸ்டோன், ஸ்பீல்பர்க், இன்னும் பல அருமையான மனிதர்களுடன் வேலை செய்யும் அதிர்ஷ்டம் இருந்திருக்கிறது. ஆலிவர் ஸ்டோன் அற்புதமாக இயக்குநர். அவருடைய பல படங்களைப் பார்த்திருக்கிறேன். ஈர்க்கப்பட்டிருக்கிறேன். அவர் சாயல் வராமல் என் படங்களை இயக்க நான் மெனக்கெடுகிறேன். என்னுடைய தனித்த பாணியில், என் கற்பனையில் உருவாக்க முற்படுகிறேன். எல்லா விதிகளையும் உடைத்து, குழப்பி ஒரு படத்தைக் கொடுக்க நினைக்கிறேன்.
நடிப்பு உங்களை இளமையாக வைத்திருக்கிறதா?
ஆமாம். நான் இளமையானவன்தான்! உங்களுடைய மூளைக்கு வேலை கொடுத்து, படைப்பாற்றலைத் தக்க வைத்துக் கொள்ளாவிட்டால் மெல்ல மெல்ல அது செத்து விடும். சில சமயங்களில் சோர்வாக இருந்தாலும் விட்டுவிடலாமென்று நினைத்தாலும் என்னால் முடிவதில்லை. எனக்கு இந்த வேலை செய்ய மிகவும் பிடித்திருக்கிறது. ஒன்றுமே செய்ய முடியாது என்ற நாள் வரும்வரை உழைக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.
இன்னும் நடிப்பில் தீவிர ஈடுபாடு இருக்கிறதா?
முன்பு இருந்தது. இப்போது இல்லை. முன்பைவிட நடிப்பது இப்போது சுலபமாக இருப்பதால் சந்தோஷத்தைத் தருகிறது. என்னால் தியேட்டர் ஆர்டிஸ்டாக இருக்க முடியாது. ஏனென்றால் அங்கு சீரியசாக இருக்க வேண்டும். எனக்கு ஜெயிலில் இருப்பதைப் போன்று இருக்கும். அங்கு நடிப்பவர்களை நான் மிகவும் மதிக்கிறேன். ஆனால் என்னால் அது முடியாது. நான் சந்தோஷமாக வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு நடுவில் கொஞ்சம் நடிக்க நினைக்கிறேன்.
இப்போது உங்கள் வாழ்க்கை எப்படியிருக்கிறது?
நான் பியானோ வாசிக்கிறேன், படிக்கிறேன், வரைகிறேன், இசையமைக்கிறேன். என் வாழ்க்கை சந்தோஷமாகப் போய்க்கொண்டிருக்கிறது. இவையெல்லாம் நான் படைப்பற்றல் மிக்கவன் என்று காட்டிக்கொள்வதற்காக இல்லை. எனக்கு வரையப் பிடிக்கும். நான் அந்த வேலையை சிறப்பாகச் செய்கிறேனா என்று தெரியாது. ஆனால் எனக்குப் பிடிக்கும். மிக விரைவாக ஓவியம் வரைவேன். அக்ரிலிக்கில் வரையப் பிடிக்கும். இசை எழுதுகிறேன், இசையமைக்கிறேன், பியானோ வாசிக்கிறேன், நிறைய படிக்கிறேன். வாழ்க்கை நன்றாக இருக்கிறது. நடுவே நடிக்கிறேன்.
நீங்கள் உங்களுக்குள்ளேயே ஒரு இணக்கத்தைக் கண்டு கொண்டிருக்கிறீர்கள், இல்லையா…
இன்று நான் புரிந்து கொண்டிருக்கும் வாழ்க்கையை, உணர்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கையை இன்னும் சீக்கிரமாக, இளமையிலேயே தெரிந்துகொண்டிருந்தால் நான் இன்னும் என்னுடன் இணக்கமாக இருந்திருப்பேன். இளமையில் நாம் மிகத் தீவிரமாக இருப்போம். எல்லாமே முக்கியமாகத் தோன்றும். இப்போது திரும்பிப் பார்த்தால் “அதில் அப்படி என்ன இருந்தது” என்று நினைக்கத் தோன்றுகிறது. இந்தக் குறுகிய வாழ்க்கையை நன்றாக வாழ்வதைத் தவிர அப்படியொன்றும் இங்கு எதுவும் முக்கியமானதில்லை.
வயதாகிக் கொண்டிருப்பதை ரசிக்கிறீர்களா?
ஆமாம். நான் உடம்பை நன்றாக வைத்துக் கொள்கிறேன். கண்ணாடியில் பார்க்கும்போது சுருக்கங்கள் தெரிந்தாலும் நான் கண்டுகொள்வதில்லை. இது என் வாழ்வின் மிக நல்ல நேரம். ஏனென்று கேட்டால் தெரியாது. ஆனால் மிக நல்ல நேரம். மரணம் உங்களை மீட்கும். உங்களை எல்லாவற்றிலிருந்தும் வெளிக்கொணரும். அதனால் வாழ்க்கை நன்றாகும். கார்ல் யுங் படியுங்கள். வாழ்க்கை அர்த்தமுள்ளதாகும். நாம் என்னவாகப் போகிறோம் என்று யாருக்கும் தெரியாது. அதுதான் இங்கு வேடிக்கையே.
நீங்கள் சாதிக்க வேண்டும் என்று நினைத்ததையெல்லாம் சாதித்து விட்டீர்களா? நினைத்ததைவிட அதிகமாக. நான் மிகவும் அதிர்ஷ்டசாலி. எனக்கு பல பிரச்சினைகள் இருந்திருக்கின்றன, ஆனால் அதையெல்லாம் அப்படியே கடந்து செல்ல வேண்டியதுதான். நான் ஒரு அற்புதமான வாழ்க்கை வாழ்ந்திருக்கிறேன். அதற்காக நன்றியுடன் இருக்கிறேன்.











