The Talkie
Thursday, April 9, 2026
  • Login
  • Register
  • thetalkie
  • ஆளுமைகள்
  • திரைக்கதைகள்
  • உரையாடல்
  • கட்டுரைகள்
    • இந்தியத் திரைப்படங்கள்
    • உலகத் திரைப்படங்கள்
    • தமிழ்த் திரைப்படங்கள்
    • ஓடிடி திரை
  • தொடர்கள்
    • ட்ரெண்டு கொட்டாய்
    • திரை புத்தகம்
    • ஸ்டார்ட் கேமரா
    • I CALL THE SHOTS
    • குரு தத் 100
    • டேபிள் டாப்
  • தொடர்பு
No Result
View All Result
The Talkie
  • thetalkie
  • ஆளுமைகள்
  • திரைக்கதைகள்
  • உரையாடல்
  • கட்டுரைகள்
    • இந்தியத் திரைப்படங்கள்
    • உலகத் திரைப்படங்கள்
    • தமிழ்த் திரைப்படங்கள்
    • ஓடிடி திரை
  • தொடர்கள்
    • ட்ரெண்டு கொட்டாய்
    • திரை புத்தகம்
    • ஸ்டார்ட் கேமரா
    • I CALL THE SHOTS
    • குரு தத் 100
    • டேபிள் டாப்
  • தொடர்பு
No Result
View All Result
The Talkie
Subscribe
Home கட்டுரைகள் ஓடிடி திரை

கதை to திரைக்கதை Unbelievable

The Talkie by The Talkie
September 23, 2025
in ஓடிடி திரை, கட்டுரைகள்
A A
1
Unbelievable
Share on WhatsappShare on FacebookShare on Twitter

Author Icon ஜா.தீபா

நெட்ஃப்ளிக்சில் Unbelievable என்கிற தொடர் உள்ளது. அமெரிக்காவில் வெவ்வேறு மாகாணங்களில் பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாகிறார்கள், குற்றவாளி யாரென்று தெரியவில்லை. காவல்துறை பெரும் முயற்சிகளுக்குப் பிறகு குற்றவாளியைக் கண்டுபிடிக்கிறது.

மேலோட்டமாய்ப் பார்க்கையில் இது தான் தொடரின் ஒன்லைன். நாம் கேட்டுப் பழகிய கதை தான். ஆனால் இந்தத் தொடர், இது போன்ற தொடர்களில் இருந்து முற்றிலும் வித்தியாசப்படுகிறது. நடந்த சம்பவங்களின் அடிப்படையில் யதார்த்தத்துக்கு மிக நெருக்கமாக எடுக்கப்பட்டத் தொடர் என்பதால் அதன் உண்மைத்தன்மை இந்தத் தொடரை முக்கியத்துவப்படுத்தியிருக்கிறது.

இந்தத் தொடர் உண்மை சம்பவங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்டிருக்கிறது. Pro Publica என்கிற பத்திரிகையில் வெளிவந்த கட்டுரை ஒன்றின் அடிப்படையில் எடுக்கப்பட்ட தொடர் இது. இந்தக் கட்டுரைக்காக கட்டுரையாளர்கள் கென் ஆர்ம்ஸ்ட்ராங் மற்றும் கிறிஸ்டியன் மில்லர் இருவருக்கும் புலிட்சர் விருது கிடைத்தது.

விருதுக்கு இந்தக் கட்டுரைத் தேர்ந்தெடுக்கப்பட்டதன் காரணமாக விருது கமிட்டி இப்படி அறிவித்திருந்தது. “பாலியல் குற்ற வழக்கை மிகக் கவனமாகவும், நேர்மையாகவும் பதிவு செய்தமைக்காக இந்த விருது” என்றிருந்தது.

இந்தக் கதை இரண்டு கோடுகளில் பயணிக்கிறது. கலிபோர்னியாவில் லின்வுட் பகுதியில் பதினாறு வயதே ஆன மரி என்ற ஒரு பெண் யாருமற்ற அவளுடைய வீட்டில் வைத்து அடையாளம் தெரியாத ஒரு நபரால் வன்புணர்வுக்கு ஆளாக்கப்படுகிறாள். இதை அவள் லின்வுட் காவல்துறையினரிடம் கொண்டு செல்கிறாள். அவர்கள் மரியை விசாரிக்கத் தொடங்குகிறார்கள். எந்தத் தடயமும் கிடைக்காத நிலையில் மரி சொன்னது ஒரு கட்டுக்கதை என்று முடிவெடுக்கிறார்கள். அந்த முடிவுக்கு மரியையும் வரவழைக்கிறார்கள். பிறகு மரியை அவர்கள் மறந்தும் போகிறார்கள்.

இன்னொரு பக்கம் இதே ரீதியில் அமெரிக்காவில் வெவ்வேறு மாகாணங்களில் இது போன்ற பாலியல் வன்புணர்வு குற்றங்கள் நடக்கின்றன. ஜன்னல் வழியாக வீட்டுக்குள் புகுந்து தனிமையில் இருக்கும் பெண்களை வன்புணர்வுக்கு உள்ளாக்குகிறான் அடையாளத்தை வெளிப்படுத்தாத ஒருவன். இந்தத் தொடர் சம்பவங்களை இரண்டு பெண் காவல்துறை அதிகாரிகள் கவனத்தில் எடுத்துக் கொள்கின்றனர். பெருமுயற்சிக்குப் பிறகு அவர்கள் குற்றவாளியைக் கண்டுபிடிக்கிறார்கள்.

இதை பரபரப்பாக எடுத்திருக்கலாம், அந்தக் குற்றவாளி எதற்காக இப்படி செய்தான் என்று உளவியல் ரீதியாக திரைக்கதை அமைத்திருக்கலாம், காவல்துறையின் புத்திசாலித்தனத்தை எடுத்துச் சொல்லியிருக்கலாம்..ஆனால் இவை எதையும் முன்னிலைப்படுத்தாமல் இந்தக் கதை சொன்ன செய்தி தான் இதனை அவசியமானத் தொடராக மாற்றியிருக்கிறது.

நாம் கடக்க விரும்புகிற அல்லது அதீத உணர்ச்சியை ஏற்றுகிற ஒன்றாய் எப்போதும் இருக்கின்றன பாலியல் வன்புணர்வு குற்றங்கள். ஏனெனில் பாதிக்கப்பட்டவரின் பார்வையில் நாம் இதைப் பார்க்கிறோம். இந்தத் தொடரும் பாதிக்கப்பட்ட பெண்களின் பார்வையையே முன்வைக்கிறது. அதை விட முக்கியமாய் பெண்களுக்கு எதிராக நிகழும் குற்றங்களை கையாளும் காவல்துறையைச் சேர்ந்த பெண் அதிகாரிகளின் தீவிரமான மனதையும், உழைப்பையும் சொல்கிறது. திரைக்கதை கனம் கொள்ளத் தொடங்குவது இதனால்தான்.

An Unbelievable Story Of Rape என்கிற கட்டுரையும் கூட மிகுந்த பொறுப்புணர்வோடு எழுதப்பட்ட ஒன்று. அதன் நேர்மையையும், கவனத்தையும் சுசன்னா கிரான்ட் தனது திரைக்கதையிலும், இயக்கத்திலும் கொண்டு வந்திருந்தார். இந்தக் கட்டுரை சொல்ல வருவதை ஒரு உரையாடலாக மாற்ற வேண்டும், அதுவும் தனது மொழியான காட்சி ஊடகத்தின் வழியாக என்று சுசான்னா கிரான்ட் முடிவெடுத்ததன் காரணம் அவர் ஒரு பெண் என்பதால் என்றும் சொல்லமுடியும்.

கட்டுரை மிக விரிவாக எழுதப்பட்டிருக்கிறது. மரி சொன்னதெல்லாம் பொய், காவல்துறையின் நேரத்தை வீணாக்கியிருக்கிறாள் என்று குற்றஞ்சாட்டப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கிறார்கள் காவல்துறையினர். அதற்காக நீதிமன்றத்துக்கு ஆதரவு யாருமின்றி தனியாளாய் மரி வந்து நிற்பதில் தொடங்குகிறது கட்டுரை.

சரி, எப்படித்தான் மரி பொய் சொல்லுகிறாள் என்று போலிஸ் முடிவு செய்தது? அவர்கள் வைத்திருந்த காரணம் மிக எளிதுதான். “நாங்கள் மரியை விசாரித்தபொழுது அவளுடைய பதில்களையும், உடல்மொழியையும் கவனித்தோம், அவற்றை வைத்து நாங்கள் அவள் பொய் சொல்லுகிறாள் என்று சந்தேகித்தோம்” என்று பின்னாட்களில் அவர்கள் வாக்குமூலமாக தந்திருந்தனர். அதாவது ஒரு பெண் வன்புணர்வு செய்யப்பட்டால் அந்தப் பெண் அழுது ஒப்பாரி வைக்க வேண்டும் அல்லது தற்கொலைக்கு முயலவேண்டும், இல்லையெனில் யாரையும் பார்க்கவிரும்பாது முகத்தை மூடி தனிமையில் அழ வேண்டும், இதனை எதிர்பார்த்திருக்கிறார்கள் காவல்துறையினர். அவர்கள் மட்டுமல்ல, மரியின் வளர்ப்பு அம்மாவும் இதையே போலிஸ் விசாரணையின் போது தெரிவிக்கிறார். “நான் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் ‘Law and Order’ தொடரின் பெரிய ரசிகை. அதனை வைத்து சொல்லுகிறேன்.. மரியின் முகத்தைப் பார்த்தீர்களா? எவ்வளவு சாதாரணமாக இருந்தது என்று….இப்படியான அனுபவத்தை எதிர்கொண்ட பெண் இப்படியா இருப்பாள்..அதனால் அவள் பொய்தான் சொல்லுகிறாள்” என்று சொல்லியிருந்தார். மரியை வளர்த்த அம்மாவே சொன்னபிறகு நமக்கென்ன என்று காவல்துறையும் வழக்கை இழுத்து  மூடிவிட்டது.

அதோடு, ‘நான் சொன்ன அனைத்தும் தவறுதான்’ என்று மரியிடமும் எழுதி வாங்கிக் கொண்டது காவல்துறை. அதன்பின்பு மரிக்கு நிகழ்ந்தது குறித்து மரியைத் தவிர யாரும் கவலை கொள்ளவில்லை. வளர்ப்பு அப்பா அம்மா, நண்பர்கள் எல்லோரும் அவள் பொய் சொன்னாள் என்ற காரணத்தால் அவளை விட்டு விலகுகிறார்கள். புகைப்படக்கலையைக் கற்றுக்கொள்ள விரும்பியிருந்த மரிக்கு பள்ளிக்கால நண்பன் உதவி செய்திருக்கிறான். கற்றும் தந்திருக்கிறான். இந்த சம்பவத்திற்குப் பிறகு அவனும் ஒரு முடிவுக்கு வந்து “பொய்சொல்லி மரி’ என்று இணையதளம் ஒன்றை உருவாக்கி தனது தோழியான மரியின் புகைப்படத்தையும் பதிவேற்றி விடுகிறான். மரிக்கு உள்ளதிலேயே பேரதிர்ச்சியாக இது அமைகிறது. ஆனாலும் போராட்டத்தை அவள் பழகிக்கொள்கிறாள். என்றேனும் தனக்கு நியாயம் கிடைக்கும் என்று அவள் நம்பவில்லை. ஆனால் ஒருவருக்கேனும் நடந்தது உண்மை என்று புரியவைத்துவிட முடியுமா என்று உள்ளுக்குள் ஏங்குகிறாள். அந்த ஒருவர் யாரென்று அவளால் புரிந்து கொள்ள முடியவில்லை. எல்லோர் மீதும் அவநம்பிக்கையை விதைத்த சம்பவமாக அது அவளுக்கு மாறியிருந்தது.

கொலராடோ பகுதியில் 26  வயதான ஒரு பெண் தான் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டதாக புகார் தருகிறார். அது குறித்து விசாரிப்பதற்காக ஸ்டேசி கால்ப்ராத் என்கிற பெண் அதிகாரி வருகிறார். கட்டுரையில் அவரைப் பேட்டி கண்டிருந்த போது ஸ்டேசி இப்படிச் சொல்கிறார், “பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டவர்கள் சொல்வதை நம்ப வேண்டும் என்று எங்களுக்கு சொல்லித் தந்திருக்கிறார்கள். ஆனால், முதலில் அவர்கள் சொல்வதைக் கவனிக்க வேண்டும் என்று சொல்வேன். இது போன்ற குற்றங்களில் பாதிக்கப்பட்டவர் தரப்பினை முதலில் முழு மனதுடன் கேட்க வேண்டும்” என்கிறார். இதைக் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். மிகுந்த மனஉளைச்சலுக்கும் அச்சத்துக்கும் உள்ளாகியிருக்கும் பாதிக்கப்பட்ட பெண்ணை முதலில் ஆசுவாசப்படுத்துகிறார் ஸ்டேசி. நாங்கள் இருக்கிறோம் என்று தைரியம் தருகிறார். மரியிடம் காவல்துறை நடந்து கொண்டதற்கு நேர்மாறான ஒன்று இது. இதைக் கட்டுரையும், திரைக்கதையும் நேரடியாகச் சுட்டிக் காட்டவில்லை என்றாலும் கூட அவர்கள் எழுதிய விதத்தில் தெரிந்து கொள்ள முடியும்.

ஸ்டேசியிடம் தனக்கு நடந்ததைப் பகிர்ந்து கொள்ளும் அந்தப் பெண் இறுதியில் சொல்கிறார் “அவனுக்கு இது முதன்முறை அல்ல என்று தெரிகிறது. அவன் பலமுறை இதைச் செய்திருக்கிறான்” இது ஸ்டேசியிடம் கலக்கத்தைத் தருகிறது என்பதைக் கட்டுரை சொல்கிறது. இதைக் கேட்டதில் இருந்து அவருக்கு இருந்த மனப்போராட்டமும், எந்தத் தடயமும் இல்லாமல் எப்படி குற்றவாளியைக் கண்டுபிடிக்கப் போகிறோம் என்கிற கவலையிலும் அவர் எப்போதும்  யோசனையில் இருந்ததைக் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். ஸ்டேசி, அதன் பிறகு தூங்காமல் இது குறித்து சிந்தித்துக் கொண்டிருப்பதைக் காட்டுகிறார்கள்.  ஸ்டேசியின் கணவரும் காவல்துறையில் பணிபுரிவதால் அவர் இது போன்ற ஒரு பாலியல் வன்புணர்வு சம்பவம் தான் பணி செய்கிற மாகாணத்திலும் நடந்திருக்கிறது என்று சொல்ல, அவர் எட்னா ஹென்டர்ஷாட் என்கிற மற்றொரு பெண் அதிகாரியைத் தொடர்பு கொள்கிறார்.

தன்னிடம் சில நாட்களுக்கு முன்பு 65 வயதான ஒரு பெண், இதேபோல ஒருவன் வீட்டுக்குள் நுழைந்து கத்தியால் மிரட்டி, மீண்டும் மீண்டும் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கினான் என்று சொன்னதையும், அவன் முகத்தை மூடியிருந்தான், என்னைக் குளிக்கச்செய்தான், நான் அணிந்திருந்த உடை, படுக்கை விரிப்பு எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு போனான் என்று சொன்னதை சொல்கிறார். இரண்டு சம்பவங்களுமே ஒருவனால் செய்யப்பட்டிருப்பதை புரிந்து கொள்கிறார்கள். இப்படி எங்கெங்கு நடந்திருக்கிறது என்று தேட, கொலராடோவைச் சுற்றியுள்ள பகுதிகளில் இது போன்று நடந்திருப்பது தெரிய வருகிறது. ஆனால், அப்போதும் மரிக்கு நடந்தது இவர்களுக்குத் தெரியாமல் போய்விடுகிறது.   ஏனெனில் எஃப்பிஐ தனது தரவுகளை மற்ற மாகாணங்களோடு பகிர்ந்து கொள்வதில்லை. இந்தச் சம்பவம் நடந்தது 2010ஆம் ஆண்டு.

மரிக்கு நடந்த சம்பவம் குறித்து அறியாத அந்த இரண்டு காவல்துறை அதிகாரிகளையும் ஒட்டுமொத்த பெண்களின் பிரதிநிதியாக சொல்லலாம். சுசான்னா நினைத்திருந்ததும் அது தான்.

இதில் நம்மை ஆச்சரியப்படுத்துவது அமெரிக்க காவல்துறையினர். இது போன்ற வழக்கை எந்தளவுக்கு உணர்வுப்பூர்வமாகவும் கவனமாகவும் கையாள்கிறார்கள் என்பதுதான். ஒருபக்கம் மரியின் வழக்கை விசாரித்த அலட்சியம் கொண்ட காவல்துறை அதிகாரிகள் இருந்தாலும், இனியொரு குற்றம் இது போல் நடந்துவிடக்கூடாது என்பதில் ஒட்டுமொத்த காவல்துறையும் எடுத்துக் கொண்ட அக்கறை பிரமிக்க வைப்பது.

காவல்துறைக்கு கிடைத்ததெல்லாம் குற்றவாளி அணிந்திருந்த ஷூவின் மாடல் அடிடாஸ் zx700 mesh என்பதும் மார்ச் 2005க்கு பிறகு தான் அந்த ஷூ மாடல் சந்தை விற்பனைக்கு வந்திருக்கிறது என்கிற தகவல்களும் தான். பிறகு பாதிக்கப்பட்ட பெண்கள் ஒவ்வொருவரும் சொன்ன தகவலின் பேரில் அவனது உடல் எடை, உயரம், அவன் கண்களின் நிறம், அவனது நேர்த்தியான  பழக்கங்கள், குரல், பல மொழி தெரிந்தவன், அவனது இடது காலில் உள்ள மச்சம் போன்றவற்றைத் தகவலை பெறுகிறார்கள். பிறகு சம்பவ இடங்களில் சிலவற்றில் குற்றவாளியின் டிஎன்ஏ அபூர்வமாய்க் கிடைக்கிறது.

இவற்றை மட்டும் வைத்துக் கொண்டு என்ன செய்துவிட முடியும் என்று ஒட்டுமொத்த காவல்துறையும் யோசிக்கும் நேரத்தில் சிறு சிறு வெளிச்சங்கள் கிடைக்கின்றன. அவற்றை வைத்து குற்றவாளியைக் கண்டுகொள்கின்றனர். ஆனால் அது சுலபமானதாக இல்லை. குற்றவாளி பாதிக்கப்பட்ட பெண்களிடம் நடந்து கொண்ட விதத்தினை வைத்து இராணுவத்தைச் சேர்ந்தவனாக இருக்கக்கூடும், அதனால் தான் போலிஸ் எதைக் கொண்டெல்லாம் குற்றவாளியை கண்டுபிடிக்கும் என்பதைத் தெரிந்து வைத்துக்கொண்டு அந்தத் தடயங்களை அழித்திருக்கிறான் என்ற முடிவுக்கு வருகிறார்கள். பின்னாளில் அவனைக் கைது செய்து அவன் வீட்டை சோதனை செய்த பெண் அதிகாரி, “தான் சோதனை செய்த வீடுகளிலேயே மிகுந்த ஒழுங்குடன் இருந்த வீடு அது தான். அது சாதாரண ஒழுங்கு இல்லை. இராணுவ ஒழுங்கு” என்று சொல்லியிருந்தார்.

இந்தப் புலனாய்வின்போது இரண்டு காவல்துறை பெண் அதிகாரிகளுக்கும் ஏற்படுகிற மனஉளைச்சலை சொன்ன விதம்தான் முக்கியமானது. இதைக் காட்சிப்படுத்தியிருக்கும் விதம் கட்டுரையில் இல்லாததது. இரண்டு பேரில் ஒருவர் இரண்டு பெண் குழந்தைகளுக்கு அம்மா. இரவு குழந்தைகளைத் தூங்க வைத்துவிட்டு  இந்த வழக்குக்காக வீட்டில் தகவல்கள் சேகரிக்கிறார். ஒரு குழந்தை ‘அம்மா பயமாயிருக்கிறது’ என்று வந்து நிற்கிறது. குழந்தையைத் தட்டி உறங்க வைத்துக் கொண்டே தனது பணியைத் தொடர்கிறார்.

மிகச் சாதாரணமாக கடந்துவிடுகிற ஒரு காட்சி தான் என்றாலும் அது ஏற்படுத்துகிற பாதிப்பு அசாதாரணமானது.

அந்தக் குழந்தை பயமாயிருக்கிறது என்று எப்போதும் சொல்வதற்கும் இப்போது சொல்வதற்குமான வேறுபாட்டை ஒரு போலிசாகவும், தாயாகவும் அந்த அதிகாரி உணர்கிற தருணம் அது.

மற்றொரு பெண் அதிகாரி மேம்போக்காகப் பார்க்கையில் இந்த வழக்கை அவர் சாதாரணமாக எடுத்துக் கொண்டிருக்கிறார் என்றே தோன்றச் செய்கிறது. ஆனால் “ஒன்றுக்கும் உதவாத வெறும் ஆதாரங்களை வைத்துக் கொண்டு நாம் என்ன கிழிக்கப்போகிறோம்..?இதற்குள் அவன் வேறு ஏதாவது பெண்ணுக்கு இதை செய்துவிட்டுப்போவான்… நாம் இங்கு உட்காந்து நாசமாய்ப்போன காப்பியையும், செரிக்காத உணவையும் தின்று பேசிக்கொண்டே இருக்கப்போகிறோம்” என்று தன்னை மீறி கோபத்தில் அலுவலகக் கூட்டத்தில் கத்துகிறபோதுதான் எவ்வளவு தூரம் உள்ளுக்குள் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்பதை அறிகிறோம்.

ஒருநாள் இரவு முழுவதும்  காருக்குள் அமர்ந்து உளவு பார்க்கும் போதும் குற்றவாளி என்று நினைத்து ஒருவனிடம் பேசுகையில் அவன் அந்த அதிகாரியின் முகத்தில் எச்சிலை உமிழும்போதும் அவர் கடைபிடிக்கிற பொறுமையும், உறுதியும் பார்க்கிற நமக்குத் துயரமாக இருக்கும். அவரைப் பொறுத்தவரை அது ஒரு குற்றத்தைத் தடுக்க எடுத்த நடவடிக்கையின் ஒருபகுதி. இவையெல்லாம் கட்டுரையில் ஒரு வரியாக சொல்லப்பட்டதை உள்வாங்கி காட்சிப்படுத்தப்பட்டவை.

இந்த இரண்டு காவல் அதிகாரிகளின் உரையாடலிலும் ஒட்டுமொத்த பெண்கள் சந்திக்கும் பிரச்சினை இடம்பெறுகிறது. “இந்தப் பெண்கள் வாழ்நாள் முழுக்க இந்தப் பாலியல் தாக்குதலை சுமந்து கொண்டிருப்பார்கள், முதுகெலும்பில் துளைக்கப்பட்ட குண்டினைப் போல” என்கிறார் ஒரு அதிகாரி.

அப்படித்தான் கடைசியில் அமைகிறது பாதிக்கப்பட்ட பெண்கள் நீதிமன்றத்தில் சொல்லும் வாக்குமூலங்களும். “ஒரே ஒரு நாள் நடந்த சம்பவம் தானே என்று எங்களுக்கு நடந்ததை நீங்கள் நினைத்து விட இயலாது. அந்த ஒருநாள் சம்பவம் எங்களது நம்பிக்கையைக் குலைத்திருக்கிறது, வெறும் நடைபிணமாக வாழ வைத்திருக்கிறது. வீட்டின் பால்கனியில் வந்த நிற்பதற்கான தைரியத்தைக் கூட நாங்கள்  இழந்து நிற்கிறோம். தூக்கம் வராத இரவுகள் தான் எங்களுக்கு கிடைத்திருக்கின்றன” என்று சொல்கிறார்கள். உண்மையிலேயே இந்த வலியை நமக்குக் காட்டுவதற்குத் தான் சுசான்னா இந்தத் தொடரை இயக்கியிருக்கிறார்.

மரியும் கூட கட்டுரையாளர்களிடம் இதனையே தெரிவிக்கிறார். “இந்த சம்பவத்திற்குப் பிறகு நான் கட்டிலில் தூங்குவதை வெறுத்தேன். இரவு முழுவதும் லைட்டை எரியவிட்டு நாற்காலியில் அமர்ந்து தூங்குவதற்குப் பழகிக்கொண்டேன். அருகில் உள்ள கடைக்குப் போகும்போது கூட யாரோ என்னைத் துரத்துவதுபோல் நினைத்து ஓடியே வீட்டுக்கு வந்திருக்கிறேன்” என்றார்.

தங்களுக்கு நேர்ந்த பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள், மிரட்டல்கள் போன்றவற்றை பெண்கள் பொதுவெளியில் சொல்ல முன்வருகிறபோது அவர்கள் எதிர்கொள்கிற கேள்வி “இத்தனை நாட்கள் ஏன் சொல்லாமல் இருந்தீர்கள்?” என்பதுதான். நடந்த ஒன்றை வெளியில் சொல்லாமல் இருந்ததாலேயே நடக்கவே இல்லை என்று அர்த்தமாகி விடுமா? அதனாலேயே குற்றம் சாட்டுபவர் பொய் சொல்கிறார் என்று எடுத்துக் கொள்ளலாமா என்கிற கேள்விகளை கட்டுரையும், திரைக்கதையும் மரியின் தரப்பில் நின்று எழுப்பிக் கொண்டே இருக்கின்றன.

நம்முடனேயே வாழ்க்கையில் பயணிக்கிற பெண்களிடமும் பாலியல் ரீதியிலான தாக்குதல்களும், சுரண்டல்களும் நடைபெற்ற சம்பவங்கள் இருக்கும். நாம் அதைக் கேட்க மறுக்கிறோம், அச்சப்படுகிறோம். மீறி வெளிவந்தால் அதைக் கடக்கவே விரும்புகிறோம். ஏன் இத்தனை நாள் சொல்லவில்லை என்று கேட்கிறோம். சொல்லாததற்கான காரணத்தை பாதிக்கப்பட்டவர்களால்  விளக்க முடியாது என்பதே யதார்த்தம். மரி நமக்கு சொல்வதும் இதையேதான்.

மரி மட்டுமல்ல, இந்த சம்பவங்களினால் பாதிக்கப்பட்ட பெண்கள் யாவருமே விசாரணையின்போது காவல் அதிகாரிகளிடம் தங்களுக்கு நடந்ததைக் கோவையாக சொல்கிறார்கள். நிதானமாக கையாளப் பார்க்கிறார்கள். உடல் பரிசோதனையின் போது திரும்பத்திரும்ப நிர்வாணமாக நிற்கும்போதும் அழுதுவிடக்கூடாது என்கிற கட்டுபாட்டுடன் இருக்கிறார்கள். இது ஒரு விபத்து என்பதை மனதளவில் ஏற்க நினைக்கிறார்கள். இவை அனைத்தையும் செய்த மரி மட்டும் காவல்துறையின் கண்களுக்கு ‘கதைக் கட்டியவளாக’ தெரிகிறாள். இதற்குக்காரணம் இந்த வழக்கை விசாரித்தது ஆண் காவலர்கள் என்பதையும் ஒரு காரணமாக சொல்லியாக வேண்டியிருக்கிறது.

ஏனெனில் மரி தனக்கு நேர்ந்ததை முதற்கட்ட விசாரணையில் சொல்கிறபோது முதலில் வருகிற காவல் அதிகாரி அதை கடமைக்குக் கேட்கிறான். பிறகு வரும் ஒவ்வொருவரும் திரும்பத் திரும்ப அவளிடம் நடந்ததைக் கேட்கும்போதும் அவள் எதையாவது முன்பின் முரணாக சொல்கிறாளா என்கிற ரீதியிலேயே விசாரிக்கிறார்கள். அவள் தவறவிடும் இடங்களைக் கெட்டியாகப் பிடித்து கொள்கிறார்கள். ‘நீ மாற்றி மாற்றி சொல்கிறாய்” என்கிறார்கள். ஆறுமணிநேரம் ஒரு பெண் தொடர்ந்து துப்பாக்கிமுனையில் பாலியல் வன்புணர்வினை அனுபவிக்கையில் அவள் மனநிலை சமநிலையற்றதாகவே இருக்கும் என்பதை அறியாத காவல் அதிகாரிகளாக இருக்கிறார்கள். “ஒவ்வொரு முறையும் விசாரணை என்கிற பெயரில் மீண்டும் மீண்டும் தாக்குதலுக்கு உள்ளாகிக் கொண்டே இருந்தேன்” என்கிற மரியின் வாக்குமூலம் முக்கியமானது.

“இதுபோன்ற பாலியல் தாக்குதல் வழக்குகளில் உள்ள பிரச்சனையே போலியாக குற்றம் சாட்டப்படுவது அல்ல, மாறாக பெண்கள் முன்வந்து தங்களுக்கு நடந்ததை சொல்லாதிருப்பதே காரணம். ஏனெனில் தங்களை காவல்துறையினர் நம்பப்போவதில்லை என்றே பாதிக்கப்பட்ட பெண்கள் நம்புகின்றனர். அதனால் பெண்களுக்கு எதிரான வன்முறை எத்தனை சதவீதம் நடைபெறுகிறது என்கிற புள்ளிவிவரம் நமது எஃப்பிஐடம் இல்லை” என்கிறது கட்டுரை.

முன்னேறிய நாடென்று நாம் சொல்லுகிற அமெரிக்காவில் இந்த நிலை என்றால் மற்ற தேசங்களின் பெண்கள் நிலை என்னவாக இருக்கும் என்கிற இயல்பான கேள்வி எழுகிறது.

விருது பெற்ற கட்டுரையில் இந்தத் தகவல்களும் வரிகளும் எங்கு சேர்க்கப்பட்டிருக்கின்றன என்பது முக்கியமானது. மரி போலியான குற்றச்சாட்டை சொல்லியிருக்கிறாள் என்று காவல்துறை அதிகாரிகள் வழக்கை மூடுமிடத்தில் இந்தத் தகவல்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றன.

குற்றவாளியைப் பிடித்த பெண் அதிகாரி பின்னாட்களில் பத்திரிகையில் இப்படி பேட்டி அளித்திருந்தார், “அவனது முகத்தைப் பார்க்க வேண்டும் என்று காத்திருந்தேன், அவன் கண்களை சந்திக்க வேண்டும் என்ற ஒற்றை நோக்கமே என்னை செலுத்தியது” என்றிருந்தார். குற்றவாளியை பெண் அதிகாரி பிடித்து விலங்கிடும் காட்சியில் எந்த துரிதமும் இன்றி நிதானமாக காட்சியைத் தந்திருந்தார் சுசான்னா.

திரைக்கதையை அவர் அமைத்த விதமே யாராலும் நம்பப்படாத மரியை இந்த இரண்டு விசாரணை அதிகாரிகளும் சந்திக்க மாட்டார்களா என்று நினைக்க வைத்துவிடுகிறது. ஏனெனில் ஒருபக்கம் மரி தன்னை நம்புபவர்கள் யாரேனும் இருக்க வேண்டுமே என்று பதைபதைப்பதும், வேறு யாரும் இது போன்று பாதிக்கப்பட்டிருக்கிறார்களா என்று விசாரணை அதிகாரிகள் தேடுவதும் திரைக்கதையில் காட்டப்பட்டுக் கொண்டே இருக்கிறது.

குற்றவாளிக்கு அமெரிக்க நீதிமன்றம் 327 ½ ஆண்டுகள் சிறையில் இருக்குமாறு உத்தரவிட்டது. இப்போது அவன் சிறையில் இருக்கிறான். வெளியுலகத்தை அவன் இனி வாழ்நாளில் பார்க்க முடியாது.  பிடிபட்டதும் அவனிடம் விசாரணை நடத்தப்பட்டது. “முதன் முதலாக வீடு ஏறிக் குதித்து இப்படி செய்கிறபோதே நான் பிடிபட்டுவிடுவேன் என்று நினைத்தேன். ஆனால் போலிஸ் என்னைத் தேடி வரவில்லை. பிறகு முன்னிலும் துல்லியமாக திட்டம் போட்டேன். தனிமையில் இருக்கும் பெண்களாகத் தேர்ந்தெடுப்பேன், அவர்களை கண்காணிப்பேன், மரங்கள் அடர்ந்த பகுதியில் அவர்கள் அபார்ட்மென்ட் இருக்க வேண்டும், இரவு ஜன்னலை மூடாதவர்களாக இருக்க வேண்டும், வெவ்வேறு மாகணங்களில் இருந்தால் போலிஸ் கண்டுபிடிக்காது. தனித் தனி வழக்காகத்தான் பார்க்கும். டிஎன்ஏ மூலமாக கண்டுபிடித்துவிடக்கூடாது என்பதற்காக எந்தப் பொருளையும் நான் தொட மாட்டேன், பெண்களையும் அரைமணிநேரம் குளிக்க வேண்டும் என்று வற்புறுத்துவேன். அப்போது தான் அவர்களிடமிருக்கும் எனது டிஎன்ஏ மறைந்துபோகும். அவர்களிடம் நான் மோசமாகவெல்லாம் நடந்து கொள்ளவில்லை. நாகரீகமாகத்தான் பேசுவேன்” என்றிருந்தான்.

இது போன்ற குற்றங்களைத் திட்டமிட்டு ஒரு சாகசமாக நினைத்து, அதன் மூலம் தன் ஆண்மையைத் தனக்குத் தானே நிரூபித்துக் கொள்ள முற்படுபவர்களின் பதில் இது. அவன் அளித்த மற்றொரு பதிலையும் கவனிக்க வேண்டும்.


“ஒவ்வொரு முறையும் குற்றத்தை செய்து முடிக்கையில் எப்படித் தோன்றும்” என்கிற விசாரண அதிகாரியின் கேள்விக்கு அவன் அளித்த பதில், “நன்றி நவிலுதல் விருந்தில் (Thanksgiving feast)
கலந்து கொண்டது போன்ற உணர்வை அடைவேன்” என்றிருக்கிறான் நிதானமாகவும், புன்சிரிப்புடனும்.

குற்றவாளி பிடிபட்ட பின் அவன் வீட்டில் இருந்து எடுக்கப்பட்ட ஹார்ட் ட்ரைவினை ஸ்டேசி பார்க்கையில் அதிர்ந்து போகிறாள். அவன் ஒவ்வொரு பெண்ணையும் துன்புறுத்தி எடுத்த புகைப்படங்கள் அதில் இருக்கின்றன. அந்தப் புகைப்படங்களை எல்லாம் நமக்குக் காட்டாமல் ஸ்டேசியின் முகத்தில் தெரியும் அதிர்வைக் கொண்டு சொல்லியிருக்கிறார் சுசான்னா. அதில் தான் மரியைக் கண்டுபிடிக்கிறார் ஸ்டேசி. ‘யார் இந்தப் பெண்? இவள் பாதிக்கப்பட்டிருப்பது நமது கவனத்துக்கு எப்படி வராமல் போனது என்று மரியைத் தேடுகிறார். அப்போது தான் மரியைப் பற்றியும், அவள் சொன்னதை காவல்துறை நம்பாமல் அவனைக் கைவிட்டதையும் அறிகிறாள். மரியைக் கண்டுபிடித்து உனக்கு நடந்ததை நான் நம்புகிறேன் என்று சொல்ல வேண்டுமாய் ஸ்டேசி முயற்சி செய்கிறாள்.

குற்றவாளி தனது வாக்குமூலமாக சொன்னதை முன்வைத்து கட்டுரையையும், தொடரையும் முடித்திருக்கலாம். ஆனால் அப்படிச் செய்யவில்லை. மரியின் பார்வையில் முடிக்க வேண்டும் என்று தான் இரண்டும் விரும்பியிருக்கின்றன. தனக்கு பாலியல் வன்புணர்வு நிகழ்ந்ததாகக் கட்டுக்கதை போல மரி சொன்னதாக  நீதிமன்றம் அவளுக்கு ஒருவருட ஜெயில் தண்டனை அல்லது அபராதம் கட்ட வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கிறது. வளர்ப்பு அம்மாக்கள், நண்பர்கள், வீட்டின் உரிமையாளர் என எல்லோருமே கவன ஈர்ப்புகாக மரி அப்படி செய்திருக்கிறாள் என்று அவளை கைவிடுகிறார்கள். ஓடி ஓடி ஒளிந்து கொண்டு வாழ்ந்த மரியை கண்டுபிடித்து ஸ்டேசி தொலைபேசியில் அழைத்து “உன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்திய குற்றவாளியைப் பிடித்துவிட்டோம்” என்று சொல்கையில் வெடித்து அழுகிறார் மரி. மிக அற்புதமான காட்சி இது. உள்ளுக்குள் உடைந்து நொந்து போயிருக்கும் ஒருவருக்கு நம்பிக்கைக் கொடுப்பது வெறும் வார்த்தைகள் அல்ல, அவரை நம்ப ஒருவர் இருக்கிறார் என்பதுதான். இதைத்தான் ஸ்டேசி செய்திருக்கிறார்.

குற்றவாளியின் புகைப்படம் அவனுடைய விவரங்கள் எல்லாமே கட்டுரையில் உள்ளன. தொடர் அதை அதிகம் வெளிக்காட்டவில்லை. நீதிமன்றத்துக்கு குற்றவாளியை அழைத்து வரும்போது அவனால் பாதிக்கப்பட்ட பெண்களில் சிலர் நீதிமன்றத்துக்கு வருகிறார்கள். அவர்களுக்குள் இருக்கும் நடுக்கமும் அவன் முகத்தைப் பார்க்கப்போகிற பதற்றமும் ஒவ்வாமையும் கொண்டு நிற்கிறார்கள். அந்த சம்பவத்துக்கு முன் இருந்த ஒரு வாழ்க்கை தங்களுக்குக் கிடைக்காதா என்று நினைக்கிறார்கள். அவர்களின் மனநிலையைத் தான் சுசான்னா திரும்பத் திரும்பத் தன் திரைக்கதையில் கொண்டு வருகிறார். அவர்கள் பேசும் உரையாடல்கள் மிக முக்கியத்துவம் வாய்ந்தவை. விருந்து உண்டதைப் போல பெண்களை பலாத்காரம் செய்வேன் என்று சொல்கிற குற்றவாளியின் பதிலை உள்வாங்கி மீண்டுமொரு முறை தொடரைப் பார்க்க வேண்டும். அப்போது நாம் அந்த பெண் அதிகாரிகளாகவோ, பாதிக்கப்பட்ட பெண்களாகவோ மாறுவதை உணர முடியும்.

இந்தத் தொடரும், செய்திக்கட்டுரையும் நம்மிடம் வேண்டுவதும் அதையே தான்.

Author Image

ஜா.தீபா

எழுத்தாளர். ‘மேதைகளின் குரல்கள்’ ‘கறுப்புத் திரை’ போன்ற திரைப்படம் சார்ந்த புத்தகங்களையும், “நீலம் பூக்கும் திருமடம்’, ‘மறைமுகம்’ சிறுகதைத் தொகுப்பும் கவனம் பெற்றவை. தொலைகாட்சித் தொடர்களுக்கு திரைக்கதைகள் எழுதி வருகிறார்.

About The Author

The Talkie

The Talkie

See author's posts

Next Post
Antony Hopkins

ஆந்தனி ஹாப்கின்ஸ் நேர்காணல் 

Please login to join discussion

Archives

  • Trending
  • Comments
  • Latest
Thug_Life_

Thug Life – ஒரு பார்வை

June 6, 2025
AMADEUS திரைக்கதை

AMADEUS திரைக்கதை

March 15, 2025
start camera

ஸ்டார்ட் கேமரா! வின்சென்ட் மாஸ்டர் – 01

March 19, 2025
Irunda-Pakkam

தொழில்நுட்பத்தின் இருண்ட பக்கங்கள்: திரைப்படங்கள் சொல்லும் உண்மை.

March 16, 2025
Thug_Life_

Thug Life – ஒரு பார்வை

11
rasigamagajanangale

ரசிக மகா ஜனங்களே

7
gurudutt-02

குருதத்தின் ப்யாஸா- உயிர்த்தெழுந்த தேவதை        

5
start camera

ஸ்டார்ட் கேமரா! வின்சென்ட் மாஸ்டர் – 01

4
table top-4-5

டேபிள் டாப் 04 & 05

January 24, 2026
bella darr

பேலா டார் – காட்சியை அனுமதித்தவர்

January 24, 2026
trend-kottaiye-11

ட்ரெண்டு கொட்டாய் 11 -நான் (திரை) காவிய நாயகன்

January 24, 2026
table top-3

டேபிள் டாப் 03

January 24, 2026
The Talkie

சினிமா அற்புதமான ஊடகம். இதனை அறிந்து கொள்ளவும், ரசிக்கவும் உருவாக்கப்பட்டிருக்கிற இணைய இதழ் இது. மேதைகளின் நேர்காணல்கள், திரைக்கதைகள், வெவ்வேறு மொழித் திரைப்படங்கள், ஆளுமைகள், திரைப்படப் புத்தகங்கள் , சினிமா ரசனை என சினிமா உலகத்தோடு இணைந்திட எங்களுடன் இணைந்திடுங்கள்.

Categories

  • I CALL THE SHOTS
  • ஆளுமைகள்
  • இந்தியத் திரைப்படங்கள்
  • உரையாடல்
  • உலகத் திரைப்படங்கள்
  • ஓடிடி திரை
  • கட்டுரைகள்
  • குரு தத் 100
  • டேபிள் டாப்
  • ட்ரெண்டு கொட்டாய்
  • தமிழ்த் திரைப்படங்கள்
  • திரை புத்தகம்
  • திரைக்கதைகள்
  • தொடர்கள்
  • ஸ்டார்ட் கேமரா

Site Navigation

  • About Us
  • Terms and Conditions
  • Privacy Policy
  • Returns and Cancellation
  • Shipping Policy
  • FAQ
table top-4-5

டேபிள் டாப் 04 & 05

January 24, 2026
bella darr

பேலா டார் – காட்சியை அனுமதித்தவர்

January 24, 2026
trend-kottaiye-11

ட்ரெண்டு கொட்டாய் 11 -நான் (திரை) காவிய நாயகன்

January 24, 2026

© 2026 Thetalkie - All rights reserved

Welcome Back!

Sign In with Google
OR

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Sign Up with Google
OR

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • thetalkie
  • ஆளுமைகள்
  • திரைக்கதைகள்
  • உரையாடல்
  • கட்டுரைகள்
    • இந்தியத் திரைப்படங்கள்
    • உலகத் திரைப்படங்கள்
    • தமிழ்த் திரைப்படங்கள்
    • ஓடிடி திரை
  • தொடர்கள்
    • ட்ரெண்டு கொட்டாய்
    • திரை புத்தகம்
    • ஸ்டார்ட் கேமரா
    • I CALL THE SHOTS
    • குரு தத் 100
    • டேபிள் டாப்
  • தொடர்பு
  • Login
  • Sign Up
  • Cart

© 2026 Thetalkie - All rights reserved

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?