ரமேஷ் வைத்யா
‘இந்தப் பாட்டை ஹெட் செட் போட்டுக் கேளுங்கள். அப்போதுதான் நன்றாக இருக்கும்’ என்று ஸ்ம்யூல் எழவில் பாடுபவர்களே சொல்லும் காலம் இது.
நாங்கல்லாம் மோனோவுல பாட்டுக் கேட்டே மோஸ்ட் வான்டட் ஆனவங்க்யெ. ‘டீட்டியெஸ் எக்ஸ்பீரியன்ஸ்’ என்ற வார்த்தைகளும், ‘தியேட்டரிக்கல் மொமென்ட்ஸ்’ என்கிற சொல்லாடல்களும் இப்போது நம்மைச் சுற்றி வருகின்றன.
தியேட்டருக்கென்ன, கொட்டாய்க்கே போகாமல் படம் பார்த்தவர்கள் நாங்கள். அதுவும் சினிமா எக்ஸ்பீரியன்ஸ் கொடுக்கத் தவறவில்லை. அது மட்டுமல்ல, பேரனுபவமாகவும் திகழ்ந்தது. நம் தெருவில், நம் வீட்டுத் திண்ணையிலேயே உட்கார்ந்து படம் பார்க்கும் ஆனந்த அனுபவம் அது.
பெரியகுளத்தில் மாரியம்மன் திருவிழா பிரசித்தம். பத்து நாள் நடக்கும். இப்போது யோசித்தால் பெரியதாக ஒன்றுமில்லை, பத்து இரவுகள் தெருக்களில் சாமி சிலையைத் தூக்கிக்கொண்டு ஊர்வலம் விடுவார்கள். கரகம், கும்மி, மயில், ஒயில் போன்ற நாட்டாட்டங்கள் நடக்கும்.
கோயில் வீதிகளில் ஏராளம் கடைகள் வரும். ‘எதையெடுத்தாலும் ஒன்னர்ரூவா’ விளையாட்டுப் பொருட்கள், கலர் கலர் சர்பத், பீம புஷ்டி ஹல்வா. எல்லாவற்றையும் தூக்கிச் சாப்பிடுவது அசல் மலபார் பீடிக் கம்பேனி போடும் சினிமா!
மாலை மயங்கும் இருளத் தொடங்கும். மலபார் பீடி விளம்பரம் போட்ட வேன் வந்து தெருவில் நிற்கும். உற்சவம் தொடங்கும். முப்பத்தஞ்சு எம்எம் வெள்ளைத் திரையை நடு வீதியில் கட்ட இடம் தேடுவார்கள். பொதுவாக விரட்டியடிக்கும் பொதுஜனங்கள், தத்தம் வீட்டு முன்னால் போடும்படி சிரித்துக் கெஞ்சுவார்கள்.
பெரிய முக்காலி வேனிலிருந்து வெளியே வரும். அப்புறம் வரும் அட்டகாசமான உபகரணம்தான் ப்ரொஜக்டர்.
இந்த நேரத்தில் தெருவில் ஜனத்தொகை நான்கு மடங்கு ஆகியிருக்கும். அந்நியர்களிடம் எங்கள் பிரதேச உரிமையை நிலைநாட்டும் வாக்குவாதங்களும், கொஞ்சம் இடம் கொடுக்கும் கருணைச் செயல்பாடுகளும் நடக்கும். இருட்டிய முகூர்த்தத்தில் வெள்ளித் திரையில் சினிமாக் கதிர் பீய்ச்சி அடிக்கும். ப்ரொஜக்டர் சுழலும் ‘டர்ர்றக் டர்ர்றக்’ சத்தத்தை ‘ஹூ’ என்கிற சத்தம் அமுக்கும். உசிலை மணி ஓடி வந்து ஒரு கல்லில் உட்கார்ந்து பீடி பற்ற வைப்பார். ஆனந்தமாக உறிஞ்சி ஊதுவார். வெள்ளைப் புகை பழுப்பான வெள்ளைத் திரையில் ஹெச்டிஆர் தொழில்நுட்பத்தில் போலத் துலங்கும். ‘அசலான இன்பத்துக்கு அசல் மலபார் பீடி’ என்று அடித்தொண்டையில் உசிலை சொல்ல எங்கள் எல்லோருக்கும் பரமானந்தம் சிரிப்பாக வெளிப்படும். ரெண்டு ரவுண்டு விளம்பரத்துக்குப் பிறகு எதிர்பார்த்த அந்தச் சம்பவம் திரையில் அரங்கேறும்.
தொப்பி வைத்த ஜெய்சங்கர், மரு ஒட்டிய மேஜர் சுந்தர்ராஜன் முகங்கள் திரையை அடைத்துக் கறுப்பு வெள்ளையில் குலுங்கும். ஏண்டா இப்பிடி ஆடுது என்று ப்ரொஜக்டர் இருக்கும் திசையைப் பார்த்தால், பிரச்னை எதுவுமில்லை. அவர்கள் குதிரையில் சவாரி செய்கிறார்கள். மந்தகாசப் புன்னகையோடு ஜெய்சங்கர். ஹீரோவாயிருக்கும். கடும் சீற்றத்துடன் மேஜர். வில்லன். எப்படி கேரக்டர் அறிமுகம் பார்த்தீர்களா? அப்போது கடல் அலையென கைதட்டலும் உற்சாகக் கூக்குரலும் எழும். ஜெய்சங்கருக்கு அல்ல, மேஜர் சுந்தர்ராஜனுக்கு. ஆச்சரியப்படாதீர்கள்… மேஜர் பெரியகுளத்துக்காரர். இடையர் தெருவில் இருந்து வடக்கு அக்ரஹாரத்துக்கு நழுவும் இடத்தில் அவர் வீடு. இதற்கு முந்தி தியேட்டர் சினிமாக்களில் அவரைப் பார்த்து எனக்கு அடையாளம் தெரியும். ஒரு நாள் நான் அந்தப் பக்கமாகப் போய்க்கொண்டு இருந்தபோது, ‘தம்பி இங்க வா’ என்று அழைத்து, பத்து ரூபாய்த் தாள் நீட்டி, ‘ட்ரிப்ள் ஃபைவ் சிகரெட் பாக்கெட் வாங்கிட்டு வா’ என்று மொழிபெயர்க்காமல் சொன்னார். அதே பெரியகுளத்தின் ஏனைய நட்சத்திரங்களான எஸ்எஸ் ராஜேந்திரன், சுருளிராஜன் ஆகியோருக்கும் சிகரெட் பாக்கெட் வாங்கிக்கொடுக்க வேண்டும் என்கிற லட்சியத்தோடு கடைக்குச் சேவை போனேன். மேஜரது நம்பிக்கையைப் பாராட்டும் விதமாக முறையாக வாங்கிச் சென்று கொடுத்தேன்.
அந்த மேஜரும் ஜெய்யும் மாறி மாறி சவாரி செய்ய, ‘கங்கா’ என்கிற பெரிய எழுத்துகள் திரையில் தோன்ற, அதுதான் அந்தப் படத்தின் பெயர்.
நீண்ட கடற்கரையின் அகன்ற மணற்பரப்பில் குதிரை சேஸ். வெவ்வேறு நிலங்களில் துரத்தல் தொடர்கிறது. ஓட்டத்தின் மேலே எழுத்து (டைட்டில்) ஓடுகிறது. இயக்கம் எம். கர்ணன் என்று வர, விஷயம் தெரிந்த பெரிசுகள் உற்சாகக் கை தட்ட, அடுத்த விநாடியே நேராக விஷயத்துக்கு வந்துவிடுகிறது படம். ஜெய்க்கும் மேஜருக்கும் அடிதடிச் சண்டை. கட்டிப்போடப்பட்ட ஏகப்பட்ட குதிரைகள் அலைக்கழிந்து கனைத்து ஒதுங்க பலப்பல மூட்டைகளுக்கும் (எதற்காக அந்த மூட்டைகள்?) வைக்கோல் பரப்புக்கும் (குதிரைகள் வைக்கோல் தின்னும் போல) நடுவே உக்கிரமான (ஆனாலும் தொப்பிகள் கழலவில்லை) இரு மனிதப் போர். ஒருவருக்கொருவர் முகத்தில் அறைவதே சண்டை. மீறிப்போனால் முகக் குத்து. குதிரைகளால் உக்கிரம் கைகூடி வரவில்லை என்று கருதப்பட்டபோது நூற்றுக்கணக்கான மாடுகள் இந்த இருவர் சண்டைக்கும் இடையில் தவித்து ஓடுகின்றன. நடுவில் ஓர் அம்மாள் பதைப்போடு இந்தச் சண்டையைப் பார்க்கிறார். 4:11 நிமிட நேர சண்டை விருந்தின் ஏகதேச முடிவில் ஜெய்சங்கர் தோற்று வீழ, எங்கூர்க்கார மேஜர் பாக்ஸிங் ஸ்டெப் எடுத்து நிற்கிறார். கரகோஷம். இப்போது எங்கள் ஊரே எதிர்பாராத ஒரு சம்பவம் நடந்தது. திரையில்தான். அந்த அம்மாள் தான் போர்த்தியிருக்கும் சால்வையின் தலைப்பால் ஜெய்சங்கரின் முகத்தை ஒற்றி ஒற்றித் துடைக்க, மேஜரார் மந்தகாசப் புன்னகை புரிந்து நிற்க, அந்த அம்மாள் வசனம்: “ஒரு தகப்பன் தன் பிள்ளைக்குச் சொல்லித் தர வேண்டியது எவ்வளவோ இருக்கு. அதையெல்லாம் விட்டுட்டு அடி உதைன்னு தினம் அவனுக்கு சண்டையைப் பத்தியே சொல்லிக்குடுத்துக்கிட்டு இருக்கீங்களே… இது கொஞ்சம் கூட நல்லா இல்லீங்க.” அடப்பாவிகளா… அப்பனும் பிள்ளையுமா?!
அதற்கு மேஜர் சொல்லும் பதில் வசனமும் வியக்கத்தக்கதே. “காமாட்சீ, நான் ஒரு பெரிய கொள்ளைக்காரனா இருந்தவன்னு உனக்குத் தெரியுமில்ல. அது மாத்திரமில்ல, பல கொலைகளைச் செஞ்சு பல குடும்பங்களை அழிச்சவன்டி நான். எனக்குன்னு ஒரு மனைவி குழந்தைன்னு ஏற்பட்டதுக்கு அப்பறம்தான் மத்தவங்க மனைவி மக்களைக் கொல்றது எவ்வளவு பெரிய பாவம்னு தெரிஞ்சுக்கிட்டேன்.”
மனைவி என்னும் போது அந்தப் பெண்ணையும் குழந்தை என்னும் போது ஜெய்சங்கரையும் காட்டத் தவறவில்லை மேஜர். பழைய கொள்ளைக் கூட்டத்தைச் சேர்ந்த முந்நாள் நண்பர்களும் இந்நாள் விரோதிகளுமான நபர்களால் வரவிருக்கும் ஆபத்திலிருந்து தற்காத்துக்கொள்வதற்காகத்தான் தன் மகனுக்கு வீரத்தைச் சொல்லித் தருகிறார் தகப்பனார். எதை நோக்கிக் கதை போகும் என்று கோடி காட்டியாயிற்று. ‘படம்னா இப்பிடி இருக்கணும்யா…’ என்று பெரிசுகள் நிமிர்ந்து உட்கார்கையில், ‘அசலான இன்பத்துக்கு அசல் மலபார் பீடி’ உசிலைமணி.
விளம்பர இடைவேளை மாத்திரமல்ல இடையீடு. ப்ரொஜெக்டரில் ஃபிலிம் ரீல் மாற்றுவதும் ஓர் இடைவேளை. இதுவே சினிமாக் கொட்டகையாக இருந்தால் முறுக்கு கடலை மிட்டாய் விற்றிருப்பார்கள். இது நடுத் தெரு என்பதால் அவரவர் வீடுகளிலிருந்து வசதிக்குத் தக்க நொறுக்குத் தீனி ஏதேனும் சப்ளை ஆகும். அதற்குக் கலைந்து கூடுவதில் ஒரு சிறு கரைச்சல். படம் ஓடத் தொடங்கியதும், இன்னும் செட்டில் ஆகாதவர்களின் சேட்டை ஆரம்பிக்கும். நாமளும் சினிமாவில் நடிக்கலாம் என்கிற குயுக்தி உதிக்கும். ப்ரொஜக்டரிலிருந்து திரைக்குப் போகும் ஒளிக்கற்றையில் கையைக் காட்டுவார்கள். அந்தக் கை இப்போது சினிமாவில் நடித்துவிட்டது. கட்டை விரலை உயர்த்தி ஆள்காட்டி விரலை மடக்கிக்கொண்டு, சுண்டுவிரலை மட்டும் பிரித்துப் பிரித்துச் சேர்த்தால் திரையில் நிழல் நாய் குரைக்கும். ஒரு பையன் படி மேலே போனான். இன்னொருவனைக் குனியச் சொல்லி மேலே ஏறி புட்ட பாகத்தை ஆட்டிக் காட்டினான். சண்டைப் படங்களுக்குத் தோதான கவர்ச்சி நடனமா என்று பெரிய சர்ச்சை.
இந்தக் காட்சிகளில் வரும் விநோத உடை அமைப்பை நாங்கள் அப்போதுதான் பார்க்கிறோம். ஏன் தொப்பியும் தோல் ஆடைகளும் துப்பாக்கிகளும் என்றே தெரியவில்லை. விவரஸ்தர்களிடம் பேசியபோதுதான் இது பசுப்பயல் வகைப்பட்ட படம் என்று தெரிந்துகொள்ள முடிந்தது.
அசல் மலபார் பீடி கம்பெனியின் சினிமாவுக்காகக் காத்திருக்க ஆரம்பித்தோம். அவர்கள் அடுத்த ஆண்டு கொண்டுவந்த படம் ஜக்கம்மா. அதே எம். கர்ணன், அதே ஜெய்சங்கர், அதே தொப்பி. அதே தோலாடைகள், அதே வெளிப்பிரதேச இசை. ஆனால் ஒரு விசித்திரத்துக்கு விசிலடித்தோம். நடிகர்கள் பட்டியலில் குதிரைகளின் பெயர்களை எல்லாம் போட்டார்கள். மாக்ஸ், மங்கோலி என்று தொடங்கி ஜக்கம்மா என்று முடிந்த ஞாபகம். இதுவும் பசுப்பயல் படம்தான். ஆனால் உள்ளத்தை உருக்கும் உணர்ச்சிக் காட்சிகளை விட்டுக்கொடுக்க வேண்டாம் என்று இயக்குநர் எடுத்த முடிவு தெரிந்தது. இரண்டு குழப்பங்களைப் பற்றிப் பெரியவர்கள் பேசிக்கொண்டார்கள். டைரக்ஷன் சிஎம் கர்ணன் என்று போட்டிருந்ததே அது எம் கர்ணனா வேறு ஆளா என்பது ஒன்று. இசை எஸ்எம்எஸ் என்று காட்டினார்களே அது எஸ்எம் சுப்பையா நாயுடு தானா, இப்படிப்பட்ட படத்துக்கெல்லாம் என் ஒரிஜினல் பெயர் வேண்டாம் என்று இப்படிப் போட்டுக்கொண்டாரா? என்பது அடுத்தது.
எப்படியாக இருந்தாலும் என்னைப் போன்ற பையன்களுக்குப் பசுப்பயல் படங்களின் மேல் பேரார்வத்தை இந்தப் படங்கள் தூண்டிவிட்டன. கர்ணனின் மற்ற படங்களுக்கும் உற்சாகமாய்ப் படையெடுத்தோம். இடையிலேயே கலர் ஃபிலிம் காலமும் வந்துற்றது. இரட்டைக் குழல் துப்பாக்கி, எங்க பாட்டன் சொத்து என்றெல்லாம் அந்நிய தேச ஃபீலிங்கில் வாழ்ந்தோம். வறண்ட நிலப்பகுதிகள், கேள்வி கேட்பாரின்றிச் சுடும் துப்பாக்கிகள், க்ளப் டான்ஸுகள், குதிரையின் அடிவயிற்றுக்குக் கீழ் பின் தொடரும் கேமராக் கோணங்கள், சவுக்கடிகள்… எல்லாவற்றுக்கும் மேலாக ஹீரோயின்கள்!
ஜம்பு படம் வந்தபோது ‘ஹீரோயின் ஜெயமாலாவுக்காகப் போகிறோம்’ என்று சொல்லுமளவுக்கு எங்கள் மேலுதட்டில் கருமை படரத் தொடங்கிவிட்டிருந்தது. டைரக்டர் கர்ணனுக்கு எல்லாப் படங்களுக்கும் யூ சர்ட்டிஃபிகேட் தான் கிடைக்கும். ஆனால், பெண்களோ சிறுவர்களோ பகிரங்கமாகப் பார்க்க முடியாது. நான் ஜம்பு பார்க்கப் போயிருந்தபோது நாலாம் வீட்டுக்காரனான ஸ்டெயில் மணி பார்த்துவிட்டான். வீட்டில் சொல்வேன் என்று மிரட்டினான். ஒனக்கே பதினெட்டு வயசு ஆகலையேடா என்பதைச் சொல்லும் துணிவு எனக்கு வரவில்லை. சண்டைக் காட்சிகளுக்காகத்தான் வந்ததாக அவனிடம் சத்தியம் செய்தேன்.
எல்லாமாகச் சேர்ந்து மனதிலேயே வித்தியாசமான உணர்வாக அந்த கௌபாய்ப் படங்கள் தங்கிவிட்டன.
ரொம்ப காலத்துக்கு நீண்ட இடைவெளிக்குப் பிறகு இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் வந்தது. ஜெய்சங்கர்புரம், செவ்விந்தியர்கள், க்லின்ட் ஈஸ்ட்வுட் என்கிற கிழக்குக்கட்டை, தொப்பி, குதிரை, துப்பாக்கிச் சுழற்றல், செம்மை பாய்ந்த நிலப்பரப்பு எல்லாம் பார்த்தபோது, பால்ய நினைவு வந்தது. இயக்குநர் சிம்புதேவனை மனம் அணைத்துக்கொண்டது.
தொடரும்…











