The Talkie
Thursday, April 9, 2026
  • Login
  • Register
  • thetalkie
  • ஆளுமைகள்
  • திரைக்கதைகள்
  • உரையாடல்
  • கட்டுரைகள்
    • இந்தியத் திரைப்படங்கள்
    • உலகத் திரைப்படங்கள்
    • தமிழ்த் திரைப்படங்கள்
    • ஓடிடி திரை
  • தொடர்கள்
    • ட்ரெண்டு கொட்டாய்
    • திரை புத்தகம்
    • ஸ்டார்ட் கேமரா
    • I CALL THE SHOTS
    • குரு தத் 100
    • டேபிள் டாப்
  • தொடர்பு
No Result
View All Result
The Talkie
  • thetalkie
  • ஆளுமைகள்
  • திரைக்கதைகள்
  • உரையாடல்
  • கட்டுரைகள்
    • இந்தியத் திரைப்படங்கள்
    • உலகத் திரைப்படங்கள்
    • தமிழ்த் திரைப்படங்கள்
    • ஓடிடி திரை
  • தொடர்கள்
    • ட்ரெண்டு கொட்டாய்
    • திரை புத்தகம்
    • ஸ்டார்ட் கேமரா
    • I CALL THE SHOTS
    • குரு தத் 100
    • டேபிள் டாப்
  • தொடர்பு
No Result
View All Result
The Talkie
Subscribe
Home கட்டுரைகள் உலகத் திரைப்படங்கள்

The Conclave  கதை to திரைக்கதை 

The Talkie by The Talkie
August 25, 2025
in உலகத் திரைப்படங்கள், கட்டுரைகள்
A A
0
the conclave
Share on WhatsappShare on FacebookShare on Twitter

Author Icon ஜா.தீபா

The Conclave என்கிற நாவலை 2016 ஆம் ஆண்டு ராபர்ட் ஹாரிஸ் எழுதினார். நாவலாக வெளிவந்தபோதே பாராட்டுதல்களையும் முணுமுணுப்புகளையும் பெற்றிருந்தது. திரைப்படமாக வெளிவரவிருக்கிறது என்றதும் மிகுந்த எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியிருந்தது.

இந்த வருடத்தின் சிறந்த தழுவல் திரைக்கதைக்கான ஆஸ்கர் விருதைப் பெற்றிருந்தது இந்தப் படம். இதற்குத் திரைக்கதை எழுதியவர் பீட்டர் ஸ்ட்ராகன்.  எட்வர்ட் பெர்கர் இயக்கியிருக்கிறார்.

ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் தலைமையான போப்புக்கு அரசியல் மற்றும் திருச்சபையின் முடிவுகள், மாற்றங்களில் வானளாவிய அதிகாரம் உண்டு. கோடிக்கணக்கான கத்தோலிக்க மக்களின் மத நம்பிக்கையைப் பெற்ற ஒரு மையம் அது. தேர்தல் மூலமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டாலும் இறைவனின் ஆசிர்வாதத்தினால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதி என்கிற நம்பிக்கை இருப்பதாலேயே போப்பிற்கு மிகுந்த மதிப்பு ஏற்பட்டிருக்கிறது.

போப்பாக நியமிக்கப்பட்ட ஒருவரின் வாழ்நாள் முடிவுக்கு வந்ததும், அடுத்த போப் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒவ்வொரு நாட்டிலும் ரோமன் கத்தோலிக்கர்களின் பிரதிநிதியான கார்டினல்கள் ரோம் நகரத்தில் ஒன்று கூடுவார்கள். அவர்கள் பெரும்பான்மையாக யாரைத் தேர்ந்தெடுக்கிறார்களோ அவரே போப்பாக அறிவிக்கப்படுவார். இது அடிப்படையான நடைமுறை.

போப் ஒருவர் இறந்துபோனால், அதை முதலில் யாருக்குச் சொல்வது, அடுத்து என்ன செய்ய வேண்டும், மக்களுக்கு எப்படித் தெரிவிப்பது போன்ற நடைமுறைகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. அடுத்த போப்பினை உடனடியாகத் தேர்ந்தெடுப்பதற்காக conclave ஐ ஏற்பாடு செய்வது, அதன் நடைமுறையை முன்னின்று மேற்பார்வை செய்வது எல்லாம் கார்டினல் காலேஜின் டீன் பொறுப்பில் இருப்பவர் மேற்பார்வையில் மட்டுமே நடைபெறும்.

அவர் தான் தேர்தல் அதிகாரி. இந்த அடிப்படை எல்லாம் தெரியாத ஒருவர் ராபர்ட் ஹாரிஸ் எழுதிய நாவலைப் படிக்கிறபோது மிகத் தெளிவாக புரிந்து கொள்ள முடிவது அவருடைய எழுத்தின் பலம்.

இந்த நாவலில் அந்த டீனின் பெயர் தாமஸ் லாரன்ஸ். தாமஸ் அந்தப் பொறுப்பை ஏற்கும்போதே அவருக்கு சவால்கள் காத்திருக்கின்றன.
உலகம் முழுவதும் போப்பினால் நியமிக்கப்பட்ட கார்டினல்கள் வரவழைக்கப்படுகிறார்கள். இந்த நாவலில் 119 பேர். இவர்கள் அனைவரையும் ஓரிடத்தில் தங்க வைக்கிறார்கள். அவர்கள் ரோமுக்குள் இருக்கும் புனித பீட்டர்ஸ் சர்ச் வளாகத்திற்கு வந்தபிறகு அவர்களின் அத்தனை வெளியுலக தொடர்புகளும் துண்டிக்கப்படுகின்றன.

மொபைல் மற்றும் எலெக்ட்ரானிக் சாதனங்களுக்கு அனுமதி இல்லை. தொலைக்காட்சி, இணையம் போன்றவற்றுக்குத் தடை இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால், அவர்கள் தங்கியிருக்கும் அறையில் இருந்து வெளியில் பார்க்க முடியாதவாறு ஜன்னல்கள் அடைக்கப்படுகின்றன.வெளியுலக செய்திகள் கார்டினல்களை பாதிக்கக் கூடாது என்பதற்கான ஏற்பாடு இது. 

போப்பைத் தேர்ந்தெடுப்பது வரை அவர்கள் தொடர் பிரார்த்தனையில் ஈடுபட்டு, தேவ செய்தி கிடைக்கப்பெற்று அதில் இருந்து போப்பைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது விதிமுறை.
ஆனால, இப்படித்தான் நடக்கிறதா என்பதைத்தான் நாவலும் திரைப்படமும் சொல்கிறது. “இங்கு உள்ளே நுழையும் ஒவ்வொரு கார்டினலுக்குள்ளும் அடுத்த போப் நாமாக இருக்க மாட்டோமா என்கிற ஆசை இருக்கிறது. இது வெறும் தேர்தல் அல்ல…போர்” என்கிற இந்த வசனம்தான் மொத்தக் கதையின் அடிநாதம். சொல்லப்போனால் மத வரலாற்றின் பின்னணி என்றும் சொல்லலாம்.


ஒவ்வொரு கட்டமும் விறுவிறுப்பாகச் செல்கிறது. யார் அடுத்த போப் என்று தெரியும்வரை நாவலைக் கீழேவைக்க முடியவில்லை.

நாவலும் திரைப்படமும் ஒரே சம்பவத்தில் தான் தொடங்குகின்றன. போப் மரணமடைந்திருக்கிறார். அவரைப் பார்ப்பதற்காக டீன் தாமஸ் லாரன்ஸ் வருகிறார். அதில் இருந்து அவரது பார்வையில் கதை செல்கிறது. போப் இறந்து போனால் உடனேயே என்ன செய்வார்கள் என்பதை நாவலைப் போலவே படமும் விவரிக்கிறது.  தாமஸ் லாரன்ஸ் போப்பின் அறையைச் சுற்றிப் பார்க்கிறார். எளிமையான அந்த  அறையில் இருக்கும் ஒவ்வொன்றும் அவருக்கு போப்பினை நினைவுபடுத்துகிறது என்பதெல்லாம் நாவலில் இருந்து அழகாய் திரைக்கதையில் சேர்க்கப்பட்டிருக்கிறது. எந்த வசனமும் இல்லாமல் இதைப் புரிய வைத்துவிடுகிறார்கள். போப்பின் மரணம் இயற்கையானது என்று தெரியவந்தவுடன் அடுத்த போப்பைத் தேர்ந்தெடுக்கும் பணி ஆரம்பமாகிறது. அதற்கு என்ன செய்வார்கள் என்பதை நாவல் விலாவரியாகச் சொல்கிறது. படத்தில் சில ஷாட்களே வந்தாலும், தேவையானவற்றை காட்சி மூலமாக விளங்க வைத்துவிடுகிறார்கள்.

முதலில் கார்டினல்களின் பட்டியல் தயாராகிறது. கன்னியாஸ்திரிகள் சமையல் செய்வதற்கும் கார்டினல்களுக்கான உபசரிப்பை மேற்கொள்வதற்கும் வரவழைக்கப்படுகிறார்கள். கன்னியாஸ்திரிகளுக்கு தலைமை ஏற்றிருக்கும் சிஸ்டர் ஆக்னஸ் இங்கு அறிமுகம் செய்யப்படுகிறார். எல்லா அறையில் இருக்கும் ஜன்னல்கள் மூடப்படுகின்றன. கார்டினல்கள் தங்களுடைய உடைமைகளுடன் புனித பீட்டர் தேவாலய வளாகத்துக்குள் வருகிறார்கள். அவர்கள் முழு பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். அவர்களுடைய அனைத்து தொடர்பு சாதனங்களும் எடுத்துக் கொள்ளப்படுகின்றன. புகைபிடிப்பதற்கு அனுமதி இருக்காது என்பதால், அனைவரும் கூடிக் கூடி புகை பிடிக்கிறார்கள். அவர்கள் அந்த வளாகத்தில் இருந்து உள்ளே சென்றுவிட்டால்  முற்றிலும் வெளியுலகத் தொடர்பு அற்றுவிடும் என்பதால் வேகவேகமாக தங்களது மொபைலை அவர்கள் பயன்படுத்துவது, அதிகமாக புகைப்பிடிப்பது போன்றவை காட்டப்படுகின்றன.

போப் தேர்தலில் தங்கள் பெயரும் இடம்பெறும் என்று நம்பிக்கையுடன் இருக்கிற கார்டினல்கள் நமக்கு அறிமுகம் செய்யப்படுகிறார்கள். அவர்கள் வந்ததும் தாமஸிடம் நடந்து கொள்ளும் விதத்தில் இருந்து அவர்களது கதாபாத்திரத்தன்மை புரிகிறது. மேம்போக்காக தங்களுக்கு போப் ஆவதில் ஈடுபாடு இல்லை என்று சொன்னாலும் மனதுக்குள் அவர்களுக்கு ஆசை இருக்கிறது என்பது புரிகிறது.

இப்போது ஒவ்வொருவரைப் பற்றியும் புரிந்து கொள்ள காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

மறைந்த போப்பிடம் டீன் தாமஸ் லாரன்ஸ் தன்னுடைய ராஜினாமா கடிதத்தைக் கொடுத்தும் அதை அவர் ஏற்றுக் கொள்ள மறுத்ததும் தெரிய வருகிறது. மறைந்த போப் தேவலாயக் கூட்டமைப்பின் மீது தனது கடைசி காலகட்டத்தில் நம்பிக்கை இழந்திருந்தார் என்பதை தாமஸ் தெரிந்து கொள்கிறார். இது அவரை ஆச்சரியப்படுத்துகிறது. இதன் தொடர்ச்சியாகத் தான் அவர் போப்பின் செயலாளர் வோஸ்னிக்கை சந்திக்கிறார். இங்கு தான் கதையின் முதல் முடிச்சு விழுகிறது.

போப்பின் தனிச்செயலாளர் வோஸ்னிக், தாமஸ் லாரன்ஸிடம் ஒரு செய்தியைச் சொல்கிறார். கார்டினல் ட்ரேம்லே, போப் இறப்பதற்கு முன்பு அவரை சந்தித்ததாகவும் ட்ரேம்லேயை போப் பொறுப்பு நீக்கம் செய்ததாகவும் சொல்ல அதிர்கிறார் தாமஸ். ஏனெனில் ட்ரேம்லே தான் அடுத்த போப்பாகக் கூடிய சாத்தியம் உள்ளவர் என்பது பரவலான நம்பிக்கையாக இருக்கிறது. இந்த நிலையில் எந்தக் காரணத்தால் போப் அவரைப் பொறுப்பில் இருந்து நீக்கம் செய்திருக்கிறார் என்பது தாமஸுக்கு இருக்கிற சந்தேகம். இதற்கு விடை கண்டுபிடிக்கவில்லை என்றால், ட்ரேம்லே ஒருவேளை போப்பாக தேர்வானால் மிகப் பெரிய பாதகத்தை செய்தவராக ஆவோம் என்று நினைக்கிறார் தாமஸ். தேர்தல் நடக்கையில் கார்டினல் உறுப்பினர் அல்லாத வோஸ்னிக் அங்கு இருக்கக்கூடாது என்பதாக சொல்லிவிட, அங்கிருந்து அவர் கிளம்புகிறார். வெளிவாசல் இழுத்து மூடப்பட, சுற்றிலும் அடைக்கப்பட்ட இடத்துக்குள் தாமஸ் லாரன்ஸ் நின்று கொண்டுள்ளார் என்பதைக் காட்டி காட்சி முடிகிறது. தாமஸ் லாரன்ஸ் இந்த விஷயத்தைக் கேள்விப்பட்டதும் என்ன மாதிரியான மனநிலைக்குச் சென்றார் என்று சில பக்கங்களை செலவழித்து சொன்னதை  கதவு அடைபட்டு இருட்டில் தாமஸ் லாரன்ஸ் நிற்பதாக காட்டி முடித்திருக்கிறார்கள்.

கதையின் அடுத்தடுத்த முடிச்சுகள் விழுந்தபடி இருக்கின்றன. கார்டினல் வின்சென்ட் பென்ட்டேஜ் அறிமுகக்காட்சி கதைக்கு முக்கியமான ஒன்று. எல்லாக் கார்டினல்களும் வந்த பின்பு புனித பீட்டர்ஸ் தேவாலய வளாகம் மூடப்படும். அப்படி மூடப்பட்ட பின்பு ஒரு கார்டினல் வருகிறார். அவர் பெயர் பட்டியலில் இல்லை. அப்படியொரு கார்டினல் இருப்பதாகவே யாருக்கும் தெரியவில்லை. அவருடைய அடக்கமான தோற்றம், அவர் அமர்ந்திருக்கும் விதம், அவரது கைகளில் ஜெபமாலை வைத்துக் கொண்டு பிரார்த்தனைக்குள் மூழ்கியிருப்பது என புதிய கார்டினல் வின்சென்ட் பென்ட்டேஜ் குறித்து ஒரு அறிமுகத்தை நாவல் தருகிறது. படத்தில் தாமஸ் வழியாகவே வின்சென்ட் பென்ட்டேஜ் நமக்குக் காட்டப்படுகிறார். உட்கார்ந்து கொண்டே தூங்கி கொண்டிருக்கும் ஒருவரை தாமஸ் எழுப்புவது போல காட்சி அமைக்கப்பட்டிருக்கிறது. வின்சென்ட் குறித்து பார்வையாளர்கள் எந்தத் தீர்மானமும் கொண்டு விடக்கூடாது என்கிற காரணமாகவும் இருக்கலாம்.

கார்டினல் வின்சென்ட்டை உணவுக்கூடத்தில் அனைவரிடமும் அறிமுகம் செய்து வைக்கிறார் தாமஸ். வின்சென்ட்டிடம் அந்த இரவு உணவுக்கு முன்பான பிரார்த்தனைகளை சொல்லச் சொல்கிறார் தாமஸ். மிக சிறப்பான காட்சி இது. மனதில் இருந்து பிரார்த்திக்கிறார் வின்சென்ட். பிரார்த்தனையின் போது யாருமே கண்டுகொள்ளாத, மௌனமாய் உணவுத் தயாரிக்கும் கடமைகளைச் செய்யும் கன்னியாஸ்திரிகளுக்கும் சேர்த்து பிரார்த்தனை செய்ய, சிஸ்டர் ஆக்னஸ் மிக மென்மையாகப் புன்னகை செய்கிறார்.பல நூறு வார்த்தைகள் கொண்டு புரியவைக்கப்பட்ட நாவலின் எழுத்துகளை ஒரு சிறு புன்னகை மூலம் புரிய வைத்த காட்சி இது. படத்தின் இறுதிக் காட்சிக்குப் பிறகு இந்தப் பிரார்த்தனையில் கன்னியாஸ்திரிகளை வின்சென்ட் சேர்த்துக் கொண்டதின் வேறொரு பரிமாணம் நமக்குப் புரிகிறது.

முதல் நாள் conclave ன் போது தாமஸ் லாரன்ஸ் எல்லோருக்கும் மத்தியில் பேசுகிற உரை முக்கியமானது.  நிச்சயமில்லாத்தன்மையே போற்றப்பட வேண்டியது, கடவுளின் திருக்குமரனான இயேசுவே கூட நிச்சயமற்றத் தன்மையிலேயே இருந்திருக்கிறார். அது தான் வழிகாட்டும் என்று அவர் உரையாற்றுவதற்கும் முன்பும் பின்புமான அவரது மனநிலையை நாவல் பக்கம் பக்கமாக விளக்குகிறது. அது தேவையும்படுகிறது. ஆனால், படத்தில் உரை நிகழ்த்துவதற்கு முன்பு தாமஸ் லாரன்ஸ் மாடியில் இருந்து எல்லோரையும் கூர்ந்து பார்ப்பதன் வழியாக அவர் மனதில் ஏதோ யோசனை இருக்கிறது என்பதை புரிந்து கொள்கிறோம். உரை நிகழ்த்தி முடித்ததும் அவர் மற்ற கார்டினல்கள் மத்தியில் நடந்து வருகையில் அனைவரும் அவரைப் பார்க்கும் பார்வை வழியாக மற்றவர்களின் மனநிலைகள் புரியவைக்கப்படுகின்றன.. இந்த உரையை வெளியில் இருந்து ஆக்னஸ் கேட்கிறார் என்கிற ஒரு ஷாட் இருக்கிறது. அடுத்தடுத்து வரப்போகும் காட்சிகளுக்கான முக்கிய ஷாட் இது.

நாவலில் இருந்து திரைக்கதையாக மாற்றும்போது இருக்கிற ஒரு வசதி, ஒரே ஷாட்டில் பலவற்றை புரிந்து கொள்ள வைக்க முடியும் என்பதுதான். அதற்கான சிறந்த உதாரணம் தாமஸ் லாரன்ஸ் உரை நிகழ்த்தும் காட்சிகள்.

சரியான போப்பைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்கிற தாமஸ் லாரன்ஸின் உந்துதலும், மெனக்கிடலுமே கதையை நகர்த்திச் செல்கிறது. இதற்கான வழிகாட்டுதல்கள் அவருக்கு கிடைத்துக் கொண்டே இருக்கின்றன. யாரெல்லாம் போப்பாக சாத்தியமுள்ளவர்களோ, யாரெல்லாம் வாக்குகளில் முன் நிற்கிறார்களோ அவர்கள் யாவரும் தகுதியற்றவர்கள் என்பதை தாமஸ் லாரன்ஸ் கண்டுபிடிக்கும் ஒவ்வொரு முறையும் அதிர்ந்து போய் நிற்கிறார். தன்னுடைய தலைமையின் கீழ் நடக்கப்போகும் தேர்தலில் தன்னால் சரியான போப்பை அடையாளம் காண முடியாதோ என்கிற வேதனை அவருக்குள் பாடாய்ப்படுதுகிறது. அவர் அந்த நேரங்களில் எல்லாம் நம்புவது பிரார்த்த்னைகளை மட்டுமே. அவை அவருக்கு உதவவும் செய்கின்றன. தாமஸ் என்னவெல்லாம் இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறார் என்பதை நாவல் அளவுக்குத் திரும்பத் திரும்ப திரைக்கதையில் சொல்லிக் கொண்டிருக்க முடியாது என்றாலும் பல இடங்களில் புரிய வைத்துவிடுகிறார்கள்.

இறந்து போன போப்பின் அறைக்கு வைக்கப்பட்ட கட்டுப்பாடுகளை மீறி யாருக்கும் தெரியாமல் நுழைந்து எதையோ தேடும் தாமஸ் லாரன்ஸ் ஒருகட்டத்தில் போப்பின் நினைவில் அழுகிறார். இந்த கதிக்கு என்னை ஆளாக்கி விட்டீர்களே என்றோ, எல்லோரையும் சந்தேகப்படும்படி ஆனதே என்றோ நினைத்து அவர் அழ, அடுத்த நொடி அவர் தேடி வந்த ஆதாரம் அந்த அறைக்குள் கிடைக்கிறது. கடவுளும், மறைந்த போப்பும் தனக்கு வழிகாட்டுவதாக அவர் நினைக்கிறார் என்பதை அடுத்தடுத்தக் காட்சியில் அவர் எடுக்கும் முடிவுகளின் மூலம் காட்டுகிறார்கள்.

இப்படி ஒட்டுமொத்த படமுமே தாமஸ் லாரன்ஸின் பார்வையில் செல்வதால், கதை ஒரே நேர்கோட்டில் குழப்பமில்லாமல் செல்கிறது. நாவலுமே கூட தாமஸ் லாரன்ஸின் பார்வையில் எழுதப்பட்டதுதான்.  தேர்தல் நடக்கும் இடமான சிஸ்டைன் தேவாலயத்தின் விதானங்களில் வரையப்பட்ட மைக்கேல் ஏஞ்ஜெலோவின் ஓவியங்களை தாமஸ் ஒவ்வொரு முறையும் தன் மனநிலைக்குத் தகுந்தவாறு மொழிபெயர்த்துக் கொள்கிறார். இதனை நாவலில் படிக்க வேண்டும். அது தனி அனுபவமாக இருக்கும். படத்தில் அதைக் காட்டுகிறார்கள். ஆனால் தாமஸ் என்ன நினைக்கிறார் என்பதைச் சொல்லும் வாய்ப்பு அமையவில்லை.

அதேபோல சிஸ்டர் ஆக்னஸ் குறித்து தாமஸ் என்ன நினைக்கிறார் என்பதும் படத்தில் இல்லை. தேவைப்படவும் இல்லை. தான் ஒருவேளை திருமணம் செய்து கொண்டிருந்தால், ஆக்னஸ் போல ஒரு பக்குவப்பட்டப் பெண்ணைத் தான் திருமணம் செய்து கொண்டிருக்க வேண்டும் என்று அவர் நினைப்பதாக நாவல் சொல்கிறது.

ஆக்னஸின் கதாபாத்திரம் நாவலைக் காட்டிலும் படத்தில் குறைவாகக் காட்டப்பட்டாலும், மிக வலுவான கதாபாத்திரமாக உருவாக்கியிருக்கிறார்கள். மிகச் சரியானதொரு தேர்வாக  போப் பொறுப்பில் ஒருவர் அமர வேண்டும் என்று ஆக்னஸ் நினைப்பதாலேயே தாமஸுக்கு முன்வந்து உதவுகிறார்.

இதெல்லாம் அதிக வசனனக்ளும், காட்சிகளும் இல்லாமல் நேர்த்தியாக சொல்லப்பட்டிருக்கிறது.

தன்னுடைய பெயரை எழுதி தாமஸ் லாரன்ஸ் சீட்டைப் பானைக்குள் இடும்போது சரியாக மேற்கூரை வெடித்து விழுகிறது. அது நகரத்துக்குள் ஏற்பட்ட தீவீரவாதத் தாக்குதலின் விளைவு என்பது தெரிகிறது.

மிக புத்திசாலித்தனமான, பாராட்டப்பட வேண்டிய ஒன்று, மிகப்பெரும் நிகழ்வான போப் தேர்தல் நடக்கிறபோது ஒவ்வொரு நாளும் பெருந்திரளான மக்கள் தேவாலயத்தின் வாசலில் காத்திருப்பார்கள். ஊடகங்களின் மொத்த கவனமும் வாடிகன் நகரத்தின் மீது இருக்கும். ஆனால், எங்குமே அவையெல்லாம் காட்டப்படவில்லை. ஒரு காட்சியில் கூட வெளி மனிதர்களின் முகங்கள் காட்டப்படவில்லை. போப் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் அதனை உணர்த்தும் வெண்புகையைப் பார்த்ததும் மக்களின் ஆரவார ஒலி மட்டும் கடைசி காட்சியில் கேட்கிறது. இதிலும் வெண்புகை நமக்குக் காட்டப்படுவதில்லை. தாமஸ் லாரன்ஸின் முகக்குறிப்பை வைத்து மட்டுமே புரிந்து கொள்கிறோம். திரைக்கதை மீது வைக்கப்பட்டிருக்கும் தைரியமான நம்பிக்கை இந்தக் காட்சிகள்.  

போப்பாக வின்சென்ட் பென்ட்டஜ் தேர்ந்தெடுக்கப்பட்ட பின் Room of Tears ல் தாமஸ் லாரன்ஸ், வின்சென்ட் பேசிக்கொள்ளும் காட்சி முக்கியமானது. நாவலில் அதிகம் பேசுவதும் படத்தில் மிகச் சுருக்கமாக சொல்லி புரியவைக்கப்பட்டிருக்கிறது. அப்போதும் கூட வின்சென்ட் பென்ட்டஜினை தாமஸ் ஏற்றுக்கொண்டாரா இல்லையா என்பதை வசனத்தில் காட்டாமல், புரிய வைத்திருக்கிறார்கள். போப் வளர்த்த ஆமை, மைக்கேல் ஏஞ்செலோவின் ஓவியம், திறக்கப்பட்ட ஜன்னல்கள், வெளிச்சம் பரவுவது என  காட்சி மூலமாக சொல்ல வேண்டியவற்றை சொல்லிச் சென்றதில் படம் அற்புதமான அனுபவத்தைத் தருகிறது.

பெரும்பாலும் உளவியல் சிக்கல்களையும், மனதுக்குள் தாமஸ் நிகழ்த்திக் கொள்ளும் உரையாடல்களையும் நாவல் சொல்லிச் செல்கிறது. ஆனால், அதற்கான சாத்தியம் குதிரைப்படத்தில் காட்டுவது கடினம் என்பதால் போப் தேர்வுக்குழுவில் நடக்கிற அரசியல்கள், ஒவ்வொரு நாட்டினருக்கிடையே இருக்கும் பிரிவினை, ஒவ்வொருவரின் அரசியல் கொள்கை என்பதெல்லாம் எப்படி மதத்தின் மையத்தைத் தீர்மானிக்கிறது என்பதை படம் முன்னிலைப்படுத்துகிறது.

நாவலாசிரியர் ராபரட் ஹாரிஸ் 2013 ஆம் ஆண்டு மறைந்த போப்புக்குப் பின்னரான வாடிகன் நிகழ்வுகளைத் தொலைகாட்சியில் அமர்த்து பார்த்துக் கொண்டிருந்திருக்கிறார். அப்போது மூடிய ஜன்னல்களை திறக்கும் காட்சிகளைப் பார்க்கிறபோதுதான் இந்த நாவல் எழுதுவதற்கான உந்துதல் ஏற்பட்டிருக்கிறது. உண்மைக்கு நெருக்கமாக அமைந்த நாவல் என்கிற பெயரும் பெற்றது. அந்தப் பேரைத் தக்கவைக்க படமும் மெனக்கிட்டிருக்கிறது. எழுதுவதைக் காட்டிலும் சிலவற்றைக் காட்டுவது சவாலானது. அதைத் திறம்பட செய்ததாலேயே ‘சிறந்த தழுவலுக்கான’ ஆஸ்கர் விருதை இந்தப் படம் பெற்றிருக்கிறது.


இந்த நாவலுக்கு எதிர்ப்புகள் வந்திருந்தன. அதையும் மீறி, மதத்துக்குள் இருக்கும் அரசியலை, தர்க்கங்களை, சமூகப் பின்னணிகளைப் பேசியிருக்கிறது. மிகக் கவனமாக ராபர்ட் ஹாரிஸ் கையாண்டிருக்கிறார். அதைவிட கவனமாக திரைக்கதை கையாளப்பட்டிருக்கிறது.

இதற்கு முன்பும் Angels and Demons , Two Popes போன்ற படங்கள் இதே போன்று போப் தேர்வு குறித்து வந்திருந்தாலும், உண்மைக்கு வெகு நெருக்கமாக சென்று சொன்ன படம் என்பதால் மிக முக்கியமாகிறது The Conclave திரைப்படம்.

இந்த நாவலும், படமும் நேரடியான கேள்விகளை ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் தலைமையைக் கேள்வி கேட்கிறது எனும்போது எழுகிற சிக்கலை புரிந்து கொள்ள முடிகிறது. அதையெல்லாம் மீறி தன்னை வெளிப்படுத்திக் கொண்டிருப்பதால், இந்தப் படமும் நாவலும் விருப்பதிற்குரியதாக இருக்கின்றன.

Author Image

ஜா.தீபா

எழுத்தாளர். ‘மேதைகளின் குரல்கள்’ ‘கறுப்புத் திரை’ போன்ற திரைப்படம் சார்ந்த புத்தகங்களையும், “நீலம் பூக்கும் திருமடம்’, ‘மறைமுகம்’ சிறுகதைத் தொகுப்பும் கவனம் பெற்றவை. தொலைகாட்சித் தொடர்களுக்கு திரைக்கதைகள் எழுதி வருகிறார்.

About The Author

The Talkie

The Talkie

See author's posts

Next Post
trendukottaai-07

ட்ரெண்டு கொட்டாய் 07 - பட யாத்திரைகள்

Please login to join discussion

Archives

  • Trending
  • Comments
  • Latest
Thug_Life_

Thug Life – ஒரு பார்வை

June 6, 2025
AMADEUS திரைக்கதை

AMADEUS திரைக்கதை

March 15, 2025
start camera

ஸ்டார்ட் கேமரா! வின்சென்ட் மாஸ்டர் – 01

March 19, 2025
Irunda-Pakkam

தொழில்நுட்பத்தின் இருண்ட பக்கங்கள்: திரைப்படங்கள் சொல்லும் உண்மை.

March 16, 2025
Thug_Life_

Thug Life – ஒரு பார்வை

11
rasigamagajanangale

ரசிக மகா ஜனங்களே

7
gurudutt-02

குருதத்தின் ப்யாஸா- உயிர்த்தெழுந்த தேவதை        

5
start camera

ஸ்டார்ட் கேமரா! வின்சென்ட் மாஸ்டர் – 01

4
table top-4-5

டேபிள் டாப் 04 & 05

January 24, 2026
bella darr

பேலா டார் – காட்சியை அனுமதித்தவர்

January 24, 2026
trend-kottaiye-11

ட்ரெண்டு கொட்டாய் 11 -நான் (திரை) காவிய நாயகன்

January 24, 2026
table top-3

டேபிள் டாப் 03

January 24, 2026
The Talkie

சினிமா அற்புதமான ஊடகம். இதனை அறிந்து கொள்ளவும், ரசிக்கவும் உருவாக்கப்பட்டிருக்கிற இணைய இதழ் இது. மேதைகளின் நேர்காணல்கள், திரைக்கதைகள், வெவ்வேறு மொழித் திரைப்படங்கள், ஆளுமைகள், திரைப்படப் புத்தகங்கள் , சினிமா ரசனை என சினிமா உலகத்தோடு இணைந்திட எங்களுடன் இணைந்திடுங்கள்.

Categories

  • I CALL THE SHOTS
  • ஆளுமைகள்
  • இந்தியத் திரைப்படங்கள்
  • உரையாடல்
  • உலகத் திரைப்படங்கள்
  • ஓடிடி திரை
  • கட்டுரைகள்
  • குரு தத் 100
  • டேபிள் டாப்
  • ட்ரெண்டு கொட்டாய்
  • தமிழ்த் திரைப்படங்கள்
  • திரை புத்தகம்
  • திரைக்கதைகள்
  • தொடர்கள்
  • ஸ்டார்ட் கேமரா

Site Navigation

  • About Us
  • Terms and Conditions
  • Privacy Policy
  • Returns and Cancellation
  • Shipping Policy
  • FAQ
table top-4-5

டேபிள் டாப் 04 & 05

January 24, 2026
bella darr

பேலா டார் – காட்சியை அனுமதித்தவர்

January 24, 2026
trend-kottaiye-11

ட்ரெண்டு கொட்டாய் 11 -நான் (திரை) காவிய நாயகன்

January 24, 2026

© 2026 Thetalkie - All rights reserved

Welcome Back!

Sign In with Google
OR

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Sign Up with Google
OR

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • thetalkie
  • ஆளுமைகள்
  • திரைக்கதைகள்
  • உரையாடல்
  • கட்டுரைகள்
    • இந்தியத் திரைப்படங்கள்
    • உலகத் திரைப்படங்கள்
    • தமிழ்த் திரைப்படங்கள்
    • ஓடிடி திரை
  • தொடர்கள்
    • ட்ரெண்டு கொட்டாய்
    • திரை புத்தகம்
    • ஸ்டார்ட் கேமரா
    • I CALL THE SHOTS
    • குரு தத் 100
    • டேபிள் டாப்
  • தொடர்பு
  • Login
  • Sign Up
  • Cart

© 2026 Thetalkie - All rights reserved

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?