The Talkie
Thursday, April 9, 2026
  • Login
  • Register
  • thetalkie
  • ஆளுமைகள்
  • திரைக்கதைகள்
  • உரையாடல்
  • கட்டுரைகள்
    • இந்தியத் திரைப்படங்கள்
    • உலகத் திரைப்படங்கள்
    • தமிழ்த் திரைப்படங்கள்
    • ஓடிடி திரை
  • தொடர்கள்
    • ட்ரெண்டு கொட்டாய்
    • திரை புத்தகம்
    • ஸ்டார்ட் கேமரா
    • I CALL THE SHOTS
    • குரு தத் 100
    • டேபிள் டாப்
  • தொடர்பு
No Result
View All Result
The Talkie
  • thetalkie
  • ஆளுமைகள்
  • திரைக்கதைகள்
  • உரையாடல்
  • கட்டுரைகள்
    • இந்தியத் திரைப்படங்கள்
    • உலகத் திரைப்படங்கள்
    • தமிழ்த் திரைப்படங்கள்
    • ஓடிடி திரை
  • தொடர்கள்
    • ட்ரெண்டு கொட்டாய்
    • திரை புத்தகம்
    • ஸ்டார்ட் கேமரா
    • I CALL THE SHOTS
    • குரு தத் 100
    • டேபிள் டாப்
  • தொடர்பு
No Result
View All Result
The Talkie
Subscribe
Home தொடர்கள்

ஸ்டார்ட் கேமரா 05 – W.R சுப்பாராவ்

The Talkie by The Talkie
August 21, 2025
in தொடர்கள், ஸ்டார்ட் கேமரா
A A
0
startcamera-05
Share on WhatsappShare on FacebookShare on Twitter

Author Icon ஜா.தீபா
Author Icon அகிலா ஸ்ரீதர்

மார்ச் 1960. ஆப்பிரிக்கா நாட்டில் கெய்ரோவில் ஆப்பிரிக்க ஆசிய  திரைப்பட விழா நடந்தது. அங்கு சிவாஜி கணேசன் அவர்களுக்கு சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட இருந்தது. வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியமைக்கான  விருது அது. சர்வதேச அளவில் அந்தப் படம் வெற்றி கண்டிருந்தது. குறிப்பாக சிவாஜி கணேசனின் நடிப்பு.

கம்பீரமாக, வெள்ளையர் கூட்டத்தை சிதறி ஓடச்செய்யும் ஓங்காரத்துடன் நடித்திருந்தார். அந்தப் படத்தை கெய்ரோ விழாவில் பார்த்திருந்த சர்வதேச சினிமா ரசிகர்கள் சிவாஜி கணேசனைக் காண வேண்டி காத்திருந்தனர். சிவாஜி கணேசன் அவர்களை மேடைக்கு விருதைப் பெற்றுக்கொள்ள அழைக்கிறார்கள்.

அவரும் வருகிறார். எல்லாருக்கும் ஆச்சரியம். ‘இவரா? இவரா நாம் திரையில் பார்த்த கட்டபொம்மன்!  கம்பீர விஸ்வரூபமாய், ஒரு மலை போல நின்று கர்ஜித்தவர்…’ என்று அத்தனைப் பேருக்கும் ஆச்சரியம்.  இந்த சம்பவத்தை சிவாஜி கணேசன் அவர்கள் தன்னுடைய சுயசரிதையில் குறிப்பிடுகிறார்.

வீரபாண்டியன் கட்டபொம்மன் என்றால் நம் மனதில் உயர்ந்து நிற்கும் ஒரு உருவத்தை நமக்கு நடிப்பில் காட்டியவர் சிவாஜி என்றால், காட்சியாக பதிய வைத்தவர் ஒளிப்பதிவாளர் W.R சுப்பாராவ்.

முதல் முழு நீள கேவா வண்ணத் திரைப்படமான ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ படத்தின் ஒளிப்பதிவாளர்.

 இன்றும் கிளாசிக் திரைப்படமாக, தமிழ்த் திரையுலக வரலாற்றில் ஒரு மைல்கல்லாக விளங்குகிறது வீரபாண்டிய கட்டபொம்மன். படம் வெளியானபோது திருச்சியில் ஹெலிகாப்டர் மேலிருந்து பூமழை தூவ,  அதன் பிரிண்ட்களை யானை மீது வைத்து ஊர்வலமாக எடுத்துச் சென்று கொண்டாடினர்.

அரண்மனை செட்டுகள், போர்க்களத்தில் வீரர்களின் உடைகள், கொடிகள், போர்ச் சின்னங்கள் என அனைத்தையும் சிவப்பு, பொன்னிறம், நீலம், பச்சை போன்ற அடர்த்தியான வண்ணங்களில்  காண்பித்து எவருக்கும் அடிபணியாத அரச கம்பீரத்தைக் காட்சிப்படுத்தினார்.

எழுச்சியுடன் சிவாஜி பேசும் காட்சிகளில் அவர் முகத்தில் விழும்படி ஒளியமைக்கப்பட்டு  குளோசப் காட்சிகளாக எடுக்கப்பட்டிருக்கும். சிவாஜியின் கண்களில் தெரியும் உறுதியையும், கோபத்தையும், நாட்டுப்பற்றையும், தெளிவாக அது எடுத்துக் காட்டியது.

பிரம்மாண்டமான அரண்மனையைக் காட்டுவதற்கும்  நூற்றுக்கணக்கான போர் வீரர்கள் பங்கேற்கும் போர்க்கள காட்சிகளில் அனைத்து கதாபாத்திரங்களைக் காட்டுவதற்கும் ஒரே ஃபிரேமில் பொருந்தும்படி வைட் ஷாட்களாக எடுத்திருப்பார். ஆனால் உணர்ச்சி பொங்க சிவாஜி பேசும் காட்சிகளில் அவரது கண்கள், மீசை, கண் அசைவுகள், முக பாவனைகள் எல்லாம் வெளிப்படும் விதத்தில் குளோசப் காட்சிகளாக எடுத்திருப்பார்.

முன்வரிசையில் அரசனான சிவாஜி வசனம் பேச பின்னணியில் இருக்கும்  வீரர்களையும், கோட்டையையும் தெளிவாக காண்பித்து சரித்திர படங்களின் உண்மைத்தன்மையை பார்வையாளர்களிடையே நிலைநிறுத்தினார்.

இந்தப் படம் குறித்து ஆனந்த விகடனில் மே மாதம் 24ம் தேதி 1959ல் விமர்சனம் வெளியானது. இருவர் பேசிக்கொள்வது போல விமர்சனங்கள் அப்போது விகடனில் வெளி வந்துகொண்டிருந்தன. “கண் குளிர்ந்தது. வெளிப்புறக் காட்சிகள் எல்லாம் குளுகுளுன்னு இருக்கு. கட்டபொம்மன் கோட்டையை கலரில் பார்த்ததும் என்னை மறந்துட்டேன். திருச்செந்தூர் முதல் ஜெய்ப்பூர் வரைக்கும் பார்க்கப் பார்க்க அழகாயிருக்குது. இத்தனை நான் தமிழன் எண்ணத்திலே இருந்த கட்டபொம்மனை வண்ணத்துல தீட்டிட்டாங்க அண்ணே” என்கிற பாராட்டைப் பெற்றிருந்தது  இந்தப் படம்.

“அண்டாகாகசம், அபூக்கா ஹுக்கும், திறந்திடு சீசேம்!”

பெரும்பாலானோர் சிறு வயதில் விளையாடும் விளையாட்டுகளில் தவறாமல் சொல்கின்ற மந்திரம்.  1956ல் வெளிவந்த “அலிபாபாவும் நாற்பது திருடர்களும்” திரைப்படத்தில் இடம்பெற்ற வசனம்.

கருப்பு வெள்ளைப் படங்கள் வந்துகொண்டிருந்த காலகட்டத்தில் எடுக்கப்பட்ட முதல் தென்னிந்திய வண்ணத் திரைப்படம். இதற்கு ஒளிப்பதிவு இயக்குநர் W.R. சுப்பாராவ்.

1950களில் உலகம் முழுவதும் சாகசத்தை மையமாகக் கொண்ட படங்கள் வரத் தொடங்கின. காமிக்ஸ் புத்தகங்களும் விற்பனையில் உச்சத்தைத் தொட்டுக் கொண்டிருந்தன. உலகம் முழுவதுமே சினிமா தன்னை புதுப்பித்துக் கொண்டிருந்த காலகட்டம் அது. அதன் தாக்கம் தமிழ் சினிமா வரை இருந்தது.  நாயகர்கள் சாகசவீரர்களாய் மாறிக் கொண்டிருந்தனர். பிரம்மாண்டமான செட்டுகள், வெளிப்புறக் காட்சிகள் என தமிழ் சினிமா அடுத்த களத்தை நோக்கி சென்று கொண்டிருந்தது. இதில் ஒளிப்பதிவாளர்களின் பங்கு மிக முக்கியமானது. எதையும் பிரம்மாண்டமாக யோசித்து விடலாம். அதை நடைமுறைப்படுத்துவது கடினம். சுப்பாராவ் இதைக் கையாண்டார். அதற்கு ஒரு உதாரணம் தான் அலிபாபாவும் நாற்பது திருடர்களும் படம். 

இந்தப் படத்தில் வருகிற குகை செட்டை கலை இயக்குநர் டொமினிக் மிகச் சிறப்பாக அமைத்திருப்பார். இதன் வெளிப்புறக் காட்சிகள் மைசூரிலும், உட்புறம் ஏற்காட்டிலும் படம் பிடித்தனர். ஆனால் ஒரே இடம் என்று மக்கள் நம்பும்படி சுப்பாராவ் அக்காட்சிகளை எடுத்திருப்பார். இந்தப் புதிய வண்ணத் தொழில்நுட்பத்தை மிகத் திறமையாகப் பயன்படுத்தி படத்தின் மாயாஜால உலகத்தையும் பிரம்மாண்டத்தையும் அழகாக காட்சிப்படுத்தினார்.

வண்ணங்களை மிகத் தெளிவாகவும், கண்ணைக் கவரும் வகையிலும் காட்ட கவனம் செலுத்தினார். வண்ணமயமான உடைகள், செட்டுகள், புதையல் போன்றவற்றை ஒளியின் மூலம் பிரகாசமாக்கி அதன் கவர்ச்சியை அதிகரிக்கும் வகையில் காண்பித்தார்.

குகையிலிருக்கும் தங்க நாணயங்கள், பளபளக்கும் நகைகள், வண்ணமயமான கம்பளங்கள் ஆகியவற்றை மஞ்சள், சிவப்பு, நீலம் போன்ற வண்ணங்களைப் பயன்படுத்தி கண்கவர் காட்சிகளாக மாற்றினார். அன்றைய காலகட்டத்தில் முற்றிலும் மாறுபட்ட காட்சி விருந்தாக அமைந்து பார்வையாளர்களின் கற்பனையைத் தூண்டியது.

சுப்பாராவ் காட்சிக்கேற்ப ஃபிரேமிங்கைப் பயன்படுத்தி  அதில் இருக்கும் ஒவ்வொரு விவரமும் பார்வையாளருக்குத் தெளிவாகத் தெரியும்படி எடுக்கக்கூடியவர்.  அலிபாபா “திறந்திடு சீசேம்” என்று சொல்லி குகையின் கதவைத் திறக்கும் மர்மமான காட்சியில் கேமரா குகையின் வாயிலையும்,  குகையின் அசைவுகள், அதன் மர்மமான வாய் மற்றும் ஆச்சர்யப்படும் அலிபாபாவின்  முகத்தையும், ஒரே ஃபிரேமிற்குள் வைத்து  வைட் ஷாட்டாக எடுத்து அதன் முக்கியத்துவத்தை தெளிவாக காண்பித்திருக்கிறார்.

அலிபாபாவின் அறிமுகக் காட்சியிலும், திருடர்களுடன் அவர் சண்டையிடும் காட்சிகளிலும் எம்ஜிஆரின் முகத்தில் விழும்படியான ஒளியமைப்பு செய்து அவருடைய அழகு, புன்னகை, வீரம் என கதாநாயகனுக்குரிய அம்சங்கள் வெளிப்படுமாறு எடுத்திருக்கிறார்.

‘உல்லாச உலகம் உனக்கே சொந்தம்’ பாடலில் படத்திலிருக்கும் பெண் உயிர் பெற்று வரும் காட்சியும்,   தையல்காரர் கையில் பச்சை குத்தியிருக்கும் பெண் ஆடும் காட்சியும் தந்திரமாக படமாக்கப்பட்டிருக்கும்.  பாடல் காட்சிகளிலும், நடனக் காட்சிகளிலும் நடன அசைவுகளையும், உடைகளையும் முன்னிலைப்படுத்தும் வகையில் ஒளியமைத்ததோடு, செட்டுகளில் பலவண்ண ஒளி விளக்குகளை அமைத்து நடனமாடுபவர்களோடு கேமராவும் அசைந்து நகர்ந்து பாடலின் அழகை மெருகூட்டியது. தனது ஒளிப்பதிவு நுட்பத்தால் படத்தில் கற்பனை உலகத்தை உயிர்ப்பித்து புதிய காட்சி அனுபவத்தை பார்வையாளர்களுக்கு வழங்கினார்.

திருடர்கள் குகையை நோக்கி வருவதைக் காட்டும் ஒவ்வொரு ஷாட்டும் விதவிதமாக எடுக்கப்பட்டிருக்கும். ஒரே நிலவியலில் வெவ்வேறு கோணங்களில் எடுக்கப்பட்டிருப்பதால் நீண்ட தூரம் அவர்கள் பயணம் செய்து வருகிற ஒரு உணர்வைக் கொடுத்திருந்தது.

‘யார் நீ’ திரைப்படம் தமிழ்த் திரையுலகில் சைக்கலாஜிக்கல் திரில்லர் படங்களின் முன்னோடி என்றே சொல்லலாம்.

மழை பெய்து கொண்டிருக்கும் இரவில், வைப்பர்கள் அசைய இரண்டு ஹெட்லைட்டுகளின் வெளிச்சம் இரண்டு  கண்களாக தெரிய  வருகிற கார் எதிரே நின்று கொண்டிருக்கும் பெண்ணைப் பார்த்து நிற்கும் காட்சியே ஒருவித அமானுஷ்யத்தை தந்து,  பேய்ப்படமோ என்று நினைக்க வைக்கும்.

மர்மம் நிறைந்த பெண்ணாக ஜெயலலிதா இருள் சூழ்ந்த மாளிகைக்குள் நுழையும்போதும், இரவு நேரத்தில் திடீரென்று தோன்றும் காட்சிகளிலும் அவர் முகத்தில் அல்லது உடலில் ஒருபகுதி மட்டுமே வெளிச்சத்தில் இருக்கும்படியும், மற்ற பகுதிகள் நிழலில் இருக்கும்படியும் ஒளியமைப்பு செய்திருப்பார். அதனாலேயே அவர் வரும்போதெல்லாம் பார்வையாளர்களிடையே பயம் அதிகரிக்கும்.

ஒரு அமானுஷ்யம் தன்னைப் பின் தொடர்வதாக ஜெய்சங்கர் உணரும் தருணங்களில் அவருடைய அசைவற்ற கண்கள், வியர்த்த முகம், திடீர் அதிர்வு என அவரின் முகபாவனைகளை குளோசப் காட்சிகளாக நுணுக்கமாக காண்பித்திருப்பார். எதற்குள்ளேயோ அவர் சிக்கிக் கொண்டதைப் போன்ற உணர்வை வெளிப்படுத்தும் வகையில் மிகவும் இறுக்கமாக ஃபிரேம்களை அமைத்திருப்பார்.

ஜெயலலிதா நீண்ட ஹாலில் தூரத்தில் தெரியும் போதும் ஒரு கதவு வழியாக வரும்போதும் அவரை நிழலுருவமாக காண்பித்து கதையின் மர்மத்தை தக்க வைத்திருப்பார்.

ஜெய்சங்கர் மாளிகையின் நடைபாதையில் நடக்கும்போது கேமராவும் அவரைப் பின்தொடர்ந்து மிக மெதுவாக நகர்ந்து அங்கு ஏதோ ஆபத்து இருப்பது போன்ற உணர்வைக் கொடுக்கும். மர்மமான சத்தம் கேட்கும்போது அறையின் ஒரு மூலைக்கு கேமரா மெதுவாகத் திரும்பும். இது பார்வையாளர்களிடையே பதற்றத்தை அதிகரிக்கும் உத்தி.

ஜெய்சங்கர் திடீரென்று ஒலியைக் கேட்டு திரும்பும்போது கேமரா அவரது கோணத்திலிருந்து பயணித்து பார்வையாளர்களுக்கு அது என்னவென்று காண்பிக்கும் வரை மர்மத்தை நீட்டிக்கச் செய்யும்.

ஒளி, நிழல்,  ஃபிரேமிங் மற்றும் கேமரா அசைவுகள் மூலம் திகில் படத்திற்கு தேவையான மனநிலையையும் பதற்றத்தையும் சுப்பாராவ் தன் கேமராவாலும்,  இசையமைப்பாளர் வேதா தன் இசையாலும் பார்வையாளர்களிடையே உருவாக்கியதால் அந்தப் படம் வெற்றியடைந்தது.

பெரும்பாலும் இந்தக் கதைக்கேற்ப மங்கலான ஒளி தான் வீட்டிலும் தரப்பட்டிருந்தது. பேய் பங்களாபோல் காட்சி தரும் வீட்டில் ஜெய்சங்கர் சென்று படியேறுவதை கேமரா லோ ஆங்கிளில் காண்பிக்கும் போது இன்னும் திகிலைக் கூட்டும்.

ஜெயலிதா வீட்டைவிட்டுப் போனதும், அவள் நினைவில் அவள் ஃபோட்டோவைப் பார்த்துக் கொண்டிருக்கும்போது  ஜெய்சங்கரின் ஊசலாடும் மனதைக் குறிப்பதுபோல் கேமரா சுழன்று ஒரு பக்கம் pan ஆகும்.

அந்தப் பெரிய வீட்டின் மாடிப்படிகளில் ஏறி இறங்கி, படபடவென அடிக்கும் ஜன்னல்கள், ஆடும் திரைச்சீலைகள் என நகர்ந்து கொண்டேயிருக்கும் கேமராவும், அதற்கேற்ப ஒலிக்கும் பின்னணி இசையும் அந்த வீட்டில் இருக்கும் அமானுஷ்யத்தைக் காண்பித்து பார்ப்பவர்களை திகிலிலேயே வைத்திருக்க உதவின.  படம் முழுவதுமே கதைக்கேற்ப இருளிலும், நிழலிலுமாக இருக்கும்படி ஒளியமைக்கப்பட்டிருந்தது.

நவராத்திரி திரைப்படம் ஒரு புதுமையான, சவாலான முயற்சி. இதில் சிவாஜி ஒன்பது வெவ்வேறு கதாபாத்திரங்களில் நடித்திருப்பார். சாவித்திரி இந்த ஒன்பது கதாபாத்திரங்களையும் ஒரே இரவில் சந்திப்பதுதான் கதை.

சிவாஜி ஒன்பது வேடமேற்று நடிக்கும்போது, சில காட்சிகளில் இரு சிவாஜி கதாபாத்திரங்கள் நேருக்கு நேர் பேசும் காட்சிகளை ஒரே ஃபிரேமுக்குள் காட்ட வேண்டியிருந்ததை சுப்பாராவ் மிகத் திறமையாகக் கையாண்டிருந்தார்.

ரவுடியாக நடிக்கும் சிவாஜி, அமைதியான சிவாஜியோடு பேசும் காட்சியில், கேமரா ஒரே இடத்தில் துல்லியமாக அசைவில்லாமல் வைத்துப் படமாக்கிய பின், மீண்டும் ரிவைன்ட் செய்யப்பட்டு மீதிப் பாதியில் மற்றொரு சிவாஜியை நடிக்க வைத்து, பின் இரண்டு பகுதிகளும் துல்லியமாக ஒன்றிணைக்கப்பட்டு ஒரே ஃபிரேமில் இரு சிவாஜியும் இருப்பது போன்ற மாயையை உருவாக்கினார், இதற்கான ஒளியமைப்பு, கதாபாத்திரங்கள் நிற்கும் இடம் மற்றும் அசைவுகள் மிகக் கவனமாக திட்டமிடப்பட வேண்டும். அதை மிகச் சிறப்பாக சுப்பாராவ் செய்திருந்தார்.

சிவாஜியின் ஒன்பது கதாபாத்திரங்களையும் வேறுபடுத்திக் காண்பிக்கும் விதமாக அவர் முகத்துக்கு ஒளியமைப்பு செய்திருப்பார்.

கோபமான சிவாஜியைக் காண்பிக்க அவர் முகத்தில் நிழலுடன் கூடிய ஒளியமைப்பையும், காதலுடன் இருக்கும் சிவாஜியைக் காண்பிக்க மென்மையான பரவலான ஒளியமைப்பும் கொடுக்கப்பட்டிருக்கும். அது அவர் முகத்தை கவர்ச்சியாக காட்டியது.

சாவித்திரி ஒவ்வொரு சிவாஜி கதாபாத்திரத்துடன் உரையாடும் போதும், அந்தக் கதாபாத்திரங்களின் மகிழ்ச்சி, துக்கம், பயம், வீரம், கோபம், ஆச்சர்யம் என நவரசங்களையும் குளோசப் காட்சிகளில் பதிவு செய்திருப்பார்.

ஒவ்வொரு சிவாஜி கதாபாத்திரத்தின் பின்னணியையும் அவர்களின் இடங்களையும் தெளிவாகப் பார்வையாளர்கள் உணர்ந்துகொள்ளும் வகையில் படம் பிடித்திருப்பார்.

தனது கேமரா நுட்பங்களால் அத்தனை கதாபாத்திரங்களையும் துல்லியமாகக் காண்பித்து ஒரு புதுமையான முயற்சிக்கு சுப்பாராவ் பக்கபலமாக நின்றார்.

ராஜராஜ சோழன் எனும்போதே தஞ்சை பெரிய கோயில்தான் நம் நினைவுக்கு வரும். ஆனால் அங்கு படம் பிடிக்க அனுமதி கிடைக்காததால் அதை செட் போட்டு படமெடுத்தார்கள். அந்த பிரம்மாண்டத்தை உருவாக்கிய கலை இயக்குநர் கங்காவும், அதை நிஜம் போல் தோற்றமளிக்க செய்ததில் சுப்பாராவின் பங்களிப்பும் அபாரம். தென்னிந்தியத் திரையுலகின் முதல் சினிமாஸ்கோப் படம் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையில் இந்த முயற்சி வெற்றியடைந்தாலும், பிற ஊர்களில் உள்ள தியேட்டர்களில் சரியாக திரையிடமுடியவில்லை. சிவாஜி என்கிற மாபெரும் நடிகருடன் பல படங்களில் பணியாற்றி அவரின் வெவ்வேறு விதமான பரிமாணங்களையும் வெளிக்கொணர்ந்ததில் சுப்பாராவுக்கு பெரும் பங்குண்டு.

சபாஷ் மீனா திரைப்படத்தின் பெயரைச் சொல்லும்போதே கேட்பவர்களிடம் புன்னகை மலரும்.  இரட்டை வேடத்தில் நடித்த சந்திரபாபுவின் ஆள் மாறாட்டத்தால் நடைபெறும் நகைச்சுவைக் காட்சிகள் பார்வையாளர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தன. காமெடி படம் என்பதால் சிவாஜி, சந்திரபாபு இருவரின் நகைச்சுவையான உடல்மொழியும், சட்சட்டென்று மாறும் அவர்களின் முக பாவனைகளும், அவர்கள் ஏற்படுத்தும் குழப்பங்களுக்கு ஏற்ப மாறும் மற்ற கதாபாத்திரங்களின் எதிர்வினைகளும்  நகைச்சுவையாக வெளிப்படும்படி ஃபிரேம் அமைத்திருப்பார்,

சித்திரம் பேசுதடி பாடல் இருவேறு சூழ்நிலைகளில் வரும். முதல்முறை சிவாஜிக்கும் மாலினிக்கும் இடையில் காதல் துவங்கும் தருணத்தில் வரும்.  சிவாஜி தன் காதலியின் உருவப்படத்தை வரைந்து, அவர் மீதான தன் காதலைச் சொல்லும் விதமாக, பாடல் அமைந்திருக்கும். கனவுத்தன்மையுடன் ரசித்துப் பாடும் சிவாஜியின் முகத்தை காதல் மயக்கத்துடன் அழகாக காண்பித்திருப்பார்.  காதலியை வர்ணித்துப் பாடும் சிவாஜி, காதலியின் உருவப்படம், நிஜமாகவே அங்கு வருகிற காதலி என கேமரா அனைவர் மீதும் நகர்ந்து கொண்டிருக்கும். இரண்டாம் முறை சிவாஜி ஜெயிலில் இருக்கும்போது  மாலினி சிவாஜியை, நினைத்துப் பார்த்து பாடுவதுபோல் வரும். அவருடைய புகைப்படத்தைப் பார்த்து மாலினி பாடும்போது, அவரின் நினைவில் சிவாஜியின் உருவம் வந்து வந்து மறைந்து போவதை காண்பித்து பிரிவின் வேதனையை காட்சிப்படுத்தியிருப்பார்.

W.R. சுப்பாராவின் மகன் திரு, கிருஷ்ணகுமார் தன் தந்தையைப் பற்றி நினைவு கூர்ந்தார்.

“அப்பா வத்திராயிருப்பு என்னும் ஊரில்தான் பிறந்தார். மதுரை ஆர்ட்ஸ் காலேஜில் டிகிரி படித்தார். எங்க பெரியப்பாவோடு என் அப்பாவும் குடும்பத்தோடு சேலத்துக்கு மாற்றலாகிப் போனார்கள். அப்பத் தான் எங்கப்பாக்கு ஃபோட்டோகிராபி மீது ஆர்வம் வந்து கற்றுக்கொள்ள அரம்பித்தார். ஆரம்பத்தில் ஒரு பள்ளியில் டிராயிங் மாஸ்டராக வேலை பார்த்தார்.

எங்க பெரியப்பா சேலத்தில் ஒரு பெட்ரோல் பங்கில் வேலை செய்து வந்தார். மாட்ர்ன் தியேட்டர்ஸ் உரிமையாளரும், பெட்ரோல் பங்கின் வாடிக்கையாளருமான டி.ஆர். சுந்தரம் பெரியப்பாவின் சேவையால் மகிழ்ந்து உதவி செய்ய வந்தார். அப்படித்தான் அப்பா மாடர்ன் தியேட்டர்ஸில் அப்பரண்டிசாக வேலையில் சேர்ந்தார்.

அங்கு வேலை செய்யும் ஒவ்வொருவரையும் டி.ஆர்.சுந்தரம். கவனித்துக் கொண்டே இருப்பார். தக்க சமயத்தில் அவர்களுக்குப் பொருத்தமான வேலையைக் கொடுத்து முன்னேற்றி விடுவார். அப்படித் தான் மாடர்ன் தியேட்டர்ஸில் அப்பா கேமரா டிபார்ட்மெண்ட்டுக்குள் வந்தார்.

அங்கு தலைமைப் பொறுப்பில் ஜெர்மன் கேமராமேன் போடே கோஷ்வாக்கர்   இருந்தார். அப்போது அவர் தான் ஷுட்டிங் செல்வார். மற்றவர்கள் உதவியாளர்களாக இருந்தனர். அப்போதெல்லாம் மாடர்ன் தியேட்டர்ஸ் படங்களில் கேமரா டிபார்ட்மெண்ட் என்றுதான் டைட்டிலில் வரும். தனியாக கேமராமேன் என்று பெயர் வராது. போர் சமயத்தில் பிரிட்டிஷ் போலீஸ் அவர் ஜெர்மன்காரர் என்பதால் அவரை நாட்டை விட்டு வெளியேறும்படி சொல்ல, அவர் பாதியிலேயே ஜெர்மனிக்குப் போய் விட்டார். அப்போது பக்த கௌரி என்கிற படத்திற்கு அவர் வேலை செய்துகொண்டிருந்தார். அப்பாதான் அந்த படத்தை முடித்துக் கொடுத்தார்.

அடுத்து ராஜகுமாரி என்றொரு படம். எம்.ஜி.ஆர் நடித்தது. அதில் அப்பா தான் கேமராமேன். 

முதல் கலர் படம் அலிபாபாவும் நாற்பது திருடர்களும் அப்பாதான் செஞ்சார். இங்க ஷுட்டிங் பன்ணிட்டு பாம்பேலதான் பிராசஸ் செஞ்சாங்க. இதுக்கு மற்ற படங்களை விட அதிக செலவாச்சு. T.R.S பெரிய ரிஸ்க் எடுத்து அதை செஞ்சாரு. அதுக்காக செட்ல எந்தெந்த கேமரா, எந்தெந்த லென்ஸ் யூஸ் பண்றோம்னு கிட்டத்தட்ட ஒரு மாத காலம் அவகாசமெடுத்து அப்பா அதை R&D செஞ்சாங்க.  நல்லா கத்துக்கிட்டதுக்கு அப்புறம்தான் எடுத்தாங்க.

அதுக்கப்புறம் அவர் சென்னைக்கு வந்து ஃபிரீலான்ஸாக வேலை செய்ய ஆரம்பித்தார்.  “திரும்பி பார்” அப்பாதான் செஞ்சாரு.  சிவாஜி வில்லனாக வருவார். அந்தப் படத்துக்கு கலைஞர்தான் வசனம். எல்.வி. பிரசாத் டைரக்டர்.

அதன்பிறகு பத்மினி பிக்சர்ஸ் பி.ஆர். பந்துலு கிட்ட வந்து சேர்ந்தார்.  முதலில் “ஸ்கூல் மாஸ்டர்” படத்துக்கு வேலை செஞ்சாரு.  அது முதலில் கன்னடத்தில் எடுக்கப்பட்டு, தமிழ், மலையாளம், தெலுங்கு என்று நான்கு மொழிகளிலும் வெளி வந்தது.  நான்கு மொழிகளிலும் சூப்பர்ஹிட். பந்துலுவுடன்  நீண்டகாலம் இருந்தார்.

முதல் டெக்னி கலர் படம் வீரபாண்டிய கட்டபொம்மன்.  லண்டன்ல பிராசஸ் செஞ்சாங்க. அந்தக் காலத்துல கலர் படம்னா நீலம், பச்சை, ரெட் மூணு கலரும் ஒரே நெகடிவ்ல மிக்ஸ் ஆகியிருக்கும்.  டெக்னி கலர்ல அதை தனித்தனியா பிரிப்பாங்க. பிரிண்ட் பண்ணும்போது தனித்தனியா லைட்டிங் அட்ஜஸ்ட் செய்து பண்ணுவாங்க. அது ரொம்ப காஸ்ட்லி.

அப்புறம் ஏ.பி. நாகராஜன் கூட சேர்ந்து நவராத்திரி படம் செஞ்சாரு.  லைட்டிங் மாஸ்க் செஞ்சுதான் எடுத்தார். பேசும் படம் இதழில் கொடுத்த பேட்டியில், ‘எனக்கு இந்தப் படத்துல பேரு கிடைச்சது. ஆனா அதுக்கு  சிவாஜிதான் காரணம். முதல் சேர்ல உக்கார்ந்து ஒரு கதாபாத்திரமா நடிச்சிட்டு போய் அடுத்த கதாபாத்திரமா மேக்கப் போட்டு வந்து முன்ன நடிச்சதுக்கு பாடி லேங்வேஜ்ல ரியாக்‌ஷன் கொடுத்து  நடிக்கணும்” என்று சொன்னார். அதான் உண்மை.

அப்புறம் பக்திப் படம்லாம் ஏபிஎன் எடுத்தார். திருமலை ரகசியம், அகத்தியர்னு நிறைய படங்கள். திருமால் பெருமை படத்துல கீழ பத்மினி சிவாஜி இருப்பாங்க. மேல  பத்து அவதாரத்துல இருப்பார் பெருமாள்.  ஜெமினி ஸ்டூடியோலதான் செட் போட்டு எடுத்தாங்க.  திருமலை தென்குமரி படத்துல எல்லா ஊருக்கும் ஷேத்ராடனம் போவாங்க.  ஒவ்வொரு ஊருக்கும் போகும்போது பிளெயினா மெட்ராஸ் டு திருப்பதி, திருப்பதி டு குருவாயூர்னு கேமரால பேக்ரவுண்ட் ஷுட் பண்ணிட்டாரு. அப்புறம் பேக் புரொஜக்‌ஷன் மெதட்ல பஸ்ஸுக்குள்ள பேசிக்கறதை ஷூட் பண்ணினாங்க, மூணு நாட்கள் வாஹினி ஸ்டூடியோல செட் போட்டு எடுத்தாங்க.  அது தேசிய விருதுக்கும் போனது. ஆனா அப்போ சத்யம் சிவம் சுந்தரம்னு ராஜ்கபூர் படத்துக்கு விருது போனது.

ராஜராஜசோழன் படத்துக்கு ஆனந்த் தியேட்டர் உமாபதிதான் புரொடியூசர். அது முதல் சினிமாஸ்கோப் படம். ஏபிஎன்னோட  பெரிய முயற்சி.  சிட்டில நல்லா ஓடுச்சு.  ஆனா வெளியூர்ல உள்ள தியேட்டர்கள்ள புரொஜக்டர்ல லென்ஸ் செட்டாகாம சரியா வரல.  ஆனா சிவாஜி அற்புதமா நடிச்சிருப்பார்.  அப்போ குமுதம்ல “சிவாஜி நடிப்பைப் பாத்து லென்ஸே பயந்தது”ன்னு எழுதினாங்க.  நாலு பாட்டு ஹிட்டாச்சு.

நானே வருவேன் பாட்டு இங்க ஆவிச்சி ஸ்கூல் பக்கத்துல இருந்த ஷியாமளாஸ் ஸ்டூடியோஸ்லதான் எடுத்தாங்க.  அந்தப் படத்தை நைட் ஷோ பாக்க எல்லாரும் பயந்தாங்க. தெலுங்கு, தமிழ் ரெண்டுலயும் அப்பாதான் செஞ்சாங்க.

அப்போ ஸ்டோரி, ஸ்கிரீன்பிளே, டைரக்‌ஷன் மூணையும் சேர்த்து சினாரியோன்னு சொல்வாங்க.  ஷாட் பை ஷாட் எப்படி எடுக்கறதுன்னு ஷாட் கம்போசிஷன்ல இருந்து எல்லாமே பேப்பர்ல டிஸ்கிரிப்ஷன்  கொடுக்கணும். அது இருந்தாத்தான் ஷுட்டுக்குப் போவாங்க.

ஹிந்தில ‘அப்னா தேஷ்” படம் செஞ்சாங்க. தமிழ்ல வந்த  “நம் நாடு” படத்தை அடிப்படையா வைச்சு ஹிந்தில எடுக்க வீனஸ் பிக்சர்ஸ் எங்க அப்பாவைக் கூப்பிட்டாங்க. மழைல எடுக்கற காட்சிகளை எடுக்கறதை அப்பா கோயம்புத்தூர்ல நல்லா கத்துக்கிட்டாங்க.

“சபாஷ் மீனா” படத்துல பி.ஆர்.பந்துலு தான் டைரக்டர். எங்க அப்பா  கேமராமேன். அதுல “ஆனால் இன்பம்”னு ஒரு பாட்டு வரும். சிவாஜி மழைல பாடுவார். அதை இங்க பரணி ஸ்டூடியோல தான் எடுத்தாங்க.  “நம் நாடு“ படத்துல “ஆடைகள் முழுவதும் நனைய நனைய”ன்னு ஒரு பாட்டு வரும். அந்தப் பாடல் அப்பாதான் எடுத்தாரு. அப்போ அதை எடுத்திட்டிருந்த கேமராமேன் பாதில வேற வேலை காரணமா போய்ட்டாங்க. அப்பாதான் கிளைமேக்ஸ் ஷூட் பண்ணினாங்க.  அதை அடிப்படையா வைச்சு தான் ஹிந்தில “அப்னா தேஷ்” எடுத்தாங்க. ராஜேஷ்கன்னாவும் மும்தாஜும் நடிச்சாங்க.

கர்ணன், சுந்தரபாபு, S.S. லால், ஜி.ஆர். நாதன்,  இவங்க எல்லாரும் அப்பாக்கு அஸிஸ்டெண்ட்டா வேலை பாத்தாங்க. பத்து பன்னிரெண்டு பேரை அவர் தயார் பன்ணிருக்கார். அவர் செட்ல ரொம்ப கூலா வேலை செய்வார். யாரையும் திட்ட மாட்டார். சண்டை போடமாட்டார். அதுக்குக் காரணம் அவருக்குக் கொஞ்சம் திக்குவாய். பேசும்போது கொஞ்சம் தடுமாறுவார்.

அப்பாவுக்கு வயதாக ஆரம்பித்ததும் டைட்டில் சூப்பர் இம்போஸ் பண்றது, டிஸால்வ் பண்றது, டிரெய்லர் பண்றதுன்னு நாங்களே அப்பாவோட செஞ்சுட்டுருந்தோம். அதுக்கான மெஷினை இம்போர்ட் பண்ணாம, அப்பாவே அந்த ஆப்டிகல் பிரிண்டரை உருவாக்கினார்.

இரட்டைவேட காட்சிகளில் ஏதாவது சரியாக எடுக்காமல் போய் விட்டால் மீண்டும் அதை எடுக்க ஆர்டிஸ்ட் கால்ஷீட் கிடைக்காது. அதை தவிர்ப்பதற்காக அவர்கள் செட்டில் அதை வேறுவிதமாக ஷுட் செய்து விட்டு இங்கு வந்து  இந்த மெஷினில் ஒரே ஃபிரேமில் கம்போஸ் செய்வார்கள்.  

நாங்கள் கலைஞரின் பக்கத்து வீட்டுக்காரர்கள். மாடர்ன் தியேட்டர்ஸில் அவர் ஸ்டோரி டிபார்ட்மெண்ட். அப்பா கேமரா டிபார்ட்மெண்ட். எங்களுக்கு எந்தப் பிரச்சினை என்றாலும் அவர் சரி செய்துவிடுவார். எங்கள் வீட்டுக் கல்யாணங்களுக்கு, விசேஷங்களுக்கு நிச்சயமாக வந்து விடுவார்.

அவருடைய படங்களில் எனக்கு மிகப் பிடித்த படம் “சபாஷ் மீனா”. கன்னடத்தில் ஒரு படம் டைரக்ட் செய்திருக்கிறார். ஆனால் அவரால் டைரக்‌ஷனை முழுமையாக எடுத்துக் கொள்ள முடியவில்லை. 

அப்பாவுக்கு மாருதிராவ், மார்கஸ் பர்ட்லே, தம்பு எல்லாரும் மிகவும் நெருங்கிய நண்பர்கள். “

ஒளிப்பதிவாளர் திரு, சி.ஜே.ராஜ்குமார் திரு. சுப்பாராவின் தொழில்நுட்பம் பற்றி இவ்வாறு கூறுகிறார்:

“தென்னிந்தியாவின் முதல் சினிமாஸ்கோப் சுப்பாராவ் செய்தது. ராஜராஜசோழன் திரைப்படம். அந்த முயற்சி முழுமையாக வெற்றியடையவில்லையென்றாலும் குறிப்பிடத்தக்க முயற்சி. அதேபோல் மாஸ்க் வொர்க்ல சுப்பாராவ் தி பெஸ்ட்னு சொல்லலாம்,  லைட்டிங் மாஸ்க், கேமரா மாஸ்க்னு ரெண்டு இருக்கு. லைட்டிங் மாஸ்க்னா கேமரால மாஸ்க் போடமாட்டாங்க. ஒரு கேரக்டர் நடிக்கும்போது லெப்ட்ல இருந்தா அதுக்கு மட்டும் லைட் போட்டு இன்னொரு சைட் முழுமையாக டார்க்கா விட்டுருவாங்க, அடுத்ததாக வலதுபுறம் லைட் போட்டு இட துபுறத்தை மறைத்திருப்பார்கள்.  அதுல அவர் ஒரு மாஸ்டர், ஜாம்பவான்.

டேவிட் லீன் படங்களை ஹாலிவுட்ல Spectacleனு சொல்வாங்க, அதாவது அழகாக காட்சிப்படுத்துதல். அப்படி தமிழ் சினிமாவுல ஒரு பனோரமிக்கான ஃபோட்டோகிராஃபியைக் கொண்டு வந்தது சுப்பாராவ்தான். குறிப்பா கர்ணன் மாதிரியான திரைப்படங்களில்.  அவருக்கு அதற்கேற்ப சாகசம் நிறைந்த படங்கள், சரித்திரப் பின்னணி வாய்ந்த திரைப்படங்கள்னு சரியா அமைஞ்சுதுன்னு சொல்லலாம்…  அதேபோல் அலிபாபாவும் நாற்பது திருடர்களும் திரைப்படத்தில் கேவா கலரை அறிமுகப்படுத்தியதும் இவர்தான். குறிப்பா  ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ்ல கை தேர்ந்தவர்.  நிறைய படங்களுக்கு ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ்கான ஒளிப்பதிவாளராவே அவர் பணியாற்றியிருக்கிறார். அந்தக் காலத்துல அவர் ரொம்ப பாப்புலர்.

மாடர்ன் தியேட்டர்ஸ்ல அப்போது நிறைய வெளிநாட்டு டெக்னீஷியன்ஸ் ஸ்டூடியோ செட்டப்புக்குள்ள இருந்தாங்க. அதனால் அவர்களிடமிருந்து நம் ஒளிப்பதிவாளர்கள் தொழில்நுட்பத்தை கற்றுக் கொண்டார்கள். 

செட்ல கொஞ்சம் கறாராதான் இருப்பார்னு நான் கேள்விப்பட்டிருக்கிறேன். பெரிய பெரிய நடிகர்களே அவரைப் பார்த்து பயப்படுவாங்கன்னு சொல்வாங்க. தொழில்நுட்பத்தின் ஆரம்ப காலங்களில் பிரமாதமான படங்களை இவர்கள்தான் கொடுத்தார்கள் என்பதால் அப்போது செட்டில்  ஒளிப்பதிவாளர்களுக்கான முக்கியத்துவம் இருந்தது.

சுப்பாராவ் பற்றி ஒளிப்பதிவாளர் பசவராஜ் கூறியிருந்த தகவல்களையும் C.J. ராஜ்குமார் பகிர்ந்து கொண்டார்.

ஜெர்மன் ஒளிப்பதிவாளர் போடே கோஷ்வாக்கர் என்பவரிடம் ரோலிஃபிளெக்ஸ் கேமராக்களைக் கையாள்வதில் பயிற்சி பெற்றார். படத்தை எக்ஸ்போஸ் செய்தல், டெவலப் செய்தல் மற்றும் பிரிண்ட் செய்தல் ஆகிய மூன்று அம்சங்களிலும் அவர் நேரடியாகப் பயிற்சி பெற்று தேர்ச்சி பெற்றார்.

மாடர்ன் தியேட்டர்ஸில் அக்காலத்தில் சிக்கலான தொழில்நுட்பம் வாய்ந்த மிச்செல் ஸ்டூடியோ சவுண்ட் கேமராவை இயக்கினார்,  மோட்டார் பொருத்தப்பட்ட Eymo 35mm கேமராவை இயக்குவதில் நிபுணர்…

மெட்ராஸ் சென்ட்ரல் ரயில்நிலையத்தில் சுப்பாராவின் லக்கேஜும், பி.ஆர்.பந்துலுவின் லக்கேஜும் மோதிக் கொள்ள, அவருடைய அறிமுகம் சுப்பாராவுக்குக் கிடைத்தது. அது அவர்களின் நீண்டகால தொடர்புக்கு வழிவகுத்தது.

கண்ணகி திரைப்படத்தில் கோவலன் சிரச்சேதம் செய்யப்படும் தந்திரக் கட்சியை பார்த்த மக்களும், பத்திரிகையாளர்களும் சுப்பாராவைப் பாராட்ட, அதை மறுத்த அவர் அந்தப் பெருமை   மார்கஸ் பர்ட்லேவையே சேரும் என்றார்.  இது அவருடைய  தொழில் நெறிமுறையையும், சக ஊழியர்கள் மீதான மரியாதையையும் காட்டுகிறது.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என நான்கு மொழி திரைப்படங்களிலும் பணியாற்றினார். கன்னடத்தில் “சிம்மசொப்பனா” என்கிற படத்தை இயக்கி டைரக்டராகவும் மிளிர்ந்தார்.

புராணப் படங்கள், நகைச்சுவை படங்கள், மாயாஜாலப் படங்கள், சமூக படங்கள் என அத்தனை வகைமைகளிலும் தன் முத்திரையைப் பதித்திருக்கிறார் சுப்பாராவ். மாறி வரும் தொழில்நுட்பத்திற்கேற்ப தன்னை தகுதிப்படுத்திக் கொண்டு முதல் வண்ணத் திரைப்படம், முதல் சினிமாஸ்கோப் படம் என பல இயக்குநர்களின் புதிய முயற்சிகளுக்கு பக்கபலமாக நின்றவர். அதனாலேயே  தமிழ்த் திரையுலக வரலாற்றில் முன்னோடியாக இருப்பதோடு, இன்றைய இளம்தலைமுறை ஒளிப்பதிவாளர்களுக்கும் மாஸ்டராக  விளங்குகிறார்.

Author Image

ஜா.தீபா

எழுத்தாளர். ‘மேதைகளின் குரல்கள்’ ‘கறுப்புத் திரை’ போன்ற திரைப்படம் சார்ந்த புத்தகங்களையும், “நீலம் பூக்கும் திருமடம்’, ‘மறைமுகம்’ சிறுகதைத் தொகுப்பும் கவனம் பெற்றவை. தொலைகாட்சித் தொடர்களுக்கு திரைக்கதைகள் எழுதி வருகிறார்

Author Image

அகிலா ஸ்ரீதர்

மொழிபெயர்ப்பாளர். உதவி இயக்குநர். எழுத்தாளர். ஆங்கிலப் படங்களுக்கான வசனங்களை சப்டைட்டில் செய்யும் பணியிலும் இருக்கிறார்.

About The Author

The Talkie

The Talkie

See author's posts

Next Post
trendukottaiye_6

அசல் மலபார் பீடி சினிமாக்கள்

Please login to join discussion

Archives

  • Trending
  • Comments
  • Latest
Thug_Life_

Thug Life – ஒரு பார்வை

June 6, 2025
AMADEUS திரைக்கதை

AMADEUS திரைக்கதை

March 15, 2025
start camera

ஸ்டார்ட் கேமரா! வின்சென்ட் மாஸ்டர் – 01

March 19, 2025
Irunda-Pakkam

தொழில்நுட்பத்தின் இருண்ட பக்கங்கள்: திரைப்படங்கள் சொல்லும் உண்மை.

March 16, 2025
Thug_Life_

Thug Life – ஒரு பார்வை

11
rasigamagajanangale

ரசிக மகா ஜனங்களே

7
gurudutt-02

குருதத்தின் ப்யாஸா- உயிர்த்தெழுந்த தேவதை        

5
start camera

ஸ்டார்ட் கேமரா! வின்சென்ட் மாஸ்டர் – 01

4
table top-4-5

டேபிள் டாப் 04 & 05

January 24, 2026
bella darr

பேலா டார் – காட்சியை அனுமதித்தவர்

January 24, 2026
trend-kottaiye-11

ட்ரெண்டு கொட்டாய் 11 -நான் (திரை) காவிய நாயகன்

January 24, 2026
table top-3

டேபிள் டாப் 03

January 24, 2026
The Talkie

சினிமா அற்புதமான ஊடகம். இதனை அறிந்து கொள்ளவும், ரசிக்கவும் உருவாக்கப்பட்டிருக்கிற இணைய இதழ் இது. மேதைகளின் நேர்காணல்கள், திரைக்கதைகள், வெவ்வேறு மொழித் திரைப்படங்கள், ஆளுமைகள், திரைப்படப் புத்தகங்கள் , சினிமா ரசனை என சினிமா உலகத்தோடு இணைந்திட எங்களுடன் இணைந்திடுங்கள்.

Categories

  • I CALL THE SHOTS
  • ஆளுமைகள்
  • இந்தியத் திரைப்படங்கள்
  • உரையாடல்
  • உலகத் திரைப்படங்கள்
  • ஓடிடி திரை
  • கட்டுரைகள்
  • குரு தத் 100
  • டேபிள் டாப்
  • ட்ரெண்டு கொட்டாய்
  • தமிழ்த் திரைப்படங்கள்
  • திரை புத்தகம்
  • திரைக்கதைகள்
  • தொடர்கள்
  • ஸ்டார்ட் கேமரா

Site Navigation

  • About Us
  • Terms and Conditions
  • Privacy Policy
  • Returns and Cancellation
  • Shipping Policy
  • FAQ
table top-4-5

டேபிள் டாப் 04 & 05

January 24, 2026
bella darr

பேலா டார் – காட்சியை அனுமதித்தவர்

January 24, 2026
trend-kottaiye-11

ட்ரெண்டு கொட்டாய் 11 -நான் (திரை) காவிய நாயகன்

January 24, 2026

© 2026 Thetalkie - All rights reserved

Welcome Back!

Sign In with Google
OR

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Sign Up with Google
OR

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • thetalkie
  • ஆளுமைகள்
  • திரைக்கதைகள்
  • உரையாடல்
  • கட்டுரைகள்
    • இந்தியத் திரைப்படங்கள்
    • உலகத் திரைப்படங்கள்
    • தமிழ்த் திரைப்படங்கள்
    • ஓடிடி திரை
  • தொடர்கள்
    • ட்ரெண்டு கொட்டாய்
    • திரை புத்தகம்
    • ஸ்டார்ட் கேமரா
    • I CALL THE SHOTS
    • குரு தத் 100
    • டேபிள் டாப்
  • தொடர்பு
  • Login
  • Sign Up
  • Cart

© 2026 Thetalkie - All rights reserved

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?