ஆரபி ஆத்ரேயா
மன்னிக்கவும், நான் பொறுப்பல்ல, என் நண்பர்கள்தான்!
இந்த தொடரை எங்கிருந்து ஆரம்பிப்பது என்று தெரியவில்லை. கிளிஷே தொடக்கம். ஆனால் அக்மார்க் சத்தியம். ரீவைண்ட் செய்து பார்த்தால், கேம் ஆர்கேட்களில் ஜெயிக்கும் சரம் சரமான ஸ்லாட் மெஷின் டிக்கெட்டுகளைப் போலவே இருந்திருக்கிறது என் வாழ்க்கை. ஜெயித்த டிக்கெட்டுகளுக்கு பல சமயம் பென்சில் டப்பாவும், வெகு சில சமயம் மட்டுமே பெரிய மொசு-மொசு கரடி பொம்மையும் கிடைத்திருக்கிறது. ஆனால் இன்று வரை, ஆட்டம் ஜாலியாகவே இருந்திருக்கிறது.
ஒரு பில்ட்-அப் ஆகச் சொல்ல வேண்டுமென்றால் —
சுருள் கத்தி கைகளில் சுழன்றவாரே தான் இருக்கிறது.
வெளியே வருவது பூனையோ, புலியோ… ஆட்டம் விறு விறுவென்று இருக்க வேண்டும்.அதுதான் இலக்கு.
இருபது வருடங்களாக ப்ரொட்யூசராக இருக்கிறேன். காயத்ரிதான் அருள் வாக்கு போலச் சொன்னார் — “நீ ஏன்பா எழுதக்கூடாது என்று?”
“ஐயோ! கூடவே கூடாது, காயத்ரி” என்றவளை, விடாமல் பாறை போல நின்று எழுத வைத்திருக்கிறார்.
அவருக்குத் தெரியாது,
ஒவ்வொரு முறையும் — பட்ஜெட்ஸ் எழுதுகிறேன், பிட்ச் டாக்கெட்ஸ் எழுதுகிறேன் என்று நான் சொன்னதையெல்லாம் என் எழுத்துத் திறமையாக நினைத்துவிட்டார்.
பாவம், கைண்ட் உமன்!
அதை எல்லாம் படித்தால் புலி கூட கொட்டாவி விடும்.
இந்த விபரீத விளையாட்டில் தீபாவும் சேர்ந்துகொண்டார்.
“ஜெயிச்சிடுவோம் மாறா” என்று மோட்டிவேட் செய்தார்.
ஆகவே, எழுதுவதாக முடிவு செய்தே விட்டேன்!
மீண்டும் சொல்வேன் —
மன்னிக்கவும், நான் பொறுப்பல்ல, என் நண்பர்கள்தான்!
எந்த ஃபில்டரும் இல்லாமல்,
லீனியராக எழுதித் தான் தீர வேண்டும் என்ற கட்டாயங்கள் இல்லாமல்-
கூடிய மட்டும் “ஹமாம் சோப்பு ” நேர்மையோடு மனதில் தோன்றுவதை தோன்றுவது போலவே எழுதப் போகிறேன்.
மற்றபடி உங்கள் தலை எழுத்து! ஆரம்பிக்கலாங்களா!!
Curiosity killed the cat-
இதை “ஆர்வம் பூனையை கொன்றது” என்று டப்பிங் சினிமாவில் வருவது போல தத்து பித்து என்று மொழிபெயர்ப்பு செய்யப் போவதில்லை
நாம் இதை தமிழில், ஆர்வம் அல்லது ஆர்வக் கோளாறு என்று கொள்வோம்.
யோசித்து பார்த்தால், ஆர்வம்தான் எல்லாவற்றையும் உருவாக்குகிறது.இதே ஆர்வக்கோளாறுதான் என்னையும் ப்ரொட்யூசர் ஆக்கியது.
என்னிடம் அடிக்கடி கேட்கப்படும் FAQs —
கேள்வி 1: ஒரு “உமன் ப்ரோட்யூசர்” ஆக எப்படி உணர்கிறீர்கள்?
கேள்வி 2: எப்படி/ எங்கு தொடங்கியது இதெல்லாம்?
கேள்வி 1க்கு — இப்படி பதில் சொல்கிறேன்-
என்னைப் பாருங்கள் —
ஏதாவது டிஃபரென்ட் ஆகத் தெரிகிறதா? நெற்றியில் கொம்பு உண்டா? தயாரிப்பாளர்கள் ப்ளூ மற்றும் பிங்க் பேக்கேஜ்களில் வருபவர்களா என்ன?
ப்ரொட்யூசர்களில் ஆண் என்ன? பெண் என்ன? இன்னும் எவ்வளவு காலத்துக்கு இப்படி மொக்கை கேள்விகள் கேட்பீர்கள் என்று கேட்கவே நினைப்பேன்.
ஆனால் ஜென் மோடுக்கு சென்று-
“உமன் ப்ரோடியூசர்”-னு ஸ்பெஷல் ஜீவராசி எதுவும் இல்லையே என்று சிரித்தபடி நகைச்சுவையுடன் சொல்வேன். (அப்பொழுது என் அமைதியான கண்களில் ஒரு தேஜஸ் மின்னி மறைவதைக் காணலாம்)
வேலை தரும் சந்தோஷத்திலும் நிறைவிலும் ஆண்- பெண் வித்தியாசம் இல்லை. அப்படித்தான் வேலை தரும் டென்ஷனிலும், ஸ்ட்ரெஸ்ஸிலும், மைக்ரேன் ஒற்றைத் தலைவலிகளிலும்.
ஒரு வித்தியாசம் உண்டு — கேரவேன் நிறுத்த முடியாத இடங்களில் சுற்றுப்புற பிரக்ஞையே இல்லாதபடி, இயற்கையோடு ஹாய்யாக “நேச்சர் கால்ஸில் ” ஈடுபட “விமன் ப்ரோடட்யூசர்கள்” இன்னும் கற்கவில்லை.
இப்போது கேள்வி 2க்கு வருவோம் — எப்படி தொடங்கியது இதெல்லாம்?
என்னை கேட்டால், ஆர்வக் கோளாறு தான் எல்லாவற்றுக்கும் ஆணிவேர் என்பேன்.
யோசித்து பார்த்தால் —

ஏபியோஜெனெசிஸ் — பிரபஞ்சத்தின் முதல் உயிர் உருவாக்கமே ஆர்வக் கோளாரின் ரிசல்ட் தான். சில தான்தோன்றி மாலிக்யூல்கள் ஆர்வக் கோளாறினால் ரியாக்ட் செய்ததன் விளைவே முதல் “செல்”.
அதே போல் எங்கேயோ பிப்பெட்டால் சல்ஃப்யூரிக் ஆசிட்டை உறிந்து கொண்டு கெமிஸ்ட் ஆக இருந்திருக்க வேண்டிய நான்- ஆர்வக்கோளாறினால் மட்டுமே ப்ரோட்யூசர் ஆனேன்.
ப்ரோட்யூசர் -இட்ச்- DDBR சுழற்சி
இந்த ஆர்வக் கோளாறுதான் “Producer’s itch”-
எல்லாமே நன்றாக ஸ்மூத்தாக செல்லும் நேரத்தில், சொந்த செலவில் சூனியம் வைப்பது போல், நாமே நம் ஒழுங்கை டிஸ்டர்ப் செய்து நம் மூளையைப் ப்ராண்டி — “அடுத்து என்ன? அடுத்து என்ன? என்று நோண்டி எடுப்பது.
இதனை நான் DDBR என்பேன்.
Disturb, Disrupt, Build, Repeat — இது தான் DDBR.
(கண்டு பிடிப்பு எனது, காப்பிரைட்டும் எனதே)
தமிழில் இப்படியும் சொல்லலாம் —
அமைதி குழப்பு, ஒழுங்கு நொறுக்கு , புதிது புனை, புது சுழற்சி தொடங்கு…
(பழைய கோட்டையெல்லாம் அழிச்சிட்டு, திரும்பவும் ஃபிரெஷ்ஷா, பரோட்டா சாப்பிடற கதை)
DDBR வீலின் – முதல் சுழற்சி
அப்போது எனக்கு
22 வயதிருக்கும். ஜெயா டிவியில் காலை நேர நிகழ்ச்சியின் தொகுப்பாளராக இருந்தேன். வாழ்க்கை சீராக போய்க்கொண்டிருந்து. அது எப்படி போகலாம்? நம் மூளையும் மனதும் சும்மா விடாதே?
DDBR -சுழற்சி ஆரம்பமானது.
“வாட் நெக்ஸ்ட்”- என்று மண்டைக்குள் மணி அடித்தது.
ஒரு நாள் சேனல் ஹெட்டின் ரூமிற்கு சென்று- அவர் என்ன என்று சுதாரித்துக் கொள்வதற்குள் “கட கட” வென்று நான் யோசித்து வைத்து இருந்த “நான்ஃபிக்க்ஷன்” ஐடியாவை பிட்ச் செய்தேன். அவர் எதுவும் சொல்வதற்கு முன்பே, நானே 13 வார ஸ்லாட் ஃபீயின் பொறுப்பையும் எடுத்து கொள்கிறேன் என்று பலமாக தலையாட்டினேன். ஆர்வக்கோளாறு!!
சேனல் ஹெட் மிஸ்டர் முரளி ராமன் ரொம்ப நல்லவர். “இது பெரிய பொறுப்பு. நடுவில் நிறுத்த முடியாது. புலி வால் பிடித்த கதை” என்றெல்லாம் சொன்னார். எனக்கு எதுவுமே எட்டவில்லை. ( என் காதில் கேட்டு கொண்டு இருந்த அண்ணாமலை BGM அவருக்கு கேட்டிருக்க நியாயம் இல்லை)
என்ன நினைத்தாரோ தெரியவில்லை. “அப்ரூவல்” கொடுத்து விட்டார்.
“டாட்டட் -லைனில்” கையெழுத்திட சொன்னார். (கையெழுத்து என்கிற பெயரில் ‘ஆரபி” என்ற பெயரை லேசாக சாய்த்து போட்டேன். ஸ்டைல்!!)
அந்தக் கையெழுத்துதான் நான் பிசினஸ்காக போட்ட முதல் கையெழுத்து. அதுதான் என்னுடைய அடுத்த 20 வருட கால வாழ்க்கை, தொழில், மேரேஜ், குடும்பம், காதோர நரை, கிட்னி-கல் எல்லாவற்றையும் தீர்மானித்தது. புலி வால் பிடித்த கதை தான். ஆனால் சுவரசியம் குறையவில்லை.
சரி இதற்கு முன் நான் ஏதாவது”ஷோ” தயாரித்து இருக்கிறேனா? இல்லை. தயாரிப்பதில் பயிற்சி உண்டா? இல்லவே இல்லை. பின்னே “நெப்போ பேபி”-யா? ப்ளீஸ்!!
என் அப்பா கடைசியாக பார்த்து ரசித்த, இல்லை கேவிக் கேவி அழுத படம் துலாபாரம்.
( டிப் – உங்களுக்கு பிடித்தமான பொருள் தொலைந்து போனால்- துலாபாரம் பாருங்கள். பொருள் கிடைக்காது. நீங்கள் வாழ்க்கையில் தொலைத்ததுக்கு எல்லாம் சேர்த்து அழுத நிம்மதி கிடைக்கும். சாந்தி நிலவும்).
எங்கள் ஃபேமிலிக்கும் மீடியாவுக்கும் அப்படி ஒரு தொடர்பு.
ஆனாலும் நான் மீடியாவிற்குள் குதித்து விட்டேன். எங்கள் முதல் ஷோ ஆட்டோ மொபைல்களை ரெவ்வியூ செய்யும் ஷோ. கார்கள் பற்றி தமிழில் ஒரு ஷோ என்பது, அப்போது மிகவும் புதிது. நல்ல வரவேற்பு கிடைத்தது. நேயர்களின் மெயில்களுக்கு வாரம் முழுக்க மாய்ந்து மாய்ந்து பதில் போட்டோம். தி ஹிந்து நாளிதழில் எங்களை பற்றி என்ட ர்டைன்மெண்ட் பேஜ்-ல் அரைக்கால் பக்கம் எழுதினார்கள். ( இன்றும் என் அம்மா பத்திரமாக வைத்து இருக்கிறாள்).
இதைத் தாண்டிய போனஸ்? ஷோவின் இயக்குநரையே நான் திருமணம் செய்தேன். ப்ரொடக்சன் No 1- எனக்கு TRP யையும், கணவரையும் சேர்ந்து கொடுத்தது. DDBR செகண்ட் ரவுண்டு- விளம்பரக் காதல்
ஒன்றரை வருடம் ” நான் ஃபிக்ஷன்” ஷோஸ் சீராகவே சென்று கொண்டு இருந்தது. DDBR – ன் மறு சுழற்சி ஆரம்பமானது. வாட் நெக்ஸ்ட்? என மண்டைக்குள் மணி அடிக்க தொடங்கியது.
“அட்வெர்ட்டிஸ்ட்மென்ட் ப்ரோடக்சன்” தொடங்கலாம் என்று முடிவு செய்தோம். அதில் பூகோள அறிவு சொல்லிக்கொள்ளும் வகையில் இல்லை.
ஆட்ஸ் பார்த்து இருக்கிறோம். எங்களுக்கு ஆட்ஸ் பிடிக்கும்- இந்த ஸ்ட்ராங் குவாலிஃபிகேஷனை கையில் வைத்து கொண்டு எங்கள் முதல் க்ளையண்ட் கதவை தட்டினோம்
கட் பண்ணா- ” ஆச்சி மசாலா ஆபிஸ் “. அவர்களின் நெய்க்கான விளம்பரம். ஆச்சி நிறுவனர் ஐசக் நல்லவர். ஆனால் “ஸ்ட்ரிக்ட் ஆபீஸர்”. அவருடைய ப்ரீஃப் இதுதான்-
கண்டிஷன்: ஆரோக்கியமான அதிக போஷக்கான, அழகான (இவ்வளவு அட்ஜெக்டிவ்ஸ் மாடுகளுக்கு உண்டு, என்று அன்றுதான் தெரியும்) மாடுகள் ஊட்டி மலை அடிவாராத்தில், அமைதியாக புல் மேய, அதன் கன்றுக்குட்டி அருகிலேயே தாவி குதிக்க, அப்போது சூரியன் மலை இறங்கிக் கொண்டு இருப்பதை காட்சி படுத்த வேண்டும்.
இயற்கையான சூழலில் வளரும் பசு மாடுகளின் பாலில் இருந்து தயாரிக்கப்படும் நெய் என்பதுதான் ப்ரீஃப்
க்ளாஸ் (clause): ரொம்ப சிம்பிள்.” இதை இப்படியே படம் எடுத்தால், திரும்ப மீட் பண்ணலாம். மீதிப் பணமும், அடுத்த ப்ராஜெக்ட்டும் தருகிறேன். இல்லையேல் சிரமம் வேண்டாம் “…
ஓகே வா? என்று கேட்பது போல் தலையாட்டினார். நானும் சம்மதித்தேன்.
எங்களுடைய வளமான எதிர்காலம் ஒரு போஷாக்கான பசுவின் வாலில் கட்டப்பட்டதாக உணர்ந்தேன்!
வேற லெவல் பிரஷர். மூச்சு முட்டும் அளவிற்கு டைட் பட்ஜெட்.
ஒரு நாள் ஷூட்- அதுதான் கட்டும்.
ஒரே ஒரு 16ம்ம் ஃ பிலிம் கேன். நோ பிளான் B. போஸ்ட் ப்ரோடக்சன் னில் எதையும் சரி செய்ய முடியாது.
ஒரே சான்ஸ்- இதுதான் இலக்கு.
தொடங்கியது மாடு பிடி பயணம்
ஐவர் குழுவாக ஊட்டி நோக்கி புறப்பட்டோம்
எங்கள் “கனவுப் பசுக்களைத் ” தேடி. வழி நெடுக ட்ரீம் சீக்குவென்ஸில் – சுவிட்சர்லாந்தின் புல்வெளிகளில், பால் விளம்பரத்தில் வரும் செழுமையான பசுக்களோடு டூயட் பாடுவதைப் போலக் காட்சிகள்.
ஆனால் நிஜத்தில் நிலைமை “பிஹாரில் வெள்ளம் ” டாக்யூமென்டரியைப் பார்ப்பது போல இருந்தது. வத்தலும் தோத்தாலுமாக மாடுகள்-“எப்படி இருந்த நாங்கள் இப்படி ஆயிட்டோம் ” என்று கேட்பதை போல இருந்தது.
8 மணி நேரம் தான். ஒரு ஆரோக்கியமான பசவும் கன்றும் கிடைத்தே ஆக வேண்டும். அனிமல் பிளாநேட்டின் தொலைந்த படக் குழுவினரை போல திரிந்து கொண்டு இருந்தோம். “ஒரு நல்ல இப்படிப் பட்ட மாடு வேண்டுமே என்று (ரெஃபரன்ஸ் இமேஜைக் காட்டி ) பொதுமக்கள், பால்காரர்கள், ஊட்டி குளிருக்கு வந்த தேனிலவுத் தம்பதிகள் ஒருவர் விடாமல் விசாரித்தோம்.
அதற்குள் விஷயம் பரவி விட்டது. குறிப்பிட்ட ஒரு பசுவைத் தேடி, ஒரு குழு சென்னையில் இருந்து கேமராவோடு களமிறங்கி இருப்பதாக பேசிக்கொண்டார்கள்.
ஈமு கோழி, ரைஸ் புல்லிங் போல இதுவும் ஏதாவது ஸ்கேம் ஆக இருக்கலாம் என்று சந்தேகத்துடன் பார்த்தார்கள்.
சரியாக 2 மணி அளவில் எங்கள் கனவுப் பசுவைக் கண்டுபிடித்தோம். பரம திருப்தி.
மாலை 4 மணி – கேமராவை செட் செய்தாயிற்று. “சன் செட் ” இன்னும் கொஞ்ச நேரத்தில். கோல்டன் ஹவர் ஷாட் எடுக்க வேண்டும். மாடு ஒத்துழைத்தது. ஆனால் கன்றுக்குட்டி துள்ளவே இல்லை. அழிச்சாட்டியமாக ஒரே இடத்தில் நின்று பழி வாங்கியது.
என்னென்னவோ செய்து பார்த்தோம்.
ஃப்ரேஷ் புல் கட்டை காட்டினோம். ஆளாளுக்கு வெவ்வேறு பிட்ச்சில் “மா… மா…” என்று கத்தினோம். நான் கேரட் ஆசை கூட காட்டினேன் (ஊட்டியில் வளர்ந்த மாடு ஆயிற்றே).
டைம் கரைந்து கொண்டிருந்தது. கன்றுக்குட்டிப் பழியாய் நின்றது. நான் மனதுற்குள்
“ஓ. ஜி கௌ-பாய்” ராம ராஜானை மனதில் நினைத்து “ஷெண்பகமே- ஷெண்பகமே பாட்டுக் கூட பாடினேன்.
கரெக்ட்டாக சூரியன் மறையும் தருவாயில்
கன்றுக் குட்டி குதித்தே விட்டது. என் கணவர் டைரக்டர் “சூப்பர் ” என்றார். ஆனால் கேமரா மேன் ஒன்ஸ் மோர் கேட்டார். வந்த எரிச்சலில் “அதை கன்றுக் குட்டியிடம் கேளுங்கள்” என்றேன். ( மனிதர் இன்னும் நல்ல நண்பர். மும்பையில் பெரிய கேமரா மேன்). ஆச்சரியம்!கன்றுக்குட்டி ஒன்ஸ் மோர் “கொடுத்து. வெற்றி நாங்கள் சியர்சினோம்.
க்ளையண்ட் வந்தார். ஒரு முறைக்கு மூன்று முறை படத்தை பார்த்தார். எங்கள் உயிர் வாயில் இருந்தது. ” சூப்பர் மாடு.. சூப்பர் படம்..நாளைக்கு ஆபீஸ் வாங்க ” என்று உற்சாகமாக சொன்னார்.
கன்றுக்குட்டி மட்டும் துள்ளவில்லை- நானும் தான்.
கன்றுக்குட்டி குதித்த அந்த மொமெண்ட் -என் வாழ்க்கையின் அடுத்த கட்டங்களை தீர்மானித்தது. முகத்தில் சேறும், தலையில் புழுதியும், நரம்பெல்லாம் அட்ரெனல் ரஷ்ஷும் இருக்கும் இந்தக் களம் தான் என் களம் என்று முடிவு செய்தேன்.
20 வருடங்களில் 700க்கும் மேல் விளம்பரங்கள், பிராண்டட் ஷோஸ், 8 வெப் சீரிஸ் என்று தொடர் ஆர்வக்கோளறினால் தெரியாதவற்றுகள் எல்லாம் நுழைந்து ஒரு உருவகமான பசுவை தேடிக்கொண்டே இருக்கிறேன்.
நீங்கள் கேட்பீர்கள்-
ஆர்வம் மட்டும் போதுமா? பயிற்சி இல்லமால் எதில் வேண்டுமானாலும் ஜெயிக்கலாமா? – யார் சொன்னது? குருட்டுப் பூனை விட்டத்தில் பாய்ந்த கதையாகி விடும். ஆர்வம் தொடக்கப்புள்ளி மட்டுமே. ஒரு விஷயத்தில் நம்மை செலுத்துவதற்கு மட்டுமே. பயிற்சி இல்லையென்றால் முயற்சி பல மடங்காக வேண்டும். வெறுப்படைய வைக்கும் தருணங்கள் வரும். விலகி எங்காவது மாடு மேய்த்துப் பிழைக்கலாமே என்று கூட தோன்றும். வாழும் மந்திரம் என்ற தலைப்பில் திருமூலர் போல ஃபிலோசோஃபி கவிதை எழுத வைக்கும்.
Been there! Done that!
ஆனால் இதையெல்லாம் தாண்டி துடுப்பு இட வேண்டும். ஓடம் சீராக செல்லத் தொடங்கும்.
சேஃப் சோன் என்று தெரியும் போது. விழித்துக் கொண்டு..
மறுபடியும் ஓட்டத்தின்-
அமைதி குழப்பி,
ஒழுங்கை நொறுக்கி,
புதிய DDBR சுழற்சியை தொடங்க வேண்டும்.
( இதற்கு ஒரு குண்டு கட்டு தைரியம் அவசியம்).அப்பொழுது தான் புதியது
புனைய முடியும்.
அல்லது குறைந்த பட்சம், ஊட்டி மலைப்பாதைகளில் கேரட்டோடு, அடுத்த அபூர்வமான கன்றுக்குட்டியைத் தேடி ஓடவாவது முடியும்.
ஓட்டம் தொடரும். DDBR சக்கரம் சுழலும்.
தொடரும்..











