ராம் இந்திரா
மனிதர்கள் திரைப்படம் கதை உருவாக்கத்திலிருந்து திரைக்கு வருவது வரை நான்கு வருடங்களுக்கும் மேல் எடுத்துக்கொண்டது. கொரோனாவின் ஆரம்ப காலகட்டம்தான் ‘மனிதர்கள்’ திரைப்படத்திற்கான ஆரம்பம். சரியாகப் பத்து வருடங்களுக்குப் பிறகு, கிட்டத்தட்ட ஒரு வருடம் சொந்த ஊரான திண்டுக்கல்லில் இருக்கக் கூடிய வாய்ப்பு எனக்கு உருவானது.
பள்ளிப்படிப்பை முடித்ததும் சென்னை அரசு கவின் கலைக் கல்லூரியில் (ஓவியக்கல்லூரி) சேர்ந்து பயில ஆரம்பித்தேன். கல்லூரிக்கு வந்த பிறகு அயல் மொழித் திரைப்படங்கள் எனக்கு அறிமுகமானது. The Way Home, Children Of Heaven போன்ற திரைப்படங்கள் வழியாக ஆரம்பித்து City Of God, Requiem For Dream போன்ற படங்களின் மூலம் மாற்று சினிமா உணர்வு மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது. இயக்குநராக ஆக வேண்டும் என்ற எண்ணமும் தீவிரமெடுத்தது. கல்லூரியை முடித்து பல ஆண்டுகள் நடைமுறை உலகம் எதிர்பார்க்கும்படியான குறிப்பிட்ட எதுவும் செய்யவில்லை. முழு நீளத் திரைப்படத்தில் பணியாற்றும் வாய்ப்பும் அமையவில்லை. நண்பர்கள் சேர்ந்து குறும்படங்களை எடுத்தோம். குறும்படங்கள் பெருவாரியான மக்களை சென்றடையவில்லை என்றாலும் அது மிக முக்கியமான பயிற்சியாக எனக்கு அமைந்தது. திரைப்படமெடுக்கும் தன்னம்பிக்கையையும் உருவாக்கியது. (குறும்படங்கள் : சிக்கன் ரைஸ்-2017, லைன்-2018, இறகு-2020)
எப்போதும் அதீத கற்பனை, சைக்காலஜிக்கல் த்ரில்லர் மற்றும் சர்ரியலிசக்கதைகளை யோசித்துக்கொண்டிருந்த என்னை பாலு மகேந்திரா, அப்பாஸ் கியரோஸ்தமி, நூரி பில்கே சைலான், வாங் கர் வாய், மைக்கேல் டுடோக் டிவிட் போன்ற இயக்குநர்களின் திரைப்படங்கள் திசைமாற்றின. பெரிய ஆர்ப்பாட்டங்கள் இல்லாமல் அவர்கள் திரைப்படமெடுக்கும் விதமும் என்னைக் கவர்ந்திழுத்தது. அதைப்போல நண்பர்களுடன் இணைந்து நாமும் திரைப்படத்தை இயக்க வேண்டும், குறைந்த செலவாகவும் இருக்க வேண்டும் என்றும் முடிவு செய்தேன். கொரோனா காலத்தில் அதிக நாட்கள் சொந்த ஊரில் இருந்ததால், எனது ஊரின் நிலக்காட்சிகள், வெப்பம், உடல் மொழி, மக்களின் பேச்சு வழக்கு அனைத்தையும் என்னால் உணர்வுடன் உள்வாங்க முடிந்தது. அவை என்னை வெகுவாக ஈர்த்தன. என்னைச் சுற்றி நடந்த நிகழ்வுகளும் குற்றங்களும் நான் கேட்டறிந்த தகவல்களும் கதைகளாக உருவெடுக்க ஆரம்பித்தன. அவற்றின் தொகுப்பே மனிதர்கள்.
இக்கதை உருவாகும் நேரத்திலிருந்து அது முடியும் வரை நான் எந்த விதக் கட்டுப்பாடுகளுக்குள்ளும் செல்லவில்லை. தன்னியல்பில் தோன்றி வந்ததே இந்தக்கதை. இதை முடித்ததும் நண்பர்களிடம் சொல்ல, அனைவருக்கும் இந்தக்கதை பிடித்திருந்தது. ஆனால், எந்தத் தயாரிப்பாளரும் இதைத் திரைப்படமாக்க முன்வருவார் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. ஆனால், இந்தக் கதை சுவாரஸ்யமாக இருப்பதாகக் கூறி நண்பர்கள் தயாரிப்பாளரிடம் முயற்சிக்கலாம் என்று சொல்ல நானும் இரண்டு மூன்று பேரிடம் சொன்னேன். ஆனால் சொல்லி வைத்தால் போல மூன்று பேரும், “கதை நல்லா இருக்கு, ஆனால் ஐந்து பேர் முக்கியக் கதாப்பாத்திரத்தில் இருக்கிறார்கள். சிங்கில் லீடாக ஹீரோயிசத்துடன் இருந்தால் நன்றாக இருக்கும்.” என்றார்கள். அதன் பிறகு நான் யாரிடமும் கதை சொல்லவில்லை.
வீட்டில் ஐந்து லட்சம் ரூபாய் பணம் கேட்டிருந்தேன். அதை வைத்துக்கொண்டு, நண்பர்களிடம் இருக்கும் சோனி ஏ 7 iii கேமராவை எடுத்துக்கொண்டு, ஒரு கார், மற்றும் ஐந்து நடிகர்களைக் அழைத்துக்கொண்டு நண்பர்கள் குழுவுடன் படப்பிடிப்பில் இறங்கத் திட்டமிட்டேன். ஆனால் படமும் தயாராவதற்கு சற்றுத் தாமதமாகிக் கொண்டிருந்தது. ஆனாலும், உள்ளுணர்வு, எப்படியும் இந்தப்படம் தயாராகிவிடும் என்று ஒரு தூண்டுதலைக் கொடுத்துக்கொண்டே இருந்தது. தம்பிகள் இருவர் உதவியாளர்களாக வேலை செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். அந்தச் சூழலில் தான் நான் ராஜேந்திர பிரசாத் அண்ணாவை சந்தித்தேன். ஓவியக்கல்லூரி படிக்கும் காலத்தில் சந்தித்த அவரை பத்து வருடங்களுக்குப் பிறகு சந்தித்தேன். அடையாளம் கூட முதலில் தெரியவில்லை.
நண்பர்கள் அனைவரும் உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கும்போது, “என்ன செய்றிங்க?” என்று கேட்டார். நான் எனது இன்டிபென்டன்ட் சினிமா ஐடியாவை சொன்னேன். உடனே ஒன்றரை லட்சம் ரூபாய் பணத்தை எடுத்துக்கொடுத்தார். “வேலையை ஆரம்பி.. நான் என்னால முடிஞ்சத மேற்கொண்டு தர்றேன்.” என்று சொன்னதும் எங்களுக்குக் கலக்கமாகிவிட்டது. அப்போது அங்கிருந்த நண்பர்கள் தரணிதரனும் யுவராஜும், தாங்களும் சில லட்சங்கள் பணம் தருவதாக சொல்ல, லண்டனில் இருக்கும் நண்பர் நவீனும் இதில் இணைந்தார். இந்த விசயம் எங்களது நட்பு வட்டத்தில் பரவியது. மேலும் பல நண்பர்கள் மற்றும் எனது உறவினர்கள் எனக் கூட்டம் பெரிதாக ஆரம்பித்தது. “ஸ்டுடியோ மூவிங் டர்ட்டில்” தயாரிப்பு நிறுவனம் உருவெடுத்தது.

‘மனிதர்கள்’ திரைப்படத்தின் ஆரம்பக்கட்டப் பணிகளைத் துவக்கினோம். திண்டுக்கல்லிலேயே முழுப் படப்பிடிப்பையும் முடிப்பது என்று முடிவு செய்தோம். ஒன்றரை மாதங்களுக்கு லொக்கேஷன் தேடும் பணிகள் நடந்தது. அதையொட்டி கதாபாத்திரத் தேர்வும் நடந்துகொண்டிருந்தது. இதற்கு இடையே ‘ஸ்ரீ க்ரிஷ் பிக்சர்ஸ்’ தயாரிப்பாளர் சாம்பசிவம் அவர்களும் இதில் தயாரிப்பாளராக இணைந்தார். அது மேற்கொண்டு எங்களுக்கு வலுசேர்ப்பதாக அமைந்தது. சோனி ஏ 7- லிருந்து ரெட் கொமடோவுக்கும் அதிலிருந்து பின்பு பேனாசோனிக் வேரிகேமுக்கும் நாங்கள் முன்னேறினோம். பெரிய சமரசங்கள் எதுவும் செய்யக்கூடாது. ஆனால் கிடைத்த பணத்திலும் படப்பிடிப்பை நடத்தவேண்டும். அதற்காக நாங்கள் நிறைய திட்டமிட வேண்டியிருந்தது.
அஜய் ஆபிரஹாம் ஜார்ஜ் ஒளிப்பதிவு செய்தார். முழுக்க இரவில் நடக்கும் கதை என்பதால் ஒளியமைப்பு மற்றும் வண்ணங்கள் குறித்த பல ஆய்வுகளை மேற்கொண்டோம். படத்தின் காட்சிகள் 70 சதவீதம் காரினுள்ளேயே நடப்பதால் இதுவரைக் காரை வைத்து எடுக்கப்பட்ட படக் காட்சிகளிலிருந்து விலகி புதுமையான காட்சிகளை உருவாக்க முயற்சித்தோம். அதற்காக ‘லோ லோடர்’ என்ற சாதனத்தை உருவாக்கினோம். இருபதடி நீளம் கொண்ட அந்த சாதனத்தின் மீது காரைப் பொறுத்தி அதைச் சுற்றிலும் ஒளிப்பதிவாளர் குழு நின்று படம் பிடிப்பது போல அமைத்திருந்தோம். அது பிக்கப் வேனால் இழுத்துச்செல்லப்படும் போது படப்பிடிப்பை நிகழ்த்தினோம். இதில் கலை இயக்குனர் மகேந்திரனின் பங்களிப்பு முக்கியமானது. இந்த அமைப்பின் மூலம் கார் நகர்ந்துகொண்டிருக்கும்போதே ஒரு கதாபாத்திரத்திலிருந்து மற்றொரு கதாபாத்திரத்திற்கு கேமராவை நகர்த்த முடிந்தது. இந்த அசைவுகள் கதாபாத்திரத்தின் பதட்டமான உணர்வுகளை திரையில் காட்சிப்படுத்த மிகவும் உதவியாக இருந்தது. மிட்சுபிஷி லேன்சர் கார் எங்களது கதைக்குப் பொருத்தமாக அமைந்தது. அந்தக் காரின் ஒட்டுமொத்த சீட்டுகளையும் எளிதாக கழற்றி மாட்டுவது போலத் தயார் செய்து கொண்டோம். இதனால் நேர விரயமாகாமல் உடனுக்குடன் கேமராவை இடம் மாற்றி படம் பிடிப்பதற்கு ஏதுவாக இருந்தது.
நடிகர்கள் கபில் வேலவன், தக்ஷா, குணவந்தன், அர்ஜுன் தேவ் சரவணன், சாம்பசிவம் என இவர்கள் ஐந்து பேரையும் ஸ்க்ரீன் டெஸ்ட் வைத்துத் தேர்வு செய்தோம். அனைவரும் பரிச்சயம் இல்லாத முகங்களாக இருக்கவேண்டும் என்று நான் தீர்மானமாக இருந்தேன். அடிப்படையில் இந்தப்படம், ‘நாம் முகம் தெரியாத ஐந்து நபர்களோடு இரண்டு மணி நேரம் பயணித்தால் எவ்விதமான அனுபவத்தைப் பெறுவோமோ அந்த உணர்வனுபவத்தைக் கொடுக்க வேண்டுமென்பதே எங்களது எண்ணம். அதனால் பார்வையாளர்களுக்கும், நடிகர்கள் ‘ஸ்ட்ரேஞ்சர்’களாகவே இருந்தால் சரியாக இருக்குமென்று புது முகங்களை முக்கியக் கதாப்பாத்திரங்களாக்கினோம். இடையே ஒரு நண்பர் கொஞ்சம் பிரபலமான நடிகரை வைத்து எடுப்பதானால் தானும் நாற்பது லட்சம் முதலீடு செய்வதாக சொன்னார். இருந்தும் எனக்கு அதில் உடன்பாடு இல்லை. இந்தக்கதைக்கு அது பொருத்தமாக இருக்காது என்று மறுத்துவிட்டேன்.
படப்பிடிப்பிற்கு இருபத்தைந்து நாட்களுக்கு முன்பாகவே நடிகர்கள் அனைவரையும் திண்டுக்கல்லுக்கு அழைத்து சென்றோம். ஒவ்வொருவரும் வேறு வேறு ஊர் என்பதால் திண்டுக்கல்லின் பேச்சுவழக்கை நடிப்பில் கொண்டுவருவதற்காக அவர்களுக்குப் பயிற்சியளித்தோம். பஸ் ஸ்டாண்ட், மார்க்கெட் என மக்களோடு மக்களாக சுற்றித்திரிந்தார்கள். தினமும், எந்தக் காட்சியை எந்த லொக்கேஷனில் படம்பிடிப்போமோ அங்கேயே சென்று ரிகர்சல் செய்து பார்த்தோம். இந்தப் பயிற்சியால் அவர்களுக்குள் காட்சியைப் பற்றிய தெளிவான புரிதல் உருவானது. அவர்களுக்கிடையேயான நட்பும் இயல்பாகவே உருவானது இதனால் கதாபாத்திரங்களுக்குள் இருக்கும் தொடர்பு ஒரு நம்பகத்தன்மையை ஏற்படுத்தியது. மேலும் இப்பயிற்சி, குறிப்பிட்ட நேரத்திற்குள் ஒரு காட்சியை முடிப்பதற்கும் எங்களுக்கு உதவியாக இருந்தது. இன்றைய சூழலில் பல நடிகர்கள் ரிகர்சல் தேவையற்ற ஒன்றாகக் கருதுவது வருத்தமளிக்கக்கூடியதே. நடிகர்களின் பங்களிப்பு இருக்கும் ஒவ்வொரு நாளும் பல லட்சங்கள் மற்றும் கோடிகளாகக் கணக்கிடப்படுகிறது. பிரபலமான நடிகர்களாக இல்லாமல் இருந்தது ரிகர்சலுக்கு எங்களுக்கு உதவியாக இருந்தது.
எடிட்டர் தின்சாவும் படப்பிடிப்புத் தளத்தில் எங்களுடன் இருந்தார். ஒவ்வொரு நாளும் எடுக்கப்பட்ட காட்சிகள் எடிட்டரால் சரிபார்க்கப்பட்டு ஆலோசனையும் பெறப்பட்டது. முதல் நாள் காட்சியாக நாங்கள் திருவிழாவைப் படம்பிடித்தோம். ஒட்டுமொத்த மக்கள் கூட்டமும் மாலை ஆறு மணிக்கு கூடிவிட்டார்கள். ஆனால் நாங்கள் அந்த சீனின் முதல் ஷாட்டிலிருந்து படப்பிடிப்பை ஆரம்பித்ததால் மக்கள் கூட்டம் வரும் ஷாட்டிற்கு நாங்கள் வருவதற்கு இரவு 1 மணியாகிவிட்டது. அத்தனை கூட்டமும் கிளம்பிவிட்டது. தவறான முடிவை எடுத்துவிட்டோமோ என்ற எண்ணம் எங்களுக்குள் படபடத்துக்கொண்டிருந்தது. அப்போது ஊரின் கோவில் மைக்கில் ஒருவர் “நம்ம பய படம் பண்றான் வாங்க.. நம்ம தான இருந்து ஒத்துழைப்பு கொடுக்கனும். எல்லாரும் வாங்கப்பா.” என்று சொன்னதும், நாங்கள் எதிர்பார்க்கவில்லை, மக்கள் அனைவரும் மறுபடியும் வந்துவிட்டார்கள். விடியற்காலை 3 மணி வரை படப்பிடிப்பை நடத்தினோம். அன்று மட்டும் இல்லை ஒட்டுமொத்த படப்பிடிப்பிலும், ஒவ்வொரு ஊரிலும் மக்களின் ஒத்துழைப்பும் ஆதரவும் எங்களுக்குக் கிடைத்தது மிகப்பெரிய பலம்.
நான் திரைக்கதையை ஃபார்முலாக்களின் வழி அணுகவில்லை. தன்னியல்பில் எனக்கு சரியெனத் தோன்றும் முறையில் தான் முழுத் திரைக்கதையையும் அமைத்தேன். மொத்தமாக மனிதர்களில் 15 சீன்கள் மட்டுமே இருந்தன. A B என்று ‘சப் சீன்’களை சேர்த்தால் 18 சீன்கள். எனவே ஒவ்வொரு நாளும் ஒரு லொக்கேஷன் என்று சரியாக இருந்தது. இருபது நாட்களில் ஒட்டுமொத்தப் படப்பிடிப்பும் முடிந்தது.
மழை பெய்யக்கூடிய இறுதிக் காட்சி மட்டும் மூன்று நாட்கள் படம்பிடித்தோம். மழையை உண்டாக்குவதற்கான ப்ரத்யேக உபகரணங்களை பரிசோதனை முறையில் உருவாக்கினோம். படத்தில் முதல் மற்றும் இறுதிக்காட்சி இரண்டும் ‘டே ஃபார் நைட்’ முறையில் பகல் வெளிச்சத்தில் ஒளியமைப்பு செய்து அவற்றை கிரேடிங்கில் இரவுக் காட்சிகளாக மாற்றினோம். நிறைய படங்களில் இரவுக் காட்சிகள் நீல நிறத்தில் இருக்கும். இல்லையென்றால் பிரம்மாண்டமாக ஒளியமைத்திருப்பார்கள். நாங்கள் இரண்டையும் தவிர்த்துப் பரிசோதனை முயற்சியை மேற்கொண்டோம். இரவு நேரம் யதார்த்தமாகவும், வண்ணங்கள் தெரியும்படியும் இருக்கவேண்டுமென்று முடிவு செய்தோம். மிகவும் சவாலாக இருந்தது. ஐம்பது திரைப்படங்களுக்கும் மேலாக கலர் கிரேடு செய்த ஒரு கலரிஸ்ட் மனிதர்களுக்கும் வேலை செய்தார். 75 ஆயிரம் முன்பணம் கொடுத்தால் தான் வேலையை ஆரம்பிப்பேன் என்று சொன்னார். நாங்களும் கொடுத்து ஆரம்பித்தோம். ஆனால் அவர் ஒரு வாரத்தில் க்ரேடு மொத்தமாக முடித்துவிடலாம் என்ற யோசனையோடு வேலையை ஆரம்பித்தார். சில மணி நேரங்களில், நாங்கள் எதிர்பார்த்த நுனுக்கங்கள் எதுவும் சாத்தியமில்லை என்று சொல்லி எங்களை அலட்சியப்படுத்தினார். நாங்கள் அவரை வேண்டாமென்று சொல்லிவிட்டோம். வசந்த் என்கிற அறிமுகக் கலரிஸ்ட்டை வைத்து மறுபடியும் வேலையை ஆரம்பித்தோம். மூன்று மாதங்கள், எந்த சமரசமும் இன்றி கலர் கிரேடிங் நடந்து முடிந்தது. நாம் என்னதான் மெனக்கெட்டாலும் இந்த இரவுக் காட்சிகள் ஒரு சில நல்ல தியேட்டர் ப்ரொஜக்ஷன்களில் மட்டுமே சிறப்பாக இருந்தது. மற்ற இடங்களில் மிகவும் இருட்டாக, வண்ணங்கள் திரிந்து காணப்பட்டது. அப்போது தான் தியேட்டர் ப்ரொஜக்ஷன் குவாலிட்டியைப் பற்றித் தெரிந்துகொள்ள முடிந்தது.
சவுண்டு எஃபெக்ட்ஸிலும் இதே அனுபவமே காத்திருந்தது. சவுண்ட் டிசைனர் வேலையை முடித்து எங்களிடம் போட்டுக் காண்பித்தார். நிறைய மாற்றங்கள் எனக்குத் தேவைப்பட்டது. மேலும் எனக்கு அவரது வேலையில் திருப்தியும் இல்லை. இதைச் சொன்னதும் நுணுக்கமான, நீங்கள் கேட்கக்கூடிய வேலைகளை ஜப்பானில் இருக்கும் கலைஞர்கள் தான் செய்வார்கள் என்று அவர் சொல்ல, ஒட்டுமொத்த சவுண்டையும் வேறு ஒருவரை வைத்து மறுபடியும் உருவாக்கினோம். முதல் படம் எடுக்கும் நபர்களை இந்தத் திரையுலகில் இருக்கும் முக்கால்வாசி சீனியர் டெக்னீஷியன்கள் டீல் பண்ணும் விதம் வருத்தமளிக்கக் கூடியதே!
இதில் விதிவிலக்காக எங்களை சிலர் ஊக்கப்படுத்தவும் செய்தார்கள். அதில் முக்கியமானவர் பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா அண்ணன். முதலில் படத்தில் இசையே வேண்டாம் என்று நினைத்தோம். பிறகு அந்தந்த காட்சிக்குத் தொடர்புடைய சத்தங்களை இசைக்கோவையாக மாற்றலாம் என்று முடிவு செய்தோம். இசையமைப்பாளர் அனிலேஷ் எல் மேத்யூ இதற்காக நிறைய காலத்தை செலவிட்டார். அதே போல் முதலில் ஜிபிரிஷ் பாடல் ஒன்றை படத்தில் வைத்தோம். பிறகு அதுவும் வரிகள் கொண்டதாக உருப்பெற்றது.
குறும்படங்களிலிருந்தே ஒரு விஷயம் என்னைத் துரத்திக்கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு துறையிலும் இரண்டு மூன்று டெக்னீஷியங்களைக் கடந்தே நான் நினைக்கக் கூடியதை ஓரளவு எட்டிப்பிடிக்க முடிந்திருக்கிறது. அப்போது தோன்றும்., “வாழ்க்கையே, சினிமாதான்” என்று யார் இருக்கிறாரோ அவரோடு சேர்ந்து வேலை பார்க்கவேண்டும் என்று. அப்படித்தான் திரைப்படத்திற்கும் நினைத்து வேலையை ஆரம்பித்தோம். ஆனால் இப்போது, “சினிமாதான் வாழ்க்கையே” என்றிருந்தாலும் அதன் மீதான மரியாதையும் கலை ஆர்வமும் குறையாத நபர்களை மட்டுமே தேடத் தோன்றுகிறது.
நாங்கள் ஓவியக்கல்லூரியின் மாணவர்கள், எங்களது எண்ண ஓட்டத்தை கேன்வாசில் ஓவியமாக வரைவதைப்போலவே, கட்டுப்பாடுகளின்றி இத்திரைப்படத்தையும் உருவாக்கியிருக்கிறோம்.
தற்போது ஓடிடி தளங்களில் படம் வெளிவந்திருக்கிறது. முகமறியாத நபர்களிடம் இருந்து தொலைபேசி அழைப்புகள் வருகின்றன. அவர்கள் படத்தைப் பாராட்டுகிறார்கள். சமூக வலைதளங்களில் படம் குறித்து பரவலாக எழுதி வருகிறார்கள். ‘மனிதர்கள்’ மக்களிடம் சென்று சேர்ந்து கொண்டிருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.
நிறைய இடங்களில் கால விரயமும் பண விரயமும் மனச்சோர்வும் எங்களை ஆட்கொண்டாலும்., திரைப்படம் ஒவ்வொரு நாளும் மெதுமெதுவாக அது தன் வடிவத்தை அடைந்து கொண்டே வரும் தருணங்களை நாம் நேரடியாக எதிர் கொள்கையில், காலமும் சூழலும் மனிதர்களாகிய நாமும் சேர்ந்து ஆத்மார்த்தமாக உருவாக்கும் ஒரு படைப்பிற்காக எத்தனைத் துயரங்களையும் தாங்கிக் கொள்ளலாம் என்றே தோன்றுகிறது.
‘மனிதர்கள்’ சிறந்த அனுபவத்தையும் பல நல்ல மனிதர்களையும் தேடிக் கொடுத்துள்ளது.
‘மனிதர்கள்’ திரைப்படம் தற்போது AHA மற்றும் SUN NXT ஓடிடி தளங்களில் காணக்கிடைக்கிறது.











