கார்த்திக் அருள்
தலைப்பில் உள்ளது போல் நாராயணீ என்ற அம்மாவின் மூன்று மகன்கள் (விஸ்வநாதன், சேது, பாஸ்கர்) பற்றிய கதை. மரணப் படுக்கையில் இருக்கும் அம்மாவைத் தம் பூர்வீக வீட்டில் குடும்பத்துடன் காண வரும் சகோதரர்கள், அவர்கள் உறவுகளில் உள்ள விரிசல்கள், மனங்களில் உள்ள விகாரங்கள் போன்றவற்றைச் சிறப்பாகப் படமாக்கியுள்ளார் அறிமுக இயக்குநர் ஷரண் வேணுகோபால். வழக்கமான 3-Act structure-ல் இல்லாமல் மிக யதார்த்தமான நிகழ்வுகளின் தொகுப்பாக ஒரு Slice of Life Drama-வாகக் காட்டியிருப்பதால் மிக நிதானமாகவே நகர்கிறது. ஆனால் ஆழமும் அடுக்குகளும் கொண்ட காட்சிகளால் அசர வைக்கிறது.
மூன்றாவது மகன் பாஸ்கரின் வருகையில் படம் தொடங்குகிறது. முஸ்லிம் பெண்ணைக் காதலித்து திருமணம் செய்ததால் குடும்பத்தினரின் வெறுப்புக்கு உள்ளாகி வீட்டை விட்டு வெளியேறி லண்டனில் செட்டில் ஆகியிருக்கிறான். 24 வருடங்கள் கழித்து தன் இரண்டாவது அண்ணன் சேது அழைத்து அம்மாவின் கடைசி ஆசையை நிறைவேற்ற வரச் சொன்னதால் மனைவி நஃபீஸா, 20 வயது மகன் நிகில், 2 வயது பெண் குழந்தை தனுஜாவுடன் வருகிறான். வெண்டிலேட்டரில் எவ்வித அசைவுமின்றி ஊசலாடிக் கொண்டிருக்கும் அம்மாவின் உயிர் நிம்மதியாக தன் சொந்த வீட்டில் பிரியட்டும் என்று கொயிலாண்டியில் உள்ள தம் பூர்வீக வீட்டிற்கு (தரவாடு) அழைத்துச் செல்கிறார்கள்.
இத்தனை வருடங்கள் கழித்து வந்தாலும் மூத்தவன் விஸ்வநாதனுக்கு பாஸ்கரன் வந்ததில் அத்தனை உவப்பில்லை. அவன் மகனை இந்துவாக வளர்க்கிறானா அல்லது முஸ்லிமாக வளர்க்கிறானா என்பதில்தான் ஆர்வம். விஸ்வநாதன், மனைவி ஜெயஸ்ரீ, MA படிக்கும் மகள் ஆதிரா மூவரும் விடுப்பு எடுத்து வந்திருக்கிறார்கள். ஜெயஸ்ரீயும் நஃபீசாவும் முதன் முறை சந்தித்தாலும் சகஜமாக உரையாடுகிறார்கள். ஆதிராவுக்கும் நிகிலுக்கும் இடையே நட்பு மலர்கிறது. பாஸ்கரும் விஸ்வநாதனும்தான் ஒருவித இறுக்கத்துடனே இருக்கிறார்கள். இறுக்கமான சூழ்நிலையை இலகுவாக்க பாஸ்கர் கொண்டு வந்த அயல்நாட்டு மதுபானம் உதவுகிறது. ஜெயஸ்ரீயும் நஃபீசாவும் அவர்களுடன் இணைந்து சகஜமாக மது அருந்தும் காட்சி ஆச்சர்யப்படுத்துகிறது!
தன் பெயருக்கு ஏற்றாற்போல் அந்த உறவுகளுக்குப் பாலமாக இருப்பவன் ‘சேது’. சிறுவயதில் டிஸ்லெக்சியா போன்ற கற்றல் குறைபாட்டால் அதிகம் படிக்காமல் சொந்த ஊரிலேயே தன் அம்மாவின் பெயரில் மளிகைக் கடை வைத்துள்ளான். பாஸ்கர் கலப்புத் திருமணம் செய்துகொண்ட செய்தியால் சேதுவுக்கு நிச்சயிக்கப்பட்ட திருமணம் நின்றுபோன பிறகு அவன் திருமணம் செய்து கொள்ளாமல் தன் அம்மாவைப் பார்த்துக் கொள்கிறான். பழைய காலத்து ஃபியட் கார், ஸ்கூட்டர், ட்ரான்ஸிஸ்டர், பாஸ்கர் வாசித்து வைத்திருந்த கித்தார் எல்லாவற்றையும் புதியது போல் இப்போதும் உபயோகிக்கும் வண்ணம் பாதுகாப்பவன். விரிசல் விழுந்த அவர்கள் உறவையும் காக்க நினைக்கிறான். ஆனால் மற்ற இரண்டு சகோதரர்களாலும் ஒரு loser ஆகப் பார்க்கப்படுகிறான்.
அம்மாவின் இறப்புக்குப் பிறகு அந்தப் பூர்வீக வீட்டை இரண்டு பங்காகப் பிரிக்க நினைக்கிறான் மூத்தவன் விஸ்வநாதன். காரணம் பாஸ்கர் வீட்டை விட்டுச் சென்ற போது சொத்தில் தனக்கு எந்தப் பங்கும் வேண்டாம் என்று சொல்லிச் சென்றுவிட்டான். அதற்காக சட்டரீதியாக பாஸ்கரனின் கையெழுத்து தேவைப்பட்டு அதைக் கேட்கும் போது அவன் மறுத்து சொத்தில் தனக்கும் பங்கு உண்டு என்று வாதிடுகிறான். இடையில் சேது வந்து தனது பங்கை எடுத்துக் கொள்ளுமாறு பாஸ்கரனிடம் சொல்லும் போது அவனுடனும் சண்டைக்குப் போகிறான். இப்படி அவர்களுக்குள் தினமும் சண்டையும் சச்சரவுமாக இருக்கிறது.
அம்மாவின் உடல்நிலை எந்த மாற்றமும் இன்றி அப்படியே உயிர் மட்டும் இருக்கிறது. விடுப்புகள் முடியும் தறுவாயில் விஸ்வநாதனும், திரும்பிச் செல்ல ஃபிளைட் டிக்கெட் எடுத்துவிட்டு வந்திருக்கும் பாஸ்கரும் அம்மா சீக்கிரம் இறந்துவிட்டால் காரியங்களை எல்லாம் முடித்துவிட்டுக் கிளம்பலாம் என்ற எண்ணத்தில் இருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் அம்மாவின் மூச்சை நிறுத்தி விடக் கூடத் துணிகிறார்கள். அந்தக் காட்சி ஒரு த்ரில்லருக்கு நிகராய் இருக்கிறது.
இந்தக் களேபரங்களுக்கிடையில் அந்த அழகிய ஊரைச் சுற்றிப் பார்த்து, ஏரிக்கரை, கோவில் திருவிழா, வாண வேடிக்கை என்று ஒரு தனி உலகில் சஞ்சரிக்கிறார்கள் ஆதிராவும், நிகிலும். இருவரும் அவர்களுக்கு ஏற்பட்ட மனமுறிவுகள் பற்றி மனம் விட்டுப் பேசி ஆதரவாய் இருந்து நெருக்கம் கூடி விடுகிறது. இவர்கள் வரும் காட்சிகளே சோர்வாக நகரும் படத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது. அவர்களுக்கிடையே அரும்பிய நட்பில் மெல்லிய காமம் துளிர்க்கிறது. உறவு முறையில் அக்கா தம்பி என்றிருந்தாலும் அவர்களது பருவ வயதுக்கும் உடல்களும் அது தெரிவதில்லை. இன்செஸ்ட் வகைமையில் வரும் இந்த உறவு விரசம் இல்லாமல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் நெருக்கம் ஆகியிருப்பதை உணர்ந்த சேது ‘Relationships are ephimeral’ என்று சொல்கிறான். உறவுகள் நிலையற்றது. எப்போது வேண்டுமானாலும் நீர்க்குமிழியைப் போல உடைந்து விடக்கூடியது. அவற்றுக்கு ஒரு வரையறை இருந்தால் இன்னும் கொஞ்ச காலம் நீடிக்கும் என்று பூடகமாகச் சொல்லிவிட்டுச் செல்கிறான்.

மறுநாள் நிகிலும் ஆதிராவும் நெருக்கமாக இருப்பதை விஸ்வநாதன் பார்க்க நேரிடுகிறது. ஏற்கனவே புகைந்து கொண்டிருந்த பகை மேலும் பற்றிக் கொண்டதால் வீட்டையே ரெண்டு செய்துவிடுகிறான். நிகிலை அடித்து பாஸ்கரிடம் சண்டையிடும் போது சேது வந்து சமாதானம் செய்ய நினைக்க இருவரும் அவனை அவமதிக்கிறார்கள். கோபத்தில் அவன் இனிமேலும் அவர்கள் இருவரும் அங்கு இருக்க வேண்டாம் என்று சொல்லி இருவரையும் அவர்கள் ஊருக்குக் கிளம்பச் சொல்லிவிடுகிறான். அடுத்த நாள் பாஸ்கர் தனக்கு சொத்தில் பங்கு வேண்டாம் என்று கையெழுத்திட்டு தந்துவிட்டு ஊருக்குச் செல்கிறான். பாதி தூரம் சென்ற பிறகு சேதுவின் அழைப்பு வர கார் திரும்பி வீட்டுக்குச் செல்ல அழகிய சிறுகதை போல படம் முடிகிறது.
மூத்த மகன் விஸ்வநாதனாக ‘அப்பன்’ படத்தில் கலக்கிய அலென்ஸியர் லே லோபஸ், சேதுவாக ஜோஜு ஜார்ஜ், இளையவன் பாஸ்கராக சுராஜ் வெஞ்ஞாரமூடு என்று மிகவும் தேர்ந்த நடிகர்கள். மூவரும் போட்டிப் போட்டுக் கொண்டு நடித்துள்ளார்கள். ஆனால் நிகிலாக நடித்த தாமஸ் மேத்யூவும் ஆதிராவாக நடித்த கார்கி அனந்தனும் சீனியர்கள் மூவரையும் அநாயாசமாக ஓவர்டேக் செய்துவிட்டார்கள். குறிப்பாக எந்தவித ஒப்பனையுமின்றி மிக எளிமையான அழகுடன் மிளிர்கிறார் கார்கி.
5-6 முக்கியக் கதாபாத்திரங்களை மட்டும் வைத்துக்கொண்டு 90% வீட்டுக்குளேயே நடக்கும் இந்தச் சம்பவங்களை நாமும் அந்த வீட்டில் ஓர் ஆளாக பார்ப்பது போன்ற ஓர் உன்னத அனுபவத்தை அளித்திருக்கிறார் இயக்குநர் ஷரண் வேணுகோபால். அதற்கு உறுதுணையாக அப்பு பிரபாகரின் அட்டகாசமான ஒளிப்பதிவு துணை நிற்கிறது. இந்த வருடம் வந்த ரேகா சித்திரம், லெவல் க்ராஸ் படங்களிலும் இவரது ஒளிப்பதிவு கவனிக்க வைத்தது. எடிட்டர் ஜ்யோதி ஸ்வரூப் பாண்டா ஒவ்வொரு சம்பவங்களையும் சிறப்பாகத் தொகுத்துள்ளார். மூவரும் கல்கத்தாவில் இருக்கும் சத்யஜித் ரே இன்ஸ்டிட்யூட்டில் ஒன்றாகப் படித்தவர்கள். காட்சிகளுக்குத் தேவையான உறுத்தாத மென்மையான பின்னணி இசையை ராகுல் ராஜ் வழங்கியுள்ளார்.
கடந்த பிப்ரவரியில் வெளியான இப்படம், நட்சத்திர அந்தஸ்து இல்லாததால் பெரிதாக ஓடவில்லை. அமேசான் ப்ரைமில் வெளியான பின்பு கூட அதிகம் கவனம் பெற்றதாக தெரியவில்லை. பார்த்த சிலரும் இதில் காட்டப்பட்டிருக்கும் இன்செஸ்ட் காட்சிகளையும் பெண்கள் மது அருந்தும் காட்சிகளையும் முதிர்ச்சி இன்றி கலாச்சார சீர்கேடு என விமர்சித்து புறந்தள்ளி விட்டனர். நுண்ணுணர்வுள்ள சினிமா ஆர்வலர்கள் நிச்சயம் தவற விடக் கூடாத சர்வதேச தரத்தில் உள்ள திரைப்படம்.
படம் பார்த்ததும் பத்மராஜனின் ‘திங்களாழ்ச்ச நல்ல தெவசம்’ (1985) என்ற படம் நினைவுக்கு வந்தது. அதிலும் ஒரு கோடை விடுமுறையில் அம்மாவின் 60வது பிறந்தநாளைக் கொண்டாட குடும்பத்துடன் வெவ்வேறு ஊர்களில் இருந்து சொந்த ஊருக்கு வரும் இரண்டு சகோதரர்கள் அம்மா தனியே வசிக்கும் பெரிய பூர்வீக வீட்டை விற்று நகரத்தில் ஃபிளாட் வாங்க நினைத்து அம்மாவையும் தம்முடன் அழைத்துச் செல்ல முடியாமல் ஒரு முதியோர் இல்லத்தில் சேர்ப்பது போன்ற கதை. அம்மாவின் பிறந்தநாளுக்கு வந்தவர்கள் அவரது இறுதிச் சடங்கு நடத்திவிட்டுச் செல்வது போல் முடியும். ஆனால் அதைவிடவும் இந்தப் படம் அபாரமான காட்சி அனுபவத்தை அளிப்பதாய் உள்ளது.
இயக்குநர் ஷரண் 2021 இல் எடுத்த குறும்படமான ‘ஒரு பாதிரா ஸ்வப்னம் போலே’ தேசிய விருது வென்றது குறிப்பிடத்தக்கது. நதியாவும் இதில் ஆதிராவாக நடித்த கார்கி அனந்தனும் அம்மா மகளாக நடித்த அரை மணி நேரப் படம் யூட்யூபில் உள்ளது.











