The Talkie
Saturday, April 11, 2026
  • Login
  • Register
  • thetalkie
  • ஆளுமைகள்
  • திரைக்கதைகள்
  • உரையாடல்
  • கட்டுரைகள்
    • இந்தியத் திரைப்படங்கள்
    • உலகத் திரைப்படங்கள்
    • தமிழ்த் திரைப்படங்கள்
    • ஓடிடி திரை
  • தொடர்கள்
    • ட்ரெண்டு கொட்டாய்
    • திரை புத்தகம்
    • ஸ்டார்ட் கேமரா
    • I CALL THE SHOTS
    • குரு தத் 100
    • டேபிள் டாப்
  • தொடர்பு
No Result
View All Result
The Talkie
  • thetalkie
  • ஆளுமைகள்
  • திரைக்கதைகள்
  • உரையாடல்
  • கட்டுரைகள்
    • இந்தியத் திரைப்படங்கள்
    • உலகத் திரைப்படங்கள்
    • தமிழ்த் திரைப்படங்கள்
    • ஓடிடி திரை
  • தொடர்கள்
    • ட்ரெண்டு கொட்டாய்
    • திரை புத்தகம்
    • ஸ்டார்ட் கேமரா
    • I CALL THE SHOTS
    • குரு தத் 100
    • டேபிள் டாப்
  • தொடர்பு
No Result
View All Result
The Talkie
Subscribe
Home கட்டுரைகள்

காட்சியும் பின்னணி இசையும்

The Talkie by The Talkie
June 26, 2025
in கட்டுரைகள், தமிழ்த் திரைப்படங்கள்
A A
0
kattachium isaium
Share on WhatsappShare on FacebookShare on Twitter
Author Icon சவிதா

ஒவ்வொரு கருவும் படமாவதற்கு முன் எழுதுபவரின் கைகளிலிருந்து பார்ப்பவரின் கண்களுக்கு பயணமாகும் வரை ஒரு நீண்ட பயணம். எழுதிய கதாபாத்திரங்களின் உணர்வை பார்வையாளர்களுக்கு  மிகச்சரியாக கடத்த வேண்டும். அதற்கான ஊடகங்களாக காமிரா, நடிகர்கள், எடிட்டிங் என பல அம்சங்கள் இருந்தபோதும் இசை தனித்துவம் மிக்கதாகத் திகழ்கிறது.

பல பக்க வசனங்களோ, பல நேர்த்தியான காட்சிகளோ உருவாக்க முடியாத உணர்வுகளை ஒரு புல்லாங்குழலோ, ஒரு வயலினோ எளிதில் கடத்திவிட முடியும். எனவேதான் இசையாலேயே பல படங்கள் உயிர் பெறுகின்றன. இசையிலும் திரைப்படங்களிலும் ஆர்வமும் ஆழ்ந்த அறிவுமுள்ள சிலரிடம் இசையால் மேலும் சிறந்து விளங்கிய திரைப்படங்களின் காட்சிகளைப் பற்றி சொல்லுமாறு கேட்டிருந்தோம். அவர்கள் சொன்னதன் தொகுப்பு இது.

வாசுதேவன், எழுத்தாளர், விமர்சகர்.

மேக தக்க தாரா – 1960ல் வந்த வங்காள மொழித் திரைப்படம். இயக்குநர் ரித்விக் கடக்’கின் ‘மேக தக்க தாரா’ படத்தின் முதல் காட்சி. படத்தின் கதாநாயகன் அனில் சாட்டர்ஜி ஹிந்துஸ்தானி பாடகராக நடித்திருக்கிறார். அந்த காட்சியில் இசைப்பயிற்சிக்காக கதாநாயகன் ஆலாபனையில் மூழ்கியிருக்கிறான். அவரது தங்கையாக நடித்திருப்பவர் சுப்ரியா சவுத்ரி. தங்கை அண்ணன் லயித்து பாடுவதைக் கேட்டுக் கொண்டிருக்கிறாள். இசையமைத்திருப்பவர் ஜோதிந்தரா மொய்தா. பின்னணியில் ஆலமரங்கள், குளம், பின்னால் பழைய கால ரயிலின் கரி எஞ்சின் ஓடுக்கொண்டிருக்கும்.


காட்சியின் அழகியலில் ஆலாபனை ஒருபக்கம் இளகிக் கொண்டிருக்க, ரயில் இஞ்சின் பின்னணியில் கடக்கும். காலையின் எழிலில் தொலைவிலிருந்து வரும் பெண் காட்சியில் துலங்கி கதாநாயகனின் ஆலாபனையை வியக்கும் தருணம் இசையோடு இணைந்ததில் மறக்க முடியாத அனுபவம்

இதைப் பாடியது ஏ.டி கண்ணன். இவரை பலருக்கும் தெரியாது. இவர் ஒரு தமிழர். தமிழ்நாட்டில் பிறந்து கல்கத்தாவில் வளர்ந்தவர். சிறந்த இந்துஸ்தானி பாடகர். ரித்விக் கடக் இவரைக் கண்டடைந்து தேடிப்பிடித்து பாடவைத்தார்.

இந்த படத்தில் இன்னொரு பாடலையும் ஏ. டி கண்ணன் பாடியிருக்கிறார். One of the classic scene of world ciniema.

கார்த்திக் அருள், இசை ஆர்வலர்.

மௌன ராகம் – சிறந்த இசைக்கு தேசிய விருது கிடைத்திருக்க வேண்டிய படம். பாடல்கள் எப்போதும் evergreen. பின்னணி இசை என்றதும் டைட்டில் போடும் போதும், கார்த்திக் – ரேவதி காட்சிகளிலும் வரும் Theme மிகவும் பிரசித்தமானது. Key Board/ Piano கற்றுக் கொள்பவர்கள் நிச்சயம் இதைக் கற்றுக் கொண்டு வாசிக்க ஆசைப் படுவார்கள். மோகன்- ரேவதி காட்சிகளுக்கு ஒரு Theme இருக்கும். இவை இரண்டை விட என்னை பிரமிக்க வைத்தது கார்த்திக்- ரேவதி பதிவுத் திருமணம் செய்ய உள்ள நிலையில் அவரைப் போலீஸ் பிடித்துச் சென்று அவர் தப்பித்து ஓடும் கட்சியில் வரும் பின்னணி இசை. ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் கேட்கும் போதும் அந்த பிரமிப்பு குறைந்ததே இல்லை. அந்த chasing சீனில் என்ன ஆகப்  போகிறதோ என்ற பதைபதைப்பு பார்க்கும் நமக்கும் தொற்றிக் கொள்ளும். A nail biting edge of the seat thriller என்று சில படங்களைச் சொல்வது போல் அந்த ஒரு நிமிட இசைத் துணுக்கு இருக்கும். குறிப்பாக அந்த வயலின் சப்தம்! 

கற்பூர முல்லை – அதிகம் கவனம் பெறாத இந்தப் படத்தில் ஒரு பின்னணி இசைத் துணுக்கைப் பற்றி பாடகி பின்னி கிருஷ்ணகுமார் ஒரு மலையாள ரியாலிட்டி ஷோவில் சொல்லியிருப்பார். அம்மா அப்பா பெயர் தெரியாமல் வளரும் அமலா ஒரு கட்டத்தில் தன் அம்மாதான் பிரபல கர்நாடக சங்கீத பாடகியான ஸ்ரீவித்யா என்று தெரிந்து அவரைச் சந்திக்கச் செல்வார். அப்போது பின்னணியில் வயலின் இசைத் துணுக்கு ஒலிக்கும். பின்னி தான் அதுவரை தான் கேட்டிராத ராகம் என்று அதன் ஸ்வரங்களைக் கொண்டு தேடிப் பார்த்து திகைத்துப் போகிறார். காரணம் படத்தில் கதாநாயகியின் பெயரான மாயா வினோதினி என்ற பெயரில் உள்ள ராகத்தை அங்கு உபயோகித்திருப்பார். இதைப் போல் உன்னால் முடியும் தம்பி படத்தில் கூட கதாநாயகியின் பெயரான லலிதா ராகத்தில் Love THeme மற்றும் இதழில் கதை எழுதும் நேரமிது பாடலை இசையமைத்திருப்பார். ஆனால் இது கர்நாடக விதவான்களிடையே கூட அதிகம் கேள்விப் படாத ராகம். பாமரர்களுக்கு அதைப் பற்றி எதுவும் தெரியாது. அனாலும் அரை நிமிடம் மட்டும் வரும் அந்த இசையை வழங்கி இருப்பார். பின்னி போன்ற விற்பன்னர்கள் இது போல் விளக்கினால் ஒழிய ராஜாவாக எங்கும் இதைப் பற்றிச் சொல்ல மாட்டார். இன்னொரு விசேஷம் அந்த ராகத்தின் ஆரோகணம் / அவரோகணத்தில் ‘ம’ மற்றும் ‘ப’ ஸ்வரங்கள் கிடையாது. அந்தக் கதாநாயகியைப் போலவே…

பாலசுப்ரமணியன் பொன்ராஜ், எழுத்தாளர்.

பாடல்களின் சுமையோடு, பின்னணி இசைக்கான கற்பனையும் தேவைப்படுகிற இந்திய திரைப்படத் துறையில், இளையராஜா அளவிற்கு கூருணர்வு உடைய இசையமைப்பாளர் வேறு எவரும் இல்லை என்பது என் எண்ணம். அவருடைய இசையைக் கேட்பதில் இருந்து நான் வெகுதொலைவு வந்துவிட்டேன் என்றாலும்,அவருடைய கூருணர்வின் மீதான மதிப்பு அவருடைய இசையின் மீதான மதிப்பைக் காட்டிலும் என்னிடம் கூடுதலாக இருப்பதாக இப்போதும் அறிகிறேன். பொருத்தமான இடம், இசைத்துணுக்கின் கால அளவு, துல்லியமான ஒலிகள், எழுப்ப நினைக்கும் உணர்விற்கான கருவிகள் மற்றும் கலவை இவற்றால் எழுகிற கூருணர்வு தற்போது அரிதாகிவிட்டதாக உணர்கிறேன். மேலும் தமிழ்த் திரைப்பட இசையை நாம் தீவிரமாகக்கருதத் தேவையில்லை என்கிற இடத்தை அடைந்து விட்டதாகத் தோன்றுகிறது. ஒருபேருந்து பயணத்தில் அருகே அமர்ந்திருப்பவரின் நெருக்கத்திற்கு அளிக்கும் முக்கியத்துவத்தைக் காட்டிலும் சற்று கூடுதலாக அளிக்கலாம், அதுவும் நம் சமூகம் உற்பத்தி செய்யும் இசை என்கிற வற்புறுத்தப்படும் ஒட்டுதலால் மட்டுமே.

சமீபத்திய வாசிப்பில் Diagetic என்கிற ஒரு சொல்லின் அறிமுகம் எனக்குக் கிடைத்தது. இதன் பொருள், ஒரு திரைப்படக் காட்சியில் அதன் கதாபாத்திரங்களால்கேட்க முடிகிற ஒலி. பார்வையாளரும், கதாபாத்திரங்களும் ஒரே சமயத்தில் இந்தஒலியைக் கேட்க முடியும். எடுத்துக்காட்டாக, இரு கதாபாத்திரங்கள் பேசுவது,

வாகனங்களின் ஒலி, பொருட்கள் நகர்வதின் ஒலி இப்படியாக. மேடைப்பாடகர்களாக கதாபாத்திரங்கள் வருகிற காட்சிகளில் அவர்கள் இசைக்கிற பாடல்களை திரைப்படத்தின் ‘உள்ளாகவே’ அவர்களால் கேட்க முடியும். ஆனால் பின்னணி இசை? அதனை Non-Diagetic ஒலி என அழைக்கிறார்கள். எத்தனை உணர்வுப்பூர்வமான, ஆழமான பின்னணி இசை என்றாலும், பாவம், ஒரு திரைப்படத்தில் கதாபாத்திரங்களால் அவற்றைக் கேட்க முடியாது. அவ்விதத்தில் பின்னணி இசைக்கு வாய்ப்பே இல்லாத நமது வாழ்க்கைக்கு அவர்கள் நெருக்கமாக இருக்கிறார்கள். நமது தனிச்சிறப்பான திரைப்படப் பாடல் மரபில் நாயகனும், நாயகியும் பாடும் பாடலை அவ்விருவரும் கேட்க முடியும், ஆனால் பாடலுக்கான இசையை அவர்கள் எங்கிருந்து கேட்கிறார்கள், அதற்கேற்ப நடனமாடுகிறார்கள்?. பார்வையாளர்களுக்காக மட்டுமே இசைக்கப்படுகிற பின்னணி இசை, ஒரு காட்சியின் உணர்ச்சிகளுக்கும், உணர்வுகளுக்குமான கூடுதல் நாடகீயத்தை வழங்குகிறது. திரைப்படக் கலை நல்வாய்ப்பாக இசையை அதனோடு இணைத்துக் கொண்டது, நம்மை பல கொடுமையான திரைப்படங்களை, காட்சிகளை பொறுத்துக் கொள்வதற்கு உதவியாக இருக்கிறது.

மையநோக்கு இசை (theme music – இதற்கு அப்படியொரு தமிழ்ப் பெயர்ச்சொல்லை அறிமுகம் செய்தவர் கருணாநிதி), என்பதே தமிழ்த் திரைப்பட இசையில் தொண்ணூறுகளின் பிற்பகுதியில் அறிமுகம் ஆனது. பாடல்களைக் கடந்து, ஒரு திரைப்படத்தின் பின்னணி இசையைக் கவனிப்பதற்கு மையநோக்கு இசை நமக்கு வாய்ப்பளித்தது. ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்த ‘பம்பாய்’ திரைப்படத்தின் மையநோக்கு இசைக்குப் பிறகே அப்படியான லேபிளில் இசைத்துணுக்குகள் திரைப்படங்களில் வர ஆரம்பித்தன என எனது நம்ப முடியாத நினைவாற்றல் அடிக்கடி கைவிடுவதால் உத்தேசமாக மட்டுமே சொல்ல முடிகிறது. வாக்னரால் பிரபலமாக்கப்பட்ட Leitmotifஎனும் இசைக் கருதுகோள், பின்னாட்களில் மையநோக்கு இசையாக உருப்பெற்றிருக்கிறது. சந்திரலேகாவில், கொள்ளைக் கும்பலின் சூறையடால் காட்சியில், வாக்னரின் புகழ்பெற்ற Ride of the Valkyrie இசை, மூலத்தில் உள்ளவாறே ஒலிக்க விட்டிருப்பார்கள் (கூரைக் கொட்டாய்களில் அமர்ந்து அத்திரைப்படத்தை இரண்டாம்காட்சியில் கண்ட நமது தாத்தாக்கள் அவ்விசையை என்னவாக உணர்ந்திருப்பார்கள்?).

குறிப்பு பின்னணி இசை 16:45ல் தொடங்குகிறது.

நம்மிடம் ஒருபோதும் இருந்திராத, உலகளவில் கூட மிக அரிதாகவே பயன்படுத்தப்பட்ட Overture எனும் முன்னிசையைக் கேட்கிற பொறுமையை பார்வையாளர்கள் இழந்து விட்டதும், அப்படியொரு வழக்கத்தை திரைப்படத் துறை கைவிட்டதும் நமக்கு இழப்புதான்.

அடுத்தடுத்த காட்சிகளாக நான் பார்த்த இரு திரைப்படங்கள், ஜுராசிக் பார்க் லாஸ்ட் வேர்ல்ட், மாட் ரீவ்ஸ் இயக்கிய ‘பேட்மேன்’. இவ்விரண்டு திரைப்படங்களையும் அவற்றின் பின்னணி இசை அளித்த பிரமிப்பு உணர்வு தீர்வதற்குள்ளாக மறுமுறை அனுபவிப்பதற்காகவே பார்த்தேன். முதல் திரைப்படத்திற்கும், இரண்டாவதற்கும் 25ஆண்டுகள் இடைவெளி. கால் நூற்றாண்டுகால இடைவெளியில் என்னால் திரைப்படங்கள் இசை அளிக்கும் அனுபவத்தை எளிதாக எடுத்துக் கொள்ளமுடிந்ததில்லை. எனினும் அவை அனைத்தும் ஒரு குறிப்பிட்ட காட்சி அல்லது கதாபாத்திரத்தோடு பிணைந்தவை என்பதால் தவிர்க்க முடியாமல் இசையை மட்டுமே தனியாக அனுபவிப்பதற்கு சற்றேனும் காட்சிகளைக் குறித்த நினைவு மங்க வேண்டும்

(ஆனால் இப்படியான சமயங்களில் நமது நினைவு கூடுதலாக உழைத்து மிகச்சரியாக காட்சிகளை நினைவூட்டி விடுகிறது).

நம்மிடையே Score மற்றும் Soundtrack இரண்டையும் ஒருங்கே அளிப்பது குறைவாகவே இருக்கிறது. OST என்ற வடிவில் ஒரு படத்தின் பாடல் மற்றும் பின்னணி இசையை சேர்த்து அளிப்பது நடப்பதில்லை. இது திரைப்பட இசையை முழுமையாக நாம் அணுகுவதற்கு ஒரு தடையாக இருக்கிறது. ஹன்ஸ் ஜிம்மர் பயன்படுத்திய tempo and pitch எனும் நுட்பத்தை தமிழ்ப் படங்கள் மிக மலினமாகப் பயன்படுத்தின. நம்மால் உலகிற்கு என ஏன் ஒரு பங்களிப்பையும் செய்ய முடியவில்லை எனும் எதார்த்தம் வேறு சோர்வூட்டுகிறது. மறைந்த நடிகர் ஹீத் லெட்ஜர், ‘பம்பாய்’ திரைப்படத்தின் மையநோக்கு இசையை விரும்பிக் கேட்பவர் என்கிற ஆறுதல் மட்டுமே கிடைக்கிறது. ஆனால் நமக்கு நன்றாகத் தெரியும் ரஹ்மான் பின்னணி இசையில் சுமாரானவர்.

இக்கட்டுரைக்காக, என்னுடைய ஸ்பாடிஃபை கணக்கில் விருப்பப் பட்டியலில் இருக்கும் ஜான் வில்லியம்ஸின் ’ஸ்டார் வார்ஸின்’ மையநோக்கு இசையை, Imperial March எனப் பெயரிடப்பட்ட மற்றொரு இசைத்துணுக்கை மீண்டும் கேட்டேன். எதன் காரணமாகவோ, அது ஸ்ட்ராவின்ஸ்கியின் (Igor Stravinsky) Rite of the Spiring என்கிற அற்புதமான இசையை இம்முறை நினைவூட்டியது. திரைப்படத் தொடர்பை நீக்கி விட்டால் ஜான் வில்லியம்ஸின் ‘ஸ்டார் வார்ஸ்’ இசை, பின்னர் குறிப்பிட்ட இசைக்கு மிக அருகில் வரக் கூடியது. திகில் திரைப்படங்களில் பயன்படுத்தப்படும் Stingers எனும் திடீர் இசை ஒலிகள் நம்மை திடுக்கிடச் செய்து, நமது கவனத்தை சட்டென கைக்கொண்டு விடுவதைப் போல ஒரு காட்சிக்கான முழு நீள இசை நமது கவனத்தை சிதறடிக்காமல் கவர்ந்து வைத்திருக்க முடியும் என்றால், அதுவே என்னளவில் சிறந்த பின்னணி இசைக்கான முதல் எளிய அடையாளம். பின்னர் நமது இசைச் செயலிகளில் நாம் சேகரித்து வைப்பது இரண்டாவது அடையாளம். முழுமுற்றான அடையாளமாக இருப்பது நமது நினைவில் ஒலிப்பவை. ஒரு நல்ல திரைப்பட பார்வையாளருக்கு இளையராஜவிற்கு இணையான கூருணர்வு அவசியமானது. அது நமது இசை அறிவைக் காட்டிலும் மதிப்பு மிக்கது.

மதி கந்தசாமி, திரைப்பட ஆர்வலர்

ஆளரவமே இல்லாத நல்ல இரவு நேரம். சாலையில் ஒரு மனிதன் தட்டுத்தடுமாறி விழுந்து எழுந்து ஓடிப்போகிறான். மேலே இருந்து நாம் பார்க்கிறோம். விழுந்து எழுந்த இடத்தில் இரத்தத் துளிகள் சிந்திக்கிடக்கின்றன. அதுவரைக்கும் இரவு நேரத்துக்கே உரிய நகரத்து அமைதியும் சில பூச்சிகளின் சத்தமும் இருக்கிறது. படத்தின் பெயர் கறுப்பு வண்ணப் பின்னணியில் வருகிறது. முன்னணி இசைக்கோப்பு என்று ஒருவரின் பெயரும் வருகிறது.

அடுத்த காட்சி வீதியோர மஞ்சள் பல்பு வெளிச்சத்தில் அசைந்தாடும் மரக்கிளைகள். பெயரோட்டத்தில் தொடங்கிய இசை. வீதியில் போகும் வண்டிகளில் இருக்கும் மனிதர்கள் சிலர் ஒவ்வொருவராக பார்த்துச் செல்கிறார்கள். அதில், யாரோ உயிருக்குப் போராடும் மனிதன் விழுந்து கிடக்கிறான் என்று நாம் தெரிந்துகொள்கிறோம். ஒருவரும் உதவ முன்வரவில்லை. இருண்ட சாலையில் தூரத்தே தெரியும் ஒரு மோட்டார் சைக்கிள் சாலையின் அடுத்த பக்கத்தில் நிற்கிறது. அந்த வாகனத்தில் வந்த வாலிபன் ஓடிச்சென்று பார்க்கிறான். தன்னுடைய மோட்டார் சைக்கிளில் அந்த மனிதனை ஏற்றிக்கொண்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்கிறான். அங்கே அவன் படும் பாடுகளை நாமும் மௌனமாக பார்க்கிறோம். அந்த மருத்துவமனையில் இருந்து அடுத்தடுத்து அந்த வாலிபன், உயிருக்குப் போராடும் மனிதனோடு போகும் இடங்களையும் அந்த உயிரைக் காப்பாற்ற அவன் பாடுபடுவதையும் பார்க்கிறோம். எங்களோடு அந்த இசையும் பயணிக்கிறது. நாம் பதறும்போது அந்த இசையும் பதறுகிறது. கோபம் உச்சத்தில் போகும்போது இசையும் அதற்கேற்ப ஒலிக்கிறது. சமூகத்தின் அழுக்குகளையும் மனிதத்தையும் மௌனமாக எந்த அரவமுமின்றி கவனிக்கிறது. நம் உணர்வுகளை பிரதிபலிப்பதுடன், அதை மேம்படுத்தவும் செய்கிறது அந்த இசை.

ஒரு முடிவுடன் அந்த வாலிபன், அந்த மனிதனை காப்பாற்ற தானே மருந்து வாங்கி ஊசி போடும்போது அந்த இசை எனக்குள் அமைதியையும் மகிழ்ச்சியையும் உணர வைக்கிறது. விகசிக்க வைக்கிறது. தொடரும் படம் முழுக்க அந்த இசை நம்மோடு பயணிக்கிறது. நமது உணர்வுகளைப் பிரதிபலிக்கிறது. உருக்குகிறது. அமைதிப்படுத்துகிறது. நம்பிக்கை தருகிறது. அழவும் வைக்கிறது.

படத்தின் பெயர்: ஓநாயும் ஆட்டுக்குட்டியும்.

இயக்கியவர்: மிஷ்கின்

முன்னணி இசையமைத்தவர்: இளையராஜா

லதா அருணாச்சலம், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர்

ஒரு படத்தின் பின்னணி இசையென்பது காட்சிகள் ஊடாக வலுவான கதை சொல்லும் கருவியாக அமைகிறது.அது திரைப்படத்தின் மாறுபட்ட காட்சிகள் மற்றும் சூழலுக்கேற்ப பொருத்தமானதாகவும் சிறப்பானதாகவும் இருக்கும் பட்சத்தில் பார்வையாளனை உணர்வுப் பூர்வமாகக் கதையோடு ஒன்ற வைத்து திரைப்படத்துடன் ஒரு பிணைப்பை ஏற்படுத்துகிறது.

பழைய திரைப்படங்களிலிருந்து அண்மைக்காலம் வரை பல இசையமைப்பாளர்கள் சிறப்பான பாடல்களுக்கு மட்டுமல்லாமல் பின்னணி இசைக்காகவும் நினைவு கூரப்படுகிறார்கள்.அப்படியாக என்னுடைய ரசனைக்கேற்ப சிறப்பான பின்னணி இசைக்கான படங்களின் பட்டியல் நீண்டதாக இருப்பினும் கேட்டவுடன் சட்டென முதலில் தோன்றியது “லகான்” ஹிந்தி திரைப்படம். ஏறத்தாழ 25 ஆண்டுகளானாலும் அந்தத் திரைப்படம் ஏற்படுத்திய உணர்வலைகள் தனித்துவமானது. லகான் ஒரு படமாக இல்லாமல் ஒரு மக்கள் இயக்கம் போல உணர்வுகளை ஆட்கொண்ட  கொள்ள வைத்த படம். வறண்ட நிலம்,அரசியல் அழுத்தம், காலனியாதிக்க அடக்கு முறை,அச்சம், தைரியம், ஒருமைப்பாடு, மெல்லிய காதல் போன்ற அனைத்துக் கூறுகளையும் உள்ளடக்கியது இப்படம். படத்தின் துவக்கத்திலிருந்து இறுதிவரை கிரிக்கெட் போட்டி நம்மை ஒவ்வொரு நிமிடமும் விறுவிறுப்பாக வைத்திருக்கும். அந்த விறுவிறுப்பையும் பதட்டத்தையும் ஏற்படுத்தியதில் பின்னணி இசைக்கே பெரும்பங்கு எனலாம்.குறிப்பாக  படத்தின் இறுதியில் ஒலிக்கும் “Victory Theme” வெறும் விளையாட்டின் வெற்றியாக அல்லாமல் ஒரு கலாச்சாரத்தின் கூட்டு எழுச்சியாக உருவாக்கியுள்ளது. பந்து மேலெழும்பிப் பறந்து செல்கையில் காற்றின் துல்லியமான ஓசை நம் காதில் விழும்.அது எல்லைக் கோட்டைத் தாண்டுகையில் அவ்விடத்தில் இசையின் அமைதியும் நம்பிக்கையும் நிலை கொண்டிருப்பது போலத் தோன்றும். எதிர்பார்ப்பு, நெருக்கடி,பரபரப்பு, பதற்றம் , நம்பிக்கை போன்றவை வயலின், குழல், டிரம், கொம்பு, சேர்ந்திசை வாயிலாக ஒரு இசைச் சாரலாக அந்தக் காட்டியில் பொழியும். பந்து வானில் பறக்கும் நிமிடத்திலிருந்து அது எல்லையைத் தாண்டும் தருணம் வரை இசை ஒரு சமூகத்தின் விடுதலையை கொண்டாடுகிறது.

சில இடங்களில் கதை மாந்தர்கள் பேசாத இடங்களில் இசைதான் கதையைக் கூறுகிறது. எலிஸபெத் புவனை ஏக்கப் பார்வையால் பார்க்கும் போது மெல்லிய குழலோசையும் அவள் தனது காதலை விட்டு நகர்கையில் அந்த இசை உதிரும் இலை போல மௌனமாக ஓய்ந்து தேய்கிறது. மழைக்காக மக்கள் பிரார்த்திக்கையில் ஆழ்ந்த  ஹார்மனியாக அமைதி அலையாகப் பரவுகிறது.

இன்றளவும் இசையைக் விழிமூடி அனுபவிக்கும் அளவே எனக்கு ஞானம் உள்ளது. ஆகையால் இசைக்கருவிகளின் பயன்பாட்டை நுட்பமாக விவரிக்க இயலாத போதும்  படத்தில் தாள வாத்தியங்கள், குழலிசை, போன்றவை மண்ணின் மணத்திற்கேற்பவும் அதே வேளை அந்நியக் கலாச்சாரத்தின் பின்னணிக்கும் ஏற்ப மிகச் சரியான அளவில் அமைந்துள்ளது என உணர்கிறேன். குறிப்பாக இந்தப் படம் நெடுக இசை ஓர் கதாநாயகன் போலவே உள்ளது. அந்த நாயகனின் பெயர்தான் ஏ.ஆர். ரஹ்மான் ❤

நவீன் மொசார்ட், இசை ஆர்வலர்

ராஜாவின் இசையில்  சிம்பனி இப்போதுதான் கடைசியாக வந்திருக்கிறது என்று எல்லாரும் நினைத்துக்கொண்டிருக்க 1977லேயே அந்த வடிவத்தை தன் பட பின்னணிகளில் தொட்டுவிட்டிருக்கிறார். எழுத்தாளர் சுஜாதா எழுதிய காயத்ரி என்ற திரைப்படம் 1977ல் வெளியானது. பொய் செய்து ஏமாற்றி பெண்களை திருமணம் செய்து மோசடி செய்யும் வித்தியாசமான திரைக்கதைக் களம். அதில் ஶ்ரீதேவி அங்கு நடைபெறும் மோசடிகளை வெளியில் சொல்ல முடியாமல் வீட்டில் இருந்தபடி தவித்துக் கொண்டிருப்பார். ஒரு நோட்டில் நடப்பவைகளை எல்லாம் எழுதி வைத்துவிட்டு எப்படியாவது அதை வீட்டை விட்டு வெளியில் அனுப்பி தப்பிக்க முடியுமா என பரிதவிப்பார். அப்போது பழைய பேப்பர்களை வாங்கும் ஆள் வர ஶ்ரீதேவி பரிதவித்தபடி அந்த நோட்டை பழைய பேப்பர்களுடன் சேர்ப்பார். எங்கு தான் மாட்டிக் கொண்டு விடுவோமா என்ற பயத்துடனும் தவிப்புடனும்  அந்த நோட்டுப்புத்தகம் எடைபோடுபவனின் கைகளிடம் சேரும் வரையான உணர்வுகளை ஒரு சின்ன ம்யூசிக்கல் நோட்டின் மூலம் ராஜா கொடுத்திருக்கிறார். வெஸ்டர்ன் ம்யூசிக்கின் தரமுயர்ந்த ஒரு இசைக்கோர்வையை அப்போதே முயற்சித்திருக்கிறார். பெரிதாக பேசப்படாத ஒரு படத்தில் கூட தன்முனைப்பை கைவிடாத அந்த இயல்புதான்  இன்றுவரை இமயமென வளர்த்திருக்கிறது.

Author Image

சவிதா

கவிஞர், எழுத்தாளர். தொலைக்காட்சி நாடகங்களுக்கு திரைக்கதை வசனம் எழுதுகிறார்.

About The Author

The Talkie

The Talkie

See author's posts

Next Post
rarayananee

 நாராயணீன்டே மூன்று ஆண்மக்கள் - நிலையற்ற உறவுகள்

Please login to join discussion

Archives

  • Trending
  • Comments
  • Latest
Thug_Life_

Thug Life – ஒரு பார்வை

June 6, 2025
AMADEUS திரைக்கதை

AMADEUS திரைக்கதை

March 15, 2025
start camera

ஸ்டார்ட் கேமரா! வின்சென்ட் மாஸ்டர் – 01

March 19, 2025
Irunda-Pakkam

தொழில்நுட்பத்தின் இருண்ட பக்கங்கள்: திரைப்படங்கள் சொல்லும் உண்மை.

March 16, 2025
Thug_Life_

Thug Life – ஒரு பார்வை

11
rasigamagajanangale

ரசிக மகா ஜனங்களே

7
gurudutt-02

குருதத்தின் ப்யாஸா- உயிர்த்தெழுந்த தேவதை        

5
start camera

ஸ்டார்ட் கேமரா! வின்சென்ட் மாஸ்டர் – 01

4
table top-4-5

டேபிள் டாப் 04 & 05

January 24, 2026
bella darr

பேலா டார் – காட்சியை அனுமதித்தவர்

January 24, 2026
trend-kottaiye-11

ட்ரெண்டு கொட்டாய் 11 -நான் (திரை) காவிய நாயகன்

January 24, 2026
table top-3

டேபிள் டாப் 03

January 24, 2026
The Talkie

சினிமா அற்புதமான ஊடகம். இதனை அறிந்து கொள்ளவும், ரசிக்கவும் உருவாக்கப்பட்டிருக்கிற இணைய இதழ் இது. மேதைகளின் நேர்காணல்கள், திரைக்கதைகள், வெவ்வேறு மொழித் திரைப்படங்கள், ஆளுமைகள், திரைப்படப் புத்தகங்கள் , சினிமா ரசனை என சினிமா உலகத்தோடு இணைந்திட எங்களுடன் இணைந்திடுங்கள்.

Categories

  • I CALL THE SHOTS
  • ஆளுமைகள்
  • இந்தியத் திரைப்படங்கள்
  • உரையாடல்
  • உலகத் திரைப்படங்கள்
  • ஓடிடி திரை
  • கட்டுரைகள்
  • குரு தத் 100
  • டேபிள் டாப்
  • ட்ரெண்டு கொட்டாய்
  • தமிழ்த் திரைப்படங்கள்
  • திரை புத்தகம்
  • திரைக்கதைகள்
  • தொடர்கள்
  • ஸ்டார்ட் கேமரா

Site Navigation

  • About Us
  • Terms and Conditions
  • Privacy Policy
  • Returns and Cancellation
  • Shipping Policy
  • FAQ
table top-4-5

டேபிள் டாப் 04 & 05

January 24, 2026
bella darr

பேலா டார் – காட்சியை அனுமதித்தவர்

January 24, 2026
trend-kottaiye-11

ட்ரெண்டு கொட்டாய் 11 -நான் (திரை) காவிய நாயகன்

January 24, 2026

© 2026 Thetalkie - All rights reserved

Welcome Back!

Sign In with Google
OR

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Sign Up with Google
OR

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • thetalkie
  • ஆளுமைகள்
  • திரைக்கதைகள்
  • உரையாடல்
  • கட்டுரைகள்
    • இந்தியத் திரைப்படங்கள்
    • உலகத் திரைப்படங்கள்
    • தமிழ்த் திரைப்படங்கள்
    • ஓடிடி திரை
  • தொடர்கள்
    • ட்ரெண்டு கொட்டாய்
    • திரை புத்தகம்
    • ஸ்டார்ட் கேமரா
    • I CALL THE SHOTS
    • குரு தத் 100
    • டேபிள் டாப்
  • தொடர்பு
  • Login
  • Sign Up
  • Cart

© 2026 Thetalkie - All rights reserved

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?