கருந்தேள் ராஜேஷ்
இந்த மாதம் இசைச் சிறப்பிதழ் என்பதால், இசையை முக்கியமான ஓர் அம்சமாகத் தொடர்ந்து பயன்படுத்தி, உலகம் முழுக்க இருக்கும் திரைப்பட ரசிகர்களைப் பல்வேறு உணர்வுகளால் ரசிக்க வைத்து, ஒரு கைப்பாவை போல ஆட்டுவித்த அட்டகாசமான இயக்குநர் ஒருவரின் படங்களில் இடம்பெற்றிருக்கும் இசையை விரிவாக அலசும் ஒரு முக்கியமான புத்தகத்தைப் பார்க்கலாம்.
Hitchcock’s Music எனும் நூலில், எழுத்தாளர் ஜாக் ஸல்லிவன் (Jack Sullivan) ஹிட்ச்காக் படத்தின் இசை குறித்துப் புதிய கோணங்களில் ஆராய்கிறார். ஹிட்ச்காக் மற்றும் இசையமைப்பாளர் பெர்னார்ட் ஹெர்மன் கூட்டணி மிகவும் பிரபலமானது. இந்தப் புத்தகத்தில் ஹெர்மன் பெர்னார்டின் இசை குறித்த விரிவான அம்சங்களைப் படிக்க இயலும்.
‘இசை என்பது, ஆல்ஃப்ரெட் ஹிட்ச்காக் (Alfred Hitchcock) படங்களில் ஒரு பின்னணி அம்சம் மட்டும் அல்ல; மாறாக, அது அவரது சினிமா பாணியை, வரையறுக்கும் முக்கியமானதொரு கூறாகச் செயல்படுகிறது என்று சல்லிவன் வலியுறுத்துகிறார். இசையை வெறும் அழகுபடுத்தும் கருவியாக மட்டும் உபயோகிக்காமல், உணர்வுகளை இயக்கும் சக்தியாக, சம்பவங்களை முன்கூட்டியே அறியும் கருவியாக, பதற்றத்தையும் சஸ்பென்ஸையும் அதிகரிக்கும் அம்சமாக, கதாபாத்திரங்களின் உளவியல் ஆழத்தை வெளிப்படுத்தும் முக்கிய உந்துசக்தியாக ஹிட்ச்காக் பயன்படுத்தியிருப்பதை சல்லிவன் விரிவாக விளக்குகிறார். இந்தப் புத்தகம், ஹிட்ச்காக்கை காட்சிகளின் மூலம் சஸ்பென்ஸை உருவாக்கும் இயக்குநராக மட்டுமல்லாமல், ஒரு முழுமையான ‘இசையமைப்பாளர்’ என்றே, ஒரு திரைப்பட இயக்குநராக மட்டுமல்லாமல், ஒலியின் சக்தியிலும் ஆழமாக ஈடுபட்டிருந்தவராக முன்நிறுத்துகிறது. புத்தகம் பற்றி விரிவாகக் கவனிக்கலாம்.
சல்லிவன் தனது புத்தகத்தை, ஹிட்ச்காக்கின் முழு திரைப்பட வாழ்க்கையும் இசை அறிவு மற்றும் இசை பற்றிய உணர்வால் ஆழமாக நிரம்பியிருந்ததாகவே வாதிட்டுத் தொடங்குகிறார். மெளனப்பட காலத்திலிருந்தே, ஹிட்ச்காக் இசையமைப்பாளர்களுடன் நெருக்கமாகப் பணியாற்றி, தமது திரைப்படங்களின் உணர்வுகளையும் லயத்தையும் உருவாக்க இசையைப் பயன்படுத்திக்கொண்டே இருந்ததாகச் சொல்கிறார். ஹிட்ச்காக்கைப் பொறுத்தவரையில், இசை என்பது காட்சியின் குறிப்பிட்ட சூழ்நிலையை நன்றாக உருவாக்கவும், காட்சிகளால் பார்வையாளர்களின் மனதில் எழக்கூடிய எதிர்வினைகளை இவர் நினைத்தபடி வழிநடத்தவும், சில சமயங்களில் ஆங்காங்கே முரண்நகைகளைத் துல்லியமாகச் சித்தரிக்கவும் அவர் உபயோகித்துக்கொண்ட ஓர் அத்தியாவசியமான கலைவடிவம் என்பது ஜாக் சலிவனின் கருத்து.
இசையில் ஹிட்ச்காக் மிகவும் ஞானம் உடையவராக இருந்தார்; பின்னணி இசைக்கான விஷுவல்களைக் கச்சிதமாக உருவாக்கி, எப்படி இசை ஓர் உணர்வைத் தருகிறதோ அப்படிக் காட்சிகளில் அதே உணர்வை அந்த இசைக்கேற்ப கடத்தக்கூடிய திறமை ஹிட்க்காக்கிடம் இருந்தது என்பதைப் புத்தகம் விரிவாக விவரிக்கிறது.
இசையின் முக்கியமான தன்மை – உணர்வுகளை எழுப்பும் சக்தி – குறித்த இவரது ஆழமான புரிதல், இசையமைப்பாளர்களுடன் பணிபுரியும்போது அவர்களிடம் தாம் விரும்பிய இசையைக் கறாராகக் கேட்டுப்பெறும் இயக்குநராக இவரை உருவாக்கியது என்கிறார் சல்லிவன். ஒலியின் தன்மையைப் பற்றித் தெளிவான கருத்துகளும், நுட்பமான விருப்பங்களும் எப்போதும் இவரிடம் இருந்தன என்று விளக்குகிறார்.
ஹிட்ச்காக்கின் துவக்ககால பிரிட்டிஷ் மெளனப்படங்களில், குறிப்பாக The Lodger (1927) படத்தில், இசையைக் கச்சிதமாக ‘பேச’ வைத்தார் என்கிறார். The Lodger படத்தில் நேரடி இசை நிகழ்ச்சிகளைப் பயன்படுத்திக் கதாபாத்திரங்களின் உளவியலைப் பார்வையாளர்களுக்கு எப்படி ஹிட்ச்காக் கடத்தினார் என்பதையெல்லாம் சல்லிவன் விவரிக்கிறார், இது, உரையாடல்கள் இடம்பெற்ற இவரது பிந்தைய திரைப்படங்களிலும் தொடர்ந்த ஒரு கருப்பொருளாகும்.
திரைப்படங்களில் ஒலி வந்தபோது, ஹிட்ச்காக் அதைத் தன்னைக் கட்டுப்படுத்தும் அம்சமாகக் கருதாமல் ஒரு புதிய வாய்ப்பாகக் கண்டார். Blackmail(1929) Murder! (1930) போன்ற திரைப்படங்கள், படத்துக்குள்ளேயே கதாபாத்திரங்கள் கேட்கக்கூடிய இசை மூலமாகவே ஹிட்ச்காக் எப்படியெல்லாம் பரிசோதனை முயற்சிகளை மேற்கொண்டார் என்பதற்கு உதாரணங்கள். Blackmail திரைப்படத்தில், உளவியல் பதற்றத்தை அடிக்கோடிடுவதற்குத் திரும்பத்திரும்ப ஒலிக்கும் இசைக்கோர்வைகளைப் புத்திசாலித்தனமாகப் பயன்படுத்தினார். இது, ஹிட்ச்காக்கின் கதைசொல்லலில் இசையை முரண்பாட்டுக்கான கருவியாவும் காட்சிகளுக்குள் ஒலிகளால் ஒருவிதமான உள்ளடக்கத்தைப் புதைத்துவைத்துப் பார்வையாளர்களுக்குச் சிறுசிறு உணர்ச்சிகளைக் கடத்துவதற்கும் துவக்கமாக இருந்தது.
1930களில், ஹிட்ச்காக் லூயிஸ் லெவி (Louis Levy), சார்லஸ் வில்லியம்ஸ் (Charles Williams) ஆகிய இசையமைப்பாளர்களுடன் இணைந்து பணியாற்றினார். பட்ஜெட் வரம்புகளுக்கு உட்பட்டிருந்தாலும், அவரால் அந்தப் படங்களில் மிகச் சிக்கலான இசைக் கோர்வைகளை உருவாக்க முடிந்தது. The 39 Steps (1935), The Lady Vanishes (1938) ஆகிய திரைப்படங்களில் இசை, கதையை முன்னெடுத்துச் செல்லும் முக்கியமான அம்சமாகவும் உணர்ச்சிகளைப் பார்வையாளர்களுக்குக் கடத்தும் வழிகாட்டியாகவும் மாறியது.
குறிப்பாக The Lady Vanishes திரைப்படத்தில், எளிதாக, இயல்பாகத் தோன்றும் ஓர் இசைக் குறிப்பே பின்னர் ஒரு மிகப் பெரிய மர்மத்திற்கான முக்கியமான அம்சமாக மாறுகிறது. இந்த ஆரம்ப கட்டத்திலேயே, ஹிட்ச்காக் இசையை வெறுமனே காட்சிகளை நிரப்புவதற்காக இல்லாமல், தான் சொல்லவந்த நோக்கத்தை நிலைநிறுத்தும் கருவியாகவே சிந்திக்கத் தொடங்கியிருந்ததாக சல்லிவன் விளக்குகிறார்.
ஹிட்ச்காக் 1939இல் ஹாலிவுட்டுக்குச் சென்றபோது, அந்தக் காலகட்டத்தின் சிறந்த இசையமைப்பாளர்களான ஃப்ரான்ஸ் வாக்ஸ்மேன் (Franz Waxman), டிமிட்ரி டியோம்கின் (Dimitri Tiomkin), மிக்லோஸ் ரோஸா (Miklós Rózsa), முக்கியமாக பெர்னார்ட் ஹெர்மன் (Bernard Herrmann) ஆகியோருடன் வேலை செய்ய முடிந்தது.
‘ஹிட்ச்காக்கின் ஹாலிவுட் அறிமுகப்படமான Rebecca (1940) வாக்ஸ்மேனின் செழுமையான இசையுடன் இருந்தது, இது படத்தின் gothic பாணியினை மேம்படுத்தியது. Suspicion (1941), Notorious (1946), Spellbound (1945) ஆகியவை ஏராளமான இசைக்கருவிகளின் மூலம் பிரம்மாண்டமான இசையை முழுமையாகத் தரும் இந்தப் போக்கைத் தொடர்ந்தன, இவற்றின் மூலம், வெறுமனே உணர்வுகளுடன் பயணிக்கக்கூடிய இசையை வழங்காமல், இசையை நன்றாக விஸ்தரித்து, அப்படி இடம்பெற்ற இசையைப் பார்வையாளர்கள் புரிந்துகொள்ளக்கூடிய வழிமுறையை ஹிட்ச்காக் பயன்படுத்தத் துவங்கினார்’ என்கிறார் சல்லிவன்.
ஸ்பெல்பவுண்ட் படத்தில், இசையமைப்பாளர் மிக்லோஸ் ரோஸா, தெரமின் (theremin) என்ற மின்னணு இசைக்கருவியைப் பயன்படுத்தி, திரைப்படத்தின் பிரதான கதாபாத்திரத்தின் மனதில் அடங்கியிருக்கும் துயரத்தை வெளிப்படுத்தினார். திரைப்படங்களில் இடம்பெறும் உளவியல் அம்சங்களைப் பார்வையாளர்களுக்கு வெளிப்படுத்தும் மிக முக்கியமான திருப்புமுனையாகவே சல்லிவன் இந்த இசையமைப்பைக் குறிப்பிடுகிறார். இது ஹிட்ச்காக்காலேயே சாத்தியமானது. அன்றிலிருந்து இன்றுவரை உலகம் முழுக்கவும் இப்படிப்பட்ட வகையான இசையமைப்பு தொடர்ந்து படங்களில் வைக்கப்படுகிறது.
சல்லிவனின் புத்தகத்தின் கணிசமான பகுதி ஹிட்ச்காக்-ஹெர்மன் (Bernard Herrmann) கூட்டணி பற்றியே பேசுகிறது. காரணம் ஹிட்ச்காக்கின் ரசிகர்களுக்கு நன்றாகவே தெரியும். அந்தக் கூட்டணி அட்டகாசமான கூட்டணி. இது The Trouble with Harry (1955) முதல் Marnie (1964) வரை நீடித்தது. ஹெர்மனின் இசையும் ஹிட்ச்காக்கின் காட்சிகளும் கச்சிதமாகப் பொருந்தின. இருவருமே எப்படியெல்லாம் பார்வையாளர்களின் ஆழ்மனங்களில் அவர்களுக்கே அறியாமல் பதற்றத்தை உருவாக்குவது, உணர்வுகளுடன் எப்படி விளையாடுவது என்பதை விரும்பினர்.

Vertigo (1958) படத்தில், ஹெர்மன் சினிமா வரலாற்றில் அழிவே இல்லாத இசையமைப்புகளில் ஒன்றை உருவாக்கினார். சல்லிவன் அதை ‘ஹிட்ச்காக் சினிமாவின் இசை ஆன்மா’ என்று அழைக்கிறார், காரணம், மீண்டும் மீண்டும் வரும் இசைத்துணுக்கான இது, நுணுக்கமான இசை, அதிலேயே இனம்புரியாமல் இடம்பெறும் இருண்ட உணர்வுகள் ஆகியவற்றால் நிரம்பியிருந்தது. இதனால் இசை நம்மை ஆட்டிப்படைக்கும் ஓர் அம்சமாக மாறுகிறது. பிரதான கதாபாத்திரம், மனநிலைக் குழப்பம் மற்றும் விரக்தி போன்றவை இசையால் பிரதிபலிக்கப்படுகிறது.
ஹிட்ச்காக் மற்றும் ஹெர்மன் ஆகிய இருவரின் பிரம்மாண்டக் கூட்டணியாக Psycho (1960) உருவானது. இது அவர்கள் இருவரின் ஒத்துழைப்பின் உச்சக்கட்டமாக கருதப்படுகிறது. ஹெர்மன் நரம்பு வாத்தியங்கள் மட்டுமே கொண்ட இசையைப் பயன்படுத்தி, கடுமையான பதற்றத்தையும் பயத்தையும் உருவாக்கினார். அந்த மறக்கமுடியாத குளியல் காட்சி— அதன் பின்னணியில் வீறிட்டு அலறும் வயலின்கள் – சல்லிவனால் விரிவாக ஆய்வு செய்யப்பட்டிருக்கிறது, அவர் இசை எவ்வாறு வன்முறைக்கு மாற்றாகச் செயல்பட்டு அதேபோன்ற உணர்வை, வழங்கி, ஒலியை ஓர் உளவியல் ஆயுதமாக எப்படி மாற்றுகிறது என்பதை விரிவாகப் பேசுகிறார்.
அதேசமயம் சல்லிவன் Torn Curtain (1966) படத்தின் போது அவர்களின் உறவு முறிந்தது பற்றியும் குறிப்பிடுகிறார், அப்போது ஹிட்ச்காக் மிகவும் வணிகரீதியான இசையை ஹெர்மனிடம் கோரியிருக்கிறார். ஆனால் ஹெர்மன் தனது கலையில் சமரசம் செய்ய மறுத்துவிட்டார். இது அந்தப் படத்தில் இருந்து ஹெர்மன் நீக்கப்படுவதற்கு வழிவகுத்தது. அவருக்கு பதில் இடம் பெற்ற ஜான் ஆடிசனின் (John Addison) இசை, அனைவராலும் புறந்தள்ளக்கூடியதாக இருந்தது, இதைப்பற்றிப் பேசுகையில் சல்லிவன், ஹெர்மனின் இழப்பு ஹிட்ச்காக்கின் இசை நுணுக்கத்தில் முதன்முறையாக ஒரு வீழ்ச்சியைக் கொடுத்தது என்று வாதிடுகிறார்.
புத்தகத்தில் தொடர்ந்து சல்லிவன், ஹிட்ச்காக் இசையை வெறுமனே உணர்வுகளை வலுப்படுத்துவதற்கு மட்டுமல்லாமல் கதைகளைச் சொல்வதற்கும் எவ்வாறு பயன்படுத்தினார் என்பதை ஆராய்கிறார். அவரின் பல படங்களில், இசைக்கோர்வைகள், மறைவான குறியீடுகளாக – குற்ற உணர்வு, காதல், பைத்தியக்காரத்தனம், உன்மத்த நிலை – ஆகியவற்றை வெளிப்படுத்தும் கருவிகளாக இருப்பதை விளக்குகிறார்.
உதாரணமாக, Notorious (1946) படத்தில், நாயகி அலிசியாவின் முத்தக் காட்சியில் பின்னணியில் வரும் இசை செழுமையானதாகவும் காதல் நிறைந்ததாகவும் இருக்கிறது, ஆனால் அவள் ஏமாற்றப்படும்போது அதே இசை துண்டுகளாகச் சிதறிச் செல்கிறது. இப்போது பரவலாகப் பின்பற்றப்படும் இந்த இசைமுறை, ஹிட்ச்காக்காலேயே ஆராயப்பட்டுப் பிரபலப்படுத்தப்பட்டது. Rear Window (1954) படத்தில், பக்கத்து வீட்டில் இருந்து கேட்கும் பியானோ இசை, தனிமை, பிறருக்குத் தெரியாமல் அவர்களைக் கண்காணிப்பது (voyeurism) ஆகியவற்றையே குறிக்கிறது (திரைப்படத்தில் வரும் கதாபாத்திரங்கள் கேட்கக்கூடிய இசையாலேயே உணர்வுகளைத் தெரியப்படுத்தும் ஹிட்ச்காக்கின் திறமை பற்றி நாம் முதலில் பார்த்தது நினைவிருக்கும்).
சல்லிவன் ஹிட்ச்காக்கின் கதைகளில்இப்படிக் கதாபாத்திரங்கள் கேட்கக்கூடிய இசை மற்றும் கதாபாத்திரங்கள் கேட்காமல் இயல்பாகப் படத்தின் பின்னணியில் வரும் இசை ஆகிய இரண்டின் நுணுக்கங்களையும் ஒப்பிடுகிறார். Strangers on a Train (1951) படத்தில், ஒரு கொலைக் காட்சியின் பின்னணியில் வரும் கார்னிவல் இசை, மகிழ்ச்சியான இசையை பயங்கரமான ஒன்றாக மாற்றுகிறது. இது, ஹிட்ச்காக் எவ்வாறு அனைவருக்கும் தெரிந்த இதுபோன்ற இசையை ஒரு அணுகுண்டு போன்ற ஆயுதமாகப் பயன்படுத்தி அதில் வெற்றிகண்டார் என்பதற்கு எடுத்துக்காட்டு.
Marnie (1964) ஹிட்ச்காக்கின் மிகப்பெரிய ஆப்ரா (opera) போன்ற படைப்பாக இப்போதுவரை உலகெங்கும் ஆய்வு செய்யப்படுகிறது. சல்லிவன் இதைப்பற்றிப் பேசும்போது, ஹெர்மனின் இசையமைப்பு வழக்கமான திரைப்பட இசையை விட, வாக்னர் அல்லது ஸ்ட்ராஸ் ஆகியோரின் கிளாஸிக் இசைக்கு நெருக்கமானது என்று கூறுகிறார். இதில் இடம்பெறும் நரம்பு இசைக்கருவிகள் மற்றும் ஏறி இறங்கும் இசையானது, கதாநாயகியின் அடக்கிவைக்கப்பட்ட மன அழுத்தத்தைப் பிரதிபலிக்கிறது என்பது அவரது கருத்து.
ஹெர்மன் கிட்டத்தட்ட Marnie படத்தின் அறிவிக்கப்படாத இணை இயக்குநராகவே இருந்தார் என்று சொல்கிறார்: அவரின் இசையமைப்பு உணர்வுபூர்வமான இடைவெளிகளை நிரப்புகிறது, குறிப்பாக Marnie நொறுங்கிச் சிதையும்போது வரும் இசை உண்மையில் அவளது மௌனத்தைநமக்கு இசையாக மொழிபெயர்க்கிறது. ஹிட்ச்காக்கின் படங்களில் இசை சார்ந்த மிக முக்கியமான படமாக Marnie இருக்கிறது என்பது சல்லிவனின் வாதம்.
இப்படிப்பட்ட ஹெர்மன் ஹிட்ச்காக்கை விட்டு வெளியேறியபிறகு, ஹிட்ச்காக்கின் படங்கள் இசை ரீதியாக பின்னடைய ஆரம்பித்தன. நாம் முதலிலேயே பார்த்த Torn Curtain, பின்னர் Topaz (1969), Frenzy (1972) ஆகிய படங்களின் இசையமைப்புகள் பெரும்பாலும் அந்தப் படங்களின் உணர்வுபூர்வமான கதையுடன் தொடர்பற்றதாக இருந்தன.
இதன்பின் ஹிட்ச்காக் முன்புபோல் இசையை முக்கியமாகக் கவனித்துத் தனது படங்களில் இடம்பெற வைத்தது போல ஈடுபடவில்லை என்று கவனிக்கிறார் சல்லிவன். Frenzy (1972) படத்தில் ரான் குட்வினின் (Ron Goodwin) இசையமைப்பு ஓரளவு நன்றாக இருந்த போதிலும், வழக்கமான ஹிட்ச்காக் பாணியான, திரைப்படம் மற்றும் ஒலியை ஒருங்கிணைப்பது மறைந்து போனது. வலுவான இசை அடையாளம் இல்லாமை இந்தப் பிற்காலப் படைப்புகளின் உணர்வுபூர்வ தாக்கத்தை பலவீனப்படுத்தியது.
பிரையன் டி பால்மா, டேவிட் லிஞ்ச், மற்றும் மார்ட்டின் ஸ்கோர்சேஸி போன்ற நவீன இயக்குநர்களை ஹிட்ச்காக்கின் இசை எவ்வாறு பாதித்தது என்பதன் ஆய்வுடன் புத்தகத்தை முடிக்கிறார் சல்லிவன். பல இயக்குநர்கள் ஹிட்ச்காக்கின் முரண்பாடு, உளவியல் ஆகியவற்றை விளக்கும் ஒலி வடிவமைப்பைப் பயன்படுத்தும் அம்சத்தைக் கடன் வாங்கியுள்ளனர் என்கிறார்.
பெர்னார்ட் ஹெர்மனின் பாணி பல நவீன இசையமைப்பாளர்களுக்கு அட்டகாசமான ஒரு வரைபடமாகவே மாறியது. Jaws, Taxi Driver மற்றும் The Shining போன்ற படங்கள் தெளிவான ஹிட்ச்காக் படங்களின் இசை மரபையே காட்டுகின்றன.
இறுதியாக, Hitchcock’s Music வெறுமனே திரைப்பட இசையமைப்பு பற்றிய புத்தகம் அல்ல—இது சினிமாவை ஒருங்கிணைந்த உணர்வுகளின் கலை வடிவமாகவே ஆய்வு செய்கிறது, அங்கே ஒலியும் படமும் பிரிக்க முடியாதவை. புத்தகத்தை எழுதிய சல்லிவனின் வாதம் என்னவென்றால் ஹிட்ச்காக் இசையை உணர்வுபூர்வமாக, ஒரு கட்டமைப்பாக, அதேசமயம் இயல்பு நிலைக்கு மேலான ஒருவித மோனநிலையில் புரிந்துகொண்டார்- மறைந்திருக்கும் ஆசைகள், அடக்கப்பட்ட நினைவுகள், மற்றும் ஆழ்மனதின் நிழல்களைப் பிரதிபலிக்க அப்படிப்பட்ட இசையைப் பயன்படுத்தினார் என்பதே.
ஹிட்ச்காக்கின் மேதைமை வெறுமனே விறுவிறுப்பு நிறைந்த படங்களை உருவாக்குவதில் மட்டுமல்ல, ஒலி எப்படி மௌனத்தை வடிவமைக்க முடியும், இசை எவ்வாறு அர்த்தத்தை ஆழப்படுத்த முடியும், மற்றும் ஒத்திசைவின்மை எவ்வாறு உண்மையை வெளிப்படுத்த முடியும் என்பதைத் துல்லியமாக அறிந்திருப்பதில்தான் ஹிட்ச்காக்கின் மேதைமை இருந்தது. சல்லிவனின் புத்தகம், இசை இல்லாமல் ஹிட்ச்காக் இல்லை; ஹிட்ச்காக் இல்லாமல் இசையும் இல்லை என்பதைத் தெளிவாக உணர்த்தி, ஹிட்ச்காக் ஒரு சாதாரண இயக்குநர் இல்லவே இல்லை என்பதை உரக்கவே பேசுகிறது.
ஜாக் சல்லிவனின் எழுத்து, இசையியல், திரைப்பட விமர்சனம், மற்றும் வாழ்க்கை வரலாறு ஆகியவற்றைத் தெளிவுடனும் ஆழத்துடனும் கலக்கிறது. நேர்காணல்கள், ஆவணக்காப்பக ஆராய்ச்சி, மற்றும் இசையமைப்பு பகுப்பாய்வு ஆகியவற்றைப் பயன்படுத்தி ஒரு வலுவான வாதத்தை முன்வைக்கிறார். இந்த புத்தகம் ஆராய்ச்சி ரீதியில் ஈடுபடுபவர்கள், சினிமா பிரியர்கள், இசையமைப்பாளர்கள், மற்றும் ஹிட்ச்காக்கின் ரசிகர்கள் ஆகிய அத்தனை விதமான மக்களுக்கும் அத்தியாவசியமான வாசிப்பாக இருக்கிறது.











