எல்லோர்க்கும் உதவி செய்பவனாக, அநியாயத்தை தட்டிக் கேட்பவனாக என்று ஒரு திரைப்படத்தின் கதாநாயகனை நல்லவனாக மட்டுமே காண்பித்து திரைப்படங்கள் வந்து கொண்டிருந்த காலகட்டத்தில் முதல்முறையாக ஹீரோவை எதிர்மறை நாயகனாக காண்பித்தது ஏவிஎம் தயாரிப்பில் வெளிவந்த “அந்த நாள்” திரைப்படம். பாடல்கள், நடனம், சண்டைக்காட்சிகள் இல்லாமல் ஒரு திரைப்படத்தை சோதனை முயற்சியாக தயாரிக்கும் துணிவு அப்போதே ஏவிஎம் தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்தது.
இரண்டாம் உலகப் போர் சமயத்தில் அதை மையமாக கொண்டு வீணை பாலச்சந்தர் என்று அறியப்பட்ட S. பாலச்சந்தர் ஒரு நாடகம் வானொலிக்காக எழுதுகிறார். ஆனால் அகில இந்திய வானொலியால் நிராகரிக்கப்பட்ட அந்த நாடகத்தை ஏவிஎம் திரைப்படமாக்க முடிவு செய்து அவரையே இயக்குநராக நியமிக்க, அந்த நாள் திரைப்படம் வெளிவருகிறது. இதன் கிளைமேக்சை யாரிடமும் சொல்லாதீர்கள் என்கிற அறிவிப்போடு படத்தை வெளியிட்டனர். கொலைகாரனை கண்டுபிடிக்கும் கிரைம் திரில்லர் படங்களுக்கு முன்னோடியாக இந்த படம் இருந்தது.
எஸ்.பாலசந்தரின் படங்கள் அப்போதே ஒரு ஆங்கில நாவலைப் படித்தது போன்று இருக்கும். அவருடைய ‘மேக்கிங்’கும் கூட அப்படியானது தான். ஒரு ஷாட் இப்படித் தான் இருக்க வேண்டும் என்கிற தீர்மானம் எஸ்.பாலசந்தரிடம் இருந்தது. அதற்கு சரியானதொரு சாட்சி ‘அந்த நாள்’ படம். அதற்கு ஒளிப்பதிவு செய்தவர் மாருதி ராவ்.
இந்தப் படத்தின் டைட்டிலில் தொடங்கிவிடும் மாருதி ராவின் மேதமை. நாற்பதுகளில் வெளிவந்த படங்களில் காணக் கிடைக்காத, இப்போதும் ஆச்சரியம் ஏற்படுத்தும் காட்சிகள் அவை.
சிவாஜி கணேசனும், அவருடன் உறவில் இருக்கும் காதலியும் பூங்காவில் ஒருவரோடொருவர் சண்டையிட்டுக் கொள்ளும் காட்சியில், ஒளியமைப்பு அபாரமாக இருக்கும். சிவாஜி மிகவும் ஸ்டைலாக சிகரெட் பற்ற வைப்பார். அவர்கள் இருவரையும் நிழலுருவங்களாக (silhouetee) காண்பித்திருப்பார். குளோசப் காட்சியில் மட்டும் அவர்கள் முகத்தில் வெளிச்சமிருக்கும்.
சிவாஜி பண்டரிபாயைக் கட்டிப்போட்டு பேசும் காட்சியில் ஒரு சுழலும் நாற்காலியில் அமர்ந்து சுழன்று கொண்டே பேசும் போது கேமரா எதிர்ப்புறம் அதற்கேற்ப சிவாஜி கணேசனின் point of viewவில் pan ஆகும். கட்டிப் போட்டுக் கொண்டே பேசும் போது நாற்காலியின் இடைவெளி வழியே தெரியும் சிவாஜியின் முகத்தின் வழியே அந்த கேரக்டரின் எதிர்மறைத்தன்மையை காண்பித்திருப்பார். அதே காட்சியில் அவர் ஜன்னலருகில் நின்று பேசும் போது ஜன்னல் கம்பிகளும் இருட்டுமாக சிவாஜியின் முகத்தில் குரூரம் தெரியும் விதமாக முழுமையான அவர் கேரக்டரை காண்பித்திருப்பார். சுழலும் நாற்காலியைச் சுற்றி விட, அது சுழன்றுகொண்டிருக்கும் கோணத்தின் வழி அவர்கள் இருவரையும் காண்பித்திருப்பார்.
இந்தப் படத்தில் ஒவ்வொருவரும் தன் கோணத்தில் யார் கொலை செய்திருப்பார்கள் என்று சொல்லும் ஃபிளாஷ்பேக் காட்சியமைப்புகளை வித்தியாசப்படுத்திக் காண்பிக்க கண்ணாடிகளில் பெட்ரோலியம் ஜெல்லியை ஃபில்டர்களாக பயன்படுத்தி புகை மூட்டமான ஒளியமைப்பை செய்திருப்பார். ஜெமினி அதிபர் வாசன் இப்படத்தைப் பார்த்து விட்டு, :இது ஒரு கேமராமேன் படம்” என்று மாருதிராவைப் பாராட்டியிருக்கிறார்.
பள்ளி வயதிலேயே புகைப்படமெடுப்பதில் ஆர்வம் கொண்ட மாருதிராவ் பிரகதி ஸ்டூடியோவில் சேர்ந்தார் எல்லீஸ் ஆர் டங்கன் இயக்கி இசைமேதை நாதஸ்வரம் வித்வான் ராஜரத்தினம்பிள்ளை நடித்த கவி காளமேகம் திரைப்படத்தில் பயிற்சியாளராக வேலை செய்திருக்கிறார். மார்கஸ் பார்ட்லேயிடமும் இவர் உதவியாளராக இருந்திருக்கிறார். அடுத்து தெலுங்கு திரைப்படமான சூடாமணியில் இரண்டாவது உதவியாளராக நியமித்தனர். அத்திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் மாமாசிந்தே. அதன்பின் வேல்பிக்சர்ஸில் சேர்ந்தார் மாமாசிந்தேவிடம் உதவியாளராக இருந்த மாருதிராவ் பின்னர் “பக்திமாலா” என்ற திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் எம்.ஏ. ரகுமானிடம் உதவியாளராக சேர்ந்திருக்கிறார். அந்தக் காலத்தில் லைட் எந்த அளவுக்கு இருக்கிறது என்று கண்டறிய லைட் ரீடிங் மீட்டர் பயன்படுத்துவார்கள். ஆனால் எம்.ஏ. ரகுமான் தன் உள்ளங்கையில் விழும் வெளிச்சத்தை வைத்தே அந்த ஒளியின் அளவைக் கணித்து விடுகிற திறமைசாலி. அவரிடமிருந்து தான் மிஷெல் கேமராவை கையாளக் கற்றுக் கொண்டார் மாருதி ராவ். பின்னர் புகழ்பெற்ற ஆர்.நாகேந்திரராவ் என்பவரிடம் சேர்ந்து “மகாத்மாகபீர்” என்கிற கன்னட திரைப்படத்தில் முதல் கேமராமேனாக உயர்ந்திருக்கிறார். அந்தப் படத்தின் ஒளிப்பதிவாளரான ‘பிளிட்ஸ் ஜே.பேஸ்” என்கிற ஜெர்மன்காரர் பாதியிலேயே ஜெர்மனிக்குப் போய்விட அந்தப் படத்தின் ஒளிப்பதிவை இவர் பொறுப்பேற்று முடித்துக் கொடுத்திருக்கிறார்.
ஏவிஎம் நிறுவனம் தான் முதலில் இவரை ஒளிப்பதிவு இயக்குநராக அறிமுகப்படுத்தியது. தொடர்ந்து முப்பது ஆண்டுகள் அவர்களுடன் பல திரைப்படங்களில் பணியாற்றியிருக்கிறார்.
அவரைப் பற்றி ஏவிஎம் சரவணன் பகிர்ந்து கொண்டவை:
“திறமை யாரிடம் இருந்தாலும் அவர்களை அழைத்து வந்து பட்டை தீட்டி ஒளிரச் செய்வதில் அப்புச்சி வல்லவர். ஒரு புகைப்படக் கண்காட்சியில் இவர் எடுத்த புகைப்படத்தால் கவரப்பட்டு இவரை திரைத்துறைக்கு அழைத்து வந்துள்ளார். இவர் எடுத்த சந்திரலேகாவின் புகழ் பெற்ற டிரம் டான்ஸ் புகைப்படத்தைப் பார்த்துதான் அப்புச்சி “நாம் இருவர்” படத்தில் குமாரி கமலா டிரம்ஸ் டான்ஸ் எடுத்தார். முதலில் 1945ல் “ஶ்ரீவள்ளி” திரைப்படத்தில் ஸ்டில்ஸ் ஃபோட்டோகிராஃபராக அறிமுகம் செய்தார். தான் கேமராமேன் ஆக வேண்டுமென்கிற விருப்பத்தை மாருதிராவ் அப்புச்சியிடம் தெரிவிக்க “ஓர் இரவு” திரைப்படத்தில் ஒளிப்பதிவாளராக வாய்ப்பளித்தார்.”
மாருதிராவ் ஒளிப்பதிவாளராக பனியாற்றிய முதல் திரைப்படம் “ஓர் இரவு”. நமது முன்னாள் முதல்வர் அண்ணாதுரை கதை திரைக்கதை வசனம் எழுதி புகழ் பெற்ற படம். தன் முதல் பட த்திலேயே அண்ணாவின் பாராட்டுகளைப் பெற்றார். நாடகமாக பெரும்வெற்றியடைந்த அக்கதை திரைப்படமாக வந்தபோது விமர்சனரீதியில் வெற்றி பெற்றாலும், வசூலில் வெற்றிபெறவில்லை.

இருட்டில் நிகழ்வதாக எழுதப்பட்ட காட்சிகளை எப்படி இவ்வளவு தத்ரூபமாக எடுத்தாய்” என்று அண்ணாதுரை மாருதிராவிடம் கேட்டார். அதற்கு “கேமரா லென்ஸ்க்கு முன்னால் ஃபோர்கிரவுண்டில் லிக்விட் பாரஃபின் அமிலத்தை ஸ்பிரே செய்து மிஸ்ட் எஃபெக்ட் ஏற்படுத்தி அதற்கேற்ப லைட்டிங் அமைத்து ஒளிப்பதிவு செய்தேன். நீங்கள் எழுதியிருந்தபடியும், நான் எதிர்பார்த்தபடியும் அந்த “நைட் எஃபெக்ட்” வந்துவிட்டது” என்று மாருதிராவ் பதிலளித்தார் என் எழுத்து உயிர்பெற்று உலா வந்தது போலிருக்கிறது” என்று அவரை அண்ணாதுரை பாரட்டியிருக்கிறார்.
தன் நடிப்புத் திறமையால் செவாலியே விருது பெறும் அளவுக்கு உயர்ந்த நடிகர்திலகம் சிவாஜி கணேசன் அறிமுகமான படம் பராசக்தி. இந்தப் படத்திற்காக சிவாஜிக்கு ஸ்கிரீன் டெஸ்ட் செய்தவர் இப்படத்தின் ஒளிப்பதிவாளர் மாருதிராவ்.
அவரே ஒரு பேட்டியில் இதைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார்.
“சிவாஜிக்கு நான் மூவி டெஸ்ட் எடுத்தது 1950ல். பராசக்தியில் சிவாஜி நடிக்க ஏற்பாடானது, அப்போது நான் :ஓர் இரவு: ஷூட்டிங்கில் இருந்தேன். ஒரு மணிக்கு பிரேக் விடும்போது ஒரு டெஸ்ட் எடுக்க வேண்டும், நாளும் நேரமும் நன்றாக இருக்கிறது என்றார்கள். அன்று டெஸ்டுக்கு மேக்கப்புடன் வந்து நின்றது சிவாஜி தான். பகல் ஒரு மணியிலிருந்து இரண்டு மணிக்குள்ளாக அவரை வைத்து 200 அடி படம் எடுத்தேன். கேமரா முன் நின்ற அவர் சிறிதும் அஞ்சவில்லை,. கண்கள் உணர்ச்சிகளை பிரதிபலிப்பதாக இருந்தன. இவர்போல் வேறு யாரும் நடிக்க முடியாது என்று தோன்றியது.”

அப்போது ஏவிஎம் செட்டியார் சிவாஜியின் ஸ்கிரீன் பிரசென்ஸ் பற்றி மாருதிராவிடம் கேட்க, வசனங்களை துடிப்பாக பேசுகிறான், நன்றாக வருவான் என்று அவர்தான் ஒப்புதல் வழங்கினார். அவரை வைத்து படப்பிடிப்பும் தொடங்கி விட்டது. ஆனால் சிவாஜி மிகவும் ஒல்லியாக இருந்ததால் ஏவிஎம் செட்டியார்க்கு அவர் நடிப்பில் திருப்தியில்லை. அவருடைய பார்ட்னர் பி.ஏ. பெருமாள் தான் சிவாஜியை பரிந்துரைத்தவர். அதனால் அவரிடம் சிவாஜி வேண்டாம் வேறு யாரையாவது போடலாமென்று செட்டியார் சொல்ல, நூர்ஜஹான் நாடகத்தில் பெண் வேஷமிட்டு நடித்த சிவாஜியின் நடிப்பை பார்த்து வியந்து அவரை அழைத்து வந்த பெருமாள், செட்டியாரிடம் சிறிது காலஅவகாசம் தந்தால் அவரைத் தேற்றி அழைத்து வருகிறேன் என்று அனுமதி பெற்று, அவருக்கு நல்ல உணவு கொடுத்து அவரை தேற்றி சில மாதங்கள் கழித்து சிவாஜியை வைத்து மீண்டும் ரீஷூட் செய்து அவர் நடித்த காட்சிகளைப் போட்டுக் காண்பித்தபோது மெய்யப்ப செட்டியாருக்கும் சிவாஜியைப் பிடித்து விட, உலகின் மாபெரும் கலைஞன் உதயமானார். அதே படத்தில் நடிகர் எஸ்.எஸ். ராஜேந்திரனுக்கும் ஸ்கிரீன் டெஸ்ட் எடுத்து அவரின் திரையுலக வாழ்க்கையையும் துவக்கி வைத்தார்.
தந்திரக் காட்சிகளின் மன்னன் என்று அழைக்கப்பட்ட பாபுபாய்மிஸ்த்ரி குழந்தையும், தெய்வமும் படத்தில் இரட்டை வேடத்தில் குட்டி பத்மினி முத்தமிட்டுக் கொள்ளும் காட்சியைப் பார்த்து “சபாஷ்” என்று மாருதிராவைப் பாராட்டியிருக்கிறார். குழந்தையும் தெய்வமும் படம் அந்த வருடத்திற்கான சிறந்த படமாக தேசிய விருது பெற்றது. மாருதி ராவ் கைராசியானவர் என்கிற பெயரையும் பெற்றுத் தந்தது. இவர் கைராசியை நிரூபித்தவர் சிவாஜி கணேசன் அவர்கள். “இவர் கைராசிக்காரரும் கூட, இவரிடம் ஸ்கிரீன்டெஸ்ட் எடுத்த நடிகர், நடிகையர் பின்பு உச்ச நட்சத்திரங்களாக திரையுலகை ஆண்டிருக்கிறார்கள். மாருதிராவ் ஸ்கிரீன்டெஸ்ட் செய்தவர்களில் சிலர்: கன்னட ஹீரோ ராஜ்குமார், தர்மேந்திரா, ஹேமமாலினி, வைஜயந்திமாலா, ஊர்வசி சாரதா……போன்றவர்கள்.
கலைஞரின் எழுத்தால் புகழ் பெற்ற பராசக்தி வசனங்களை சொல்லி காண்பித்து தான் பெரும்பாலான நடிகர்கள் தங்கள் திரையுலக வாய்ப்பைப் பெற்றனர். அந்த வசனத்தைப் பேசிய சிவாஜி கணேசன் அவர்களை முதன்முதலாக வசனம் பேச வைத்து ஒளிப்பதிவு செய்தவர் மாருதி ராவ்.
கோர்ட் காட்சியில் சிவாஜி வசனம் பேசும் காட்சியில் கேமரா மெதுவாக அவருடைய முகத்தையும் உணர்வுகளையும் காட்டும் விதம் குறிப்பிடப்பட வேண்டியது. சிவாஜியின் தங்கை குழந்தையுடன் இருக்கும் காட்சிகளில் பரிதாபம் தோன்றும் வகையிலும், பண்டரிபாயின் கனவாக வரும் “ஒரு பெண்ணின் மனதைத் தொட்டு போறவரே” பாடல் காட்சியில் காதலைக் காண்பிக்கும் விதத்திலும் ஒளியமைப்பு இருக்கும்.
ஒரே விதமான துல்லியமான ஒளியமைப்பையும், கேமராவின் பொசிஷனையும் இரண்டு டேக்குகளுக்கு நடுவில் கையாள்வது மிக கடினம். அதை மாருதிராவ் மிகத் திறமையாக கையாண்டிருப்பார்.
குழந்தையும் தெய்வமும் படத்தில் நடித்த குட்டி பத்மினி கூறியது:
குழந்தையும் தெய்வமும் படம் தான் என்னை உலக அளவில் மக்களிடம் கொண்டு சேர்த்தது. அதற்கு ஒளிப்பதிவாளர் மாருதிராவ் தான் காரணம். இரட்டைவேட காட்சிகளில் இருவரும் சந்திப்பது, பேசுவது என்று மட்டுமில்லாமல் கட்டிபிடிப்பது, சண்டை போடுவது வரை மிக துல்லியமாக எடுத்தார். இயக்குநர் பஞ்சு சார் காட்சி நன்றாக வரவில்லையென்றால் சில நேரம் கோபப்படுவார். அப்போது மாருதிராவ் என்னிடம் வந்து தோளில் தட்டி ஆறுதல் கூறி மிக அன்பாக நடந்து கொண்டார். அதற்கு முன்பு வாழ்க்கை வாழ்வதற்கே பட த்தில் தாஜ்மஹால் செட்டில் நான் ஏறி செல்வது போலவும் இறங்கி வருவது போலவும் எடுத்த காட்சிகளில் என்னை அவ்வளவு அழகாக காண்பித்திருக்கிறார். அவர் ஒளிப்பதிவு செய்த தெய்வப்பிறவி படத்தில் நான், என் அம்மா ராதாபாய், என் அண்ணன் கிருஷ்ணன், அக்கா கீதா என என் குடும்பமே நடித்திருக்கிறோம் என்பது எனக்கு மிகப் பெருமையான விஷயம்” என்றார்.
சர்வர் சுந்தரம் திரைப்படத்தில், சர்வராக இருந்தபோது, அழகாக இல்லையென்கிற தாழ்வுணர்ச்சி வெளிப்படும் வகையிலும், நடிகராக உயர்ந்த பின்பு தன்னம்பிக்கை மிகுந்தவராகவும் நாகேஷை வேறுபடுத்திக் காண்பிக்கும் விதமாக ஒளியமைப்பு செய்திருப்பார். சிலை வடித்தான் ஒரு சின்னப் பொண்ணுக்கு பாடலில் மகாபலிபுரத்தின் சிற்ப அழகை துல்லியமாக காண்பித்திருப்பார். இந்தப் பாடலில் லோ ஆங்கிளில் கே.ஆர். விஜயாவின் முகம் தெரியும் ஒரு காட்சிக்காக குழிவெட்டி அதற்குள் இருந்து படமாக்கியிருக்கிறார். முத்துராமனும் கே.ஆர்.விஜயாவும் பாடுகிற “போகப்போக தெரியும்” என்கிற பாடல் கோவளம் கடற்கரையில் எடுக்கப்பட்டது. இந்தக் காட்சியை பின்னணியில் தென்னை மரங்கள், கடல், மேகங்கள் தெரிய ஒரு ஓவியம் போல் லாங் ஷாட்டில் எடுத்திருப்பார்.
அன்னை படத்தில் அவர் விளக்கொளியில் “பூவாகி கயாகி கனிந்த மரம் ஒன்று’ பாடல் மிக சிறப்பாக இருக்கும், அன்னை என்பவர் நீ தானா என்ற பாடலில் பானுமதி ரயிலில் கண்ணாடியைப் பார்க்கும்போது அதில் வேறு உடையில் தெரிவார், பயந்து கண்ணாடியில் கை வைப்பார். கையை எடுக்கும்போது அந்த உருவம் மறையும். மிகச் சிறப்பாக படம் பிடித்திருப்பார். “புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை” என்று சந்திரபாபு பாடும் பாடல் காட்சியில் பெரும்பாலும் அந்த இடங்களைக் காண்பிக்கும் விதமாக வைட் ஷாட்களாக எடுத்திருப்பார். அழகிய மிதிலை நகரினிலே பாடலில் அந்தக்கால மெட்ராஸின் கடற்கரை சாலையை மிக அழகாக பதிவு செய்திருப்பார். சாலைகளில் பல வண்டிகளும் போய்க் கொண்டிருக்க, கேன்டிட்டாக எடுத்தார்களோ என்று எண்ணும்படியாக காட்சியமைப்பு இருக்கும். பக்பக்கும் மாடப்புறா என நடிகை சச்சு பாடும் பாடலை முழுவதுமாக மொட்டை மாடியில் இயற்கையான வெளிச்சத்தில் எடுத்திருப்பார்.
ஏவிஎம்மின் ஐம்பதாவது படம் ‘அன்பே வா.” எம்ஜிஆர் சரோஜாதேவி நடித்து மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற படம். ஏவிஎம்முக்கும், மாருதிராவுக்கும் முதல் வண்ணத் திரைப்படம். ஃபிலிம் கருப்பு வெள்ளையிலிருந்து கலருக்கு மாறிய போது அதை டெஸ்ட் செய்ய ஏவிஎம் நிறுவனம் இவரை கொடாக் நிறுவனத்துக்கு அனுப்பி வைத்தது. ‘அன்பே வா” வழக்கமான எம்ஜிஆர் ஃஃபார்முலா படமாக அல்லாமல் மக்கள் அனைவரும் விரும்பும் வகையில் துடிப்பான ஜாலியான இளைஞனாக எம்ஜிஆர் நடித்திருப்பார். அப்போது எம்.ஜி.ஆருக்கு ஐம்பது வயது. ஆனால் தன் கேமராவில் இருபது வயது குறைத்து முப்பது வயது இளைஞன் தோற்றத்தில் அவரை மிக அழகாக காட்டியிருப்பார் மாருதிராவ்.

‘அன்பே வா’ படப்பிடிப்பில் இரண்டு ஷெட்யூல் முடிந்தபின்னும் எம்ஜிஆர் படப்பிடிப்பில் தொழில்நுட்ப ரீதியாக எந்த சந்தேகமும் கேட்கவில்லை என்பது அனைவருக்கும் ஆச்சர்யமாக இருந்திருக்கிறது. அப்போது அதில் உதவிஇயக்குநராக பணிபுரிந்த எஸ்.பி.முத்துராமன், அந்த செட்டில் எல்லோருடனும் நகைச்சுவையாகப் பேசிக் கொண்டிருந்த மற்றொரு உதவி இயக்குநரான ராஜேந்திரனை அழைத்து “அண்ணே நீங்க பேசும் போதே எம்ஜிஆரிடம் எப்படி எதிலும் தலையிடாமல் இருக்கிறீர்கள் என்று கேளுங்கள்” என்று சொல்லி அனுப்ப, அவரும் எம்ஜிஆரிடம் சென்று விளையாட்டாகப் பேசிக் கேட்கிறார். உடனே எம்ஜிஆர் அங்கிருந்த அனைவரையும் அழைத்து, “நான் ஏன் எதிலும் தலையிடவில்லையென்று இவர் என்னிடம் கேட்கிறார், ஒரு கோணத்தை தவறாக வைக்கும் போதும், முக்கியமான எமோஷனல் காட்சியில் தேவையில்லாத பல வசனங்களுக்குப் பிறகு தேவையான வசனம் வரும் போதும், நானும் ஒரு டெக்னீஷியனாக இருப்பதால், அது தவறென்று தெரிந்த பின்னும் என்னால் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியாது. அதனால் கேட்கிறேன். இது தலையீடு கிடையாது. கண்முன் நடக்கும் தவறைச் சரி செய்தல். இங்கு ஏவிஎம்மில் அப்படி எந்த தவறும் நடக்கவில்லை. இயக்குநர் ஏ சி திருலோக்சந்தர் மிகச் சரியாக கோணம் வைக்கிறார். மாருதிராவ் அதற்கேற்ப லைட்டிங் செய்கிறார். செட் சரியாகப் போட்டிருக்கிறார்கள். சண்டை மாஸ்டர், டான்ஸ் மாஸ்டர், ஒன்றுக்கு நான்காக உடைகளை வைத்திருக்கும் காஸ்டியூமர் என்று அனைவரும் தங்கள் வேலையை மிகச் சரியாக செய்து விடுவதால், இங்கு நான் எதுவும் சொல்ல வேண்டிய அவசியமே ஏற்படவில்லை” என்றார். இத்தகைய தொழில்நுட்ப கலைஞர்கள் தான் பல வெற்றிப்படங்களை கொடுத்த ஏவிஎம்மின் பலம்.
“ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்” பாடலை தொழில்நுட்பம் வளர்ச்சியடையாத அந்தக் காலத்திலேயே பேக் புரொஜெக்ஷன் முறையில் எடுத்திருப்பார்கள். சாரட்டு வண்டியின் சக்கரங்கள் சுழல, பின்னணியில் ஆகாயம், நட்சத்திரங்கள் என்று தெரிய, அவர்கள் வானில் மிதந்து சவாரி செய்வது போல தோன்றும். புதிய வானம், புதிய பூமி பாடலில் சிம்லாவின் பனியையும், அழகையும் தன் கேமராவின் வழியே வண்ணச்சித்திரமாக பார்வையாளர்களுக்குக் கொடுத்திருப்பார். குறைந்த செலவில் காட்சிகளை பிரும்மாண்டமாக காண்பிக்கும் திறமை கொன்டவர்.
அன்பே வா படத்துக்கு போடப்பட்ட செட்களையும் அந்தப் படத்திற்காக வாங்கி மிஞ்சிய உடைகளையும் பயன்படுத்துவதற்காகவே இன்னொரு படம் எடுக்க வேண்டும் என்று முடிவு செய்து ஏவிஎம் எடுத்த திரைப்படம் “அதே கண்கள்.”

ஒரு திரில்லர் திரைப்படத்துக்கு சஸ்பென்சை கடைசிவரை கொண்டு செல்வதற்கு காட்சியமைப்பும், இசையும் மிக முக்கியம். அதே கண்கள் படத்தில் திரைச்சீலைகள், கதவுகள், ஜன்னல்கள், அந்த மாளிகையிலிருக்கும் பொருட்கள் என கேமரா காட்சிக்கேற்ப காண்பிக்கும் விதத்திலேயே அச்சத்தை ஏற்படுத்தும். முதல் காட்சியிலேயே கிரில்கேட்டின் வெளியே கார் நிற்க இருட்டில் கேமரா வழியாக அந்த மாளிகையை சுற்றிக் காண்பிக்கும் போதே அமானுஷ்யமாக ஏதோ நடக்கப் போகிறது என்கிற உணர்வை கடத்தியிருப்பார் மாருதிராவ். கொலையாளி வரும் போதெல்லாம் சுவரில் நிழலாகவோ, சன்ஷேட் ஆடுவது போன்றோ காண்பிக்கப்பட்டிருக்கும், பார்வையாளர்களோடு சேர்ந்து என்ன நடக்கப் போகிறது என கேமராவும் கதாபாத்திரங்களோடு நகரும். சில இடங்களில் பார்வையாளர்களுக்கு அங்கிருக்கும் ஆபத்து தெரியும் விதத்திலும், கதாபாத்திரங்களுக்கு அது தெரியாத மாதிரியும் கேமரா நகரும். புத்தாண்டில் வெளி வந்ததால், புத்தாண்டைக் கொண்டாடும் விதத்தில் பாடலாக இல்லாமல் வெறுமனே இசையும் நடனமுமாக ஒரு காட்சி வரும். பிரும்மாண்டமான செட்டில் கண் கவரும் வண்ண ஆடைகளோடு அனைவரும் ஆடும் நடனம் நிச்சயமாக அன்றைய ரசிகர்களின் கண்களுக்கு மாபெரும் விருந்தாக இருந்திருக்கும். இப்படத்தில் கேமராவும் இசையும் கை கோர்த்துக் கொண்டு பார்வையாளர்களை சீட் நுனிக்கு கொண்டு வருவதில் பெரும் பங்காற்றியிருக்கின்றன. ஒவ்வொருவர் மீதும் சந்தேகம் ஏற்படும் விதத்தில் காட்சிக்கேற்ப அவர்களின் முகத்தில் ஒளியை அமைத்திருப்பார்.
அப்போதிருந்த பல ஹீரோக்களுக்கும் ரவிச்சந்திரன் மேல் மிகப் பொறாமை உண்டாகும் அளவுக்கு அவரை மிகவும் ஸ்டைலாக அழகாக காண்பித்திருப்பார். படம் முழுவதுமே மேற்கத்திய பாணியில் எடுக்கப்பட்டிருக்கும்.
மாருதிராவ் பற்றி நடிகை காஞ்சனா பகிர்ந்து கொண்டவை:
“அதே கண்கள் படப்பிடிப்பு இரண்டு ஆண்டுகள் இரவு பகலாக நடந்தது. அன்றன்று எடுத்ததை ஜெமினி லேப் சென்று கலர் கரெக்ஷன் செய்வார்கள். அப்போது என் உடலின் நிறத்தை அனுசரித்து அதற்கேற்ப மற்றவற்றை சரி செய்யுமாறு மாருதிராவ் அவர்களிடம் கூறுவார். எப்போதும் பின்னணியில் நீலம் பச்சை நிறங்களை தவிர்க்க சொல்வார். சில நேரம் நாங்கள் விரும்பிய வண்ண உடைகளை அணிய வேண்டும் என்போம். ஆனால் அவர் பின்னணியில் இருக்கும் நிறத்திற்கு இது சரி வராது என்று சொல்லி விடுவார். ஒளியமைப்பின் மூலம் ஒரு சிற்பியைப் போல காட்சிகளை செதுக்கி செதுக்கி எடுப்பார். எதையும் திட்டமிட்டு செயல்பட்டு எங்களை அனுசரணையாக நடத்துவார்” என்கிறார் காஞ்சனா.
1985ல் வெளியான “மசனதா ஹூவு” கன்னட திரைப்படத்தில் ஜெயந்தி விபசார விடுதியின் தலைவியாக மிகச் சிறப்பாக நடித்திருப்பார். கதாநாயகன் அம்பரீஷின் ஓட்டுவீட்டைக் காண்பிக்கும்போதே, லோ ஆங்கிளில் கீழிருந்து மேலே ஆங்காங்கே ஓடுகள் இல்லாமல் வெளிச்சம் வரும் கூரையைக் காண்பித்து அதன் ஒளியமைப்பில் அவரின் வறுமை நிலையை உணர்த்தி விடுவார். இத்திரைப்படத்திற்காக சிறந்த நடிகை, சிறந்த துணை நடிகர், வசனகர்த்தா, ஒலியமைப்பாளர், கலை இயக்குநர் என பலருக்கும் கர்நாடக மாநில அரசின் விருதுகள் கிடைத்தன. சிறந்த ஓளிப்பதிவாளர் விருது மாருதிராவுக்கும் கிடைத்தது.
“அந்தக் காலத்தில் ஒரே ஃபிலிம் தான் இருக்கும், ஸ்லோ ஸ்பீடு மட்டுமே அப்போது இருந்தது. முத்ன்முதலில் ஆர்வோ நிறுவனம் ஃபாஸ்ட் ஃபிலிம் அறிமுகப்படுத்த இந்தியாவிலிருந்து இரண்டு பேரை மட்டுமே மதித்து சோதனை படப்பிடிப்பு நடத்த விரும்பியது. அதில் ஒருவர் மாருதிராவ். தென்னிந்தியாவிலிருந்து அழைக்கப்பட்ட ஒரே ஒளிப்பதிவாளர் இவர் தான்” என்று ஒளிப்பதிவாளர் வைட்ஆங்கிள் ரவிஷங்கர் மாருதிராவ் பற்றி கூறியிருக்கிறார்.
பன்னிரென்டு ஆண்டுகள் மாருதிராவின் அஸோசியேட்டாக பணியாற்றிய சி.எஸ். ரவிபாபு அவரைப் பற்றிக் கூறுகிறார்.
“நான் ராவ் அவர்களிடம் சென்று ஒளிப்பதிவு உதவியாளராக வாய்ப்பு கேட்டபோது ஏதாவது ஒரு கேமரா யூனிட்டில் ஓராண்டு பணியாற்றி விட்டு வா” என்றார். நானும் விஜயவாஹினி யூனிட்டில் சேர்ந்து ஓராண்டு முடித்து பின் அவரைச் சந்தித்த போது என்னை சேர்த்துக் கொண்டார். ‘எங்க மாமா’ திரைப்படத்தில் துவங்கி சுமார் பன்னிரெண்டு ஆண்டுகள் அவருடன் பணியாற்றினேன். முதல் உதவியாளராக ஆகி அஸோசியேட் என்னும் நிலைக்கு உயர்ந்தேன்.
ஒளிப்பதிவு செய்யும்போது நடிகர்களின் மூக்கில் மிகவும் கவனமாய் இருப்பார். மூக்கின் நிழல் முகத்தில் விழுந்தால் நன்றாக இருக்காது என்பார். லைட்டிங்கில் தனைக்கென தனி முத்திரை பதித்தவர். எவ்வளவு பரபர்ப்பான நேரத்திலும் லைட்டிங்கில் சிறு குறைகள் ஏற்பட்டால் கூட கண்டுபிடித்து விடுவார். இங்கு ஒளி இல்லை, வெளிச்சம் கசிகிறது என்று கண்டுபிடித்து விடுவார். அப்போதெல்லாம் இரட்டைவேட காட்சிகளை ஒளிப்பதிவு செய்யும்போது கேமராவில் மறைப்பு செய்துதான் காட்சிகளை எடுப்பார்கள். ஆனால் இவர் லைட்டிங்கில் மாஸ்க் செய்து அத்தகைய காட்சிகளை எடுப்பார்.
‘எங்கள் தங்கம்’ படத்தில் ஒரு எம்ஜிஆரிடம் இன்னொரு எம்ஜிஆர் பரிசு வாங்குவது போன்ற காட்சியில் இரண்டு எம்ஜிஆரும் இருப்பார்கள். லைட்டிங் மாஸ்க் செய்துதான் அந்தக் காட்சியை எடுத்தார். இப்படி பல பரிசோதனை முயற்சிகளை செய்து பார்த்து வெற்றி பெற்றார். வெளிநாட்டுப் படங்களை பார்க்க என்னையும் அழைத்துக் கொண்டு போவார். அதன் ஒளிப்பதிவு, காட்சிக் கோணங்கள், ஒளியமைப்பு பற்றி விவாதிப்பார்.
அவரது லைட்டிங்கினால் அவர் மிகவும் புகழ் பெற்றார். அவர் எப்போதும் வேலையில் மிகவும் கவனமாக இருப்பார். விளையாட்டுத்தனம், கேலி, கிண்டல் எதுவும் அவருக்குப் பிடிக்காது. யாராவது வேலையில் கவனக்குறைவாக இருந்தால் அவருக்கு கடுங்கோபம் வந்துவிடும். தவறு செய்து விட்டால் அவர்களை ஓரம்கட்டி நிற்க வைத்துவிடுவார். அதுதான் தன்டனை. தங்கள் தவறை உணர்ந்ததும் மன்னித்து ஏற்றுக் கொள்வார். உதவியாளரின் ஆர்வத்துக்கும் ஈடுபாட்டுக்கும் மதிப்பளித்து அவர்களை கற்றுக் கொள்ள அனுமதிப்பார். சொல்லியும் தருவார். எங்களுக்குள் நல்ல புரிதல் இருப்பதால் எங்கு சென்றாலும் என்னை அழைத்து செல்வார். வெளியூர் ஹோட்டல்களில் தங்கும் போது தன் அறையிலேயே என்னையும் தங்க வைத்துக் கொள்வார். ஒரு பிள்ளையைப் போல் என்னைப் பார்த்துக் கொண்டார். படப்பிடிப்பு இல்லாத நாட்களிலும் பிரபலமான படங்கள் பற்றியும், அவற்றின் ஒளிப்பதிவு பற்றியும் பேசிக் கொண்டிருப்பார். வெளியூர் படப்பிடிப்பு என்றால் மூன்று நாட்கள் முன்பே நாங்கள் சென்று விடுவோம். எந்த இடத்தில் என்ன காட்சி எடுப்பது என்று மார்க் செய்து கொள்வோம். அதைப் பற்றி விவாதிப்போம், திட்டமிட்டுக் கொள்வோம். என்னால் தனியாகப் பணியாற்ற முடியும் என்கிற நம்பிக்கை வந்தபோதும் அவர் காட்டிய அன்பினாலும் அக்கறையாலும் அவருடனேயே இருந்தேன். என் முதல்பட வாய்ப்பு கூட அவர் வாங்கிக் கொடுத்தது தான். நான் வந்து பார்த்துக் கொள்கிறேன் என நம்பிக்கை அளித்ததோடு, படப்பிடிப்பு முடிந்தவுடன் அவருக்குப் போட்டுக் காட்டுவேன், பார்த்து விட்டு திருத்தங்கள் சொல்வார். கேட்டுக் கொள்வேன். ஒரு குழந்தைக்குச் சொல்லிக் கொடுப்பது போல் என்னை வளர்த்தார். நான் ரொம்ப பாக்யம் செய்தவன். டி. ராஜேந்தர் இயக்கிய ரயில் பயணங்களில், கே. ரங்கராஜின் நெஞ்சமெல்லாம் நீயே இப்படி பல படங்களில் நான் பணியாற்றிய பின்னரும் கூட ஒரு ஆசானாக எனக்கு கருத்து சொல்வது தொடர்ந்தது. சுமார் ஐம்பது படங்கள், ஆயிரக்கணக்கான எபிசோட்கள் என்று பணியாற்றியிருக்கிறேன். அவருடைய கடைசிக்காலம் வரை அவருடன் தொடர்பிலிருந்தேன், என் குருநாதரின் அன்பும் அருளும் தான் என்னை வழி நடத்துகிறது.”
மாருதிராவ் மிகச் சிறந்த ஆஞ்சநேயர் பக்தர் என்பதால் பாடலாசிரியர் வாலி இயக்கிய வடைமாலை என்னும் திரைப்படத்தில் அவருடன் இணைந்து பணியாற்றினார். அது சிறந்த திரைப்படத்திற்கான தமிழக அரசின் விருது பெற்றது, தமிழக காவல்துறையில் டிஐஜியாக பணியாற்றிய பொன்பரமகுரு என்கிற அதிகாரிக்காக உங்கள் நண்பன் போலீஸ் என்கிற டாகுமெண்ட்டரி படத்தை எடுத்துக் கொடுத்தார்.
தேசிய விருது பெற்ற ஹம்பஞ்சி ஏக் டால்கே என்னும் குழந்தைகள் படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார் மாருதிராவ். இவர் ஒளிப்பதிவு செய்த பெரும்பாலான திரைப்படங்களும் நூறு நாட்கள் தாண்டி ஓடி பெரும்வெற்றி பெற்றன. அன்னை, அந்த நாள், குழந்தையும், தெய்வமும், குலதெய்வம், தெய்வப்பிறவி.. என நீளும் பட்டியலில் பெரும்பாலான படங்களும் சிறந்த படத்திற்கான தேசிய விருதுகளைப் பெற்றன.
கிருஷ்ணன் – பஞ்சு மாருதிராவ் கூட்டணி ஒரு மேஜிக் போன்ற வெற்றிக்கூட்டணி. பராசக்தி, குலதெய்வம், மாமியார் மெச்சிய மருமகள், தெய்வப்பிறவி, அன்னை, குங்குமம், குழந்தையும் தெய்வமும், அன்பே வா, எங்கள் தங்கம் என அவர்கள் இணைந்து பணியாற்றிய அனைத்து திரைப்படங்களுமே மாபெரும் வெற்றி பெற்றன.
“தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர்கள் சங்கத்தை தொடங்கி வைத்த மூவரில் இவரும் ஒருவர். ஓர் ஒளிப்பதிவாளராக பல படங்களில் பணியாற்றுவது என்பது வேறு. இயக்கம் சார்ந்த சிந்தனையுடன் இயங்குவது என்பது வேறு. ஆனால் அவர் இரண்டிலும் இருந்திருக்கிறார் என்பது ஆச்சரியமளிக்கிறது. பேசப்படுகிற படங்களில் மூலம் ஒருவர் அறியப்படுவது ஒருவகை. வெற்றி பெற்ற பட்ங்களின் மூலம் புகழ் பெறுவது ஒருவகை. சோதனை முயற்சிகளின் மூலம் தனக்கான இடத்தைப் பெற்றிருப்பது ஒருவகை. அனுபவத்தால் கற்றறிந்த புதிய உத்திகள் மூலம் தனிப்பட்டு பெயர் பெறுவது ஒருவகை. இப்படி எல்லா வகையிலும் அவர் இடம் பிடித்து புகழ் பெற்ற ஒளிப்பதிவாளராக இருக்கிறார்” என்று பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி.ஶ்ரீராம் மாருதிராவ் குறித்து சொல்லியிருக்கிறார்.
திரைப்படங்களில் மட்டுமல்லாது, தொலைக்காட்சி வளர்ந்த காலத்தில் பல சின்னத்திரை தொடர்களிலும் பணியாற்றியிருக்கிறார். அந்தப்புரம், மரியாதைராமன், அன்புள்ள அம்மா, சுமைதாங்கிகள் குறிப்பிடத்தக்கவை.
பெரியதாக கல்வி கற்காத இவர், கருப்பு-வெள்ளை, வண்ணப் படங்கள், சினிமாஸ்கோப் என காலத்திற்கேற்ப எல்லாவிதமான தொழில்நுட்பங்களையும் தன் அனுபவத்தால் கற்றுக் கொண்டு திறமையாக கையாண்டிருக்கிறார். தமிழகத்தின் நான்கு முதல்வர்களோடும் திரைத்துறையில் பணியாற்றிய பெருமை கொண்டவர் மாருதிராவ், தான் பணியாற்றிய ஒவ்வொரு படத்திலும் ஏதோ ஒரு புதுமையை முயற்சி செய்து ஒளிப்பதிவு நுட்பங்களை அடுத்த கட்டத்துக்கு நகர்த்திக் கொண்டேயிருந்தார். இயக்குநர் சொல்வதை உள்வாங்கிக் கொண்டு அப்படியே காட்சியமைப்பில் கொண்டு வரும் துல்லியமான கலைநுட்பம் தான் அவரை தமிழ்த் திரையுலகின் முன்னோடிகளில் ஒருவராக நிலைநிறுத்தியிருக்கிறது. தமிழக அரசும் கலைமாமணி விருது கொடுத்து கௌரவித்திருக்கிறது.
இந்தக் கட்டுரையில் ஏவிமஎம் சரவணன் தொடங்கி பல நடிகர் நடிகையரும் கூறிய கருத்துகள் மாருதிராவின் நூற்றாண்டைக் கொண்டாடும் வகையில் அவரைப் பற்றிய ஒரு புத்தகம் கொண்டுவர ஒளிப்பதிவாளர் வைட்ஆங்கிள் ரவிஷங்கரும், இந்தியா டுடே பத்திரிக்கையின் டிசைனர் நாணாவும் முன்னெடுக்க, அவர்களோடு இணைந்து ஊடகவியலாளர் அருள்செல்வன் தொகுத்தவை. இந்த புத்தகம் விரைவில் ஜீரோ டிகிரி பதிப்பகத்தில் வெளிவர இருக்கிறது.











